Tuesday, October 26, 2010

காலும் காற்று

அண்மையில் வெள்ளிவீதியார் எழுதிய, பாலைத்திணையைச் சேர்ந்த, குறுந்தொகை 130 ஆம் பாட்டைப் பற்றிய, உரையாட்டொன்று தமிழ்மன்றம் மடற்குழுவில் எழுந்தது. அதில் வரும் ”கால்” என்ற சொல்லுக்கு ”உடலுறுப்பு” என்றே பல்வேறு உரையாசிரியர்கள் பொருள் கொண்டிருக்க, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் செ.வை.சண்முகம் மட்டும் ”அதைக் காற்று என்று கொண்டது சரியா?” என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இந்தப் பாட்டில் கால் என்ற சொல்லிற்குக் காற்று என்று பொருள் கொள்ளுவதே சரியென்று எனக்கும் படுகிறது.

கால்தல் என்பதற்கு இயங்குதல் என்றே சொல்லாய்வர் கு.அரசேந்திரன் பொருள் சொல்லுவார். அப்படிக் கொள்ளுவது பொருத்தமாகவே எனக்குத் தென்படுகிறது. நிலம், நீர், காற்று, தீ, வான் என்னும் ஐம்பூதங்களைச் சொல்லும் போது இயங்குதல் இயல்பே காற்றிற்குக் கற்பிக்கப் படும். இற்றை அறிவியலின் படியும், இயங்காக் காற்று, அசையா வளி என்பது முற்று முழுதான சுழிய வெம்மையிற் (absolute zero temperature) தவிர்த்து வேறெங்கும் காணமுடியாது. ”காலும் காற்று” (கால்தல் = இயங்குதல்; இயங்கும் காற்று) பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்து பாட்டின் பின்புலத்தில் இழையும் அக்கால மெய்யியற் கற்பிதம் பற்றியும் இங்கு பேச விழைகிறேன்.

கல் என்னும் வேருக்குக் கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை ஆகிய ஆறு அடிப்படையான பொருட்பாடுகளை முனைவர் கு.அரசேந்திரன் தன்னுடைய “உலகம் தழுவிய தமிழின் வேர் - கல்” என்ற பொத்தகத் தொகுதியிற் பேசுவார். அவற்றிற் செலவுப் பொருளை (=இயக்கப் பொருளை) மட்டுமே இங்கு கோடி காட்டுகிறேன். (மல்>மால், பொல்>போல் என்பது போல் கல்>கால் என்ற விரிவு அமையும்.) கூட்டக் கருத்து மிகுதிக் கருத்தையும், மிகுதிக் கருத்து செலவுக் கருத்தையும் தோற்றுவிக்கிறது என்பதை அழகாக பல்வேறு சொற்களின் மூலம் அவர் பொத்தகத்தில் விளக்குவார். கால்தல் என்ற சொல்லிற்குத் தோன்றுதல், வெளிவருதல், பாய்தல், ஓடுதல், பரவுதல், வீசுதல் என்ற பொருட்பாடுகள் உண்டு.

இயற்கையிற் பல இடங்களில் பொதுள் ஆற்றலே (potential energy) துனைவாற்றலாக மாறுகிறது. (dynamic energy. ”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 798 ஆம் நூற்பா.) பொதுளாற்றல் என்பது கூட்டப் பொருளை ஒட்டியது. ஓர் அணையில் நீர்ச் சேகரிப்புக் கூடக் கூட நீர் மட்டம் உயர்ந்து, மதகைத் திறந்துவிடும் போது நீர் வெளிவரும் கதி கூடும். (கூட்டம் -> உயரம் -> பொதுளாற்றல் கூடுதல்.) குறிப்பிட்ட இடத்துள் மந்தைகளை மேலும் அடைக்க, அவை முட்டி மோதிக்கொண்டு அடைப்பைத் திறந்தவுடன் வேகமாய் வெளிவரும். வெள்ளை மேகத்துள் நீராவி கூடக் கூடக் கருமை நிறம் கூடி, ஒரு குறிப்பிட்ட அளவில் நீர்ச்செறிவு (water concentration) தெவிட்டிப் போய் (gets saturated) நீர்த்துளிகளை வெளியிட்டு மழையாய்க் கொட்டும். மழை இயக்கமும் நீராவிக் கூட்டமும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஏதொன்றும் கூடினால் தான் கூட்டத்துள் அடங்கிய உறுப்புகளின் முரண்பாட்டால் நுண்ணியக்கம் (micromotion) ஒருப்பட்டு, பேரியக்கம் (macro motion) வெளிப்படும் என்பதை இயற்கையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் உணரலாம். இவ்வியற்கை மாற்றத்தை தொடக்க கால மாந்தனும் பல்வேறு பட்டறிவுகளால் உணர்ந்திருந்தான்.

இது தவிர கூட்டம் கூடும்போது கூட்டவுறுப்புக்கள் சும்மா இருக்க முடிவதில்லை. அவை இயங்கிக் கொண்டே இருக்கும் தேவையேற்படுகிறது. மேய்ச்சல் நிலத்தில் இரைதேடும் விலங்குகள், தம் அருகேயிருக்கும் தீவனம் கரைந்த பிறகு, மேய்வதன் தொடர்பாய் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இயக்கம் இல்லாது அவை வாழ்வதில்லை. மேய்ச்சலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நடை காலு நடை>கால்நடை என்றாகும். ஒருபக்கம் மேய்ச்சல் இன்னொரு பக்கம் காலுதல். இரு தொழில்களும் ஒன்றோடொன்று பிணைந்தவை. கால்தல் இல்லா மேய்ச்சல் கற்பனை செய்ய முடியாதவொன்று.

எப்படி மாந்தவுடம்பிற் கொள்ளும்/கொய்யும் உறுப்பு (இன்னொரு விதமாய்ச் சொன்னால் கவ்வும் உறுப்பு) ”கொள்>கொய்>கை”யாயிற்றோ (கிணற்றின் மேல் இருக்கும் உருளையைக் கொண்டிருக்கும் கை = கொண்டி என்றே சொல்லப்படும். கொள்ளுதல் = to have) அது போல காலுதற்கு உதவும் உறுப்பு கால் ஆயிற்று. வண்டிகளில் இயங்கும் சக்கரமும் கூட தொழிலொப்புமை கருதிக் கால் என்றே தமிழிற் சொல்லப் படும். காலும் தடம் காற்றடம் ஆயிற்று. காலுகின்ற (=ஓடுகின்ற) நீரை உடைய இயற்கை வாய் கால்வாய் ஆயிற்று. அதே ஓட்டத்தைச் செயற்கையாய் அமைக்கும் போது அது வாய்க்கால் ஆயிற்று.

காலிக் கொண்டே இருக்கும் காரணத்தால், இயங்கும் வளியும் கால்+து = காற்று எனப்பட்டது. காலுகின்ற காற்றால் பேரோசைகள் ஏற்பட்டன. காற்றுவளியின் கதிக்குத் (velocity) தக்க பேர்விசைகள் உருவாகின. இதே காலை gale, gal, என்று மேலை இரோப்பிய மொழிகள் சொல்லும். வழக்குத் தமிழில் இன்று சூறைக் காற்று, சூறாவளி என்று சொல்லுவோம். சூறை என்பது மிகுபடச் சொல்லும் ஒரு முன்னொட்டு..

நாற்பரிமானக் காலவெளியில் (four dimention space-time) மூன்று பரிமானங்கள் இடத்தைக் குறிக்க, நாலாவது பரிமானம் காலத்தைக் குறிக்கும். இந்தப் பரிமானத்திற்கு மட்டும் தொடக்கம் என்று நிலையை இற்றை அறிவியல் காட்டும். பருவம் என்பதைக் குறிக்கும் இந்தக் காலமும் கூட கால்தல் பொருளில் உருவான சொல் தான். காலப் பெருவெளியைக் குறிக்கத் தொல்காப்பியத்தில் இரண்டு நூற்பாக்கள் உண்டு. ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் அந்த நூற்பாக்களின் வரையறுப்பு நம்மை வியக்கவைக்கும்.

”ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப”

என்று “கருமம் நிகழ்வது ஒரு களத்தில் (you need a place for an occurrence to happen).” என்று தெளிவாக வரையறுக்கும். [தொல்.செய்யுளியல் 1457 ஆம் நூற்பா.] இடமும் களமும் ஒன்றுதானே? அடுத்த நூற்பாவில் (செய்யுளியல் 1458)

“இறப்பே நிகழ்வே எதிரது என்னுந்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளபே
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்”

காலம் என்ற கருத்தீட்டை வரையறுப்பார். (occurrence of an event is proscribed by time.) இங்கு கூறிய இரண்டு நூற்பாவும் இற்றைப் பூதியலில் (physics), குறிப்பாகக் காயவியலில் (cosmology) கால-வெளி (space - time) என்று கூறும் கருத்தீட்டை விளக்குவதற்கு மிகவும் பயன்படக் கூடியவையாகும். இயக்கமின்றேல் காலத்தை யாராலும் உணரமுடியாது. ஓர் இயக்கத்தை இன்னோர் இயக்கத்தின் மூலம்தான் ஒப்பிட்டு ”இது விரைவு, இது சுணக்கம்” என்று சொல்ல முடியும். அடிப்படையில் விரைவான துடிப்பைக் கால அளவாய்க் கொண்டு, அதன் மடங்காகவே மற்ற இயக்கங்களை (இது நடந்து முடிப்பதற்குள் இத்தனை அடிப்படைத் துடிப்புகள் நடந்துவிட்டன) இற்றை அறிவியல் காலத்தை அளக்கிறது. நுண்ணிதாகச் சிந்தித்தால் கால்தல் என்ற இயக்க வினை காலம் என்னும் சொல்லுக்குள் ஆழ்ந்து புதைந்திருப்பதை உணரமுடியும். காலம், காலை, கால் என்ற சொற்கள் எல்லாமே time என்ற கருத்தீட்டைத் தமிழில் உணர்த்தி நிற்கின்றன.

இனிக் காற்று என்ற பொருளை மட்டும் ஆழ்ந்து பார்ப்போம். நீரைக் கடப்பதற்கு வெறும் துடுப்பு உதவியையும் நீரோட்டத்தையும் மட்டுமே மாந்தன் பயன்படுத்துவதில்லை. அவையெல்லாம் குறைந்த தொலைவைக் கடக்கவே பயன்படுகின்றன. நீண்ட தொலைவைக் கடப்பதற்குப் படகிற் பாய்மரங்கள் நட்டு அவற்றில் பாய்களைக் கட்டிக் காற்றுவிசை மூலம் கலஞ்செலுத்தும் நுட்பம் எப்பொழுது கண்டுணரப் பட்டது என்பது ஓர் ஆழ்ந்த ஆய்வாகும். அந்த நுட்பியல் சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் அறிந்திருக்க வேண்டும். இப்பாட்டில் அந்த நுட்பம் இரண்டாம் வரியால் உய்த்துணரப் படுகிறது. முந்நீரில் யாரும் கால் என்று உடலுறுப்புக் கொண்டு நடப்பதில்லை. ஒருவேளை மீமாந்தத் தந்திரம் அறிந்தோர் அதைச் செய்யமுடியலாம். பொதுவான மாந்தர் கால் என்னும் காற்றைக் கொண்டு கலஞ் செலுத்தியே முற்காலத்திற் கடந்திருக்கிறோம். முந்நீரைக் கடத்தல் என்றாலே இந்த நுட்பம் பயன்பட்டதாகத்தான் அன்று பொருள். இற்றை நாளில் கால்நுட்பம் இல்லாது பொறி நுட்பம் கொண்டு, நீருக்குள் ஓட்டத்தைக் கிளப்பிக் கலத்தை முன்செலுத்த வைக்கும் நுட்பம் வந்துவிட்டது. அதனால் நாம் கால்நுட்பத்தின் நெளிவு சுளிவுகளை, அதன் வீச்சை உணராது போகிறோம். கால்நுட்பத்தின் வழியும், கடலில் இருக்கும் இயற்கை நீரோட்டத்தின் வழியும் உலகையே பழம் மாந்தன் வலம் வந்திருக்கிறான். அதை இற்றை நாளில் நடத்திக் காட்டி (demonstrate) பல முன்னோட்டாளர்களும் நம்மை உணரவைக்கிறார்கள்.

சரி, கால் என்ற சொல் இயக்கம் என்ற பொருளில் மட்டும் தான் வந்ததா? - என்றால் இல்லையென்று சொல்லவேண்டும். இதே வெள்ளி வீதியார் குறுந்தொகை 44 இல் உடலுறுப்பு என்ற பொருளில் கால் என்னும் சொல்லைப் பயன்படுத்துவார். அந்தப் பாட்டு செவிலித்தாய் பாடுவதாய் அமையும். தலைவனோடு, தலைவி உடன்போக்காய்ச் சென்று விட்டாள். இருவரும் எங்கு சென்றார்கள் என்று செவிலித் தாய்க்குத் தெரியவில்லை. வருவோர் போவோரிடம் கேட்டுப் கேட்டுப் பார்க்கிறாள். அலைந்து திரிகிறாள். கால்களின் இயக்கம் தொலைந்து மரத்துப் போகின்றன. (பரி = இயக்கம்) கண்கள் ஒளி குன்றி பூத்துப் போகின்றன. பெரிய இருள் வானில் தெரியும் மீன்களைக் காட்டிலும் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று; தன் மகளையும் அவள் கொழுநனையும் மட்டும் எங்கும் காணவில்லை. சோர்ந்து போகிறாள் செவிலித்தாய்:

காலே பரி தப்பினவே கண்ணே
நோக்கி நொக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே

ஆனால் குறுந்தொகை 130 ஆம் பாடலில் வரும் கால் உடலுறுப்பு என்ற பொருளில் வரவில்லை. செலவு/இயக்கம் என்ற பொருளிலேயே வந்திருக்கிறது. இதே போல இன்னும் இருபாடல்கள் அதே குறுந்தொகையில் கால் என்ற சொல்லாட்சியைச் செலவு/இயக்கம் என்ற பொருளிற் காட்டும்.

இன்றே சென்று வருதும் நாளைக்
குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின் மாலை எய்தி,
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பல்மாண் ஆகம் மணந்து உவக்குவமே

-குறுந்.189 மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

பரல் அவற் படுநீர் மாந்தித் துணையொடு
இரலை நல்மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அலவைக், கால் இயல்
கடுமாக் கடவுமதி பாக! நெடுநீர்ப்
பொருகயல் முரணிய உண்கண
தெரிதீம் கிளவி தெருமரல் உயவே

- குறுந்.250 நாமலார் மகன் இளங்கண்ணனார்

இனிப் பாட்டினுள் அடங்கியிருக்கும் மெய்யியற் கற்பிதம் பற்றிப் பார்ப்பொம். முதலிற் பாட்டின் சூழலைச் சற்று ஆழமாய்ப் பார்ப்போம். ”வணிகத்தின் மேற்சென்ற தலைவன் எங்கு போயிருக்கிறான்?” என்று தலைவிக்கும் தோழிக்கும் தெரியாத நிலையில், ”அவன் திரும்பி வாரானோ, என்னவாயிற்றோ?” என்று அலமருந்து, பிரிவாற்றாமை மேம்படத் தலைவி புலம்புகிறாள். அவள்துயரைப் பொறாத தோழி, ஆற்றுவிக்கும் முகமாய்,என்ற இப்பாட்டைச் சொல்லுகிறாள்:

நிலம் தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ நம் காதலோரே

”ஏனடி, கவலைப் படுகிறாய்? நம் காதலர் நம் நாட்டில் இல்லையென்றால், நாவலந் தீவினுள் வேறெதோவொரு நாட்டில், ஊரில், குடியில் தான் இருக்க வேண்டும். நாடு நாடாய், ஊரூராய், குடி குடியாய்த் தேடின் அவர் தென்படாமலா போவார்? காற்றுவழி செல்லும் பாய்மரக் கப்பலில் ஏறி விலகிக் கிடக்கும் இரு பெருங்கடலிலும் ஏதேனும் ஒரு தீவுக்கு அவர் சென்றவரில்லையே? வானுலகும் போயிருக்க மாட்டாரே?. புவிக்கடியில் உள்ள பா(ள்)தல உலகத்திற்கும் சென்றிருக்க மாட்டாரே?” என்று அன்றைக்கிருந்த இயல்பான மெய்யியற் புரிதலோடு (philosophical understanding) தோழி இயம்புகிறாள்.

[பாளப்பட்ட தலம் பா(ள்)தலம். பா(ள்)தலம்>பாதலம்>பாதளம்>பாதாளம் என்பது நல்ல தமிழ்ச்சொல் தான். இங்கே நிலம் தொட்டுப் புகுதல் என்பதால் பாதலம் குறிக்கப் படுகிறது. தொடுதல் = பள்ளுதல், பாளுதல், பறித்தல், தோண்டுதல். இது ஏதோ ஒரு வடமொழிச்சொல் என்று நம்மிற் பலரும் நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் வடமொழியில் இதற்குச் சரியான வேரில்லை. இந்தச் சொல் முதன்முதலாய் மிகப் பிற்கால உவநிடதமான அருணேய உவநிடதத்திலும், மாபாரதத்திலும் தான் ஆளப்படுகிறதாம். அதோடு பாத = விழுதல் என்ற சொல்லே மூலமாக மோனியர் வில்லியம்சில் குறிக்கப் படுகிறது.

”நம் தலைவர் மூவேந்தர் அரசுகளைத் தவிர்த்து நாவலந்தீவினுள் தான் சென்றிருப்பார். எத்தனையோ வணிகக் குழுக்கள் இப்பாதைகளில் சென்று வருகின்றனவே? அக்குழுக்களின் மூலம் நம் காதலர் எங்கு போயிருக்கிறார் என்று உறுதியாக நாம் அடையாளம் காணலாம்” என்று அவள் காலத்துப் புரிதலை முன்வைத்துத் தோழி தலைவியை ஆற்றுப் படுத்துகிறாள். அப்படிச் சொல்லும்போது அந்தக் காலத் தமிழரின் உலகப் பார்வையும் (world view) நம்முன் அவிழ்ந்து விழுகிறது. பாட்டெழுந்த காலத்தையும் ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறது. அன்றைய மூவேந்தர் அரசுகளை விட்டு ஒருவன் வெளியே போவதாய் இருந்தால், அடுத்தடுத்த கடினப் பாங்குடன், நாவலந்தீவில் உள்ள மற்ற நாடுகள், கடற் பயணத்தின் வழி செல்லக் கூடிய தீவுகள், வானம், பாதலம் என்ற வரிசையிற் தான் பயணம் செய்ய முடியும். இப்படி அறுதியாக உரைப்பது ஒருவித மெய்யியற் பார்வையைச் சார்ந்தமட்டும்து. இந்தப் படிமானத்தைப் பாட்டின் முதல் நாலு வரிகள் கடினமான உகப்பில் (choice) இருந்து எளிதான உகப்பு வரை சொல்லுவதாய் தோழி அடுக்குகிறாள்.

இத்தகைய உலகப் பார்வை காட்டுவிலங்காண்டி காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் இல்லை. பாதலம் என்ற மெய்யியற் கட்டுமானம் சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் இருந்ததா என்று உறுதியாகச் சொல்ல நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடையா. இருக்கு வேதத்தில் (கி.மு.1500) கூடப் பாதலம் என்று கருத்தியல் இருந்ததா (வான உலகம் என்ற கருத்தியல் அந்தக் காலத்தில் இருந்தது.) என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (திரிபுரங்கள், மூவுலகங்கள் என்ற சிந்தனை இதைக் குறித்ததோ என்ற ஐயம் உண்டு.) வேத நெறியை மறுத்து எழுந்த சாருவாகம் / உலகாய்தம், தொடக்க காலச் சாங்கியம் போன்றவை (கி.மு.800-600) மூவுலகக் கருத்தியலை முற்றும் ஏற்காதவை கண்ணுக்குத் தெரியும் காட்சியுலகை மட்டுமே உண்மை என்று அவை விளம்பின. ஆனால் அதே காலத்திலும் அவற்றிற்குச் சற்று முன்னும் (கி.மு.800களில்) எழுந்த உவநிடதச் சிந்தனைகளிலும் கி.மு.600 களில் எழுந்த வேத மறுப்பு இயக்கங்களான சமண நெறிகளிலும் (ஆசீவகம், செயினம், புத்தம்) ”நாம் வாழும் நிலம், நமக்கு மேலே உள்ளதாகக் கொள்ளப்பட்ட வானுலகம், நமக்குக் கீழுள்ளதாகக் கொள்ளப் பட்ட
பாதல உலகம்” என்ற மெய்யியற் கருத்தீடு தோன்றிவிட்டது. இந்தக் கருத்தீடு தோன்றியது தென்னகமா, வடபுலமா என்பது கேள்விக்குரியது.

பூருவ நுண்ணாய்ஞ்சையைப் (பூர்வ மீமாஞ்சையைப்) புறந்தள்ளி உயர் நுண்ணாய்ஞ்சையைத் (உத்திர மீமாஞ்சை) தன் கொள்கையாக வேதநெறியினர் கொண்டது கி.மு.800-600 காலமாகும், வேத மறுப்பாளர் வேத நெறியாளரோடு மூவுலக இருப்பில் ஒன்றுபட்டாலும் அவற்றின் ஆக்கத்தில் வேறுபட்டிருந்தார்கள். ”இந்த மூவுலகங்களையும் மாந்தனுக்கு மேம்பட்ட யாரோவொரு
இறைவன்தான் படைத்தான்” என்பது உயர் நுண்ணாய்ஞ்சை நெறியின் துணிபு. “இம்மூவுலகங்களும் என்றும் இருந்தன/இருக்கின்றன/இருக்கும். இவற்றை யாரும் படைக்கவில்லை” என்பது சமண நெறிகளின் கூற்று. ஆக முதற் கணிப்பாக இந்தப் பாடல் கி.மு.600 க்கு அப்புறம் எழுந்தது என்று சொல்ல முடியும்.

இனி நாவலந்தீவில் இருந்த வணிகக் குழுக்கள் எளிதாகப் போய்வர உறுதுணையாக இருந்த உத்திர, தக்கணப் பாதைகள் பெரிதும் பயன்பட்டிருந்த காலம் நந்தர், மோரியர் காலமாகும். சங்கத் தமிழிலக்கியங்களிலும் வரலாற்றுக் கால முதல் நிகழ்வாகப் பேசப்பட்டது முதலாம் கரிகாலனின் படையெடுப்பே. அது கி.மு.462 க்கு அருகில் நடந்திருக்க வேண்டும் என்று “சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரைத் தொடரில் நிறுவியிருந்தேன். அதற்கு அப்புறந்தான் நந்தர் காலத்தில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே வணிக உறவு பெரிதும் செழித்தது. நம் இலக்கியங்கள் அதற்கு அப்புறமே வடபுலத்துச் செல்வ நிலை பற்றிப் பேசுகின்றன. சங்க இலக்கியத்திற் பாதிப் பாட்டுக்கள் பாலைத்திணைப் பாட்டுக்கள். அதிலும் பல பாட்டுக்கள் வடக்கே வணிகம் நோக்கிப் பிரிந்து போன பாட்டுடைத் தலைவர்கள் பற்றிப் பேசுகின்றன. இங்கு வெள்ளி வீதியாரின் தோழியும் அது பற்றிப் பேசுகிறாள். சங்க காலம் என்பது கி.மு.462க்கு அண்மையிற் தொடங்கி கி.பி.200 வரைக்கும் தொடர்ந்தது போலும். இந்த 650 ஆண்டு காலத்தில் எப்பொழுது இந்தப் பாடல் எழுந்தது என்று உறுதியாகச் சொல்ல இயலாது.அதற்கான தரவுகள் பாடலில் இல்லை. அதே பொழுது கிடத்திருக்கும் தரவுகள் மிக எளிதாக இந்த 650 ஆண்டு காலக் கட்டத்துள் பொருந்துகின்றன.

ஐம்பூதங்களை தம் உலகப் பார்வையுள் கொண்டுவருவது சங்கத் தமிழ் இலக்கியத்தில் பெரிதும் நடப்பதாகும். ஐம்பூதப் பார்வை ஒரு சாங்கியப் பார்வை. பின்னால் ஆசீவகத்திலும் அது பெரிதும் தழைத்தது இங்கும், நிலம், வானம், முந்நீர் என்பவை பேசப்படுகின்றன. இதே போன்ற பார்வை தேவகுலத்தார் பாடிய குறுந்தொகை 2 ஆம் பாட்டில் வரும்.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

நாடனுடைய நட்பு நிலத்தினும் பெரிது, வானிலும் உயர்ந்தது, மூந்நீரினும் ஆழமானது. சமண நெறிகளின் தாக்கம் தமிழகத்திற் பெரிதும் இருந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 05, 2010

மோசி கீரனார் - 3

மோசி என்ற சொல் வடபுல மொழிகளிற் தோல்வினைஞரைக் குறிப்பதாகக் கேள்விப்படுவதால், அப்படியொரு பொருட்தொடர்பு ஒரு காலத்தில் தமிழில் இருந்திருக்கக் கூடுமோ என்று ஐயுற்ற காரணத்தால் இக் கட்டுரைத் தொடர் எழுந்தது. தோல்சார்ந்த சொற்கள் தமிழிலெழும் முறையையும், மோசி என்ற பெயர்ச்சொல் தோலைக் குறித்து எப்படி இயல்பாக எழலாம் என்பதையும் இனிப் பார்ப்போம். .

தமிழில் சுட்டடிப் பிறந்த சொற்கள் 75% - ற்கும் மேலே தேறலாமென்று பாவாணர் சொல்வார். அவர் கூற்றின்படி, ஆகாரச்சுட்டு சேய்மைச் சுட்டு ஆகவும், ஈகாரச் சுட்டு அண்மைச் சுட்டாகவும், ஊகாரச் சுட்டு முன்மைச் சுட்டாகவும் தொடக்க காலத்திற் பயன்பட்டன. நாளாவட்டத்தில் ஊகாரச் சுட்டின் முன்மைக் கருத்தினின்று, தோன்றல் கருத்தும், அதனின்று முற்படற் கருத்தும், அதனின்று முற்செலவுக் கருத்தும் பிறக்கும். முற்செலவில் இருந்து நெருங்கலும், நெருங்கலிலிருந்து தொடுதலும், தொடுதலிலிருந்து கூடற் கருத்தும் பிறக்கும். இங்கு நெருங்கல் கருத்தும், (அதனோடு தொடர்புள்ள பொருந்தற் கருத்தும், பற்றற் கருத்தும்) கூடவே தொடுதல் கருத்துமான சொற்களைப் பார்ப்போம்.

ஊ> உ> உல் (செ.கு.வி) = நெருங்கல் to go near, to appoach; தொடுதல் to touch. எல்லா நிலத்திணைகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் முதற்புலன் ஊறு என்னும் தொடுவுணர்வே ஆகும். (உல்> உல்+தல்> உற்றல்> உற்றறிதல் = தொட்டறிதல் to feel by touch, to make observation by the sense of touch ”ஒன்றறிவதுவே உற்றறிவதுவே” - தொல்.பொருள் 582. உற்றறிதல் என்பது தொட்டறிதலாகும். உறுதலெனும் வினைச்சொல்லிலிருந்து ஊறு எனும் பெயர்ச்சொல் எழும், “பருந்தூறு அளப்ப” பதிற்றுப் 51.32; ”சுவையொளி யூறோசை” - குறள் 27)

ஊறு என்பதை நெருங்கலின் தொடர்ச்சியாய், உடல் மூடிய தோலால், உணர்கிறோம். ஊறுக்கு அடுத்த புலன் சுவையாகும். ஊறு, சுவை என்ற 2 புலன்கள் கொண்டவை விலங்குகளில் முதல்வகையாகும். (இரண்டறிவதுவே அதனொடு நாவே - தொல்.1526.) படிப்படியாக நாற்றம், ஒளி, ஓசை என்ற புலனறிவுகளை உயர்விலங்குகளுக்கு உரியதாக்குவர். முடிவில் ஆறறிவு விலங்கு மாந்தனாகும். (ஆறறிவதுவே அவற்றொடு மனனே - தொல்.1526.) இப்படி ஆறறிவை வரிசைப்படுத்தி முதலிற் சொல்லியவை வேதமறுப்பு நெறிகளேயாகும்.

உல்(லு)தல் வினை ஊறெனும் அறிவிற்கு மட்டுமன்றி வேறு வினை/பெயர்ச் சொற்களுக்கும் காரணமாயுள்ளது. பல்வேறு விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிட்ட மாந்தர், எலும்போடு பொருந்தியதாலேயே, நிணம், தசை போன்றவற்றை ஊனென அழைத்தார். உல்> ஊல்> ஊன் = பொருந்தியது, பற்றியது. காட்டு விலங்காண்டி நிலையிருந்து நாகரிகம் உருவான போது, உற்றலிலிருந்து மேலும் பல சொற்கள் பிறந்தன. உற்று> உற்றார் = நெருங்கியவர் relatives; உற்று> உறுதல் = தொடுதல் to perceive by touch; உற்றுதல்> ஒற்றுதல் to bring in contact, “பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர” என்பது கலித் 83.2 இல் வரும் சொல்லாட்சி.

றகர ஒலி, பேச்சு வழக்கில் டகரமாயும், தகரமாயும் திரியும். தமிழி எழுத்தில் றகரத்தின் வடிவுகூட டகரம், தகரம் ஆகியவற்றின் பிணைப்பாகவே, (இத் திரிவை விளக்குவது போலவே), எழுதப் பெறும். ஆற்றுதல் என்பது ஆட்டுதல் என்றும், ஆத்துதலென்றும் பேச்சுவழக்கிற் பலுக்கப்படும். அதே முறையில் ஒற்றுதல்>ஒட்டுதல் to slick என்றசொல் பிறக்கும். உடன், ஒடு, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமையுருபுகள் கூட ஒட்டுப்பொருளிற் பிறந்தவையே. உறு> உடு> உடன் = together; உடு> ஒடு> ஓடு = together. இன்னும் ஒரு வளர்ச்சியில் ஆமை முதுகிலும், ஒருசில முட்டைகளின் மேலும், பாதுகாப்பாய் அமைவதை ஓடு என்கிறோம். அதாவது ஒட்டியிருப்பது ஓடு, as of a tortoise, of an egg. ஒரு சில பழங்கள், விதைகளின் கனமான தோல் கூட ஓடு எனப் படும். hard outer covering, as of a nut (புளியம்பழ ஓடு, நிலக்கடலை ஓடு..... இப்படிப் பல)

அவரையின் மேல் தொலி உறு> உறை, sheath of the beans, என்றழைக்கப் படும். உறைதல் வினைக்கு இறுகுதல் பொருளும் கூட உண்டு, to get firm, to get a skin, to curdle, to freeze. பாலைத் தயிராய் மாற்றுவதை உறைய வைப்பது என்று நாட்டுப்புறங்களிற் சொல்வார். உறுதலின் இன்னொரு வளர்ச்சியாய் ஊன்றுதலெனும் பிறவினைச்சொல் பிறந்து ”பற்றுதல், நிலைகொள்ளுதல்” என்ற பொருட்பாடுகளைக் காட்டும்.

ஒட்டியிருப்பது அட்டியிருப்பது என்றும் திரியும். அட்டுதல் = நெருங்குதல். அட்டுதலின் இன்னொரு பலுக்கற் திரிவாய் அண்டுதல், அண்ணுதல் என்ற சொற்களை அறிவோமில்லையா? அட்டு> அத்து> அது> அதள் = தோல் என்ற வளர்ச்சியும் ஒட்டியதைச் சுட்டி வந்ததே. புறம் 193 இல் அதள் எனும் சொல்லாட்சி உண்டு. [தோலைக் குறிக்கும் க்ருத்தி என்ற சொல்  இரு(மொழி) பிறப்பியாகும். தமிழில் கதுவியிருத்தல் (= பற்றுதல்) என்ற சொல்லுண்டு. கதுவியின் உறவான கத்தி வடபால் வழக்கில் க்ருத்தி ஆகும். தோலைக் குறிக்கும் கேடகம், கேடயம், கிடுகு போன்ற சொற்கள் ஒருவேளை கிட்ட இருத்தலோடு தொடர்புடையனவோ என்ற எண்ணம் எனக்குண்டு.]

உல் போலவே, துல் என்பதும் நெருங்குதல் கருத்து வேராகும். இதுவும் ஒட்டுதல், பற்றுதல் என்ற பொருட்பாடுகளைக் காட்டும். துல்+து = துற்று> துற்றல் = நெருங்கல் to come near, to advance closely, to lie close ”மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற” தேவா. 83.1 “காளை சீறிற் துற்று இவனுளனோ என்பார்” சீவக. 1110. துல்+ந்+து = துன்று> துன்றுதல் = நெருங்குதல் to be close, thick, crowded together “துன்றுக்கு நறுங்குஞ்சி” கம்பரா. குகப் 28, பொருத்துதல் to get attached; to lie “கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர்” திருவாச. 17:10. துன்று>துன்றுநர், friends, as being near. துல்+ந்+நு = துன்னு> துன்னுதல் = தைத்தல் to sew, to stitch, நெருங்குகை to be close together “யாவரும் துன்னல் போகிய துணிவினோன் என” புறநா.23,14 பொருந்துதல், to be fitted, joined, attached, செறிதல் to be thick, crowded, to press close “துன்னிக் குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரமெல்லாம்” நாலடி 167, அணுகுதல் to approach, approximate, adhere to ”யாவரும் துன்னல் போகிய துணிவினோன்” புறநா.23. துன்னியார் = நண்பர் friends, relations, adherents. துற்று> துறு> துறுதல் = நெருங்குதல் to approach; துறு> துறை = நெருங்கும் இடம் place of approach

அடுத்து, உகரத் தொடக்கம் பேச்சுவழக்கில் ஒகரத் தொடக்கமாவது தமிழின் இயல்பான வழக்கமே. அந்த முறையில் துகரம் தொகரமாகலாம். துற்று> தொற்று (தொல்+து)> தொற்றுதல் = தொடுத்தல் “அதன் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி” - ஈடு. 3,1, 10. முன்னே சொன்னது போல் றகரம் இடையில் வருஞ் சொற்கள் டகரமாகவும், தகரமாகவும் பேச்சு வழக்கிற் பலுக்கப் படுவது உண்டு. தொற்று> தொட்டு> தொடு> தோடு = ஓடு. தொற்றுநோய் என்பது ஒட்டுவாரொட்டி நோய் தானே? அதைப் பேச்சு வழக்கில் தொத்துநோய் என்கிறோமில்லையா?

தொற்றின் அடிவேராகத் தொல் எனுஞ் சொல் அமையும். தொல்லுதல் = அருகுதல், ஒட்டுதல், பற்றுதல். பழங்களை மூடியிருக்கும் மெலிந்த தோலைத் தொலி என்பார்கள். இதேபோலத் தொல்> தோல் என்பதும் அமையும். ஆகத் தொல்லிக் கிடப்பது தோல். என்பு, நிணம், தசை, ஊன் ஆகியவற்றிற்கு அடுத்து நெருங்கியது, பற்றியது என்ற வகையிற் தோல் என்னும் சொல் அமைகிறது. புறம் 164 இல் பாலில்லாத முலையின் தோல் சுருங்கி அதன் துளையும் தூர்ந்து போன காட்சி ”பாஅல் இன்மையிற் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை” என்று வண்ணிக்கப்படும். நெருங்கியது, ஒட்டியது, பற்றியது என்ற பொருட்பாடுகளுக்கு அடுத்து தோலோடு பொருந்தியதாய் மூடியது, உலர்ந்தது என்ற பொருட்பாடுகள் வந்து சேரும். மூடியது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் உலர்ந்தது என்பதைப் பார்ப்போம். [நெருங்கியது, ஒட்டியது, பற்றியது, மூடியது, உலர்ந்தது என்ற பொருட்பாடுகளைக் குறிக்காத தோற்சொல்லே தமிழில் நானறிந்தவரை இல்லை. எந்தவொரு சொல்லையும் இப்பொருட்பாடுகளைக் கொண்டு உரசிப் பார்த்தால் ”தோலுக்குத் தொடர்புண்டா?” என்று தெரிந்துவிடும்.]

தோலோடு தொடர்புடைய மற்ற தமிழிய மொழிகளிலும் பரவலாய் இருக்கும் சொற்களை Dravidian Etymological Dictionary இல் பார்க்கலாம்.

3559 Ta. tōl skin, hide; toli (-pp-, -tt-) to strip off (bark), flay, husk, hull; n. skin, rind, husk; tokku skin, bark, rind. Ma. tōl skin, hide; tolikka to skin, peel; toli skin, bark, peel, rind; tukal skin as of fruit; tokku skin. Ko. to·l skin, hide; to·krl small peg used in pegging down hide to dry (to·l + karl [see 1389]). To. tw&idieresisside;s̱ skin, hide. Ka. tōl(u), togal, toval id., leather, skin of fruit. Koḍ. to·l skin, hide; toli- (tolip-, tolic-) to peel, hatch; (Shanmugam) tolip peeling. Tu. tugalů, tolike skin, bark, rind. Kor. (M.) tōru skin. Te. tokka skin, bark, rind; tōlu skin, hide, leather. Kol. (Kin., Haig, Hislop) tōl skin, hide. Nk. tōl skin. Nk. (Ch.) tōl id. Pa. tōl skin, bark. Ga. (Oll.) tōl id.; (S.) tōl skin; tokkā rind of fruit; (S.2) tokka bark. Go. (Tr. A. Y. Mu. W. Ph.) tōl skin, hide; (D. G. M.) tōla skin, bark of tree; (S.) tōl(u) (pl. tōlku), (Ko.) tolka id., skin of fruit (Voc. 1828); (Koya Su.) tōlu skin. Konḍa (BB) tōl, (K.) tōlu skin (of animals); (K.) toko bark, rind. Pe. tōl skin. Kui ṭōḍu (pl. ṭōṭka) buffalo hide (from which bellows or shields are made). Kuwi (F.) tōlū, (S.) tōlu, (Su. P. Isr.) tōlu (pl. tōlka) skin, hide. Cf. 3544 Ta. tōṭu. DED(S) 2937.

நம் உடம்பில் புண் (புள்ளப்பட்டது, குழியானது, புண்) ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். புண்ணிலிருந்து சீழும் அரத்தமும் நீர்மமாய்க் கசியுந் தானே? கசிவைத் துடைத்து மருந்திட, மருந்திடக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரியாகிறதல்லவா? அதைத் தமிழில் எப்படிச் சொல்கிறோம்? புண் காய்ந்து வருகிறது என்கிறோம். அரத்த வேதிப்பொருள் படிகமாகிக் கட்டப்படும் புரத வலை, புண்ணின் வாயை மூடுகிறது; சீழும், அரத்தமுமான நீர்மக் கசிவு குறைகிறது. கொஞ்சங்கொஞ்சமாய் வலையின்கீழ் புதுத்தோல் உருவாகி நீர்மம் முற்றிலும் நின்றுபோய் உலர்ந்து விடுகிறது. நாமும் புண் காய்ந்தது என்கிறோம். காய்கிறதென்ற வினையை வைத்துப் புண்ணுக்குக் காயம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கி விடுகிறோம். தோல் போர்த்திய முழு உடம்பிற்கே கூடக் காயம் என்ற பெயருண்டு.

உலர்தற் பொருள் ஊ எனும் வேரில் தொடங்குகிறது. ஊ> உ> உல் செ.கு.வி = உள்ளொடுங்குதல் to become lean, emaciate, காய்தல் to dry; உல்> உல>  உலல்> உலர்> உலர்தல் = காய்தல் to become dry, to wither, to be parched up தோலோடு, உலர்தல் வினையைச் சேர்த்தே ஆதி மாந்தன் உணர்ந்திருக்க வேண்டும். தோல் காய்ந்தது, உலர்ந்தது. இதே போல, உல் எனும் வேரில் இருந்து உல்> ஒல்> ஒலியல் = உலர்ந்து போனது, தோல், காய்ந்த தழை என்ற சொல்லும் தழைக்கும். உலர்ந்த தோல் எளிதாக உரிக்க வரும். உல்லின் நீட்சியே உரி. உல்> உர்> உரு> உரி = தோல்.

இதேபோலத் துல் எனும் வேருக்கும் உலர்தற் பொருள் இருந்திருக்கவேண்டும். *துல்லுதல்> *(துல்வுதல்)> *(துவ்வுதல்)> துவல்> துவர் = உலர்நிலை. இப் பெயரிலிருந்து மீண்டுமொரு வினைச்சொல் பிறக்கும். துவல்> துவர்> துவர்த்தல் = உலர்த்துதல்; துவல்> துவள்> துவட்டுதல் = உலர்த்துதல்; துவர்> துவர்க்கு> துவக்கு = தோல்; துவக்கு> தோக்கு> தொக்கு. இனி, துவத்தி> துத்தி> துருத்தி என்பதும் கூட இருபிறப்பிச் சொல் தான். வடமொழிப் பழக்கமான ரகர நுழைப்பு இங்கு ஏற்பட்டுள்ளது.

உல், துல் எனும் வேர்களைப் போலவே, சுல் எனும் வேரும் உலர்தல் பொருளில் சில சொற்களை உருவாக்குகிறது. சுல்> சுர்> சுரு> சுரித்தல் = வற்றுதல், காய்தல், சுருங்குதல். நீர் வற்றியதை நீர் சுருங்கியது என்கிறோம் அல்லவா? இனிச் சுருதல் வினை, சருதலென்றும் திரிந்து உலர்தலைக் குறிக்கும். சரு> சருகு  வளர்ச்சியில் காய்ந்த இலைகளைக் குறிக்கிறோம். ஆனால் இலை மட்டுமா காய்கிறது? பழங்கள், பருப்புகளும் மற்றவையும்  சுரு(ங்)கிக் காய்கின்றன. சுருங்கலும், உலர்தலும், வற்றலும் ஒன்றிற்கொன்று தொடர்பு உள்ளவை. காய்ந்த கறிவாடு (> கருவாடு) வற்றிப் போனதே. [எல்லாக் காலமும் விலங்கின் ஊன் மாந்தனுக்குக் கிடைத்து விடுகிறதா, என்ன? கறிவாட்டுக் குழம்பு சாப்பிடாத நாட்டுப்புறத்தார் மிகக்குறைவு.] வறண்டு போன அரிசிக்குழை வற்றலாகிறது (அரிசி வற்றல்.) உலரவைத்த தசைகள் வறள்> வறள்கம்>  வறகம்> வடகம் என்றானது. இன்று இதன் பொருள் விரிந்து வெங்காய வற்றல்கூட வடகம் எனப்படுகிறது. உலர வைத்த தோலும் வடகம் என்று ஒரு காலத்திற் சொல்லப்பட்டது.

வற்றிப் போனவை நெடுங்காலம் வைத்திருந்தாலும் கெடாது. இன்னுஞ் சில பொருட்கள் மீன்கள், பல்வேறு தசைகள் போன்றவை உப்போடு சேர்த்து உணக்கிப் போட்டுவைத்தால் கெடாது இருக்கும். இப்படிச் சுருங்கிப் போன இயல்பொருட்களைப் பண்டமாற்றிற் பரிமாறிக் கொண்டிருந்ததால் அவை சுருகு> சருகு> சருக்கு> சரக்கு என்றாயின. இன்றோ விலைக்கு விற்கும் எல்லா goods -களுமே சரக்குகள் எனப்படுகின்றன. பல்வேறு சரக்குகளை, வறைகளை (wares) வாங்கும் நமக்கு உலர்தல் வினை நினைவுக்கு வருமோ? .வறண்டுபோன பொருள்களை வைக்கும் கூடத்தை வறைக் கூடம் (ware house) என்கிறோம்.

சுருங்கி உலர்ந்துபோன தோல் சுரு> சரு> சருமம் = உலர்ந்த தோல் என்ற பொருளைக் குறிக்கும். உலர்தோலைக் கொண்டு செய்த மிதியடி சுரு> சரு> செரு> செருப்பு என்றாயிற்று. *செருவைக் கொண்டு தோல் வேலை செய்தோர் செரு> செருமார்> செம்மார் ஆனார். வடபுலத்தில் அவர் செம்மார்> சாமார் ஆவார். செரு எனும் சொல்லடியோடு சேரும் ‘ப்பும் க்கும்’ வெவ்வேறு ஈறுகள் அவ்வளவு தான். செருப்பு தமிழானால், சருக்கும் தமிழியச் சொல்லே. சுரு> சரு> சருக்கு> சருக்கிலி> சக்கிலி என்பது மற்ற தமிழிய மொழிகளிற் பழகி, நமக்கு நாயக்கர் ஆட்சியால் பெரிதும் பரவிய சொல்லாகும்.

தென்பாண்டி நாட்டில் உடம்பை ”மேல்” என்பார். ”மேல் கொதிக்கிறது; மருத்துவரைக் காணவேண்டும்.” உண்மையில் இதனுள் மறைபொருளாகத் தோலும் இருக்கிறது. இப்பொருள் நம் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படக் கூட இல்லை. ஆனால் மேற்பக்கம் உணர்த்தும் புறணி (=தோல்) என்ற சொல் நிகண்டுகளில் உள்ளது. பிள்> பின்> பிறம்> புறம் = வெளி, வெளிப் பக்கம்; உள்ளும், புறமும், அகமும் புறமும் எனும் தொடர்களால் புறம் என்ற சொல் உட்பக்கத்திற்கு எதிரான வெளிப்பக்கம் என்பதைக் குறிக்கும். மூடின கையின் உட்புறமாய் இருப்பது உள்ளங்கை/அகங்கை என்றும், அதன் வெளிப்புறமாய் இருப்பது புறங்கை என்றும் கூறப்படுதல் காண்க. புறம்> புறணி = மேல், தோல். உடம்பை மூடி வெளிப்பக்கம் இருக்கும் தோலை புறணி என்பது இயல்பான சொல்லாக்கமே.

உடம்பை மூடுவது போல், கோட்டையை மூடும் மதிலையும் தோல், தோடு, கேடயம், கேடகம், கிடுகு என்ற சொற்களால் ஒப்புமைப் பொருளில் அழைத்து இருக்கிறார். புறம் 4, 16, 22 ”புலந்தோட்டு பைந்தும்பை”, 35, 63 ”தோல் கண் மறைப்ப”. வேலிருக்கும் தோலுறையும், தோல்கழி என்ற சொல்லால் கிடுகைக் காம்பும் புறம் 98 இல் விவரிக்கப்படும். இந்த ஒப்புமைப் பயன்பாடு நீண்டு யானைக்கே அதன் வலிய தோலின் கனங்கருதி புறம் 7 இல் “தோல் பெயரிய எறுழ் = யானையைப் பெயர்த்த வலிமை” என்ற வண்ணிப்பு உண்டு.

அதேபோல பொருவிக் கிடப்பது பொருவை> போர்வை என்ற வகையில் மூடிய நிலை குறிக்கும். மூடிக்கிடக்கும் / பொத்திக்கிடக்கும் பொத்து> பொத்தை> பொச்சை> பச்சை என்ற சொல் போர்த்தியதென்று பொருள் படும். பச்சை பற்றிய செய்தி கழாத்தலையாரின் புறம் 288 இல் வரும். கோவூர் கிழாரின் புறம் 308 இலும் மின்னேர் பச்சை எனவரும். புறம் 166 இல் ”புலப் புல்வாய்க் கலைப் பச்சை” என்று கலைமானின் தோல் சுட்டப்பெறும்.

இனி, முள்>மூழ்>மூய் என்னும் வேரில் உருவாகும் மூடுதற் சொற்களைப் பார்ப்போம்.

மூழ்கு> மூகு< மூகம் என்ற சொல் வாய்மூடிய ஊமை நிலை உணர்த்தும். மூழ்கு> மூகு> மூங்கு என்பதுகூட ஊமைநிலையே. மூகை, மூங்கையும் ஊமையை உணர்த்தும் சொற்களாகும். சொல்லின் நடுவில் வரும் மெய் எழுத்தைப் பலுக்காதிருந்தால் அது மூகையெழுத்து (= consonant being mute) எனப்படும்.

மூழ்தலென்பது பற்றுதல் to seize, take hold of  பொருள் கொள்ளும். மூழ்தலின் பிறவினையான மூழ்த்தல் என்பது மூடுதல் to close என்ற பொருட்பாட்டையும், மொய்த்தல் to swarm around என்ற பொருட்பாட்டையும் கொள்ளும். "கதழ்பு மூழ்த்தேறி” என்று பரிபா. 10.18. இல் வரும் சொல்லாட்சி மூடியைக் குறிக்கும் மூழல் என்ற பெயர்ச்சொல்லும் இதே பொருள் தான். ழகரத்திலிருந்து பேச்சு வழக்கில் யகரம் பிறக்கும். ”வாழைப்பழம் வாயப்பயம் ஆகிறதல்லவா?” அதுபோல் பல சொற்கள் திரிந்துள்ளன. மூழ்தல்> மூய்தல் = மூடுதல் [பருமணன் மூஉய் பரிபா 10:4] என்ற பொருட்பாட்டையும், நெருங்கிச் சூழ்தல் to surround closely என்ற பொருட்பாட்டையும் உணர்த்தும். மூய்தலின் பெயர்ச் சொல்லாய் மூய் அமைந்து மூடியை உணர்த்தும். “பொன்பெய் பேழை மூய் திறந்தன்ன” குறுந்.233.

மூய்தலின் இன்னொரு திரிவாய் சகரம் உள்நுழையும். மூசல் = மொய்க்கை swarming, thronging; மூசுதல் = மொய்த்தல், to swarm about, gather around “வண்டு மூசு தேறன் மாந்தி” நெடுநல்.33 “மீஞீறு மூசு கவுள சிறுகண் யானை” அகம் 159.16 “புன்மூசு கவலைய முள்மிடை வேலி” புறம் 116.4 “மூசு வண்டறை பொய்கை யும் போன்றதே” அப்பர் தேவாரம். மூசு = இடவகையில் நெருக்கமாய் இருக்கை, மொய்க்கை “வண்டு மூசு அறா” சீவக. 418 “வியன்பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து” பதிற்று. 31.30 “வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி” புறம் 227.9

மூடியதோடு தொடர்புடைய மூட்டம் (= மூடியிருப்பது), மூட்டுதல் (= சணற் பை, துணி முதலியவற்றில் இரு விளிம்புகளை இணையும்படி சேர்த்தல், சேர்த்துத் தைத்தல் sew together), மூட்டு (= joint), மூட்டு (= மூடுகின்ற பொருள் that which forms a cover, coating, wrapper), மூட்டை/மூடை (= தவசம் நிரப்பப்பட்டு கட்டப் பட்ட தைக்கப்பட்ட சணற்பை sack holding grain), மூடி = cover என்ற சொற்கள் எல்லாம் ஒருங்கு சேர்த்து எண்ணத் தக்கன. மூடு/முட்டாள்/மூடன் என்ற சொற்கள் கூட கல்லுளி மூங்கனாக ஏதொன்றையும் மூடிய தன்மையோடு பார்க்கும் தன்மையுள்ளோரைக் குறிக்கும்.

முய்த்தல்/மூய்த்தலின் திரிவே மொய்த்தல் வினை. ஒரு மலரின் தேனை உறிஞ்சுதற்காகத் தேனீக்கள் மொய்க்கின்றன. அதன்விளைவாக மலரையே மூடிவிடுகின்றன. எப்படி நெருங்கல், தொடுதலுக்கு முந்தை நிலையோ அதுபோல் மொய்த்தல், மூடுதலுக்கு முந்தைநிலை யாகும். மொய்த்தல் = சுற்றிச் சூழ்தல், நெருங்கல் to crowd, press, throng, swarm as flies, bees, ants "வாளோர் மொய்ப்ப” புறம் 13. மொய்த்தல் = நெருங்கிச் சுற்றல் to crowd around, swarm around, மூடல் to cover, to enclose. மொய் = நெருக்கம் press, throng, swarm.

யகரம் சகரமாவதும் பேச்சுத் தமிழில் இயற்கையே. மொய்த்தல்> மொயித்தல்> மொசித்தல் ஆகும். மொசித்தலின் தன்வினை மொசிதல். மொசிதல் = மொய்தல் to swarm.”கடுந்தேறு அறுகிளை மொசிந்தன துஞ்சும்” பதிற்றுப் 71.6 மொசித்தல் வினைக்கு அரிசிற் கிழார் பாடிய புறம் 285 இல் வரும் “விடு கணை மொசித்த மூரி வெண்டோள்” என்ற 8-9 ஆம் அடிகளுக்கு என்ன பொருள் என்று நினைக்கிறீர்கள்? “பகைவர் எய்த அம்புகள் மொய்த்த மூரி வெண்டோள்” இதே போல புறம் 96 (ஔவையார் அதிகமான் பொகுட்டு எழினியைப் பாடிய பாட்டு) இல் ”மையூன் மொசித்த ஒக்கல்” = என்ற சொற்றொடர் வரும். என்ன பொருள்? “ஆட்டுக்கறி சாப்பிடுவதற்காக மொய்த்த சுற்றத்தார்”

ஆக மொசித்தலென்பது மொய்த்தல், மூடுதல் பொருட்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும். சரி, இதன் பெயர்ச்சொல் என்ன? மொசிக்கை/மொசிப்பு எனில் அது தொழிற்பெயராகும். மொசியர், தொழில்செய்வாரைக் (மொய்ப்பாரைக்/ மூடுபவரைக்) குறிக்கும். இன்னும் ஆழ்ந்து ஓர்ந்து பார்ப்போம். கருவிப் பெயர் எப்படி அமைய முடியும்? முதலெழுத்து நீண்டு மோசு/மோசி என ஆனாலன்றி வேறெந்த வகையில் கருவிப்பெயர் அமையமுடியும்? [நினைவு கொள்ளுங்கள் விசித்தது வீசியாயிற்று; பசியது பாசியாயிற்று; உசித்தது ஊசியாயிற்று மொசித்தது மோசு/மோசியாகாது போகமுடியுமா?] அப்போது அதற்கென்ன பொருளிருக்கும்? மூடி தானே? உடம்பிற்கு மூடி எது? தோல் தானே? அதாவது ஏரண வழியும், தமிழிற் பெயர்ச்சொல் அமையும் முறையும் பார்த்தால், மோசு/மோசிக்குத் தோலெனும் பொருள் அமையமுடியும். இது ஒருவகை உன்னிப்புத் தான். ஆனால் அதில் தவறென்ன இருக்கிறது?

மேற்சொன்னதை இன்னொரு வழி ஓர்ந்துபார்க்கலாம். இந்தையிரோப்பிய மொழிகளிலும் (இங்கு ஆங்கிலத்தைக் காட்டாகக் காண்கிறேன்.)  மூடுதல் கருத்தில் உருவான hide என்ற சொல் தோலைக் குறிக்கிறதல்லவா? O.E. hyd, from P.Gmc. *khudiz (cf. O.N. hut, O.Fris. hed, M.Du. huut, Ger. Haut "skin"), related to O.E. verb hydan "to hide," the common notion being of "covering," from PIE base *(s)keu- "to cover, conceal" (cf. Skt. kostha "enclosing wall," skunati "covers;" Arm. ciw "roof;" L. cutis "skin," scutum "shield," ob-scurus "dark;" Gk. kytos "a hollow, vessel," keutho "to cover, to hide," skynia "eyebrows;" Rus. kishka "gut," lit. "sheath;" Lith. kiautas "husk," kutis "stall;" O.N. sky "cloud;" M.H.G. hode "scrotum;" O.H.G. scura, Ger. Scheuer "barn;" Welsh cuddio "to hide").

உடனே நம்மிற் சிலர் ”மோசு/மோசி என்ற பெயர்ச்சொல்லை தோல் என்ற பொருளில் நம் அகரமுதலிகள் குறிக்கவில்லை. எனவே மோசு/மோசி தோலாக முடியாது” என்று சொல்லி விடுகிறார். பொதுவாக, வறட்டுவாதம் பேசுவோரிடம் உரையாட ஒன்றுமில்லை. அவர் சொன்னதையேச் சொல்லிக் கொண்டிருப்பார். இடம், பொருள், ஏவல், சுற்றுச் சூழ்நிலை பார்த்து ஏரண வழி பொருட்பாட்டைக் காணார். அகரமுதலிகளில் அப்படியே பதிந்து இருக்குமெனில் இந்த உன்னிப்புக் கட்டுரை (inductive essay) எதற்கு எழுகிறது?

அப்புறம் இன்னொரு நடைமுறையையும் சொல்ல வேண்டும். நம்மிற் பலரும் சங்க இலக்கியம் என்பது ஏதோவொர் அகரமுதலி என எண்ணி விடுகிறோம்.  உண்மையில் அது ஓர் இலக்கியத் தொகுப்பு. அக்கால மொழியின் பல்வேறு இயலுமைகளை அது குறிப்பால் உணர்த்துகிறது. அன்றைக்கிருந்த எல்லாச் சொற்களையும் அது பதிவு செய்திருக்குமா? - எனில் இல்லை. அவை எல்லாமே நம் கைகளுக்குக் கிடைத்தனவா? - கிடைக்கவில்லை. சொல்லின் வினையைக் குறித்து அதேபொழுது பெயரைக் குறிக்காமலும், பெயரைக் குறித்து வினையைக் குறிக்காமலும் அது போயிருந்திருக்கக் கூடாதா? - போயிருக்கலாம். இதுபோல் ஞாயமான சிந்தனைகளை நாம் எப்படியோ வாய்ப்பாக ஒதுக்கி விடுகிறோம்.

எழுத்துக்கு எழுத்து தவறாமல் சங்க இலக்கியத்தில் ஏதொன்றும் இல்லை யெனில் தமிழில் அது இல்லவேயில்லை என்பதில் நாம் என்றும் அணியமாய் உள்ளோம்.:-) மூளையைச் சற்று பயன்படுத்தி பல்வேறு இயலுமைகளை எண்ணிப்பார்க்க மறுக்கிறோம். அப்படித் தொலைத்த தமிழ்ச்சொற்கள் கணக்கில. சங்கத அகரமுதலியான மோனியர் வில்லியம்சு, சங்கத இலக்கிய ஆவணங்களிற் பெயர்ச்சொல் பதிவாகியிருந்தால் வினைச்சொல்லை உருவாக்கியும், வினைச்சொல் பதிவாகியிருந்தால் பெயர்ச் சொல்லை உருவாக்கியும் மொழி இயலுமைகளை நமக்கு உணர்த்தும். அதேபோலத் தமிழ் அகரமுதலிகள் இருப்பதில்லை. தமிழ் மொழியாய்வாளர் பலரும் அதனாலேயே வறட்டுவாதம் பேசித் தமிழை மறுக்கிறார்.

மொசித்தல் வினையைப் பதிவுசெய்த புறநானூறு, பெயர்ச்சொற்களைப் பதிவுசெய்யாது போயிருக்கலாகாதா? மோசு என்பது தோலானால், மோசி, தோல்வினைஞரைக் குறிக்கலாம். மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசி சாத்தனார், முடமோசியார் என்ற புலவர் தோல்வினைஞராய் இருக்கப் பெரும்வாய்ப்புண்டு என்பதே என்முடிவு.

இதை மெய்ப்பிக்குமாப் போல் மொய் என்ற பெயர்ச்சொல் அத்தி (fig tree), ஆமை (tortoise), யானை (elephant) ஆகியவற்றைக் குறிக்கும். இப் பொருட் பாடுகள் எப்படி வந்தன? அத்தியின் தோலைப் பிரிப்பது கடினம்; அதன் பழமே உடைபட்டுப் பிதுங்கிப் போகும். ஆமை, யானை ஆகியவற்றின் தோல் கனமானது. தோலின் முகன்மை கருதியே இப்பெயர்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். [முன்னால் வலிய யானைத் தோலின் கனங் கருதி புறம் 7 இல் “தோல் பெயரிய எறுழ் = யானையைப் பெயர்த்த வலிமை” என்ற வண்ணித்ததை இங்கு நினைவு கொள்ளுங்கள்.] வேறு எந்த வகையிலும் மொய் என்ற சொல் இப்பெயர்களைக் குறிக்க வழியில்லை.

என் கட்டுரையை இறுதி செய்யுமுன், திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலியிலிருந்து 2 இடுகைகளை எடுத்துக் காட்டுகிறேன். இவற்றில் மூசியை ஒட்டித் தோல்பற்றிய செய்திகளும் திராவிட மொழிகள் சிலவற்றில் ஊடுவருவதை அறிந்துகொள்ளலாம்.

4915 Ta. muccu (mucci-) to cover; mūy (-v- -nt-; mūyi-) to cover, fill, surround closely; n. a cover; moy (-pp-, -tt-) to cover, enclose; ? muyaṅku (muyaṅki-) to embrace, copulate; muyakkam embrace, copulation. Ko. muc- (muc-) to cover; mucaṇ tight-fitting cover. To. muc- (muc&cangle;-) to cover; mucxu· lid, cover. Ka. muccu to close, shut, shut up, cover, conceal; n. shutting; muccaka closing, shutting; muccalu closing, covering, screening; muccaḷa covering, cover, lid; muccike shutting, closing; muccige covering, ceiling of room; muccisu to cause to close; muccuvike shutting, etc.; mucce cover, lid; musuku to cover. Koḍ. mucc- (mucci-) to close; mucci lid, cover. Tu. muccuni to shut, close, cover, screen, shelter; mucca, muccala, mucci, muccu lid of vessel; muccaṇṭe a close mouthpiece; muccāvuni to cause to shut; muccige lid, cover, ceiling. Te. mūyu to cover, cover up, shut, close, conceal, hide, screen; (K. also) be shut, closed, (flower) closes its petals; mū̃ta covering, shutting, a cover, lid, shutter; musũgu, musũguḍu cover, covering, veil; musũgu-vaḍu to be covered, veiled; (K.) muccu to close (intr., tr.); (K.) muncu to cover, envelop. Kol. (SR.) muns- to close, cover. Nk. mus- to cover. Nk. (Ch.) muc- to cover, close, shut (door); muyip- to cover oneself, fill up a hole. Pa. muy- to cover oneself; muypip- (muypit-) to cover (another); mucca shell-covering of the snail. Ga. (Oll.) muy- to cover oneself with wrapper; (S.) mūyk- (mūyt-), mūy- to close, cover. Go. muccānā (Tr.) to wrap something round one's body, put new skins on a drum, (Ph.) to cover; (M.) mucānā, (A. Y.) mucc-, (G. Mu. S.) muc- to cover; (Ko.) muc-, mus- id., put on outer cloak; (Tr.) mucci, (Ph. Mu.) mucce a lid or cover; (Ma.) mucce cover of pot, lid (Voc. 2872); (Koya Su.) mōs- to cover. Konḍa mus- (-t-) to bury (as a corpse), cover (a pit), close (with lid); caus. musis-/muspis-. Pe. muc- (mucc-) to cover, bury; muci lid. Manḍ. muc- to bury. Kui musa (musi-) to cover (a drum with skin or an umbrella with cloth); munja (munji-) to be covered, buried; muspa (must-) to cover, bury; n. burying; (K.) mucc- to shut. Kuwi (Su.) muh- (must-), (F.) mūssali, (S.) muh'nai to bury; (Isr.) muc- (-it-) to cover up. Kur. muccnā to close door or lid, shut; muccō a fishing basket; musugnā to envelop, wrap in, pack into a bundle. Malt. muce to close or shut up; musge to pack up, tie into a bundle; musgre to be closed. Br. must shut, closed. Cf. 5030 Ta. mūcu. DED (S, N) 4025.

5030 Ta. mūcu (mūci-) to swarm about, gather round; n. swarming, thronging; mūcal swarming, thronging; mūr̤ (-pp-, -tt-) to swarm round, surround; mūr̤al a lid; mūkai vast horde; moy (-pp-, -tt-) to crowd, press, throng, swarm, spread as an eruption, crowd round, swarm round, cover, enclose; n. press, throng, swarm, crowd, closeness, tightness, battle, war; moyppu crowd, multitude; moci (-v-, -nt-) to swarm. Ka. musuku, musugu to cover, hide, settle upon as flies, close, swarm or crowd together, spread over or about; n. cover, veil; musuṟ to cover as flies, crows, etc., crowd together, cover, hide; n. cover, veil; musumbu cover, veil; mukaṟu, mukkuṟu, mukkuṟiku to come or fall upon, inclose, cover, besiege, surround; mogasu to cover, fall upon, attack; moge to cover, fall upon, close with. Te. musaru, musuru, mū̃gu, (K. also) mūvu to collect or gather around, settle upon as flies upon any object, infest, surround, crowd, swarm; mū̃ka crowd, multitude, host, swarm, army; (K.) mogiyu to overspread, attack, close witMocikah. Ga. (S.) mūng(i) ēr- to swarm. Go (Tr.) moiānā, moittānā to rush at, close with; (SR.) moyānā to kill (Voc. 2986). Cf. 4915 Ta. muccu and 5034 Ta. mūṭu. DED(S) 4128.

மோனியர் வில்லியம்சில் Mocika = m. a tanner, or shoemaker (cf.Hind.mochii) என்று எழுதிக் கடன்பெற்ற சொல் என்று தெளிவாகக் குறித்திருக்கிறது. எனவே மோசி சங்கதச் சொல் இல்லை. (அப்படிப் பார்த்தால் பார்ப்பனர் கோத்திரம் என்ற வழக்கு தோற்றுப் போகிறது. சங்கதப் பின்புலம் இல்லாத எச்சொல்லும் கோத்திரப் பெயர்களுக்கு அடிப்படையாக ஆவதில்லை.) இந்தியும், பிற வட இந்திய மொழிகளும் இச்சொல்லை வட திராவிடமொழிப் பயனாக்கத்தில் கடன்பெற்றன போலும்.

மோசி கீரனார், மோசி கொற்றனார், மோசி சாத்தனார், முடமோசியார் ஆகியோர் தோல்வினைஞராய் இருக்கவே பெருத்த வாய்ப்புண்டு என மீண்டும் சொல்லி முடிக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.