Sunday, October 17, 2021

மஜ்ஜை

 நண்பர் அரிநாராயணன் சானகிராமன் சில ஆண்டுகளாய் உயிர்நுட்பியல் (biotechnology) அல்லது மூலக்கூற்று உயிரியல் (molecular biology) தொடர்பான பல இடுகைகளை இணையத்தில் இட்டு வருகிறார். இவை தொடர்பாய் யூட்டியுபில் பல்வேறு விழியங்களையும் இட்டுவருகிறார். அவர் விழியங்களின் தமிழ் உள்ளடக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நம்மில் பலரும் நாம் ஈடுபடும் அலுவல்/துறையை ஒட்டிய பொதுச் செய்திகளை தமிழில் சொல்லாது, ”இலக்கியம், கேளிக்கை, அரட்டை, அரசியல்” என்று குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே தமிழைப் பூட்டி வைக்கிறோம். அது இனிமேலாவது மாற வேண்டும். இணையத்தில் உள்ள எல்லாவிதப் புலனங்களிலும் தமிழ் உள்ளடக்கம் கூட வேண்டும். (இப்போது அப்படி இல்லை.) அதுவே தமிழை வாழ வைக்கும். இளையர் மேலோங்கவும் அதுவே வழி. ”தமிழ் நமக்குச் சோறுபோடும், அறிவு கொடுக்கும்” என்ற நம்பிக்கை நம் மக்களுக்கு எழ இதுவொரு வழி. 

அவ்விழியங்களில் பயனுறும் சில கலைச்சொற்களில் கட்டுமானமாய் நான் வேறுபடுவேன். கலைச்சொற்கள் என்பவை பல்வேறு உரையாடல்களால் நமக்குள் கொஞ்சங் கொஞ்சமாய்ச் செம்மையுற வேண்டியவை. ஏதோவொரு அதிகாரி, அல்லது குழு சட்டாம்பிள்ளைத்தனமாய் ஆணத்தி (commissar) போல் நின்று கொண்டு, "இதுவே சரி” என ஆணையிடுவதை நான் ஏற்பதில்லை. [எனக்கும் ஆணத்திகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்]. கலைச் சொல்லாக்கம் என்பது ஒருவகையான மொழிச் செலுத்தம் (process) என்றே நான் கருதுகிறேன். கல்லெழுத்துப் போல் அது முற்று முடிவானதல்ல. ஒரு சொல்லைக் கொடுத்தால் அப்புறம் அதை மாற்றவே கூடாதென்று சொல்வதை நான் எப்போதும் ஒப்பத் தயங்குவேன். அப்படி யாரோ ஓர் ஆணத்தி ”சர்வகலாசாலையைக்” கையாளும் படி நமக்கெல்லாம் ஆணையிட்டிருந்தார் என்று வையுங்கள். இன்று “பல்கலைக் கழகம்” என்று நாம் சொல்லமுடியுமா? 

நண்பரின் குருத்துச் சில்கள் (stem cellls. இவற்றை அவர் குருத்தணுக்கள் என்பார்) பற்றிய விழியத்தில் எலும்புகளின் உள்ளே பொதிந்துள்ள marrow வை மஜ்ஜையெனச் சங்கதவழி அவர் குறித்தார். நானோ மஜ்ஜைக்கு மாற்றாய் தமிழ் வழியில் ”நடுவை” எனக் குறிப்பேன். அவர் விழியத்திற்கான என் முன்னிகை நாலு ஆண்டுகளுக்கு முன் கீழ்வரும் படி அமைந்தது.

-----------------------------   

நடுவென்பது ஒரு பொருளின் உள்ளிருப்பைக் குறிக்கும். இதை நடுவு/நடுவம்/நடுமம் என்றுங் குறிப்போம். நடுவின் நடு என்பது, ”நட்டநடு” என்று தமிழில் சொல்லப்படும். நட்டமெனினும் அது  நடு தான். நள்+து>நட்டு>நடு என்றாகும். நட்டமென்ற தமிழ்ச் சொல் வடக்கே போகையில், அது திரிந்தே செல்லும். அதாவது, நகரம் மகரமாகி, அதில் வரும் டகரம், தகரமாகும். நகரமும் மகரமும் தமிழிலும் போலிகளே. நுப்பது முப்பதாகும். நுடம் முடமாகும். இதுபோல் பல சொற்களிலுண்டு. நட்டம்>மத்தம் என ஆகிய பின் சங்கதம் தன் வழக்கப்படி ”த்த” ஐத் ”த்ய” என்றாக்கும். நட்டம்>மத்தம்>மத்யம் ஆகும். ”த்ய” என்ற இந்திய வடமேற்குச் சங்கதவொலி இந்திய வடகிழக்குப் பாகத. பாலி மொழிகளில் மஜ்ஜமாகும். 

“ம்” எனும் ஈற்றைத் தவிர்ப்பது பெரும்பாலான அவப்பிரம்ச மொழிகளின் பழக்கம். இதனால் மஜ்ஜம் என்பது, மஜ்ஜ என்றுஞ் சொல்லப்படும். நாம் அதைக் கடன்வாங்கி மஜ்ஜை என்போம். இவ்வளவு செய்வதற்கு மாறாக, என்னைக் கேட்டால், பழந்தமிழ்ச் சொல்லையே இன்றும் பயிலலாம். அதன் மூலம் நம் மக்களை மருட்டாது, எளிதில் அறிவியல் பயிற்றுவிக்கலாம். எலும்பு மஜ்ஜை என்பதை விட எலும்பு நடுவை எனலாம். பெரும்பாலான சங்கத, பாகதச் சொற்களுக்குள் ஆழப் பார்த்தால் அவற்றுள் தமிழ் வேர் அடங்கி யிருப்பது புலப்படும். கொஞ்சம் கூர்ந்து பார்த்துத் தமிழ் முன்மையை நாம் காப்பாற்றலாம். நண்பர்களே! தமிழ் பயில்வோம். வாருங்கள்.

புத்தரின் நீண்டவுரைகளும் அல்லாது, குறுவுரைகளும் அல்லாது, நடுத்தர நீளங் கொண்ட உரைகளைத் தொகுத்ததை மஜ்ஜிம நிகாயமென்று பாலியிற் சொல்வர். தமிழில் அதை நடும நிகாயம் எனலாம். நட்டுமம்> மத்யமம்> மஜ்ஜிமம் அதேபோல குறுவுரைகள் கொண்ட குற்றக நிகாயத்தைக் குத்தக நிகாயமென்று புத்த மதஞ் சொல்லும். தீர்க்க நிகாயம் = நீண்ட நிகாயம். 

----------------------------------

மேலேயுள்ள என் முன்னிகைக்கு மாறாய், நான் மதிக்கும் பேராசிரியர் ஒருவரின் மறுமொழி அப்போது எழுந்தது. இந்த மறுமொழியையும், என் இப்போதைய மறுப்பையும் இங்கு எழுதுகிறேன். பொதுவானவருக்கும் இந்த உரையாடல் பயன்படும் என்பதால் பேராசிரியரின் குறிப்பைக் கீழே முதலில் தருகிறேன். 

----------------------------------

ஐயா, நான் மீண்டும் மாறுபடுவதற்குப் பொறுத்தாற்ற வேண்டுகின்றேன். என் கருத்தில் குற்றம் அல்லது மாறுபட்ட கருத்திருந்தால் தயங்காது கூறுங்கள்.

மச்3சா3 (majjaa) என்பது சமற்கிருதத்தில் உள்ள சொல். இதனைத் தேவநாகரியில் मज्जा என்றெழுதுகின்றார்கள். மோனியர் வில்லியம்சு இலக்கியச் சான்றுகோளையும் காட்டுகின்றார். தமிழில் மச்சை என்னும் சொல்லுக்கு மூலமாக மதராசுத் தமிழ்ப்பேரகராதி (இலெக்ஃசிகன்) இதே மச்3சா3 (majjaa) என்பதைக் காட்டுகின்றது. இந்தச் சமற்கிருதச்சொல் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து இருக்கும் ஆங்கிலச்சொல்லான marrow என்பதோடு நெருங்கிய உறவுடையதாகக் காட்டுகின்றனர் கீழே இணைய அகராதியில் இருக்கும் விளக்கத்தை ஒட்டியிருக்கின்றேன்.

"soft tissue found in the interior of bones," late 14c., from Old English mearg "marrow," earlier mærh, from Proto-Germanic *mazga- (source also of Old Norse mergr, Old Saxon marg, Old Frisian merg, Middle Dutch march, Dutch merg, Old High German marg, German Mark "marrow"), from PIE *mozgo- "marrow" (source also of Sanskrit majjan-, Avestan mazga- "marrow," Old Church Slavonic mozgu, Lithuanian smagenės "brain"). Figurative sense of "inmost or central part, inner substance, essence" is attested from mid-14c. (From Online Etymological Dictionary)

மச்3சா3 (majjaa) என்பது நீங்கள் சொல்வது போல நடு-நடுவில் இருப்பதாகவே பலரும் புரிந்துகொள்கிறார். தமிழில் *உள்ளே நடுவில்" என்பதாகப் புரிந்து கொள்கிறார். marrow அல்லது மச்சை என்பது ""soft tissue found in the interior of bones,". தமிழ்நாட்டில் தெருவில் உரக்கப் பேசி சண்டையிடும் சிலர் (1970களில்) 'ஒன் மஞ்சா சோத்த உருவிடுவேன் பாரு" என்பார்கள். இதில் வழங்கும் சோறு (சோற்றை>சோத்தை) என்பது மெதுமையாக அரிச்சோறு போல் இருக்கும் உடலின் உட்பகுதியைக் குறிக்கும். குடல் முதலான உள்ளகப்பகுதிகள். குடலை உருவி விடுவேன் என்பது போன்ற சொல்லாட்சி. இங்கே வரும் மஞ்சா என்பது மஞ்சள் நிறம் அன்று, நீரும் பசையுமாக இருக்கும் தன்மையைக் குறிக்கும். மஞ்சென்றால் வெண்முகில், முகில்போன்ற தன்மையைக் குறிக்கும். (மஞ்சு என்றால் மைந்து என்பதன் வழி உறுதியை வலிமையைக் குறிப்பது வேறு பொருள்). மசிதலெனும் வினையில் நைதலில் இருக்கும் வேர். மசியல் என்றால் குழைவு. மச்சை என்பது குழைவான உட்பகுதியைக் குறிக்கும். 

இது தமிழில் 'நடு'வெனும் பொருள் வழி வருவதன்று. நீங்கள் சொல்லும் "நட்டம்>மத்தம் " என்பதை விளக்க வேண்டுகின்றேன். பேச்சு வழக்கில் முப்பதென்பது நுப்பதாவதை அறிவேன். நு>மு ஆயிற்றா மு>நு ஆயிற்றா என்றும் விளக்க வேண்டும். உகரமல்லா ந>ம ஆவதற்கும் சான்றுகள் வேண்டும். -த்த- என்பது -த்ய- ஆகுமென்பது தெளிவு அதாவது நடு என்பது மத்யமாகி பின் மச்3சா3 (majjaa) என்றாகியதாய்ச் சொல்கிறீர்கள் நடுவை (வை என்னும் பின்னொட்டு மிகவும் நெருடுகின்றது) எனும் உங்கள் பரிந்துரை பலவகைகளில் நிறைவு தரவில்லை. அதே பொழுது நடு எனும் கருத்தில் மச்3சா3 உருவானதென்பது ஏற்கத் தக்கது (இதுவும் இந்திய-ஐரோப்பிய மொழியியல் முறைகளின் படி இன்னும் விளக்கப்படவேண்டும்- ஆனால் ஏலும் கூறுகள் உள்ளன). 

கலைச்சொல் எனும் பொழுது அவர்கள் சென்ற வழியே நாமும் செல்லவேண்டு மென்று தேவையில்லை. அப்படியும் செல்லலாம். அவர்கள் சொல்லே தமிழ் வழியானது என்று நீங்கள் கூற வருவதும் சரியாக நிறுவப்பட்டால் கருதத் தக்கதே. ஆனால் அப்படியே இருந்தாலும் சற்று வேறாக நம்மொழியினுள் பொருந்துமாறு சொல்லலாம். காட்டாக ”அகக்காழ் எனவே மரம் என்ப” என்றும், “புறக்காழ் எனவே புல்” என்றும் தொல்காப்பியர் சொல்கிறார். (காழ் = உறுதி). நாம் என்பு அகக்கூழ் அல்லது எலும்பகக் கூழ் எனலாம். சுருக்கமாகக் கூழென்றுங் கூடச் சூழலில் குறிக்கலாம். அல்லது மஞ்சு என்றும் சொல்லலாம் (என்பு மஞ்சு, எலும்பு மஞ்சு) 

என்னைப் பொருத்த அளவிலே (இது தவறாகவும் இருக்கலாம், எடுத்துரைக்க வேண்டுகின்றேன்), மஞ்சைச் சோறு மஞ்சாச்சோறு என்பதிலிருந்து மஞ்சையே மச்சையாகியிருக்கும் வாய்ப்பும் உள்ளது.  (நை>மை>(மய்)> மசி ?? இதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்றும் நோக்கலாம்). மஜ்ஜையை விட மச்சை என்றே சொல்லலாம். இது அகராதியிலும் கொடுக்கப் பட்டுள்ளது. வேர்ச்சொல் பற்றிய கருத்து வேறுபாடு இருக்கலாம். எனவே என் பரிந்துரை எலும்பு மஞ்சை அல்லது எலும்பு மச்சை. எலும்பை என்பென்று சொல்லுதலும் உண்டு. திருவள்ளுவரும் ஆண்டிருக்கிறார் எனவே என்பு மஞ்சை என்பு மச்சை எனலாம். அடுத்ததாக எலும்பகக்கூழ் என்றும் என்பகக்கூழ் என்றும் சொல்லலாம். (என் கருத்துகள் எவற்றையும் தனிப்பட எடுத்துக்கொள்ள வேண்டாம் என அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்). 

------------------------------------

என்னுடைய இவ்விடுகைக்கு பேராசிரியர் எழுதிய நீண்ட மறுமொழி மேலே உள்ளது. இதற்கான என் மறுமொழி  27 திசம்பர் 2018 இல் உருவாகிப் பாதியில் என் கணியிலேயே நின்றுபோனது. பேராசிரியருடன் பல்வேறு காரணங்களால் முரணும் ஏற்பட்டுப் போனது. மீண்டும் இந்த மறுமொழியைத் தூசிதட்டிக் குறையை முடித்து அனுப்பும் கட்டுரை இது. வெறுமே இதை முன்னிகையாய் அன்றி, என் வலைப்பதிவில் இப்போது தனியிடுகையாகிறது. என் பார்வையில் மாம்சம்>மாம்ச>மாஞ்ச> மாஞ்சை என்று சங்கத வழி உள்வந்த சொல்லுக்கும், மா>மாவு எனும் தமிழ்ச்சொல்லுக்கும், நட்டம்>நட்ட>மத்ய>மஜ்ஜ என்று தமிழிலிருந்து சங்கதம் போன சொல்லுக்கும் உறவு கொண்டு பேராசிரியர் குழப்பிக் கொள்கிறார். முதலில் மஜ்ஜ என்ற சொல்லைப் பார்ப்போம். 

(H2) majjā́ [p= 773,3] [L=154378] f.id. S3Br. MaitrUp. Hariv. (cf. nirmajja). இது majj/மஜ்ஜ் எனும் தாதுவின் அடியில் (6 வது வகை 28 ஆம் பகுதி, 122 ஆம் எண் majj Cl.6, P Dhaatup. xxviii, 122) இச்சொல் இப்படிப் பிறந்ததாக மோனியர் வில்லியம்சு சொல்லும். சதபத பிராமணம் (பொ.உ.மு.800-400), மைத்ரேய உபநிசத், ஹரிவம்சம் ஆகிய என்ற 3 நூல்களில் இது பயன்படுத்தப் பட்டதாகவும் சொல்லும். சதபத பிராமணம் தவிர்த்த மற்றவை சங்க காலத்திற்கும் பிற்பட்ட நூல்கள். சதபத பிராமணம் சங்ககாலத் தொடக்கத்தில் இருந்த நூல். அது போது தமிழகத்திற்கும் மகதத்திற்கும் இடையே பல்வேறு தொடர்புகள் ஏற்பட்டுவிட்டன. (விவரித்தால் கட்டுரை நீளும்.) அப்போது தமிழுக்கும் இம்மொழிகளுக்கும் இடை ஊடாட்டமும் ஏற்பட்டுவிட்டது. அங்குள்ள சங்கத, பாகத, பாலிச் சொற்கள் தமிழுக்குள் ஊடுவின. தமிழ்ச்சொற்களும் அங்கு போயுள்ளன. இந்த ஓட்டம் ஒரு திசையில் மட்டுமே இருந்ததல்ல.   

தவிர, பாணினி தாதுபாடத்தில் வரும் 2200 சங்கதத் தாதுக்கள் எல்லாமே வேர்களல்ல, ஒப்புமையில் சொன்னால் அவை அடித் தண்டுகள், வேர்களல்ல. எவ்வளவு ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்டவை  என்பது கேள்விக்குரியது.. பலரும் அவற்றை வேர்ச்சொற்களோடு குழப்பிக்கொள்கிறார். எப்படிப்பார்க்கினும் ஒருமொழிக்கு 2200 வேர்களிருக்க வாய்ப்பில்லை. இயல்மொழியான தமிழிலேயே நான் கண்ட அளவில் 81-120 ஆணி வேர்கள் தான் உண்டு. 2200 சங்கதத் தாதுக்களை இன்னும் ஆய்வு செய்தால் அவற்றிலும் ஒன்று இன்னொன்றோடு தொடர்பிருப்பது புரியும். அப்படிப்பட்ட ஆய்வை சங்கத வல்லுநர் தான் செய்யமுடியும். தமிழ் என் மொழி. எனவே இங்கு நான் செய்தேன். இன்னொரு மொழியாய்வு என்பது என் புலமல்ல.   

