Thursday, April 29, 2021

Oxygen

இதை அப்படியே ஆங்கிலம் தவிர்த்த இரோப்பிய மொழிகளில் யாரும் எழுதுவதில்லை. அந்தந்த மொழிகளின் சொற்களே (காட்டாக செருமானிய மொழியில் Sauerstoff என்றுதான் அழைப்பர். ) இன்றும் கூட பல மொழிகளில் தனித்தனியாய் வேறு சொற்களாய் ஆளப் படுகின்றன. அவற்றின் குறியீடு மட்டும் தான் O என்று உலகெங்கும் பொதுமையாய்ப் புழங்கப்படும். தெரியாமல் தான் கேட்கிறேன். நாம் மட்டும் ஏன் oxygen என்ற ஆங்கிலச் சொல்லைக் கடன் வாங்கவேண்டும்? இப்படி எல்லாவற்றையும் அறிவியற் சொல்லென்று கடன் வாங்கிக் கொண்டிருந்தால் அப்புறம் அறிவியற்றமிழ் என்பது நம்மூரில் கிட்டத் தட்ட மணிப்பவளத் தமிழ் என்பதாய் ஆகிவிடும். முடிவில் தமிங்கிலத்திற்கே நாம் சுற்றிச் சுற்றி வந்து சேர்வோம். மணிப்பவளம் வேண்டாம் என்று தானே 100 ஆண்டு காலம் நம் முந்தைத் தமிழறிஞர் போராடியிருக்கிறார்? இதை நம் போன்ற நுட்பியலாளரும், அறிவியலாளரும் புரிந்துகொள்ள வேண்டாமா?
தமிழில் 1930 களுக்கு முன் பிராணவாயு என்றிருந்து பின் 1940 களில் உயிரகமென, உயிர்வளியென மாறியது. பின் கூட்டுச்சொற்கள் உருவாக்குவதில் ”உயிரகம்” என்ற ஆளுகையால் சிக்கல் ஏற்பட்டுத் தீயகம் என்று 1960/70களில் சிலபேர் (குறிப்பாகக் கோவை நுட்பியல் கல்லூரி - Coimbatore Institute of Technology) மாற்றினோம். அதிலும் சில சிக்கல்கள் வருவதைப் பின்னால் உணர்ந்து அஃககம் என்றே இப்பொழுதெலாம் பயன் படுத்துகிறேன்.
oxygen (n.) gaseous chemical element, 1790, from French oxygène, coined in 1777 by French chemist Antoine-Laurent Lavoisier (1743-1794), from Greek oxys "sharp, acid" (from PIE root *ak- "be sharp, rise (out) to a point, pierce") + French -gène "something that produces" (from Greek -genes "formation, creation;" see -gen).
oxys "sharp, acid" (from PIE root *ak- "be sharp, rise (out) to a point, pierce") என்பதைத் தமிழில் அஃகு என்று சொல்வோம், (நம் அகரமுதலிகளில் தேடிப் பாருங்கள். கிடைக்கும். இது இராம.கி.யின் புனைவு அல்ல.) அகம் என்பது ”குறிப்பிட்ட பண்பு (குணம்) கொண்டிருக்கும் மாழையல்லாத எளிமத்திற்குப் (non-metallic element) பொதுவாய் இடும் பெயர் ஈறு. மாழை எளிமங்களின் பெயரீறு இயம் எனப்படும்.
இந்த வகையில் Oxide = அஃகுதை. Oxygen = அஃககம். இது போன்ற புதுச் சொற்களின் பொருத்தத்தைப் புதிய பயன்பாட்டிற் பார்த்து சிக்கல்களைக் கண்டுணர்ந்தே சரி செய்ய முடியும். சொல்லாக்கமென்பது ஏதோ யுரேகா என்பது போல் சட்டென்று மூளையில் உதித்துக் கொட்டிவிடுவதில்லை. அது மாகையும் (magic) இல்லை. அதற்கும் ஒரு ”செய்துபார்த்துச் சரிசெய்யும் காலம் (trial and error period)” தேவை. அதுவும் ஒரு செலுத்தம் (process) தான்.
தனிமங்கள் எல்லாவற்றிற்கும் 1969 இல் ஒரு பட்டியலைப் பரிந்துரைத்தேன். கோவை நுட்பியல் கள்லூரியின் முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் வெளியிட்ட ”தொழில்நுட்பம்” மலரில் 1969 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையாய் அது வெளிவந்தது. அதன்மூலம் அலங்கா வேதியலில் (inorganic chemistry) பெரும்பாலானவற்றை நல்ல தமிழில் பொருள்படச் சொல்லமுடியும். இறையருள் இருந்தால், அதை மீளவும் ஆய்ந்து மறுபதிப்புச் செய்ய எண்ணியுள்ளேன்.
அன்புடன்,
இராம.கி.
Like
Comment
Share

Sunday, February 21, 2021

பாதுகாப்பு

"பாதுகாப்பு' என்ற சொல்லிலுள்ள 'பாது' எதைக் குறிக்கிறது?” என்றும், 'பாது' என்பது 'பாதித்தல்' என்பதோடு தொடர்புடையதா?” என்றும் 2 கேள்விகளை நண்பர் ஒருவர் கேட்டார்.  அதற்கான மறுமொழி இது.  பகுத்தல்> பாத்தல் = பாத்துதல் = பாதிடுதல் = பங்கிடுதல்; பாத்தி = பகுதி; பாத்தியம் = உரிமை; பகுதி> பாதி; பாதீடு = பங்கிடுகை, பாதுகாக்கை; பாது = பங்கு.; பாதித்தல் = இரு சம பங்குகளாய்ப் பிரித்தல்; ஒரு நாடகத்தில் பாத்திரம் என்கிறோமே? நினைவுக்கு வருகிறதா? அக்காலத்தில் ஒப்பனை செய்து, முகமூடியிட்டு (ஏறத்தாழ கதகளி ஒப்பனை போல்)  அடையாளம் தெரியாதபடி உருமாறி அப்பாத்திரமாய் ஆகிவிடுவர். பாத்திரம் என்பது ஓர் இருபிறப்பிச் சொல். பகுத்தம்> பாத்தம்> பாத்ரம்  என அச்சொல் வளரும்.  மீள ஆண், பெண் ஈறுகள் சேர்த்துப் பகுத்தன், பகுத்தி என்போம். பங்கு என்ற பொருளில் இதே பகுத்தம்> பாத்தம்> பாத்யம் என்பது சங்கத வடிவில் ஆளப்படும். ”உனக்கு இச்சொத்தில் பாத்தியம் உண்டா? இல்லையா?” என்று ஊர்ப்பக்கம் கேட்பார்.  

பாதும் பாதித்தலும் தொடர்புடையன. 

defence, safety, security, police என்பவற்றிற்குச் "சர்வ நிவாரணியாகப்" பாதுகாப்பு என்ற சொல்லையே பலரும் பயன்படுத்துகிறோம். இது நம்மைப் பெருந்தொலைவு கொண்டு செல்லாது. மாறாக, வலுவெதிர்ப்பு (defence), சேமம்/ஏமம்(safety), பாதுகாப்பு (security), காவல்(police) என்று தனித்தனிச் சொற்களைப்பயின்றால் தெளிவு கிடைக்கும் Building Security Systems = கட்டடப் பாதுகாப்புக் கட்டகங்கள்; Risk = இக்கு; Threat = மிரட்டு; Attack = தாக்கு; Asset = சொத்து; Flaw = வழு; Fault = பழுதை; Failure = பழுது; Error = தவறு

security என்பதற்கு சேமுறுதி என்ற சொல்லையும் முன்னால் பரிந்துரைத்தேன். secure = சேமுறுதி;  ஒரு பொருள் கெடாமல், கேடு தராமல், உள்ளது உள்ளபடி யிருந்தால் சேமமாய் இருக்கிறதென்று சொல்வோம். பொருள் சேர்ப்பதையும் சேமித்தல் என்கிறோம்; ஏனெனில் கேடு வராமல் அது காக்கிறது. அந்த நல்ல நிலையை உறுதி செய்வது to secure எனப்படும். i.e to make it safe சேமத்தை உறுதி செய்தல் - சேமுறுத்தல். இதன் பெயர்ச்சொல் சேமுறுதி. சேமுறுத்தர் = security personnel. சேமுறுதியார் = Security ஆட்கள். Watch என்பதைக் கண்ணுறல் என்று சொல்லலாம். Watchman = கண்ணுறுவார்; Bodyguard =  மெய்க்காவலர். IT Security - உ, நு. சேமுறுதி; Information System Security - உள்ளுருமக் கட்டகச் சேமுறுதி 

பாதைக்  காப்பது பாதுகாப்பு. இதற்கு இன்னொரு சொல் சேமுறுதி. 

Friday, February 19, 2021

உபரி, உபகாரம், உதாரணம்

 ஒரு தனிமடலில் நண்பர் ஒருவர், ”மேலுள்ள மூன்றும் தமிழ்ச்சொற்களா?- என்று கேட்டிருந்தார். அவருக்கு அளித்த விடை எல்லோருக்கும் பயன்படும் என்பதால், இங்கு பதிகிறேன். சங்கதத் தாக்கத்திலிருந்து இற்றைத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய் வெளிவரட்டும் என்று எல்லோரும் வேண்டிக்கொள்வோம். 

 முதற்சொல்லாய் வருவது உபரி. இயற்கையாலோ, மாந்த முயற்சியாலோ, ஒருபொருள் விளைந்து, மேல்வருவது உவ்வு-தலாகும். உப்பு-தலுக்கும் அதே பொருள். அளங்களில் உப்பு நீரைத் தேக்கி, சூரிய வெப்பபத்தால், நீரை ஆவியாக்கும் போது, விளைந்து  மேல்வரும் பொருளை உப்பு என்கிறோமே? இதை உவரி (salt) என்றும் சொல்லலாம். (தூத்துக்குடி மாவட்டத்தில் உவரி என்று ஓர் ஊருக்குப் பெயருண்டு.) வேளாண்மையில் விளைந்துவரும் பயிரால் கிடைக்கும் வருமானம், பயிர்விளைப்புச் செலவுக்கும்  மேலிருந்தால், அதையும் கூட உவரி (surplus)என்பர். வேளாண்மையில் பழகும் இச்சொல் சங்கதத்துள் போகையில் ubari என்று பலுக்கப்படும். வகரம் baகரம் ஆவது அங்கு பெரிதும் நடக்கும் இயல்முறை தான். ”உபரி” என்பது சங்கதச் சொல்,  ”உவரி” என்பது தமிழ்ச்சொல்.. 

இரண்டாம் சொல் உபகாரம். உடன் எழுந்துவருவதால், உவ எனுஞ் சொல் துணை என்றும் பொருள்கொள்ளும். உவ்வுதல், உப்புதல் போன்ற சொற்களோடு, உவமம் என்ற சொல்லும் ”எழுந்து பொருந்துவதைக் குறிக்கும்.) உவ>உப என்பதும் உவந்துவரும் (=எழுந்து என்று பொருள் கொள்ளுங்கள். விருப்புப் பொருள் கொள்ளாதீர்கள். )  நிலை. இதைத் துணையென்றும் புழங்கலாம். காரம் = வேலை, பணி, தொழில். இதைக் கருமம்  என்றும் சொல்வோம். கரத்தால் செய்வது காரம். காரன் என்று பல இடங்களில் சொல்கிறோமே? அவற்றைச் சற்று எண்ணிப் பாருங்கள். காரத்தைச் செய்பவன் காரன்,  உவகாரம்= துணைக்கருமம். உதவி என்பது உவகாரத்தின் இன்னொரு தமிழ் வடிவம். இங்கும் வடமொழித் தாக்கால் உவகாரத்தை உbaகாரம் என்று பலுக்குவார். தமிழில் சொல்ல, உவகாரம்ம் உதவி, துணைக்கருமம் போன்றவை போதும்.  

மூன்றாவதாய், உதாரணம். உத்தாஹரண>உதாஹரண எனும்  சங்கதக் கூட்டுச்சொல் மருவியே உதாரணம் என்கிறார். நம் வேர்ச்சொல்லில் தொடங்கி அங்கு போய்த் திரிந்து, மீண்டும் நாம் கடன்வாங்கிப் பழகும் சொல் இதுவாகும்.  கொஞ்சம் ஆய்ந்தால் இதன் தமிழ்முலத்தைக் கண்டுவிடலாம். உத்து>ஒத்து என்பது ஒப்புமைப் (comparison) பொருளில் பயிலும் தமிழுருபு. தொல்காப்பியம் உவமவியலில் இது பேசப்படும். அடுத்து, ஆகு-தல் எனும் தமிழ் வினைச்சொல்லோடு, அணம் எனும் ஈறு சேர்த்து ”ஆகணம்” என்ற சொல்லை உருவாக்கலாம்.”ஆகி வந்தது” என்று அதற்குப் பொருள். ”ஆகணத்தில்” ர்-ஐ நுழைத்து, ஆகணம்> ஆகர்ணம்> ஆகரணம்> ஆஹரணம் என்றாவது சங்கத வழக்கம். உத்து + ஆஹரணம்  என்னும் சொற்கூட்டு  உத்தாஹரணம்>உதாஹரணம் ஆகும். நாம் மீளக் கடன்வாங்கி உதாரணம் என்கிறோம். சங்கதக் கடனைத் தவிர்த்து, உத்தாகணம் என்றோ, எடுத்துகாட்டு என்றோ சொல்லிப் போகலாம்.  

உதாரணம் போன்றே சாதாரணம் என்ற சொல்லும் நம்மூரில் தவறாய் உணரப்படுகிறது. 1930-50 களில் ”குப்பன், சுப்பன்” பெயர்கள் நம்மிடம் அதிகமானது போல், 1000 ஆண்டுகளுக்கு முன் “சாத்தன்” அதிகமாய் இருந்தது. சங்க காலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. அக்காலங்களில் சாத்தார மாந்தன் என்பது  எல்லோரும் அறிந்த பொதுவடையாளமாகும். இதன் மிச்ச சொச்சங்களாய், இன்றுங்கூட, திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனப் பெயரிடுவர். [அதேபொழுது ஒரு முரண்தொடையாய் தமிழரில் பலரும் (நகரத்தில் மட்டுமின்றி, நாட்டுப்புறங்களிலும் சேர்த்து) இஷ்/புஷ் என்று பொருள்புரியாது வடமொழிப்பெயர் இடுகிறார். பெருஞ் சோகமாகுமும்.அவலமுங் கூட ] 

சாத்தாரம்>சாத்தாரணம்>சாதாரணம் என்பது ordinary பொருளைக் குறித்தது. அதேபோல் சமணன் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற 3 நெறிகள் மக்களால் பின்பற்றப் பட்டதால்) என்ற பெயர் சமணன்>சாமணன்> சாமனம்> சாமான்யன் என்றும் பரவியிருந்தது. நீலகேசியில் இரண்டு இடங்களில் சாத்தன் = ordinary person என்பதை உணரலாம். முதல் இடம்,  நீலகேசி 683 - ஆம் பாடலில் (ஆசீவக வாதச் சருக்கம்) , வெளிவரும்.

ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லல னாய்விடின் இச்

சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய

நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலும் நினக்குரைத்தும்

ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ?

Any Tom, Dick and Harry என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் ”சாத்தன் (here denotes common man)” என்ற பெயர் தமிழகத்திற் பொதுப் பெயராக பழகியிருந்தது. பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உப ஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளாவட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய், எதிர்ப்பதமாய், ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக , இன்னொரு பாட்டு நீலகேசி மொக்கல வாதம் 413 இல் அமையும், 

ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்

சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?

வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன

ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்.

அன்புடன்,

இராம.கி,


Monday, February 15, 2021

cannon பாகங்கள்

அண்மையில் நண்பர் நன்னிச் சோழன் தமிழ்ச்சொல்லாய்வில் ஒரு cannon படத்தைக் கொடுத்து பாகங்களுக்குத் தமிழ்ப்பெயர் கொடுத்தார். நான் அதே சொற்களுக்கு கீழே என் பரிந்துரையைத் தருகிறேன். முதலில் cannon என்பதற்கு ஆன ஆங்கில விளக்கம் பார்க்கலாம்.c. 1400, "artillery piece, mounted gun for throwing projectiles by force of gunpowder," from Anglo-French canon (mid-14c.), Old French canon (14c.), from Italian cannone "large tube, barrel," augmentative of Latin canna "reed, tube" (see cane (n.)). The double -n- spelling to differentiate it from canon is from c. 1800. இச்சொல் துளைப்பொருளில் எழுந்தது. தமிழில் கன்னம் = துளை. கன்னகம் - துளையுள்ள வெடிமருந்துக் கருவியைக் கன்னகம் என்றே அழைக்கலாம்.cannon உக்குப் பீரங்கி என்றும் தமிழில் சொல்லுண்டு. குண்டு பீரிட்டு வருவதால் எழுந்தபெயர் பீரங்கியாகும். ஒருசிலர் பீரங்கி  தமிழில்லை, போர்த்துகீசில் இருந்து தமிழ் கடன்வாங்கியது என்பார். இதற்கணைவாய்த் தமிழ் விக்சனரியைக் காட்டுவார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. தமிழ் விக்சனரியில் கிட்டுவதெலாம் வேதவாக்கா, என்ன? பீரங்கி போர்த்துக்கீசியச் சொல்லென அங்கு சொல்லப்பட்டதால், அது சரியாகிவிடாது. யாராவது போர்த்துகீசியரிடம் வினவினாரா? - என்று தெரியவில்லை, 

https://www.google.com/search?q=cannon+in+portuguese&rlz=1C1CHBF_enUS852US852&oq=cannon+in+portu&aqs=chrome.1.69i57j0l6.12589j1j7&sourceid=chrome&ie=UTF-8 என்ற கேள்வியைக் கூகுளில் இட்டால் பல்வேறு மொழிகளில் இருந்து போர்த்துக்கீசிற்கு மாற்றித்தரும். அதில் cannon என்று ஆங்கிலத்தில் இட்டால் canhão என்று போர்த்துகீசில் கிடைக்கிறது. tank gun என்று ஆங்கிலத்தில் இட்டால் arma tanque என்று போர்த்துகீசில் கிடைக்கிறது. பீரங்கி என்று தமிழில் இட்டால், Pīraṅki என்று ஆங்கில எழுத்துப் பெயர்ப்பிலும், artilharia என்று போர்த்துக்கீசிலும் கிடைக்கிறது.  இப்போது சொல்லுங்கள். பீரங்கி போர்த்துக்கீசியச் சொல்லா? என்னைக் கேட்டால் “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”. அருள்கூர்ந்து மேலும் தேடுங்கள். நானும் தேடுகிறேன். இப்போதைக்கு என் முடிவு: பீரங்கி தமிழே. இனி கன்னகப் பாகங்களுக்கு வருவோம். தேவைப்பட்ட இடங்களில் கீழே விளக்கம் தருகிறேன். 

Lip = இதழ். இதை உதடு என்றுஞ் சொல்லலாம்.

Fillet = இழைப்பு இழைத்துச் செய்யப்பட்டது இழைப்பு.

Muzzle = மூஞ்சில். ;முகவாய் என்பது முகத்தின் கீழ்த்தாடையைக் குறிக்கும். அது மேல்தாடையோடு கணுக்கப் பட்டதால்(connected) கணவாய் ஆனது. இது muzzle க்கு ஆன சொல் அல்ல. மூஞ்சி  என்பது முன்வரும் முக்கையும் வாயையும் சேர்த்த பகுதியைக் குறிக்கும், இதுவே muzzle எனப்படும். மூக்குத் துளை வழியே காற்று உள்ளேபோய் வெளிவருகிறது  வாய்த் துளை வழியே உணவு போகிறது. வாய் வழியே துப்பவும் செய்கிறோம்..கன்னகத்தில் பொருத்தும் மருந்தானது வெடித்துப் பின் எரிந்து குண்டைத் துளை வழியே துப்பும் ஒப்புமையால் மூஞ்சில் என்ற சரியாய்ப் பொருந்தும்

Muzzle mouldings = மூஞ்சில் மூழ்த்துகள்   [ஓர் அச்சுக்குள் உருகிய மாழையை அல்லது பொத்திகையை (plastic) மூழ்த்தியோ, அல்லது உருகிய மாழை, பொத்திகைக்குள் அச்சை மூழ்த்தியோ, மூழ்த்துகள் (moldings) செய்யப் படுகின்றன. பல்வேறு வகை முழ்த்துச் செலுத்தங்கள் இற்றை நடைமுறையில் உண்டு. அவற்றை  இங்கு விவரிப்பின் பெருகும். எனவே தவிர்க்கிறேன்.]

 Swell of muzzle = மூஞ்சில் வீக்கம்

muzzle astragal & fillets மூஞ்சில் கவோதமும், இழைப்புகளும். கவ்விய ஓதம் கவ்வோதம்>கவோதம். கோயில் கட்டுமானத்தில் இச்சொல் வரும் இச்சொல் சங்கதத்தில் நுழையும் போது cabotham என்றாகும். நாம் கவோதம் என்றே சொல்லிக்கொள்ளலாம்.  Chase girdle குழிதைப் பட்டை; குழிந்திருப்பது குழிதை. இதைக் குழிதாடி என்று சிவகங்கை மாவட்டத்தில் சொல்வர். குழிதாடியில் நெல்லை இட்டு உலக்கையால் குத்தி அரிசியையும் உமியையும் பிரிப்பர்.  குழிதாடியைக் குழிதை என இங்கே நான் சுருக்கியுள்ளேன்.  Chase astragal & fillets குழிதைக் கவோதமும், இழைப்புகளும் 

trunnions& rimbase தண்டங்களும் விளிம்படியும் செடி, மரங்களின் அடிக்கட்டை, trunk எனப்படும். தண்டு, தண்டம் என்று நாம் சொல்வோம். trunnion உம் trunk உம் ஆங்கிலச் சொல்லின் பிறப்பில் தொடர்புள்ளவை. விளிம்பு அடி விளிம்படி = rimbase ஆகும்.   

First Reinforce முதல் தாங்கி. 60 ஆண்டுகளுக்கு மேலாய் reinforced concrete என்பதை ”உறுதிபெறு கற்காரை” என்று பொறியியல் கல்லூரிகளில் வெளிவந்த அறிவியல், நுட்பியல் இதழ்களில் சொல்லி வந்தோம். உறுதிபெறுதல் என்பது civil engineering இல் பயன்பட்டது. ஒரு கருவிச்சட்டத்தைத் (equipment frame) தாங்கும் உறுப்பைத் தாங்கி (bearing) என்று சொல்வோம். இங்கே   Reinforce என்பது தாங்கி எனும் பொருளில் தான் பயன்படுகிறது. Second Reinforce இரண்டாம் தாங்கி. First reinforce astragal & fillets = முதல் தாங்கிக் கவோதமும், இழைப்புக்ளும் 

bottom of the bore = புரையடி; வீடுகளில் இருக்கும் bore well ஐப் புரைக்கிணறு என்று பலகாலம் சொல்லிவருகிறோம்.  

ball = குண்டு 

wadding = வட்டாடை. வெடிமருத்துக்கும் குண்டுக்கும் இடையில் ஓர் அடைப்பு இருக்கும். இதையே இச்சொல் குறிக்கிறது, மருந்தைச் செருமிக் கெட்டிக்க இந்த வட்டாடை. பயனாகிறது  கோயில்களில் இஐத்திருமேனிகளைச் சுற்றிக் கட்டும் ஆடைக்கும் வட்டாடை என்றே பெயர். இங்கே மருந்து வட்டாடையால் கட்டப்படுகிறது.   

Windage = விண்டேகை. காற்றைக் குறிக்கும் விண்டு என்ற சொல் பத்தாம் நூற்றாண்டு பிங்கலத்திலேயே உள்ளது. அது தமிழ்தான். வாயிலிருந்து வெளிவரும் காற்றால் சீழ்க்கை அடிக்கிறோமே, அந்த whistle வீளை என்ப்படும். வீளையும் விண்டு தொடர்புள்ளவை..   

vent field = விண்டுவெளிப் புலம் vent உம் wind உம் தொடர்புள்ளவை. 

vent = விண்டு வெளி

Base ring = அடி வலயம்

knob = குமிழ்

Breech = பீடம்

Base of the breech பீடப் படுகை

Chamber = குவ்வறை

cascable = கவ்வு மூடி

அன்புடன்,

இராம.கி.

Thursday, February 04, 2021

scooter உம், பிற வண்டிகளும்

"இன்று ஒரு தமிழ்ச்சொல் பரிந்துரை" என்ற வரிசையில் நண்பர் Harinarayanan Janakiraman நம்மில் பலர் அன்றாடம் பயன்படுத்தும் Scooterக்கு இணையாகத் துள்ளுந்து என்று சொல்லியிருந்தார். இது சில காலமாகவே பலராலும் பரிந்து உரைக்கப்பட்டது தான். ஆனால் ”பொருத்தமில்லாதது” என்பது என்புரிதல். 1967 இல் கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சரான பின்னால், ஆர்வ மிகுதியில், அன்றிருந்த புரிதலில் பலரும் பரிந்துரைத்து ஏற்கப்பட்ட சொற்களில் இதுவுமொன்று. சொற்களின் பொருத்தங்களை யாரும் அப்போது கேள்வி கேட்கவில்லை. ஆர்வக் கோளாறுகள் பலவும் அப்போது ஏற்பட்டன. தொடக்க காலத்தில் கேள்வி கேட்பதும் ஒருவகையில் தவறு தான். தமிழார்வத்திற்கே தடை போட்டிருக்கும். பின்னாலாவது, அதை தி.மு. க. வே மீளாய்வு செய்திருக்கலாம். செய்யாது போனார். இரு கழகத்தாரும் நாளடவில் தம் தமிழார்வத்தை நீர்த்துப் போக வைத்தார். பணம் அள்ளுவதில் இருவரும் குறியானபின், கொண்ட கொள்கைகள் அவரிடமிருந்து பறந்தோடின. முற்போக்காய் இருந்த திராவிடம் கொஞ்சங் கொஞ்சமாய்ய் பிற்போக்காகித் தேங்கிப் போனது..   

அன்று பரிந்துரைத்த சொற்களில் இயக்குநர் (director; operator க்கும் director க்கும் வேறுபாடு வேண்டாமா? - என்று கேட்பேன்.. என் பரிந்துரை director=நெறியாளர்; operator = இயக்குநர்), மகிழுந்து (pleasure car; இப்போது pleasure ஐச் சேர்த்து யாரும் சொல்வதில்லை. வெறும்  car உக்கே மகிழுந்து என்கிறார்; சகடு என நான் சொல்வேன்), நீதியரசர் (justice; குடியாட்சிக் காலத்தில் அரசரைப் பிடித்து ஏன் தொங்கவேண்டும்? தெரியவில்லை. ”நயவோர்/நயத்தார்” போதும்) போன்றவை  ஒருசில, துள்ளுந்தும் அப்படித்தான். உந்தை (momentum)வைத்து, முன்னால் சில ஒட்டுக்களைச் சேர்த்தால் தமிழில் இது போன்ற கருத்துகள் வளர்ந்துவிடும் என்ற போதை பலருக்கும் இருந்தது. துள்ளிப் போகும் உந்தில் சிலரைத் தவிர்த்து எல்லோராலும் உட்கார்ந்து போகமுடியாது. தூக்கிவாரிப் போடும். அப்படியே scooter துள்ளுமென்றாலும் கூட, motor துள்ளாதா,  bike துள்ளாதா? - என்ற கேள்விகள் இயல்பாய் எழும். தவிர, துள் எனும் விதப்பு scooter க்கு மட்டும் ஏன்? அறிவியலில் எனக்கு விடை தெரியாது.

திராவிடச் சிந்தனையாளர் பலரும் அறிவியல் தமிழ் என்பதைப் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை. “பாமரருக்கும் புரிய வேண்டும்” என்று விளங்காத வேதம் படிக்கும் இவர்கள் அறிவியலைத் தமிழில் சொல்லிக் கொடுப்பதைக் கண்டு கொள்ளவே இல்லை. கடந்த 250 ஆண்டுகளில் நம்மிடம் அறிவியல்வளர்ச்சி என்பது குறைவு. வரலாற்றுக் குளறுபடிகளால் ஒரு பேரிடை வெளி இக்காலத்தில் நம் மொழியில் எற்பட்டு விட்டது. அந்த இடைவெளியைச் சரி செய்யாது குறைச்சொற்களை நிரப்பாது நாம் அறிவியலில் வளரவே முடியாது. இதைச் செய்ய முயல்வதே எனக்குப் பொல்லாப்பு ஆகிறது. ”பாமரச் சொற்களை விடுத்து இராம.கி. ஏதோ இலக்கியம் படைக்க முற்படுகிறார். கவிதை படைக்க முயல்கிறார். அகர முதலி வைத்துக் கொண்டா தமிழில் அறிவியல் படிக்க முடியும்?” என்றெல்லாம் சாடல்கள் எழும்.  என் கேள்வி எளிமையானது.  அகரமுதலி வைத்துக் கொள்ளாமலா, ஆங்கிலத்தில் அறிவியல் படிக்கிறோம்? எண்ணிப் பாருங்கள்

எனவே நம்மரபு எவ்வளவு தொலைவு வந்தது? எங்கு இடைவெளி ஏற்பட்டது? - என்பதில் நமக்கு ஆழ்ந்த தெளிவு வேண்டும். நமக்கு இன்று தெரிந்த 3000 சொற்களை வைத்து, முன்னொட்டு, பின்னொட்டு, ஈறுகள் சேர்த்தால் 250 ஆண்டுகால இடைவெளியைச் சரிசெய்து விடலாம் என்பது வெறும் கற்பனை. ஒருவகையான களிமண் குதிரையில் பயணம் செய்யும் போக்கு. ஒரு மழையில், காற்றில் அது கரைந்துவிடும். கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுன்றம் போக ஆசைப்பட்டானாம். அண்மைக் கால அறிவியல் வளர்ச்சி  மேலும் மேலும் விதப்பித்தல் (speciation), வகைப் படுத்தல் (classification) என்பதில் தான் வளர்ந்தது. நாமும் விதப்பித்தல், வகைப்படுத்தல் மூலம் நம் சொல் தொகுதியைக் கூட்டினால் தான் மேலே வளர முடியும். இதைச் செய்ய  ”பொது பொதுமக்கள், பொதுமைய” என்ற பாதை சரிவராது.

ஆங்கில எழுத்தாளர் சியர்ச்சு ஆர்வெல் தன் ”1984” புதினத்தில் இது போன்ற ஒரு மொழியை விவரிப்பார். good, supergood, plusgood, doubleplusgood என்று  முன்னொட்டுகளால் சொற்களைப் படைக்கும் தந்திரத்தை அங்கு  சொல்லி யிருப்பார். அது ஓர் இயந்திர மொழியையே உருவாக்கும். தீநுண்மி, முள் தொற்றி போன்றவை  supergood, plusgood, doubleplusgood என்ற வகைச் சொற்களைச் சார்ந்தவை. அப்படிச் சொற்களைத் தமிழில் உருவாக்கினால் ஒருநாளும் தமிழில் அறிவியல் பரவாது. நாம் காலத்திற்கும் அடிமையாய் இருப்போம். அப்படி ஒருவகையில் தமிழ் வளர்ந்தால் அது சவலைப் பிள்ளையாகவே இருக்கும்.

அந்தத் தடந்தகை  (strategy) நம்மைக் கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம், கேளிக்கை தவிர வேறு எதற்கும் வல்லமையுள்ளதாய் ஆக்காது. நான் சொல்வது சிலருக்கு வலிக்கலாம். ஆனால் என் கருத்தை என் பக்கத்தில் சொல்ல எனக்கு உரிமையுண்டு. பழம் இலக்கியங்களைப் படிக்காமல், வட்டார வழக்குகளை அறியாமல், மற்ற தமிழிய மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாமல், இந்தையிரோப்பிய மொழிச் சொற்களுக்கும், நம் சொற்களுக்கும் உள்ள உறவுகளை ஆயாமல், மொழித்திரிவு விதிகளை அறிந்துகொள்ளாமல், புதுச்சொல்லாக்கம் செய்வது குதிரைக் கொம்பே என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன்.  என் சொல்லாக்க முறையின் அடி நாதம் அது தான்.

இனி scooter க்கு வருவோம். skeud- என்னும் Proto-Indo-European root meaning "to shoot, chase, throw." It forms all or part of: scot-free; shoot; shot; shout; skeet; skittish; wainscot. It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit skundate "hastens, makes haste;" Old Church Slavonic iskydati "to throw out;" Lithuanian skudrus "quick, nimble;" Old English sceotan "to hurl missiles," Old Norse skjota "to shoot with (a weapon)." என்பதில் தான் அவ்ர் தொடங்குவார், எங்கே சுற்றினும் முடிவில் மேலையர் சங்கதத்திலே தான் வந்துநிற்பார். அதற்குச் சற்றுதள்ளித் தமிழுக்கு வரவே மாட்டார். ஆய்ந்து பார்த்தல், பல தமிழ்ச் சொற்கள் உருமாறிச் சங்கதத்தில் அடையாளம் காட்டும், இத்தனை சொற்களுக்கான உறவு எப்படி ஏற்பட்டது? நாம் வியக்கிறோம். என் ஆய்வு முடியவில்லை.

தமிழில் கடு-த்தல் என்பதற்கான எத்தனையோ பொருள்களில் விரைவும் ஒன்று. “ காலெனக் கடுக்கும் கவின்பெறு தேரும்” என்பது மதுரைக் காஞ்சி 388.  கடிது வா = வேகமாய் வா. குடுகுடு என்று ஓடினான் என்றால் வேகமாக ஓடினான் என்று பொருள். குடுகுடுக்கிறவ்ன் = அவக்கரப் படுகிறவன். கடுநடை = வேகநடை.குடு>கடு என்று திரியும்.  ”வெந்திறல் கடுவெளி பொங்கர்ப் போந்தென” குறுந். 39. “கருமக் கடுக்கம் ஒருமையின் ஆடி” (பெருங்கதை, இலாவன. 17:9) “மாரி கடிகொளக் காவலர் கடுக” (ஐங்குறு 29.1) ”கால்விசை கடுகக் கடல் கலக்கு உறுதலின்” (மணிமே. 14:80) “கடுநடை யானை கன்றொடு வருந்த” (நற் 105.4).  கடு என்பது இந்தையிரோப்பியனுக்கு வெகு தொலைவில்லை. முன்னால் s- சேர்த்தால், அதன் உறவு புரிந்துவிடும்.       .

அந்த வகையில் scooter (n.)யைக் ”கடுதி” எனலாம் 1825, "one who goes quickly," agent noun from scoot (v.). Also in 19c. a type of plow and a syringe. As a child's toy, from 1919 (but the reference indicates earlier use), as short for motor scooter from 1917. துள்ளுந்தை ஏற்கும் நாம் கடுதியைச் சேர்க்கத் தயங்குவோம். ”நாம் எசமானர் மொழிக்கு நெருக்கமாய் வருகிறதே? அது எப்படி நம்மை அவருக்குச் சமானம் ஆக்கலாம்?” என்று சிலர் கேட்பார். ”என்ன இருந்தாலும் சாமி, சாமிதான். நாம அடிமை தான்” என்பார் போலும்.

கடுதியை ஏற்றால், scut (n.1) "short, erect tail" (of a rabbit, hare, deer, etc.), 1520s; earlier "a hare" (mid-15c.), perhaps from Old Norse skjota "to shoot (with a weapon), launch, push, shove quickly" (compare Norwegian skudda "to shove, push"), from PIE root *skeud- "to shoot, chase, throw." என்பதை கடுவன் (பூனை) என்பது போல் கடுவை எனலாம்.

shoot (v.) Old English sceotan "to hurl missiles, cast; strike, hit, push; run, rush; send forth swiftly; wound with missiles" (class II strong verb; past tense sceat, past participle scoten), from Proto-Germanic *skeutanan (source also of Old Saxon skiotan, Old Norse skjota "to shoot with (a weapon); shoot, launch, push, shove quickly," Old Frisian skiata, Middle Dutch skieten, Dutch schieten, Old High German skiozan, German schießen), from PIE root *skeud- "to shoot, chase, throw." கடு-த்தல் என்பது, சூடு-தலுக்கு இன்னொரு பெயர், (சுடுதல் என்பது வெடிமருந்து பயன்பட்டால் மட்டுமே பயன்படும். விடு-த்தல்; எய்-தல் போல், கடு-த்தலும் இன்னொரு  வினைச்சொல்.

shot = கடுவு.

skeet (n.) form of trapshooting, 1926, a name chosen as "a very old form of our present word 'shoot.' " Perhaps Old Norse skotja "to shoot" (see shoot (v.)) was intended. கடுவம்

skittish (adj.) early 15c., "very lively, frivolous," perhaps from Scandinavian base *skyt- (stem of Old Norse skjota "to shoot, launch, move quickly"), from PIE root *skeud- "to shoot, chase, throw." Sense of "shy, nervous, apt to run" first recorded c. 1500, of horses. கடுவான

wainscot (n.) mid-14c., "imported oak of superior quality" (well-grained and without knots), probably from Middle Dutch or Middle Flemish waghenscote "superior quality oak wood, board used for paneling" (though neither of these is attested as early as the English word), related to Middle Low German wagenschot (late 14c.), from waghen (see wagon) + scote "partition, crossbar" (from PIE root *skeud- "to shoot, chase, throw") கடு வையம் வையம் = wagon என்று இன்னொரு கட்டுரையில் சொன்னேன். 

இந்த இடுகையை முடிப்பதற்கு முன்னால் motor (n.) நகர்த்தி பற்றிச் சொல்லி விட வேண்டும். "one who or that which imparts motion," mid-15c., "controller, prime mover (in reference to God);" from Late Latin motor, literally "mover," agent noun from past-participle stem of Latin movere "to move" (from PIE root *meue- "to push away"). Sense of "agent or force that produces mechanical motion" is first recorded 1660s; that of "machine that supplies motive power" is from 1856. Motor-home is by 1966. Motor-scooter is from 1919. First record of slang motor-mouth "fast-talking person" is from 1970.

கையில் வெண்ணெயை  வைத்துக்கொண்டு இதுகாலம் ”இயக்கம், அது இது” என்று நெய்க்கு அலைந்திருகிறோம். move = நகர்-தல். இதை நக(ர்)வு-தல் என்றும் சொல்லலாம். motion = நகர்த்தம். car = சகடு; motor-car = நகர்ச்சகடு; bike = இருதி. motor-bike = நகர் - இருதி

முடிவில் மனம் இருந்தால் மார்க்கமுண்டு

scooter = கடுதி

move = நகர்-தல், நக(ர்)வு-தல். 

motion = நகர்த்தம். 

motor = நகர்த்தி

car = சகடு; 

motor-car = நகர்ச்சகடு; 

bike = இருதி. 

motor-bike = நகர் - இருதி

அன்புடன்,

இராம.கி.


Wednesday, February 03, 2021

அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 5

இனிக் கடைசிப் பகுதிக்கு வருவோம். அரோகரா என்ற முழக்கத்தோடு, அஞ்செழுத்து, எட்டெழுத்து மந்திரங்களையும்  பற்றியும் அறிந்துகொள்வது நல்லது. முடிந்தால்  இம் மந்திரங்கள். பற்றிய இடுகையையும் படியுங்கள். ( https://valavu.blogspot.com/2020/02/blog-post.html) இப்போதெல்லாம் ஏதோ தமிழில் மந்திரங்களே இல்லையென்று சிலர் சொல்ல முற்படுகிறார். எல்லா மந்திரங்களையும் நான் பேச முற்படலாம். அது வழவழ என்று போகும். முகன்மையான அஞ்செழுத்து, எட்டெழுத்து மந்திரங்களைப் பற்றி மட்டும் இனிப் பேசுவோம். நண்பர் ஒருவர் ஒருமுறை தொலைபேசியில் ஓம் என்பதன் தமிழ்மை பற்றி விவரங் கேட்டார். அப்பொழுது தான் சிலம்பின் ஐயங்கள் என்ற தொடரில் 13, 14 ஆம் பகுதிகள் நினைவிற்கு வந்தன. அதில் இருந்து தேவையானவற்றை இங்கே வெட்டியொட்டுகிறேன்.

எல்லா மந்திரங்களும் “ஓம், ஹாம், ஹூம், ஹ்ரீம், சூ, மந்திரக்காளி...” என்று அமைவதாகவே சிறு அகவையில் நாம் பார்த்த கதைப் படங்களாலும் (cartoons), பாட்டி கதைகளாலும், அம்புலி மாமா இதழ்களாலும், பின்னால் திரைப்படம், தொலைக்காட்சிகளாலும் எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் அப்படிக் கிடையாது. பெரும்பாலான மந்திரங்கள், ”என்னைக் காப்பாற்று” என்பதை அடிப்படையாய்க் கொண்டனவே. தமிழில் ஓம்புதல் என்பது காப்பாற்றலைக் குறிக்கும். விருந்தோம்பல் எனில் விருந்தினருக்கு உணவிட்டுக் காப்பாற்றல் ஆகும். ”தொடர்ந்து துன்பத்திற் சிக்கி நான் வீழ்ந்துவருகிறேன். இதைத் தடுத்து என்னைக் காப்பாற்று”, என்றே மக்களிடம், பெரியவரிடம், தலைவனிடம், எல்லாம் வல்ல இறைவனிடங் கூட, வேண்டுகிறோம். தடுத்தாட் கொள்ளுதலைச் சிவ, விண்ணெறிகளிற் சூழ்க்குமமாய்ச் சொல்வர். உல்> ஒல்>ஒ>ஓ>ஓம் என்பது ”தடுத்தலை” உள்ளடக்கிக் காப்பாற்றும் பொருளைக் காட்டும். ”ஓம்” என்பது முழுக்க முழுக்க நல்ல தமிழ்ச்சொல். அதைச் சங்கதம் என நினைப்பது தவறு. பொதுவாய் 100க்கு 99 மந்திரங்களில் இந்த ”ஓம்” இருந்தே தீரும்.

["எனைக் காப்பாற்று” எனும் மந்திரங்கள் குறைந்தது 5000 ஆண்டுகளாய் நாவலந் தீவில் உள்ளன. சிந்துவெளியில் 2 ”ஒ” எழுத்துக்களில் ஒன்று இன்னொன்றைக் குறுக்கே வெட்டுவது ஆக்கி, ம் எனும் ஒலியை + வடிவாய் நடுவில் வைத்து, மூன்றையும் பிணைத்துச் சுழற் (சுவத்திக) குறி அமைத்தார் என திரு. இரா.மதிவாணன் சொல்வார். அவரை நம்பாதோர் இன்னும் தடுமாறுவார். மதிவாணனோ சிந்துவெளி எழுத்தைப் படித்துவிட்டதாய்ச் சொல்கிறார். இப்புலத்தினுள் நான் இப்போது போக விழையவில்லை. ஓம் என்ற சொல் இங்கு எழுந்ததால் இதைச் சொன்னேன்.] சிலம்பில் கோவலன் சொல்லும் மந்திரத்திற்கு முன்னர் காடுகாண்காதையின் 128-132

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்

ஒருமுறை யாக உளங்கொண்டு ஓதி

வேண்டிய தொன்றின் விரும்பினிர் ஆயின்

காண்டகு மரபின அல்ல மற்றவை

என்ற 128-132 ஆம் வரிகளில் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் பற்றி மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வான். ஐந்தெழுத்து சிவநெறிக்கும், எட்டெழுத்து விண்ணவத்திற்கும் ஆனதென்றே இற்றைக் காலத்திற் பலருங் கொள்கிறார். ஆனால் மாங்காட்டுப் பார்ப்பானோ (வேதங் கலந்த) விண்ணவ நெறியாளன். அவன் சொல்லும் ஐந்தெழுத்து விண்ணவ மந்திரம்  ஆகலாம். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் சிவ, விண்ணவ நெறிகளோடு வேதநெறி கலந்து தமிழரிடையே புதுநெறிகளை உருவாக்கினாலும், இவற்றின் அடிப்படைகளும் பழம் நடைமுறைகளும், இன்னும் தமிழ்வழியே தான் உள்ளன. ஆழ்ந்து பார்த்தால், சிவ, விண்ணவ மந்திரங்கள் சற்றே ஓசை மாறிய தமிழ் மந்திரங்களே. வடக்கு வேத மந்திரங்கள் இவற்றிலிருந்து  வேறுற்றவை. பொதுவாய்ச் சிவனையும் விண்ணவனையும் அவை கூப்பிட்டழைக்கா. (அரிதாய் உருத்திரனையும், விண்ணுவையும் அழைப்பதாய்ச் சில மந்திரங்கள் சொல்வர்.)

முதலில் ஐந்தெழுத்து மந்திரம் பார்ப்போம். எல்லாச் சிவன்கோயில் சுவர்களிலும் ”சிவசிவ” என இன்றும் பெரிதாய் எழுதுவர். இதோடு ஓம் சேர்த்தால் நாம் தேடும் ஐந்தெழுத்துக் கிடைத்துவிடும். ”ஓம் சிவசிவ” என்பதே சிவநெறியில் முதலிலெழுந்த ஐந்தெழுத்து மந்திரம். (கட்டளைப் பாக்களில் எழுத்தெண்ணும் போது மெய்யெழுத்தை எண்ணமாட்டார். கவனங் கொள்ளுங்கள் இங்கே ஓம் என்பது ஓரெழுத்து;) ”சிவனே காப்பாற்று” என்பது தான் இம் மந்திரப் பொருள். அதேபோல் ”ஓம் நாராயணா” எனும் ஐந்தெழுத்து மந்திரம் பெருமாள் கோயில்களிலுண்டு. (நாராயணன் நீரில் உள்ளவன் ஆவான் .”நாரணன்” என்ற என் கட்டுரையைப் பாருங்கள். http://valavu.blogspot.in/2009/08/blog-post_28.html

இனிக் குழைதலுக்கும் வணங்குதலுக்குமான சொற்களைப்பார்ப்போம். நுள்>நுள்வு>*நுவ்வு>*நும்மு>நுமு>நமு என்ற சொல் தளர்ந்து, குழைவதைக் குறிக்கும். பொதுவாகக் குழைந்த பொருள் மென்மையாகிப் பின் வளையும், வணங்கும். குழைதற் பொருளில் திருவாய் மொழியின் ஒன்பதாம் பத்தில் ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாம் பாட்டில் (திவ். திருவாய் மொழி 9:9:3)

இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்

  இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க

துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து

  துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்

தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்

  தாமரைக் கண்ணும்செவ் வாயும், நீலப்

பனியிருங் குழல்களும் நான்கு தோளூம்

  பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ!

 என நம்மாழ்வார் நாயகி பாவத்தில் ”நமுதற்” சொல்லின் மூலம் ”என் இணை முலைகள் குழைந்து போயின” என்பார். நமுத்துப்போவதை நமத்துப் போவதாயும் சொல்கிறோமே? ”அப்பளத்தை வெளியே வைத்ததால் நமத்துப் போனது” நமத்துப் போதல்>நமர்த்துப்போதல் என்றும் பேச்சு வழக்கிற் சொல்லப் படும். ரகரமும் லகரமும் பலவிடங்களிற் போலிகள். நமர்த்துப் போதல் நமல்த்துப் போதலும் ஆகும். தான் கொண்ட பற்றியாற் குழைந்து போனவன் இறைவனை வணங்கவே செய்வான். நமுதல் நீண்டு நமல்தல்/நமலுதலாகி வணங்கற் பொருளைக் குறிப்பது முற்றிலும் இயற்கையே.  சங்க கால முடிவிலெழுந்த நமல்தல்/நமலுதல் என்ற வினைச்சொல்லிற்கு வணங்குதலென்று பொருள். இதன் காட்டைத் திருவாய் மொழியின் மூன்றாம் பத்தில் மூன்றாம் பதிகத்தில் ஏழாம்பாட்டில் (திவ். திருவாய் மொழி 3:3:7)

”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு

அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்

நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு

சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே”

என்று நம்மாழ்வார் சொல்வார். நமன்றெழும் என்பது ”வணங்கியெழும்” என்று பொருள் கொள்ளும். நமனுதலுக்கும் வணங்கற் பொருளுண்டு. நமனிகை என்பது அடியார் வணங்கும் உட்கருவறை (inner sanctuary). தென்னகக் கோயில் நிருவாகத்தார் யாரும் தேர்ந்தெடுத்த சிலரைத் தவிர மற்றெவரையும் உட்கருவறைக்குள் புகவிடார். தீட்டுப் பட்டுவிடுமென்பார். ஆனால் காசி விசுவநாதர் கோயிலில் (செல்வவளம், பண்டாரிக்கு நெருக்கம், அதிகாரிகளுக்கு நெருக்கம் என உலகவழக்கம் பொறுத்து) நமனிகைக்குள் யாரும் போய் விசுவநாதனைத் தொடலாம். (நான் தொட்டுள்ளேன்.) பாலால் முழுக்காட்டலாம். வில்வமுமிடலாம். அது பொதுவான வடபுலப் பழக்கம்.  தென்புலப் பழக்கமோ கட்டுப் பெட்டியானது. எல்லோரையும் விடாது.

நுள்ளிலிருந்து உருவான நுமுதல் ஒரு தனிப்பட்ட வளர்ச்சியன்று. அதுபோலப் பல சொற்கள் உள்ளன. நுள்>நுளு>நுழு>நுகு என்ற வளர்ச்சியில் நுகும்பு, நுகை, நுணங்கு, நுடங்கு, நெகு, நெக்கு, நெகிழ், நெளு, நெளி, நொளு, நொய், நொய்வு, நொம்பு, நொம்பலம் என்று பல்வேறு தனிச்சொற்களாலும், கூட்டுச் சொற்களாலும் தளர்ச்சி, குழைவு, இளகு, உருகு, வளைவுப் பொருட்களை உணர்த்தும். 200 சொற்களாவது இப்படிப் பார்த்தால் தேரும். நமல் நெமலாகி நேமியும் ஆகலாம். அது வளைந்து கிடக்கும் வட்டம், சக்கரத்தைக் குறிக்கும். சமணத்தின் 22 ஆம் தீர்ந்தங்கரர் நேமிநாதர் சக்கரப் பொருளாற் பெயர் கொண்டவர். மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலைக் கல்வெட்டில் ”அரிட்ட நேமி” என்ற துறவி பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. 

”நமல்க” என்ற சொல்லை (நம்மாழ்வாரின் திருவாய்மொழியிற் காணாவிடில் எனக்குக் கொஞ்சமும் இதன்பொருள் விளங்கியிருக்காது. நெடுங்காலம் ”நமக”வைச் சங்கதம் எனவே நான் எண்ணியிருந்தேன்.) ஐந்தெழுத்து மந்திரத்தோடு ”நமல்க” சேர்ந்தால் எட்டெழுத்து மந்திரங் கிடைத்துவிடும். (கட்டளைப் பாவை மறந்துவிடாதீர். ஒற்றிற்கு மதிப்பு இல்லை என்பதால் மல்  என்பது ஓரெழுத்து.)

”ஓம் சிவசிவ நமல்க - சிவனே! (எம்மைக்) காப்பாற்று. (எல்லோரும்) வணங்குக”,

“ஓம் நாராயண நமல்க - நாராயணா (எம்மைக்) காப்பாற்று (எல்லோரும்) வணங்குக”

நாளாவட்டத்தில் நமல்க என்பது பேச்சுவழக்கில் நமக என்றாகிப் பின் சங்கதத் தாக்கில் நம: என்றாகும். அப்படியாகையில் ஓரெழுத்துக் குறையும்.  (ம: என்பது மஃ என்று ஒலிக்கும். அதை வைத்து நம் ஆய்தமும் வடவரின் விசர்க்கமும் ஒன்றென்று சிலர் சொல்வார். முற்றிலுங் கிடையாது. ஆனாற் சில ஒப்புமைகள் உண்டு.) தவிர ஆய என்ற தமிழ்ச்சொல்லையுஞ் சங்கத முறையிற் கொண்டு வந்து சேர்ப்பர். [ஆகுதல்>ஆய்தல் என்பது ஆகுஞ் செயலைக் குறிக்கும். ஆயனென்ற பெயர்ச்சொல் ஆய என்றாகும்.)

இந்தப் பிணைப்பால் ”நாராயண” என்பது ”நாராயணாய” என்றாகும் ”சிவ” என்பது ”சிவாய” என்றாகும். முடிவில் விண்ணவ எட்டெழுத்து மந்திரம் ”ஓம் நாராயணாய நம:” என்றாகும். இதைச் சற்று மாற்றி ”ஓம் நம: நாராயணாய / ஓம் நமோ நாராயணாய” என்றுஞ் சொல்லுவர். சிவ ஐந்தெழுத்து மந்திரம் ”ஓம் சிவசிவ” என்பதற்கு மாறாய் ஓமை விட்டுவிட்டு ”சிவாயநம:” என்று மாறிப் போகும். இதை ”நம:சிவாய/நமச்சிவாய” என்றும் பலுக்குவர். முடிவில் ”சிவனை வணங்குக” என்று மட்டுமே இம்மந்திரம் பொருள் தரும். சிவ எட்டெழுத்து மந்திரத்திற்கு ”ஒம் சிவசிவாய நம”: என்றமையும். மொத்தத்தில் பலரும் இன்ற சொல்லும் சிவ, விண்ணவ மந்திரங்கள் தமிழுஞ் சங்கதமுங் கலந்த மந்திரங்களே. தமிழ் மந்திரம் வேண்டுமெனில் மேற்கூறியவற்றைப் பலுக்கவேண்டும்.

இதேபோல் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் அற்றுவிகத்திலும், செயினத்திலும், புத்தத்திலும் இருந்திருக்கலாம். மணிமேகலையில்  ஓம் மணிபத்மேய நம: என்பது புத்த நெறியின் எட்டெழுத்து மந்திரமும், ஓம் மணிபத்மேய என்ற ஆறெழுத்து மந்திரமும் பற்றிச் சொல்வர்.. மணிபதும/மணிபத்ம என்பது ”மணிபோன்ற பாதத்தாமரைகளைக்” குறிக்கும். பல ஆங்கில உரையாசிரியர் இது புரியாது juwel lotus என்றெழுதி ஆன்மீகப் பொருள்கொடுத்துக் குழப்பிக் கொண்டிருப்பர். (இணையத்தில் எங்கு தேடினும் இக்குழப்பம் நிகழ்வது புரியும்.) அடிப்படையில் பொருள் மிக எளிது. மகாயானம் தோன்றும் வரை புத்தனைப் பீடிகையாலே மக்கள் தொழுதார். புத்தனின் செங்காலடிகளுக்கு மணியும், பதுமமும் உவமங்கள். மணிப் பதுமம் என்பது இரட்டை உவமம் அவ்வளவு தான்.

இதேபோல் மந்திரங்கள் செயினத்திலும், அற்றுவிகத்திலும் கூட இருக்கலாம். தேடிப்பார்க்க வேண்டும். தீர்த்தங்கரரை அழைத்தும், இயக்கிகளை அழைத்தும் மந்திரங்கள் இருக்கலாம் (அவையெலாம் இப்போது எனக்குத் தெரியாது.) தெரிந்தவர் சொன்னால் கேட்டுக்கொள்வேன்.

முடிவிற்கு வருவோம். அரோகராவும், ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்களும் தமிழ் தான்.

அன்புடன்,

இராம.கி.


அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 4

கங்கைக்கரையில் வேள்விநெறி பரவியபோது, அரசருக்கும், பெருநிலக் கிழாருக்கும், செல்வந்தருக்கும் நன்மை கொடுப்பதாய்ச் சொல்லி அவரை அண்டியே வேதியர் வேள்விகளைச் செய்தார். அதே பொழுது, பொதுமக்களோ, வேதநெறியில் ஈடுபடாது, தத்தம் ஆளுமைக்குத் தக்க, சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் வணங்கினார். இச் சிவ, விண்ணவ, கொற்றவைப் பரவல் தென்புலத்திலும் நடந்தது.  மேல் தட்டிற்கொன்று, கீழ்த்தட்டிற்கு ஒன்றென ஆனச் சமய இடைவெளி வேதியருக்கு இடைஞ்சல் ஆகியது. பொதுமக்கள் சற்று தள்ளியே அவரை வைத்தார். கி.மு. 600 களுக்குச் சற்றுமுன் (எத்தனை நூற்றாண்டுகள், ஒன்றா, இரண்டா என்பது தெரியாது), மெய்யியல் (philosophy) வரிதியான கேள்விகளுக்கு வேத நெறி உள்ளாக்கப் பட்டது. பொதுமக்களிடையே அற்றுவிகம் (ஆசீவகம்), செயினம், புத்தம் எழுப்பிய தாக்கத்தை அறிந்த அரசரும், மற்றோரும் வேறு வழியின்றி நெறி மாறத் தொடங்கினார். 

அதுவரை தியை (ஒளியுள்ள வானம்- dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்> வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) எனச் சிறு தெய்வங்களையே பரவிய வேதநெறியார், ஆகமநெறியைப் (ஆகிவந்த நெறி ஆகம நெறி. இதுவும் ஒரு மரபுநெறி தான். ஆனால் தென்புலம், பொதுவான வடபுலம் ஆகியவற்றின் நெறி) பார்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டும் சேர்ந்த கலவைநெறி இந்தியாவில் எழத் தொடங்கிச் சிவநெறி (அதேபோல் விண்ணெறி) பெருந்தெய்வ வணக்கமாய் மாறியது. கலவை நெறி உருவான பின்னரே, குருக்கள்மார் மக்களிடை ஏற்கப்படும் நிலைக்கு வந்தார். [எப்போதுமே வெளியிருந்து திணிக்கப்பட்டு மக்களுடன் ஒன்றாகாத மதம் மக்களிடை நிலைக்காது. உள்ளூர்ப் பழக்கங்களை அணைத்து ஒன்றுபடும் மதமே மக்களை ஈர்க்கும்.] வேதாகமக் கலவைநெறி எழுந்தகதை இதுதான்.

கலவைநெறியை உருவாக்கிய பின்தான், அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகியவற்றை எதிர்த்து, வேதியர் பொதுமக்களைத் தம் பக்கம் திருப்ப முடிந்தது. கி.மு.600 களுக்கு அண்மையில் வட புலத்தில் வேதப்பழக்கம் குறையத் தொடங்கியது. புது விளக்கங்கள் வேத நடைமுறைக்குக் கற்பிக்கப் பட்டன. கீழ்நிற்றங்கள் (உபநிடதங்கள்) எழுதி, மெய்யியற் பொருட்பாடுகள் கூறப்பட்டன. வேதியர் தெற்கே வரத்தொடங்கினார். சங்க காலத்திலேயே பார்ப்பனர் தாக்கம் தமிழகத்தில் இருந்ததே என்று சிலர் கேட்பார்; இதில் பெருமைப்படவும், வெட்கப்படவும் ஒன்றுமில்லை. வேதியர் பெயர்ச்சி தென்னாட்டில் ஏற்பட்டது ஒரு சாத்தாரமான பட்டகை (ordinary fact). அவ்வளவுதான். 

வேத நெறி பின்பற்றும் மரபாளர் தெற்கே கோதாவரிக்கு வந்த பின்னால், அவரின் விதியாளரால் தாலி கட்டிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார். (ஓரளவு பார்ப்பனரல்லாத தென்னாட்டுப் பெண்களையும் அவர் மணஞ் செய்திருக்க வேண்டும் என்றே ஆய்வாளர் எண்ணுகிறார். குறிப்பாக பார்ப்பனர் பழகும் மராட்டியப் புடவைக் கட்டுமுறை அப்படி ஓர்ந்துபார்க்க வைக்கிறது.) முறைப் பெண்ணைத் திருமணம் செய்யும் தென்னாட்டுப் பழக்கமும் அவரிடம் ஏற்பட்டது. பெண்களோடும், வேதம் அறியாதாரோடும் (பெருமானர் அல்லாதாரோடும்) உடனிருந்து விருந்து உண்ண அனுமதிக்கப் பட்டார். பழையது சாப்பிட ஒப்புதல் கிடைத்தது. பெருமானர் விலங்குகள் சாப்பிடுவதில் புதிய பட்டியல் கூட ஏற்பட்டது. இவற்றை ஆபஸ்தம்ப சாற்றமும், பௌதாயண சாற்றமும் (சாற்றம் = சாத்திரம்) விளக்கமாய்க் கூறுகின்றன. 

இப்படி விளங்கங்களை நான் எழுதும் காரணம், வேதியரில் சிலர் ”வேதம் ஏதோ தான்தோன்றியது- சுயம்பு ” என்றெல்லாம் பல மூதிகங்களைக் கிளப்புவதை மறுக்கவே. பொறுமையாக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு முன் நடந்தவைகளைப் பார்ப்பது, அதிலும் வேதம் போன்றவற்றைப் பார்ப்பது, இன்று மிகவும் அரிதாகிவிட்டது. கொடிமரபை (பரம்பரையை) மறுதலிப்பதே இன்று பலருக்கும் வழக்கமாகிறது. நாவலந்தீவின் பல பண்பாட்டு வழக்கங்களும் இதுபோலத் தென்னாட்டு. வடநாட்டுக் கலவை வழக்கங்களே. 

இன்றைக்குத் தம் தென்னாட்டு (=திராவிட) ஊற்றுகைக்கு வெட்கப்படும் மெத்தப் படித்த மேதாவிகள், வேதத் தன்மையை மட்டுமே நம்முன் வலியுறுத்திப் போகலாம்; ஆனால் உண்மை என்றாவது வெளிவந்தே தீரும். (மேனிலைப் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியுள் நுழையும்போது, தம் நாட்டுப்புறத் தகப்பனையோ, தாயையோ, உடன் படிக்கும் மாணிவரிடை அறிமுகம் செய்துவைக்க வெட்கப்பட்டுத் தன் கொடிவழி பற்றிப் பொய்சொல்லித் திரியும் சில முட்டாள்களையும், தம் தாய்வழிக் கொடி பாண்டித்தமிழரிடம் இருந்தே பிறந்ததென்று "மகாவம்சம்" சொல்வதை வாய்ப்பாக மறந்து, தந்தைவழிக் கொடியான ஆரியத் தோற்றத்தை மட்டுமே விண்ணாரம் பேசி, அதேநேரம் தாய்வழி உறவான தமிழரை ஈழததீவிலிருந்தே விரட்ட முற்படும், சிங்கள முட்டாள்களையும் இங்கே எண்ணாது இருக்க முடியவில்லை.)

இதுபோன்ற பெருமானரின் பரவலை 3 அலைகளாய்ப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் கூறுவார். (The Brahmin in the Tamil Country - Prof. N.Subrahmanian, Retd. Prof.of History, Madurai Kamaraj University, ENNES publications, Madurai, year 1989) கி.மு. 1000-800, கி.மு.500-200, கி.பி 300-500 என்று அவர் பகுப்பார். இந்த அலைகள் இரண்டா, மூன்றா என்பதில் ஆய்வாளரிடையே வேறுபாடுண்டு. ஆனால், குத்தர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் சாரி சாரியாய் பெருமானர் தெற்கே பரவியது கி.பி. 500க்குப் பிறகே. அதற்கு முன் எழுந்த அலையை புத்தர், மாவீரர் காலத்திற்கு சற்று பின்னாலென நான் கருதுகிறேன்.

இந்த அலையின் உயர்ச்சியாய், அதனூடே செயினரும் [குறிப்பாக பத்ரபாகு (இற்றைக் கர்நாடகச் சமண வெள்ளைக்குளத்து -ஸ்ரவண பெள குளா - கோமடேசுரர் சிலையை நினைவுக்குக் கொணர்க), உடன் அரசு துறந்துவந்த சந்திரகுத்த மோரியன், அவன் மகன் பிந்துசாரன் நம் தகடூர் வரை எடுத்து வந்த மோரியர் படையெடுப்பு], புத்தரும் (பிந்துசாரனின் மகன் அசோகன் புத்த மதத் துறவிகளைத் தெற்கிற்கும் ஈழத்திற்குமாய் அனுப்பியது - அதில் அவன் மகனொருவன் கூட இருந்திருக்கலாம்), அதையொட்டி முன்னும் பின்னும் வந்த பெருமானர் எனப் படித்தானத்திலிருந்து தகடூருக்கும், காஞ்சிக்கும் இன்னும் மற்ற தமிழக ஊர்களுக்கும் வந்துசேர்ந்த பயணங்கள் மிகப் பல.

வந்தாரில் பலரும் தமிழ்க் குமுகாயத்தில் இனிதாய் ஏற்கப்பட்டார்; பெருமானருக்குத் தலைநகர்களில் சேரிகளும், மற்ற இடங்களில் ஊர்களும் (பெரும தாயங்கள்; தந்தது தாயம்; பெருமருக்குத் தந்தது பெரும தாயம். பெரும தாயம், ப்ரம்ம தேயமெனத் திரிவு கொள்ளும்) தரப்பட்டன. அவ்வூர்களின் பெயரே அவரவர் பிரிவுக்குப் பெயராயின. காட்டாக இற்றை மரபுப் பெருமானரில் (smartha brahmins) பெருகணப் (ப்ருகச்சணம்) பிரிவினர் கண்டரமாணிக்கம், மலை நாடு, நிலகனூர், மாங்குடி, பலமன் நேரி, மூச நாடு, குளத்தூர், மருதஞ்சேரி, சத்திய மங்கலம், பூரூர் என்ற ஊர்களில் குடியேறினார்; எண்ணாயிரவர் (அஷ்டசஹஷ்ரம்) அத்தியூர், அறிவர்பாடி, நந்திவாடி, அறுகுளம் - shatkulam என்றவற்றில் குடியேறினார். (இன்னும் முகன்மையான வடமர் பெருமளவில் வந்தது குத்தர், பல்லவர் காலத்தில் தான்.)

இதேபோல நம்பூதிகள் கோகர்ணம் (இன்றைய கோவா) வழியாக துளு நாட்டில் நுழைந்து 32 ஊர்களிலும், சேரலத்தில் 32 ஊர்களிலும் குடியேறினார். இவருள் ஏற்பட்ட பிரிவுகளை ஆடு, ஏடு, பிக்சை, பிச்சை, ஓது, சாந்தி, அடுக்களை, அரங்கு, பந்தி, கடவு என்று பத்தாகச் சொல்வார். நம்பூதிகளைப் போலவே பழக்கம் கொண்ட தீக்சிதர் தில்லையிலும், சோழியர் திருக் கடையூர், மடலூர், விசலூர், புதலூர், செங்கணூர், திருமறைக்காடு, ஆவுடையார் கோயில் என்ற ஊர்களிலும் குடியேறினார்.

இன்னும் பல தமிழ்ப் பெருமானப் பிரிவினர் (பொன்முடியார் - hiranya kesis, முக்காணி, கணியாளர், சங்கேதி, குருக்கள், வாத்திமார் எனப் பலர்) உண்டு. இவரெலாம் எப்போது வந்தார், எப்படி இங்கு உருவானார் என்ற மாந்தவியல் விவரங்களை யாரும் சேர்த்து ஆய்ந்து வைக்கக் காணோம். மொத்தத்தில் நல்ல, தொடர்புள்ள வரலாற்றுச் செய்திகள் தொகுக்கப் படாமல், அவரவரிடம் உள்ள மூதிகப் பழக்கங்களால், தொலைந்து போய்க் கொண்டுள்ளன. தமிழர் வரலாறு இவற்றாலும் குறைந்துபோகிறது.

(எப்படி மாலத்தீவில் ஊர்மக்களின் தமிழ்த் தோற்றத்தையும், மற்ற செய்திகளையும் சேகரித்து வைக்காமல், தொல்லியல் கண்டுபிடிப்புக்களைத் தொலைக்க வைத்து, அரபு நுழைவுக்கு முன் தமக்கு வரலாறே இல்லாதது போல் ஆக்குகிறாரோ, அதேபோல் இதைச் சொல்லலாம். மலேசியாவிலும் கூடக் கடாரம், ஜோகூர் மாநிலங்களில் உள்ள கி.பி. 800 முந்திய சின்னங்களை, மலாக்கா சுல்தான் பரமேசுரவர்வன் இசுலாத்திற்கு மாறியதற்கு முன்னிருந்தால் அவற்றைக் கட்டக முறையில் (sytematic) ஒழித்துக் கட்ட மலாயர் முயல்கிறாரோ அதுபோல் இதைச் சொல்லலாம். பெருமானரே கூட "அல்லிருமை - அத்வைதம்” என்ற மெய்யியலைப் பெரிதாகக் கருதி, இந்த வரலாற்றுத் தொலைப்பைப் பற்றிக்  கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆதிசங்கரர் பற்றியும், அவருக்கு முந்தைய வேதம், அரணகம் - ஆரண்யகம், பெருமானம் - ப்ராமண்யம், கீழ்நிற்றம் - உபநிடதம் என்ற கருத்துமுதல் வாதத்தைப் பெருமிதமாகப் பேசுவதே போதுமென அவருக்கு ஆனதுபோலும். மாந்தவியல், குமுகவியல், வரலாறு இன்னபிறவும் பெரும்பாலோருக்குத் பொருட்டாவதில்லை. தம் திராவிடப் பின்புலம் பேசப் பலரும் நாணுகிறார்.)

நம்பூதிகள் மட்டுமே இதில் ஓரளவு விதிவிலக்கு. அவர் வரலாற்றை மாந்தவியல் முறையில் தேடித்தேடி, கூடிய மட்டும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி இணையத்தில் பதிவு செய்துள்ளார். வடமொழிப் பாதிப்பை அவர் உயர்த்தினாலும், தமிழ் வடமொழிக் கலப்பை வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ள அவர் வெட்கப்படுவதில்லை. சங்க இலக்கியத்திலே அவர் சேரலத்தில் தங்கிய முதலூர் (செல்லூர்) சிறப்பாகப் பதியப் பட்டுள்ளது (அகநானூறு 216). (நம்பூதிகள் அதர்வ வேதம் பின்பற்றினார். அதன் காரணத்தாலேயே தக்கணபதத்திற்கு வெகுகாலம் முன்பே, கி.மு. 500க்கு முன்பே, அவர் வந்திருக்கலாமெனச் சில ஆய்வாளர் எண்ணுவார்.) இவர் போலவே உள்ள தீக்சிதர், சோழியர் ஆகியோரும் இங்கிருந்தார். முன்குடுமிப் பார்ப்பனரின் தமிழக இருப்பு நெடுங்காலத்திற்கு முன்னது என்றே பேரா. ந, சுப்பிரமணியம் சொல்வார். விருப்பு, வெறுப்பின்றி தமிழ்ப் பார்ப்பனர் வரலாற்றைப் பார்ப்பது தேவையான ஒன்று.

முடிந்தால், தில்லைத் தொடரையும் குறிப்பாய்த் தில்லை - 5  என்ற இடுகையையும் படியுங்கள் (https://valavu.blogspot.com/2006/08/5.html)

அன்புடன்,

இராம.கி.


Tuesday, February 02, 2021

அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 3


முருகனெனுங் தமிழ்க்கடவுள், ”சுப் பிரமண்யனாகவே” இன்று சொல்லப் படுவதை வரலாற்றுக் குளறுபடி எனலாம் ”சிவ பெருமான்” என்ற தமிழ்க் கூட்டுச்சொல்லே வட பலுக்கில் "ஷிவ் ப்ரம்மண்"  என்றாகும்; அப்பனுக்கும் மகனுக்குமாய் இக்கருத்தீடு பிரியும்; முடிவில் "சிவ்" எனும் முன்னொட்டுச் சொல் சு எனும் ஓரெழுத்து ஒருமொழியாய்ச் சுருங்கும். ப்ரம்மண் நீண்டு ப்ரம்மண்யன் ஆவான். முடிவில் நம்சொல்லை நாமே அடையாளம் காண முடியாது தடுமாறுவோம். சு எனத் தொடங்கும் இருபிறப்பிச் சொற்கள் பலவும் சிவ/ red எனும் முன்னொட்டில் கிளைத்தவையே. மஞ்சள்/குங்குமம் அணிந்த சிவ மங்கலி பேச்சு வழக்கில் சு மங்கலி ஆவாள். தாலிக்கு மாறாய் மஞ்சள் அணிவது தென்னாட்டுப் பழக்கமே. அவ்வளவு ஏன்? தாலியணிவதும் தென்னாட்டுப் பழக்கமே.

முருகன் கோயில்கள் பார்ப்பன மயமான பிறகு, அங்கு அணங்காடல் நின்றுபோனது (இக்காலத் தென்பாண்டி நாட்டுச் சாமியாடலும் அக்கால அணங்காடல், வேலனாடலும் அடிப்படையில் ஒன்றானவையே.) ஊருலாவும் (உற்சவமும்), எழுந்தருளப் பண்ணலும் தேரிழுப்பும், தெப்பமும் மட்டுமே இக்காலத்தில் மிஞ்சியுள்ளன. ஊருலாத் திருமேனி புறப்பாடு ஆகுமுன், சூலம்/ வேல்/ அரிவாளைக் கையிலேந்தி சாமி ”திருநிலை” (சந்நதம்) கொள்ளும் தென்பாண்டிச் சாமியாடிகள் கோயில் முற்றத்தில் இன்று ஆடியருளார். ஆனால் ஒரு காலத்தில் இது நடந்திருக்குமெனச் சங்க இலக்கியங்களின் வழி ஊகிக்கிறோம். (வேலேந்தியவன் வேலன் என்பதுபோல், பூசாரியும் வேலன் என்றே ஒரு காலத்தில் சொல்லப்பட்டான்.) காளி, ஐயன், கருப்பன், மாடன் போன்ற இனக்குழுக் கோயில் விழாக்களில் இன்றும் கூடச் சாமியாடல்கள் இயல்வழக்காய் நாட்டுப்புறங்களில் தொடர்கின்றன.

வரலாற்றுத் தொடக்கம் ஏதென்றுணராது, அன்புவழி, பதி-பசு-பாசம், தானம் (=த்யானம்), ஓகம்(யோகம்), தவம், சித்தாந்தமெனச் சிவநெறியார் இன்று மெய்யியல் பேசலாம். அடிப்படையில் சிவநெறிக் கொள்கை, நாட்கழித்துப் பிறந்ததே. மாணிக்கவாசகர் கி.பி.3/4ஆம் நூற்றாண்டினரென நம்புபவன் நான். அவருக்கு அப்புறமே சிவநெறி மெய்யியல் கிளர்ந்திருக்க வேண்டும். ( 9 ஆம் நூற்றாண்டு மணிவாசகர் என்ற கூற்றே சிவநெறியாரை பெரும் நட்டாற்றில் தவிக்கவிடுகிறது. ஆய்விலார் இன்னும் தடுமாறுகிறார்.) 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமூலர் திருமந்திரமே இன்று கிடைத்தவற்றுள் சிவநெறி மெய்யியலின் விவரமான முதல் விளக்கமாகும். அதே நேரம், தமிழரின் சிவ வழிபாடு என்பது வரலாற்றிற்கு வெகுகாலம் முன்பாகவே. இனக்குழு நிலையில் உருவானது. (சிகப்பு-கருப்புப் பண்பாட்டுத் தொடர்பு, முப்பட்டைச் சாம்பற் பூச்சு போன்றவை நம்மில் மட்டுமின்றி, நம் ஆதிகாலப் பங்காளிகளான ஆத்திரேலியப் பழங்குடிகளிடமும் உள்ளன. அது வெறும் தற்செயலல்ல, நமக்கும் அவருக்கும் உள்ள இனக்குழு உறவை ஆய்வு செய்தோர் மீக்குறைவு.)

இடுகாட்டிற் பேய்களோடு தந்தை ஏழுவிதம் தாண்டவமாட, அழகுமகனோ இன்னோர் இனக்குழுத் தலைவன் சூரனைச் சங்காரம் பண்ணிய தெய்வமாகி நம்மை இன்றும் ஈர்க்கிறான். தந்தைக்கு இலிங்கமென நடுகல்லையும், மகனுக்குக் கந்தெனக் கற்றூணையும் அடையாளங் காட்டுகிறோம். (நம் இனக்குழுத் தோற்றத்தை உணர்த்த, .இலிங்கம் ஒன்று போதும்,) காலத் தொலைவால் சேயோன் ஓர் இனக்குழு மூதாதை. [மேலையரின் ஆதன் (Adam) எனும் ஆதிநாதனும் அருகரின் ஆதிநாதனும் அவன் உருவகமே.] மூதாதைக்கு அடையாளமாய் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு காவல் மரத்தைக் கோயில் மரமாக்குகிறோம். அம்மரத்தில் நம் விழைவை ஓலையிலோ, வேறொன்றின் மூலமோ எழுதிக்கட்டி இறையிடம் தெரியப்படுத்தி இடையீட்டை எதிர் பார்க்கிறோம். வடக்கே இப்பழக்கம் அரிதாகவேயுள்ளது. இதுவும் தமிழர் இனக்குழுப் பழக்கத்தின் அடையாளமே.

பல சிவன் கோயில்களும், அம்மன் கோயில்களும் இன்று பள்ளிப்படைக் கோயில்களாய் உள்ளன. [ஓரிடத்தைப் பள்ளிப் (தோண்டிப்) படுக்கவைத்தது பள்ளிப்படை.] யாரோவொரு ஆண் பெரியார் கல்லறைமேல் இலிங்கம் பதிப்பதையும், பெண் பெரியார் கல்லறைமேல் அம்மனின் முழு/அரை மூலத் திருமேனி இருப்பதையும் பல கோயில்களில் காணலாம். நடுகல்லைக் காவல்காக்க கோரமுக நுழைக்காவலர் (த்வாரபாலகர்) நிற்பதும் இனக்குழு அடையாளங் காட்டும். (நடுத்தரைக் கடலையொட்டிய நாகரிகங்களின் எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, அக்கேடிய, அசீரியக் கல்லறைக் கோயில்களுக்கும், நம் கோயில்களுக்கும் இடையே கூர்ந்துபார்த்தால் வியத்தகும் ஒப்பீடுகளுண்டு.)

அதுமட்டுமல்ல; நடுகல்முன் படைப்பது போலவே, கோயிற் கொடிமரத்திற்கு அருகில் அன்றாடப் பூசையில் பலிபீடத்திற் சோற்றுருண்டை படைக்கிறார். பல்வேறு திருமேனிகளுக்கு சோற்றுக் கட்டிகளை நிவத்திக் (= உயர்த்திக்) காட்டுகிறார். (நிவத்தம் எனும் தமிழ்ச்சொல் சங்கத நிவேத்யமாகி மாயங் காட்டும்.) ஆனாற் அரத்தமும், நிணமும் விரவிய, ஏற்கனவே பொல்லிய விலங்கை (பொல்லுதல்>  பொள்ளுதல்= குத்துதல்; பொலி>பலி) பலிபீடத்திற் படைத்த காலம் ஒரு சமயம் இருந்திருக்கும். (பின்னாற் காட்டு விலங்காண்டி மரபுகளைக் கண்டு வெட்கி அவற்றைத் திரையிட்டு மறைக்குமாப் போல் இப்போது அருகதப் பழக்கம் நமக்குள் நுழைந்தது போலும். பெரும்பாலான இனக்குழுக் கோயில்களில் இன்றும் கிடாவோ, கோழியோ, பன்றியோ என ஒரு விலங்கே வெட்டிப் பலியிடப்படுகிறது.)

மூதாதைக்குச் செய்வது போலவே மாந்தப் பழக்கவழக்கங்கள் இன்றும்  சிவன், பெருமாள் கோயில்களிற் செய்யப்படுகின்றன. (கோஇல் என்பது மூதாதை இறைவீட்டை உணர்த்துகிறது.) தென் பாண்டிநாட்டில் முன்னோரை வழிபடும் வகையிற் ’படைப்பெ’ன்று வீட்டுவிழாக்களின் முன் செய்வர். அதிற் கூடியாக்கி உண்ணும் சடங்குகள் இனக்குழுக் கோயிலிற் பழகுவது போலவே இருக்கும். சங்க இலக்கியத்திற் பெருஞ்சோறென வருவதும் இதுபோன்ற பழக்கமே. பெருஞ்சோற்றைச் சங்கதமாக்கிப் பெருஞ்சாதம்> பெருசாதம்> ப்ரசாதம் என்பார். (சோறு போல் சாதமும் தமிழ்தான். அதைச் சங்கதம் என்று மயங்குவது அறியாமை) நாமும் அதன் உள்ளார்ந்த தமிழ்மை புரியாது சங்கதக் கூட்டுச் சொல்லென வியந்து கொள்வோம்.

இன்றைக்கும் முருகன் விழாவையொட்டி (பாண்டியர்) சாம்பலையும், (சோழியர்) குங்குமத்தையும், (சேரர்) சாரலையும் (சந்தனம்) உடலெங்கும் தனித்தோ, சேர்த்தோ பூசி, கார்த்திகை, பூசம், உத்திரம், விசாகம் எனப் பல்வேறு நாட்காட்டுகளில் அறுபடை வீடுகளுக்குக் கால்கடுக்க நடந்துசென்று, கோயிலிற் பழகும் காவடிகள், பாற்குடங்கள், வெறியாட்டு, தேரிழுப்பு, செடிலாட்டு [நோற்போர் தோலிற் கொக்கிகளைச் செருகியிழுக்கும் வதம். ரகரம் இடைநுழைக்கும் வடமொழி யுத்தியில் வதம் வ்ரதமென்றாகும்], பூக்குழி (நெருப்பின்மேல் நடத்தல்) என்ற தன்வருத்துப் பழக்கங்கள் பழந்தமிழர் இனக்குழு வாழ்வின் மிச்ச சொச்சங்களாய் இருக்கின்றன. இத்தனையாயிரம் ஆண்டுகள் கழித்தும் இனக்குழு மரபுகளும் தொடர்ச்சிகளும் தமிழர், மலையாளி வாழ்விற் திரண்டு செழித்து விளங்குகின்றன. நாம் தாம் நம்மீது போர்த்திய சங்கதக் கட்டில் எதையும் உணராதுள்ளோம்.  

{ஓர் இடைவிலகல். பாண்டியர், சோழர், சேரர் என்பவை இனக்குழுப் பெயர்களே என்று ஏற்கனவே என் “சிலம்பின் காலம்” நூலிற் சொல்லி யிருக்கிறேன். பாண்டு = சாம்பல் > பாண்டியர் (சாம்பல் பூசியவர். நெற்றியில் இடும் திருநீறு இச்சாம்பல் தான்), கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியவர். [மஞ்சட்தூள் காடிச்செறிவிற் (acidic pH) பொன்னிறங் காட்டி, சுண்ணநீர் மீச்சிறிது கலந்த களரிச்செறிவில் (alkaline pH) குங்குமநிறங் காட்டும்], சாரல் = சந்தனம்; சாரலர்>சேரலர்>சேரர் (சந்தனம் பூசியவர்). தாங்கள் பூசிய அடையாளங்களாலே தான் இந்த 3 இனக்குழுக்களும் அறியப்பட்டனர்.

 இற்றைத் தமிழரும், மலையாளிகளும் மேற்சொன்ன மூன்றையும் தனியாக அணியாது கலந்தே பூசுகிறார். அதாவது, இனக்குழு அடையாளங்கள் இவரிடை முற்றிலும் விரவிப் போயின. இந்த அடையாளங்களுக்கும் சநாதன மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. (ஆனாற் பலரும் இருப்பதாய் எண்ணுகிறார்.) இவற்றை வடநாட்டில் யாரும் தனிவாழ்வில் விரும்பி இந்த அடையாளங்களை அணிவதில்லை. (துறவியர் மட்டும் அங்கு விதி விலக்கு ஆவார்.) பொதுமக்களிற் சிலர் அப்படி அணிந்தாலும் அது தென்னாட்டின் தாக்கமாகவேயுள்ளது. சரியாகச் சொன்னால் தமிழர் இனக்குழுப் பழக்கங்கள் இந்தியப் பழஞ்சமயங்களுள் ஊடுறுவிக் கிடக்கின்றன என்பதே உண்மை.}

மதுரைத் திருமலை நாயக்கருடைய அமைச்சர் இராமப்ப ஐயரின் அரசாணையின் பின், பழனிக் கோயிலிற் பண்டாரப் பூசை நின்றே போயிற்று. (போகர் படிமம் மட்டும் இருக்கிறது. காஞ்சிச் சங்கராச்சாரியர் செயேந்திரர் அதனுட் புகுந்து உலோகத்திருமேனி உருவாக்கச் சொல்லி அதற்கே பூசைகளைச் செய்யப் பணித்து, விரும்பா விளைகள் ஏற்பட, ‘நவபாஷாணத்’ திருமேனிக்கே அடியார் மீளப் போய்விட்டார்.) மற்ற 5 படைவீடுகளிலும் பழனிக்கு முன்பே பண்டாரப் பூசை நின்று, பார்ப்பனப் பூசையே தொடர்கிறது. பல அம்மன் கோயில்களிலும் பார்ப்பனரல்லாக் குருக்கள் மாறிப் பார்ப்பனக் குருக்கள் நடைமுறைக்கு வந்து விட்டார். (சென்னைக்கருகில் பள்ளிப் படையான பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் 25 ஆண்டுகள் முன் பார்ப்பனப் பூசை கிடையாது. இப்பொழுதோ அது நடைபெறுகிறது. எல்லாங் காலத்தின் கோலம்.)

அறிவர், குயவர், வள்ளுவர், பண்டாரமெனப் பல்வேறு வகையார் பார்ப்பன மயமாகாக் கோயில்களின் வழிவழிச் சமயக்குருக்களாவர். எங்கள்பக்கத்தில் வாழ்வின் பெரும்பாலான நல்லவை, கெட்டவைகளுக்கு இக்குருக்களையே நாடுவர். பார்ப்பனவழிப் புரிசைகளுக்கு மட்டுமே பார்ப்பனக் குருக்களை அழைப்பர். சிவகங்கைப் பக்கம் பார்ப்பனரல்லாக் குருக்களை வேளகாரர் என்பர். வேள்வைக் -வேட்பைக்- இடைநின்று கடவுளுக்குச் சொல்வார் வேள காரராவர். வேள்வென்பது தமிழ்ப்பழக்கம். நீரையும், பூவையும் அட்டுவதும், பாக்கள்பாடுவதும் இதில் முகனை. வேள்வி வடக்கிருந்து வந்த பழக்கம். அழனியில் ஆகுதியிடுவதும், சங்கதத்தில் மந்திரம் ஓதுவதும் இதில் முகனை. சிவன் கோயிலில் வேளகாரர் பூசைசெய்தது பல்லவர் காலத்தின் முன் நின்றுபோனது போலும். வரலாற்றில் எப்பொழுது இது நடந்தது, பார்ப்பனக் குருக்கள் சேயோன், மாயோன் கோயிலுள் எப்போது நுழைந்தாரென அலசவேண்டும்.

வேளும்சடங்கு செய்வது வேள்வி. வேள்விசெய்தவர் வேள்தர் (>வேதர்); வேளும் போது (= வேண்டும் போது) கூறிய பரவு (pray) வாசகங்கள் வேள்தம் (>வேதம்., வித் எனும் கருத்துமுதல் வேரில் ”வேதம்” பிறந்ததாகக் கருத்துமுதல் உரையாளர் சொல்லப் புகுவார்; அது பொருந்தப் புகல்வதென நான் சொல்வேன். வேள்தல் (= வேண்டல்) - ஐயே நான் அடிப்படையாகக்குவேன். ஏனெனில், இன்றும் கடவுளை, தெய்வங்களை, வேண்டத்தான் செய்கிறோம். வேண்டல் என்பது வேதநெறியா, சிவநெறியா, விண்ணெறியா எனப் பாராத பொதுச் சொல். வேள்விகளுக்குச் சற்றும் தொடர்பிலா வகையில், இறைவனுக்கு இடையாளனாய் சங்க இலக்கியங்களில் கூறப்படும் வெறியாட்டு வேலனும் (நாட்டுப் புறங்களில் சாமியாடி என்பார்), இன்று வரை வேளன்>வேளான் எனப்படுகிறான்.  

சங்க இலக்கியத்தில் வேள்வி செய்யாது வேறு தொழிலில் ஆட்படும் பார்ப்பாரை வேளாப் பார்ப்பாரென்பார். இச்செய்திகளை ஒருங்கே எண்ணின், வேளுதல்  வினையின் ஆழம் புரியும்.] "வேள்வியின் மூலம் வேளுதல்" என்பது ஒருவகை நெறி. வேள்வி அல்லாது இறைவனை வேண்ட முடிவது இன்னொரு வகை நெறி. முன்னால் சொன்னபடி, மேல்தட்டு வருக்கத்திற்கு மட்டுமே வேள்வி பயன்பட்டது. வேள்வியில் "எஜமானன் - யாகம் ஏற்படுத்துபவன்" என்ற ஒன்று எப்பொழுதுமுண்டு. பொதுமக்கள் பரவுவதாய்ச் சொல்லி யாகத்தைச் செய்ய முடியாது. {yaagam is a structured way of praying; it has series of rites.]

முருகன் கோயிலில் அணங்கு பற்றிப் புறம் 299 பேசுவதால், பார்ப்பனரல்லா நடைமுறைகள் பார்ப்பன மயமான சேயோன் கோயில்களில் ஊடுறுவி நிற்பதைப் பேசும் தேவை யெழுந்தது. அணங்கு பற்றிய தவறான புரிதல் பல மேனாட்டு ஆய்வாளருக்கு உள்ளது. தமிழரிற் சிலரும் நம் மரபுகளைக் கணக்கிற் கொள்ளாது மேலையர் ’கண்டுபிடிப்புக்களைச்’  சிக்கெனப் பிடித்து ’எங்கெழுந்து அருளுவதினியே’ என்று தொங்குகிறார். அணங்கோடு முருகனைச் சேர்த்துப் பொருள் காண வேண்டுமெனில் ”சேயோன், மாயோன் கோயில்கள் தெற்கில் இனக்குழுக் கோயில்களாகத் தோற்றங் கொண்டன, அதன் மிச்ச சொச்சங்கள் இன்னுமிருக்கின்றன” என்பதையும். வடக்கிலும் தெற்கிலும் உள்ள சமய வேறுபாடுகளை வரலாற்று நெறிப் படியும் உணரவேண்டும்.

அன்புடன்,

இராம.கி.


அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 2

தென்னாட்டின் ஐந்திணைத் தெய்வங்களான சேயோன்/சிவன்/முருகன், மாயோன், வேந்தன், வாரணன், கொற்றவைக்கு இணையாகப் பின்னாளில், உருத்திரன்/சுப்ரமண்யன், விண்ணு/ விஷ்ணு, வேந்தன்/இந்திரன், வாரணன்/வருணன் என வடமேற்குத் தொன்மங்களைப் பொருத்தினும், அவை விளிம்புநிலைப் பொருத்துகளாய் நின்றுபோயின.  சிவனையும் முருகனையும் முந்நாளில் ஒன்றுபோல் குறித்த சேயோனுக்கு, குறிப்பாய் அரன் என்ற சொல்லிற்கு, இனிச் சொற்பிறப்பியல் காண்போம்.  அதன் மூலம் அரோகரா முழக்கத்தின் பொருள் விளங்கும்.  அரன், உருத்தன், முருகன் என ஒவ்வொரு சொல்லாய்ப் பார்ப்போம். 

உல்>உல. உலத்தல்= காய்தல். உல்>உலர். உல்>உர்>உரு; உருத்தல்= எரிதல், அழலுதல். உல்> அல்> அள்> அழல் என்பது நெருப்பைக் குறிக்கும். அல்> அல> அலத்தம்= செம்பருத்தி. அலத்தகம்= செம்பஞ்சுக் குழம்பு. அல்> அர்> அரம்= நெருப்பின் சிவப்பு நிறம் அலரி, அரளி போன்றன செம்மலர்  குறிக்கும். நெருப்புக் கருத்தினின்று சிவப்புக் கருத்துத் தோன்றும். உல்> உலம்> அலம்> அரம்>அரன்= அழல்நிறச் சிவன். உல்>உள்>ஒள்>ஒளி= நெருப்பில் தெரியும் வெளிச்சம். இலிங்கம் என்பது ஒருபார்வையில் ஒளி. இன்னொரு பார்வையில் நடுகல்.  அர்>அர>அரகு>அரக்கு= பொன்கலந்த சிவப்பு.. “அரக்குண் பஞ்சிகள் திரட்டி: சீவக 1564. 

அரகு அரன்= அரகரன்= வழிபாட்டில் சிவனை விளிக்கும் பெயர். ”செக்கச் சிவந்த” எனும் இரட்டைக் கிளவி அரகரவாகும். இன்றும் சிவன்கோயில்களில் ”சிவசிவ” என எழுதிவைப்பார். அரோகராவின் ஓகாரம் விளிப்பு கருதி வந்தது. அரோகரா= அரோகு+ அரா = செக்கச் சிவந்தவனே! - எனும் விளிப்பு. அரகரோகரா= அரகு+அரோகு + அரா= செக்கச் செக்கச் சிவந்தவனே! அரோகரோகர= அரோகு+ அரோகு + அரா= செக்கச் செக்கச் சிவந்தவனே!. சிவன் மலையாய் இன்றும் சொல்லப்படும் அருண (= சிவந்த) மலையை, அண்ணாமலை என்றும் சொல்வார். அருணன்= அழல் நிறத்தான்.  ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை உணர்த்தும் சிவலிங்கம் அண்ணாமலையிலுள்ளது. “அண்ணாமலைக்கு அரோகரா!” என்பது சிவநெறியார் முழக்கம். செக்கச்சிவந்ததைப் போர்முழக்கில் தானே பொதுவாய்க் குறிப்போம்? நான் சொல்லுவது புரிகிறதா? (திகிலாகும் பழங்குடி நிலையிலிருந்து நாம் வெகுதொலைவு வந்துவிட்டோம்.) 

அர-விலிருந்து அரங்குதல்> அரக்குதல், அழித்தல் கருத்திலெழும். பின், அரன்= அழிப்பவன் என்ற கருத்து சங்கதத்தில் பரவியது. (மும்மூர்த்திகளில் அவர்கள் சிவனை அழிக்கும் கடவுள் என்றே கொள்வார்.) சிவப்புக் கருத்து ஏனோ அங்கு பரவவில்லை. அரகர என்பதைப் பலுக்கையில், உயிர்களுக்கு இடைப்பட்ட (intervocalic) ககரம், ஹ என மெலிந்தொலிக்கும். இவ்வொலிப்பால் உந்தப்பட்டு, முதல் அகர ஒலியோடும் ஹகரம் பிணைத்து, ”ஹர ஹர” என்று சங்கதம் பலுக்கும். ஒரு கருத்து எம்மொழியில் எழுந்ததோ, அதன் தொடர்புப் பலுக்கலே வழிமொழியிலும் பரவும். அரன்= சிவன், அழிப்பவன் என்ற கருத்து தமிழில் உருவானது, (ஆனால் அதைச் சிவப்போடு சேர்ந்துப் புரிந்துகொள்ள வேண்டும்.)  அழிக்கும் கருத்தைச் சங்கதம் வழிமொழிந்து பரப்பியது. யார் தாத்தன், யார் பேரன் என்ற ஆய்வின்றி, சிலர் பேரனைத் தாத்தனாக்குவது அறியாமையால் என்று கொள்க, . 

இனி உருத்திரனைப் பார்ப்போம். உலம்>உரம்>உருத்தம் என்பது சிவத்தையும், சிவனுக்கு உகந்ததாய்க் கருதப்படும் (அக்க மணி எனும்) சிவந்த கொட்டையையுங் குறிக்கும். சிவநெறி, புத்தநெறியில் அக்கமணிக்குச் சிறப்புண்டு. "ஓம் நமசிவாய", "ஓம் மணிபத்மே ஹூம்" எனும் மந்திரங்களை 108 முறை விடாதுசொல்லும் எண்ணிக்கைக்காக சமய நெறியார் அக்கமணி மாலை பயன்படுத்துவர். கடவுள்மணி, கண்டம்/ கண்டி/ கண்டிகை, கள்/முள் மணி, உலங்காரை போன்றன அக்கமணியின் மறுபெயர்கள். தமிழ் உருத்தத்தைச் சங்கதம் கடன்வாங்கி உருத்திர அக்கம்> ருத்ராக்கம்> ருத்ராக்ஷம் = செங்கொட்டை என்றாக்கும். ஒரு குறிப்பிட்ட பழத்தின் செந்நிறக் கொட்டை அக்கமணியாகும். பழத்தோல், கருநீலமாய் இருக்கும். (சிவன் தொண்டை நீலமாவது புரிகிறதா?) கருநீலப் பழக் கொட்டை (blueberry beads) என்றும் ஆங்கிலத்தில் சொல்வார். கருநீலங் குறிக்கும் மணிப்பெயர் தமிழில் மட்டுமே உண்டு. தோல் தவிர்த்து கொட்டையை முதலிலறிந்த வடமேற்கு ஆரியர் அதை ருத்ர அக்ஷம் என்றே சொல்வார்.  

இப்பழக் கொட்டைகளில் முள்நிறைந்த 5 முகங்களுண்டு. சிலவிதக் கொட்டைகளுக்கு 5 இற் குறைந்தும், சிலவற்றிற்கு 5 ற்கு மேல் 21 வரைக்கும் முகங்களுண்டு. காய்ந்த கொட்டைகளின் ஊடே துளையிட்டு மாலை யாக்குவர். தானஞ் (>த்யானம்) செய்கையில், எண்ணிக்கைக்காக, அக்க மாலையை சிவ, புத்த சமய நெறியார் உதவிக்குக் கொள்வார். தானத்திற்கு அக்கமணி ஓர் தளவாடம் (tool). இவ் விதப்பான கொட்டைதரும் மரத்தை Elaeocarpus ganitrus roxb என்பர். 60-80 அடி கூட இம்மரம் வளரும். இமயமலை அடிவாரத்திலிருந்து கங்கைச் சம வெளியிலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலும், நேபாளம், தென்கிழக்காசியாவிலும், பாப்புவா நியுகினி, ஆத்திரேலியாவிலும், குவாம், ஹவாய், சீனம், தைவான், போன்றவிடங்களிலும் இது வளர்கிறது. இந்தொனீசியா, மலேசியா, ஈழத்திலும் (கண்டி, நுவெரெலியா) கூட இதுவுண்டு. 

உல்>ஒல்>அல் என்பது கூர்மையைக்குறிக்கும் வேர்ச்சொல். அல்லுதல்= கூர்த்தல். குற்றல். முடிதல். காலங்காட்டும் இடைநிலைகள் சேர்த்து 3 தொழிற் பெயர்களை இதன்வழி அடையாளங் காட்டலாம். அல்ந்தல்>அன்றல்*>அந்தல்= முடிதல்; அல்கல்= கூர்தல், குற்றல், குறைதல், அல்கல்>அஃகல்>அக்கல் என்றுமாகும். அல்வல்= கூர்வுதல், குற்றல், குறைதல். அல்வல்> அவ்வல்> அவல் என்றுமாகும். அஃகம்>அக்கம் என்பது இக்கொட்டைக்கு இன்னொரு பெயர். உருத்திரரை, உருத்திரக் கொட்டை அணிந்தோரென்றே பொருள் கொள்ளலாம். உருத்திரம்= அரத்தம், சிவம். மறைக்காட்டைச் சார்ந்த 401 ஆம் சம்பந்தர் தேவாரம் பார்த்தால், ”கோனென்று பல கோடி உருத்திரர் போற்றும் தேனம் பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா” என்ற அடிமூலம் ”அரசனென்று பலகோடிச் சிவநெறியார் போற்றும் தேனம்பொழில் சூழ் மறைக்காட்டுறைச் செல்வா” என்பதைக் காணலாம். 

இனி முருகனின் சொற்பொருளுக்கு வருவோம். முருகனை, இளைஞன், குமரன், வெறியாடும் வேலன், பாலைத் தலைவன் என்றே பலரும் பொருள் சொல்வர். முருகிற்கு இளமை, அழகு, முருகன், தெய்வம், வேலன் வெறியாட்டு, மணம், திருவிழா, படையல் விருந்து என்று பொருள்சொல்வர். ஆய்ந்து பார்த்தால் அவை நேரடிப் பொருள்களில்லை, வழிநிலைப் பொருள்களாகவே அமைகின்றன, முருகன் பெயருக்குச் சிவப்பை ஒட்டிய விதப்பான பொருள் உண்டு. முன்வரல், குத்தல், முட்டல், வலித்தல், சுடுதல், எரிதல், சினத்தல், சிவத்தல் என்ற வரிசையில் வெவ்வேறு சொற்கள் முல்லிலிருந்து வளர்ந்து முடிவில் ”முருகன்” ஆகும். முல் = முன்வருவது. எரியும் நெருப்பு தன் சுவாலைகளால் முன்வந்துகொண்டே இருக்கும். வெவ்வேறு முல் வழிச் சொற்களும் உண்டு. முல்லுவது முள்ளாய்த் திரியும். முள் = கூர்ங்குச்சி. முள்ளுவது குத்தும். எரிச்சல் தரும். முன்வர வர, நெருப்பு சுடும். முள் முள்ளுகையில் சுரீரென்று சூடு போல் வலிக்கும். 

முல்> முள்> முளை> முளைத்தல்  முளை= வித்திலெழும் வெளிப்பாடு. முள்ளுவது முழுசும்; முழுசுதல்= முட்டுதல் to rub, strike against. குச்சிகளை உரசியே/ முழுசியே முதலில் நெருப்புண்டாக்கினார். முல்> முள்> முழு> முழுவு> முழுசு (ஒப்பு நோக்கு பரவு>பரசு, விரவு>விரசு). முழுசுதல்= துளைத்தல், உட்புகுதல் “முழுசி வண்டாடிய தண்டுழாயின்” திவ்ய. பெரியதி. 2,8:7 . முழிதல்= உமிழல்.  முழைத்தல்= துளைத்தல், முழைதல்= நுழைதல். முழை/ முழைஞ்சு= துளை. முழாசுதல் = கொழுந்துவிட்டெரிதல்  முழாசு தீக்கொழுந்து; முல்> முளு> முளுதல்> முளிதல்= உலர்தல் ”முளிபுறங் கானங் குழைப்பக் கல்லென”, புறம் 160.2. முளிவெதிர்= உலர் மூங்கில்; முளிதலுக்கு வேதல் பொருளுண்டு. to burn, to be scorched. "ஆரெயி; ஓர் அழல் அம்பின் முளிய” பரிபா. 5:25. முளரி = தாமரை; ”முளரி மருங்கின் முதியோள்  சிறுவன்” புறம் 278.2. முளரி= காய்ச்சல். 

முளவு =east Indian coral tree. “முளவு முருக்கு முருங்க வொற்றி” பெருங்க/ உஞ்சை. நரும. 51:44. முளித்தல்= உலர்த்தல், காய்தல் முளிதலுக்குப் பொங்கல் பொருள் உண்டு, சோறு, முளிகிறது= பொங்குகிறது, முளிதலுக்குத் தோய்தல் பொருளும் உண்டு, to curdle ”முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” குறுந். 167. முள்> முளு> முடு*> முரு> முருள்= முள்நிறைந்த பரப்பு, முருள்> முரள்> முரளு> முரடு= பள்ளமும், மேடும் நிறைந்து குத்தும் பரப்பு. முரள்>முரண்>முரணுதல். முரடு = சினமுடன் நடந்துகொள்ளல். முரள்> முரண்> முரண்டு= மாறி நடந்து கொள்ளல். முரப்பு, முரம்பு போன்றவை பள்ளமும் மேடும் நிறைந்த பரப்புகள். முடு>முட்டு>மூட்டு = முன்கொணர்தல். தீயை மூட்டினார். தீ மூண்டது என்பன முள்ளுதல் வழி உருவான சொற்கள். சினம் உருவாவதையும் மூள்தல் வழி சொல்வோம்.  முள்> முடு> முரு> முருகுதல் = காய்ச்சுதலின் பக்குவம் மிஞ்சுதல், முதிர்தல், முருகைக் கல்= சிவப்புநிறப் பவளம்; 

முருங்குதல் = அழிதல், முறிதல், அடங்கியெரிதல். to simmer. ”முருங்கெரியிற் புக” கம்பரா. கார்முக. 29. முருங்கெரி = அழிக்கும் நெருப்பு.  முரு> முருங்குதல்> முருக்குதல்= அழித்தல், கொல்லுதல், முறித்தல், உருக்குதல், கரைத்தல். முருக்கு> முருக்கம் என்பது முள்முருக்கையும் (http://apps.worldagroforestry.org/treedb/AFTPDFS/Erythrina_indica.PDF), புன முருக்கெனும் புரசையும் (Butea frondosa. flame-of-the-forest, பலாசம் palash and bastard teak. https://en.wikipedia.org/wiki/Butea_monosperma) குறிக்கும். முள்முருக்கின்  பூ, முயல் இரத்தம் போல் சிவப்பாய்க் காட்டும். முள்ளுடைய இம்மரத்தின் பூ மணம் இல்லாதது, பழம் சற்று நாறும். ”இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என 650 ஆம் குறளில் வரும் தொடருக்குப் பரிதியார்,  ”கண்ணுக்கழகாக இருந்தும் மணம் இல்லா முருக்கம்பூவை” உவமித்துக் காட்டுவார்.  போருக்குத் தெய்வம் முருகன் தானே?

முருக்கம் பிசின் = gum of the tree Butea frondosa; முருக்கம் விரை = seed of Butea frondosa; முருக்கன் மரம்/முருகன் மரம் = Butea frondosa, Bengal Kino tree. முருக்கிதழ் = முருக்க மலர் போன்ற சிவந்த இதழ்; புரச மரம்  Butea frondosa ”முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை” பதிற்றுப் 23:20. “முருக்கு அரும்பு அன்ன  வள்ளுகிர் வயப் பிணவு” அகநா. 362.5.  முள்முருக்கு (Erythrina indica), coral tree of eastern ghats என்றும், புனமுருக்கு/புரசமரம் (palas tree) coral tree of the western ghats என்றும்  அழைக்கப்பெறும். முள்முருக்கு, புன்முருக்கு ஆகிய இரண்டுமே முருகனைக் குறிக்கும் மரங்களாகும்.முருகு மரங்கள் என்றும் இவை சொல்லப் படும். (இன்னும் தாவரவியல் அறிஞரிடையே கடம்பின்  அடையாளம் எது என்பது பற்றிய பொதுப்புரிதல் எழவில்லை.)

புனமுருக்கு என்பது சிவ கஞ்சனூர், தலைச்சங்காடு. திருத்தேவனார் தொகை, திருப்பார்த்தன் பள்ளி, திருப்பேர் நகர், திருவெள்ளைக்குளம், ஆகிய பாடல் பெற்ற 6 சிவன் கோயில்களில் தலமரமாய் உள்ளது. சென்னைப் புரசை வாக்கம் (மரத்தின் பெயரால் பெற்ற பெயர்) கங்காதீசர் கோயிலிலும் கூட இது தலமரமாகும். முருக நாயனார் எனும் சிவனடியார் முருகன் பெயர் பெற்றவர், முருகயர்தல்= முருக பூசை செய்தல், வெறியாடல்.  ”முருகயர்ந்து வந்த முதுவாய் வேந்தன்” குறுந். 362. இருவேறு முருக்குகள் தவிர்த்து முருங்கை மரம் என்பதுமுண்டு ( moringa pterygosperma.Moringa oleifera. https://en.wikipedia.org/wiki/Moringa_oleifera) முரியும் காரணத்தால் முருங்கை என்று இம்மரத்திற்குப் பெயராகியது, 

முள்முருக்கம். புன்முருக்கமாகிய செம்பூக்களால் எழுந்தபெயரே முருகன். அழகனென்பது பிந்தையப் பொருட்பாடு.  முருகனுக்கும் சேயோனெனும் சிவப்புப் பெயருண்டு.  சேயோனைத் தந்தை, மகனெனக் குணநலன் பிரித்து முத்தலைச் சூலத்தைத் தந்தைக்கும், ஒருதலை வேலை மகனுக்கும் கொடுத்து அச்சமூட்டிய இனக்குழுக் கருத்தீடுகள் “அன்பே சிவமாய்” இன்றாகி விட்டன முருகனுக்கு முன்னால் நடந்த வேலன் வெறியாட்டு அணங்காட்டு என்றும்  சொல்லப்பட்டது. என்னுடைய ”அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 2” என்ற இடுகையைப் படியுங்கள். (https://valavu.blogspot.com/2014/01/2.html) சரி, அணங்கென்றாலென்ன? முருகன் கோட்டத்து அணங்கெங்கு வந்தது? - இது அடுத்த கேள்வி. இதற்குமுன் சிவன், பெருமாள் கோயில்களில் நிலவும் இனக்குழுப் புரிசைகள் பற்றிச் சொல்ல வேண்டும். (இப்புரிசைகள் பற்றிய சிந்தனையில்லாது அணங்கைத் தெளிவது கடினம்.) 

அன்புடன்,

இராம.கி.


அரோகரா எனும் இனக்குழு முழக்கம் - 1

"அரோகரா, தமிழா?" என Srinivasan Meenakshi என்பார் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவிற்கேட்டார். சிலர் தமிழென்றும், சிலர் “ஹரஹரா” எனும் சங்கதச் சொல்லின் தற்பவம் என்றும் விடைசொன்னார். எனக்குப் புரிந்தவரை, அரோகரா சங்கதமாக வாய்ப்பில்லை.  தியை (ஒளிரும் வானம்- dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்> வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) போன்ற சிறு தெய்வங்களையே பெரிதும் வழிபட்ட வேதநெறியார் நெடுங்காலம் சிவனை ஏற்காதிருந்தார். பெரும்பாலான இருக்கு வேதப் பாடல்கள் சிறுதெய்வங்களையே பரவும். உருத்திரன் பெயர் ஆங்காங்கே முகனமின்றி இருக்கில் வரும்.  அது மெய்யாய்ச் சிவனா என்பதில் கேள்விகளுண்டு, ஆய்ந்தவர் குறைவு. (சங்கத விழைவோர் யசுர்வேத, தைத்ரிய சம்ஹித, 4 ஆம் காண்ட, ஸ்ரீருத்ரத்தை முன்கொண்டு பேசுவார். பெரும்பாலும் பொ.உ.மு.800 க்கு அப்புறமே ஸ்ரீருதரம் எழுந்திருக்கலாம்.)  

உவநிற்றக் (உபநிடதக்) காலத்திற்றான்  வடக்கே உருத்திரனைப் பெரிதாய்ப் பேசத்தொடங்கினார். இந்திய வடமேற்கில் நுழைந்த வேதநெறியார் தாம் கண்ட நடுகல் வடிவ  இலிங்கத்தைச் ”சிசுனதேவ” என நக்கலிக்கவும் செய்தார். சிவன் தோற்றம் வடக்கிருக்க வாய்ப்பில்லாததை அக்கேலியே உணர்த்தும். தவிர, பிற்காலப் பழனங்களில் சிவனை அவமதிக்கும் தக்கன் கதையையும் ஓர்ந்துபார்க்கலாம். சிவனெனும் கடவுட்கருத்து வடவருக்கு இறக்குமதியாய் வந்ததே. ”சிவனுக்கான” செம்பொருள் விடுத்து, நீலநிறம் கற்பித்து, சொல்லுக்குப் பொருளாய் வேதநெறியார்  ”மங்கலம்” என்பார். முருகன், கந்தன், கடம்பன் உருவகங்களுங் கூடத் தெற்கெழுந்தனவே. ஆய்ந்து பார்க்கின், இனக்குழு சார்ந்த முருகன், சிவன் உருவகங்கள் நம்மூரில் ஒன்றாகத் தொடங்கிப் பின் காலவோட்டத்தில் இரண்டாய்ப் பிரித்து உணரப்பட்டன எனலாம். (விவரம் கீழுள்ளது.) 

சில பகுத்தறிவுத் திராவிடரோ, ”தமிழர் புரிதலில் சிவனே இல்லை தொல்காப்பியம் சேயோனையே குறிக்கும்” எனக் குழிபறிக்க முயல்வார்.  செள்>செய்>சேய், செள்>செள்வு>செவ>சிவ எனும் சொல்வளர்ச்சிகளைப் பார்த்தால், சேயோனும், சிவனும் ஒரே வேரில் உருவானது புரியும்.  இன்னும் சிலரோ, ”அதெப்படி முருகன் தமிழ்க்கடவுள்? வடக்கே கார்த்திகேயன் யார்?” என்பார். வேறுசில மாந்தவியலாரோ, “இனக்குழுக் கோயில்கள் சிறுதெய்வக் கோயில்கள், சிவன்/பெருமாள் கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்கள், 2 புரிசைகளுக்கும் தொடர்பில்லை” எனக் குறுக்குச்சால் ஓட்டுவார். இப்படி, தத்தம் தேற்றக் கட்டுமானங்களை (theoretical consructs) நிறுவ, பலரும் புதுப்புதுப் பட்டுமைகளைக் (facts) கற்பனையாய்ப் புனைந்து கொண்டே இருப்பார்.   கேட்கும் நமக்குப் பெருவியப்பு மேலிடும். 

(வட நாட்டிலன்றி) பென்னம்பெரிதாய்த் தெற்கில் கொண்டாடும் சிவ, விண்ணவ நெறிகள் தமிழரிடை நிலவிய இனக்குழுப் பழக்கங்களில் இருந்தே தொடங்கியிருக்கலாமென ஏன் சிறிதும் எண்ண மறுக்கிறார்? தமிழக இருப்பை வெறும் 4500 ஆண்டுகளுள் அடைக்கப் பெரும்பாலோர் ஏன் விழைகிறார்? சிந்துவெளி நாகரிக ஒட்டுமரபாய்த் தமிழரை ஆக்கும் சூழ்க்குமம் என்ன? 65000 ஆண்டுகள்முன் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வந்துசேர்ந்த தமிழர், பழங்குடி வாழ்வில் தமக்கென சில இறையுருக்களையும்,  வழிபாட்டு முறைகளையும் செய்துபார்த்துத் திருத்தி உருவாக்க முடியாதா? காளி, ஐயன், கருப்பன் போலச் சேயோனும் ஊர்காக்குந் தெய்வமாய்த் தொடக்கத்தில் இருக்கக் கூடாதா? இதுபோன்ற குமுகவியல் ஏரணம் ஒருசில ஆய்வருக்கு மட்டும் ஏன் தொடர்ந்து இடிக்கிறது? சமயப் பழக்கங்களையும் கடன்வாங்கும் அளவிற்குத் தமிழர் களிமண் மூளையரா? ஒன்றும் புரியவில்லை. 

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை தானுமைத் தனமாக (auomatic) பல தடவை சொல்லும்  நம்மில் பலர், தென்னாட்டின் மறு தலையாகும் "எந்நாடு" எதைக் குறிக்கிறதென ஓர்ந்தோமா? - எனில் ஐயமே. தென்னாடு, தக்கணத்தைக் குறிக்கிறது; ”தென்னாடுடைய சிவன்” தக்கண மூத்தோனைக் (மூர்த்தியைக்) குறிக்கும். தக்கண மூத்தோன் விவரிப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சங்க இலக்கியம் காட்டும். தக்கண மூத்தோனின் மாந்தவகைப் படிமம்/குறியீடு அறிமுகமான பின்னரே, வடபுலத்தார் சிவநெறியைக் கவனிக்க முற்பட்டார். இன்றும் இலிங்கப் படிமம் வடபுலத்தில் குறைந்து தக்கணமுத்தோன் படிமம் அதிகம் பரவியுள்ளது,  சிவனை நோக்கி வடபுலத்தாரை வயப்படுத்தும் போக்கிலேயே "எந்நாட்டவர்க்கும்" என்ற சொல்லாட்சி எழுந்திருக்க முடியும். . 

[திராவிடம்/தமிழம் என்றாலே முறைப்பும், மனவெறுப்பும், சிலருக்கு வருகிறதே, அவர் சிவன்கோயில்களில் எழும் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி" என்று பெருமானக் குருக்கள், ஓதுவார், பத்தர் சேர்த்தெழுப்பும் பதாகை முழக்கத்திற்கு (அது tribal முழக்கமே; "வெற்றிவேல், வீரவேலும்", "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா"வுங்கூட இனக்குழு முழக்கங்களே! இக்காலத்தும் இவை தமிழர், இனமென நிறுவுகின்றன. இன்னுஞ் சொன்னால் அது ஓர் போர்முழக்கம். வியப்பாகிறதோ?) எதிர்ப்புத் தெரிவிப்பாரா, என்ன? திராவிடம் ஒழியவேண்டுமெனில், சிவன்கோயிலை அன்றோ, வெறுப்பாளர் மறுக்கவேண்டும்? தக்கண மூத்தோன் கருத்தீட்டை அன்றோ நிறுத்தவேண்டும்? தென்னாடு, தக்கணம், திராவிடம் என்பன 2000 ஆண்டுகள் முன் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை. ”தென்னாடு” தமிழ்ச்சொல்; ”தக்கணம்” இருபிறப்பி; ”திராவிடம்” தமிழத்தின் பாகதத் திரிவோடு, பின்தொடர்ந்த சங்கதத் திரிவால், ஏற்பட்டது.]

தொல்காப்பியத்தின் படி, சேயோன் குறிஞ்சிநிலங் காக்கும் தெய்வம்.  மாயோன் முல்லைநிலத் தெய்வம். காளி/கொற்றவை  பாலைநிலத் தெய்வம். வானிலிருந்து விழும் மழையளிப்பு, உருவகிப்பில் வீழ்ந்தோன்>வேந்தன் மருதநிலத் தெய்வம் ஆவான். ( மழையின்றி நீரில்லை, நீரின்றி மருதமில்லை.) பெருங்குழுத் தலைவனே வானவன் வழித்தோன்றலாகி வேந்தனாய்க் கொள்ளப்பட்டான். வேந்தன் ஏதோ வடநாட்டுக் கருத்தெனச் சிலர் அறியாமையில் சொல்வார். நெய்தல்  நிலங்காக்கும் தெய்வம் கடல் தெய்வமான வாரணன். தமிழரின் ஐந்திணைத் தெய்வங்களுக்கு வேதங்களில் ஆதாரமில்லை. 

வேதவிளக்க நூல்களிலும், சிவன், விண்ணவன், கொற்றவை (கொற்றவையைத் துர்க்கை என்பார்; கொற்றம் = கோட்டை = துருக்கம்; கொற்ற ஐ= கொற்றவை ஆகும். துருக்க ஐ= துருக்கை> துர்க்கை என இருபிறப்பிச் சொல்லாக்கும்.) போன்ற தெய்வங்களை, பெருமானக் காலங்களுக்கு முன், முதல் தெய்வங்களாய்ச் சொல்லவில்லை, சிந்தாற்றை விட்டுநகர்ந்து, கங்கை ஆற்றுக்கருகில் ஆரியர் வந்தபோது தான் ஏற்கனவே அங்கிருந்த வடதமிழ் உருவகங்கள் வேதநெறிக்குள் கலக்கத் தொடங்கின.  (மறவாதீர், ஆரியர் நுழைய நுழைய, வடதமிழர் கொஞ்சங்கொஞ்சமாய்ப் பாகதர் ஆனார். மொழிகளின் கலப்பால் புதுமொழிகள் தோன்றின. இன்றும் வட இந்திய மொழிகள், அடிப்படையில் திராவிட வாக்கியக் கட்டுமானம் காட்டும். இந்தியாவின் அடிக்கட்டுமானம் தமிழும் திராவிடமும் சார்ந்ததே. ஆரியக் கட்டுமானம் என்பது வெறும் மேற்கூரை.) 

அன்புடன்,

இராம.கி.


Friday, January 29, 2021

Versus

Versus என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன? - என்று தமிழ்ச்சொல்லாய்வுக் களத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அதற்கான என் விடை இது.

-----------------------------   

versus (prep.)

mid-15c., in legal case names, denoting action of one party against another, from Latin versus "turned toward or against," past participle of vertere "to turn," from PIE *wert- "to turn, wind," from root *wer- (2) "to turn, bend."

வாழ்தல் = வழிப்படுதல்; வாழகை>வாடகை>வாரகை = ஓரிடத்தில் அல்லது ஒருவீட்டில் வாழ்தலுக்குக் கொடுக்கும் தொகை. வாழம்>*வாடம்>வாரம் = ஒரு குறிப்பிட்ட நிலத்தை விளைச்சலுக்காக எடுத்து வழிப்படுத்துவதற்குக் கொடுக்கும் தொகை அல்லது பகுதி விளைச்சல். இப்படி ஒரு தொகை கொடுப்பதால் வரம்பிற்குள்ளான உரிமையானது வாடகை, வாரத்தின் மூலம் கிடைக்கிறது. எனவே வாரத்திற்கு = (வரம்புடன் கூடிய) உரிமை என்ற பொருளும் வந்து சேரும். வரியும் (tax) ஒருவகை வாரமே. (அரசாங்க உரிமை). “நடையல்லா வாரங்கொண்டார்” என்பது கம்பராமாயணம் மாரிச.180. 

வாரத்திற்குப் பங்கு என்ற பொருளுமுண்டு. “வல்லோன் புணரா வாரம் போன்றே” - தொல்காப்பியம் பொருள் 622. உரை. 

முடிவில் வாரத்திற்கு (உரிமையின் சார்பால் எழும்) தடைப்பொருளுமுண்டு, (impediment, obstacle. ”வாரம் என் இனிப் பகர்வது” - கம்பரா. அயோத், மந்திரப் 39. 

வாரத்திற்கு வரம்பு என்ற பொருளும் உண்டு. 

வாரம்படுதல் = ஒருபக்கம் சார்தல். to be prejudiced or biased, to show partiality.  குற்றவாளியின் வாரம் போல். குற்றவாளிக்கு மாற்றுவாரமும் உண்டு. வீட்டில் தாழவாரம் என்பது ஒரு பக்கம் சாய்ந்த கூரை. இந்தப்பக்கம் அந்தப்பக்கத்திற்கு வாரமானது என்பதை எண்ணிப் பாருங்கள்.  

வாரம் பிரித்தல் = விளைச்சலைக் குடிவாரம், மேல்வாரம் என்று பிரித்துக்கொள்ளுதல். 

வாரித்தல் = தடுத்தல் to hinder, obstruct. ஆணையிட்டுக் கூறல் to swear.

வாரிப்பு = தடுப்பு/

வாரி = தடை impediment, obstruction.

வாரிது>வாரிதம் = தடை, obstacle. வாரிதத்தை வாரிதை என்றும் சொல்லலாம்.

வாரியிறைத்தல்/வாரிவிடுதல் = சிதறவிடுதல், எனவே அழித்தல்

வாருதல் = கவருதல் “மாதர் வனைதுகில் வாரு நீரால்” (கம்பரா. ஆற்று. 15)  

வழக்கு என்பது உரிமை கோருதல். அந்த வழக்கே versus இக்குச் சரியான இணைச்சொல்.  வாடகை, வாரம், வரித்தல், வாரித்தல், வாரிதம், வாருதல், வழக்கு போன்றவை தொடர்புள்ள சொற்கள் இந்தத் தொடர்பைப் புரியாது சொல்லாக்க முனையவேண்டாம். (வழங்குதலில் எழும் வழக்கும், சட்டச்சிக்கலில் உரிமை வழிவரும் வழக்கும் வேறுபட்டவை).

X versus Y = X வழக்கு Y (விரித்துச் சொன்னால், X ஓடு Y க்கான வழக்கு)

அன்புடன்,

இராம.கி.  

Wednesday, January 13, 2021

கடலை

 (வேர்க்) கடலைக்கான (Peanut) சொற்பிறப்பை ஒரு நண்பர் தனிமடலில் கேட்டார். நல்ல கேள்வி. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இதைச் சொல்ல மறந்துவிட்டார். ஏன் மறந்தார்? - என்று தெரியாது, ஆனால் ”கடலைக்கட்டி, கடலைக்கம்பி, கடலைக்காடி, கடலைக்காய், கடலைக் கொட்டை, கடலைச்சுண்டல், கட;லைப் பட்டாணி, கடலைப் பணியாரம், கடலைப் பயறு, கடலைப்பருப்பு, கடலைப்புளிப்பு, கடலைமணி, கடலையிடல், கடலையுருண்டை, கடலையெண்ணெய்” ஆகிய கூட்டுச்சொற்களைக் கொடுத்துள்ளார். வேர்க்கடலை, நிலக்கடலை, கச்சான், கலக்கா, மல்லாட்டை, மணிலாக்கொட்டை என்றெலாம் அழைக்கப்படும் peanut நம்மூரில் உருவானதல்ல. நடுத் தென்னமெரிக்காவில் உள்ள  பிரசீலில் எழுந்து போர்த்துகேசியரால் உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கடலை அதுவாகும், 

Peanut (n.) 1807; see pea + nut. Earlier, and still commonly in England, ground nut, ground pea (1769). The plant is native to South America; Portuguese traders took peanuts from Brazil and Peru to Africa by 1502 and it is known to have been cultivated in Chekiang Province in China by 1573, probably arriving with Portuguese sailors who made stops in Brazil en route to the Orient. பிலிப்பைன்சு நாடும் போர்த்துக்கேசியர் குடியேற்றத்திற்கு ஆட்பட்டதே. அதன் தலைநகரான மணிலா வழியாக 16 ஆம் நூற்றாண்டில் நமக்கு அறிமுகம் செய்யப் பட்டது. வேர்க்கடலைக்கு முன்  நம்மூர்க் கடலைகளைப் பார்க்கவேண்டும். 

அதற்கும் முதலில் pea (n.) என்ற சொல்லைப் பார்த்துவிடுவோம். "the seed of a hardy leguminous vine," a well-known article of food, early or mid-17c., a false singular from Middle English pease (plural pesen), which was both single and collective (as wheat, corn) but the "s" sound was mistaken for the plural inflection. From Old English pise (West Saxon), piose (Mercian) "pea," from Late Latin pisa, variant of Latin pisum "pea," probably a loan-word from Greek pison "the pea," a word of unknown origin என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் சொல்வார், Klein எனும் சொற்பிறப்பியலார் Thracian or Phrygian என்ற நடுக்கடல் நாடுகளைச் சேர்ந்த பழங்கால மொழிகளிலிருந்து கிளைத்திருக்கலாம் என்பார்..

எனக்கு வேறுமாதிரித் தோன்றுகிறது. தமிழில் வித்து என்பது வித்யு> விஜ்ஜு> bijju>biiju என வடக்கே திரியும். கிரேக்க pison க்கும், சங்கத biiju விற்கும் தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது. பயற்று விதைகளைத் தமிழில் பருப்பு என்றே சொல்வோம். பாசிப்பருப்பு ( mudga- green gram), கருப்பு உளுந்து (māṣa- black-gram), கடலைப் பருப்பு (caṇaka- bengal gram), பட்டாணிப் பருப்பு (kalāya-field pea), எள்ளு (tila-sesame), ஆளி (atasī-linseed), கடுகு (sarṣapa- mustard) and மஞ்சிராகப் பருப்பு (masūra-lentils. இது வடக்கே துவரம் பருப்பிற்குப் பகரியாய்க் கொள்ளப்படும். இராகம் = அரத்த நிறம். மஞ்சு = மஞ்சள் நிறம். மஞ்சள், இரத்த நிறங்கள் கலந்த பருப்பு.)

கடலைப் பருப்பை,  கூர்ச்சரம்,  இராசத்தானம், அரியானம், உத்தர/மத்தியப் பிரதேசங்கள், பீகாரில் சணா (Chana) என்றும், பஞ்சாபில் சோலே ( Chhole) என்றும், மேற்கு வங்கத்தில் சோலா (Chola) என்றும்,  ஒடியாவில் பூத்து (Boot) என்றும், அசாமில் புத்மா (Butmah) என்றும்,  மராட்டியத்தில் அர்பரா ( Harbara) என்றும், ஆந்திரத்தில் சணகலு (Sanagalu) என்றும், கருநாடகத்தில் கடலெ (Kadale) என்றும், கேரளத்தில் கடல (Kadala) என்றும்  சொல்லப்படும். தமிழில் சணகம், சணாய் என்றும் சொற்களுண்டு. இரண்டாய்ப் பிளந்து பொட்டிய கடலையைப் பொட்டுக் கடலை என்பார். சங்கதச் சாரக சங்கிதையில்  சணக (Chanaka) என இச்சொல் பயிலும். இதன் விதப்புகளை, இந்தியாவில் வங்கக் குருமம் (Bengal gram. குருனை = grain, குருமம் = gram; பருப்பு = dal) என்றும், மேல்நாட்டில் garbanzo or garbanzo bean or Egyptian pea என்றும் சொல்வார். நடு ஆங்கில மொழியில் cycer என்றும், இலத்தீனில் cicer என்றும். கிரேக்கத்தில் krios, Macedonian கிளை மொழியில் kikerros என்றும்,  ஆர்மீனியனில் siseṙn என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Cicer arietinum என்று தாவரவியலில் சொல்லப்படும் கடலையானது, Fabaceae குடும்பத்தில், Faboideae துணைக் குடும்பத்தில், உள்ள ஆண்டுப் பயறாகும். (annual legume (n.) - plant of the group of the pulse family from French légume (16c.), from Latin legumen "pulse, leguminous plant," of unknown origin.  பொதுவாகக் குருனைகளைக் காட்டிலும் குருமங்களில் பெருதம் (protein) அதிகம். மரக்கறி சாப்பிடுவோர் குருமம்/ பருப்பை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பார். கடலைப் பருப்பு, மிக முற்பட்ட காலத்திலேயே இந்தியாவில் பயிராக்கப் பட்டது. இந்தியாவில் பயிராகும் பருப்புகளில் 40% க்கும் மேல் விளைவது கடலைப் பருப்பே. 

நடுக்கிழக்கு நாடுகளில் 7500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடலைப்பருப்பின் முந்தைய எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டூள்ள்ளன. கடலைப் பருப்பில் 2 வகைகளுண்டு.  பெரிதானதைக் கொண்டைக் கடலை (கொண்டை போல் மொத்தையானது.  வெளிர் தேன் நிறக் காபூலிக் கடலை - light tan Kabuli என்பர்) என்றும் , வெவ்வேறு நிறங்களில் சிறியதாய் இருப்பதைத் தேசிக் கடலை என்றும் சொல்வர், இரண்டாம் வகைப் பருப்பைச் செடி/கொடிகளிலிருந்து பறிக்கையில் பருப்புத் தோல் பச்சையாகவும். காய்ந்தபின் தேன் (tan), பீது (beige), புள்ளி (speckled), அடர் புகல் (dark brown) கருப்பு (black) என வெவ்வேறு நிறத் தோல்களும் கொண்டிருக்கலாம்.. https://agmarknet.gov.in/Others/bengal-gram-profile.pdf என்ற ஆவணத்தையும் படியுங்கள்.

இனிக் கடலையின் சொற்பிறப்பிற்கு வருவோம். செடி, கொடிகளில் காய்க்கும் கடலைப் பயறுகள் பருப்பிற்கு மேல் தோல்கொண்டதோடு, கடினமான தோடும் (pod) கொண்டிருக்கும். தோடுக்கும் தோல்போர்த்திய பருப்பிற்கும் இடையே சிறிது இடைவெளியிருக்கும். பறித்துக் காயப்போட்ட பின், இடை வெளி சற்று பெரிதாகும். அப்போது தோடோடு பருப்பைக் குலுக்கும் போது குடுகுடு சத்தம் எழும். குடுகுடு>கடுகடு என்பதைக் கடலுதல் = ஒலித்தல் என்பார். கடலும் ஒலியைச் செய்யும் பயறுகள் எல்லாமே கடலைகள் தாம். சங்கதத்தில் śimbīdhānya (grains with pods) என்றழைப்பார்.   பாசிப்பருப்பு, கருப்பு உளுந்து , கடலைப் பருப்பு பட்டாணிப் பருப்பு, எள்ளு, ஆளி, கடுகு , மஞ்சிராகப் பருப்பு  ஆகிய எல்லாமே தோடு கொண்ட கடலை வகைகளே. வெளிநாட்டில் இருந்து வந்த வேர்க்கடலையும் தோடுள்ளதே. காய்ந்த வேர்க்கடலையைத் தோடோடு சேர்த்துக் குலுக்கையில் தோட்டிற்குள் கடகட சத்தம் எழும்.

கடகட என்பது கணகண, சணசண என்றும் ஒலிக்கும். சணகம் என்ற சொற் பிறப்பு புரிகிறதா? கடகட>என்பது கக்கட என்றும் சொல்லப்படும். கக்கட> கக்கர என்பது   Macedonian கிளைமொழியில் உள்ள சொல்லான kikerros என்பதற்கு அருகிலுள்ளது. இதிலிருந்து cicer என்ற இலத்தின் சொல்லும், Cicer arietinum என்ற தாவரப்பெயரும் பிறக்கும். நம்மூர்க் கடலைப் பெயரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

அன்புடன்,

இராம.கி. 


Monday, January 11, 2021

முலை - 2

முலையை அடுத்து முலையிருக்கும் தளமான மார்பிற்கு வருவோம். இது மார்புக்கூட்டின் முன்பக்கம் (frontside of the chest). மார்பும் முலைச் சொற்பிறப்போடு தொடர்புற்றதே. முல்> மல் >மல்கு>மல்கு-தல்= பெருகிக் கிடத்தல். அதிகமாதல், நிறைதல், செழித்தல், மல் = வளம், மல்லை = வளம், பெருமை; மல்லல் = மிகுதி, பொலிவு, அழகு; நிலத்தில் மல்லிப் பெருகியது மலை. உடல் தசைகள் வளர்ந்து பெருகுவதை மல்லாகுதல் என்பார். மல் ஆனவன் மல்லன்,. மல்+தொழில்= மற்றொழில்= இருவேறு மல்லர் தம் வலிகாட்டிப் போர்புரிதல். மல்காத்தல்= மல்லாத்தல்= மல்லார்தல்= தன் மல்லைக் காட்டி மேனோக்கிக் கிடத்தல், மலர்ந்தாற் போல் கிடத்தல். (”மல்லாக்கப் படுக்காதே ஒருக்களிச்சுப் படு” என்று பெரியோர் சொல்வார்,.) , மல்ங்கியவள் (முலை எழத்தொடங்கிய நிலையில் உள்ளவள் ம(ல்)ங்கை>மங்கை எனப்படுவாள். 

மல்>மர்>மறு>மறம். மல்லைக் காட்டிப் போர்புரிவோன் மறவனென்றும். பெண் மறத்தி என்றும் சொல்லப்பட்டாள். மறவன், மறத்தி காட்டுந்திறன் மறமானது. மல்லம்= மல்லிக் கிடக்கும் கிண்ணம். (முலைக்கு இன்னொரு பெயர்), பள்ளி யறை; மலுந்துகிடத்தல்= மகுந்துகிடத்தல்.(சிவகங்கைப் பக்கம் பயிலும் சொல். நிறைந்துகிடப்பது என்று பொருள் கொள்ளும். மலர்= முலை போல் விரிந்தது. மலிதல், மலிர்தல்= மிகுதல், நிறைதல், விம்மல், to become large,பரத்தல். மலிபு= மிகுதி. முலையில் பால் ஒழுகுவதால், முல்லின் திரிவான மல்லில், ”மலிர்தல் = நீர் ஒழுகுதல்; மலிகு =நீர் ஒழுக்கு” போன்ற சொற்கள் எழும். ”மலிகு” என்ற தமிழ்ச்சொல் milk ஓடு இணைவு காட்டும். பிள்ளைபெற்ற பெண்ணே, முலைப் பால் கொடுக்கமுடியும். பிள்ளை பெறவியலா, பால் கொடுக்கவியலாப் பெண் குமுகத்தில் மலடு எனப்பட்டாள். மலடி= மலடான பெண். மலடன்= பெண் பிள்ளைபெறுவதற்கு விந்துகொடுக்க இயலாத ஆண். மலட்டு ஆ = ஈன முடியாத பசு. மலட்டாறு = நீர் வற்றிய ஆறு. (இங்கே நீரும் பாலும் ஒப்பிடப் படுகின்றன.) 

மல்>மள்>மழ = மல்லி விரியும் இளமை  மளமள= விரைவுக்குறிப்பு. பெருக்கம் குறிக்கவும் பயன்படும். ”மளமள என வளர்ந்தான்”. மளமள>மடமட. ”மடமட என நடந்தது”, மளிகை= விற்கவேண்டிப் பெருகிக்கிடக்கும் பலசரக்கு. மள்> மளு> மளுகு> மருகு> மருவு> மருபு> மார்பு. மார்பு என்ற சொல் முலையின் நீட்சியாய் வளர்ந்தது. மார்பை மாரென்றும் சுருங்கக் குறிப்பார். மார்க்கச்சை= முலைக்கச்சை. மார்பிற்கு வேறு சொற்களாய் அகலம், மருமம், ஆகம், உரல்/ம் என்பவற்றைத் திவாகரமும், இவற்றோடு நெஞ்சு சேர்த்துப் பிங்கலமும், சூடாமணி நிகண்டும் தரும். தொல்காப்பியத்தில் புழங்கும் ”நெஞ்சு”, திவாகரத்தில் விடுபட்டது, வியப்பைத் தருகிறது. மார்புக்கு மேல் முலை, முலைக்கு மேல் முலைக்கண். மார்பின் பின்னுள்ளது முதுகு/புறம். அகலமும், ஆகமும் ஒரேமாதிரி எழுந்தவை. உடம்பின் வெளித்தெரி உறுப்புகளில் மார்பே அகலமானது. அகல்> அகல்வு> அகவு> அகவம்> ஆவம்> ஆகம். 

மார்பின் 2 பரிமானக் குறிப்பு நெஞ்சு. துணி நெய்கையில் வார்ப்புநூலும் (warp thread) ஊட்டுநூலும் (weft thread) பின்னிப் பிணைந்து நெய்யப் படும்,. நெய்வு> நெசவு. நெய்ந்தது> நெய்ஞ்சது> நெஞ்சு. நெஞ்சாங்கூடு = நெஞ்சோடு சேர்ந்த என்புக் கூடு (chest). ஆங்கிலச் சொற்பிறப்பும் இக் கூட்டுப்பொருளை அழுத்தும். chest (n.). Old English cest "box, coffer, casket," usually large and with a hinged lid, from Proto-Germanic *kista (source also of Old Norse and Old High German kista, Old Frisian, Middle Dutch, German kiste, Dutch kist), an early borrowing from Latin cista "chest, box," from Greek kistē "a box, basket," from PIE *kista "woven container" (Beekes compares Middle Irish cess "basket, causeway of wickerwork, bee-hive," Old Welsh cest).

அகலம், ஆகம் போல், மருமமும் மார்பும் ஒரேவித சொற்பிறப்புக் கொண்டவை.  மருவுதல்= மார்பில் தழுவுதல். மருமகள்/ன் = தழுவிக் (ஏற்றுக்) கொண்ட மகள்/ன். மருவீடு = சம்பந்தி குடும்பம். மருவுகை= marriage. தமிழ், இந்தையிரோப்பிய உறவைப் பாருங்கள். ஆணும் பெண்ணும் தழுவும்போது, இணையும் பகுதி மருவு>மார்வு>மார்பு எனப்பட்டது. குறிப்பிட்ட விட்டத்திற்குச் செடியின் தண்டு வளர்ந்த பின், வளைக்க முடியாத திண்மையை அது பெறும். அதன்பின் அதை மருவ மட்டுமே முடியும். செடி மரமானதாய்ச் சொல்வோம்.. மருவக்கூடியது  மரம். மருவும் தேவையின்றி இளமையில் இருந்தபோது வளைத்துச் செழித்தது செழி>செடி. மருவுதலுக்கு வேறு திரிவுமுண்டு. மகரம் வகரப்போலி ஆகையால் மருவுதல்>மருமுதல் ஆகும். அதில் உருவான பெயர்ச் சொல் மருமம். மருமம், மம்மம் என்றும் திரியும். மம்மல் (mammal) என்பது முலையுள்ள பாலூட்டி விலங்கு .உர்>உறு என்பதும் உரல் = தழுவலைக் குறிக்கும். உரம் என்ற பெயர்ச் சொல் இதில் உருவானது, மார்பைக் குறிக்கும் எல்லாச் சொற்களும்  தழுவல் கருத்தில் உருவானவை ஆகும்.

மல்>மள்>மளு>மடு என்பது பசுவின் முலையைக் குறிக்கும். மடு>மடி என்ற நீட்சியும் அதே பொருள் கொள்ளும். masto, mazo போன்ற இந்தையிரோப்பியச் சொற்கள் மடுவொடு தொடர்புற்றவை. மடு கொடுக்கும் பருவங் கொண்டவள் மடந்தை. மங்கைக்கு அடுத்த பருவம். மடுத்தலுக்கு பால் ஊட்டுதல் என்றும் பொருள்.. பின்னால் உணவூட்டதலுக்கும் இச்சொற்பொருள் நீண்டது. மடு> மடை, மடைத்தல், மடைப்பள்ளி  போன்ற சமையல் தொடர்பான சொற்கள் இப்படிக் கிளைத்தவையே. முள்>மள்>மட்டு என்பது ஒரு காலத்தில் பாலைக் குறித்திருக்கலாம் என ஊகிக்கிறோம் . இன்று அந்தச்சொல் தேன், கள், சாறு, பருகம், ,மதுச் சாடி, மணம் என்ற பொருட்பாடுகளையே குறிக்கிறது. முட்டு> மட்டு  என்பது ”நிறைந்தது” என்றும் பொருள் கொள்ளும். மட்டு>மட்டம்= கள். மட்டு>மத்து>மத்தம்= களிப்பு. .மத்து> மது - தேன், கள், பால் (இதுவும் இக் காலத்தில் பாலைக் குறிக்கவில்லை.) மத்தன்= பித்துப் பிடித்தவன்; மத்து = மயக்கம். மாந்தப் பாலுக்கு மாறாய், பசுவின் மடுவழி பாலைக் கறக்கிறோம். இப்படி மடுக்கொடுக்கும் விலங்கு மாடு என்றே சொல்லப்பட்டது, முதலில் பசுவைக் குறித்துப் பின் காளையையும் குறிக்கும் பொதுப்பெயராயிற்று.

மடு, மடியைப் புரிந்துகொண்டால், ஏராளம் கலைச்சொற்களைப் படைக்க முடியும். கீழே மடுவைப் பயன்படுத்தியுள்ளேன். (மடியையும் பயனுறுத்தலாம்.) முதலில் வருவது gynecomazia (s) = கன்னுமடு ஆகல் , The abnormal proliferation or enlargement of the glandular component of breast tissues in males: Gynecomazia is strictly a male disease and is any growth of the adipose (fatty) and glandular tissue in a male breast. Not all breast growth in men is considered abnormal, just excess growth. gyneco என்பதைக்- கன்னுகை எனலாம். கன்றுதல்>கன்னுதல்= குட்டிபோடுதல்.. கன்னி = பிள்ளை பெறக் கூடியவள். இன்று இப்பொருளோடு, மணமாகாதவள் என இன்னொரு வரையறை சேர்க்கிறோம். கு also gynaeco-, before a vowel gynec-, word-forming element meaning "woman, female," from Latinized form of Greek gynaiko-, combining form of gynē "woman, female," from PIE root *gwen- "woman."

அடுத்தது mastoplasia மடுப் பெருகை, mastoplastia (s) (noun). Enlargement of the breasts or the development of breast tissue: A mastoplasia is considered to be an abnormal multiplication or an increase in the number of normal cells of mammary gland tissue.

mazodynia மடுத் தினவு (s) (noun), A mazodynia is a pain in the breast.

mazologist மடுவியலார் (s) (noun), Someone who studies the animal class of Mammalia which refers to warm-blooded creatures that have body hair and feed milk to its young.

mazology மடுகளியல் (s) (noun), The branch of zoology that studies mammals which is a class of vertebrates with characteristics; such as, fur, blood, four-chambered hearts, and complex nervous systems.

mazomancy மடுக்குறிகை (s) (noun). Divination or predicting the future while observing babies when they are nursing. 2. Etymology: derived from the Greek mazos, "breast" and manteia, "prophecy".

mazomantist மடுக்குறியாளர் (s) (noun), Someone who predicts the future while watching a baby nursing milk from his or her mother.

mazopathy (s) மடு நோய் (noun), Any disease of the placenta or of the female breast.

mazophile (s) மடு விழையர் (noun), Someone who is sexually stimulated or excited by female breasts.

mazophilous (adjective) மடு விழை Pertaining to or referring to mammary mania or an excessive interest in breasts.

mazophily (s) (noun) மடு விழையம் A clinical term that is expressed when a person is sexually stimulated by female breasts and it is probably one of the most universal forms of sexual desires among normal men and teenage boys.

mazoplasia (s) மடுச் சிதைவு  degenerative condition (gradual deterioration) of breast tissue.

tetramastia, tetramazia (s) (nouns). நால்மடு A condition characterized by the presence, normal or abnormal, of four breasts or mammary glands: There are some animals that have tetramastias; however, it is extremely unusual for a human to have them.

mastoid (adj.) மடுகை "breast-shaped, teat-like, resembling a (female) breast or nipple," 1732, from Greek mastoeides "resembling a breast," from mastos "(woman's) breast" (see masto-) + -oeides "like," from eidos "form, shape" (see -oid). As a noun, 1800, from the adjective.

masto- மடு.மடி before vowels mast-, word-forming element meaning "female breast, mammary gland," from Greek mastos "woman's breast," from madan "to be wet, to flow," from PIE *mad- "wet, moist, dripping" (source also of Latin madere "be moist;" Albanian mend "suckle;"

இப்போது சொல்லுங்கள். முலை செகையுறுப்பா? ஆண்டாள் தவறா? எனக்குத் தோன்றவில்லை. ”பார்வையிலிருக்கிறது நம் புரிதல்”. [அவையில் சொல்லக் கூடாத பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது.] 

அன்புடன்,

இராம.கி.