Friday, March 15, 2019

இட்டளி - 2

பிட்டு (வெறும் பச்சரிசி), கொழுக்கட்டை (பச்சரிசி), இடியப்பம் (புழுங்கலரிசி), இட்டளி (புழுங்கலரிசி 4 பங்கு, உழுந்து 1 பங்கு), அப்பம்/ஆப்பம் (பச்சரிசி 2 பங்கு, புழுங்கலரிசி 2 பங்கு, உழுந்து 1/2 பங்கு), தோயை>தோசை (புழுங்கலரிசி 2 பங்கு, பச்சரிசி 2 பங்கு, உழுந்து 1/2 பங்கு), அடை (பச்சரிசி 1 பங்கு, புழுங்கல் அரிசி 1 பங்கு, துவரம்பருப்பு 1 பங்கு, கடலைப்பருப்பு 1 பங்கு, பாசிப் பருப்பு 1.2 பங்கு, உழுந்து 1/4 பங்கு), வடை (இங்கு உழுந்துவடை மட்டும் சொல்கிறேன். உழுந்து 1 பங்கு), சுட்கியம்>சுக்கியம்>சுகியம்>சீயம் (பச்சரிசி 1 பங்கு, உழுந்து 3/4 பங்கு) போல் பல்வேறு உணவுப்பண்டங்கள் நம்மூரில் செய்யப்படுகின்றன.

இவற்றின் மாவுக்கலவை ஒருபக்கம் முற்றிலும் அரிசியாய், இன்னொரு பக்கம் முற்றிலும் பருப்புவகைகளாய், இடைப்பட்டு இரண்டின் கலவைகள் ஆயும் மேலே கூறியபடி அமையலாம். மாவுக் கலவையின் ஒத்திசைவு நீர் கூடியும், நீர் மிகக்குறைந்தும் உண்டு. மாவுக்கலவையின் பாகுமைகளும் கூடிக் குறைந்து உண்டு. எல்லாவற்றிலும் trial and error உண்டு/ மாவரைத்த உடனேயே ஊற்றிச்சுடுவதும் உண்டு. அதை ஓரிரவு நிறுத்தி நொதிக்க வைத்து அடுத்த நாள் பயனுறுத்துவதும் உண்டு. சிலற்றை அவிக்கிறோம். சிலவற்றை வாணலித் தட்டில் வைத்து எண்ணெய்தடவிச் சுடுகிறோம். வாணலித் தட்டுகள் குழிவுடனும் உள்ளன; குழிவின்றித் தட்டையாயும் உள்ளன. சிலவற்றை எண்ணெயில் அமிழ்த்துப் பொரித்து எடுக்கிறோம். 

[இற்றைக் கும்மாயம்/ஆடிக்கூழ் பச்சரிசி 1/2 பங்கும், உழுந்து 1/4 பங்கும், பாசிப்பருப்பு 2 பங்குங் கொண்ட மாக்கலவையோடு வெல்லப்பாகும் நெய்யுஞ் சேர்த்து குழைய வேகவைத்துச் செய்வது. பச்சரிசிக்குப் பகரியாய் கேப்பை மாவையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் பாசிப்பருப்பைத் தவிர்க்க முடியாது. கும்மாயம் என்ற உணவு மணிமேகலைகாலத்திற் (பொ.உ.375) கூட இருந்தது. மணிமேகலையின் சமயக்கணக்கர் தம் திறங் கேட்ட காதையின் 185 ஆம் வரி கும்மாயத்தை வைத்து சமண-புத்தச் சமய உரையாடல்களைக் காட்டும். கும்மாய மிதவை இட்டவி மிதவையைக் காட்டிலும் பாகுமை (viscosity) கூடியது. அது கிட்டத்தட்ட அரைத் திண்மமாகவே (semisolid), கூழுக்கும் அதிகமாகவே காட்சியளிக்கும்.]

அடுத்த சொல், குழைவு (thick suspension) இதைச் சேறென்றும் பழந்தமிழில் சொல்வர். இன்றதன் பொதுப்பொருள் இழந்து மண்ணொட்டி ஆளப் படுகிறது. கூழ் (viscous suspension) என்பது பாகுமை (viscosity) கூடிய மிதவை. கடைசியில் கலவை. இது ஈரங்கலந்த திண்மப்பொடி. பிட்டு, இடியப்பம் போன்றவை நீர்/திண்மக் கலவையில் செய்யப்படுபவை. பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியாதார் யார்? பிட்டுக்கும் இடியப்பத்திற்கும் ஒரேவித அரிசிமா பயன் படுத்துவர். மாதத்தில் 4,5 நாட்களாவது பிட்டில்லாக் காலையுணவு தென்பாண்டி, கேரளம், ஈழம் ஆகியவற்றில் உண்டோ? இத்தனை சொற்களின் விதப்பை அக்காலத்தில் அழுத்தாவிடினும் அவற்றின் முகமையைப் புரிந்துகொள்ளலாம். இட்டளி தொடர்பான கேள்விகளுக்கு மறுமொழி தேடுகையில், நீர்குறைந்த, திண்மப்பொடி கூடிய, மாவுக் கலவையாலான, ஆவியில் வேகவைக்கப்பட்ட இடியப்பம் முதலில் நினைவிற்கு வரும்..

https://valavu.blogspot.com/2009/07/1.html
https://valavu.blogspot.com/2009/07/2.html
https://valavu.blogspot.com/2009/07/3.html

அடுத்து, பிட்டும், கொழுக்கட்டையும். இவையிரண்டையுமே மோதகம் என்பர். ”வகையமை மோதகம்” என்பது மதுரைக் காஞ்சியின் 626 ஆம் வரி. ”காழியர் மோதகத்து ஊழுறு விளக்கமும்” என்பது சிலம்பு கடலாடு காதையின் 137 ஆம் வரி. மொதுமொதெனல் என்பது திரளற் குறிப்பு. மொத்தை=  உருண்டை, பருமன்; மொந்தை = உருண்டை, பருமன். மொது> மொதுகம்>மோதகம் = பிட்டுருண்டை மோதகம் நல்ல தமிழ்ச்சொல்லே. (ஊடே சிலர்புகுந்து அதைச் சங்கதமென ஒருகதை விடுவார்.) அடுத்துக் காழியரென்ற சொல்லைப் பார்ப்போம். கவளென்பது கவ்வும் அளவான பிட்டுருண்டை. இது கவள்> கவழ்>காழ் எனத்திரியும். காழைவிற்றுப் பிழைப்பவர் காழியர். இச்சொல் இந்திரவிழவூரெடுத்த காதையின் 24 ஆம் வரியிலும் வரும். மருவூர்ப் பாக்கத்தில் பிட்டுவிற்பவர் மிகுதி. என் கணிப்பின் படி சிலம்பின் காலம் பொ.உ.மு.75. மதுரைக் காஞ்சியின் காலம் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு முன். அதாவது பொ.உ.மு.175. ஆவியில் வேகவைக்காது பிட்டை ஆக்க முடியாது. ஆவியில் வேக வைப்பதை யுவான்சுவாங் நம்மூருக்கு வரும்வரை தமிழருக்குத் தெரியாது என்பதெல்லாம் கட்டுக் கதை. சிலம்பைப் படிக்காதவரே இப்படிச் சொல்வார். மேலே சொன்னதில் 2.3 is cleared.

பிட்டு, கொழுக்கட்டை ஆகியவையும் இடியப்பக் கலவைக்கு மிக அருகிலேயே திண்ம, நீர்ம அளவு கொண்டவையாகும். இம்மூன்று கலவைகளும் உலர்பொடியில் நீர்சேர்த்து உருவாக்கப் படுபவை . இம்மூன்று கலவைகளையும் விடக் கூடிய அடர்த்தியும், பாகுமையுங் கூடிய, இட்டளிக் கலவை மாவோடு நீர்சேர்த்துச் செய்வதல்ல. அது நீரையும் கூலத்தையுஞ் சேர்த்து அரைத்துப்பெறுவது. ஆங்கிலத்தில் இதை ஈர அரைப்பு (wet grinding) என்பார். நாலு பங்கு புழுங்கலரிசியும் ஒரு பங்கு உளுந்தும் சேர்ந்த கலவையைச் சரியான மிதவைப் பாகுமைக்குத் (suspension viscosity) தக்க ஒத்திசைவாக ஆட்டிக் கொள்ளுவது இதில் முகன்மையானது

கலவையுள் இருக்கும் துகள்களின் குருணையளவு (grain size) கூடியிருந்தாலும் சரியான நொதிப்பு (fermentation) நடக்காது, நொய்ந்து போயிருந்தாலும், நொதிப்பு கூடிப்போய், அடுத்தநாள் மிகுந்த கரி- இரு- அஃகுதைக் குமிழிகள் (bubbles of carbon-di-oxide) ஏற்பட்டு மாவுக்கலவை பொங்கிவிடும். [பொங்கிய மாவுக் கலவையிற் செய்த இட்டவி தட்டையாகிப் போகும்.] எந்தப் புழுங்கல் அரிசி, எந்த குருணையளவுக்கு அரைபட வேண்டுமென்பது கைப் பக்குவத்திலேயே தெரிகிறது. அதோடு களிமிதவையை தெளியவிடாமலும் வைக்கவேண்டும். இதற்காக, அவ்வப்பொழுது ஆட்டிய மாவைக் கலக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பார். இல்லையெனில் அரிசிக் குருணை கீழும், பருப்புக் குருணை மேலும், நீர் அதற்கு மேலுமாய்த் தக்கி (தக்கல் = settling) மிதவை பிரிந்து போகும். அரைப்பின் முடிவில் கிட்டத்தட்ட கூழ்நிலைக்கு இது வந்துவிடும். இக்கூழை சூற்றுச்சூழலின் வெம்மை, வெதனம் பொறுத்து 3-8 மணி வரை நொதித்துப் புளிக்கவிடுவர். கூழ் முழுக்கவும் புளித்துவிட்டால் காற்றுக்குழிழ்கள் அதிகமேற்பட்டு இட்டளி பொங்கிவிடும்.

நொதிப்பு நடப்பது இருவேறுவகை உயிரிகளாலென்று கூறுகிறார். முதல் வகை: காற்றில் மிதந்துகிடக்கும் (அல்லது நம் உள்ளங்கையில் இருக்கும்) Saccharomyces cerevisiae போன்றதொரு கொதியம் (yeast/giest- a microbe which makes the batter boil. மறக்காதீர்கள் நொதியம்= enzyme கொதியம்= gist, yeast). இரண்டாம் வகை: Lactobacillus போன்ற பட்டுயிரி (bacterium). உயிர்வேதியற்காரர் இவ்விரு வகை நொதிப்பிற்குள் எது முகன்மையானதென்று முடிந்தமுடிவிற்கு வரவில்லை. ஆனால் இந்த நொதிப்பு அவ்வளவு முன்காலத்தில் (அதாவது சங்க காலத்தில்) நடந்ததா என்றால் நடந்தது என்றே சொல்லவேண்டும். இட்டளி போக இன்னொரு பண்டமும் சங்க காலத்தில் இருந்தது அது அப்பம். புளிக்காத மாவில் அப்பஞ் செய்யவே முடியாது. அப்பமிருந்ததற்குச் சான்று ”கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்” எனும் சிலம்பின் கடலாடு காதை 138 ஆம் வரி. ”கூவியர்” என்பது இந்திரவிழவூரெடுத்த காதையின் 24 ஆம் வரியில் வரும். ”கூவியர்” பெரும்பாணாற்றுப் படை 377 இலும், ”தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க” என்று மதுரைக்காஞ்சி 627 இலும் வரும். கூவியர் என்ற சொல் அப்பத்தை ஒட்டியே எழுந்தது. குவ்வு>கூவு>கூவி (குழியப்பம்)>கூவியர் குல்>குள்>குவ்>குவ்வல்>கூவல்= குழி.   ஆக நொதிப்பு பற்றிய அறிவு பொ.உ.மு 175 இல் தமிழர்க்கு இருந்தது  Point no 2,2 is cleared.
.
அடுத்தது இட்டவித் தட்டில் ஆட்டிய மாவை இட்டு ஆவியில் வேகவைப்பது. இதைப் பற்றிப் பேசிவிட்டோம்.   அதேபொழுது வாணலித்தட்டில் எண்ணெய் தடவிச் சுடப்படும் தோயை>தோசை, வாணலிச் சட்டியில் எண்ணெய் தடவிச் சுடப்படும் அப்பம்>ஆப்பம், ஊத்தப்பம், அடை, வாணலிச் சட்டியில் இருக்கும் எண்ணெயில் பொரிக்கப்படும் சுட்கியம், வடை, விதவிதமான பண்ணிகாரங்கள் (குழிப் பண்ணிகாரம், பண்ணியம்>பண்ணியாரம் என்பது சிலம்பு கடலாடு காதையில் 135 ஆம் வரியில் வரும். போன்றவற்றையும் சேர்ந்து பார்க்கவேண்டும். (கூடவே சட்டினியையும் பார்க்கலாம்.)

https://valavu.blogspot.com/2018/08/blog-post_5.html

அன்புடன்,
இராம.கி.



இட்டளி - 1

”இட்லி தமிழ்ச்சொல்லா?”வெனப் பலர்கேட்கிறார். இதன் சரியானவடிவம் இள்+தளிகை=இட்டளிகை>இட்டளி. வினைத்தொகையான இச்சொல்லில் இள், இளகலையும். தளிகை, யாழ்ப்பாண அகராதிப்படி கூழ்க்கட்டியையுங் குறிக்கும். தள்-தல்= கட்டல். தள்>தளைத்தல் = மாட்டைக் கந்திற்கட்டுவது/ சீர்களைச் செய்யுளிற்கட்டுவது. அச்சில் வார்ப்பதைத் தளித்தல் எனலாம். கோயில் மடைப்பள்ளிகளில் ஆக்கியசோற்றை அரைக்கோளச் சட்டியில்/அச்சில் தள்ளியழுத்தி கட்டியாக்குவது உங்களுக்குத் தெரியுமோ? உண்டைக் கட்டி அல்லது தளிகை என்று சொல்வார். ”இன்றைக்கென்ன தளிகை?” யெனில், ”புளியோதரைக்கட்டி, பருப்புச்சோற்றுக்கட்டி, சருக்கரைச் சோற்றுக்கட்டி” எனச் சொல்வார். [இதைப் ப்ரசாதம் என்பாருமுண்டு.. பல தமிழ்ச்சொற்கள் இப்படித்தான் வடமொழித் தோற்றங்காட்டி நம்மைத் தடுமாற வைக்கும். சொதசொதப்பானது சொல்>சோல்>சோறு; சோற்றம்>சோத்தம்> சோதம்>சாதம் பெருஞ்சாதம்>ப்ரசாதம்.].

12 மணி நேரமாயினும் புளிச்சோறு கெடாது. நெடும்பயணக் கட்டுச்சோறு, கட்டிச்சோறாகும். இட்டளிக்கு நெருங்கியதாய்க் கொழுக்கட்டை என்பாரே? அதுவுங் கூழ்க்கட்டியின் இன்னொரு வடிவமே. தளிகை= கட்டி என்பது இட்டளிக்கும் பொருந்தும். இட்டளித் தட்டு என்பதும் குறைக்கோளக் (frustum of a sphere) குழிகள் கொண்டதே. வேகவைக்கு முன் அந்த அச்சில் ஒரு துணியைப் பாவி இட்டளிமாவு இடப்படும் இட்டளியை இட்டு+அளி எனத் தவறாய்ப் பிரிப்பார். நானுமதில் ஒருகால் மயங்கினேன். முதுமுனைவர் இரா. இளங்குமரன் (தமிழ்-வளம்-சொல், திருவள்ளுவர் தவச்சாலை, 1996, பக்கம் 58-60) கூறிய இட்டவி சரியோ என்றும் என் முந்தையாவணங்களில் சொன்னேன். இப்போது மீளாய்வு செய்து, தடுமாற்றந் தெளிந்து, இவ் விடுகையில் சொற்பிறப்பை விவரிக்கிறேன். .

முதல்நாள் நொதிக்கவைத்த அரிசி/பருப்புக் கூழை அடுத்தநாள் ஆவியில் வேகவைத்துக் கட்டியாக்குவது இட்டளியில் நடக்கிறது. நொதிக்க வைத்ததால் இட்டளி மாவுக்கலவை பதப்பட்டு உடலுக்குத் தேவையான உயிர் அங்க வேதிகள் (bio-organic chemicals) உருவாகின்றன, இரண்டாவதாய், காடிநிலை (acid condition) உருவாகி இட்டளியின் கெடாநிலை நீடிக்கிறது. பிட்டு, அப்பங்களைப் பேசும் சங்கவிலக்கியம் இட்டளியைப் பேசவில்லை. அரிசி/பருப்பை நீரோடு அரைத்தல், நொதிக்கவைத்தல், வேகவைத்தல் எனும் 3 செயற்பாடுகளும் சங்ககாலப் பிட்டு, இடியப்ப, அப்பச் செய்முறைகளின் வழிப்பட்டவையே. அவற்றைச் சற்றே வேறுமாதிரிச்செய்து, தவறிப் பின் சரிசெய்து இட்டளியைத் தமிழரே உருவாக்கியிருக்கலாம். பெரும்பாலும் இது வெளிநாட்டிலிருந்து வந்திறங்கத் தேவையில்லை. சங்ககாலத்தின் பின், சிவன், பெருமாளுக்காக மாடக்கோயில்கள் கட்டிப் பெருவலப்படுத்திய கோச்செங்கணான் காலத்தில் (பல்லவருக்குச் சற்றுமுன், களப்பிரர் காலத்தில் பொ.உ 250-550 இல்) பற்றி இயக்கத்திற்குச் சற்றுமுன் எழுந்திருக்கலாம். அதேபோது கோயிலில் மட்டுமே இட்டளி செய்யப் பட்டதாய்ச் சொல்லவில்லை. தளிகையாய், கட்டியாய் ஆக்கிய காலத்தில் எழுந்திருக்கலாம் என்கிறேன்.

கெட்லியெனும் இந்தொனேசியப் பண்டத்தோடு தொடர்புற்றதாய் வடநாட்டு ஆய்வாளர் ஆச்சாரியா சொல்வார். According to him, the cooks employed by the Hindu kings of the Indianised kingdoms might have invented the steamed idli there, and brought the recipe back to India during 800-1200 CE. இதுவரை கெட்லி படத்தையோ, ஆதாரங்களையோ, யாருங் காட்டியதில்லை. நானும் கண்டது இல்லை. மாறாய், செயக்கர்த்தாவிலிருந்து பறனைவழி பலெம்பாங் போகையில், எளிதிலொட்டும் வெண்கவுணிப் பருக்கைகளை வாழையிலைக்குள் உருட்டிச் செய்த லோங்டாங்கைச் (Longtong rice-cake) சாப்பிட்டிருக்கிறேன். tong=உருளை (barrel). மாவிற்செய்து வேகவைத்த நம்மூர் காஞ்சிபுரம் இட்டளிமாதிரி லொங்டொங் வெளிக்காட்டும். நொதிப்புள்ள வேறு பலகாரங்களும் இந்தொனேசியாவிலுண்டு. காட்டாக, நொதிப்பால் உருவாக்கப்பட்ட டெம்ப்பே (Soyabeans cake). இன்னொருவகையில் காஞ்சிபுர இட்டளியோடு ஒப்புமை காட்டும் பூராசா/Burasa or buras is a type of rice dumpling cooked with coconut milk packed inside a banana leaf pouch. இதுவும் சோறா, மாவுக் கலவையா, தெரியாது.

இதுவரைகிட்டிய செய்திகளின்படி ”இந்தோனேசியாவே இட்டளியின் தோற்றுவாய்” என்பதற்கு ஆதாரமில்லை. காஞ்சிபுரம் இட்டளியே பொது இட்டளியின் முதற்செய்முறை என்பதற்கும் ஆதாரமில்லை ஊகத்தை யாருஞ் செய்யலாம். கல்வெட்டு ஆதாரங்களை ஆயவேண்டும். திருப்பதிக் கல்வெட்டு பார்த்தால், பெருஞ்சோழர் காலம்வரை போனகக் (சாமிக்குச் செய்யும் படையல்) குறிப்புகளின் விவரிப்பு இல்லை. அப்பப் படிக் குறிப்புகள் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தெளிவாகவுள்ளன. அதன்பின் வரும் ஏராளம் கல்வெட்டுகளை இங்கிடுவது இடத்தையடைக்கும். வேண்டுவோர், திருமலை திருப்பதி தேவத்தானத்தின் “Early Inscription" நூலைப் பாருங்கள். South Indian Inscription நூல் வரிசையையும் பாருங்கள். பென்னம்பெரிய வேலை. இப்போதைக்கு என்னால் செய்யமுடியாது. இட்டளி பற்றிய தவறான செய்திகளும், அரைகுறை விழியமுங்கூட இணையத்தில் உலவுகின்றன. அவற்றின் பின்புலம் கீழ்க்கண்டது (http://fooddetectivesdiary.blogspot.com/2010/07/idli-is-not-indian.html).

1. .”ஆவியாக்கும் கொதிகலன்களே இந்தியாவில் கிடையாதெ”னச் சீனப் பயணி யுவான்சுவாங் (Xuanzang) சொன்னதால், ”பொ.உ. 630-645 வரை தமிழருக்கு ஆவியில் வேகவைக்கத் தெரியாது. எனவே இட்டளி தமிழர்க்குத் தெரிந்தது இதற்கப்புறமே” என்பார். யுவான்சுவாங் பயணக்குறிப்புகளின் ஆங்கில, தமிழ் பொழியாக்கங்களைப் படித்தால் அப்படித் தோன்றவில்லை. சீனத்தில் காணும் தனி வேம்பா (boiler) போன்ற கொதிகலன் இல்லையென்று மட்டுமே யுவான்சுவாங் சொல்கிறார். அது உண்மையாகலாம். நம்மூர் இட்டளிச்சட்டி கொதிகலன்போல் இருக்காது. ஒருசட்டி அதன்மேல் இட்டளித் தட்டு, அதன்மேல் வேட்டித்துண்டு. அதன்மேல் மூடி. இட்டளி வேகவைக்க இது போதும். இது ஊதும அழுத்தத்தில் (atmospheric pressure) செய்யப்படும் வேக வைப்பு. அதிக அழுத்தத்தில் செய்யப்படும் கொதிகலன் (pressurized kettle) அல்ல, கட்டாயம் யுவான்சுவாங்கிற்கு மாற்றாகவே தெரியும். [21ஆம் நூற்றாண்டுப் பெருகபதிகள் சீனரை நம்பி, உள்ளூர்த் தமிழரை நம்பார் போலும்.]

2. அடுத்து பொ.உ.920 ஐச்சேர்ந்த. கன்னடநூலான Vaddaradhaneurad என்பது அரிசியும் உழுந்துஞ் சேர்ந்த கூழ்/குழைவைப் பேசாது, முழுதும் நொதிக்க வைக்காத உழுந்துக் கூழ்/குழைவில் (batter) செய்த, அதேபொழுது ஆவியில் வேகவைக்காத இட்டளிகை பற்றியே பேசுவதைச் சொல்வர். (இக்குழைவு நம்மூரின் வடை, அடைகளுக்குச் செய்யும் குழைவுகளை ஒத்தது.) இவை போன்றவற்றிற்கு இற்றை இட்டளிக்கும் மிகுந்த வேறுபாடு இல்லை. கீழே வரும் மூன்றைப் பற்றியும் விவரமாய்ப் பேசுவோம். .

2.1. அரிசியும் உழுந்தும் சேர்ந்த மாக்குழைவு இட்டளியின் இயல்பொருள். இது முதல் வேறுபாடு.
2.2 அரைத்த மாவை ஒருநாள் இரவு வைத்திருந்து நொதிக்கவிடுகிறோம். இது இரண்டாம் வேறுபாடு.
2.3 நொதித்த குழைவை ஆவியில் வேகவைக்கிறோம். இம்மூன்றும் பொ.உ. 920 இல் சொல்லும் இட்டளிகையோடு பொருந்தாததால் இரண்டும் வெவ்வேறானவை.

3. பொ.உ.1130 ஐச் சேர்ந்த சங்கத மொழியிலான மானசொல்லாச (Manasollasa) என்ற நூல் சிறு உருண்டை வடிவில் உழுந்திலான, மிளகு (pepper), சீரக (cumin), பெருங்காயத் (asafoetida) தூள்கள் கலந்த இட்டரிகா (iddarika) பற்றிச் சொல்லி இதிலும் இற்றை இட்டளி பேசப்படவில்லை என்பார்.

4. தமிழில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மச்சபுராணம் தான் பேசுகிறது. இதற்கு முந்தி 1547 ஆம் ஆண்டு திருப்பதிக் கல்வெட்டு பேசுகிறது.   இதுதான் இட்லி என்பது இன்னொரு வாதம். இதில் பாதிக் கூற்று சரி. அந்தக் கட்டிக்கும் இட்டளிகை என்று பெயர். நாம் சொல்லும் ”இட்லி” என்ற கூழ்க்கட்டிக்கும் சரியான பெயர் இட்டளிகை/இட்டளி தான்.

இக்குறிப்புகளிலுள்ள தவறான புரிதல்களை விவரிக்குமுன் சில அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். ”மாவு” என்பது பொதுவாய் உலர்ந்த கூலப்பொடியையே குறிக்கும். [கூலம் தான்யமெனச் சங்கதத்தில் கூறப்படும். இது பருப்புகளையும், குருவைகளையும் (creal. A cereal is any grass cultivated for the edible components of its grain, composed of the endosperm, germ, and bran. The term may also refer to the resulting grain itself.) சேர்த்துக் குறிக்கும் சொல்லாகும்.] கூலத்தோடு நீர்சேரும்போது பொடி/நீரின் வெள்ள விகிதம் (volumetric proportion) பொறுத்துச் சொற்கள் மாறும்.

மிதவை (suspension) என்பது கொஞ்சமோ, கூடியோ இருக்கும் திண்மத் துகளோடு நீர்மஞ்சேர்ந்தது. நாம் சாப்பிடும் குழம்பு, சாம்பார் போன்றவையும் மிதவைகளே. இன்னுங் கொஞ்சம் திண்மப்பொருள் சேர்ந்து, பாகுமை (viscosity) கூடின் களிமிதவை என்றும் இலக்கியஞ் சொல்லும். (“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை” என்பது அகநானூறு 86. அக்காலக் கும்மாயத்தை இப்படிச் சொல்வர். இக்காலக் கும்மாயம் சற்று வேறுபட்டது.)

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 12, 2019

செம்புலப் பெயல் நீர்

கீழே வருவது ”திண்ணை” வலையிதழில் பதினைந்தாண்டுகள் முன் வெளி வந்தது. (Thursday July 1, 2004) அவ்வலைத்தளத்தில் இப்போதெலாம் சட்டெனப் பழங் கட்டுரைகளைத் தேடியெடுக்க  முடிவதில்லை. (தமிழுக்குப் பேரிழப்பு. அவ் வலைத்தளத்தார் ஏதாவது செய்து, பழையவற்றைக் காப்பாற்ற வேண்டும்.) புதிய திண்ணையில் வந்த கட்டுரைகள் மட்டுமே எளிதிற் கிட்டுகின்றன. இருப்பதும் அழிந்துபோகுமோ எனும் நிலையில் பழையன வற்றை அணுக்கமாய்ச் சேமிக்கவேண்டிய காரணத்தால் 01/09/2014 இல் தமிழ் உலகம், தமிழ் மன்றம், தமிழாயம் போன்ற கூகுள் குழுக்களில் பதிந்து வைத்தேன்.  அதுவுஞ் சிக்கலென, நண்பர் இளங்கோவன் தன் முகநூல் இடுகையில் ”என் திண்ணைக் கட்டுரை கிடைக்கவில்லை” என்றபோது, உணர்ந்தேன். நண்பர் கூகுள்குழு மடல்களைப் பார்த்திருக்கலாம். ”இக் கட்டுரை மேலுங் கிட்டாது போகவேண்டாம்” எனக்கருதி என் வலைப் பக்கத்திலே பதிகிறேன்.

நண்பர் மணிவண்ணன் மின்னியியல் சேமிப்புகளின் நிலையாமை பற்றி ஒரு காலத்தில் எங்களுக்குச் சொன்னதை இன்று நினைவுகொள்கிறேன். பழந்தமிழன் கல்வெட்டில் எழுதி வைத்தது சரிதான் போலும். அதன் அரை வாழ்வு (half life) 2500 ஆண்டுகளையும் தாண்டும். மின்னியியல் பதிவுகளின் (electronic embeddings) அரைவாழ்வு ஒரு நூகநொடி (micro second) வருமா? இது போல் பலவிடங்களிற் பதிவதே மின்னியியற் காலத்தில் ஆவணங்களைக் காப்பாற்றுவதற்கான மாற்று என்றும், பின் எளிதாகக்கிடைக்க அவை உதவும் என்ற நம்பிக்கையிலும் இதைச் செய்கிறேன். இப்போதெலாம் வலைத்தளங்களில், மடற்குழுச் சேகரங்களில், கருத்துக்களைச் சேமிப்பது முயற்கொம்பாகவே உள்ளது. எல்லாம் காசு, பணம், பேணுஞ்செலவுகள் (maintenance expenditures) பண்ணும் வேலை. ”இன்றிருப்பார், நாளையில்லை” என்று அல்லாடுவது மாந்தருக்கு மட்டுமல்ல மின்னியலுலகில் எழுத்து ஆக்கங்களுக்கும் உண்டு.

அன்புடன்,
இராம.கி.

-------------------------------------------
செம்புலப் பெயல் நீர்
இராம.கி.

செம்புலப் பெயல்நீரில் எனக்குக் கொஞ்சம் முரணுண்டு. பெரும்பாலானவர் (கலைஞரையும் சேர்த்து) செம்மண்ணில் பெய்தநீர் போல நெஞ்சங்கள் கலந்தன என்னும் போது, 'அது என்ன செம்மண்ணிற்கு மட்டுஞ் சிறப்பு?  ( இத்தனைக்கும் நான் செங்காட்டு மண்ணில் வந்தவன். பிறந்த மண்ணை விரும்பாதவனென எண்ணிவிடாதீர்.) கருமண்ணில், சுண்ணாம்பில் இன்னும் வேறுபட்ட மண்களில், ஏன் களியில் பெய்த நீர் கூடக் கலவாதோ? இங்கே கலப்பது செந்நிறமும், மழைநீருமா?  செம்புலம் என்பது செம்மண் தானா அல்லது வேறொரு பொருளுண்டா?  செம் என்ற முன்னொட்டுக்கு செம்மை மட்டும் பொருளல்லவே?  ஏனிப்படிச் செம்மையைச் சிவந்த நிறத்தோடு ஒப்பிட்டு நின்று போகிறோம்? இவ்வுவமை என்னதான் சொல்கிறது? நாயகனுக்கும் நாயகிக்கும் ஒன்றேபோல் உருவகங்கள் சொல்லப்பட்ட போது (யாய், ஞாய், எந்தை, நுந்தை, யானும் நீயும்) சொல்லவந்த உவமை மட்டும் மழைநீரையும் மண்ணையும் போல ஒப்பாத, சமலாத (dis-similar) ஒன்றை எடுத்துரைக்குமா?  பாணர் ஏனிந்த உவமையைச் சொன்னார்?

- என்ற கேள்விகள் மனத்தில் எழுகின்றன. குறிப்பிட குறுந்தொகைப்பாடல் குறிஞ்சித்திணையில் வருகிறது. குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த இடமுங் கொண்ட திணை. எல்லா மேட்டு நிலங்களும் செம்மண்ணாக இருப்பது இல்லை. தமிழ்நாட்டில் செம்பாறாங்கல் நிறைந்த ஒரு மலை/குன்றைப் பச்சை போர்த்திய குறிஞ்சித்திணையில் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. செம்மண் காடுகள் எங்களூரைப் போல சிவகங்கைப் பக்கமோ, பண்ணுருட்டி, நெய்வேலிப் பக்கமோ (இக்கால முந்திரிக்காடுகள் இருக்கும் இடமெலாம்) இருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. செம்மண்ணைக் காட்டி, குறிஞ்சித் திணை விவரிப்பு சங்க இலக்கியத்தில் வேறு எங்கணும் வந்ததாகத் தெரியவில்லை.

செம்புலம் என்பதற்கு செழிப்பான நிலம், போர்க்களம், பாலைநிலம், சுடு காடு என வேறுபொருள்கள் அகரமுதலியில் குறிப்பிடப் பட்டுள்ளன. செழிப்பான நிலம்  செம்மண் நிலமாகலாம்; இல்லாதும் போகலாம். செழிப்பு என்பது நிறைவை, வளத்தைக் குறிக்குஞ் சொல். போர்க்களமென்பது அங்கு சிதறிக் கிடக்கும் அரத்தத்தை மண்ணுக்குப் பொருத்திச்சொல்வது. பாலை நிலம் இயல்நிலையைக் குறிக்கும். மேலே சிவகங்கையைக் குறித்தேனே? எம் ஊர்கள் பாலை சேர்ந்தவையே. சுடுகாட்டுப் பொருள் எப்படி வந்ததென்று எனக்குத் தெரியவில்லை.

அதேபொழுது செம்பொருள், செம்போக்கு, செம்மல், செம்பொன், செந்தமிழ் போன்ற சொற்களில் சிவப்பென்ற பொருளே கிடையாது. செம்பொருள்= எந்தத் தாழ்நிலையுமில்லாது, மிக உயர்ந்த நிலையுமில்லாது உயர்ந்த பொருள்; செம்போக்கு= எங்கும் வளையாத நேரான சீரான போக்கு, செம்மல்= நேர் ஆனவன், சீரானவன், செம்பொன்= கலப்படமிலாத் தனிப் பொன். செந்தமிழ்= சீராக்கப்பட்ட தமிழ்; செங்கதம் = சீராக்கப்பட்ட பேச்சு (வடமொழி; இதைக் கலவைமொழி என்றபொருளில் சம்+கதம்= சங்கதம் என்று சொல்வாரும் உண்டு. ஞான சம்பந்தர் சங்கதம் என்றே மொழிவார்; சங்கதம் என்பது வடமொழிப் பலுக்கில் சம்ஸ்கிருதம் ஆகும்.)

இங்கு எல்லாமே ஏற்ற இறக்கமில்லாத நிரவல் தன்மையைத்தான் செம் எனும் முன்னொட்டுத் தெரிவிக்கும். அதேபோல செம்முதல் வினையும் பள்ளத்தைத் தூர்த்து நிரவலாக்குவதையும், முழுதும் கொள்ளாது கிடந்த பையை (bag) நிறைத்து வாயைத் தைப்பதையும், மூடுவதையும், மொத்தத்தில் சீர் ஆக்குவதையே குறிக்கும். ஆகச் செம்மையாதல் என்பது நேராதல், சீராதல் என்பவற்றைக் குறிக்கிறது. நன்செய், புன்செயிலுள்ள செய், மட்டப்படுத்தப் பட்ட, ஏற்றவிறக்கம் இல்லாச் சமதளத்தையே (வயலையே) குறிக்கிறது. செய்>செய்ம்>செம் என்றுதான் சொல்லாய்வின் படி அச்சொல் எழும். இச்சிந்தனையோடு குறிஞ்சியை அணுகுவோம்.  மலை, குன்றுப் பகுதிகளில் ஆங்காங்கே சமதளப் புலங்கள் இருப்பதுண்டு. அவை இயற்கையாகவோ, செயற்கையாகவோ (செய்யப் பட்டது) ஆகலாம்.

மழை துளிதுளியாகச் சாரல் சாரலாகப் பெய்கிறது. கீழே விழும் நீர் தான் விழும் புலத்தின் சாய்விற்கேற்ப பல்வேறு ஓடைகளாகப் பிரிந்தோடுகிறது. நம் கண்ணுக்குத் தெரிந்த திடலில் தாரையாகப் பெய்யும் மழை அத்திடல் மேலுங் கீழுமாக இருப்பின் ஓடைகளெலாம் ஒன்று சேர்வதில்லை. அவைத் தனித் தனியாகப் போகின்றன. மாறாக அத்திடல் சமநிலமாக (செம்புலமாக) இருப்பின் நீர்த்தாரைகள் ஒன்று கலந்து போகின்றன. எப்படி ஒரு ஏனத்தில் இருக்கும் நீர் ஒரே மட்டத்தை அடையுமோ, எப்படி ஓர் ஆறு ஒரே மட்டத்தை அடையுமோ, எப்படி ஓர் ஏரி ஒரே மட்டத்தை அடையுமோ, அதுபோல் எங்கிருந்தோ வந்த மழைநீர், இங்கு பெய்யும் தாரையும் அங்கு பெய்யும் தாரையும், ஒரே சமநிலத்தில் விழுந்தால் அவை கலந்து ஒரே ஓடையாகப் போகுமல்லவா? அதைத்தான் இங்கு பாணர் குறிப்பிடுகிறார் என்று நான் எண்ணுகிறேன்.

இது செம்புல நீருக்கு மட்டுமேயுள்ள சிறப்பு. சாய்புல நீரில் அச்சாய்வு ஒரு பக்கமாக இருக்குமானால் நிகழுந்தான். ஆனால் இயற்கையில் சாய்புலம் என்பது பல்வேறு சாய்வுகளைக் கொண்டல்லவா உள்ளது? சம நிலத்தில் தானே மழைநீர் கலந்து நிறைந்து சமநில வரம்பைப் பொறுத்து அதற்குரிய மட்டம் வரும்போது மகுந்து வழிகிறது. ஒரு செய்யை எண்ணிப்பாருங்கள்; வரம்பு வரும்வரை அதில் பெய்யும் நீர் கலந்து நிறையத் தானே செய்யும்? அதுபோற் குறிஞ்சியிலுள்ள சமநிலத்திலும் ஏற்படலாம் அல்லவா ? இப்படி எண்ணினால் சமலி (similie) சரியாகிறது. யாய்-ஞாய், எந்தை-நுந்தை, யான்-நீ, இதைப் போல் சமநிலத்தில் அருகருகே பெய்த மழைநீர்த் தாரைகள் (தலைவன் ஒரு தாரை, தலைவி இன்னொரு தாரை;) எங்கிருந்தோ வானத்தில் இருந்து வருகின்றன. இங்கே ஓடைகளாய்ச் செம்புலத்தில் கலக்கின்றன

'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே '

ஆதலால், என்னருமைக் காதலியே! களவொழுக்கம் கொண்டோம் என்று கலங்காதே!

-------------------------------------------

Saturday, March 09, 2019

இருவுள் (rail)

அண்மையில் rail க்கான இணைச்சொல் கேட்ட உரையாட்டு சொற்களத்தில் எழுந்தது. rail ஐ இரும்போடு தொடர்புறுத்தியே நாமெல்லோரும் பேசுகிறோம். ஒருகாலத்தில் நானுமப்படி எண்ணினேன். ஆனால் ஆழ்ந்து ஓர்ந்தால் அப்படியிருக்கத் தேவையில்லை. rail  மரத்திற்றான் தொடங்கியது. பின்னால் இரும்பிற்கு மாறியது. தவிர அது தொடரிகளுக்கு (trains) மட்டும் ஆனதில்லை. எங்கெலாம் கிடைத் தண்டங்களில் (horizontal bars) ஒரு பொறி நகருமோ, அங்கெலாம் rail புழங்கியது. சிறாரின் பொத்திகைப் (plastic) பொம்மைகளிலுள்ள rail இரும்பால் ஆனதில்லையே?

rail (n.1) க்கு, "horizontal bar passing from one post or support to another," c. 1300, from Old French reille "bolt, bar," from Vulgar Latin *regla, from Latin regula "rule, straight piece of wood," diminutive form related to regere "to straighten, guide" (from PIE root *reg- "move in a straight line"). Used figuratively for thinness from 1872. To be off the rails in a figurative sense is from 1848, an image from the railroads. In U.S. use, "A piece of timber, cleft, hewed, or sawed, inserted in upright posts for fencing" [Webster, 1830]. என்றுதான் ஆங்கிலச் சொற்பிறப்பியல் விளக்கஞ் சொல்லும். தவிர, *reg- Proto-Indo-European root meaning "move in a straight line," with derivatives meaning "to direct in a straight line," thus "to lead, rule."

அக்காலம் ”தண்டவாளம்” என்ற சொல்லைப் புழங்கினாரே, அதன் குறை, ”கூட்டுச்சொற்களில் கையாளும்படி அது சுருக்கமாயில்லை, நீளம்” என்பதே. அடுத்து இருப்புப்பாதை (railway) என்ற சொல் எழுந்தது இதில் பாதை, wayஇன் தமிழாக்கம். இருப்பை இரும்பின் வலிவாய்ப் புரிந்துகொண்டவரே 100க்கு 99 என்னையுஞ் சேர்த்தே சொல்கிறேன். இருப்பில் பு விகுதி எடுத்து ”இருள்” எனும்  பகுதியை மட்டும் வைத்துப் பாதைக்கு மாற்றாய் ”வாய்” எனச்சேர்த்து இருள்வாய் எனப் பரிந்துரைத்தேன். பிறகு தான் அதன்பொருள் வேறென ஒருநாள் பொறி தட்டியது. அவக்கரமாய்ப் புரிந்து கொள்வது நம்மில் யார்க்கும் நடக்கலாம். சரி, சரியான பொருள் என்ன?

”யாரோ ஒருவர் வீட்டிற்கு வருகிறாரென வையுங்கள். வந்தவரை நிற்க வைத்தா பேசுவோம்? “இருங்க” என்று சொல்லமாட்டோமா? இருந்தலுக்கு என்னபொருள்? ”உட்காருங்கள்” தானே? இருக்கை, இருப்பு என்பவை என்ன? கிடையாக அமர்தலைக் குறிப்பவை தானே? நம் கால்/தொடைகள் கிடையாக அமைய, மேலுடம்பு குத்தாவதே இருத்தல் பொதிவாகும் (posture). ஒரு இருப்புப் பாதையில், rail கள் கிடையாகக் கிடக்க, தொடரி அதில் குத்தி நகர்கிறது. இவ்விருப்பிற்கான பாதை இருப்புப்பாதை. இதில் பு விகுதியையும், பாதையையும் எடுத்துவிட்டு ”வாய்” இணைத்தால் ”இருவாய்” என்பது வரும். (இரு, இங்கே இருத்தலோடு, இரண்டு, இரும்பு என்ற பொருள்களைக் குறிப்பதைப் பொலினமாய்க் (bonus) கொள்ளலாம்.)     .

வாய்(=வழி) என்பதை எல்லாவிடத்துஞ் சொல்லவேண்டியதில்லை. அது தொக்கி நிற்கலாம். அந்தந்த மொழிமரபின் படி சில சொற்கள் தொக்கி நிற்கலாம். (சங்கதத்தில் ஜலசமுத்ரம் என்பதில் ஜல-வைத் தொக்கி நிறுத்தி வெறுமே சமுத்ரம் என்பார். நாம் கடல் என்று புரிந்துகொள்வோம்,) அதே பொழுது இரு என்ற பகுதி தனித்துநின்றால் பொருள் விளங்காது. எனவே உள் (இருப்பது) எனும் விகுதியைச் சேர்த்து இருவுள் என்றசொல்லை உருவாக்கினேன். சொல்வதற்கு அது சுருக்கமானது. உள் என்பது reality ஐக் குறிக்கும். உள்ளிற்கு ஒரு சுவையாரப் பின்புலம் உண்டு.

[கொஞ்சம் கருப்பாக இருக்கும் பெண்ணுக்கு மணம்பேசுகிறார் என்று வையுங்கள். (மாநிறமெனில் தமிழில் என்னவென்று தெரியுமோ? மாங்கொழுந்து நிறம் எதுவோ, அதுதான் மாநிறம். மாங்கொழுந்தில் மஞ்சள் கெழுவும் (yellow colour) ஊடே ஓடினாற்போல் இருக்கும். மஞ்சள்பூசிய தமிழ் மகளிரும், அப்பழக்கத்தின் காரணமாய் கொஞ்சம் மாங்கொழுந்து போல் இருப்பார். தமிழரில் கணிசமானவர் மாநிறம் தான். மாநிறத்தை வேறுமாதிரி விளக்கிச்சொல்வது கடினம்.) "அவளென்ன நிறம்?" என்று மற்றவர் கேட்டால், எங்களூர்ப் பேரிளம்பெண்கள், கொஞ்சம் நளினமாக, "உள்ளதுபோல் இருப்பாள்" என்பார். அதாவது கொஞ்சம் கருப்பென்று சொல்லக் கூசி, "எல்லாவிடத்திலும் எப்படிக் கருப்புள்ளதோ, அதுபோற் கருப்பு" எனும் பொருளில் சொல்வார். இங்கே reality உள்ளதென்று புரிந்து கொள்ளப்படும்.

மாநிறத்திற்கும் அடர்நிறமான கருப்பு தமிழரின் reality. (இதில் நாம் வெட்கப் படத் தேவையில்லை. இருந்தாலும் பலர் வெட்கிறார்.). அங்கும் இங்குமாய்க் கொஞ்சம் வெளிர்மை (fairness) ஒருசிலரிடம் தென்படலாம். ஆனால் உள்ளது எதுவோ, அதுதானே கிடைக்கும். உள்ளது என்பது reality தான்.) மெய் என்பது truth இற்கே சரிவரும். real இற்குச் சரிவராது. எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் "Is it really true?". இதைத் தமிழில் ஆக்கும்போது "இது உள்ளபடியே உண்மையா?" என்று தானே சொல்கிறோம்? "அது என்ன உள்ளபடி?" என்று மேலேயுள்ள வாக்கியத்தை ஓர்ந்துபார்த்தால், நாம்தேடும் சொல் சட்டெனப் புலப்படும். உள்ள படிக்கே என்று மேலே சொன்னோமே, அதன் தொடர்ச்சியாய் உள்ளமை என்ற சொல் realistic என்பதைக் குறிக்கும்.]

இனிக் கேட்டுள்ள சொற்களுக்கு வருவோம்.

இருவுள் நிலையம் [Rail(way) station]. தொடரி நிலையம் என்பது தொடரி பயனுறாத சூழ்நிலைக்குப் பொருந்தாது. இருவுள் புழங்கும் பொறிகள் பொறியியலில் உண்டு.

இருவுள் முனையம் [Rail(way) terminus] {term என்பதை ஒட்டி, terminal, terminus ஆகிய இரண்டையும் தீர்முனை, தீர்முனையம் என்று சொல்லலாம்; இதில் சுருக்கம் வேண்டின், தீர் என்பதைத் தவிர்த்து முனையம் எனலாம். அப்படித் தான் சென்னை வான்புகலை - airport - சொல்கிறார். காமராஜ் உள்நாட்டு முனையம்; அண்ணா பல்நாட்டு முனையம்.) terminology என்ற சொல்லை தீர்மவியல் என்று சொல்லலாம்.}

இருவுள் உக்கம் Riail(way) junction, junction (n.) 1711, "act of joining," from Latin iunctionem (nominative iunctio) "a joining, uniting," noun of action from past participle stem of iungere "to join together," from nasalized form of PIE root *yeug- "to join." Meaning "place where two or more things come into union or are joined" first attested 1836, American English, originally in reference to railroad tracks. உடம்பின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் சேர்ந்த இடைப்பகுதிக்கு உக்கம் என்ற பெயர். ”உக்கஞ் சேர்த்தியது ஒரு கை” என்பது திருமுருகாற்றுப் படை 108. சென்னை அகரமுதலியில் பொருந்திய பக்கம். conjointed side என்ற பொருள் கொடுத்திருப்பார். மலையாளத்தில் உக்கம் என்றும் துளுவில் ஒக்க, ஒக்கம் என்றும் இணைச்சொற்கள் உண்டு. சந்திப்பு என்று ஏன் சொல்லக் கூடாது என்றால் அது இருவுளையும், தொடரியையும் போய்வருபவர் களையும் சேர்த்தே மாந்தப்பார்வையில் குறிக்கிறது என்பது தான். உக்கம் என்ற சொல் பழந்தமிழில் உள்ளது. நாம் இருவுள் தொடர்பாய்ப் பயனாக்குவது மட்டுமே புதுமுயற்சி. உக்கத்தை வைத்து இன்னும் பல கூட்டுச்சொற்களை உருவாக்கமுடியும். சந்திப்பு என்பது அவ்வளவு வாகாய் அமையாது. முடிவில்,

இருவுள் நடுவம் [(Rail(way) central station]

எல்லாச் சொற்களையும் இவைபோல் நல்ல தமிழில் சுருங்கச்சொல்ல முடியும். ஆனாலூம் சுற்றிவளைத்தோ அல்லது ஆங்கிலத்தை பின்பற்றியோ ஸ்டேஷன், டெர்மினல், ஜங்ஷன், செண்ட்ரல் என்பவரிடம் நான் சொல்வது எடுபடுமா, என்ன? நம்மூரின் சாவக்கேடு இதில் தான் உள்ளது. ”தமிழ் வேண்டாம் ஆங்கிலமே இருக்கட்டும்” என்று தமிழரே சொல்லுங் கூத்து. அந்த அளவிற்குக் கலங்கிப்போய்க் கிடக்கிறோம்.
 
அன்புடன்,
இராம.கி.