Sunday, February 28, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 4

தேர் சென்ற டத்தோ கெராமத் வீதி சற்று பெரியது. குறிப்பாக Times Square க்கு முன்னால், 6 ஒழுங்கையாவது அமையுமளவிற்குப் பெரியது. தேர் வரும் வழியில், 100, 150 அடிக்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் இருந்ததுபோற் தோன்றியது. Times Square - இலும், அதற்குச் சற்று முன்னிருந்த காமாட்சியம்மன் ஆலயத்திற்கு அருகிலும், தண்ணீர்ப் பந்தல்கள் இருந்தன. அவற்றில், நேரத்திற்கேற்ப வருவோர், போவோர் ஏதாவது அருந்தவும், கொறிக்கவும், சாப்பிடவும், கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். கூடவே தண்ணீர்ப் பந்தல்களிற் காதைப் பிளக்கும் அளவிற்கு ”பற்றிப் பாட்டுகளும்” ஒலித்துக் கொண்டிருந்தன. தண்ணீர்ப் பந்தற்காரர்களின் சளைக்காத விருந்தோம்பல் என்னைப் பெரிதும் கவர்ந்தது.

இது தவிர, முன்னே சொன்னது போல் தேர்போகும் சாலையின் நடுவே மூட்டை மூட்டையாகவும், பெருத்த குவியல்களாகவும் கிடந்த சிதறு தேங்காய்கள் பன்னூறாயிரங்களைத் தாண்டி நுல்லியக் (million) கணக்கில் இருக்கும் போற் தோன்றியது. சாலையின் பலவிடங்களில் ஆங்காங்கே கடைபோட்டுப் பல்வினைப் பொருள்களும், DVD களும் விற்றுக் கொண்டிருந்தார்கள். நடந்துவரும் மக்களோ, தங்களுடைய தேர்ந்த ஆடைகளில் ஒய்யாரமாய்க் குடும்பம் சூழ ஏதோ மகிழ்வுலா (picnic) போவது போல் நடந்துவந்து கொண்டிருந்தனர். இவர்களின் ஊடே, தேரை எதிர்பார்த்துத் தண்ணீர்ப் பந்தல்களுக்கு அருகிற் பற்றியில் ஆழ்ந்த பல்வேறு சீனர்கள், தமிழர்கள், மலாய்க்காரர்கள். எனப் பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த சூழ்நிலையை ஓரளவாவது விவரிக்க வேண்டுமெனில் ஒரு தென்னமெரிக்கக் காட்சியைத் தான் ஒப்பிட்டுச் சொல்லவேண்டும். நேரடியாகவோ, திரைப்படம் அல்லது தொலைக்காட்சி வழியாகவோ பிரசீலின் (Brazil) ரியோ டி ^செனைரோவின் கொண்டாட்டம் (Rio de Janeiro Carnevale)” பார்த்திருக்கிறீர்களா? ஏசு உயிர்த்தெழுவதற்கு முன் நடந்த இறப்பு நிகழ்வை நினைந்து தாமும் அவ்வலியை உணருமாப் போல, 40-46 நாள் நோன்பிருக்க முனைவோர், நோன்பிற்கு முன்னால் பசந்தத்தைக் (Lent) கொண்டாடுவதாய் அமையும். ஒரேயொரு வேறுபாடு. அந்தக் கொண்டாட்டம் நோன்பிற்கு முன்னால் அமையும். தைப்பூசமோ நோன்பிற்கு அப்புறம் ஒருசிலர் காவடியெடுக்க, மற்றவர் அவரோடு உடன்சேர்ந்து வருவது என்று அமையும். [உடம்பை விட்டு உயிர் விலகும் நிகழ்வைத் தாரை, தப்பட்டையோடு, குதித்து, பூத்தெறித்து கொண்டாடுவோர் நம்மவர் ஆயிற்றே? நம்முடைய பழஞ் சமயமான ஆசீவகத்தின் கூறுகளான ”கடைசிப் பாட்டு, கடைசியாட்டம்” போன்ற இறப்பை ஒட்டிய கொண்டாட்டச் சடங்குகள் இன்றும் நடைபெறுகின்றன அல்லவா?.]

ரியோ கொண்டாட்டத்தில் பல்வேறு சாம்பாப் பள்ளிகள் கூட்டங் கூட்டமாய் தாளக்கருவிகள் பலவற்றை இசைத்துக் கொண்டு, தங்களுடைய பட்டேரியா (Bateria) இசைக்குழுவுடன் ஆட்டம் போட்டு ஊர்வலமாய் வருவார்கள். அவர்கள் ஆடுவது சாம்பா ஆட்டம் என்று சொல்லப்படும். சாம்பா ஆட்டம் ஆப்பிரிக்காவில் இருந்து, கருப்பின அடிமைகளால் கொண்டுவரப்பட்ட துள்ளாட்டம். பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட நம்மூர் தப்பாட்டம் போலவே அமையும். பினாங்குப் பூசத்தில் விதம் விதமான தப்பாட்டங்களும், பறையாட்டங்களும் இசைக்கலைஞர்களோடு வீறு கொண்டு இயம்புவதைக் கூர்ந்து கவனித்தால், தைப்பூசத் திருவிழாவும், ஓரளவு ரியோ கொண்டாட்டத்தின் சில கோணங்களைக் காட்டத் தொடங்கிவிட்டதென்றே சொல்லவேண்டியிருக்கிறது.

காலை 10.30 மணிக்கு தேர் சிவன்கோயிலுக்கு அருகில் தேர் வந்து சேரும் என்று சொன்னது 12 ஆகியும் வரவில்லை; அந்த அளவிற்குத் தேர் மெதுவாக ஊர்ந்தது போலும். வெய்யில் சுள்ளென்று அடித்து ஏறிக் கொண்டிருந்தது. இந்தச் சூட்டில் காவடிக் காரர்கள் நடக்காமல் இருக்கும் வகையில், பினாங்கு நகராட்சியினர் சாலையில் நீரைத் தொடர்ந்து தெளித்துக் கொண்டிருந்தனர். சிவன் கோயிலின் உள்ளே இருந்த பந்தலில் நானும், என் மனைவியும் இரண்டு சாப்பாட்டுத் தட்டுகளைப் பெற்றுக் கொண்டு எங்கள் பசியைத் தணித்துக் கொண்டோம்.நான் வருவோர், போவோரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அருகில் யாரோ சற்றுப் பலக்கவே, தனக்குத் தெரிந்தவரைப் பார்த்து விசாரித்துக் கொள்கிறார்கள். ”ஆ.....அண்ணே, எப்படியிருக்கிங்க, பார்த்து ரொம்ப நாளாச்சது, கேயெல்லுலெ இன்னுங்கூட அதிகக் கூட்டமா இருக்கும், இல்லையா?” தெரிந்தவர்களைப் பார்த்து முகமன் சொல்லிக் கொள்வது நடந்து கொண்டேயிருக்கிறது. நம்மூரைப் போலில்லாமல் அருச்சனைத் தட்டுகளில் சற்று செல்வநிலையைக் காட்டுமாப் போலத் தேங்காய்கள், விதவிதமான பழங்கள், ஒரு பட்டுத் துணி, ஊதுபத்தி, சூடம், வெற்றிலை என வகைவகையாய் நிறைந்திருந்தன. இளஞ்சிறார்கள் Times Square க்கு முன்னால் இருந்த செயற்கை நீரூற்றுகளின் ஊடே புகுந்து தண்ணீரில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்டமும், பாட்டமும், கூத்தும், ஓடிப் பிடித்தலும் நடந்து கொண்டிருந்தன.

நாங்கள் Times Square கட்டிடத்துக்குள் உள்லே புகுந்து மூடிக் கிடந்த கடைகளை கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். மீண்டும் கட்டிடத்தின் முகப்பிற்கு வந்தால் மக்களின் செறிவு கூடிக் கொண்டே வந்தது. தேரைப் பார்க்குமாப் போல் இருந்த இடங்களில் எல்லாம் நெரிசல் கூடிக் கொண்டிருந்தது.ஆடி அசைந்து பிற்பகல் 1.30 மணியளவில் தொலைவில் KOMTAR கட்டிடத்துக்கு அருகில் தேர்க் கூம்பு தெரிந்தது. அடுத்த அரை மணியளவில் தேர் காமாட்சியம்மன் கோயிலை நெருங்கிற்று. சிதறுகாய்க்காரர்கள் சுறுசுறுப்பானார்கள். ஓவ்வொர் தேங்காய்க் குவியலுக்கருகிலும் குவியலுக்குத் தகுந்தாற்போல் ஆட்கள் கூடிச் சாலையில் சிதறுகாய்களை உடைக்கத் தொடங்கினார்கள்.

சிவன் கோயிலுக்கு எதிரிலேயே இருந்த குவியற் தேங்காய்களின் எண்ணிக்கை 10000 தாண்டியிருக்கும். ஒரு சீனர் ஊதுவத்திக் கொத்திகளை ஏற்றி மூன்றுதடவை மேலும் கீழுமாய் ஆலத்திபோற் சுற்றியெடுத்து, அடுத்து நண்பர்களைக் கொண்டு உடைத்தார். இது போல மலாய்க்காரர், தமிழர். எல்லோருக்கும் தண்டாயுதபாணி வேண்டப்பட்ட தெய்வம் போலும். சிதறுகாய்களின் தெறிப்பாலே தான் பூசத் திருவிழாவைச் சிதறுகாய்த் திருவிழா என்று சொன்னேன்.

சாலையைக் கழுவியது போல் இளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த இடத்தில் சிறுகாய் உடைப்பது முடிந்தவுடன், அடுத்த பத்தடிடியில் இன்னும் சிதறுகாய் உடைப்பு. முதற் பத்தடியைத் துப்புரவாக்க, இரண்டு பெரிய குவியேற்றிகள் (shovel loaders) முன்னே வந்து, தேங்காய்ச் சிரட்டைகளைக் குவியலாக்கி அப்படியே சாலையின் ஓரத்தில் தள்ளின. பெருகிவந்த இளநீர் சாலைப்பரப்பு எங்கும் பரவிக் கழுவினாற்போல் ஆகியது. பின்னாற் துப்புரவுத் தொழிலாளர்கள் சாலையைக் கூட்டி தேர் நகரும்படியும், ஆட்கள் நடக்கும் படியும் செய்தனர். அவர்களுடைய மட்டைத்தூறு சாலையை மெழுவும் செய்தது. எல்லாம் ஒரு 4,5 நுணுத்தங்களுக்குள் (minutes) முடிந்தன. இப்படிச் சிதறுகாய் உடைப்பதும், இளநீராற் சாலையைக் கழுவுவதும், சிரட்டைகளை அகற்றுவதும் பத்தடிக்கு ஒரு தடவை நடந்தன. தேர் அவ்வளவு மெதுவாக நகர்ந்ததில் வியப்பேயில்லை.

ஏற்கனவே வந்து சிவன்கோயிலில் இளைப்பாறி உணவருந்திய காவடிக்காரர்கள் ஒன்றரை மணியளவில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டார்கள். எங்கு பார்த்தால் “அரோகரா”வும் விதவிதமாக வேல்களை விளிக்கும் கூப்பாடுகளும் பெருகின. 2 மணியளவில் தேர் சிவன் கோயில் அருகே வந்து சேர்ந்தது. அருச்சனைகளும், தீவ ஆரதனைகளும் முடிந்து அங்கிருந்து அடுத்த அரைமணியிற் புறப்பட்டது. தேர் தண்ணீர்மலை அடிவாரம் போய்ச்சேர இரவாகிவிடும் என்றார்கள். நாங்கள் எதிர்த் திசையில் நடந்து தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்து, களைப்பாறிச் சற்றே கண்ணயர்ந்தோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 16, 2010

தமிழில் கிரந்தம்

தமிழில் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிப் பலமுறை சொல்லியிருந்தாலும், திருப்பித் திருப்பிச் சொல்வதில் சலிப்பு ஏற்பட்டாலும், இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. என் செய்வது? தூங்குவது போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித் தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச் சொல்லி எழுப்ப முடியாது.

1. சங்கதம் போன்ற மொழிகளில் நகரி எழுத்தை ஆளும் போது அங்கு ஓரெழுத்து ஓரொலியாகும். Sound of a Nagari character = function of (Shape of the character). This is one to one correspondence. ஒன்றிற்கு ஒன்று என்னும் பொருத்தம் கொண்டது. தமிழ் போன்ற மொழிகளில் தமிழி எழுத்தை ஆளும்போது, இங்கு ஓரெழுத்துப் பல்லொலியாகும். அந்த எழுத்து நாம் பேசும் மொழியில் (சொல்லில்) வரும் இடத்தையும், அண்மையில் வரும் மற்ற ஒலிகளையும் பொறுத்து குறிப்பிட்ட எழுத்தின் ஒலி மாறும். Sound of a Tamizi character = function of (Shape of the character, the place of occurrence in a word, nearby sounds). This is one to many correspondence. ஒன்றிற்குப் பல என்னும் பொருத்தம் கொண்டது. இது பார்ப்பதற்குக் கடினம் போல் தோற்றினாலும், பழக்கத்தில் எந்தக் குழப்பமும் இல்லாது குறைந்த எழுத்துகளில் பல்லொலிகளை எழுப்பவைக்கும் முறையாகும்.

நகரி/சங்கதம் போன்ற கட்டகங்களின் (systems) அடிப்படை, தமிழி/தமிழ் போன்ற கட்டகங்களின் அடிப்படையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கிரந்த எழுத்து வேண்டுவோர் நகரி/சங்கதக் கட்டகத்தைத் தமிழி/தமிழ் கட்டகத்துள் புகுத்த நினைக்கிறார். இது நாம் புழங்கும் வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இப்படி முயன்று கொண்டிருந்தால் பை எனும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல் தெரிந்தவர் இதைச் செய்ய முயலமாட்டார். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழிய மொழிகள் முதலில் (இன்றும் பலவகையிலும்) தமிழி/தமிழ் அடிப்படையையே கொண்டிருந்தன. இந்தியாவிற்குள் வாழ்வு தேடி வந்தோர் அவற்றை வலிந்து மாற்றி எல்லா மொழிகளையும் சங்கதப் (சங்கடப்) படுத்திக் கொண்டிருந்தார். அதில் தப்பியது தமிழ் மட்டுமே. அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாக இருக்கிறது. குலைப்பவர் வெறியரா? குலையாது காப்பவர் வெறியரா?

2. கிரந்தம் தவிர்த்து எழுதினால், இவரின் முதல் தாக்குதல் “பொருள் மாறிப் போய்விடும்” என்பதாகும். ”இல்லை ஐயா, பொருள் சிறிதும் குறையாமற் சொல்லத் தமிழ்ச்சொல் இருக்கிறது” என்றால், ”அது பழைய சொல், பண்டிதத் தமிழ்” என்று நொள்ளை சொல்வார். மற்ற மொழிகளில் புதுச்சொற்கள் உருவாகும் நடைமுறையைக் கண்டுகொள்ளவே மாட்டார். தமிழில் மட்டும் குறை கண்டுகொண்டே இருப்பார். இவர் தமிழ் புதுமையாவதை விரும்பாதவர். மாறாகக் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம்” என்று களியாட்டப் புலங்களில் மட்டுமே தமிழ் நின்று, கற்படிமம் (fossil) ஆவதையே விரும்புகிறார். மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் கலந்து ஒரு கலப்பின மொழி (bastard language) உருவாவதையே வேண்டி நிற்கிறார். இவரி விழைவு தமிங்கிலம் தான். தமிழ் அல்ல.

3. இவரின் இரண்டாம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் ஒலிப்பு மாறிவிடும்” என்பதாகும். ஏதோ உலகமெங்கும் உள்ளோர் ஒலிப்பு மாறாமல் பிறமொழிச் சொற்களை ஒலிப்பதாகவும், தமிழர் மட்டுமே தவறு செய்வதாகவும் இவர் அங்கலாய்ப்பார். ஒரு பத்து நாட்களுக்கு முன் கோலலம்பூர், சிங்கை, பினாங் போய்வந்தேன். கோலாலம்பூரில் ஒரு மீயங்காடியை (Hyper market) Pasar besar என்று மலாய் மொழியில் எழுதியிருந்தார். நம்மூர்க்காரர் மூலம் தான் பசார் என்ற சொல்லை அவர் அறிந்திருக்கிறார் அந்தச் சகரமே அதை இனங் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அதுவும் தென்பாண்டியொலிப்பை அப்படியே காட்டி விடுகிறது.

பசாரின் மூலம் ஓர் அரபிச் சொல்; சங்க காலத்தில் இறக்குமதியானது. பந்தர் என்ற சந்தை/அங்காடி ஊரே, சேரலத்தில் முசிறிக்கு அருகில் இருந்திருக்கிறது பந்தர் என்ற சொல் பாரசீகத்தும் பரவியது. இன்றும் ஒரு பெரிய துறைமுகம் ஈரானில் பந்தர் அப்பாசு என்று இருக்கிறது. பந்தர்>பந்தார்>பஞ்சார்>பசார் என்ற திரிவில் அது பசார் ஆனது. வடக்கே பஞ்சார் என்பது பஜார் ஆனது. நாம் பசார் என்று அந்தப் பிறமொழிச் சொல்லை எழுதினால் அதை நக்கலடிக்கும், நையாண்டியடிக்கும் இந்தப் பெருகபதியர் (ப்ரஹஸ்பதிகள்) மலாய்க்காரரிடம் போய்ச் சொல்வது தானே? ”அதைப் பசார் என எழுதாதீர், பஜார் என்று எழுதுக” என்று முறையிடவேண்டியது தானே? இத்தனைக்கும் மலாய் மொழியில் ஜகரம் இருக்கிறது. ஆனாலும் மலாய்க்காரர் சற்றும் கவலைப்[படாமல், வெட்கப்படாமல் பசார் என்று எழுதுகிறார்.

Besar என்பது நம்முடைய பெரியது என்பதோடு தொடர்பு கொண்டது. [அந்தச் சொற்பிறப்பை இங்கு நான் விளக்கவில்லை.] இந்த இடுக்கைக்குத் தேவையானதோடு நிறுத்திக் கொள்வோம். ஒவ்வொரு மொழியினரும் வேற்று மொழிச் சொற்களைத் தம் இயல்பிற்கெனத் திருத்திக் கொண்டே தான் வந்திருக்கிறார். புழங்குகிறார். அது ஒன்றும் தவறே அல்ல. தாழ்வு மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத் தெரியாது. [பெருமிதங் கொண்ட ஆப்பிரிக்கக் கருப்பருக்குத் தம் கருப்பு வண்ணம் தவறாகத் தோன்றவில்லை. பெருமிதம் குலைந்து 400 ஆண்டு அடிமையாகிப் போய்ப் பின் உயிர்த்தெழுந்த அமெரிக்கக் கருப்பருக்கு மட்டுமே தம் கருப்பை மறைப்பதற்கு வெள்ளை, பூஞ்சை என்ற வண்ணங்கள் வண்டி வண்டியாகத் தேவைப் படுகின்றன. அவை கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கிறார். தோலின் கருப்பு நிறம் தான் போகமாட்டேன் என்கிறது.]

4. இவரின் மூன்றாம் தாக்குதல் “இயற்பெயரில் எப்படிக் கிரந்தம் தவிர்ப்பது? மாற்றார் நம்மைப் பார்த்துச் சிரிப்பாரே?” ”மற்றவன் இப்படி நினைக்கிறானா?” என்று இவர் எண்ணுவதே இல்லை. மற்றவருக்குப் பெருமிதம் இருக்கிறது, எனவே அவர் கவலையே படாமல் தொல்காப்பியனைத் தோல்காப்பியன் ஆக்குகிறார், அழகப்பனை அலகப்பன் ஆக்குகிறார், ஆறுமுகத்தை ஆருமுகம் ஆக்குகிறார். 

நமக்கோ நம்முள் கிடக்கும் அடிமையூற்று இன்னும் அடங்கவில்லை. கூனிக் குறுகி ”பழுப்பு பதவிசில்” (Brown sahib) ஒளிரப் பார்க்கிறோம். [Here Tamils and dogs are not allowed] என்ற வாசகம் எப்போதுமே நம் மனத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. நம்முடைய கருப்பு/பழுப்பு மெய்யில் வெண்பொடி/ பூஞ்சைப் பொடி பூசி நம் நிறத்தை அழித்துக் கொள்ளத் துடிக்கிறோம்.] 

[அதே பொழுது, வளரும் நாடான மலேசியாவிலோ, மகாதீர் முகமது எனும் மாந்தர் மலாய்க்காரருக்கு பெருமிதப் பாடத்தை விடாது கற்றுக் கொடுத்திருக்கிறார்.மலாயர் தமக்கு இருப்பதைக் கொண்டு பெருமைப் படுகிறார். புதுப் பெருமைகளை உருவாக்குகிறார்.] நமக்கும் பெருமிதத்திற்கும் இன்றுங் கூட காத தொலைவு இருக்கிறது. வெட்கித் தலைகுனிந்து கொண்டே இருக்கிறோம். பூச்சுக்களைத் தேடியலைகிறோம்.

5. இவர்களின் நாலாம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் அறிவியல் எப்படிக் கற்பது? நாம் தனிமைப் படுவோமே?” என்பதாகும். ”மண்ணாங்கட்டி” என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்பொழுது மட்டும் தமிழர் தனிமைப் படாமல் இருக்கிறோமா என்ன? அதுதான் சென்ற ஆண்டு பார்த்தோமே? ஒரு நூறாயிரத்தைக் கொன்றதற்கு இந்த உலகம் கவலைப்பட்டதா, என்ன? தனித்துத் தானே கிடந்தோம்? தமிழர் அழிந்தால் (உயிருடனோ, அன்றி மனத்தாலோ அழிந்தால்) நல்லது என்று தானே இப் பாழாய்ப்போன உலகம் நினைக்கிறது?

அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப் பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் பழகுங்கள், பிற சொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடி முழுகாது. ஆனால் அதை வேதவாக்கு என்று கொள்ளாதீர். அடிமைப் புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும்.

என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் ”அடிமையாய் இருப்பதே சுகம்” என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக் கொள்ளமுடியாது. சரியாகத் தான் பாரதி சொன்னான்.

“சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ?”

பேதையரைக் காணும் வேதனையுடன்,
இராம.கி.

Tuesday, February 09, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 3

மறுநாள் காலை வெள்ளென எழுந்து, அணியமாகி, 6-15 மணிக்கெல்லாம் கோயில்வீட்டருகில் வந்துவிட்டோம். அருகிருந்த தேக்கடைக்காரர் வந்தவர்க்கெல்லாம் பரியாகத் தே வழங்கிக் கொண்டிருந்தார். புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையிலும் கோயில் வீட்டில் கூட்டம் முட்டிக் கொண்டு நின்றது. [”கிழக்கு மலேசியாவுக்கும் மேற்கு மலேசியாவிற்கும் என இரண்டு காலப் பகுந்தங்கள் (time zones) இல்லாது, ஒரே நேரம்தான் இருக்க வேண்டும்” என்ற நோக்கில் மலேசிய அரசு நேரத்தைத் தள்ளி வைத்திருக்கிறது. மெய்யாலும் பார்த்தால், சென்னைக்கும், பினாங்குக்கும் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் தான் மாறுபடவேண்டும். ஆனாலும் மலேசிய அரசாணைப் படி 2.30 மணி நேர வேறுபாடு இன்று உள்ளது. எனவே காலை 7க்கு மேல் தான் இந்தப் பருவத்தில் பினாங்கில் பொழுது விடியும். அதுபோல் மாலை 7 க்கு மேல்தான் பொழுது சாயும்.]

அந்தா, இந்தாவென்று காவடிக்காரர்கள் காவடியை எடுத்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து இறங்கிவர, அடுத்து அரைமணி நேரம் ஆயிற்று. ஊருலவரைத் தூக்கிவந்து தேரில் ஏற்றிக் கட்டி தேரை நகர்த்த இன்னும் அரைமணி நேரம் ஆயிற்று. பல்வேறு தீவங்களும், முடிவில் ஐங்காற் தீவமும் காட்டித் தேர் நகரும் போது 7.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. தேர் அசையத் தொடங்கியவுடன், கூட்டமும் நகரத் தொடங்கியது.

”தேர், தேர்” என்று நான் இங்கு சொன்னாலும், இது நம்மூர்ப் தேர்கள் போலப் பெரியதல்ல. இது ஒரு “ரதம்” தான்; ஆனால் வெள்ளியால் ஆனது. இதை இழுத்துச் செல்ல இரண்டு முரட்டுக் காளைகளைப் பூட்டியிருந்தார்கள். [குறிப்பிட்ட தொலைவுக்கு அப்புறம் காளைகளை மாற்றிக் கொள்கிறார்கள்.] இந்தத் தேர் 116/117 ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர்த் தண்டாயுதபாணிக் கோயிலுக்கெனத் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் செய்யப் பெற்றுக் கப்பலில்.ஏற்றி அனுப்பப் பட்டதாம். ஏதோ ஒரு குழப்பத்தில் சிங்கப்பூருக்குப் போய்ச் சேராமல், பினாங்கிலேயே இறக்கப் பட்டதாம். பிறகு சிங்கப்பூர் கோயில் நிருவாகத்தாரும், பினாங்குக் கோயில் நிருவாகத்தாரும், ஓர் உடன்படிக்கைக்கு வந்து பினாங்கிலேயே தேரை நிலைத்துக் கொண்டார்களாம். வேறொரு தேர் மீண்டும் சிங்கப்பூருக்குச் செய்யப்பட்டு, இன்றும் அங்கிருக்கிறது. [இதைத்தான் ஊழ் என்று சொல்வார்களோ?]

ஊருலவருக்கு முன் நிவத்திக் காண்பித்த தீவத்தைப் பார்த்து (நிவத்தல் = உயர்த்தல்; இது போல நிவதம்>நிவேதம்>நிவேத்யம்>நைவேத்யம் = உயர்த்திக் காண்பிக்கும் படையல்)

ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே!
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே!
குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே!
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!

என்று வேண்டிக் கொண்டு, அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். [”ஆறுமுகம் ஆன பொருள்” என்பது இடம், வலம், முன், பின், மேல், கீழ் என்ற ஆறுதிசைக் குறியீட்டால் உணர்த்தப்படும் முப்பரிமான உலகத்தைப் பரிபாலிப்பவன் என்று பொருள்.].

தேர் அங்கிருந்து புறப்பட்டு பினாங்கு வீதியும் (Jalan Pinang) ஆயுதக் கிடங்கு வீதியும் (Jalan Magazine) சேரும் முனையில் உள்ள KOMTAR க்குப் போய் [பினாங்கில் இருக்கும் மிகப் பெரிய நீளுருளை (cylindrical)வடிவான, சற்றுப் பழைய அங்காடி/அலுவற் கட்டிடம். பெருந்தொலைவில் இருந்து சியார்ச்சு டவுனை அடையாளங் காட்டக் கூடியது. அதன் அடியில் உள்ளூர்ப் பேருந்துகள் வந்து போகின்றன.], பின் அங்கிருந்து சற்று மேற்கே தத்தோ கெராமத் வீதியில் (Jalan Dato Keramat) இருக்கும் நகரச் சிவன்கோயிலுக்கு நண்பகல் வந்து சேரும் என்று பலரும் சொன்னார்கள். தேர் போகும் சாலைவழியின் தொலைவு 6 . 7 கி.மீ இருப்பதாலும், ஆங்காங்கே பற்றாளர் வேண்டுகோளுக்கிணங்க ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல், கோயில், சீனக்கோயில் என நின்று நின்று அருச்சனைகள், சிதறுகாய்களைகளை ஏற்றுக் கொண்டு மெதுவாய் நண்பகலுக்குத் தான் தேர் சிவன் கோயிலைச் சேரும் என்பதாலும், குறுக்கு வழியிற் போனால் 2 கி.மீ. இல் நகரச் சிவன் கோயிலுக்குப் போய்விடலாம் என்றும் சொன்னதாலும், ”சரி, அப்படியே போவோம்” என்று சோழியத் தெருவழியே நடக்கத் தொடங்கினோம்.

