Saturday, October 30, 2021

புகழ்

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

என்ற குறளுக்கு உரையாசிரியர் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணக்குடவர் “பிறக்கில் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று" என்று சொல்வார் 13 ஆன் நூற்றாண்டு பிற்பகுதியைச் (பொ.உ. 1271) சேர்ந்த பரிமேலழகரும், “பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அக் குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று” என்பார். 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாவாணரும், “ஒருவர் இவ்வுலகத்தில் பிறக்கின் புகழ்க்கு ஏதுவான குணத்தோடு பிறக்க, அக்குணமில்லாதவர் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது” என்பார். இதுபோல் இன்னும்பல உரையாசிரியருஞ் சொல்வர். இவர்கள் எல்லோரும், தோன்றுதலுக்குப் பிறத்தல் என்ற பொருளையே கொள்வார். 

பிறக்கும்போது புகழோடு தோன்றல் என்றால், முற்பிறப்பு, நல்வினை, தீ விணை, முன்வினைப் புகழ்” என்று கருத்துகளே (உரையாசிரியர் சொல்லா விட்டாலும்) இவற்றில் ஆழ்ந்துள்ளன. சென்ற பிறப்பை உணர்ந்தார் யார்? தோன்றல் என்ற சொல்லுக்குக், ”கண்காணல், வெளிப்படல், அறியப்படல், விளங்கல், நிலைகொள்ளல், வரல், சாரியை முதலியன சொற்களிடையே வரல்” போன்ற பொருள்களும், “பிறத்தல், முனைத்தல், உண்டாதல் போன்ற பொருள்களையும் அகரமுதலியில் சொல்வர். பிறவி என்பது நம் விருப்பத்தால் நிகழ்வதன்று. முற்பிறப்பு தொடர்பான செய்திகளைத் தவிர்த்து இம்மை நிலை பற்றியே பொருள் கொள்ள முயன்றால், ”கண்காணல், வெளிப்படல், அறியப் படல், விளங்கல், நிலைகொள்ளல், வரல்” போன்றவையே சரியென விளங்கும். 

நூறுபேர் இருக்கும் அவை என்று வையுங்கள். இறை வாழ்த்து முடிந்து, வரவேற்புரை தொடங்குகையில், மேடையில் 10 பேர் தோன்றுகிறார். வரவேற்பில் விருந்தினரின் புகழும், குறிப்பிட்ட விழாப் புலனத்திற்கு அவர் எப்படி தொடர்புள்ளவர் என்றும் தானே சொல்லப்படுகிறது? வந்தார் போவாரை எல்லாங் கூப்பிட்டு அங்கு தோன்ற வைப்பாரோ? மேடை யென்றில்லை. கலந்துரையாடும் அரங்கிலும் அப்படித் தான். ஏன் ஒரு வீட்டில் விருந்தினராய்ச் சென்றாலும் இதே தான். (திறமை, குமுகப்பணி, அதிகாரம், செல்வம், ஈகை, அருஞ்செயல் என) ஏதோ ஒருவகையில் புகழ் பெற்றோரைத் தானே மேடையில் ஏற்றுவார்? அல்லது பொதுவில் சொல்வார்? ஒவ்வொரு மாந்தனுக்கும் வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான். அதன்படி, (திறமை, குமுகப்பணி, அதிகாரம், செல்வம், ஈகை, அருஞ்செயல் என) ஏதோ ஒரு வகையில் புகழ்பெறுக! - என்கிறான். (தவறான செயலில் புகழ்பெறுவது இங்கு குறிக்கப்படவில்லை.) 

நானறிந்து, இக்கருத்தை முறையாக விவரித்தவர் பாவலரேறூ பெருஞ்சித்திரனார் மட்டுமே. அவருடைய திருக்குறள் மெய்ப்பொருளுரை 4 ஆம் பகுதியில் இக்குறளுக்குப் பொழிப்புரையாக, ஒருவர் உலக மக்களிடத்துத் தாம் விளங்கித் தோன்ற விரும்பினால், தம்மை அவர்கள் புகழ்கின்ற வகையில் விளங்கித் தோன்றுக. அவ்வாறு இல்லாதவர் (தம்மை இகழும் வகையில்) அறிமுகம் ஆவதைவிட) அவ்வாறு தோன்றாதிருப்பதே நல்லது. 

பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் உரையைப் படிக்குமாறு பரிந்து உரைக்கிறேன். குறளின் உரைகளைப் படித்து அருள்கூர்ந்து அப்படியே கொள்ளாதீர். ஒவ்வொன்றிலும் ஒரு சமய, மெய்யியல் தாக்கம்  உள்ளது. ஏரணங் கொண்டு உங்களுக்குச் சரியென்று தென்பட்டபடி, வள்ளுவனின் குறளைப் பாருங்கள்.

அன்புடன்,

இராம.கி.   . 


2 comments:

Sundar.P said...

சிறப்பு ஐயா

ந.குணபாலன் said...

பேர்புகழ் நிறைந்த குடும்பத்தில் தான் பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்ற ஒரு பொய்யான, நடைமுறைக்குப் பொருத்தமில்லாத விளக்கத்தை இனியாவது விட்டுவிட வேண்டும். நன்றி ஐயா! நல்லதொரு விளக்கம்.