Tuesday, October 05, 2021

சில பொதுச் சொற்கள்

ஒரு முறை திரு. jay என்பாரும், திரு. சுந்தரம் என்பாரும் சில தமிழ்ச்சொற்களைப் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்குக் கொடுத்த மறுமொழி. இங்கே வலைப்பதிவாகிறது.

 விமானம் = பறனை, சில காலம் வானூர்தி, ஆகாய ஊர்தி என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. விமானம் என்ற சொல் கோயில் கருவறைகள் மேலுள்ளதையும் குறிக்கும். பறனை என்ற சொல்லைப் பறத்தலின் அடிப்ப்டையில் அட்லாண்டா பெரியணன் சந்திரசேகரன் மொழிந்தார். 

 நதி = ஆறு

அதிகாரி = அதிகாரி (அதித்தல் = கூடுதல், மேலிருத்தலென்ற பொருள் கொண்ட தமிழ் வினைச்சொல். கருத்தல் = செய்தல்; கரம் = கை. இதுவும் தமிழ்தான். இரண்டு வினைகளைச் சேர்ப்பது மட்டும் இங்கே சங்கதமுறையாயுள்ள்து. ஆனாலும் இச்சொல் நெடுநாள் பழகிவிட்டது. எனவே அதிகாரம் தமிழாயிற்று.

கவிஞர் = பாவலர்; கவி என்ற பெயர்ச்சொல் சங்கதம் தான். ஆனால் இதன் அடிச்சொல்லான காவுதல் = அழைத்தல், பாடுதல் என்பது தமிழே.

கவிதை = பா

புத்தகம் = பொத்தகம். ஓலையிலெழுதி இரண்டு பக்கமும் கட்டைவைத்துப் பொத்தியதால் இது பொத்தகமாயிற்று. தவிர போத்து என்ற சொல் பனையோலையைக் குறிக்கும். பொத்தகமே புத்தகமாகி மீண்டும் மிகைத் திருத்தமாய்ப் புஸ்தகமாயிற்று.

பிரதமர் = தலைமையர்; பிரதம மந்திரி = தலைமையமைச்சர்.

பிரத்யேகம் = தனிப்பட்ட, தனித்த

அபூர்வம் = அரிது

பட்சத்தில் = பக்கத்தில். பக்கம் என்ற தமிழ்ச்சொல்லே பக்‌ஷமென்று சங்கதத்திற் போனது. மீண்டுங் கடன் வாங்கிப் பட்சமென்று சொல்கிறோம். இதற்குப் பக்கமென்றே சொல்லிப் போகலாம்.

பிரமாதம்​= பெருமாதம். “ப்ர/ப்ரம்” என்ற சங்கத முன்னொட்டு பெரு/பெரும் என்ற தமிழ் முன்னொட்டின் திரிவே. ஆகுதல் என்பது ஆதல், 

சின்னம் = சின்னம்

இலச்சினை = இலச்சினை

இயந்திரம் = இயந்திரம்

ஜீவநதி = வற்றாத ஆறு; ஆற்றில் எந்நாளும் நீர் ஓடிக்கொண்டே இருந்தால் அந்த ஆற்றை ஜீவநதியென்பர். ஜீவன் = உயிர். தமிழில் உய்வது உயிர். உய்யாறு என்றும் சொல்லலாம் தான். இருப்பினும் வற்றா ஆறு என்பதே தமிழ் மரபாகியது.

அதிசயம் = அதிசெயம்; திடிரென்று கூடிச் (அதித்தல் = கூடுதல்) செய்யப்பட்டது. செய்யம்>செயம்>சயம் என்று பேச்சுவழக்கில் திரியும். 

சபை = அவை.

தணிக்கை = தணிக்கை

ரத்து = விலக்கு

நீதி = நயதி உச்சம், உச்ச நீதிமன்றம் = உச்சம், உச்ச நயமன்றம்; நயதி என்ற தமிழ்ச்சொல்லே நீதியாயிற்று. 

விதித்தல் = விதித்தல்; ஏற்கனவே வித்திட்டது விதி.

நிலவரம் = நிலவரம்; நிலைவரம் பேச்சுவழக்கில் நிலவரம் ஆகியது. லைகாரச் சொற்கள் லகரமாவது பெரிதும் நடந்துள்ளது.

கெடு (கெடு தமிழ்ச்சொல்லா?) = கட்டு. கெடு தமிழ்ச்சொல்லே. பலம்>பெலம், கட்டு>கெட்டு பருமை>பெருமை, பருக்கல்>பெருக்கல் என்று அகரச் சொற்களை எகரமாக்கிப் பேசுவது தெற்கே (குறிப்பாக நெல்லைப் பக்கம்) பெரிதும் பழக்கமானது. கெட்டு என்று சொல் கெடு எனத் திரிந்தது. ”அவர் காலக்கெடு வித்தித்திருக்கிறார்” என்றால் காலத்திற்கு ஒரு கட்டு வைத்திருக்கிறார் என்று பொருள்

நிரகரிப்பு = மறுப்பு நில் என்னும் வினையின் பொருள் stop என்பதே. ஆகரம் என்பது ஆகுதல் வினையில் வடமொழி ஈறு கொண்ட சொல். இல்லாமல் ஆக்குவது நிராகரிப்பு. வேர்ச்சொற்கள் தமிழ். சொல்லமைப்பு சங்கதம். இதைத் தமிழில் மறுப்பென்றே சொல்லலாம்.  .

சுத்திகரிப்பு = தூய்விப்பு. சுல் என்பது வெளுப்பைக் குறிக்கும் தமிழ் வேர்ச்சொல். சுல்>சுல்த்து என்பது மறுவுள்ளதை வெள்ளையாக்குவது. இங்கும் சங்கத முறையில் சுத்திகரம் என்றாக்கப் பட்டுள்ளது. தூய்விப்பு என்பது முற்றிலும் தமிழ்.

பராமரிப்பு = பேணுதல்; பர் என்ற சங்கத முன்னொட்டிற்குப் பிற/புற என்று பொருள். பர்தேசி = புறநாட்டுக்காரன்; பர் என்ற சங்கத முன்னொட்டிற்கு இணையானது புற என்னும் தமிழ் முன்னொட்டே. அகமென்பது உள்ளேயிருப்பது. ஒரு குறிப்பிட்ட சாரார் வழக்கில் அகமென்பது ஆமெனப் பலுக்கப் படும். அப்படிப் பலுக்குவது தமிழில் இயல்பான முறையே. ஏராளமான சொற்கள் இம்முறையில் பலுக்கப்படும். காட்டு: அகல்>ஆல். பரித்தல் = பாதுகாத்தல் பர்+.அகம்+ பரித்தல் = பராம்பரித்தல்>பராமரித்தல். இங்கே முன்னொட்டைத் தவிர்த்து மற்றவை தமிழ் தான். நல்ல தமிழில் புறாம்பரிப்பு என்று சொல்லலாமெனினும், பேணல்/பேணுதல் என்று குறுகிய சொல்லைப் புழங்குவது சாலச் சிறந்தது. 

சேவை = சேவை. தமிழில் ’க’ வும் ’வ’ வும் போலியானவை. செய்கை என்பதே சேகை>சேவை என்றானது. இற்றை நாட்களில் அதற்கு service என்ற விதப்பான பொருள் ஏற்பட்ட காரணத்தால் செய்கையையும், சேவையையும் தனித்தனியே சற்று வேறுபட்ட பொருள்களில் பயன்படுத்தலாம்.

விசாரனை = உசாவல்

விஷயம் = விதயம்

பரிசீலனை = உற்றறிதல். ஸ்பர்ஸம் (= தொடுகை, ஊறு) என்ற சங்கதச்சொல்லின் வழி பிறந்தது.. தொட்டு அறிவதை உற்று அறிதல் என்றும் தமிழிற் சொல்லலாம். பரிசீலித்தல் என்பது வெறுமே கண்னால் பார்த்து மட்டும் அறியாது தொட்டும் அறிதல். ஐம்புலன்களில் இரு புலன்கள் ஈடுபடுவது. இங்கே உற்றறிதல் என்பது அப்படியே இதே கருத்தை வெளிப்படுத்தும்.

ஆலோசனை - சூழ்ந்தாய்தல் என்பது சரியா?

விபத்து = தன்னேர்ச்சி.

முகாம் = முகாம் (இதை முகவம் என்றுஞ் சொல்லலாம்.)

மர்மம் (மர்மக்காய்ச்சல்)= மருமம்

தரம், தரமான = தரம், தரமான

ராசியான= இரைசியான. இரைந்து கிடப்பது இராசி. இரைந்து கிடத்தல் அகலமாய் கிடத்தால். விண்மீன்கள் அகன்று கிடக்கும் இடம் இரைசி. வானத்தில் 12 இரைசிகள் என்று முன்னோர் பகுத்திருக்கிறார். 

பேச்சுவார்த்தை = பேச்சுவார்த்தை

நிர்வாகம் = நிருவாகம்

பிரச்சினை = பிறழ்ச்சினை

முக்கியத்துவம் = முகன்மை

விலைவாசி (இதில் “வாசி” ) வாய்த்தது வாசி. விலைவாசி முற்றிலும் தமிழ் தான்.

எச்சரிக்கை = எழுதருகை

சாதாரணம் = சாத்தாரம்

அதிசயம் = அதிசெயம்

அற்புதம் = வியப்பு

நிர்ணயம் = நிருணயம்

ஆபாசம் = முறையற்றது . ஆப + ஆசம் என்று இச்சொல் விரியும். ஆப் என்ற சங்கத முன்னொட்டிற்கு அற்று என்ற தமிழ்ப் பின்னோட்டே இணையானது. ஆசம் என்பது ஆனது என்ற பொருள்கொள்ளும் தமிழில் இதை முறை என்று சொல்லலாம்.

விவரம் = விவரம்

அவசியம்= கட்டாயம்

தகவல் = உள்ளுருமம், அறிதி

புகார் = குறைப்பதிகை/ குற்றப்பதிகை

அனுமதி  -  இது அண்ணுவதற்கான மதி. அண்ணுதல் = நெருங்குதல். அ(ண்)ணுமதி என்ற தமிழ்ச் சொல்லே சங்கதத்தில் அனுமதி என்றானது. மதி = இசைவு, ஏற்பு, உடன்பாடு. அணுமதி என்பது ஓரிடம், ஒரு கட்டு, ஒரு பேச்சு எனப் பல்வேறு விதயங்களுக்குள் அணுகுவதற்கு ஆன இசைவு. இதே பொருளில் அண்மைக் காலத்தில் நுழைமதி என்ற சொல் visa என்பதற்கு ஏற்பட்டு நாங்கள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அணுமதியை அனுமதி என்று இக்காலத்தில் எழுதுவதை ஏற்றுக் கொள்ளலாம் என்றே நான் இப்பொழுது எண்ணுகிறேன். 

அங்கிகாரம் - ஒப்பளிப்பு என்பது சரியா?

அபராதம் - குற்றம், தண்டம் என்பன சரியா? இங்கு அப் என்ற முன்னொட்டு (ஆப என்பதைப் போல) அற்று என்ற பொருளில் வருகிறது.

பலி (விபத்தில் பலி) = ஆகுதி (யாகத்தில் கொடுக்கப்படும் பலியை ஆகுதி என்று தமிழிற் சொல்கிறோம். அதைத் தன்னேர்ச்சியில் நடக்கும் உயிரிழப்பிற்கும் பயன்படுத்தலாம்.  

விநியோகம் = பகிர்மானம்

அன்புடன்,

இராம.கி.

No comments: