Tuesday, October 28, 2008

பொத்தகம் - 2

ஓலுதல் என்பது தமிழில் ஓசையிடுதலையே குறிக்கும். ”ஓவென்று ஓலம் இட்டான்” என்ற வாசகத்தை ஓர்ந்து பார்க்கலாமா? ஓலுதலின் வழி ஓலம் என்னும் பெயர்ச்சொல்லையும் பெறுகிறோம். காற்று வீசையில்  சரசர என்ற ஓசையை பனைமரத்தில் கேட்கிறோம் அல்லவா? அப்படி ஓலும் இலை, ஓலை எனப்பட்டது. பனையோலை, வேய்வதற்கும், கள்/பதநீரைக் கொள்வதற்கும் / பருகுவதற்கும் அல்லாமல், எழுத்தாணியால் அதன் பட்டையில் கீறுவதற்கும் அக்காலம் பயன்பட்டது. (பனைப்பயன்கள் மிகப் பல. ”வேண்டியது தரும்” என்றபொருளில் மிகைப்படுத்திக் கற்பகத்தரு எனப் பனையைச்  சொல்வார். (கருப்பகத்தரு, கற்பகத்தருவாகித் தொன்மப் போக்கில் வேறு பொருளை இன்று காட்டி நிற்கிறது. கற்பகத் தரு எனும் தொன்மம் பனையில் எழவே பெரிதும் வாய்ப்புக்கள் உண்டு.)

நாளாவட்டத்தில் நாவலந்தீவின் பெரும்பாலான இடங்களில் பனையோலைப் பட்டை, பெருவுதி (majority) எழுதுபொருளாகவும், பருத்தித் துணி, மரப்பட்டை, என்பன நுணவுதி (minority) எழுதுபொருளாயும் ஆயின. ஓலைமட்டை என்பது நிரவலாக (average) 20, 30 ஈர்க்குகளையும், ஈர்க்குகளிடை பட்டைகளையும் கொண்டது. ஓலைமட்டையில் இருந்து ஒவ்வோர் ஈர்க்கையும், அதன் இரு பக்கப் பட்டைகளிலிருந்து தனியே  நீளப் பிரித்து வருவதை ஓலை என்பார். [பேச்சுவழக்கில் ஓலைமட்டையையும் நாட்டுப் புறத்தார் ஓலையென்பார்.] ஓலைப்பட்டையை இரண்டாய் ஈல்ந்து (=பிரித்து) ஈல்க்கு>ஈர்க்கு எனப் படும்; இரண்டு என்ற சொல்லின் வேரும் ஈல் தான். [”ஈழத்தின்”  வேரும் ஈல் தான். முகனை நிலத்தில் (mainland) இருந்து அத்தீவு ஈல்க்கப் பட்டதால்,  ஈல்> ஈழ்> ஈழமானது. ஈழ விதப்புப்பெயரையும், பொதுப்பொருளாய் உருவான eeland>eisland>island எனும் இந்தையிரோப்பியத் திரிவையும் பேசின் வேறு எங்கோ போய்விடுவோம். எனவே அதுவிடுத்துப்  புலனத்துள் வருவோம்.]

ஓலைப் பட்டையைத் தாளென்றும், ஏடென்றும் சொல்வார். ஈர்க்கை எடுத்தும் எடுக்காமலும் பனையோலைப் பட்டையை எழுதப் பயன்படுத்தினார். [இளஞ் சிறாருக்கான பயன்பாட்டில் ஈர்க்கை எடுக்கமாட்டார். பெரியவருக்கான பயன்பாட்டில் ஈர்க்கை எடுத்துவிடுவார்.] பட்டையிலிருந்து வேறு ஈற்றில் உருவான சொல் பட்டமாகும். பட்டம்> பத்ரம் என்ற சொல் வளர்ச்சி நாவலந் தீவில் பனையிலிருந்து தொடங்கியது. பனை வளரா வடபுல இடங்களில் பிர்ச் - birch - மரப்பட்டைகள் பதப்படுத்திப் பயனுற்றன. birch > book என்ற இந்தை யிரோப்பிய சொல்தொடர்பை இங்கு எண்ணிப் பார்க்கலாம். நாவலந்தீவின் வடபால் மொழிகள், சங்கதம் ஆகியவற்றின் சொற்கள் book எனும் மேலைச் சொல்லுக்கு நெருங்கிவரவில்லை. வடபாற் சொற்களெலாம் பனையோலைப் பட்டையையே உணர்த்துகின்றன.

இன்னொரு செய்தியுமுண்டு. பனையோலைப் பட்டையின் எளிமையையும், அதே அளவு மற்றோர் எழுதுபொருளை உருவாக்குவதன் கடினத்தையும் உணர்ந்தால், நாவலந்தீவின் பனையோலைப் பகுதிகளிலேயே படிப்பறிவும், விதப்பாக எழுத்தறிவும், வளர்ந்திருப்பதைப் புரிந்து கொள்ளமுடியும். எழுத்தைப் பெரிதும் போற்றிய அற்றுவிகம் (ஆசீவகம்), செயினம், புத்தம் போன்ற சமய நெறிகள் நாவலந்தீவில் பனையோலையைப் பெரிதும் போற்றின. [காரணமில்லாது செயினமும், புத்தமும் மகதத்தில் வளரவில்லை. அற்றுவிகம் இன்னொரு பனையோலைப் பகுதியான தென்னாட்டில் எழுந்து இருக்குமோ என்றுகூட அண்மைக்கால ஆய்வுகள் சுட்டிக் காட்டும்.] பனை மரபு பழகாத வேத நெறி, தன் தொடக்க காலத்தில், இந்திய வடமேற்கில், எழுத்தைப் பெரிதாகவே கருதவில்லை; வேதம் முதலில் எழுந்தபோது அது  எழுதாக் கேள்வி தான். பனை வளராத பகுதியில் எழுதலின் அருகிய நிலை உங்களுக்குப் புரிகிறதா? [சங்கத மொழியில் முதன்முதலிற் செய்தி எழுதப் பட்டது கி.பி.150க்கு அருகில் சக அரசன் உருத்ரதாமன் காலத்திற் தான் என்பதை இங்கு நினைவிற் கொள்க. அதற்கு முன் வடக்கே பாகதத்தில் தான் கல்வெட்டுக்கள் எழுந்தன.]

முன்சொன்னது போல், ஓலைப்பட்டையின் இன்றொரு சொல்லான தாலப் பட்டையில், ஐ எனும் ஈற்றிற்கு மாறாக, அம் எனும் ஈறுகொண்டு வடபுலம் போய், தாலப்பட்டம் > தாலப்பத்தம் என்றாகும். பின்னால் தாலம் எனும் முன்னொட்டுச் சொல், பேசுகிறவர்களால் உள்ளார்ந்து உணரப் பட்டு, பேச்சு வழக்கில் அதைத்தவிர்த்து பத்தமெனத் தனித்தே சொல்லப் பட்டது. (அளவு கூடிக் குமிந்துகிடந்த பெருநீர் ”ஜலசமுத்ரம்” என்று தொடங்கிப் பின் ”ஜலம்” சொல்லப் படாமல் சமுத்ரம் மட்டுமே சங்கதத்தில் தனித்துக் குறித்ததை எண்ணிப் பாருங்கள்.) பத்தம், வட்டார வழக்கில் வெவ்வேறு பலுக்கலைப் பெற்றது. மற்ற பாகதக் கிளைகள் போலன்றிக் காந்தாரக் கிளைமொழியில் அது பத்ரமெனப் பலுக்குற்றது. காந்தாரக் கிளையின் பெருவளர்ச்சியான சங்கதத்திலும் அவ்வாறே சொல்லப் பட்டது.

[காந்தாரக் கிளைமொழி புழங்கும் இடத்தில் பிறந்தவனே பாணினி எனும் இலக்கணி. ககர/சகரப் போலியைப் புரிந்துகொண்டால் பாணினியின் அடிப்படைச் செய்யுள் மொழியான சந்தசிற்கும், காந்தாரத்திற்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் வேதம்-அது-இது என்று வழிபாட்டுப் பூசனைக் கருத்துக்களைக் கொண்டுவந்து நம்மை ஒடுக்கி விடுகிறவர் சங்கதத்தின் ஊற்றங்காலைச் சரியாக அறியவா விடுகிறார்? நம்மை மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்துவரும் ஆய்வாளரையும் குழப்பிவிட அவர் என்றுமே முனைப்பாக உள்ளார். தமிழையும் செந்தமிழையும் வெவ்வேறு மொழிகளாய் நாமெண்ணிக் குழம்புவதில்லை;  இவரோ, பாகதம் எனும் பொது மொழியையும், அதன் வட்டார மொழி வளர்ச்சியான சங்கதத்தையும் வெவ்வேறாக்கி, ”சங்கதமே முந்தியது, பாகதம் அதிலிருந்து சிதைந்து வந்தது” என்றுசொல்லி பேரனைத் தாத்தனாக்குவர்; நாம் ஒரு காலத்திலும் செந்தமிழிலிருந்து தமிழ்வந்ததென்று சொல்வதில்லை. அதோடு மட்டுமன்றி, பாகதத்தின் சமகால மொழியான தமிழின் பங்களிப்பையும் குறைத்து, ”சங்ககாலம் நந்தர் காலத்திற்குச் சற்று முன் (கி.மு.500) தொடங்கி கி.பி.2 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது” என்று எத்தனை முறை பல்வேறு சான்றுகளோடு சொன்னாலும், அதைப் புறந்தள்ளி, கிளிப்பிள்ளை போலத் தாம் சொன்னதையே மீளமீளச் சொல்லி அதற்கு அணைவாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககால ஆய்வாளர் கூற்றையே சான்றுகளாய் அடுக்கி (குறிப்பாக வையாபுரியாரின் கருத்தின் மேல் கோபுரம் கட்டி), கிறித்துவுக்கு அப்புறம் சங்க நூல்களைக் கொண்டுவந்து, தொல்காப்பியத்தைச் சங்க நூல்களுக்கு அப்புறமாய் 5 ஆம் நூற்றாண்டிற் கொண்டுவந்துச் சங்க நூல்களை மிகப் பின்னதாகக் கொண்டுபோவதே வழக்கமாய்ப் போன சில “தமிழ் அறிஞரின்” முயற்சிகள் இருக்குமட்டும் இக்குழப்படிகள் இருந்து கொண்டே இருக்கும்; என்செய்வது?]

பட்டம்> பத்தம்> பத்ரத்திற்கு மீண்டும் வருவோம். இந்திய வடமேற்குச் சொல்லான பத்ரத்தை மீண்டும் கடன்வாங்கித் தமிழில் பத்திரம் ஆக்குவார். பத்ரங்கள் பல கொண்டது பத்ரிகை. [தனித்தமிழில் இதைத் தால்>தாள்> தாளிகை என இக்காலத்திற் சொல்வோம். தாள்பற்றிய அதிக விளக்கத்தைக் கீழே பார்ப்போம்.] ஆகப் பட்டம்> பத்ரம்> பத்ரிகை என்ற வளர்ச்சியின் சூல்க்குமம் பனையோலைப் பட்டைக்குள் உள்ளது. [NCBH பதிப்பகம் "மரங்கள்” பற்றி வெளியிட்ட தொகுதியின் நாலாம் பாகத்தில் பனை பற்றிய கட்டுரையில் 1992 அளவில், இந்தியா எங்கணும் உள்ள பனை மரங்களில் கிட்டத்தட்ட 58% மரங்கள் தமிழ்நாட்டிலே விளைவதாகக் கூறியுள்ளார். ஆகக் காலங்காலமாய், இந்நாட்டில் பனை நிரம்ப வளர்வது நம்மூரில் தான். தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளப் பனை முகன்மையானது. ஆனால், இக் காலத் தமிழர், பனை பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துக் கொள்கிறோம்?  எவ்வளவு கண்டுகொண்டோம்? சொல்லுங்கள்?:-) செடார், பைன் பற்றித் தெரியாத இரோப்பியன் எங்காவது இருப்பானா? அதேபொழுது, பனை பற்றித் தெரியாத தமிழர் மிகப் பலர் இருக்கிறார் அல்லவா?]

இதே போல ஏடென்பதும் ஓலைப் பட்டத்தையே குறிக்கும். பனை ஏடு, பனை யோலை, ஓலை ஏடு, ஏட்டோலை, தாலப்பட்டம் ஆகியவை எல்லாம் ஒரு பொருட் சொற்கள் தாம்.

ஓலைகளைக் குறிப்பிட்ட அளவிற்கு நறுக்கி, நீரில் ஊறவைத்து, தேவைப் பட்டால் சற்று வெதுவெதுப்பான நீரில் புடம் போட்டு, வளைவிலாது  நேர் ஆக்கி, பின் மஞ்சள் தடவி எழுத்தாணி கொண்டு கீறி (கீற்றுதல், scribe என்ற சொற்களைப் பற்றியெல்லாம் இங்கே எண்ணிப் பார்க்கலாம்], பின் கீற்றெழுத்துக்கள் சட்டென்று தெரியுமாப் போல் கரிப்பொடிக் கலவையும் பூசி அக்காலத்தில் ஓலைச் சுவடிகளை உருவாக்குவார். [50 ஆண்டுகளுக்கு முன்கூட ஓலையில் எழுதிப்படிக்கும் பழக்கம் நம்மூரில் இருந்தது. எம் போன்றவர் தம் சிற்றகவையில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அப்படித்தான் படித்தோம். அப் பட்டறிவில்தான் நான் இங்கு சொல்லுகிறேன்.]

ஓர் ஓலையாய் இருந்தால் அதைச் சுருட்டி ஓர் ஓலைக் கொட்டானுள் வைத்து விடலாம். (கொட்டான் சிறியது; பெட்டகம் அல்லது கடகம்/கடகாம் பெரியது. இச்சொற்கள் தென்பாண்டி வழக்கு.) அப்படிச் சுருட்டி வைப்பதை ஓலைச் சுருள் என்பார். மாறாக ஒன்றிற்கு மேற்பட்ட ஓலை நறுக்குகளானால், அவற்றைச் சேர்த்துவைக்க வாய்ப்பாக, ஒவ்வொரு ஓலை நறுக்கிலும் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் பெரிய துளைபோட்டு, அதன் வழி ஒரு நூற்கயிற்றைச் செருகி, கயிற்றின் ஒருமுனையில் பெரிய முடிச்சையும் போட்டு இன்னொரு முனையோடு கயிற்றால் ஓலை நறுக்குகளைக் கட்டி வைப்பது ஓலைக்கட்டு. அதை ஏட்டுக் கட்டு என்றும் சொல்லுவதுண்டு. இன்னும் சிறப்பான பெயர் ஓலைச்சுவடி. இங்கே சுவடி என்பதற்குத் தொகுதி என்று பொருள். கல்வியில் முன்னேற, முன்னேற, ஓலைச் சுவடியில் ஓடுகள் கூடிக் கொண்டேயிருக்கும். [சுவள்> சுவடுதல் = சேர்தல், தொகுதல், சுவடி என்ற பெயர்ச்சொல் சுவடுதல் வினையிலிருந்து எழும். அதன் விதப்பான பொருளாய் இரட்டைத் தன்மை கொள்ளப்பட்டு சுவடி>சோடி எனத் திரியும். இக்காலத்தில் சோடி, இரட்டைக்கும், சுவடி, பன்மைத் தொகுதிக்கும் உரிய சொற்களாய் ஆளப்படும். சோடியை ஜோடியாய்ப் பலுக்கி மீண்டும்  மூலந் தொலைத்து அதையும் வடமொழி எனச்சிலர் மறுகுவது இன்னொரு சோகம்.]

கோரைப் புல்லான papyrus இலிருந்து எகிப்தில் paper உருவானதையும் இங்கே ஒருசேர எண்ணிப் பார்க்கலாம். அச்சொல் கோரைப்புல்லின் தோகையைக் குறித்த சொல். bublos என்பதும் ரகர/லகரத் திரிவில் papyrus இன் இன்னொரு ஒலிபெயர்ப்புத் தான். இதன் அடுத்த வளர்ச்சியாய், bublos>biblio>bible என்ற திரிவை எண்ணிப் பார்க்கலாம். சில புதல்களின் தோகை தமிழில் தாள் என்றே குறிக்கப் படும். நல்ல மணம் பொருந்திய மஞ்சள் நிறம் வாய்ந்த ஒரு தோகையை தாள்>தாளம்பூ>தாழம்பூ என்ற புதற் பெயரால் அறிகிறோம். தாழம்பூத் தோகையில் (முல்லைப்) பித்தியால் வண்ணக்குழம்பில் தோய்த்து எழுதுவதும் அக்காலத்திற் பழக்கத்தில் இருந்தது. ஆனால் இப்படி எழுதுவது வெகு எளிதில் அழிந்துவிடுவதாலும், நீர் தெறித்தால் நிலைக்காததாலும், நாட்பட நிற்கவேண்டிய ஆவணங்களை தாழம்பூத் தோகையில் எழுதார். பனையோலையில் கீறுவதையே விரும்பினார்.

அன்புடன்,
இராம.கி.

Monday, October 27, 2008

பொத்தகம் - 1

ஓரிரு மாதங்களுக்கு முன், விக்சனரிக்கான கூகுள் மடற்குழுவில், "பொத்தகம் என்ற சொல் தமிழீழத்தில் இப்பொழுது புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. முன்பு புத்தகம் என்பதே இருந்தது" என்ற செய்தியைச் சொல்லி, "பொத்தகம் சரியா? புத்தகம் சரியா?" என்று திரு.T.K.அருண் என்பார் கேட்டிருந்தார். அக்கேள்விக்கு யாரும் அப்போது மறுமொழிக்காது இருந்ததால், அது தொங்கி நின்றது. நானும் வேறு வேலைகளில் ஆழ்ந்து இருந்ததால், உடனே அதற்கு மறுமொழிக்க முடியவில்லை.

இப்போது, "பொத்தகம்" பற்றியும் தொடர்புச் செய்திகளையும் நான் அறிந்த வரையில்,  தனிப்பதிவாக இடுகிறேன்.

இக்காலத் தமிழ் அகரமுதலிகளில் பொத்தகம், புத்தகம் என இரண்டுமே சுட்டிக் காட்டப் படும். ஆனாலும் ”பொத்தகமே” முந்தையது; வேர்ப்பொருள் பொதிந்து வருவது; இணைச்சொற்கள் கொண்டது; நம் பனையோலை மரபோடும் ஒத்து வருவது. [பனை பற்றிய சிந்தனை இல்லாமல் பொத்தகம் அறியமுடியாது.] புத்தகம் என்பது பொத்தகத்தின் மரூஉ. ஒகரம் உகரமாவது தென்மாவட்டங்களில் பெரிதும் உள்ள பழக்கம். ”கொடுத்தானா?” என்பதைக் ”குடுத்தானா?” என்பது பெரும்பாலோருக்கு உள்ள பழக்கம். ”குடுத்தல்” என்ற இச்சொல்லாட்சி பேரரசுச் சோழர் கல்வெட்டுக்களிலும் புழங்கும். இது போன்றதொரு பலுக்கற் சிதைவிற் பொத்தகம் என்பது புத்தகம் என்று ஆகும்.

சங்கதம் தவிர்த்த வடபால் மொழிகளிலும் (potthaka - Pali, Putha - Prakrit, Puuthi - Kashmiri, pothu - Sindhi, Pottha - Punjabi, Pothi - Kaumuni, Nepali, Assamese, Pothaa - Bengali, Oriya, Maithili, Poothi - Bhojpuri, Potha - Awadhi, Pothuu - Gujarati, Pothi - Marathi,), ஏன் சிங்களத்திலும் கூடப் (Pota) என்றே அமைந்து, பொத்தகம் எனும் பலுக்கிற்கு நெருங்கி வரும். சங்கதத்தில் மட்டுமே பொத்தகம் புத்தகமாகிப் பின் மேலும் திரிந்து புஸ்தகமாகும். இக்கால வடபால் மொழிகளிற் சிலவும் “புஸ்தக்” எனும் சங்கதப் பலுக்கலை எடுத்தாள்கின்றன. இது புரியாது, நம்மில் பலரும் புஸ்தகமே தமிழிற் புகுந்து புத்தகம் ஆயிற்றென எண்ணிக் கொள்கிறோம். அதையே சிலர் சாதிக்கவும் செய்வார். உண்மை அதுவல்ல.

தமிழராகிய நாம், நம் மூலங்களை உணராமல் எவ்வளவு காலத்திற்கு இருப்போமோ, தெரியவில்லை. அளவுக்கு மீறிச் சங்கத ஆளுமைக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டுப் போனதால், "புஸ்தகம்" தெரிந்தவர்க்கு "பொத்தகம்" புதிதாகவே தோற்றுகிறது. காலத்தின் கோலங்கண்டு நொந்துகொள்வதைத் தவிர்த்து, வேறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை :-) எதைச் சொன்னாலும், ”அது எப்படிச் சங்கதம் வழிவந்ததை இவன் மறுக்கலாம்?” என்ற முட்டாள்தனமான பூசனைப் போக்கில், ”தமிழ்வெறியன்” என்று சாடுவதே நடக்கும் நிலையில் ’அளவிற்கும் அதிகமாகப் பிறசொற் பலுக்கல்களை நம்மொழி இடையே ஆள்வது’ பற்றி என்னைப் போன்றவர் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது,சொல்லுங்கள்?

