Friday, June 24, 2022

Artificial Intelligence உம் இன்னுஞ் சிலவும்

அண்மையில் ஒரு நண்பர் கேட்டாரென்று  artificial intelligence க்கு இணையாகச் செய்யறிவு என்று சொல்லிவைத்தேன். ஒரு பக்கம் அது சரியென்று தோன்றியது. இன்னொருபக்கம் இன்னும் கொஞ்சம் ஆழம் போகலாமோ? எல்லா அறிவும் intelligence ஆகுமா? - என்ற கேள்வியும் தோன்றியது. artificial intelligence க்கு இணையான தமிழ்ச்சொல்லைச் சற்று ஆழமாய்ப் பார்ப்போம். 

முதலில் intelligence (n.) பற்றிப் பார்ப்போம். ஆங்கிலத்தில், “late 14c., "the highest faculty of the mind, capacity for comprehending general truths;" c. 1400, "faculty of understanding, comprehension," from Old French intelligence (12c.) and directly from Latin intelligentia, intellegentia "understanding, knowledge, power of discerning; art, skill, taste," from intelligentem (nominative intelligens) "discerning, appreciative," present participle of intelligere "to understand, comprehend, come to know," from assimilated form of inter "between" (see inter-) + legere "choose, pick out, read," from PIE root *leg- (1) "to collect, gather," with derivatives meaning "to speak (to 'pick out words')."” என்று சொல்வர்.  இங்கே குறிப்பிடவேண்டியது power of discerning என்பதாகும். அறிதல் என்பது அவ்வளவு முகனையில்லை. தெள்ளுதலும், தெளிவும், தெரிவும், தேர்வுமே முகனையானவை. பல்வேறு உகப்புகளிலிருந்து சிந்தித்து ஏதோவொன்றை தெள்ளும் திறன். இதைத் தெள்ளுகை என்பதே போதும்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு

என்று குறள் 374 சொல்லும். சென்னைத் திருவல்லிக்கேணியில் எழுந்தருளும் நரசிங்கப்பெருமாளுக்குத் ”தெள்ளிய சிங்கப்பெருமாள்” என்று பெயர். தெள்குதல் = தெளிவாதல், “வள்ளுயிர்த் தெள்விளி இடையிடை பயிற்றி” என்பது குறிஞ்சிப்பாட்டு 700. “தெள்ளுஞ் கழலுக்கே” என்பது திருவாசகம் 10.19. “தெள்ளியறிந்த விடத்தும் அறியாராம்”- என்பது நாலடியார் 380. “பிரியலேம் தெளிமே” என்பது குறுந்தொகை 273. தெளிஞன்  = தெளிந்த அறிஞன்.. “தெளிவெனப் படுவது பொருள் புலப்பாடே” என்பது தண்டியலங்காரம் 16. “தெளிவிலார் நட்பில் பகை நன்று” என்பது நாலடியார் 219 “தெளிவிலதனைத் தொடங்கார்” என்பது குறள் 464. 

அடுத்தது  artificial (adj.) . இதை “late 14c., "not natural or spontaneous," from Old French artificial, from Latin artificialis "of or belonging to art," from artificium "a work of art; skill; theory, system," from artifex (genitive artificis) "craftsman, artist, master of an art" (music, acting, sculpting, etc.), from stem of ars "art" (see art (n.)) + -fex "maker," from facere "to do, make" (from PIE root *dhe- "to set, put")” என்று சொல்வர். பலரும் செயற்கை/ செயற்று என்றே மொழி பெயர்ப்பர். செய்தல் வழி எழுந்த சொல் இது. செய்தலுக்கு மாற்றாக ஆற்றுதலையும் பயன்படுத்தலாம். மாந்தவுழைப்பில் நாம் செய்வதோடு, மற்ற மாந்தரைச் செய்வித்தல் என்பதை ஆற்றுவித்தல் என்றுஞ் சொல்லலாம். பட்டுவ வாக்கிற் (passive voice) சொல்வது இங்கு சிறப்பாயிருக்கும். 2 ஐயுஞ் சேர்த்து ஆற்றுவித் தெள்ளிகை அல்லது செயற்றுவித் தெள்ளிகை அல்லது செய் தெள்ளிகை என்பது artificial intelligence க்குச் சரிவரும். சுருங்க வேண்டின் செய் தெள்ளிகையே என் பரிந்துரை.. 

அடுத்தது machine learning பார்ப்போம். machine, engine என எல்லாவற்றையும் பொறியெனச் சொல்வது சரியில்லை. Engine is a driver. machine can be either a drver or a driven one. It justs converts one form into another. தமிழில் எ(ல்)ந்திரம்>எந்திரமென்பது எற்றுதல் (= தள்ளுதல்) தொடர்பாய் எழுந்த சொல். இதை இயக்குதற் பொருள் வரும்படி இய(ல்)ந்திரம் என்றுஞ் சொல்வர். எல்லுதல்/இயலுதல் என்ற இரு செயல்களுமே ஒரு machine ஐ இன்னொரு machine இயக்குவது குறித்தது.. காட்டாக நாம் பயன்கொள்ளும் சீரூந்து என்பது 4 பேரோ, 8 பேரோ செல்லும் ஒரு சகடம் (car) ஆகும். இது வெறுமே 1 machine அல்ல. இதனுள் 2 machineகள் உள்ளன. 4 சக்கரமிருக்கும் சகடத்தை (machine1) சகடத்தின் எந்திரம் எனும் 2 ஆம் machine இயக்குகிறது. 

அப்படியெனில் machine ஐ எப்படித் தமிழில் சொல்வது? இதற்கான விடை எளிது. ஆனாற் கவனம் வேண்டும். திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் சீராகச் செய்யவும், தன்னாலியலாத பெரும் வேலைகளை தன் சிந்தனையால், கருவிகள்/கட்டுப்பாடுகளாற் செய்யவுமே மாந்தன் machine ஐக் கண்டு பிடித்தான். இதில் முகன்மையானது அச்செடுத்தது போல் ஒப்பிட்டு மீளச் செய்யும் வேலையின் நேர்த்தி. மா என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு அளவு, ஒப்பீடு, அதிகம், வலி ஆகியவை பொருட்பாடுகளாகும். .ஆங்கிலத்தில் machine ஐ, ”1540s, "structure of any kind," from Middle French machine "device, contrivance," from Latin machina "machine, engine, military machine; device, trick; instrument" (source also of Spanish maquina, Italian macchina), from Greek makhana, Doric variant of Attic mekhane "device," from PIE *magh-ana- "that which enables," from root *magh- "to be able, have power." என்று குறிப்பிடுவார்.  

இவ் வரையறையில் முகன்மை ”மா” என்பதே. தமிழில் அன்னுதல் = போலுதல். மா+அன்னுதல் என்ற சொற்கள் புணரும் போது உடம்படுமெய்யாக யகரம், வகரம் பெரும்பாலும் பயன்படும் ஓரோவழி ககரமும் சில போது பயன்படலாம். இங்கே அதைப் பெய்து மா+க்+அ(ன்)னுதல் = மாக(ன்)னுதல் என்ற கூட்டுச் சொல்லை உருவாக்கலாம் ”ஒன்றைப்போல் இன்னொன்றைச் செய்து கொண்டிருத்தலை அது குறிக்கும். வலி, அதிகம் என்ற பொருளும் இதனுள் உண்டு. ஒரு machine இப்படித் தானே இயங்குகிறது? machine = மாகனை அல்லது மாகனம். நான் சில காலமாய் மாகனத்தைப் பயின்று வருகிறேன். பலரும் இதைக் கேள்வி கேட்கிறார். என் விடை சிறியது. ”கருவி என்பது நம்மிடம் பல காலம் இருந்தது. 200/250 ஆண்டுகளிற்றான் machine எனும் பெருங் கருவியை அறிந்தோம். கருவியத்தைக் காட்டிலும் மாகனம் எனக்குப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது.  