மேலே மஜ்ஜவின் பொருள் காண்பதில் பேராசிரியர் www. etymonline.com இருந்து marrow வுக்கு எடுத்துக்கொடுத்த விளக்கம் இன்னும் பயனுள்ளது. Figurative sense of "inmost or central part, inner substance, essence" is attested from mid-14c. என்பது ஒழுங்கான வரையறை. மஜ்ஜ் -வின் அடிப்படைப் பொருள் அதுதான். ”நடுவில் உள்ளது”. இதைப் புகல்நிற இராம.கி. சொல்லவில்லை. அப்படி இருந்தால் தான் பேராசிரியர் போன்ற தமிழர் குதிக்க வேண்டும். நமையெல்லாம் 400 ஆண்டுகள் ஆண்ட மேலையர் சொல்கிறார். மேலையர் விளக்கத்திற்கு மறு பேச்சுண்டோ? என்சொல்லுகிறீர்கள்? :-)))))) என் பங்களிப்பு ”நடு” எப்படி மஜ்ஜ என்றானதை விளக்குவதில் மட்டுமே இருக்கிறது.    

பேராசிரியரின் மாஞ்சைக் குழப்பத்திற்கும் வந்துவிடுவோம். எல் என்பது கதிரவனையும் ஒளியையும் குறிக்கும். ”எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பிய நூற்பா. எல்லுதல் என்பதற்கு ஒளிமங்குதல் என்று பொருள். “எல்லு மெல்லின்று ஞமலியும் இளைத்தன” என்பது குறுந்தொகை 179. நம் எல்லும் இந்தையிரோப்பிய yellow வும் ஒன்றுதான். மங்குதல் என்பது ஒளி மழுங்குதலில் வந்தது. (ஒளி என்பது பெரும்பாலும் வெண்மையென்றே புரிந்துகொள்ளப்படும்.) ஒளிமழுங்கும் போது அது மஞ்சளாய்த் தெரியும். மழுங்கல்>மங்கல். மங்கல்> மங்கள்> மஞ்சள் என்பது அடுத்த வளர்ச்சி. எல்மங்கல்>எலுமஞ்சல்>எலுமிஞ்சல்>எலுமிஞ்சை>எலுமிச்சை என்பது இன்னொரு புடைப்பு.. 

எலும்பை வெண்மையோடும், மஞ்சலோடும் தால் முதாதையர் பொருத்துவர்.  எலும்போடு ஒட்டி இறுக இருப்பது, இறுப்பது என்றாகும். இதன் தொடர்பில் தான் இறை>இறைச்சி என்ற சொல் ஏற்பட்டது. மஞ்சள் எலும்பொடு சேர்ந்தது இறைச்சி என்றவகையில் மாஞ்சை என்பது மாமிசத்தைக் குறிக்கும். மேலே மாமிசத்திற்கும் மாஞ்சைக்கும் ஆன் தொடர்பு காடினேன். மாஞ்சாச் சோறு என்று பேச்சுவழக்கில் சொல்வது, நான் அறிந்தவரை, மாமிசத்தைக் குறிக்காது, எலும்பினுள் இருக்கும் நடுவையைத் தான் சொல்கிறது.. 

இனி ”நு>மு ஆயிற்றா மு>நு ஆயிற்றா” என்று மேலே பேராசிரியர் கேட்டிருந்தார். 2 வகையிலும் இது நடக்கலாம். எது முதல் என்பது எனக்குத் தெரியாது. நான் அவதானித்த வகையில் இரு வகையிலும் நடந்துள்ளது.   ”உகரமல்லா ந>ம ஆவதற்கும் சான்றுகள் வேண்டும்” என்று இன்னொரு கேள்வியையும் பேராசிரியர் கேட்டிருந்தார். நட்டம்>மத்தம்>மத்யம் என்பதே உகரம் இலாச் சான்று தான் நங்கை>மங்கை என்பதும் அப்படி உறவுகாட்டும். தினவு எடுத்ததற்கான ஒலிக்குறிப்பை இருவகையில்  நசநச என்றும், மசமச என்றும் தமிழில்  குறிப்பிடுவோம். மசித்தல், நசித்தல் ஆவதும் அப்படியே.  

No comments: