Monday, October 25, 2021

Optimism, pessimism

optimum (n.)

1879, from Latin optimum, neuter singular of optimus "best" (used as a superlative of bonus "good"), probably related to ops "power, resources" (in which case the evolution is from "richest" to "the most esteemed," thus from PIE root *op- "to work, produce in abundance.") or to ob "in front of," with superlative suffix *-tumos. Originally in biology, in reference to "conditions most favorable" (for growth, etc.). As an adjective from 1885.

ஏற்கனவே உத்தமம் என்ற சொல் இதற்கீடாக நம்மிடமுண்டு. புதுச்சொல் படைக்க வேண்டிய தேவையில்லை. உத்தமம் என்பது தமிழ் தான்; அது சங்கதமல்ல. (பலரும் தவறாக அப்படி நினைத்துக் கொள்கிறார்.) உயரத்தைக் குறிக்கும் உ எனும் வேர்ச் சொல்லில் அச்சொல் பிறந்தது. உ> உத்து> உத்தம்> உத்தமம்; உத்து = உயர்வானது. உத்தமன் = சான்றோன் (”உத்தமன் நித்த அடியார் மனமே நினைந்துருகி” திருவாசகம் 5.3) உத்தரம் =  வீட்டில் தலைக்கு மேல் உள்ள முகட்டு விட்டம். உத்தரம் = மேலோன் கொடுக்கும் கட்டளை. உத்துங்கம் = உயர்ச்சி, உயர்ந்தது, தக்கணம் = தாழ்ந்த நிலம்; உத்தரம் = உயர்ந்த நிலம். எனவே வடக்கு நிலம். உதக்கு = வடக்கு, (இந்திய புவியமைப்பின் வாயிலாக உத்தரம் = உயரம் (இமையம் காரணம்); தக்கணம் = தாழ்வு (குமரிக்கும் தெற்கே நிலம் கடலுக்குள் அழிந்ததால்) ; குட நிலம் = உயர்ந்த நிலம் (மேற்குத்தொடர்ச்சி மலையால்); குண நிலம் = தாழ்ந்த நிலம் (குண திசையில் அவ்வளவு மலைகள் இல்லாததாலும், குண திசையில் பழந்தமிழகம் கடலுக்குள் அழிந்ததாலும்.) என்ற புரிதல் நெடுநாளாய் நம்மிடமுண்டு. ; 

optimism (n.)

1759 (in translations of Voltaire), from French optimisme (1737), from Modern Latin optimum, used by Gottfried Leibniz (in "Théodicée," 1710) to mean "the greatest good," from Latin optimus "the best" (see optimum). The doctrine holds that the actual world is the "best of all possible worlds," in which the creator accomplishes the most good at the cost of the least evil.

உத்தமத்தை ஒட்டிய இச்சொல்லை உத்தமையம் என்று உருவாக்கலாம். optimistic உத்தமை  (இதை உகமை என்று ஒரு காலத்தில் சொன்னேன். உகமையும் உயரம், உகப்பு ஆகியவற்றோடு தொடர்புடையது தான். அதற்குப் பின்னால் பழஞ் சொற்களை ஆய்ந்த பிறகு, குறிப்பாக உத்தமத்தின் தமிழ்மை புரிந்த பிறகு, உத்தமத்தோடு தொடர்புறுத்தலாம் என்று இன்னோரிடத்திற் சொன்னேன். இப்பொழுது உத்தமையென்றே சொல்லி அமைகிறேன்.)

How do you view this situation so optimistically? இந்நிலையை எப்படி இத்தனை உத்தமையாகப் பார்க்கிறீர்கள்? 

pessimism (n.)

1794 "worst condition possible," borrowed (by Coleridge) from French pessimisme, formed (on model of French optimisme) from Latin pessimus "worst," perhaps originally "bottom-most," from PIE *ped-samo-, suffixed (superlative) form of *ped- "to walk, stumble, impair," from root *ped- "foot." Compare Latin pessum "downward, to the ground."

சிவகங்கைப் பக்கம் எழுந்திருக்க முடியாது தாழ்ந்து கிடப்பவனைப் ”பட்டுக் கிடப்பான்” என்பார். வேண்டாதவனைத் திட்டும் போதும். “பட்டுக் கிடப்பான்; பாழாய்ப் போவான்” என்பார். தாழ்ந்திருப்பவனும் “இப்படிப் பட்டுக் கிடந்து சாகிறேனே? என்னை யாருங் காப்பாற்ற மாட்டாரா?” என்று புலம்புவார். படுதலின் செயப்பாட்டு வினை பட்டுதல். படு என்பது படி, பதி, பாதம் போன்றவற்றோடு தொடர்பு கொள்ளும்.. பட்டி = தெரு நாய். (மலையாளத்தில் இதன் பயன்பாடு அதிகம்.) பட்டிமம் என்பது தாழ்ந்த நிலையைக் குறிக்கும். (இந்நிலை எதனால் வந்தது என்பது இங்கு முகன்மையில்லை.) பட்டிமத்தை ஒட்டிய இச்சொல்லைப் பட்டிமையம் என்று உருவாக்கலாம். pessimistic பட்டிமை, (முன்னால் தன்வினையாகப் படுமை என்று சொன்னேன். பின்னால் அது செயப்பாட்டு வினையாக அமைவதே சிறப்பு என்றெண்ணிப் பட்டிமை என்று மாற்றினேன்.)   

How do you view this situation so pessimistically? இந்நிலையை எப்படி இத்தனை பட்டிமையாகப் பார்க்கிறீர்கள்?

இணையத்தில் தேடினால் என் பரிந்துரையாய் ஏராளம் சொற்களிருக்கும். இது இன்னார் சொன்னதென்று சிலருக்குத் தான் தெரியும். பொதுவாக முன்னால் மடற்குழுக்களுக்குள் இருந்தோருக்கும், வலைப்பதிவோருக்குத் தெரியும்.

அன்புடன்,

இராம.கி.

No comments: