Wednesday, December 28, 2022

தமிழில் வணிகம்

நம்மூரில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான கையேடுகள் தமிழில் இருப்பதில்லை. நாம் கொஞ்சமும் கவலுறாமல் அப் பண்டங்களை வாங்குகிறோம். வேறு எந்த நாட்டிலும் இப்படி நடப்பதில்லை. ”தமிழில் கையேடு இல்லையா? நீ எங்களூரில் விற்க முடியாது” என்று சொல்ல நம் மாநில அரசுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் நம் மாநில அரசு சொல்லாதிருக்கிறது. இதைச் செய்யும் படி அழுத்தம் கொடுத்தால் பண்டம் பயன் படுத்துவது தமிழ்க் கையேட்டால், தானே நடக்கும். ஆங்கிலம் படிக்காதவர் அடுத்தவரை நாடும் இழிநிலை இங்கு குறையும். ஆங்கிலத்தை வைத்துப் படித்தவர் படிக்காதவர் மேல் ஆட்சிசெய்யும் சுமையும் குறையும். நம் மக்களுக்கு ஆங்கிலத்தின் மேலுள்ள மோகம் குறையும். தமிழிலேயே வணிகம் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். தமிழருக்கு வேலை அதிகமாய்க் கிடைக்கும். இற்றை நாளில், கணக்கற்ற தமிழ்வழி படித்தோருக்கு வேலை கிடைக்காது போவதால், கல்லூரியில் வழங்கும் தமிழ்ப் படிப்பையே பலரும் தவிர்க்கிறார். கையேடுகளின் மொழிபெயர்ப்பு மூலம் கணிசமான இளைஞருக்கு வேலை கிடைக்கும். தமிழ்ச் சொவ்வறைகள் (softwares) உருவாகும். வணிகத் துறையின் ஆட்சிமொழி ஆங்கிலமாய்த் தொடர்ந்து இருக்காது. தமிழ் கொஞ்சங் கொஞ்சமாய் அதில் செழிக்கும். நம் ஆங்கில அடிமைத்தனம் குறையும்.

தமிழரில் பலரும் இவற்றை எண்ணிப் பார்த்துச் செயற்படுக. பொதுவெளியில் தமிழின் தேவையைக் கூட்டாமல் தமிழ் நிலைக்காது. தமிழ்நாட்டு வணிகம் உள்ளகல் (local) ஆகாது.

Thursday, December 08, 2022

பெருமாண்டம்>ப்ரம்மாண்டம்.

 அண்மையில் நண்பர் கதிர், ப்ரம்மாண்டம் என்ற சொல்லிற்கானத் தமிழிணைச் சொல்லைக் கேட்டிருந்தார். 

மாத்தல் என்பது தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். மால் என்று சொல்லினும் உள்ள பொருள் பெருமையே. (மாலுக்கு கரும்பொருளும் உண்டு.) "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.

மாலுதல்= பெருமைப் படுதல். மால்>மாள் எனத் திரிந்தாலும் கருமை, பெருமைப் பொருள்களைச் காட்டும். மாளிகை = அரண்மனை,  மாடமுள்ள பெரியவீடு. மாடம் = உப்பரிகையுள்ள வீடு; மாடி = உப்பரிகை.  மாடமாளிகை = மாடிவீடு; மாட்சி (அ) மாட்சிமை = பெருமை. இனி மாள் என்பது மாணாய்த் திரிந்தாலும் மாட்சிமையையும் குறிக்கும்.; மாடு>மடங்கு என்பதும் பெருகலைக் குறிக்கும். மாண்டல் = மாட்சிமைப் படுதல்; மாண்பு = மாட்சிமை; மேலிடம்; “மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்” - புறம் 191. மாண்ட  என்ற சொல் எட்டுத் தொகையில் 25 முறையும், மாண்டது என்பது 2 முறையும், மாண்டன்று என்பது 1 முறையும், மாண்டன என்பது 1 முறையும், மாண்டனை என்பது 1 முறையும் பயின்று வந்துள்ளன. மாணம், மாணல் = மாட்சிமை; மாடை = பொன்; அரை வராகன். மால்குதல்>மாகுதல்> மாகம் = மாகாணம்= மாநிலம்; மாத்து= பெருமை, மாத்தவம் = பெருமை;  மாத்தகை = பெருந் தகுதியுள்ளவன். மாநிலம் = நாட்டின் பெரும்பிரிவு; மாமாத்து = மிகப் பெரியது.  இவ்வளவு காட்டுகளுக்கு அப்புறமும் மாண்டம் என்பது தமிழில்லை என்போமா?

பெரு என்ற முன்னொட்டு சங்கதத்தில் ப்ர என்று திரியும். ஒரு சிலவற்றை மட்டும் இங்கு காட்டுகிறேன். பெருவுடையார்> ப்ரகதீசர்.பெருகாயம்> ப்ரகாசம், பெருஞ்சாதம்> ப்ரசாதம், பெருதரம்> ப்ரதரம், பெருந்தாபம்> ப்ரதாபம், பெருவண்டம்> ப்ரபஞ்சம், பெருவலம்> ப்ரபலம், பெருவல்>ப்ரபு, பெரும்போதம்>ப்ரபோதம், பெருமான்>ப்ரமன், பெருமதேயம்> ப்ரமதேயம், பெரும் ஆதம்> ப்ரமாதம், பெருமுகன்>ப்ரமுகன், பெரும் ஓதம்> ப்ரமோதம், பெருமாட்டி>பெருவாட்டி>ப்ராட்டி, 

மாண்டத்தின் தொடர்பில் இன்னும் பல சொற்கள் இருக்கின்றன. macro என்பதற்கு இணையாக மாக, மாகிய என்பவற்றைச் சொல்லலாம். மதித்தல் வினை கூட,  மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் எனும் பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மா ஆகுதல் > *மாகுதல் > மாதல். சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணிதாய் இருந்துவிட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும் புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக சிவகங்கை வட்டாரத்தில் சொல்வார். மக ஈசன் மகேசன் என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதைக் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சொல்வார். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார். மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் பெரியவர் என்று பொருள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர் மாக்கள்.

மாகுதல் வினை அடிப்படையில் மாதல் பொருள் கொண்ட வினையே. மொழிநீட்சியில் அதைப் புழங்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய எனும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் வினை வாகாய் அமையும். macro meter= மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைவது இந்தையிரோப்பியப் பழக்கம்.

இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. பலரும் உணர்ச்சி வயப்பட்டு தடம் மாறிப் போகிறார். ரகரம் நுழைவது, யகர, வகரங்கள் நுழைவது இன்னும் இது போன்ற சொல் திரிவு விதிகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை இனங் காணலாம் என்று மட்டுமே நான் சொல்கிறேன். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர் போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்தில் உள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இவ் ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம்.

macro வோடு, magnitude என்பதையும் காணலாம். தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே magniude =  அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவமானம் என்பது முற்றிலும் தமிழே; வடமொழியல்ல. அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) 

தன்னைப்பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் ஓர் அளவுகோல் வந்துவிடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத்தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20 இல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளுண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்வோம். மானம் = பெருமை

magnify என்பதும் நாம் கவனிக்க வேண்டியதே. இங்கே வெறும் அளவுமட்டும் இல்லாமல், பெரிதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப்படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.

much என்ற சொல்லும் மாத்தலின் வழி வந்தது தான். நீரை ஒரு கலத்தில் ஊற்றிக் கொண்டே வரும் பொழுது அது விளிம்பில் இருந்து கொட்டுகிறது பாருங்கள் அதை மகுதல்>மகுருதல் என்று எங்கள் பக்கத்தில் சொல்வார். இந்த மகுவும் மிகுவும் தொடர்புள்ள சொற்கள். இருந்தாலும் மிகுதல் = to exceed என்ற பொருளைச் சட்டென்று குறிப்பதால், மகுதல் என்றும் அதன் முன் திரிபான மொகுதலையும் உரிய வினையாகக் கையாளலாம். multiply என்பதைக் குறிக்கும் மல்குதல் என்ற சொல்லும் மகுதல் என்று பேச்சுவழக்கில் ஆவதால், மொகு என்பதே much ற்கான என் பரிந்துரை. much என்பதற்கும் more என்பதற்கும் நுணுகிய வேறுபாட்டை ஆங்கிலத்தில் சொல்வார். Much water has flown through the river = மொகுந்த நீர் ஆற்றின் வழியே பெருகியிருக்கிறது / விளவியிருக்கிறது.

இதற்கு அடுத்து மல் என்னும் வேரில் கிளைக்கும் 3 சொல் தொகுதியைப் பார்க்கலாம். முதலில் multi இதை மிகச் சுருக்கமாய் மல், மல்கு>மகு என்றே சொல்லலாம். மல்கிப் பெருகுதல் என்ற வழக்குத் தமிழில் கால காலமாய் உண்டு. multiply என்பதை இக்காலப் பேச்சுவழக்கில் பெருக்குதல் என்றே சொல்லிவருகிறோம். இருந்தாலும் இலக்கிய வழக்கில் மல்குதல் வினை இருந்துள்ளது. மல்குதல் என்பதைத் திரித்துப் பேச்சுவழக்கில் மலிதல் என்றாலும் பெருகுதல் பொருளைத் தரும். மல்குதல்/மலிதல் என்பவை தன்வினையில் வரும் சொற்கள். அதே சொல்லை மலித்தல் என்று சொன்னால் அது பிறவினையாகிவிடும். Please multiply two by five = இரண்டை ஐந்தால் பெருக்குக/மலிக்குக. 

பெருக்குதல் என்பது "கணக்கதிகாரம்" போன்ற தமிழ் நூலில் பேச்சு வழக்குச் சொல்லாகத் திரிந்த முறையில் பருக்குதல்>பழுக்குதல் என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது. இது போக மல்தல் வினை, மால்தல் என்று நீண்டு, பின் புணர்ச்சியில் மாறல் என்றும் ஆகி, பெருக்கல் வினையைக் குறிக்கிறது. மாறல் என்ற இச்சொல்லும் "கணக்கதிகாரம், கணித நூல்" போன்றவற்றில் multiplication என்பதற்கு இணையாகப் பெரிதும் ஆளப் பட்டிருக்கிறது. 

இந்நூல்களில், ஓர் இழுனை அளவைக் (linear measure) கொடுத்து, அவற்றால் ஏற்படும் சதுரங்களின் பரப்பு அளவை (area measure) கண்டு பிடிக்கும் வேலைக்கு "பெருங்குழி மாற்று, சிறுகுழி மாற்று" என்ற சொற்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்றைக்கு மாற்றுதல்/மாறல் என்ற சொற்கள் வேறு பொருள் கொள்ளப் படும் என்பதால், முந்தைய வடிவமான மலித்தல் என்பதையே நான் பெருக்குதலோடு சேர்ந்து இங்கு பரிந்துரைக்கிறேன். 

பெருக்குதல், மலித்தல் என்பவை போக இன்னொரு சொல்லும் அகரமுதலிகளில் இருக்கிறது. அது குணித்தல்/குணத்தல் என்று சொல்லப்படும். பெருக்கல் என்பது விரிந்த கூட்டல் (extended addition) என்ற முறையில் தொடர்பு காட்டினால், குணித்தல் என்பது கணித்தலோடு தொடர்புள்ளது; கணித்தல் கூட்டலோடு முதலிலும், நாளடைவில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்னும் நான்கு செயற்பாடுகளையும் குறிக்கத் தொடங்கியது. இன்றைக்குக் கணித்தல் சொல்லின் பொருட்பாடு மேலும் விரிந்திருக்கிறது. ஆகப் பெருக்கல், மலித்தல், குணித்தல் என மூன்று சொற்கள் தமிழில் பெருக்கற் கருத்தைச் சொல்ல வாகாக உள்ளன. அவ்வகையில் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும் குறிக்கப்படும் குணகாரம், குணனம் = பெருக்கல், குணித்தல் = பெருக்குதல், குணகம் = பெருக்கும் எண், குண்ணியம், குணனீயம் = பெருக்கப்படும் எண், குணிதம் = பெருக்கிவந்த தொகை என்ற சொற்களையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அடுத்த சொல்  multitude; இது மல்குதல்/மலிதல் வினையில் இருந்து உருவான பெயர்ச்சொல். மல்கிக் கிடப்பதால் இதை மல்கணம் என்றே அழைக்கலாம்.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நான் அறிந்தவரை பெருமாண்டம் என்பதே சங்கதத்தில் ப்ரம்மாண்டம் என்றாகியுள்ளது.  


Monday, December 05, 2022

வனம் என்பது தமிழ்ச்சொல்லா?

இருவேறு நண்பர்கள் தனிமடலில் “வனம்” என்பது தமிழ்ச்சொல்லா? - என்று கேட்டார். என்விடை பொதுவிலும் இருப்பது நல்லது என்று இங்கு பதிகிறேன்.   

