Wednesday, October 20, 2021

மீண்டும் ஒரு மழைக்காலம்

       

குண்டும் குழியுமாய் மண்டிக் கிடக்கும்
வண்டல் கழிநீர்; வாரிடும் சேறு;
வரிசையில் முளைத்த கட்டிட முகங்களைச்
சரிவாய்க் காட்டும் சாலையின் ஓரம்;
உந்துகள் எல்லாம் நடுவினில் ஒண்டிச்
சந்திலாச் சாலையில் சார்ந்திடும் பேரணி;
நடுவம் விலக்கி, நகர்ச்சியில் கலங்கி
முடுகிய கதியில் முந்துறும் வண்டிகள்;
முந்துற முயன்றும் முடங்கி மூச்சுறும்
நந்திய நகர்ச்சி மாநகர்த் துரப்பு;
இடையில் எதிரே வண்டி விளம்பரம்;
சடசடப் புகையில் தடுமாற்றப் படிப்பு;
"நாமினி இருவர் நமக்கோ ஒருவர்;
ஊம்எனத் தயவாய் ஒலியெழுப் புங்கள்!"
முன்னவன் செவிடென மொத்தையாய்ச் சொல்லி
என்னைப் பணிக்கிறான் என்பதாய் பூம்பூம்
ஒலியினை எழுப்பி ஒருக்களித் தேகி
வழியினை வாங்க வாதிடும் வண்டிகள்;
தானாய் இயங்கும் சைகை விளக்கினை
மானவப் படுத்தி மல்லாடும் காவலர்;
சாலையின் இடங்கை ஒழுங்கையில் விரவி
பாண்டிக் கட்டம் தாண்டிடும் மக்கள்;
பாண்டியை ஆடிப் பலநாள் ஆயிற்றாம்;
ஆண்டுக் கொருமுறை அதுநினை வாகிறார்!
"திரும்பியே பார்க்காமத் திருமலை ஏறணும்"
நொண்டி நுடங்கிக் கண்கட்டிக் கொண்டு
விண்டிய தெல்லாம் நினைவிருக் கிறதோ?
"சரியா?......." "சரி"
ஒருகுழி தாண்டி ஓரடி எட்டு
"சரியா?......." "சரி"
இன்னொரு குலுக்கல், இன்னொரு குதிப்பு;
"பழம் வந்தாயிற்றா?"
இத்தனை வேகச் சந்தடி நுழைந்தபின்,
இன்றைய அலுவல் இருமணிச் சுணக்கம்;
கண்களை மூடி ஆட்களைத் தேடும்
கண்ணாம் பூச்சிக் களவிளை யாட்டில்,
நாம்தான் சூரியன் தேடுகின் றோமா?
ஆம். அது நம்மைத் தேடுகின் றதுவோ?
ஈண்டொரு சுழற்சி; எங்களின் சென்னையில்
மீண்டுவந் துற்றது மாமழைக் காலம்
அன்புடன்,
இராம.கி.

No comments: