Wednesday, February 28, 2007

ஓதி - 3

hotr என்ற வேதச் சொல்லிற்கு இணையாக zaotr என்ற சொல் இரானிய நடைமுறையில் அவஸ்தாவில் சொல்லப்படும். சாரத்துஸ்ரா கூட ஒரு zaotr தான் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். வட இந்திய ஒலிப்பிற்கும், இரானிய ஒலிப்பிற்கும் இடையே இந்த za என்னும் பலுக்க வேறுபாடு நெடுகவும் உண்டு. இங்கே சப்த சிந்து என்பது அங்கே ஹப்த ஹிந்து என்று ஆகும். சோமா என்பது ஹோமா என்று அங்கு ஆகும். சரஸ்வதி என்பது ஹரஹ்வதி என்று ஆகும். அதே பொழுது இந்த za மாற்றம் ஒருவழிப் பாதையல்ல. வேதத்தில் hotr என்பது அங்கே zaotr என்று ஆகிறது. இங்கே ஹ்ரண்ய என்பது அங்கே ஸ்ரண்ய என்று ஆகும். ஈரானில் இருந்த zaotr, அவஸ்தாவின் gatha மொழிகளை யாகத்தின் போது ஓதுவார். நாவலந்தீவில் இருந்த hotr, இருக்கு வேதத்தின் மொழிகளை ஓதுவார். இரண்டு வகை ஓதுதல்களும் தேவதையை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று கேட்பவை தான். ஓதன் / ஓச்சன் என்பவன் தமிழ் மரபிலும் இருக்கிறான். காளிகோயில் பூசாரியைத் தமிழில் ஓச்சன்/உவச்சன் என்பதும், ஆசார்யன், priest, தெய்வத்தை ஏத்துபவன் என்பனை ஓசன் என்று று அகரமுதலிகளில் குறிப்பதையும், ஆச்சார்யனின் மனைவியை ஓசி என்று குறிப்பதையும் இங்கே நினைவு கொள்ளலாம்.

வேள்வி, பூசை என்ற இரண்டு வகையான ஓதுகளிலும் வெறும் அழைப்பு மட்டுமல்ல; கேட்பும் உண்டு. அழைப்பும், கேட்பும் சேர்ந்தது தான் வேத வழியும், ஆகம வழியும். மூட நம்பிக்கையை மறுத்துப் பார்த்தால், அவை ஏதோ வானத்தில் இருந்து இறங்கியவையல்ல. அதே பொழுது, இந்த அழைப்பும் கேட்பும் எல்லாப் பூசைகளுக்கும் பொதுவானது என்று ஓர்ந்து அறிய வேண்டும். கிறித்துவ, இசுலாம் என எல்லா சமய நெறிகளிலும் கூட அழைப்பும் கேட்பும் இருக்கின்றன.

யாகம் என்பது ஒருவழி; வேத நெறிக்கும் ஸோராஸ்த்திரத்திற்கும் அது பொதுவான வழி. நம்மூர் பூசை முறைகள் வேறு வழி. நெருப்பை வைக்காமல் நீரையும், பூவையும் வைத்துச் செய்யும் நம்மூர் வழிபாட்டிலும் பூசை செய்யும் குருக்கள் மந்திரங்களை ஓதுகிறார்; தேவாரம் போன்றவை ஓதுவாரால் ஓதப் படுகின்றன (recited). இறைவனை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று நாம் கேட்கிறோம். ஓதுதல் பற்றிய திராவிட வேர்ச்சொல் பர்ரோ-எமெனோவில் 1052ம் சொல்லாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

1052 Ta. ōtu (ōti-) to read, recite, utter mantras, repeat prayers, speak, declare; ōtuvi (-pp-, -tt-) to teach the Vedas, instruct; ōtal reciting (as the Veda); ōti learning, learned person; ōttu reciting, uttering (as a mantra), the Veda. Ma. ōtuka to recite, read, say; ōtikka to teach; ōttu reading (chiefly of scriptures), using formulas. Ko. o·d- (o·dy-) to read, pronounce (charms), learn; o·t a charm. To. wi_.Q- (wi_.Qy-) to read; w&idieresisside;t incantation. Ka. ōdu to utter, read, recite, study, say; n. reading, etc.; ōdisu to cause to read, instruct in the śāstras; ōdike, ōduvike reading; ōtu, ōta reading, that has been read or studied, the Veda. Koḍ. o·d (o·di-) to read. Tu. ōduni to read; ōdāvuni to cause to read, teach how to read; ōdige, ōdu reading. DED 886.

மீண்டும் சொல்லுகிறேன்; எல்லாவித ஓதுதல்களும் முதலில் அழைப்பதும், பின்னால் வேண்டுதலும் தான். அந்தக் கருத்தில், அழைப்பைக் குறிக்கும் தமிழ் வேர்ச்சொற்களையும், சங்கத வேர்ச்சொற்களையும் பார்போம். ஆ, ஈ, ஏ, ஓ, கூ, கோ என்ற தமிழ் வேர்களைப் போலவே தாது பாடம் காட்டும் kal, kall, kas', kai, ku, ku_, kur, kuj, kun., khu, gr, gaj, gard, guj, ghu, ghu, ghur, ghus., ha_d, has, hikk என்ற சங்கத வேர்களும் அழைப்பை உணர்த்தும். இந்தக் காலச் சொற்பிறப்பியல், பகுப்பின் வழி பெற்ற இவ்வளவு வடிவுகளைச் சுட்டிக் காட்டாது. இவற்றில் மிகக் குறைந்த ஒரு சிலவற்றை மட்டுமே அடிவேராகக் காட்டி மற்றவற்றை அவற்றின் வழிவேராகக் காட்டும். [நான் ஒவ்வொரு வேர்வடிவிற்கும் இணையான தமிழ்ச்சொல்லைக் கூடிய வகையில் இனங் காட்ட முடியும். இதே போல சங்கதச் சொற்களையும் எடுத்துக் காட்ட முடியும்] இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த அடிவேர் ku என்பதாகவே வந்து சேரும்.

மேலே உள்ள பட்டியற் சொற்கள் எல்லாமே ஒலிப்பொருளைக் காட்டுவன. கல், கர்/குர் என்னும் பக்க வேர்களும் கூட அதே ஒலிப்பொருளை தரும். ஆங்கிலத்தில் வரும் ekhe, hoot [ME. houten, huten], hail, hem, hiccup, hip, howl, honk, horn என்ற ஓசைச் சொற்களையும், heulen, hupen என்ற செருமானிய ஓசைச் சொற்களையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். halloa>hello என்ற தொலைபேசி அழைப்புக் கூட இங்கே எண்ணிப் பார்க்க வேண்டியது தான். ஓகை (= ஆரவாரம்), ஓதம், ஓதை, ஓசை, ஓலம், ஒலி என்ற சொற்கள், ஓங்காரம் என்ற நெட்டோ சை, ஓ என்னும் குழந்தையின் அழுகை எல்லாமே ஒலிக்குறிப்புக்கள் தான். நான்கு கூப்பிட்டுத் தொலைவைக் காவதம் என்றும் ஓசனை என்றும் தமிழில் சொல்லுவதையும் எண்ணிப் பாருங்கள். ஓலிடுதல் என்பதும் கூட ஓசை செய்வது தான்.

இன்னும் சில விதப்பான ஓலச் சொற்களையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும். நாதசுரம் ஓலகம் என்றும், நாசுசுரம் இசைப்பவர் ஓலகத்தார் என்றும், ஆரவாரமிகுந்த அரச மண்டபம் ஓலக்க மண்டபம் என்றும், ஓலக்க மண்டபத்தில் சொல்வது ஓலக்க மொழி என்றும் சொல்லப்படும் பழைய பயன்பாடுகளை எண்ணிப் பார்த்தல் ஓல்தல் என்ற வினையின் ஆழம் புரியும். இன்னும் போய், தாலாட்டிப் பாடுவதைக் கூட ஓலாட்டுதல் என்ற யாழ்ப்பாண வழக்கும், லாலி என்னும் வடபுல வழக்கும், lullaby என்னும் மேலைநாட்டு வழக்கும் நம்மை மொழிகடந்த நிலையை உறுதியாக இணர்த்துகின்றன. ஓலத்தின் இன்னொரு பரிமானமாய் ஊளை (howl) என்ற சொல்லும் எழும். ஓசை செய்யும் பனை இலை பனை ஓலையானது.

ஓகாரம் என்பது மொழி கடந்தது என்று புரிந்தால் தான் நான் சொல்ல வருவது புரியும். இல்லையென்றால் hve_க்கு மேலே நகர முடியாது. ஓது என்பதன் நீட்சியாய் மறைமொழிகளை, உயர்ந்த நூற்பகுதிகளை, ஓத்து என்றே தமிழில் சொல்லுகிறோம். மலையாளத்திலும் இதே சொல் தான் உண்டு. நாள் தோறும் ஓதத் தக்கது ஓத்து ஆகும். அது மந்திரம், அறநூல், இலக்கண, இலக்கியம் என எதுவாகவும் இருக்கலாம். வேதமாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை. "அஞ்செழுத்தும் ஓத்து ஒழிந்து" என்று தேவாரம் 586, 4 பேசும். "ஒத்துடை அந்தணர்க்கு" என்று மணிமேகலை 13.25 பேசும். section or chapter பொருளில் "ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்து என மொழிப" என்று தொல்.பொருள்.செய்யுளியல் 480 பேசும். நெறி,கொள்கை என்ற பொருளில் குறள் 134 பேசும்.

முன்னால் சொன்ன வேளகாரரை ஓதுதலின் அடிப்படையில் ஓதாளர் என்றும் பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். இந்த ஓதாளர்கள் ஆசான்களாவும் இருக்கிறார்கள். "உலகம் பாதி, ஓதாளர் பாதி" என்பது கொங்கு வழக்கு. (அதாவது படிப்பவர்கள் பாதி, படிப்புச் சொல்லிக் கொடுப்பவர் மீதி என்பது அதன் பொருள்.) ஓத்தின் சாலை என்பது நூல் கற்பிக்கும் இடத்தைக் குறிக்கும். "ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று" என்று சிலம்பு 22.28 பேசும். ஓத்துரைப்போர் என்பவர் நூல் ஓதுவோர் ஆவர்; அதாவது one who recites scripture; ஓத்துரைப்போன் என்பவன் ஆசான் என்று பிங்கலம் உரைக்கும்; ஓத்திரி என்பவனும் ஓதுவிப்பவன் என்றே அகரமுதலிகள் கூறும்.

ஓத்திர நெல் என்பது ஓதுவிக்கும் அல்லது ஓதும் தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத் தரப்படும் நெல். ["ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து" - பதிற்றுப் 7 ம் பத்தின் பதிகம்] ஐங்குறு நூற்றின் பாலைப்பகுதி ஆசிரியர் ஓதல் ஆந்தையார் ஆவார்; ஒதற் தொழில் செய்யும் ஆந்தையார்; இங்கே ஆந்தை என்பது ஒரு தமிழ்க் குடிப்பெயர். தலைவன் கல்வி கற்றற்குத் தலைவியைப் பிரியும் பிரிவு ஓதற்பிரிவு என்றே தமிழ் அகப்பொருள் இலக்கியத்தில் சொல்லப்படும்.

ஓதுதல், ஓதி என்ற சொற்கள் பார்ப்பார்க்கு மட்டுமே உரியவை அல்ல. ஓதல் என்பதற்கு உரத்துப் படித்தல், கல்வி பயிலுதல் என்றே தொல்.பொருள்.25 வழி பெறப்படும். ஓசையூட்டிப் பலமுறை சொல்லுதலையே (reciting) ஓதுதல் என்று பொருள் சொல்லுகிறார்கள். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் - குறள் 834

ஓதுவித்த தக்கணையா - திவ்ய. பெரியாழ் 4.8.1. ஓதி என்பதற்கும் அறிவு, கல்வி, one who recites the veda and sastras என்றும் பொருள்கள் உண்டு. மலையாளத்தில் ஓதல் என்றும், கன்னடத்தில் ஓது என்றும் குடகில் ஓத் என்றும், கோத. ஓத் என்றும், துடவத்தில் வீத் என்றும், துளுவில் ஓதுனி (படி) என்றும், தெலுங்கில் சதுவு என்றும், இது திரிவுறும். இருக்கு சொல்லிக் கொடுப்பவன் ஓதி என்றே மலையாளத்தில் சொல்லப் படுவான். ஊது என்ற அடிச் சொல்தான் ஓது என்ற சொல்லிற்கு முந்து எழுந்திருக்க முடியும் என்று பாவாணர் தன் வேர்ச்சொற்கட்டுரைகளில் சொல்லுவார். ஊதல் = ஆரவாரம்

இன்னொரு விதமாயும் இந்த ஓதித்தலைப் புரிந்து கொள்ளலாம். தமிழில் பள்ளி என்பது கன்னடத்தில் ஹள்ளியாகும்; பால் என்பது ஹாலு ஆகும். இது போல பகரம் கெட்டு ஹகரம் சேர்வதும், சிலபோது ஹகரமும் போய் உயிரொலி மட்டுமே தங்குவதும் பல்வேறு சொற்களில் உண்டு. போதித்தல் என்பது ஓதித்தலுக்கு இணையான தமிழ்ச்சொல். போதி என்ற சொல் ஹோதி>ஓதி என்று கன்னடத்தில் ஏற்பட முற்றிலும் வாய்ப்பு உண்டு. பள்ளிக்கூடமே கூட ஓதும் பள்ளி என்று சொல்லப்படுவதும் உண்டு. மந்திர நீர் தெளித்தலை ஓதியிறைத்தல் என்றும், மந்திரித்துத் தேங்காய் உடைத்தலை ஓதியுடைத்தல் என்றும் சொல்லுவார்கள்.

உங்களுடைய பின்னூட்டில் ஆவாகனம் என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது நெருப்பில் மட்டுமல்ல, நீரிலும் தெய்வம் வந்து வந்து இறக்கும் முறைதான். எனவே வேள்வியில் அழைப்பதை மட்டும் வைத்து சொற்பிறப்பு சொல்ல முடியாது. நாம் நினைக்கும் தெய்வத்தை (அதை ஆவி வடிவில் உருக்கொண்டு) ஒரு பொருளில் அல்லது படிமத்தில் எழுந்தருளும் படி மந்திரம் ஓதித் தெய்வத்தை அழைத்தலுக்கு ஆவி ஆகித்தல்> ஆவு ஆகித்தல் = ஆவாகித்தல் என்றே நான் பொருள் கொள்ளுகிறேன். அந்தப் படிமம், அல்லது பொருள் அதற்குப் பின்னால் தெய்வம் எனவே புரிந்து கொள்ளப்படுகிறது. நீங்கள் ஒப்புக் கொள்ளாது போகலாம். அது அது அவர்களுக்கு என்று நான் விடுக்கிறேன்.

அவி என்ற சொல்லையும் நான் தமிழ் வழியே தான் புரிந்து கொள்ளுகிறேன். அவிதல் என்பற்கு வெந்து போதல், எரிதல் என்ற பொருள் தமிழிலும் உண்டு. அள்>அழு>அகு என்ற வளர்ச்சி எரிதல் பற்றிய சொல்லிற்கு ஏற்படும். அழல்>அழனம், அழனி என்ற சொல்லை எண்ணிப் பார்த்தால் விளங்கும். ஹவனம் என்ற சொல்லிற்கு வேள்வி என்ற பொருளை நீங்கள் குறித்திருந்தீர்கள். அதையும் மேலே சொன்ன அழல் வழியாக, அழனம்>அகனம்>அவனம் என்ற முறையில் தான் நான் புரிந்து கொள்ளுவேன். அழனம் என்பது நெருப்பு, வெம்மை என்ற சொற்களைக் குறிக்கும். அவிப்பு என்பது எரிப்பு என்று பொருள் கொள்ளும். ஹகரம் வடக்கில் சேருவது இயற்கையே. அவனம் வேள்வியைக் குறித்ததில் வியப்பில்லை.

இதை நிறுவுதற்கும் பல்வேறு தொடர்புடைய சொற்களை நான் கூறலாம். அகுதல் என்பது மேலே சொன்னது போல் நெருப்பு இன்னொரு பொருளை அழிப்பதைக் குறிப்பது. அகி>அவி என்று இகரம் சேரும் வினைச்சொல், இன்னொரு பொருள் நெருப்பால் மாறுவதைக் குறிப்பது. இந்த வினைச்சொல் மாற்ற ஒழுங்கு அப்படியே தமிழ் மரபு மாறாமல் இருக்கிறது. (கற்றல், கற்பித்தல் என்ற வினைச்சொல் தொகுதியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) அவிதல் என்பது நெய்க்கு மட்டுமல்லாமல், உணவிற்கும் அமைவதைத் தமிழில் பார்க்கலாம். அதாவது அவி என்ற பயன்பாடு தமிழில் பரந்த பொருளைக் கொடுக்கிறது. அவியல், அவிசல், அவிகாயம், அவம் போன்ற சொற்கள் எல்லாம் பரந்த பொருள் கொடுக்கின்றன. வேள்வியில் அவிந்து போகும் பொருளுக்கும் அவி என்று ஆளப்பட்டது வியப்பில்லை என்றே நினைக்கிறென். "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்" என்ற கூற்றும் இதை அரண் செய்கிறது. நீங்கள் சுட்டிய "ஹவ்யவாஹன் - அவியை சுமப்பவன், அக்னி" என்பது இருபிறப்பியாய் இருக்கிறது.

இனி வேது பிடித்தல் என்று ஆவி, புகை பிடித்தலை சுட்டினீணர்கள். வெய்தல்>வேதல், எரிதல் என்பது நல்ல தமிழே. "ஹுதம் - வேள்வியில் எரிந்து பொசுங்கியது, ஹுதசேஷம் - வேள்வியில் எரிந்ததன் மிச்சம், ஹுதாசனன் - எரித்துப் பொசுக்கியதை உண்பவன், அக்னி" என்ற மூன்று சொல்லாட்சிகளுக்குமே ஹுது என்பதே அடிப்படை அதன் பொருள் எரிதல் என்பதாய் இருக்க முடியுமே ஒழிய அழைத்தல் (hve_) என்பது இருக்க முடியாது. பொகைந்தது (=புகைந்தது), பொசுங்கியது, பொதுங்கியது என்ற வினைச்சொற்கள் எரிதலைத் தொடர்ந்து எழும் வினையைக் குறிக்கும் சொற்கள். பு(=பொ)>ஹு>உ என்ற பலுக்கத் திரிவை உன்னிப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும். ஊது என்பதும் புகையைக் குறிக்கும் சொல் தான்.

அடுத்து ஹவ என்ற வினைச்சொல்லிற்கு வேட்டல் என்ற பொருளைச் சுட்டி இருந்தீர்கள். தமிழிலும் அவ்வுதலுக்கு வேட்டல் என்ற பொருள் உண்டு. வவ்வுதல் என்பது வாயால் பற்றுதலையும் (இன்றைக்கு மாறிக் கையால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது), கவ்வுதல் என்பது கையாற் பற்றுதலையும் (இன்றைக்கு மாறி வாயால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது) அவ்வுதல் என்பது மனத்தால் பற்றுதலையும் குறிக்கும் தமிழ் வினைச் சொற்கள். மனத்தால் பற்றுதல் என்பது வேட்டல், விரும்புதல் தான். அவ்வுதல் என்ற வினைச்சொல் இன்று பேச்சு வழக்கில் பயிலவில்லை என்றாலும், அவா என்ற பெயர்ச்சொல்லும், அந்தப் பெயரில் இருந்து இன்னொரு வினையாய் கிளைத்த அவாவுதல் என்ற வினையும் இன்று பயில்கின்றன. உங்கள் ஹவாமஹேக்கான இணை புரிகிறதா?

முடிவில் "ஹும் என்கிற துர்கா தேவியின் ஹுங்கார பீஜாட்சரமும் இதோடு தொடர்புடையது." என்று சொல்லியிருந்தீர்கள். ஓங்காரத்திற்கு முந்தையதாய் ஊங்காரம் தமிழில் சொல்லப்படுவதுதான். ஊங்காரம் என்பது கோவத்தின் அறிகுறி, ஓங்காரம் என்பது உயர்ச்சி, மற்றும் காப்பாற்ற வேண்டுதலின் அறிகுறி.

நீங்கள் காட்டிய எல்லாச் சொற்களையும் அழைத்தல் வினை வேரில் இருந்தே இனம் காட்டியிருந்தீர்கள். நான் அப்படி எண்ணுவதில்லை. இவை வெவ்வேறு வேர்களில், அதே பொழுது யாகம் செய்யும் போது ஏற்படும் வினைகளில் இருந்து, எழுந்தவை என்று எண்ணுகிறேன். அவற்றை நான் புரிந்தவாறு மேலே இனம் காட்டியிருக்கிறேன்.

நான் கூறியவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. மீறி இதையும் ஒரு "crackpot theory" என்று நீங்கள் சொல்லலாம். எனக்குக் கவலையில்லை. சொற்பிறப்பியலில் இதுதான் சரி என்று முடிந்த முடிவாக யாரும் சொல்லுவதில்லை. சொற்பிறப்புக் காணுவதை ஒரு தொடர்ச்சியாகவே பலரும் பார்க்கிறார்கள். இன்றைக்குச் சரியென்று தோன்றுபவை நாளைக்குப் புதுத் தரவும், ஏரணச் சிக்கலின் மறுபார்வையும், புதிய நடைமுறைகளைக் கொண்டு தரும். நான் மோனியர் வில்லியம்சு தருவதை இறுதியானது என்று கொள்ளுவதில்லை; அதே போலத் தமிழில் பாவாணர் சொல்லுவதையே கூட முடிவானது என்று சொல்லுவதில்லை. நான் சொல்லுவதையும் மறுத்து இன்னொருவர் இனிச் சொல்லக் கூடும். அது சரியாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுவேன்.

எந்த மொழியும் வழிபாட்டுக்குரியது என்று என்னால் ஏற்க முடியாது. சங்கதமும் அதற்கு விலக்கல்ல. என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கும். உங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 27, 2007

ஓதி - 2

hotri என்பதற்கு வேராக, hu (to sacrifice, to eat, to please; deri. huta, hutva_, ho_tum) என்ற தாது பாடத்தின் மூன்றாம் வகை வேர்ச்சொல்லைத் தான் மோனியர் வில்லிம்சு காட்டும். [hve_ (to vie with, to challenge, to call, to ask, to invoke; der. hu_ta, hve_ya, hva_tum, a_hu_ya) என்ற முதல் வகை வேர்ச்சொல்லை மற்ற மேற்கோள்கள் தான் அடையாளம் காட்டும்; மோனியர் வில்லிம்சு காட்டுவதில்லை. நீங்கள் சொன்ன ho என்பது தாது பாடத்தில் இந்தப் பொருள்களில் கிடையாது; இருந்தாலும் அது hve_ என்பதோடு தொடர்பு கொண்டது; எனவே அதுவும் எனது கருத்தில் உள்வாங்கக் கூடியது தான். நான் மேலே கொடுக்கும் வேர்ப்பொருள்கள் பட்டோ ஜி தீக்ஷிதரின் சித்தாந்த கௌமிதியில் இருந்து எடுத்தவை.]

முன்னே சொன்னது போல், தாது பாடம் வேர்ப் பொருளைக் காட்டுவதற்கு மேலே நகராது. இவற்றை எல்லாம் நீட்டி முழக்கி தெள்ளிகை இடுகையில் நான் எழுதியிருக்கலாம் தான். ஆனால், ஹோத்ரி என்பது அந்த இடுகையில் என் முகன்மைச் செய்தியல்ல, அதனால் ஒரு குறுவிளக்கம் மட்டுமே சொல்லி நகர்ந்து விட்டேன்.

அடிப்படையில் hotri என்ற சொல்லிற்கு மேலே சொன்ன ஆகுதி இடுவது (to sacrifice; அல்லது to pour), அழைப்பது (to call) என்று இரண்டாகவும் பொருள் கொள்ளுவார்கள். [ஆனாலும், சொற்பிறப்பிலார்களிடம் இதுவா, அதுவா என்ற வேறுபாடு இன்னும் போகவில்லை.] இவற்றில் எது முதற்பொருள், எது வழிப்பொருள் என்பதை அறிய இன்னும் ஆழம் போகவேண்டும். வேண்டுமானால் கூகுள் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். [காட்டாக "telephone" என்பதில் முதற்பொருள் தொலைவில் இருந்து வரும் ஒலி/பேச்சு என்பதே. வழிப்பொருள் அந்தப் பேச்சுக்கருவிக்கு உள்ள பெயர்.] எது விதப்பான பொருளோ, அதையே முதற் பொருளாகக் கொள்ளுவது மொழியியலில் உள்ள பழக்கம். அந்த வழக்கில், to call என்ற பொருள் முதற் பொருளாயும், to sacrifice/to pour என்பது வழிப்பொருளாயும் அமைய பெருத்த வாய்ப்புண்டு. [இந்தச் சிந்தனை மோனியர் வில்லிம்சிற்கு மாறுபட்டது. மோனியர் வில்லிம்சை விவிலியம் போல் கருதுபவர்க்கு அது முரணாகத் தெரியலாம்.]

இது ஏன் என்பதை உணர, to sacrifice / to pour என்பதை முதலிற் பார்க்க வேண்டும். தீ அணையாது இருக்க நெய் போன்ற ஆகுதிப் பொருட்களை ஓம குண்டத்துள்ளே ஊற்றுவது, சொரிவது, கொட்டுவது, போடுவது, எறிவது, வீசுவது என்றே அந்த வேர்ச்சொல்லுக்குப் பலரும் பொருள் கொள்ளுவார்கள். தமிழில் உகு-த்தல் வினையில் இருந்து ஊ-ற்றல் என்னும் வினை எழும். (நீர் உகுத்தல்; நெய் உகுத்தல்) உகுத்தலின் பகுதியான உகு>ஊ என்பது hu என்ற வடமொழி வேரொடு, தொடர்புடைய ஒரு ஒலியிணை தான். அது வடமொழிக்கு மட்டுமே விதப்பாக உள்ள வேரல்ல. தமிழிலும் உள்ள வேர் தான். இயன்மை என்பது இங்கே இரண்டு மொழிகளுக்கும் பொதுவாய் இருக்கிறது. உகு என்னும் வேர் பர்ரோ எமனோவின் திராவிட சொற்பிறப்பியல் அகரமுதலியில் 562 ஆம் சொல்லாகக் குறிப்பிடப்படும். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

562 Ta. uku (ukuv-, ukk-) to be shed as feathers or hair, be spilled, gush forth, fall down, die, set; (-pp-, -tt-) to let fall, spill, scatter, cast, shed as leaves or feathers, shed (fear), pour out; ukuvu spilling. Ma. ūkka to spill, shed. Ko. u·c- (u·c-) to be spilt; spill (tr.), pour (water, grain), pour off (water from grain). To. u·c- (u·&cangle;-) to throw away (dirty water); ux- (uk-) to leak, dribble; uf- (ufQ-) to fall down (of flowers or fruit); (uft-) to shake off (water from head, dust, mud), empty (bag of grain), throw (spear), shout (words of song, nöw). Ka. ugu (okk-) to become loose, burst forth, flow, run, trickle; be shed or spilt; let loose, etc.; vomit; ugisu to spill, shed, etc.; ogu, ogisu = ugu, ugisu. Tu. guppuni to pour, shed, spill; (B-K.) ugipu id. Kor. (T.) ogi to pour. Te. ūcu to fall off as hair from sickness; guppu to throw, fling, sprinkle (as something contained in the closed hand), discharge (as an arrow). Pa. uy-, (S) uv- (hair) falls out. Malt. ogoṛe to tumble down, be rolled down; ogoṛtre to roll down. DED(S, N) 480, and from DED 1443.

"hu, உகு என்னும் வேர்ச்சொற்களில் எது முதல்? சங்கதமா? தமிழா?" என்ற குடிமிப் பிடிச் சண்டைக்குள் நான் இறங்குவதில்லை. என்னுடைய முயற்சிகளெல்லாம், ஒரே பொருளில் ஒரே மாதிரி ஒலியமைப்புக் கொண்ட, வரலாற்றில் ஒரே பொழுது இருந்த, இருவேறு மொழி வேர்களின் இணை கண்டால் அவற்றைப் படிப்போருக்கு அடையாளம் காட்டுவது என்றே இது நாள் வரை அமைந்திருக்கின்றன. அப்படிக் காட்டுவது ஒரு ஆய்வுப் பணி என்றே நான் எண்ணி வருகிறேன். நெடுநாட்களாக, நாவலந்தீவின் மரபுகளைச் சங்கதம் வாயிலாகவே காட்டி உயர்ச்சிகொள்ளும் போக்கு இருந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கத் தேவையில்லை. இன்னொரு செம்மொழியான தமிழிலும் தோற்றங்கள் இருக்கலாம் என்ற சிந்தனையே பலருக்கு மருட்டுவதாய் இருக்கிறது. என்னை, இதற்காகவே சாடுகிறவர்கள் சாடி விட்டுப் போகட்டும். கவலையில்லை. உங்களுடைய "crackpot theory" என்ற வாக்கும் இன்னொரு சாடல், அவ்வளவு தான்.

"இரானியப் பழக்கங்களும், வேதப் பழக்கங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, அதே நேரத்தில் மற்ற இந்தையிரோப்பியர்களோடு பொதுமை இல்லாத பழக்கங்களில் ஒன்றாக, இந்த வேள்விப் பழக்கம் இருக்கிறது" என்று இந்தையிரோப்பியத்தின் அறுதப் பழங்காலத்தை ஆய்வு செய்கிறவர்கள் சொல்லுகிறார்கள். இந்தப் பழக்கங்களில் "எலாமோ-திராவிடத் தாக்கம்" இருக்குமோ என்றும் பலர் அய்யுற்றுக் கொண்டிருக்கிறார்கள். "இந்தப் பழக்கம் ஏன் நாவலந்தீவு சார்ந்த, அதே பொழுது அருகில் உள்ள பகுதிகளையும் சார்ந்தாற் போல், இருக்கக் கூடாது?" என்ற கேள்வியும் பலருக்கு எழுகிறது. தமிழ், மற்றும் தமிழிய மொழிகளின் அன்றைய அகற்சி இன்றையத் தமிழ் நிலப் பரப்போடு மட்டுமே ஒடுங்கியது இல்லை; அவை 3500 ஆண்டுகளுக்கு முன்னால் வடபுலத்தும் கூடப் பரவியிருந்திருக்கலாம் என்ற சிந்தனையும் வலுப்பட்டு வருகிறது. வேள்வி பற்றிய பல அடிப்படைத் தமிழ்ச் சொற்களும், அவற்றின் மற்ற துறைப் பயன்பாடுகளும் இந்த அய்யப் பாட்டைக் கூட்டிக் கொண்டு போகின்றன. ஆனால் சங்கதம் பற்றிய மூட நம்பிக்கையும், "நான் உயர்ச்சியா, நீ உயர்ச்சியா" என்ற விவரங்கெட்ட வறட்டுத்தனமும், பல சங்கத ஆய்வாளர்களை நாவலந்தீவின் இன்னொரு பகுதியான தமிழ்ப் பக்கத்தையும், இது போல முண்டா மொழிப் பக்கத்தையும் (இதைக் காணாது இருப்பதில் தமிழாய்வாளர்களும் சேர்த்தி தான்.) காண விடாது ஒதுக்கி வைக்கவே சொல்லுகின்றன. "ஸ்ர்வம் ஸ்வ்யம்" என்ற சிந்தனை அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது.

ஊற்றுவது, சொரிவது, கொட்டுவது, போடுவது, எறிவது, வீசுவது என்ற சொற்களெல்லாம் ஓம குண்டத்தில் போடாத (நீர்மம், மற்றும் திண்மப்) பொருள்களுக்கும் பயன்படும் ஒரு வினை தான். அதே பொழுது, இந்த வினைச்சொற்கள் ஓமகுண்டத்திற்கே மட்டுமே உரியவை என்ற விதுமையாகச் சொல்லமுடியாது. வடமொழியிலும் கூட இப்படித் தான். அதனால் தான் வேள்வியைப் பற்றிச் சொல்லும் போது to pour என்பதைக் காட்டிலும், to call என்பதைச் சொல்லும் வேரில் இன்னும் பொருள் ஆழம் இருக்குமோ என்று அய்யுறுகிறோம்.

பல மொழிகளிலும் அழைப்பு என்பது பெரும்பாலும் கூவுதலே. ஆ, ஈ, ஏ, ஓ, கூ, கோ என்ற ஓரெழுத்துச் சுட்டுக்கள் தான் அழைத்தலுக்கு வாகாய், பல மொழிகளில் அமைகின்றன. இவை மொழி கடந்த ஒலிக்குறிப்புக்கள். நாளாவட்டத்தில், இது போன்ற ஒரு ஒலிக்குறிப்பைச் சத்தம் போட்டுச் சொல்லி பின்னால் பெயர்களையும் சேர்த்து நாம் அழைக்கிறோம். கூப்பிடுவதில் தேவதைகளுக்கு ஒருவிதம், மாந்தருக்கு இன்னொரு விதம் என்று யாரும் பார்ப்பதில்லை. எல்லாமே ஒன்றுதான். இங்கே மீண்டும் தமிழ்க் காட்டைத் தருகிறேன். [அய்யய்யோ, இவன் அப்பத்தாவைப் பற்றியே பேசுகிறான். எத்தனை வெள்ளைக்காரரை, எத்தனை சங்கத அறிஞரை இவன் அடையாளம் காட்டுகிறான், சமஸ்கிருதமாய நமக என்று சொல்லுகிறான்? - என்ற ஒரு சிலரின் புலம்பலுக்குச் சிரிப்புத் தான் என் விடை :-).] மற்ற மொழிகளில் இருந்தும் காட்டுக்களைச் சொல்ல முடியும். ஆனால் தேட விழைபவர்கள் தாங்களே தேடிப் பார்க்கட்டுமே? :-)

"அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே, அன்பினில் விளைந்த ஆரமுதே" என்ற ஏகார, ஆகாரமும், "பித்தா, பிறைசூடி, பெம்மானே, அருளாளா" என்ற ஆகார, ஈகார, ஏகாரங்களும், "ஓ, கண்ணா, இங்கே வா" என்ற ஓகாரமும் (ஓவென வையகத்து ஓசைபோய் உயர்ந்ததே - சீவக. 1843), "யோவ், ஓவ்," என்ற கூப்பாடுகளும், கூவுதலும், கோவென்ற அழுகையும் என எல்லாமே அழைப்புக்கள் தான். இந்த மொழிகளுக்கு மீறிய, மாந்தப் பொதுச் சுட்டொலிகளில் இருந்துதான், hve_ போன்ற வேர்ச்சொல்லும் கூட எழும். ஏ என்ற ஒலியோடு ஹகரம் சேர்த்து ஹே என்றும் வடபுலத்தில் கூப்பிடுவார்கள். he_ என்பதற்கும் hve_ என்பதற்கும், hey என்ற பதற்கும் கூடப் பலுக்கலில் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. (மறுபடியும் ஒரு மொழியில் இருந்து இன்னொன்று என உணர்வு பூர்வமாய்ப் புரிந்து கொள்ளாதீர்கள்.) அதே போல ஓ என்பதை ஹோ என்று வடபுலத்தில் கூப்பிடுவார்கள். கூ என்பது கூட பலுக்கத் திரிவில் கோ என்றும் ஹோ என்றும் மாறும்.

வேதம், குறிப்பாக இருக்கு வேதம், யாகங்களின் போது பல் வேறாகத் தேவதைகளை அழைக்கிறது. எல்லா யாகங்களுக்குமே "இதைப் பண்ணிக் கொடு, அதைச் செய்து கொடு" என்ற வேண்டுதல்கள் தான் அடிப்படை. வேள்தல்>வேட்டல் என்ற தமிழ் வினைச்சொல்லையும் கூட இங்கே நினைவு கொள்ளுங்கள்.
வேட்டலின் தமிழ்வேரை பர்ரோ, எமெனோவின் 5544 வது சொல்லாகப் பார்க்கலாம்.

5544 Ta. vēḷ (vētp-, vēṭṭ-) to offer sacrifices, marry; n. marriage; vēḷvi sacrifice, marriage; vēḷvu sacrifice; presents of food from the bridegroom's to the bride's house and vice versa at a wedding; vēṭṭal marriage; vēṭṭāṉ, vēṭṭōṉ husband; vēṭṭāḷ wife; viḷai (-pp-, -tt-) to perform as worship. Ma. vēḷvi, vēr̤vi sacrifice; vēḷkka to marry as brahmans before the holy fire; vēḷi, vēḷvi marriage, bride, wife; vēḷppikka fathers to marry children. Ka. bēḷ to offer into fire or with fire as ghee, animals, etc.; bēḷuve oblation with fire, burnt-offering; bēḷamba destruction of human life in fire. Tu. belcaḍe a devil-dancer, one possessed with Kāḷī. Te. vēlucu to put or throw in a sacrificial fire, offer up a burnt sacrifice; vēl(u)pu god or goddess, deity, divinity, a celestial, demi-god, immortal; vēlpuḍu worship; vēlimi oblation; (inscr.) vēḷpu god. DED(S, N) 4561.

வேள்தலின் ஒரு நடைமுறை, படிமம் இல்லாத வகையில் நெருப்பில் ஆகுதி செய்யும் முறை. வேள்தலின் இன்னொரு நடைமுறை பூவும், நீரும் தெளித்து, படிமத்தின் முன், படையல் செய்யும் வழிமுறை. இதுவும் ஒரு வேள்வி தான்; ஆனால் நெருப்பு இல்லாத வேள்வி; பூசை என்ற பெயரால் இதைச் சொல்லுகிறோம்.

சிவகங்கை வட்டார அய்யனார் கோயில்களில் பூசை செய்பவரை, வேள காரர் என்று தான் சொல்லுவார்கள். இன்னொரு இடத்தில் "வேளாப் பார்ப்பான்" என்று வேள்வி செய்யாத பெருமானரைச் சங்க இலக்கியம் பேசும். ஆகக் குறிக்கோள் ஒன்றுதான்; நடைமுறைகள் தான் வெவ்வேறு. [அய்யனார் கோயில் வழக்குகளை இன்னோர் இடத்தில் பார்க்கலாம். இப்பொழுது பெருமானர் வேள்வியைச் சற்றே கூர்ந்து பார்ப்போம். இந்த வகையில் நம்பூதிகள் சிறப்பானவர்கள். வணக்கத்திற்குரிய ஓதிகள் என்ற பொருளில் அமைந்த நம் ஓதிகள் என்ற அவர்கள் பெயரும் கூட நான் சொல்ல வரும் கருத்தை உறுதி செய்யும். அவர்களுடைய வலைத்தளங்களுக்குப் போனால், வேள்விகள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக விவரிக்கப் பட்டிருக்கும்.]

பெருமானர் வேள்வியின் தொடக்கம், அதை ஏற்பாடு செய்பவன் வீடு, அல்லது அவனுடைய குருவின் வீட்டில் இருக்கும் அடுப்பில் இருந்து தொடங்குகிறது. அந்த அடுப்பில் இருந்து தான், நெருப்பை யாகத்தில் ஏற்றுகிறார்கள். யாகம் தொடங்கும் போது யாகத்தை ஏற்பாடு செய்பவனும், அவன் மனைவியும், யாகம் செய்யும் 16 ஓதிகளும் அழனியைத் துதிக்கும் இருக்கு வேதத்தின் முதற் சொலவத்தைச் (slogan) சொன்னவாறே யாகக் குண்டத்தைச் சுற்றி வருகிறார்கள்.

[ஒவ்வொரு பெருமானனும் தங்கள் வீட்டில் அணையாத நெருப்பை ஓம்புதற்குக் கடமைப் பட்டவர்கள். ஒவ்வொரு பெருமானனும், அவன் மனைவியும் தங்கள் வீட்டில் ஒரு நாளுக்கு இருமுறையாவது அழனியைத் தூண்டி, அழனியை அழைத்து, மந்திரம் ஓதி, வழிபாடு செய்யவேண்டும். அந்தச் சடங்கிற்கும் அழனியோதல் - agnihotra என்ற பெயர் தான் உண்டு. இன்று மிக மிக அருகியே பெருமானர் பலரும், தங்கள் வீட்டில் நெருப்பை ஓம்பும் கடமையைச் செய்கிறார்கள்.] ஓமம் என்ற சொல் அணையாது காப்பாற்றப்படும் தீயைத் தான் குறிக்கிறது. ஓமுதல், ஓம்புதல் என்ற சொற்கள் இன்றும் கூடக் காப்பாற்றுதல், வளர்த்தல் என்ற பொருளைத் தமிழில் கொடுப்பதை உணரலாம். குடிபுறம் காத்து ஓம்பி - குறள் 549; ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் - பொருநர் ஆற்றுப்படை. 186 கற்றாங்கு எரியோம்பி தேவா. 1.1). ஓமல் என்ற சொல் புகையெழுதலையும், புகையைப் போலவே எழுந்து ஊர் முழுக்கச் சுற்றிவரும் ஊர்ப்பேச்சையும் குறிக்கும். இந்தப் பொருட்பாடுகளும் ஓமம் என்ற சொல்லின் தமிழ்மையை உணர்த்தும். எரிதலை உணர்த்துவது போல நாவில் எரிதல் உணர்வைக் கொண்டுவரும் ஒருவிதமான காரமான மருந்துச்செடியும் கூட ஓமம் (Bishop's weed) என்றே தமிழில் சொல்லப்படும். ஓமநீரம் = ஓமச்சாறு; இன்னொரு பொருளாய், ஓமநீரம் என்பது வேள்வித் தீயில் நெய் முதலியன பெய்கையைக் குறிக்கும். offering an oblation to the gods by pouring ghee etc. into the consecreted fire.

யாகம் செய்யும் 16 ஓதிகளில், hotri என்பவர் யாகத்தின் போது இருக்கு வேத மொழிகளை ஓதுகிறவர். பல அகரமுதலிகளும் hotr என்பதற்கு reciting priest என்றே சொன்னாலும், அவர் இருக்கு வேதம் ஓதுகிறவர் என்பதே முகன்மையான செய்தி. recitation என்பது தமிழில் ஓதுதலே. யாகத்தின் போது செய்யும் ஆகுதிகளை குண்டத்தில் கொட்டுவதோடு, இருக்கு வேதத்தின் முதல் எட்டு மண்டலங்களில் இருந்து இந்த ஹோத்ரி ஓதுகிறார். (ஒன்பதாவது மண்டலம் சோமச் சாறு பற்றியது. அதைப் பேசினால் நான் சொல்ல வந்தது விலகிப் போகும்.] இந்த hotr போக, இன்னும் மூன்று பெரிய ஓதிகள் யாகத்திற்கு என உண்டு. யசுர் வேதச் செய்திகளைக் கூறி யாகத்தின் மானகையைக் (management) கவனிக்கும் Adhvaryu, சாம வேதத்தைப் படிக்கும் Udgatr (அல்லது chanting priest - பதனை என்ற பஜனையைச் செய்பவர்; பதங்களைத் தொடுப்பது பதனை.), இவர்களுக்கு மேலிருந்து மொத்த யாகத்தையும் கவனிக்கும் பெருமானன் அல்லது அதர்வன் ஆகிய மூன்று பேரும் இந்த மூன்று ஓதிகள் ஆவர்.

அன்புடன்,
இராம.கி.

ஓதி - 1

என்னுடைய தெள்ளிகை - 2 இடுகைக்கு கல்வெட்டு ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் பின்னூட்டியிருந்தார். அதன் மறுமொழி இங்கு தனிப்பதிவாகிறது: [சட்டென்று இதை எழுத முடியவில்லை. என்னுடைய அலுவலுக்கு நடுவில், இரவு விழித்திருந்து, கொஞ்சம் சரிபார்த்து, மூன்று நான்கு வரைவுகளுக்குப் பின்னால், இதைப் பதிவிட வேண்டியதாயிற்று. அதற்குள் சில விடலைக் காவிக் குஞ்சுகளுக்குப் பொறுக்க வில்லை போலும்; வழக்கம் போல, சேற்றை அள்ளித் தெளிக்கத் தொடங்கிவிட்டன. மருமகள் என்ன சொல்லப் போகிறாள் என்று மாமியார் காத்திருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்; ஆனாலும் இப்படியா? இவர்களின் லொள்ளு அளவுக்கு மீறுகிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு விடை சொல்ல மட்டுமே, நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேனா, என்ன? ;-)]
--------------------------
அன்பிற்குரிய திரு. எஸ். இராமச்சந்திரன்,

"நீங்கள் சமஸ்கிருதத்தில் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களுக்கு சமஸ்கிருதத்தில் புலமை அவ்வளவாக இல்லை. நீங்கள் அந்த மொழியை ஓரளவு நன்றாகக் கற்றுக் கொண்டால் இத்தகைய முயற்சிகளில் பிழைகள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட உங்கள் முயற்சிகளை எள்ளி நகையாட வாய்ப்புள்ளது." என்று எழுதியிருந்தீர்கள்.

உங்களைப்போல் நானும் சங்கதப் பண்டிதன் அல்லன்; பேசத் தெரியாது. ஆனால் சங்கதச் சொல்லறிவு ஓரளவு பெற்றவன். என்னுடைய பிழைகளை, அறிந்தவர் சொன்னால், திருத்திக் கொண்டு தான் வருகிறேன். தோளில் கைபோட்டும், வாயால் பேச வைத்தும், "சங்கதம் தேர்ந்தவனா?" என்று நோடிப் பார்க்கின்ற காலமெல்லாம் மலையேறி விட்டது, அய்யா! என் சங்கத மொழி அறிவை, எந்த அளவு, எங்கிருந்து, எப்படிப் பெற்றேன் என்பதைத் தேர்வெழுதிச் சான்றிதழ் காட்டி நிறுவத் தேவையில்லை.

இப்படித்தான் நண்பர் ஒருவர் "எந்த peer journal-ல் நீ கட்டுரை வெளியிட்டிருக்கிறாய்? தமிழில், இந்தியவியலில் என்ன பொத்தகம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்பார். நீங்கள் கேட்பதும் அது போலவே இருக்கிறது. துறைக்கு உள்ளே வெளியாள் புகாமல், வரம்பிட்டு, வேலியிட்டுப் புலத்தைக் காக்கும் இந்தியப் பல்கலைச் சட்டாம் பிள்ளைகளுக்கும், புதிய சாதிப் போக்கிற்கும் (பழையதில்லை, உருவகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்), நான் எங்கே விடை சொல்ல முடியும்? :-)

மும் மூன்று புள்ளிகளாய், 3 அடுக்கில் 9 புள்ளிகளை வைத்து, கையெடுக்காமல், 4 நேர்கோடுகளால் சேர்க்கச் சொல்லி மானகை (management) வகுப்புக்களில் ஒரு புதிர் போடுவார்கள்; அதற்கு விடை காணும் போது தான், "மரபுச் சிந்தனை என்பது நம்மை அறியாமலேயே கட்டிப் போடுவதையும், அந்த மரபு வேலியை உடைத்தால் தான் புதுப் பரிமானங்கள் புரியும், புது இயன்மைகள் (possibilities) தெரியும்", என்பதையும் அறிந்தேன். மொழியாய்வும் கூட அப்படித்தான். கிளிப்பிள்ளை போல், எல்லாவற்றிற்கும் "பாணினி சொன்னான், தாது பாடம் சொன்னது" என்பதும், "தொல்காப்பியன் சொன்னான், நச்சினார்க்கினியன் உரை செய்தான்", என்பதும் நெடுந்தொலைவு நம்மை எடுத்துச் செல்லாது என்பது என் புரிதல்.

தெள்ளிகை பற்றிய என் இடுகை இன்னும் முடியாதது. [இடையில், தனித்தமிழ் பற்றி ஒரு தொடர் இடுகை இட வேண்டிய கட்டாயத்தில், எடுத்த வேலை பாதியானது.] அதில் ஹோத்ரிக்கும் ஓதலுக்கும் இணை சொன்னது ஆழ்ந்து ஓர்ந்து சொன்னது தான். இணை என்றதைக் கூர்ந்து கவனியுங்கள்; "இதிலிருந்து அதா, அதிலிருந்து இதா" என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்ல இன்னும் ஆய வேண்டும். (இந்தப் பதிவுலக அரசியலில் "தமிழ் தான் எல்லா மொழிகளுக்கும் அப்பத்தா" என்று நான் சொன்னதாய் ஒருசில பெயரிலார்கள் (வித விதமாய்க் கற்பனைப் பெயர்களில் வருபவர்களும்) வரிப்பிளந்து அருத்தம் பண்ணி எழுதியதைப் படித்துச் சிரித்தேன். பாவம், விளங்காதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய காவி நிகழ்ப்புகளைத் தொடர்ந்து நடத்துவார்கள். :-))

"crackpot theory" என்ற தங்கள் சொற்றொடரைப் படித்தும் கூடச் சிரித்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் இதுபோன்ற வாக்கியங்கள் வந்து விடுகின்றன? குறைந்தது, மோனியர்-வில்லியம்சையும், பாணினியையும், தாதுபாடத்தையும், பர்ரோ-எமெனோவையும் கூடப் பாராமலா, இது போன்ற கருதுகோளை முன் வைப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தங்களைப் போன்ற ஓர் ஆய்வாளருக்கு இது கூடவா தெரியாது? இந்தக் காலத்தில் தான் கூகுள் சொடுக்கியைத் தட்டினால் கணக்கு வழக்கற்று, செய்திகளைக் கொட்டுகிறதே? அப்புறமும் தமிழ் ஆய்வாளர்கள் கிட்டப் பார்வையுடன் இருப்பார்களோ? இதில் என்ன வருத்தம் என்றால், எங்களைப் போன்ற ஆய்வர்களை இன்னமும் 1950, 60 நிலையிலேயே நீங்கள் வைத்துப் பார்க்கிறீர்கள், பாருங்கள், வியப்புத் தான்.

பொதுவாக, சங்கதச் சொற்களைப் பகுத்து, ஒட்டுருபுகளை வெட்டி, இனியும் பக முடியாது என்ற அளவில், அடிப் பகுதிகளைத் தேடினால், அது தாது பாடத்தின் 2200 வேர்களில் தான் வந்து நிற்கும் என்பது சங்கதம் படிக்கும் ஒவ்வொரு மொழியியல் மாணவனுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்.

சந்த மொழிக்குப் பாணினியின் பங்களிப்பு பெரிது தான்; சந்தமும் சங்கதமும் நெருங்கியவையே. என்ன ஒரு சிக்கல்? பாணினி சொல்லும் முறை இந்த 2200-ஓடு நின்று விடும்; மேற்கொண்டு நகராது. அது அவன் குறையில்லை. இந்தப் பகுப்பாய்வின் விளிம்பு அதுதான். "இந்த 2200ம் திடீரென்று பிறந்தனவா? ஓர் இயல்மொழிக்குள் அப்படிப் பிறக்க முடியாதே? அவற்றின் பொருட்பாடுகள் எப்படி வந்தன? அவற்றுள் உள்ள பொருட்பாட்டு வளர்ச்சி என்ன? முதல் வேர்கள் எவை? வழி வேர்கள் எவை?" போன்ற கேள்விகளுக்கு பாணினியில் விடை கிடைக்காது. தாது பாடத்தோடு நின்று போவதால் சொல் வளர்ச்சி அறிய முடியாது.அங்கே பலுக்கத் திரிவுகள் கணக்கெடுக்கப் படுவதில்லை. (தொல்காப்பியத்திலும் கூட இது செய்யப்படுவதில்லை. பாணினியும், தொல்காப்பியமும் அவ்வம் மொழிகளின் இலக்கணங்கள்.) ஒப்பீட்டு மொழியியல், குறிப்பாக, வரலாற்று மொழியியல், இந்தத் திரிவுகளைக் கணக்கெடுத்துக் கொள்ளும்.

"ஒரு இயல் பேச்சு மொழியில், இந்த 2200 வேர்களும் ஒன்றிற்கொன்று தொடாதவையா? அன்றி வட்டாரப் பலுக்க விதப்பில் (regional pronunciation specificities; தமிழில் மகரத்திற்கு வகரம் போலி என்கிறோமே அது போல, வங்கத்தில் வகர ஒலிப்பைப் பகர ஒலிப்பாக்கிச் சொற்களை மாற்றிப் பலுக்குகிறார்களே அதுபோல) ஒருசில ஒப்புமைகள் இராதா?" என்று ஆழமாய்ப் போய், ஆகக் குறைந்த அடிவேர்களைத் தேடும் ஆய்வை, இந்தக் காலத்தில் ஒரு சிலர் செய்ய முற்படுகிறார்கள்.

அதோடு இந்த 2200 -யையும் மற்ற இந்தையிரோப்பியன் மொழிகளின் வேர்களோடும் இணைத்துப் பார்த்து, "அந்தக் குடும்ப முழுமையிலும் எவ்வளவு பொதுமை (genericity) இருக்கிறது? முது-இந்தையிரோப்பிய வேர்கள் எவ்வெவை? இந்தோ இரானியன் குடும்பத்திற்குள் எவ்வளவு பொதுமை இருக்கிறது? நாவலந்தீவினுள்ளேயே வெளிப்பட்ட விதுமைகள் (specificities) எத்தனை? திராவிடத்தில் இருந்து கடன் வாங்கப்பட்ட வேர்ச் சொற்கள் எத்தனை? முண்டா மொழிக் குடும்பத்தில் இருந்து உருவானவை எத்தனை?" - என்ற கேள்விகளும் இப்பொழுது ஆய்வு செய்யப் படுகின்றன.

இது போன்ற கேள்விகளில் நான் ஆர்வம் உள்ளவன். என் ஆர்வம் சங்கதத்தை நடுவண் வைத்துப் பார்ப்பதல்ல; தமிழை அருகே பொருத்தி வைத்துப் பார்ப்பது. நான் ஒரு நோஸ்ட்ராட்டிக் (Nostratic) சார்புப் பேர்வழி. தமிழியக் குடும்பம், இந்தையிரோப்பியத்திற்குச் சற்று விலகிய, ஆனால் அதோடு தொடர்புள்ள குடும்பம் என்றே எண்ணுபவன். இதெல்லாம் தெரியாத அல்லது புரியாத சங்கத வழிபாட்டு வலைப்பதிவர்களும், சட்டாம் பிள்ளைகளும், சில விடலைப் பிள்ளைகளும், "சங்கதத்தை குறைத்துச் சொன்னேன்" என்று வறட்டுத் தனமாக, முட்டாள் தனமாகப் புரிந்து கொள்ளும் அடிப்படைவாதிகளும், குதித்துக் கொண்டு வருகிறார்கள். என்னவென்று தெரியாமல், இந்த அரசியலுக்குள், நீங்களும் உள்புகுந்து நிற்கிறீர்கள்.

சரி, நான் சொன்ன சொல்லிணைக்கு அடுத்த பகுதியில் விளக்கம் கொடுக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, February 21, 2007

தனித் தமிழ் - 5

இந்தத் தொடர்வரிசைக் கட்டுரைகளில் இப்போதைக்கு இதுதான் கடைசிக் கட்டுரை.

"தனித் தமிழ் என்ற பெயரில் இடையில் வழங்கிய சலிப்பூட்டும் போலி நடையில் எழுதிய காழ்ப்புணர்ச்சி உமிழும் சமாசாரங்களைக் காலமே கபளீகரம் செய்துவிட்டது. அதிலிருந்து எழும் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கும் ஒருவரது எழுத்து நடை பற்றி "காலத்துக்கு ஒவ்வாதது" என்று நான் செய்த சாதாரண விமரிசனம் பற்றி "ஐயகோ, ஐயாவை அவமதித்து விட்டார்கள்" என்று தமிழ்த் தாலிபான்கள் கூட்டம் ஒன்று கூப்பாடு போட்டுக் கத்திக் கொண்டிருக்கிறது என்பதாகக் கேள்வி. Come on, get a life, guys!" என்று மேலும் சொல்லுகிறார் திரு.ஜடாயு.

திரு.ஜடாயுவுக்குத் தன்னுடைய நடையே, ”எப்படி எழுந்தது? எந்த இயக்கத்தின் தாக்கம்?” என்று அறியாமலேயே அவருள்ளே இருந்திருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை. 19ம் நூற்றாண்டு, அல்லது 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்த தமிழ்நடையைக் கொஞ்சம் அவர் ஆய்ந்து பார்த்திருந்தால், ”எது சலிப்பூட்டும் நடை? எது கபளீகரம் செய்யப்பட்டது?” என்று அவருக்குப் புரிந்திருக்கும். பட்டகைகளைப் (facts) பார்க்காமலேயே வெறும் கருத்தியலில் கற்பனை வாதத்தை அள்ளித் தெளிப்பவருக்கு, தமிழ் நடை காலகாலமாய் எப்படியெல்லாம் மாறியது, எங்கு போனது, எப்படித் திரும்பி வந்தது, எத்தனைமுறை சீரழிந்து பின் உருப்பட்டது என்ற வரலாறெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. பூனை தன் கண்னை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிட்டதென்று எண்ணுமாம். அதுபோல் கருத்து முதல் வாதமாய் எதையோ நினைத்துக் கொண்டு காவிக் கண்ணாடி போட்டுப் பார்த்தால், உலகமே காவியாய்த் தான் தெரியும். அதனால் தான் தாலிபான்கள், மிசனரிகள் என்ற பார்வை அவருக்கு வந்துசேருகிறது. இவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால், அப்புறம் வரலாற்று உண்மைகள் என்பவை என்ன ஆவது?

கீழே 97 ஆண்டுகளுக்கு முந்திய ஒருவரின் நடையைக் குறித்திருக்கிறேன்.
-------------------
தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரமுதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப் பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும். 'ஸ்லேட்', 'பென்ஸில்' என்று சொல்லக் கூடாது
..............
மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை, இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 'அவயவி' சரியான வார்த்தை இல்லை, 'அங்கத்தான்' கட்டி வராது, 'சபிகன்' சரியான பதந்தான். ஆனால் பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். 'உறுப்பாளி' ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை, என்ன செய்வேன், கடைசியாக 'மெம்பர்' என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்.
..............
தமிழ்நாட்டில் முழுதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நம் பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது.
-------------------------------

மேலே வருவது 1920ல் "தேசியக் கல்வி" என்ற கட்டுரையின் நிறைவில் பாட்டுக்கொரு புலவன் என்று நாமெல்லாம் பெருமைகொள்ளும் பாரதி எழுதிய பகுதி. அன்றைய உரைநடை அப்படித்தான் இருந்தது. நல்ல தமிழில் பாவெழுதிய பாரதி தன் உரைநடையை அன்றைய மணிப்பவள நடையில் தான் எழுதினான். (பலருக்கும் இம்முரண்பாடு வியப்பாய்த்தான் இருக்கிறது.) இம் மணிப்பவள நடையையா இப்பொழுது திரு.ஜடாயு எழுதுகிறார்? குறைந்தது வ்யவஹாரங்கள், தமிழ்பாஷை, ப்ரசுரம், ஸ்தாபிதம், மெம்பர், ஆச்சர்யம், அவயவி, அங்கத்தான், சபிகன், பதம், பண்டிதர், புண்ணியம், இங்கிலீஷ், விநோதம், பத்திராதிபர் போன்றவற்றை மாற்றியிருக்க மாட்டாரா, என்ன? மேலே இருப்பதைக் காட்டிலும் திரு. ஜடாயுவின் நடையில் வடமொழிச் சொற்கள் குறைந்து வரவில்லையா? அவ்வப்போது கவனக் குறைவால் ஜடாயு தமிங்கிலம் பழகினாலும், அவருடைய நடை உறுதியாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் காட்டிலும் தமிழ் கூடியதாகத் தான் இருக்கிறது. காலவோட்டத்தில் திரு. ஜடாயுவும் கூட நீந்தியிருக்கிறார். அப்புறம் என்ன தனித்தமிழ் பற்றிய முட்டாள் தனமான சில்லடிப்பு?

இன்னும் ஓர் எடுத்துக்காட்டைப் பாரதியிலிருந்தே கீழே தருகிறேன். 'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை' என்ற தலைப்பில் அவர் எழுதுகிறார்.

------------------------------
ஐரோப்பாவில் வழங்கும் லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டும் என்று மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். முன்னதாகவே பாண்டிதர்கள் செய்துவைக்க வேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமம் இராது. ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன. அதாவது ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர், விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலசார்யரும் ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பத்திரிக்கையின் பெயர் 'தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிக்கை'.

மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சங்கத்தின் கார்யஸ்தர் அந்த ஊர்க் காலேஜின் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீராமநாதய்யர்.

'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிக்கை' என்ற சேலத்துப் பத்திரிக்கையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழுக்கு வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்டதகு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதியொன்று அந்தப் பத்திரிக்கையில் சேருமென்று தெரிகிறது. அனேகமாக இரண்டாம் ஸஞ்சிகையிலேயே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம் தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிக்கையினால் தமிழ்நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையும் என்பதில் சந்தேகமில்லை

ஸ்ரீகாசியிலே, 'நாகரி ப்ரசாரிணி சபையார்' ஐரோப்பிய ஸங்கேதங்களையெல்லாம் எளிய ஸமஸ்க்ருத பதங்களில் போட்டு மிகப்பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏக காலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேசபாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேசமுழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.
---------------------------------------

இது போன்ற நடையிலா திரு ஜடாயு இப்பொழுது எழுதிவருகிறார்? ப்ரகிருதி சாஸ்த்ரம் என்றால் என்னவென்று சொல்ல முடியுமா? சொன்னால் அசந்து விடுவீர்கள். [பாரதியாரின் கருத்திற்குள் இங்கு நான் போகவில்லை. அது வேறிடத்தில் பேசவேண்டியது, அலச வேண்டியது.] 97 ஆண்டுகளுக்கு முன் இருந்த இதுபோன்ற நடையைப் பெரிதும் மாற்றி நல்ல தமிழ்நடைக்குக் கொண்டு வந்து சேர்த்தது மறைமலை அடிகளின் முயற்சியால் தான். இந்த உண்மையைப் பதிவு செய்யாத தமிழறிஞர்களே தமிழ்நாட்டில் இல்லை; அடிகளாரின் கருத்தியலில் உடன்படாதவர்கள் கூட அவருடைய ஆக்கத்தையும், தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தையும் பதிவுசெய்தே இருக்கிறார். யாரும் மறுத்தவரில்லை. தனித்தமிழ் இயக்கம் மட்டும் இருந்திராவிட்டால், இருபதாம் நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளம் இங்கு கட்டாயம் பிறந்திருக்கும். "மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற வாக்குக் கூட ஒருவேளை உண்மையாகியிருக்கலாம்.

தன்நடை ஏதென்று தனக்கே தெரியாமல் ஜடாயு சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தனித்தமிழ் என்பது ஒருவர் போய்ச் சேர முற்படும் ஒரு குறியீடு, அடையாளம், இலக்கு. அதைப் பலராலும் அடைய முடியாமற் போகலாம். ஆனாலும் வடக்கிற்கு ஒரு துருவம் இருப்பது போல, தெற்கிற்கு ஒரு துருவம் இருப்பது போல, திசைகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் குறியீடு தனித்தமிழ். இன்றைக்கு 50 விழுக்காடு பிறமொழிச் சொல் பயின்று, மறுபாதி 50க்கு தமிழை வைத்துக் கொண்டிருப்பவர், நாளைக்கு அதை 51 தமிழ், 49 பிறமொழிச்சொல் என்று ஆக்கிக்கொண்டு, தொடர்ச்சியாய் தன் தமிழ்த் தொகுதியைக் கூட்டிவந்தால் தான், தமிழ் நிலைக்கும், தமிழினம் நிலைக்கும் என்று சொல்லலாம். அதைவிடுத்து 50:50 -யையே எந்நாளும் வைத்துக் கொள்வேன்; இல்லெனில் தமிழில் இன்னும் சுருங்குவேனெனில் அது என்ன முட்டாள் தனம்?

நீரில் உப்பைச் சேர்க்கச் சேர்க்க வாயில் வைக்கவா முடியும்? மண்ணூறல் எடுவித்த (demineralized) நீரை அல்லவா நாம் குடிக்கத் தேடுகிறோம்? அப்புறம் மொழியில் மட்டும் என்ன முட்டாள் தனமாய் உப்பு நீரைத் தேடிக் குடிப்பது? யார் அழிவை நோக்கிச் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்? "come on guys, get some life" என்று யாரைப் பார்த்து யார் சொல்ல வேண்டும்?  பரத்தில் (மேடையில்) ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்.

"நேனோ டெக்னாலஜியில் உள்ள nano எங்கிருந்து வருகிறது தெரியுமா?  [நுண் என்பதில் வருகிறது. இராம.கி) monolithic rocks என்ற பாறை வகையின் பொருள் தெரியுமா? (ஒரே கல் பாறைகள் - இராம.கி.) அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா? அணு (தமிழே - இராம.கி), அண்டம் (தமிழே. இராம.கி), பிரபஞ்சம் (பெருவயந்தம்>பெருவஞ்சம்>prabanjam - இராம.கி) , கந்தகம் (தமிழே - இராம.கி) என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை? தமிழ்நாட்டை விட்டு வெளியே இந்தியாவின் பல மாநிலங்களிலும் போய்ப் பார்த்ததுண்டா? அந்த மொழிகளில் உள்ள கலைச்சொற்கள் பற்றி கொஞ்சம் சிந்தித்தது உண்டா? அவற்றில் 95% சொற்கள் சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் தான். " என்றெல்லாம் கேள்வி கேட்டு அடுக்குகிறார் திரு. ஜடாயு. அதற்கு எல்லாம் விடை சொல்லலாம் தான். (அவர் சங்கதம் என்று சொல்வதில் 60/70 விழுக்காட்டிற்கு மேல் தமிழ்வேர்கள் தாம் உள்ளன.) ஆனால் அந்த விடையிறுப்பு அவ்வளவு முகன்மையானது இல்லை.

"இந்த 95% சங்கதச் சொற்கலப்பு எல்லாம் தமிழில் கிடையவே கிடையாது; கூடிய மட்டும் கலைச்சொற்களைத் தமிழ்வேரில் இருந்தே நாங்கள் உருவாக்கிக் கொள்கிறோம்" என்றுமட்டுமே சொல்லி இப்போது அமைய விரும்புகிறேன். தமிழர் தமிழிலேயே சொற்களை உருவாக்கிப் புழங்கிக் கொள்வதுதான் திரு.ஜடாயு போன்றவர்களைக் குதிக்க வைக்கிறது. "அது எப்படி சங்கதத்தின் தேவையில்லாமல் ஒரு மொழி இயங்கலாம்? அதை எப்படி விட்டுவைப்பது?" என்ற எதிருணர்ச்சி தான் இவர்களைப் பேச வைக்கிறது; வேறொன்றுமில்லை.

அடுத்து "சம்ஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் சாதனம். பாரதியும், காந்தியும், விவேகானந்தரும், அரவிந்தரும் கூட இப்படித் தான் பேசினார்கள். இந்திய தேசியத்தின் சிற்பிகள் இவர்கள்" என்று பேசுகிறார். மறுபடியும் பூசனியைச் சோற்றிற்குள் முழுக்கும் வேலை செய்ய முற்படுகிறார். எல்லாவற்றிற்கும் விடை சொல்லி எனக்குச் சலித்துப் போகிறது. காந்தியார் சங்கதத்தை நாட்டின் பொதுமொழியாக்கச் சொல்லவே இல்லை; அவர் இந்துசுத்தானியையே தேச ஒற்றுமைக்காக வலியுறுத்தினார்.

முடிவில் "உலகம் முழுவதும் பல அறிஞர்கள் இந்த மொழியைத் தேடிப் பிடித்துப் பயின்று வருகையில், இப்படி உங்களை சம்ஸ்கிருதம் பற்றி ஏளனம் செய்ய வைப்பது தமிழ் நாட்டு திராவிட அரசியல் தாக்கம் தான். இல்லை இந்த வெறிபிடித்த மொழிச் சூழலில் நான் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியமா?" என்று நண்பர் பத்ரியைப் பார்த்துக் கேட்கிறார். திரு. பத்ரி இன்னும் இதற்கு விடை சொல்லவில்லை. நாம் சொல்லும் விடை இதுதான்:

விவரம் தெரிந்த யாருமே சங்கதம் என்ற மொழியை ஏளனம் செய்யவில்லை. குமுகாயக் காரணங்களால் சங்கதத்தின் மேலாண்மையை மறுக்கிறார்; அவ்வளவு தான். சங்கதத்தின் நூல்களையும் அவற்றுள் பொதிந்துள்ள பட்டறிவுகளையும் தேடிப் படிக்கிறவர் இன்றும் இருக்கிறார். ஒருபக்கம் பார்த்தால் அது தேவையானதும் கூட. அதேபொழுது, சங்கதப் பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தமிழுக்குள் நஞ்சு ஏற்றிக் கொண்டிருக்கிற திருகு வேலையைக் கண்டிக்கிறார்.

வெறி பிடித்த மொழிச்சூழல் என்ற சொல்லாடலைக் கேட்டு எங்களுக்குச் சலித்துப் போயிற்று. "இன்னாபா, இப்ப, என்னா பண்ணோனுன்றே?" என்று சென்னைத் தமிழில் எதிர்த்துக் கேட்கத் தோன்றுகிறது. உங்களுக்குத் தெரிந்ததைச் செய்து கொள்ளுங்கள்.

----------------------------
இதுவரை இட்ட இத் தொடர் இடுகைகளில் உள்நின்று இருப்பது புலவர் இரா. இளங்குமரனின் கருத்துக்கள். அவருக்கு நான் கடன்பட்டவன்.

இதுவரை இத் தனித்தமிழ்க் கட்டுரை வரிசையில் ஓர் எக்கில் வலதுசாரிக் கருத்துக்களை எதிர்கொண்டாலும், இன்னோர் எக்கில் இடதுசாரிக் காரர் ஒருவரின் பதிவையும் பின்னாளில் மறுமொழி சொல்லவேண்டும். செய்வேன்.

தமிழை மறுப்பதில் இடது சாரியினர் கொஞ்சமும் சளைத்தவரில்லை. அவருக்கு மார்க்சு முகன்மை. அதேபொழுது, ”தமிழ் என்பது” அவரிட்ட சட்டத்துள் மட்டுமே இயங்கவேண்டும் என்பார். சங்க நூல்களையே தூக்கிக் கடாசுவார். அல்லது அவற்றின் காலத்தைக் குறைத்துப் பேசுவார். ”பூர்சுவா” தான் சரியென்பார், “பூரியர்” எனில் மறுப்பார். ”அறிவுய்தியை” மறுத்து, “அறிவுஜீவி” என்பார். அவருக்கும் தனித்தமிழை ஏற்பதில் தடங்கல்கள் உண்டு. ஆனாலும் இடதுசாரிகள் நெடுங்காலம் நம் தோழராய் இருந்தவர். எனவே கொஞ்சம் அணைத்துக் கொள்கிறேன்.  உடனே பேசிவிடவில்லை.

அன்புடன்,
இராம.கி.

தனித் தமிழ் - 4

அடுத்து "பண்டைத் தமிழக நகரங்கள் பலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சீர்காழி நகரின் பெயர்கள் சம்பந்தர் தேவாரத்திலும், மதுரை நகரின் பெயர்கள் திருவிளையாடற்புராணத்திலும் வருகின்றன. இவற்றில் பல பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். திருநெல்வேலிக்கு வேணுவனம், சாலிவாடீ என்றெல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்கள் கல்வெட்டுகளிலேயே உள்ளன. வேண்டுமென்றே செய்திருந்தால் இந்த நகரப் பெயர்கள் ஏன் சம்ஸ்கிருதமாக்கப் படவில்லை? யோசித்துப் பாருங்கள் மக்களே. உண்மை என்னவென்றால் அதிகமாக மக்களால் புழங்கப் பட்ட பெயர் பிற்காலத்தில் நிலைபெற்றது, அவ்வளவு தான்.
இதில் சதி, சூழ்ச்சி, அயோக்கியத் தனத்தை எல்லாம் தேடுவது துவேஷ மனப்பான்மையும், தமிழ்ப் பண்பாடு பற்றிய குறைபட்ட புரிதலுமே ஆகும்" என்று ஓட்டைத் தருக்கம் பேசுகிறார் திரு.ஜடாயு.

அதிகமாக மக்களால் புழங்கப்பட்ட பெயர்தான் நகரங்களுக்கு நிலை பெற்றதாம். இதைக் கல்வெட்டு வழி அறிந்தாராம். இந்த வடமொழிப் பெயர்களில் சதி, சூழ்ச்சி, அயோக்கியத் தனத்தை எல்லாம் தேடுவது துவேஷ மனப்பான்மையும், தமிழ்ப் பண்பாடு பற்றிய குறைபட்ட புரிதலுமே ஆகுமாம். ஆகா, எப்பேற்பட்ட கண்டுபிடிப்பு? இப்பேற்பட்ட வரலாற்றுத் திரிப்பு வாதிகள் இருந்தால் நாவலந்தீவின் வரலாறு உருப்பட்டு விடும்.

தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களை திரு.ஜடாயு நேரே படித்திருக்கிறாரா, அப்புறம் ஆய்வு செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை. [அடியேன் பொதுவாக தமிழக வரலாற்றுக் கல்வெட்டுக்களில் கனக்க நேரம் செலவழித்தவன். அதற்காகவே கிரந்த எழுத்துக்களையும், ஓரளவு வடசொற் களஞ்சியங்களையும், பல தொன்மங்களையும் தேடித் தேடிப் படித்தவன்.] கோயில் கல்வெட்டுக்களில் "கீழ்வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலம்" என்று தான் திருநெல்வேலி குறிக்கப் படுகிறது. [ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு பருக்கை பதம் என்பதால், மற்ற ஊர்களைப் பற்றி நான் இங்கு சொல்லவில்லை.] வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரமவிருந்த புரம், தாருகாவனம் போன்ற பெயர்கள் எல்லாம் வெவ்வேறு நிலையில் இலக்கியம், தொன்மங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. பெரும்பாலும் மூங்கில் பற்றிய இயற்கைப் பெயர்கள் தான் இவற்றில் இருக்கின்றன. அவற்றில் கருத்தியற் காரணங்களைத் தேடிக் கொண்டு இருப்பது வரலாற்றிற்கு வழி வகுக்காது.

தமிழில் கோயிற் கல்வெட்டு என்பது அரசர், செல்வர் அல்லது ஆள்வோரால் அவர்களின் அதிகாரத்தையும், கட்டளைகளையும், கோயிலுக்குச் செய்த பணிகளைப் பற்றியும் பதிவு செய்கின்ற ஓர் ஆவணம்; அதில் மக்களாட்சிக் கூறுகளை ஆழத் தேடினால் அருகியே கிடைக்கும். திருநெல்வேலி எனும் ஊர் யாரோ ஒரு பாண்டியன் பெருமானருக்குக் கொடுத்த சதுர்வேதி மங்கலம். வியப்பாக இருக்கிறதோ? தாம்பரபெருநையின் கரைநெடுக, அதன்தோற்றம் வரை, சதுர்வேதி மங்கலங்கள் நிறைந்தே கிடக்கின்றன. இற்றைப் பெருமானரின் பழைய ஆற்றங்கரை ஊர்களை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டால் வியப்பு வராது. [கீழ்வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலத்திற்கு அருகிலேயே பெருமானர் அல்லாதவர்க்குக் கொடுத்த ஊரும் (நெல்லூர்) இருக்கிறது. மங்கலங்கள் பெருமானருக்கும், நெல்லூர்கள் பெருமானர் அல்லாதவருக்கும் முற்றூட்டாகக் கொடுப்பது அற்றை அரசரின் பழக்கம். இது போல குடிகள், பாக்கங்கள், இன்ன பிறப் பெயர்களைப் பற்றியெல்லாம் ஆய்வுகளுண்டு. தமிழர் வரலாற்றில் நம்மவர் விளக்காதது நிறையவேயுண்டு.] நிலவுடைமைக் குமுகாயத்தின் அவலம் பற்றிய பழசையெல்லாம் கிளற வேண்டாமென்று பார்த்தேன். தமிழ்நாட்டில் காவிரிக் கரையிலும், வைகை, பொருநைக் கரைகளிலும் மூவேந்தர் கொடுத்த சதுர்வேதி மங்கலங்களும், கூடவே நெல்லூர்களும், நிலவுடைமைக் குமுகாயம் அன்றைய மக்களை முற்றிலும் பிணைத்து அழுத்தியதற்கு அடையாளங்கள் அல்லவா? அடிமைமுறை இந்நாட்டில் வெகுகாலத்திற்கு (100 ஆண்டுகளுக்கு முன்பு வரை) இருந்தது என்ற கொடிய அவலமெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டுமோ? (ஆமாம், கருப்பரை வெள்ளையர் அடிமை செய்ததுபோல் நம்மவரை நம்மவரே அடிமைசெய்த கொடுமைகள் இந்நாட்டில் நெடுகவே நடந்துள்ளன. நாம் நடந்துவந்த பாதை நீண்டது.)

பெருமானர், பெருமானர் அல்லாத உயர்குடிகள் என 2 ஆயத்தாரும் தம் சொத்துரிமையை நிலைநாட்டிக் கொண்டதும், உழைத்தவரின் விளைவுகளைத் தட்டிப் பறித்துக்கொண்டதும், மனுநீதி காப்பாற்ற நிகழ்த்திய தண்டனைகளைப் பதிவுசெய்ததும் கல்வெட்டின் மூலம் தான். [அக் கேடுகெட்ட மனுஸ்ம்ருதி இந்நாட்டை மிகவும் சீரழித்திருக்கிறது.] அதில் சதியும், சூழ்ச்சியும், அயோக்கியத்தனமும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதியமும் முற்றிலும் நிறைந்துதான் கிடக்கும். இத்தனை கிடக்கும்போது கூடவே அதை மறைக்குமாப் போல் வடமொழி விளங்காதா, என்ன? (முதல் பன்றி என்று எந்தத் தமிழனாவது பெயர்வைத்துக் கொள்வானா? ஆனால் ஆதிவராகன் எனப் பளிச்சிட்டுக்கூறி, விண்ணவன் பெயரை உயிர்த் தரித்தால், தண்டனிட்டு வைத்துக்கொள்வான் அல்லவா? சங்கதம் இப்படி இடக்கர் அடக்கலாயும் மூடிமறைத்துப் பெயர் சொல்லிக் கல்வெட்டுக்களில் வேலை செய்தது.) நூற்றுக்கணக்கில் கோயிற் கல்வெட்டுப் படித்தோர்க்கு அவற்றில்வரும் சொல்லாட்சிகளும், குறிப்புக்களும், வல்லாண்மைகளும் நன்றாகவே புரியும்.

ஒரு சப்பானிய அறிஞர் கராசிமா போதாதா, தமிழ் நிலவுடைமைக் குமுகாயத்தை அக்குவேறு ஆணிவேறாக கல்வெட்டுக்களின் மூலம் பிட்டு வைக்க? அதுபோன்ற ஆய்வுகள் அவரைப் பின்பற்றி வெள்ளமாய் இப்போது நடக்கின்றன. ஒரு சிலர் பார்த்தார், கல்வெட்டுக்களையே சீரழிக்கத் தொடங்கிவிட்டார். அதன்மேல் வண்ணம் பூசுவதும், எண்ணெய் அடிப்பது sand blasting செய்வதும் என இப்போது நடப்பவை கட்வெட்டுச் சீரழிப்பு அன்றி வேறென்ன?

மொத்தத்தில் நம் பழமை பல நேரங்களில் நாம் வெட்கப்பட வேண்டியதாய் இருந்தது என்பதே உண்மை. அதெபொழுது, நமக்கு வருத்தமாய் இருந்தாலும் அவற்றை இன்னும் ஆய்வு வேண்டும், அழிக்கக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். உண்மையைப் பின்னால் எப்படி அறிவது? தமிழ்ப்பண்பாடு பற்றிய திரு. ஜடாயுவின் விந்தையான நளினப்பார்வை ஒரு குறைப்பட்ட புரிதல் என்று மட்டுமே சொல்ல முடியும்.

இந்துத்துவர்கள் பழைய வரலாற்றுத் தவறுகளை அழித்துப் பூசிமெழுகி  புதுக் கற்பனை படைக்கவிழைகிறார். எப்படித் தொல்லியல் ஆதாரங்களை அழிக்க விழைகிறாரோ, அதுபோல் கல்வெட்டுகளையும் அழிக்க விழைகிறார். They are trying to re-write history.

அன்புடன்,
இராம.கி.

தனித் தமிழ் - 3

இனி "உண்மையில் ஒழுங்காக சம்ஸ்கிருதம் படித்த எந்தத் தமிழ் அறிஞரும் அம்மொழியை வெறுத்ததில்லை, நேசிக்கவே செய்தனர். அருணகிரி நாதர், தாயுமானவர் முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாகவி பாரதி வரை. கவியரசு கண்ணதாசனும் சம்ஸ்கிருதம் கற்றார், "அழகின் அலைகள்", "பொன்மழை" என்று சம்ஸ்கிருத பக்திப் பனுவல்களை அழகு தமிழில் தந்தார். வெறுப்படைந்தவர்கள் சம்ஸ்கிருதம் அறிந்தவர்களல்ல. வெறுப்பை மட்டுமே அறிந்தவர்கள்." என்று சொல்லுகிறார் திரு.ஜடாயு. [நான் மேலே உள்ள பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றிய செய்திகளைக் கொடுத்து அவர்களுடைய சங்கத நிலைப்பாடு பற்றி எழுத முடியும்; ஏற்கனவே கட்டுரை நீண்டு போனது, இனிமேலும் நீட்ட வேண்டாம் என்று அதைத் தவிர்க்கிறேன். ஒரே ஒரு புறனடை.]

முதலில் இந்தப் பட்டியலில் இருந்து கண்ணதாசனை நீக்குங்கள். அவரை நாங்கள் அறிந்தவரையில் அவருக்குச் சங்கதம் தெரியாது. சௌந்த்ர்ய லகரியையும், கனகதாரா ஸ்தோத்திரத்தையும் அவர் தமிழாக்கம் செய்ததாலேயே அவருக்குச் சங்கதம் தெரியும் என்பது எவ்வளவு முட்டாள் தனமான சில்லடிப்பு? இப்படி எழுதும் திரு.ஜடாயு கண்ணதாசனின் பொன்மழை என்ற பொத்தகத்தைப் படித்தது கூட இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இல்லையென்றால் இப்படிச் சொல்ல மாட்டார். பொன்மழைப் பொத்தகத்துள் கோபுரவாசல் என்று தன் முன்னுரையை எழுதும் கண்ணதாசன் சொல்லுவது கீழே வருகிறது:

"ஆதிசங்கரர் தமிழ்ப் படத்திற்கு என் மகன் சுப்பு வசனம் எழுதினான். என்னைப் பாடல் எழுத அழைத்தார்கள். அதன் மலையாளப் பதிப்பை நான் போட்டுப் பார்த்த போது, அதில் "கனகதாரா" வடமொழி ஸ்தோத்திரம் வந்தது.

அதன் சுவையை எண்ணிக் கொண்டே எனது மண்டபத்தில் நான் அமர்ந்த போது, எனது அருமை நண்பர் வழக்குரைஞர் அ.ச.நடராஜன் அவர்கள் வந்தார்கள்.

எழுத்துலகில் 'ஆஷா' என்னும் புனைப்பெயரில் அவர் எழுதுவது வழக்கம். எனது பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் எழுதியிருக்கிறார். ஆங்கிலக் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்து என் பத்திரிக்கைகளுக்குத் தந்திருக்கிறார். என்னைப் பற்றிச் சில கட்டுரைகளும் வடித்திருக்கிறார்.

திடீரென்று அவர் என்னைப் பார்த்து, ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரங்களை நான் தமிழ்ப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இருவரும் இதுபற்றி வெகுநேரம் விவாதித்தோம். வெறும் கவிதையிலேயே அதனை மொழிபெயர்த்தால் சாதாரண மக்களிடம் அது பரவாது என்று எனக்குத் தோன்றியது. ஆஷா வடமொழிப் பயிற்சி மிக்கவர். இருவரும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தோம். உரைநடையில் அவர் எழுதுவது என்றும், அதைக் கவிதையாக நான் ஆக்குவது என்றும் முடிவாயிற்று.

உரைநடையில் அவர் எழுத எழுத அதைக் கவிதையாக எழுதிக் கொண்டுவந்தேன். புதுவகை இரட்டைப் புலவர்களாக நாங்கள் உருவானோம். விளைவு, இன்னொருவரோடு சேர்ந்து நான் எழுதிய முதல்நூலாக இது வெளிவருகிறது"
---------

விவரம் இப்படி இருக்கையில் "கவியரசு கண்ணதாசனும் சம்ஸ்கிருதம் கற்றார்" என்று முழுப்பூசனியைச் சோற்றில் எப்படி மறைக்கிறார் திரு. ஜடாயு? இந்த இரட்டைப் புலவர் முறையில் எழுதியதற்கே கண்ணதாசனைச் சங்கதம் தெரிந்தவர் என்று சொன்னால், அப்புறம் கலைஞர் உருசியன் தெரிந்தவர் என்றல்லவா சொல்ல வேண்டியிருக்கும்? ஏனென்றால் இரட்டைப் புலவர் முறையில் தான் அவரும் மார்க்சிம் கார்க்கியின் தாய் என்னும் நூலைத் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்தார். திரு. ஜடாயுவுக்கு எப்படி வசதி? கலைஞருக்கு உருசியன் தெரியும் என்று சொல்லுவாரா? இதுபோன்ற வடிகட்டிய சமக்காளப் பொய்களுக்கு எல்லை இல்லையா? சங்கதம் என்றவுடன் இது போன்ற கற்பனைகள் எங்கிருந்துதான் வருகின்றனவோ?

அன்புடன்,
இராம.கி.

தனித் தமிழ் - 2

அடுத்து, திரு. தமிழன் தன் பின்னூட்டில்,
// சமசுகிருதம்தான் உலகமொழிக்கெல்லாம் தாய்பாசை என்று சொல்ல சமசுகிருதம் நன்கறிந்த அவர் அப்படியென்றால் தமிழ்தான் தந்தை மொழி என்று மறுமொழி அளித்ததும் திராவிட இயக்கங்களின் விசத்தினாலா?//
என்று வள்ளலார் பற்றி உரைத்ததற்கு எகத்தாள மறுமொழியாய்,

"இது இன்னொரு காமெடி. முதலில் இந்த இரு பெரியவர்களும் சமகாலத்தவர்களே அல்ல. பின்னர் எப்படி அவர்கள் பேசியிருக்க முடியும்? மேலும், வடலூர் வள்ளப் பெருமான் சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை வாய்ந்தவர், அந்த மொழிப் பிரயோகங்களைத் தன் பாடல்களில்ல் பெருதும் விரும்பியே பயன்படுத்தியுள்ளார். அவரது "திருவடிப் புகழ்ச்சி" என்ற நூலைப் படித்துப் பாரும். முதல் 10-15 பாடல்கள் *முழு* சம்ஸ்கிருதத்தில் உள்ளன. செந்தமிழ் போல செஞ்சம்ஸ்கிருதம்! "

என்று தருக்கம் காட்டுகிறார் திரு.ஜடாயு. எங்கே போய் முட்டிக் கொள்வது?

மறைந்த பெரியவர் எட்டாம் சந்திர சேகரேந்திர சரசுவதி மட்டுமே காஞ்சி சங்கராச்சாரியார் அல்ல. "அவர் காஞ்சி மடத்தின் 68 ஆவது சங்கராச்சாரியார்" என்று அந்த மடத்தின் வரலாறே சொல்லிக் கொள்கிறது. (காஞ்சி சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் எண்ணிக்கையைச் சிருங்கேரி மடம் ஒப்புக் கொள்ளாது; என்றாலும் அந்தச் சிக்கலுக்குள் போக வேண்டாம்.) அவருக்கு முன்னால் 7 சந்திர சேகரேந்திர சரசுவதிகள் இருந்திருக்கிறார்கள். வள்ளலார் காலத்தில் (மறைவு சனவரி 30, 1874; 51 அகவை வாழ்ந்திருக்கிறார்.) இருந்த சங்கராச்சாரியார்கள் இருவர்; ஒருவர் 65ஆம் சங்கராச்சாரியாரான ஆறாம் சந்திர சேகரேந்திர சரசுவதி. [இவர் காலம் வரை, சங்கர மடம் கும்பகோணத்தில் தான் இருந்தது; காஞ்சியில் இல்லை; அது 68வது சங்கராச்சாரியார் காலத்தில் தான் காஞ்சிக்கு வந்தது.] ஆறாம் சந்திர சேகரேந்திர சரசுவதி 1851 ல் மறைந்தார். அடுத்தவர் 66ஆம் சங்கராச்சாரியாரான சுதர்சன மகாதேவேந்திர சரசுவதி; இவர் 1891ல் இளையாற்றங்குடியில் மறைந்தவர்.

பெரும்பாலும் வள்ளலாருக்கும், சங்காராச்சாரியருக்கும் நடந்ததாகக் கூறப்படும் செய்தி ஆறாம் சந்திரசேகரருக்கும் வள்ளலாருக்கும் நடந்திருக்கவே வாய்ப்புண்டு. (பல மேற்கோள்களில் இந்தச் செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியையே மறுக்கவும், மறைக்கவும், திரு.ஜடாயு முற்படும் நிலையில், அவருக்குப் புரியச் சொல்ல வேண்டுமானால், வள்ளலாரின் வாழ்வு நிகழ்வுகளை நன்கு தெரிந்த ஒருவரே ஆய்வு செய்து விளக்க முடியும். அதற்குச் சரியானவன் நான் இல்லை. திரு. ஜடாயு போன்றவர்களுக்கு போகிற போக்கில் ஆதாரம் இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றைச் சொல்லுவதும் அதற்கு மாங்கு மாங்கென்று மற்றவர்கள் தேடி எதிர்க்கருத்துச் சொல்லுவதும் வாடிக்கையாகிப் போய்விட்டது. எப்பொழுதும் எளிதாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இவர்கள் இருப்பார்கள்; மற்றவர்கள் விடை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தத் திருகு தாளத்திற்கு முடிவில்லை.)

அடுத்துக் கலந்து செய்து கதைக்கப்பட்ட மொழியான சங்கதம் என்பது செம்மை செய்து கதைக்கப்பட்ட மொழியான செங்கதமாகவும் கொள்ளப்படும் என்பது இந்த உரையாட்டில் ஈடுபடும் எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் அதைச் செஞ்சங்கதம் என்ற பொருளில் செஞ்சமஸ்கிருதம் என்று திரு.ஜடாயு சொல்ல வருவது சிறுபிள்ளைத்தனம்; அல்லது மற்றவனை மாங்காய் மடையன் என்று கருதும் போக்கு. இது போன்ற நக்கல்களை மற்றவரும் செய்ய முடியும்.

செந்தமிழை யாரும் பரவலாய்ப் பேசுவதாய் எங்கணுமே சொல்லுவதில்லை. செந்தமிழ் என்பது தரப்படுத்தப் பட்ட தமிழ், அவ்வளவுதான். அவரவர் அவர்களின் வட்டாரப் பேச்சில் பேசுவதும், பொதுத் தொடர்பிற்கும், பெரும்பாலும் எழுத்திற்கும் செந்தமிழை ஓரளவு கடைப்பிடிப்பதும் தான் உலகியல் வழக்கம். அதே நிலையில் தான் செங்கதத்தை பாகத்தின் தரப்படுத்தப்பட்ட மொழிவகையாக எல்லோரும் புரிந்து கொள்ளுகிறார்கள். காளிதாசனும் அப்படித்தான் சங்கதத்தைப் படித்தோரின் மொழியாகத் தன் நாடகங்களில் பயன்படுத்துகிறான்.

"முதலில் ஒரு விஷயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேச வந்தால் நல்லது. ஆமாம் அது என்ன "சமசுகிருதம்"? "ஸ்" பேரில் உமக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? படிப்பதற்கே நாராசமாக இருக்கிறது. இந்த ரேஞ்சில் போனால், அறிவியல், வர்த்தகம் உட்பட பல துறைகளிலும் புழங்கும் வார்த்தைகளைக் கண்றாவியாக எழுத வேண்யிருக்கும் (சூன், சூலை, ஆகசுடு). இந்தப் போலித் தமிழ் கோஷத்திலிருந்து முதலில் வெளியே வாரும். உம் போன்ற ஆட்கள் தான் தமிழுக்கு உண்மையான எதிரிகள்."

என்று மேலும் சொல்லுகிறார் திரு.ஜடாயு. இவர் "ஒரு விஷயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேச வந்தாரோ?"

மொழிக்கும், எழுத்திற்கும் உள்ள வேறுபாட்டை திரு.ஜடாயு முதலில் விளங்கிக் கொள்ளட்டும். வடமொழி என்ற சொல் பாகதம், சங்கதம் என்ற இரண்டு வகைகளையும் குறிக்கும் சொல்லாகத் தான் சங்க இலக்கியங்களில் பயில்கிறது. அதே போல, இன்றையக் கல்வெட்டியல் முடிவுகளின் படி, தமிழகம், ஈழம், சிங்களம் ஆகிய பகுதிகளிலே தான் தமிழி/பெருமி (tamizi / brahmi) என்ற எழுத்து முதலில் புழங்கியது (கிட்டத் தட்ட கி.மு.600). [இந்த எழுத்துக்களின் தொடக்கமே இந்தப் பகுதிகளில் தானோ என்று இந்தக் காலத் தொல்லியலார்கள் பலரும் அய்யுறுகிறார்கள்.] பெருமி எழுத்து மோரியர் காலத்தில் வடபால் பரவியது. அசோகன் கல்வெட்டு தரப்படுத்திய செங்கத மொழியைப் பயன்படுத்தவே இல்லை. அது பாகத மொழியையே (குறிப்பாகப் பாலியும், அருத்த மாகதியும்) பயன்படுத்தியது. ஏனென்றால் தரப்படுத்தமே (பாணினியின் அஷ்டாத்யாயி) கி.மு. 400ல் அசோகருக்குச் சற்று முன்னால் தான் நடந்தது. (திரு.ஜடாயு போன்றவர்கள் வேத மொழியையும் சங்கதத்தையும் குழப்பிச் சில்லடிக்கும் வேலையை இனியும் நடத்திக் கொண்டிருக்க வேண்டாம். எங்களுக்கெல்லாம் காதுகுத்தி நெடுநாட்கள் ஆகிவிட்டன.)

இந்தப் பெருமி எழுத்து நாளடைவில் திரியத் தொடங்கி குத்தர்கள் காலத்தில் நகரி எழுத்தாக மாறியது. அதே பொழுது, தென்னகத் தமிழி எழுத்து இரண்டாய்த் திரிந்து ஒன்று வட்டெழுத்தாயும், இன்னொன்று பல்லவர் எழுத்தாயும் மாறியது. பல்லவர் எழுத்தைச் சோழர் ஆதரித்தனர். பாண்டியர் எழுத்தான வட்டெழுத்து சேரலத்திற்கும் போனது. சேரலத்திலும், காஞ்சியிலுமாய் பண்டிதரால் தமிழெழுத்தின் நீட்சியாய் உருவாக்கப் பட்ட எழுத்து கிரந்த எழுத்து. தமிழை எழுதுவதற்கு அல்லாமல், சங்கதம் என்ற மொழியை எழுதுவதற்காவே, கிரந்தம் என்னும் தமிழெழுத்து நீட்சி உருவாக்கப் பட்டது; பெருமை கொள்ளத் தக்க கிரந்த எழுத்து நம் தமிழனின் படைப்பே. வடமொழியில் பல முதல் நூல்களும், உரை நூல்களும் கிரந்த எழுத்திலேயே முதலில் எழுதப் பட்டன. "வடமொழி ஆக்கங்களில் பலவும் நம்மூரில் எழுதப் பட்டவையே". நம்மூரின் சிறப்புப் புரியாமல் பல பெருமானர்கள் இன்று நகரியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறைந்தது கிரந்தத்தைப் பிடித்துத் தொங்கியிருந்தாலாவது, நல்லது முன்னால் நடந்திருக்கும்; நம் உரிமை நிலைத்திருக்கும். நாம் தான் தும்பை விட்டு வாலைப் பிடிப்பவர்கள் ஆயிற்றே? சண்டையெல்லாம் பக்கத்தில் இருக்கும் தமிழனிடம் போடுவதும், அடுத்துள்ள தமிழரல்லாதவரிடம் பாரதம், பாரதம் என்று குழைந்து மண்டியிட்டு பணி செய்வதும் தான் வழக்கமாயிற்றே? [இம்மென்றால் நாட்டுப்பற்று இல்லாதவன், துரோகி என்று சொல்லிவிடுவார்கள்.]

இந்திய நாடு விடுதலை ஆவதற்கு முன்னால், வடமொழிக்கெனப் புழங்கிய எழுத்துக்களில் (நகரி, சாரதா, கிரந்தம் என இன்னும் பல) கிரந்த எழுத்திலே தான் அதிக நூல்கள் இருந்தன. வேறு எங்கும் கிடைக்காத வேத நூல்களின் பல சுவடிகள், தெற்கே கிரந்த எழுத்தில் தான் கிடைத்தன; அதர்வண வேதமே சேரலத்தில் தான் கிடைத்தது. அப்படிப் பலவற்றையும் காப்பாற்றியது நம்மூரே. இத்தனையும் செய்ததற்கு, திரு.ஜடாயு போன்றவர்கள் திருப்பிக் கொடுக்கும் பரிசு என்ன? தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழி வடமொழி என்று சொல்லுவாராம்; ஆனாலும் இவர் தமிழை மதிக்கிறாராம். "போலித் தமிழ் கோஷத்திலிருந்து முதலில் வெளியே வாரும். உம் போன்ற ஆட்கள் தான் தமிழுக்கு உண்மையான எதிரிகள்" என்று அவர் வாக்கை அவருக்கே திருப்பித் தான் சொல்ல வேண்டும்.

வடமொழிக்கென உருவாக்கிய கிரந்த எழுத்துக்களை நுழைத்து தமிழ்மொழியை எழுதும் போக்கு, முட்டாள் தனமாக 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தான் எழுந்தது. கல்வியிற் சிறந்த கம்பன் கூட வடவெழுத்து ஒரீஇ தான் எழுதினான். "கிரந்த எழுத்தைக் கலந்து தமிழை எழுத வேண்டும்" என்று சொல்லுவது எப்படி என்றால் "உரோமன் எழுத்தில் இருந்து தோன்றிய கோத்திக் எழுத்துக்களையும், சிரில்லிக் எழுத்துக்களையும் உள்நுழைத்து ஆங்கிலம், பிரஞ்சு போன்றவற்றை எழுத வேண்டும்" என்று சொல்லுவது போல் இருக்கிறது. கேட்டால், ஆங்கிலக்காரனும், பிரஞ்சுக்காரனும் நம்மை அடிக்க வருவார்கள். இந்த ஏமாளித் தமிழன் மட்டும் அடிபணிந்து தேவரீர் சொல்லுவதைக் கேட்க வேண்டும்.

ஓரெழுத்து முறையில் இல்லாத வேற்று மொழி ஒலிப்புக்களைக் கொண்டு வர பொதுவாக இடைக்குறியீடுகளைத் (diacritical marks) தான் எழுத்துப் பெயர்ப்பில் போடுவார்கள். மாறாக, வேறு எழுத்தையே யாரும் கடன் வாங்க மாட்டார்கள்; இது உலகெங்கணும் இருக்கும் நடைமுறை. காட்டாக சங்கத ஒலிகளை எழுத உரோமன் எழுத்தில் புதிய வடிவங்களையா கொண்டு வருகிறார்கள்? இருப்பதை வைத்துப் இடைக்குறியீடு போட்டு புது ஒலிகளைக் காட்டுகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன கிரந்த லொள்ளு தமிழுக்கு வேண்டியிருக்கிறது? இது போன்ற முட்டாள் தனங்களை எழுத்துப் பெயர்ப்பில் தவிர்க்க வேண்டியே, கனடாவைச் சேர்ந்த திரு.C.R.செல்வக்குமார் பிற மொழி ஒலிகளைத் தமிழெழுத்தையே வைத்து எழுதுவதற்கான இடைக்குறியீடுகளை ஒருசில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்திருந்தார்.

கொஞ்சமாவது தருக்க நெறி, அறிவியல் ஆர்வம், மொழியியல் வழக்கம் அறிந்திருந்தால் இப்படி மொண்ணையாகப் பேசுவதை திரு.ஜடாயு தவிர்த்திருக்கலாம். சம்ஸ்கிருத்தை சமசுக்கிருதம் என்று எழுதக் கூடாதாம்; மண்ணாங்கட்டி. தமிழைத் tamil என்று ஆங்கிலக்காரனும், தொல்காப்பியனை தோல்காப்பியன் என்று இந்திக்காரனும், கிரைஸ்ட் என்பது கிரிசேது என்று சப்பான்காரனும், கிலிசேது என்று சீனக்காரனும் எழுதுவதற்கு வெட்கப்படவில்லை. "சடாயு" என்று இராமகாதையில் எழுதக் கம்பன் வெட்கப்படவில்லை. சமசுக்கிருதம் என்று எழுதினால், படிப்பதற்கு இவருக்கு நாராசமாய் இருக்கிறதாம். எவ்வளவு வெறுப்பு இருந்தால் நாராசம் என்று சொல் வரும்? இந்த நாராசம் கம்பனைப் படிப்பதில் வரவில்லையோ? தமிங்கிலம் எங்கணும் ஊடுருவி ஓங்கிய நிலையில், "இந்தப் போக்கில்" என்று கூடச் சொல்ல முடியாமல் "இந்த ரேஞ்சில்" என்று இவர் எழுதுவாராம்; ஆனால், நாராசம் என்று மட்டும் கிண்டல் அடிப்பாராம். எவ்வளவு நெஞ்சழுத்தம்?

அன்புடன்,
இராம.கி.

தனித் தமிழ் - 1

அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் சங்கதம் பற்றிய உரையை திரு.ஜடாயு தன்னுடைய வலைப்பதிவில் கொடுத்திருந்தார். அதில் எழுந்த பின்னூட்டுக்களுக்கு மறுமொழி சொல்லப் புகுந்தவர் தொடர்பே இல்லாத என்னை வலுக் கட்டாயமாய்ப் பெயர் சொல்லி இழுத்தார். இப்படித்தான் கலைஞர் ஏதோவொரு காசோலையில் தமிழில் அன்றி ஆங்கிலத்தில் கையெழுத்திட்டார் என்று ஹரன் பிரசன்னா போட்ட இடுகையில், பின்னூட்டிய இன்னொருவரும் தொடர்பில்லாமல் என் பெயரை இழுத்திருந்தார். ஆக, இவர்களுக்கெல்லாம் என்னை வம்பிழுக்க வேண்டியிருக்கிறது; ஒரு சிலரின் காவி நிகழ்ப்புக்களுக்கு என் இடுகைகள் முட்களாய்க் குத்துகின்றன போலும்.

பொதுவாய், தன்மயமாகத், தூற்றலை வாரி இறைக்கும் நாலாந்தர முன்னிகைகளுக்கு நான் மறுமொழி தருவதில்லை. [பட்டறிவும், பொறுமையும் பெறாத இளம் அகவையில் ஒருவேளை தேர்ந்தெடுத்த சொற்களை எடுத்து மறுமொழியாய் இவர்கள்மேல் வாரி இறைத்திருப்பேன். இப்பொழுது பட்டறிவும் பொறுமையும், நேரமின்மையும் ஓரளவு வந்து சேர்ந்ததால், அதைச் செய்யாது விடுக்கிறேன்.] அதே பொழுது, முழுப்பூசனியைச் சோற்றில் மறைப்பவர்களுக்கு மறுமொழி சொல்லாமல் போவது சரியில்லை.

"முதலில் ஒரு விஷயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேச வந்தால் நல்லது" என்று இன்னொருவருக்குச் சொல்லும் திரு. ஜடாயு, அந்த அறிவுரையைத் தான் பின்பற்ற மாட்டார் போலிருக்கிறது. "கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு" என்றாள் ஒரு முதுபாட்டி.

// தமிழில் என்ன இருக்கிறது. எல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான். தமிழில் ஐந்தெழுத்தைத் தவிர மீதியெல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான் என்ற பெரிய சமசுகிருத அறிஞர்களின் வார்த்தைகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தது. //

என்று திரு. தமிழன் பின்னூட்டியதற்கு,

"சரியான காமெடி! இப்படி எந்த சம்ஸ்கிருத அறிஞர் சொன்னார் என்று ஆதாரம் உள்ளதா? ஒரு பாதுகாப்பற்ற மிசனரி போதனையில் மயங்கி விட்ட உனர்வு தான் தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக் கண்டுபிடித்தது. நல்லவேளை அந்த நடை தானாகவே செத்துவிட்டது, அதை முயூசியத்திலிருந்து எடுத்துவந்து சில ஆட்கள் (உதாரணமாக இராம.கி என்பவர்) இணையத்திலும் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது."

என்று மறுமொழியுரைத்திருந்தார். [இதில் என்னைப் பற்றிய இவரின் தனித்த கருத்தை ஒதுக்கித் தள்ளுகிறேன்.] குறியீட்டு இயல் என்று யாரோ "cryptology" பற்றிச் சொன்னதையும், "கணதந்திர" என்ற அழகு இந்திச் சொல்லையும் கண்டு வியந்து போகும் திரு.ஜடாயுவுக்கு, "சங்கதம் அது கொடுத்தது, இது கொடுத்தது அணு, அண்டம், பிரபஞ்சம், கந்தகம் என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை?" என்று ஓயாமல் சவடால் அடித்து, இல்லாததையும் பொல்லாததையும் முன்கொண்டு வந்து நிற்கும் திரு.ஜடாயுவுக்கு "முது, மூது, மூதையர், மூதையம் போன்ற தமிழ்ச் சொற்கள் மட்டும் நினைவிற்கு வராமல், "முயூசிய நடை" என்ற தமிங்கிலமே எழுத வருகிறது. தன் அழகை ஆடியில் பார்க்காமல், மற்றவரைக் கிண்டல் செய்பவரைக் கண்டு, சிரிக்காமல் என்ன செய்ய? பரிதாபப் படவா முடியும்? ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.

"தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழியை செத்தமொழி என்று சொல்லி அதில் ஒரு குரூர சந்தோஷம் அடைவதாயிருந்தால் அடைந்து விட்டுப் போங்கள். ஆனால் அதனால் உண்மை மாறிவிடாது" என்று திரு. ஜடாயு எழுதியிருந்தார். யாருக்குக் 'குரூர சந்தோஷம்'? மேலே உள்ள வாக்கில் வரும் "உட்பட" என்ற சொல்லில் தொக்கும் மேற்குடி ஆணவம் எவ்வளவு கிலோ தேறும்?

"சங்கதம் மற்றவைக்குக் களஞ்சியம்" என்று சொல்லுவது திரு.ஜடாயுவின் காவி விருப்பம். "தமிழுக்குத் தமிழே சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும்; சங்கதத்தின் உதவி தேவையில்லை" என்று சொல்லுவது எங்களின் உரிமை. அப்படிச் சொல்லுவது சங்கதத்தின் மேல் உள்ள வெறுப்பால் அல்ல; எங்கள் மொழியின் மேல் இருக்கும் விருப்பால், தமிழ்ச் சொல்வளத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையால், என்று கொள்ளுங்கள். இதை வெறி என்று சொல்லித் திரிக்க விரும்பினால், செய்யுங்கள்; எங்களுக்குக் கவலையில்லை.

"தங்கள் உதவியில்லாமல் இந்த நாடு நிற்காது, கவிழ்ந்துவிடும்" என்று வெள்ளைக்காரன் கூட 60 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னான்; "அட போங்கய்யா, நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம்" என்றான் ஒரு தண்டு கிழவன். வெள்ளைக்காரன் மேல் இருந்த வெறுப்பாலா, அந்தக் கிழவன் அப்படிச் சொன்னான்? தன் நாட்டினர் மேல் இருந்த நம்பிக்கையால், விடுதலை உணர்வால், அல்லவா சொன்னான்? இந்திய நாடு பற்றிய விடுதலை உணர்வு இருக்கலாம்; தமிழ், தமிழர், தமிழகம் பற்றிய காப்புணர்வு மட்டும் இருக்கக் கூடாதோ? என்ன ஞாயம் அய்யா அது?]

"அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்லுவார்கள். அது போல எல்லா இடங்களிலும் "மிசனரி"களைத் தேடித் தேடிப் பார்க்கும் பார்வையும், "உலகமே என் கையில்" என்ற ஆணவமும் (இங்கு தான் பிழையே இருக்கிறது! தமிழ், தமிழர், தமிழக வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாமல் பாரதம், தேசியம் என்று சில்லு அடித்துக் கொட்டுவதும், மீறி நாம் பேசிவிட்டால் எல்லாவித தூற்றுகளையும், அடக்குமுறைகளையும் ஏவிப் பார்ப்பதும் காலம் காலமாய் நடப்பது தானே?) கூடிப்போன நிலையில், வரலாறு தெரியாத திரு.ஜடாயு ஆதாரம் கேட்கிறார்.

எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

சாமிநாத தேசிகர் என்று ஒருவர் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் 17ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் ஈசான தேசிகர் என்றும் அவருக்குப் பெயருண்டு. இலக்கணக் கொத்து என்ற அவருடைய நூலுக்கு, அவரே ஒரு பாயிரமும் எழுதியிருக்கிறார். (இலக்கணக் கொத்தை ஆறுமுக நாவலர் ஓலைச்சுவடியில் இருந்து வெளிக் கொணர்ந்தார்.) அந்தப் பாயிரத்தில் தான் இந்த "ஐந்தெழுத்துப் பாடை" என்ற சொற்றொடர் வருகிறது. வடமொழியில் இல்லாத ழ. ற, ன, எ, ஒ ஆகிய ஐந்தெழுத்துக்கள் தமிழில் உள்ளனவாம்; மற்றவை எல்லாம் வடமொழியில் இருக்கின்றனவாம். எனவே தமிழ் மொழி 5 எழுத்துக்களால் ஆன மொழியாம். சொல்லுகிறார் ஈசான தேசிகர்:

வடமொழி இலக்கணம் சிலவகுத்து அறிந்து
தொல்காப் பியத்தினும் தொல்காப் பியத்தினும்
அருகிக் கிடந்ததைப் பெருக உரைத்தனன்
வேறுவிதி நவமாய் விளம்பிலன் என்க;
தொல்காப் பியந்திரு வள்ளுவர் ஆதிநூல்
வடமொழி நியாயம் வந்தன சிலவே
தமிழின் நியாயம் தந்தன பலவால்
தமிழ்விதி வல்லராய் வடமொழி விதிசில
அறிந்தவர்க் கேஇந் நூலாம் என்க;
வடநூல் வழிகல வாதே தமிழைத்
தனியே நீர்தராத் தன்மை என்னெனின்
இலக்கணம் இலக்கியம் ஏது நிமித்தம்
சாத்திரம் சூத்திரம் தந்திர உத்தி
பகுதி விகுதி பதமே பதார்த்தம்
ஆதி அந்தம் அகார மகாரம்
உதாரணம் மாத்திரை உவமை உருவகம்
விகற்பம் சந்தி விதிஅலங் காரம்
காலம் இலேசம் காரகம் ஞாபகம்
விசேடணம் விசேடியம் விகாரம்அதி காரம்
குணம்குணி ஆதியாம் சொற்கோள் அன்றியும்
பிறிதின் இயைபின்மை நீக்குதல் பிறிதின்
இயைபு நீக்குதல் என்னும் இலக்கணம்
முதலாப் பலவா மொழிபெயர்த் தனவும்
கொண்டனர் பண்டையர் உண்டோ இன்றோ?
அன்றியும் தமிழ்நூற்கு அளவிலை அவற்றுள்
ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ ?
அன்றியும் ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று
அறையவே நாணுவர் அறிவுடை யோரே!
ஆகையால், யானும் அதுவே; அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக

மேலே வருவது சாமிநாத தேசிகர் பாயிரத்தின் ஒரு பகுதி. அதாவது, "வடநூல் வழி கலவாது, தமிழைத்
தனியே தர முடியாது - வேறு வாக்கில் சொன்னால், வடமொழி இன்றி தமிழ் தனித்தியங்காது; தமிழ்நூல் ஒன்றிலும் தனித் தமிழ் கிடையாது; ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று சொல்லிக் கொள்ள அறிவுடையோர் நாணுவோர்; நானும் நாணுகிறேன்; வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிற்கும் ஒரே இலக்கணம்" என்று சொல்லுகிறார். அதே சாமிநாத தேசிகரின் வழியில், திரு.ஜடாயுவும் "தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழி" என்று உண்மை(?) விளம்புகிறார். இதுபோன்ற திமிர்ப் பேச்சைக் கேட்டு தமிழ்ர்கள் எதிர்க்காமல் அமைதி காக்க வேண்டுமாம்; அது எப்படி முடியும், சொல்லுங்கள்.

ஓர் இடைவிலகல். தனித்தமிழ் என்ற சொல்லாட்சியை தமிழ்கூறும் நல்லுலகிற்கு முதலில் அளித்தவர் சாமிநாத தேசிகர். இலக்கணக் கொத்தில் தான் அது முதலில் ஆளப்பட்டது. இந்த விதையை ஊன்றியவர் ஈசான தேசிகரே! வரலாற்றின் விளையாட்டு விந்தையானது. தனித் தமிழ் என்றவுடன் குதித்துக் கும்மியாடும் ஜடாயு போன்றவர்கள் தேசிகரை நினைவு கொள்ளட்டும். விதைப்பது ஒன்று முளைப்பது வேறொன்று என்றும் உணரட்டும்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, February 15, 2007

தெள்ளிகை - 2

"சரி, கல்வியை விட்டுவிடலாம், teaching- என்பதைச் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லலாமா?" என்று கேட்டால், அங்கேயும் ஒரு டொக்குப் போட வேண்டியிருக்கிறது.

சுல்>சொல் என்ற வளர்ச்சியிலும் கூட ஒலி என்ற பொருளே உள்ளிருக்கிறது. சொல்>சல் என்ற திரிவில் வருவதும் ஒலிப்பொருள் தான். சலசலத்துப் போகும் நீரோட்டத்தைச் சலம் என்று சொல்லும் போதும் ஒலித்தற் பொருள் தான் உள்ளே நிற்கிறது. (சலம் என்பது நல்ல தமிழ்ச்சொல்; ஜலம் என்ற வடசொல்லில் இருந்து அது வந்ததாய்ப் பலரும் தலைகீழாய்ப் புரிந்து கொள்ளுகிறார்கள்; இல்லை, ஜலம் என்பது தமிழ்ச் சலத்தின் திரிவு. நம்முடையது இல்லையென்று நாம் தொலைத்தவை மிகவும் அதிகம்.) ஒலித்தற் பொருளில் சல் என்ற வேரில் இருந்து கிளைத்து வரும் இன்னொரு சொல்லான சலங்கையை இங்கே நினைவு கொள்ளுங்கள்.

சுல்>சில் என்ற திரிவில் எழுந்த சிலம்புதல், சிலைத்தல் போன்ற வினைச் சொற்கள் கூட ஒலித்தல் என்ற பொருளையே உணர்த்துகின்றன. அறுபடை வீட்டில் ஒன்றான பழமுதிர் சோலையில் ஒலித்துப் பாய்கிற ஓடையைச் சிலம்பாறு என்றே சொல்லுகிறார்கள் அல்லவா? (அதை நூபுர கங்கை என்று வடமொழியில் பெயர்த்துச் சொல்வது வேதாரண்யம் போன்ற ஒரு தவறான, முட்டாள்தனமான, மொழிபெயர்ப்பு). பெண்கள் காலணியான சிலம்பும் ஒலிப்பொருள் வழியே எழுந்த சொல் தான். முத்துச் சிலம்பிற்கும், மாணிக்கச் சிலம்பிற்கும் ஒலி வேறுபட்டு எழும். ஒன்று பாண்டியொலி, இன்னொன்று சோழவொலி, இல்லையா? :-)

"அப்படியானால், teaching என்பதற்கு மறுதலையாய் learning என்று பயன்படுத்துகிறார்களே?" என்று சொல்லி, அதற்கு அணைவாய், செருமன் சொல்லான lehren என்பதைக் காட்டினால், நான் புன்சிரித்துக் கொள்ளுவேன்; அது சரியா என்பதை கீழே உள்ள பத்தியைப் படிக்கச் சொல்லி உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

to learn:

O.E. leornian "to get knowledge, be cultivated," from P.Gmc. *liznojan (cf. O.Fris. lernia, O.H.G. lernen, Ger. lernen "to learn," Goth. lais "I know), with a base sense of "to follow or find the track," from PIE *leis- "track." Related to Ger. Gleis "track," and to O.E. laest "sole of the foot" (see last (n.)). The transitive sense (He learned me how to read), now vulgar, was acceptable from c.1200 until early 19c., from O.E. laeran "to teach" (cf. M.E. lere, Ger. lehren "to teach;" see lore), and is preserved in the adj. learned "having knowledge gained by study" (c.1340).

ஆக, முன்னால் போட்ட தடத்தில் பின்னால் போவது தான் learning. எங்கள் ஊர்ப் பக்கம் திண்ணைப் பள்ளிக்கூட ஆசான், மணலிலோ, தாளிலோ "ஆனா, ஆவன்னா....." என்று வரைவுகளை எழுதி வைத்து, அதன் மேல் நம்மையும் (தடங்களைப்) பின்பற்றி எழுதச் சொல்லுவார். (மணலில் விரல் தேய மாய்ந்து, மாய்ந்து, எழுதியிருக்கிறேன்.) "நான் எழுதுவதைப் பார்த்து அப்படியே விளம்பு" என்று ஆசான் சொல்லுவார். விளம்புதல் என்பது விளாம்புதலின் வழி வந்தது. விளாம்புதலுக்கும், விளாவுதலுக்கும் தொடர்பு உண்டு. "வெந்நீரை விளாவி விட்டாயா?" என்பது தென் தமிழகப் பேச்சு. இதில் இருக்கும் சொற்பொருள் நீட்சியைப் பாருங்கள். விளாவுதல் என்பது ஒரு ஏனத்தில் இருப்பதை அப்படியே ஒரு குச்சி வைத்துச் சுற்றிச் சுற்றிக் கலப்பது. விளாவுதல் என்பது விளாம்புதல் ஆகி முடிவில் விளம்புதல் எனவும் ஆனது. விளம்புதலை விளர்த்தல் என்றும் சொல்லுவது உண்டு. முடிவில், ஏதொன்றையும் ஆசான் சொல்ல, நாம் திருப்பிச் சொல்வது, திருப்பி எழுதுவது, திருப்பிச் செய்வது என எல்லாமே விளம்புதல் என்று ஆயிற்று. திண்ணைப் பள்ளி வழக்கின் படி,

to learn = விளம்புதல்
learning = விளம்பு

"learning disability ஒரு சிறுவனுக்கு இருக்கிறது", என்று சொன்னால், விளம்புவதில் இயலாமை இருக்கிறது என்று பொருள். நம்மூர் மரபுகளை விடாது இருந்தால், "விளம்புதலை"க் காப்பற்ற வேண்டாமோ? நம்முடைய கவனக் குறைவால், நம் மொழிநடை மொண்ணையாக இருக்க வேண்டுமா?

இனி, teaching என்ற கருத்தைச் சற்று நேரம் தொய்வு விட்டுப் பிறகு பிடிப்போம்; அந்த நேரத்திற்குள் மற்ற தொடர்புடைய சொற்களைப் பார்ப்போம்.

இந்த வரிசையில் வருவது lecture. உரத்த குரலில் பேசினான் என்று சொல்லுகிறோமே, அந்த உரத்தலின் பொருளும் ஓசை எழுப்புதலே. உரத்தது உரை = lecture. உரை என்பதை விளக்கம் என்ற பொருளிலும் நாம் பயன்படுத்துகிறோம். உரத்தலின் முந்தைய உரு உலத்தல். ஒவ்வோர் உலத்தமும் ஒரு பாடம் என்பதைத்தான், ஆங்கிலத்தில் lesson என்கிறார்கள். சங்கத் தமிழில், ஓத்து, ஓதம் என்று சொல்லுவது கூட lesson தான்; பல இலக்கிய உரையாசிரியர்கள் தங்கள் உரைகளின் ஒவ்வொரு பெரும் பகுதியையும் ஓத்து என்று சொல்லுவார்கள். அதன் வழி, lecture என்பதற்கு இணையாய், உலத்து, ஓத்து, உரை எனப் பலவாறாய்ச் சொல்லலாம்; உலத்தர், ஓதகர், உரையாளர் என்பவர் lecturer.

அழனிக்கு முன்னால் இருந்து வேள்வி மந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓதுபவன் அழனியோதி (agnihotri; அழனியை வடமொழியில் அக்னி என்று சொல்லுவார்கள். ஓதி ரகரம் நுழைந்து otri ஆகும்; h என்பது உடம்படு ஒலியாய் உள்நுழைந்து நிற்கும். இதை விளக்கப் போனால், இன்னும் நாலுபேர் நான் சங்கதத்தைக் கீழிறக்கி விட்டேன் என்று வலைப்பதிவுகளில் காவிகட்டிப் பாய்ந்து வருவார்கள். அய்யா, சங்கதத்தைக் கீழிறக்குவது என் வேலையல்ல. தமிழின் ஆழத்தைக் காண்பது என் வேலை; தமிழை இந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போலப் புதுக்குவது என் முயற்சி. இதில் நான் வெல்லலாம்; வெல்லாமலும் போகலாம். அதனால் என்ன? என் கடன் பணி செய்து கிடப்பதே.); சிவன் கோயிலில் தேவாரத்தை ஓதுபவர் ஓதுவார். அதே போலக் கல்லூரியில் ஒரு பாடத்தை நமக்கு ஓதுபவரும் ஓதுவார் தான்.

"அய்யோ, போச்சு! என்ன இவர்? அழனியோதியையும், தேவார ஓதுவாரையும் ஒரே தட்டில் வைத்து lecturer-ஓடு இணைத்து வைத்துப் பேசுகிறார்?" என்று ஒரு சிலர் திகைத்துப் போகலாம். ஆனால், சாதி வழக்கு கூடிப் போன நம்முடைய அரை நிலவுடைமை - அரை முதலாளியக் குமுகாயத்தில், இது போன்ற சிந்தனைக் கட்டுப்பாடுகள் நம்முடைய முரண்பாடுகளைக் களையவொட்டாமல் தடுக்கின்றன. நிலவுடைமைப் போக்கில் அழனியோதி உயர்ச்சியாகவும், ஓதுவார் தாழ்ச்சியாகவும், முதலாளியப் போக்கில் இரண்டுமே தாழ்ச்சியாகவும் தோன்றி, முடிவில் விரிவுரையாளர் என்று lecturer - யை நீட்டி முழக்கிச் சொன்னால் தான் "அப்பாடா" என்று சிலர் நிறைவு கொள்ளுகிறார்கள்.

lecturer -யை, ஓதகர் என்று சொன்னால் நாம் குறைந்து விடுவோமோ, என்ன?

lesson = உலத்தம், ஓதம்
lecture = உலத்து, ஓத்து, உரை
lecturer = உலத்தர், ஓதகர், உரையாளர்

ஒதகரை ஏற்றுக் கொள்ளுவது சரவலாய் இருந்தால், குறைந்தது lecturer -யைக் குறிக்கும் விரிவுரையாளர் என்று சொல்லின் விரியென்ற முன்னொட்டையாவது வீசி எறியலாமே? உரையாளர் என்றாலே புரிந்து போகும் அல்லவா? (தொழில் நுட்பத்தில் தொழிலைத் தூக்கி எறியப் பரிந்துரைத்தது போல இதை வைத்துக் கொள்ளுங்களேன்!:-))

அடுத்தது study, student என்ற சொற்கள்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 13, 2007

தெள்ளிகை - 1

Open source teaching பற்றிய ஒரு வலைதளத்தைச் சுட்டி, "அதைத் தமிழில் மொழிமாற்றித் தர இயலுமா?" என்று, நண்பர் மணிவண்ணன், அவரிடம் இன்னொருவர் கேட்டதைப் புறவரித்து (forward), ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சுற்றி வளைத்த சொற்களைப் புழங்காமல், இயல்பான தமிழ் நடையும் வழுவாமல், அந்த வலைதளத்தை மொழிபெயர்ப்பது எனக்குச் சரவலாய்த் தெரிந்தது. குறிப்பாக teaching என்ற சொல். பல நேரங்களில், கல்வி, படிப்பு, சொல்லிக் கொடுத்தல் போன்ற சொற்களை வைத்தே teacher, teaching, taught என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையாய் தமிழில் நாம் ஒப்பேற்றி விடுகிறோம். ஒருமுறையாவது, "what is teaching?" என்பதற்கு நேரடியாய்ப் பலரும் விடை சொல்லுவதில்லை.

Teacher என்பதற்கு நாம் பயன்படுத்தும் ஆசிரியர் என்ற சொல்லை, "அறிவில், படிப்பில் பெரியவர், எனவே ஆசிரியர்" என்றுதான் பொருள் கொள்ள முடியும். ('ஆசு + இரியர் = குற்றங்களை இல்லாமற் செய்பவர்' என்பது சரியான விளக்கம் அல்ல.) தவிர, இது ஆச்சார்ய என்ற வடசொல்லின் தமிழ் வடிவம். இன்னும் ஆழம் போய், ஆச்சார்யாவிற்கு மூலம் பார்த்தால், ஆசான் என்ற தமிழ்ச் சொல் வந்து நிற்கும். (தமிழ்-->வடமொழி-->மீண்டும் தமிழ் என்று "மூக்கை நேரே தொடாமல், பின்னாற் சுற்றித் தொடுவது" பல தமிழ்ச்சொற்களில் நடந்திருக்கிறது. பொதுவாய், வடமொழித் தாக்கம் அறியாமல், நல்ல தமிழ்ச் சொற்களை மீட்க முடியாது.)

ஆசான் என்ற தமிழ்ச்சொல் சேரலத்திலும், குமரித் தமிழிலும் "படிப்பு, கலை, ஆயுதம், கருவி" எனப் பல துறைகளில் வெகுவாய்ப் புழங்கும். மற்ற வட்டாரங்களில் இந்தச் சொல் மறைந்தே போய் விட்டது. "அது எப்படி ஆசான்?" என்று கேட்டால், அய்யன்>ஆயன் என்ற தமிழ்த் திரிவைத் தான் சுட்ட வேண்டும். ஆயம் என்பது கூட்டம். ஆயன், ஆதன் என்பவை பெரியவன் அல்லது தலைவன் என்ற பொருளைக் கொண்டவை. பழைய சேர அரசர்களின் தனிப் பெயர்கள் ஆதன் என்று முடிவதும் கூடத் தலைவன் என்ற பொருளைக் கருதியே ஆகும். ஆதன்>ஆசன்>ஆசான் என்று கூட 'ஆசான்' எழுந்த முறையைச் சொல்லலாம்.

அய்யா என்ற நடைமுறைச் சொல்லையும் பெரியவர், தலைவர் என்ற பொருளில் தான் நாம் பயிலுகிறோம். (உபாத்ய என்ற வடசொற் பாடம் உப ஆத்ய என்று பிரியும்; அதிலும் ஆதன்>ஆத்யன்>ஆத்ய என்று அமையும் திரிவை ஓர்ந்து பார்க்க முடியும். உப ஆத்யா>உபாத்யா>உபாத்தியர்>வாத்தியார் என்ற முறையில் மீண்டும் தமிழில் திரித்துக் கடன் வாங்கி நிற்பது இன்னொரு கதை.) ஆசானுக்கு மாற்றான குரு, குரவர், குரிசில் போன்ற சொற்களும் கூடப் பெரியவர், தலைவர் என்ற பொருளிலேயே அமைகின்றன. [போதகர் என்ற இன்னொரு சொல்லைப் பற்றிக் கீழே பார்ப்போம்.]

அய்யன், அத்தன், அந்தன், அந்தை, அச்சன் என்ற தந்தைச் சொற்களும், ஆத்தாள், அய்யை, ஆயாள், ஆச்சி, அத்தை என்னும் பெண்பாற் சொற்களும் கூட பெரியவர், தலைவர் என்ற பொதுப் பொருளைத் (generic meaning) தான் காட்டுகின்றன. அச்சொற்களின் விதுமைப் பொருள்கள் (specific meanings) பேச்சு வழக்கில் வந்தவையாகும். "அன்னை, தந்தை, குரு, தெய்வம்" என்னும் நால்வரையும் தமிழ் மரபின் படி பெரியவர், தலைவர் என்ற பொருளில் தான் இவை போன்ற சொற்களால் அழைக்கிறோம். [கத்தோலிக்கத் துறவியைக் கூட சேரலத்தில் அச்சன் என்று தான் பெரும்பாலும் அழைக்கிறார்கள். ஆனால், இன்றையத் தமிழ்க் கத்தோலிக்கரோ, துறவியை அப்பன்/அத்தன் என்று சொல்லத் தயங்கித் father என்றே பெரும்பாலும் அழைக்கிறார்கள். தமிழைப் பழகுவது தமிழருக்குத் தான் கடிதாய் இருக்கிறது போலும். :-)]

அந்தணர் என்ற சொல் கூடத் தமிழில் தவறாகவே புரிந்து கொள்ளப் படுகிறது. அந்தன் என்ற சொல் மேலும் ஒரு 'அன்'னைப் பெற்று, நடுவில் வரும் னகரத்தைத் ணகரமாய்த் திரித்து, அந்தணன் என்று உருக்கொண்டு, பெரியவன் என்ற பொருளைக் காட்டும். (இதை, அம் + தணன் என்று பிரித்து, விந்தையான முறையில் விளக்கம் சொல்லுவது சரியல்ல.) பெருமானர், அந்தணர், அய்யர், அய்யன்கார் ஆகிய எல்லாச் சொற்களும் தொடக்கத்தில் சாதி குறிக்காமல், "பெரியவர்" என்ற பொதுமைப் பொருளைத் தான் உணர்த்தின. "அந்தணர் என்போர் அறவோர்" என்ற குறள் வரி கூடப் பொதுப் படச் சொன்னது தான். "ஞான நிலை அடைந்தவரே பெருமானர், பெருமானர் என்ற சொல்லைப் பிறப்பை வைத்துக் கையாளக் கூடாது," என்று கோதம புத்தரும் தம்ம பதத்தில் சொல்லுவார்; "யார் பெருமானன்?" என்று அதிலே மிகத் தெளிவாக வரையறை காட்டிச் சொல்லுவார்.

பொதுவாக, வெளிரிய நிறம் குறித்து எழுந்த சொல்லான பால்ப்பார்>பார்ப்பார் என்ற விதப்புச் சொல்லையும், அந்தணர் என்ற பொதுமைச் சொல்லையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிய வேண்டும். "பார்ப்பனர் என்பவர் அந்தணராய் இருக்கலாம்; அதே பொழுது, எல்லா அந்தணரும் பார்ப்பனர் அல்லர்" என்ற கருத்து சங்க இலக்கியத்தை ஆழமாய்ப் படித்தால் புலப்படும். பின்னாளில் அனைத்தையும் சாதி மயமாய் ஆக்கிப் பொதுமைச் சொல்லுக்கு விதப்புப் பொருளைத் தொடர்புறுத்திச் சிவனையே சிவ பெருமான் என்றும், அதே பெயரைச் சற்று திரித்து சு ப்ரம்மண்யன் என்று முருகனைக் குறித்தும் பெயர் எழுந்த கதை விந்தையானது. (சிவ>சு, சு என்று தொடங்கும் வடமொழிச் சாயலுள்ள சொற்கள் பலவும் சிவ என்ற நல்ல தமிழ் முன்னொட்டில் தொடங்கியவை தான்; ஆழப் பார்த்தால் புரியும். பெருமான்>ப்ரம்மண்யன்).

தந்தை, தாத்தன், ஊர்த் தலைவன். கணங்களின் தலைவன், அகவை கூடியவன், கல்வியில் பெரியவன் எனப் பல்வேறு பொருள்களைச் சுட்டும் சொற்கள் எல்லாம் உயர்ச்சிப் பொருள் கொண்ட ஐ என்னும் வேரில் கிளைத்தவையே. "ஐ வியப்பாகும்" என்பார் தொல்காப்பியர். வியப்பு என்பது இங்கே awe என்றே பொருளில் ஆளப்படுகிறது. நம்மிலும் பெரியவரை, நாம் வியந்து அய்யா என்று அழைக்கிறோம். ஐ பற்றித் தொடர்ந்து எழுதினால் பெருகிக் போகும். [ஆர்ய என்னும் வட சொல்லில் இருந்தே ஐ கிளைத்தது என்னும் வல்வழக்குகளைத் தள்ளி வைத்து மேலே நகருவோம்.]

ஆசானுக்கு எதிராய்ச் சொல்லப்படும் மாணவன்/மாணாக்கன் என்ற சொற்களும் கூட teaching பற்றி எழாமல், மாந்த அளவு பற்றியே கிளைத்தவையாகும். மாணவன் என்பவன் சிறுவன்; மாணாக்கன் சிறுத்தவன்.

"மாணிக் குறளனே தாலேலோ" என்றும் (நாலாயிரப் பனுவல் 44), "மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று" என்றும் (நாலாயிரப் பனுவல் 219), மாணாகி வையம் அளந்ததுவும்" என்றும் (நாலாயிரப் பனுவல் 8:10:8)

என்று பெரிய திருமொழி சொல்லும். இங்கே மாணன் என்பவன் குறளன், குட்டையானவன், சிறுவன். அதன் நீட்சியான மாணவனும் சிறுவன் தான். மாற்றுச் சொற்களான பையன், பிள்ளை ஆகியவையும் தமிழில் சிறுமைப் பொருளையே குறிக்கின்றன. பிள்ளைக்கு நிகரான pupil என்ற ஆங்கிலச் சொல்லும் கூட இலத்தீன் வழியே சிறுமையே குறிக்கும். மாணின் தொடர்பான மணி என்ற சொல்லிற்கும் கூடச் சிறுமைப் பொருள் உண்டு. மணிக் கயிறு, மணிக் காடை, மணிக் குடல், மணித் தக்காளி, மணிச் சம்பா, மணிச் சுறா, மணிப் பயறு, மணிப் புறா, மணிக் கட்டு போன்றவற்றை பார்த்தால் மணியின் சிறுமைப் பொருள் புரியும்.

ஆக நாம் பயன்படுத்தும் ஆசான், மாணவன் என்னும் இரண்டு வகைச் சொற்களும், teaching என்ற தொழிலோடு தொடர்பு காட்டாமல், பெரியவன், சின்னவன் என்ற பொருட்பாடுகளிலேயே அமைந்து விடுகின்றன.

சரி, teaching என்பதைக் கல்வி என்று சொல்லலாமே? - என்று யாரோ ஒரு நண்பர் அங்கு கேள்வி எழுப்புகிறார். நான் அறிந்தவரை அப்படிச் சொல்லமுடியாது என்பதே என் மறுமொழி. நம்மில் பலரும் இக் காலத் தமிழில், துல்லியமான சொற்களைப் புழங்குவதை விட்டு, இருப்பதை வைத்துப் பூசி மெழுகிக் கும்மியடிப்பதையே ஒரு கலையாகத் தமிழில் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவாகத் தான் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம் போன்ற கலை எழுத்துக்களுக்கு மட்டுமே தமிழை வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றிற்கும், குறிப்பாகத் துறை சார்ந்தவற்றிற்கு, ஆங்கிலம் பயன்படுத்தும் போக்கு நம்மிடம் அதிகப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சிலர் வடசொல் கலந்து எழுதிவிட்டு "அதுதான் சிறந்த நடை, நல்லதமிழ் நடை ஒரு 'முயூசிய நடை' " என்று தலைகீழாய் வவ்விக் கொண்டு இருப்பார்கள். (என்ன சொல்லுவது? ;-) மூயூசியம் என்பதற்குத் தமிழ்ச் சொல் அவருக்குத் தெரியவில்லை; மூதையம் என்ற தமிழ்ச்சொல் நினைவிற்கு வருமோ?)துல்லியச் சொற்களைப் புழங்காததனால் தான், இப்படி நடுநடுவே வடசொற்களையும், ஆங்கிலச் சொற்களையும் பெய்து, ஒரு கலவை மொழியை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

ஏதொரு தமிழ்ச்சொல்லும், அடித்து வைத்தாற் போல, வரையறை செய்தாற் போல் "இதற்கு இது தான்" என்று தெளிவாக இருக்க வேண்டாமோ? பலசொல்-ஒருபொருள், அல்லது ஒருசொல்-பலபொருள் போன்றவை இருக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு சொல்லாவது நம் மொழியில் விதப்பாக இருக்க வேண்டும் என்கிறேன். அப்பொழுது தான் தமிழ்மொழி இன்றையத் தேவைக்கு உகந்தாற் போல் புத்தாக்கம் பெறும். நூறாண்டு கழிந்தாலும் அது நிலைக்கும்; "நம் பிறங்கடைகள் (successors) இனிக் காப்பாற்றுவார்கள்" என்ற நிறைவில் நாம் போகலாம்.

சரி, teaching -ற்கு வருவோம்.

கல்லுதல் என்பது ஓசையெழுப்புவது. கல்+தல் = கற்றல் என்பதும் கூட ஓசையெழுப்புதல் தான். கல்வித்தல்/கற்பித்தல் என்பது கற்றல்/கல்லுதலின் பிறவினை; அதாவது, ஓசையை எழவைத்தல். அந்தக் காலத் திண்ணைப் பள்ளிகளிலும், இந்தக் கால இசுலாமியர் மதரசாப் பள்ளிகளிலும், சத்தம் போட்டே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; அல்லது கற்பிக்கிறார்கள். அது ஒருவகை மரபு. (என் அகவையில் உள்ள பலரும் நாட்டுப் புறங்களில் கீழே வருவது போலத் தான் படித்தோம்; கற்பிக்கப் பட்டோ ம்.)

"ஆ, ஆவன்னா, ஈனா, ஈயன்னா,
ஓரோண் ஒண்ணு; ஈரோண் ரெண்டு;..... எண்ணிரண்டு பதினாறு......
அறஞ்செய விரும்பு...... .......
பிச்சை புகினும் கற்கை நன்றே"

என்ற வகையில் அது போய்க்கொண்டு இருக்கும். (திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்பவை இன்று காணாது போய்விட்டன. எல்லோரும் மக்காலே வழிமுறைக்கு வந்துவிட்டோ ம்.) சத்தம் போடாமல் படிக்கும் கலையை பல நாட்கள் கழித்துத்தான் நாம் மரபுவழி சொல்லிக் கொடுக்கிறோம். "சத்தம் போடாத கல்வி" என்ற சொற்றொடர் கூடத் தமிழில் ஒரு முரண்தொடை தான்.

இருப்பினும் இன்றைக்குக் கல்வி என்ற சொல்லின் பொருட்பாடு நீண்டு விட்டது. கிட்டத் தட்ட education என்பதற்கு இணையாகவே அந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், education என்பதற்கு ஆங்கில அகரமுதலிகளில் கொடுத்துள்ள சொற்பொருளோ சற்றே வேறுபடும்.

educate:

1447, from L. educatus, pp. of educare "bring up, rear, educate," which is related to educere "bring out," from ex- "out" + ducere "to lead" (see duke). Meaning "provide schooling" is first attested 1588 in Shakespeare. Educationese "the jargon of school administrators" is from 1966; educrat first attested 1968, usually pejorative, second element from bureaucrat (q.v.). Educable is from 1845. Educated guess first attested 1954.

இங்கே அறிவூட்டம், அறிவுயர்த்தம் அல்லது அறிவெழுச்சியே education என்று சொல்லப் படுகிறது; சுருங்கச் சொன்னால், to educate somebody is to make him knowledgeable. ஒருவனை ஏதோ ஒன்றை அறியச் செய்தலே education என்று ஆகிவிடுகிறது.

education = கல்வி, அறிவூட்டம்educator = கற்பிப்பவர் (இந்தச் சொல்லைப் பயனாக்குபவர் இப்பொழுது அரிது; பெரும்பாலும் கல்வியாளர் என்றே சொல்கிறார்கள்), அறிவூட்டுநர்

"சரி, கல்வியை விட்டுவிடலாம், teaching- என்பதைச் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லலாமா?" என்று கேட்டால், அங்கேயும் ஒரு டொக்குப் போட வேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Monday, February 05, 2007

என் கடன் பணி செய்து கிடப்பதே

"தமிழை வளர்க்கத் தமிழை எளிமைப் படுத்துவோம். தம் தாய்மொழியை அனைவரும் எளிதே பயன்படுத்திட அதனை எளிதாய் வைத்திருப்போம். தங்கள் சொல்லாக்கம் தவிர்ப்பீர்! தமிழைக் காப்பீர்!"

என்று எளியன் என்பவர் என்னுடைய முந்தையப் பதிவில் ஒரு பின்னூட்டுக் கொடுத்திருந்தார். அதற்கு,

"தமிழை எளிதாக வைத்திருக்க உங்கள் இலக்கணம் ஏதென்று எனக்குத் தெரியாது. தமிழுக்கு ஏதும் நான் குறை செய்ததாகவும் எனக்குத் தோன்றவில்லை. போகிற போக்கில் இப்படி "பொன்னான" கருத்துச் சொல்லும் உங்களைப் போன்றோருக்கு என்னிடம் மறுமொழி இல்லை. ஏதேனும் தவற்றை விதப்பாகச் சொன்னால் மறுமொழி சொல்லலாம். உங்கள் வருகைக்கு நன்றி"

என்று நான் மறுமொழி சொல்லியிருந்தேன். எளியன் சொல்லும் இலக்கணம் ஏதென்று எனக்குத் தெரியாவிட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாய்ப் புரிந்து கொள்ளுகிறேன். என்னுடைய பதிவுகளைப் படிக்கும் ஒரு சாராருக்கு நான் பெரும் முள்ளாய் இருந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எங்கெங்கோ தொடர்பு இல்லாத இடங்களிற் கூட (காட்டாக, கலைஞரின் கையெழுத்து பற்றிய நண்பர் ஹரன் பிரசன்னாவின் பதிவிற்கான பின்னூட்டில்) "மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்" என்ற கணக்காய், கையெழுத்து மாற்றத்திற்கும் சொற்பெயர்ச்சிகளுக்கும் உறவு சொல்லி, அடிப்படை அறிவு கூட இல்லாமல், என் சொல்லாய்வு முயற்சிகளைப் பற்றி முட்டாள் தனமாக எதிர்வினை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். (இங்குமே பெயரில்லாதவர்கள்). வலைப்பதிவு நுட்பங்களின் நெளிவு சுளிவுகளால் எளிதாகும் முகமூடி விளையாட்டு, இது போன்ற கோழைப் பின்னூட்டுக்களுக்கு வாய்ப்பாய் அமைந்து விடுகிறது.

தமிழைக் கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம் என்று நாம் களியாட்டக் களத்தில் வைத்திருக்கும் வரை இந்தப் பெயரில்லாதவர்களுக்கு அது உகந்ததாய் ஆகிறது. கூடிச் சேர்ந்து கும்மியடிக்க முடிகிறது. ஏனென்றால் அந்தக் கும்மாளம் நம்மை அறியாமலேயே "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்ற நிலைக்கு கூட்டிச் செல்கிறது அல்லவா? நாமும் "கொஞ்சம் கொஞ்சமாய் சூடேறும் நீர்த்தாங்கலில் (water tank) அமிழ்ந்து கிடக்கும் தவளையைப் போல" நம் அழிவை உணராமல் "சும்மா கிடப்பதே சொல்க்கம்" என்று இருப்போம் அல்லவா?

மாறாகத் தமிழ்நடையைத் துல்லியப்படுத்தும் வகையில், அறிவியல், நுட்பியல், மாந்தவியல், பொருளியல், குமுகியல் என்று போய், வேர்ச்சொல் ஆய்ந்து, பழஞ் சொற்களைப் புதுக்கி, புதுச் சொற்கள் ஆக்கி, சமய வழி மூதிகக் கதைகளை ஒதுக்கி, வரலாற்றுப் பிழைகளைச் சொல்லி, மாற்றுக் கருத்தியல் வைத்தால் இந்தப் பெயரில்லாதவர்களுக்கு இருப்புக் கொள்ளாமற் போய்விடுகிறது. சுற்றிச் சுற்றி வந்து நாலாந்தரமாகப் பெயரை நாறடிக்க முற்படுகிறார்கள். (இப்படித்தான் சிற்றம்பலம் நடவரசன் திரு முன்னால் திருவாசகம் படிப்பது பற்றி நான் எழுதிய போது, அதைத் தன்மயமாய்த் திரித்து என்னையும், என் குடும்பத்தினரையும் ஒருவர் தூற்றி இருந்தார்.) என்பால் கனிவு கொண்டவர்கள் என்னை அகவை கருதியும், தமிழ் மரபு கருதியும், "அய்யா" என்று அழைப்பது கூட இவர்களுக்கு உறுத்துகிறது.

கழிப்பறைச் சுவரில் விடலைப் பிள்ளைகள் பாலியற் செய்திகளை ஊகமாய் எழுதுவது போல், கண்ட கண்ட இடங்களில் தூற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவர்களுக்கெல்லாம் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை தான். ஆனாலும் தமிழுக்கு "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பொதுப்படச் சொல்லுவதற்காக இந்தப் பதிவு.

"போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்."

என்றான் கண்ண தாசன்.

அன்புடன்,
இராம.கி.