Thursday, February 26, 2009

இலங்கை இனக்கொலை பற்றிய அறிக்கைகள்

இலங்கையின் மேலுள்ள இனக்கொலைக் குற்றஞ்சாட்டலை ஆய்ந்தறிவதற்காக, அமெரிக்க மேலவை உட்குழுவின் முன்னால் அளிக்கப்பட்ட அறிக்கைகளை கீழே உள்ள சுட்டியில்

http://voicefromtamils.blogspot.com/2009/02/us-subcommittee-to-hear-genocide.html

படிக்கலாம். இதில் இரு அறிக்கைகள் வெள்ளைக்காரர்கள் அளித்தது. மூன்றாவது ஈழத் தமிழர் அளித்தது. யாரேனும் சில ஈழத் தமிழர்கள், மற்ற தமிழரும் அறியும் வகையில், இந்த அறிக்கைகளைத் தமிழாக்கிப் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும். வாய்ப்பிருக்கும் தமிழகத் தமிழர்கள் இவற்றைத் தமிழ் மிடையங்களில் (குறிப்பாக அச்சுத் தாளிகைகளில்) வெளிவர வைத்தால் நன்றாக இருக்கும்.

இப்படி நான் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. (என்னை மன்னியுங்கள்.) பொதுவாகத் தமிழர்கள் சொன்னால், மற்ற தமிழர்கள் நம்ப மாட்டார்கள். ”அவனும் பழுப்பு, நானும் பழுப்பு, அவன் பேச்சை நானென்ன நம்புவது?” என்ற எகத்தாளம் நம்மிடையே நிறையவே உண்டு. இந்த எண்ணம் சிற்றகவையில் இருந்தே நம்மிடம் வருவதனால், பழுப்பு நிறத்தவர் பேச்சை தமிழர்கள் சட்டென்று நம்புவதில்லை. மிகுந்த விளக்கங்கள் தரவேண்டும். ஆனால், வெள்ளைக்காரர்கள் சொல்லுவதை அப்படியே நம்புவார்கள். (அந்த அளவிற்கு நம்மில் அடிமைப் புத்தி விரவிக் கிடக்கிறது); எனவே தான் இந்த அறிக்கைகள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதால், மொழிமாற்றம் செய்யச் சொல்லுகிறேன்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “தமிழர் பற்றிய அறிக்கைகள் ஒருபக்கம் உலகெங்கும் சொல்ல வேண்டும்; அதற்கு ஆங்கில மொழியில் அறிக்கைகள் வேண்டும். இன்னொரு பக்கம் அவற்றை உலகெங்கும் உள்ள தமிழர்கள் (குறிப்பாக 6.5 கோடி இந்தியத் தமிழர்கள்) உணரவேண்டும்; அதற்குத் தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்யப்படவேண்டும். [இதை நம் போன்றோர் செய்யாததனால் தான் இந்து நாளிதழ் போன்றவர்கள் தமிழரை ஏமாற்ற முடிகிறது.]”

அன்புடன்,
இராம.கி.

Saturday, February 21, 2009

இந்துவை வாங்காதீர்கள்

அன்பிற்குரிய தமிழகத் தமிழர்களுக்கு,

ஈழம் பற்றிய செய்திகளை நம்மூரில் தெரியவிடாமல் செய்து கொண்டிருப்பதில் ஆங்கில மிடையங்களின் பங்கு பெரியது (தமிழ் மிடையங்களில் ஒருசில கொஞ்சமாக வேணும் செய்திகளை வெளியிடுகின்றன.) அதிலும் முகன்மையான பங்கு வகிப்பது இலங்காரத்னாவின் “The Hindu" நாளிதழ் தான். இவர்களின் திமிரான ஆட்டங்கள், ஈழம் பற்றிய குசும்புகள், அங்கு இவர்கள் செய்த குழப்படிகள், ஈழத்தைத் தமிழகத் தமிழரிடமிருந்து உணர்வால் பிரித்தது, தமிழினக் கொலைக்கு உறுதுணையாக இருப்பது எனப் பலவாறாச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாட்டின், இனத்தின், தேசத்தின் எதிர்காலத்தில் விளையாட என்.ராமுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களின் கூட்டிக் கொடுக்கும் செயலுக்குப் பரிசாகப் பெற்ற இலங்காரத்னா பட்டத்தின் ஆழம் இப்பொழுதாவது நம் மக்களுக்குப் புரியட்டும்.

இவர்களின் அழிச்சாட்டியம் இவர்கள் நாளிதழை நாம் வாங்குகின்ற வரையில் தான் நீளும். இவர்களின் பொய்யும் புளுகும் இவர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிற்கும். அவர்களை நிற்பாட்டுவது நம் கையில் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் கூட்டாகச் சேர்ந்தால் செய்யமுடியும்.

இது காந்தி செய்த வழி தான் ”ஒத்துழையாமை இயக்கம்”. இவர்களின் பொருள்களை (இங்கு நாளிதழ்) வாங்காமல் இருந்தால் தானே வழிக்கு வருவார்கள். இது நம்மால் முற்றிலும் செய்யக் கூடிய ஒரு செயல் தான்.

இனி வரும் நாட்களில் யாரும் இந்துவை வாங்காதீர்கள். கால காலப் பழக்கத்தை நிறுத்துவது நம்மில் பலருக்கும் சரவல் தான். ஆனாலும் செய்யுங்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பழக்கத்தை கடினமாய் முயன்று நிறுத்தி ஒரு மாதமாக நான் வாங்காது இருக்கிறேன். இந்த நாளிதழ் ஈழம் பற்றிய செய்திகளில் நொதுமல் (neutral) நிலை எடுக்கும் வரை இதை வாங்குவதில்லை என்பதே என் முடிவு. (அப்படிச் செய்தி தெரியவேண்டுமென்றால் வலைத்தளங்களுக்குப் போய் தெரிந்து கொள்ளுங்கள்.) நம் காசு வாங்கி இவர்கள் பிழைக்க வேண்டாம்.

என்னை அறிந்த பலருக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை உங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லுங்கள்.

சிறுதுளி பெருவெள்ளம். இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் பெருகியிருந்தால் மனம் கொஞ்சமாவது ஆறுதற்படும்.

அன்புடன்,
இராம.கி..

Friday, February 06, 2009

மீளுகிறதா 1965? - 2

மொழித்திணிப்புக் கொள்கைக்கு எதிராக அன்றைக்கு எழுந்த தமிழ் மாணவர் போராட்டம் இப்பொழுது நினைவிற்கு வருவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்றும் அதே பேராயக் கட்சி தான் (ஆனால் ஒரு கூட்டணியமைப்பில்) நடுவணரசை ஆளுகிறது. இந்த ஆட்சியின் ஊடாக இன்றைக்குச் சிங்கள அரசின் தமிழின அழிப்புப் போருக்கு முற்றிலும் ஆதரவாய், ஆள்வலுவும், ஆயுத வலுவும், அரண வலுவும் சேர்த்து அளித்துவரும் பேராயக் கட்சியரசின் கொள்கையைக் கண்டித்து இன்றையத் தமிழ் மாணவர் போராட்டம் எழுந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஓர் ஓட்டமாய் கொலவைநல்லூர் முத்துக் குமரனின் கனல்புகுதலும், பள்ளப்பட்டி இரவியின் தீக்குளிப்பும் நடந்து முடிந்திருக்கின்றன..

[அன்றும், வடவர் ஆட்சியின் இந்தித் திணிப்பைக் கடிந்து, இதைப் போல 5 பேர் எரியுண்டனர். அன்று, செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர் சிவலிங்கம், சென்னைக் கோடம்பாக்கத்துக் கூடல் மறுகில் (junction) கன்னெய் ஊட்டி எரிபுகுந்து துஞ்சிய செயலை

................................
ஆடுநெய் ஒழுக முச்சியின் அப்பிப்
பாடுவெள் அருவி பாய்தல் போலும்
கன்னெய் முழுகி கனல்புகுந் தாடிய
...........................

என்று நூறாசிரியம் 59 ஆம் பாடலில் பெருஞ்சித்திரனார் மருட்கையுறப் பாடியிருப்பார். (நூறாசிரியத்தில் 12 பாடல்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியே இருக்கின்றன.)]

இது போன்ற இக்கட்டான நேரங்களில், உலகமே பாராமுகமாய் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கவனயீர்ப்பாக்கும் வகையில் முத்துக் குமரனைப் போன்றோர் உணர்வு மேலிட்டு, தம் உயிரையும் துச்சமாய் மதித்து, ஈகம் செய்து, நம் அகக் கண்ணைத் திறக்கிறார்கள். அவர் செய்ததைத் தனிமாந்தராய்ப் பார்த்தால் யாராலும் ஏற்க முடியாதது தான், இருந்தாலும் நம்மைச் சுற்றிலும் அரசும், மிடையமும் (media), அதிகார அறிவுய்திகளும் (ruling intelligentia) சேர்ந்து செய்திகளை மறைத்து, திரித்து, பொய்சொல்லி கண்ணைக் கட்டிப் போட்டிருக்கும் காலத்தில், மோனித்துக் கிடக்கும் நம் போன்றோரைத் தட்டி எழுப்புவது இது போன்ற இளைஞர்களுடைய செயற்பாடும் உணர்வும் தான். அதற்கு அப்புறம் இந்தப் புலனத்தில் மரத்துக் கிடந்தால் நமக்கு உய்வு என்பது என்றுமே இல்லை.

[தன்னையே எரித்துக் கொண்டு மற்றாருக்கு ஒளிதரும் இது போன்ற ஈகத்தை ஒருசிலர் கொச்சைப் படுத்தி எழுதுவதும், விதண்டா வாதமாய் ”அந்தத் தலைவனின் மகன் இறந்தானா, இந்தத் தலைவனின் உறவினன் இறந்தானா?” என்று எழுதுவதும் என்ன ஒரு பித்துக்குளித்தனம் என்று நமக்குப் புரிவதில்லை. எந்த ஒரு மகனும் தன் தந்தையிடம் வந்து “நான் தீக்குளிக்கலாமா?” என்று கேட்கவும் மாட்டான், அதே போல எந்தவொரு தந்தையும் தன் மகனைப் பார்த்து ”நீ தீக்குளி” என்று சொல்லவும் மாட்டார். இது போன்ற செயல்கள் உணர்வு மேலீட்டால் தன்மயமான புரிதலில் ஒருசிலர் செய்யும் தன்னேர்ச்சிகள் என்பதே இயல்பு. அந்தக் காலத்து வடக்கிருந்து நோன்பிருத்தல் போல, போருக்கு முன்னால் ஒரு சில மறவர்கள் செய்துகொள்ளும் நவகண்டம் போல, தீக்குளிப்பதும் நம் மரபில் பலகாலம் நடந்திருக்கிறது. [அதை இங்கு நான் எடுத்துரைப்பது சரியாக இருக்காது.] “இதைச்செய்” என்று யாருமே இவர்களுக்குச் சொல்லுவதில்லை. அவர்களாய்ச் செய்கிறார்கள்; நமக்கு ஓர் அவலத்தை உணர்த்துகிறார்கள். இந்தப் புரிதலை விடுத்து, அவரை முட்டாள் என்று சொல்லி அவர் மானத்தைக் குலைப்பது, கொஞ்சங் கூட ஈவு இரக்கம் இல்லாத கொலைக்கே சமம். குறிப்பாக தன் தீக்குளிப்பின் முன்னே முத்துக்குமரன் எழுதிக் கொடுத்திருக்கும் ஆவணம் ”அவன் அறிவாளி, ஈழ அவலத்தை உணர்த்தவே இந்தச் செயலைச் செய்திருக்கிறான், இதன் விளைவுகளை உணர்ந்தே செய்திருக்கிறான்” என்றும் தெளிவாகவே தெரிகிறது. அவன் அளித்த செய்தியை உள்ளார்ந்து கொள்ளுவதே அவனுக்கு நாம் அளிக்கும் மரியாதை.]

நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடம் ஈழத்தில் நடக்கும் அவலம் பற்றியும், அங்கே ஒரு பேரினவாதம் தலைவிரித்து ஆடி தமிழினத்தை அழித்துக் கொண்டிருப்பதைச் சொல்லியும், முத்துக்குமரனின் ஆவணத்தைப் பரப்பியும், செயலாற்ற வேண்டியதே நமக்கு ஏற்படும் முறைமை. இதில் இந்திய நடுவணரசின் ஆதரவு, (அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துச் செய்யும்) உள்ளடிச் செயல் போன்ற பித்தலாட்டங்களைப் பலருக்கு உணர்த்துவதும் நம் கடமை.

ஏதோ இராசீவ் காந்தி தவறிப் போனதற்கு இன்றைக்குப் பேராயக் கட்சியின் தலைவர்கள் பழிவாங்குகிறார்கள் என்பது என் புரிதல் இல்லை. தமிழீழம் ஏற்படக் கூடாது என்று எப்படியோ ஒரு தேற்றத்தில் இந்திய அரசு நினைக்கிறது. தமிழ் ஈழம் என்னும் நாடு, இந்திய அரசின் எதிர்காலத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்று பேராயக் கட்சி எண்ணுகிறது. அண்மையில் கோ.திருநாவுக்கரசு சுட்டிக் காட்டிய ஒரு சிங்களவரின் கட்டுரையைப் படித்தபோது [

http://links.org.au/node/885#comment-10821

], அதில் சொல்லப்படும் காரணம் எனக்கு வலிந்ததாகத் தெரிந்தது. அதில் ”திரிகோணமலைத் துறைமுகம் ஊழல் நிறைந்த, சிங்கள அரசின் கையில் இருப்பது நல்லது. புலிகளைப் போன்ற கொள்கைவாதக் குழுக்களிடம் சிக்குவது தன் எதிர்கால முனைப்புகளுக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று இந்திய அரசு எண்ணுகிறது” என்ற கருத்துச் சொல்லப் பட்டிருப்பது எனக்கு வலுவாகத் தெரிகிறது. இந்தியப் பெருங்கடலில் ஆட்சி செலுத்தத் தமிழீழம் தடையாய் இருக்கும் என்று இந்திய அரசு ஒருவேளை எண்ணுகிறது போலும். [இராசேந்திர சோழன், தன் தந்தையோடு நல்ல உறவு கொண்டிருந்த சிரீவிசய அரசனைத் தோற்கடித்து கடற்போக்குவரத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வரலாறு இங்கு என் நினைவிற்கு வருகிறது.]

இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றைக்குப் பக்தவத்சலம் இருந்தது போல், இன்றைக்குக் கலைஞர் கருணாநிதி கையாளாக இருந்து அடக்குமுறைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அன்றைக்குக் கல்லூரிகளை மூடியது போல், இன்றைக்கும் கல்லூரிகளை மூட அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. இன்னும் வரும் கிழமைகளில் என்னென்ன நடக்குமோ என்று சொல்ல முடியாது. இந்தியெதிர்ப்பில் பேராயக் கட்சி நடந்து கொண்ட விதங்களை மறந்துவிடாது, இரண்டு ஆண்டுகளுக்கு நினைவு வைத்திருந்து, பேராயக் கட்சியை மாணவர் கூட்டம் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. இதன் விளைவால் திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை பேராயக் கட்சியினால் மாநில அரசுகட்டில் ஏறமுடியாமலே போய்விட்டது. இந்த வரலாறெல்லாம் உணர்ந்தவர் தான் திரு. கருணாநிதி. அதனால் தான் எழுச்சி கட்டுக்கு அடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்றவுடன், கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடிவிட்டார். இனி வருங்காலங்களில் எங்கெல்லாம் நீரூற்றி அணைக்க முடியுமோ, அதையும் செய்வார். “தமிழரைக் காப்பவன் நான் ஒருவன் தான்” என்று எல்லாவிதக் கூப்பாடும் குட்டிக் கரணங்களும் இருக்கும்.

அவருடைய அரசு மாநிலத்திலும், பேராயக் கட்சியின் அரசு நடுவண் மன்றத்திலும் தொங்கிக் கொண்டு இருக்கிநது. நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று நாம் கேட்கவேண்டாம். எப்படி இருந்தாலும் “உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ
கெட்டாய்” என்று இவர்கள் கொண்டையைப் பிய்த்துக் கொண்டு கிடக்கத்தான் போகிறார்கள். .

நாம் செய்ய வேண்டியது மிக எளிது, தமிழக மாணவர்களும், அவர்களுக்கு அணைவான தமிழகப் பெற்றோர்களும், இன்று நடப்பதை ஒரு நாலு மாதங்களுக்கு நினைவு வைத்திருந்தால், நடுவணரசை ஆளமுடியாமலே பேராயக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அதுவொன்றே தமிழின அழிப்பிற்கு உதவிபோனதற்குப் பேராயக் கட்சிக்குச் சரியான பாடமாய் அமையும். அதாவது, தமிழகத்தில் இருந்து பேராயக் கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடப் பெறக் கூடாது.

அதே போல, திராவிட முன்னேற்றக் கழகமும், மாநில அரசையும் இழந்து, நாடாளுமன்ற உறுப்புமையும், முற்றிலும் இழக்க வேண்டும். [தி.மு.க. இல்லையென்றால் தமிழர் எதிர்காலம் இல்லை என்ற மாயை இனிமேலும் இல்லாது தமிழரிடையே மறையவேண்டும். தி.மு.க. எழுந்ததற்கு ஆக்கவேலையை 1967ல் பார்த்த என்னைப் போன்றோர் தான் சொல்லுகிறோம். எதிர்காலம் உறுதியாக இன்னொரு தலைமையைக் கொண்டுவரும்.]

இந்த உறுதியில் இடைபுகுந்து, (ஐயா இல்லையென்றால் அம்மா என்ற வழக்கத்தில்) அ.தி.மு.க.வும் வெற்றி கொள்ளக் கூடாது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேராயம், தி.மு.க. அ.தி.மு.க என்று மூன்றுமே கருகிப் போகும் நிலை உருவாக வேண்டும் அப்படி ஆவது ஒன்றே இவர்களை உறைக்க வைக்கும். இந்த மூன்று கட்சிகள் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் நம் மக்கள் வாக்கு அளிக்கலாம்.

இதை நாம் வெளிப்படையாகவே ஊரெங்கும் சொல்லிப் பரப்பலாம். அதுவொன்றே, இந்த இரண்டு அரசையும் பதற வைத்து, ஈழத்தில் போரை நிறுத்த வைக்கும். ஈழ உறவுகளுக்கு நாம் உதவ முடிந்ததாயும் அமையும். “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பது தமிழில் ஒரு சொலவடை. அரசியற் கட்சிகளுக்குத் தாங்கள் அடுத்த தேர்தலில் உறுதியாய் வெல்லமாட்டோ என்பது ஒரு மரண அடியே.

இதற்கான முன்முனைப்பும், உறுதியும், தமிழக மக்கள் கையில் தான் உள்ளது.

(இன்னும் வரும்)

அன்புடன்,
இராம.கி.

Thursday, February 05, 2009

மீளுகிறதா 1965? - 1

---------------------------------------------
"1965 சனவரி 25 ஆம் பக்கல் மாணவர் எழுச்சிப் போராக இந்தியெதிர்ப்புணர்வு வெடித்தது. இப்போர் பிப்ரவரி 12 ஆம் நாள் வரை தீவிரமாக நடந்தது. அக்கால் பேராயக் கட்சி தமிழகத்தில் அரசு வீற்றிருந்தது. திரு.பக்தவத்சலம் முதல்வராக அமர்ந்து, மாணவர்களின் எதிர்ப்புணர்ச்சியைச் சற்றும் பொருட்படுத்தாது, தில்லியாட்சியரின் கையாளாக இருந்து, அடக்கு முறைகளையும், வன்மங்களையும் கையாண்டு, மாணவர்கள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சுட்டு வீழ்த்தி, நடுவணரசால், 'எஃகு நெஞ்சர்' என்று பாராட்டப் பெற்றார். அக்கால் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் ஏற்பட்ட பொதுவிழப்புகளும், உயிரழிவுகளும் நிகழ்ச்சிகளும் பற்பல. அவற்றுள் சில வருமாறு:

1. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரனும் இளங்கோவனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. கோடம்பாக்கம் சிவலிங்கமும் விருகம்பாக்கம் அரங்கநாதனும் தீக்குளித்தனர்.
3. சென்னை, கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்ற கல்லூரி மாணவர்களைக் காவலர்கள் அடித்து நொறுக்கியதில் ஏறத்தாழ 50 மாணவர்கள் படுகாயமுற்றனர்.
4. முப்பது பொது உந்துகள் கொளுத்தப்பட்டன.
5. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் ஒன்றரை மாத காலத்துக்கு மூடப்பட்டிருந்தன.
6. சென்னை நகர வீதிகளில் குதிரைக் காவலர்கள் உலாவந்த வண்ணம் இருந்தனர்.
7. ஆயிரக்கணக்கான மாணவியர் கறுப்புப் புடவை, சட்டையுடன் மதுரை ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
8. சனவரி 25 முதல் 28 வரை 2000 பேர் சிறைப்படுத்தப்பட்டனர்.
9. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டது.
10. காவலர்கள் கல்லூரிகளுள் புகுந்து மாணவர்களை அடிக்கையில் பேராசிரியர்கள் பலரும் காயம்பட்டனர்.
11. சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சி, சிதம்பரம், சேலம், நெல்லை, திருவாரூர், சிவகாசி, பட்டுக்கோட்டை, அரக்கோணம், தாளவாடி, ஆரணி, இராணிப்பேட்டை, வேலூர், ஆலந்தூர், வளவனூர், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, திண்டிவனம், நெய்வேலி, வெங்காலூர், புதுவை, கடலூர், குன்னூர், கும்பகோணம், கடையநல்லூர், திருப்பூர், நாகர்கோயில், காரைக்கால், சாத்தூர், அருப்புக்கோட்டை, வாசுதேவநல்லூர் முதலிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்துவந்தன.
12. சென்னைக் கடற்கரையில் இந்திப் பொத்தகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
13. அமைச்சர் மகன் ஒருவனும், காவல் அதிகாரி மகன் ஒருவனும், அமைச்சர் ஒருவர் மருமகனும் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
14. மதுரையில் மலையுந்துக்கும் (Jeep), பேராயக் கட்சி அலுவலகத்திற்கும், தீவைக்கப்பெற்றது.
15. மதுரையில் வடநாட்டினர் உணவு விடுதியைத் தாக்கி அதன் இந்திப் பெயர்ப்பலகைக்கும், குடியரசு நாளைக் கொண்டாட அமைத்த பந்தலுக்கும் தீவைத்தனர்.
16. நாடெங்கும் இந்தியரக்கியின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.
17. சென்னை இசுடான்லி மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர்.
18. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியர்களை அரம்பர்(ரௌடி)கள் என்று கூறி, மாணவர்களைக் காவலர்கள் அம்மணமாக நிறுத்திவைத்து அடித்தனர். மாணவர்களைப் பார்க்கவந்த பெற்றோர்களும் இந்தக் கொடுமைக்கு ஆளாயினர்.
19. திருச்சி கீரனூரில் 20 அகவை முத்து என்பவர் இந்தித்திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டு இறந்தார்.
20. கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன.
21. தொடர்வண்டிகள் கொளுத்தப்பட்டன.
22. சோமனூர், திருப்பூர், கரூர், குறிஞ்சிப்பாடி, திருவொற்றியூர், தக்கோலம், மணப்பாறை, புதுவை ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
23. சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், திருப்பூர் முதலிய இடங்களுக்குப் பட்டாளங்கள் அனுப்பப்பட்டன.
24. அமைச்சர்கள் சுப்பிரமணியமும், அழகேசனும் வேலைவிடுப்பு நாடகம் நடத்தினர்.
25. கல்கத்தாவிலும் பள்ளிகள் மூடப்பட்டன.
26. கரூரில் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டார்.
27. திருச்சி மரக்கடை அஞ்சலகம் தீவைக்கப்பட்டது.
28. ஏறத்தாழ 20 தொடர்வண்டி நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.
29. பொள்ளாச்சி நகரமே வெறிச்சோடிக் கிடந்தது.
30. மதுரை, கூடலூரில் இரு காவலர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். திருப்பூரில் இரு காவல் அதிகாரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
31. நூற்றுக்கணக்கான அஞ்சற்பெட்டிகளும், பொதுத்தொலைபேசி நிலையங்களும் தீக்கிரையாகின.
32. கர்னூலிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
33. தஞ்சை அஞ்சலகம், தூத்துக்குடி அஞ்சலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
34. திருச்சி அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் உழவர் முத்து இருவர் மேலும் தீக்குளித்தனர்.
35. சென்னை ஆழ்வார்ப்பேட்டை மாநகராட்சிப் பள்ளிக்குத் தீவைத்தனர்.
36. அனைத்துத் தொடர்வண்டிகளும் ஒரு கிழமை காலத்துக்கு ஓடவில்லை.
37. அரசினர் உந்துக்கள் பதினைந்து நாட்களுக்கு ஓடவில்லை.
38. பஞ்சாபிலும் துமுக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.
39. மொத்தம் 50 உந்து வண்டிகள் கொளுத்தப்பட்டன.
40. புதுவை அரவிந்தர் பாழி தாக்கப்பட்டு தீவைக்கப்பெற்றது.
41. இந்திப்படம் காட்டாதே என்று நாகர்கோவில், சென்னை, கோவை முதலிய இடங்களில் கொட்டகைகள் முன் போராடித் தடுத்து நிறுத்தினர்.
42. செங்கோட்டையருகில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டது.
43. கல்கத்தாவிலும் போராட்டம் தொடங்கியதால், பள்ளிகளை 15 நாட்கள் மூடும்படி கல்கத்தா அரசு ஆணையிட்டது.
44. ஆரணி அஞ்சலகம் சூறையாடப்பட்டது.
45. திருத்தணியில் மாணவர்கள் தொடர்வண்டிக் கடவைக் கதவுகளை உடைத்துத் தூள்தூளாக்கினர்.
46. அனந்தப்பூரில் ஏறத்தாழ 3000 பேர் தொடர்வண்டி நிலையத்தைத் தாக்கினர்.
47. 12 வானூர்திகளில் பட்டாளம் வரவழைக்கப்பட்டது.
48. குடியேற்றத்தில் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் கைகலப்பு நேர்ந்து, காவலர்கள் மாணவர்கள் மேல் 14 முறை துமுக்கிச்சூடு நடத்தினர்.
49. கடையநல்லூரில் தொலைவரிக் கம்பிகள் அறுக்கப்பட்டன.
50. 1965-இல் இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் காவலர்கள் சுட்டதால் இறந்தவர்கள் மொத்தம் 68 பேர். தீக்குளிப்பில் இறந்தவர்கள் 5 பேர்.
தீயிடலில் மாண்டவர் ஒருவர். மக்களால் தாக்கப்பட்டு மாண்ட காவலர்கள் 4 பேர். இறந்த 68 பேரில் குமாரபாளையத்தில் 15 பேர். பொள்ளாச்சியில் 10 பேர். புதுச்சேரியில் 10 பேர்."
---------------------------------------------------------------