அப்பொழுது எங்களுக்கு முன் போய்க்கொண்டிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் எங்களோடு நடந்தவண்ணம் முகமன் விசாரித்து ”எங்கு போகிறீர்கள்” என்று கேட்டார். நாங்கள் “ஊரைப் பார்த்துக் கொண்டே குறுக்கு வழியிற் சிவன் கோயிலுக்கு நடந்து போகிறோம்” என்று சொல்ல, அவர் “நான் அந்தப் பக்கத்திற்குத் தான் சீருந்தில் செல்கிறேன். உங்களுக்கு மறுப்பில்லை என்றால் என்னோடு வரலாம், போகும் வழியில் இறக்கிவிட்டுப் போகிறேன்” என்றார். தேரை விட்டு 400, 500 அடிகள் கூட நடந்திருக்க மாட்டோம்; சீருந்தில் ஏறிக்கொள்ளும் வாய்ப்பு வந்தது.

அந்தத் தமிழ் நண்பர் மலேசிய நாவாய்ப்படையில் (Navy) நாயகமாய் (Captain) இருப்பவர். பினாங்கில் இருந்து 3 மணிப் பயணத்தில் இருப்பதாய்ச் சொன்னார். பினாங்கு சொந்த ஊரென்றும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பூசத்திற்குப் பினாங்கு வந்து விடுவேன் என்றும் சொன்னார். கலிங்க நாயகம் பள்ளிவாசல் (Masjid Kapitan Keling) தொடங்கிச் சோழியத் தெரு (Lebuh Chulia), பினாங்கு வீதி (Jalan Penang), பர்மா வீதி (Jalan Burma), மக்கெலிசுடர் ஒழுங்கை (Lorong Maclister - Maclister Alley/Lane), மக்கெலிசுடர் வீதி (Jalan Maclister), புது ஒழுங்கை (Lorong Baru) வழியாகச் சீருந்தில் போகும் போது, பினாங்கு பற்றிய சில விவரங்களையும், வெள்ளித் தேர் பற்றியும் சொன்னார். கெலிங் என்பது தமிழரைக் குறிக்கும் சொல்; கலிங்கரை அல்ல, யாரோ ஒரு சிறந்த தமிழர் நாயகம் நிறுவிய பள்ளிவாசலாம் அது. தமிழ் முசுலீம்கள் வந்து தொழும் இடம் என்றும் சொன்னார். வெளியே பார்க்க அழகுற அமைந்திருந்தது.

அமெரிக்க அவாயில் இருக்கும் “Pearl Harbour" மேல் சப்பானியர் குண்டுபோட்ட 4/5 நாள்களில் பினாங்கின் மேல் குண்டுபோட்டதாகவும், அப்பொழுது அருகிருக்கும் பல கட்டுமானங்கள் இடிந்து போக, இந்தத் தேர் இருந்த கொட்டகையும், தேரும் அழியாது காப்பற்றப் பட்டது பற்றி அவருடைய தந்தையார் சொன்ன கதையை எங்களுக்குச் சொல்லி ”அவ்வளவு சிறப்பு வாய்ந்த தேர் இது” என்று சொல்லி பினாங்கு மக்கள் இந்த விழாவோடு உணர்வு பூர்வமாய் நெருங்குவதைச் சொன்னார். வியந்து கொண்டோம். சிவன் கோயிலுக்கருகில் எங்களை இறக்கிவிட்டார்.

அந்தச் சிவன் கோயிலுக்கு எதிரே ”Times Square" என்ற பெயரில் ஒரு பெரிய ”உள்ளமைத் திட்டைப் புறத்தெற்று (Real Estate project)” உருவாகிக் கொண்டிருக்கிறது. நிழலங்காடியும் (mall), அதன் மேல் தங்கும் தளவீடுகளும் (condominium) எனப் பெரிய கட்டிடம் ஒன்று உருவாகி அடுத்தாற்போல் இரண்டோ, மூன்றோ வானுயர் கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. .

சிவன் கோயிலுக்குள்ளும், அதற்கு முன்னால் அருகில் உள்ள காமாட்சியம்மன் கோயிலுள்ளும் போய் வழிபாடு செய்து கொண்டு, பின் ”Times Square" இல் இருந்த நிழலங்காடிக்கு வந்து அந்தக் கட்டிடத்தின் பெருநிழலில் ஒதுங்கினாற்போல் நின்று கொண்டோம். அப்புறம் பார்த்தது என்னை மிகவும் கவர்ந்தது.

அன்புடன்,
இராம.கி.

Monday, February 08, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 2

விடுதிக்கு வந்து சேர்ந்த அரைமணி நேரத்திற்குள் மெய்யாற்றிப் புதுப்பித்துக் கொண்டு, விக்டோரியாத் தெருவில் (Lebuh Victoria) இருந்து சோழியத் தெருவிற்குச் (Lebuh Chulia) சிறிது நடந்து வந்து, திரும்பி பினாங்குத் தெருவின் தென்முனைக்கு வந்துவிட்டோம். சோழியத்தெருவும் பினாங்குத்தெருவும் குறுக்குவெட்டும் சந்திப்பில் இருந்து நாலைந்து கட்டிடங்கள் தள்ளி வெள்ளித்தேர் புறப்படும் கோயில்வீடு இருந்தது. கோயில் வீட்டிற்கு அடுத்தாற்போல் விருந்தினர் உணவுகொள்வதற்கான கிட்டங்கி இருந்தது.

மாலை 7.15 அளவில் ஈரொழுங்கையால் (two lane) அமைந்த பினாங்குத் தெருவின் நெடுகிலும், சோழியத் தெரு சந்திப்பிற்கு அருகிலும், அடைந்து கிடக்கும் பெருங்கூட்டம். ஆங்காங்கு கூடியிருந்தோருக்குச் சாப்பிட ஏதேதோ பரியாகத் (free) தரும் தொண்டர்கள். அடுத்தநாள் காலையிற் புறப்படும் வகையில், அலங்காரம் செய்த தேர் கோயில்வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தது. கோயில்வீடு என்பது ஓர் இரண்டுமாடிக் கட்டிடம். இரண்டாம்மாடியில் தண்டாயுதபாணியின் திருமுன்னிலை (சந்நிதி) இருக்கிறது. கிட்டத்தட்ட 72 காவடிகள் முதல் மாடியில் வைக்கப் பட்டிருந்தன.

காவடிப் பூசை மாலை 6-15 க்குத் தொடங்கி ஒரு மணிநேரம் நடந்திருக்கிறது. பினாங்குத் தெருவெங்கும், டி.எம்.எஸ்.ஸும், பெங்களூர் இரமணியம்மாளும் இன்னும் பல்வேறு இசைஞர்களும், ஒலியுருவத்தில் செவியை நிறைத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பழைய பாட்டுக்கள். இப்பொழுதெல்லாம் அத்தகைய பாட்டுக்களை யாரும் பாடுவதில்லை. எல்லா இடத்திலும் குத்துப் பாட்டுக்களும், மேலையிசைப் பாட்டுக்களுமாய் ஆகிவிட்டன. பழைய சந்தப் பாட்டுக்களும், பற்றிப் (பக்திப்) பாடல்களும் அரிதாகவே கேட்கின்றன.

என் மனையாளின் ஒன்றுவிட்ட அண்ணன் இந்தியாவில் இருந்துவந்து காவடியெடுப்பதாய் நேர்ந்து கொண்டிருந்தவர்; இரண்டாமாண்டு காவடியெடுக்கிறார். அங்கு நாங்கள் போனபோது சட்டென்று கூட்டத்தில் எங்களை அடையாளம் கண்டு, அருகில் வந்து அணைத்துக் கொண்டார். அவரிடம் காவடியேற்பாடுகள் பற்றி அறிந்தபிறகு, வரிசையில் நின்று கோயில்வீட்டின் மேலே பூசை முடிந்து திருநீறு கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளுவதற்கு முற்பட்டோம். குறுகிய கதவும் மாடிப்படியுமாய். இருந்தாலும் ஏற ஒருவரிசையும், இறங்க ஒரு வரிசையுமாய் விழையாரத்தார் (volunteers) ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்கள். மேலே வரிசையாக அடுக்கிவைக்கப் பட்டிருந்த மயிற்பீலிக் காவடிகளைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த முருகனடியாரிடம் திருநீறும், படையற் சோறும் பெற்றுக் கொண்டு, மேலே இரண்டாம் மாடிக்குப் போய் தண்டாயுதபாணியின் ஊருலவத் (உற்சவத்) திருமேனியைக் கண்டு வணங்கி வந்தோம். சீனர்கள், தமிழர்கள் என்று பலரும் அங்கு அர்ச்சனைக்குத் தேங்காய், பழத் தட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கீழே வந்தால், அங்குமிங்குமாய்த் தெரிந்தவர்களின் முகங்கள் மிகப்பல. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, அவர்கள் வழி இன்னும் மற்றவரை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் போனது.

இந்த ஆண்டு ஏர் இந்தியா எக்சுபிரசும், ஏர் ஏசியாவும் நம்முரிலிருந்து மலேசியா செல்லப் பறனைக்கு ஆகும் செலவை எக்கச் சக்கமாய் குறைத்ததால், திருச்சி (6 மாதங்களுக்கு முன்பு பயணச்சீட்டு வாங்கியிருந்தால் ஏர் ஏசியாவில் கோலாலம்பூர் போகவர ரூ 4500 தானாம்). கொச்சி (திருச்சியைப் போலவே பயணச்சீட்டுச் செலவு) சென்னை (2 மாதங்களுக்கு முன்பு பயணச்சீட்டு வாங்கியிருந்தால் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்சுபிரசில் போகவர ரூ 10500 தான்) எனப் பல்வேறு ஊர்களில் இருந்து 400, 500 பேர் பறனையில் தைப்பூசம் பார்ப்பதற்கென்றே பினாங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

முன்னே சொன்னது போல் பழைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைச் சீமைகளில் இருப்போர் பலருக்கும் மலேசியா என்னும் நாடு பலவகையில் உணர்வொட்டிய உறவு கொண்டதால், வரும் ஆண்டுகளில் இந்தத் தொகை இன்னும் பெருகும் என்றே தோன்றுகிறது. முன்னோர் போய்வர இருந்த ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்று பிறங்கடையார் (பரம்பரையார்) முயலும் இந்தவகைப் பயணங்கள், பயணச்சீட்டுச் செலவைக் கூட்டாத வரையில் மென்மேலும் தொடரலாம். தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்கு இருள்வாய்த் தொடரிப் (Railway Train) பயணம் போய் வருவது மாறி இந்தப் பறனைப் பயணங்கள் எளிதாக ஆகிப்போயின. இனிக் கூட்டம் கூடிக் கொண்டுதான் போகும். நம்நாட்டிலிருந்து போனவர் போக திருவிழாவைக் குறிப்பாக அலகுக் காவடிகளைப் பார்த்து வியந்து போக வந்துசேரும் வெளிநாட்டினர் கூட்டம், உள்ளூர்க்காரர்கள் கூட்டம் எனப் பல்கிப் பெருகுவது இயற்கைதான்.

[தமிழ்நாட்டிலும் முன்பு பழனி போன்ற அறுபடைவீடுகளுக்குக் காவடி எடுத்துப் போவாரில் அலகுக் காவடிகள் இருந்தன. பின்னால் இந்திய உச்ச நீதிமன்றம் ஏதோ ஒரு வழக்கிற் போட்ட தடையால் அலகுக் காவடிகள் இந்தியாவில் தடைசெய்யப் பட்டிருக்கின்றன. ஏன் இந்தத் தடை என்று எனக்கு விளங்கவில்லை. இப்பொழுது மயிற்பீலிக் காவடியும், மேலுக்குச் சோடித்த காவடிகள் மட்டுமே பழனியில் அனுமதிக்கப் படுகின்றன. தென்கிழக்கு ஆசியாவிற் பார்க்கும் விதவிதமான காவடிகள், பெங்களூர் இரமணியம்மாள் பாட்டில் பட்டியலிடப்படும் காவடிகள், நம்மூரிற் கிடையா. இந்தத் தடை மலேசியா, சிங்கை, இந்தோனேசியா, தாய்லந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற தமிழர் தைப்பூச விழா கொண்டாடும் நாடுகளிலில்லை.]

உள்ளூர்க்காரர்களுக்கு மூன்று தைப்பூச விழாவிடங்கள் இருக்கின்றன. மலேசியாவின் நடுவில் இருப்போரெல்லாம் கோலாலம்பூர் பத்துமலைக்கும் [அந்தக் கொண்டாட்டம் இன்னும் மாணப் பெரியது. நுல்லியன் (million) கணக்கில் மக்கள் கூடுவது] தெற்கில் இருப்பவர்கள் ஜோகூர், சிங்கையிலும், வடக்கில் இருப்பவர்கள் பினாங்கிலும் கூடுவது வழக்கமாய்ப் போனது. இந்தத் திருவிழாவில் தமிழர் மட்டுமல்லாது சீனர், மலாய்க்காரர் எனப் பலரும் கலந்து கொள்கிறார்கள். தமிழர் 60 விழுக்காடு என்றால், சீனர் 30 விழுக்காடும், மலாய்க்காரர் 10 விழுக்காடும் இருப்பார்கள்.

ஒருசில ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் மாநிலத்தின் மலாய் ஆளுநரே பூசத் திருவிழாவில் கலந்து கொள்வாராம். இப்பொழுது இல்லை. இந்த மாநிலமும், அருகில் உள்ள உள்ள கெடா மாநிலமும், இவற்றை ஒட்டி வடகோடியில் இருக்கும் பெர்லிசு மாநிலமும் இப்பொழுது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகிப் போனதால், மலாய்க்காரர்களிடமும், நடுவரசு ஆள்வோரிடமும், சற்று தயக்கம் இருக்கிறது. பினாங்கு மாநிலத்தின் முதல்வர் ஒரு சீனக்காரர்; துணைமுதல்வர் இராமசாமி எழுச்சி மிக்க தமிழர்.

“அதெப்படி தைப்பூசப் பண்டிகையில் இசுலாம்காரர் கலந்து கொள்ளலாம்?” என்று மத குருமார் கேட்டது தான் இப்பொழுது ஆளுநர் கலந்து கொள்ளாததற்குக் காரணமாம். ஆனால், அதையெல்லாம் தூக்கியெறிந்து, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, (கூடவே நலிந்து கிடக்கும் மலேசிய இந்தியக் காங்கிரசைத் தூக்கி நிறுத்துமாப் போலத் தமிழர் வாக்குகளை மனத்தில் வைத்து,) மலேசியத் தலைமையமைச்சர் நஜீப் இந்த ஆண்டு கோலாலம்பூர் பத்துமலைத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் ”மலேசியக் கிறித்துவர்கள் தாங்கள் தொழும் போது, அல்லா என்று இறைவனை அழைக்கக் கூடாது, முசுலீம்கள் மட்டுமே அழைக்கலாம்” என்ற எக்கியக் (extreme) கொள்கை கொண்ட ஒரு சில முசுலீம் குழுக்கள் மற்றோரோடு முரண்பட்டு, உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கும் மாறாய் போராட்டத்தில் ஈடுபட்டு, சில கிறித்துவத் தேவாலயங்களைத் தகர்த்திருக்கும் பரபரப்பிற்கு நடுவில் தைப்பூசத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். [அதற்கு ஒருவாரம் முன்னால், தில்லிக்கும், சென்னைக்கும் நஜீப் வருகை தந்து, கலைஞரை கோபாலபுரத்தில் பார்த்து, வரவேற்பில் மகிழ்ந்தது வேறுகதை.]

பொதுவாய் மலாய்க்காரர்கள் தைப்பூசத்திற் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததுமாய் எண்ணிக்கைகள் ஏறி இறங்கி வந்துள்ளன. இந்த ஆண்டு பல மலாய்க்காரர்கள் தேர் போன இடங்களில் அர்ச்சனை செய்ததை நான் பின்னாற் பார்த்தேன். சீனர்களோ சொல்லவே வேண்டாம்.....ஒரே பற்றி (பக்தி) மயம். அதற்கு அப்புறம் வருவோம்.

பின் 9.00 - 9.30 மணியளவில் முண்டியடித்து கிட்டங்கிக்குள் நுழைந்து சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்து இரவு உணவை உண்டு முடித்தோம். சும்மா சொல்லக் கூடாது எளிமையாய் இருந்தாலும், சுவையான நம்மூர்ச் சாப்பாடு. அடுத்த நாள் காலை 6 மணிக்கெல்லாம் தேரில் ஊருலவரை கொண்டுவந்து வைப்பதற்கு முன்னால் வந்து சேர்ந்துகொள்வதாய்த் தெரிந்தவரிடம் சொல்லிக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம்.

அன்புடன்,
இராம.கி.

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 1

பொதுவாகக் கூட்டம் நிறைந்த இடங்களுக்குத் திருவிழாக் காலங்களில் பெருங்கோயில்களுக்குள் உள்நுழைந்து நெரிசற்படுவதை நான் தவிர்ப்பேன். [இப்படித் தவிர்ப்பதால், திருவிழாக்களை ஒட்டிய குறிப்பிடத்தக்க பட்டறிவுகளைப் பெறாமலே போகக் கூடும், அது ஓர் இழப்பு, என்பது வேறுகதை.] அதற்கு மாறாய், அருகிருக்கும் சிறு கோயில்களுக்குப் போய்வந்து விடுவேன். இந்த முறை ”அதெல்லாம் கிடையாது; தைப்பூசத்திற்கு பினாங்கு போகத்தான் வேண்டும்” என்று மனையாள் விருப்பம் தெரிவிக்க, ”இவ்வளவு காலம் நான் இழுத்த இழுப்புக்கு நெகிழ்ந்து கொடுத்தவளுக்கு நன்றிக்கடனாய் நான் நெகிழ்ந்து கொடுக்காவிட்டால் எப்படி?” யென்று நானும் ஒப்புக் கொண்டு கோலாலம்பூர், சிங்கை, பினாங்கு என்று சுற்றக் கிளம்பினோம். இப்படி நீண்ட தொலைவில் வெளியூர்ப் பயணம் போவது எப்பொழுதாவது அருகி நடப்பது தான்.

28 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சிங்கையில் இருந்து பேருந்திற் புறப்பட்டு அன்று மாலை 6.45 மணியளவில் பினாங்கில் உள்ள தங்கும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம். விக்டோரியா தெரு. விக்டோரியா இண் (Victorio Inn). இதற்கு முன்பு நாலு முறை இந்தத் தீவைப் பார்த்திருந்தாலும், தீவின் பெருநகரான சியார்ச்சு டவுனை (ஒருகாலத்தில் Tanjong என்றழைக்கப்பட்ட சிற்றூர் இன்று George Town என்னும் பெருநகராய் நிற்கிறது.) தைப்பூச விழாக் கோலத்தில், தேர்போகும் வழியில் எங்கு பார்த்தாலும்,

தண்ணீர்ப் பந்தல்,
கொடையாளர் விளம்பரங்கள்,
திருவிழாப் பதாகைகள்,
அலங்காரத் தோரணங்கள்,
விடுமுறையோடு சேர்ந்த கடையடைப்பு,
ஒழுங்கை, தெரு, வீதி, சாலையெங்கும் பரபரப்பு,
வழிப்போக்கர்களின் கவனமற்ற ஒயில்நடை,
பத்தில் இருவர், மூவராவது குவியறையோடு (camera) அங்குமிங்கும் அலைதல்,
பளிச், பளிச், “இங்கே பாருங்க, கொஞ்சம் சிரிங்க......”
சாலையின் நடுவத்திலும் (median), இருபக்க அஞ்சடியிலும் இன்னாருடையது என்னும் அடையாளக் குறிப்போடு கிடக்கும் தேங்காய்க் குமியல்கள், (அஞ்சடி என்பது மலேசியாவில் platform நடைமேடையைக் குறிக்க உருவான கலைச்சொல். மற்றவூர்த் தமிழாக்கங்களில் நான் பார்த்ததில்லை)

- என்ற விந்தைத் தோற்றத்தில் நான் பார்த்ததில்லை. மூச்சை முட்டவைக்கும் முன்னேற்பாடுகள். அம்மம்மா!

அந்தத் தீவை காலப்போக்கில் விதம் விதமாய்ப் பாக்குத் தீவு (Pulau Pinang), பிரின்சு ஆவ் வேல்சு தீவு (Prince of Wales Island), முத்தாரத் தீவு (pulau Muthiara, Orient Island of Pearls) - என்று பல பெயரிட்டுப் பொருளோடு அழைத்திருக்கிறார்கள்.

பாக்குத் தீவு என்பது புதலியற் (botany) கரணியத்தால் முதலில் ஏற்பட்ட பெயர். தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக மலேசியா, பிலிப்பைனில் தோன்றி, மற்ற நாடுகளுக்குப் பாக்குமரம் பரவியிருக்கக் கூடும் என்றே புதலியலார் ஊகிக்கிறார்கள். இந்தத் தீவின் கடற்கரையைச் சுற்றிப் பாக்குமரம் பெரிதாய் வளர்ந்தது போலும். தீவிற்குள் நுழைந்த பலருக்கும், பாக்கு மரங்கள் சட்டென்று காட்சியளித்திருக்கக் கூடும். பாக்கு பற்றிய குறிப்பு நம்முடைய சிலம்பிலேயே வருகிறது. அந்த மரம் நம்மூருக்கு எப்பொழுது வந்து சேர்ந்தது என்று வரலாறு சொல்லமுடியாது. பாக்குத் தீவு என்னும் பொருளில் மாலத்தீவில் Fua Mulaku என்ற பெயரிலும், இந்திய அசாம் மாநிலத்தின் தலைநகராய் Guwahati - யும் அமைந்திருப்பதாகச் சொல்லுவார்கள்.

அடுத்த பெயர் ஏற்பட்ட கதை வரலாற்றுச் சுவையாரமானது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் வழி புறப்பட்டுப் போன, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பணியைச் சேர்ந்த விரான்சிசு லைட் (Francis Light) என்பவர், கடார அரசரை (=கெடா சுல்தானை) ஏமாற்றி, அவர் மகளை மணந்து, இந்தத் தீவைச் சீதனமாய்ப் பெற்று, பின்னால் படைகள், உடன்படிக்கை, பொய்யுறுதி, --- இத்தாதிகள் மூலம் தீவுக்கு அப்பால் முகனை (main) நிலத்தில் இருந்து மேலும் இருமடங்கு நிலம்பெற்று, மொத்தத்தில் நாமெல்லாம் நன்கு படித்த ”இராபர்ட் கிளைவ் வேலைகளைச்” செய்து, இந்தத் தீவிற்கு மேன்மை தாங்கிய பிரிட்டிசு இளவரசரின் பட்டப் பெயரைச் சூட்டியிருக்கிறார். படிக்கப் படிக்க நம்மூர்ப் பாளையக்காரர்கள் ஏமாந்த கதை அப்படியே மனத்திரையில் ஓடுகிறது. எப்படி ஒரே கதையை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வெள்ளையர்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டங்களில், நடத்தி நிலம் கவர்ந்தார்கள் என்பது நம்முடைய ஆழ்ந்த வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் இருந்து வெள்ளையர் நாட்டாமை நடைபெற்றிருக்கிறது. அந்தமானுக்கு முன்னால், இந்தத் தீவுதான் இந்திய விடுதலைப் போராளிகளைச் சிறைவைத்த இடம். எங்கள் சிவகங்கை மருதுபாண்டியரின் கொடிவழியைப் பூண்டோடு ஒழித்துப் பின் எஞ்சியிருந்தோரைக் கொண்டு சேர்த்த இடமும் பினாங்குத் தீவுதான். மலேசியாவின் பெருந்தலைவர்கள் (அன்றும் இன்றும்) பலரும் எழுந்தது இந்தத் தீவும், அருகில் உள்ள நெற்களஞ்சியமான கடார மாநிலமும் தான். தஞ்சாவூர்க்காரர்கள் மாதிரி கடாரக்காரர்களை நினைத்துக் கொள்ளுங்கள். கடாரம், பினாங்கு இரண்டிலும் பழைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைச் சீமையின் மிச்ச சொச்சங்கள், தொட்டுத் தொடர்புகள், பேச்சுவழக்குகள், மரபுப் பண்பாடுகள், மூன்று நான்கு தலைமுறைக்கும் அப்புறமும் பெரிதும் வழங்குகின்றன. “வாங்கண்ணே, எப்ப வந்தீக? பசியாறிட்டிகளா?.....”

மூன்றாவது பெயர், கும்பணியின் ஆட்சிக்குள் பினாங் மாநிலம் பெருகி வளர்ந்தபிறகு, அதன் துறைமுகம், மலாக்கா நீரிணையின் (Malacca starits) கிடுக்கான (critical) இடத்தில் இருந்து கொண்டு, ஊடுவரும் கப்பற் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திச் சுங்கம் பெற்றிருக்கிறது. அப்படிப் பெற்ற செல்வத்தையும், பெருகி வளர்ந்த வணிகத்தையும் குறிக்கும் முகமாய் ஏற்பட்ட பெயர். முத்தாரத் தீவு நல்ல தமிழ்ப்பெயர். மலாய் மொழியில் pulau Muthiara என்று அப்படியே எழுத்துப் பெயர்ந்திருக்கிறார்கள். ஆங்கிலத்திலோ Orient Island of Pearls என்று மொழிபெயர்ந்திருக்கிறது. அந்தப் பெயருக்குள் இருக்கும் தமிழ்ப் பங்களிப்பு இன்றைக்கு யாருக்குத் தெரிகிறது சொல்லுங்கள்? பினாங்குத் தீவில் இன்றைக்கு 10 விழுக்காடாய் இருக்கும் தமிழர் அந்தத் தீவின் வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 180, 190 ஆண்டுகள் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

நீரிணையின் தொடக்கத்தில் பினாங்கும், நீரிணையின் கடைசியில் சிங்கையும் இருந்து ஊடே போன முழுப் போக்குவரத்தையும் கட்டுப் படுத்திய காலம் இன்று மாறிவிட்டது. பினாங்கின் ஒளி கிள்ளானுக்குப் (Port Klang) போய்விட்டது. [S.S.Rajulaa, S.S.State of Madras, M.V.Chidambaram எல்லாம் மக்கிப் போன பழங்கதைகள்......சென்னையில் இருந்து பினாங்குக்குச் சென்ற வாரம் ஏர் ஆசியா நேரடிப் பறனைப் போக்குவரத்தைத் தொடங்கியிருக்கிறதாம். இது ஒரு புதுக்கதை எழுப்புகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.] பினாங்குத் தீவின் துறைமுகச் செல்வாக்கு இன்று குறைந்தாலும் சிங்கைத் துறைமுகத்தின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை. சிங்கையின் தொடக்க காலத்திலும் தமிழர் பங்களிப்பு மிகப் பெரிதே.

அன்புடன்,
இராம.கி.