Friday, October 22, 2021

முதற்றாய் மொழி

தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவிற்கு வருமுன் பலரும் ”சொல்லாய்வுக் குழு” என்று இன்னொரு முகநூல் குழுவில் இருந்தார். அதில் பாவாணரைப் பழி சொல்லும் போக்கு பெருகவே இருந்தது. ”பலமுறை அப்படிச் செய்யாதீர்” என்று சொல்லிப் பார்த்தோம். நடக்கவில்லை. உரையாடற் சத்தம் கூடியது தான் மிச்சம். யாரெல்லாம் அங்கு கேள்வி கேட்டாரோ, அவரைக் கொஞ்சங் கொஞ்சமாய் குழுவை நடத்துவோர் விலக்கிக் கொண்டிருந்தார். அப்படிச் செய்வது சரியில்லை என்று அங்கு விடாது சொல்லி வந்தேன். ஆனாலும் விந்தைப் போக்கு தொடர்ந்தது. முடிவில் நானே வெளிவரும் நிலை ஏற்பட்டது. அப்புறம் ”சொற்களம்”, ”தமிழ்ச் சொல்லாய்வு” என்று நகர்ந்து வந்தேன். ”தமிழ் தான் முதற்றாய் மொழி” என்ற கருத்தை நான் நம்புபவன் அல்லன்”. இன்னும் ”மொழி ஆய்வுகள் நடக்க வேண்டும். பிறகு தான் இக் கேள்விக்கு வந்து சேர முடியும்” என்ற கருத்துடையவன் நான்.   

இற்றை உலகத்தில் Niger-Kardofanian, Nilo-Saharan, Khoisan, Afro-Asiatic, Indo-European Dravidian, Uralic-Altaic, Eskimo-Aleut, Chukchi-Kamachatkan, Amerind, Na-Dene, Sino-Tibetan, Austoasiatic, Daic, Austronesian Indo-Pacific, Australian என்று பல்வேறு மொழிக் குடும்பங்கள் உள்ளன. இவற்றிலுள்ள தனி மொழிகளை வரலாற்று மொழியியல் வாயிலாய் ஆய்ந்ததும், அவற்றைக் குடும்பங்களாய்த் தொகுத்ததும் 19 ஆம் நூற்றாண்டு நெடுகிலும் நடந்தது. இதிற்றான் William Jones, Max Mueller போன்றோரின் பங்களிப்பு இந்தையிரோப்பியக் குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவியது. Francis Whyte Ellis, Robert Caldwell ஆகியோரின் ஆய்வால் திராவிட மொழிக் குடும்பம் அறியப் பட்டது. உலகின் வெவ்வேறு மொழிக் குடும்பங்களும் இதுபோல் கண்டறியப்பட்டன. 

இக்குடும்பங்களைக் கண்டுபிடித்ததோடு மட்டுமின்றி, இன்னுந் பழைய காலத்தில் இக் குடும்பங்களிடையே,  பெருங்குடும்ப உறவிருந்ததா என்ற ஆய்வும் 20ஆம் நூற்றாண்டில் நடந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முடிவில் பெருங் குடும்பங்களைச் சேர்த்து ”முதற்றாய் மொழி” என்பது இருந்திருக்குமோ என்ற நிலைக்கும் ஆய்வாளர் வந்து சேர்ந்தார். வெவ்வேறு வகைகளில், காலங்களில், நாடுகளில், Joseph H Greenberg, Harold Fleming, Merritt Ruhlen, Holger Pederson, Alfredo Trombetti, Edward Sapir, Aron Dolgopolsky, Vladislav Illich-Svitych, Vitaly Shevoroshkin, Sergei Starostin, Sergei Nikolaev, John Bengtson போன்றோர் முயன்று கொண்டிருந்தார். (இவரோடு ஞானப் பிரகாச சுவாமிகளையும், தேவநேயப் பாவாணரையும், ப.அருளியையும், கு.அரசேந்திரனையும் உறுதியாய் நான் சேர்ப்பேன். தமிழாய்வாளர்கள் ஆங்கிலத்தில் பெரிதும் எழுதவில்லை என்பதால் அவரின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. மேலையர் எனில் ஏற்போம், தமிழர் எனில் குறைத்து மதிப்பிடுவோம் எனும் அளவீடு சரியல்ல.) 