மேலே வருவது பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "நூறாசிரியம்" நூலில் உள்ள 51 -வது பாடலின் கீழ் கொடுக்கப் பட்டுள்ள குறிப்புக்களில் இருந்து எடுத்தது.

இன்று பிப்ரவரி 5, 2009. இன்றிலிருந்து சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை (மேலே வரிசையிட்டவற்றையும் சேர்த்து) இப்பொழுது நினைவு கூர்கிறேன். [கூடவே, என்னுடைய 16 அகவை முடிந்து புகுமுகு வகுப்பிற் படிக்குங் காலத்தில், திருச்சியில் நடந்த இந்தியெதிர்ப்பு எழுச்சியையும், அதை அடக்குமுகமாய், முகனைக் காவற் கதவத்திற்கு (Main Guard Gate) அருகில் புனித வளனார் கல்லூரி, லாலி அரங்கின் முன்னால் நானும் பலரும் காவலரால் பட்ட அடிகளையும், அதன்பின் தொடர்ந்த மற்ற காவல் நிலைய நிகழ்வுகளையும், கூட இதே கணம் எண்ணிப் பார்க்கிறேன்.]

இன்றைக்கு 60 ஐத் தொட்டுக் கொண்டிருக்கும் பலரும் ஏதோவொரு வகையில் இது போன்று இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்பட்டிருந்திருப்பார்கள்.

1965 -இல் அன்றைக்கும் நடுவணரசில் பேராயக் கட்சியே (காங்கிரசு) வீற்றிருந்தது. அதன் இந்தி ஆதிக்கப் போக்கால் ஆடிப் போன மாணவர் குமுகாயம், தங்கள் எதிர்காலமே அடைபட்டுப் போனதாய் எண்ணித் திகைப்புற்று, அதன் விளைவால் அன்றைக்குப் போராட்டம் நடத்தியது. பின்னால் இந்தி ஆதிக்கத்தைத் தமிழ்கொண்டு எதிர்க்காமல், அதைத் தொலைத்து, ஆங்கிலம் கொண்டு எழுந்துவந்து தமிழ்க் குமுகாயம் வளர்ந்தது இன்னொரு விதப்பான (ஆனால் அடிப்படையில் சோரம்போன) கதை. அதை இங்கு நான் பேசவில்லை. நான் சொல்ல வருவது பேராயக் கட்சியின் தமிழெதிர்ப்புப் போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதே. விடுதலைக்கு முன்னாலும், ஏன் விடுதலைக்குப் பிறகு ஒரு பத்தாண்டு காலமும் கூட, பேராயக் கட்சியானது தமிழரிடையே பெரிதும் ஆதரவு பெற்றிருந்தது உண்மை தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராரைச் சார்ந்த அறிவுய்திகளின் முட்டாள் தனமான யோசனைகளைக் கேட்டு, விடுதலை பெற்ற நாளாய், அடிமேல் அடிவைத்துத் தமிழரை ஒதுக்கும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாய், 1957 ல் இருந்து பெற்றதும் உண்மை. ”அறிவுக்கு நான்தான்” என்ற இந்த அறிவுய்திகள் ஒற்றை இந்தியாவை உருவாக்க ஆசைப்பட்டார்கள். அதற்கு பேராயக் கட்சி தலைசாய்த்தது. அந்தச் சாய்ப்பில் ஒரு முகன்மையான பங்கு தமிழரை எழவொட்டாது அடிப்பதும் ஒரு கூறு.

காட்டாக, மற்ற தேசிய இனங்கள் வெளிநாடுகளில் துரத்தப் பட்டபோது (குறிப்பாக, கென்யா, சாம்பியா, தான்சானியா, உகாண்டா ஆகியவற்றில் இருந்து குசராத்திகள் வெளியேற்றப் பட்டபோது), அவர்களுக்காகக் குரல் கொடுத்த இந்திய அரசு, பர்மாவில் தமிழர் துரத்தப் பட்டபோது, ஒரு முனகலோ, எதிர்ப்போ கூடச் செய்யாமல், வெறும் வதந்தியை நம்பிக் கப்பலை மட்டுமே அனுப்பி அகதிகளைக் கொண்டுவந்தது. துரத்தலைத் தடுத்து நிறுத்தவோ, இழப்பை ஈடுகட்ட பர்மிய அரசசங்கத்துடன் மல்லுக் கட்டவோ, எந்த முயற்சியையும் நேருவின் அரசு எடுக்கவே இல்லை. விடுதலை இந்தியாவில் தமிழருக்கு ஏற்பட்ட முதலடி பர்மாத் தமிழருக்கு ஓர் இழப்பும் வாங்கித் தராது இருந்ததே. பின்னால் பஞ்சையாய்ப் பராரியாய் ஓடிவந்தவர்கள் சென்னையில் "பர்மா பஜார்" ஏற்படுத்தியது மட்டுமே மிஞ்சியது.. இதன் விளைவால், தென்பாண்டி நாட்டில் பிழைப்புக் கெட்டு தஞ்சைத் தரணிக்குக் கூலித் தொழிலாளியாய் ஓடியது எவ்வளவு குடும்பங்கள்? வெளிநாட்டு தொடர்பு பட்ட தமிழகத்தமிழரில் 100க்கு 85/90 விழுக்காடு இவர்களே - இன்றையப் புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துகுடி மாவட்டத்தினரே - அதிகம்.

இது போல, அடுத்த சில ஆண்டுகளில், இலங்கையில் இருந்து தோட்டத் தொழிலாளர் விரட்டப் பட்டபோது, அந்த விரட்டலுக்கும் பேராயக்கட்சி அரசு ஓர் எதிர்ப்பையும் காட்டாமல், சிரிமாவோ - சாத்திரி ஒப்பந்தம் போட்டுச் சிங்களனுக்கு, அணைவாகவே இருந்தது. ”தமிழனா, ஓடிப்போ, உங்கள் ஊருக்கு?” இந்திய அரசு சோப்பளாங்கி என்று தெரிந்தவுடன்., அன்றிலிருந்து சிங்களன் இந்தியக்கழுதையின் மீது ஏறி சுமை சுமக்க வைக்காமல் வேறு என்ன செய்வான்? இத்தனைக்கும் சிங்களனின் தாய் மாநிலமான ஒரிய மாநிலம் கூக்குரலே போடவில்லை. இந்திய அரசு எங்கிருந்தோ தொலைந்து போன உறவுக்காரன் என்று சோறுபோட்டு விருந்து வைக்கிறது. மொத்தத்தில் ஒரு வலுவான எதிர்ப்பைக் கொஞ்சம் கூடக் காட்டாமல் இருந்தால் எப்படி? தமிழ் வரலாறு தெரிந்தவர்கள் இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களிடம் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சாரார், "ஒற்றை இந்தியம்" பேசி அதிகாரம் செய்து தமிழ் தேசிய இனம் உலகெங்கும் குலைந்து போக எல்லா வகையான வேலைகளையும் செய்தார்கள். பல்தேச இந்தியா என்ற கொள்கை இன்றுவரை அவர்களால் முற்றிலும் சாகடிக்கப் படுகிறது. [அதாவது இந்தியன் ஆகவேண்டுமென்றால் தமிழன் என்ற உணர்வைச் சாகடி; தமிழனாயும் இந்தியனாயும் ஒரே நேரத்தில் யாரும் இருக்கக் கூடாது.]

இந்தியத் தேசிய இனங்களில் குடியேற்றக் காலத்தில் பெரிதாக வெளிநாடுகளில் பிழைப்புக்குச் சென்றவர்கள் தமிழரும், ஓரளவு தெலுங்கரும், அதற்கும் குறைவாகக் குசராத்திகளும் (ஆனால் செல்வத்தால் பெரியவர்கள்), குசராத்திகளைக் காட்டிலும் எண்ணிக்கையில் கூடிய பீகாரிகளும் (ஆனால் செல்வ வளத்தில் குறைந்தவர்கள்) ஆகியோரே ஆவர்.

[இந்தப் பத்தியைக் கொட்டை எழுத்துக்களில் படித்துக் கொள்ளுங்கள்.] ஈழத்தமிழர்கள் இதில் அடங்கவே மாட்டார்கள். அவர்கள் காலங்காலமாய் அங்கேயே வழிவழியாய் வாழ்ந்தவர்கள். இந்தியர்களில் பலருக்கும், ஏன் தமிழகத் தமிழர்களில் கணிசமானவருக்கும் கூட, இந்த உண்மை தெரிவதே இல்லை. அந்த அளவிற்கு முட்டாள் தனமும், வரலாற்று மறதியும் இங்கே வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறது..

[உண்மையை ஆய்ந்தால், பழந்தமிழகம் என்று நாமெல்லோரும் சொல்கிறோமே அதைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களின் ஈழத்திற்கும், இன்றையத் தமிழ்நாட்டிற்கும் இடைப்பட்ட இடமும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிக் கடலுள் நீளும் நிலமும், இதே போல ஈழக் கடற்கரையை ஒட்டிய நிலமும், எனக் கணிசமான இடைநிலம் கடல் கொண்டதைத் தான் நம் சங்க இலக்கியங்களில் கடல்கொண்ட நிலமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறிப்புக்களாய்ப் பார்க்கிறோம். மொத்தத்தில், இன்றைய ஈழமும், தமிழகமும், இவற்றிற்கு இடைப்பட்ட கடல்கொண்ட நிலமும் சேர்ந்தது தான் மூன்றாம் சங்கத்திற்கு முற்பட்ட பழந்தமிழகம். [அப்படி அழிந்த நிலத்தில் இருந்து கரையேறிய நிலந்தரு திருவிற் பாண்டியன் சோழனிடம் இருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் இருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பிடித்தான் என்பது வரலாறு. முத்தூர்க் கூற்றம் இன்றைய புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியது.] இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஈழம் அழிவதை நம் பழந்தமிழகத்தின் மிச்சசொச்சம் அழிவதாய்த்தான் கொள்ளமுடியும். இது கூடவா, தமிழகத் தமிழர்களுக்குப் புரியவில்லை? அடங்ஙொப்பரானே? அவன் உறவுக்காரண்டா, பங்காளிடா, அதைப் புரிஞ்சுக்குங்க! இந்திய நாட்டின் வடக்கில் இருந்து தமிழினம் சுருக்கப் பட்டு வடமாலவன் குன்றத்திற்குக் கீழ் நெரிந்தது போல், நம் கண்முன்னே இன்னொரு பக்கம் தென்கிழக்கில் ஈழம் சுருக்கப் படுவது தமிழின அழிப்பில்லாமல் வேறு என்ன? இது கூடப் புரியாமல், தலையில் மண்ணாங்கட்டியா இருக்கிறது?]

ஈழத் தமிழருக்கு என்ன நடந்ததோ அதே நடத்தமே இந்திய நடுவண் அரசு .மலேசியத் தமிழருக்கும் செய்தது. எங்கோ இருக்கிற பிஜி நாட்டில் இந்தியர்கள் நசுக்கப் பட்டால் இவர்கள் அலறுவார்கள். ஆனால் மலேசியத் தமிழனுக்குப் பாதிப்பு நேர்ந்தால் இவர்கள், “அது இன்னொரு நாட்டின் உள்நாட்டுச் சிக்கல்” என்று கீதை படிப்பார்கள். இவ்வளவு ஏன்? ஒரு சிறுசெய்தியைச் சொல்லுகிறேன். மொரிசியசு நாட்டில் தமிழ்ப் பாடப் பொத்தகமும், தமிழாசிரியர்களும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட போது, அங்கும் இங்குமாய்த் தனியார்தான் உதவிசெய்தார்களே தவிர, இந்திய அரசோ, தமிழக அரசோ ஒரு துரும்பை எடுத்துப் போடவில்லை. எப்போதும் போல் மெத்தனமாகவே இருந்தன. பொதுவாக வெளிநாட்டுத் தமிழர் என்றால் இந்திய அரசு என்றுமே கண்டுகொண்டது இல்லை. ”எக்கேடோ கெட்டுப் போங்கள், எம்மை வந்து அண்டாதீர்கள்”

பேராய நடுவண் அரசின் இந்தப் போக்கு, நாளடைவில் இந்தியத் தமிழரை நடத்துவதிலும் கூடிவந்தது. 1972க்கு அப்புறம் ஒரு நடுவனரசுத் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவே இல்லை. "வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது" என்ற கூப்பாடு 1980 வரை கூடத் தமிழ்நாட்டில் இருந்தது. அதற்கு அப்புறம் தமிழ்நாடு வேறுவகையில் தன் பிழைப்பை மீட்டுக் கொண்டது. தமிழைத் தொலைத்தது, ஆங்கிலப் படிப்பின் வழியும், தனியார் முயற்சியாலும் இங்கு தொழில் வளர்ச்சியும், பொருளியல் முன்னேற்றமும் ஏற்பட்டன. இருந்தாலும் பல தடைகளை நடுவண் அரசு விதித்தே வந்தது. இன்றைக்கும் தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கும் மற்ற மாநிலங்கள் எதிர்ப்புப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. நடுவண் அரசு ஒருமுறை கூட அவை சட்டப் புறம்பாகநடப்பதை எடுத்துக் கூறித் தடுத்ததே இல்லை. ஆனால், தமிழன் மட்டும் “நான் கற்புள்ளவள்” என்னுமாப் போல தன் நாட்டுப் பற்றைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டுமாம். :-) மற்ற மாநிலங்கள் ஒற்றை இந்தியாவைத் தூக்கிப் போட்டுக் கீழே மிதித்தாலும் இந்த நடுவண் அரசு மாமியார் கண்டுகொள்ளவே மாட்டாள்.

(இன்னும் வரும்)

அன்புடன்,
இராம.கி.