Saturday, May 13, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 8

அடுத்தது அகநானூறு 386, இதைப் பாடியவரும் பரணரே. இதன் திணையும் மருதமே. மருதம் பாடுவதில் பரணருக்கு ஒரு விழைவு இருந்துள்ளது. இங்கும் நீர்நாய், ஆற்றுவாளை போன்ற குறியீடுகள் வந்து போகின்றன. இவர் காலத்தில் தமிழகம் வந்து போன உத்தேயர் பற்றிய குறிப்பு இலைமறை காயாய் உள்ளது. பாணர், விறலியரின் தொடர்பு தொட்டுக் காட்டப் படுகிறது. பாணரின் தோள், கைவலியும் வெளிப்படுகிறது. 

துறை; தோழி வாயில் மறுத்தது. தலைமகள் தகுதி சொல்லியதுமாம். தலைவனின் பரத்தமை ஒழுக்கங் கண்டு தலைவி ஊடல் கொண்டாள். தேடி வரும் தலைவனிடம் தோழி பரத்தையால் நடந்தது சொல்லி, ”அப் பரத்தை எப்படியெலாம் கள்ளமாய்ப் பேசினாள்? அவள் பேச்சுக் கேட்டு எவ்வளவு வெட்கினேன் தெரியுமா” என்றும், “அவள் இப்படி பேசக் காரணம் யார்? உன் நடத்தை தானே? உடன் மாற்றிக் கொள்” என்ற உட்கருத்தையும் இப் பாடலால் விளங்கிக் கொள்ளலாம். பாடலினூடே ஆரியப் பொருநன் பற்றிய செய்தியும் வருகிறது.

பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து

வாளை நாளிரை தேரும் ஊர

நாணினேன் பெரும யானே பாணன்

மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த

திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்

கணையன் நாணி யாங்கு மறையினள்

மெல்ல வந்து நல்ல கூறி

மையீர் ஓதி மடவோய் யானுநின்

சேரி யேனே அயலி லாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்

தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

பகல்வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு ”நாணினேன் யானே” என்பதை இரண்டுதரம் திருப்பிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

புலவு நாறு இரும் போத்து வாளை 

பொய்கை நீர்நாய் நாள் இரை தேரும் ஊர

பெரும  

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்

சேரியேனே அயல் இலாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கைத்

தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

மெல்ல வந்து நல்ல கூறி

பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் கண்டே.

நாணினேன் யானே

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து 

ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி 

நற்போர்க் கணையன் நாணியாங்கு 

நாணினேன் யானே

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். புலவு நாறு இரும் போத்து வாளை = தசைநாற்றமுள்ள பெரிய ஆண் ஆற்றுவாளையை; பொய்கை நீர்நாய் = குளத்து நீர்நாய் (Otter); நாள் இரை தேரும் ஊர = நாளிரையாய்த் தேர்ந்து கொள்ளும் ஊரைச் சேர்ந்தவனே! பெரும = பெருமகனே!

”மைஈர் ஓதி மடவோய் = ”கருவகிள் கூந்தலுடைய இளம் பெண்ணே!; யானும் நின் சேரியேனே = நானும் உன் சேரியள் தான்; அயல் இலாட்டியேன் = பக்கத்து வீட்டுக்காரி; நுங்கை ஆகுவென் நினக்கு = உனக்குத் தங்கையாவேன் என; தன் கைத் தொடு = என்று தன் கையால் தொட்டு; மணி மெல் விரல் = மாணிக்கம் பொருந்திய விரலால் (இங்கே மாணிக்க மோதிரமிட்ட விரல் குறிக்கப் படுகிறது); தண்ணெனத் தைவர = தண்ணெனத் தடவி; நுதலும் கூந்தலும் நீவி = என் நெற்றியும், கூந்தலும் நீவி; மெல்ல வந்து நல்ல கூறி = மெதுவாய் வந்து நல்லன கூறி; பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் = பகலில் வந்து பெயர்ந்த (அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு; நாணினேன் யானே = (“ஒரு வேளை தவறாக ஐயுற்றோமோ?” என) நான் நாணினேன்.  

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி = பாணனின் மற்போர் நெஞ்சுரங் கண்டு வருந்தி; பெரும்பாணர், சிறுபாணர் என்பார் விறலியாட்டத்தில் முழவடித்துத் (accompanying artists) துணை நிற்பர். முன்னே பேசப்பட்ட பரத்தை ஒரு விறலியாயும் (ஆட்டக்காரி) இருந்தாள் போலும். இவ்வுவமையில் பாணன் விறலிக்குப் பகரியாகிறான். ஓர் இசைக் கச்சேரியோ, நடனக் கச்சேரியோ 3,4 மணிநேரம் நடந்தால், முழவும், பறையும் தொடர்ந்தடிக்க நல்ல வலு வேண்டும். உடல்வலுக் குன்றியவரால் அது முடியாது. பாணர் (இக்கால மேளகாரருங் கூட) நல்ல கட்டுப் பாங்கான உடல்வலுக் கொண்டிருப்பர். அக் காலப் பாணனுக்கு மற்போர் தெரிவதும் வியப்பில்லை. இங்கே கணையன் [கணை = தண்டாயுதம், வளரி, தூண், குறுக்குமரம். அக்காலத்தில் வீட்டின் பெருங்கதவுகளில் தாழ்ப்பாள் போட்டு கணைய மரத்தைக் குறுக்கே செருகி வைப்பர். பின்னாளில் இது இரும்புப்பட்டையாய் மாறியது. செட்டிநாட்டு பெருங்கதவுகளுக்கு இன்றுங் கணையப் பட்டயங்கள் உண்டு. கணையன் = வலியன்; கணைக்கால் இரும்பொறை என்னுமோர் சேர மன்னனும் இருந்தான்.] என்பான் பாணனோடு தான் பொருதற்கு மாறாய் ஆரியப் பொருநனைக் கூலிக்கமர்த்திப் பொருத வைத்தான். 

இத்தொடரின் 3 ஆம் பகுதியில் உத்தேயர் (>யுத்தேயே>யௌதேய) என்ற ஆரிய கணம் (merceneries) பற்றிச் சொன்னேன். அவர் ஆயுத கணமென்றும் சொல்லப் பட்டார். முடியரசு இல்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்த இவர் போர் மூலம் பொருள் திரட்டி நாட்டினுள் நகர்ந்து கொண்டிருந்தார். அகண்ட  அரசை அவர் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங் கூட்டமாய்ச் சில காலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ் சென்று விரிந்து கொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். 

எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப் போர் நடத்துவார். கொள்ளை அடிப்பார்; நகர்ந்து போவார். தென்னாடு நோக்கி இவர் படையெடுத்ததை இவர் நாணயம் தெற்கே கிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர்க் குறிஞ்சி முருகன் வழிபாடும் இரண்டறக் கலந்து போனதாலும் அறிகிறோம். இவற்றைப் பின்னிப் பிணைந்து திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இவ் வழிபாட்டுக் கலப்பு என்பது ஒரு தனியாய்வு. யாராவது செய்ய வேண்டும்.) யாரேனும் பொருள் கொடுத்து ஒரு வேலைக்கு அனுப்பி வைத்தால், (இக்கால அடியாட்கள், சப்பானிய ninja க்கள்  போல) இந்த உத்தேயர் யாரோடும் மற்போர் செய்யவோ, போர்கொள்ளவோ தயங்க மாட்டார். இங்கே ஆரியப் பொருநன் என்பான் ஓர் அடியாள் (mercenary) என்பது மறைபொருள்.. 

எதிர்த்  தலைக் கொண்ட ஆரியப் பொருநன் = எதிரே சண்டையிடும் ஆரியப் பொருநன்; [இங்கே தலைவியின் தோழிக்கு கணையனும், தலைவிக்குக் கணையன் ஏற்பாடு செய்த ஆரியப் பொருநனும் உவமை ஆகிறார். ஒருவேளை தலைவி ஆரியன் போல வெள்நிறங் கொண்டவளோ, என்னவோ?] நிறைத்திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி = திரண்ட, முழவுத் தோளிலும், கையிலும் திறனொழிந்து போய் சரிந்து கிடக்கை நோக்கி; [நல்ல முழவடிக்கக் கூடிய வலுக் கொண்ட தோள் இங்கே ஆரியப் பொருநனுக்கும் அணியாய்ச் சொல்லப்படுகிறது.] நற்போர்க் கணையன் நாணியாங்கு = நற்போர் செய்யக் கூடிய கணையன் நாணியது போல; நாணினேன் யானே = நானும் நாணினேன்.

”நான் பெரிதாய் நினைத்துக் கொண்டிருந்த என் தலைவியை இந்தக் கள்ளி கீழே சாய்த்துவிட்டாள். என் தலைவியின் நிலை கண்டு நான் வெட்கிப் போனேன்” என்பது உட்கருத்து. இனிப் பாட்டின் மொத்தப் பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

“கருவகிள் கூந்தலுடைய இளம்பெண்ணே! 

நானும் உன் சேரியள் தான்; 

பக்கத்து வீட்டுக்காரி; 

உனக்குத் தங்கையாவேன்” 

என்று தன் கையால் தொட்டு, 

மாணிக்கம் பொருந்திய விரலால் 

தண்ணெனத் தடவி, 

என் நெற்றியும், கூந்தலும் நீவி, 

மெதுவாய் வந்து நல்லன கூறி, 

பகலில் வந்து பெயர்ந்த, 

(அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு, 

“ஒருவேளை தவறாக ஐயுற்றோமோ?” என) 

நான் நாணினேன்.  

பாணனின் மற்போர் 

நெஞ்சுரங் கண்டு வருந்தி,

எதிரே சண்டையிடும் 

ஆரியப் பொருநன் 

திரண்ட, முழவுத்தோளிலும், 

கையிலும் திறனொழிந்து போய், 

சரிந்து கிடக்கை நோக்கி, 

நற்போர் செய்யக்கூடிய கணையன் 

நாணியது போல் 

நானும் நாணினேன்

அன்புடன்,

இராம.கி.


சங்க இலக்கியங்களில் ஆரியர் - 7

அடுத்தது அகநானூறு 276. இதைப் பாடியவர் பரணர். ஆரிய அரசனான பெருக தத்தனுக்குக் (ப்ரகத்தன்) குறிஞ்சிப் பாட்டால் தமிழ் மரபைக் கற்றுக் கொடுத்த கபிலரோடு, உரையாசிரியர் பலரும், பரணரைச் சேர்த்துக் கூறினும், காலத்தாற் கபிலருக்கு இளையராகவே இவர் தென்படுகிறார். பெருக தத்த மோரியன் காலம் பொ.உ.மு.187-185. இவனை பொ.உ.மு.185 இல் புஷ்ய மித்திர சுங்கன் கொன்று, தானே முடியைச் சூடிக் கொள்வான். சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் (ஏன் சேரருக்குங் கூட) ஆகாத நிலையில் சுங்கனை எதிர்த்து, நெடுஞ்சேரலாதன் வடக்கே படையெடுத்துப் போனான். 

பெரும்பாலும் சேர நாட்டாரான பரணர். மாமூலனார் போல், அரசியற் செய்திகளை பாடல்களிற் பிணைப்பார். இவர் பாடல்களோடு, ஆதன் குடியினரை, குறிப்பாய்க் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனைப் பொருத்தினால், முதிய வயதிற் செங்குட்டுவனைப் பரணர் பாடியது புரியும். செங்குட்டுவன் காலம் பொ.உ.மு. 131 - 77. கபிலரின் காலம் ஏறத்தாழ பொ.உ.மு.197-143 என்றும், பரணரின் காலம் பொ.உ.மு.180-123 என்றுங் கொள்கிறோம். செங்குட்டுவன் பட்டமேறிய 8 ஆண்டுகளுள் பரணரின் ஐந்தாம் பத்து பெரும்பாலும் எழுந்தது என முடிவு செய்யலாம். 

இப்பாடலின் திணை மருதம். தலைவியின் தோழியர் கேட்கும் படியாகப் பரத்தை சொன்னது. ஆரியர் களிறுகளுக்கு அளிக்கும் பயிற்சி இப்பாட்டில் உவமையாய்ச் சொல்லப் படுகிறது. இப்பயிற்சி வடமொழி ஆணைகளால் நடந்ததாய்ச் சங்க இலக்கியக் குறிப்புண்டு. அதைக் கொண்டு ’சங்கதச் சிறப்பு’ சொல்வாரும் உண்டு. பொறுமையோடு எண்ணின், இது போற் கூற்றுக்கள் எழா. ஆணை மொழி என்பது இலக்கணம் கூடிய மொழியல்ல. சில ஒலிகள், சொற்கள், செய்கைகள் இவ்வளவுஞ் சேர்ந்ததே ஆணை மொழியாகும். வடமொழி எனில், அது சங்கதமா, பாகதமா? - என்பது கேள்விக்குரியது. இன்றும் தென்கிழக்காசியாவில் யானைப் பயிற்றுவிப்பு உண்டு. அமெரிக்க விலங்குக் காட்சி சாலைகளிலும், வித்தையரங்குகளிலும் (circus) யானைகள் பயிற்றுவிக்கப் படுகின்றன. அவை அந்தந்த நாட்டு மொழியில் தான் நடைபெறுகின்றன. சங்க காலத் தமிழகத்தில் யானைகள் வடமொழியின் மூலம் பயிற்றுவிக்கப் பட்டனவா? - என்பதற்கு வரலாற்றில் காரணமிருக்கலாம். பாட்டைப் படித்து விளக்கம் தேடுவோம்..

நீளிரும் பொய்கை இரைவேட் டெழுந்த

வாளைவெண் போத்து உணீஇய நாரைதன்

அடியறி வுறுத லஞ்சிப் பைப்பயக்

கடியிலம் புகூஉம் கள்வன் போலச்

சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு

ஆவது ஆக இனிநா ணுண்டோ

வருகதில் அம்மவெம் சேரி சேர

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்

தாரும் தானையும் பற்றி ஆரியர்

பிடிபயின் றுதரூஉம் பெருங்களிறு போலத்

தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்தவன்

மார்புகடி கொள்ளேன் ஆயி னார்வுற்று

இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல்

பரந்துவெ ளிப்படா தாகி

வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

வாளை வெண்போத்து உணீஇய 

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை 

தன்அடி அறிவுறுதல் அஞ்சிக்

கடிஇலம் பைப்பயப் புகூஉம் கள்வன் போலச்

சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு

இனி நாண்ஆவது ஆக உண்டோ

எம்சேரி சேர வருகதில் அம்ம 

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்

தாரும் தானையும் பற்றி 

ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்

தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து அவன்

மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று

இரந்தோர்க்கு ஈயாது பொருள்ஈட்டியோன் போல்

பரந்து வெளிப்படாது ஆகி

ஓம்பிய நலனே வருந்துகதில்லயாய் .

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். வாளை வெண்போத்து உணீஇய = வெள்ளிய ஆற்றுவாளைப் (Wallago attu) போத்து உண்பதற்கு; வாளையை ஆற்று வாளை என்றும் அழைப்பர். உற்றுப் பாருங்கள் தமிழ்ப் பெயரே தலைகீழாய் மீனியற் பெயராகிறது. தெற்காசியா/தென்கிழக்காசியாவில் பரவலாக ஆறு, ஏரி, குளங்களில் இவ் வெள்ளை மீன் கிட்டத்தட்ட 1 மீ. நிரவல் நீளத்தோடும், 18-20 கி.கி. எடையோடும் வளர்கிறது. ஆண்மீன் பெண்மீனைவிடப் பெரியது; ”போத்து” ஆணைக் குறிக்கும். கடல் வாளையோடு ஆற்று வாளையைப் பலருங் குழப்புவர்.கடல் வாளை குமரிக் கடற்கரைகளில் பெரிதுங் கிடைக்கும். மருதத் திணை என்பதாலும், நீர்நிலையில் நாரை சாப்பிட முயல்கிறது என்பதாலும் இது நந்நீர் மீனையே இங்கு குறிக்கிறது எனலாம்.  

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை = நீள்பெருங் குளத்தெழுந்த இரை தேடும் நாரை; ”நீள்பெரும்” பெயரடை செவ்வகக் குளத்தைக் குறிக்கிறது. பொள்ளிச்செய்த குளம் பொய்கை..தன்அடி அறிவுறுதல் அஞ்சி = ”எங்கே தன்னடை (மீன்களுக்கு) அறிவுறுத்தி விடுமோ?” என அஞ்சி; கடிஇலம் பைப்பய புகூஉம் கள்வன் போல = காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் கள்வனைப் போல; ’பைய’ என்பது இன்று திருச்சிக்குத் தெற்கேதான் புழங்குகிறது. வட தமிழகத்தார்க்கு இச் சொல் புரியாமற் போகலாம். ஆனால் சங்க இலக்கியங்களில் பெரிதும் புழங்கியுள்ளது. சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு = சாய்ந்து ஒதுங்கும் துறைநிறை ஊர்த் தலைவனோடு; ஆற்றோர துறையன் ஆதலின் துறைகேழ் ஊரன். இனி நாண் ஆவது ஆக உண்டோ = இனியும் நாணப் படுவதில் பொருள் உண்டோ? எம் சேரி சேர வருகதில் அம்ம = பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேர வாருங்கள்; இது ஒருவிதமான வல்லமைப் போட்டிக்கான கூவல்.   

அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் = செவ்வரி உண்கண் பொருந்திய அவன்வீட்டுப் பெண்கள் காண; இங்கே ஊரன் கிழத்தி மட்டுமின்றி, அவன் வீட்டு அனைத்துப் பெண்களும் பேசப் படுகிறார். தாரும் தானையும் பற்றி = அவன் மாலையையும், ஆடையையும் பற்றி; இன்றும் சேலை முன்’தானை’ பயில்கிறோம். வேட்டியின் ஒரு பக்கமும் தானை தான். ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல = ஆரியர் பெண்யானையைக் கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல; இங்கே 2 உண்மைகள் பேசப்படுகின்றன. ஒன்று யானையின் உடற்கூறு, யானையின் வாழ்க்கை, யானையைப் பழக்கும் நடைமுறை ஆகியவற்றோடு தொடர்பானது.. இதை முதலிற் பார்ப்போம். இன்னொன்று வரலாற்றின் பாற்பட்டு, வடமொழி வழிப் பயிற்றுவிப்பு பற்றியது. இதை இரண்டாவதாய்ப் பார்ப்போம்.. 

யானைகள் பொதுவாய்க் குடும்பங் குடும்பமாய்த் திரியும் இயல்புடையன. ஆணோ, பெண்ணோ ஓரொரு யானையும் 50, 60 ஆண்டுகள் கூட வாழலாம். யானைக் குடும்பம் பெண்ணையே தலைவியாய்க் கொள்ளும். அகவை முற்றிய ஆண்யானைகள் இதில் அடங்கியே வாழும். அதேபொழுது ஆண்யானைகளுக்குக் குடும்பங்களில் அழுத்தம் இல்லாதில்லை. குறிப்பாக விடலை யானைகள் குடும்பத்தோடு ஒட்டி வாழ்ந்தாலும், 14-15 வயதில் இனப்பெருக்க ஊறுமங்கள் (hormones), குறிப்பாய்த் தடித்திரமம் (testosterone), ஊறுவதால், குடும்பத்திலிருந்து விலகித் தனியாகவோ, வேறு ஆண்யானைகளுடன் சேர்ந்தோ அலையும. அப்போது வேறு குடும்பப் பெண் யானையால் ஈர்க்கப் பட்டு, உடலுறவு கொண்டு, அக்குடும்போடு சேர்ந்து விடலாம். (கிட்டத்தட்ட சேரலத்து மருமக்கள் தாயமுறை போன்றது தான்.) 

தடித்திரம ஊறல் மாந்தரைப் போல் யானைகளுக்கு சீராக அமையாது. பருவம் பொறுத்துக் கூடக் குறைய அமையலாம். எக்கச் சக்கமாய் அளவு கூடிய யானைகளுக்கு மதம் (musth) பிடிக்கிறது. மிதமிஞ்சிய ஊறுமஞ் சுரந்த நிலையே மதமாகும். இதன் விளைவால், நெற்றித் தும்பில் (தும்பு=ஓரம்; temple of the forehead. நெற்றிப் பொட்டென்றுஞ் சொல்வர்.) பொக்குளந் தோன்றி அதுவெடித்துச் சீழ்வடியலாம். இச்சீழைத்தான் மதநீரென்பார். இது வடியும் நேரத்தில் இன்னதென்று அறியாமல் சினங்கூடி, யானை வெய்யழிப்புத் (violent) தோற்றமுங் காட்டும். மதங் கொண்ட யானையை அடக்குவது கடினம். மதத்தை இறக்கி வழிக் கொணர்வது ’கலை,கொடுமையென எல்லாஞ்’ சேர்ந்தது. (இக்காலத்தில் ஊசிகள் போட்டும் மதங் குறைப்பர்.) சில ஆண்யானைகளுக்கு அடிக்கடி மதம் பிடிக்கலாம். சிலவற்றிற்கு எப்போதோ நடக்கலாம். சிலவற்றிற்கு நடக்காமலே போகலாம். எல்லா நேரமும் யானைக் கூட்டங்களில் அவற்றைக் கட்டுள் கொணர்வன பெண் யானைகளே. அதே போல, தனித்துத் திரிந்த விடலை யானைகளைப் பிடித்து வந்து பழக்கும் போதும் பாகர்கள் பெண் யானைளை வைத்தே ஒழுங்கு நடைமுறையைச் சொல்லிக் கொடுப்பார்.           .  

இனி இரண்டாம் கேள்விக்குப் போவோம். இற்றை மக்கள்திரள்/ பைம்புல ஈனியலின் (population genetics) படி, ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பழங்குடி மாந்தர் 70000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தார்;  வந்தவரில் ஒரு சாரார் இங்கிருந்து பர்மா போய், பின் ஒவ்வொரு நாடாய்க் கடந்து ஆசுத்திரேலியா போய்ச் சேர்ந்ததாய் அறிவியல் கூறும். நெய்தலார் (coastal people) என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாரார் இங்கேயே தங்கிக் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் வாழ்ந்தார். வரும்போது இவர் ஏதோவொரு மொழியைக் கொண்டுவந்தார் என்றே அறிவியல் கூறும். அம்மொழி எது என்ற சிக்கலுக்குள் இப்போது போக வேண்டாம். ஆனால் அதிலிருந்து பல்வேறு காலங்களில் கிளைத்தவையே தமிழிய (திராவிட) மொழிகளாகும். பாகதமும் இதிலிருந்து தான் கிளைத்தது, அது வட திராவிடம் தான்  என்று ஒரு  சாராரும், ”இல்லை வேறொரு மாந்தப் பெயர்வில் அது உள் நுழைந்தது” என்று இன்னொரு சாராருஞ் சொல்வர். இன்றுள்ள நிலையில் இந்தப் புதிரையும் விடுவிக்க முடியாது.   

அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்நெய்தலாரே நாட்டின் உட்பகுதிகளுக்குள் நுழைந்தார். முல்லை வாழ்க்கையும், குறிஞ்சி வாழ்க்கையும் அதன் பின் ஏற்பட்டன. (நம்மிற் பலரும் குறிஞ்சியே முதலென்று எண்ணிக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது.) இன்னும் காலங் கழிந்து, முல்லை/நெய்தல் ஊடாட்டத்தில், நுட்பியல் மாற்றங்கள் ஏற்பட்டு மருத வாழ்க்கை உருவானது. குறிஞ்சி, முல்லையில் குறுநில மன்னர் தோன்றினார். மருத வாழ்க்கையில் பேரரசரும், வேந்தரும் தோன்றினார். பொ.உ.மு.1000-800 களில் வடக்கே 16 கணபதங்களிருந்து அவையே பொ.உ.மு. 600 களில் 3, 4 வேந்தர்களாய் மாறி, முடிவில் பொ.உ.மு.500-450 களில் மகதமே பேரரசு நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட இதே காலத்தில் தமிழகத்தில் இருந்த இனக் குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து சேர, சோழ, பாண்டியர் எனும் பெரும் இனக்குழுக்கள் வழி மூவேந்தர் அமைந்தார். இக்காலத்தில் தமிழகத்தின் ஊடே குறுநில வேளிர் இருந்தது போலவே வடக்கிலும் மகதத்தைச் சுற்றியும் ஊடேயும் இருந்தார். மகத நாகரிகத்திற்கும், தமிழ நாகரிகத்திற்கும் பல்வேறு ஒப்புமைகளும் போட்டிகளும் இருந்தன. (அவற்றை இங்கு விரிப்பின் பெருகும். என் ”சிலம்பின் காலம்” நூலில் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.) 

தமிழகத்தைப் பார்க்க, மகதம் பென்னம் பெரிய நிலம். மக்கள் தொகைக் கூடக் கூட கங்கைக் கரையை ஒட்டிய காடுகளை அழித்து அவ்விடங்களில் மருதத்தை ஏற்படுத்தும் தேவை மகதத்தில் எழுந்தது. போர்க் கைதிகளாலும், வரிச் சலுகைகளால் தூண்டப் பெற்ற மக்களாலும் பெருவாரியான மக்கள் நகர்த்தப் பெற்றனர். மரங்களை அழிப்பதும், வெட்டிய மரங்களை அகற்றுவதும் தேவை என்ற போது யானைகளே கதியென்று ஆயிற்று. தவிர, 16 கணபதங்களும் ஒன்றுக்கொன்று பொருதி, சில அழிந்து சில பிணைந்து முடிவில் மகதத்தின் படை விரிந்தது. எந்தக் கோட்டையின் பாதுகாப்பும் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புகளே. வலுவெதிர்ப்பைச் (defence) [தொடர்புள்ள மற்ற சொற்கள் சேமம்(safety), பாதுகாப்பு(security), காவல்(police)] சுருக்கமாய் அரணென்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் ஒரு சொல் பரிந்துரைத்தேன்.] கி.மு.462-446 இல், மகத அரசன் அசாத சத்துவிற்குப் பின்வந்த, உதய பட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில் மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5 கி.மீ. நீளம், 2.5 கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர் நடுவே எவ்வளவு பெருங்கோட்டை இருந்திருக்கும் என எண்ணிப்பாருக. இவ்வளவு பெரிய கோட்டையைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய படைவேண்டும்? யானையில்லாது கோட்டைகளை எப்படிக் காப்பாற்றமுடியும்? தகர்க்க முடியும்? 

அலெக்சாந்தர் இந்தியா வந்த நேரத்தில், நந்தரிடம் 9000 யானைகள் இருந்ததாய்ச் சொல்வர். அதே பொழுது, மற்ற அரசரிடம் (தெற்கே இருந்த மூவேந்தரிடமுங் கூட) அவ்வளவு யானைகள் இல்லை. 1000 தேர்ந்தால் அதிகம். பரப்பளவிற் குறைந்த அரசுகளில் யானையிருப்புக் குறைவு. அரசின் பொருளாதாரம், வலுவெதிர்ப்பு போன்றவை வளர, யானைகளை அடக்குவதும், பழக்குவதும், பயன்படுத்துவதும் தேவையாயிற்று. எண்ணிக்கையிற் கூடிய யானைகள் தேவைப்பட்டன. எனவே மகதத்தில் யானைப்பாகர் மிகுத்துப் போனார். அந்நாட்டின் பல மருங்கிலும் யானைப் பயிற்சி மையங்கள் இருந்திருக்கலாம். அருத்த சாற்றம் (Arthasastra) இதை விரிவாகப் பேசும். (சங்க இலக்கியம் புரிய அருத்தசாற்றப் பின்புலம் தேவை.) பின்னால் மகத அரசுகள் சிதைந்த போது யானைப்படைகளுஞ் சுருங்கின.

அக்காலத்தில் யானைகளைப் பழக்க மிகுந்த ஆண்டுகள் பிடித்ததால், போர் முடிந்தவுடன், எதிரி யானைப் படையைத் தம்படையோடு சேர்த்துக் கொள்ளும் விந்தைப் பழக்கமும் இருந்தது. (யானையைப் பிடித்துச் சில ஆண்டுகள் பழக்கி வைக்கும் செலவும், முயற்சியும் குறைந்து போகுமே? சட்டென்று சேர்த்துக் கொள்ளலாமே?) எனவே நாளாவட்டில் நாடெங்கணும் யானைப் பாகர் நடுவில் வடமொழியான ஆணைமொழி பொதுவாகிப்போனது. 

[19 ஆம் நூற்றாண்டு நடைமுறையை நான் சொல்லலாம். இங்கிருந்து சுரினாம், ப்வ்யூஜி போன்ற நாடுகளுக்குப் போன இந்தியக் கூலிகள் தமிழ், தெலுங்கு போன்ற தம் மொழிகளை மறந்தே போனார். பெயரிலும் சில பழக்கங்களிலும் மட்டுமே தமிழிருக்கும். தங்களோடு அங்கு வந்த பீகாரிகளின் மொழியான 19 ஆம் நூற்றாண்டு இந்துசுத்தானியே இவருக்கும் நாளடைவில் பொது மொழியானது. அது நம்மூரின் ”சர்க்கார்” சங்கத இந்திக்கும் வேறு பட்டது. இன்று சென்னையின் பல இடங்களில் குறிப்பாக நான் 4 ஆண்டுகளிருந்த சோழிங்க நல்லூரில், ஞாயிற்றுச் சந்தையின் பொது மொழி இந்தியாயிருக்கிறது. அங்கே பெரிதும் வாங்க வருவது பீகார், சார்க்கண்ட, சட்டிசுக்கர், ஒடிசா மாநிலங்களிருந்து வந்த கட்டிடத் தொழிலாளர். அதே போல் கும்மிடிப்பூண்டியில் இருக்கும் பல் வேறு வடகிழக்கு மாநில மக்களால் அந்தூர்க் கடைவீதியில் இந்தியே பெரிதும் புழங்குகிறது. அதே போல் சென்னை சவுகார் பேட்டையில் இருக்கும் மார்வாரிகளால், இந்தியே பெரிதாகிப் போனது. திராவிடம் பேசும் கட்சிகளே அங்கு இந்தியில் நுவலிகளை (notices) அளிக்கின்றன. எல்லாம் தேவை (demand) - அளிப்புத் (supply) தான். ஆரியர் வடமொழி வழியே சங்க காலத் தமிழகத்தில் யானை பயிற்றுவித்தது ஒரு விலங்கியல், பொருளியல் ஊடாட்டம். அதற்கும் மொழி விதப்பிற்கும் தொடர்பைக் காண்பது பொருள் அற்றது. இனி பாட்டிற்குள் போவோம். 

தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து = என்தோளைத் தறியாக்கி என் கூந்தலால் கட்டிப் போட்டு; அவன் மார்பு கடி கொள்ளேன் ஆயின் = என் மார்பில் அவனைச் சிறை கொள்ளேன் ஆயின்; ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் = ஆர்வமுற்று இரந்து வருவோர்க்கு ஈயாது ஈட்டியவன் பொருள் போல்; பரந்து வெளிப்படாதாகி = பரந்து வெளிப்படாதாகி, ஓம்பிய நலனே = (இது நாள் வரை) காப்பாற்றிய என்னழகு; வருந்துகதில்லயாய் = வருந்தி அழியட்டும்.  .

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

வெள்ளிய ஆண்வாளை உண்பதற்கு, 

நீள்பெருங் குளத்தெழுந்த இரைதேடும் நாரை, 

”எங்கே தன்னடை (மீன்களுக்கு) 

அறிவுறுத்தி விடுமோ?” என அஞ்சி 

காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் 

கள்வனைப்போல சாய்ந்தொதுங்கும் 

துறைநிறை ஊரனொடு 

இனியும் நாணப்படுவதில் பொருளுண்டோ? 

பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேரவாருங்கள்! 

செவ்வரி உண்கண் பொருந்திய அவன் வீட்டுப் பெண்கள் காண 

அவன் மாலையையும், ஆடையையும் பற்றி, 

ஆரியர் பெண்யானையை கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல 

என் தோளைத் தறியாக்கி என்கூந்தலாற் கட்டிப்போட்டு 

என் மார்பில் அவனைச் சிறை கொள்ளேன் ஆயின் 

ஆர்வமுற்று இரந்துவருவோர்க்கு ஈயாது 

பொருளீட்டியான் போல் 

பரந்து வெளிப்படாதாகி 

(இதுநாள்வரை) காப்பாற்றிய என்னழகு 

வருந்தி அழியட்டும். 

அன்புடன்,

இராம.கி.


Thursday, May 11, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 6

அடுத்தது பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்துப் பதிகம். இரண்டாம் பத்தைப் பாடியவர் குமிட்டூர்க் கண்ணனார். பாடப் பட்டவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். பதிகம் பாடியது யாரென்று தெரியவில்லை. பதிகங்கள் மூலத்தோடு அன்றி உரைச்சுவடிகளில் மட்டும் உள்ளதால், பதிற்றுப் பத்தைத் தொகுத்தவர் இவற்றை இயற்றியிருக்கலாம் என்பர். 

கடைசிப் பத்தின் தலைவனான யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னிருந்த ஆதன்களும், இரும்பொறைகளும் பதிற்றுப் பத்தில் இடம் பெறாததால், கடைசிப் பத்து எழுந்த சில ஆண்டுகளில் (பொ.உ.மு. இறுதிகளில்) தொகுப்பு நடந்திருக்கலாமோ என எண்ணுகிறோம். இப்பதிகம் சிறியதாயினும் நெடுஞ்சேரலாதனின் பெற்றோரில் தொடங்கி, முகன (main) வாழ்க்கை நிகழ்ச்சிகளை கால வரிசையிற் கூறுவதால் என் விளக்கமும் சற்று பெரிதாகிறது. ஊடே மண்ணு மங்கலம், வாள் மங்கலம், நெய்யிடுதல் போன்ற சில விதப்பான மரபுகளையுஞ் சொல்லவேண்டியுள்ளது. 

-------------------------------- 

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு

வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற 

மகன்

அமைவரல் அருவி இமையவில் பொறித்து

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து

நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு

பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி

அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்.

இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக் 

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெண்ணாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ.. இமையவரம்ப நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்    

------------------------------

என்பது பாட்டும் அதன் பின்குறிப்பும் ஆகும். பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

---------------------------

மன்னிய பெரும்புகழ் மறு இல் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு,

வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ, 

தகைசால் சிறப்பொடு பேர்இசை மரபின் ஆரியர் வணக்கி,

நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து,

நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ,

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு,

பெருவிறல் மூதூர்த் தந்து, 

பிறர்க்கு உதவி,

அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்தாள் 

இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக் 

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அவை தாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரம தாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெள் நாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்  

-------------------------------------

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். மன்னிய பெரும்புகழ் = நிலைத்த பெரும்புகழும்; மறுஇல் வாய்மொழி = குற்றமிலா வாய்மொழியும்; இன்னிசை முரசின் = இனிது இசைக்கும் முரசுங் கொண்ட; உதியஞ் சேரற்கு = வானவரம்பன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனுக்கு; இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-143 ஆகும். முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் இவனைப் பாடுவார். அதில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே (சதகர்ணிகள்) ஆகும். 

பலருஞ் சொல்வது போல் இப்பாட்டில் சொல்லப் படுவது பாரதப் போர் அல்ல. புறம் 2 இன் செய்தியைக் கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. (இந்தப் பார்வையால் தப்பான புரிதலும் ஏற்படுகிறது.) உதியஞ் சேரல் காலத்திலேயே அசோகனின் ஆட்சிமுறைத் தாக்கம் சேரர் மேல் தொடங்கி விட்டது. கூடவே மோரியருக்கு அடுத்து வந்த சுங்கரின் மேல் சேரருக்குக் கடுப்பிருந்ததும் நாட்பட்ட கதையாகும். 

(ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடை நடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரர் இருந்தார். உதியன் சேரல் காலத்தில் இருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்தது. சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலப்பதிகாரத்தால் விளங்கும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள். 

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்

http://valavu.blogspot.in/2010/08/2-2.html

http://valavu.blogspot.in/2010/08/2-3.html

http://valavu.blogspot.in/2010/08/2-4.html

http://valavu.blogspot.in/2010/08/2-5.html

வெளியன் வேண்மாள் நல்லினி = வெளியன் வேளின் மகளாகிய நல்லினி; வெளியன் வேள் பெரும்பாலும் பொதினியின் ஆவியர் குலத்தைச் சேர்ந்திருக்கலாம். (இற்றைப் பழனியே பழம் பொதினி. அதன் அடிவாரத்தில் தான் ஆவினன்குடி எனும் ஊர் உள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடிக்குக் கொடிவழி தோறும் மணத் தொடர்பு இருந்துள்ளது. 

உதியனின் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்பர். இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. அக்காலத் தமிழகத்தில் 16/18 அகவையில் ஆண்மகனுக்குத் திருமணம் நடந்து விடும். 20/25 இல் இளவரசுப் பட்டஞ் சூட்டிவிடுவர். ஆட்சியாண்டுகள், இளவரசுப் பட்டம் கட்டியதிலிருந்தே கணக்கிடப் படும். இல்லாவிடில், ”58 ஆண்டு நெடுஞ்சேரலாதனாட்சி”, ”55 ஆண்டு செங்குட்டுவனாட்சி” என்ற தொடர்களுக்குப் பொருள் இராது. அரசுப் பட்டமளிப்பு யாருக்கும் தனித்து நடந்ததாய் பதிற்றுப்பத்துக் குறிப்புகள் தெரிவிப்பதில்லை.   

நெடுஞ்சேரலாதனுக்கு 2 மனைவியருண்டு. நெடுஞ்சேரலதனின் தாய் நல்லினியின் சோதரன் தான் வேளாவிக் கோமான் (இவன் மன்னன் இல்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன், ஊர்ப் பெரியவன்.) ஆவான். நெடுஞ்சேரலாதன்,  வேளாவிக் கோமானின் முத்த மகள் பதுமன் தேவியை, தன் முதல் மனைவியாய்ப் பெற்றான். அவள் மூலம் இவனுக்குப் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவர். சேரலாதனின் அடுத்த மனைவி ஞாயிற்றுச் சோழனின் மகளான நற்சோணை. இவளுக்குப் பிறந்தவனான  செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்டவன் ஆவான். 

நெடுஞ் சேரலாதனின் மகனாய்ப் பலருஞ் சொல்லும் இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தரு காதை 171-183 வரிகளில் மட்டுமே அன்றி வேறெங்கும் தென்படுவதில்லை. அக்காதையை இடைச் செருகல் என நான் ஐயுறுவதால் இளங்கோ என்பவர் செங்குட்டுவனின் தம்பி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் சிலம்பின் ஆசிரியர். அவ்வளவு தான். அவர் பற்றிய செய்திகள் வேறெங்குமோ, பதிற்றுப் பத்திலோ வரவில்லை. வரந்தரு காதையில் உள்ள பெரும் முரண்களைப் பற்றி  என் ”சிலம்பின் காலம்” நூலில் தெரிவித்துள்ளேன். 

குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற தம்பியுண்டு. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் வேந்தன் ஆகாததால், வானவரம்பன் எனும் பட்டத்தைச் சூடான். அடுத்தது களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இவன் காலம் பொ.உ.மு. 131-107. இவனின் இயற் பெயர் தெரியவில்லை. இவன் பெயரின் முன்னொட்டு ஒருவகை மகுடத்தைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்த பின், தன் மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சம காலத்தில் நெடுஞ்சேரலாதனே இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பின்  நார்முடிச் சேரல் வானவரம்பன் ஆகி அரசுகட்டில் ஏறினான். இவனுக்கு இன்னொரு பெயரும் இருந்திருக்கலாமென்று ஊகிக்கிறோம்.    

புறம் 62 இல் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும் (நெடுஞ்சேரலாதனின் மைத்துனன்; நற்சோணையின் சோதரன்) பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதே பொழுது புறம் 65 இல் நாக நாட்டுக் கரிகால் வளவன் [பெரும்பாலும் இவன் 2 ஆம் கரிகாலன் ஆகலாம். முதற் கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின் மேல் படையெடுத்ததைச் சிலம்பால் அறிவோம். முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் பல ஆய்வாளர்  குழம்பித் தடுமாறுவார்.] வெற்றி பெற்றதையும், பெருஞ் சேரலாதன் வடக்கு இருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறு என்பது புரியும். ஆழ ஆய்ந்தால் புறம் 62 இல் விவரிக்கப் படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? . 

நார்முடிச் சேரல், வாகைப் பெருந்துறையில் நன்னனை வெற்றி கொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ் செயலாய்ச் சொல்லப் பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்று வருங் கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளி கொடுத்தது ஆகலாம். அதை வைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப் பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதன் என்றும் நடுத்தம்பியைக் குட்டுவச்(=சிறிய) சேரலாதன் என்றும், கடைத் தம்பியை ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச் சேரலே பெருஞ்சேரலாதனாக இருந்திருக்க வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவனின் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் குறிப்பார்,   

இனிக்  கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன் எனப் பின்னும், பெயர் பெற்றவனைப் பார்ப்போம். இவன் காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழு குட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பல காலம் தமிழறிஞர் பிளவு பட்டார். இதில் வேடிக்கை என்ன தெரியுமோ? இவனுடைய இயற்பெயர் என்னவென இன்றும் கூட யாருக்கும் தெரியாது. 

இன்றுங் குட்டுவனைக் குட்டனென மலையாளத்தில் சொல்வார். சிறியவன் என்று பொருள்படும். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும், பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் தம்பியா? இல்லையே? விளிப் பெயரே எல்லோருக்கும் பரவலாய்ப் பழகிப் போயிற்று. குட்டுவனும் அப்படித் தான். வெல்கெழு குட்டுவன் = வெல்லுங் குணங் கொண்ட குட்டுவன்;. செங்குட்டுவன் = செந் நிறக் குட்டுவன். அவ்வளவு தான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது கொஞ்சமும் வியப்பேயில்லை. இப்படிச் சில பெயர்கள் சட்டென்று பொருந்திக் கொள்ளும். 

செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4ஆம் பத்தில் வராது  பதிகத்தில் மட்டுமே வரும். கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவனின் கடைசிக் காலத்தில் என்றே கொள்ள வேண்டியுள்ளது. குட்டுவன் 55 ஆண்டு காலம் ஆட்சி செய்தான். அவன் விறல் வெளிப்பட வெளிப்பட விதம் விதமாய்ப் பாடியோர்அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல் பிறக்கோட்டிய செயல் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச் சொல்வார். அதன்பின் செங்குட்டுவன் நடு அகவை ஆகையில் முதல் முறை வடக்கே படையெடுத்துப் போனான். (பரணர் உயிரோடிருந்தால் தானே இதைச் சொல்வார்? இயலுமையை எண்ணிப் பாருங்கள்.) இது சேரரின் இரண்டாம் வடபடையெடுப்பு. (முதற்படையெடுப்பு குடக்கோ நெடுஞ்சேரலாதனின் இளமைக் காலத்தில் நடந்தது.)  

வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்

கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்

எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் 

ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு

ஒருநீ யாகிய செருவெங் கோலம்

கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

என்பது சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தின் காட்சிக் காதை 158-164 வரிகளாகும். இது அமைச்சன் வில்லவன் கோதையின் கூற்று. இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி நற்சோணையை. அவள் கங்கையில் ஆடியது பெரும்பாலும் வாரணாசியாகலாம். பொதுவாய்ப் பலரும் ஒரு முறையே செங்குட்டுவன் வடக்கே போனதாய் எண்ணிக் கொள்கிறார். கிடையாது. சிலம்பின் படி அவன் இரு முறை போயுள்ளான். முதல் முறையில் பெரும்பாலும் சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரனோடு சண்டையிட்டிருக்கலாம். இரண்டாம் முறை பாகபத்ரனின் மகன் தேவபூதியோடும், அவன் அமைச்சன் விசய கனகனோடும் சண்டை இட்டிருக்கலாம். செங்குட்டுவனின் முதல் படையெடுப்பின் பின்புலம் தேடுவோம். 

சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரன் காலத்தில் (பொ.உ.மு. 119-83) மகதம் ஆட்டங் கொள்ளத் தொடங்கியது. பாடலி புத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (இதை Beznagar என்பார். இற்றை ம.பி. மாநிலத்தில் உள்ளது. இங்கு தான் அசோகன் முதற்கொண்டு பல்வேறு மகத இளவரசர் ஆட்சி புரிந்துள்ளார்.) தலைநகரும் மாற்றப்பட்டது.  கொஞ்சங் கொஞ்சமாய் மகதம்  சுருங்கியது. 

கலிங்கர், நூற்றுவர் கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசர் என மகதத்தைக் கவரமுயன்ற பலரோடும் சண்டைகள் தொடங்கின. இக்காலத்தில் தான் பாணினியின் ”அட்ட அத்தியாயிக்கு” பதஞ்சலியார்  மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சூற்றம் (சந்தசூத்ரம்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். 

பாகபத்ரனின் ஆட்சி முடிவில் நூற்றுவர் கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ள முயன்றார். மகதம் வலி இழந்தது இந்தியா எங்கணும் தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரன் செங்குட்டுவனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறுத்தது இயற்கையே. இக்காலத்தில் செங்குட்டுவன் தன் தந்தையின் சார்பாக முதல்முறையாக வடக்கே சென்றுள்ளான். அவன் தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். 

2 ஆம் முறை கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு அகவை 78/80 ஆயிருக்கலாம். மகதக் குழப்பத்திற் தானும் புகுந்து இன்னொரு முறை விளையாட முடியுமென்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையைத்  தன் அரச முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறான். செங்குட்டுவன் 2 ஆம் படையெடுப்பு நடக்கும்போது இருந்த சுங்க அரசன் தேவபூதி ஆகலாம். இவன் காலம் பொ.உ.மு. 83-73 (இக் கடைசிச் சுங்கன். அளவு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்டதால், இவன் முதலமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொன்று விடுவான். விசயன் என்பது வாசு தேவனின் மறு பெயரோ, அன்றி வாசு தேவனின் தந்தையோ எனத் தெரிய வில்லை.).

அதற்கு அப்புறம் கனகரே மகதத்தை ஆட்சி செய்வார். தேவபூதிக்குத் தனுத்ர பூதியென்ற பெயரும் இருக்கலாம். பாகதச் சான்றுகள் கொண்டு இம்முடிவை உறுதிசெய்ய வேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப் பெயர், எவை இயற்பெயர்?” என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயம் எழுகிறது. இது சேரரின் 3 ஆம்  படையெடுப்பு. மயிலை சீனி வேங்கடசாமியாரும் சேரர் 3 முறை வடக்கே படையெடுத்ததாய்ச் சொல்வார். 

செங்குட்டுவனுக்குப் பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டமேறினான். 6 ஆம் பத்தின் பதிகம் ”நெடுந்தொலை உள்ள தொண்டகக் காட்டுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித் துறைக்குத் திரும்பக் கொணர்ந்தவன்” என ஆடுகோட்பாட்டிற்குப் பொருள் சொல்லும். பழம்போரில் ஆக்களைக்  கவர்வதை வெட்சியென்றும், மீட்டுவதைக் கரந்தை என்றுஞ் சொல்வர். தொல்காப்பியர் கரந்தையை வெட்சியின் ஒரு பகுதியாகவே சொல்வார். தவிர, இரண்டுஞ் சேர்ந்தது ஆகோட் பூசலாகும். அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. 

பெரும்பாலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் காலம் பொ.உ.மு. 106-75 ஆகும். செங்குட்டுவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்து வானவரம்பன் எனும் பெயருங் கொள்வான். இவன் வேந்தனானதற்கு இதுவே அடையாளம். இவனுக்கு ஆட்டனத்தி எனும் இன்னொரு பாகமும் உண்டு. ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன்; செந்நிறத்தால் அத்தியெனும் (=சிவப்பு) விளிப்பெயர் உற்றான். நெடுஞ்சேரலாதன் வள நாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் நாக நாட்டில் மணந்து கொண்டான். 

(பெண் கொடுப்பதும், சண்டை போடுவதும் மூவேந்தரிடை தொடர்ந்து நடந்த கூத்துகள்.) பெரும்பாலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்திருக்கலாம். சிலப்பதிகாரம் இவன் அரசவையில் அரங்கு ஏறியிருக்கலாம். இதன் காரணத்தைச் “சிலம்பின் காலம்” நூலில் விளக்கியிருப்பேன். செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் நமக்குத் தெரியவில்லை. 

இப்போது 2ஆம் பத்தின் பதிகத்திற்கு வருவோம். அமைவரல் அருவி = நெஞ்சையள்ளும் அருவியுள்ள; இமையம் வில்பொறித்து =இமையத்தில் விற்சின்னம் பொறித்து; இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க = ஓசுங் கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி; தன்கோல் நிறீஇ = தன் செங்கோலை (அங்கு) நிறுவி; தகைசால் சிறப்பொடு = தகுதிநிறைச் சிறப்பொடு; பேரிசை மரபின் ஆரியர் வணக்கி = பெரும்புகழ் மரபு கொண்ட ஆரியரை அடக்கி; 

ஆரியரென்போர் இங்கு எதிரியாகவே மதிப்புடன் சிறப்பித்துச் சொல்லப் படுகிறார். அவருக்கும் தனி மரபுண்டு என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அப்படி ஆவதாலேயே தமிழர் மரபும், ஆரியர் மரபும் சில வகைகளில் வேறு படலாம் என்பது வெள்ளிடைமலை; இப்படையெடுப்பு நெடுஞ்சேரலாதன் பட்டமேறிய சில ஆண்டுகளுள், பெரும்பாலும் பொ.உ.மு 160 க்கு அருகில் நடந்திருக்கலாம். அப்போது மோரியரரசைத் தொலைத்து புஷ்யமித்திரன் (பொ/உ/மு.165-149) வந்து விட்டான். 

[இங்கே ஒரு போகூழைச் சொல்லித் தான் ஆகவேண்டும். வில்லும், புலியும், கயலும் இமையத்தில் பொறித்ததை இலக்கியத்திற் பலகாலம் நாம் படித்தாலும், அவை எந்த இடங்கள் என்று நமக்குத் தெரியாது. குத்து மதிப்பாய், காசிக்கும், பாட்னாவிற்கும் வடக்கிருக்கலாமென ஊகஞ் செய்கிறோம். சான்றுகளுடன் இவற்றை நிறுவ ஒரு செய்தியும் நமக்கு இதுவரை கிட்டவில்லை. தொல்லோவியர், கல்வெட்டாளர் போன்றோர் வட நில ஆய்வாளருடன் சேர்ந்து தேட வேண்டும். பதிற்றுப் பத்து அரசருக்கு இணையான சுங்கர், கனகர் பற்றிய வட தரவுகள் நமக்கு வேண்டும். சேரலாதனும் செங்குட்டுவனும் வடக்கே போனாரா என்பதை நம் பக்கச் சான்றைக் கொண்டு சொல்வது ஒரு வகை. எதிரிகள் பக்கம் இருந்து காண்பது இன்னொரு வகை. பல்லாசிரியரும் அசோக மோரியனுக்கு அப்புறம் குத்தருக்குத் (குப்தர்) தாவிவிடுவார். கிட்டத்தட்ட 400 ஆண்டு காலம் அங்கும் ஒரு பெரிய வரலாற்று இடைவெளி இருக்கும். தவிர வடபகுதிகளின் மாகத (புத்த), அர்த்த மாகத (செயின) நூல்களைப் பார்க்க வேண்டும். 

நம்மூர் ஆய்வாளர் பாலி, பாகத மொழிகளை அறிவது மிக இன்றியமையாதது. சங்கதம் வைத்தே எல்லாஞ் செய்து விடலாம் என்பது கானல் நீர். சங்ககால வரலாற்றை அறியச் சங்கத நூல்கள் இதுவரை உதவவில்லை. சங்க காலத்தை முன் சொன்னது போல் பொ.உ.மு.600-பொ.உ.150 இல் தேடவேண்டும். பொ.உ.மு.300-பொ,உ. 300 என்பது வரலாற்றாய்வில்  நாம் இதுவரை செய்த பெரும்பிழை. அதை அப்படியே புளியங்கொம்பாய்ப் பிடித்துக் கொண்டு  ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என. 20ஆம் நூற்றாண்டு ஆய்வாளர் வழி நூறாண்டு காலம் தவறாய்த் தேடி முட்டுச்சந்துக்குள் வந்து விட்டோம். 

இன்னுந் தள்ளி பொ.உ.500 வரை சிலம்பைத் தள்ளுவது முற்றிலும் வறட்டுத் தனமானது, போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். Status quo doesn't take us anywhere. பல்லாண்டு ஆய்வின் பின் தான் இதைச் சொல்கிறேன். சங்க கால மகதத்தில் பாகதமே பேராட்சி பெற்றது. சங்கதம் வடமேற்கிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் எழுந்து படித்தோரிடையே பரவியது. குத்தருக்கு அப்புறமே வடக்கிலும் (பல்லவருக்கு அப்புறமே தெற்கிலும்) சங்கதம் மேலோங்கியது.] 

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து = நயமிலா வன்சொல் பேசும் யவனரைச் சிறைப்படுத்தி; ஆரியரைச் சொன்னவுடன் யவனரைச் சொல்வதால் இது இந்தோ-சித்தியரை/ சத்ரபரை/ சகரை என்று புரிந்துகொள்ள வேண்டும். அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் வந்து வெளிச்சென்ற போது அவர் படையும், ஆளுநரும் இங்கே இருத்தி வைக்கப்பட்டார். பின்னால் இந்த ஆளுநர் தனித்தியங்கும் மன்னராய் மாறி மதிப்புடன் இந்தியாவிற்குள் விரிய நுழைந்தார். 

அவந்தி நாட்டின் உச்செயினி வரை அவர் வந்தார். அவந்தி நாட்டோடு தமிழர்க்கு இருந்த தொடர்பு சிலப்பதிகாரத்தால் வெளிப்படும். முதலாங் கரிகாலன் காலத்தில் (கிட்டத்தட்ட பொ.உ.மு.462) தமிழகத்தோடு நட்பாக இருந்த அவந்தி நாடு பின் காலங்களில் நட்பாகவும் பகையாகவும் ஆட்சியாளருக்குத் தக்க மாறி மாறி இருந்தது. படித்தானம் தொடங்கி மகதம் வரை செல்லும் தக்கணப் பாதைக்கு உச்செயினி மிக அருகில் தான் இருந்தது. இந்தோ - சித்திய யவனரை பொ.உ.மு.160 இல் தெற்கிருந்து வடக்கே போன சேரர் சிறைப்படுத்துவது நடக்கக் கூடியது தான் 

நெய்தலைப் பெய்து = (வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து; கைபின் கொளீஇ = பின் அதைக் கையிற் கொண்டு;

இங்கோர் இடைவிலகல். ”நெய்யிடுதல் ஏதோ கப்பலில் வந்த யவனருக்கு அளித்த தண்டனை என்றே” உரையாசிரியரும், தமிழாசிரியரும் தவறாய்ப் பொருள் சொல்வர். மாறாக ”இது மங்கலமானது; சேரன் பக்கஞ் சொல்வது; யவனர் பக்கமல்ல” என்பதை இன்றும் மிஞ்சிக் கிடக்கும் மரபுகள் சொல்லும். பட்டமேறல் (அரசர், சமய ஆதீனங்கள் பட்டம் ஏறுவது, ஆண்டு தோறும் அதைக் கொண்டாடுவது), நல்ல நாள், பெரிய நாட்களில் வீட்டுப் பெரியவர் தலைவருக்குச் செய்வது, கோயில் குடமுழுக்கிற் செய்வது, இறைப் படிமத்திற்குத் திருமஞ்சனம் ஆட்டுவது எனப் பல்வேறு விழவுகளில் நெய் தலைப்பெய்தல் இன்றும் கூட நடக்கிறது. இவ்வளவு ஏன்? மணம்முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் பிள்ளை வீட்டிற்குச் செல்லுமுன் பெண்வீட்டில் மஞ்சள்நீராட்டின் முன் ஒவ்வொரு பெரியவரும் இவர் தலையில் நெய்யைச் சிறிதேயிட்டுப் மஞ்சளுந் தடவி சிகைக்காயும் பூசி நீராடலாகும். மாப்பிள்ளையும், பெண்ணும் புதுக் குடித்தனம் போகிறாரல்லவா? புது வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறி நெய் தலைப்பெய்தல் இன்றும் நடைபெறுகிறது. 

இப் பழக்கம் சீவக சிந்தாமணி கோவிந்தையார் இலம்பகத்திலும் (487 ஆம் பாட்டு) குறிக்கப்படும். 

நாழியுள் இழுது நாகுஆன் கன்றுதின்று ஒழிந்த புல் தோய்த்து

ஊழுதொறு ஆவும் தோழும் போன்றுடன் மூக்க என்று

தாழிருங் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி 

மூழைநீர் சொரிந்து மொய்கொள் ஆயத்தியர் ஆட்டினாரே

நெய்யிடும் இப் பழக்கம் இன்று தீபாவளிப்பண்டிகையின் போதும் தொடர்கிறது. (நான் தீபாவளிப்பண்டிகையின் தோற்றத்துள் போகவில்லை. அதனுள் நடக்கும் ஒரு சடங்கை மட்டுமே சொல்கிறேன்.) தீபாவளியின் தொடக்கமாய்த் தலையில் எண்ணெய் தேய்த்து நீராடும் வழக்கம் மண்ணுமங்கலத்தில் தொடங்கியது.  

ஆங்கிலத்தில் இச் சடங்கை anointing என்பர். unction என்றொரு பெயருமுண்டு. உலகமெங்கும் நெய் தலைப்பெய்தல் வெவ்வேறு நாகரிகங்களில் நடந்துள்ளது. http://biblehub.com/topical/a/anointing.htm என்ற வலைத்தளம் பாருங்கள். விவிலியத்திற்கூட ஆசிகூறித் தலையில் நெய்யிடும் பழக்கமுண்டு. இதைக் குறிக்கும் பலமொழிச் சொற்களிலும் நெய் உள்ளே அடங்கிக் கிடக்கும். தமிழன் நாகரிக முன்னோடி என்றால் நம்ப ஆளில்லாது இருக்கலாம். ஆனால் anointing என்பதற்குள் ”நெய்” என்ற சொல் கட்டாயமுண்டு. [Pun intended] unguent (n.) Look up unguent at Dictionary.com. "ointment," early 15c., from Latin unguentem "ointment," from stem of unguere "to anoint or smear with ointment," from PIE root *ongw- "to salve, anoint" (source also of Sanskrit anakti "anoints, smears," Armenian aucanem "I anoint," Old Prussian anctan "butter," Old High German ancho, German anke "butter," Old Irish imb, Welsh ymenyn "butter")

நெய்யிடல் சேர்ந்த நீராட்டு வழக்கம் மண்ணனம் என்றும்,. மண்ணுமங்கலம் என்றும் பழந்தமிழ் வழக்கிற் சொல்லப்படும். (மண்ணுதல் = நீராடுதல், மூழ்குதல், கழுவுதல், பூசுதல், செய்தல், அலங்கரித்தல், செப்பமிடுதல். மண்ணனம்>மஞ்ஞனம்>மஞ்சனம் என்றும் இது திரியும். மங்கலத்தை திருவென்ற வேறு சொல்லாக்கி இன்று திருமஞ்சனம் என்கிறோம். இந்த விண்ணவச் சொல் மண்ணுமங்கலத்தில் எழுந்தது. பொதுவாய் விண்ணவ, சிவ ஆகமங்களில் உள்ள பல்வேறு பழக்கங்களும் பழங்குடிப் பழக்கங்களாய் ஆகின்றன. சமயங்களுக்கும் இதற்கும் மெய்யியல் வரிதியாய்ப் பெரிதும் உறவைக் காணோம்.) தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணை இயலில் பாடாண் திணையை விவரிக்கையில் 1037 ஆம் நூற்பாவில் “சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம்” என்று வரும். 

சேரன் பட்டமேறிய போதும் ஓவ்வோராண்டும் இது நடைபெற்றிருக்கும். இங்கே இன்னும் விதந்து வேறொன்று சொல்லப் படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று வந்த பின்னால் வாள், வேல், முரசு போன்றவற்றிற்குப் படையல் நடக்கும். அதிலும் இந் நெய்யிடுதற் சடங்கு நடைபெறும். அந்நிகழ்வை பழங்காலத்தில் வாள்மங்கலம் என்பர். இதுவும் மேற்சொன்ன நூற்பாவில், மாணார்ச் சுட்டிய வாள்மங்கலம்” என்று குறிப்பிடப்பெறும். (மாணார் = பகைவர்)     . .

அருவிலை நன்கலம் = அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை வயிரமொடு = (அதிற் பொருத்திய) வயிரத்தோடு கொண்டு; பெருவிறல் மூதூர்த் தந்து = பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து; பிறர்க்கு உதவி = பிறருக்கு உதவி; அமையார்த் தேய்த்த = அடங்காதாவரை அழித்த அணங்குடை நோன் தாள் = அணங்குடைய வலியகால் கொண்ட; இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை =  இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;     

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

நிலைத்த பெரும்புகழும், மறுவிலா வாய்மொழியும், 

இனிதேயிசைக்கும் முரசுங் கொண்ட 

வானவரம்பன் உதியஞ்சேரலாதனுக்கு, 

வெளியன்வேள் மகளாகிய நல்லினி ஈன்ற மகன்

நெஞ்சையள்ளும் அருவியுள்ள இமையத்தில் வில்பொறித்து, 

ஓசுங்கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி தன் செங்கோல் நிறுவி, 

தகுதிநிறைச் சிறப்பொடு பெரும்புகழ் மரபுகொண்ட ஆரியரை அடக்கி, 

நயமிலா வன்சொல்பேசும் யவனரின் பொருளைச் சிறைப்படுத்தி, 

அவ்வெற்றியின் பின், 

(வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து 

பின் வாளைக் கையிற்கொண்டு,, 

அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை, 

(அதிற்பொருந்திய) வயிரத்தோடு கொண்டு, 

பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து, 

பிறருக்கு உதவி, 

அடங்காதாவரை அழித்த, 

அணங்குடைய வலியகால் கொண்ட, 

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;     

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அன்புடன்,

இராம.கி.


Monday, May 08, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 5

 அடுத்தது பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு. இதற்குள் போகுமுன் முன்குறிப்புகளைப் பார்ப்போம்.  

ஒரு மொழியின் தொடக்கத்தில் தான்தோன்றியான கருத்துச்சொற்கள் (idea words) எழா. பருப்பொருட் சொற்களே (material words) எழும். பருப்பொருளில் இருந்தே, பகரிக் (rebus) கொள்கையின் படி கருத்துச்சொல் உருவாகும். அவ்வகையில் பன்மையைக் குறிக்கத் தமிழ்ப் பழங்குடி மாந்தன் பல்லையே அடையாளங் காட்டினான். 10 எனுங் எண்ணிக்கைப் பொருள் நெடுங்காலத்திற்குப் பிறகே அமைந்தது. இதன் தொடக்கம் பல் (>பல்த்து>பத்து>பது) என்பதே. இதே போல 3 ஐக் குறிக்க மூக்கையும், 5 ஐக் குறிக்க கையையும் காட்டியே தமிழெண்கள் எழுந்தன. 

1,2, 3, 5, 10 என்ற சொற்களில் இருந்து கூட்டல், கழித்தல், பெருக்கல் முறையில் மற்ற தமிழெண்கள் தோன்றின. [அவற்றை வேறு பொழுதில் பார்க்கலாம்.] பதில்/பதின் என்பவை பத்தோடு சேர்ந்து ஒரு தொகுதியாகும். பதினொன்று, பதினிரண்டு,.. பதினெட்டென்று எண்கள் வரும். கூடவே, பதினிரண்டு பன்னிரண்டென்றும், பதினொன்பது பத்தொன்பதென்றும் பேச்சில் திரியும். பப்பத்துப் பாட்டுகளாய் 10 ”பத்தில்>பதில்” கொண்டது பதிற்றுப் பத்து. பதில்+து = பதிற்று. பற்றிக் (பக்திக்) காலத்திலிருந்து இப்போதுவரைப் பதிகம் என்ற சொல்லையே பதிலுக்கு மாறாய்ப் பயன்படுத்துகிறார். பதில்/பதின் என்பது இப்போது வழக்கற்றுப் போனது.

உ.வே.சா.விற்குக் கிடைத்த பதிற்றுப் பத்தில் ஏடுகள் அரிந்ததால், 1 ஆம் பத்தும், 10 ஆம் பத்தும் கிடைக்க வில்லை (ஆனால் இன்னதென்று சொல்ல முடியா 5 துண்டுகள் மட்டும் கிடைத்தன.) முதலாம் பத்து உதியஞ் சேரலைக் குறித்திருக்கலாம் என்பர். அடுத்த 5 பத்துகள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க் கன்னி நார்முடிச் சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற ஆதன் பரம்பரையினரைக் குற்க்கும்.

மேலும் 3 பத்துகள் இரும்பொறைக் குடியின் செல்வக் கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகியோரைப் பேசும். முன்சொன்ன துண்டுகளால் பத்தாம்  பத்து பெரும்பாலும் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கே எனவுஞ் சிலர் ஊகிப்பர். பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளே வரும் தொடரை வைத்துத் தனித் தலைப்பு உண்டு. இக் குறிப்பிட்ட பாட்டின் தலைப்பு “*புண் உமிழ் குருதி*. இதைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். 

குமட்டூர் என்பது பெரும்பாலும் குமிட்டூர் ஆகலாம். 2 ஆம் பதிகத்தின் கீழே ”பாடிப் பெற்ற பரிசில் உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரம தாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதலிற் பாகங் கொடுத்தான் அக் கோ.” என்ற குறிப்பு வரும். இக்கூற்றை வைத்துக் குமிட்டூரை எளிதாய் அடையாளங் காணலாம். 

பிரமதாயம், பெருமானருக்குத் (brahmins) தரும் இறையிலி நிலம். சங்க காலத்திலேயே வேதநெறி தமிழகத்துள் ஓரளவு பரவிவிட்டதால், இப்படி இறையிலி நிலங்களை கொடுப்பது நடக்கக் கூடியது தான். (அதே பொழுது வேத மறுப்பு நெறிகளும் உலகாய்தமும் இங்கிருந்தன. பெரும தாய நெறியே சங்க காலத்தில் ஒங்கியது என்பது ஒரு பக்கச் சார்பாகும்.) கூடவே பல்லவர் காலம் (பொ.உ.500) தொடங்கிய பின் தான் பெரும தாயங்கள் (>பிரமதாயம்) எழுந்தன என்று வலுத்துச் சொல்வதற்கு இயலாது.   

ஐந்நூறூர் என்பதை 500 ஊர்களெனக் கொள்ள வேண்டாம். வெவ்வேறு தமிழ்ப் பெருமானர் கூட்டங்களில் (கோத்திரங்களில்) எண்ணாயிரம் (அஷ்ட சகஸ்ரம்) என்றொரு கூட்டமுண்டு..(எக்காலத்தில் அது எழுந்தது என்பது தனியாய்வு) இக் கூட்டத்தின் தொடக்கம் திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கலாம் என்பார். எண்ணாயிரம் பெருமானக் குடும்புகளில் இருந்து இந்த எண்ணாயிரம் என்ற வகைப்பாடு எழுந்திருக்கலாம். 

இதேபோல் தில்லையில் 3000 குடும்புகளும், திருப்பெருந்துறையில் 300 பேரும் இருந்தார். இப்பாட்டுக் குறிப்பின் வழி 500 குடும்புகள் கொண்ட சேர நாட்டு ஊரொன்று இதுபோல் பெரும தாயம் ஆனதை அறிகிறோம். (500 பேரும் பெருமானர் என்ற பொருள் கிடையாது.) தானங் கொடுக்கையில் சேரன் தன் நாட்டுக்குள் தானே கொடுப்பான்? வேறு நாட்டிலா கொடுப்பான்? எனவே உம்பற் காடும் குமிட்டூரும் சேர நாட்டினுள் தான் இருக்க வேண்டும். (சுற்றி வளைத்துச் சிற்றன்ன வாசற் கல்வெட்டைத் தவறாகப் படித்த தமிழறிஞர் சிலர் குமிட்டூரை ஓய்மான் நாட்டினுள் கொண்டு திண்டிவனம் பக்கம் தேடுவார். அந்தப் பிழை தமிழ் விக்கிபீடியாவிலும் உண்டு.)

உம்பலெனில் குமிழம் (coomb teak; Gmelina arborea). உம்பற் காடு = குமிழமரக் காடு. Gmelina asiatica என இன்னொரு வகையுமுண்டு. முன்னது பெருங் குமிழ். 2 1/4 அடி விட்டம், 100 அடி உயரம் வளரக் கூடிய மரம். 800 அடிதொடங்கி 3000 அடிவரை உயரமுள்ள குறிஞ்சி நிலத்தில் விரவிக் காணலாம். பின்னது பெரிய முட்செடி. நிலக்குமிழ் என்பார். 

குமிழ்மரத்தின் புறணி மழமழப்பாக, சாம்பல் படர்ந்த வெண்ணிறமாய் இருக்கும். 4 முதல் 8 அங். நீளத்தில் அகன்ற முட்டைவாகில் இதய வடிவில், கீழ்ப்புறம் முசுமுசுப்பாக இலைகளிருக்கும். 1 முதல்; 1.5 அங். வரை நுனியிலும், மஞ்சரிகளிலும் பழுப்புப் படர்ந்த மஞ்சள் நிறமாக மார்ச்சு, ஏப்பிரல் மாதங்களிற் பூக்கும். முட்டைச் சாயலில் 0.5 முதல் 1.0 அங். நீளத்தில் செம்மஞ்சள் நிறத்தோடு மகிழ் வாசனையோடு மழைக்காலங்களிற் காய்க்கும். 

பழங்கள் உருண்டு திரண்டு குமிழாயிருப்பதால் குமிழ் மரமென்று அழைத்தார். இதைக் கும்பலம்>கும்பளம் என்றுஞ் சொல்வார். கும்பலிற் குகரம் விட்டு உம்பலென்றுஞ் சொல்வார். தவிர, ’அம்’மின்றி இகரவீற்றில் கும்பலி>கும்பளி என்றுஞ் சொல்வர். சேரலத்தில் சில போது மூக்கொலி பெற்று கும்மளி> குமளி என்றுஞ் சொல்லப்பட்டது. இற்றை மலையாளத்தில் கும்பில், கும்புலு, குமிலு என்றாகும். 

வடக்கே நகருஞ் சொற்களிற் பெரும்பாலும் ளகரம் டகரமாயும், லகரம் ரகரமாயும் மாறும். கன்னடத்திற் கும்புலு என்பது கும்புடு என்றும், தெலுங்கிற் குமரு, கும்மடி என்றும், ஒடியாவில் குமர், கும்ஹரென்றும், வங்காளத்தில் கும்பர், கம்பர், கமரி என்றும், அசாமீசில் கொமரி என்றும், மேகாலய கரோ மொழியில் கமரி, கம்பரெ என்றும், நேபாலியில் கமாரி என்றும், இந்தியில் கும்பரி, கம்ஹர், கமர என்றும், பஞ்சாபியில் கும்ஹர் என்றும், சங்கதத்தில் கம்பரி என்றும் அழைப்பர். இத்தனையும் தமிழ்வழிச் சொற்கள், இது போக Sanskrit: sindhuparni, sindhuveshanam, stulatvach; Oriya- Bhadraparni; Gujarati- Shewan, Sivan; Hindi- sewan; Kannada- Shivane mara, Kasmiri- shivani; Marathi- shivan, siwan; Sinhala- Demata என்றும் இன்னோர் அடிப்படையில் சொல்வரிசை உண்டு. 

தமிழகக் கேரள எல்லையில் இன்றுள்ள குமிழி>குமிளியே அற்றைக் குமிழூர்>குமிளூர்>குமிட்டூர் என இப்போது புரிந்திருக்கும். மரத் தொழிலர் நடுவே குமிழ மரம் குமிட்டுத் தேக்கு என்றுஞ் சொல்லப் பெறும் குமிழியில் இருந்து 4 கி.மி. தொலைவில் தேக்கடி (தேக்கு+அடி). தேக்கும், வெண் தேக்கும், குமிட்டுத் தேக்கும் அருகருகே விளைவது வியப்பல்ல. 

குமிழூர் அன்றுஞ் சேரலஞ் சேர்ந்தது தான். இவ்வூருக்கு அருகில் தான் இமையவரம்பன் நெடுஞ்சேரல் குமிட்டூர்க் கண்ணனாருக்கு உம்பற் காட்டு ஐநூற்றூரைப் பெருமதாயமாய் அளித்தான். குமிழிக்கு அருகில் தான், குட்ட நாடு. முல்லைப் பெரியாறு; கண்ணகி போய்ச்சேர்ந்த இடம். செங்குட்டுவன் மலைக்காட்சி கண்ட இடம். மங்கலாதேவி கோயில். வஞ்சிக் காண்டம் தொடங்குமிடம். 

சேரலாதன் ஐந்நூறூர் தவிர தன்னாட்டு வருவாயில் ஒரு பாகத்தையும் (எத்தனை என்று தெரியவில்லை) தான் அரசனாய் வாழ்ந்த 38 ஆண்டிற் இப் புலவருக்குக் கொடுத்திருக்கிறான். வருமானத்தில் ஒரு பகுதியை உள்நாட்டானுக்குத் தானே கொடுக்க முடியும்? . 

பாடாண்டிணை. ”பாடு+ ஆள்ந்திணை” என விரிந்து, போற்றக் கூடிய ஆளுமையைப் புகழ்வதாய் அமையும். (எல்லாப் புறத்தினைகளும் ஒரு குறிப்பிட்ட செய்கையை மட்டுமின்றி ஒரு மரத்தையும் சேர்த்துக் குறிப்பர். பாடாண் மரம் பற்றி மூலிகை மருந்தறிவியல் ஆய்வாய் பேரா.இரா.குமாரசுவாமி ஓர் அருங்கட்டுரை படைத்தார். பார்க்க: ”தமிழர் மெய்யியலும், அறிவுமரபும்” பக்.54-75. உலகத்தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டாய்வு நிறுவனம், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி: 8903838356) பாட்டின் துறை: செந்துறை: வேறொரு ஆளுமையோடு ஒப்பிடாது நேர்படச் சொல்வது செந்துறையாகும்.

இசையியலில் தூக்கென்பது தாளத்தைப் பொறுத்து அமையும், யாப்பிலோ இன்ன செய்கைக்கு இன்ன வகைப் பாட்டென வழிகாட்டு உண்டு. ஒருவரை அழைத்துச் சொல்கையில் அகவல் ஓசையோடு ஆசிரியமாய் அமைந்தாற் சிறப்பு என்பர். மாறாக அழைத்துச் சொல்வதைச் செப்பல் ஓசையோடு வெண்பாப் பாடின், மரபின் படி அது சரியல்ல. 

(இக்காலத்தில் யாரும் மரபைக் கண்டுகொள்வது இல்லை. அவரவர்க்குப் பிடித்தபடி ஆசிரியம், விருத்தம், வெண்பா, புதுக் கவிதை எனக் கலந்தடிப்பார். அதே போல இன்ன பொழுதிற்கு இன்ன பண் என்றா பார்க்கிறோம்? அதிலும் கலப்புத் தான்.) அகவல், செப்பல், துள்ளல், தூங்கல் ஆகியவற்றை நேரம், காலம், நிகழ்வு, செய்கை பார்த்து அந்தந்தப் பா பாடுவது செந்தூக்காகும். அழைத்துச் சொல்லும் வகையில் ஆசிரியம் இங்கு வருவதால் இது செந்தூக்கு. 

அடுத்தது, எழுத்துக்கள் வரும் வகை வருநம்> வண்ணம் ஆகும். 20 வகை வண்ணங்கள் உண்டு. இப்பாட்டில் வருவதை ஒழுகுவண்ணம் என்பர். ஓர் ஓடை தடைப்படாது ஓடுவது போல ஒழுகும் வண்ணம். படித்துப் பார்க்கும் போது இதில் எத்தடையும் வராது பாடலமையவேண்டும். 

வரைமருள் புணரி வான்பிசி ருடைய

வளிபாய்ந் தட்ட துளங்கிரும் கமஞ்சூல்

நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி

அணங்குடை அவுண ரேமம் புணர்க்கும்

சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்

செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப

அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்

மணிநிற யிருங்கழி நீர்நிறம் பெயர்ந்து

மனாலக் கலவை போல வரண்கொன்று

முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை

பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்

கடியுடை முழுமுத றுமிய வேஎய்

வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்

நாரரி நறவி னார மார்பின்

போரடு தானைச் சேர லாத

மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும்

வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்

பொலனணி எருத்த மேல்கொண்டு பொலிந்த 

நின்

பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே

கவிர்ததை சிலம்பிற் றுஞ்சும் கவரி

பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும்

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங் குமரியொ டாயிடை

மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே.

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்

சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

வான்பிசிர் உடைய வரைமருள் புணரி 

வளிபாய்ந்து அட்ட துளங்குஇரும் கமஞ்சூல்

நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி

விலங்குநர் செவ்வாய் எஃகம் அறுப்ப,

மனாலக் கலவை போல 

அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்

மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, 

அரண் கொன்று

முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை

பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்

கடிஉடை முழுமுதல் துமிய ஏஎய் 

வென்று 

எறிமுழங்கு பணைசெய்த வெல்போர்

நார்அரி நறவின் ஆர மார்பின்

போர்அடு தானைச் சேரலாத

பரந்து இலங்கு அருவியொடு 

கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி

நரந்தம் கனவும்

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.

மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்

வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்

பொலன்அணி எருத்த மேல்கொண்டு பொலிந்தநின்

பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். முதலில் நாம் பார்ப்பது ”அணங்கைப்” பற்றியாகும். நாட்டு மரபுகள் அறியாத் தமிழாய்வாளரும், அவர்வழித் தமிழிலக்கியங் கற்ற மேலையாசிரியரும் இச் சொல்லைத் தவறாகவே புரிந்து கொள்கிறார். 

இணையத்தில் தேடின், பென்னம் பெரிய பேராசிரியர் எல்லாம் இதில் தடுமாறியது புரியும். அணங்கு என்பது ஏதோ ஒரு வகை ஆற்றல் என்றும் இது பெண் முலையில் குடி கொள்ளும் என்றும், அணங்கின் வழி தான் கண்ணகி மதுரையை எரித்தாள் என்றெல்லாஞ் சொல்வார். இது போன்ற விளக்கங்கள் தென்பாண்டி நாட்டின் நாட்டுமரபு தெரிந்தோருக்குச் சற்று  வியப்பாகவே தெரியும். பல்வேறு சங்க இலக்கியக் காட்டுக்களை எடுத்துக் காட்டி இப்புரிதல் பிழையென்று முதலிற் சொன்னவர் முனைவர். வி.எஸ்.இராஜமேயாவார்.. 

அணங்குதல் = மேலேறுதல். வீரம், மகிழ்ச்சி, பயமென்று தான் கொள்ளும் இயல் வெளிப்பாடுகளிற் சட்டென மாறி எக்கிய உணர்ச்சிகளுக்கு (extreme emotions) ஆட்பட்டு இதுவரை காணாதபடி ஒருவர் நடந்து கொண்டால், ”இவருக்கு என்னாச்சு? ஏனிப்படி நடந்துகொள்கிறார்? ஏதேனும் பேய் பிடித்ததா? ஆவி இவருட் புகுந்ததா? சாமி, கீமி வந்துவிட்டதா?” என்று சுற்றியுள்ளோர் சொல்வார் அல்லவா? 

அளவு மீறிய ஆற்றலுடன் கொஞ்சமுங் களைப்புறாது வேலை செய்பவரையுங் கூடச் சாமி வந்தவர் போல் செயற் படுவதாய் எங்கள் நாட்டுப்புறத்திற் சொல்வர். இது போன்ற வெளிப்பாடுகளை (நீண்ட நாள், குறுகிய நேர) மனப் பிறழ்வுகள் என்றும், உடைபட்ட ஆளுமையின் (split personality) வெளிப்பாடு என்றும் சொல்லி, விதப்பு மருத்துவங்களையும், நரம்பியல் மருந்துகளையும் இற்றை உளவியல் நாடச் சொல்லும். 

ஆனால் நாட்டுப்புறப் பழங்குடிப் பார்வையில் இவற்றை அல்மாந்த (அமானுஷ்ய)ச் செயற்பாடுகளாக்கிச் ”சாமியாடியைக் கொண்டு வா; வேப்பிலையால் மந்திரித்து விடு; திருநீறு பூசு; குறி கேள்! படையல் போடு; பூசை நடத்து” என்றே நடவடிக்கை எடுப்பார். சங்க இலக்கிய வேலன் வெறியாட்டு போன்றவையும் இவற்றைச் சேர்ந்தவை தான் (வேலனைத் தான் இன்றைக்குச் சாமியாடி என அழைக்கிறோம். வெறியாட்டம் = சாமியாட்டம்.) மேலே சொன்ன பேய், பிசாசு, ஆவி, சாமி ஆகிய வெவ்வேறு விதப்புகளுக்கான பொதுச் சொல்லே அணங்காகும். மேலேறுதல் என்ற கருத்தீடு இப்போது விளங்குகிறதா? 

அணங்குடை அவுணர் = அணங்குள்ள அவுணர். உரையாசிரியர் பலரும் அவுணரை அசுரராக்கித் தேவாசுரக் கதைகளைச் சொல்வார். அப்படி இருக்கத் தேவையில்லை. நாகர், இயக்கர், அரக்கர் (இதையே இராட்சதர், இராக்கதரென்பார்), பூதர், அசுரர் என்போர் வெவ்வேறு பழங்குடி எதிரிகள். இவரில் எத்தனை பேர் தமிழரின் எதிரிகள்? எத்தனை பேர் தமிழருள் கலந்து போனார்? - என்பதெலாம் ஆய்வு விதயங்கள். வடபுலத் தென்புலக் கதைகளை இக்காலத்திற் கலந்து பேசுகிறோமா?- என்பதும் பெரும் ஆய்வு. எதிரிகளென்று கற்பிக்கப் படுவதன் மிச்ச சொச்சம் தமிழரிடமும் இருக்கலாம். அவுணர் உண்மையில் அசுரரா? அன்றி உவணரெனும் மலைக்குடியாரா?- புரியவில்லை. 

(உவணம் = உயரமான இடம், மலை. வானம் போன்ற பொருளுமுண்டு. உவணர்> ஊணர்> ஔணர்> அவுணர் எனும் திரிவை எண்ணிப் பாருங்கள். வரலாற்றில் மிலேச்சரான ஹூணராய் இவரிருக்க வழி இல்லை. ஏனெனில் அவர் பொ.உ.5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பொதுவாக வெளியாரைக் குறிக்குஞ் சொற்கள் நம்மிடந் திரியலாம். ”கன்வ” எனும் மகதச் சொல் ”கனக” என நம் வாயில் திரிந்ததே? செங்குட்டுவன் தோற்கடித்த கனக விசயன் ஒரு மகத அரசன் ஆகலாம் எனச் ”சிலம்பின் காலத்திற்” சொன்னேன். அம் முகன்மையை நம்மிற் பலரும் உணர வில்லை. அயொனியர் என்பார் நமக்கு யவனரானாரே?) 

ஏமம் புணர்க்கும் = ஏமங் (safety) காக்கும்; சூருடை முழுமுதல் தடிந்த = சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி; பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் = பெரும்புகழ் கொண்ட கடுஞ்சின விறல்வேளின் (முருகனின்); களிறு ஊர்ந்தாங்கு = களிறு நகர்ந்தது போல்; வான்பிசிருடைய = வான்தெறிக்கும் துளிகளுடைய; வரை மருள் புணரி = மலையென மருளத்தகும் அலையை; வளி பாய்ந்து அட்ட = காற்றுப் பாய்ந்து சிதைக்க; துளங்கு இரும் கமஞ்சூல் = அசையும் பெருநீரைச் சூலாக்கி; நளி இரும் பரப்பின் = பென்னம் பெரிதாய்ப் பரந்த; மாக்கடல் முன்னி = கருங்கடலில் (சமுத்திரம்) முன்சென்று 

[தம்நாட்டுக் கடல்வணிகம் காப்பாற்றுதற்காகச் சேரர் கடல்வழி சென்று மேற்கே இலக்கத்தீவுக் கடற் கொள்ளையரைத் தாக்கியழித்த செய்தி இங்கே சொல்லப் படுகிறது. பொ.உ.மு.200 களுக்கு முன்னேயே யவனரோடும், உரோமரோடும் தமிழரின் மேற்கு வணிகம் தொடங்கியது. சேரலத்து மிளகும் கொங்கின் மணியும், சூர்ணி முத்தும் எனப் பல பொருட்கள் சேரலத்தில் இருந்து ஏற்றுமதியாகின. மேற்கின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த கொடி முந்திரிக் (grapes) கள்ளும், தங்கமும், குங்குமப் பூவும் (Crocus sativus), சாம்பாணியும் (சாம்பிராணி) இங்கிறங்கின. 

முசிறி, தொண்டி, நறவில் தொடங்கி வடக்கே பாருகச்சம் (Barukaccha> Baroach) வரை இந்த வணிகம் நடந்தது. மூவேந்தரையும் (குறிப்பாகச் சேரர்), நூற்றுவர் கன்னரையும் (Satakarni) மகதத்தால் அசைக்க முடியவில்லை. சோழரும், பாண்டியரும் கிழக்கு வணிகத்தில் சிறந்திருந்தார். சங்க இலக்கியத்திற் பெரிதும் பேசப்படும் பலவும் அரசியற் பொருளாதாரம் (political economy) தொடர்பானவை. எங்கெல்லாம் பொருளியற் தேவை எழுந்ததோ, அங்கெல்லாம் போரும் உடன்சென்றது. (Wherever economy demanded, war followed). பிற்காலத்தில் பொ.உ.1000க்குப் பின்னால் கிழக்கு வாணிகம் தடைப்பட்ட போது, இராசேந்திர சோழன் சிரீவிசயத்தின் மேற் படையெடுத்துப் போனான்.]  

விலங்குநர் = (இச்செயல்) தடுப்போரை (கடற்கொள்ளையரை); செவ்வாய் எஃகம் = கூர்(sharp)ஓர எஃகு வாளால் (இரும்புக் கால முதல் அடையாளங்களும் பழம் எஃகுப் பொருட்களும் தொல்லாய்வின் மூலம் தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. எஃகு = steel; எஃகம் = steel sword); அறுப்ப = அறுத்து; மனாலக் கலவை போல = குங்குமப்பூக் கலவை போல்; அருநிறம் = செந்நிறம்; அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் = செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்; மணிநிற இருங்கழி = நீலப் பெருங்கழி, நீர்நிறம் பெயர்ந்து = நீரின் நிறம் மாற, அரண்கொன்று = (எதிர்த்தவரின்) காவலழித்து; முரண்மிகு சிறப்பின் = முரண் மிகு சிறப்பால்; உயர்ந்த ஊக்கலை = உயரூக்கம் கொண்டவனே! 

[இங்கு ஓர் இடைவிலகல். ”மனாலம்” என்பது இங்கே எழுத்துப் பெயர்ப்பாய் Minoan crete ஐயும், மனாலக் கலவை என்பது குங்குமப்பூக் கலவையையும் குறிக்கிறது. கிரீட்டிலிருந்து தான் பொ.உ.மு. 3000 - 1100 இல்  மற்ற நாடுகளுக்கு குங்குமப்பூ ஏற்றுமதி செய்யப்பட்டது. 

பார்க்க: https://en.wikipedia.org/wiki/History_of_saffron. Saffron played a significant role in the Greco-Roman pre-classical period bracketed by the 8th century BC and the 3rd century AD. The first known image of saffron in pre-Greek culture is much older and stems from the Bronze Age. A saffron harvest is shown in the Knossos palace frescoes of Minoan Crete, which depict the flowers being picked by young girls and monkeys. 

One of these fresco sites is located in the "Xeste 3" building at Akrotiri, on the Aegean island of Santorini—the ancient Greeks knew it as "Thera." These frescoes likely date from the 16th[ or 17th century BC` but may have been produced anywhere between 3000–1100 BC. They portray a Minoan goddess supervising the plucking of flowers and the gleaning of stigmas for use in manufacture of what is possibly a therapeutic drug. 

A fresco from the same site also depicts a woman using saffron to treat her bleeding foot. These "Theran" frescoes are the first botanically accurate visual representations of saffron's use as an herbal remedy. This saffron-growing Minoan settlement was ultimately destroyed by a powerful earthquake and subsequent volcanic eruption sometime between 1645 and 1500 BC. The volcanic ash from the destruction entombed and helped preserve these key herbal frescoes.

தவிரக் குரு>குருங்கு என்பது தமிழிற் சிவப்பு நிறங் குறிக்கும் சொல். குருங்குமம்>குங்குமம் என்பதன் வழி, நிறத்தை வைத்து ஓர் இறக்குமதிப் பொருளுக்கு ஆன பெயர் தெரிகிறது. (பருத்தி - ஒரு பிறந்த இடப் பெயர். கொட்டை> cotton - இறங்கிய இடங்களில் ஏற்பட்ட பெயர்.) ”குருங்குமம்” பின்னால் (kurkema Aramaic) இலும், krocos என கிரேக்கத்திலும் என மேலை நாடுகளிற் பரவும். அதே பொழுது azupirana என்ற akkadian சொல்லிலிருந்து Saffron என்ற இற்றை மேலைச்சொல் பிறந்தது. 

குங்குமப்பூ வணிகத்தோடு பதிற்றுப்பத்து வரியையுஞ் சேர்த்து விக்கிப்பீடியாவில் யாரேனுங் குறித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேரலாதன், செங்குட்டுவனின் பழங் காலமும் (’சிலம்பின்’ காலமும்) மனாலக்கலவை என்ற கூட்டுச் சொல்லால் உறுதிப் படும். எத்தனை இந்திய மொழிகள் அவைகளின் இலக்கியங்களில் ”மனோலத்தைப்” பதிவு செய்தன??? மனாலம் என்ற பெயர் கிரேக்கருக்கும் முந்தைய crete நாகரிகத்தைக் குறிப்பதாகும். காலத்தால் இது பொ.உ.மு.800 க்கும் முந்தையக் குறிப்பு இதுவாகும்.தமிழின் முன்மையை இது கட்டாயம் உணர்த்துகிறது.]   

பலர் மொசிந்து ஓம்பிய = பலரும் மொய்த்துக் காப்பாற்றிய; திரள்பூங்கடம்பின் = திரள்பூங் கடம்பமரத்தின்; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று = காவலுடைய அடிமரத்தை வெட்ட ஏவி, வென்று; எறிமுழங்கு பணைசெய்த வெல்போர் = (அதன் மூலம்) அடித்து முழக்கும் பறை செய்த வெல்போரினையும்; நாரரி நறவின் ஆர = நார்ச் சீலையால் வடித்த கள்ளையும் பருகும்; மார்பின் = மார்புடைய; போர் அடு தானைச் சேரலாத = போரடுக்கும் தானை கொண்ட சேரலாதனே! (எதிரியின் காவல் மரம் வெட்டி முரசு செய்வதும், எதிரிக் கோட்டை அழித்து, எள் விதைத்துக் கழுதையைக் கொண்டு உழுவதும் அன்றிருந்த மரபுகளாகும். எள் விதைத்து கழுதையால் உழுவதை மூவேந்தர் மட்டுமின்றிக் கலிங்கத்துக் காரவேலனுங் கூடச் செய்தான். மூவேந்த மரபுகள் தென்னகம் முழுக்கப் பரவினவோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.)

பரந்திலங்கு அருவியொடு = பரந்து விளங்கும் அருவியொடு; கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி = முருக்கு நிறை மலையில் துயிலும் கவரிமான்கள், கவிர் (Erythrina suberosa Roxb.), முள் முருக்கு (Erythrina stricta Roxb.), கலியாண முருக்கு (Erythrina variegata L.; also known as Erythrina indica) என்று 3 விதமான முருக்கு மரங்கள் (Indian coral tree) உண்டு. (முருக்கையோடு முருங்கையைக் குழம்பவேண்டாம்.) கலியாண முருக்கு பொ.உ.8/9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைக்கப்பட்டது. பெரும்பாலும் கவிரும், முள்முருக்கும் நம்மூர் மரங்களாகலாம். ("செம்முகை அவிழ்ந்த முண்முதிர் முருக்கு” என்பது அகம்:99.2) கவிரும் முருக்கும் 1200 அடி தொடங்கி 4000 அடிவரையில் குறிஞ்சி நிலத்தில் வளரும். முருக்கம் பூ ஒருவகையில் முருகனின் நிறங் குறிப்பது.

முருக்கு மரங்களைக் காட்டுத்தீப்பிழம்பு போல் பூக்கும் புரசு மரத்தோடு [Butea monosperma; காட்டுமுருக்கு, வெள்ளைப்புரசு. இதைச் செந்தூரப்பூ மரம் என்றுஞ் சொல்லுவர். ”பதினாறுவயதினிலே” திரைப்படத்தில் வரும் “செந்தூரப்பூவே” பாட்டு. சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் கங்காதீசர் கோயிலின் தலமரம். புரசை வடமொழியில் பலாசு/பலாசம் என்பார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க மரம். சென்னையிலிருந்து தில்லிபோகும் இருவாய்ப்-railway-பாதையில் Ballarshaவை எண்ணிக்கொள்ளுங்கள். இராபர்ட்கிளைவ் வங்காளத்திற் சண்டையிட்டுவென்ற பலாசி யுத்தம் எண்ணிப்பாருங்கள்.] பலரும் குழம்பிக்கொள்வதுண்டு. நானுங் குழம்பியிருக்கிறேன்.  

கவரி = கவரிமான்கள், இவை இமையமலை அடிவாரத்திலும், சற்று உயரக்குன்றுகளிலும் அலைந்துதிரியும் யாக் எருமைகள். இவற்றின் மேனியை மூடினாற்போல் உரோமங்களுண்டு. குளிருக்காக இந்த முடி. இந்த எருமைகள் வெப்பநிலங்களில் வளரா. தென்னகத்தில் இவை கிடையா. இந்தியாவில் இவை இமையமலைப் பகுதியில் மட்டுமேயுள்ளன. 

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் 

உயிர்நீப்பர் மானம்வரின்”  

என்பது குறள். பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு கவரிமானைக் குறிப்பதால் பாட்டிற் சொல்லப்படும் ஆரியர் வடக்கே இமையத்தின் அடியில் வாழ்பவரே என்ற கருத்து உங்களுக்கு வலுப்படும். (ஆரியர் என்ற சொல்லிற்கு noble என்று பார்ப்பதை வேறிடத்தில் பேசுவோம்.)    

நரந்தம் கனவும் = நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற, நரந்தம் புல் = நல்ல வாசனையோடு வளரும் புல். எலுமிச்சம் புல் என்றுஞ் சொல்லப்படும். [நரந்தம் என்ற தனிச்சொல் எலுமிச்சைக்கு முதலிற் பயன்பட்டு இங்கு புல்லிற்கு வாசனை கருதி மாறிவந்தது. நார்த்தை, நாரங்கை (>orange) போன்ற சொற்களும் நரந்தத்தோடு தொடர்பானவை] நரந்தம்புல் ஆங்கிலத்தில் Cymbopogan எனப்படும்.புல்லிலிருந்து பெறப்படும் நரந்த (சிட்ரொனெல்லா) எண்ணெய் மணமூட்டும் பொருளாய்ப் பயனாகிறது. Cymbopogan citratus, Cymbopogan flexuosus, Cymbopogan martinii, Cymbopogan nardus எனப் பல்வேறு வகைகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வளர்கின்றன. இங்கே Cymbopogan flexuosus என்று உத்தரப் பிரதேசத்திலும் வடக்கு பீகாரிலும் விளையும், இவற்றிற்கு வடக்கே இமையமலைடடியில் வளரும் புல் பேசப்படுகிறது. கவரிமான்கள் இந்தப்புல்லைத் தின்னக் கனவு காண்கின்றனவாம்..  

ஆரியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப்போன; இங்கே வடக்கே இமையமலை அடிவாரம் வரைக்கும்போய் ஆரியரைத் தோற்கடித்தது பேசப்படுகிறது. சிலம்பின் வஞ்சிக்காண்டத்தி;ல் இரண்டாம் படையெடுப்பிற்கான விவரிப்பில் முதற்படையெடுப்பை அசைபோட்டுச் சிலசெய்திகள் சொல்லப்படும். இதுபோன்ற படையெடுப்புக்கள் பொ.உ. 5 ஆம் நூற்றாண்டில் நடக்கவேயில்லை. (காய்தல் உவத்தலின்றி ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால்) சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் வெவ்வேறு செய்திகளும் சிலம்பின் வஞ்சிக்காண்டச் செய்திகளும் உறுதியாக இமையவரம்பன் சேரலாதன் காலத்தில் பொ.ய்.மு.120க்கு முன் நடந்த படையெடுப்பை உறுதிசெய்கின்றன. சங்ககாலத்தை பொ.உ.மு.600 இலிருந்து பொ.உ.150 வரை சொல்வதே சரியென்று விளங்கும். அடுத்தடுத்துப் பல பாடல்கள் இதை உறுதிசெய்கின்றன. தமிழர் வடக்கே போகவே இல்லை என்று சொல்லிச் சங்க காலத்தைக் குறைத்து மதிப்பிடுபவர் நாம் என்ன சொல்லியுங் ஏற்கப் போவதில்லை. அவர் அடம் பிடித்துக் கொண்டேயிருப்பார்.

பேரிசை இமயம் = பெரும்புகழ் இமையமும், தென்னங் குமரியொடு ஆயிடை = தென்குமரியொடும் ஆகிய இடைப்பட்ட இடங்களின்; மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. = செருக்குற்று நிலைத்த மன்னரின் மறம்கெடக் கடந்து; மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் = மார்பிற்கிடந்த பசியமாலையும் நெற்றிப்பட்டமும் விளங்க; வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் = வலிமிகு பெரும் தந்தத்தால் பழிதீர்த்த யானையின்; பொலன் அணி எருத்த மேல் கொண்டு பொலிந்த = பொன்னணி எருத்தின்மேல் பொலிந்துகொண்டு சென்ற; நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே = பலரும்புகழும் உன் செல்வத்தை இனிதே கண்டோம். 

பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

அணங்குள்ள அவுணரின் ஏமங்காக்கும் 

சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி, 

பெரும்புகழ்கொண்ட கடுஞ்சின விறல்வேளின் 

களிறு நகர்ந்ததுபோல், 

வான்தெறிக்கும் துளிகளுடைய

மலையென மருளத்தகும் அலையைக் 

காற்றுப்பாய்ந்து சிதைக்க, 

அசையும் பெருநீரைச் சூலாக்கி, 

பென்னம்பெரிதாய்ப் பரந்த கருங்கடலில் 

முன்சென்று, 

(இச்செயல்) தடுப்போரைக் 

கூரோர எஃகு வாளால் அறுத்து; 

குங்குமப்பூக் கலவைபோல் 

செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால், 

நீலப்பெருங்கழி நீரின் நிறம்மாற, 

(எதிர்த்தவரின்) காவலழித்து, 

முரண்மிகுசிறப்பால்,

உயரூக்கம் கொண்டவனே! 

பலருங்கூடிக் காப்பாற்றிய, 

திரள்பூக்களும் காவலுமுடைய, 

கடம்பின் அடிமரத்தை வெட்ட ஏவி, 

வென்று, (அதன்மூலம்) 

அடித்துமுழக்கும் பறைசெய்த வெல்போரினையும் 

நார்ச்சீலையால் வடித்த கள்ளையும் 

பருகும் மார்புடைய 

போரடுக்கும் தானைகொண்ட சேரலாதனே! 

பரந்துவிளங்கும் அருவியொடு 

முருக்குநிறை மலையில் துயிலும் கவரிமான்கள்  

நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற,  

ஆரியர் தோற்றுப்போன, 

பெரும்புகழ் இமையமும் 

தென்குமரியொடுமாகிய 

இடைப்பட்ட இடங்களிற் 

செருக்குற்று நிலைத்த மன்னரின் 

மறம்கெடக் கடந்து 

மார்பிற்கிடக்கும் பசியமாலையும் 

நெற்றிப்பட்டமும் விளங்க, 

வலிமிகு பெரும்தந்தத்தால் 

பழிதீர்த்த யானையின் 

பொன்னணி எருத்தின்மேற் 

பொலிந்துகொண்டு சென்ற, 

பலரும்புகழும் உன்செல்வத்தை 

இனிதே கண்டோம்!

அன்புடன்,

இராம.கி. 


Friday, May 05, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 4

அடுத்தது நற்றிணை 170 ஆம் பாட்டு.. பாடியவர் பெயர் தெரியவில்லை. மருதத் திணை அழகியொருத்தி விழவுக் களம் வர, அவளழகு கண்டு அதிர்ந்து போய், வேறு சிலர் தம்முள் பேசிக்கொண்டது. உரையாசிரியரின் சுவடிக் குறிப்பு ”தோழி. விறலிக்கு வாயில் மறுத்தது” என்றே சொல்கிறது. பாட்டில் வரும் ”வன்மை” என்ற சொல்லாட்சி கண்டு விறலியென்று சொன்னாரா, தெரியவில்லை. விறல் = வன்மை, வல்லமை. முன்பகுதியிற் சொன்னது போல் இங்கும் ஆரியரின் தோற்றச் செய்தியே சொல்லப்படுகிறது. 

மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,

வார்ந்த வால் எயிற்று சேர்ந்து, செறி குறங்கின்

பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்

விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;

எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,

பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது

ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்

பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

மடக்கண், தகரக்கூந்தல், பணைத்தோள், 

வார்ந்த வால் எயிற்று சேர்ந்து, 

செறி குறங்கின் பிணையல் அம் தழை தைஇ, 

துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின்றனளே;

எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;

பேர் இசை முள்ளூர் ஒள் வாள் மலையனது

ஒரு வேற்கு ஓடியாங்கு, 

பலர் உடன் கழித்த ஆரியர் துவன்றிய 

இவள் வன்மை தலைப்படினே,

நம் பன்மையது எவனோ?

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். 

மடக்கண் = இளங்கண்; முதிர்ந்த கண் சுருக்கம் விழுந்து அகவையைக் கூட்டிக் காட்டும். இன்னொரு விதத்திற் பார்த்தால், ”வளைந்த கண்” எனலாம்; மடங்குதல் = வளைதல்; அழகுற வளைந்த கண் என்றுமே மாற்றாரை ஈர்க்கும். தகரக் கூந்தல் = மயிர்ச் சாந்து பூசிய கூந்தல்; தகர்= பொடி; தகரம்= விதப்புப் பொடி; தலை மயிர்க்கு இடும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டுமே சாந்தல்ல. பூசும் எல்லாப் paste களுமே சாந்துகள் தான். சிமிட்டிச் சாந்து. சுண்ணாம்புச் சாந்து என்று சுவரிற் பூசுவதுஞ் சாந்து தான். ”சாந்தின்” பொருண்மையை நாம் உணர வில்லை.) இக் காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக் கொஞ்ச நேரm இருந்து, அதன்பின் பெண்கள் குளிக்கிறாரே, அதேபோல சங்க காலப் பெண்கள் தகரச் சாந்தைத் தலையிற் பூசி நீராடியிருக்கிறார். இத் தைலங்கள் முடி நிறத்தை மாற்றா. மாறாக, முடியின் அடர்த்தியையும், நீளத்தையுங் கூட்டும்.. 

(எங்கள் வீட்டிலேயே 50/55 ஆண்டுகளுக்கு முன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச் சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடிகட்டித் தலையிற் பூசிக் குளித்திருக்கிறோம். இத் தைலம் செய்வதற்காக மதுரையில் இருந்து ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவார். சாறு பிழிந்து எண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சுவது 2,3 நாட்கள் நடக்கும். எம் வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் (bottle) புட்டிலாய் இத் தைலம் போகும். இளம் அகவை நினைவுகள் இப்போது மங்கலாய்த் தோன்றுகின்றன. 

இச் செய்முறையைக் கற்காது போனேன். பொன்னாங் கண்ணி, கரிசலாங் கண்ணி, கறி வேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டி வேர், அதி மதுரம், நெல்லிக் காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப் பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சுங் குறிப்பை எங்கோ குறித்து வைத்தேன். இப்போது கிடைக்கவில்லை. ”மயிர்ச் சாந்து செய்ய வழி என்ன?” என்றும் தெரிய வில்லை. நம் மரபு அறிவுகளை பலரும் இப்படித் தான் கொஞ்சங் கொஞ்சமாய்த் தொலைக்கிறோம்.)

பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; வார்த்த வால் எயிற்று சேர்ந்து = அச்சு வார்த்தது போல் வெண்பற்கள் சேர்ந்து; செறி குறங்கின் = செறிந்த தொடைகள்; 

”குறங்கின்” விதப்பை (speciality) இங்கு சொல்லியே ஆகவேண்டும். குறங்குதல் = ஒரு தண்டு/கயிற்றின் மூலம் உருளையைச் சுழற்றுதல். பம்பரத்திற் கயிறிட்டு அதை இழுத்துச் சுழற்றுகிறோமே, அது எப்படி?. மிதி வண்டி பயிலும் சிறார், வண்டியின் உயரம் கூடின், முக்கோணச் சட்டத்துள் கால் கொடுத்துக் குறங்கு மிதி போடுவாரே (crank pedal), அது எப்படி? இடுப்பெலும்பின் கீழே மூட்டிச் சேரும் தொடையெலும்பைத் தசையாற் புரட்டித் திருக (turn) முடிகிறதே? தோளோடு மேற்கை சேரும் மூட்டிலும் திருக்கை (torsion) ஏற்படுத்த முடிகிறதே? அது எப்படி? 

ஊர்க் கேணிகளில் இராட்டினக் கயிற்றின் ஒரு பக்கத்தில் நீர்வாளியும்,  இன்னொரு பக்கத்தில் கையிழுப்பும் சேர்கையில், ஒவ்வோர் இழுப்பிலும் இராட்டின உருள், அதன் வழி, குறிப்பிட்ட உயரத்திற்கு நீர்வாளி  எழுவது எப்படி?.கை மாற்றி அடுத்த கையால் கயிற்றைக் குறுக்கி இச்செயலைத் தொடர்வது எப்படி? ஒரு பக்கம் நேர் விசையை கொண்டு இன்னொரு பக்கம் சுழற்றுவதை பழந்தமிழர் குறங்குதல் என்பார். (linear motion is converted to circular motion).குறுதல் = மேலிழுத்து வாங்குதல் to pull up. 'கயிறு குறு முகவை” (பதிற்றுப் பத்து. 22:14) 

[குறுதல், குறங்குதல் என்பது 2000 ஆண்டுச் சிந்தனை. குறங்கு என்ற சொல் crank எனச் செருமானிய மொழிகளிற் பயில்வதை ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகள் crank (n.) "handle for turning a revolving axis," from Proto-Germanic base *krank-, and related to crincan "to bend, yield" என்று பட்டறிவு தெரியாமற் கூறும். 

நாமோ குறங்கைத் தொலைத்து கிராங்சாவ்ப்ட்டு என்று எழுதுகிறோம். தொடையியக்கம், தோளியக்கம், பம்பரம், குடைராட்டினம் போன்ற பட்டறிவுகளை எல்லாம் மறந்து, இது ஏதோ மேலையறிவியல் புதிதாய்ச் சொல்லியது என மருள்கிறோம். மாறாகக் குறங்குத் தண்டு= crankshaft என எளிதாய் நம்மூர்ச் சிந்தனை வழி சொல்லிப் போகலாம்.] 

பிணையல் = (என எல்லாம்) பிணைந்தவள்; அம் தழை தைஇ = அழகியதழையை தைத்தணிந்தவள்; இப்படிப் பிணைத்து அமைந்தவள் பெருநகரத்தவளோ, பெருஞ்செல்வக்காரியோ அல்லள். நாட்டுப் புறத்தாள். பருத்தி ஆடையோடு, தழையாடையும் கலந்தே அன்றணிந்தார். நாட்டுப் புறங்களில் ”இலைகளால் ஆன தொன்னையைத் தைத்தல், தாமரை இலையைத் தைத்தல்” போன்ற சொல்லாட்சிகளின் வழி தழை தைத்தலை உணரலாம். துணை இலள் = துணையில்லாது; விழவுக்களம் பொலிய வந்து நின்றனளே = விழாக்களம் பொலிய வந்துநின்று விட்டாள்; எழுமினோ எழுமின் = எழுந்திருங்கள், எழுந்திருங்கள்; எம் கொழுநற் காக்கம் = எம் கணவரைக் காப்போம்

பேர் இசை முள்ளூர் = பெரிதும் புகழ்பெற்ற முள்ளூரில்; திருக்கோவலூருக்கு NNE திசையில் கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவில் முள்ளூர் மலை (இன்று இது பக்கமலையென்றே அழைக்கப்படுகிறது.) வழி முள்ளூர் உள்ளது. தென் பெண்னை ஆற்றங்கரைத் திருக்கோவலூரை மலையர் ஏன் தலைநகr ஆக்கினார் என்பது தெரியவில்லை. திருக்கோவலூருக்கு  அருகிலுள்ள மலை என்பது (முள்ளூர்ப்) பக்க மலை தான். 

மலையை விட்டு வெளியே வந்தால் 4 கி.மீட்டரில் இன்றுள்ள முள்ளூர் எனுஞ் சிற்றூர் வரும். இதில் இன்று வாழும் குடும்பங்கள் 100 க்கும் குறைவே. இது தான் பழைய முள்ளூரா? அன்றி மலைக்குள் வேறொரு முள்ளூர் இருந்ததா? முள்ளூரில் கோட்டையிருந்ததா? இங்கே சண்டை போடவேண்டிய காரணமென்ன?- என்பனவெல்லாம்  தெரியாது. மலையன் படைகளோடு ஆரியர் படை சண்டையிட்டது இப்பாடலாற் தெரிகிறது. தொல்லாய்வர் தான் முள்ளூரின் எச்சங்களை அகழ்ந்து பார்த்துச் சொல்ல வேண்டும். 

சிற்றூரான முள்ளூர் தகடூரில் இருந்து ஏறத்தாழ 172 கி.மீ. தொலைவு கொண்டது. முள்ளூரிலிருந்து திருக்கோவலூர் வரை அன்று காடுகளே இருந்தன. அன்று (முள்ளூர்ப்) பக்கமலை மட்டுமே மலையமான் நாட்டிற் சேர்ந்ததல்ல. திருக்கோவலூருக்கு மேற்கே 50, 60 கி.மீட்டரில் இன்னும் பெரிய கல்வராயன் மலையுள்ளது. அது இன்னும் அடர்ந்து அப்பக்கம் சேலம் வரை பரவியிருந்தது. மலையமான் நாடென்பது மலைகளால் ஆனதே. சங்க காலத்தில் தகடூர் வழி தமிழகம் புகுவதே வடக்கிருந்து வரும் படையினருக்கு உகந்ததாகும். தக்கணப் பாதையின் முடிவில் கோதாவரிக் கரையில் நூற்றுவர் கன்னரின் படித்தானத்தில் இருந்து தகடூருக்கு வர நேர்வழி உண்டு. 

இற்றை ஆந்திர வழியாகத் தமிழகத்துள் நுழையும் பாதைகள் சங்க காலத்திற் கிடையா. தகடூரிலிருந்து நேர்கிழக்கே வந்தால் மலையமான் நாட்டினுள்  வராது முடியாது. அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் மலையமான் திருமுடிக் காரிக்கும் சங்க காலத்தில் போர் ஏற்பட்டதும் இயற்கையே. அடுத்தடுத்த நாடுகள் பகைமையில் இருப்பது பல போதுகளில் நடந்துள்ளது. 

அது ஒரு வகையில் இனக்குழுப் பகையின் மிச்ச சொச்சம். இப்பாடலில் சொல்லப்படும் மலையன் திருமுடிக்காரியா? அன்றி அவன் மகனா? - என்றுஞ் சொல்ல முடியவில்லை. கடையெழு வள்ளல்களின் காலத்தை இன்னும் துல்லியமாய் நான் கணித்தேன் இல்லை. ஆனால் பாடலிற் சொல்லப்படும் மலையன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தவனே என்பதில்  ஐயமுமில்லை. 

ஆரியர் படை தமிழகம் வந்தது வரலாற்றுக் காலத்தில் 4,5 முறைகள் என்று சொல்ல முடியாது. அசோகனின் தந்தை பிந்துசாரன் காலத்திலும், அடுத்து முந்தையைப் பாடல் விளக்கத்தில் சொன்ன மாதிரி பொ.உ.மு. 120க்கு அருகிலும் தான் இருமுறை வடபுலத்திலிருந்து படையெடுப்பு நடந்திருக்கிறது.. 

இதேபோற் சங்க காலத்தில் தமிழர் வடக்கே படையெடுத்துப்போனது பொ.உ.மு.460க்கு அருகில் முதற் கரிகாலன் காலத்திலும், இரண்டாவதாய் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெயரில் செங்குட்டுவன் படையெடுத்துப் போனதும் (இது பொ.உ.மு.120 க்கு முன்னோ, பின்னோ), மூன்றாவதாய்ச் செங்குட்டுவனின் இரண்டாம் படையெடுப்பும் (கண்ணகிக்குக் கல்லெடுக்கப் போனது) என்றும் அமையும். பாண்டியர் படையெடுப்பு வடக்கே போனதா? - என்பது இன்னும் எனக்குத் தெரியாது.       . 

ஒள்வாள் மலையனது = ஒளிரும் வாள் கொண்ட மலையனின்; ஒரு வேற்கு ஓடியாங்கு = ஒரு வேலுக்கு ஓடியது போல்; பலர் உடன் கழித்த = பலருடன் கூடி வந்த; ஆரியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப் போனார்; துவலுதல்> துவளுதல் = சோர்ந்து போதல், தோற்றுப் போதல். அழிதல், சாதல். இவள் வன்மை தலைப் படினே? = இவளுடைய வல்லமைக்குத் தலைப்பட்டால்; நம் பன்மையது எவனோ = நம்முடைய பன்மை எந்த மூலைக்கு வரும்? (இத்தனை பேரிருந்தாலும், இவள் வல்லமைக்கு முன் நாம் எந்த மூலைக்கு வருவோம்?)

பாட்டின் மொத்தப் பொருள்; மிகச் சிறியது தான்.

இளங்கண், மயிர்ச்சாந்து பூசிய கூந்தல், மூங்கில்போன்ற தோள், அச்சுவார்த்தது போல் வெண்பற்கள், ஆகியவை சேர்ந்து செறிந்த தொடையோடு பிணைந்து, அழகிய தழையைத் தைத்தணிந்து, துணையில்லாது தனியே விழவுக் களம் பொலியும் படி வந்து நிற்கிறாளே? இவள் எப்பேர்ப் பட்டவள்? எல்லோரும் எழுக; எம் கணவன்மாரைக் காப்போம். பெரிதும் புகழ் பெற்ற முள்ளூரில் ஒளிரும் வாள் கொண்ட மலையனின் ஒரு வேலுக்கு ஓடியது போல் பலருடன் கூடி வந்த ஆரியர் தோற்றுப் போனார்.  இவள் வல்லமைக்குத் தலைப்பட்டால் நம் பன்மை எந்த மூலைக்கு வரும்? 

----------------------------

விளக்கத்தை முடிக்கு முன் வாசிப்போருக்கு ஒரு வேண்டுகோள். அருள் கூர்ந்து “ஆரியர்” எனுஞ் சொல்லின் பொருளைக் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பாடல் வழிப் புரிந்துகொள்க. அவர் ”அத்தகையார், இத்தகையார்” என்று நீங்கள் நினைக்கும் பொருளை வலிந்து என்னிடம் பெற முயல வேண்டாம். சற்றே பொறுமை கொள்க. ஆரியர் என்ற சொல் பயிலும் சங்கப் பாடல்களை விளக்கி முடித்து விடுகிறேன். அப்புறம் அலசலாம். தெளிவு பிறக்கும்.  

அன்புடன்,

இராம.கி. 


சங்க இலக்கியங்களில் ஆரியர் - 3

அடுத்தது அகநானூறு 336, பாவைக் கொட்டிலார் பாடியது. இவர் பெயர் சற்று விதப்பானது. கொட்டுதல்= வளைத்தல். குழல், குடல், கூடு, கூடையென வளைபொருளில் தமிழில் ஏராளம் சொற்களுண்டு. கொட்டு = பிரப்பந் தண்டை வளைத்துச் செய்த கூடை. கொட்டில் = சிறிய பிரப்பங் கூடை. நெற்கொட்டில் = நெல்லிடுங்கூடை. பாவைக்கொட்டில் = பொம்மைகளைப் போட்டுவைக்கும் பிரப்பங்கூடை. 

இக் காலத்தில் எல்லா வீடுகளிலும் பொத்திகைக் (plastic) கூடையில் தான் பொம்மைகளைப் போட்டுவைக்கிறார். (elastic-ற்கு மட்டுமே ”நெகிழியைப்” பயன்படுத்துவது நல்லது. பொத்திகை (plastic) ஐயும் நெகிழியயும் (elastic) ஐயும் பிரித்துக் கையாள வேண்டாமோ?) 

அக் காலத்தில் பிரப்பம் புல் (இதைக் கொடி என்பாரும் உண்டு.) தமிழக மருத நிலங்களில் ஆற்றங் கரைகளிலும், ஈரஞ் செறிந்த ஏரிக் கரைகளிலும் பெரிதும் வளர்ந்தது. இன்றுங் கூடச் சீர்காழி-புகார்ப் பாதையில் பிரம்புப் பொருட்களுக்கும், கோரைப் பொருட்களுக்கும் பேர்பெற்ற தைக்காலைக் காணலாம். (பிரம்பும் கோரையும் வேறு பட்டவை.) அவ்வழி போகும் சுற்றுலாக்காரர் ஏதேனும் ஒரு பிரம்பு/கோரைப் பொருளை அங்கிருந்து வாங்காது போகார். http://www.kadalpayanangal.com/2014/07/1.html 

பிரம்பும் மூங்கிலைப் போன்றது; ஆனாற் சற்று வேறுபட்டது. மிகப் பெரிதாகவும், மெல்லிதாகவும் அன்றி, நடுத்தர விட்டங் கொண்ட பிரப்பந் தண்டின் முள்களைச் சீவி, தண்டை நெருப்பிற் காட்டிக் கொஞ்சஞ் கொஞ்சமாய் அதை வளைத்துப் பல்வேறு அறைகலன்கள் (furnitures), அணிபொருட்களைச் (ornamental goods) செய்வர். இதில் பாவைக் கொட்டிலும் ஒன்று. 

கும்பகோணம்-கதிராமங்கலம் சாலையிற் சென்றால் ஊடுவரும் திருக்கோடிகாவில் பிரம்பே தல மரமாகும். சென்னைப் பெரம்பூர் என்பது கூடப் பிரம்பூர் தான். இக்காலத்தில் பிரம்பு தமிழகத்தில் அருகி விட்டது. எல்லோரும் செயற்கைப் பொருள்களுக்கே ஆலாய்ப் பறக்கிறார். பெரும்பாலும் பீகார், இராசசுத்தான், ஆசியத் தென்கிழக்கு போன்ற இடங்களிலிருந்து தான் பிரம்பும், பிரப்பம் பொருட்களும் இன்று நம்மூருக்குக் கொண்டுவரப் படுகின்றன. பிரப்பங் கொட்டில் என்பது மிகச் சரியான மருதத் திணைப் பொருள். பாவைக்கொட்டிலார் ஒரு வேளை சோழநாட்டுத் தைக்காலுக்கு அருகில் இருந்தாரோ, என்னவோ? எண்ணிப் பார்க்க மனம் குறுகுறுக்கிறது. 

பாடல் மருதத் திணை. நயப்புப் பரத்தை (விருப்பமானவள்; hero's current lover) இற்பரத்தைக்குப் (concubine; சின்னவீடு...:-)) பாங்காயினார் கேட்பச் சொல்கிறாள். பாட்டிற் பேசப் படுவோர் பரத்தைகள் என்பதைச் சுற்றி வளைத்த உணர்கிறோம். 

”என்னாங்கடி, சக்களத்திகளா? என்னிடமா விளையாட்டு? இவ்வூர்த் தலைவன் என்னைச் சுற்றி வரும்படி ஆக்க வில்லை எனில், சோழரின் வல்லக் கோட்டையில் ஆரியர் படை மண்ணைக் கவ்வியது போல், நானுங் கவிழ்ந்து என் வளையை உடைத்துக் கொள்வேனடி” என்று சூளுரைக்கிறாள். சென்னை நகரத் தண்ணீர்க் குழாயடியில் பெண்கள் சண்டையடிப்பது போல் இவளின் சண்டை தெரிகிறதோ? படியுங்கள். சற்று நீளமான பாட்டு. இதன் விளக்கமும் நீளந் தான். என்னைப் பொறுத்துக் கொள்க.

குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்

பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த

உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய

நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்

வாளையொ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின்

தெங்கட் தேறல் மாந்தி மகளிர்

நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்

மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்

காஞ்சி நீழல் குரவை அயரும்

தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன்

தேர்தர வந்த நேரிழை மகளிர்

ஏசுப என்பவென் நலனே அதுவே

பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்

கொல்களிற் றியானை நல்கல் மாறே

தாமும் பிறரும் உளர்போற் சேறல்

முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்

யானவண் வாரா மாறே வரினே 

வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சிபோல்

என்னொடு திரியா னாயின் வென்வேல்

மாரியம்பின் மழைத்தோற் சோழர்

வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை

ஆரியர் படையின் உடைகவென்

நேரிறை முன்கை வீங்கிய வளையே.

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

குழல்கால் சேம்பின் கொழுமடல் அகல்இலைப் 

பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த 

உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,

நாள்இரை தரீஇய, எழுந்த நீர்நாய்

வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்,

தெங்கள் தேறல் மாந்தி,

மகளிர் நுண்செயல் அம்குடம் இரீஇப் 

பண்பில் மகிழ்நன் பரத்தைமை பாடி, 

அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்

தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்,

தேர் தர வந்த நேரிழை மகளிர்

ஏசுப என்ப என் நலனே அதுவே

பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்

கொல் களிற்று யானை நல்கல் மாறே

தாமும் பிறரும் உளர் போல் சேறல்

முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்

யானவண் வாராமாறே 

வரினே 

வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல்

என்னொடு திரியான் ஆயின் 

வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை

ஆரியர் படையின் உடைகவென்

நேரிறை முன்கை வீங்கிய வளையே.

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். கொழகொழ என்ற சேப்பங் கிழங்கிற் செய்த மோர்க்குழம்பை நீர் சுவைத்ததுண்டோ? சேப்பங் கிழங்குப் பொரியல்? வறுவல்? இதைச் சாப்பிடுவதில் நல்லது, கெட்டது இரண்டுமே  உண்டு. 

ஒரு பக்கம் குருதிப் பெருக்கு அடக்கி, மலத்தை இளக்கி, உடலுக்குக் குளிர்ச்சி தரும் சேம்பு, இன்னொரு பக்கம் வெப்பு, தடிப்பு, கோழைக் கட்டு என்று கெடுதலையும் உண்டாக்கலாம். உடலுக்குள் வாயுவையும் பெருக்கலாம். நீர்ப் பாங்கான மண்ணில் பயிர் விளைந்தும், கிழங்கு சாம்பி (நீர்வற்றி)க் காண்பதால் சாம்ப/சாம்பைக் கிழங்கு என்றாயிற்று. 

சாமம்/சாமை, சேம்பு/சேம்பை, சேமம்/சேமை, சேப்பு/சேப்பை எனப் பல்வேறு திரிபுகளில் இன்று இது சொல்லப் படுகிறது. வட மொழியிற் கேமுக என்று திரியும். ஆங்கிலத்தில் Indian Kales Root என்பர். Colacasia esculenta என்பது இதன் புதலியற் பெயர். பென்னம் பெரிய சேம்பிலையில் நீர்நாய் தங்கும் விவரிப்போடு இப்பாடல் தொடங்குகிறது. சேம்பு, நீர்நாய் என இரண்டுமே மருதத் தொடர்புடையவை. 

குழல்கால்- குழல் போன்ற சேம்புத் தண்டு; கொழுமடல் அகலிலை-அகண்ட சேம்பு இலை. சிலபோது இது யானைக் காதளவிற்கு வளரும் என்பர். (இலையை/ தண்டைப் புளி சேர்த்துச் சாப்பிட்டால், மூலம் நீங்குமாம். பொதுவாகச் சேம்பிற்குப் புளி சேர்த்து உண்பது நாட்டு வழக்கம். ”சிறியார்க்கு இனியதைக் காட்டாதே, சேம்பிற்குப் புளியிட மறவாதே” என்பது சொலவடை. மோர்க் குழம்பின் புளிப்பு புரிகிறதா?) பாசிப் பரப்பு = பசும் பரப்பு. பறழ் = குட்டி, உண்ணாப் பிணவு = உண்ணாதிருக்கும் பெண் நீர்நாய்; உயக்கம் சொலிய = வருத்தம் போக்கவேண்டி, நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய் = அன்றாட உணவைத் தர எழுந்த நீர்நாய் (Otter); 

[இக் காலத்தில் நீர்நாய் நம்மூரிற் கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. இரோப்பாவில் ஓரளவாவது வளர்கிறது. மக்கள் வாழ்வில் உரையாட்டுகளும் உள்ளன. சிறார்க்கு அதை அடையாளங் காட்டி, அதன் வாழுமை போற்றப் படுகிறது. வேதிப் பொறியியல் ஆய்விற்காக சில ஆண்டுகள் நெதர்லாந்தில் நான் வாழ்ந்த போது தெல்வ்ட் (Delft) என்ற நகரின் தாந்தாவ் (Tanthof) பகுதியில் எங்கள் வீடு நீர்நாய்ச் சந்தில் (Otter laan) இருந்தது. 

இத் தெருப் பெயரின் அழகைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். நீர்நாய் போன்ற சொற்களையும், இயற்கையையும் சேர்த்தே நம்மூரில் முற்றிலும் இழந்திருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு ஆண்டாள் சொல்லும் ஆனைச் சாத்தான் குருவியை இந்தக் காலத்தில் நமக்கு அடையாளங் காட்டத் தெரியுமா? கைபேசி வந்ததிலிருந்து சிறு குருவிகள் கூட நம் நகரங்களை விட்டு ஓடியே போயினவே? குருவிச் சத்தம் உங்களுக்குக் கேட்கிறதோ?] 

வாளையொடு உழப்ப - நீரிற் கிடக்கும் வாளை மீனோடு போராடி அதைச் சாய்த்துக் கவ்வும் செயலால்; துறை கலுழ்ந்தமையின் = நீர்த்துறை கலங்கியதால். 

[இனிக் கள். தென்னை பற்றியதோர் இடைவிலகலைப் பார்ப்போம். கள்/மது போன்றவை உணர்வு கலங்குதல்/ மலங்குதற் பயன்பாட்டின் வழி எழுந்த பெயர்களாகும். இன்னொரு விதமாய், சருக்கரைப் பொருளையும், சுவைப் பொருள்களையும் சேர்த்து நொதிக்க விட்டுப் (fermented) பின் தெளிவித்துச் (clarified) வடித்துக் கள்/மது செய்வதால், உருவாக்க வழிப் பெயர்களும் உண்டு  

துல் எனும் வேர்ச்சொல் துலங்குவதைக் (clear) குறிக்கும் துல்>தெல்>தெல்லல் வினையிலிருந்து தெள்ளல், தெளிதல், தெரிதல், தெளிவித்தல், தேறல், தேற்றம், தெற்று போன்ற சொற்கள் பிறந்தன. நொதித்துத் தெளியும் பொருளைத் தெளிவென்றும், தேறலென்றும் அழைத்தார். நொதித்தல் குறைந்தது தேனென்றும் தேமென்றுஞ், தீமென்றும் சொல்லப் பட்டது. துல்>தில்லில்  இருந்து தித்திப்பென்ற சொல் கூட எழுந்தது. கள்ளிற்கு இன்னொரு பெயராய்த் தேன், தேறல், தெளிவு போன்றவையும் ஏற்பட்டன. உங்களுக்குத் தெரியுமோ? கள்ளிற்குத் தமிழில் 48 சொற்களுக்கு மேல் உண்டு. ஆகக் ”கள்” நம்மோடு நெடுநாள் வந்தது போலும். இன்றெமக்கு அது எமனுங் கூட.  

இனித் தென்னைக்கு வருவோம். இது ஆசியத் தென்கிழக்கிலிருந்து தமிழகங் கொண்டுவரப் பட்டதென்று புதலியலார் (botanists) சொல்வார். சங்க காலத்திற்கும் முன் இது நடந்திருக்கலாம். நம்மூரைச் சேர்ந்த பனை போலவே இதிலும் தெல்>தெள்>தெளிவு இறக்க முடியும் என அறிந்த தமிழன், இதன்சுவை இன்னும் அதிகம் என்பதால் தெல்மரம் என்றே இம்மரத்திற்குப் புதுப்பெயர் இட்டான். 

பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பு எல்லாம் வெறியக் காடி-acetic acid செய்யும் வேலை. ”தெல்” என்பது கள்ளின் வேர் ஆனதால், தெளிவைத் தரும் தெல்ங்கு மரம் தெங்குமரம் ஆயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. தெங்கங் காய் நாளடைவில் தேங்காயெனச் சுருங்கிற்று. தெங்கள்=தெங்கின் கள். ”தெல்”லென்ற வேர்ச் சொல்லே இவற்றிற்கு அடிப்படை. 

ஞாவகம் வைத்துக்கொள்க.தெல் எனும் திசைக் குறிப்பும், தெல் எனும் மரக் குறிப்பும் வெவ்வேறு சொற்பிறப்பின. தென்னையென்ற பெயரின் வழி, கள்மரப் பொருள் குறிப்பதாலேயே, ”அது நம்மிடம் இயல்பாய் இருந்ததல்ல; இறக்குமதி” என்பது புரிந்து போகும். பனை நம்முடையது; தென்னை வெளியிலிருந்து உள்ளே வந்தது. விவரம் அறியாப் பலருக்கும் இது வியப்பாகலாம்

தெல்லின் நீட்சியாய், அதன் வெறியத்தைக் (ethanol) ஓரளவு கட்டுவதாய், அரை நொதிப்பு நீர்மத்தில் சுண்ணாம்பு இட்டு, நீரிய அயனிச்செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமில அரங்கிலிருந்து (acidic range), களரி அரங்கிற்கு (alkali range) கொணர்ந்து திண்மத் துகள் (solid particles) கீழிறங்க, மீண்டும் தெளிய/தேற (settling) வைப்பர். தெளிவு/தேறலென்று இதையுஞ் சொல்வார். 

இப் பத நீரை, தென்பாண்டி நாட்டில் விற்கவுஞ் செய்வார். பத நீரின் வெறியச் செறிவு 2-4% ஆகும். பொதுவாக நம்மூர்க்  கள்ளில் வெறியச் செறிவு 7% க்கும் மேலிருக்கும். கட்டங் கள் (கடுங் கள்) 9% க்கும் மேலிருக்கும். சப்பானிய அரிசிக் கள்ளோ (சாக்கேவோ) 15-20% அளவிருக்கும். தயக்கமின்றி, ஆண், பெண், சிறார் அனைவரும் தென்தமிழ் நாட்டில் குறைவெறியப் பதநீரைக் குடிப்பார்; இதைத் தவறென்று யாரும் அங்கு கொள்வதில்லை. 

”பதநீரு வாங்கலையோ, பதநீரு?...” வீதியிற் குரல் கேட்டாலே நமக்கு வாயில் நீரூறும். பதநீரைப் பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.] 

தெங்கள் தேறல் - இங்கே பதநீர்; மகளிரைப் பேசுகையில், இதைக் கள்ளாகக் கொள்வது பாட்டின் கட்டுகைக்குப் (context) பொருந்தாது; தெங் கள் தேறல் மாந்தி - தாகத்திற்குப் பதநீர் குடித்தபின், சேம்பின் காலுக்கு அருகில் கால்வாய் நீர் கலங்காதிருந்தால் தெளிந்த நீரையே மகளிர் குடித்திருப்பர். ஆனால் அது கலங்கிய காரணத்தால் இங்கே பதநீரைக் குடிக்கிறார். 

நுண்செயல் அம்குடம் இரீஇ = நுணுகிச் செய்த அழகுக் குடங்களைத் தம் பக்கத்தில் இருத்தி;. (அரிய வேலைப்பாடு உள்ள மண்குடங்களை ஆதிச்சநல்லூர், கொடுமணம்,பொருந்தல், தற்போது கீழடி என வித விதமாய் அறிகிறோமே?) “நுண்செயல் அங்குடம்” - ஓர் அழகான விவரிப்பு. குயவரைப் பற்றிய பாடல்களும் சங்க இலக்கியத்தில் அதிகம் தான்.          

மகிழ்நன் என்பான் கணவன் அல்லன். உடன் பழகி மகிழ்கிறவன் = consort; இக்காலத்தில் boy friend என்பாரே, அதற்கிணையாகக் கூட இதைச் சொல்லலாம். மகிழ்நன், கணவனாகலாம்; வேறொருத்தியை மணந்து இவளோடு மகிழ்வோன் ஆகலாம்; ஏன், யாரையும் மருவாது(marry) காதலனாய்க் கூட அமையலாம்; மகிழ்நன் என்றவுடன் உடலுறவு ஞாவகம் நமக்கு வந்துவிடத் தேவையில்லை. பண்பில் மகிழ்நன் = பண்பில்லாத மகிழ்நனின். (அவன் ஒரு பெண்ணோடு மட்டும் உறவு கொள்ளவில்லை. அவன் பரந்திருப்பதால் பரத்தன்.) பரத்தமை = பலரையும் பரந்து சாரும் ஒழுக்கம்.

அடுத்தது காஞ்சி மரம். இதுவும் மருத மரங்களில் ஒன்று. காஞ்சியை ஆற்றுப்பூவரசு/ ஆத்துப்பூவரசு/ ஆற்றரசு/ ஆடலரசு/ செடிப்பூவரசு, ஆயில்/ ஆயிலி/ ஆவில், கச்சி/ கஞ்சி, கடற்கேசிதம், ஆனத்துவரை/ சன்னத்துவரை, நாய்க்குமிழ், பிண்டாரம் என்றெலாம் விதம் விதமாய் அழைப்பர். பிண்டாரத்தை யொட்டி வடபுல மொழிகளிலும் பெயரிருக்கிறது. ”காஞ்சி” கன்னடத்திலும், ஆற்றுப்பூவரசு/ ஆற்றரசு மலையாளத்திலும் பயில்கிறது. பம்பரக் கும்பில் என்று கூட மலையாளத்திற் சொல்வர். 

எல்லா நீர்க் கரைகளிலும், குறிப்பாகக் அகழிக் கரைகளிலும் இம்மரம் பயிரிட்டிருக்கிறார். ஆற்றங்கரையில் வளரும் காஞ்சி மரங்கள், மண்ணை இறுக்கி, ஊருக்குள் வெள்ளம் புகாதவாறு காத்து உதவும் என்பார். (சென்னை அடையாறு, கூவம் ஆற்றுக் கரைகளில் இதை வளர்த்தால் நன்றாக இருக்குமே?) பப்பாளி, பனை. பலா போல இம் மரத்திலும் ஆண், பெண் வகைகள் உண்டு. ஆண்பூக்கள் மஞ்சளாயும், பெண்பூக்கள் பச்சை/நீலமாயும் இருக்கும். இதன் புதலியற் பெயர் trewia nudiflora. 

மாற்று நாட்டைக் கவர விரும்பி ஓர் அரசன் வலிந்து படையெடுப்பதை வல்ஞ்சி> வஞ்சித் துறை என்பார். (வஞ்சிப் போரின் அடையாளம் வஞ்சிப் பூவாகும்.) வஞ்சிப் போரின் எதிர்ப்பில் தற்காப்பாய் (defence) எழுந்தது காஞ்சிப் போராகும். (கள்>கள்வு>கவ்வு>கா என்ற திரிவில் காக்குஞ் செயல் வெளிப்படும். கள்+சு = கச்சு என்பது மெய் புதைக்கும்/ காப்பாற்றிக் கொள்ளும் ஆடையாகும். 

மூக்கொலி பெற்றுக் கச்சு கஞ்சுகம் என்றாகும். கஞ்சி>காஞ்சி என்பவை நாட்டைக் காக்கும் செயற்பாடுகள். இவற்றின் அடையாளமாய் rebus principle இன் படி தற்காப்பாளர் காஞ்சிப்பூ சூடினார். (காஞ்சி மரங்கள் மிகுந்த கச்சிப்பேடு, காஞ்சி புரமானது.) காஞ்சித் திணை, காஞ்சிப் பொதுவியல், காஞ்சித் துறை என்பவை நாடு, கருத்து, மெய்யியல் போன்றவற்றைக் குறித்துத் தற்காக்கும் நிலைப்பாடுகள் ஆயின. 

அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் - பூ உதிர்க்கும் காஞ்சி மர நிழலடியில் குரவையாடி அயரும் மகளிர்;. காஞ்சி என்ற குறிப்பையும் பார்த்தே, கூடியோர் பரத்தை மகளிர் என்ற முடிவிற்கு நாம் வருகிறோம். ஏனெனிற் காஞ்சியை ஒட்டிப் பரத்தையர் கூடுவது ஒருவிதச் சங்க இலக்கிய மரபுக் குறிப்பு. (காஞ்சி காப்பாற்றும் மரமல்லவா?) காஞ்சியைச் சுற்றிக் குருக்கத்திக் கொடி படர்வதாய், தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-377 ஆம் வரிகளில்  

குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்

பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ

என்ற காட்சி விரியும். காதல் மகளிரை (குறிப்பாய்ப் பரத்தைகளை) குருகிற்கு (சிலம்பு மாதவியும் குருக்கத்திப் பெயர் கொண்டவளே!) ஒப்பிடுவது தமிழ்ப் புலவருக்கு ஆகிவந்த பழக்கம். அகம் 55 ஈச்ச மரத்தைக் காதலனுக்கும் சுற்றிப் படருங் குருக்கத்திக் கொடியைக் காதலிக்கும் உவமையாகக் கொள்ளும். 

(இதே போலக் குருக்கத்திக் கொடி மாமரத்தைச் சுற்றியதாய் காளிதாசனின் சாகுந்தலத்தில் ஓர் உவமை வரும். காளிதாசனை முதலாகவும் சங்கப் புலவரைப் பின்னாகவும் காட்டும் இந்தாலசி அறிஞர்களை என்ன சொல்வது?)

இங்கே காஞ்சி நீழலில் குருக்கத்தியர் கூடிக் குரவை யாடுகிறார். குரவை என்பது 7 பேரோ, 9 பேரோ ஆடும் மகளிர் ஆட்டம். அவ்வப்பொழுது கைசேர்த்தாடும் ஆட்டம். குரவை பற்றித் தனிக்கட்டுரையே எழுத முடியும். இங்கு தவிர்க்கிறேன்.

தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன் = ஊரார் கூடி நீராடும் இனிய துறை நிறைந்த ஊர்த்தலைவன்; தேர் தர வந்த = தேரில் வந்தது கண்டு; நேரிழை மகளிர் ஏசுப என்ப = அழகிய இழை (சங்கிலி) அணிந்த மகளிர் கேலி பேசி ஏசினாரோ? என் நலனே அதுவே = அதுவும் எனக்கு நல்லது தான். (காஞ்சிமர நிழலில் கூடியவர் குரவையாடி ஊரனைப் பற்றி வம்பு பேசி ஏசுகிறார். ”பேசட்டும், எனக்கும் அது நல்லது தான்”.என்கிறாள் நயப்புப் பரத்தை.)

பாகன் நெடிது உயிர் வாழ்தல் = (ஞாவகம் வச்சுக்குங்கடி) யானைப் பாகன் நெடுநாள் உயிர் வாழ்தல் என்பது; காய்சினக் கொல்களிற்று யானை நல்கல் மாறே = கோவம் வரின் இழுத்துப் போட்டு மிதிக்கும் யானையின் நல்கை எனத் தெரிந்து கொள்ளுங்கள். (இடைவிடாது துன்புறுத்தும் பாகனை கோயில் யானைகள் அடித்து மிதித்து விடும். பாகனின் கொடுமை/குசும்பிற்கும் ஓர் அளவுண்டு). 

தாமும் பிறரும் உளர் போல் சேறல் = தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளது போற் செல்லுதல்; முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் = முழவடிக்கத் துணங்கை தூக்கி ஆடும் விழாவில் (துணங்கை என்பது குரவையின் இன்னொரு வேற்றம். குரவை பற்றி எழுதும் போது இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்); யானவண் வாராமாறே = நான் அங்கே வரா வரைக்குந் தான். வரினே = அப்படி வந்து, வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல் = வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக் கொள்ளும் நெருஞ்சி போல். 

நெருஞ்சி (நுள்> நெள்> நெரி> நெரிஞ்சி> நெருஞ்சி) எனும் புல் (Tribulus terrestris) சூரியனைப் பார்த்தாற் போல் கிடையாகப் பல கிளைகள் விட்டுப் படரும் நிலத்திணையாகும். நெருஞ்சங் காய்/பழம் போன்றவற்றின் முள்ளாலே இப்பெயர் ஏற்பட்டது. முள் பற்றிய கதைகள் தமிழில் நிறையவுண்டு. அத்துணை சிறிய நிலத்திணைக்கு இங்கேயோர் அரிய புதலியல் அவதானம் சுட்டப்படுகிறது. 

நெருஞ்சியின் ஒரு கணுவில் வளரும் கூட்டிலைகளில் ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவுமிருக்கும். அடுத்த கணுவில் பேரிலை இருந்த பக்கம் சீரிலையும், சீரிலை இருந்த பக்கம் பேரிலையாகவும் மாறியிருக்கும். இப்படிக் கிளை நெடுகிலும் ஒன்றையொன்று மறைக்காமல் எல்லா இலைகளும் ஞாயிற்றொளியைப் பெறும் வகையில் புல் வளரும். மொத்தத்தில் சூரியவொளி தனக்கு முற்றிலும் கிடைக்கும்படி ஆண்டு முழுக்க இப்புல் திரிந்து கொண்டே இருக்கும். மேற்கூறிய வரி இப்பொழுது விளங்குகிறதா? 

இங்கே ஞாயிறு என்பது நயப்புப் பரத்தைக்கும், நெருஞ்சி என்பது மகிழ்நனுக்கும் உவமையாகின்றன. உவமையில் என்னவொரு மமதையும் இளக்காரமும் வருகின்றன? - பாருங்கள் அதே பொழுதில் என்னவொரு பொருத்தம்? சங்க இலக்கியச் சிறப்பே இது தான். இயற்கை பற்றிய கூர்த்த அவதானம்; அதை மாந்த வாழ்க்கைக்குப் பொருத்தும் பட்டறிவு. இயற்கையோடு இணையும் போக்கு. இற்றை வாழ்க்கையின் அவலமே இதற்கு மாற்றாய் நடப்பது தான். இயற்கையை விட்டு நாம் நெடுந்தொலைவு வந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. சூழலியற்காரர் மீள மீள இதைத் தான் சொல்கிறார்.    . 

என்னொடு திரியான் ஆயின் = என்னைச் சுற்றித் திரியானெனில்; வென்வேல் மாரி அம்பின் மழைத்தோல் சோழர் = வெல்லும் வேலும், மாரி போல் அம்பும், மேகம் போல் கிடுகும் உடைய சோழரின்; வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை = வில் பொருந்திய வல்லக் கோட்டையின் வெளிக் காவற்காட்டில்; ஆரியர் படையின் உடைக என் = ஆரியர் படை சுக்குநூறு ஆனது போல்; நேரிறை முன்கை வீங்கிய வளையே. = நேரே தாழ்ந்திருக்கும் முன் கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.

கடைசி 4 வரிகளில் ஆரியருக்கும் சோழருக்கும் இடை நடந்த போர்ச் செய்தி சொல்லப் படுகிறது  இதைப் புரிந்து கொள்ளச் சற்று மெனக்கெட வேண்டும். நந்தரிலிருந்து, மோரியர், சுங்கர், கனகர் வரை அவரவர் பெயரிற் சொல்லியது போக பொத்தாம் படையாயும் சங்க இலக்கியத்தில் ஆரியர் பற்றிச் சில செய்திகள் உண்டு. அப்படி ஒரு செய்தி இது 

அடுத்து வரும் நற்றினை 170 இலும், இதே செய்தியுண்டு. தவிரச் சிலம்பின் மதுரைக்காண்டத்தில்  ”வடவாரியர் படை கடந்து, தென்றமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்றும் கூறப்படும். (அரைசு கட்டிலிற் துஞ்சிய நெடுஞ்செழியன் வடக்கே போகவில்லை. வடக்கிருந்த வந்த படையைக் கடந்தான். அவ்வளவு  தான். அதே பொழுது இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் வடக்கே போனதற்குச் சிலம்பிலேயே சான்று உள்ளது.) 

வடக்கே மோரியரின் பின் மகதர் ஆட்சிப் பரப்பு சிச்சிறிதாய்க் குறைந்தது. அலெக்சாந்தரின் மிச்சப் படைகள் வழி வடமேற்கில் எழுந்த இந்தோ-கிரேக்கர் (கிரேக்கம், உரோமானியர் என நேரே வந்தவரையும், இந்தோ-கிரேக்கரையும் சேர்த்தே தமிழர் யவனர் என்பர்), சகர் போன்றோர் மகதராட்சி குன்றிய வட பகுதிகளைத் தாமே ஆளத் தொடங்கினர். உச்செயினிக்கு மேற்கிருந்த சத்ரபரும் சகர் வழி வந்தவரே. பின் இவரெல்லாம் விந்தியம் தாண்டித் தெற்கே வரத் தொடங்கினார். தங்களைச் சத்திரியர் என்றே சொல்லிக் கொண்ட இவர் எங்கெல்லாம் வலுக் குறைந்ததோ, அங்கெல்லாம் நுழைந்தார். 

அவரிலொரு பகுதியார் உத்தேய (>யுத்தேயே>யௌதேய) கணம் என்றும் ஆயுத கணம் என்றும் சொல்லப் பட்டார். முடியரசு இல்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் இவர் கொண்டிருந்தார். போர் மூலம் பொருள் திரட்டி நகர்ந்து கொண்டிருந்தார். அகண்ட அரசை அவர் எங்கும் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங் கூட்டமாய்ச் சில காலம் வாழ்த்து பின் பிரிந்து வேறிடஞ் சென்று விரிந்துகொண்டு இருந்தார். 

அக்கால robber - barons, mercenaries என இவரைச் சொல்லலாம். எங்கெலாம் வளம் இருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப் போர் நடத்துவார். கொள்ளை அடிப்பார்; நகர்ந்து போவார். தென்னாடு நோக்கி இவர் படையெடுத்ததை இவர் நாணயங்கள்  தெற்கே கிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” என்ற வழிபாடும், நம்மூர் குறிஞ்சி முருகன் வழிபாடும் இரண்டறக் கலந்து போனதாலும் அறிகிறோம். இவற்றைப் பின்னிப் பிணைந்து நம் திருமுருகாற்றுப் படையும், பரி பாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இந்த வழிபாட்டுக் கலப்பு ஒரு தனியாய்வு. யாராவது செய்யவேண்டும்.)

இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி செந்தமிழ்ச் செல்வியின் சிலம்பு 46 ஆம் இதழில் ”ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய, பாண்டியன் நெடுஞ்செழியன்” என்ற கட்டுரையும், கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966 ஆம் இதழில் ”ஆரியப்படையும் யௌதேய கணமும்” என்ற கட்டுரையும் உத்தேய கணம் பற்றி வெளியிட்டார். 

இவற்றின் மறுபதிப்பு: ”மயிலை சீனி வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை - பாகம் 1” என்று சென்னைத் தமிழ்வளர்ச்சிப் பேரவை வெளியிட்ட நூலில் உள்ளது. தவிர, https://en.wikipedia.org/wiki/Yaudheya, https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D போன்ற தளங்களிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் யௌதேய எனக்  கூகுளித்தால் செய்திகள் கிடைக்கும். ”தமிழருக்கும் உத்தேயருக்கும் இடையாட்டம்” பற்றிய ஆய்வு இன்னும் நிறைவு பெறவில்லை. இதுநாள் வரை தொட்டும் தொடாமலுமே சிற்சில செய்திகள் தெரிந்துள்ளன. 

உத்தேயரெனும் ஆரியரின் தாக்கம் நூற்றுவர் கன்னர் (சத கர்ணிகள்) மீதும் இருந்தது. சகரை முற்றிலும் தொலைத்துப் பின்னாளில் நூற்றுவர் கன்னர் வடக்கேயும் எழுந்தார். நூற்றுவர் கன்னரைத் தாக்கியவர் தகடூர் வரை வந்து தமிழரைத் தாக்குவது எளிது. மலையமான் திருமுடிக்காரியை முள்ளூருக்கருகிலும், சோழரை வல்லத்திலும், பாண்டியரை மதுரைக்கருகிலேயேயும் உத்தேயர் தாக்கியுள்ளார். 

மொத்தத்தில் இது அடுத்தடுத்து ஏற்பட்ட படையெடுப்பு (expedition). இதன் இயலுமையை அறியுமுன் சங்க கால மக்கள் தொகையைக் கருத்துமூலம் ஆகவாவது நாம் உணரவேண்டும். இப்படியொரு படை அக்காலத்தில் எவ்வளவு பெரிதாய் இருந்திருக்கும்? 3000, 30000, 100000 - இதில் எது சரி? வல்லக் கோட்டைக்குள் (வல்லத்தின் கோட்டை; இதன் நினைவாகவே சென்னைக்கு அருகில் வல்லக்கோட்டை என்ற ஊர் எழுந்திருக்கலாம். அதன் முருக வழிபாட்டுச் சிறப்பும் உத்தேயக் கணத்துள் எழுந்திருக்கலாம்.) எத்தனை பேர் இருந்தார்? 3000, 30000, 100000? 

இற்றைத்தமிழகத்தில் 7 3/4 - 8 கோடிக்குத் தமிழர் உள்ளோம். மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் உள்ள தமிழர் தொகையைக் கணக்கிட்டால் சிலர் ஒன்றரைக் கோடியென்றும், இன்னுஞ் சிலர் 2 கோடியென்றும் சொல்வார். எது உண்மையோ நமக்குத் தெரியாது. மொத்தத் தமிழர் குறைந்தது 9 1/2 கோடியாவது தேருவோம். பொருத்தமான, தோராயமான கணக்குகளை இட்டால் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் தொகையென்பது கிட்டத்தட்ட 5/6 இலக்கமே தேறும். சங்க காலத்தின் போது மூவேந்தர் நாடுகள் ஒவ்வொன்றிலும் நிரவலாய் 2 இலக்கத்திற்கும் குறைவாகவே மக்கள் இருந்திருப்பர்.  

[இப்படியொரு கணக்கை 1999 - 2000 களில் ஒருமுறை செய்தேன். மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் இதற்கான கட்டுரையொன்று வெளிவந்தது. என் தந்தையார் நூலகத்திலிருந்து அந்த ஆங்கிலக் கட்டுரை எனக்குப் படிக்கக் கிடைத்தது. ஏசு கிறித்து காலத்தில் இருந்த பாலத்தீன மக்கள் தொகை, அன்றைய மக்கள் தொகைப் பெருக்க வீதம் போன்றவற்றை மேலையர் சான்றுகளிலிருந்து அவ்வாசிரியர் கொடுத்திருந்தார். 

ஆசிரியர் பெயர் இப்பொழுது எனக்கு நினைவில்லை. இதோடு, இந்தியா விடுதலை பெற்றபின் தமிழரின் பெருக்க வீதம். பெருக்க வீதங்கள் எப்படி உயர்ந்து குறைந்தன என்றெல்லாம் இயன்றமை ஊன்றுகோள்களைக் கொண்டு, குத்து மதிப்பான கணக்கைப் பாலாப்பிளையின் தமிழிணையம் மடற்குழுவில் கட்டுரையாய் வெளியிட்டேன். ”அகத்தியரிலும்” பின்னாற் படியிட்ட நினைவு எனக்குண்டு. இப்பொழுது அம்மடல்கள்  என் கணியிற் கிடையாது. அதை இணையத்தில் எப்படித் தேடியெடுக்க வேண்டுமென்றுந் தெரியவில்லை. ஆனால் 5/6 இலக்கம் என்ற முடிவு  மட்டும் நினைவில் உள்ளது. இக்கணக்கை யாராவது திருப்பிப் போட வேண்டும்.] 

அதை ஒரு பக்கம் வைத்து இன்னொரு பக்கம் விளைவுகளைப் பார்ப்போம். 4, 5 பெருநகரங்களுக்கு மேலின்றி, மற்றபடி சிறுநகரங்கள், சிற்றூர்களுடன் பெரும்பாலும் வயல்கள், காடுகள் ஊடிருந்த காலம் அது. உறையூர், புகார் ஆகிய பெரு நகரங்கள் தவிர்த்து ஆவூர், வல்லம் போன்ற கோட்டைகளுள்ள சிறு நகரங்கள் சோழ நாட்டில் அன்றிருந்தன. 

சிலப்பதிகாரத்தில் புகாரின் கிழக்கு மேற்கு அகலத்தை 1 காதமென இளங்கோ நாடுகாண் காதையிற் சொல்வார். பெரும்பாலும் ஊடே ஆறுபோகும் பெருநகரங்கள் 1:2 என்ற மடங்கிலிருப்பதால் புகாரின் நீளம் 2 மடங்கென்று கொண்டால், நகரப் பரப்பளவு 2 சதுரக்காதம். = 90 சதுரக் கிலோமீட்டர் என்றாகும். (என் கணக்கில் தென்புல வாய்பாட்டின் படி 1 காதம் = 6.70503 கி.மீ. இதேநகரம் வடபுல வாய்ப்பாட்டின் படி 4 மடங்கு சிறிதாயிருக்கும்.) 

2011 இல் இந்திய மக்கள் தொகை அடர்த்தி 382 என்பர். 2000 ஆண்டுகளுக்குமுன், புகார் நகர அடர்த்தியை 100 எனக் கொண்டால், அதன் மக்கள் தொகை 10000 க்கும் குறைவாயிருக்கும். (இற்றைச் சென்னையும் சென்னையைச் சுற்றிலும் கணக்கிட்டால் மக்கள் தொகை 1.5 கோடிக்குத் தேரும்.) வல்லம் போன்ற கோட்டைகளில் 3000, 4000 பேருக்கும் மேலிருந்தால் அதிகமென்றே தோன்றுகிறது. 

வல்லம் உறையூர்ச் சோழனுக்கு ஆட்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பான் செங்குட்டுவன் காலத்தவன். என் ’சிலம்பின் காலம்’ நூலில் செங்குட்டுவன் வடக்கே இரண்டாம் முறை படையெடுத்துப் போன காலம் பெரும்பாலும் பொ.உ.மு.80 க்கு அருகில் என்று சொல்லியிருப்பேன். செங்குட்டுவன் ஆட்சி துறந்த காலம் பொ.உ.மு. 76 என்று கொண்டால் பட்டஞ் சூடியது (பதிற்றுப்பத்துப் பதிகத்தின் படி) பொ.உ.மு.131 ஆகும். 

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இறந்தபோது பெண்காமத்தில் அவனுக்கு ஈடுபாடு இருந்ததென்று சிலம்பு கூறும். எனவே இறக்கும் போது அவன் அகவை 60க்கு மீறாது. 25 அகவையில் அவன் பட்டமேறியதாய்க் கொண்டால், 35 ஆண்டுகள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி செய்ததாய்க் கொள்ளலாம். அப்படி எனின் அவன் பட்டமேறியது பொ.உ.மு. 115. 

பட்டம் ஏறிய சில ஆண்டுகளில் ஆரியப்படை கடந்தான் எனில் உத்தேயர் படையெடுப்பு பெரும்பாலும் பொ.உ.மு 120 க்கு அருகில் நிகழ்ந்திருக்கலாம். (http://valavu.blogspot.in/2010/05/8.html) இது செங்குட்டுவனின் முதற்படை எடுப்பிற்குப் பிந்தியதென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இந்த நெடுஞ்செழியன் இமையம் போக வில்லை, நெடுஞ்சேரலாதன் வடசெலவில் வெற்றிபெற்ற காரணத்தால் பாண்டியன் இப்படியோர் பெயரைச்சேரனுக்குப் போட்டியாய்த் தனக்குச் சூட்டிக் கொண்டான் போலும். 

இனி வல்லம் எந்தச் சோழனின் ஆளுகைக்கு உடபட்டது?- என்று பார்ப்போம்.

.      

செங்குட்டுவனின் தாய் நற்சோணை என்பாள் ஞாயிற்றுச் சோழனின் மகள் என்று என் நூலில் சொல்லியிருப்பேன். ஞாயிற்றுச் சோழனுக்குத் (ஆ)தித்தன் என்ற பெயருமுண்டு. அவன் சேரரோடு (மணவுறவு) கொண்ட காரணத்தால் மணக் கிள்ளி (கிள்ளிச் சம்பந்தியென்றே இதற்குப் பொருள் என்று சிலம்பில் அழைக்கப்பட்டுள்ளான். இவன் மகன் தித்தன் வெளியன். இவன் தந்தையோடு முரணி வளநாட்டின் (சோழ நாடு வள நாடு, நாக நாடு என 2 பகுதிகள் கொண்டது.) துறைமுகமான கோடிக்கரையில் (நாக நாட்டிற்கு புகாரே தலைநகரும் துறைமுகமும் ஆகும்.) இருந்து கொண்டு ஆட்சி செய்ததும் சங்க இலக்கியத்திற் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தித்தன் வெளியன் வீர விளையாட்டு, இசை, நடனக் கூத்து என்றே சிலகாலங் கோடிக்கரையிற் கழித்தான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற் கிள்ளி (பல்வேறு தடங்களில் - வழிகளில் - வேல் வீசுந் திறன் கொண்ட கிள்ளி) என்றும், போர்வைக்கோப் பெருநற் கிள்ளி (போர்வையெனும் ஊரின் அரசன்; இற்றை உறையூருக்கு அருகிலுள்ள பேட்டைவாய்த் தலை, போர்வை எனப்பட்டதாம்.) என்றும் அழைக்கப்பட்டு, தித்தன் வெளியன் அவன் தந்தைக்கு அப்புறம் உறையூரிலிருந்து ஆண்டிருக்கிறான். 

நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் தித்தன் வெளியனே. பின் சேரலாதன், தித்தன் வெளியன் என்ற இருவருக்கும் சண்டை ஏற்பட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார், புறம் 62, 368 பாக்களால் உறுதி செய்வார். இவனுக்குப் பின் இவனுடைய இளம் அகவை மகனோடு (பெரும்பாலும் இவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாம் என உய்த்து உணர்கிறோம்.) பகை கொண்ட 9 அரசருடன் செங்குட்டுவனே போரிட்டு உறையூரை நிலைநிறுத்த உதவினான். இச்செய்திகளெல்லாம் சிலம்பின் வஞ்சிக் காண்டத்தில் வருவதை அறிய முடியும். 

இச்செய்திகளை தமிழுலகம், தமிழ்மன்ற, தமிழாயம் மடற்குழுக்களில் அகம் 152 பற்றி நானெழுதிய கட்டுரைத் தொடரில் பேசியுள்ளேன். எனவே உத்தேயர் வல்லத்தின்மேற் படையெடுக்கையில், வேற்பல் தடக்கை பெருவிறற் கிள்ளியின் ஆட்சிக்கு வல்லம் உட்பட்டிருந்திருக்கலாம் என்று முடிவு செய்கிறோம். இன்றைக்கு திருச்சிராப் பள்ளியிலிருந்து தஞ்சாவூர் போகும் பாதையில் தஞ்சைக்கு வெகு அருகில் 8/9 கி.மீட்டரில், வல்லம் இருக்கிறது. அங்கே பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சற்று தொலைவில் தமிழ்ப்பல்கலைக் கழகமும் இருக்கின்றன.   

 அகம் 336 ஆம் பாட்டின் மொத்தப் பொருள்:

குழல்தண்டிற் பொருந்திய அகண்ட சேம்பிலையின் பசும்பரப்பில், குட்டியொடு தானும் உண்ணாதிருக்கும் பெண் நீர்நாயின் வருத்தம் போக்க வேண்டி, அன்றாட உணவுதர எழுந்த நீர்நாய் நீரிற் கிடக்கும் வாளையொடு போராடி, அதைச் சாய்த்துக் கவ்வுஞ் செயலால் நீர்த்துறை கலங்கியதால். தாகத்திற்குப் பதநீர் குடித்த பின், நுணுகிச் செய்த அழகுக் குடங்களைத் தம் பக்கத்தில் இருத்தி. பண்பிலா மகிழ்நனின் பரத்தமையை பற்றிப் பேசிக் கொண்டும். பூவுதிர்க்கும் காஞ்சி மர நிழலடியில் குரவையாடியும், அயரும் மகளிர் கூடி நீராடும் இனிய துறை நிறைந்த ஊர்த் தலைவன் தேரில் வந்தது கண்டு கேலி பேசி ஏசினாரோ? அதுவும் எனக்கு நல்லது தான். 

(ஞாவகம் கொள்ளுங்கள்;) யானைப் பாகன் நெடுநாள் உயிர்வாழ்தல் என்பது கோவம் வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்து கொள்ளுங்கள். தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளது போற் செல்லுதல் என்பதும், முழவடிக்கத் துணங்கை தூக்கி ஆடும் விழாவிற்கு நான் அங்கே வராத வரைக்குந் தான். அப்படி வந்து, வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக் கொள்ளும் நெருஞ்சி போல் அவன் என்னைச் சுற்றித் திரியான் எனில், வெல்லும் வேலும், மாரி போல் அம்பும், மேகம் போற் கிடுகுமுடைய சோழரின் வில் பொருந்திய வல்லக் கோட்டையின் வெளிக் காவற் காட்டில், ஆரியர் படை சுக்கு நூறானது போல், நேரே தாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.

அன்புடன்,

இராம.கி.