Sunday, October 31, 2021

stall

"நமக்குத் தெரிந்த 2000, 3000 தமிழ்ச்சொற்களோடு, முன்னொட்டு அல்லது பின்னொட்டுப் பெய்து தமிழ் நடையைப் புதுச்சிந்தனைக்கு ஏற்ப ஒப்பேற்றி விடலாமெனப் பலரும் நினைக்கிறார். இதன் தொடர்பாய் சியார்ச்சு ஆர்வெலின் ”1984” புதினம் தான் நினைவிற்கு வருகிறது. good, better, best என்பதற்கு மாறாய் good, plus good, double plus good என்னும் போக்கை இப்போது எல்லாம் சொல்லாய்வுக் குழுக்களிற் பார்க்கிறேன். கொஞ்சங் கொஞ்சமாய் தமிழும் ஓர் ஊன்சர மொழி (sausage language) நிலைக்கு வந்துவிடும் போலும். குதிரை விழிகளுக்கு இரு பக்கம் அடைப்பிட்டது போல், இந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றே சொல்லாக்க வேண்டுமென ஏன் தளைப்படுத்திக் கொள்கிறோம்? - என்பது புரியவில்லை. . 

தமிழில் வேர்களும், வினைகளும், பெயர்களும் ஏராளமுள்ளன. ஆனாலும் நம்மிற் பெரும்பாலோரின் (என்னையுஞ் சேர்த்தே சொல்கிறேன்.) கையிருப்புச் சொற்றொகுதி குறைவாயுள்ளது. அகர முதலிகளையும், இலக்கியங்களையும்., வட்டார வழக்குகளையும் விடாது சலித்து நமக்குத் தெரிந்த சொற்களைக் குறைந்தது 30000 ஆவது ஆக்கினால் தான் ஒழுங்கான சொல்லாக்கங்களை நம்மாற் செய்ய முடியும். ஓர் ஆங்கிலச் சொல்லைப் பார்த்தால் அதன் முழுப் பொருள் நாடி, சொற்பிறப்பு உணர்ந்து, தமிழின் இயல்பான தொகுதி பார்த்து, பரந்த பார்வையில் சொல்லாக்கத்தை அணுக வேண்டும். தமிழ் வளம் பாராது சொல்லாக்குவது நமக்கு நலம் பயக்காது. அவ்வகையில் stall என்பது வெறுமே மேம்போக்காகப் பார்க்கும் சொல் அல்ல. கொஞ்சம் ஆழம் புகவேண்டும். 

துல்> தல்/துள்> தள் வேரில் துளைப்பொருளிற் கிளைத்தது தல் எனும் வேராகும். இதுவே தங்குதலின் தொடக்கம். இடத்தைக் குறிக்கும் தலம் என்பதும் தமிழே. தலம் நீண்டு தாலமாகியும் நிலத்தைக் குறிக்கும்; “தால முறைமையிற் பரிந்து காத்தான்” என்பது திருவாலவாயுடை .36:1. தாலம் என்பது தானமென்றுந் திரியும். (லகர ஒலி, னகர ஒலியாவது தமிழின் பல சொற்களில் பொருள் மாறாது நடந்துள்ளது.) இந்துத்தானம், படித்தானம், என்றெலாஞ் சொல்கிறோமே? அவை இடப்பொருளைக் குறிக்கும். தள்> தர்> தரு> தா> தானம் என்று கொடைப்பொருளைக் குறிக்கும் சொல் வேறு வகையில் பிறந்ததாகும். இரு வேறு தானங்களையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. 

பேச்சில் சில ஒலிகளைத் தொகுக்கும் பழக்கத்தால் தல்ங்கல் என்பது தங்கல் ஆகும். இருத்தல், படிதலும் போன்ற சொற்கள் கூட இல், பள் எனும் துளைத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டவை. தள்+கு= தட்கு எனத் திரியும். “அஞ்சுவரத் தட்கு மணங்குடைத்துப் பின்” மதுரைக் 140; “ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” புறநா.193.4. மெய்ம்மயக்கத்தில் தட்கல் என்பது தக்கலாகும். தள்ங்கியது தட்டும் பெரும்பாலான அசைவுகளுக்கு ஈடு கொடுக்கும் நிலை (stability தொடர்பில்) தட்டையாகும். தட்டுமை = stability. (பெரும்பாலான இந்தை யிரோப்பியன் சொற்களில் குளிர் நிலத்தின் இயல்பாக ஸகர உரசலோசை முன்னொட்டாய்ச் சேரும். ஸகரத்தை ஒதுக்கினால் உள்ளிருக்கும் தமிழ்த் தொடர்பு ஓரளவு புலப்படும். இதை நான் செய்வதாலேயே பலரும் என்னை வசை பாடுகிறார்.) 

தட்டுக் கெட்டது நிலையாது. தட்டட்டி = சென்னை terrace, மாடித் தளப்பகுதி. கூம்புக்கூரைப் பட்டவத்திலிருந்து (pattern) இப்போது பலரும் மாறி தட்டட்டியை விழைகிறார். நம்மூர் வெதணத்தில் (climate) அதிகம் தட்டட்டி செய்வது சரி இல்லையென மரபுக் கட்டிடவியலார் சொல்வார். நாட்டோடுகளில், தட்டையோடு தட்டோடாகும். பனையோலையால் தட்டைச் சதுரஞ் செய்து தடுக்கென்பார். உட்கார / தங்கப் பயன்படும். தடுக்கைத் தட்டியென்றுஞ் சொல்வார். தென்னந் தடுக்கை விடப் பனந் தடுக்கு நெடுநாள் உழைக்கும். தடையும் தள் எனும் வேரில் கிளைத்ததே. நகர விடாது தட்டி வைக்குங் காரணத்தால் அது தடுப்பு/தடையாயிற்று. தள்ளில் பிறந்த இன்னொரு சொல் தவங்கல் = தடைப்படுதல்.

தள்ளின் இன்னொரு பெயர்ச் சொல் தளம். செங்கல், கருங்கல், சுதைமா பாவிய தரையைக் குறித்தது. இன்று எல்லாக் கட்டுமானங்களாலும் ஆன தட்டு, மேடையைக் குறிக்கிறது. இதற்கு அடி, அடிப்படைப் பொருள்களுமுண்டு. அடியென்ற சொல்லைப் பேச்சுவழக்கில் நிலையப் (station) பொருளில் பயன் உறுத்துவார். தேரடி = தேர் நிலையம். “ரயில்”அடி = தொடரி நிலையம். ”கார்” அடி = car parking. ”பஸ்” அடி = பேருந்து நிலையம். தண்டென்பது படை, அதிகாரம் போன்றவற்றைக் குறிக்குஞ் சொல். தண்டடி = படைவீடு (army encampment). இது தண்டியென்றும் பேச்சுவழக்கில் திரியும். சென்னை வேளச் சேரி, பல்லவர் காலத்தில் ஒரு சதுர்வேதி மங்கலம். அவ்வூருக்கு அருகிலுள்ள சிவன் கோயில் தண்டியீச்சுரம். இன்று வேளச்சேரி ஊருக்குளேயே அது வந்துவிட்டது. தண்டீசன் = படைக்கல ஆசான். (தண்டு பற்றிச் சொல்ல நிறைய உண்டு. ஆனால் இங்கே பெரிதும் விலகிப் போகும் என்பதால் தவிர்க்கிறேன்.)

தள்ளின் இன்னொரு சொல் தளி. இதன் முதற் பொருள் இடம். விதப்புப் பொருள் கோயில். 2 ஆம் பொருளையே இன்று பலருங் கொள்கிறார் (தளிப் பெண்டுகள் = தேவதாசிகள், தளிச்சேரி. போன்ற சொற்கள் கல்வெட்டுக்களில் உண்டு. வைரமுத்து/ஆண்டாள் என ஊர்கூடிப் பேசுகையில் தளித் தொடர்புச் சொற்களையும் எண்ணிப் பார்க்கலாம்.) “அடிசில் தளியன் நெய்வார்ந்து” என்று சீவக.2579 இல் இடப்பொருள் பயனுறும். சுவடி/நூல் தாங்கியைப் (stack) “பொன்னின் தளிகை மிசைவைத்து” என்று திருவிளை. திருமுகம் 24 ஆம் வரி சொல்லும். தளிமம், திண்ணையைக் குறிக்கும். 

தள்ளில் பிறந்த இன்னொரு சொல் தளை. கட்டெனும் பொருள் கொள்ளும். பாக்களில் சீர் கட்டுவது தளைத்தலாகும். வித விதமானத் தளைகள் உண்டு. செட்டி நாட்டில் பெரும் வீடுகளில் முதற்கட்டு, இரண்டாங் கட்டு, மூன்றாங் கட்டு, பந்திக்கட்டென வெவ்வேறு தளைகள் சொல்லப்படும். அடுக்களையின் முடிவில் வரும் அளையும் தளைப்பொருளைக் கொள்ளும். அடுக்களை = அடுக்குங் கட்டு. தளைத்தல் = கட்டல், சிறைத்தல், பள்ளத்தில் இடல். தள்> தண் திரிவால் தண்ணுதலும் தங்குதலைக் குறிக்கும். தண்ணாத்தல் = தாழ்த்தல் ”தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய்” திவ். திருவாய். 49:1. தணிதல் = தாழ்கை; தணித்தல் = தாழ்த்தல். திருத்தணிகை = முருகன் தங்கியிருக்கும் படைவீடுகளில் ஒன்று. தண்ணடை = நாடு, மருத நிலத்தூர் “பிணங்குகதிர் அலமருங் கழனித் தண்ணடை” புறநா.285

தள்ளல் நீண்டு தாளுதலாகித் தாங்குதலைக் குறிக்கும். நாம் தங்குகிறோம். புவி நம்மைத் தாங்குகிறது. (தமிழ் மொழியின் ஏரணம் புரிகிறதா?). தாள = தாங்க; தாளாத = தாங்காத. தாளுகை/ தாளுறுங்கை = tolerance. ஓர் ஆண்பகுதி, இன்னொரு பெண்பகுதிக்குள் போகவேண்டுமெனில் தேவையான தாளுகை இருக்க வேண்டுவது ஒரு பொறியியற் கட்டியம் (condition) ஆகும். தாளுகை இன்றி எந்தக் கணுக்கத்திலும் (connection) இணைப்பும் (joint) ஏற்படாது இசையில் தாளம் என்கிறாரே அது தாளும் நேரத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட சுரம் எவ்வளவு நேரம் நிலைக்கவேண்டுமென அளவிடப்படும் நேரம் தாளம் ஆகும். ஆங்கிலத்தில் lingering என்கிறாரே? அது தாளத்தோடு தொடர்புடையது. தாளென்பது பள்ளம், அடியென்றும் புரிந்து கொள்ளப்படும். 

தாளின் இன்னொரு திரிவு தாழ். தாழ்தல்/தாழல் என்பவை அடியுறுதல் பொருள் கொள்ளும். தாழ்= சுவர்ப்புறத்தில் / தூணின்மேல் காணப்படும் நீண்ட தாங்கு கல் blocks in a wall to support; கோயில் தூண்களில் கல் உத்தரங்களைத் தாங்கும்படி வேலைப்பாடோடு அமைந்த டகர வடிவக் கல். வீட்டு நிலைகளிற் கதவுகளைப் பொருத்தும் வாகாய் தாழக்கோல்/ தாழ் அமைப்பு இருக்கும். [தாழக்கோல் (bolt) ஆண்பகுதி; தாழ் (depression) பெண் பகுதி.] சேரலத்திலும் குமரி மாவட்டத்திலும் பூட்டுத் திறக்கும் குயவுக் குச்சியை (key) தாழக் குச்சி/ தாழக் கோல் என்றே சொல்வர். தமிழ்நாட்டு வட மாவட்டங்களில் போர்த்துகீசியச் சொல்லான சாவியையே பலரும் புழங்குவார். ’தாழ்க்கோல்’ என்பது இப்போதெல்லாம் தமிழில் தொலைந்தே போய்விட்டது. பூட்டு என்பதிலும் பூழ் என்பது குழிவையும் புழுக்கை, ஆண்பகுதியுங் குறிக்கும். பூழ்+து = பூட்டு. இதனோடு தொடர்புடைய அவையிற் சொல்லத் தகாத பால்/செகை (sex) வகைச் சொல்லும் உண்டு,  

தாழ்வு = தங்குதல். தாழ்வயம் = தங்குதலுக்கான பெயர்ச் சொல். தாழம்/தாழ்வம் என்பது தங்குமிடம். தாழ்வம்>தாழ்மம்>தாமம் என்பது இடத்தையே குறிக்கும். தாழ்வயம்> தாழ்மயம்> தாழ்மசம்> தாமசம் என்று மலையாளத்தில் இன்றுஞ் சொல்வர். “எத்ர நாளு அவடெ தாமசம்?” தமிழர் பேச்சுவழக்கில் தாமசம் தாமதமாகும். தாவளம் என்ற சொல் கல்வெட்டுகளில் தங்கும் இடத்தைக் குறிக்கும்.,”மன்னர்க் கெல்லாந் தாவளஞ் சமைந்தன்ன” என்பது ஒட்டக்கூத்தரின் உத்தர ராமாயணம். அசுவமேத. 23 இல் வரும். இது மருத நிலத்தூரென்றும் பொருள் கொள்ளும். தாவளம் போடுதல் = தங்கிவிடுதல்

வாழைப்பழம் வடமாவட்டப் பலுக்கலில் வாயப்பயம் ஆவதுபோல் தாழம் என்பது தாயமாகும். ”பரம பத விளையாட்டைப்” பாம்பு/ஏணித் தாயக்கட்டம் என்பார். தாயம் = தங்குமிடம். 100 தாயக்கட்டம் = 100 தங்குங் கட்டம். தாயத்தில் உருட்டுங் கட்டை தாயக் கட்டை (dice) ஆகும். ’ஒன்று” போட்டால் தான் தாயம் தொடங்கலாம் என்பதால் ஒன்று போடலும் ”தாயம் போடல்” ஆகும்.. தாழ்வித்தல்> தாவித்தல்> தாபித்தல் என்றாகி வடமொழித் தோற்றங் கொள்ளும். தாவித்தலோடு நிறுத்தினால் முற்றிலும் தமிழே. அதன் பொருள் install என்பதே. ”சிவத்திடைத் தாவிக்கு மந்திரம் தாமறியாரே” என்பது திருமந். 1842. தாவித்தலின் இன்னொரு வகையாய்த் தாவனம் என்ற சொல் ”ஏற்படுத்தல்” பொருளில் ஆளப் படும். ”கந்த மாதனத்திலே தாவனஞ் செய் முக்கண் மூர்த்தி தன்னை” என்பது சேது புராணம் இராமநா. 2. தாவளம் என்பது தாவணம் என்றுந் திரியும். தாவளி>தாவணி என்பது விலங்குகளைக் கூட்டித் தங்க வைத்து விலை பேசும் இடம்/சந்தை. மதுரையில் மாட்டுத் தாவணி என்னும் இடம் மிகுந்த பெயர்பெற்றது. தாழ்வு>தாவு= உறைவிடம். இசைத் தாவு=  isotope. ஒன்றிற்கொன்று இசைந்த ஒரே அணுவெண் கொண்ட அதே பொழுது நிறை வேறுபடும் அணுக்களை இசைத்தாவுகள் என்பார்..

இப்பின்புலத்தோடு பார்த்தால் கீழ்வருஞ் சொற்களை ஒருங்கே தமிழிற் சொல்லலாம். இவற்றிற்கு மாற்றுச் சொற்கள் உண்டு தான். அவற்றைப் பலரும் எண்ணிப் பார்க்கவும் சொல்லவும் முடியும். இங்கு நான் சொல்லவருவது இவையொரு தொகுதி என்பது மட்டுமே.

state = a condition in which a person or a thing is = தட்டம்; 

static = தட்டிகை (= நிலைக்கை); 

station = தட்டியம் (=நிலையம்); 

stationary = தட்டியப் பொருள் (= நிலைத்த பொருள்); 

statistics = தட்டுறும் விவரம், புள்ளியியல்; 

statue = தடிகை; 

stature = தாட்டி; 

status = தாட்டிகை; 

stay = தாயுறு; 

stall = தாழ்; 

install = தா(ழ்)வி. 

fair என்பதை வெறுமே கண்காட்சி என்று நான் சொல்லியதில்லை. அதை வியந்தை என்றே சொல்லிவந்திருக்கிறேன். என் பெயரோடு இச்சொல்லைக் கூகுளிற் தேடிப்பார்த்தால் இதன் சொற்பிறப்பு உங்களுக்குக் கிடைக்கும்., Book fair என்பதைப் பொத்தக வியந்தை என்பேன். ”இராம.கி. சொல்லியதை ஏற்கக் கூடாது” என்று கங்கணங் கட்டியவர் வியந்தைத் தாழ்களைக் (fair stalls) குறைந்தது கண்காட்சிக் கடையடி என்றாவது சொல்லுங்கள். அது அறையல்ல.

அன்புடன்,

இராம.கி.


1 comment:

Unknown said...

தென் தமிழ்நாட்டில் தாள்பாள், தாப்பாள், தாப்பா என கூறுவர்