பொறி என்ற சொல் எந்திரத்திற்கு ஒரு மாற்றே (குறிப்பாக உள்ளக எரிப்பு இயந்திரத்திற்கு - internal combustion engine - அதுவொரு மாற்று.) அதன் பொருளை நீட்டி மாகனத்திற்கு இணையாகப் பயில்வதற்கு நான் தயங்குவேன். (இத் தெளிவு எனக்குவர நெடுங்காலமானது. என் பழைய ஆக்கங்களில் எந்திரம், பொறி என்ற சொற்களின் பயன்பாட்டில் குழப்பம் இருந்திருக்கிறது, இப்பொழுது 4,5 ஆண்டுகளாய் அதில் குழப்பம் தவிர்க்கிறேன்.) என் பரிந்துரை machine learning = மாகனப் பயிற்றுவிப்பு. (மாகனம் பயில்கிறது. நாம் பயிற்றுவிக்கிறோம்.) அடுத்தது 

Deep learning - ஆழ் பயிற்றுவிப்பு; 

Deep neural networks =  ஆழ் நரம்பக வலையங்கள்; 

Differential Programming = வகை நிரலியாக்கம்;  

Probabilistic Programming = பெருதகை நிரலியாக்கம் (http://valavu.blogspot.in/2010/06/blog-post_21.html)

Intuition (n.) உட்தோற்றம்

mid-15c., intuicioun, "insight, direct or immediate cognition, spiritual perception," originally theological, from Late Latin intuitionem (nominative intuitio) "a looking at, consideration," noun of action from past participle stem of Latin intueri "look at, consider," from in- "at, on" (from PIE root *en "in") + tueri "to look at, watch over" (see tutor (n.)).

intuitive = உள்ளே தோன்றியபடி

couner- என்பது contra- என்னும் இலத்தீன் முன்னொட்டிலிருந்து வந்தது. அதை எதிரென்று சொல்லுவதைக்காட்டிலும் கூடாவென்று சொல்வதே நல்லது. நம்முடைய கூடா-விற்கும் இலத்தீன் contra- விற்கும் தொடர்பிருப்பதாகவே நான் எண்னுகிறேன். தவிர முன்னொட்டைக் காட்டிலும் பின்னொட்டே இங்கு தமிழிற் சரிவரும். 

counter-intuitive = உட்தோற்றத்திற் கூடாதபடி. (உட்தோற்றிற் கூடிவராத படி) 


Wednesday, June 15, 2022

9,90,900

”9,90.900 என்பவற்றை ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், என்று நாம் சொல்வது தப்பு , தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்றே சொல்ல வேண்டும், அப்படித் தான் சங்க காலத்தில்  நம் முன்னோர் கூறினார்” என்பது ஓர் ஆதாரமற்ற கூற்று, அரைகுறைப் புரிதலோடு இணையமெங்கும் இக் குறிப்பு சுற்றிக் கொண்டு மீள மீள வருகிறது, இல்லாத சிக்கலை இருப்பது போல் உரைக்கும் போலியுரையார் எவரும் மூல நூல்களைப் பாரார் போலும். தான்தோன்றித் தனமாய்த் தனக்குத் தோன்றுவதை எல்லாம் அடித்து விடுவதும்.  விவரந் தெரியாதோர் அதைக் கண்டு அசந்துபோய், இப் போலி விளக்கம் சரியோ என எண்ணத் தலைப்படுவதும் தொடர்கிறது. நண்பர் ஒருவர் ”இது சரியோ?” என்று எண்ணத் தலைப்பட்டு தம் முகநூல் பக்கத்தில் ஒரு முறை, இடுகை இட்டிருந்தார். அவர் போல் பலரும் இப்போலியைச் சரியென எண்ணக் கூடும். உண்மையை அறிக நண்பரே!. 

முதலில் தொண்டு, ஒன்பதைப் பார்ப்போம்.. தொல்காப்பியத்தில்  தொண்டு என்பது ஓரிடத்திலும், ஒன்பது என்பது வேற்றுமையுருபுகளுடன் 15 இடங்களிலும் (ஒன்பஃது - 2 , ஒன்பதிற்று - 1, ஒன்பதின் - 1, ஒன்பதும் - 3, ஒன்பாற்கு - 2, ஒன்பான் - 6 என) வருகின்றன. இதே போல் சங்கநூல்களில்  தொண்டு ஓரிடத்திலும், (ஒன்பதிற்று - 4, ஒன்பதிற்று ஒன்பது - 1, ஒன்பது - 3 என) ஒன்பது 9 இடங்களிலும் வருகின்றன. சொல்லாட்சி காணின், ஒன்பது என்ற பெயர் எங்கும் 90 ஐக் குறிக்க வில்லை. ஆகத் தொண்டும் ஒன்பதும் 9 எனும் ஒரே எண்ணைக் குறிக்கும் சம காலச் சொற்களே. இப்பெயர்கள் வந்துள்ள அடிகளை உங்கள் பார்வைக்குக் கீழே தந்துள்ளேன்.

தொல்காப்பியம் 

-------------------------

  தொண்டு (1)

தொண்டு தலையிட்ட பத்து குறை எழுநூற்று - பொருள். செய்யு:101/3

   ஒன்பஃது (2)

னகர தொடர்மொழி ஒன்பஃது என்ப - எழுத். மொழி:49/2

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே - பொருள். செய்யு:101/4

    ஒன்பதிற்று (1)

உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே - எழுத். தொகை:28/2

    ஒன்பதின் (1)

இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே - பொருள். புறத்:21/24

    ஒன்பதும் (3)

அ பால் ஒன்பதும் அவற்று ஓர்_அன்ன - சொல். பெயர்:14/6

அ வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி - சொல். வினை:31/3

ஒன்பதும் குழவியொடு இளமை பெயரே - பொருள். மரபி:1/4

    ஒன்பாற்கு (2)

நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு - எழுத். குற்.புண:67/1

  ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே -    67/2

ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே - எழுத். குற்.புண:70/2

    ஒன்பான் (6)

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் - எழுத். குற்.புண:32/1

ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் - எழுத். குற்.புண:40/1

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது - எழுத். குற்.புண:54/1

ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே - எழுத். குற்.புண:58/1

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது - எழுத். குற்.புண:65/1

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - எழுத். குற்.புண:75/1

சங்க நூல்கள் 

-------------------------------

    தொண்டு (1)

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என - பரி 3/79

    ஒன்பதிற்று (4)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் - திரு 168

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

ஒன்பதிற்று தட கை மன் பேராள - பரி 3/39

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் - பரி 11/3

    ஒன்பதிற்று_ஒன்பது (1)

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

    ஒன்பது (3)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் - திரு 183

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - அகம் 125/20

---------------------------------------

இனி சொற்பிறப்புகளுக்கு வருவோம். தமிழில் சுழி, ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, பத்து, நூறு, ஆயிரம். இலக்கம்/நெய்தல், கோடி/குவளை, ஆம்பல், சங்கம். தாமரை, வெள்ளம் ஆகிய சொற்களே அடிப்படை எண்ணுச் சொற்களாகும். வெள்ளத்திற்கு மேல் எந்த எண்ணையும் நான் தமிழ்வழியே கண்டதில்லை. வெள்ளத்திற்குக் கீழுள்ள சொற்கள் எல்லாம் இவற்றைக் கொண்டு உருவானவையே. முதலில் 4 இன் பெயரைப் பார்ப்போம். 

I, II, III, IV, V, VI, VII, VIII, IX, X என்று உரோமன் முறையில் எழுதுகிறாரே? அதை வைத்தே கூட இதைச் சொல்லலாம். உரோமனில் அடிக்குறியீடுகள் I, V, X, L, C, D, M என்று அமையும். இவற்றின் மதிப்பு 1, 5, 10, 50, 100, 500, 1000.  இவற்றை வைத்தே சில மரபுகளோடு (அதாவது விதிகளோடு) மற்ற எண்களை உரோமனில் கட்டுவார். I, II, III வரை கோடுகளை ஒன்றன்முன் ஒன்றாக வலப்பக்கமிட்டு வருவதற்குக் கூட்டலென்று பெயர். நாலென வரும்போது நாலு கோடுகளிடாது ஒரு V ஐ இட்டு அதன் இடப்பக்கம் கோடிட்டு IV ஐக் குறிப்பார். ஆக இடப்பக்கம் கோடிடுவதன் பொருள் கழித்தல் ஆகும். அதாவது 5 இலிருந்து 1 ஐக் கழித்தால் 4. ஆறிற்கு மறுபடியும் வலப்பக்கம் கோடிட்டு VI, VII, VIII என 6, 7, 8 ஐக் குறிப்பர். அடுத்து ஒன்பதின் குறியீடாய் நாலில் நடந்தது போல் X ஐக் குறித்து அதன் இடப்பக்கம் கோடிட்டு ஒன்பதை IX என்று குறிப்பார். இதன் பொருள் பத்து - ஒன்று. இதே முறையில் தான் தமிழிலும் சொற்பொருள் வழி காட்டுகிறார். 

5 என்பது கை என்ற சொல்லில் எழுந்தது. கையில் குறைந்தது நாலு. நலிந்தது/நால்ந்தது என்ற சொல் குறைந்ததைக் குறிக்கும். நால்ங்கை>நான்கை>நான்கு என்பது தமிழில் ஏற்படும் இயல்பான திரிவு. இதை இன்னும் சுருக்கிக் கை/கு-வைத் தொக்கி நாலு என்றும் சொல்கிறோம். ஆகக் கூட்டல் முறை மட்டும் தமிழில் எண்ணுப் பெயர் வளர்ச்சியைக் காட்டவில்லை. கழித்தல் முறையும் நம் எண்ணுப் பெயர்களில் பயில்கிறோம். 6,7,8 என்ற சொற்கள் எழுந்த வகையை நான் இங்கு பேசவில்லை. மாறாக, நேரே ஒன்பதிற்கு வருவோம்.  இதிலும் கழித்தல் முறை பயில்கிறோம்.

10  வந்தபின், 9  ஏற்படுவது இயல்பு. பத்தை விட ஒல்லியானது (குறைந்தது) ஒன்பது, ஒலிந்த பத்து> ஒல்ந்த பத்து> ஒன்பத்து>ஒன்பது. இதே எண்ணை இன்னொரு வகையிலும் சொல்லலாம். பத்தில் தொண்டியது (துவள்>தொள்> தொண்டு>தொண்டியது - குறைபட்டது) என்றும் அணுகலாம். தொள்ந்த பத்து> தொண்பத்து> தொண்பது என்பதும் சரியே. பது என்பதை உள்ளூறப் புரிந்துகொண்டு தொண்டு என்ற சொல்லும் எழும். இன்னொரு வகையில் சொன்னால், துவள்ந்து>துவண்ட பத்து, தொண்பது. தொள்ளும் ஒல்லும் ஒரே பொருள. எப்படிக் கையைத் தொகுத்து நால்/நாலு, நான்கைக் குறித்ததோ, அப்படியே துவள்> தொள்> தொண்டு என்பதும் ஒன்பதைக் குறித்தது. தொள்ளுவது= துளைபட்டது. பத்தில் தொள்ந்தது = குறைந்தது; மறவாதீர். தொள்பட்டது  செயப்பாட்டு வினை. தொண்டு செய்வினை.  

ஒன்பது தொண்டு என்ற இரண்டுமே தமிழில் ஒரேபொருள் குறிக்கும் சொற்கள் தாம். சங்கதத்திலும் மேலை மொழிகளிலும் கூட நொய்ந்தது (குறை பட்டது) என்பது நொவம்>நவம் என்றும் ஆங்கிலத்தில் நவம்>நவன்>நயன்>nine என்றும் ஆகும். சிந்தனை முறை 2 மொழிக்குடும்பங்களிலும் ஒன்றாகவே உள்ளது. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியத்திற்கும் ஏதோ ஒரு தொல்பழங் காலத்தில் உறவு இருக்கலாம் என நான் சொல்வதை இப்போதாவது உணர்க. .

தொள் எனும் முன்னொட்டு குறைபட்டது என்று பொருள் தருவதால் நூற்றுக்கு முந்தைய பத்து தொள்+நூறு = தொண்ணூறு ஆயிற்று. அதேபோல ஆயிரத்திற்கு முந்தைய நூறு தொள்ளாயிரம் ஆயிற்று. 

தொள் இலக்கம் அல்லது தொள் நெய்தல் = தொண்ணெய்தல், என்பதை இப்போது தொண்ணுறாயிரம் என்கிறோம். இதேபோல் தொள்கோடியை தொண்ணூறு இலக்கம் என்கிறோம். தொள்ளாம்பல், தொள்சங்கம், தொள்தாமரை, தொள்வெள்ளம் போன்றவற்றையும் வேறு வகையில் அழைக்கலாம்.  

மேலே சொன்னதற்கு விதிவிலக்காய் 9000 பயன்படுவதும் ஒரு காரணங் கருதித் தான். பத்தாயிரம் என்பதற்கு தனிச்சொல் தமிழில் கிடையாது. (சங்கதத்தில் உண்டு. நியுதம் என்பார்.) எனவே தமிழில் ஒன்பதாயிரம் என்பது ஒன்பதையும் ஆயிரத்தையும் சேர்த்துப் பெருக்கல் வழியில் உரைக்கிறோம்.

     

  


Monday, June 13, 2022

உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி

இது 2007 இல் மார்ச்சு 14 இல் சொல் ஒரு சொல் என்னும் வலைப்பதிவில் இட்டது. சேமிப்பிற்காக இங்கு மீண்டும் இடுகிறேன்.

======================

 சொல் ஒரு சொல்லை விடாது படித்து வருகிறேன். பெரும்பாலும் பின்னூட்டு இடாமல் படித்துப் போய்விடுவதுண்டு. இப்பொழுது, உதயம், மதியம், அஸ்தமனம், ராத்திரி என்ற நான்கு சொல்லை இங்கு கொடுத்துச் சிறுபொழுதுகள் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். என்னுடைய இடையூற்றைப் பொறுத்துக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

இது போன்ற சொற்கள் பெரும்பாலும் இருபிறப்பிகள். அவற்றின் கருக்கள் தமிழாய் இருக்கும், வெளித்தோற்றம், முடிப்பு ஆகியவையோ வடமொழியாய் நிற்கும்.
உத்தல் என்பது தோன்றுதல், விடிதல், உயர்தல் என்ற பொருளைக் குறிக்கும் நல்ல தமிழ் வினைச்சொல் தான். அதன் திரிவான உற்றது என்ற சொல்லை நாம் புழங்குகிறோம், இல்லையா? உற்றது என்றால் ஏற்பட்டது என்றுதானே பொருள்? ஒளி தோன்றியது, ஏற்பட்டது என்பதைக் குறிப்பது தான் உத்தல் என்னும் வினை. சூரியன் உற்றினான் என்றால் = சூரியன் தோன்றினான்.

உற்றுதல்>உற்றித்தல்>உத்தித்தல்>உதித்தல் என்ற வளர்ச்சி நமக்கு உரியது தான். சூரியன் உதித்தான் என்பதும் நாம் சொல்லக் கூடியது தான். (பொழுது என்பது கூட முதலில் கதிரவனைக் குறித்துப் பின்னால் தான் காலத்தைக் குறித்தது.) ஆனாலும் உதயம் என்ற அந்த முடிவில் எங்கோ வடமொழிச் சாயல் தெரிகிறது. என்ன என்று அறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த இருபிறப்பிச் சொற்கள் எல்லாமே இப்படித்தான்; ஒருவகையில் பார்த்தால் தமிழாய்த் தெரியும்; இன்னொரு வகையில் பார்த்தால், வடமொழித் தோற்றம் கொள்ளும்.

அடுத்து மதியம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நண்பகல் என்பது நள்ளிய பகல் என்றே பொருள் கொள்ளும். நள்ளுதல் என்பது குத்தப் பட்டது, நிலைக்கப் பட்டது என்ற பொருளை இங்கு காட்டும். "நட்டமே நிற்கிறான் பார்" என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார். (நட்டப் பட்ட ஒரு நிலம் நாடு.) ஒரு வட்டத்தின் மையத்தில் நட்டப் பட்டது நடுவம். நண்பகல் என்பதும் நடுப்பகல் என்பதும் ஒன்றுதான். பகலை ஒதுக்கி வெறுமே இடம், பொருள், ஏவல் பார்த்து நடுவம் என்றும் சொல்லலாம். அது காலத்தைக் குறிக்கிறது என்று உரையாட்டில் புரியுமானால் சுருக்கச் சொல்லைப் புழங்குவதில் தவறில்லை.