இங்கு சொன்ன உலக ஆய்வாளரின் தேடல்களிற் பல, முறையாக இருந்தன. சில, தவறாகவும் முடிந்தன. ஊடே உடைகலத் தேற்றுகளும் (crackpot theories) வந்து கொண்டிருந்தன. ( தமிழகத்திலும் சில உடைகலத் தேற்றுகளுண்டு. பல்வேறு குலுக்கலில் அரசியலை ஒட்டி, இத்தேற்றுகள் வெளிப்படும். இத் தேற்றுகள் கொண்டவரின் பெயர்களை நான் சொல்ல விழைய வில்லை. ஆனால், எந்த அறிவியலில் தான் crackpot theories கொப்புளித்து வந்ததில்லை? ஆனானப் பட்ட பூதியலார் ஐசக் நியுட்டனே 16 ஆண்டு காலம் புட வேதியலைச் (Alchemy) செய்துள்ளார். முறை வேதியலுக்குப் புட வேதியல் கொடுத்த தொந்தரவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதே போல் உயிரியலிலும் ஏராளம் முண்டு முடிச்சுகள் ஏற்பட்டு ஆய்வாளர் திரும்பி வந்து மறு பாதை கண்டார். அறிவியலில் இப்படி நடப்பது வழமையே. அதற்காக அறிவியலையே குறை சொல்வதில் முறையில்லை. வரலாற்று மொழியியலை மட்டும் விதப்பாய்க் குறை சொல்லிப் பயனென்ன? அறிவியற் சான்றாண்மையர் அப்படிச் சொல்ல மாட்டார். எத்தனை முறை முட்டுச் சந்துகளிற் போய் நாம் மாட்டியிருப்போம்? மீண்டும் திரும்பி வந்து சரியான வழி கண்டு பிடித்து உருப்படியாய் ஊர் போய்ச் சேருகிறோம் அல்லவா?) 

தவறுகளைக் களைந்து சரியானதை நோக்கி மொழியியலுலகம் இன்றும் நகர்ந்துகொண்டு தான் உள்ளது. இந்த ஆய்வுகளையே குறை சொல்லி ஒரு சில கட்டுரையாசிரியர் செய்வதுபோற் கேலி செய்வது முன்னாலும் நடந்தது. இப்போது நடக்கிறது. அதற்காக முயற்சிகள் நின்று போவதில்லை. முறையாக இந்த ஆய்வை உணர விரும்புவோர், Merritt Ruhlen எழுதிய “The Origin of Language" என்ற நூலை வாங்கிப் படியுங்கள். Nostratic Studies என்ற துறை வளர்ந்து கொண்டு தான் உள்ளது. இப்போது வரை அதில் நடந்து கொண்டிருப்பது குலையாக்கமும் ஒழுங்குபடுத்தலும் தான் (classification and ordering). இன்னும் ”முதற்றாய் மொழி” எப்படி யிருந்திருக்கும் என்று முற்று முடிவாய் யாருஞ் சொல்லவில்லை. அதற்கு நாளாகலாம். இடையில் மொழித் தரவுகள் இன்னுஞ் சேர வேண்டும். (நான் அதைத்தான் செய்கிறேன்.) 

இடையில் ஒவ்வொருவரும் ஒரு கருதுகோளை வைக்கலாம். தவறே இல்லை. ”தமிழே முதற்றாய் மொழி” என்று பாவாணர் வைத்தது ஒரு கருதுகோள். அது சரியாகலாம், சரியில்லாதும் போகலாம். அது வேறு கதை. சும்மா, பாவாணர் விழைவாளரைப் பிடித்து வம்புக்கு இழுப்பது வேலையற்ற வேலை. (திராவிடத்தை வம்புக்கு இழுப்பது போல் பாவணரை வம்புக்கு இழுப்பது சிலருக்குக் கேளிக்கையாய் உள்ளது.) அவருடைய எல்லாக் கருது கோள்களையும், முடிவுகளையும் நான் ஏற்பவனில்லை, ஆனால் அவரைப் படிக்காது நான் தமிழ்ச் சொல்லாய்வில் இவ்வளவு பேசி இருக்க முடியாது. அவரின் குமரிக்கண்டக் கருதுகோள் முதற்கொண்டு பலவற்றை நான் ஏற்க மறுப்பேன். ஆனால் கடல்கொண்ட குமரி நிலம் இருந்ததையும் (அது கண்டமல்ல்), தமிழின் நீண்ட தொன்மையையும், ”இந்தையிரோப்பிய மொழிகளோடு திராவிட மொழிகள் பெருங்குடும்ப உறவு கொண்டிருந்தன” என்பதையும் கட்டாயம் ஏற்பேன்.

இன்றைக்கு உலகெங்கும் பலராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிற, Cavalli- Sforza வால் முதலில் அழுத்திச் சொல்லிய ”ஈனியலாய்வின் (genetics research) மூலம் உய்த்து உணரப் படும் மாந்தத் தோற்றம்”, இம் முதற்றாய்மொழிக் கருத்திற்கு ஆதரவாகவே உள்ளது. அதில் திராவிட மொழிக் குடும்பத்தை இந்தை யிரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு மிக மிக நெருங்கியதாகவே சொல்வர். கண்ணை மூடிக்கொண்டு உலகத்தைப் பார்ப்பதால் உலகம் இருண்டுவிடாது. நாம் தாம் தடுமாறுவோம். கண்ணைத் திறந்தால் வழி தெரியும். சொல்லாய்வுக் குழுவில் உள்ளோர் சற்று திறந்த மனத்தோடு இருப்பது நல்லதென்றே பரிந்துரைப்பேன். நமக்கிருக்கும் வெவ்வேறு நிகழ்ப்புகளில் (agenda) குழந்தையைத் தூக்கித் தொட்டி நீரோடு எறியக் கூடாது.

அன்புடன்,

இராம.கி. 


 


No comments: