Monday, March 30, 2020

Bullet

Bullet train ஐத் தமிழில் சொல்லவேண்டி, ”bullet ற்குத் தோட்டாவா, ரவையா?” என்று சட்டெனக் கேட்டால் என் சொல்வது? இதுவென்ன காயா, பழமா விளையாட்டா? (சோழியைத் தூக்கிப்போட்டு, மல்லாக்க விழுந்தால் பழம், குப்புற விழுந்தால் காயென ஆடும் சிறுபிள்ளையாட்டம். பரமபதத் தாயக் கட்டத்தில் 2 பகடைகளுக்குப் பகரியாய்ப் 12 சோழிகளைக் கொண்டு விளை யாடுவது இதன்நீட்சி.) எதிலும் பொறுமையின்றி. சொற்பிறப்பியலையே எள்ளல் பேசி, அதேபொழுது சொற்பிறப்பியல் வழி சொல்லாய்வு செய்வதாய் விளக்கஞ் சொல்வதும் ”சொல்லல்ல, கருத்து வேண்டும்” என்று தன் அளவில் சூடிகை காட்டிக் கொள்வதும் நம்மையெங்குங் கொண்டு சேர்க்காது. சொல்லாய்வு என்பது ஒரு தேடல். சில போது எளிதில் நடக்கும். சில போது இனம்புரியாக் காட்டுள் கொண்டு சேர்க்கும். சரியான சொல்தேடத் தமிழ்ச் சொற்பொருள் வளத்தில் நம்பிக்கை வேண்டும். சூ, மந்திரக்காளி என்று சொல்லி எந்தச் சொல் மரத்திலும் காய்க்குலைகள் தொங்குவதில்லை. சற்று பாடுபடவேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் பார்த்தால், தோட்டா, ரவை, குண்டென மூன்றைத் தவிர வேறொன்றுந் தென்படாது. முன்னது இரண்டும் கடன். பின்னது பீரங்கிக் குண்டையுங் குறிப்பிடலாம். துவக்குக் குண்டையுங் குறிப்பிடலாம். அடிப்படையில் குண்டு என்பது கோளத்தைக் குறிப்பிடுகிறது. குண்டை என்றாலும் அதே பொருளே. குண்டை>கொண்டை என்ற சொல் கொண்டைக் கடலையில் பயன்படும். இதே போற் கொட்டையென்ற சொல் கோள வடிவிலுள்ள பழ விதைகளைக் குறிக்கும். குன்றி என்ற சொல் சிறு மணியைக் குறித்தது. குன்றி மணி (Molucca bean) என்றவொன்று கருப்புஞ் சிவப்பும் சேர்ந்தாற்போல் இருக்கும். விளையாட்டுப் பொருளாயும், பொன் ஆசாரிகளிடம் எடையளவாகவும் பயன்படும். சோழர் கல்வெட்டுக்களில் பெரிதும் புழங்குஞ் சொல் அது. தங்கத்தைக் குன்றி மணி நுணுக்கத்தில் நிறுப்பது வழக்கம். குன்றி மணி என்பது குண்டு மணி, குந்து மணி என்றும் திரித்துச் சொல்லப்பெறும். 

’கோலி’ என்பது சிறுகுண்டைக் குறிக்கும். பீங்கானுக்கும், கிளருக்கும் (glass) சொல்லிப் பழகியதால், அதன் பொருள்நீட்சிக்கு மனம் இடங்கொடுக்க மறுக்கிறது. (ஆயினும் இந்தியில் துவக்கு ரவையைக் குறிக்குமாப் போல இந்தப் பொருள் நீட்சி உண்டென்ற மெல்லிய நினைவெழுகிறது.) இதுவரை நடந்த 4 ஈழப்போர்கள் bullet க்கான தமிழ்ச்சொல் இல்லாமலா நடந்தன? புலிகளின் படைக் கருவிக் பெயர்களைக் கையாண்ட பட்டறிவு கொண்டோர் சற்று வெளிப்பட்டால் நாம் கற்றுக் கொள்ளலாம். (புலிகள் ”கோலி”யைப் பயன்படுத்தினாரா? தெரியாது. ஒரு முகமூடி நண்பர் என் வலைப் பதிவில் இதுபற்றிச் சில ஆண்டுகள் முன் கேட்டது நினைவிற்கு வருகிறது. அன்று இதற்காக நேரஞ் செலவழிக்காது விட்டது என் தவறு.) சரி. இப்போது சொற் பிறப்பியலுக்கு வருவோம். நாம் தேடுஞ் சொல் சிறு பருமையையும், விரைவையுங் குறிப்பிடவேண்டும். இத்தேடல் bullet train இக்கு மட்டுமன்றி, bullet க்குஞ் சேர்த்து அமையவேண்டும்..

புல்>பொல் எனும் வேர்ச்சொல் பருமைகுறித்து எழுந்தது. பருத்தது உருண்டும் (spherical), நீளுருண்டும் (cylindrical) வெளிப்படும். நுணுகிய கருவொன்றைப் புல்லிக் கலந்தததால் புற்கலமென்ற சொல் எழுந்தது. புற்கலம்>புக்கலம்> புத்கலம்>புத்கரம் என்ற வளர்ச்சியில் பேரண்டமெங்கும் (Universe) விரவிக் கிடக்கும் matter ஐப் பாகதம் குறிக்கும். புல்லிக் கலந்தது உடம்பென்றும் பொருள் கொள்ளும். (அற்றுவிகம்/ஆசீவிகம், செயினம், புத்தமெனும்) 3 சமண நெறிகளுமே புற்கலத்தை வெவ்வேறு கலைச்சொற்கள் வழி முதற் பொருளாய்க் கொள்ளும். இற்றை அறிவியலும் பொருளென்ற சொல்லை முதற் காரணமாய்க் கொள்கிறது. Matter can neither be created nor destroyed. (matter, meaning என இருவேறு கருத்துகள் ’பொருள்’ என்னுஞ் சொல்லிற்குண்டு.) புல்>பொல்>பொர்>பொரு>பொருள் என்றே இச்சொல் வளரும். இருவேறு எதிர்கள் ஒன்றிற்குளொன்று பொருதியமைவது பொருளென்று மார்க்சிய இயங்கியல் (Marxian Dialectics) வழி பொருள்சொல்வர் (Unity and struggle of opposites)

உட்கருவைச் சுற்றிப் 360 பாகையில் புல்லிக் கிடக்கும் பொருளுணர்த்தும் சொற்களாய் (ஐயனாரைப் புல்லிக் கிடக்கும்) பூரணை, புற்கலை> பொற்கலை என்னும் தேவிப்பெயர்கள் தென்தமிழகம் எங்கும் ஊருக்கு ஊர் விரவி கிடக்கும். (சொல்லவருங் கருத்தை மீறுவதால் இதன் விளக்கந் தவிர்க்கிறேன்.) புல்>புள்>புட்டம்/புட்டி என்பது அரைக் கோளமாய் முழு வளர்ச்சியடைந்த உடம்பின் பின் பகுதியைக் குறிக்கும். புடையென்பது வீங்கு, பெருகு போன்ற வினைச்சொற்களையுங் குறிக்கும். புரு>புரைமை போன்ற சொற்கள் பருமையைக் குறிக்கும். புரு>புரைமை = பெருமை. பருப்பொருள் என்றாலே முப்பரிமானங் குறிக்கும். புருத்தது பருத்து பூரிக்கவுஞ் செய்யும். பூரித்தல், பூலித்தலென்றும் பலுக்கப்படும். புல்லெனும் அடிவேரை விட பொல்லெனும் துணை வேர் ஏராளம் பருமைச் சொற்களைத் தமிழில் தோற்றுவிக்கும்.

புல்>பொல்>பொல்லு= தடி, பருமன். ஒவ்வொரு நெல், தானிய மணியும் பொல்லெனப்பட்டது. முதலில் மணி குறித்து, பின் பொருள் விரிவில் நிறங்குறித்து முடிவில் பொல்>பொன், பொல்>பொலம் என்ற சொற்கள் மாழையையுங் குறித்தன. பொல் கொழித்துவிழைந்ததால் பொலித்து விளைந்ததாய்ச் சொல்லப்பட்டது. பொலிதல்= பெருகுதல். பொலிவு= பருமை. பொலி= தூற்றாத நெற்குவியல். அறுவடையின் போது, “பொலியோ பொலி” என இயல்பான கூச்சல் நெற்களத்தில் வெளிப்படும். இன்றும் போற்றுதல் என்று சொல்கிறோமே? அதுவும் பொலியோ பொலியில் கிளைத்தது தான். பொல்>போல்>போல்+து = போற்று. பொலிப்பாட்டு= அறுவடைப் பாட்டு. பொல்லெனும் விளைச்சல் அதிகமாவதைப் பொலித்தலென்றதால், பொலி என்பது இட்டுமுதலுக்கும் (input) கண்டுமுதலுக்குமான (output) சொல்லானது. பொல்லில் விளைந்தது பொலுவு எனும் profit. பொலிசை எனும் வட்டி (interest). 2 சொற்களும் கல்வெட்டுக்களிலுண்டு. (தமிழில் இவற்றிற்குச் சொற்கள் இல்லை என்று சிலர் தேடுவார்.) .

பொல்லில் விளையும் இன்னொரு சொல் பொருக்கு. அதன் நீட்சி பொருக்கை. (>பருக்கை). அரிசி, சோளப் பொருக்கென ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணி. வரகு, பனிவரகு, தினை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி என விதவிதமான தானிய/கூல மணியைப் பருக்கை என்போம். பொருக்கு வெடித்தலைப் பொரித்தலென்பார். சோளப்பொருக்கிற் கிடைத்தது சோளப்பொரி. பொரித்தது பூத்தது போல் தெரியும். பொரிதல்= பூத்தல், பொருக்கு வெடித்தல். பொருமலென்பதும் பூரித்ததாகும். (மலர்ந்து காணுதல்). தடித்தவள் பொருமலி என்றும் அழைக்கப்படுவாள். பொல்>பொல்+து= பொற்று>பொத்து= அடைப்பு, பொந்தினுள் உள்ளது பொத்து. பொந்தென்ற சொல் ஒரு பக்கம் துளையும், இன்னொரு பக்கம் பருமையுங் குறிக்கும். ஆங்கிலத்திலும் bull (n.2) என்பதற்கு "papal edict, highest authoritative document issued by or in the name of a pope," c. 1300, from Medieval Latin bulla "sealed document" (source of Old French bulle, Italian bulla), originally the word for the seal itself, from Latin bulla "round swelling, knob," said ultimately to be from Gaulish, from PIE *beu-, a root supposed to have formed words associated with swelling (source also of Lithuanian bule "buttocks," Middle Dutch puyl "bag," also possibly Latin bucca "cheek") என்று பொருள்சொல்வர். இலத்தீன், PIE பொருட் பாடுகளைக் கவனியுங்கள்.

பொந்து>பொந்தி எனினும் பருமையைக் குறிக்கும். வீங்கியகால் பொந்திய காலாகும். பொற்று+ஐ= பொற்றை>பொறை என்றசொல் சுமை, கனமென்ற பொருட்களைக் குறிக்கும். இயற்கையாகவே எடைப் பொருள் பெருத்தலுக்கு வரும். எடையையும் பருமனையும் பிரித்தறிய அறிவியலே வழி. பொத்தை= பருமை. சிறுதூறு; பொத்தைக்கால்= பருமைக்கால், யானைக்கால்; பொத்தையன்= தடித்தவன். பொதி = பருமன். பொத்தி என்ற சொல் சோளக் கதிர், தானியக்கதிர் போன்ற மணிவகைகளைக் குறிக்கிறது. பொத்திரம் என்ற சொல் எறியாயுதத்தைக் குறிக்கிறது. பொதுக்கு= மறைப்பு. பொகுட்டு என்ற சொல் தாமரை அல்லது கோங்குப் பூவின் கொட்டையைக் குறிக்கும். பொகுத்தல் ஓட்டை செய்தலையுங் குறிக்கும். பொகில்= அரும்பு. பொட்டு= வட்டக்குறி, இதைத் துளி, துகள். பொடுகு என்றுஞ் சொல்வர். பொல்+ ம் = பொம்; பொம்மிக் கிடப்பது பருமிக்கிடப்பது. பொம்மல்= பருமன், படிமை; பொம்மலாட்டம், பொம்மலில் கிளர்ந்தது.

பொல்லில் சிறுமைப்பொருளுங் கிளர்ந்தது. பொடிசு= சிறியது, பொடி பொட்டு= சிறியது. பொடியன்= சிறுவன், புல்லன், அற்பன்; பொடுகன்= சிற்றுருவமுள்ளவன்; பொடுகு= சிறுமை. பொருக்கென்றாலும் சிறுமைப் பொருளுண்டு. பொருக்கின் இடைக்குறையாய் பொக்கென்றுஞ் சொல்வர். பொக்கு என்பதைப் pixel க்கு இணையாய்ப் பயன்படுத்தி வருகிறேன். பொல்வழி விரைவுக்குறிப்பாய், புலபுலெனல், பொக்குப்பொக்கெனல், பொட்ட, பொட்டெனல், பொடுபொடுத்தல், பொடுபொடெனல், பொரி பொரியெனல், பொருக்க, பொருக்கெனல், பொரேரெனல் என்று பல சொற்களுண்டு.

மேலே பொல்லிற் கிளர்ந்த சொற்கள் இத்தனையையும் பட்டியலிட்டோம். இனி bullet (n.) என்ற சொல்லிற்கு ஆங்கில சொற்பிறப்பியலில் 1550s, "cannonball" (a sense now obsolete), from Middle French boulette "cannonball, small ball," diminutive of boule "a ball" (13c.), from Latin bulla "round thing, knob" (see bull (n.2)). Meaning "small ball," specifically a metal projectile meant to be discharged from a firearm, is from 1570s. Earliest version of the figurative phrase bite the bullet is from 1891, probably with a sense of giving someone a soft lead bullet to clench in the teeth during a painful operation என்ற வரையறை பார்த்தபின், பொல் வழி bullet ஐ எப்படிச் சொல்லலாம்? இத்தனை சொற்களோடு பொருத்திப் பார்த்தால் பொல்லு (=சிறுதடி) என்பதே என் பரிந்துரை.

(வேண்டுமெனில் பொற்று, பொத்து எனத் திரித்துங் கொள்ளலாம். கதவுகளின் தாழ்ப்பாள் போடுமிடத்தில் இருக்குங் குண்டுப் பகுதியைப் பொத்துக்குண்டு எனப் பேச்சு வழக்கிற் சொல்கிறோமே?) ஏற்கனவே train க்குப் பலரும் ஏற்றுக்கொண்ட தொடரி என்ற சொல் இருப்பதால் bullet train = பொல்லுத் தொடரி.

அன்புடன்,
இராம.கி.. 

browser

browser என்ற நிரலியைத் தமிழில் உலாவி அல்லது மேலோடி என்றழைப்பது (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF) பலருக்கும் பழகியிருக்கலாம். ஆங்கிலத்தில் browse (v.) என்ற சொல்லிற்கு mid-15c., brousen, "feed on buds, eat leaves or twigs from" trees or bushes, from Old French broster "to sprout, bud," from brost "young shoot, twig, green food fit for cattle or deer," probably from Proto-Germanic *brust- "bud, shoot," from PIE *bhreus- "to swell, sprout" (see breast (n.)). It lost its -t in English perhaps on the mistaken notion that the letter was a past participle inflection. Figurative extension to "peruse" (books) is 1870s, American English” என்று வரையறை சொல்வர். 

வரையறையைப் படித்தால் தமிழில் நாம்பயிலும் ”உலாவி” அவ்வளவு பொருத்தமாய்த் தெரியவில்லை. ஒரு தோட்டத்தின் வெவ்வேறு செடிகள், மரங்கள், கொடிகள் ஆகியவற்றின் தேனைத் தேடிப்போய் வெவ்வேறு மலர்களின் மேலமர்ந்து உறிஞ்சிய தேனீ, தேனடையில் கொண்டுவந்து தேன் சேர்ப்பதுபோல் இச் செயல்நிரலி வேலை செய்கிறது. ஒப்புமையின் முழுமையைச் சற்று ஓர்ந்து பாருங்கள். செயல்நிரலி, தேனீக்கு ஒப்புமை. நாம் தேடும் உள்ளுருமம் (information),  தேனுக்கு ஒப்புமை உள்ளுருமம் கிடைக்கும் இடங்கள் ”செடி, மரங்கள், கொடிகளிற் பொலிந்து இருக்கும்” மலர்களுக்கு ஒப்புமை. மலர்கள், மட்டுமின்றி, மொட்டுகள், இலைகள், கொட்டைகள் என பலவற்றிற்கும் பொதுவான தமிழ்ப்பெயர் ”பொலிவுகள்” என்பதாகும். 

browser நிரலிக்கு இணையாக, வெறுமே உலாவி அல்லது மேலோடி என்பது  தட்டையாக இருப்பதாய் எனக்குத் தென்படுகிறது. உலாவி எனும் பதத்தில்  ”தேன்சேகரிப்பு ஒப்புமை” கிடைக்கவில்லை. ஆங்கிலச் சொல்லிற்கு இணையாய் ஆழ்பொருள் வேண்டுமெனில் நம்மூரின் பயிரியலுக்குள் போகவேண்டும். .புல்>பொல்>பொலி. பொலிதல் = செழித்தல். பெருகல், மிகுதல், விளங்கல், வயலில் விளைந்த கிடக்கும் பயிர்மணிகளைப் பொலி என்பது நம் ஊரார் வழக்கம். இயற்கையில் விளைந்தோ, செயற்கை நுட்பங்களை இயற்கையோடு சேர்த்து விளைவிக்கப் பட்டோ கிடைக்கும் பொருள்கள் எல்லாம் நமக்குப் ”பொலிவுகளே”. ”விளைவுகள்” என்ற சொல்லின் இன்னொரு வடிவம் இது.

பொலிவு = மலர்ச்சி, அழகு, செழிப்பு, பருமை, மிகுதி. அறுவடையன்று அறுத்த கூலமணிகளை அம்பாரமாய்க் குவித்து வைத்து அளந்துபோடும் போது ”பொலியோ பொலி” எனக் கூக்குரல் இடுவர். தூற்றாத நெற்குவியல் பொலி எனப்படும். விளைவின் அளவும் பொலி எனப்படும். கீழே வரும் இலக்கியக் காட்டுகளையும் பாருங்கள். 

”பொலியு மால்வரை” - தேவார 236.8
”கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை” - மதுரைக்காஞ்சி 171
மார்பில் ....... பொலிந்த சாந்தமொடு - பதிற்றுப்பத்து, 88, 30
“பொலிந்த வருந்தவத்தோற்கே” புறநானூறு. 1
”பொலிக, பொலிக, பொலிக” திவ். திருவாய். 5,2,1
வழிவழி சிறந்து பொலிமின் தொல் பொ.422.
”பொலிந்த தாமினிபோரென லோடும்” - கம்பரா. தானை. காண் 2 

புணர்ச்சிச் சினைக்குப் பயன்படும் பெருத்த காளை/எருது/கடா, பொலி காளை/ பொலியெருது/  பொலிகடா எனப்படும்.  பொலிவுகளில் இருந்து தேன் ஈர்ப்பதால், இழுப்பதால், உறிஞ்சுவதால், தேன்சேகரிப்பைப் பொலியீர்ப்பு எனலாம். அது அப்படியே browse இற்குப் பொருத்தமாகுமென எண்ணுகிறேன்.  பல்வேறு browser நிரலிகளை பொலியீர்ப்பி நிரலிகள் அல்லது பொலியீர்ப்பிகள் எனலாம். எல்லா இடங்களிலும்  பொருளோடு பயன்படுத்த முடியும். ”உலாவி”, சிறிது தான். ஆனால் ”அது என்ன செய்கிறது?” என்பதை வலிந்து பொருள்கொள்ள வேண்டும். பொலியீர்ப்பி எனும்போது பொருள் சட்டென விளங்கிப் போகும். இக் கூட்டுச்சொல் அவ்வளவு பெரிதும் இல்லை.

என் பரிந்துரை உங்கள் சிந்தனைக்கு.

அன்புடன்,
இராம.கி. 
    ,

Brand = பொரிம்பு

2010 இல்  ”Brand என்பதை தமிழில் எப்படி சொல்லலாம். Branding, Brand Equity, Branded Products என்றெல்லாம் வரும்போது பயன்படுத்த முடிவதாக ஒரு சொல்லை வழங்கினீர்கள் என்றால் மகிழ்வேன்” என்று நண்பர் செந்தில் நாதன் கேட்டிருந்தார். வெகுநாளைக்கு முன்னால் பொரிம்பு என்ற சொல்லை brand என்ற சொல்லிற்கு இணையாகப் பரிந்துரைத்திருந்தேன். அதற்கான சிந்தனையைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் brand என்பதற்குக் கீழ்வருமாறு போட்டிருப்பார்கள்.

O.E. brand, brond "fire, flame; firebrand, piece of burning wood, torch," and (poetic) "sword," from P.Gmc. *brandaz (cf. O.N. brandr, O.H.G. brant, O.Fris. brond "firebrand, blade of a sword," Ger. brand "fire"), from base *bran-/*bren- (see burn). Meaning of "identifying mark made by a hot iron" (1550s) broadened 1827 to "a particular make of goods." Brand name is from 1922. As a verb, brand is attested from c.1400. Related: Branded; branding.

நெருப்பில் பொரிந்து போய்விட்டது (பொரிஞ்சு போயிருச்சு) என்று தமிழில் சொல்லும்போது to burn என்பதைத் தான் குறிக்கிறது. to be parched, baked என்னும் பொருளில் ’செந்தீயினிடைப் பொரிந்து தெறித்த பொரி போல’ என்பது பிரபுலிங். பிரபுதே. 54 இல் வரும் ஒரு கூற்று. மேலும், தீய்தல் என்ற பொருளில் to be blacked by fire, singed, scorched or burnt by the sun 'பொரிந்தன கலவைகள்’ என்று கம்பரா. மிதிலைக் காட். 50 இல் வரும். வாணப்பொரி மிகுந்து சொரிதல் என்ற பொருளில் to throw out sparks as Roman candle or a whirling firebrand என்ற பொருளில் ‘பொரிந்தோடின...... கருங் கோளரிக் கிளையான் விடு சரமே’ என்று கம்பரா. நிகும்பலைய. 12 இல் வரும். [இன்றுங் கூட இந்தக் கடைசிப் பொருளில் தீபாவளியின் போது ’வாணவேடிக்கை/புசுவாணம் பொரிப்பொரியாகத் தெறித்தது’ என்று சொல்லுகிறோம்.)

பொரிதலின் செயப்பாட்டு வினையான பொரித்தல் = பொரியச் செய்தல் என்ற பொருளில் to fry 'நெய்யுறப் பொரிந்த’ என்ற படி புறம் 397 இல் வரும். ”கத்திரிக்காய்ப் பொரியல்” என்று நாம் சொல்லும் போது to fry a vegetable என்று பொருள் கொள்ளுகிறோம். பொரி, பொரிக் கஞ்சி, பொரிக்குழைப் பிண்டி, பொரிகடலை, பொரிகறி, பொரிகாரம், பொரி விளங்காய்  என்ற பல சொற்கள் (30 ற்கும் மேற்பட்டவை) தமிழில் இருக்கின்றன. 

இதே பொருளில் பொரியின் திரிவான பொறியும் உண்டு. (தீச்சுடர் சிதறுதல்).

நான் பொரி என்ற சொல்வடிவையே தேர்ந்தெடுத்து பொரியுதல் என்ற வினையை to brand என்பதற்கு இணையாகக் கொள்கிறேன். அதன் பெயர்ச் சொல் பொரிம்பு என்றாகும். மற்ற சொற்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

Brand = பொரிம்பு (பொரிந்து போன குறியீடு, பொரிக்கப் பட்ட குறியீடு என்று பொருள். உடம்பிற் பொரிந்து போன தழும்பு என்கிறோம் அல்லவா? பொரி தழும்பு என்ற நீள்சொல் இங்கு பொரிம்பென்று சுருக்கிச்சொல்லப் படுகிறது. பொரிம்பு என்ற சொல்லை இச் சிந்தனையில் தான் உருவாக்கினேன்.)
Branding = பொரியுதல் (செயப்பாட்டுவினை இங்கு சட்டெனப் புரிய வேண்டும்.)
Brand equity = பொரிம்புப் பங்கு (கூட்டுச் சொல்)
Branded products = பொரிம்புப் புதுக்குகள் (கூட்டுச் சொல்)

(product என்பதற்கு புதுக்கு, விளைப்பு என்ற இரண்டையுமே பயன்படுத்தி வருகிறேன். ஆங்கிலத்திலும் அந்தச் சொற்கள் வேளாண்மையில் கிடைக்கும் பொருட்கள், கைவினையாற் புதியதாய் அமைபவை என்றே தொடக்கப் பொருள் உண்டு.)

அன்புடன்,
இராம.கி.

Certain Biotech Words

அகுதோபர் 2015 இல் முனைவர் கோபால் பாண்டி என்பார் தமிழ் உலகம் மடற்குழு வழியே ஒரு தமிழாக்க உதவி கேட்டார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழக உயிர்நுட்பியற் பள்ளியின் தாவர உயிர்நுட்பியற் துறையில் இருந்து (Department of Plant Biotechnology) இப்படியொரு உதவிகேட்டது மகிழ்ச்சி அளித்தது. (plant - ஐ நிலத்திணையென ஒருசாராரும், தாவரமெனும் பழஞ் சொல்லைப் பயிலலாமென வேறாரும் சொல்கிறார்.)அவர் கேட்ட சொற்கள் உயிர்நுட்பியலுள் ஆழமானவை. பொதுப்போக்கிற் சொல்ல முடியாது. ஓரளவு உயிர்வேதி நுட்பியல் (biochemical technology) படித்தததால் என்னாற் புரிந்து கொள்ளமுடிந்தது. அவர் கேட்ட சொற்களுக்கு வருவோம்.

1. ஒருவரோடு இன்னொருவருக்கு ஒட்டிக்கொள்ளும் நோய் வெருவியைத் (virus) தொற்றென்கிறோம் அல்லவா? ஆங்கில விளக்கமாய், epidemic (adj.) c. 1600, "common to or affecting a whole people," originally and usually, though not etymologically, in reference to diseases, from French épidémique, from épidemié "an epidemic disease," from Medieval Latin epidemia, from Greek epidemia "a stay in a place; prevalence of an epidemic disease" (especially the plague), from epi "among, upon" (see epi-) + demos "people, district" (see demotic) என்றுசொல்வர்.

epidemic - ஐ நாளிதழ்களும், தாளிகைகளும் தொற்றுநோயென்றே சொல்கின்றன. இதில் தொற்று என்பது பெயரடை முன்னொட்டாகவும் நோய் என்பது பெயராகவும் ஆகிறது. நோய் பற்றிப் பேசுகையில், தொற்று முன்னொட்டாவது சரி. ஆனால் பல்வேறு நோய்கள் தொற்றுவதால், தொற்றின் மாகனியம் (mechanism) பற்றிப் பேசும்போது தொற்றைப் பெயராக்கி, நோயைப் பெயரடையாக்க வேண்டாமோ? இப்புரிதலோடு, epidemiology (n.) என்பதை "study of epidemics, science of epidemic diseases," 1850, from Greek epidemios, literally "among the people, of one's countrymen at home" (see epidemic) + -logy என்று பார்ப்போம். தொற்றுப்பொதுமை பேசுவதால், நோய்த் தொற்றியலே Epidemiology க்குச் சரியாகும்.

2. அடுத்தது Genomics. தமிழில் chromosome என்பதைச் குருமியமென்றே நான் எழுதிவந்திருக்கிறேன். நம் ”குருமமும்” கிரேக்கரின் chroma வும் ஒரே நிறப் பொருளைச் சுட்டிவந்தன. தவிர ஈனை gene க்கும் ஈனியலை genetics க்கும் இணையாய்ப் பயன்படுத்தியிருக்கிறேன். குருமியத்தின் ஈற்றை ஈனோடு சேர்த்து genome-ஐ ஈனியமென்று சுருங்கக் குறிக்கலாம். [பலருஞ் சொல்லும் மரபணு, மரபணுவியல் போன்ற சொற்களில் எனக்கு உடன்பாடில்லை. (நுட்பத்தோடு தேவையற்ற தொழிலைச் சேர்ப்பதுபோல்) ஊடுவந்து பொருள் திரிக்கும் அணுவென்ற இடைச்சொல் தேவையா? கண்டதற்கு எல்லாம் அணுவென்பது நம்மூரில் மரபாகவே ஆகிவிட்டது.

gene க்கு இணையாக மரபென்று மொட்டையாய்ச் சொல்வதிலும் எனக்கு ஒருப்பாடில்லை. தொல்காப்பியத்தில் மரபியலென்று வருகிறது. அது genomics - ஐயா குறிக்கிறது? ஓர்ந்து பாருங்கள். மரபென்பது வெறும் பழக்கத்தால் வருவது. ஒன்றைத் திருப்பித்திருப்பிச் செய்துகொண்டிருந்தால் அது நம் மரபாகிவிடும். மரபென்று சொல் மருவுதல் (=தழுவுதல்) வினையில் எழுந்தது.. மருவு>மருபு>மரபு என்றாகும். அதற்கும் உயிரூட்டங் கொடுக்கும் genetics வழிக்கும் தொடர்பேயில்லை. gen என்றுதொடங்கும் ஆங்கிலச்சொற்களுக்கு இணையாக ஈனை வைத்துத் தமிழ்ச்சொற்களை ஆக்கமுடியும். மரபால் இது முடியாது.] இப்பொழுது Genomics என்பதை ஈனியவியல் என்று சுருக்கமாய்ச் சொல்லலாம்.

3. protein என்பதை புரதமென எழுத்துப் பெயர்த்தே இது வரை பயின்றோம். அப்படி நாம் தொடர்ந்திருக்கத் தேவையில்லை. proto என்ற முன்னொட்டின் அடிப்படையில் முதன்மைப் பொருளிற்றான் protein என ஆங்கிலத்திற் பெயர் இட்டார். ”பெரியது” என்பதற்கு big-ஓடு முதன்மைப் பொருளும் தமிழிலுண்டு. ”இவர் பெரியவர்” என்றால் ”முதன்மை ஆனவர், மூத்தவர்” எனப் புரிந்து கொள்கிறோம். எனவே புரதமென்பதைப் பெருதமென்றே நல்லதமிழிற் சொல்லலாம். அது முதன்மைப் பொருளோடு தமிழ்ச் சொல்லாகவும் இருக்கும்.

அடுத்தது proteome என்ற தொகுதிச்சொல். இதை The proteome is the entire set of proteins expressed by a genome, cell, tissue or organism at a certain time. More specifically, it is the set of expressed proteins in a given type of cell or organism, at a given time, under defined conditions. The term is a blend of proteins and genome என்று ஆங்கிலத்தில் விளக்குவர். பெருதத்திலிருந்து இதைப் பெருதியமென்று சொல்லலாம். அப்பொழுது ”Proteomics is the large-scale study of proteins, particularly their structures and functions” என்ற வரையறையில், Proteomics பெருதியவியல் ஆகும்.

4. தமிழிற் சில்லெனிற் சிறியது, நுணுகியது. உயிரிலா நுண்பொருளையும் சில்லென்பதால் உயிர்ச் சில் bilogical cell ஐச் சிறப்பாகக்குறிக்கும். (ஈன்களைப் படியெடுத்துக் குருமியங்கள் இரட்டையாகிச் சில் பெருகும் முன்), ஊட்டுப் பொருள்களை (feed materials) உள்ளிழுத்துச் செரித்து (digest) கழிவுகளை சுவர் வழி பொழிவித்து உயிர்ச்சில் தள்ளும். பொழிவித்தல் = வெளித்தள்ளல். [மழை பொழிகிறது = அடைமழை பெய்கிறது.] (செரிப்)பொழிதைகள் என்பவை உள்ளேகும் ஊட்டுப்பொருட்கள் செரிந்தபின், சில்லுக்குள் உருவாகிச் சுவர்வழி பொழிந்து வெளியேறும் பொருள்களாகும். இவற்றை metabolites என்பார். சுருக்கம் வேண்டுமெனில் செரியெனும் முன்னொட்டை விட்டுவிடலாம்.

செரித்துப்பொழிக்கும் வினையை ஆங்கிலத்தில் metabolism (n.) in physiology sense, 1878, from French métabolisme, from Greek metabole "a change," from metaballein "to change," from meta- "over" (see meta-) + ballein "to throw" (see ballistics) என்று சொல்வர். தமிழிற் செரிப்பொழிவு எனலாம். அடுத்து “Metabolomics is the scientific study of chemical processes involving metabolites. Specifically, metabolomics is the "systematic study of the unique chemical fingerprints that specific cellular processes leave behind", the study of their small-molecule metabolite profiles" என்று ஆங்கிலத்திற் சொல்வர். தமிழில் Metabolomics செரிப் பொழிவியல் எனலாம்.

5. அடுத்தது Epigenomics. இதற்குமுன் Epigenetics என்பதையும், epi என்ற முன்னொட்டையும் புரிந்துகொள்ளவேண்டும். epi- before vowels reduced to ep-, before aspirated vowels eph-, word-forming element meaning "on, upon, above," also "in addition to; toward, among," from Greek epi "upon, at, close upon (in space or time), on the occasion of, in addition," from PIE *epi, *opi "near, at, against" (cognates: Sanskrit api "also, besides;" Avestan aipi "also, to, toward;" Armenian ev "also, and;" Latin ob "toward, against, in the way of;" Oscan op, Greek opi- "behind;" Hittite appizzis "younger;" Lithuanian ap- "about, near;" Old Church Slavonic ob "on"). A productive prefix in Greek; also used in modern scientific compounds (such as epicenter).இம்முன்னொட்டு மேலென்று தமிழிலுமிருக்கிறது.

தவிர, epi என்ற சொல்லோடு தொடர்புடைய உம்பர் என்பதுமுண்டு. தமிழில் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். (post-modernism என்பதைப் பின் நவீனத்துவம் என்று பல எழுத்தாளர் பயில்வர். அதை நான் ஏற்பவன் இல்லை நவீனத்தின் நல்ல தமிழை வைத்து ”முகனப்பின்னியல்” என்றே நான் சொல்வது வழக்கம்.) இங்கே ஈனுக்கும் மேல் என்  பொருள் வரும்படி epigenetics என்பதை ஈனுக்கு மேலியல் என்று சொல்லலாம். ”க்கு என்பது தொகையாக விளங்கும்படி வைத்து ஈன்மேலியல் என்றும் சொல்லலாம்.

Epigenetics is the study, in the field of genetics, of cellular and physiological phenotypic trait variations that are caused by external or environmental factors that switch genes on and off and affect how cells read genes instead of being caused by changes in the DNA sequence. இனி Epigenomics என்பதை ஈனிய மேலியல் என்று சொல்லலாம்.

Epigenomics is the study of the complete set of epigenetic modifications on the genetic material of a cell, known as the epigenome. The field is analogous to genomics and proteomics, which are the study of the genome and proteome of a cell (Russell 2010 p. 217 & 230).

எனவே என் பரிந்துரை:

1)       Epidemiology = நோய்த்தொற்றியல்
2)       Genomics = ஈனியவியல்
3)       Proteomics = பெரிதியiவியல்
4)       Metabolomics = செரிப்பொழிவியல்
5)       Epigenomics = ஈனியமேலியல்

என்பவையாகும். இவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு.

அன்புடன்,
இராம..கி.

biodegradable

biodegradable  என்பது பற்றி ஒருமுறை 2017 மே- இல் முகநூலில் ஒருவர் கேட்டிருந்தார். ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் bio- என்பதற்கு, word-forming element, from Greek bios "one's life, course or way of living, lifetime" (as opposed to zoe "animal life, organic life"), from PIE root *gwei- "to live." The correct usage is that in biography, but in modern science it has been extended to mean "organic life" என்று போட்டிருப்பர்.

தமிழில் உய்தல் என்பது உயிரோடிருந்தலைக் குறிக்கும். உயிர் என்பது உய்யும் நிலை/இயக்கம்/பொருள். நாம்கொள்ளும் மெய்ம்ம (=தத்துவ) நிலைக்குத் தக்க இதன் பொருளைப் புரிந்துகொள்கிறோம். ஆன்ம வாதம் பேசுகிறவர் உயிர் உடலிலிருந்து வேறுபட்ட தனிப்பொருள் என்பார். உடலை உயிர்/ஆன்மா இயக்குகிறது என்பது அவர் வாதம். ஆன்ம வாதத்தை மறுப்பவரெனில் உடலின் இயக்கமே உயிராகும், அது தனிப்பொருளல்ல என்பார். இரண்டிற்கும் பொதுவாகச் சொன்னால் உயிரென்பது ஒரு நிலை என்றுஞ் சொல்லலாம். மூக்காலும் வாயாலும் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோமே அவ்வினைக்கு உய்தலென்று பெயர். அந்த உய்வு வினை நின்றுவிட்டால் உயிர் போய்விட்டதென்று பொருள்.

உயிருள்ள பொருட்களை உயிரி என்றுஞ் சொல்கிறோம். bio என்பதற்கு உய் என்பதே போதும் ஆயினும் பலரும் உயிரென்று சொல்லிப் பழகி விட்டார். biologyக்கு உயிரியல் என்றே எழுதுகிறார். (பழக்கத்தின் காரணமாய் நானும் உயிரியலென்று எழுதியிருக்கிறேன்.) ஆனால் கருத்தா/கருவி/கருமம் என்று ஏரணம் பார்த்தால் உய்யியல் என்பதே சரி. பொதுவாக உய்/உய்வு/உயிர் என்ற மூன்று சொற்களையும் இடத்திற்கேற்றாற்போல் bio-விற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் தான்.

biochemical = உயிர்வேதியல், (உய்வேதியலில் வரும் ய்வே சொல்லக் கடினமாய் உள்ளது.)
biocide = உய்வெடுப்பி (இதை உயிர்க்கொல்லி என்பாருமுண்டு,) (உய்வு = life)
biodiversity = உய்வுவேற்றுமை
biogenesis = உய்யீனல், (உய் ஈனல்)
biography = உய்வரை (உய்க்கிறுவு என்றுகூடச் சொல்லுவேன்.)
biohazard = உய்யேதம், (உய் ஏதம்)
biomechanics = உயிர்மாகனம்,
bionics = உய்மின்னியியல்,
biosphere = உய்வுக்கோளம்,
biotechnology = உயிர்நுட்பியல்,
biotic = உய்யீடு     .

அடுத்தது degrade. இதைச் சிதைவு என்றே பலருங் குறிப்பர். ஆனால் இங்கே செரித்தலை விரும்பக் காரணம். செரிக்கின்ற உயிரி தன் உய்வைத் தொடர்வது தான். சிதைவு என்பது பல்ல்வேறு விசைகளாலும், இயக்கங்களாலும் சிதையலாம். அதில் ஓர் உயிரி பொருந்தியிருப்பதாய்க் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. மட்குதல்>மக்குதல் என்பது உயிரிகளாலும், வேதிவினைகளாலும் நடக்கலாம். கிட்டத்தட்டச் சிதைவு போலத்தான். ஒரேயொரு வேறுவேடு. மட்குவது மண்ணோடு மண்ணாகிப் போகும். இங்கு என்னுடைய பரிந்துரை செரித்தலே,

அடுத்தது able (adj.) என்பது பற்றியாகும்.

"having sufficient power or means," early 14c., from Old French (h)able "capable; fitting, suitable; agile, nimble" (14c.), from Latin habilem, habilis "easily handled, apt," verbal adjective from habere "to hold" (see habit (n.)). "Easy to be held," hence "fit for a purpose." The silent h- was dropped in English and resisted academic attempts to restore it 16c.-17c. (see H), but some derivatives (such as habiliment, habilitate) acquired it via French. Able seaman, one able to do any sort of work required on a ship, may be the origin of this:

இதைத் தமிழில் கொள்ளுதல், கூடுதல் என்றே சொல்லமுடியும். நம்முடைய கொள்ளிற்கும் இந்தையிரோப்பிய have, hold என்பதற்கும் தொடர்புண்டு.

உய்ச்செரிக்கக் கூடிய/கூடியது = biodegradable. (உச்சரித்தலோடு குழம்பலாம். பலுக்கையில் சற்று கவனம் வேண்டும்.)

அன்புடன்,
இராம.கி.

Berry = பழம்

ஒருமுறை ”இன்றொரு தமிழ்ச்சொல்” வரிசையில் திரு. Harinarayanan Janakiraman "குருதிநெல்லி" என்ற சொல்லைக் cranberry க்கு இணையாய்த் தெரிவித்தார்.  உடனே செ.இரா. செல்வக்குமார், ”These kinds of neologism ought to be tested, debated for a short while before being more widely recognized as suitable. In Tamil people have very interestingly named plants. The கீழாநெல்லி is a very short plant but they have correctly called நெல்லி and in modern science it is indeed classified in Phyllanthus family and its name is Phyllanthus niruri. Phyllanthus is gooseberry family (நெல்லி மர வகைக் குடும்பம்).

If the people who coined wanted to point to the red colour, they could simply say செந்நெல்லி (but my objection is to call it நெல்லி). It belongs to Vaccinium family. Several eatable berries like e cranberry, blueberry, bilberry or whortleberry, lingonberry or cowberry, and huckleberry belong to this. The family name seems to be obscure. //derived from the Latin bacca, berry, although its ultimate derivation is obscure.[// We need a new word meaning something like berry and then we can add a word for red. We can even create words like குறுளி and call it செங்குறுளி. I am not saying that it should be this word குறுளி.” என்று அதற்கொரு முன்னிகை தெரிவித்தார்.

berry என்ற சொல் செருமானிய மொழிகளில் bayberry, blackberry, blueberry, cranberry, dingleberry, gooseberry, strawberry, teaberry போன்ற பழப் பெயர்களின் ஈற்றுச் சொல்லாகப் பயன்படுகிறது.  ஆங்கிலச் சொற்பிறப்பியலில் berry (n.) Old English berie "berry, ," from Proto-Germanic *basjom (source also of Old Norse ber, Middle Dutch bere, German Beere "berry;" Old Saxon winberi, Gothic weinabasi "grape"), which is of unknown origin. This and apple are the only native fruit names என்று சொல்வர்.

13/14 ஆம் நூற்றாண்டு வரலாற்றுப்போக்கில் இரோப்பிய நாடுகள் பிரெஞ்சுத் தாக்கத்திற்கு ஆட்பட்டன. berry க்கு மாறாய் grape என்ற பிரெஞ்சுச் சொல் புழங்கினால் தாங்கள் உயர்ந்தவராய்க் கருதப்படுவோம் என்ற போலிப் பெருமிதத்தில் grape எனும் பிரஞ்சுச் சொல்லையே berryக்கு இணையாய்ப் பயன்படுத்தத் தொடங்கினார். (இது போன்ற போலிப் பெருமிதம் 14/15 - 20 நூற்றாண்டுக்காலத்தில் நம்மூரிலுமிருந்தது. தமிழ்ச் சொல்லிற்கு மாறாய்ச் சங்கதம் புழங்கினால் நம்மை உயர்ந்தவராய் மதிப்பாரென நம்மிற் பலரும் நினைத்தார். இப்பொழுது முகிழ்த்து வரும் தனித்தமிழ் உணர்வால் இப்பனி சற்றே விலகுகிறது. ஆனாலும் போலிப் பெருமிதம் வேண்டுவோரிடம் சங்கதத்தோடு ஆங்கிலஞ் சேர்ந்து கொள்கிறது. ’என் மகள் ”டாடி” என்று சொல்லிவிட்டாள்’ என்று குதிக்கும் தமிழர் எத்தனையோ பேர்.). 

grape என்ற சொல்லிற்கான விளக்கத்திலும் mid-13c., "a grape, a berry of the vine," also collective singular, from Old French grape "bunch of grapes, grape" (12c.), probably a back-formation from graper "steal; grasp; catch with a hook; pick (grapes)," from a Frankish or other Germanic word, from Proto-Germanic *krappon "hook," from a group of Germanic words meaning "bent, crooked, hooked" (cognates: Middle Dutch crappe, Old High German krapfo "hook;" also see cramp (n.2)). The original notion thus perhaps was "vine hook for grape-picking." The vine is not native to England. The word replaced Old English winberige "wine berry." Spanish grapa, Italian grappa also are from Germanic என்று சொல்வர்..இதன் தொடர்பாய் cramp, grapefruit, grapeshot, grapevine, grapnel, grappa என்ற சொற்களும் எழும்.

berry என்பதை எப்படித் தமிழிற் சொல்வது? - எனப் பார்த்துக்கொண்டிருந்த போது, வியக்கத்தக்க இன்னோர் ஒப்புமை புலப்பட்டது. தமிழில் பழமென்ற சொல் முதிர்ச்சியைக் குறிக்கும். பழுத்தது பழம் (பழு+அம்=பழம். அம் ஈறு பேரளவைக் குறிக்கும்.). பழுத்தலின் வினைப் பகுதி பழு. இதுபோன்ற வினைப் பகுதிகள் தமிழிற் பெயராகவும் பயன்பட்டுள்ளன. காய் முதிர்ந்து பழுவாகிறது/கனியாகிறது. கூடுதல், பருத்தல்>பெருத்தல் கருத்தில் முதிர்ச்சி சொல்லப்பட்டது. கன்னுதலும் பருத்தல்>பெருத்தல் தான். கன்னோடு இகர ஈறு சேர்ந்து கன்னி>கனியாகியது. பழைய காலமென நாம் சொல்கிறோமே அது முதிர்ந்த காலத்தைக் குறிக்கிறது. பல்குதலும் பருத்தல், மிகுத்தலைக் குறிக்கும். இந்தி போன்ற வடமொழிகளில் பல் என்பதே பழத்தைக் குறிக்கும். பல்>பழு என்பது பரு என்றும் பலுக்கப்படலாம். நம் சோழ மண்டலம் வடக்கே coramandal ஆயிற்றே? பல்>பரு>பெரு என்பது இந்தையிரோப்பிய செருமானிய மொழிகளில் உலவும்  பெரி>berry என்பதற்கு இணையாய்த் தெரிகிறது. இரண்டின் பொருளும் ஒன்று தான். unknown orgin என்பது இப்படி வந்திருக்கலாம். 

bayberry = பழுப்புப் பழம்

bayberry (n.)
"fruit of the bay tree," 1570s, from bay (n.4) + berry. In Jamaica, the name given to a type of myrtle (Pimenta acris), 1680s, from which bay-rum (1832) is made.

bay (adj.)

"reddish-brown," usually of horses, mid-14c., from Anglo-French bai (13c.), Old French bai, from Latin badius "chestnut-brown" (used only of horses), from PIE root *badyo- "yellow, brown" (source also of Old Irish buide "yellow"). As a noun, elliptical for a horse of this color.

bay (n.4)

laurel shrub (Laurus nobilis, source of the bay-leaf), late 14c., but meaning originally only the berry, from Old French baie (12c.) "berry, seed," from Latin baca, bacca "berry, fruit of a tree or shrub, nut" (source also of Spanish baya, Old Spanish bacca, Italian bacca "a berry"), a word of uncertain origin. De Vaan writes that connection with Greek Bakhos "Bacchus" is difficult, as the Greek word probably was borrowed from an Asian language. Some linguists compare Berber *bqa "blackberry, mulberry," and suggest a common borrowing from a lost Mediterranean language.

blackberry = கரும் பழம்
blueberry = நீலப் பழம்
cranberry = குருகம் பழம்

cranberry (n.)
name of the fruit of several species of a swamp-growing shrub, 1640s, apparently an American English adaptation of Low German kraanbere, from kraan "crane" (see crane (n.)) + Middle Low German bere "berry" (see berry). The reason for the name is not known; perhaps they were so called from fancied resemblance between the plants' stamens and the beaks of cranes.

dingleberry = தொங்கல் பழம்

dingleberry (n.)
by 1973, perhaps with suggestions of dangle and berry. Attested from late 19c. through 1930s as a humorous-sounding surname in comedic writing.

gooseberry = கொழுதைப்  பழம் (கொழுதை = golden நிறம்)

gooseberry (n.)
type of thorny shrub with hairy fruit, cultivated in northern Europe, 1530s, with berry, but the first part is of uncertain origin; no part of the plant seems to suggest a goose. Watkins points to Old French grosele "gooseberry," which is from Germanic. Or perhaps from German Krausebeere or Kräuselbeere, related to Middle Dutch croesel "gooseberry," and to German kraus "crispy, curly" [Klein, etc.]. By either path it could be related to the Germanic group of words in kr-/cr- and meaning "to bend, curl; bent, crooked; rounded mass." Under this theory, gooseberry would be folk etymology. But OED editors find no reason to prefer this to a literal reading, because "the grounds on which plants and fruits have received names associating them with animals are so commonly inexplicable, that the want of appropriateness in the meaning affords no sufficient ground for assuming that the word is an etymological corruption."

strawberry = வித்துவெளிப் பழம் 

strawberry (n.)
Old English streawberige, streaberie; see straw + berry. There is no corresponding compound in other Germanic languages; the reason for the name is uncertain, but perhaps it is in reference to the tiny chaff-like external seeds which cover the fruit. A cognate Old English name was eorðberge "earth-berry" (compare Modern German Erdbeere). As a color adjective from 1670s. Strawberry blonde is attested from 1884. Strawberry mark (1847) so called for its resemblance.
Related entries & more

straw (n.)
Old English streaw (rare) "stems or stalks of certain species of grains," apparently literally "that which is scattered or strewn," related to streowian (see strew), from Proto-Germanic *straw- "that which is scattered" (source also of Old Norse stra, Danish straa, Swedish strå, Old Saxon stro, Old Frisian stre, Old Dutch, Old High German stro, Dutch stroo, German Stroh "straw"), from PIE root *stere- "to spread." The notion perhaps is of dried grain stalks strewn on a floor as carpeting or bedding.

teaberry = தேப் பழம்   

teaberry (n.)
also tea-berry, American wintergreen, 1818, from tea + berry; so called because the dried berries were used as a substitute for tea.

பரதநாட்டியம்

பரதநாட்டியம் பரதமுனிவர் உருவாக்கியது என்று திருமிகு. பத்மா சுப்பிரமணியம் வெகுகாலம் சொல்லிகொண்டிருந்தார். பரத முனிவருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்றும் அவர்  முழங்கினார்.  பரதம்> பரத முனி>பரதசாத்திரம் என்பன கட்டுக்கதை நிறைந்தவை. இந்தக்காலத்தில் பரத சாத்திரம் எனப்படும் நூல் சிலம்பிற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து ஏற்பட்டது. மணிமண்டபம் ஒன்று எழுப்ப வேண்டுமெனில், இளங்கோவிற்கும் சிலம்பிற்குமே ஏற்படவேண்டும். பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டியம் சிறப்புத் தான். ஆனால் அவர் கூற்று, பிழை. நானறியச் சிலப்பதிகாரத்தில் ”பரதம்” கிடையாது.

சொல்லாய்வு அறிஞர் ப,அருளி பரத்தில் (பரம்= மேல், மேடை) ஆடும் ஆட்டம் பரத்து நாட்டியம் என்பார். பேச்சுவழக்கில் இது பரத்த நாட்டியம்> பரத நாட்டியம் ஆகும். பரத்தின் நீட்சியான பரதத்திற்கும் ”மேலான இடம், மேடை” என்றே தமிழில் பொருளுண்டு. இதனோடு தொடர்புடைய சொற்களைப் பாருங்கள். பரமன் = மேலானவன். விதப்பாய்ச் சிவன். பரம ஈசன் என்ற தமிழ்ச்சொல் வடக்கே கடனிற் போய் வடமொழிப் புணர்ச்சியில் பரமேசன் ஆகும். அதை மேலுந் திருத்தி பரமேஸ்வரன் என்பார். இதுவும் சிவனையே குறிக்கும். பரவல்/பரவுதல் = போற்றுதல், வழிபடுதல். நிலவு>நிலா என்பது போல், பரவு>பரா என்றாகும். பரவுதல்> பராதல்> பராவுதல்= புகழ்தல் ”தற்பராய் நின்று” என்று பு.வெ.10,15 இன் உரையில் வரும். பராதலுக்கு உரியவன் பராதி. இங்கு சங்கத வழக்கும் ஊடு வருகிறது. இது metathesis முறையில் பாரதியாகும். சிவபெருமானை சிவ ப்ரான் >சிவபிரான் என்று சங்கதத்தில் சொல்வார். மொத்தத்தில் பரதத்தில் உள்ளவன் பாரதி ஆவது வியப்பில்லை. இனிச் சிலப்பதிகாரம் கடலாடு காதையில் 38-43 ஆம் வரிகளில்

சீரியல் பொலிய நீரல நீங்கப்
பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்

என்று வரும். இங்குவரும் பாரதியைப் பைரவி என்று வேங்கடசாமி நாட்டார் பொருள்சொல்வார். இதை உறுதி செய்யுமாப்போல் வேறெங்கும் வழக்குக் கிடைக்கவில்லை. நாட்டார் எப்படியிதைக் காளிக்குச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் கூற்றை வைத்து, அகரமுதலிகளில் ஏற்றி விட்டார். நான் அறிந்தவரை, ”திரிபுரத்தை எரிக்கும்படித் தேவர் வேண்ட, எரிமுகங் கொண்ட பேரம்பின் ஏவலைக் கேட்க, உமையவள் ஒரு பக்கம் நிற்க, சிவனாடும் சிவனரங்கத்தில், ஓங்கிய இமையவன், தாளவியல்பு பொலிய, அவையல்லாதன நீங்க, ஆடிய கொடுகொட்டி ஆடலும்” என்பதே மேலுள்ள அடிகளின் பொருள். கொடுகொட்டி ஆடல் கயிலாயத்தில் நடந்தது ஆகவே தொன்மமுண்டு. உடுக்கையின் தாளத்திற்கேற்ப நடந்த கூத்து. கொடுகொட்டி பற்றி நிறையக் கூறலாம். ஆனால் இங்கு தவிர்க்கிறேன். அடுத்து அதே காதை 44-45 ஆம் வரிகளில்

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்

என்று சொல்லப்படும். மேலுள்ள 39-43 ஆம் வரிகளில் பாரதியை பைரவி என்ற வேங்கடசாமி நாட்டார், இதில் பாரதியைச் சிவன் என்றே சொல்வார். இது முன்னுக்குப்பின் முரணாகவே தெரிகிறது. இங்கே பாண்டரங்கம் என்பது சுடுகாட்டில் நடப்பது. பாண்டல் = சாம்பல். பாண்டரங்கம் = சாம்பல் மேவிய அரங்கம். இது தேரின்முன் நின்ற நான்முகன் காணப் பரமன் ஆடிய விரிந்த பாண்டரங்கக் கூத்து சொல்லப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் பரத்து நாட்டியம் தமிழர் நாட்டியம். அதைப் “பரத நாட்டியம்” என்பது திரிபு வேலை.

Sunday, March 29, 2020

இந்தியா என்ற சிந்து நாட்டின் பொருள்

 உடன் இணைத்துள்ள படத்தில், இந்தியாவின் பெயர் ”சிந்துநாடு” என்று சொல்லப்படும்.

சிந்து என்பது ஆற்றின் பெயர் தான். ஆனால் சிந்தின் பொருளென்ன? - என்று இவ்விடத்தில் கேட்பது நல்லது.  முன்னால், “குளிர்ச்சொற்கள்” என்ற இடுகையில் (https://valavu.blogspot.com/2009/09/blog-post.html) சிந்தின் சொற் பிறப்பைச் சொல்லியிருந்தேன் இந்த இடுகையில் மற்ற குளிர்ச்சொற்களை விடுத்து, சிந்து தொடர்பானவற்றை மட்டும் வெட்டியொட்டுகிறேன். இடுகையின் முடிவில் வருவதைப் பார்த்து வியந்துபோவீர்கள். முடிவில் இந்தியா என்ற நாட்டின் பொருள் இது தானா என்று அசந்து போவீர்கள். சுவையாரமான இடுகை.
    .     
”நீர்ப்பரப்பு கூடக்கூட நீர்ச்சூடு குறையும்” என்பதால் சிறுத்தலை, சூட்டுக் குறைவோடு பொருத்துவார்கள். சில்>சிலிர்>சிலிர்தல். பிறவினையில் இது சிலிர்த்தல் ஆகும். [இப் பிறவினைச் சொல்லால் நடுக்கம், திகைப்பு போன்ற உணர்வுகளைக் குறிப்பர். அவையும் குளிர்ச்சிப் பொருளின் நீட்சி உணர்வுகளே.] சில்-இடுதல் சில்லீடு (chill) எனும் பெயர்ச்சொல் உருவாக்கும். chill: O.E.ciele, cele "cold," from P.Gmc. *kal- "to be cold," from PIE base *gel- "cold."

சில்லிட்ட நீரையே ஆண்டின் பல மாதங்கள் வடபுலத்தார் பயனுறுத்துவதால் சில்>சல்>சலம்>ஜலம் என்று திரிவில் நீர்ப்பொருளைச் சங்கதம் சுட்டும். [சலசல என்ற ஒலிப் பொருளில் ”சலம்” பிறந்ததாய்ச் சொல்வது இன்னொரு விளக்கம்.] ஜலத்திலிருந்து ஜலீலம் என்ற சங்கத நீட்சி ஏற்படும். மேலை நாடுகளில் சில போது நீரும் பனிக்கல்லும் சேர்ந்து காற்றோடு பெய்யும் மழை வருவதுண்டு. இதை sleet என்பார். சில்லின் நீட்சியாய் பனிக்கல்லைச் சில்லுக்கல் எனலாம். [sleet ஐ சில்லுக்கல் மழை என்று தமிழில் எளிதாய்ச் சொல்லலாம். கல்லை ஒதுக்கிச் சிலிதை என்றுஞ் சொல்லலாம்.]

சில்லின் நெருங்கிய திரிவில் சல்>சல்நம்>சன்னம் ஆகி thin - சிறுமை காட்டுவது போல, மெய் சில்லிட்ட நிலையை சல்நி>சன்னி எனும் சொல் அடையாளம் காட்டும். சில்>சின்னி என்பதும் அதே நிலை காட்ட முடியும். ஒரு நீர்ப்பொதி சில்லுறும் போது, சிலும்பும் (சில்> சிலு>  சிலும்பு), சில்கும், சீகும், சீகுறும். (சீகரம் இப்படி எழும்.) சிதறும் (சில்தல்> சிதல்> சிதர்> சிதரு> சிதறு. சிதர், சிதரம் = மழைத்துளி ). பின் சில்ந்தியும் போகும் (>சிந்தும். சிந்தல்= சொரிதல்). சிந்திய பொருளின் சூடும் குறையும்.

சிந்து என்பது துளி, நீர், ஆறு, கடல் என்பதோடு வெள்ளை நிறத்தையும் குறித்தது இங்கு கவனிக்கத் தக்கதாகும். பனியும் வெள்ளை தானே? சுல் எனும் வேர் வெள்ளையைக் குறிக்கும். சுல்> சுல்லு> சுள்ளி என்பது வெள்ளியைக் குறிக்கும். சுல்லு> சுல்லம்>சு ல்வம் என்பது சங்கதத்தில் வெள்ளியைக் குறிக்கும் (ஆங்கில silver). வெள்ளை நிறத்து ஆண் விந்து சுல்> சுல்க்கு> சுக்கு> சுக்கிலம் எனப்படும். வெள்ளை நிறத்து வெள்ளிக் கோள் சுல்> சுல்க்கு> சுக்கு> சுக்ர என்ற திரிவில் சங்கதப் பெயர் கொள்ளும். சுல்> சுவ்> சுவேது எனும் வடமொழி வளர்ச்சியும் வெள்ளையைக் குறிக்கும். சுவேதாம்பரர், வெள்ளாடைச் செயினரைக் குறிக்கும் சொல். இன்றைக்கு கேரளத்தின் பெரிய ஆறான பெரியாறு சுள்ளியம் பேராறு என்றே சங்க இலக்கியத்தில் பேசப்படும். நீரக ஏகனிச் செறிவு (hydrogen ion concentration) கூடிப் போய் களரி அரங்கில் (alkali range) வருமாகில் ஆறு பால் நிறம் காட்டும். பால் நிறம் வெள்ளி நிறம் தானே?

வெள்ளைப் புள்ளிகளையுடைய ஆடு, மாடுகளைச் சிந்து வகை என்று குறித்துள்ளார். வெள்ளை நிற இருவாட்சி (Tuscan jasmine) சிந்து என்று சொல்லப் படும். செல், சி(ந்)தல், சிதலை என்ற சொற்கள் வெண்ணிறக் கறையானைக் (termite) குறிக்கும். சிந்தின் சகரத்தைப் போக்கி இந்தெனும் பழக்கம் நமக்கு  உண்டு. சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்த்ர என்றும் வடவர் சொல்லியிருக்கிறார். இந்த ஒலி வேறுபாடுகளோடு

இந்து கமலம், சந்த்ர காம்பியம், சித அம்புஜம் = வெண்டாமரை,
இந்த்ர புஷ்பம் = வெண்தோன்றி,
இந்த்ரபம் = வெட்பாலை

என்னும் சில சித்த மருத்துவப் பெயர்களைப் பார்த்தால், ”இந்து, சிந்து, சந்து, சந்த்ர” என்ற சொற்களுக்கும் வெண்மைக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

சிந்தாற்றின் உயர்பகுதிகளில் கரைகளை ஒட்டிய பாறைகளில் படிவமாய்க் கிடைக்கும் உப்பு சிந்துப்பு எனப்பெறும். [சகரம் தவிர்த்து இந்துப்பு என்றும் இதைச் சொல்வர்.] வடக்கே இந்தி மொழியில் ”சந்தா நமக், சிந்தா நமக்” என்றும் இதைச் சொல்வார். நம் சித்த மருத்துவ அகராதிகளில் ”சந்திர லவணம், சிந்து, சிந்துசாரம்” என்றும் இது சொல்லப்படுகிறது.

இந்த உப்பின் கதையைச் சற்று விரிவாய்ப் பார்ப்போம். கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென்னிந்தியா வடகிழக்கே நகர்ந்து ஆசியாவை முட்டியது என்பார். இரண்டிற்கும் இடைப் பட்ட டெதிசுக் கடல் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து ஆவியாகிப் போனதாம். இதனால், பழங்கடலின் உப்பு செறிந்து, படிகமாகிப் பல மாத்திரிகள் (meters) உயரத்திற்குப் பள்ளங்களை நிறைத்து, பாறையானதாம். மேலும் மேலும் ஆசியாவோடு மோதியதால், உப்புப் பாறைகளுக்கும் மேல் வண்டலும் மண்ணும் படிந்து, கூடவே நில மடிப்பு விழுந்து, உயர்ந்து, குன்றுகள், மலைகள் ஏற்பட்டனவாம். இம்மலைகளின் தொடரே இமய மலைத் தொடர் ஆகும். காலம் செல்லச் செல்ல, இமய மலை மேல் பனிப் பாறைகள் உருவாகி, வெப்பம் கூடும் காலத்தில், பனியுருகி மேற்கே வழிந்து வளைந்து, சிந்தாறு ஏற்பட்டுத் தென்மேற்கில் ஓடியதாம். அப்பொழுது, அது வண்டல்களை வாரிக் கொள்வதோடு அன்றி, பனிப்பாறைகள் ஆற்றின் இருபுறத்தும் மூடிநிற்க வழி ஏற்படுத்திப் போனது. பனிப்பாறைகளின் கீழே பனியுருகி நிலப்பாறைகளின் புரைகள் (pores) வழி ஊடுறுவிக் கசிந்து, அங்கிருந்த உப்பைக் கரைத்து கீழ்ப்புரைகள் வழியாய் வெளிப்பட்டு, சில இடங்களில் தொடர்துளிகளாய் ஆண்டு முழுக்கச் சொரிந்திருக்கிறது. செறிந்த உப்புக் கரைசலில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் நீர் ஆவியாகும் போது நிலப் பாறையோரங்களில் புரைகளுக்கு அடுத்து சரஞ்சரமாய் உப்பு மீண்டும் படிகமாகித் தொங்கிக் காட்சியளித்தது.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நடந்து வரும் இப் புவிச்செயல்கள் 50000  ஆண்டுக் கணக்கிலும், அதற்குப் பின்னும் படர்ந்த இந்திய முதன்மாந்தருக்கு புரியவா செய்யும்? அவர் பார்த்ததெல்லாம் பனிப் பாறைகளும், அவற்றிற்குச் சற்று கீழே சரமாய்த் தொங்கும் உப்புப் படிவங்களும் தானே? கடற்கரை இலாக் குறிஞ்சி நிலத்தாருக்கு, கடலுப்பின் பகரியாய்ச் சிந்துப்பு பயனுற்றது. அம்மாந்தரின் பார்வையில், சிந்துப்பு என்பது பாறைகளில் பனிபடர்ந்து சொரிவதால் இயல்பாய் விளையும் உப்பு. (Rock salt is formed naturally on mountains and rocks, being solidified from falling dew. It is an impure chloride of sodium.) உலகின் விந்தை விளைவுகளில் சிந்துப்பும் ஒன்று. இற்றைப் பாக்கித்தானில் உப்பு அரங்குப் (salt range) பகுதிகளில், ஆற்றிற்கும் உப்பிற்கும் உள்ள பொதுக் கரணியத்தால் இப்பெயர் ஏற்பட்டது. அப் பொதுக்கரணியம் என்ன?

சிந்து எனும் சொல் துளி, நீர், ஆறு, கடல், வெள்ளை மட்டும் குறிக்காது, மிகுந்து சில்லிட்ட நீர் அல்லது பனித்துகள் என்பதையும் குறித்திருக்கும் என்று கீழ்வரும் பல கரணியங்களால் ஊகிக்கிறோம். அக் கரணியங்களில் முதலானது: ”ந்நு, ந்து” என்ற பலுக்கற் திரிவுகள் இருந்தாலும் தமிழிய மொழிகளில் இணைச்சொற்களாகி ஒரே பொருளைச் சுட்டி அமைவதாகும்.. காட்டு: வந்நு/வந்து, பந்நு/பந்து. (நகர ஈறு னகரம் ஆவதையும் இங்கு சேர்த்து எண்ணலாம்.) சில்>சின்>சின்னு என்ற வளர்ச்சி ஏற்படுமானால் சின்னு/சிந்து என்ற திரிவும் தமிழில் அமையக் கூடாதா, என்ன?

snu என்னும் சங்கத வேர்ச்சொல்லிற்கு dripping, trickling, sprinkling என்ற பொருட் பாடுகளைச் சொல்வார். சில்>சின் எனும் தமிழ்வேரில் கிளைத்த சின்னம், சீந்தல் என்ற தமிழ்ச்சொற்கள் மழைத்தூறலைக் (drizzling) குறித்ததாய் அகராதி நிகண்டு பதிவு செய்யும். கோவை, நீலமலை மாவட்டங்களைச் சீத நாடென்று சொல்லிக் கொடுந்தமிழ் 12 நாடுகளில் ஒன்றாய்க் காட்டுவார். சீந்து, சீந்தல், சீதம் ஆகிய தமிழ்ச் சொற்களின் முந்திய வடிவாய்ச் சிந்து என்ற சொல்லே அமைய முடியும். அதற்குப் பனிப்பொருள் (cold, chill) இருந்திருக்க பெரிதும் வாய்ப்புண்டு. தூவப்பட்ட (sprinkle) பனித்துகள், உருகி நீரானால், அது சொட்டும் (drips), துளித்து விழும் (trickles) தானே?

snu என்ற சங்கதச் சொல்லை ஒட்டிய மேலைச் சொற்கள் பலவும் உள்ளன. snow: O.E. snaw "snow," from P.Gmc. *snaiwaz (cf. O.S., O.H.G. sneo, O.Fris., M.L.G. sne, M.Du. snee,Du. sneeuw, Ger. Schnee, O.N. snjor, Goth. snaiws "snow"), from PIE *sniegwh -/*snoigwho- (cf. Gk. nipha, L. nix (gen. nivis), O.Ir. snechta, Welsh nyf, Lith. sniegas, O.Prus. snaygis, O.C.S. snegu, Rus. snieg', Slovak sneh "snow") என்று அவை அமைந்திருக்கின்றன. ஓராண்டில் ஆறேழு மாதங்கள் பனி நீரைத் தங்கள் மேனிமேற் சொரிந்து கொண்ட வடபுலத்தார் snu என்ற சொல்லோடு தொடர்புறுத்திக் குளித்தலை ”ஸ்நாயதி” என்று சொல்லி ஈரப்படுதல் என்று பொருள் கொண்டார். வடக்கே குள்ளக் குளிக்க முடியாது; ஓரளவு ஈரப்படுத்திக் கொள்ளவே முடியும். [The cognate in Skt., snihyati, came to mean "he gets wet."] சுடுநீரால் தான் ஆண்டின் பல மாதங்கள் அவர் குளிக்க முடியும்.

சிந்திற்கும் பனிக்கும் தொடர்பில்லை எனில், சிந்தாறு என்ற கூட்டுச்சொல் ஏற்பட வாய்ப்பேயில்லை. [சிந்து எனுஞ் சொல்லை ஈச்சமரத்தோடு தொடர்பு காட்டி திரு. நா. கணேசன் பொருள் சொல்வார். அதையேற்க எனக்குப் பெருந் தயக்கமுண்டு. இன்னுஞ் சிலர் சிந்தின் சங்கத வேராக ஸித் எனும் சொல்லைக் காட்டுவர். அந்த வேர் சிந்தின் விதப்பான பொருளாகாது. பொதுமையான பொருளாய் உள்ளது. எப்பொழுதும், ஆற்றின் பெயர்கள் பொதுமையில் இல்லாது விதப்பாகவே இருப்பதை நாம் காண்கிறோம். காட்டு: பொன்னி, கன்ன பெருநை, தாம்ப பெருநை, வெள்கை>வைகை]

சிந்தாற்றின் சிறப்பே, மக்கள் புழங்கும் உயர்பகுதிகளில், வடந்தைப் பருவத்தில் (வாடை, வடந்தல்> vadanther> vidanther> winther> winter) ஆற்றின் கரையோரங்கள் பெரிதும் பனி பொழிந்து பாறைகளாவது தான். பனிப்பாறை படர்ந்து கிடக்கும் சிந்தாற்றின் மேற்பகுதிகளை மிகப் பழங் காலத்தில் மாந்தர்களால் அணுக முடிந்திருக்க வேண்டும். அற்றை நிலையில், மீள மீள வெம்மை கூடும்போது பனிப்பாறை உருகி, நீராய் மாறிப் போவதையும் பின் வெம்மை குறையும் போது, நீர் உறைந்து பனிப்பாறை ஆவதையும் அவர் பட்டறிந்திருக்க வேண்டும். சிந்தியதும், உருகியதும் நீர்த்துகளே என்ற புரிதல் அவர்க்குப் பட்டறிவால் ஏற்பட்டிருக்கும். இச் சிந்தனைகளின் வழி ஓர்ந்து பார்த்தால், சிந்தாற்றின் பொருள் பனியாறு என்பதாய் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம். [கூடவே silver river - வெள்ளாறு என்ற புரிதலும் இருந்திருக்க வேணுமென ஊகிக்க முடியும். தென்னகத்திலும் 4 வெள்ளாறுகள் வேறு காரணம் பற்றியுள்ளன. சிந்து என்பது வெள்ளைப் பனி. இவை வெறுமே வெள்ளாறுகள்.]

சிந்தாறு = பனியாறு என்ற அதே அணுகலைக் கொள்ள முடியாத அளவிற்கு, காடுகள் மிகுந்து, மலைப்பாதைகள் அமையாது, கங்கை, தொழுனையின் (யமுனை) மேற்பகுதிகள் இருந்திருக்கலாம். வடபுலத்து மாந்தர், தம் நாகரிக வளர்ச்சியில் சிந்தாற்றங்கரையில் இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்த பின் தான், கங்கை, தொழுனைக் கரைக்கு மெதுவாய்ப் பெயர்ந்திருக்கிறார். எனவே பனியைச் சிந்தாற்றோடு மட்டுமே தொடர்புறுத்தியிருக்கலாம். கங்கை, தொழுனையின் நீர் மலையின் கீழ்மட்டங்களில் மட்டுமே அணுகக் கூடியதாய் இருந்ததால், பனியைக் காணாது வெறுமே சில்லிட்ட நீராய் மட்டுமே வடபுல மாந்தர் இவ்வாறுகளை உணர்ந்திருக்கலாம்.

முன்சொன்னது போல், சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்து, சாந்தென்றும் நீளும். சந்தின் நீட்சியாய்ச் சந்தன் என்ற பெயர் குளிரும் இரவிற்குரிய, பால்வண்ணம் காட்டும், நிலவின் பெயராய் வடபுலத்தில் அமையும். சந்த>சந்த்ர என்று சங்கதத்தில்  இன்னுந் திரியும். சிந்து, சகரம் தவிர்த்து இந்தாகி மீண்டும் நிலவைக் குறிக்கும். நிலவைக் குறித்த சொல் இன்னுந் திரிந்து இந்த>இந்த்ர என்றாகி வெள்ளை நிறத் தேவர் தலைவனைக் குறிக்கும். அத்தலைவன் ஏறும் விலங்கையும் வெள்ளை யானை என்று தொன்மஞ் சொல்வார். (வெள்ளையானை இனம் இன்றும் இந்தியாவின் வடகிழக்கில், பர்மாவில், தாய்லந்தில், கம்போடியாவில் உண்டு.) அவன் பார்வைக் குளிர்ச்சிப் பார்வை என்றும் இந்நாடுகளின் தொன்மங்கள் கூறும்.

குளிர்வது, நிலவிற்கு இயல்பானதால், தண்ணவன், நிலவைக் குறிக்கும். [தண் எனும் வேர் பற்றி இக்கட்டுரையில் அலசவில்லை.] இது போல ஒரு குறிப்பிட மரக்கட்டைகளை அரைத்துப் பெற்ற கலவை குளிர்ச்சி தருவதால், நிறம் வெள்ளையன்றி வேறாயிருந்தும், சந்து சந்தனம் என்ற சொற்களைப் பெறும். பின் அக்குளிர்ச்சி உடலைச் சார்வதால் சார்ந்து>சாந்து>சாந்தம் என்று பெயரும் வேறுவகையிற் கொள்ளும். சாரம்>ஆரம், சாரல்>ஆரல் நீட்சிகள் இன்னும் அடுத்த சொல்வளர்ச்சி நிலைகள் ஆகும்.

ஆக இந்தியா என்பது பனிநாடென அந்தக் காலத்தில் பெயரிடப் பட்டுள்ளது. பனிநாடு - சிந்துநாடு = இந்தியா. இந்தப் பொருள் தமிழால் மட்டுமே உய்த்து உணர முடியும். தமிழின் வழியின்றி இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாது என்று எத்தனை முறை சொல்வேன்?

அன்புடன்,
இராம.கி. 

apt

apt (adj.)

mid-14c., "inclined, disposed;" late 14c., "suited, fitted, adapted, possessing the necessary qualities for the purpose," from Old French ate "fitting, suitable, appropriate" (13c., Modern French apte), or directly from Latin aptus "fit, suited, proper, appropriate," adjectival use of past participle of *apere "to attach, join, tie to," from PIE root *ap- (1) "to grasp, take, reach" (source also of Sanskrit apnoti "he reaches," Latin apisci "to reach after, attain," Hittite epmi "I seize"). Elliptical sense of "becoming, appropriate" is from 1560s.

இதைச் ”சரியாக” என்றே பேச்சுவழக்கில் புரிந்துகொள்ளுகிறோம். இதன் அடிப்படைப்பொருள் ”பொருந்தும்படியாக, பொருத்தமாக” என்பதாகும். அட்டுதல் என்றசொல் பொருத்துதல், ஒட்டுதல் என்றே பொருள்கொள்ளும். கழுத்தில் பொருத்துவது அட்டிகை. அட்டித்தல்= பொருத்திவைத்தல். அடுத்தல்= சேர்த்தல், பொருத்தல், நெருங்கல். அடுத்தாள் என்பவர் நம்மோடு பொருந்தியவர். எனவே நம் assistant. அடுத்திருப்பவர் (நெருங்கியிருப்பவர்) உதவி செய்பவரும் தான். அடுத்தாள் என்ற சொல் 19 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியா போன தமிழரிடம் பரவலாய்ப் புழங்கிய சொல். ஒவ்வொரு கடைகாரரும் தனக்கு அடுத்தவரை இப்படித்தான் சொன்னார். apt ஐ ஒட்டிப் பல சொற்கள் உண்டு. 

adapt = அடுத்தேற்று, இல்லாத ஒரு பழக்கத்தைப் பொருத்திக்கொள்வது. மகனில்லாதவர் ஒரு மகனைப் பொருத்திக்கொள்வது.
adaptation அடுத்தேற்றம் அடுத்தேற்றலின் பெயர்ச்சொல்.
adept = அட்டாக = பொருத்தமாக; அட்டை என்னும் உயிரி தான் நகரும் சுவரோடு பொருத்திக்கொள்வதால் அப்படிப் பெயர்கொண்டது.
aptitude/attitude = அடுதகை /அட்டகை. apt என்ற சொல்லையொட்டி இருவேறு சொற்கள் பிறந்தன. இரண்டும் சற்று நுணுகிய பொருள்வேறுபாடு காட்டும். ஒன்று பொருத்தமாகும் தன்மை = அடுதகை. இன்னொன்று பொருந்திய/பொருந்துகிற/பொருந்தும் தன்மை. அள்+தகை = அட்டகை. இது வினைத்தொகையால் ஆன சொல். முன்னதை aptitude க்கும் பின்னதை attitude க்கும் வைத்துக் கொள்ளலாம்.
aptly = அடுவாக = பொருத்தாக
aptness = அட்டுமை = பொருத்துமை
inapt = அடாத = பொருந்தாத
inept = அடுவிலா = பொருத்தமிலாத

அன்புடன்
இராம.கி.

appeal

பலநேரம் நாம் தொடர்புச்சொற்களை ஒருங்கே காணாது பாத்தி பாத்தியான அணுகுமுறையிற் சொல்லாக்கி விடுகிறோம். இது தவறான நடைமுறையே.  முன்னொட்டு/பின்னொட்டுப் பிணைக்கும் சொல் அமைப்பில் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். முன்னொட்டு, பின்னொட்டுப் புரிந்து சொற்களைப் படைப்பதில் இற்றைத் தமிழ் நடைமுறையில் பலருக்கும் பெருத்த குழப்பம் இருக்கிறது.

இந்தையிரோப்பியக் குடும்பில் முன்னொட்டு என்பது பெரிதும் இயற்கை யானது. பல்வேறு முன்னொட்டுக்களை விதம் விதமாய் ஒட்டிப் பொருள் வேறுபாட்டை எளிதிற் கொணர்ந்து விடுவர். dispel, expel, impel, propel, repel என்பவை அப்படி உருவானவை தான். appeal (v.) என்பதும் இப்படி எழுந்தது தான், ஆனால், சற்று ஒலிப்பு மாற்றம் நடந்துள்ளது.

appeal (v.)
early 14c., originally in legal sense of "to call" to a higher judge or court, from Anglo-French apeler "to call upon, accuse," Old French apeler "make an appeal" (11c., Modern French appeler), from Latin appellare "to accost, address, appeal to, summon, name," iterative of appellere "to prepare," from ad "to" (see ad-) + pellere "to beat, push, drive" (from PIE root *pel- (5) "to thrust, strike, drive").

appeal (v.) ஓடு சேர்ந்து இன்னும் இரு சொற்கள் அதே பொழுது ஒலிப்பு மாறாது உண்டு,

appellant (n.)
"one who appeals from a lower to a higher court," 1610s, from Anglo-French, French appellant, noun use of present participle of French appeller "make an appeal" (Old French apeler), from Latin appellare "appeal to" (see appeal (v.)).,

appellate (adj.)
"pertaining to appeals," 1726, from Latin appellatus, past participle of appellare "appeal to" (see appeal (v.)).

மேலேயுள்ள எல்லாச் சொற்களுக்கும் அடிப்படை pellere எனும் இலத்தீன் வினையாகும். ஒரு குழாயின் வாயில் வெளியாகும் நீர்மத் தாரையைப் ”பீச்சி யடிக்கிறது” என்கிறோமே? நினைவில் வருகிறதா? இற்றைப் பேச்சுவழக்கிற் பீச்சலென்று திரித்தாலும், சங்க காலத்தில்  இது பிலிற்றல்>பிலித்தல்> பிலிச்சல்>பீச்சல் என்றே பலுக்கப்பட்டது. பிலிற்றின் மூலம் கொள்கல உள்ளடக்கத்தைப் புறந்தள்ளுவதை dispel என்ற சொல் காட்டுகிறது. இதைப் புறந் தள்ளு, ஒதுக்கித் தள்ளு என்று சொல்கிறோம். இடம், பொருள், ஏவல் புரிந்த இடத்தில் வெறுமே தள்ளு என்றுகூடச் சொல்கிறோம். பிலிறி யொதுக்கு என்பது சிறப்பாக இருக்கும். பிலிற்றின் (பீச்சின்) மூலம் கொள்கல உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதைத் தான் expel என்ற ஆங்கிலச் சொல் காட்டுகிறது. இதை வெளித்தள்ளு, வெளிப்பீச்சு என்கிறோம் ஆனாலும் பிலிறித் தள்ளல்/பீச்சித் தள்ளல் என்பது சிறப்பாக இருக்கும்.

விளவக் கண்டங்களை (fluid quanta) விளவத்தின் உள்ளேயே வீசியெறிந்து அலசுவதை impel என்ற சொல் காட்டுகிறது. இதை அலசு என்றே இப்பொழுது சொல்கிறோம். இங்கும் நுட்பியல் ஒழுங்கு கருதி உட்குதல்= உள்ளே வைத்தல் என்ற பொருளால் பிலிறுட்கல் என்று சொல்லலாம். விளவக் கண்டங்களைத் தாரையாக்கி விளவக்கலனிலிருந்து பிலிற்றி, அதன்மூலம் விளவக் கலனையே எதிர்த்திசையில் உந்தவைப்பதை propel என்றசொல் காட்டுகிறது. விளவப் பிலிற்றலால் ஒருபக்கம் தள்ளுஞ் செய்கையைத் தடுத்து எதிர்ப்பதை repel என்ற சொல் காட்டுகிறது. இதை எதிர்த்தள்ளு என்றே சொல்கிறோம். (வெறுமே எதிரென்றுஞ் சொல்வதுண்டு.) இங்கும் ஒழுங்கு கருதி பிலிற்றெதிர்/ பீச்செதிர் என்று சொல்லலாம். இவற்றை வரிசைப் படுத்தினால்,

dispel = பிலிற்றொதுக்கு
expel = பிலிற்றித்தள்ளு
impel = பிலிற்றியுட்கு
propel = பிலிற்றியுந்து
repel = பிலிற்றெதிர்

என்றமையும் இதே பாணியில் தான் appeal, appellant, appellate ஆகியவற்றிற்குச் சொற்கள் அமைக்கலாம்,  (appeal க்கு எல்லோரும் சொல்லும் “மேல் முறையீடு” என்பதை நான் விளக்கமாகவே கொள்வேன். அது கலைச்சொல் அல்ல. நாம் எது கலைச்சொல், எது விளக்கம் என்பதில் தடுமாறுகிறோம்.)

appel>appeal = பிலிற்றேற்று.
appellant = பிலிற்று ஏற்றாளி
appellate court = பிலிற்று ஏற்று நயமன்றம்

முடிந்தால், http://valavu.blogspot.com/2014/02/blog-post.html என்ற இடுகையைப் படியுங்கள். ஆங்கிலம் பல்வேறு துறைகளுக்குப் பொதுவாகத்தான் தன் சொற்களைப் படைத்துக் கொள்கிறது. நாம்தான் பொறியியல் (engineering), மருத்துவம் (medicine), மானகை (management), வழக்காடல் (law practice) என வெவ்வேறு துறைகளுக்குத் தனித்தனிச் சொல்தேடிப் பாத்திகட்டிக் கொள்கிறோம். சொல்லாக்கத்தில் பல்லாண்டு இயங்கிவரும் நான் இதைச் செய்யவேண்டாம் என்று நெடுநாள் சொல்லிவருகிறேன். கேட்கும் பலரும் முன்வரத் தயங்குகிறார்.

அன்புடன்,
இராம.கி.

தும்பு (antenna)

antenna (n.)
1640s, "feeler or horn of an insect or other arthropod," from Latin antenna, antemna "sail yard," the long yard that sticks up on some sails, which is of unknown origin, perhaps from PIE root *temp- "to stretch, extend." In the entomological sense, it is a loan-translation of Aristotle's Greek keraiai "horns" (of insects). Modern use in radio, etc., for "aerial wire" is from 1902. Adjectival forms are antennal (1815), antennary (1833), antennular (1853).

temp PIE மூலம் பார்த்தால் "தும்பி" என்பதே போதுமென எண்ணுகிறேன். ஒரே தும்பி அலைவாங்கியாகவும் இருக்கலாம். அலைபரப்பியாகவும் இருக்கலாம். தனித்தனிச் சொற்கள் தேவையா? தவிர, இதுபோல் விளக்கம் கட்டுரைப் பத்திக்குள் வரவேண்டியது. நாம் கலைச்சொல்லையும் விளக்கத்தையும் குழப்பிக்கொள்கிறோம் என்பது என் நெடுநாளையக் கிடுக்கம் (criticism). 

நீர்வீழ்ச்சிதான் வேண்டும் அருவி வேண்டாம் என்போரை நான் மாற்ற முடியாது. இருந்தாலும் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறேன். தும்பு உள்ளது தும்பி. இது வண்டையும் தட்டானையுங் குறிக்கும். நான் பரிந்து உரைப்பது தும்பு. இதற்கு தும்பு= ஓரம், border, fringe; நரம்பு முதலியவற்றின் சிம்பு, frayed ends, as of a gut, “கொடும்புரி மயிர் தும்பு முறுக்கிவை நான்கும்” (சீவக 721 உரை); நார், fibre; வரம்பு, properiety, relevancy; கயிறு, rope, lether, ”ஆர்த்த தும்பறுத்து விடுப்ப”, (திருவாலவா. 33, 14); நெடுஞ்சி, cow thorn;  - என்ற பொருள்கள் உண்டு. இன்னொரு பொருளாக antenna என்பதைப் பரிந்துரைக்கிறேன். 

antenna = தும்பு
Dish attenna = தட்டுத் தும்பு
antenna aerial = வான் தும்பு
antenna aerial array = வான் தும்பணி
antenna array = தும்பணி
antenna coupler = தும்பிணைப்பி
antenna coupling = தும்பிணைப்பு
antenna tilt error = தும்புச்சாய்வுத் தவறு
antenna tranmit or receive = விடு/பெறு தும்பு

தமிழரும் தென்கிழக்கு ஆசியாவும்

 அங்கோர் வாட் என்பதைத் தமிழில் நகரவட்டம் என்று ஓர் இதழில் எழுதி யிருந்ததை மறவன்புலவு சச்சிதானந்தம் ஒருமுறை காட்டியிருந்தார். நகரவட்டம் என்று சொல்வதைக் காட்டிலும் நகர வாடி என்பது சிறப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணமுமுண்டு. நகர என்பதில் எந்தத் தயக்கமும் வேண்டாம். அது தமிழ் தான். விக்கிப்பீடியாவினருக்கு அது சங்கதமாய்த் தெரிநதால் அது உண்மையாகிவிடாது. (நகரத்தின் தமிழ்மையை வேறோர் இடத்தில் விளக்கலாம்.) நகரம் என்பது கூடகோபுரத்திற்கும் பெரிய ஊருக்கும் சொல்லாகியிருப்பது தமிழிலுண்டு. இதுபோன்ற இயலுமையை வேறுமொழிகளிற் கண்டதில்லை. விண்நகரம் என்பது விதப்பாகப் பெருமாள் கோயில் கோபுரத்திற்கான பெயர். நாலாயிரப் பனுவலைப் படித்தவருக்குப் புரியும்.

வாட் என்பது வாடிக்குத் தொடர்பானது பற்றி விரிவாக விளக்கவேண்டும். அதற்குமுன் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் பங்கு என்றவுடன், பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப் படும் ஒரு பொதுப் புரிதலைச் சொல்லவேண்டும். வரலாற்றில் இந்தோனேசியச் சைலேந்திரரின் கிளை மரபால் கம்போடியா வளர்ச்சி பெற்றது. இந் நாடுகளில் எல்லாம் பெரிதும் போனது தமிழ்வணிகரே. இங்கு சங்கதம் ஒருநாளும் வணிகமொழியாய் இருந்ததில்லை. தமிழ் வணிகரோடு இலக்கியம் நூல், வேதம் படித்த பெருமானர் சிலர் துணையாகப் போயிருக்கலாம். சிலர் தமிழ் அரசரின் சார்பாளராகவும் கூடப் போயிருக்கலாம். அவ்வகையில் தமிழோடு, சங்கதமும் கூடப் போயிருக்கலாம்.

அது அடிப்படையிற் துணை நுழைவே ஒழிய முதல் நுழைவு அல்ல. (ஆந்திரம் கலிங்கம் ஆகிய இடங்களிலிருந்து தென்கிழக்கு ஆசியா போன வணிகருக்கும் ”தமிழே வணிகமொழி” என்பது அங்குள்ள கல்வெட்டுக்களால் நன்றாகவே தெரிகிறது. அது சங்கதம் அல்ல. ஆந்திரர்/கலிங்கர் ஆகியவரோடு தமிழருக்கும் சேர்த்துக் கலிங் என்றே இன்றும் மலேசியாவில் பொதுப்படையான பெயருண்டு. தமிழர்க்கு விதப்பாகச் சோழியர் என்று பெயருண்டு.)

19 ஆம் நூற்றாண்டு இந்தியவியலாரின் தாக்கத்தால் குடியேற்றக்காரரோடு உள்நுழைந்த மேலையாய்வாளர் கல்கத்தாவிலிருந்து கிளம்பிய இந்தியத் தொடர்பாய் தென்கிழக்கு ஆசியாவிற் தெரியும் எல்லாவற்றையும் சங்கத மயமாய்க் காட்டி, (எழுத்து, பேச்சு எனப் பலவற்றில் சங்கதம் ஊடுறுவியதாம் :-))) தமிழ் அடித்தளத்தைக் குறைத்து வண்ணந் தீட்ட முயன்றார். இப்படி 19ஆம் நூற்ராண்டுத் தாக்கங்களை யாருமே மீளாய்வு செய்து தமிழரின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டவில்லை. விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரை தமிழரும் மாற்றுப் பரப்புரையுஞ் செய்ததில்லை.

இற்றை இந்திய ஆட்சியாளர் தமிழைக் குறிப்பிடாது சங்கத உறவையே பெரிதும் அழுத்திச் சொல்வதும், தமிழக ஆட்சியாளரின் மெத்தனமுமே இந்த விட்டேறித்தனமான மூடிகப் போக்கிற்குக் காரணமாகும். தமிழகத்திற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இருந்த உறவை 1947 இலிருந்து தமிழக ஆட்சியாளர் எவரும் அழுத்தங் கொடுத்துப் பேசவேயில்லை. தமிழரைத் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய வற்றிற்குக் கொண்டுபோனதையும், அவரோடு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் எந்தத் தமிழக அரசு பேசியிருக்கிறது? நமக்கென ஒரு வெளியுறவுத் துறைத் தொடர்பு வேண்டுமென நான் பல காலஞ் சொல்லிவந்திருக்கிறேன். அதில் சேர்ந்தது தான் தென்கிழக்கு ஆசியாவிற்கும் நமக்கும் உள்ள உறவை, “நெல்லும் தமிழரும், தென்கிழக்காசியாவும்” என்ற முடிவுறாத தொடரிலும், ”Candi Borobudur- பொதியிலார் சாமிநடையும்,  வைகறையும்” என்ற தொடரிலும் பேசியுள்ளேன். இன்னும் நிறைய எழுதமுடியும்.

தமிழ்நாட்டுத் தமிழர் இதை உணர்ந்தது போல் இல்லை. இல்லையென்றால், இன்னும் சென்னைக்கும், இரங்கோன்/மாந்தளைக்கும், சென்னைக்கும், தக்குவாபாவிற்கும், சென்னைக்கும், ஃப்னோம்பெங்கிற்கும், சென்னைக்கும் சியாம்ரீப்பிற்கும், சென்னைக்கும், சைகோனுக்கும், சென்னைக்கும் சாகர்த்தாவிற்கும், சென்னைக்கும் பலெம்பாங்கிற்கும், சென்னைக்கும் அட்சயமுனைக்கும், சென்னைக்கும், ஹனோய்க்கும்  இத்தனை யாண்டுகளில் பறனைகள் (planes) விட்டிருக்க வேண்டுமே? தமிழக அரசு என்றுதான் விழிக்கும்? 73 ஆண்டுகள் வாய்மூடி மோனியாய் இருப்பதா? நமக்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இருக்கும் உறவைப் புதுப்பிக்க ஏன் தயங்குகிறார்?

புரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

அமனிறை - ammonite nautilus

முதலுயிரி (Protozoa), புரையுடலி (Porifera), குழிக்குடலி (Coelentterata), மெல்லுடலி (Mollusca), கணுக்காலி (Arthropoda), தண்டுடை (Chordata) ஆகிய பொலியங்களில் (Phylum; பொலிதல்=தோன்றி மிகுதல். கணமும் பொலியமும் ஒரே பொருளன.) மெல்லுடலி வகையில் வயிற்றால் நகரும் அகட்டுக்காலி (gastropoda; அகடு= வயிறு) வகுப்பில் ammoniteகளும், nautilusகளும் அடங்கும். பொதுவாக இவற்றைக் கடல்நத்தைகள் என்பார். நிலநத்தைகள் தம்வயிற்றையே கால் போல் பயனுறுத்தி முன்தள்ளிப்போவதால் நத்தைப்பெயர் ஏற்பட்டது. நுந்துவதென்பது தமிழில் முன்தள்ளுவதைக் குறிக்கும். நுந்து>நந்து>நத்து> நத்தை என இச்சொல் வளர்ச்சிபெறும். நிலநத்தைகளோடு ஒப்பிட்டு, இரண்டிற்கும் முதுகிற் கூடுகளிருந்ததால், மேற்சொன்ன ’கடல்நத்தைகள்’ என்ற பொருள்நீட்சி ஏற்பட்டது.

நத்தைக்கூடுகள் சிறப்பான வளர்ச்சிகொண்டவை. வடிவியலில் (geometry) 360 பாகையில் சுற்றிவரும்போது ஒரேநீள ஆரங் கொண்டிருந்தாற் கிடைக்கும் வடிவம் வட்டமாகும். இதில் வளைச்செலுத்தம் (turning process) மட்டுமே நடைபெறுகிறது. மாறாக ஒவ்வொரு பாகைக்கும் வளைச்செலுத்தத்தோடு சீரானமுறையில் ஆரத்தின் நீளமுங்கூடி வளருமானால், வளைச்செலுத்தம் + ஆரநீட்டம் ஆகிய செலுத்தங்களால் புரிச்சுருவை (spiral curve) என்ற புதுவடிவம் கிடைக்கும். அடிப்படையில் வட்டமென்பது மூடிய சுற்று (closed cycle). புரிச் சுருவையோ மூடாத சுற்று (un-closed cycle). ஒவ்வொரு சுற்றையும் புரியென்றே தமிழிற் சொல்வர். புரிகளுக்குள் நந்தைகள் பதுங்குவதும் வெளிவருவதுமாய் தங்களின் சேமத்தை (safety) நிலைநிறுத்திக் கொள்கின்றன. கூடுகள் வீடுகளாய்த் தோற்றமளிக்கும்.

நாம் பெரிதும் பயன்படுத்தும் சங்கும், கடல்நந்தைகளில் ஒன்றான [துருவலைக் (Turbinella) குடும்பஞ் சேர்ந்த] துருவலைப் புருவம் (Turbinella pyrum) எனும் கடல்நத்தையின் (sea snail with a gill and an operculum, a marine gastropod mollusk in the family Turbinellidae) முதுகுக்கூடு தான். சங்கிற்கும் நந்தென்ற பெயருண்டு. ”விளங்குகொடி நந்தின் வீங்கிசை” என்ற சிலம்பு 26:203 வரியால் நந்தென்ற சொல் சங்கிற்கு இணையாய்ப் பயன்பட்டது விளங்கும். கடல்நத்தைகளில் ஒன்றான ammoniteகள் இன்று அழிந்துபோனதாகவே பலருஞ் சொல்கிறார். nautilusகள் இன்றுமுள்ளன.

”Ammonoids are an extinct group of marine mollusc animals in the subclass Ammonoidea of the class Cephalopoda. These molluscs are more closely related to living coleoids (i.e., octopuses, squid, and cuttlefish) than they are to shelled nautiloids such as the living Nautilus species. The earliest ammonites appear during the Devonian, and the last species died out during the Cretaceous–Paleogene extinction event. The name "ammonite", from which the scientific term is derived, was inspired by the spiral shape of their fossilized shells, which somewhat resemble tightly coiled rams' horns. Pliny the Elder (d. 79 AD near Pompeii) called fossils of these animals ammonis cornua ("horns of Ammon") because the Egyptian god Ammon (Amun) was typically depicted wearing ram's horns.[1] Often the name of an ammonite genus ends in -ceras, which is Greek (κέρας) for "horn". என்று விக்கிப்பீடியாவில் சொல்லப்படும். 

அமன் என்பது எகிப்தியரின் ஆண்தெய்வம். (நம்மூர் அம்மன்களோடு இதை ஒப்பிட்டுக் குழம்பக்கூடாது.) இதன் தலையில் கொம்பு இருக்குமாம். அக் கொம்பைப் போல் ammonite கூடு இருப்பதால், இப்பெயரிட்டிருக்கிறார். கொம்பை ஆங்கிலச் சொற்பிறப்பியலில் ”Old English horn "horn of an animal; projection, pinnacle," also "wind instrument" (originally one made from animal horns), from Proto-Germanic *hurnaz (source also of German Horn, Dutch horen, Old Frisian horn, Gothic haurn), from PIE root *ker- (1) "horn; head" என்றுசொல்வர். கொம்பிற்கு கோடு, இரலை, ஆம்பல், வயிர் என்ற சொற்கள் தமிழிலுண்டு. இரு>இறு>இற என்பது வளைதலைக் குறிக்கும். (இரு>இரல்>இரலை. இதை இரளை என்றுஞ்சொல்வர்.) இறவில் பிறந்த சொற்கள் இறவு, இறால் போன்றவை. இவையும் வளைவுப் பொருளில் எழுந்தவை. இறாலும் கடல்நத்தையோடு தொடர்புள்ளதே. இறையும் வளைவைக் குறிக்கும். ammonite க்கு என் பரிந்துரை அமனிறை தான்.

பல நுல்லிய (million) ஆண்டுகளுக்கு முன், மாந்தர் இங்கு வந்துசேருவதற்கும் முன், இற்றை வடவிந்தியா ஒரு கடலாயிருந்தது. அதை டெதிசுக் கடல் (Tethys sea) என்று இற்றை அறிவியல் அழைக்கும். கோண்டுவானாக் கண்டம் உடைந்து இற்றைத் தென்னிந்திய நிலம் வடமேற்கே நகர்ந்து ஆசியக் கண்டத்தை மோதிய போது டெதிசுக் கடல் வழிந்து இமையமலைத் தொடர் உயர்ந்தது. இன்றைக்கு நாம் காணும் இமைய மலையில் பல்வேறு கடற் படிவங்கள், குறிப்பாக அமனிறைக் கற்கள், ஆற்றுப் படுகைகளில் கிடைத்த வண்ணம் உள்ளன. இமைய மலைப்பக்கம் சுற்றுலாவும் எல்லோரும் இதை உணரலாம். மணாலி, சிம்லா, நைனிடால், தார்ஜிலிங், கேங்டோக், கட்டை மண்டு (காத்மண்ட்) ஆகிய இடங்களில் அமனிறைக் கற்களை வாங்கச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விழைவர்.

திருமாலின் நூற்றெட்டுப் பதிகளில் ஒன்று திருச்சாலக் காமம் (சங்கதத்தில் சாலக்காமம்>சால க்ராமம்>சாள க்ராமம் என்று இது திரியும்). பனிமலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி ஆற்றங்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக் கம்மம்>சாலக் காமம். [யால/ஆச்சா மரமே (Hardwickia binata) சாலமரமென்று சிலரும், குங்கிலிய மரமே (Shorea robusta) சாலமரமென்று வேறு சிலரும் சொல்வர். தெற்கே குங்கிலியம் வளர வாய்ப்புக் குறைவு. வடக்கில் இருந்து வணிகத்தில் வரவேண்டும்.} சாளக் கிராமம் என்றே அமனிறையைத் தமிழகத்தில் விண்ணவ நெறியாளர் (வைணவர்) சொல்வர். இது கண்டகி யாற்றில் கிடைக்கும் ஒருவிதக் கருஞ்சாயக் கல்லைக் குறிக்கும். It is blackstone containing a fossil ammonite. துல்லியங் கருதியே அமனிறை என்ற சொல்லை இங்கு நான் பரிந்துரைத்தேன்.

இனி nautilusக்கு வருவோம். இதற்குச் சொல் காண்பது எளிது. The nautilus (from the Latin form of the original Ancient Greek: ναυτίλος, 'sailor') is a pelagic marine mollusc of the cephalopod family Nautilidae, the sole extant family of the superfamily Nautilaceae and of its smaller but near equal suborder, Nautilina. நத்து, நந்து, நுகு>நகு>நாகு என்ற சொற்கள் முன் தள்ளி நகர்வதைக் குறிப்பன. நுகும் வினை, நுகு>நுகல்>நகலென விரியும். நகல்தல் நகர்தலாகி move என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம். நகலும் உயிரி நகலி. நாகு>நாவு>நாவாய் = துடுப்பால் முன் தள்ளும் கப்பல். நாகுதல்>நாவுதலை ஒட்டிப் பலசொற்கள் தமிழிலுள்ளன. அவற்றை விரிக்கின் பெருகும்.

நில நத்தைக்கான ஆங்கிலச்சொல் snail (n.) Old English snægl, from Proto-Germanic *snagila (source also of Old Saxon snegil, Old Norse snigill, Danish snegl, Swedish snigel, Middle High German snegel, dialectal German Schnegel, Old High German snecko, German Schnecke "snail"), from *snog-, variant of PIE root *sneg-"to crawl, creep; creeping thing" (see snake (n.)). The word essentially is a diminutive form of Old English snaca "snake," which literally means "creeping thing." Also formerly used of slugs. Symbolic of slowness since at least c. 1000; snail's pace is attested from c. 1400 என்றமையும். ஆங்கில snail என்பது நம்மூர் நகலியின் திரிவே. இதே முறையில் nautilus என்பதை நத்திலி என்று சொல்லலாம்.

அமனிறைகளும், நத்திலிகளும் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதென எண்ண வேண்டாம். ஆழ்ந்தால் விவரங் கிடைக்கும். நம் மரபோடு பொருந்திய நல்ல சொற்களை உருவாக்க முடியும்.

அன்புடன்,
இராம.கி.   .

algorithm, formula, authentication, secure authentication, encryption

2004 இல்  algorithm, formula, authentication, secure authentication, encryption என்ற் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை, ஆத்திரேலியா நண்பர் முகுந்தராசு ஒருமுறை கேட்டார். அவருக்கெழுதிய மறுமொழியை, இன்றும் பொருந்துமென்ற நம்பிக்கையில், மீளப் பதிவிடுகிறேன்.   
-------------------------
algorithm = அல்கொரிதம்; இது அல்கொவாரிசுமி என்ற அரேபிய அறிவியலார் பெயரால் ஏற்பட்டது. இதை அப்படியே எழுத்துப் பெயர்த்து எழுதுவது தான் சிறப்பு; அப்படி எழுதுவதால் அவருக்கு நாம் கொடுக்கும் மதிப்பு நிலைக்கிறது. இதை மாற்றுவது சரியல்ல.

form = உருவம்; format = உருவடம்; formula = உருவல்; (வாய்ப்பாடு என்று முன்னால் சொல்லியதுண்டு. ஆனால் இங்கே இணைந்துள்ள மற்ற சொற்களைத் தொகுத்துச்சொல்ல அது வகைசெய்யாக் காரணத்தால் இப்பொழுது அதைத் தவிர்க்கிறேன்.) to formulate = உருவலி, உருவலித்தல்; formulation = உருவலிப்பு; formulator =உருவலிப்பவர்

மூன்றாம் சொல்லிற்கு வருவோம். யாத்தல் = கட்டுதல்; உருவாக்குதல்; யாப்பு = கட்டுவதற்கான வழிமுறை; (procedure by which authoring takes place.) இது ஏதோ கவிதைக்கு மட்டும் என்றும் எண்ணுவது தொல்காப்பியத்தின் படி தவறு. செய்யப் படுகின்ற, கட்டப் படுகின்ற எல்லாவற்றிற்கும் உள்ள வழிமுறை யாப்பு. இதில் சட்டதிட்டங்களும் அடங்கும் தான். யாக்கம் = one which is authored; யாத்தோர் = author = உருவாக்கியவர்; கட்டுவித்தவர்; யாத்து(மை) = authorship; authority = யாத்துரி(மை) (உருவாக்கியதால் வந்து சேர்ந்த உரிமை, இந்த உரிமையை இன்னொருவருக்குக் கொடுக்கிற போது, யாத்துரிமை என்பது வழிப்படும் உரிமையும் ஆகிறது.

யாத்திகாரம்>ஆத்திகாரம்>ஆதிகாரம்>அதிகாரம் (வடமொழித் திரிவு; பின் தமிழ் அப்படியே எடுத்துக் கொண்டது. அதித்தலில் விளைந்த அதிகாரம் இதோடு சேர்ந்துகொண்டது.). ஒரு நாட்டின் கட்டமைச் சட்டம் (constitution) மக்களின் நிகராளர் (representative)களால் யாக்கப் படுகிறது. யாக்கப்பட்டதால் சில உரிமைகள் குடிமக்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், வெவ்வேறு அரசப் பணியாளர்களுக்கும் கொடுக்கப் படுக்கின்றன.

அரச யாத்துரி(மை) - state authority - இப்படி வருவதே. இதேபோல குழுமங்கள், நிறுவனங்கள், குழுக்கள், இன்ன பிறவிலும் யாத்துரி(மை)கள் - authorities - வழங்கப் படுகின்றன. யாக்கம் செய்தவர் போக மற்றவருக்கும் இப்படி வழங்கப் படுவதால் யாத்துரி(மை) கிடைக்கிறது. யாத்தவர் போலவே இவர்களும் கருதப்படுகிறார்கள்; அதன் காரணமாகவே இவர்களுக்கு பொறுப்பும் ஏற்பட்டு விடுகிறது. யாத்தல் வினையை மறந்து வெறுமே அதிகாரம் என்று திரிவுபட்ட  வடமொழி வழக்கில் நாம்சொல்லத் தலைப் பட்டதால் தான் அதிகரிக்கின்ற என்ற ஆணவப் பொருள் உள்ளே வந்து விட்டது. யாக்கம் என்பது கட்டிக் கொண்டிருப்பது. கட்டி முடிந்தது

யாத்து/ஆத்து எனப்படும். அதுவே சகரம் சேர்ந்து சாத்து என்றும் சொல்லப் படும். சாற்று = சொல்லு என்ற சொல்லில் இருந்து சாற்றம்>சாத்தம்> சாத்ரம்>சாத்திரம் வந்தது போல, எழுதியதும் கூடச் சாத்தம் என்றே சொல்லப் பட்டது. சாத்தில் கையிடுவது கைச் சாத்திடுவதாயிற்று. கைச்சாத்திடுதல் = to lay signature, to sign; சாத்துக்கை>கைச்சாத்து = signature. கைச்சாத்திடுதல் என்பது யாத்தவர் தன் அடையாளங் காட்டல்; (காட்டாக சம்பந்தர் தேவாரப் பதிகத்தின் கடைசிப் பாட்டில் சம்பந்தன் என்ற பெயரை வைத்திருப்பார்; ஆழ்வார் பலரும் தம் பதிகங்களில் தம்பெயரை இடுவார்; கருநாடக இசை மேதைகள், கோபால கிருட்டிண பாரதி இன்னும்பல இசை மேதைகள் தம் பாடல்களில் அடையாளம் காட்டுவார். ஓவியங்களில் இது போல யாத்தவரின் அடையாளம் - இவர்தான் யாத்தார் என்று குறிப்பதற்கு - ஏற்ப இருக்கும்.

கைச்சாத்து உள்ள பொருள் போலியன்று, உண்மையானது, கைச்சாத்தை இன்னொருவர் எளிதாக இடமுடியாதென்று அக்காலத்தில் எண்ணினார். எனவே கைச்சாத்துக் கொண்ட பொருள் authenitic. ஆங்கிலத்தில் சொன்னால் something that is authentic is something that has the authority of its original creator. கைத்தம், கைத்தலம் என்பது உள்ளங்கை, மற்றும் விரலடையாளங்களை, அடவுகளைக் குறித்தது. கைத்தம்>ஹைஸ்தம்>ஹய்ஸ்தம்>ஹஸ்தம்>அஸ்தம் என்று வடமொழியில் திரியும். மீண்டும் அதை தமிழில்  வாங்கி அத்தம் எனத் திரிப்போம். இத்திரிவில் கூடவே metathesis - சேர்ந்து கைச்சாத்து>அச்சாத்து> அத்தாச்சி>அத்தாட்சியாகி வந்து நிற்கும்.] (கைச்)சாத்துமை = authenticity; (கைச்)சாத்திடுதல் = authenticate; (கைச்)சாத்தீடு = authentication

secure= சேமுறுதி; சேமம் என்பது safety; நல்ல நிலையில் இருப்பது. ஒரு பொருள் கெடாமல், கேடுதராமல், உள்ளது உள்ளபடியிருந்தால் சேமமாய் இருக்கிறது என்று சொல்லுவோம். பொருளைச் சேர்ப்பதையும் சேமித்தல் என்கிறோம்; ஏனெனில் கேடு வராமல் அது காக்கிறது. அந்த நல்ல நிலையை உறுதி செய்வது to secure எனப்படும். i.e to make it safe சேமத்தை உறுதி செய்தல் - சேமுறுத்தல். இதன் பெயர்ச்சொல் சேமுறுதி. சேமுறுத்தர் = security personnel.

தமிழ்போன்ற மொழியில் மூன்றசைக்கு மேற்பட்டால் சொல்லை ஆளுகின்ற எளிமை குறைந்துவிடும். கூடியமட்டும் ஈரசையில் இருப்பது நல்லது. இப்பொழுது secure authentication என்ற ஆங்கிலச்சொற்றொடர் சரவலான கூட்டுச்சொல். சேமுறுதியையும் கைச்சாத்தீட்டையும் சேர்த்தால் அவ்வளவு தான்; நம் வாய் கொள்ளாது. எனவே சேம, கை என்ற முன்னொட்டுக்களை மறைபொருளாக்க வேண்டியது தான். வேறு வழியில்லை. எனவே கீழுள்ளதைப் பரிந்துரைப்போம்.

சாத்துமை= authenticity; சாத்திடுதல் = authenticate [ஒரு நோடப் பொதுவரின் (notary public) முன் சாத்திட்டு ”இவ்வாவணம் உண்மை” என விளம்புகிறோம்.) சாத்தீடு = authentication; உறுதிச் சாத்தீடு = secure authentication [ஒரு நோடப் பொதுவரின் முன்னால் சாத்திட்டு, கூடவே நம் குழும முத்திரையும் (company seal)- இட்டு ”இவ்வாவணம் உறுதியாய் உண்மை” என அறுதியிட்டு விளம்பு கிறோம்]; சாத்தீட்டைச் சேமுறுத்தல் = to secure authentication

encryption = கரப்பீடு; உள்ளே ஒரு செய்தியைக் கரந்து வைத்துக் குறியிடுவது encryption.

அன்புடன்,
இராம.கி.

Saturday, March 28, 2020

ஔகாரப் பித்து

இது 11/12 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

அறியாமை என்பது பல்வேறு உருவம் எடுக்குமாம்.

1. கிணற்றுக்குள் கிடக்கும் தவளையின் அறியாமை.
2. சூடாவது தெரியாமல் நீருக்குள்ளேயே அமிழ்ந்து சுகங்காணும் தவளையின் அறியாமை.
3. கொடுத்திருப்பது பூமாலை என்று தெரியாமல், அதைப் பிச்சுப்போட்டு உதிர்த்தெறியும் குரங்கு அறியாமை
3. “தன் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டது போல் காட்டிக் கொள்ளும்” பூனையின் அறியாமை.

முதல் மூன்று அறியாமைகளையும் ஓரளவு பொறுக்கலாம். எப்படியோ சொல்லிக் கொடுத்து அறியவும் வைக்கலாம். ஆனால், பூனை அறியாமை இருக்கிறது பாருங்கள். இந்தக் “கொனஷ்டையை”த் திருத்தவே முடியாது. தூங்குவது போல் நடிக்கும் சிலரை எழுப்புவதே இயலாது.

வடமொழியில் சில சொல்லாக்க வழக்கங்கள் உண்டு. குறிப்பாக இரண்டு பெயர்களை வைத்து உருவாக்கும் கூட்டுப் பெயர்ச்சொற்கள், அல்லது பெயரடை சேர்ந்துவரும் கூட்டுச் சொற்கள். இதில் முதலில்வரும் பெயர், அல்லது பெயரடை இகர/எகரத்தில் இருந்தால் கூட்டுச் சொல்லில் அது ஐகாரமாகும். அன்றி உகர/ஒகரத்தில் இருந்தால் கூட்டுச் சொல்லில் அது ஔகாரமாகும். இந்த ஒலிமாற்றப் பழக்கம் தமிழில் இல்லை. பின்னால் தமிழில் கடன் வாங்கும் போது சில பெருகபதிகள் (=ப்ரகஸ்பதிகள்) கூட்டுப் பெயரின் ஐகார/ஔகார முதற்பகுதியை அப்படியே கடன்வாங்கி வடமொழி இலக்கண மாற்றத்தையும் தமிழுக்குள் வேண்டாத படி கொணர்ந்து திணிப்பர். போதாதற்கு இந்த ஐகார/ஔகார மாற்றமில்லாத வடமொழிச் சொல்லையும் கடன் வாங்கித் தமிழில் கொட்டி வைத்திருப்பர். ஒத்தைக்கு இரட்டைத் தாழ்ப்பாள். இதில் பென்னம் பெரிய அரசியல் வாதிகளும் தமிழறிஞரும் கூட உண்டு. பௌத்தம் என்று சொல்லாவிட்டால், அவருக்கு, “ஜென்ம சாபல்யம்” கிடைக்காது.  கீழே பல சொற்களைக் காட்டியுள்ளேன்.

அட அறியாதவரே? கடன் வாங்குவதென்று முடிவு பண்ணிவிட்டீர்? அப்புறம் என்ன ஒரே பொருளுக்கு 2 உருவத்தில் கடன்? ஒரு கடன் பற்றாதா? பெரிய பூனைக்குப் பெரிய ஓட்டை, சின்னப்பூனைக்குச் சின்ன ஓட்டையா? என்ன கூத்து இது? மேற்சொன்ன பெயரடை அல்லது முதற் பெயர்ச்சொல் வட மொழியிலேயே உருவான சொல்லாகவோ, தமிழிலிருந்து கடன்வாங்கிய சொல்லாகவோ இருக்கும். அம்முதற் சொல்லை கீழே பட்டியலிடுகிறேன். 2005 இல் என் வலைப்பதிவில் ஔகாரச் சொற்கள் எவ்வெவை தமிழ், எவை கடன் வாங்கியவை என்றும் ஒரு தொடர் எழுதினேன்.

https://valavu.blogspot.com/2008/05/1.html
https://valavu.blogspot.com/2008/05/2.html
https://valavu.blogspot.com/2008/05/3.html
https://valavu.blogspot.com/2008/05/4.html

(தமிழிலிருந்து வடமொழி கடன் வாங்கியதென்று சொல்வதையே “அபசாரம், அபசாரம்” எனும் வடமொழி பத்தர் இப்போதெல்லாம் இணையத்தில் மிகுதி. அவர் ஆட்சி நடக்கிறதாம். இவருக்கெல்லாம் தேவநேயப் பாவாணரைக் கண்டாலே ஆகாது; அந்தத் திட்டு திட்டுவார். ஏனெனில் சம்மட்டி அடியாக இன்னின்ன சொற்கள் வடமொழி தமிழிலிருந்து கடன்வாங்கியதென்று அடையாளம் கண்டு அவர் பட்டியலிட்டு விட்டாரே? பொறுக்குமா? அதெப்படி, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு” என்று சங்கத விழையரின் புளுகுக் கதைகளை வெளியிற் கொணர்ந்து போடலாம்? அப்படிப் போட்டவரைத் திட்டாவிட்டால், பத்தனுக்கு ”மோட்சம்” கிட்டுமோ? எனவே ”பள்ளத்தில் இருந்து மேட்டிற்குத் தண்ணீர் ஓடுமா?” என்று ”வியாக்யானம்” சொல்லி முடிந்த மட்டும் ”சமஸ்க்ருதாய நமஹ” என்று சாதிப்பார். எல்லாமே ”வடமொழியிலிருந்து தமிழுக்குக் கடன் வந்தது” என root - ஐ மாற்றி மேட்டிமைத் தனம் காட்டுவார்.)    இந்த ஐகார/ஔகாரப் பேர்வழிகளுக்கு,

உபாசனம் வேண்டாம்; ஔபாசனம் வேண்டும்.
கோசிகன் வேண்டாம்; கௌசிகன் வேண்டும்.
கோதமன் வேண்டாம் கௌதமன் வேண்டும்.
கோவனம் வேண்டாம்; கௌபீனம் வேண்டும்.
கோளி வேண்டாம்; கௌளி வேண்டும்.
சுகம் வேண்டாம்; சௌக்யம் வேண்டும்.
சுகந்தம் வேண்டாம்; சௌகந்தம் வேண்டும்.
சுந்தரம் வேண்டாம்; சௌந்தரம் வேண்டும்
சுபாக்கம் வேண்டாம்; சௌபாக்யம் வேண்டும்.
சூரம் வேண்டாம்; சௌரம் வேண்டும்.
சுலபம் வேண்டாம்; சௌலப்யம் வேண்டும்.
துலம் வேண்டாம்; தௌலம் வேண்டும்.
பூஷம் வேண்டாம், பௌஷம் வேண்டும்
புத்தம் வேண்டாம், பௌத்தம் வேண்டும்.
புத்ரன் வேண்டாம்; பௌத்ரன் வேண்டும்.
பூதிகம் வேண்டாம்; பௌதிகம் வேண்டும்.
பூமம் வேண்டாம்; பௌமம் வேண்டும்.
பூர்ணம் வேண்டாம்; பௌர்ணம் வேண்டும்.
புராணிகம் வேண்டாம்; பௌராணிகம் வேண்டும்.
புரோகிதம் வேண்டாம்; பௌரோகித்யம் வேண்டும்
பூழியன் வேண்டாம்; பௌழியன் வேண்டும்.
முண்டிதம் வேண்டாம்; மௌண்டிதம் வேண்டும்.
முத்தம் வேண்டாம்; மௌத்திகம் வேண்டும்.
மூலி வேண்டாம்; மௌலி வேண்டும்.
முவ்வல் வேண்டாம்; மௌவல் வேண்டும்;
மோனம் வேண்டாம்; மௌனம் வேண்டும்.
யுவனம் வேண்டாம்; யௌவனம் வேண்டும்.
வேதம் வேண்டாம் வைதீகம் வேண்டும்.

(ஐகாரத்தில் ஒரு சொல் தான் இங்கு கொடுத்திருக்கிறேன். அதிலும் ஏராளம் சொற்களுண்டு. தேடினால் உங்களுக்கும் கிடைக்கும்.)

பூதிகம் என்றால் பூதம் வந்து விடுமாம். பௌதிகம் என்றால் வந்துவிடாதாம். என்ன, சமர்த்து பாருங்கள்? முகத்தில் அப்படியே வழிகிறது? கண்ணை மூடிக் கொண்ட பூனைகளுக்கு என்னத்தைச் சொல்ல? தமிழராகிய நாம் ”பௌதிக விஞ்ஞானம்” எனுங்கழுதையைக் கட்டி, மாரிலடித்துக் கிடப்போம். தாசானு தாசன் ஆவதென்று முடிவெடுத்த பின், கூழைக்கும்பிடு போட்டால் என்ன? குப்புறக் கீழேவிழுந்து அட்டாங்கம் போட்டால் என்ன?

“சரணம், சுபமஸ்து”

அன்புடன்,
இராம.கி.

annuities

இதுவொரு 15 ஆண்டுகளுக்கு முன் சிங்கை மணியம் annuities பற்றிக் கேட்டது.  முன்னால் 2004 இல் என் வலைப்பதிவில் புறத்திட்டு நிதி - 2 என்னும்

http://valavu.blogspot.com/2004/06/2.html

இடுகையில் ஆண்டளிப்புகள் (annuities) பற்றிப் பேசியிருக்கிறேன். அதில் வரும் கலைச்சொற்களை இங்கு தருகிறேன்.

insurance policy = காப்புறுதிப் பொள்ளிகை [காப்பீடு என்பதைக் காட்டிலும் காப்புறுதி நல்ல தெளிவான சொல்.]

[policy என்பதற்குத் திட்டம், கொள்கை போன்ற சொற்கள் சரிவராது. திட்டம் என்பதை plan, scheme, project, policy என்று பலவற்றிற்கும் இணையாக “சர்வரோக நிவாரணி”யாகச் சிலர் பயன்படுத்துவார். தமிழில் துல்லியம் வேண்டுமென்றால் இச்சொல் மாறவேண்டும். பொள்ளிகை என்ற சொல் பழஞ்சொல். மீண்டும் அதைப் புழக்கத்தில் கொண்டு வரலாம். பொள்ளுதல்>பொளித்தல் என்பது பொறித்தலைச் சுட்டும் வினையாகும். கல்வெட்டுக்கள் பொறிக்கப் படுவதை உளிகொண்டு பொளித்தல் என்றும் நாட்டுப் புறங்களில் சொல்வார். பொறிக்கப் பட்டவை அடுத்த பொறிப்பு அரசிடமிருந்து வரும்வரை அரசாணையாக ஏற்கப்படும். அதோடு புழக்கத்தில் இருக்கும். Policy (whether it is government, insurance, organizational or whatever) என்பது அடிப்படையானது. அதையொட்டியே நடைமுறைகள் அமையும். எனவே தான் பொளித்தல் என்ற சொல் இங்கு ஆளப்படுகிறது.]   

premium = பெருமியம் [prime = பெருமை, பெரியது என்றே தமிழில் பொருள் கொள்ளுவார்கள்.] 
annuity = ஆண்டளிப்பு
purchase = வாங்கல்

அன்புடன்,
இராம.கி.

Forecast, Predict, Speculate, Estimate, Compute, Calculate, Valuate, Evaluate, Judge, Rate (rate it), Assess

ஒருமுறை Forecast, Predict, Speculate, Estimate, Compute, Calculate, Valuate, Evaluate, Judge, Rate (rate it), Assess என்ற 11 சொற்களுக்கு நண்பர் நாக. இளங்கோ தமிழ்ச் சொற்கள் கேட்டிருந்தார், ”ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக வேறு படுத்தும் சொல் தருக” என்றும், சொல்லியிருந்தார். .அதற்கு நானளித்த விடை இது.
------------------------------
தமிழரில் பலரும் இதுபோன்று தொகுதிச் சொற்களை ஒருங்கே வைத்துத் துல்லியம் பார்த்து ”இதற்கு இது” என்று வரையறுத்துச் சொற்களைப் பழகுவதில்லை. அப்படிப் பழகாததினால் தமிழில் கவிதை உயர்ந்தது. அறிவியல் சவலைப் பிள்ளையாயிற்று. இருப்பதை வைத்து ஒப்பேற்றுவதில் நாமெல்லோரும் பெரும் அறிவாளிகள்.  இதன் விளைவால் ஒருசொல்-பல பொருள், பலசொல்-ஒருபொருள் என்ற தன்மை தமிழ்நடையிற் கூடிப் போயிற்று. இது கவிதை வளர்வதற்கு உரிய வழி. அறிவியல் வளராமை என்பது இதன் இருபிறப்பி. கொஞ்ச காலத்திற்குக் கவியரங்கங்களை மூட்டைகட்டி வைக்கலாம் என்றுகூட ஓரோவழி நான் எண்ணுவதுண்டு. அது தவறு என்றும் என்னை ஆற்றுப் படுத்திக் கொள்ளுவேன்.

தமிழ்நடையிற் துல்லியம் கூடாதவரை அறிவியற் சிந்தனை பெருகும் என்று நான் எண்ணியதில்லை. நம் மொழிநடை இன்னும் கூராக வேண்டும். எந்தச் சொல்லையும் தனித்துப் பார்க்காது, தொடர்புடைய வரிசைகளோடு, ஒரே பொருள், எதிர்ப்பொருள், கிட்டத்தட்டப் பொருள், வரிசைப் பொருள், அணிப் பொருள் என்று பார்ப்பது துல்லிய மொழிநடையை வளர்க்கும்) என் பரிந்துரைகளைக் கீழே கொடுத்துள்ளேன். ஆங்கிலச் சொற்பிறப்பு அகர முதலியில் கொடுத்துள்ள சொல் விளக்கத்தையும் உடன் கொடுத்துள்ளேன். தமிழ் விளக்கங்கள் அங்கங்கே தேவைப்படும் இடங்களிற் கொடுத்துள்ளேன்.

1. Forecast: முற்கட்டு-அல் (வினைச் சொல் வழியான தொழிற்பெயர். இனிக் கீழே வினைச்சொல் என்றே சொல்வது கண்டு அதிராதீர்கள். அவை தொழிற் பெயர் வடிவில் உள்ளன ); முற்கட்டு (பெயர்ச் சொல்)

late 14c., "to scheme," from fore- "before" + casten "contrive." Meaning "predict events" first attested late 15c. Related: Forecasted; forecasting. The noun is from early 15c., probably from the verb; earliest sense was "forethought, prudence;" meaning "conjectured estimate of a future course" is from 1670s. A M.E. word for weather forecasting was aeromancy.

cast என்பதைக் கட்டுமானத் தொழிலில் அச்சுதல், அச்சிடுதல், கட்டுதல் என்றே சொல்லுகிறோம்.  recast = மறுகட்டு, மீள்கட்டு. கட்டு-தல் என்ற வினை இங்கு வருவது அறிவியற் சிந்தனைக்கு வழிவகுக்கும்.

2. Predict: முன்னுரை-த்தல் (வி.சொ); முன்னுரைப்பு (பெ.சொ), [குணி-த்தல் (வி.சொ); குணிப்பு (பெ.சொ); கீழே கணித்தற் குறிப்பைப் படியுங்கள்).

1620s, "to foretell, prophesy," from L. praedicatus, pp. of praedicere "foretell, advise, give notice," from prae "before" (see pre-) + dicere "to say" (see diction). Scientific sense of "to have as a deducible consequence" is recorded from 1961. Predictably "as could have been predicted" is attested from 1914.

dictionary, diction போன்ற சொற்கள் இங்கு நினைவிற்கு வரவேண்டுமானால் உரை-த்தல் என்பது இங்கு வந்தே தீர வேண்டும்.

3. Speculate: குற்றுமதி-த்தல் (வி.சொ); குற்றுமதிப்பு (பெ.சொ)

1590s, back formation from speculation. Related: Speculated; speculating.

speculation

late 14c., "contemplation, consideration," from O.Fr. speculation, from L.L. speculationem (nom. speculatio) "contemplation, observation," from L. speculatus, pp. of speculari "observe," from specere "to look at, view" (see scope (1)). Disparaging sense of "mere conjecture" is recorded from 1570s. Meaning "buying and selling in search of profit from rise and fall of market value" is recorded from 1774; short form spec is attested from 1794.

குத்து மதிப்பு என்ற சொல் பேச்சுவழக்கில் இன்றும் பெயர்ச்சொல்லாய் இருக்கிறது. கொஞ்சம் செந்தமிழாக்கி வினைச்சொல்லையும் திரும்பப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தால் மொழி சிறக்கும்.

4. Estimate: மதிப்பிடு-தல் (வி.சொ);  மதிப்பீடு (பெ.சொ)

1560s, "valuation," from L. aestimatus, verbal noun from aestimare (see esteem). Earlier in sense "power of the mind" (mid-15c.). Meaning "approximate judgment" is from 1580s. As a builder's statement of projected costs, from 1796.

5. Compute: கணி-த்தல் (வி.சொ); கணிப்பு (பெ.சொ)

1630s, from Fr. computer, from L. computare "to count, sum up, reckon together," from com- "with" (see com-) + putare "to reckon," originally "to prune" (see pave).

கணித்தல், கணத்தல் என்ற எல்லாமே கூட்டுதல் என்று பொருளடிப்படையில் எழுந்த சொற்கள். கணம் = கூட்டம். கணக்கு என்பது தொழிற்பெயர். கணி/கண என்னும் வேறுபாடு இந்தக் காலத்திற்குக் காப்பாற்ற வேண்டிய வேறு பாடு தான். அந்தக் காலத்தில் வேறுபாடு இருந்திருக்காது. செல்வா காட்டிய குணித்தல் என்பதும் தொடர்புடையது தான். அதை வேறொரு கட்டுகையில் (context) பயன்படுத்தலாம் என்றுள்ளேன். ஒருவேளை பழமைபேசி சொல்வது போல predict என்பதற்கு இணையாய் குணித்தல் என்று சொல்லலாமோ? உயர்கணிதத்தில் கூட அதற்கு வாய்ப்புகள் வரலாம். கலனத்திற்கு (calculus) வந்ததே?

6. Calculate: கணக்கிடு-தல் (வி.சொ); கணக்கீடு (பெ.சொ)

1560s, "to compute, to estimate by mathematical means," from L. calculatus, pp. of calculare "to reckon, compute," from calculus (see cயன்படுத்தலாம் lculus). Meaning "to plan, devise" is from 1650s. Replaced earlier calculen (mid-14c.), from O.Fr. calculer. Related: Calculable.

கண-த்தல் என்ற வினை புழக்கத்தில் இல்லாது கணக்கு என்ற பெயர்ச்சொல் மட்டும் இன்று இருக்கிறது. வேறுவழியில்லாது இடுதல் என்ற துணைவினை போட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. காலத்தின் கோலம்.

7. Valuate: மதி-த்தல் (வி.சொ); மதிப்பு (பெ.சொ)

valuation

1520s, from O.Fr. valuacion, noun of action from valuer (see value).

value (n.)

c.1300, from O.Fr. value "worth, value" (13c.), noun use of fem. pp. of valoir "be worth," from L. valere "be strong, be well, be of value" (see valiant). The meaning "social principle" is attested from 1918, supposedly borrowed from the language of painting. The verb is recorded from late 15c. Related: Valued, valuing. Value judgment (1892) is a loan-translation of Ger. Werturteil.

8. Evaluate: மதி-த்தல் (வி.சொ); மதிப்பு (பெ.சொ)

1842, from Fr. évaluer or else a back formation from evaluation. Originally in mathematics. Related: Evaluated; evaluating.
evaluation
1755, from Fr. évaluation, from évaluer "to find the value of," from é- "out" (see ex-) + valuer (see value).

valuate, evaluate இரண்டுமே ஒரே பொருளைத் தான் குறிக்கின்றன. எனவே தமிழிலும் அப்படியே பழகுகிறேன். இரண்டையும் வேறு படுத்திக் காட்டும் ஒரு வாக்கியத்தை நீங்கள் காட்டினால் மீண்டும் ஓர்ந்து பார்ப்போம். [மட்டுதலும், மதித்தலும் ஒரே வேர்ச்சொற்கள் தான். மட்டு = அளவு. மட்டித்தல் = to measure.]

9.Judge: கருத்துக் கொள்ளல் (வி.சொ); கொள்கருத்து (பெ.சொ)

early 13c., "to form an opinion about," from Anglo-Fr. juger, from O.Fr. jugier "to judge," from L. judicare "to judge," from judicem (nom. judex) "to judge," a compound of jus "right, law" + root of dicere "to say" (see diction). Related: Judged; judging. The O.E. word was deman (see doom). Meaning "to try and pronounce sentence upon (someone) in a court" is from late 13c. The noun is from c.1300. In Hebrew history, it refers to a war leader vested with temporary power (e.g. Book of Judges), from L. judex being used to translate Heb. shophet.

இங்கு நயமன்றம் பற்றிய சிந்தனை வேண்டாம். அதற்கும் முந்திய சிந்தனையாய், “அதுவரை கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் வைத்து” கருத்துக் கொள்ளலைக் குறிக்க வேண்டும். [தீர்மானித்தல் என்பது determine என்பதற்கு இணையாய் வரும்.]

10. Rate (rate it): அறுதியிடல் (வி.சொ); அறுதி (பெ.சொ)

"estimated value or worth," early 15c., from M.Fr. rate "price, value," from M.L. rata (pars) "fixed (amount)," from L. rata "fixed, settled," fem. pp. of reri "to reckon, think" (see reason). Meaning "degree of speed" (prop. ratio between distance and time) is attested from 1650s. Currency exchange sense first recorded 1727. The verb "to estimate the worth or value of" is from 1590s. First-rate, second-rate, etc. are 1640s, from British Navy division of ships into six classes based on size and strength. Phrase at any rate originally (1610s) meant "at any cost;" weakened sense of "at least" is attested by 1760.

“இந்தாப்பா, கடைசியாய் என்ன சொல்றே?” என்று அறுதியான விலை கேட்பது தான் சொல்லப் படுகிறது. இதற்கு மேல் பேரமில்லை என்று அறுதியிட்டுச் சொல்வது.

11. Assess: அட்டி-த்தல் (வி.சொ); அட்டிப்பு (பெ.சொ)

early 15c., "to fix the amount (of a tax, fine, etc.)," from Anglo-Fr. assesser, from M.L. assessare "fix a tax upon," originally frequentative of L. assessus "a sitting by," pp. of assidere "to sit beside" (and thus to assist in the office of a judge), from ad- "to" (see ad-) + sedere "to sit" (see sedentary). One of the judge's assistant's jobs was to fix the amount of a fine or tax. Meaning "to estimate the value of property for the purpose of taxing it" is from 1809; transferred sense of "to judge the value of a person, idea, etc." is from 1934. Related: Assessed; assessing.

அட்டுதல் என்பதும் கூட்டுதல், நெருங்குதல், அண்ணுதல், மதித்தல் என்ற பொருட்பாடுகளைச் சொல்லும். to add = அதித்தல் என்று ஆங்கிலத்திற் சொல்கிறார்களே, அதுவும் இந்த வினையோடு தொடர்புடையதுதான்.  ”உங்கள் பேச்சிற்கு இனிமேல் அட்டியில்லை” என்றால் “valuation" கிடையாது என்பது தான். அட்டி பார்த்து சுங்கம் (customs tax), உல்கு (excise tax) விதிக்கிறோம்.

அன்புடன்
இராம.கி.

Friday, March 27, 2020

diaspora

புலம்பெயர் தமிழர் எனும் போது அக்கூட்டுச் சொல்லில் வரும் புலம், தமிழர் காலங் காலமாய் தொன்று தொட்டு இருந்துவரும் தமிழகம், தமிழீழம் ஆகிய இரண்டையே குறிக்கிறது. இவ்விரு நிலங்கள் தவிர்த்து வேறு நிலங்களில் தமிழர் இன்று  வசிக்கும்போது அவை புலம்பெயர்ந்த இடங்கள் ஆகின்றன. பெயர்தல் என்பது இடம்விட்டு இடம் நகர்தலைக் குறிக்கிறது. மரபு சார்ந்த இவ்விடங்களை விட்டு வேறுநிலங்களிற் குடியேறும்போது இவர் நாற்றுகள் ஆகின்றனர், வித்துகள் ஆகின்றனர். இலத்தீன் வழி உருவான diaspora என்ற ஆங்கிலச் சொல்

1876, from Gk. diaspora "dispersion," from diaspeirein "to scatter about, disperse," from dia- "about, across" (see dia-) + speirein "to scatter" (see sprout). The Greek word was used in Septuagint in Deut. xxviii.25. A Hebrew word for it is galuth "exile." Related: Diasporic.

என்று அமைகிறது. இதில் வரும் spore என்பது வித்துக்களைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் வித்தாகி இன்னோரிடத்தில் முளைவிடுகிறார். dia என்பது உலகின் குறுக்கே பல்வேறு இடங்களில் உள்ள இவரின் இருப்பைக் குறிக்கிறது.

sprout (v.)
O.E. -sprutan (in asprutan "to sprout"), from P.Gmc. *spreutanan (cf. O.S. sprutan, O.Fris. spruta, M.Du. spruten, O.H.G. spriozan, Ger. spreissen "to sprout"), from PIE base *sper- "to strew" (cf. Gk. speirein "to scatter," spora "a scattering, sowing," sperma "sperm, seed," lit. "that which is scattered;" O.E. spreawlian "to sprawl," -sprædan "to spread," spreot "pole;" Armenian sprem "scatter;" O.Lith. sprainas "staring;" Lett. spriezu "I span, I measure"). The noun is attested from c.1300.

diaspora விற்குத் தமிழ்ச்சொல் இணைதேடும் நாம் வெளிநாட்டார் புரிதலில் தொடங்கவேண்டியதில்லை. நம்புரிதல் வேறுபார்வையில் அமையலாம். காட்டாக, ”துமிக்க முடியாதது” என்பது மேல்நாட்டுப் பார்வை. அல்துமம்> அதுமம் = atom. அண்ணி/நெருங்கி அணுவிக் கிடப்பது தமிழர் பார்வை. அண்ணுதல்>அணு. இரண்டும் இருவேறு பார்வைகள் இருவேறு சொற்கள் இரண்டுஞ் சரியானவை. அவருடையது negation of an assertion. நம்முடையது affirmation of an assertion. ஒன்று உயர்த்தி மற்றது தாழ்த்தி என்ற பொருள் கிடையாது. இதேபோல diaspora விற்கான நம் சொல் வேறு பார்வையில் அமையலாம். ஆங்கிலச் சொல் dia எனும் வெளிப் புறத்திற் தொடங்குகிறது. தமிழர் பார்வை தமிழரின் மரபுப் புலத்தில் இருந்து தொடங்குகிறது.

வீரகேசரியின் ”புலச்சிதறல்” என்பது நல் தொடக்கம். ஆனால் சிதறல் என்று ஆக்கி வெறுமைப்பொருள் கட்டுவது சற்று நெருடலாய் இருக்கிறது. சிதறல் என்ற சொல்லைக் காட்டிலும் துளித்தல், தூவல், தெளித்தல் போன்றவையும், இன்னுஞ் சிறப்பாகத் தெறித்தல் என்ற சொல்லையும் எண்ணிப் பார்க்கலாம். தெறி என்பது சொல்லுதற்கு மிக எளிது ஈரெழுத்து நிறையசையால் ஆன இச்சொல் சொல்ல வந்த கருத்தைச் சுருக்கமாய்த் தந்துவிடும்.

புலத்தெறியர் = புலத்திலிருந்து தெறிக்கப் பட்ட மக்கள். = diaspora. தெறித்தது என்பது சிதறலைப் போல் வெறுமைப் பொருளைத் தோற்றுவிக்காது. அது உணர்த்தவுஞ் செய்யும்.

”கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதற் தெறித்தது மணியே!”

என்பது சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதை அடிகளாகும். சிலம்பு தெறித்த போது பொட்டென உண்மையைத் தெரிவிக்கவும் செய்தது. சில நேரங்களிற் புலம் என்ற முன்னொட்டுச் சொல்லாட்சியிற் தேவையில்லை. தெறியர் என்ற சொல் கூட diaspora - வைச் சட்டென உணர்த்தும்.

”தெறிதமிழ்க் கூட்டம் இன்று வெளியில்நின்று தமிழினத்திற்கு உழைக்கிறது.”
    .
பொதுவாய் இதுபோன்ற சொற்களைக் கொஞ்சகாலம் பழகியவுடன் மேலுஞ் சுருக்கலாம். காட்டாக அலுவலகத்தை அலுவமென்றும், தொழில் நுட்பத்தை நுட்பம்/நுட்பியல் என்றும், மின்சாரத்தை மின் என்றும் இன்று சுருக்குகிறோம் அல்லவா? அதுபோல் நாட்பட நாட்பட புலத்தை  முன்னொட்டாய்ச் சொல்ல வேண்டாம். (weblog, blog ஆகவில்லையா? அதுபோல் தமிழிலும் ஆகலாம்.) தமிழ்நடை வளர இதுபோன்ற சுருக்கங்கள் பழக வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

துனைவு = விரைவு

துனைவு = விரைவு. ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள”. தொல்காப்பியம். சொல்லதிகாரம் உரியியல் 17 ஆம் நூற்பா

துனைமம் = விரைவு/விசை காட்டும் கட்டகம் (இது இயங்கலாம், இயங்காதும் போகலாம். விசைகளின் விவரிப்பே இங்கு முகன்மையானது.)
Dynamics:  துனைமவியல் 

Kinetics:  இயக்கவியல்  (இயக்கமில்லாது இது இல்லை)
1864, from Gk. kinetikos "moving, putting in motion," from kinetos "moved," verbal adj. of kinein "to move" (see cite).

kinematics: இயக்காற்றியல்
"science of motion," 1840, from Fr. cinematique (Ampere, 1834), from Gk. kinesis "movement, motion" (see cite).

Mechanics: மாகனவியல்
Thermodynamics: தெறுமத்துனைமவியல் (வெப்பம் = Heat)

Fluid Dynamics:  விளவத் துனைமவியல்
Aerodynamics = காற்றுத் துனைமவியல் 
Quantum Mechanics :  கற்றை மாகனவியல்
Biomechanics: உயிர்மாகனவியல்

சில உதைப்பந்துச் சொற்கள்

நண்பர் நாக. இளங்கோ கேட்டு அவர் பக்கத்தில் ஒருமுறை எழுதியது. இங்கு வலைப்பதிவில் சேமிக்கப் படுகிறது.

Corner Kick = மூலையடி
Penalty Kick = தண்டடி (தென்பாண்டி நாட்டில் காதில் போடும் தண்டடியோடு ஒருவேளை குழப்பம் வரலாம். அது சரியானபடி சொன்னால் தண்டட்டி.)
Goal Kick = கவலடி
Free Kick = பரியடி
Penalty Shoot out = தண்டுதை/தண்டெற்று
Header = தலையடி
Throw = எறி
Hand Ball = கைபடல்
Foul = அழுகலாட்டம்
Equalizer = சமனீடு
Tie Breaker = முட்டுடைப்பு

தமிழொலிப்பு முறை - குறிப்பாய்ச் சகரம்.

ஒருமுறை ’சகரம்’ பற்றிய பேச்சு எழுந்தது. சங்கதத்திற்கும்/பாகதத்திற்கும், தமிழுக்கும் இடையே எழுத்தளவில் ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. இப்போதெல்லாம் பலரும் சங்கதம் ஏதோ ஒழுங்கானது போலும், தமிழ் ஒழுங்கில்லாதது போலும் ஒன்றைப் போலவே இன்னொன்றை மாற்றத் துடிக்கிறார். இரண்டும் இருவேறு மொழிகள். எப்படிக் கொக்கையும் (hockey), கால்பந்தும் வெவ்வேறானவையோ, அது போல தமிழ் எழுத்தும், சங்கத எழுத்தும் வெவ்வேறானவை. ஒன்றுபோல் இன்னொன்றைச் செய்ய முற்படுவது தவறு. கொக்கைப் பந்தை காற்பந்து போல் ஆடுவதை ஒக்கும். 

சங்கதம்/பாகதத்தில் ’ஓரெழுத்து ஓரொலி’ என்ற வழக்கம் பெரும்பாலும் உண்டு. ஆங்கிலத்தில் இதை one to one relation என்று கூறுவார். தமிழில் அப்படிக் கிடையாது. தமிழில் உறவுள்ள பலவொலிகளுக்கு ஓரெழுத்து. ஆங்கிலத்தில் சொல்வத போல்  many to one relationship. மேலை மொழிகளிலும் இப்படித்தான். இதொன்றும் தவறான பழக்கமில்லை. முற்றிலும் சரியான பழக்கமே. ஓரெழுத்தைப் பார்த்தவுடன் அதுவரும் இடம் (சொல் முதலா? சொல்லிடையா? சொற்கடையா?), முன்வரும் ஒலி, அது அமைந்திருக்கும் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் ஒலிக்கிறோம்.

Sound of a Tamil letter = function of (shape of the letter, prior sound, environment)

Most of the letter reform proposals stem from the lack of understanding of the above relation and the practice in Tamil. This is purely because of few Tamil Teachers who don’t teach the pronunciation rules properly.

எந்த வல்லினத்திற்கும் மூன்றுவிதமான ஒலிகளை தமிழ்ப்பேச்சுவழக்கில் நாம் இனங்காட்டுகிறோம். வெடிப்பொலி (plosive), கனைப்பொலி அல்லது அதிரொலி (voiced), உரசொலி (frigative) என்று அவற்றைச் சொல்வோம்..

k, g, h
c, j, s
t, d, d'
th, dh, dh'
p, b, b'

தமிழில் d', dh', b' ஆகிய உரசொலிகளை நாம் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுவதில்லை. h, s என்னும் இரு உரசொலிகளே நம்மிடம் இப்பொழுது உள்ளன. இதற்கு முன்காலத்தில் மற்ற மூன்று உரசொலிகள் இருந்தனவா என்று தெரியாது. ஆனால் ஒலியியற் பேராசிரியர் புனல்.கே.முருகையன் அப்படி இருந்திருக்கலாமென எண்ணுகிறார்.

அடிப்படையில் நம்மால் உயிரையும், உயிர்மெய்யையும் மட்டுமே பலுக்க முடியும். எந்த மெய்யெழுத்தையும் நம்மால் பலுக்க முடியாது. அதைப் பலுக்க எளிதாக, முன்னாலோ, பின்னாலோ ஓர் உயிரைச் சேர்த்து அந்த ஒலியை உணர்த்துகிறோம். உயிர் முன்னால் வந்தால் அதை மூடிய அசை (closed syllable) என்று சொல்கிறோம். பின்னால் வந்தால் அதைத் திறந்த அசை (open syllable) என்று சொல்லுகிறோம். தமிழ்நாட்டுத் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் அந்தக் காலத்தில் எங்களுக்கு மூடிய அசையாகவே சொல்லிக் கொடுத்தார்கள். இக், இங், இச், இஞ், ....... இப்படி இ-யை முன்னே கொண்டு வந்து சொல்லித் தருவார். அ- வைத்துச் சொல்லித் தருவதும் உண்டு. ’இக்கன்னா, இங்ஙன்னா, இச்சன்னா, இஞ்ஞன்னா ........” என்றும் அமையும். அந்த .’ன்னா’ என்பது சொல்வதற்கு எளிமை கருதி நாமிடும் ஓசை. இதே ’....ன்னா’ என்பது சிங்கள எழுத்துச் சொல்லிக் கொடுக்கும் போதும் உடன்வருமாம். [கேட்டபோது நான் வியந்து போனேன். இந்தக் கேடுகெட்ட உறவுக்காரப் பயல்கள், இவ்வளவு மொழி ஒற்றுமையை நம்மோடு வைத்துக்கொண்டு, நம்மை ஒழித்தொழிக்க முயல்கிறாரே?]

வடக்கே நான் அறிந்தவரை மூடிய அசையிற் சொல்லிக் கொடுப்பது கிடையாது. திறந்த அசையில் தான் சொல்லிக் கொடுப்பார் க, ங, ச, ஞ...... இப்படிச் சொல்லித்தருவதில் சிக்கலுண்டு. அகரமேறிய மெய்யும், மெய்யும் ஒன்றோ என மாணவன் மருளுவான். [இப்போது மொழியியலாரையே அது மருளவைத்து abugida theory என்றவொன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. மெய்யின் அடிப்படையை யாரும் வடக்கில் உணரமாட்டார் போலிருக்கிறது].

இனி உயிர்மெய்யைப் பலுக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வோர் உயிர் மெய்யிலும் அதன் ஈற்றில் ஓர் உயிரொலி சேர்ந்தே வருகிறது. எனவே குறிப்பிட்ட உயிர்மெய்க்கு முன்னால் மெய் வருகிறதா (வல்லினம் வருகிறதா, மெல்லினம் வருகிறதா, இடையினம் வருகிறதா), உயிர் வருகிறதா என்பதை நாம் கூர்ந்து பார்க்கவேண்டும்.

வல்லினம் என்பதிலுங் கூட இன்னுஞ் சில கூறுகள் உண்டு. நிலையெழுத்தும் வருமெழுத்தும் ஒன்றுபோல் இருப்பது ஒருவகை. இன்னொரு வகை நிலை யெழுத்தும் வருமெழுத்தும் வேறுபடுவது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நிலையெழுத்து க் என்று வையுங்கள். வருமெழுத்து ககர உயிர்மெய்யாய் இருந்தால் க்க என்று கூட்டொலி [நினைவிற் கொள்ளுங்கள், கூட்டொலி], சங்கதத்தில் வரும் இரண்டாவது க போல ஒலிக்கும். பக்கம் என்ற சொல்லை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். தமிழில் இரண்டாவது க கிடையாது. எனவே இதை முதல் க் போல் எண்ணிக் கொண்டு க்க்-அ என்ற எல்லா ஒலிகளையும் சேர்த்து அதன் இயல்பான ஒலியிலேயே பலுக்குவோம். க் - இன் இயல்பான ஒலி உங்களுக்குத் தெரியும். [புரிய வைக்க வேண்டுமானால் அடுகு வரைவு (audiogram) ஒன்றை நான் காட்டவேண்டும். இங்கு ஒன்று சொல்ல வேண்டும். ஒரு சிலர் சகரத்தின் இயல்பான ஒலியை ச்(ச) என்று எழுதிக் காட்ட முயல்கிறார். அது தவறு. அந்த ஒலிக்கு ஓரெழுத்து வடிவம் தான். வெறும் ச்.

இனி நிலையெழுத்து ட் என்று வையுங்கள். வெட்கம் என்ற சொல் இங்கும் ட்க்-அ என்ற ஒலிகள் சேர்த்து ஒலிக்கப்படும். மாறாக தமிழரில் ஒரு சிலர் இதே போன்ற ஒலியமைப்புக் கொண்ட பட்சி என்னும் வடமொழிச்சொல்லை ட்சி என்று பலுக்காது ட்ஷி என்று பலுக்குவதைப் பார்த்து இருக்கிறேன். இதே பழக்கத்தில் கட்சி என்பதும் கட்ஷி என்று பலுக்கப்படும். இப்படி ஓரோவழி பலுக்குவது சிலரின் பழக்கம். அது பெரும்பான்மையோர் பழக்கம் அல்ல.

இனி நிலையெழுத்து மெல்லினம் என்றும், வருமெழுத்து வல்லினமென்றால், தமிழிலக்கணத்தின் வரையறுப்பால் அது இன எழுத்தாக மட்டுமே இருக்க முடியும். பங்து என்ற சொல் தமிழில் அமையவே அமையாது. பங்கு என்றோ பந்து என்றோ மட்டுமே அமையமுடியும். இந்தச் சொற்களில் வரும் கு - வும் து-வும் அதிரொலியாக (voiced) மட்டுமே அமையமுடியும்.

இனி நிலையெழுத்து இடையினம் என்றும், வருமெழுத்து வல்லினமென்றால், [காட்டு: வல்சி = உணவு என்ற பழஞ்சொல்] முடிவில் வரும் சி சற்று மெலிந்து உரசொலியாக (frigative) அமையும். அந்த சி யை வலிந்து எப்பொழுதும் போல் பலுக்க முடியாது. அப்படிச் செய்தால் அது வல்ச்சி ஆகிவிடும். பொருள் குலைந்து போகும்.

இனிச் சகரத்திற்கு வருவோம். ககரத்தில் நடந்த அதே முறையில் தான் இங்கும் பலுக்க வேண்டும். முதலில் வரும் சகரம் ச் என்றே பலுக்கப்படும். இடையில் வரும் சகரம் முன்னே சொன்னது போல் நிலையெழுத்து ச் என்று இருந்தால் (மச்சம்) ச்ச என்றும், நிலையெழுத்து ஞ் என்று இருந்தால் அதிர் ஒலியாகவும் (நெஞ்சு), நிலையெழுத்து இடையினமாய் இருந்தால் [காட்டு: காய்சின வழுதி] சி என்பது உரசொலியாகவும் பலுக்கப் படும்.

முதலில் வரும் சகரம் எப்பொழுதும் தன் இயல்பான வெடிப்பொலியோடு தான் ஒலிக்கவேண்டும் என்று சொன்னேன். [எப்படி முதலில் வரும் ககரம் இயல்பான வெடிப்பொலியோடு ஒலிக்கிறதோ, அதே போல முதலில் வரும் சகரம், தகரம், பகரம் போன்றவையும் வெடிப்பொலியாய் ஒலிக்க வேண்டும்.] ஆனாலும் இற்றைத் தமிழ்நாட்டில் தென்பகுதி மக்களே இதைச் சரியாகப் பலுக்குகிறார். வடபகுதி மக்களில் மிகப் பலர், இக்காலத்தில், ஒரு சாரார் தாக்கத்தால், அவர் மிகுத்திருந்த திரைப்பட, தொலைக்காட்சித் துறையின் தாக்கத்தால், வெடிப்பொலியை உரசொலியாக மாற்றிப் பலுக்குகிறார். இப்போக்கு சிச்சிறிதாகக் கூடிவருகிறது. இதனாற்றான் சென்னை என்பது, ஸென்னை என்று பலுக்கப்படுகிறது. இது தவறு. சில கருநாடக இசைப் பாடகர், இன்னுஞ் சீரழிந்து, ஸகரத்தை  ஷகரமாகக் கூடப் பலுக்குகிறார்.

இந்த ஒலிப்புப் பிழைகள் இனிமேலும் நடக்காது இருக்கவேண்டிய தேவை இப்பொழுது பெரிதும் உண்டு. இந்த ஒலிப்புப் பிழைகள் கூடக்கூடத் தமிழில் இருந்து இன்னொரு பேச்சுவழக்கு எழுந்து விடும்.

அன்புடன்,
இராம.கி.