Sunday, May 30, 2021

ஔவையர்

இது 2010 மே-யில் எழுதியது. எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து மீண்டும் வெளியிட்டபோது இற்றை நாள் கொண்டு வெளிவருகிறது.
   
”ஏரம்பம்” என்ற இதன் முந்தையக் கட்டுரைக்குத் தமிழ்மன்ற மடற்குழுவிற் பின்னூட்டு அளித்த பேரா. (இ)ழான் லூய்க் அடுத்து ஆத்திசூடியின் காலம் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு எழுதிய மடல் இது: 

 அன்பிற்குரிய (இ)ழான் லூய்க், 

 ’எண் எழுத்து இகழேல்’ என்ற ஆத்திசூடி வாசகத்தைக் கொடுத்து என் மலரும் நினைவுகளை, சிந்தனையைக் கிளறிவிட்டீர்கள். அதே கருத்து ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று கொன்றைவேந்தனிலும் வரும். இரண்டும் நூல்தலைப்பே தெரியாத நூல்கள்; புழக்கத்தில் அவற்றின் கடவுள் வாழ்த்தில் வரும் முதற் சொற்றொடர்களே அவற்றிற்குப் பெயராகி விட்டன. இப் பழக்கம் நாலாயிரப் பனுவலிலும் உண்டு. முதற் பாடலின் முதலில் வரும் சிறு சொற்றொடரே பதிகத்திற்கும் தலைப்பாய் வரும். இதுபோன்ற பழக்கம் பதிற்றுப் பத்திலும் உண்டு. [தேவாரத்தில் ஊரை வைத்துப் பதிகப்பெயர் வரும். பொதுப்பதிகங்கள் மட்டும் மாறுபட்டிருக்கும்.] 

என் இளமைப் பருவத்தில் நான் மெக்காலேக் கட்டகத்தில் (Maculay system of school education instituted by the former English rule continues still today] வழி செய்யப்பட்ட பள்ளியிற் படித்தவன் அல்லன். அந்தக் காலத்தில் (1950 தொடக்கத்தில்) பலரும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் (மரபு சார்ந்த பள்ளிக் கூடத்தில் - traditional schools; this tradition is completely lost today) தான் படித்தார். மூன்றாவது வகுப்பு வரை அந்த மரபுப் பள்ளியிற் படித்து, அகவை (age) குறைந்திருந்த காரணமாய் மீண்டும் 3 வது வகுப்புப் படிப்பை மெக்காலே வழித் தொடக்கப் பள்ளியிற் [Elementary school] தொடங்கி 11 ஆவது வரை தமிழ்வழியே (Tamil medium) படித்து முடித்தேன். ”அரி ஓம் நமோத்து சிந்தம்” என்று தொடங்கி ஓலைச்சுவடியில் [book made of palm leaves] பாடத்தை எழுதி வைத்தும், விரிந்த மணல் மேடையில் கைகடுக்க எழுதியுமே [we all wrote in sand with our index finger] எழுத்தும் (alphabets and all reading material), எண்ணும் (mathematics) படித்தேன். நூற்றாண்டுப் பழமைகள் மாறாத காலம் அது. தாள் (paper) புழங்கத் தொடங்கியிருந்தாலும், எங்களுக்கான படிப்பு அன்று ஓலையிற் (palm leaf) தான் இருந்தது. பள்ளிக்குக் கொண்டு போகும் பொத்தகப் பைக்கே ”ஏட்டுப்பை” (Bag with palm stacks) என்று பெயர் சொல்வர். பை நிறைய கனத்த ஓலைச்சுவடிக் கட்டுகள். குறைந்தது நாலைந்தாவது செருகியிருக்கும். (கூடவே இடைவேளையிற் சாப்பிடுவதற்குத் தோதாக வீட்டிலிருந்து கொண்டு சென்ற முறுக்கு, தேன்குழல், அதிரசம் போன்ற தின்பண்டங்கள் இருக்கும்.) [ஒரு காலத்தில் ஓலைச்சுவடி பழகியவன், தாளுக்குப் போய், இன்று கணிக்குள் வந்துவிட்டேன். நாளும் பொழுதும் வெகுவாக ஓடுகின்றன. சவுதியில் சொல்வார்: ஒட்டகம் மேய்த்தவர் திடீரென்று மெர்சிடசிற்கும் BMW-விற்கும் வந்து சேர்ந்திருக்கிறார் என்று பொருளியல் வளர்ச்சியைச் சொல்வார்.] ”நமசிவாய” வைச் சொல்லத் தெரிந்த பின்னால், வீட்டிலும் பள்ளியிலும் முதலிற் சொல்லித் தந்த பாடலே ஔவையாரின் பாடல்கள் தான். 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்குச் 
சங்கத் தமிழ் மூன்றும் தா 

 என்ற “நல்வழி”யில் வரும் கடவுள் வாழ்த்தும், 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் 
 தப்பாமல் சார்வார் தமக்கு. 

 என்ற “மூதுரை”க் கடவுள் வாழ்த்தும் தான். எங்களூர்ப் பக்கம் இவற்றைச் சொல்லாத பள்ளிப்பிள்ளைகள் மிகமிகக் குறைவு. ஆத்தி சூடியும், கொன்றை வேந்தனும் 5 அகவைக்குள் பலருக்கும் கரதலைப் பாடமாயிற்று (lesson known inside out). மூதுரையிலும், நல்வழியிலும் ஐயைந்து (5, 5) பாட்டுக்களாவது மாணாக்கர் தெரிந்திருப்போம். இளம் அகவையில் அந்த ஔவையார் எங்களுக்கு மிக இணக்கமானவள். அதனாலேயே விரும்பத் தகுந்த “பாட்டி”யும் ஆனாள். அந்த ஔவையாரின் காலத்தையும், ஆத்தி சூடியின் காலத்தையும் கேட்டிருக்கிறீர்கள். ஔவையார் என்பார் ஒருவரல்லர். குறைந்தது மூவராவது இருப்பர். ஐவர், எழுவர் என்று சொல்வாரும் உண்டு. பாவாணர் ஔவை எழுவர் என்று சொல்வார். நான் ஐவர் என எண்ணுவேன். ஔவை (அவ்வை) என்ற சொல்லிற்கு அம்மா என்றே பொருளுண்டு. தெலுங்கில் அந்தச் சொல் இன்னும் புழக்கத்தில் உள்ளது என்று கேட்டிருக்கிறேன். 

முதல் ஔவையார் சங்க காலத்து ஔவையார். அதிகமானின் தோழி; பல்வேறு மன்னர் அவைகளில் வீறு கொண்டு வீற்றிருந்தவள். எந்தவூர்ப் பெண் என்பது தெரியவில்லை. அவள் பாடல்களைப் படித்தால் அவளை மூதாட்டி என்று சொல்ல முடியாது. [ஆனாலும் நெல்லிக் கனி சாப்பிட்ட காரணத்தால் அவளைப் பாட்டி என்று சொல்வது ஒரு மரபாகிப் போயிற்று. அதனாலேயே அவளைப் பின்வந்த ஔவைகளோடு போட்டுக் குழப்பி நெடுங்காலம் வாழ்ந்தாள் என்ற தொன்மத்தை மூதிகக் கதையாய் ஆக்கிவிட்டார்.] சங்க கால ஔவை மிகுந்த அழகான பெண்ணாக, அதே நேரத்தில் ஆணாதிக்கம் மிகுந்த அவைகளில் உட்புகுந்து வெளிவரும் துணிச்சல் மிகுந்தவளாய், எல்லா விதமான கறிகளையும் உண்ணக் கூடியவளாய், கள், மது போன்றவற்றை மாந்தியவளாயும் தென்படுகிறாள். தன்னைப் புரந்தவனையே ஒரு கணத்தில் தூக்கியெறியத் தயங்காதவளாயும் இருந்திருக்கிறாள். [இத்தனைக்கும் தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியைத் தான் உண்டு நெடிது வாழ நினையாது இவளுக்குத் தந்து இவளை நெடிது வாழப் பண்ணிய நெடுந்தகை நெடுமான் அஞ்சி.] அவனுக்கு எதிராக “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” [புறம்.206] என்ற வாசகத்தை இவள் சொல்ல வேண்டுமானால், இவளுக்கு இருந்த புலமைத் திமிரைப் பலரும் எண்ணியெண்ணி வியக்கக் கூடியது. என் ஆய்வில் அதிகமானின் காலம் கி.மு, 120க்கும் முந்தையது [துல்லியமான காலத்திற்குச் சற்று பொறுத்திருங்கள். சிலம்பின் காலம் எனும் என் கட்டுரை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்து சங்க காலச் சேர அரசரின் காலத்தை துல்லியமாய்க் கணித்த பின் தான் அதியமான் நெடுமானஞ்சிக்கு வரவேண்டும். ] எனவே முதல் ஔவையின் காலம் கி.மு.120க்கு முன்னால் என்று தற்காலிகமாய்ச் சொல்லலாம். 

அடுத்துவரும் ஔவை சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தியார் காலம். [கி.பி. 8 ஆம் நூற்றாண்டு.] இவளைப்பற்றி அவ்வளவு விவரம் தெரியவில்லை. ஓரிரு தனிப்பாடல்களும், தொன்மங்களுமே இருக்கின்றன. இவள் கற்பனையானவளாய்க் கூட இருக்கலாம். அதே பொழுது முற்றிலும் ஒதுக்க முடியவில்லை. 

மூன்றாவதாய் வருபவள் கம்பர் காலத்து ஔவை. (கம்பர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்று ஒரு சிலரும், 12 ஆம் நூற்றாண்டு என்று இன்னொரு சிலரும் சொல்வார். இரு பக்கமும் சான்றுகள் உண்டு.  இதைப் பற்றி இங்கு எழுத முடியாது. தனித்து எழுத வேண்டும். ஒரு நாள் எழுத முயலுவேன். கம்பனை ஏதோ தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறேன். இப்பொழுது என் ஆய்வுச் சிந்தனை சங்க காலத்திலேயே சுற்றி வருகிறது. இதைவிட்டு வெளியே வரும் போது தான் மற்றதை ஆய முடியும்.) இவளும் ஒரு துணிச்சல் காரி. சோழ நாட்டைச் சேர்ந்தவள். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள உறையூர் என்றொரு தொன்மம் உண்டு. பல்வேறு வெண்பாக்கள், நாலைந்து அகவல்கள், சில விருத்தங்கள். உண்டு. ஒரு சில பாக்கள் மீண்டும் மீண்டும் படிக்கவைப்பவை. 

தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே, 
மண்ணாவ தும்சோழ மண்டலமே - பெண்ணாவாள் 
அம்பர்ச் சிலம்பி; அரவிந்தத் தாள் அணியும் 
செம்பொற் சிலம்பே சிலம்பு 

எட்டேகால் லட்சணமே, எ(ம்)மனே றும்பரியே 
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல் 
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே, 
யாரையடா சொன்னாய் அது? 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்! 
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது; 
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது; 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் 
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் 
தானமும் தவமும் தான்செயல் அரிது 
தானமும் தவமும் தான்செய்வ ராயின் 
வானவர் நாடு வழிதிறந் திடுமே. 

வேழமுடைத்து மலைநாட்டில் மேதக்க 
சோழ வளநாடு சோறுடைத்து; - பூழியர்கோன் 
தென்னாடு முத்துடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை 
நன்னாடு சான்றோர் உடைத்து 

இது போன்ற பாடல்கள் எல்லாம் தனிப்பாடல் திரட்டுக்களிலேயே (Compendium of isolated poems) உள்ளன. அவற்றுள்ளும் கலப்பு (mix of poems by different Auvaiyars) இருக்கலாம். இன்ன பாடலை இந்த ஔவையார் தான் எழுதினார் என்று உறுதி படச் சொல்ல முடியாது இருக்கிறது. [இந்த ஔவையார் இருவராயாய்க் கூட இருக்கலாம். ஒருவர் 9 ஆம் நூற்றாண்டும், இன்னொருவர் 12 ஆம் நூற்றாண்டும் இருக்கலாம். நான் இருவர் என்றே எடுத்துக் கொள்கிறேன். 

அறிவைக்குறள் பாடிய ஔவையார் யாரென்று சொல்ல முடியவில்லை. இவள் 14 ஆம் நூற்றாண்டு என்று பாவாணர் கணிப்பார்.] ஐந்தாவது ஔவையார் தான் ஆத்தி சூடி அவ்வையார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நாலும் ஒரு தொகுதி போலவே அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு ஒத்திசைவு (consistency) இருக்கிறது. அவை நாலையும் ஒரே ஆசிரியர் எழுதியிருக்கப் பெருத்த வாய்ப்புண்டு. அவருடைய நல்வழி 40 ஆம் பாட்டு:

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
 மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
 திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
 ஒருவா சகமென் றுணர். 

தெளிவாக திருக்குறளை வேதத்திற்கு மாற்றாகவும், மூன்று சிவசமயக் குரவரின் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்) தேவாரத்தை சங்கதத்தில் இருக்கும் உபநிடதம் (upanishad) போன்ற முனி மொழிகளுக்கு எதிராகவும், திருக்கோவையார்/திருவாசகத்தை வேத நெறி கலந்த சிவநெறியை வலியுறுத்தும் திருமந்திரத்திற்கு எதிராகவும் வலியுறுத்தி அவை ஒரே கருத்தைப் புகலும் வாசகங்களே என்று இந்தப்பாடல் உரைக்கும்.

மறைமலையடிகள் திருவாசகத்தின் காலத்தை 3 ஆம் நூற்றாண்டென்றும், மற்றையோர் 9 ஆம் நூற்றாண்டென்றும் சொல்வர் (நான் மூன்றாம் நூற்றாண்டு என்று சொல்பவன். அதன் விளக்கத்தை முன்னால் ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தேன். இன்னும் ஓர் விளக்கம் தங்கி நிற்கிறது.), மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு என்று கொண்டால், இந்த ஆத்திசூடி ஔவை 9 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவள். இனி அவருடைய மூதுரை 14 ஆம் பாட்டைப் பார்த்து அருட்திரு. கால்டுவெல் அவர்கள், : 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி 
 தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன் 
 பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே 
 கல்லாதான் கற்ற கவி. 

 என்ற படி வான்கோழி பேசப்படுவதால், இந்த ஔவை 16 ஆம் நூற்றாண்டிற்கு மேல் தான் இருக்க முடியும் என்று காலம் கணிப்பார். ஏனென்றால் வான் கோழி துருக்கி நாட்டில் இருந்து 16 ஆம் நூற்றாண்டிற் தான் இந்தியத் துணைக் கண்டத்துள் இறக்குமதி செய்யப்பட்டது. வான்கோழியைப் பாடியவர் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாற் தான் இருந்திருக்க முடியும். இந்த ஏரணம் மறுப்புச் சொல்ல முடியாத ஒன்று. அதனால் ஆத்தி சூடி ஔவை 16 ஆம் நூற்றாண்டினள் என்றே நாம் கொள்ளுகிறோம். 

எண்ணும் எழுத்தும் பற்றிச் சொல்லும் கருத்து அப்படியே குறளில் இருந்து சொல்லப்படும் ஈயடிச்சான் படி. (copy made like beating a fly "chchap,,,,,") ஒரு வேற்றுமையும் இல்லை. புதிய கருத்தும் இல்லை. இங்கு இன்னும் குறுகத் தரித்து நாலு சீரிலும் இரு சீரிலுமாகச் சொல்லியிருக்கிறாள். இப்போதைக்கு என்னுடைய பிரிப்பு இதுதான். 

அன்புடன், 
இராம.கி.

Saturday, May 22, 2021

உப்புத் தாலாட்டு

1995 இல் இந்தத் தாலாட்டை எழுதினேன். பின்னால் திண்ணை வலையிதழில் November 02, 2002 இல் வெளியிட்டேன். எழுத்தாளர் செயமோகன் ஒரு காலம் வலையிதழ் நடத்தி வந்தார். அதில் இந்தப் பாட்டை மீள வெளியிட்டார். இப்போது இணையத்தில் இருக்குமா என்று தெரியவில்லை.  இப்போது இங்கு சேமிப்பிற்காகப் பதிகிறேன்.

அன்புடன்,

இராம.கி.

 ---------------------------------------------- 

வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று
வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ?
ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது
காலிக் குரல்சேர்க்கும் கண்ணமுதே! கண்ணுறங்கு!

அன்னை அயர்ச்சிபெற, ஆச்சி அலக்கொடுக்க,
சின்னவர்கள் மாமன்மார் சேர்ந்துன்னை எதிர்பார்க்க,
உன்பிறப்பை உப்பளத்து நீர்க்கடவில் வார்த்தெடுக்க
என்னைக் குழைவித்த என்னழகே! கண்ணுறங்கு!

உப்பே கதியென்பார், உன்னய்யன் நாள்முழுதும்!
உப்பே இனிவாழ்வு! உண்டபினர் என்னசொல ?
உப்பே உன் தாலாட்டு! உப்பாய் வருநாளில்!
உப்பின் கதையறிவாய்! உந்தன் விதியிதுவோ ?

வெட்டவெளி பார்த்து, வியல்நிலத்தைக் கூன்பார்த்து,
கட்டிக் களிமண்ணைக் கூழாக்கி, நிரவியிட்டு,
சிட்டாள் குலவையிட, செந்தூரான் பேருசொல்லி,
எட்டாளு சேர்ந்து, இணையிணையாத் தாள்மிதிச்சு,

பாத்தி வயலாக்கி, பாய்ச்சுதற்கு நீரிறைவை
போர்த்திப் புகலாக்கி, பொந்தாக மின்னிணைச்சு,
வாய்த்த புரைநீரின் வாகாய் அளச்செறிவை
ஆய்த்துக் கணிச்சு, அறுவடைக்கு நாள்குறிச்சு,

முந்நீர் ஒதுக்கி, முதநிலத்து நீர்பாய்ச்சி,
அந்நீரைத் தேக்கி, அணையணையா வரப்புகட்டி,
தந்நேரில் கதிரும் தகதன்னு காய்ச்சியதால்,
வெந்நீராய் மாற, வெதுவெதுப்புக் கூடிவர,

நீர்த்து நிறைகூட, நெடுக நுரையொழுக,
சேர்த்துச் செறிகூட, சீராய் விதையெழும்ப,
பார்த்துப் படிவமெனப் பலனாய் அளம்வாரப்
பாத்திதனில் நீர்வடிச்சு, பல்வாயிற் கட்டமைச்சு,

செங்கச் செறிவரவே சேராய் அளம் விளைஞ்சு,
வெங்கதிரில் உப்புகையில், வெள்ளென்று மாலவச்சு,
கண்கூசி, இமையிடுங்க, கட்புலனைத் தொலையவச்சு,
தங்கூடை கொள்ளத் தலைநிறைய உப்பேற்றி,

அம்பாரம் சேர்த்து, அதற்குவொரு கூரைகட்டி,
தம்பாரம் கீழிறக்கி தன்னை உருக்கியதால்
சம்பாவும் காசும் தான்பெற்றார் உன்னய்யன்
செம்பாதிச் சூரியனே! செந்தூரா! கண்ணுறங்கு!

நாளும் அளம்பார்த்து நாவும் கரிப்பேற,
கூழும் குறுமீனும் கொண்டவளும் கூடவர
போழும் மணற்காற்றில் போழ்ந்துவிடா உப்பளத்தான்
வாழும் குலவிளக்கே! வடிவழகே! கண்ணுறங்கு!
—————————————————————————————————

மேலே உள்ள பாட்டு தூத்துக்குடிப் பக்கம் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும்
கூலிப் பெண்ணொருத்தியின் உப்புத் தாலாட்டு

உழத்தல் = to labour
ஆலுதல் = அசைதல்
காலுதல் = கத்துதல்
ஆச்சி = பாட்டி
அலக்கொடுத்தல் = துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்
நீர்க்கடவு = pump room with well.
முந்நீர் = கடல் நீர்
முதநிலத்து நீர் = தூத்துக்குடியில் நிலத்தடி நீரையே உப்பு விளைக்கப் பயன்படுத்துவார்கள். அதில் உப்புச் செறிவு (salt concentration) கடல் நீரில் உள்ள செறிவைக் காட்டிலும் கூட. இதைப் பயனாக்குவதால் தான் அங்கு உப்பு விளைப்பு ஓரளவாவது ஊதியம் உள்ளதாக இருக்கிறது.
புரைநீர் = borewell water
அளம் = உப்பு
செங்கச் செறி = right concentration
மாலுதல் = மயங்குதல்; உப்பளத்தில் கண்கூசி கண்பார்வை குறையப் பெற்றவர்கள் உண்டு.