 நீர்க்கடல் என்ற சொல்லில் வரும் கடலுக்குச் செறிவென்ற பொருள் உண்டு. நீர் செறிந்தது நீர்க்கடல். நாளாவட்டப் புழக்கத்தில் சொல்வோருக்கும் கேட்போருக்கும் புரிந்த நிலையில் நீர் என்பதைத் தொக்கி,  வெறுமே கடல் என்றாலே ocean என்று புரிந்து சொல்லைச் சுருக்கத் தொடங்கினார். அதுபோல் வேறு மொழிகளிலும் உண்டு. காட்டாகச் சங்கதத்தில் ஜல சமுத்ரம் என்ற சொல்லில் சொல்வோருக்கும் கேட்போருக்கும் புரிதல் ஏற்பட்ட காரணத்தால் ஜல என்பதைத் தவிர்த்து வெறுமே சமுத்ர என்றாலே ocean என்று புரிந்துகொண்டார். 

இதே போல் மரங்களின் செறிவு கூடிய இடம் மரக்காடாகி நாளடைவில் மரம் என்பதைத் தொக்கி, காடு என்றாலே  மரங்களின் செறிவு மிக்க இடம் என்று சுருக்கிக் கொள்ளப்பட்டது.  ஏனெனில் கடு என்பதற்கு மிகுதி, செறிவு, அடர்த்தி என்ற பொருள்கள் உண்டு.  இதனால் கடுத்தது (=செறிந்தது, அடர்ந்தது)  காடு என்று புரிந்துகொள்ளப் பட்டது. இன்னொரு  சொல்லைப் பார்ப்போம். வல்>வலிமை, வல்>வலு, வல்>வன் போன்ற சொற்கள் எல்லாமே செறிவு, இறுக்கம், கடுமை போன்ற பொருள்களை வன் என்ற சொல்லிற்குக் கொடுக்கும்.  எனவே மரங்கள் செறிந்ததைக் காடு என்பது போலவே வனம் என்ற சொல்லும் காட்டும். 

வன்கண், வன்கனத்தம், வன்கனி, வன்காய், வன்காந்தம், வன்காரம், வன்காற்று, வன்கிடை, வன்கிழம், வன்கை, வன்கொடுமை, வன்கொலை, வன்சாவு, வன்சாவி, வன்சிரம், வன்சிறை, வன்சுரம், வன்சொல், வன்துருக்கி, வன்நெஞ்சம், வன்பகை, வன்பாதல், வன்பாட்டம், வன்பாடு, வன்பார், வன்பால், வன்பிணி, வன்பிழை, வன்பு, வனபுல், வன்புலம், வன்புற்று, வன்புறை, வன்பொறை, வன்மம், வன்மரம், வன்மரை, வன்மா, வன்மான், வன்மீன், வன்முறை, வன்மை, வன்மொழி, வன்றி, வன்றொடர் என்ற சொற்களை வலிமை,, செறிவு  இறுக்கம், கடுமைப் பொருளில்  தான் கையாள்கிறோம். 

இது தமிழின் இயல்பாகின், இதையொட்டி வன்+அம் = வனம் என்ற சொல் எழாதா? காடு என்ற சொல் ஏற்பட்டது போல், வனம் என்ற சொல் எழாதோ? தமிழ் மட்டும் ஏதோ அரைகுறை மொழியோ?  அதேபொழுது ஏதோ ஒரு குழறுபடியில், நம் தனித்தமிழ் அகரமுதலிகளில் வனம் என்ற சொல் இல்லை தான். 19/20 ஆம் நூற்றாண்டுகளில் அப்படி ஓர் முடிவு ஏற்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியது.  ஆனால் ஏரணப்படி நம் சொல் வளர்ச்சி பார்த்தால் வனம் என்ற சொல் அவ்வகரமுதலிகளில் இருந்திருக்க வேண்டும். இறுக்கமான காழைக் கொண்ட மரமான வன்னி மரத்தை எண்ணிப் பாருங்கள், வன்னிமரம் தமிழானால், ஏராளமான மரங்கள் செறிந்து கிடக்கும் காட்டை வனம் என்று தமிழன் சொல்லான் என்பது விந்தையாக உள்ளது. 

என்னால் அப்படிச் சொல்ல முடியாது. என் சிந்தனையில் அது தமிழே.