**பொதுவாக தமிழிய மொழிகளுக்கும், வடபால் மொழிகளுக்கும் (=இந்தையிரோப்பிய மொழிகளுக்கும்) நடக்கும் ஒலிமாற்றத்தில் நம்முடைய நகரம் அங்கு மகரமாகும். நம்முடைய டகர, றகர, ழகர, ளகரங்கள் அங்கு தகர, ஷகரங்களாய் மாறி ஒலிக்கும். நம் நடு அங்கே மது என்றாகும். [இந்த விதியைப் பின்பற்றித் தான், minute -இன் இணையான "நுணுத்து" என்ற நம் சொல்லை மீட்டெடுத்தோம்]; நகர, மகர இணைகளை நான் ஒரு பட்டியல் போட்டே சொல்ல முடியும். நடுவம் ம(த்)தியம் என வடமொழியில் ஆனது ஒரு இயல்பான மாற்றம் தான். (யகரம், ரகரம் ஆகிய ஒலிகள் வடமொழிப் பலுக்கில் இது போன்ற சொற்களில் உள்நுழையும்.) நடுவ அண்ணம் (approximately middle time) என்பது நடுவத்திற்கு அண்மையில் உள்ள காலம்; இதையே வடமொழிப் பலுக்கலில் மத்திய அண்ணம் = மத்திய அண்ணம் = மத்தியாண்ணம்>மத்தியானம் என்று சொல்லுவார்கள். இதிலும் பார்த்தீர்களா? அடிப்படை தமிழ், ஆனாலும் வடமொழித் தோற்றம்.**

இனி அஸ்தமனம் பற்றிப் பார்ப்போம். கயிறு அறுந்தது என்றால் இரண்டாய்ப் போனது; அவளுக்கும் எனக்கும் உறவு அற்றுப் போனது என்றால் உறவு இல்லாமற் போனது என்று பொருள். வேலையற்ற நிலை = வேலையில்லாத நிலை; அற்றம் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாத நிலை என்றுதான் பொருள். நாம் சுழியம், சுன்னம் என்று சொல்லுகிறோமே, அந்த zero விற்கு இன்னொரு சொல் அற்றம். nothingness. அற்றல் என்ற வினைக்கு இல்லாது போதல் என்றே பொருள். அல்லன் என்றால் இல்லாதவன் என்றுதான் பொருள். அற்றலுக்கும் அல்லலுக்கும் ஒரே வேர் தான். அல் என்னும் அடிவேர். அற்றல்>அத்தல் என்றும் பேச்சுவழக்கில் சொல்லப் படும். "என்ன அவனோடு பேச்சு? அவனுக்கும் நமக்கும் ஆகாதுன்னு ஆயிப் போச்சுல்ல; அத்துவிடு".

அத்தமானம் = இல்லாத நிலை. வருமானம், பெறுமானம், கட்டுமானம் என்பது போல் இங்கே அத்தமானம். மானுதல் என்பது அளத்தல்; மானம் என்பது நிலையைக் குறிக்கும் பெயர்ச்சொல். மேலே கூறிய மானங்கள் எல்லாம் கூட்டுச் சொற்கள். இங்கே ஒளி இல்லாத நிலை; சூரியன் மறையும் நிலை. அத்தமானம் வடமொழிப் பலுக்கில் அத்தமனம்>அஸ்தமனம் என்று ஆவது மிக எளிது. ஆக அடிப்படை நம் மொழியில் தான் இருக்கிறது. இன்றையத் தோற்றம் கண்டு நாம் வடமொழியோ என்று மயங்குகிறோம். அவ்வளவுதான்.

இதே போல இராத்திரிக்குள்ளும் நம்முடையது உள் நிற்கிறது. ஒருவன் என்பதற்கு பெண்பாலாய் ஒருத்தி (பழைய புழக்கம்), ஒருவள் (புதிய புழக்கம்) என்று சொல்கிறோம் அல்லவா? அதேபோல இருள்தல் என்ற வினையில் இருத்து இருள்வு, இருட்டு என்ற இரு பெயர்ச்சொற்கள் பிறக்கும். இருள்வு மருவி இரவு என்று ஆகும். இருட்டு வடக்கே போக இருத்து>இருத்தி என்றாகிப் பின் பலுக்கல் திரிந்து ரகரம் நுழைந்து இரத்தி>இராத்தி>இராத்ரி ஆகும். முன் இரவு, பின் இரவு என்பதை முன்னிருட்டு, பின்னிருட்டு என்று நாம் சொல்ல முடியுமே?

நான் இந்தப் பின்னூட்டை முடிக்குமுன் சிறுபொழுதுகள் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். ஒரு நாளை நான்கு பொழுதாகப் பிரிப்பது பொதுவாக மேலையர், மற்றும் வடமொழியாளர் பழக்கம். ஆறு பொழுதாய்ப் பிரிப்பதே பழந்தமிழ்ப் பழக்கம். (என்னுடைய காலங்கள் தொடரை இங்கு நினைவு படுத்துகிறேன்.) நம்மூர் வெதணத்திற்கு (climate) அது சிறப்பாக இருக்கும்.

6AM - 10AM = காலை; morning; ஒளி கால் கொண்டது காலை. காலுதல் = ஊன்றுதல்
10AM - 02PM = பகல்; noon; பொகுல் என்பது உச்சி; பொகுல்>பொகுள்>பொகுட்டு என்பதும் உச்சி தான்.
02PM - 6PM = எற்பாடு; எல் (கதிரவன்) படுகின்ற (=சாய்கின்ற) நேரம் எற்பாடு. இந்தச் சொல்லை முற்றிலும் இந்தக் காலத் தமிழில் தவிர்த்துவிட்டோம். இது ஒரு பெரிய இழப்பு. இந்தச் சொல் இல்லாமல் பகலையும், மாலையையும் கொண்டுவந்து போட்டு பேச்சில் குழப்பிக் கொண்டு இருக்கிறோம்.
6PM - 10PM = மாலை; மலங்குதல் = மயங்குதல்; ஒளி மலங்கும் நேரம் மாலை. (கவனம் மாலை என்பது 6 மணிக்கு மேல்தான்; மாலை 4 மணி என்று சொல்லுவது பெரும் பிழை; ஆனாலும் பல தமிழர்கள் எற்பாட்டைப் புழங்காததால் மாலையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் evening என்பது சரியாகவே பயன்படுகிறது.)
10PM - 2AM = யாமம், இரவு, night, யா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்கு இருட்டு, கருமை என்ற பொருள் உண்டு. யா வில் பிறந்த பலசொற்கள் ஆழமான பொருள் உள்ளவை. யாமத்தை ஜாமமாக வடமொழி மாற்றிக் கொள்ளும்.
2AM - 6AM = விடியல், வைகறை twilight ஒளி விடிகிறது; இருள் வைகிறது; இரண்டின் வேறுபாட்டையும் தெளிவாக உணர வேண்டும்.

இது போக நண்பகல் 1200 noon, நள்ளிரவு, நடுயாமம் midnight பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. மாலை, யாமம், விடியலை மும்மூன்று மணிகளாய்ப் பிரித்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் யாமம் என்று சொல்லுவது ஒரு சிலரின் பழக்கம்.

அன்புடன்,
இராம.கி.
March 14, 2007 12:50 AM

Sunday, June 12, 2022

Strategy and tactics

"strategy என்பதற்கு தற்போது பயன்பாட்டிலுள்ள வியூகம்,செயற்றிட்டம் போன்றவை அதன் சாரத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

ஓர் இலக்கை அடைவதற்காக தெரிவு செய்யப்பட்ட வழி என்ற பொருள் அதில் வரவேண்டும். தெரிவு (choice) என்பது strategy இல் முக்கியம்; அந்தத் தெரிவின் போது trade off இருக்கும். இந்த அர்த்தத்தில் உங்களிடம் நல்ல கலைச்சொல் உள்ளதா?" என்று Nadesapillai Sivendran இதற்கு முந்தைய இடுகையில் கேட்டிருந்தார். நான் நெடுநாளாய்ப் பரிந்துரைக்கும் சொல் ஒன்று உண்டு. 

------------------------------

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்

என்று 768 ஆம் குறளில் தானை (போர்)ப் படைத்தகை (military strategy, war strategy) என்ற  சொல் போரில் பின்பற்றப் படுவதாய் வரும்.   சதுரங்கம் ஆடுவோருக்கும் இது முகன்மையான குறளாகும். பொதின நடத்தம் (business practice) போன்றவைகளுக்கும் இதுபோன்ற  strategy தேவைதான் என்று கருதி, ”படைத்தகை” போல் தடந்தகை (strategy) என்ற சொல்லை ஒருகாற் பரிந்துரைத்தேன். (படைத்தகை என்பது பதாகை, கொடி, குடை, பல்லியம், காகளம் போன்ற தோற்றமெனப் பரிமேலழகர் சொல்வார். நான் அதற்கு உடன்படேன். ”தோற்றத்தால் பாடுபெறும்” என்று பரிமேலழகர் சொல்வது சரியென எனக்குத் தோற்றவில்லை.) 

என் பரிந்துரை தடந்தகை (strategy), தந்திரம் (tactics)

0


Saturday, June 11, 2022

இயல்பும், இயற்பும் திருமந்திரமும்

இயல்பியல் என்ற சொல்லை physics இற்கு இணையாக 1968 இல் கோவை நுட்பியல் கல்லூரியில் நானும் ஒரு சில நண்பரும் சேர்ந்து பரிந்துரைத்தோம். அது முனைவர் இராதா செல்லப்பனை ஆசிரியராகக் கொண்ட சென்னைப் பல்கலை கழக Physics தமிழ்ச்சொல்கள் வெளியீட்டில் சேர்ந்து தமிழ்நாடு எங்கும் பரவியது. பின்னால் இயற்பியல் என்று எப்படித் திரிந்தது? யார் மாற்றினார்?- என்று தெரியவில்லை எப்படியோ தவறான சொல் பரவிவிட்டது. இப்போது அரசின் பள்ளிக் கல்வித்துறையே தவறான சொல்லைத் தான் பயன்படுத்துகிறது. 

இயற்பென்ற சொல் பழம் இலக்கியங்களில் இல்லவேயில்லை என்று நான் சொன்னேன். சிலர், குறிப்பாக பேரா. இரா. செல்வக்குமார், தம் முகநூல் பக்கத்தில் திருமந்திரத்தில் இயற்பு ஆளப்படுவதாயும், இயக்கம் என்பது அதன் பொருளென்றும் சொன்னார். அவர் பக்கத்தில் என் மறுப்பைச் சொன்னேன். அதை என் வலைப்பதிவில் இட மறந்தேன். இப்போது சேமிப்புக் கருதி இடுகிறேன். 

பல்வேறு திருமந்திரப் பதிப்புக்களின் இடையே பாட வேறுபாடு உண்டு. இதற்கு முடிவு காணும் வகையில் மூலப் பாட ஆய்வுப் பதிப்பாக முனைவர் சுப.அண்ணாமலையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கோவிலூர் மடத் தலைவர் ”இந்தியப் பண்பாடு - ஆராய்ச்சி நிறுவனம், 84, கலாக்ஷேத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை 600041” என்ற நிறுவனத்தின் கீழ் செம்பதிப்பு ஒன்றை வெளியிட்டார். பல்வேறு இடங்களிலிருந்து (இதில் எல்லா ஆதீன நூலகங்களும் உண்டு) பெற்ற 27 சுவடிகளையும், 11 முன்பதிப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வெளியிட்ட இச் செம்பதிப்பு ஓரளவு சுவடி பெயர்ப்புப் பிழைகளைச் சரி செய்தது. அதே பொழுது, எல்லா வேறுபாடுகளும் சரி செய்யப் பட்டுவிட்டதாய்ச் சொல்லமுடியாது. இந்தக் காலத்தில் திருமந்திரப் பதிப்பை எடுகோட்டு (reference) நிலையிற் கொள்ள வேண்டுமானால் இந்தப் பதிப்பு முகன்மையானது. 

இப்பதிப்பின் படி குறிப்பிட்ட பாடல் 2184 ஆம் பாடலாய் வகும். இது ”அவத்தை பேதம்” என்ற 120 ஆம் இயலில் “சுத்த நனவாதி” என்ற மூன்றாம் உள் இயலில்  ”இறைவன் செய்யும் உதவி” என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

உயிர்க்குயி ராகி(2) யுருவா யருவா

யயற்புணர் வாகி யறிவாய்ச் செறிவாய்

நயப்புறு சத்தியு நாத னுலகாதி

யியற்பின்றி(2) யெல்லா மிருண்மூட மாமே(3)


பதிப்பிற் கொடுத்துள்ள இதன் கருத்து: 

------------------------

சத்தியும் சிவமும் உலகத்து உயிர்கட்கு உயிராகி ஒன்றி நின்றும், தெய்வ உருவாய்த் தனித்து நின்றும், அருவாய் விளங்கியும், உடனாய் நின்று கலந்தும் அறிபொருளாகவும், வியாபகப் பொருளாகவும், இருந்து இயக்கவில்லையேல் உயிர்களை ஆணவ மலம் மூடியே கிடக்கும்.

------------------------

இச் செம்பதிப்பில் “இயக்கப் பொருளே” அடிப்படை வினையாய்ச் சொல்லப் படுகிறது. அதே பொழுது, பாட்டின் அடிப்படை வினை இயக்குதல் என்னுமாகில் ”இயக்கு என்ற பெயர்ச்சொல் ஆளப் படாது இயற்பு எனும் பெயர்ச்சொல் ஆளப்பட வேண்டிய தேவை என்ன?” என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. திருமந்திரம் போன்ற நூலில் காரணமின்றி வேறு சொற்கள் கையாளப் படா. ஒவ்வொரு சொல்லிற்கும் காரணமிருக்கும். இயக்கென்ற பெயர்ச்சொல்லைக் காட்டிலும் இயற்பென்ற சொல் என்ன புதுப்பொருளைக் கொடுக்கிறது? அப்படியொரு புதுச்சொல் எழவேண்டிய தேவையென்ன? - என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன. அப்படியின்றி, இயல்பு என்ற சொல்லிற்கு மாறாக இயற்பு என்ற சொல் சுவடிப் பெயர்ப்புப் பிழையாக இருந்திருக்குமானால் வேறு ஏதோவொன்று பாட்டின் அடிவினையாக இருக்கவேண்டும். அதைக் கீழே காணுவம். இதே செம்பதிப்பிற் குறிப்பிட்ட பாடலுக்கு மூன்று பாட வேறுபாடுகள் சொல்லப் பெறுகின்றன. இந்த வேறுபாடங்கள் ஏன் கருத்திற் கொள்ளப்படவில்லை என்ற விளக்கம் பதிப்பில் இல்லை. வேறு பாடங்கள் 

1. ராகிய (இது துடிசைக் கிழார் சிதம்பரனார் பதிப்பு “திருமந்திரம் மூவாயிரத்தில்” வருகிறது.)

2. யியல்பின்றே லெல்லா (இது சி.அருணை வடிவேல் முதலியார், தருமபுர ஆதீனம், “திருமந்திர மாலையாகிய திருமந்திரத்தில்” வருகிறது)

3. லாமே (இது சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் காப்பகத்தில் உள்ள சுவடியில் உள்ளது.)

முதலாம் வேறுபாடு பாட்டின் ஓசையில் இடையூறு செய்வதால், அதை ஒதுக்கியது சரியென்றே தென்படுகிறது. இரண்டாவது மூன்றாவது பாடவேறுபாடுகளை ஒதுக்குவது எனக்குச் சரியென்று தென்படவில்லை. அவற்றை நாம் ஏற்றுக்கொண்டால், ”ஏலுதல்”எனும் அடிப்படை வினை பாட்டிற்கு ஒழுங்கான பொருள் கொடுக்கிறது. இப்பாடவேறுபாடுகளோடு நான் புரிந்து கொண்ட பொருளைக் கீழே கொடுத்துள்ளேன்.

------------------------

உயிர்களுக்கு உயிராகி நின்றும், தெய்வுருவாய், அருவுருவாய் அயல் நின்று கலந்தும், அறிபொருளாகவும் செறி பொருளாகவும் விருப்பமுறும் சத்தியும் நாதனும் உலகிற்கு ஆதியாகும் இயல்பு இன்றேல், எல்லாம் இருள் மூடலாகும்.

------------------------

சத்தியும் சிவனும் உலகிற்கு ஆதியாகும் இயல்பு இல்லாது போனால் - இங்கு இதுவே அடிப்படை வினை - எல்லாம் இருளாகும். ”உயிர்களுக்கு உயிராகி நின்றும், தெய்வுருவாய், அருவுருவாய் அயல் நின்று கலந்தும், அறிபொருளாகவும் செறி பொருளாகவும் விருப்பமுறும்” என்பது சத்திக்கும் நாதனுக்கும் தரப்படும் நீண்ட பெயரடை.  மொத்தத்தில் இயல்பென்ற சொல்லை ஆளும்போது, கருத்துரை தெளிவாக இருக்கிறது. தமிழில் இயல்+பு என்ற புணர்ச்சி மொழியமைப்பிற்கு மாறுபட்டு இருவேறு சொற்களை உருவாக்கும் தேவை எழவில்லை. தமிழ் இலக்கணமும் காப்பாற்றப் படுகிறது. திருமந்திரம் பாடலின் பொருளும் பொருத்தமாய் இருக்கிறது.

இயற்பு என்ற சொல் வேறு நூல்களில் ஆளப் படுகிறதா? - என்பது அடுத்த கேள்வி. என்னுடைய கேள்வி மிக அடிப்படையான கேள்வி. அது தமிழ்ச்சொல்லாகத் தெரிகிறதா? இயலாக அமைவது இயல்பு.  இயலாகச் செய்யப்பட்டது இயற்கை. [எங்கெல்லாம் கை எனும் விகுதி வருகிறதோ அங்கு செய்யப்பட்டது என்ற அடிவினையே உள்நின்று இருக்கும். அதே போல பு என்னும் விகுதி தானே அமைவதைக் குறிக்கும். என் கேள்வி எளிது “இயற்பு என்பது எதைக் குறிக்கிறது?” [இயல்பு சரியானால் இயற்பு சரியில்லை, இயற்பு சரியானால் இயல்பு சரியில்லை. இரண்டையும் சரியாகக் கொள்வதற்குத் தமிழ் வருக்க எழுத்துக் கொண்ட மொழியில்லை. வடமொழி போற் தமிழில் bu, pu என்ற வருக்கவொலிகள் கிடையாது. அவை ஒரே பொருள் தரும் மாற்றொலிகள்.]

அடிப்படைக் கேள்வியைத் அருள்கூர்ந்து உணருமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

இராம.கி. 


Wednesday, June 08, 2022

பண்டிதர், சாஸ்திரி, தீக்ஷிதர்

பண்டிதர், சாஸ்திரி, தீக்ஷிதர், பகதூர் என்ற பெயர்களுக்கான தமிழ் மூலங்கள் உண்டா என்று நண்பர் ஒருவர் ஒரு முறை கேட்டிருந்தார். பகதூர் என்பது  இசுலாமிய அரசர், தனக்குத் தெரிந்த ஊர்ப் பெரியவருக்குக் கொடுக்கும் பட்டம். இதன் சொற்பிறப்பு எனக்குத் தெரியாது. மற்ற மூன்றிற்கும் தமிழ்த் தொடர்பு உண்டு, கீழே விளக்கியுள்ளேன்.

படுதல்> பட்டித்தல்> ப(ட்)டி> படி என்பது சொல்வளர்ச்சி. படிப்பு என்பது பொதுவாக இன்னொருவர் போட்ட தடத்தில் நாம் போவதையேக் குறிக்கும். பழைமையைக் குறிக்கும் பண்டு என்ற சொல்லும் கூட முன்னே போட்ட தடத்தைக் குறிப்பது தான். பண்டிதர் என்ற சொல்லுங் கூட அவ்வழி வந்தது தான். (பண்டிதர் என்பதை வடசொல் என்றே நம்மில் பலர் பிறழப் புரிந்து கொள்கிறோம்.) பெரிதும் படித்தவர் பண்டிதர் என்பது தான் அடிப்படைப் பொருள். அவருடைய படிப்பு பண்டிதம் எனப்படும். பண்டித அறிவைக் கடன் வாங்கி பாண்டித்யம் என்று வடமொழி திரித்துக் கொள்ளும். இதைப் பற்றித் தெள்ளிகை என்ற என் கட்டுரைத்தொடரில் சொல்லியுள்ளேன். படிப்போடு தொடர்பான பல செய்திகளை அது சொல்லும்.  

https://valavu.blogspot.com/2007/02/1.html

https://valavu.blogspot.com/2007/02/2.html

https://valavu.blogspot.com/2007/04/3.html

இத்தொடரைக் கிடுக்கி, எசு இராமச்சந்திரன் என்ற தொல்லியலார் சங்கதச் சார்பில் என்னை மறுத்துரைத்தார். அதற்கு மறுமொழியாய், ”ஓதி” என்ற மறுப்புக் கட்டுரைத் தொடரும் எழுதினேன்.

https://valavu.blogspot.com/2007/02/1_27.html

https://valavu.blogspot.com/2007/02/2_27.html

https://valavu.blogspot.com/2007/02/3_28.html

படித்துப் பாருங்கள்.

அடுத்து வருவது சாஸ்திரம்/ சாஸ்திரி. ஒரு குறிப்பிட்ட புலனம் பற்றிய செய்திகளைப் பற்றி ஒருங்கே சேர்த்துச் சொல்வது சாற்றம் எனப்படும். “அவர் என்ன சாற்றினார்?” என்று கேட்பதில்லையா? சாற்றம் நம் பேச்சு வழக்கில் சாத்தமாகி (சாத்தன் என்ற சொல்லை நினைவுகூருங்கள்.) சாஸ்தம் என்று வட மொழியில் திரியும். அது மேலுந்திரிந்து சாஸ்திரம் என்றாகும். சாஸ்திரம் அறிந்தவன் சாஸ்திரி. ஏது சாற்றம் என்பது logic. அது ஹேது ஸாஸ்த்ரம் என்று சங்கதமாற்றம் அடையும். பல சாற்றங்கள் இப்படிச் சாஸ்திரங்களாகியுள்ளன. கப்பல் சாஸ்திரம் என்பது கப்பலைப் பற்றிய சாற்றம்.

இதற்கடுத்தது தீக்ஷிதர் என்ற சொல்லைப் பார்ப்போம். இச்சொல்லின் விளக்கம் சற்று நீளமானது. 

தீக்ஷிதர் என்பார், வேள்வி செய்தலை முன்னுறுத்தும் முன்குடுமிப் பார்ப்பார். மற்ற பெருமானரைப் போலன்றி, தீமூட்டி நெய்யூற்றிச் செய்யும் வேள்வி முறையை பெருமானமாய் (ப்ரமாணமாய்)க் கொண்டவர். வேள்வியைத் தம் கடமையாய் ஏற்றுப் போற்றிச் செய்பவர். அடிப்படையில் பூருவ மீமாம்சை வழியினர். உத்தர மீமாம்சைக் கொள்கையை ஏற்றவரில்லை. தமிழகத்தில் இவர் நுழைந்தது சங்க காலத்தில் என்றே சொல்லலாம். வடக்கே அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நம்பா மதங்கள் செழித்து வளர்ந்த காலத்தில் வடக்கில் இருந்த மன்னர் சிறிது சிறிதாய் வேள்வி முறைகளில் இருந்து நழுவினார். எனவே  வேறிடங்களை நோக்கி முன்குடுமிப் பார்ப்பார் நகர வேண்டியதாயிற்று. தமிழ் வேந்தரில் ஒரு சிலர் கொஞ்சங் கொஞ்சமாய் இவர்பக்கம் சாய்ந்தார். எனவே பூருவ மீமாஞ்சை இங்கு கால் கொள்ளத் தொடங்கியது. 

வேள்வியின் போது, வேள்வி செய்விக்கும் எல்லாப் பெருமானரும், வேள்வி செய்யும் உடையவரை ( = எஜமானரை- யஜுர் வேதத்தில் அப்படித்தான் பெயர் குறிப்பார்.) ஒரு சூளுரை (சங்கல்பம்) செய்யும்படி, சொல்வார். வேள்வி செய்யும் பலரும் ஐயர் சொல்வதை என்னவென்று அறியாமல் சொல்வார். சூளுரை என்பது, “இதைக் கடைப்பிடிப்பேன்” என்று உறுதி செய்வது தான். அவர் காட்டும் தீவத்தின் மேல் தீண்டி இச்சூளுரையைச் செய்ய வேண்டும்/ இது போன்ற சூளுரைகள் அவ்வளவு உறுதியில்லாதவை. எனவே யாரும் கண்டு கொள்வதில்லை ஆனாலும் தீயையும் நீரையும் தீண்டியே இது போன்ற சூளுரைகள் செய்யப்படுகின்றன. ஐம்பூதங்களில் இரண்டான தீயும் நீரும் சூளுறைகளுக்குச் சான்றுகளாகின்றன.   

தீ என்பது வேதநெறிக்கு முகன்மை. நீர் என்பது ஆகம நெறிக்கு முகன்மை, இன்றிருக்கும் சிவநெறி தீயையும், நீரையும் சேர்த்தே சூளுரை கூறலுக்குப் பயன்படுத்தும். எல்லாச் சிவன் கோயில்களிலும் ஓரளவு இது நடந்தே தீரும். (பெருமாள் கோயில்களில் ஆகமம் அதிகம், வேள்வி குறைச்சல்.) 

தீக்கிதர் என்பார் இதில் சற்று தீவிரமானவர், ஒரு குறிப்பிட்ட அகவையில் தேவையான நூல்களைப் படித்த பின்னர், இதற்கென்று சிறப்பாக ஒரு வேள்வி நடத்தி, அந்த வேள்வித் தீயைத் தீண்டி இது போல் ஒரு சூளுரையை ஏற்பார், அதன் வாசகம் தராமல், அடிப்படைப் பொருளை மட்டும் இங்கு சொல்கிறேன். “வேதநெறி வழுவாமல் பூருவ மீமாம்சைப்படி நான் நடந்து கொள்வேன். இன்னின்ன செய்வேன், இன்னின்ன செய்யமாட்டேன்” என்று சூளுரைரையை, சொல்லியே இளம் பெருமானர் தீக்கை பெறுகிறார், தீக்கிதரும் ஆகிறார். 

தீக்கை என்பது தமிழ்ச்சொல் தான். துல்> தில்> திள்> தீள்> தீட்டு, தீண்டு போன்ற சொற்களும், துல்> தொல்> தொலி, தோல் போன்ற சொற்களும். துள்> தொள்> தொள்ளு> தொடு போன்ற சொற்களும், தொள்> தொள்கு> தொட்கு> தொக்கு என்பதும், தீக்கையொடு தொடர்புள்ளவை. தீட்கு> தீக்கு>  தீக்கை என்பது touch என்பதைக் குறிக்கும். தீக்கை பெற்றவரைத் தீக்கையர் என்னாது தீக்கை எனும் பெயர்ச்சொல்லில் இருந்து ”தீக்கித்-தல்” என்ற இன்னொரு வினைச் சொல்லை உருவாக்கித் தீக்கித்தார்> தீக்கிதர்> தீக்ஷிதர் எனச் சங்கதத்தில் இச்சொல் திரியும். (இது போன்ற உருவகம் மடி> மரி> மரணம்> மரணித்தல் என்றும். கல்> கற்பி> கற்பனை> கற்பனித்தல் என்ற சொற்களிலும் அமையும். தீக்கித்தல், மரணித்தல், கற்பனித்தல் போன்றவை அரைகுறைத் தமிழறிவில் எழுந்த சொற்கள்.)

தீக்கிதர் தில்லைச் சிற்றம்பலத்தில் மட்டுமிருப்பவரல்ல. இந்தியாவெங்கணும் இவருண்டு. [ஏன் நம்மூரிலேயே திருமறைக்காடு, ஆவுடையார் கோயில், திருப்பிடவூர் (திருப்பட்டூர்) போன்ற ஊர்களில் இருந்தார். இன்னும் சிலவும் உண்டு.  இன்று தில்லையரைத் தவிர மற்றோர் நம்மூரில் தீக்கிதர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில்லை.] அவர் எல்லாருமே வேள்வி நடத்தத் தகுதியுள்ளவர் என்பது பொருள். மோனியர் வில்லியம்சில் “to consecrate or dedicate one's self (esp. for the performance of the soma-sacrifice) என்றே தீக்ஷைக்குப் பொருள் தருவார். தீக்கிதர் சங்கதத்தின் மேல் சற்று அதிகப் பற்று கொண்டவர். தமிழ் மேல் உள்ள நெகிழ்ச்சி குறைவு தான். இருப்பினும் சிவநெறியில் பெரிய குருவான உமாபதிசிவம் என்பார் தீக்கிதர் கொடிவழியில் வந்தவர் தான். தீக்கிதருக்கும் ஆரத்தி காட்டுதலுக்கும் தொடர்பில்லை. ஆரத்தி காட்டுவது சிவச்சாரியார். இவர் வேறு வகைப் பெருமானர். சிவதீக்கை பூண்டவர்.

சிவ தீக்கை என்பது சிவநெறியின் வழி நடப்பது, இதிலும் தீயை, நீரைத் தீண்டி, “சிவநெறி வழுவாமல் ஆகமம் சொல்வதன் படி  நான் நடந்து கொள்வேன். இன்னின்ன செய்வேன், இன்னின்ன செய்யமாட்டேன்” என்று சூளுரைரையைச் சொல்லியே இளம் பெருமானர் சிவ தீக்கை பெறுகிறார்,  இவரைச் சிவாச்சாரி என்பார். தமிழ் மேல் நெகிழ்ச்சி கொண்டவர்.  

இற்றைச் சிவநெறி என்பது ஆகம நெறி கூடியும்  வேதநெறி ஊடு வந்தும் ஏற்பட்ட விந்தையான கலவை. ஆனாலும் சிவநெறியார் வேதநெறியை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முயல்வர். அவருக்கு ஆகமமே முதல் ஆகும், வேதம் என்பது பிறகே. ஆகம நெறி என்பது வழிபாட்டு நடைமுறை குறித்தது. 

நண்பர்களே! பொதுவாய் ஒரு சொல்லுக்குப் பொருள் சொல்லும்போது அருள்கூர்ந்து இடம், பொருள், ஏவல் பாருங்கள். கொஞ்சம் கேள்வி கேளுங்கள். 

அன்புடன்,

இராம.கி.


Wednesday, June 01, 2022

சரவல்/சிரமம்

ஏறத்தாழ ஓராண்டிற்குமுன்,”தமிழ்நாட்டு நிதி அமைச்சரின் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழ் பேசவும், படிக்கவும் அவர் சரவல் படுகிறார்” என்ற முன்னிகையை என் முகநூல் பக்கத்திலிட்டேன். இதில் வரும் ”சரவலைச்” “சிரமம்” எனும் இருபிறப்பிச் சொல்லிற்கு  மாற்றாய் நெடுநாட்கள் பயில்கிறேன். இடுகை படித்த கவிஞர் தாமரை “சரவல்-சிரமம்' மொழியாக்கம் குறித்து நீங்கள் எழுதியதிருந்தால் பதிவிடுங்கள். சிரமம் என்பதையே இதுகாறும் பயன்படுத்தி வந்தேன்” என்றார். தமிழில் தொடங்கித் திரிந்து புழங்கும் ”சிரமத்திற்கு”,“இளைப்பு, களைப்பு, உழைப்பு, படைக்கலப் பயிற்சி” என்று தமிழ் அகரமுதலிகளில் பொருள் கூறுவார். Monier-Williams இன் சங்கத - ஆங்கில அகரமுதலியில், 

1) Śram (श्रम्):—1. śram [class] 4. [Parasmaipada] ([Dhātupāṭha xxvi, 95]) śrāmyati (in later language also śramati, te; [perfect tense] śaśrama, 3. [plural] śaśramuḥ or [Śāṅkhāyana-brāhmaṇa] śremuḥ, p. śaśramāṇa, [Ṛg-veda; Mahābhārata]; [Aorist] āśramat, [Atharva-veda], [subjunctive] śramat, [Ṛg-veda]; śramiṣma, [ib.; Brāhmaṇa]; [future] śramitā, [Mahābhārata]; śramiṣyati [grammar]; [infinitive mood] śramitum, [ib.]; [indeclinable participle] -śramya, [Brāhmaṇa]),

—to be or become weary or tired, be tired of doing anything (with [infinitive mood]; also [impersonal or used impersonally] na mā śramat, ‘may I not become weary!’), [Ṛg-veda] etc. etc.;

—to make effort, exert one’s self ([especially] in performing acts of austerity), labour in vain, [ib.] :—[Passive voice] śramyate ([Aorist] aSrAmi, [grammar]), [Mahābhārata; Kāvya literature] etc. (cf. vi-√śraṃ) :—[Causal] srAmayati ([Aorist] aśiśramat), to make weary, fatigue, tire, [Kāmandakīya-nītisāra; Harivaṃśa; Subhāṣitāvali];

—to overcome, conquer, subdue, [Rāmāyaṇa];

— (śrāmayati), to speak to, address, invite (āmantraṇe), [Dhātupāṭha xxxv, 40] ([varia lectio] for grām cf. grāmaya) :—[Desiderative] See vi-śiśramiṣu.

2) 2. śram ind. [gana] svar-ādi.

3) Śrām (श्राम्):—See [Causal] of √1. śram.

என்ற விவரந் தந்து, இதன் தாதுவாய் śram (”Dhātupāṭha xxvi, 95”) என்பதைக் குறிப்பார். (ஒரு வேலையை விடாது செய்கையில் நமக்கு இளைப்பும், களைப்பும், சோர்வும் வரும் அல்லவா? இது உடலுழைப்பிலும் வரலாம், அறிவுழைப்பிலும் வரலாம்.  śram இன் பொருள்களாய்,  ”சோர்வு, தளர்வு, தள்ளாடு, துயரம், துன்பம், தொய்வு, தொல்லை, தொ(ல்)ந்தரவு, வருத்தம்” போன்று பலவற்றைச் சொல்லலாம்.  இவையெல்லாமே குத்தல் வேர்ப்பொருளில் கிளைத்தவை. (மோனியர் வில்லியம்சு அப்படிச் சொல்லாது. பொதுவாய், சங்கதத் தூதுகள் என்ப்வை வேர்கள் அல்ல. அவை வெவ்வேறு தொகுப்புகளைக் குறிக்கும்.) ஒரு செயலை விருப்பமின்றிக் கடமையெனச் செய்யும்போது குத்துவது போன்ற இருப்புக் கொள்ளா உணர்ச்சி இயல்பாய் எழும். 

மேலுள்ள பொருள்களில், தகரச்சொற்கள் அதிகமென்பதால், அவற்றின் பிறப்பை முதலில் பார்ப்போம்.  முதலில் வருவது. துல்> துன்> துன்பு> துன்பம். அடுத்து, தொல்> தொல்> தொல்லை= துன்பம். தொலைதல்= தளர்தல்.  தொல்> தொ(ல்)ந்தரித்தல் = வருத்தல். துன்புறுத்தல் என்பன எழும்.; தொ(ல்)ந்தரவு= தொந்தரவு;. வருத்தத்தில், உடம்பு தொளதொளக்கும். தொல்> தொள்> தொளதொளத்தல், இதன் நீட்சி, தொள்>தள்> தளர்> தளர்த்தி> தளர்ச்சி.  துள்> தொள்> தொள்கு-இன் வளர்ச்சியாய் சேற்றுச் சொல் எழும். தொள்ளுதல் = நெகிழ்தல், தொள்> தொள்ளம் =  சேறு, தொள்> தொள்ளி> தொளி = சேறு, தொள்> தொய்> தொய்யல் = சேறு. தொய்யில் = குழம்பு; தொள்> தொய்> தொய்தல்= தளர்தல்; தொள்> தொள்ளாடு> தள்ளாடு. தொள்> தொய்> தொய்தல்= சோர்தல். துள்> (துய்)> துயர்> துயரம். தொய்யல் = துன்பம் என்பன அடுத்தடுத்த வளர்ச்சியைக் காட்டும். இதே பொருள்களில் சகரச்சொற்களும் வளரலாம். 

சுல்>சூல்>சூலம் = குத்தும் ஆயுதம்

சுல்>சூலை = வெப்புநோய்; 

சுல்>சுள்>சுரம் = நடக்கையில் குத்தும் பாலை நிலம், உடம்பைக் குத்தும் நிலை (- எனவே நோய்), குத்தும் (எரிச்சலைத்த் தரும்) கள், குத்தும் படிக உப்பு, சுரம் என்பதுதான் பெரும்பாலும் śram என்பதற்கு இருபிறப்பி அடிப்படையாகலாம். குத்தும் வேரில் சோர்வு, தளர்வு, தள்ளாடு, துயரம், துன்பம், தொய்வு, தொல்லை, தொ(ல்)ந்தரவு, வருத்தம்” போன்ற பொருள்களில் வளர்ந்திருக்கலாம்.  śram என்பதை மீளக் கடன்வாங்கையில் சிரமம் என்றாகும்.,

சுல்>சுள்>சுர்>சுரங்கம் = குத்தித் துளைத்த நீள் துளை, பாதை.

சுல்>சுள்>சுர்>சுரசுரத்தல்>சருச்சரையாதல்>சர்ச்சரையாதல் = கரடுமுரடாய்க் குத்தும்படி இருத்தல். சுரசுரப்பு = roughness.

சுல்>சுள்> சுர்>சுரண்டுதல் = குத்தித் துளைத்தல்; 

சுல்>சுள்>சுர்>சுரணை = குத்தும் உணர்ச்சி

சுல்>சுள்>சுர்>சுரவை = சுர் என்று குத்தித் தெறிக்கும் வீக்கம்.

சுல்>சுள்>சுர்>சுரன்>சூரன்>சூரியன் = குத்தும் ஞாயிறு

சுல்>சுள்>சுர்>சுரி = குத்தி உருவான துளை

சுல்>சுள்>சுர்>சுரிகை = குத்தும் உடைவாள்.

சுல்>சுள்>சுர்>சுரிமுகம் = துளையுள்ள பக்கம்.

சுல்>சுள்>சுர்>சுரியூசி = பனையேட்டில் துளையிடுங் கருவி

சுல்>சுள்>சுர்>சுரீரெனல் = குத்தல் ஒலிக்குறிப்பு.

சுல்>சுள்>சுர்>சுரை = குழி.

சுல்>சுள்>சுர்>சுரைக்காய் = குழியுள்ள காய்.

அடுத்து, 

சுல்>சுள்>சள்>சள்ளுதல் = இளகுதல்.

சுல்>சுள்>சள்>சள்ளல் = சேறு

சுல்>சுள்>சள்>சழு>சழுங்கு>சழுக்கம் = நெகிழ்ச்சி

சுல்>சுள்>சள்>சழ>சழங்கு>சழங்குதல் = சோர்தல்; சழங்கு>சழக்கம் = தளர்ச்சி

சுல்>சுள்>சளை>சளைத்தல் = தளர்தல், சோர்தல்

சுல்>சுள்>சள்>(சாள்)> சாளை = வடியும் வாய்நீர்

சுல்>சுள்>சொள்>சொளு. சொளுத்தல் = சேறாதல், சோறு குழைதல்

சுல்>சுள்>சொள்>சோர்; சோர்தல் = தளர்தல்; சோர்வு = தளர்ச்சி

சுல்>சுள்>சள்>சர்>சருவுதல் = தொந்தரவு செய்தல், போராடுதல்; சருவல் = தொந்தரவு 

சுல்>சுள்>சள்>சர்>சருச்சை>சர்ச்சை = ஒருவர் நிலை இன்னொருவருக்குக் குத்துவதாவது. தகறாறு.

சுல்>சுள்>சள்.சர்>சரம் = குத்தும் அம்பு, போர், சரமாரி = அம்புமழை; சரடு = அம்புத் தொடர்ச்சி = கயிறு.

சுல்>சுள்>சள்>சர்>சரட்டை>சிரட்டை = கரடான கொட்டங்கச்சி

சுல்>சுள்>சள்>சர்>சரல்>சரள்>சரளை = குத்தும் கல்.

சுல்>சுள்>சள்>சர்>சரவம் = குத்தும் கூரிய நகங் கொண்ட பறவை. இதை sarabham என்று சொல்லித் சங்கதம் எடுத்துக் க்ள்ளுங்,  இது சிங்கத்தைக் கொல்லும் பறவையாம்.

சுல்>சுள்>சள்>சர்>சரவம் = சுரத்தில் திரியக் கூடிய ஒட்டகம்.

சுல்>சுள்>சள்>சர்>சரவல் = சரவை = தொந்தரவு, துன்பம், coarseness, roughness, தொல்லை, (தொல்லை தரும்) தெளிவற்ற எழுத்து; சரவையெழுத்து = திருத்தப்படாத முதற்படி; “சரவல் இல்லாமல் எழுதிக்கொண்டு வா” என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு இந்தச் சொல்லைத்தான் நான் விரிவுபடுத்தினேன்.