(இன்னொரு திராவிடமொழி நிலை எனக்கு நினைவிற்கு வருகிறது. பலோச்சி மொழியை அளவிற்கு மீறிக் கலந்த திராவிடமொழியான பிராகுயி இன்று 10 % க்கும் குறைவாய்த் திராவிடச் சொற்கள் கொண்டுள்ள தாம். ”இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாது போகக்கூடிய திராவிட மொழி அது” என அறிந்தவர் சொல்கிறார். கூடிய விரைவில் பிராகுவிக்கள் தம்மைப் பலோச்சி என்றே அடையாளப்படுத்திக் கொள்வாராம். இதேபோல, அளவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பைப் பற்றி இத்தாலியர் கவலைப் படுகிறார் என்று பி.பி.சி. வலைத்தளத்தில் படித்தேன். இடைவிடாது ஆங்கிலம் பழகும் தமிழ் இளையர் கூட எதிர்காலத்திற் தம்மைத் தமிழரெனாது தமிங்கிலராய் அடையாளப் படுத்துவரோ, என்னவோ?)

பொத்தகம் புரிய வேண்டுமானால், நாம் பனையோலையில் இருந்து, (கூடவே பனை பற்றிய பல செய்திகளையும் அறிந்து கொண்டு) தொடங்க வேண்டும். பட்டம்>பத்ரம், தால்> தாள்> தாளி, தாலம், சுவடி, பனுவல், பொத்துதல், ப(ன்)னை, பாளை, போந்தை போன்ற சொற்களின்வழி, நம் புரிதலைக் கொண்டுசெல்ல வேண்டும். [இக் கட்டுரையில் பாவாணர் கருத்துக்கள் அடியூற்றாய் இருக்கச் சொல்லறிஞர் ப.அருளியின் ”தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியல் உரைகள்” என்ற நூலிலுள்ள “புத்தகம்” என்னும் கட்டுரையில் வரும் பல செய்திகளும், புலவர் இரா. இளங்குமரனின் “தமிழ் வளம்-சொல்” என்ற நூலில் வரும் “பல்” என்னும் கட்டுரைச் செய்திகளும், முனைவர் கு.அரசேந்திரனின் “தமிழறிவோம்-தொகுதி 2” இல் இருந்து “தாளி” என்ற கட்டுரைச் செய்திகளும் கூட நிறைந்து உடன் வருகின்றன. இந்தச் செய்திகளின் ஊடே என் தனிப்பட்ட இடைப்பரட்டும், முன்னவரில் இருந்து மாறிவரும் கருத்துக்களும் இருக்கின்றன.]

செய்திகள், கருத்துக்கள், கணக்குகள், குறியீடுகள் ஆகியவற்றை மரம், கல், ஓடு போன்றவற்றில் எழுதிய தமிழன், ஒருகாலத்தில் ஓலையிலேயே பெரிதும் எழுதினான். துணைக்கண்டக் கடற்கரையை ஒட்டிய மாநிலங்களில் எல்லாம் பனை எனும் எழுதுபொருள் பெரிதும் பரவியிருந்தது. எங்கெலாம் முல்லை, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் விரவிக் கிடந்தனவோ, அங்கெலாம் பனை பெரும்பாலும் வளரும். [ஆனாலும் அண்மையில் இரு மாதங்களுக்கு முன், வடபுலம் போன போது ஒரு வியந்தையைக் கவனித்தேன். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், இருவுள் பாதை (Railway), பெருவழிச் சாலைகள் (Highways) ஆகியவற்றின் இருமருங்கிலும் பனைமரத்தைக் கண்டேன் இல்லை; எனக்கு அது வியப்பாகவே இருந்தது; ஒருவேளை அம்மாநிலங்களில் பனை அரிதாகவே இருக்கும் போலும். ஆனாலும் பீகாரில் பனை பெரிதும் இருந்தது. (வங்காளத்திலும் அவ்வாறே இருக்கிறதாம்.) இப் புதலியல் பட்டகை(fact)யைப் புதலியலார் - botanists - தான் உறுதி செய்யவேண்டும்.]

சரி, புலனத்திற்குள் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.