Tuesday, April 26, 2022

Internet of Things

 ”Internet of Things ஐத்  தமிழில் எப்படி அழைக்கலாம்?” என்று 2016 இல் செல்வமுரளி கேட்டிருந்தார். இன்று அதை மீண்டும் முன்வரித்தார். நானளித்த விடை இதோ

---------------------- 

இதிலுள்ள சிக்கல் thing என்பதற்கு நம்மிடம் தனிச்சொல் இல்லாதது தான். பொருள், உருப்படி என்று ஏதோ இன்னொரு சொல்லைக் கூறி நாம் ஒப்பேற்றுவோம். (பலரும் நான் இப்படிச் சொல்வதை ஏதோ பூச்சாண்டி, காட்டுவதாயும் இல்லாததைச் சொல்கிறேன் என்பதாயும் உரைபரப்பிப் இணைய நண்பரை வெருட்டுவார். அப்படிக் கிடையாது. thing என்பதற்கு உண்மையிலேயே தனிச்சொல் நம்மிடம் இல்லை. 

உங்கள் புரிதலில் அருள்கூர்ந்து நீங்களே ஓர்ந்து பாருங்கள். ஆங்கிலம் வென்றது சொல் துல்லியத்தாலே அன்றி. வேறு எதனாலும் அல்ல. சொல் துல்லியம் கூடக் கூட நம் தமிழும் இற்றை நிலையில் வெல்லும். We need to express each and every thing minutely.) இனி thing இன் வரையறைக்கு வருவோம்.  

thing (n.) Old English þing "meeting, assembly, council, discussion," later "entity, being, matter" (subject of deliberation in an assembly), also "act, deed, event, material object, body, being, creature," from Proto-Germanic *thinga- "assembly" (source also of Old Frisian thing "assembly, council, suit, matter, thing," Middle D நம்utch dinc "court-day, suit, plea, concern, affair, thing," Dutch ding "thing," Old High German ding "public assembly for judgment and business, lawsuit," German Ding "affair, matter, thing," Old Norse þing "public assembly"). The Germanic word is perhaps literally "appointed time," from a PIE *tenk- (1), from root *ten- "stretch," perhaps on notion of "stretch of time for a meeting or assembly."

The sense "meeting, assembly" did not survive Old English. For sense evolution, compare French chose, Spanish cosa "thing," from Latin causa "judicial process, lawsuit, case;" Latin res "affair, thing," also "case at law, cause." Old sense is preserved in second element of hustings and in Icelandic Althing, the nation's general assembly

மேலேயுள்ள வரையறை அடிப்படைக்கு ஏற்ப, சில சினைகளின் (உறுப்புகளின்) சேர்க்கையே thing என்பது விளங்கும். சினைகளின் சேர்க்கை என்பது thing இற்கான முதற்சுருக்கம். சினைகள் என்பதையும் கூடத் தொகுக்கலாம். அப்போது சொல், “சேர்க்கை” என்றாகும். சேர்க்கையைக் கூட சேரை என்று மேலுஞ்சுருக்கி, thing இற்கு இணையாக்கலாம். சேரையைப் பொருணை (material) உள்ளதாய் மட்டுமே பார்க்கவேண்டியது இல்லை. அது கருத்தாகவும் இருக்கலாம். எனவே எங்கெல்லாம் thing வருகிறதோ, அங்கெல்லாம் என் பார்வையில் சேரையைப் பயன் கொள்ளலாம். 

சேரை இணையம் = Internet of things. 

Monday, April 18, 2022

சித்திரை முதல் என்பது மேழவிழு

Vaishakhi>Baisakhi என்று Jammu விலும், Vaisjakhi> Baisakhi என்று Punjab இலும், Vaishaki> Baisakhi என்று Haryana விலும், Vaisoa> Basoa என்று Himachal இலும்,  Vaikoti> Bikhoti என்று Utterakhand இலும், (Pohela) Vaishakhi > (Pohela) Boishaki என்று Bengal இலும், Visu Tring > Buisu Tring என்று Tripura விலும்,  Rongali visu > Rongali bihu என்று Assam இலும், Vishuva Sankanti > Bishuba Sankranti என்று Orissa விலும், Vishu Parvam > Bish Parba என்று Tulu நாட்டிலும், Vishu என்று Kerala கேரளத்திலும் சொல்லப் படுவது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் மொண்ணையாய்ப் புத்தாண்டு எனப்படுகிறது. இது சரியா? 



மற்ற பகுதிகளில் இது புத்தாண்டு தான். ஆனால் வானியல் பெயரில் அழைக்கப் படுகிறது. நம்மூரில் மட்டும் வானியல் நிகழ்வை வெளிப்படச் சொல்லாது  புத்தாண்டு என்கிறார். நாம் என்ன மாங்காய் மடையர்களா? நமக்கு எதுவும் விளங்காதா?  ஏன் மேழ விழு என்று சொல்ல மாட்டேம் என்கிறோம்? (தைப் புத்தாண்டு என்போர் இவ்வாதுள் வரவேண்டாம், என்னிடம் தையா, சித்திரையா என்று கேட்டால் அறிவியலின் படி இரண்டும் சரி என்பேன். அதே பொழுது , கிட்டத்தட்ட 2022 - 285 = 1737 ஆண்டுகளுக்கு முன் இம்மாற்றம் வேறு காரணங்களால் நடைபெற்று விட்டது என்று உரைக்கக் கடமைப் பட்டுள்ளேன். ஏனென்று எனக்குத் தெரியாது. கிபி.285 க்கு அப்புறம் சித்திரையே புத்தாண்டு எனும் பெரும்பான்மைப் போக்கு தமிழரிடை ஏற்பட்டுவிட்டது, அதை இனிமேல் மீளவும் பேசிப் பலனில்லை,) 

சித்திரை முதலை எப்படிக் குறிக்க வேண்டும் என்ற கேள்விக்கு இனி வருவோம். ஆண்டென்பது ஒரு குறிப்பிட்ட வகை மூங்கில் தளிர் ஆண்டுக்கு ஒரு முறை தாய் மூங்கிலை அண்டி எழுந்ததைக் குறிக்கும். (அண்டு>ஆண்டு), ஆண்டுக்கு ஒருமுறை வழியும்  மழையைக் குறித்து எழுந்தது வழியம்> வழுயம்> வழுசம்> வருஷம்> வருடம் என்ற சொல். இது தமிழ்- சங்கதம்- தமிழ் வழி எழுந்தது. தமிழோடு நிற்க வேண்டின், வழியம் என்பது போதும். சிலர் வருடை - ஆடு. எனவே வருடம் என்பார். எனக்கு வழியமே சிறப்பாய்த் தோன்றுகிறது. விஷுவிற்கும் ஒரு பின்புலம் உண்டு. அதை முறையாக வெளிப்படுத்தாமல் புத்தாண்டு என்பது ஒருவித மொண்ணைப் போக்கு. அப்படிச் சொல்வது நம் அறிவை மறுப்பதும், முன்மையை மறைப்பதும், வழிதவறிக் குழம்ப வைப்பதும் ஆகும்.

உண்மையில் புவியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றினாலும், புவியை, ஞாயிறும் மற்ற கோள்களும் சுற்றுவதாகவே நமக்குத் தோற்றம் அளிக்கும். புவியில் இருந்து ஞாயிறு இல்லாத மற்ற கோள்களைப் பார்த்தால் அவை யெலாம் ஏறத்தாழ ஒரே தளத்தில் புவியைச் சுற்றுவதாகவே தோற்றம் அளிக்கும் இச் சுற்றுத் தளத்தை (plane of revolution) ஏகலோடி - ecliptic- என்றும் சொல்வார். புவியின் நடுக் கோட்டுத் தளத்தை (equatorial plane) ஞால நடுவரை என்பார். இதையே தொலைவிற் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிதுபடுத்தி, வான் நடுவரை (celestial equator) என்று உருவலிப்பார். இவ் வான் நடுவரையை, விசும்பு வலயம்/வட்டம் என்பதும் உண்டு. 

இது தவிர, புவியைச் சுற்றுவதாகத் தோற்றமளிக்கும் ஞாயிற்றின் சுற்றுத் தளம் (ஏகலோடி), புவி நடுக்கோட்டுத் தளத்தை (வான் நடுவரையை) 23.5 பாகையில் விழுந்து வெட்டுவது போற் காட்சியளிக்கும். இந்த 2 தள வெட்டு விழுப்பைத் தான் "விழு" (point of intersection) என்று தமிழில் சொல்ல முற்பட்டார். ஒரு வட்டத்தளம் இன்னொரு வட்டத்தளத்தை 2 இடங்களில் அல்லவா வெட்ட வேண்டும்? அதை யொட்டி 2 விழுக்கள் நமக்குப் புரிபடுகின்றன. ஒன்று மேழ விழு (இந்த விழுவின் பின் மேழ ஓரை காட்சியளிக்கிறது.) மற்றொன்று துலை விழு (துலை ஓரைக் காட்சியளிப்பு). அதாவது ஒரு விழு மேழ இராசி இருக்கும் திசையிலும், மற்றொன்று துலை இராசி இருக்கும் திசையிலும் காட்சி யளித்தன. 

மற்ற எல்லா மொழியாரும் விழு என்பதைத் தான் விஷு என்கிறார். தமிழ் ழகரம் வடக்கே ஆந்திரம் போகையில் டகரம் ஆகும். அதற்குப் பின் மேலும் வடக்கு ஏகுகையில், சில சொற்களில் டகரம் தகரமாயும், சிலவற்றில் டகரம் ரகரமாயும், சிலவற்றில் டகரம்> யகரம்> ஷகரமாயும் திரியும். இங்கு விழு>வியு>விஷு என்று ஆகியிருக்கிறது. மோனியர் வில்லியம்சு சங்கத அகரமுதலியில் விஷுவிற்குச் சொற்பிறப்புச் சொல்லவில்லை. பயன் கொள்ளுதல் மட்டுமே சொல்லப் பெறும். “விள்ளுதல், வெட்டுதல். விள்> விள்ளு> விழு என்ற விளக்கம்” தமிழில் மட்டுமே உண்டு. அடிப்படையில் நாளும், மாதமும், ஆண்டும், தன்னுருட்டும், வலயமும், வானியலும் ஓரிடத்தில் பல நூறு ஆண்டுகள் தங்கியவராலேயே செய்ய முடியும். நாடோடி நிலையில் முடியாது சாயை, நிழலை வைத்துத் தான் இந்த இயலே பிறந்தது. நிழல் விழும் குச்சியும், கூர்த்த பார்வையும், ஓரிட இருப்பும் தான் இவ்வியலைப் பிறப்பித்தன. நிழல் விழும் குச்சியைச்  சங்குக் குச்சி, ஞாலக் குச்சி, விழுவன் குச்சி, நத்தக் குச்சி என்று வெவ்வேறு சொற்களாற் தமிழிற் சுட்டுவார். நத்தக்>ஞத்தக் குச்சியை ஆங்கிலத்தில் gnomon என்பார்,

இப்படியாக விழு எனும் தமிழ்ச்சொல் விஷு என்று சங்கதத்தில் மாறும். நாமோ, முட்டாள் தனமாய், நம் விழுவை மறந்து புத்தாண்டு என்று புதுப் பெயரிட்டு அழைக்கிறோம். நம் முன்னுரிமையைச் சங்கதத்திற்கு விட்டுக் கொடுக்கிறோம். சரி! தமிழ் ஆண்டுப்பிறப்பு மேழவிழுவை ஒட்டி எனில் அது மார்ச்சு 21 ஆம் நாளை ஒட்டியல்லவா வரவேண்டும்? பின் ஏன் ஏப்ரல் 14- இல் சொல்லி வைத்தாற் போல் ஒரே நாளாய் வருகிறது?  இன்னும் கொஞ்சம் ஆழப் போவோம்.

மீள்நினைவு கொள்க. விசும்புவட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புள்ளது; ஏகலோடி = எல்லாக் கோள்களும் சுற்றும் வலயத் தளம். விசும்பு வட்டமும், ஏகலோடியும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டத்தில் ”ஒருக்களி=த்தல்/  ஒருக்கணி-த்தல்” என்பது ”சாய்ந்து இருத்தல்” பொருளைக் காட்டும். ”ஒருக்களித்துப் படுத்தான்” எனில் ”மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal- சாய்ந்து ஒரு பக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்று பொருளாகும்.) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்கிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன.

ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் (=ஒரே அளவுள்ள) ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கிறார். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 21 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 22 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்வார்.

இதுபோக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும் ,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solstice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 21-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solstice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 21ம் நாள்) நாம் சொல்கிறோம்.

10 ஆண்டுகளுக்கு முன் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் விழுந்தது (=ஏற்பட்டது). கி.பி. 2012 - ல் இருந்து அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்துவிழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்> யுகம்> yuga என்ற வடமொழியில் சொல்வார்.) என்று வரலாற்றாசிரியர் சொல்கிறார். அதேபோல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணைகொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 23/ 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 21-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 23/24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15 இல் விழவேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 22-லேயே நடக்கிறது. சனவரி 14 இல் நடக்கவேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 21 -இலும், சூலை 14 இல் நடக்கவேண்டிய வேனில் முடங்கல் சூன் 21 -இலும் நடக்கின்றன.

இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த முற்செலவு இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தைத் தான்  உகம் (=யுகம்) என்று சொல்கிறார். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித்தான். ஏற்கனவே மீன உகத்தில் இருந்த நாம் 2012 ற்கு அப்புறம் அஃகரை உகத்திற்குள் நுழைந்துவிட்டோம். 

இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு ”உடன் அயன முறை” (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இம்முறையில் தான் காலங்களைக் கணிக்கிறார். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தை முற்றாகக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறையே விதப்பாகப் பின்பற்றப்படுகிறது.

நில்லயன முறைப்படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்வார். நில்லயன முறைப்படி, தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவைச் சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது இக்காலத்தில் உடன் அயன முறையின்படி, வடசெலவு தொடங்குவது திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது.

இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்து, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22 ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும். அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய ஆண்டு கி.பி. 285 ஆகும்.

இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய நிலையை நினைவு படுத்தி, ”பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் கி.பி.285 இல் ஒன்று சேர்ந்திருந்தன” என்று சொல்வார். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவது வானியல் முறை. மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்வார்.)

மேலவிழு, துலை விழு ஆகியவற்றைச் சொன்னது போலவே, “பொங்கல் நாள்” என்பதும் ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) ”பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை” என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் பொங்கல் விழா.

சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]

மேயம் என்பது மேழம் என்று மீத் திருத்தமும் பெறும். முடிவில் மற்ற தமிழிய மொழிகளில் ழகரம் டகரமாய் ஒலிக்கப் பெறும்போது மேடம் என்றும் விரிவு கொள்ளும்.

சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். சித்திரை முதலை, மேழ விழு என்று சொல்லப் பழகுக, 


Wednesday, April 13, 2022

Matriculation School

தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் matriculation school உக்கான இணைத் தமிழ்ச்சொல் கேட்டிருந்தார். அதில் நண்பர் கார்த்திக் கரன் என்னுடைய  ”மடிக்குழைப் பள்ளி”  என்ற 2003. 2004 பரிந்துரையைக் கொடுத்திருந்தார். அதன் விளக்கம் கீழே:

Skeat இன் பழைய ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் Matriculate இற்கு இணையாய்க் கீழுள்ளது கொடுக்கப்பட்டிருக்கும். 

to admit to membership, esp. in a college, to register. used a a pp. with the sense of 'enrolled' Latin matriculatus, pp of matriculare, to enroll - a coined word. Latin matricula a register; a dimunitive of matrix (i) a breeding animal (ii) a womb, matrix (iii) a public register, roll, list Literally a parent-stock

18, 19 ஆம் நூ. இங்கிலாந்தில் ஒரு பள்ளியிலோ,கல்லூரியிலோ, இடம் பிடிக்க வேண்டுமெனில் ”இவன் இன்னாருக்குப் பிறந்தவன், இன்னார் வீட்டுச் சிறுவன்/சிறுமி” என்று சொல்லித் தான் பள்ளி, கல்லூரி தரும் ஆவணத்தில் புள்ளிவிவரங்களை ஒரு நீள வரிவையில் குறித்தே இடம் பிடிக்கவேண்டும். நிலவுடைமைக் காலத்திலும், தொடக்ககால முதலாளியத்திலும் ஊரிலுள்ள எல்லோரும் இதுபோன்ற பள்ளிகளில் இடம் பெற்றுவிட முடியாது, அதற்கென்று குடும்பப் பின்புலம் பார்ப்பார்.

19, 20 ஆம் நாற்றாண்டில் இந்தியாவில் ஆங்கில வழிப் பள்ளிகள் ஏற்பட்ட போது ஆங்கிலேயர். இந்திய மேல்தட்டு ஆளும் வருக்கத்தார் ஆகியோர் மட்டுமே இதுபோன்ற matriculation பள்ளிகளில் இடம் பெற முடியும். கோவையில் Stanes High School. திருச்சியில் Campion High School, ஏற்காட்டில் Montford School போன்றவையும், சென்னை, மதுரை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடத்துப் பள்ளிகளிலும் குடும்ப 😊 மடி) விவரம் பார்த்தே பிள்ளைகளை அனுமதித்தார். எல்லோரும் நுழைந்துவிட முடியாது

குடும்ப விவரம் என்பதை இல் என்று சேரலத்தில் சொல்வது போலும், கோத்திரம் என்று பெருமானர் சொல்வது போலும் கொள்க. இங்கிலாந்தில் இன்ன “matrix" (மடி, = குடும்பம்) என்று வெவ்வேறு ஆளும் வருக்கத்தார், பிரபுக்கள் சொல்லியுள்ளார். இந்த matrix வீட்டு பிள்ளை என்பது தான் matriculate என்று பின்னால் ஆயிற்று.. இதைத் தான் matriculate = மடிக்குழை = மடிப்பிள்ளை என்ற பொருளில் நான் சொன்னேன்.

நான் புரிந்து கொண்டவரை வரலாற்றின் படி ”மடிக்குழை” என்பது சரியான சொல். .Matriculation School = மடிக்குழைப் பள்ளி.


Sunday, April 10, 2022

இராசிக்கான தமிழ்ச்சொற்கள்.

இன்று ஒரு நண்பர் இராசிக்கான தமிழ்ச்சொற்களைக் கேட்டார். அவருக்குக் கொடுத்த விடை கீழே உள்ளது.

விண்மீன் கூட்டங்களை ஏதோ ஒரு வகையில் உருவகப் படுத்தித் தொகுதிகளாக்கிய போது அவை 12 தொகுதிகளாகத் தெரிந்தன. அவற்றின் இரைந்து கிடந்த பக்குவம் இரைதி = தொகுதி என்ற சொல்லை  உருவாக்கியது. இரைதி> இரதி> இராதி> இராசி என்று மேலும் ஆனது. 

இராசிகளை ஓரை என்றும் அழைப்பர். ஒல்லுதல் = உடன்படுதல்.  சில குறிப்பிட்ட பொருள்கள் உடன்சேர்ந்து தொகுதியாகும் பொழுது,  ஒன்று. ஒரு , ஓர் என்றும் அழைப்பார். இங்கு சில விண்மீகள் தம்முள் உடன்பட்டு ஒரு தொகுதி போல் காட்சியளிக்கின்றன. எனவே ஓர்>ஓரை என்றும் இரைதியைச் சொல்வர்.    

அடுத்து ஒவ்வொரு இராசியையும் வீடு என்றே பழம் மாந்தன் சொல்ல முற்பட்டான். பகலெல்லாம் பசிக்கு அலைந்து இரவில் இல் தேடி, தான் வருவது போல், இவ் விண்மீன் கூட்டங்களும் இரவில  வீடு தேடி வந்ததாக உருவகித்து அவை இருக்கும் அண்டவெளியை வீடென்றே உரைத்தான். 12 தொகுதிகளும் 12 வீடுகளாகக் கொள்ளப் பெற்றன. 

ஒரு வீடு ஆடாக (மேழம்) த் தெரிந்தது; இன்னொன்று மாடாக (விடை)த் தெரிந்தது; மேலும் ஒன்று நண்டாகத் தெரிந்தது; இன்னும் மற்றொன்று சுறா மீனாகத் தெரிந்தது. இப்படி மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் 12 இராசிகளுக்கும் பெயர் இட்டார்.  இதையே பாதி வடமொழிப் படுத்தி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் என்பார்,  

ஓரைகளின் பெயர்களையே சூரிய மான மாதத்திற்கும் பெயர்களாகச் சொல்லுவது நம்மிடமுள்ள கால காலமான மரபு. சூரிய மான மாதத்தை ஞாயிறு என்ற சொல்லால் அழைத்துச் சோழர் காலக் கல்வெட்டுக்களில் குறித்திருக்கிறார். கடக ஞாயிறு, கும்ப ஞாயிறு என்று அவற்றில் சொற்கள் புழங்கும். சித்திரை, வைகாசி......பங்குனி என்ற பெயர் கொடுத்து அழைக்கும் மாதங்கள் சந்திர மானக் கணக்கில் வருபவை. இவற்றைத் திங்கள் மாதங்கள் என்போம். இரு விதக் கணக்குகளும் சங்ககாலம் தொட்டே நம்மிடம் இருந்து வருகின்றன.

இராசியின் தமிழ்ப் பெயர்கள்: 1 இரைதி 2 ஓரை 3 வீடு. இடம் பார்த்துப் பயன்கொள்க.


Saturday, April 02, 2022

புவியியல் பிரிவுகள் (Geological divisions)

இதில் இயற்பெயர்கள் அப்படியே ஏற்கப் படுகின்றன. மற்ற சொற்களே மொழிபெயர்க்கப் படுகின்றன. (கீழ் வருவதில் era - எழுகை, period = பருவம்.)

late proterozoic era = கடை முன்னுவாழ் எழுகை    (650-541 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) முதல் காழுள்ள எளிமங்கள் (first skeletal elements), முதல் சவையுடல் முகட்டுவாழிகள் (first soft-bodied metazoans), முதல் விலங்குத் துணுக்குகள் (first animal traces)

paleozoic era = பழைவாழ் எழுகை     (541-251.902 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்)

cambrian period = கேம்பிரியப் பருவம்     (541 -485.4 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் மீன்கள், முதல் குட்டத்திகள் (first chordates; குட்டம் உள்ள உயிரிகள்) 

Ordovician period = ஆர்டோவிகப் பருவம்      (485.4-443.8 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முகட்டுவாழிக் குடும்பங்களின் திடீர் விரிவு.

Silurian period = சிலூரியப் பருவம்      (443.8 - 419.2 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதன்முதல் நாளங்கொண்ட நிலத் தாவரங்கள்> 

Devonian period = தெவோனியப் பருவம்      (419.2 - 358.9 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் நிலநீர் வாழிகள், தாடையுள்ள மீன்கள் பல்வேறு விதப்புகள் ஆதல். 

carboniferous period = கரிப்பேற்றுப் பருவம்      (358. 9 - 298.9 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) முதல் சாரைகள் (reptiles), அளவு மரங்கள் (scale trees_ விதைப் பன்னங்கல் ( seed ferns).

(மேலுள்ளதில் Mississippian period = மிசிசிப்பியப் பருவம், Pennsylvanian period = பென்சில்வேனியப் பருவம் என்பதும் உண்டு

permian period = பெர்மியப் பருவம்      (298.9 -251,902 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) மேய வாழணைப்பு (major extinctions), சாரை வேற்றங்கள் (reptiles diversity) 

mesozoic era = மிடைவாழ் எழுகை      (251.902-66 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்)

triassic period = துதியகப் பருவம்      (251.902-201.36 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்; துதி>த்ருதிய = three. துதி = மூன்றிற்கான இன்னொரு தமிழ்ச் சொல் )

jurassic period = யூராயகப் பருவம்       (201.36-145 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் பாலூட்டிகள், முதல் துணுச்சாரைகள்

cretaceous period = சுதையகப் பருவம்       (145-66 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (சுதை = சுண்ணாம்பு) முதல் பறவைகள், துணுச்சாரை வேற்றங்கள்.

cenozoic era = அண்ணுவாழ்  எழுகை      (66.21 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்னில் இருந்து இப்போது வரை) துணுச்சாரை வாழணைப்பு, முதல் பெருமிதைகள் (primates), முதல் பூக்கும் தாவரம்

paleogene period = பழைய கன்னுப் பருவம்      (66-23.03 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (கன்னுதல் = தோன்றுதல்) பாலூட்டி வேற்றங்கள்

neogene period = புதிய கன்னுப் பருவம்       (23.03-2.58 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) பாலூட்டி வேற்றங்கள்

quaternary period = சதுரப் பருவம்      (2.58 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து இப்போது வரை) (சதுரம் தமிழே) மாந்தத் தோற்றம்.