Sunday, September 30, 2018

வடிப்புக்கிறுவியற் சொற்கள் (Typographic terms)

Murasu Anjal Unicode, Arial Unicode MS, Latha, TSCu_Paranar, Baloo Thambi, Mukta malar - என ஏராளமான கணியெழுத்துகள் இக்காலத்தில் வந்துவிட்டன. (இவற்றில் சில பரி - free -யானவை, சிலவற்றைக் காசுக்கு வாங்குவோம். நம்மூரில் காசுக்கு வாங்கம் பழக்கம் இன்னும் அவ்வளவாய் வளரவில்லை.) இவற்றை யெலாம் இன்று எழுத்துருக்கள் என்கிறார். இச் சொல்லை வெகு அரிதாகவே நான் பயன்படுத்தியுள்ளேன். "அருவியிருக்க நீர்வீழ்ச்சி வேண்டுமா?" என்று சில போது நினைப்பேன்.

மேலே சொன்ன ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிப்பு அல்லது வார்ப்பு. அச்சுத் தொழில் தமிழகத்திற்கு வந்த புதிதில் மரம், ஈயம் என வெவ்வேறு பொருள்களில் எழுத்துக்களின் உருவம் வடிக்கப்பட்டது/ வார்க்கப்பட்டது. இதற்குப் பின்புலம், கும்பகோணத்திற்கு அருகே சுவாமிமலையில் பல்வேறு இறைப்படிமங்கள் செய்கிறாரே அவ் அருமையான கலை தான். இரு வேறு வேலைகளுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடும் இல்லை. இரண்டுமே வார்ப்புகள் தாம். வார்ப்புச் செய்யும் பட்டறை வார்ப்புப் பட்டறை என்றே நம் தந்தை, தாத்தன்கள் காலத்தில் சொல்லப் பட்டது. ஒவ்வோர் ஊரிலும் கொல்லர் பட்டறைகள் இருந்தன. பொற்கொல்லர், செப்புக் கொல்லர், இருப்புக் கொல்லர் இருந்தார். கொல்லர் செய்யும் பல்வேறு தொழில்களில் வார்ப்படமும் ஒன்று தான். இக்கால இளைஞர் (கணி - computer, நகரி - mobile, முகநூல் - facebook, கீச்சு -twitter என விதவிதமாய் இயங்குங் காரணத்தால்) தம்மைத் தம் முன்னோரை விட வேறுபட்டதாய்க் காட்டும் முனைப்பில் எழுத்துரு என்கிறார். இது நம் மரபை, தொப்புள் கொடியை அறுத்தொதுக்கும் போக்காகும். இது வேண்டாம் என்னைக் கேட்டால் எழுத்துருவை வார்ப்பென்றே சொல்லலாம்,   

அச்சுத் தொழில் வரும்முன், ஒவ்வொரு கல்வெட்டு, ஓலை/தாள் ஆவணங்களில் எழுதுவோரின் திறமைக்குத் தக்க எழுத்துகள் உருவம் பெற்றன. இப்போது “அ” என்ற எழுத்தை எடுத்துக் கொள்வோம். ஒருவர் எழுதும் “அ” குண்டாயிருக்கும். இன்னொன்று ஒல்லியாய் இருக்கும். மூன்றாவது தட்டையாய் இருக்கும். ”அ” எழுதும் போது ஒரு சுழியில் தொடங்குகிறோம் அல்லவா? அது ஓலை வழிப் பிறந்து அச்சுக் காலத்தில் வளர்ந்தது. அதற்கு முன்னால் கல்வெட்டுக்களில் தேடிப் பார்த்தால் சுழி இருக்கவே இருக்காது. காலவோட்டத்தில் எழுத்தில் இப்படிச் சில பாகங்கள் சேர்ந்து கொண்டன. எழுத்தின் அடிப்படை வரையறையில் அவை கிடையாது. அலங்காரத்திற்காக அவை சேர்க்கப் பட்டன.

அகரத்தில் இருக்கும் அடியை வள்ளம் (இதைச் சிலர் கிண்ணம் என்பார்.), இவ்வளவு நீளம் வேண்டுமா? அகலங் குறைந்தால் போதுமா? - இதை நிருணயிப்பதில் நம் ஒவ்வொருவர் கைவண்ணமும் மாறும். மேற்சுழியை ஒப்பிட்டால், வள்ளம் பெரிதாக வேண்டுமா? சமமாக வேண்டுமா? சிறிதாக வேண்டுமா? சுழியும் வள்ளமும் சேர்ந்த உருவத்தையும், ”அ” வின் கடைசியில் வரும் குத்துக் கோட்டையும் இணைக்கும் சிறுகோடு எவ்வளவு சிறுத்திருக்க வேண்டும்? இப்படி ஓர் அகரத்தில் ஆயிரஞ் சிக்கல்களை என்னால் விவரிக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதுவோம். அதுவே சரியென்று அடமும் பிடிப்போம்.

நம் எழுத்தின் உறுப்புக்கள் என்ன? அவற்றின் வரையறை என்ன? எவை செந்தரமானவை? எவற்றில் நீக்குப் போக்குகள் உண்டு?. எவை நம் சொந்த அடவிற்கு (individual design) உட்பட்டவை? எவற்றை நாம் மாற்றக் கூடாது? இப்படி ஒவ்வொர் எழுத்திலும் பல்வேறு சிக்கல்கள் உண்டு. அவற்றைப் பேசுவது தான் வடிப்புக் கிறுவியல் (typograohy) என்னும் புலனம், நம்மூரில் அங்குமிங்கும் சில முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை ஒருங்கு இணைக்கப்படவில்லை. துணுக்குகளாகவே உள்ளன. அவற்றைத் தமிழிற் சொல்ல சில கலைச் சொற்கள் தேவை. இங்கே சிலவற்றைக் குறித்துள்ளேன். என்னோடு நண்பர் நாக. இளங்கோவனும் இதில் ஈடுபட்டுள்ளார். இச் சொற்களுக்கு மாற்றாய் உங்களிடமும் சில இருக்கக் கூடும். அவற்றையும் இங்கு சொல்லுங்கள். சில நாட்களுக்குள் இவற்றை இறுதிப் படுத்துவோம்.
 
----------------------------------------------
Bowl = வள்ளம்; வட்டமான கலம். குமரி மாவட்டத்திற் புழங்கும் சொல். மலையாளத்திலும் உண்டு. வளைவுப் பொருளுள்ளது. வள்>வளைவு. வட்டம்/வட்டி என்ற சொல்லும் இதிற் கிளைத்ததே. சிவகங்கைப்பக்கம் வட்டி, கிண்ணி என்ற சொற்கள் புழக்கத்திலுள்ளன. வட்டி = பெரிய கலம்; கிண்ணி = சிறியகலம். வட்டியிற் சோறும், கிண்ணியில் காய்கறியும் வைக்கப்படும். வள்>வாள்>வாளி; வள்>வளந்து = பெரிய மிடா.   
stem = தண்டு; செடிகளுக்கு இருப்பது
counter = கூண்டு
arm = ஆரம்; கைக்கான இன்னொரு பெயர்
ligature = இணைப்பு
terminal = தீரம்; தீர்ந்து போவது முடிந்து போவது என்று இடத்தைக்குறிக்கும் சொல் ஆற்றுத்தீரம் என்று சொல்வதில்லையா? தீரத்தில் இருக்கும் நீராட்டுத் துறை 
spine = பினுகு; பின்னுக்கு என்பதன் சுருக்கம். முதுகிற்கு இன்னொரு பெயர்
ascender = ஏறி
apex = உச்சி
serif = செருமு = காலிற்குச் செருப்புப் போல் எழுத்திற்குக் கீழே சேர்ப்பது.
ear = அள்ளு; அள் எனிற் காது என்று பொருள்
descender = கீழி
crossbar = குறுவரை = குறுக்கேயுள்ள தண்டு
finial = முடிவு
ascender height = ஏறுயரம்
cap height = தலையுயரம்
x-height = = படமவுயரம் (ப, ட, ம என்ற எழுத்துக்கள் இந்த உயரத்தில் அமைவதால் மூன்றையும் சேர்த்துப் படமம் என்று பெயரிட்டேன்.
baselene =  அடித் தானம்; கட்டடவியலில் உள்ள சொல்.
descender line = கீழ்த் தானம் அடிக்கும் கீழுள்ள தானம்.
open type fonts = திறவடி வார்ப்புக்கள்
true type fonts = மெய்வடி வார்ப்புக்கள்
spline = வளரி
variable width = வேறும் அகலம்
regular width = சீர் அகலம்
stroke = துகி, ஒசிவு. துய்>துய்கு>துகு>துகி பஞ்சின் இழை துய் எனப்படும். துய்களால் ஆனது துகி; துகிகளால் ஆனது துகில் .  . .
weight = எடை
slant = சரிவு; இது italic இலிருந்து (இத்தாலியால் ஏற்பட்ட பெயர்) சற்று வேறு பட்டது. இச் சரிவு எப்பொழுதும் பார்க்கும் சரிவைக் காட்டிலும் அதிகமானது. சீரான சரிவை 15 பாகை என்று சொன்னால் இத்தாலிகச் சரிவு 30 பாகை இருக்கலாம்.)
contrast = variation in stroke width within a glyph = மாற்றுத் தகை
Angle of contrast = மாற்றுத் தகைக் கோணம்
font weight distribution = வார்ப்பின் எடைப் பகிர்வு
(hair line = மயிரிழை; 50 Thin = சன்னம்; 100
ultra light = மீகிய இலேசு; extra light = ஏகிய இலேசு; 200
light = இலேசு; 300
book = பொத்தக; 400 Normal/ regular/ plain = நேரிய/ஒழுங்கான/சீரான, 400
medium = நடு, 500
Demi-bold/Semi bold = அரைத்தடிமன் 600,
Bold = தடிமன் 700,
Extra bold/ ultra bold = ஏகிய தடிமன், 800
Heavy = கனமாக, 900 Black = கருங்; 900
Extra black = ஏகிய கருங்; 950 Ultra-black = மீகிய கருங், 950
vertical = குத்தாக
horizontal = கிடையாக
Bottom-heavy = புட்டம் கனமாக
Top-heavy = தலைக் கனமாக
irregular = சீரற்ற
joins = சேர்ப்புகள்
speed = வேகம்
regularity = ஒழுங்காக
flourish = அலங்காரமாய் 

அன்புடன்,
இராம.கி.

மறைக்காடு - 7

அப்பரின் நாலாந்திருமுறை 33 ஆம் பதிகத்தில், 324, 325, 326, 327, 328, 329, 330, 331, 332, 333 ஆம் பாடல்களில் மாமறைக்காடென்ற ஊர்ப்பெயர் மட்டும் வரும். மற்றபடி இறைவன் பற்றிய விவரிப்பே அதில் நிறையவுள்ளது. இதேபோல் நாலாந்திருமுறையில் 34 ஆம் பதிகத்தில், 334 கலிமறைக்காடு, 335 தெக்குநீர்த் திரைகள்மோதும் திருமறைக்காடு, 336 நான்மறைக்காடு, 337 திருமறைக் காடு, 338 அணிமறைக்காடு, 339 தொல்மறைக்காடு, 340 முத்துவாய் திரைகள்மோதும் முதுமறைக்காடு, 341 நான்மறைக்காடு, 342 எழில்மறைக்காடு, 343 அணிமறைக் காடு என்ற விவரிப்புகளுள்ளன. இன்னும் அடுத்தது அப்பரின் ஐந்தாம் திருமுறை 9 ஆம் பதிகம். இதில்

84 ஓத மால்கடல் பாவி உலகெலாம் மாதரார் வலங்கொள் மறைக்காடரோ: (இருள்நிறக்கடலில் ஓதம் பரவி, உலகிலுள்ள மாதரார் வலங்கொள்ளும் மறைக்காடரோ; மால் = இருள்)
85 பூக்கும் தாழை புறணி அருகெலாம் ஆக்கம் தானுடை மாமறைக்காடரோ (பூக்கின்ற தாழைப் புறணியின் அருகெல்லாம் ஆக்கமுடைய மறைக்காடரோ. புறணி = exterior)
86 புன்னை ஞாழல் புறணி அருகெலாம் மன்னினார் வலங்கொள் மறைக்காடரோ (புன்னை, ஞாழற் புணியின் அருகெல்லாம் நிற்பவர் வலங்கொள்ளும் மறைக்காடரோ.)
87 அட்ட மாமலர் சூடி அடும்பொடு வட்டப் புன்சடை மாமறைக் காடரோ நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் இட்டமாக இருக்குமிடதே (எட்டு மாமலர்கள் சூடி அடம்பின் கொடிப்பூ வட்டமாய் அணிந்த புன்சடை மாமறைக்காடரோ. புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நெய்தல், பாதிரி, அலரி, செந்தாமரை என்ற 8 மலர்கள் இங்கே பேசப்படுகின்றன. அடும்பு = அடம்பு. Ipomaea biloba. இதைக் கடலிப்பூ (Adamba glabra) என்று கொள்வாருமுண்டு. 8 மலர்களும் கழிக்கானல் நிலப்பகுதியில் உப்பிலா இடங்களில் வளரலாம்.)
88 நெய்தல் ஆம்பல் நிறைவயல் சூழ்தரும் மெய்யினார் வலங்கொள் மறைக்காடரோ (நெய்தல், ஆம்பல் நிறைந்த வயல்களில் சூழ்தரும் நம்பிக்கையாளர் வலங்கொள்ளும் மறைக்காடரோ. நெய்தல் =
Phyllanthus emblica, ஆம்பல் = Nymphaea pubescens, பல்வேறு அல்லிகளின் பொதுப் பெயர்.)
89, 90 மறைக்காடரோ
91 சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்வாய் வங்கமார் வலங்கொள் மறைக் காடரோ (சங்குகள் வந்து அலைக்கும் தடத்தில் கானலின் வாயருகே பல்வேறு கப்பல்கள் வலங்கொள்ளும் மறைக்காடரோ. கானல்வாய்க்கு அப்புறம் கப்பல்கள் உள்ளே வரமுடியாது. ஏனெனில் ஆழம் பற்றாது.)
92 மறைக்காட்டான்

என்ற குறிப்புக்களே தொடர்புள்ளவை, இதற்கடுத்தது 5 ஆம் திருமுறையின் 10 ஆம் பதிகம். இதைப்பாடியே மறைக்காட்டுத் திருக்கதவை அப்பர் திறக்கச் செய்கிறார். மூடப்பழக்கத்திற்கு எதிர்முயற்சி இங்கோர் அருளாக விவரிக்கப் படுகிறது. நம்பிக்கையிலார் இதை மாகை (magic) என்பார். எதுவென்பது முகன்மையில்லை. அவரவர்க்கு அவரவர் புரிதல். இப்பதிகமே மறைக் காட்டில் சமயக் குரவர் முதலிற் பாடியதாகலாம். இந்தப் பத்துப்பாட்டும் பாடிய பின்னரே கருவறைக்கதவு திறந்ததென்பது சமயப் பதிவு. ஆனால் மீள அதைத் திருக்காப்பிடச் சம்பந்தர் ஒருபாட்டே பாடுவார். மற்ற ஒன்பதும் சிவனைப் போற்றியே வரும். கதவைத் திருக்காப்பிடுதல் பற்றி ஒன்றுமிருக்காது. 10/1 என்ற இந்தப் பாட்டுவீதம் தான் அப்பரைக் கேள்விக்குள்ளாக்கும்.

அப்பர் செயினத்திலிருந்து காபாலிக வழியால் சிவநெறிக்குள் வந்தவரென்றே ஆய்வாளர் சொல்வர் .சம்பந்தரோ மாவிரதியெனும் காளாமுகநெறியில் வளர்க்கப் பட்டவர். இரண்டுமே பாசுபதத்திலிருந்து உருவானவை. காபாலிகருக்கும் காளாமுகருக்கும் விட்டும் தொட்டும் உறவுகளுண்டு. இங்கே முன்குடுமியார் வேதநெறியில் ஆட்பட்டு கதவு திறக்க மறுத்துள்ளார். அதை மீறி நாவுக்கரசர் பாடுகிறார். பத்துப்பாட்டு பாடிய பின்னரே முன்குடுமியார் இறைவன்தூண்டலால் மனம்மாறிக் கதவுதிறக்க ஒப்புகிறார். ஆனால் சம்பந்தர் ஒரு பாட்டுப் பாடியவுடனேயே அதை அன்றாடம் திருக்காப்பிடவும், மறுநாள் திருத்திறப்பு செய்யவும் முன்குடுமியார் ஒப்புக்கொள்கிறாரெனில் அதற்கென்ன பொருள்? இறைவன் தம்மீது குறை கண்டானா? அன்றேல் முன்குடுமியார் சம்பந்தர் பக்கம் சார்பு கொண்டாரா? வேறேதேனுங் காரணமா? - என்று இக்கிழவருக்கு மனம் அலைபாயத் தானே செய்யும்? கண நேர வருத்தம்.

நாவுக்கரையர், சம்பந்தரின் திறனும் நேர்த்தியும் புகழும் அறிந்தவரானதால், இங்கே பொதிவான பார்வை கொள்கிறார். எது எப்படி இருந்தாலென்ன? பொது மக்களுக்குக் இறைவனின் காட்சி கிடைக்கும் படி மறைக்காட்டு வழக்கத்தை மாற்றியாகி விட்டது. இனித் தமிழுக்கு முன்னுரிமை கிட்டுமென அமைதி கொள்கிறார். எல்லா இயக்கங்களும் இப்படித்தான் தம்மைத் தாமே கிடுக்கங் (criticism) செய்து கொள்ளும். ஓரளவு விட்டுக்கொடுத்தல் இன்றேல் முகன (main) வெற்றிகளைப் பெறமுடியாது. கொஞ்சமாவது மூங்கில் போல் வளைந்து கொடுக்க வேண்டும். Stiff resistances do not take a movement anywhere. Here and there, little bit of compromises are essential to achieve broad objectives. One can always improve at a later time. இதைத்தானே விடுதலைப்போராட்டத்தில் காந்தி செய்தார்?
.     
93 மண்ணினார் வலம்செயும் மறைக்காடரோ கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே. (மண்ணிலுள்ளோர் வலம் செய்யும் மறைக்காடரே உமைக்காணக் கதவைத் திண்ணமாகத் திறந்து அருள்செய்மினே. அப்பர் காலத்திற் கருவறை திறக்காத நிலையிலும் பொது மக்கள் கருவறையை வலஞ்செய்து கொண்டிருந்தார் என்பதே இதில் முகன்மைச்செய்தி. இப்படிநடப்பது ஒன்றும் புதிதில்லை. நானறிய இன்னொரு கோயிலிலும் இன்று வரை இப்படி நடப்பதை என் ”சிலம்பின் காலம்” நூலில் கண்ணகி கோயில் பற்றிச் சொன்னபோது விவரித்திருப்பேன்.

கொடுங்களூரில் இன்றுள்ள பகவதிகோயிலே பெரும்பாலும் செங்குட்டுவன் கட்டியதாகும். (”சிலம்பின் காலம்” நூலைப் படியுங்கள்.) வழக்கம்போல் இங்கிருந்த இப் பழஞ்சிறுகோயில் காலவோட்டத்தில் பெரிதாகியிருக்கலாம். தேனி தாண்டி, மலையிலுள்ள மங்கலாதேவி கோயில், குட்டுவன் கட்டியதல்ல. அது பெருஞ்சோழர் காலக் கோயில். கொங்கு வஞ்சியே சேரர் தலைநகரென்பதையும் நான் ஏற்க மாட்டேன். எங்கோ சேரலத்தில் கொடுங்களூருக்கு அருகில் குடவஞ்சி இருக்கிறது. இன்றும் அது தொல்லியல் வழியே அறியப்படாதுள்ளது. இது பற்றி என் நூலிற் பேசியுள்ளேன். கண்ணகி கோயில் ஏற்பட்ட பின், ”அவள் படிமம் கொடுங்களூர்க் கோயிலில் இருக்கும் வரை தன் குலத்திற்கு உலகிலிழுக்கு” என்றெண்ணி வெற்றிவேற்செழியன் அதை வௌவிக் கொண்டு வந்து விடுவான். இதை அகம் 149 இல் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பதிவு செய்துள்ளார். (இப்பாடலுக்கு அப்புறமும் சிலம்பை 5/6 ஆம் நூற்றாண்டென்பாருக்கு எப்படிப் புரியவைப்பது?)

இதன்பின் கருவறை வெற்றாக இருக்கக் கூடாதென எல்லாப்பக்கமும் அடைத்து இன்னொரு படிமத்தை அருகிலெழுப்பி இன்றும் சேரலத்தில் வழிபாடு நடக்கிறது. எக்காலத்தில் இது நடந்ததென யாருக்குந் தெரியாது. கோயிலுக்குள் போன போது மூடிய கருவறையைப் பார்த்து விட்டு, நானுங் கூடப் புதிய பகவதி படிமத்தை வணங்கி வந்தேன். ஒருமுறை கொடுங்களூர் போய் வாருங்கள் உங்களுக்கும் நான் சொல்வது புரியும். மங்கலாதேவி கோயிலுக்கு போக விழைவோர் கொடுங்களூர் கோயிலுக்கு போகாதிருப்பது சரியல்ல கொடுங்களூரைப் போல் கருவறை மூடி வேறுவழியில் வழிபாடு தொடர்வது திருமறைக்காட்டிலும் நடந்துள்ளது. எப்பொழுது கருவறை மூடப்பட்டதென்ற விவரம் நமக்குத் தெரியாது. ஆனால் மூடிய கருவறையைத் திறக்க வைத்து அப்பரும் சம்பந்தரும் ஆகம வழிபாட்டை மீட்டிருக்கிறார். யாகம் நடத்தி வழிபாடு செய்யும் முன்குடுமியார் பழக்கம் பின்னால் மாறியிருக்கிறது. .     

94. ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் நீண்ட மாக்கதவின் வலி நிக்குமே (மாக்கதவின் வலி நீக்குமே என்றதால் பூட்டில் சிக்கலில்லை. தாழில் தான் சிக்கலென்பது புரிகிறது. தாழ்க்கோல் நகராது கணுக்கத்தில் - connection - மாட்டிக்கொண்டு இருந்தது போலும்.).

95 இக்கதவம் திறப்பிம்மினே

96 அரிய நான்மறை ஓதிய நாவரோ பெரிய வான்புரம் சுட்ட சுவண்டரோ விரிகொள் கோவண ஆடை விருத்தரோ பெரிய வான் கதவம் பிரிவிக்கவே (நான்மறை ஓதிய நாவரோ, திரிபுரங்கள் சுட்டெரித்தவரோ, கோவண ஆடை உடுத்திய பெரியவரோ, எல்லோரும் அறிய இவ் வான்கதவை பிரிவிக்கட்டும்..இங்கும் தாழ் பற்றியே உணர்த்தப்படுகிறது.)

97 தொலைவிலாக் கதவம் துணை நீக்குமே (தொலையாத கதவத்தின் துணையை நீக்குமே)

98 பூக்கும் தாழை புறணி அருகெலாம் ஆக்கும் தண்பொழில் சூழ்மறைக் காடரோ ஆர்க்கும் காண்பரி யீரடி கேள் உமை நோகிக் காணக் கதவைத் திறவுமே. (இந்தப்பாட்டின் முதன் மூன்றடிகள் அப்படியே 5-9-85 இல் வருவன.)

99 இந்த மாக்கதவம் பிணி நீக்குமே (கதவின் பிணி நீக்குமே)

100 மாறிலாக் கதவம் வலி நீக்குமே (இதுவரை எந்த மாற்றமும் கொள்ளாத கதவத்தில் வலி நீக்குமே)

101 திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே (திண்ணமாய்க் கதவம் திறப்பிம்மினே. திறத்தல் தன்வினை; திறப்புதல் என்பது பிறவினை. எனவே ”திருவருட் செல்வர்” திரைப்படத்தில் நாம் பார்த்ததுபோல் இதுவொன்றும் (சினிமாத் தனத்தோடு) ”படார்” என்று தாழ் வெடித்து திறந்ததில்லை. (இருந்தாலும் தமிழரைத் திரைப்படங்கள் பெரிதும் ஆட்படுத்தி வைத்துள்ளன.) என்று பாடிய பின்னால், “இப்பொழுது போய்த் திறவுங்கள், கதவுதிறக்கும்” என்று சொல்லி, ஆட்களையனுப்பி, மாந்த முயற்சியோடு பிறவினையாகத்தான் இது நடத்தப் படுகிறது. ஆழ்ந்து ஓர்ந்தால் இதுவொன்றும் மாகையில்லை. எல்லாரும் சேர்ந்தெடுத்த, சமயக்குரவர் தூண்டிய நம்பிக்கை/முயற்சி மட்டுமே இங்கு விவரிக்கப்படுகிறது. மூதிகம் எழுப்பும் ‘பௌராணிகரே’ பொதுமக்களிடம் இதை மாகைபோற் சொல்வர். நடந்ததைப் புரிந்து கொள்ள இப்பாட்டில் வரும் திறப்புதலென்ற ஒரு பிறவினைச்சொல் போதும்.)

102 கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே (கண்ணால் உமைக்காணக் கதவினை திண்ணமாய்த் திறக்க அருள் செய்யுங்கள்.) 

103 சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கதவம் திறப்பிம்மினே.(சுரக்கும் புன்னைகள் = முன்னாற் சொன்ன மூக்குற்றிச் சுரபுன்னை (Rhizophora mucronata); கண்டலார்ச் சுரபுன்னை (Rhizophora candelaria) என்ற இரு சுர புன்னைகளும் குறிக்கப்படுகின்றன.

அடுத்து  6 ஆம் திருமுறை 23 ஆம் பதிகத்தில் 232-241 ஆம் பாடல்களில் மறைக்காடும், 233 இல் திருப்பாசூரும், 236 இல் திருவண்ணாமலையும், 237 இல் அகத்தியான்பள்ளியும், திருக்கோடியும், திருவாரூரும், 238 இல் திருப்பருப்பதமும், 239 இல் திருவெண்காடும் குறிப்பிடப்படும். 236 இல் தான் அப்பரின் கூற்றுகளில் புகழ்பெற்றதொரு கூற்றான “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்ற வாசகம் வரும். 240 இல் ”முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” என்ற கூற்று வரும். இக்கூற்றுகள் இங்கு வந்ததற்குப் பெருங்காரணம் பெரும்பாலும் முன்குடுமியாரை அமைதிப்படுத்துங் காரணம் தான். தமிழிலும் இறைவனைத் தொழலாம், நான்மறை மட்டும் வழியில்லை” என்று இவற்றின் வழி சோழியர்க்குப் பொதிவாக (positive) உணர்த்துகிறார்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, September 29, 2018

மறைக்காடு - 6

அடுத்தது மூன்றாந் திருமுறையில் வரும் 76 ஆம் பதிகம். இதில் மறைக் காட்டின் சங்கத மொழிபெயர்ப்பான திருவேதவனம் என்பது எல்லாப் பாடல்களிலும் வரும்.. அதாவது தேவார காலத்திற்கு முன்னரே மறைக் காட்டின் பொருள்மாறி வேதத்தோடு தொடர்புறுத்தத் தொடங்கி விட்டார். எனவே முன்னுள்ள பொருளைச் சங்க நூல்களின் வழியும், தேவாரப் பாடல்களில் உள்ளூறிக் கிடக்கும் வேதம் தவிர்த்த காலம், இடம் சார்ந்த சூழ்நிலைகள் வழியும் தான் காணவேண்டும். வேதமென்று சொல்லிவிட்டால் அப்புறம் இக்கட்டுரைத் தொடரே தேவையில்லை. சமயஞ் சார்ந்த மீமாந்தத் தொன்மக் குறிப்புகளே போதும், அது வேண்டாமென்று தானே இவ்வளவு தேடுகிறோம்? மூன்றாந் திருமுறையின் 76 ஆம் பதிகம் ஓதத்தில் வருவதுபோல் ஏறி யிறங்கிச் சந்தம் தவழ்ந்து துள்ளியோடும்.

814 ”புவிமேல் மற்பொலி கலிக்கடல் மலைக்குவடு எனத் திரைகொழித்த மணியை விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை மார்கவரும் வேதவனமே:” (புவிமேல் மற்பொலிவது போல் சத்தமிடுங் கடல் மலைக்குவடு போல் திரை கொழித்துவரும் முத்தை, பவளத்தை: விற்பொலி போன்ற நுதலும் கொடியிடையும் கொண்ட கணிகைமார் கவர்ந்துகொண்டு போகும் வேத வனமே. இதுபோன்ற வரியெழுத 12 வயதிற்கும் குறைவான ஒரு சிறுவனால் முடியுமா? சற்று ஓர்ந்துபாருங்கள். எனவே இந்தப் பாட்டிற்கென மறைக்காடு வருகையில் பெரும்பாலும் சம்பந்தர் பதின்பருவம் தாண்டிவிட்டாரென்றே சொல்லத் தோன்றுகிறது. ”கழிக்கானலில் எப்படி மலைக்குவடு போல் திரைகள் எழுந்தன?” என்றால் அதைப் புரிந்துகொள்ளச் சற்று பட்டறிவு வேண்டும். நிலத்துக்கருகில் திரளென்பது வெறும் மடிப்பாகத் தோற்றம் அளிக்கும். கடல்நோக்கிப் படகிற் போகையில் திரளுயரம் கூடி வரும். குறைந்தது 300/400 மீட்டர்கள் கடலுள் போனால் மலைக்குவடு போல் திரள் ஏறியிறங்கித் தோற்றும். மணி=முத்து, பவளம். இரண்டும் வெறும் சுண்ணாம்பு தான். ஆனால் ஒன்று சிவப்பு நிறமும் இன்னொன்று வெள் நிறமுங் கொள்ளும். சிலபோது வெள்ளைக்கும் கருப்பிற்கும் நடுவே பல்வேறு சாம்பல் நிறங்களையுங் கொள்ளும்.

815 ”வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார் வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே” (வண்டுகள் இரையும் நிழற்பொழிலின் குருக்கத்திகள் மீது நெருங்குகின்ற தென்றல் மணங் கமழவும், வெண் திரைகள் கொண்டுவந்த செம்பவளத்தை உந்தியும் மொழிகின்ற கடலுங் கொண்ட வேதவனமே. ஓதவோசை இங்கொரு மொழியாகவே தென்படுகிறது.)

816 ”நெடுமாட மறுகில் தேரியல் விழாவின் ஒலி திண்பணிலம் ஒண்படக நாளும் இசையால் வேரிமலி வார்குழல்நன் மாதர்இசை பாடல்ஒலி வேத வனமே” (நெடிய மாடங்கள் இருக்கும் மறுகில் தேர் ஓடும் விழாவின் ஒலியும், திண்ணிய சங்கின் ஒலியும், முழுவின் ஒலியும் வேரிமலி வார்குழல் கொண்ட மாதர்களின் இசைப்பாடல் ஒலியால் நிறைந்துள்ள வேதவனம் இங்கு பேசப் படுகிறது. இப்பதிகம் பாடிய நாளில் தேர்த்திருவிழா நடந்தது போலும். பல்வேறு ஒலிகள் இங்கு சொல்லப்படுகின்றன. மாடமறுகு என்பதால் மறைக்காட்டு ஊர் அன்றும் ஓரளவு பெரியது போலும்.)

817 ”ஊறுபொரு ளின்தமிழ் இயற்கிளவி தேருமட மாதருடனார் வேறுதிசை ஆடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே” (மனத்திலூறும் பொருளைச் சொல்வதற்கு தமிழின் இயற்கிளவி தேரும் மட மாதருடன் வேறு திசைகளில் இருந்துவந்த வெளிநாட்டவர் சேர்ந்து பாட, இசைத்தேரும் எழிலான வேதவனம். பதின்பருவத்து இளைஞனின் இக்குறிப்பு மிக முன்மை யானது. சம்பந்தர் காலத்தில் திருமறைக்காட்டில் வேற்று நாட்டவரும் இருந்தார். அப்படியெனில் சம்பந்தர் காலத்திலும் கோடிக்கரையில் ஏற்றுமதி இறக்குமதி நடந்தது புரியும். துறைமுகக் கட்டுமானமும் கோட்டையும் அப்பொழுது கூட உறுதியாய் இருந்திருக்கும். முன் நாம் நினைத்ததுபோல் வெளியன் கோட்டை அழியவில்லை. ஏதோ உருவில் அது இருந்துள்ளது. கோட்டைக்கு வெளியே புறஞ்சேரியில் ஆண்களும் பெண்களும் இசைபாடிக் களித்திருக்கிறார். சங்கதமும், பாகதமும், வேறு பல மொழிகளும் ஊடே நிலவி யிருக்கலாம். இதுவொரு நகர நாகரிகக் கூறு. வரலாற்றின் ஒரு பக்கத்தை இப்பாட்டு நமக்குச் சொல்கிறது. ”கோட்டையை, கோடியை மறைக்குங் காடு மறைக்காடு” என்ற கருத்து மேலும் உறுதி பெறுகிறது. (தேவாரப் பாடல்கள் வெறும் சமயப்பாடல்களல்ல. அவற்றால் வரலாற்றையும் நாம் புரிந்து கொள்ளலாம்.)

818 ”வேதவனம்” = மறைக்காடு

819 ”சோலையின் மரங்கள் தொறும் மிண்டியின வண்டுமது உண்டு இசைசெய வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே”: (சோலையின் மரங்கள் தொறும் மிண்டும் வண்டினங்கள் தேனையுண்டு இசை செய்ய, கப்பல் போன்ற சுறவங்களையும், கடற்சங்கு ஒலியையும் கொணரும் வேதவனம் இங்கு பேசப்படுகிறது. வங்க சுறவம் = கப்பல் போன்ற சுறாமீன். அது கழிக்கானலுக்குள்ளும் ஆழத்தைப் பொறுத்து வரலாம். பல்வேறு ஆட்கள் பண்டங்களை ஏற்றிக்கொண்டு படகுகளில் போய் வந்து கொண்டிருக்கிறார். எனவே கடலிற் சங்கொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.)
.
820 ”கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயில விஞ்சக வியக்கர்முனி வக்கண நிறைந்துமிடை வேதவனமே”: (கிளிபோன்ற இதழ் கொண்டு, செங்கனியூறிய செவ்வாய்கொண்ட பெண்கள் பாடல்பயில, சிறப்பான இசை பாடத் தெரிந்த முனிவர் கூட்டம் நிறைந்து மிடையும் வேத வனமே. ஒருபக்கம் மாணவிகள் பயில, இன்னொருபக்கம் இசையாசிரிய முனிவர் சொல்லிக் கொடுக்கிறார்.)

821 ”நிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே” (நிதி கொடுப்பவர் நிறைந்த பதி வேதவனம்.)

822 ”காசுமணி வார்கனக நீடுகட லோடுதிரை வார்து வலைமேல் வீசுவலை வாணர் அலை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே”: [நீண்ட கடலோடு திரைவாரும் துவலைமேல் வலைவீசும் வாணர்கள் அலைவாரிகளுக்காக காசு, மணி, கனகம் என்று விலைபேசும் வேதவனம். 7 ஆம் நூற்றாண்டு என்பது பண்டமாற்றுக் காலமல்ல காசு, முத்து, தங்கம் போன்றவை செலாவணியை நிருணயித்த காலம். அலைவாரிகள் = அலைகடலிற் பெறும் பண்டங்கள். திருமறைக்காட்டில் அருமையான விலைபேசும் வாய்பகரம் (வியாபாரம்) நடந்துகொண்டிருக்கிறது. ஊர் பெரியது தான்]. 

823 ”வேதவனம்” = மறைக்காடு

அடுத்து அப்பரின் திருமுறைக்குள் போகுமுன் அப்பருக்கும் சம்பந்தருக்கும் ஆன வாழ்நாட் காலத்தை அறியவேண்டும். இதை முற்றிலும் உறுதிசெய்ய முடியாவிட்டாலும் ஓரளவு ஊகிக்கலாம். அப்பரின் காலம் மகேந்திர பல்லவனோடு தொடர்புடையது. வரலாற்றுச் செய்திகளின் படி அவன் ஆட்சி கி.பி. 600-630 இலும். அவன் மகன் ஆட்சி கி.,பி. 630-668 இலும் நடந்தது. மத்த விலாசப் பிரகாசம் போன்றதோர் அங்கத நாடகத்தை கேலி, நக்கலோடு இளமையில் எழுதுவதே யார்க்கும் இயல்பு. எனவே மகேந்திரவர்மன் சிவ நெறிக்குள் வருமுன் குறைந்தது 5 ஆண்டு காலமாவது செயினனாய் இருந்திருக்கலாம். மகேந்திரன் காலத்திற் பொருந்தி, நடுவயதில் மருள் நீக்கியார் என்ற தருமசேனர் செயினத்திலிருந்து சிவநெறிக்கு மாறி நாவுக்கரசர் ஆனாரென்றும், இறைவனடி சேர்ந்தது நரசிம்மன் காலத்தில் என்றுஞ் சொல்வர். தவிர, 75 அகவையாவது நாவுக்கரசர் வாழ்ந்திருப்பார் என்பதும் சமய நம்பிக்கை.

2 சமயக்குரவரும் திருமறைக்காட்டிற்கு முதலில் வந்தபோது சம்பந்தருக்கு 12 வயதிருக்கலாம். (அவர் பாட்டைப்படித்தால் பதின்பருவம் தொட்டது போல் தான் தோற்றுகிறது.). அடுத்த 3,4 ஆண்டுகளில் சம்பந்தர் இன்னும் 3 முறையும், நாவுக்கரசர் 4 முறையும் மறைக்காட்டைப் பற்றிப் பதிகம் பாடுவார். இது நடக்கக் குறைந்தது 2 ஆண்டுகளாகலாம். எனவே நாவுக்கரசர் தன் 72/73 ஆம் அகவையில் திருமறைக்காட்டிற்கு முதலில் வந்தாரெனலாம். ஏரணம் பார்க்கின் பெரும்பாலும் கி.பி. 560-635 என்பதே, நாவுக்கரசரின் வாழ்வுக் காலம் ஆகும். அவர் சிவநெறிக்குள் நுழைந்தது பெரும்பாலும் கி.பி.605. முதன் முறை மறைக்காட்டிற்கு வந்தது கி.பி 632. அப்படியெனில்; சம்பந்தரின் பிறப்பு கி.பி.620. மேற்கொண்டு பல தரவுகளைப் பொருத்தினால், கருதுகோள்களைக் குறைத்துக் காலக்கணிப்பை மேலும் சீர்ப்படுத்தலாம். இப்புரிதல் மறைக்காட்டின் பாடற்காலத்தை ஓரளவு தெளிவுபடுத்தும்.

பல்லவர் சிவநெறிக்குள் நுழைந்துவிட்டார். தெற்கே பாண்டியரோ செயின நெறிக்குள் இருந்தார். சோழநாட்டிற் பாதி பல்லவரிடம். மீதி பாண்டியரிடம் இருந்திருக்கலாம். வேதநெறியோடு ஆகமங் கலந்து தமிழகமெங்கும் சிவ நெறி எழுந்து கொண்டிருந்தது. இவ்வியக்கத்தை நடத்தியோர் சம்பந்தரும் நாவுக்கரசரும் தான். அளவிற்கு மீறியும் இயக்கத்தில் வேதநெறி கலந்துவிடக் கூடாது. எனவே தமிழென்ற பேச்சு திரும்பத் திரும்பப் பாடல்களுக்குள் வரவேண்டும். அப்போதுதான் பாகதங் கூடிய செயினமும் சாக்கியமும் பின்னடையும். இப்பரப்புரைக்குப் பலனிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் பாகதம் முதலென்று போக்கு பல்லவரிடம் மாறியது. சங்கதம் முதலிலும், தமிழடுத்தும் அவராட்சியில் முன்னுரிமை பெற்றன. (பல்லவராட்சியில் தமிழ் இரண்டாம் இடத்தையே பிடித்தது. இன்றோ மூன்றாமிடம். ஆங்கிலமும், இந்தியும் முதலிரண்டு இடத்தைப் பெறுகின்றன. எத்தனை தமிழர் இது பற்றிக் கவலுறுகிறோம்? பெருமளவு செயினத்தையும் சாக்கியத்தையும் சமயக் குரவர் நேரடியாய்த் தாக்குவாரெனில் அதற்கோர் அரசியல் காரணம் இருந்திருக்க வேண்டுமே? இப்பின்புலத்தோடு தேவாரப் பதிகங்களைப் படித்தால் பலவும் தாமாகப் புரியும். .

அன்புடன்,
இராம.கி.

Friday, September 28, 2018

மறைக்காடு - 5

அடுத்தது சம்பந்தரின் இரண்டாம் திருமுறை 91 ஆம் பதிகம். மறைக்காட்டுப் பெயர்ச் சிக்கலுக்கு விடைசொல்லும்படியான பதிகம். இதைப் படித்தபிறகு தான் நான் தெளிந்தேன்.

984 ”பொங்கு வெண்மணற் கானல் பொருகடல் திரைதவழ் முத்தம் கங்குல் ஆரிருள் போழும் கலிமறைக் காடமர்ந்தார்” [வெண்மணற் கானலைப் பொருதும் பொங்குகடலின் திரையில் தவழ்ந்துவந்து தன்னுடைய ஒளியால் கங்குலின் ஆரிருளைப் போழும் முத்தோடு, (சலசலவென கலியோசை யெழுப்பும்) மறைக்காட்டில் அமைந்தவர். இங்கே கானலுக்கும் கடல்நீருக்கும் இடையிருக்கும் வெண்மணல் சொல்லப்படுகிறது. திரை=திரள். முன்னொரு பாட்டில் சொல்லிய நீர்மடிப்பு இதுவாகும். இதை அலையென்று புரிந்து கொள்ளக் கூடாது. சற்று வேறுபட்டது. கழியில் திரளையே காணமுடியும். திரையில் தவழ்ந்துவந்த முத்தம் நிலவொளியை மறுபலித்து (ப்ரதிபலித்து) ஆரிருளைப் போழுகிறதாம். போழுதல் = பிரித்தல். வள்ளுவத்தில் ”போழப் படா முயக்கு” என்று பிரிக்கப் படாத. தழுவலைச் சொல்லி ஒரு நயத்தக்க குறள் வரும். சம்பந்தர் பாட்டெழுந்த காலம் முழு நிலவு துலங்கிய காலம் (பூரணைக் காலம்) போலும். கலி= துள்ளியொலிக்கும் சிற்றலை யோசை. எல்லாக் கழிகளிலும் கேட்கும். கலிப்பாட்டு= தூள்ளோசைப் பாட்டு. இற்றை இசைப்பாட்டுக்களிற் பலவும் -குறிப்பாய்க் ‘கானா’ப் பாட்டுகள்- கலியோசையில் எழுபவையே.]

985 ”கானலங்கழி ஓதம் கரையொடு கதிர்மணி ததும்பத் தேனலங்கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே” (கானலங்கழியின் ஓதத்தால் கரையொடு ஒளிவிடுகிற முத்து வெளிப்பட தேன்மணங் கமழும் சோலை கொண்ட திருமறைக்காட்டில் அமர்ந்தாரே. கதிர்மணி = ஒளிவிடும் முத்து. 964, 965 ஆகிய இரு பாட்டுக்களிலும் திருமறைக்காடருகே முத்துக் கிடைத்தது பெரிதும் பேசப்படுகிறது.) 

986 ”கலிமறைக் காடமர்ந் தாரே” (கலிக்கும் மறைக்காடு மட்டுஞ் சொல்லப் படுகிறது)

987 ”ஏழை வெண்குருகு அயலே இளம்பெடை தனதெனக்கருதித் தாழை வெண்மடற் புல்கும் தண்மறைக் காடமர்ந்தார்” (இதுவரை மறைக்காட்டின் தாவரங்களையே பேசிய சம்பந்தர் இப்பாடலில் ஒரு பறவை பற்றிப் பேசுகிறார். பொதுவாக கழிக்கானல்களில் பறவைகளின் வருகை மிகுதி. பறவைகளைப் பார்ப்பதற்கே பிச்சாவரம் போவோருண்டு. ”எளிய வெண் நாரை தன்பக்கத்தில் தன் இளம்பெடை உள்ளதென்று கருதி தாழைவெண் மடலைத் தழுவிக்கொள்ளும் தண்ணிய மறைக்காடு அமர்ந்தார்” என்பது நல்லதொரு கற்பனை. தாழையின் வெண்மடல் குருகின் இளம்பெடைக்கு உவமை ஆகிறது.. தாழை மறைக்காட்டில் இருக்கவேண்டுமெனில் கொஞ்சமே உப்புக் கலந்த நந்நீரும் கழிக்குப் பக்கத்தில் உள்ளதென்று பொருளாகிறது. இதைச் சுந்தரரும் உணர்த்துவார்..)

988 ”மரவநீடுயர் சோலை மழலை வண்டு யாழ்செயு மறைக்காட்டு இரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெனல் ஆமே” [இது முகன்மையான குறிப்பு. மரவு/மரவம்.மரை என்பது இங்குள்ள ஒரு தாவரத்தையும் குறித்திருக்கிறது. மரவம் நீடுயர்ந்த சோலையும், மழலை வண்டு யாழ் செய்யும் மறைக் காட்டில் இரவிலும் காலையிலும், பகலிலும் இறைவனை ஏத்துதல் நல்லதாம். முன் சொன்ன புன்னைகள் போக இன்னொரு அலையாற்றித் தாவரமான மரா/மரவம் (Sonneratia apetala) இங்கே பேசப் படுகிறது. இக் கழிக்கானல் மரவத்தை, (தமிழிலக்கியங்களிற் வேறு கருத்திற் சொல்லப்படும் மரா/மரவம்/மராஅம் ஆன) செங்கடம்பு (Neolamarckia cadamba), வெண்கடம்பு (Mitragyna parvifolia), பயினி (Vateria indica) ஆகியவற்றோடு குழம்பக் கூடாது.

கழிக்கானல் மரவம் போக, கடரிச்சீரா (Ceriops roxburghiana), கூம்புக்காய்க் கொந்தளை (Bruguiera conjugata), உருளிக்காய்க் கொந்தளை (Bruguiera cylindrica), திப்பரத்தைத் தண்டலம் (Lumnitzera racemosa), நெய்தற் கடப்பை (Barringtonia acutangula), கடல்மா உதளை (Carbera odallum), வெள்ளை அலையாற்றி (Avicenna officianalis) என்ற தாவரங்களும் அலையாற்றிக் காடுகளிலுண்டு. இவையும் மேற்சொன்ன புன்னை வகையைச் சேர்ந்தவை தாம். கழிக்கானல்கள் பெரும்பாலும் புன்னையாலும், மரவத்தாலும் பெயரறியப் பட்டன. திருமறைக் காட்டிற்கும் இவையே காரணமாகலாம். இந்த விளக்கம் 19/20 நூற்றாண்டில் எழுந்த விளக்கமாகலாம். மரவம் என்ற தாவரஞ் சிறந்தால் மரக்கானம்; புன்னை சிறந்தால் புன்னையங்கானல், புன்னைக்காயல் என்றமையும். இங்கு மரவம் சிறந்தது போலும். எனவே இதை மரவக்காடு, மரைக்காடு என்று அழைக்கலாம். (தமிழறிஞரில் பலரும் மரை மானைக் குறிப்பிடுவதற்கு நான் பார்த்தவரை எந்த இலக்கியச்சான்றும் இல்லை. வேதம் வழிபட்டது என்று சமயச் சார்பாளர் சொன்னதால், அதற்கு மறுப்புச் சொல்ல முனைந்த தமிழறிஞரிடம் ஏற்பட்ட எதிர்வினையே மான் விலங்கை விளக்குவதாய் உருவான ’மரைக்காடு’ போலும். குமரிக்கண்டம் போல் ’விலங்கை ஒட்டிய மரைக்காடு’ என்ற கருத்து ஏற்பட்டது போலும். அழிந்து போன குமரிநிலம் இருந்தது உண்மை. குமரிக்கண்டத்திற்கு இதுகாறுஞ் சான்றில்லை. எதிர்காலம் எனக்குத் தெரியாது.) 

கழிக்கானல் மரவம் என்பது கடலும் நிலமுஞ் சேரும் சதுப்பிடத் தாவரம். ’பூவா மறைமா (Sonneratia apetata)’ என ச,சண்முகசுந்தரம் (முன்னாள் வனத்துறைத் தலைவர்) தன் “தமிழ்நாட்டுத்தாவரங்கள்” நூலிற் சொல்வார். apetala என்பது அகவிதழ்கள் (petals) இல்லாதைக் குறிக்கும். ”பூவா” எனும் பெயரடையின் பொருளும் இது தான். வங்காளச் சுந்தரவனத்தில் (sunderbans) இது செழிப்பாக வளரும். சென்னை அடையாற்று முகத்துவாரம், பிச்சாவரம் (பிக்கு>பிக்சு> பிச்சு= பிற்றையது/பின்னது. இதுவும் இரு பிறப்பிச் சொல்லே. ஆவரம்= சுற்றி வருதல், மூடுதல் எனவே மறைப்பு. ஆவரணம்>ஆபரணம்= சுற்றிவரும் உடுப்பு, நகை. பிச்சு+ஆவரம்= பிச்சாவரம். ஒருவகையில் பிச்சாவரமும் ஒரு மறைக்காடே), மராக்கானம் (மரவக்கானம். எயிற்பட்டினத்தை மறைத்த மரவக்காடு. எயிற்பட்டினம் இன்றழிந்து, மராக்கானம் மட்டுமே மிஞ்சியுள்ளது. வேடிக்கை பாருங்கள். இதுவுமொரு மரைக்காடே). தவிர முத்துப்பேட்டை அலையாற்றிக் காடுகளிலுள்ள திருமறைக்காடு என முவ்வேறு இடங்களின் அமைப்பு ஒற்றுமை புரிகிறதா? இன்னுமா மறைக்காட்டின் பொருள் புரிய வில்லை? ஏதோவொன்றை மறைக்கிற காடு மறைக்காடு. திருமறைக் காட்டில் கோடிக்கரையின் கோட்டையை ஒருகாலத்தில் மறைத்தது.

கழிமுகச் சதுப்புநிலங்களில் மராமரம் கடல்நோக்கிப் பரவி நிலத்தைக் கெட்டிப்படுத்தும். கெட்டியான இடங்களில் இது வளராது. கடற்பக்கம் வேரோடிப் புதிதாய் விரியும். மொத்தத்தில் கடலைத் தூர்த்து கழனியாக்கும். (எதிர்காலத்தில் ஆழிப்பேரலை, கடல்மட்ட உயர்வு ஏற்பட்டால் தமிழகத்தைக் காப்பாற்ற இக்கானல்களை வளர்க்கவேண்டும். ஊழல் அரசுகள் இதைச் செய்யுமா?) 8-10 மீ. உயரம் வளரக் கூடிய மரா மரத்திற்கு மூச்சுவிடும் குத்து வேர்கள் (pneumatophores) உண்டு. இதன் வெடித்த பழங்களின் சதையிலுள்ள விதைகள் நீரில் மிதந்து சென்று இதர செடிகள் தடுத்து நிறுத்தும் இடங்களில் நிலைத்துப் பின்முளைத்து வேரூன்றி வளரும். இப்படித்தான் இம்மரங்கள் கடல் உட்புகுதலைத் தடுக்கின்றன. சரி. ’மரை’ப்பெயர் இத்தாவரத்திற்கு எப்படி எழுந்தது? மருவுதல்= கலத்தல் நிலமுங் கடலும் கலக்கும் சதுப்பு இடத்தில் வளர்வதால் இவை மரவங்களாயின. மரவக் காடு மராக் கானமான கதையை முன்னாற் பார்த்தோம். முத்துப்பேட்டை வட்டாரத்திலும் இவற்றை மரவக்காடெனலாம். ஆனால் அப்படியொரு பெயருக்கு நேரடிச் சான்று இல்லை. சுற்றிவளைத்து வேண்டுமெனில் இதை உணரலாம். அதேபொழுது அம்மில் முடியும் தமிழ்ப்பெயர்கள் ஐகார முடிபும் மாற்றாகக் கொள்வதால், மரவம் மரையாகலாம். என்னைப் பொறுத்தவரை மரவத் தாவரம் மரை மானைக் காட்டிலும் ’மரைக்காடு’ என்பதற்குச் சரியான காரணமாய்த் தெரிகிறது. தமிழகத்தின் முவ்விடப் பெயர்க்காரணத்தை அது விளக்குகிறது.
       
989 ”மல்கு வெண்திரை யோத மாமறைக் காடது தானே” (பெருகிய வெண்திரை ஓதமுள்ள மாமறைக்காடது தானே).

990, 991 ”மறைக்காடே”

992 ”கண்டலங்கழி யோதம் கரையொடு கதிர்மணி ததும்ப வண்டலங் கமழ் சோலை மாமறைக்காடது தானே”. [கண்டல் நிறைந்த கழியின் ஓதத்தால் கரைகளில் ஒளிவிடும் முத்துக்கள் ததும்ப, வண்டு நிறைந்து மணந்தரும் சோலைகள் கொண்ட மறைக்காடு அதுதானே. இங்கே கண்டல், இன்னொரு வகை அலையாற்றித் தாவரங்களைக் குறிப்பிடுகிறது. பல உரையாசிரியர் இதை முள்ளுள்ள தாழை என்றமைந்து போவர். தாழை எல்லா நெய்தல் நிலங்களிலும் வளர்வது. கழிக்கானலிலும் இருக்கலாம். ஆனால் கண்டல், கழிக்கானல்களில் மட்டுஞ் சிறப்பாய்வளர்வது. துவரிக் கண்டல் (Kandelia kandel. (சிலரிதைக் கண்டலார்ச் சுரபுன்னை-Rhizophora Candelaria என்பர்), நரிக்கண்டல் (Aegiceras corniculatum; Black mangorove) போன்றவையும் அலையாற்றித் தாவரங்கள் தான்.] 

993 ”பெரிய சீர்மறைக்காடே” = திருமறைக்காடு என்பதைச் சீர்மறைக்காடு என்று சொல்கிறார்.

994 ”மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந்தாரை”: (நீருலவும் பொழில்சூழ்ந்த மாமறைக்காடு அமர்ந்தாரை. மை = நீர். உயரோதம் தாழோதம் என்று மாறிமாறி வருவதால் நீர் இங்கே உலாவுகிறதாம்.)

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 27, 2018

மறைக்காடு - 4

அடுத்தது 2 ஆந் திருமுறை 37ஆம் பதிகம். இதைத் காப்பிட்ட பதிகமென்பார். சம்பந்தரும் அப்பரும் மறைக்காடு வந்த போது காலகாலமாய்த் திருக் கோயிலின் கருவறைக்கதவு திறக்கவில்லையாம். கதவின் பூட்டுத் திறந்தாலும் ஏதோ காரணத்தால், தாழ் சிக்கியது போலும். கோயிலுள் நுழைவோரும், மூடிய கருவறையைக் கும்பிட்டு, மற்ற திருமேனிகளைக் தெரியனஞ் (தெரிசனம். இதைத் தர்ஷணம் என்று சங்கதப்படுத்தவேண்டாம். தெரியனம் நல்ல தமிழ்ச்சொல். இறைவன் திருமேனி தெரிவதும், நாம் அதைத் தெரியப்படுத்திக் கொள்வதுமே தெரிசனமாகும். நல்ல தமிழ்ச் சொல்லைக் குத்திக் குதறிச் சங்கதம் ஆக்குகிறோம்.) செய்து போயிருந்தார் போலும். கோயிலைக் கவனித்து வந்த முன்குடுமிப் பார்ப்பார் ”இறைவன் சொல்லாது கதவம் திறக்காதென” யாகம் நடத்தியிருந்தாரோ, என்னவோ?

நாளடைவில் ”தமிழைத் தூக்கிப்போடு, நான்மறை ஓதலுக்கே வலிமை” யென்று ஊரார் மனங்களில் தவறாய் ஊறிப் போயிருக்கலாம். (இன்றுங் கூடத் தமிழெதற்கும் பயன்படுவதாய்த் தெரியவில்லையே? அப்படித் தானே எல்லாவற்றையும் முட்டாள்தனமாய் ஆக்கி வைத்திருக்கிறோம்?) ”தமிழ் சோறு போடுமா?” என்று கேட்கிறோமே? ”தேவார மூவரே வந்துசொன்னால் அன்றித் தேவாரச் சுவடியறை திறக்க முடியா”தெனும் மூடச்சடங்கிற்கு ஆட்பட்டுத் தில்லை மூவாயிரவர் சிற்றம்பலத்தில் அடம்பிடித்திருக்கிறாரே? அதுபோல் இங்கும் இறைவன் மனங்கனிந்தால் அன்றி கருவறை திறக்காது என முன்குடுமியார் விதித்தார் போலும். இதுபோலும் மூடப்பழக்கங்கள் இன்றுஞ் சில கோயில்களிலுண்டு. ஓரிரண்டை இங்கு சொல்வேன்.

இன்றும் அழகர்கோயில் பெரிய கோபுர வாசலை ஏதோவொரு காரணத்தால் திறக்கமாட்டார். அதற்கு அருகிலுள்ள சிறுவாசல் வழிதான் எல்லாப் பற்றாளரும் நுழைகிறார். சிற்றம்பலக் கோயிலில் ஒரு காலத்தில் பொன்னம்பல மேடைக்குள் எல்லாரும் நுழையார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே நுழைய அனுமதியுண்டு. மற்ற பொதுமக்கள் மேடைக்குக்கீழ் நின்றே நடவரசனைக் காணுவர். இப்போது எல்லோரும் காசு கொடுத்துப் போகிறார். எப்போது காசு கொடுத்துப் பார்க்கும் பழக்கமாய் மாறியது? தெரியாது. இவ்வளவு ஏன்? ஓதுவார் பொன்னம்பலமேடையில் நின்று தேவாரம் பாடக் கூடாதென அடம்பிடிப்பும் கூட நடந்தது. நான் அங்கு போய்ச் சிலகாலம் ஆயிற்று. பொன்னம்பல மேடையில் நின்றவாறு இப்போது தேவாரம் பாடப் பெறுகிறதா என்றறியேன். இப்படி வெவ்வேறு மூடப்பழக்கங்கள் நடக்கத் தான் செய்கின்றன.

திருமறைக்காட்டின் மூடப்பழக்கத்தை மாற்ற விழைந்து, தமிழ் நாவுக்கரசரும், தமிழ் ஞானசம்பந்தரும் பாடியதால் பெருங்கதவை திறக்கவும் பின் காப்பு இடவும் முயன்றதே தேவார காலத்து மறைக்காட்டின் சிறப்பாகும். 10 பாடல்கள் பாடி, அப்பர் கருவறைக் கதவைத் திறக்க, ஒரே பாட்டால் சம்பந்தர் அதைத் திருக்காப்பிட்டு விடுவார். 10/1 என்று இந்தப் பாட்டு வீதம் அமைந்தது தான் அப்பருக்குச் சற்றே வருத்தமளித்துவிட்டது போல் தெரிகிறது. ”தம் பத்தியில் ஒருவேளை இறைவன் குறை கண்டானோ?” என அவர் பிணக்குறுவார். அப்பர் பாடலைச் சொல்கையில் இதை விளக்குவேன். இப்போது சம்பந்தர் பாடலுக்கு வருவோம்.

393
"சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும்
மதுரம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா,
இதுநன்கு இறைவைத்து அருள்செய்க எனக்குள்
கதவம் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே"

(சிறப்புக் காரணமாய் இங்கு முழுப்பாடலும் கொடுத்தேன். ”சதுரம் மறை” என்றபிறகு 4 வேதங்கள் தவிர வேறுபொருளுக்கு வழியில்லை. வேதங்கள் இறைவனை வழிபட்டதாய் இங்கு பொருள்கொள்ளத் தேவையில்லை. அப்படிச் சிலர் சொல்வது உண்மையை மறைத்துத் தொன்மம் ஆக்குவது ஆகும். தமிழ்ப்பாடல்களுக்கென்று பொருள்கோள் முறைகளுண்டு. ”சதுரம் மறை துதிசெய்து தான்வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா” என்று இவ்வரியைக் கொண்டால், ”தான்” என்பது வேதநெறி வழி துதி செய்யும் சாத்தாரப் பற்றனையோ (சாதாரண பக்தன்), அல்லது சம்பந்தரையோ குறிப்பது விளங்கும். ”நான்மறை ஓதித் துதிசெய்து தான் வணங்கும், (தேன்நிறைந்த பொழில்சூழ்ந்த) மறைக்காட்டு மைந்தனே” என்பது முதலிரு வரிகளின் பொருளாகும். ”தான் கொண்ட ’கதவம் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தை’ நல்லாதாக்க இறையருள் செய்க” என்பது மீந்த வரிகளின் பொருளாகும். ”சோழியர் மனம் மாறி, நடைமுறை திருத்தி, பொதுமக்கள் திறந்த கருவறை காண, அருள்செய்யுங்கள்” என இறைவனிடம் சம்பந்தர் வேண்டியதாய்க் கொள்ளலாம், வேதநெறி விரும்பிய கோயில் நிருவாகத்தார் கிழவன் பேச்சையும், சிறுவன் பேச்சையும் கேட்பதற்கு இறைவனருள் வேண்டாமோ?) 

394 ”சங்கம் தரளம் அவைதான் கரைக்கேற்றும் வங்கக்கடல் சூழ்மறைக் காட்டுறை மைந்தா” (சங்கும், முத்தும் கரைக்கேற்றும் வங்கக்கடல் சூழ்ந்த மறைக்காட்டு உறை மைந்தா. வங்கக் கடல் என்பதை இக்காலப் பொருள் கொண்டு பார்க்கக் கூடாது. கப்பல்கள் போய் வருங் கடலென்று பொருள் கொள்ள வேண்டும். ”வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை..” என்பது சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முப்பதாம் பாட்டு.).

395 ”குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் மருவும்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா” (குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல் ஆகியவை நிறைந்த பொழில் சூழ்ந்த மறைக்காட்டுறை மைந்தா. இங்கேதான் புதலியற் பார்வை (botanical view) வேண்டும். கடலைத்தடுக்கும் அலையாற்றித் தாவரங்கள் மட்டுமன்றி, அவற்றின் பின்னுள்ள நிலங்கெட்டியாகி வளருந் தாவரங்களும் இங்கு சொல்லப் படுகின்றன. இன்னொரு அலையாற்றித் தாவரம் அடுத்த பதிகத்தில் வரும். குரவம்= குரா, Tarenna asiatica என்பது வறள் முல்லையில் வளரும் பாசிலைச் செடி. இது கோடியக்கரையின் தல மரமுங் கூட. குருக்கத்திகள்= Heptage benghalensis. இதை மாதவிக் கொடிகள் என்பார் http://valavu.blogspot.in/2009/03/5_29.html இல் இதுபற்றி விரிவாயெழுதினேன்.

கழிக்கானற் புன்னைகள் பல உள்ளன. இங்கே நாகப்புன்னையும் (Calophyllum inophyllum). சுரபுன்னைகளும் [மூக்குற்றிச் சுர புன்னை (Rhizophora mucronata); கண்டலார்ச் சுரபுன்னையும் (Rhizophora candelaria)] சொல்லப்படுகின்றன. கண்டலெனும் முள்நிறைத் தாவரங்களும் இங்குண்டு. சுரித்தல்= சேற்றில் திளைத்தல். சுர புன்னை= சேற்றுப் புன்னை. இவை மலையில் வளரும் சுர புன்னைகள் (Mammea suriga) அல்ல. ஞாழல்= Cassia sophera / Senna எனும் புதர்ச் செடி இது கடற்கரைக்குச் சற்றுதள்ளிக் காட்டில் வளரும். புதலியற் பெயர்களைக் கண்டு அதிராதீர்கள். நம்மூர்ப் பெயருக்கும் இதற்கும் தொடர்பு தெரிந்து கொள்வது தேவையானது. நம்மில் பலரும் நம்மூர்த் தாவரங்களில் இருந்து பெரிதும் விலகி வந்து விட்டோம். நம் தமிழ்மரபு குலைவதற்கு அதுவுமொரு காரணம்.)

396 ”படர் செம்பவளத்தோடு பன்மலர் முத்தம் மடலம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா” (படருஞ் செம்பவளத்தோடு பன்மலர் முத்தம் கொண்ட வாய்க்காலும் பொழிலுஞ் சூழ்ந்த மறைக்காட்டு உறை மைந்தா.; இற்றைப் பிச்சாவரத்தில் நாம் பார்ப்பதுபோல் அங்கங்கே ஓதக்கழி வாய்க்காலும், இடைப்பட்ட நிலங்களிற் பொழிலுமாய் மறைக்காடு இருந்ததைத் தெளிவாகச் சொல்கிறார்.)

397 ”வானோர் மறை மாதவத்தோர் வழிபட்ட தேனார்பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா” (வானோர்மறை மாதவத்தார் வழிபட்ட தேன்நிறைந்த பொழில்சூழ்ந்த மறைக்குட்டுறைச் செல்வா. வானோர்மறை= தேவ மறை; இங்கே வேதநெறி பின்பற்றியோர் குறிக்கப்படுகிறார். தேனார் பொழில் என்பதால் பூக்காடு உணர்த்தப்பெறுகிறது.)
 
398 ”பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால் வழிபாடுசெய் மாமறைக்காடா” (பலகாலங்கள் வேதவழியால் உன்பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடுசெய்யும் மாமறைக்காடா. முன் சொன்னபடி வேதநெறியும் ஆகமநெறியும் கலந்தது இற்றைச் சிவநெறியாகும். நெருப்பு வளர்த்தல் என்பது வேதநெறிக் குறியீடு. நீர் சொரிதலும், பூ செய்தலும் ஆகமக் குறியீடுகள் ஆகும். வேதநெறியின் கலப்புக்கூடிய சிற்றம்பல நடைமுறையே பலகாலம் மறைக்காட்டில் இருந்திருக்கலாம். இவ்வாசகத்தின் வழி அப்படியெண்ணத் தோன்றுகிறது. வேத மந்திரங்களால் இறைவன் பாதம் போற்றப்பட்டு, அதேபொழுது ஒவ்வொரு ’போற்றி’க்கும் (’நமக’விற்கும்) மலரால் வழிபாடு செய்யப்பட்டிருக்கலாம். முழு வேதநெறியிலோ ஒவ்வொரு ’போற்றி’க்கும் ஒருசொட்டு நெய்/ஆகுதி ஓமத்தில் இடப்படும்.)
   
399 ”வேலா வலயத்து அயலே மிளிர்வெய்தும் சேயார் திருமாமறைக் காட்டுறை செல்வா” (கடல் வலயத்தின் அயலிலுள்ள சேயாரும் மிளிர் வெய்தும் திருமாமறைக் காட்டுறை செல்வா. வேலை= கடல்; சேயார்= தொலைவிலுள்ளோர்; மிளிர்வு= பெருமை; கடற்கரைக்கு அயலில் உள்ளவரும் பெருமையெய்தும் திருமாமறைக் காட்டுறைச் செல்வா.)

400 ”கலங்கொள்கடல் ஓதமுலாவு கரைமேல் வலங்கொள்பவர் வாழ்த்திசைக்கும் மறைக்காடா” (மரக்கலங்கள் கொண்டு, கடலோதம் உலவும், கரை மேல் வலங் கொள்வார் வாழ்த்திசைக்கும் மறைக்காடா. சம்பந்தர் காலத்திலும் திருமறைக்காடானது வெறும் ஊர்மட்டுல்ல. கலங்கள் கொள்ளும் இடமாய் இருந்துள்ளது. அலையில்லாது ஓதம்மட்டும் இருக்குமிடம்; கரைமேல் கோயிலை வலங்கொள்பவர் மிகுதி.)

401 ”கோனென்று பல கோடி உருத்திரர் போற்றும் தேனம்பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா” [அரசனென்று பலகோடிச் சிவநெறியார் போற்றும் தேனம்பொழில் சூழ் மறைக்காட்டுறைச் செல்வா. உருத்திரரை உருத்திரம் எனுஞ் சிவந்தகொட்டையை (அக்கமணி) அணிந்தோரென்றே பொருள் கொள்ளலாம். உருத்திரம்= அரத்தம், சிவம். ”அரோகரா”வெனச் சிவன் கோயிலிலும், முருகன் கோயிலிலும் சொல்கிறாரே அது ”அரோ அரா” எனுங் கூப்பாடுதான். அதன் பொருள் ”சிவசிவ” என்பதே. முருகனுக்கும் சேயோன் என்ற பெயருண்டு. விண்ணவ நெறியில் வேங்குன்றத்தில் (>வேங்குண்டம்> வைகுண்டம்> வைகுந்தம்) விண்ணவனைச் சூழ்ந்து நிலைத்து நிற்போரை நிற்ற சூழிகள்> நித்த சூழிகள்> நித்யசூரிகள் என்பார். நித்யசூரி என்ற சொல் முற்றிலுஞ் சங்கதமில்லை. அது இரு மொழிகளின் வழிப பிறந்த இருபிறப்பிச் சொல். நம்மூரைச்சேர்ந்த விண்ணவ நெறிச் சொற்களையெல்லாஞ் சங்கதமாக்கி நாமென்ன பயன் தான் கண்டோம்? சூழி(சூரி)களின் அரசன் சூழியரசன் (சங்கதத்தில் சௌரிராசனாகும்). திருக்கண்ணபுரச் சௌரிராசன் மேல் அடியேனுக்கு ஆழ்ந்த ஈடுபாடு. சூழியரசன்போல் இங்கே உருத்திரர் கோன் இருந்ததாய்ப் பொருள் கொள்ளலாம்.]

402 ”வேதம்பல ஓமம் வியந்து அடிபோற்ற ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய்” (வேதமந்திரங்களால் வியந்து பல ஓமங்களில் இறைவனடி போற்றும், ஓதமுலவும், மறைக்காட்டில் உறைவாய். ஒரு பக்கம் வேத மந்திரங்கள் நிறைந்த ஓமங்கள் நடத்தி இறைவனடி போற்றப்படுகிறது. இன்னொரு பக்கம் கடலோத ஓசைகேட்கிறது. ஒன்றிற்கொன்று பின்புலம் ஆகிறது. சிற்றம்பல நடைமுறை மறைக்காட்டில் இருந்தது என்பதற்கு இப்பாட்டும் ஒரு சான்று.) .

403 ”மறைக்காடன்” என்று இறைவன் பெயர் சொல்லப்படுகிறது.

மேலும் மற்ற பதிகங்களைப் பார்ப்போம். அயர்ந்துவிடாமல், கூட வாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 26, 2018

மறைக்காடு - 3

அதற்குமுன் கழிக்கானலில் மரைமான். மரை/ஆ/ஆன் இருந்தனவா என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி பார்ப்போம். மலை 406, நற் 43-3, குறு 235-4, அக 69-8, 107-16, 224-11, 287-4, 373-2, 399-15, புற 27-6 (விலங்கைக் குறிக்காது தாமரையிலை குறிப்பிடப்பட்டது), 170-1 ஆகியவிடங்களில் மரையும், குறு 115-5, 321-5, 363-3, பதி 23-14, கலி 6-1, அக 3-7, புற 297-4 ஆகியவிடங்களில் மரையாவும், மலை 331, 506, குறு 317-1, புற 168-8 ஆகிய இடங்களில் மரையானும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையனைத்திலும் குறிஞ்சி, முல்லை, மருதத்தை ஒட்டியே மரைகள் சொல்லப்படுள்ளன. ஓரிடத்திற் கூட நெய்தற் கழிக்கானலில் மரைமானிருந்தது சொல்லப்படவில்லை. அதேபொழுது சங்க இலக்கியம் சொல்லாததாலே அங்கு அது இல்லையென முடியாது. இன்றுங் கூட கழிக்கானல்களில் பொது மான்களைக் காண்கிறோம். தமக்கு ஊறு செய்யும் விலங்குகள் அங்கிலாததால், கழிக்கானற் சேமத்தையும், தங்களுக்கு இரை கிடைப்பதையும் பொறுத்து மான்கள் அங்கு உலவலாம். ஆனால் மான்கள் அங்குலவுவது முகன்மையாவெனில் நான்பார்த்தவரை சங்க இலக்கியங்களின் வழி அதற்கு மறுமொழி சொல்ல முடியவில்லை. ஒருவேளை மான்கள் அங்கிருந்தது விதப்பான விதயமில்லை போலும்.

தமிழ்நாட்டரசு வருமானத்துறைத் தளத்திலிருந்து நண்பர் ழான் செவ்வியார் (Jean-Luc Chevillard) ஒரு பட்டியலை மின்தமிழிற் கொடுத்தார். அதில் அறிய மறைக்காடு (இது அறியமலைக்காடென்றும் இன்னோரிடத்திற் சொல்லப் படுகிறது. தவிர அ/ஆ, ர/ற குழப்பமும் இப்பெயரில் எனக்குண்டு), எட்டுப் புலிக்காடு, கழுகுபுலிக்காடு, ரெண்டாம்புலிக்காடு, தொண்டிப்புலிக்காடு, பன்னிக்குட்டிக்காடு என்ற சில ஊர்ப்பெயர்களைப் பார்த்தேன். (லி/ளி குழப்பத்தையும் பார்க்கவேண்டும்.) தவிர கரடிக்காடு, ஆக்காடு, எருமைக்காடு என்ற பெயர்களும் மின்தமிழிற் சொல்லப்பட்டன. இப்பெயர்கள் விலங்குத் தொடர்பில் எப்படியெழுந்தன என்ற காரணம் புரியவில்லை. தமிழிற் காடு என்பதற்கு forest என்று மட்டும் பொருளில்லை. கடு>காடு= அடர்த்தி, மிகுதி யென்றும் பொருளுண்டு.. வயற்காடு என்கிறோமே?

பெயராய்வில் சரியான தரவுகள் சேர்ப்பது முகன்மையானது. உரோமன் எழுத்துப்பெயர்ப்புச் சிக்கலோடு ஊர்ப்பெயராய்வை நான்செய்ய விரும்பேன். வலியுள்ள ஆண்விலங்கின் பொதுப்பெயராய் ’ஒருத்தல்/ஓரி’ பெயரை புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்ற விலங்குகளுக்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் 590, 591, 592 நூற்பாக்கள் குறிக்கும். ஒருவகையில் பார்த்தால் விலங்குகளின் பெயரோடு காட்டை இணைத்து ஊர்ப் பெயர் அமையலாம் தான். ஆனால் ’மரைக் காட்டுப்’ பெயரில் உள்ள மரைமானின் சிறப்பென்ன? அதன் கொம்பா? கொம்பில்லாத ஆன்மான் உண்டோ? கொம்பின் வளைப்போக்கிலும் பெரியதொரு காரணம் எனக்குத் தென்படவில்லை. காட்டுக்கும் மானுக்கும் அதென்ன விதப்பு? அதிக எண்ணிக்கையா? மற்ற கழிக்கானல்களிலும் மரைகள் இருக்கையில் குறிப்பிட்ட இக்காட்டிற்கு மட்டும் அப்பெயர் ஏன் வந்தது? What is the uniqueness and significance of Marai at this place? இதனாற்றான் ஓர்ந்து பார்க்கையில் மரைமான் குறிப்பு பெரிதாய் என்னைக் கவரவில்லை. மானைக் காட்டிலும் மரங்களை நாம் பார்த்தாலென்ன? மரப்பெயர்களாலும் தமிழகத்தில் ஏராளமாய் ஊர்களும், காடுகளும் அழைக்கப்படுகின்றனவே?

இனித் தேவாரகாலத்திற்குப் போவோம். சம்பந்தர் 1-22, 2-37,91, 3-76 ஆம் பதிகங்களிலும், அப்பர் 4-33,34, 5-9, 6-23 ஆம் பதிகங்களிலும், சுந்தரர் 7-71 ஆம் பதிகத்திலும் மறைக்காடரைப் பாடுவர். சுந்தரர் பாடலில் யாழைப் பழித்த மொழியம்மை பற்றியும் வரும். மறைக்காட்டின் தலமரம்: சிவனுக்கான வன்னியும் கழிக்கானலில் வளரும் புன்னையும். இங்குள்ள தியாகராசப் படிமம்: புவனிவிடங்கர். எனப்படும். விடங்கர் செய்வது அன்னப்பாத (ஹம்ச பாத) நடம். 7 விடங்கத் தலங்களுள் இதுபோக மற்றவை அருகில் திருவாரூர், திருநள்ளாறு, திருநாகைக் காரோணம், திருவாய்மூர், திருக்கோளிலி, திருக்காறாயில் ஆகியவிடங்களில் உண்டு. அடுத்த பத்திகளில் தேவார மூவரின் 100 பாடல்களில் மறைக்காடு பற்றியும், சுந்தரரின் விதப்பான 10 பாடல்களில் கோடிக்கரை பற்றியுந் தொகுத்துள்ளேன். முதலில் வருவது சம்பந்தரின் 1 ஆம் திருமுறை 22 ஆம் பதிகம். இதில் இறைவன் பற்றிய கூற்றைப் பெரிதும் விடுத்து ஊர்பற்றியே சொல்லியுள்ளேன். திருமுறைப் பாட்டின் எண்ணை முதலிலும், குறிப்பிட்ட வரியை அடுத்தும், விளக்கத்தை முடிவிலும் (பிறைக்குறிக்குள்) தருகிறேன். .

228 "மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம்" (மலையளவு மலிந்ததோ எனும் படி மதிலின் புறந்தழுவிய மறைவனம் - என்பது இதன்பொருள். ஏழாம் நூற்றாண்டுச் சம்பந்தர் காலக் கோயில்கள் பெரும்பாலுஞ் சிறியன. இற்றைக் கட்டுமானம் என்பது பிற்காலப்பல்லவரால் எழுந்தது. நம்மிற் பலரும் இற்றைக் கோயில் பரிமானத்தை வைத்தே பழையதை எண்ணிப் பார்க்கிறோம். அது பெருந் தவறு. பாட்டில் வரும் மதிற் குறிப்பு வெளியன் காலக் கோட்டையையோ, அன்றி அதன் இடிபாட்டையோ குறிக்கலாம். கோட்டைப் புழையில் மலைமலிந்தது போல் மறைவனம் இருந்ததைச் சம்பந்தர் குறிப்பு சொல்கிறது. கோயிலின் ஆகப் பழங்கல்வெட்டு விசயாலயன்மகன் ஆதித்த சோழன் காலத்தது. சம்பந்தர் காலச் சோழன் என்பான் இவனுக்கு முந்தையவன் ஆன, பெயர் தெரியாத சோழன் ஆவான். இவனே நின்றசீர் நெடுமாறனின் மாமனாவான், இவனே பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் தந்தை. இவன் நாக நாட்டானா, வளநாட்டானா? நமக்குத் தெரியாது. பெரிய புராணத்தை ஆழ்ந்து பார்க்கவேண்டும்.

கோட்டை உண்டெனில் அதைக் கவனித்துக்கொள்வார் இருப்பாரே?. பாண்டியில் இவரை அகமுடையாரென்பர். (முக்குலத்தோரில் இவரொருவர்). சோழநாட்டிலும் ’அகத்தியான்’ என்ற சொல் இது போல் இருந்திருக்கலாம். அகத்தியான் பள்ளி என்பது திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள ஊர். இதுவும் சம்பந்தரால் பாடல் பெற்றதே. அப்பரும் தன் மறைக்காட்டுப் பாடலில் இதைக் குறிப்பார். இது செயினர் ஊரா? தெரியாது. பொதுவாகச் செயினரையும், சாக்கியரையும் தேவார மூவர் விடாது தாக்கினர். ”செயினர் பக்கம் பொது மக்கள் போய்விடாது சிவநெறிக்குள் வரவேண்டும்” என்பது தேவார இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் ஆதலால் ஒருவேளை அகத்தியான் பள்ளி என்பது செயினர் செறிந்த இடமும் ஆகலாம். அதே பொழுது எல்லாப் பள்ளிகளுக்கும் செயினத் தோற்றங் காட்ட முற்படுவதும் சரி அல்ல தான். பள்ளி என்பதைப் பட்டி போலவும் சமயக் குறிப்பின்றிப் பொருள்கொள்ளலாம்.)  229, 231, 232, 233, 238 ஆகிய பாடல்கள் மறைவனப் பெயர் மட்டுமே சொல்கின்றன.

230 "இருளுறும் மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம்". (இருளுறும் மேகம் தவழ்வதுபோன்ற பொழில்நிலவிய மறைவனம். 7 ஆம் நூற்றாண்டிலும் கறுத்துச் செறிந்த காடிருந்தது இவ்வரியாற் புலப்படுகிறது. எனவே சங்ககால மிளைக்காடு தேவார காலத்திலும் மாறவில்லை என்று தெரிகிறது. ”கடல்சேரும் ஆற்றில் ஓடும் நந்நீர் எவ்வளவு? அது எப்படிக் கடலோடு கலக்கிறது?. கலந்த நீரின் உப்புமை (salinity) எவ்வளவு?” என்பதைப் பொறுத்தே அலையாற்றிக் காடுகள் அடரும். இக்காடுகள் ஓரளவு உப்பைத் தாங்குமெனினும் கடலளவு உப்பைத் தாங்கா. கழியின் உப்புமை குறைந்தால் தான் காடு செழிக்கும். நந்நீர் குறையக் குறைய, உப்புமை கூடி காட்டடர்த்தி குறையும். பாட்டின் படி சம்பந்தர் காலக் கானல் வளமாகவே யிருந்தது. (மழைவளங் குறையாது மாதம் மும்மாரி மழை பொழிந்ததோ? :-))
 
234 "இனமலர் மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம்" (பல்வேறு மலர் இனங்களை தழுவிய வண்டுகள் இசையால் ஒலிக்கும் மறைவனம். வண்டிற்கு ஆறுகால் என்பதால் இங்கது அறுபதமாயிற்று.. வண்டுகள் ஏராளம் இழைந்ததால், தமிழிசைப்பாணர் புஷ்பவனம் குப்புசாமியின் ஊர் 7 ஆம் நூற்றாண்டிலும் அருமையான பூக்காடாய் இருந்தது போலும். இல்லா விட்டால் எப்படி இசை முரலும்?) 

235 "மனமகிழ்வொடு மறைமுறை உணர் மறைவனம்" [மனமகிழ்வோடு வேதமுறைகளை உணரும் மறைவனம். மறைக்காட்டருகில் பார்ப்பனச் சேரியில் வேதநெறி கலந்த சிவநெறி நிலவியது போலும். பேரா.நா. சுப்பிரமணியன் சொன்னபடி 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து இங்குள்ள தமிழரோடு முற்றுங் கலந்தவர் பூருவ மீமாஞ்சை கடைப்பிடித்த முன்குடுமிப் பார்ப்பாராவார். (அவருடைய The Brahmin in the Tamil Country கட்டாயம் படிக்க வேண்டிய பொத்தகம்.) சேரல நம்பூதிகள், பெரும்பற்றப் புலியூர் தீக்கிதர், சோழியர் போன்றோரும் முன்குடுமியரே. மணிவாசகர் காலத் திருப்பெருந்துறை முந்நூற்றுவருங் முன்குடுமியரே. (இவரை 9ஆம் நூற்றாண்டில் தேடி அடையாளங் காண்பது கடினம். ஏனெனில் அப்போது மற்ற பார்ப்பனரை விட முன்குடுமியார் சுருங்கிச் சிறுத்துவிட்டார். மணி வாசகர், தேவாரமூவருக்கு முன்னென நான் சொல்வதில் இதுவுமொரு காரணம்.) சம்பந்தர்கால மறைக்காட்டுப் பார்ப்பார் பெரும்பாலும் சோழியர் ஆகலாம். முன்குடுமியார் வேதநெறியை ஆழப் பின்பற்றினார்.. அல்லிருமை (அத்வைதம்) போன்ற உத்தரமீமாஞ்சை வழிகள் இவர்க்கு என்றும் முகன்மை இல்லை. இவரின் ஆழ்ந்த வேதநெறிப் பிடிப்பே சம்பந்தருக்கும் அப்பருக்கும் இடையே மெல்லிய பிணக்கை மறைக்காட்டில் உருவாக்கியிருக்கலாம். இப்பிணக்கைச் சிவநெறியார் வெளிப்படப் பேசமாட்டார்.]

[சிவநெறி என்பது அடிப்படையில் வேதநெறியும், தமிழரின் மரபாகி வந்த ஆகமமும் (ஆகிவந்தது ஆகமம்) கலந்து உருவானதேயாகும். முன்னோரைத் தொழுததில் தமிழரிடம் என்ன பழக்கங்கள் இருந்தனவோ, அவையெல்லாம் சிவநெறியிற் சேர்ந்தன. இவற்றையெல்லாம் ஒருசேர விவரித்தால் அதுவே ஒரு தனிக்கட்டுரை ஆகிவிடும். எனவே அதைத் தவிர்த்து, இங்கே வழி பாட்டை மட்டுமே பேசுகிறேன். மெய்யியல் என்பது வேறு. நடைமுறைப் புரிசைகள் என்பன வேறு. நான் அறிந்தவரை, தேவார மூவருக்கு முன்னவராய் மணிவாசகரைக் கொண்டால், அவரே சிவநெறி மெய்யியலுக்கு ஓரளவு வழிவகுத்தவராவார். (இதைமறுத்து மாணிக்க வாசகரை 9 ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டுபோனால் சிவநெறி விதப்பு எதுவும் விளங்காது.) அவருக்கப்புறம் திருமூலரே மூலவர். இன்றுள்ள தமிழ் நூல்களில் திருமந்திரமே முதல் மெய்யியல் நூலாகும். அந்நூலிலும் வேதநெறி மிடைந்த சிவநெறியே சொல்லப்படும். பின்னெழுந்த இம்மெய்யியல், முன்னெழுந்த செயினம் சாக்கியத்தோடு முரணித்தே, தமிழரைத் தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இப்படிச் செய்ததையே இன்று நாம் பற்றியியக்கம் /பக்தியியக்கம் என்கிறோம்.]
   
எப்படி விண்ணவநெறியில் திருவரங்கம் முதற்“கோயிலோ” அதுபோற் சிவநெறியில் சிற்றம்பலமே முதற்”கோயில்”. ஆயினும் மற்ற சிவன் கோயில்களை விட சிற்றம்பல நடைமுறைகள் சற்று வேறுபட்டே இருக்கும். மற்ற சிவன் கோயில்களில் வேதநெறித் தாக்கம் 20% எனில், சிற்றம்பலத்தில் வேதநெறித் தாக்கம் 50% இருக்கும். காட்டாக. நடவரசனுக்கு முன் பொன்னம்பல மேடையில் யாகம் வளர்ப்பர். மற்ற சிவன்கோயில்களில் இதை நான் கண்டதில்லை. பொன்னம்பலக் கருவறையில் இலிங்க வழிபாடு கிடையாது. (இங்கு விசும்பே இலிங்கமென விளக்கங் கொடுப்பார்.) சிற்றம்பலத் தீக்கிதர் வேதநெறி அதிகம் மிடைந்த சிவநெறியாளர். தேவாரம் வெளிவருவதில் இராசராசனோடு மல்லுக் கட்டியவர். இக்காலத்திலும் பொன்னம்பல மேடையில் தேவாரம்பாட (காலஞ்சென்ற) ஆறுமுக ஓதுவோரோடு முரணிக் கொண்டார். எதிலும் தம் வழக்கத்தை விட்டுவிடா அளவுக்கு வயிராக்கம் முன்குடுமியாருக்கு உண்டு. இதற்காகவே தமிழ்ச் சொலவடை வழக்கில் ”சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்பார். சம்பந்தர்/அப்பர் காலத்தில் மறைக்காட்டில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் சிவநெறிக்குள் கலந்திருந்த வேதநெறியோடு, ஆகமம் கொண்ட முரண்பாட்டின் வெளிப் பாடுகளே. மொத்தத்தில் இது உட்கட்சி வியவகாரம்.] சிவநெறி, விண்ணவ நெறிக்கு வெளியேயுள்ளவர் சிவநெறிக்குள் இருக்கும் வேதவழி - ஆகமவழி முரண்பாடுகளை உணருவதில்லை. உள்ளிருப்போருக்கே அது தெரியும்.

236 "மலிகடல் திரள்எழும் மணிவளர் ஒளிவெயில் மிகுதரு மறைவனம்" (பெருகியகடலின் திரள் எழுவதும், பவளம் வளர்வதும், வெய்யிலொளி மிகுந்ததுமான மறைவனம். அலையாற்றிக் காடுகளில் அலையெழாது. ஓதக் கழியில் (tidal backwaters) அடுத்தடுத்த மடிப்பாய்த் திரளெழும். கோடிக் கரைக்கு வடக்கே பவளம் மிகுதியாயும், கோடிக்கரையிலிருந்து அழகன் குளம் வரை பவளமும் முத்தும், அழகன் குளத்தின் தெற்கில் முத்துங் கிடைத்ததைப் பல இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இங்கே கோடிக் கரைப் பகுதியில் முத்து, பவளம் வளர்ந்ததைச் சம்பந்தர் பதிவு செய்கிறார். மணி = முத்து, பவளம். வெயிலென்பது காடு, நிலம், கோயில் எல்லாவற்றின் மேலும் அடிக்கிறதாம். அப்படியெனில் மறைக்காட்டு மரங்கள் பெரிதும் உயரமில்லை என்று புரிந்து கொள்கிறோம்.)   

237 "அணி வயலினில் வளைவள மருவிய மறைவனம்". (வரிசையான நெல்வயலில் முத்துவளம் கலந்துபோன மறைவனம். [தாழ் ஓதத்தில் (low tide) ஆற்று நந்நீர் கடலுக்குள்ளும், உயர் ஓதத்தில் (high tide) கடல்நீர் ஆற்றுக்கு உள்ளும் உள்வருவதால், ஆற்றுமுகத்திலேயே முத்துச்சிப்பிகள் கிடைத்ததாம். கடற்கரைக்கு அருகில் நெல்வயல்களில் முத்துச்சிப்பிகள் உள்வந்து சேருமாம். தமிழ்நாட்டு நெல் வகைகளில் பலவுமுண்டு. இங்கு பேசப்படுவது உப்புமை தாங்கும் ஒரு நெற்பயிர் ஆகலாம்.)

இன்னும் பல செய்திகள் உள்ளன.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, September 25, 2018

vote/வாக்கு

ஒருமுறை இதைப்பற்றி நண்பர் திரு,பிரகாஷ் மின்தமிழ் மடற்குழுவிற் கேட்டிருந்தார். voting process என்பது நமக்கொன்றும் புதிதல்ல. இதைக் குடவோலை முறையென்று சொல்லி பெருஞ்சோழர் கால உத்திரமேரூர் கல்வெட்டைப் பலருஞ் சொல்வர். இங்கே 2 செய்திகளைக் கட்டாயஞ் சொல்லவேண்டும்.

1. உத்தரமேரூர் கல்வெட்டிற்கும் 1000 ஆண்டுகள் முன்பே குடவோலைமுறை தமிழரிடை இருந்ததை மருதன் இளநாகனாரின் அக 77 ஆம் பாடல் 7-12 ஆம் வரிகள் தெரிவிக்கிறது. .
2. குடவோலை முறைகள் என்பவை அந்தக்காலத்தில் ஊர், மண்டலம், நாடு என எல்லாவற்றிற்கும் பொதுவானவையல்ல. ஒரு குறிப்பிட்ட குடியாருக்கு, தொழிலாளருக்கு, அவையாருக்கு மட்டுமே இவை இயல்பாயிருந்தன. இவரைச் சுற்றியும் முடியாட்சிகள் இருந்தன. அதாவது முடியாட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே குடியாட்சி முறை அந்தக் காலத்தில் நிலவிவந்திருக்கிறது. 

2 ஆஞ் செய்தியை முதலிற் பேசுவோம். உத்திரமேரூர் என்பது ஒரு சதுர் வேதிமங்கலம். பல்லவர் காலத்திலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை அரசின் ஆதரவோடு தனியாகப் பார்ப்பனருக்கென இவை இருந்தன. இவ்வூர்களில் காசு கொடுத்து வாங்கியும், அரசதிகாரத்தாற் பறித்தும் வந்த நிலங்கள் பார்ப்பனருக்குக் கொடுக்கப்பட்டன. தத்தம் நிலக்கிழமையாலும், பிறிதின் நிலக்கிழமையாலும் வேளாண்மை இங்கே நடைபெற்றது. இவற்றின் சேவை நிருவாகம் ஒரு குறிப்பிட்ட சபையாரிடம் இருந்தது. ஊரின் எல்லாப் பார்ப்பனரும் இதிற் கூடி முடிவெடுத்துப் வாரியப் பொறுப்பாளரைத் தேர்ந்தெடுப்பார். இதிலெல்லாம் தேர்தல், தகுதி, விலக்கு, பதவிக்காலம் என்ற கூறுகளிருந்தன. எவ்வளவு பணம், பெருமை இருந்தும் சபை நிருவாகத்திற் பார்ப்பனர் அல்லாதோருக்கு உரிமையில்லை. உத்திரமேரூர் பற்றி இணையத்தில் தேடின் ஏராளமான செய்திகள் கிடைக்கும். அற்றைத் தமிழகம் மட்டுமின்றிக் கேரள, கருநாடக, ஆந்திர மாநிலங்களிலும் இத்தகைய சதிர்வேதி மங்கலங்கள் இருந்தன. ஏன் அவ்வளவு எதற்கு? இதுபோன்ற மங்கலங்கள் சென்னையைச் சுற்றிலும் கூட இருந்தன. இற்றை வேளச்சேரி. அண்ணாநகர் பக்கமுள்ள திருமங்கலம், மணலி/மாதவரம் பக்கமுள்ள கொசப்பூர் எனப் பலவும் (இவற்றின் பெயர்கள் இன்று மாறினும்) ஒரு காலத்தில் சதுர்வேதி மங்கலங்களே..

வேளாரென்றாலே வேதநெறி பின்பற்றி வேள்விசெய்பவரென்று பொருள் உண்டு; ”வேதம்” வேள்தல் வினையிற் பிறந்தது. (வித்>வேதம் என்ற சொற்பிறப்பை நான் ஏற்கேன்.) ஏனெனில் வேளாப்பார்ப்பான் எனும்வகையும் இலக்கியங்களிலுண்டு. இதுதவிர, வேளாரெனும் பார்ப்பனரல்லாத குயவர் வகையார் ஐயனார் கோயில்களில் இன்றும் பூசாரிகளாய் இருக்கிறார்.. (இவர்தாம் பார்ப்பனருக்கு முன்னிருந்த தமிழ் அறிவர்கள்) எனவே வேள்தல்= வேண்டுதல் என்பதே இதற்கு அடிப்படையாக முடியும். ஒருவகையார் நெருப்பு மூட்டி ஆகுதிகளையிட்டு பல்வேறு தெய்வங்களைப் போற்றிக் குமுகாயத்திற்கு நல்லது வேண்ட, இன்னொரு வேளார் நீர்தெளித்துப் பூசாற்றித் தம் தெய்வங்களையோ, கடவுள்களையோ (அறிவர், தீர்த்தங்கரர், புத்தரையோ) போற்றித் தம் குமுகாயத்திற்கு நல்லது வேண்டுவார். ஓரிடத்தில் நெருப்பு, .இன்னோரிடத்தில் நீர். அவ்வளவுதான் வேறுபாடு. பின்வந்த சிவ, விண்ணவ நெறியினர் நீரையும் (அதன் வழி ஆகமத்தையும்) நெருப்பையும் (அதன் வழி வேத நெறியையும்) கலந்து தம் செய்முறைகளை உருவாக்கிக் கொண்டனர். சிவனையும், விண்ணவனையும் கும்பிட்டது நெடுநாளுக்கும் முன்னால். ஆனால் இவற்றை நிருவாகப்படுத்திய நெறிமுறைகள் எழுந்தது பின்னால்.

பார்ப்பனரல்லா நிலக்கிழாருக்கும் தனியூர்களிருந்தன. அந்நெல்லூர்களை நல்லூரென அழைத்தார். இற்றை வேளச்சேரி தாண்டிய சோழிங்கநல்லூர் அது போன்றதே. தமிழ்நாடெங்கணும் பல்லவர்/ பெருஞ்சோழர் காலத்தில் இது போலும் பல நல்லூர்களிருந்தன. இங்கும் நிலக்கிழார் சபைகளுக்கே நிருவாக உரிமையுண்டு. இவற்றிற் பார்ப்பனர் கலந்து கொள்ளார். இங்கும் நிலங்கள் வாங்கப்பட்டன. அதிகாரத்தால் பறித்துக்கொள்ளவும் பட்டன. பார்ப்பனர் அல்லாதோருக்கும் கொடையுமுண்டு. இங்கும் சபையிற் பங்குபெறும் உரிமையாளர் தவிர, மற்றோர் சேவை செய்பவராகவே இருந்தார். மேட்டுக் குடி தவிர்த்த எல்லோருக்கும் சனநாயக உரிமை அன்றில்லை. மங்கலங்கள், நல்லூர்கள் என இரண்டிலுமே ஒருபக்கச் சனநாயகமே (partial democracy) அக்காலத்திருந்தது. நிலமிருந்தோருக்கு உரிமை. மற்றோருக்குத் தொண்டூழியம். 2 விதக் குடியிருப்புக்களையும் பல்லவருக்கு அப்புறம்வந்த பேரரசுகளும் ஏற்றுக்கொண்டன. தமிழகம் முற்றுமுழுதான நிலவுடைமைக்கு (feudalism) ஆட்பட்டது.

ஒருசில வினைகள் தவிர்த்து, மற்றவற்றை மைய அரசு செய்யமுடியாது. ஊர்த்தலைவரை எதிர்த்து இவ்வரசுகள் ஒன்றுஞ்செய்யா. (எல்லாமே அதிகாரக் co-optation மட்டுந் தான்.) நிலக்கிழமைக்கும் அரசிற்கும் முரணெனில், அரசப்படைகள் (இக்காலக் காவலர்படை போல) ஊருக்குள் உள்வந்திறங்கும். ஊர்ச்சபை கலைக்கப்படும். புதுத்தேர்தல் நடைபெறும். மைய அரசிற்குத் தோதானவர் அடுத்துத் தேர்ந்தெடுக்கப்படுவார். இல்லெனில் மங்கலமோ, நல்லூரோ சிலகாலம் செயலிழக்கும். இப்படியே இவைகள் அரசின் கட்டுக்குள் வைக்கப்பட்டன. இவற்றின் உச்சக்கட்டச் சிக்கலே சோழர் காலத்தில் பெரிதும் எழுந்த வலங்கை இடங்கைச் சிக்கல்களாகும். இராசேந்திர சோழனின் கடைப்பிள்ளை அதிராசேந்திரன் ஆட்சியில் 4 ஆண்டுகள் எழுந்த குழப்பத்தில் நாடு வலுவிழந்ததும், அதிராசேந்திரன் கொலைசெய்யப்பட்டதும், சோழக் கொடிவழியே அவனுக்கப்புறம் இல்லாது போனதும். சுவையாரமான வரலாற்றுச் செய்தி. மீண்டும் சட்டம் ஒழுங்கைக் கொண்டுவர இராசேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன் குலோத்துங்கள் (இவனொரு வேங்கிச் சோழன்; தனிச்சோழன் அல்லன்) ஆட்சிக்கு வந்தான். He started as a martial law administrator, but ended as an emperor. 

இங்கே voting process பற்றியல்லவா பேசினேன்? மருதன் இளநாகனார் அக 77 ஆம் பாடல் 7-12 ஆம் வரிகளுக்கு வருவோம். இதைச் ”சிலம்பின் காலம்” நூலில் பக்கம் 105-107 இல் பேசினேன்.

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின்,

இவ்வரிகள் அக்காலக் குடவோலை முறையைக் குறிப்பிடும். பெருஞ்சோழர், பல்லவர்காலக் குடவோலை முறை பற்றிய உத்தரமேரூர் கல்வெட்டுக்களைப் பெருமைகொள்ளும் நாம் அதற்கு முந்தைய, கி.மு.50 அளவான குடவோலை முறையை, அகம் 77 தெரிவிப்பதை, மறந்து விடுகிறோம். நானறிந்தவரை தென்புலத்தில் தேர்தல்கள் நடந்ததைக் குறிக்கும் முதன்மையான சான்று இதுவே. பாடலுக்கு வருவோம். பாடல் பாலைத்திணை சேர்ந்தது. வணிகத்தை நாடி அருஞ்சுரத்தைக் கடக்க விரும்பிய தலைமகன் போகும் வழியில் தான்காணும் கழுகுகளின் செயலை எண்ணிப் பார்க்கிறான், காதலியின் முகத்தையும் எண்ணிப் பார்க்கிறான், மனங்கலங்கித் தான்பிரிந்து செல்ல முற்படுவதைக் கைவிடுகிறான். பாடலின் உள்ளே அருஞ்சுரக் கொடுமையின் விவரிப்பு இப்படி அமைகிறது.
--------------------------
அருஞ்சுரத்தின் கொடிய சூடு தாளாது ”இனி மேற்கொண்டு நகரமுடியாது” என்று எண்ணும் போது, இறந்துபோனவர் உடம்பு சுரத்தின்பாதையிற் கிடக்கிறது. எங்கிருந்தோ ஒரு செந்தலைக் கழுகு (Red-headed Vulture, S arcogyps calvus) பறந்து ஓடிவருகிறது. உயிரற்றுக்கிடக்கும் உடம்பின் வயிற்றைக் குத்தி உள்ளிருக்கும் குடரை வெளியே இழுத்துப்போடுகிறது.
---------------------------
[கழுகுபற்றிய செய்திகளை முனைவர் க.ரத்னம் எழுதிய “தமிழ்நாட்டுப் பறவைகள்” என்ற பொத்தகத்தில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இருந்து தருகிறேன். ”இக்கழுகு கருநிற உடல் கொண்டது. இதன் தலை, கழுத்து, தொடை, கால் ஆகியன சிவப்புநிறங் கொண்டவை. உயரப் பறக்கும்போது கருத்தவுடலின் பின்னணியிலான சிவந்த தலையும் வெண்திட்டுக்கள் கொண்ட தொடையும் இறகுகளிற் காணப்படும் வெண்பட்டையும் கொண்டு அடையாளங்காணலாம். தமிழ்நாடு முழுதும் வறள்காடுகளில் மக்கள் வாழ்விடத்தை அடுத்துக் காணலாம். பிற கழுகுகளைப் போலப் பெருங் கூட்டமாய் இது திரள்வதில்லை. செத்த பிணங்களைத் தின்னப் பெருங்கூட்டமாய்க் கூடும். மற்றவகைக் கழுகுகளிடையே இதனையும் ஒன்றிரண்டாகக் காணலாம். மற்ற கழுகுகளை விரட்டி முதலில் தன்வயிறு நிறையத் தின்னும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே இது கழுகரசன் (King Vulture) என்றும் அழைக்கப்படுகிறது. வயிறு நிறையத் தின்றபின் பறக்க எழவியலாது திண்டாடும். சங்க இலக்கியத்தில் ’செஞ்செவி எருவை’ எனவும் பாலைநிலத்தில் பயணம் செய்வோர் வெப்பத்தின் கொடுமையால் மயங்கி விழுந்தபின் இறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனவும் கூறப் பட்டுள்ளது.”]

இறந்து போன உடம்பின் வயிற்றில் இருந்து செந்தலைக் கழுகு (செஞ்செவி எருவை= செக்கச் சிவந்த கழுகு) குடரை உருவுவது எப்படி இருக்கிறதாம் என்பதற்கு மாங்குடி மருதனார் ஓர் உவமையாற் சொல்கிறார். இதிற்றான் மேற்சொன்ன குடவோலைச் செய்தி வருகிறது. அக்காலத்தில் ஊர் வாரியத்திற்கு நிற்பவர் பெயரை ஓலைநறுக்கில் எழுதி அதைச் சுருளாக்கி ஒரு குடத்தில் இடுவார். முடிவில் குடத்தின் வாயின் மேல் துணியை மூடிக்கட்டிச் சுருக்குப்போட்டு, அதன்மேல் களிமண்ணையோ, அல்லது பிசினையோ கொண்டு ஒட்டி, களிமண்/பிசின் மேல் பொறிகொண்டு முத்திரை பொதித்துப் பின் குடத்தைப் பாதுகாத்துப் பொதுவிடத்திற்குக் (அது வேறு ஊராகக் கூட இருக்கலாம்) கொண்டுவந்து கூடியிருந்தோர் அறியப் பொறியுடைத்து நீக்கி, சுருக்கைப் பிரித்துத் துணியை விலக்கி, ஒவ்வொரு சுருளாக உள்ளிருந்து எடுத்து நீட்டி ஓலை நறுக்கைப் படித்து ”எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன?” என்று பார்ப்பார்களாம்.

எப்படிக் குடத்திலிருந்து ஒலைநறுக்குச் சுருள்களை ”குண்டுகுண்டான அரசு ஆவண மாக்கள் (இடைபெருத்த அரசதிகாரிகள்) இழுத்துப் பிரிக்கிறார்களோ அதுபோல, செந்தலைக் கழுகுகள் இறந்த குடரிலிருந்து குடலுருவி நீட்டுகின்றனவாம். செந்தலைக் கழுகுகளுக்கு குண்டான அரசதிகாரிகள் உவமை. இறந்த உடம்பின் வயிற்றுக்கு வாக்குக் குடங்கள் உவமை. மாந்தக் குடலுக்கு ஒலை நறுக்குச்சுருள் உவமை. உள்ளே போடப்படும் ஓலைகளை உவப்போலை/ ஒப்போலை என்று குறிப்பிடுவர். இப்பாட்டில் அந்தப்பெயர் இல்லை தான். அகம் 77 எண்ணியெண்ணி வியக்கக்கூடியதொரு பாட்டாகும். இதில் அடங்கிய வரலாற்றுச் செய்தி கி.மு.50 இல் குடவோலைமுறை தமிழகத்தில் வழக்கிலிருந்தது என்பதே. குடவோலையின் பழையபெயர் குழிசி ஓலை. தமிழகம் மாற மாறச் சொற்களும் மாறிவந்துள்ளன. குழிசி குடமாகி இன்று கும்பமுமாகி நிற்கிறது கும்பம் சங்கதம் போனதும் சிலருக்கு அது உகப்பாகிவிடுகிறது. (குடமுக்கு கும்பகோணமாகிப் போனது. காலக் கொடுமை.). இக்குடந்தான் இக்காலத்தில் ballot box ஆக மாறியிருக்கிறது. இங்கும் சனநாயகத்தைப் பெரிதும் எதிர்பார்க்காதீர்கள். ஏதோவொரு குடியாருக்குள் மட்டுமிருந்த பழக்கம்

புத்தர்காலத்தில் சாக்கியரிடையே, கோலியரிடையே கூட இப்பழக்கம் இருந்தது. அவரின் சபைகளை மகா சனபதமென்பார். சபைகள் மகா சன பதங்களைத் தொலைத்தே மகதப் பேரரசு எழுந்தது. வேளிர்களின் சன பதங்களைத் தொலைத்தே நம்மூரில் மூவேந்தர் ஆட்சியெழும்பியது. வேதகாலத்திலும் சனபதங்கள்/சபைகள் இருந்ததாய் சங்கத நூல்களின் வழி அறிகிறோம். ஆக இந்தப் பழக்கம் நெடுநாட் பட்டது. (தமிழென்று சொன்னால் சிலருக்குப் பொத்திக்கொண்டு வரும். சங்கத்திலில்லாது தமிழுக்குச் சொன்னால் எப்படி அவராற் பொறுத்துக்கொள்ள முடியும் ? எனவேதான் இங்கே வடபுலப்பழக்கம் பற்றியுஞ் சொன்னேன். எனக்கு அது ஏமந்தரும் :-00000. என்ன? சனநாயகத்தின் உரிமை, கொஞ்சங் கொஞ்சமாய் மக்கள் இடையே விரிந்திருக்கிறது. இப்போதுள்ள வாக்களிக்கும் உரிமை இன்னும் கூட விரியலாம்; விரியவேண்டும். ஊடே ஆங்காங்கே படர்ந்திருக்கும் முற்றதிகாரங்கள் (dictatorships) குறைய வேண்டும்.

உவத்தல்= விரும்பல். இன்னாரை இப்பொறுப்பிலிருத்த விரும்புகிறோம். மேலைமொழிகளில் உகரம்போய் உவத்து, vote ஆகிறது. சரியான சொற்பிறப்புத் தெரியாது ஆங்கிலச் சொற்பிறப்பியலில்

vote (n.) என்பதை mid-15c. என்று காலங்காட்டி, "formal expression of one's wish or choice with regard to a proposal, candidate, etc.," from Latin votum "a vow, wish, promise to a god, solemn
pledge, dedication," noun use of neuter of votus, past participle of vovere "to promise, dedicate" (see vow (n.)). Meaning "totality of voters of a certain class or type" is from 1888.” என்று விளக்கஞ்சொல்வார். vow (n.) "solemn promise," c. 1300, from Anglo-French and Old French voe (Modern French vœu), from Latin votum "a promise to a god, solemn pledge, dedication; that which is promised; a wish, desire, longing, prayer," noun use of neuter of votus, past participle of vovere "to promise solemnly, pledge, dedicate, vow," from PIE root *wegwh- "to speak solemnly, vow, preach" (source also of Sanskrit vaghat- "one who offers a sacrifice;" Greek eukhe "vow, wish," eukhomai "I pray"). Meaning "solemn engagement to devote oneself to a religious order or life" is from c. 1400; earlier "to bind oneself" to chastity (early 14c.) என்று சொல்வர்.

என்னைப் பொறுத்த வரை இச் சொற்பிறப்பியல் தவறு. இன்னுஞ் சரியாய் மேலை மொழிகளைப் பார்க்க வேண்டும். அது என் துறையல்ல. நம் தமிழார்வலரும் அகம் 77 ஐ எல்லாம் ஆய்ந்தறியாக் காரணத்தால் மேலே சொல்லும் promise ஐப் பிடித்துக்கொண்டு வாக்கு என்றாக்கி விட்டார். அருவி இருக்க நீர்வீழ்ச்சியைப் புதிதாய் உருவாக்கவில்லையா? அதுபோல இங்கு ஆகியிருக்கிறது. நெறியாளரிருக்க இயக்குநரென்ற பொருத்தமில்லாத சொல்லை இக்காலத்தில் உருவாக்கி இருக்கிறோமே? அதுவும் இதே கதை தான். உவத்தல், உவப்பு என்பது சரியான சொல். ”மக்களே! உங்கள் உவப்பை எனக்குக் கொடுங்கள்/போடுங்கள் என்று கேட்கவேண்டும்.  ”வாக்குக் கொடுங்கள்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு கையிற்கொடுக்கும் ஆயிரம் இரண்டாயிரத்தையும் வாங்கிக்கொண்டு  உவப்பை வேறொருவருக்குப் போட்டுவிடுவார். இந்த அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லை போலும்.

ஆனால் 1967 இலிருந்து வாக்கிற்குப் பழக்கப்பட்டு விட்டோம். எனவே இப்பொழுது உவப்பென்று மாறப் பலருக்கும் தயக்கமாய் இருக்கும். (இந்த இராம.கி. க்கு வேறுவேலையில்லை. இருக்கும் சொற்களில் தப்புக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்.) தமிழில் அரைகுறை மொழிபெயர்ப்புகள் நிறையக் கிடக்கின்றன. மரபு தெரியாமலிருந்தால் இப்படித்தான் கோளாறுகள் வந்துசேரும். பின் வேறுவழியின்றி அவற்றோடு வாழவேண்டும். என் கூற்று வேறொன்றுமில்லை. கோளாற்றைச் சரிசெய்கிறோமோ, இல்லையோ? அது கோளாறென்று தெரிந்துகொள்ள வேண்டாமா? 
   
அன்புடன்,
இராம.கி.

மறைக்காடு - 2

பொ.உ.மு. 100 களில் சேரநாடே பென்னம்பெரியது. [அதனாற்றான் செங்குட்டுவன் பெரிதும் துள்ளினான். தமிழருக்கே ஆழிவேந்தனாய்த் (சக்ரவர்த்தி) தன்னை எண்ணி வடக்கே படையெடுத்தான்.] பாண்டியநாடு அடுத்த அளவானது. இன்னுஞ் சிறிய சோழநாட்டில் நாகநாடும் (நாகநாட்டுள் வட இலங்கையும் சேர்ந்தது போலும். மணிபல்லவம்- நாயினார் தீவு தானே?. அண்மையில் இதிலும் ஒரு மாற்றுக் கருத்து எனக்கு வந்துள்ளது. வேறு கட்டுரையில் பார்ப்போம்.) வளநாடும் சிறு பகுதிகள். நாகநாட்டை விட மீச்சிறிய வளநாட்டிருப்பை உறுதி செய்தவன் செங்குட்டுவனே. தன் மாமன் மகனை (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) இருத்துவதற்காக 9 மன்னர்/வேந்தரைப் போரில் வென்றது சிலம்பிற் சொல்லப்படும். சிலம்பின் காலத்தை நான் கி.மு.75 என்றே சொல்வேன். அப்படியானாற்றான் சங்ககால வரலாறு பூதியற் சான்றுகளோடு (physical evidences) பல்வேறாய்ப் பொருத்த முடிகிறது. கி.பி. 144க்கு அருகில் சிலம்பு எழுந்திருக்கலாம் என்பதை நான் மறுப்பேன். வரலாறு மிகுந்து புனைவு குறைந்த சிலம்போடு, புனைவு மிகுந்த மணிமேகலையை இரட்டைக் காப்பியமாக்கிச் சிலம்பின் காலத்தைக் கீழ் இழுப்பதை நான் மறுப்பேன். பெரும்பாலும் மணிமேகலை காலம் கி.பி.285-390க்குள் தான். (இதை வேறு தொடரிற் பேசுவேன்.) கோடியக் கரையின் சிறப்பறிய செங்குட்டுவனின் தாய்வழித்தாத்தன் மணக்கிள்ளியிடம் போகவேண்டும்.

”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”

என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம்பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். இம்மணக்கிள்ளி யார்? மருவல்=தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தை யிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage- போயிருக்கிறது.) மருமகன்/மகள் என்பார் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒரு குடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொள்ளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன் படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூநெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங்கொண்ட மகனும் மகளும் ஆவர்.மணமகன்/ மணமகள் வீடு, மண/மரு வீடாகும். மணக்கிள்ளி = சம்பந்தங் கொண்ட கிள்ளி. மணக்கிள்ளியெனும் உறவுப் பெயரைப் பதிகம் பாடியோர் இயற்பெயர் ஆக்கிவிட்டார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலுள்ள அடியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சேரரின் மணவீட்டைச் சேர்ந்த மணக்கிள்ளி (ஐயை/நற்சோணையின் தந்தை) உறையூர்ச்சோழன் தித்தனாவான். சமகால அரசர்/புலவர் இருப்புகளை அலசினால் இது புலப்படும். யா, இருளைக்குறிக்கும் இற்றல்= போக்குதல்; யாயிற்றன்= இருளை இற்றுகிறவன். யா>ஞா>நா திரிவில் யாயிற்றன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்> ஆயிற்றன்> ஆதிற்றன்> ஆதித்தன் என்பது சூரியனைக் குறித்தது. (”யா”வழிச் சொற்பிறப்புக்களை ப.அருளியின் நூலிற்காண்க.) ஆதித்தனின் முதற்குறை தித்தனாகும். முதற் குறைப் பெயர்கள் தமிழிற் பரவலாயுண்டு. தித்தன்= நெருப்பானவன், ஒளி பொருந்தியவன். இவன் பட்டம் ஏறுகையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியெனும் பெயர்கொண்டான். புறம்13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக் கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்துவஞ் சேரல் இரும்பொறைக்குக் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனெனச் சிலம்பு புகலும். பரணர் பாடிய சமகால அரசரை ஒருங்கே பார்க்கினும் இது விளங்கும்.

தித்தனின் மகன் வெளியன். (வெள்ளையன், வெள்ளைச்சாமி, வெள்ளை யப்பன் என்று சொல்கிறோமே?). இதன் பொருளை ”வெள்ளைப் பிள்ளை” என்னாது, வெளிறிய கருப்பெனலாம். ஏதோ காரணத்தால் அப்பனுக்கும் பிள்ளைக்கும் மனம் வேறாகி, மகன் உறையூர் விட்டு விலகி வளநாட்டுத் துறைமுகத்தில் வீர விளையாட்டு, இசை, கூத்தென்றே சிலகாலங் கழித்தான். தித்தனுக்குப் பின், வேற்பல்தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில் வேல்வீசுந் திறன்) என்றும் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி (உறையூருக்கு அருகில் பேட்டைவாய்த்தலை போர்வை எனப்பட்டதாம்) என்றும் அழைக்கப் பட்டு, வெளியன் உறையூரிலிருந்து ஆண்டான். நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் வெளியனே. மச்சான்கள் முரணிச் சண்டையிட்டு இருவரும் போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடுவார் (புறம் 62, 368). பெருவிறற்கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறி, செங்குட்டுவனே பங்காளிச் சண்டை தீர்த்து 9 அரசருடன் போரிட்டுத் தன் மாமன் மகனைப் (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) பட்டமேற்றுவான்.

தித்தனின் துறைமுகமாய் நாகநாட்டுப் பூம்புகாரிருக்க வழியில்லை. கடற்கரையின்றி, வளநாடு நிலத்தால் மூடிய நாடுமில்லை. வளநாட்டின் துறைமுகம் உறையூரின் கிழக்கே நாகைக்குத் தெற்கே தான் இருக்கமுடியும். பிற்றை வரலாறு நோக்கின், குணக்கடலும், (ஆங்கிலர் பெயரிட்ட) பால்க் ஒடுக்கமும் (Palk straits) சந்திக்கும் கோடியக்கரையே வளநாட்டின் முதல் துறையாக வாய்ப்புண்டு. (மன்னார் வளைகுடா பால்க் ஒடுக்கத்தின் கீழ் உள்ளது.) துருத்திய கோடியக்கரையை promontory என்று பொதுவாயும், கழிமேட்டு முனை (Point calimere) என விதப்பாயும் சொல்வர். திருவணைக் கரை, தொல்முது கோடி, தலைஞாயிறென்றும் சொல்லப்பட்டது. கோடியக் கரையின் வணிக வாய்ப்பை Ptolemyயும், Plinyயும், Periplus of the Erythraean Seaயும் பேசும். பெரும்படகுகளும், புணைகளும், மரக்கலங்களும் இத்துறையிற் தொடர்ந்து இயங்கின. பின்னால் நாம் ஆயப்போகும் தேவாரப்பாடல் வரிகளும் கோடியக் கரைத் துறைமுகம் பற்றிய முகனச் செய்தியைக் குறிப்பால் உணர்த்தும்.

கோடியக்கரைக்கு மேலே கோடியக்காடு, அணைக்காடு, மறைக்காடு, பூக்காடு (புஷ்பவனம்) எனப் பல்வேறு காடுகளிருந்தன. இப்பெயர்கள் எல்லாம் கோடியக்கரையைக் காரணங் காட்டியே அமையும். தலை ஞாயிற்றின் மேற்கே கோடியக்காடும், பஞ்சனடிக்குளமெனும் உப்புக் கடல் ஏரியும், அதன் மேற்கே முத்தூர்ப்பேட்டை அலையாற்றிக் காடுகளுமுண்டு. Mangrove= கழிக் கானல்; கானல்/கானம் என்ற சொற்பயன்பாட்டை ஆலங் கானம், கானப்பேர், மாமல்லைக்குத் தெற்கே ஆலம்பாறைக் கோட்டைக்கு அருகமைந்த மரக்கானம் (மரவக்காடு; சிறுபாணாற்றுப்படையின் எயிற்பட்டினத்தோடு சேர்ந்தது. கீழே விளக்குவேன். ஒரே பெயர் இருவேறிடங்களில் இருப்பது தமிழ் நாட்டிற்கொன்றும் புதிதல்ல) போன்ற பெயர்களாலறியலாம். (சிலம்பின் கானல்வரி நினைவிற்கு வருகிறதா? அது முல்லைக் காட்டிற் பாடியதா? கடலுக்கருகில் கழிக்கானலிற் பாடியதா?. இரண்டாம் கரிகாலன் மகள் ஆதிமந்தி சேரன் ஆட்டனத்தியோடு ஆடிப் பாடியதும் புகாரின் கானல் வெளியிற்றான்.)

கானல்களின் தாக்கம் தமிழகக் கடற்கரையில் மிகவுண்டு. சென்னை அடையாற்றங்கரை சுற்றி இன்றிருக்கும் கிண்டிக்காடு ஒரு நெய்தலங் கானலே (இதன் முற்காலத் தொடர்ச்சியே சம்பந்தர் காலத்து மயிலைப் புன்னையங் கானலாகும். சம்பந்தர் பாடல் நினைவிருக்கிறதா? (தேவாரத்திலும் நாலாயிரப் பனுவலிலும் ”பற்றியை” நாடியமைவதோடு வரலாற்றுச் செய்திகள் தேடுவதிலும் பயனுறுத்தலாம்.)

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

அப் புன்னையங்கானலின் தொடர்ச்சியான இன்றைய கிண்டிக்காட்டில் மான்/மறிகள் இன்றும் உலவுகின்றன. உடனே அதை மரைக்காடு> மறைக்காடு எனலாமோ? மான்/மறிகள் உலவிய/உலவும் அலையாற்றிக் காடுகள் தமிழகத்திற் பலவுண்டு. மாமல்லை தாண்டி மரக்கானம் போனால் அங்கும் கானலே. (மான்கள் ஒரு காலத்தில் அங்குமிருந்தன) கடலூர், பிச்சாவரம், தில்லை போனால் அங்கும் கானலுண்டு; மான்களும் இருந்திருக்கலாம். (தில்லை பற்றிய முடிவுறா நெடுந்தொடரை பத்தாண்டுகளுக்கு முன் என் வலைப்பதிவில் எழுதினேன். சில மடற்குழுக்களிலும் இட்டேன். அப்போது எல்லாம் மின்தமிழில் எழுதுவதில்லை. பல புலனங்களை விளக்கும் அத் தொடரை இத்தோடு சேர்த்துப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். மரைக்காடு பற்றிய அற்றைக் குறைப்புரிதல் தவிர வேறொன்றும் மாற்றும்படி அதிலில்லை.)

http://valavu.blogspot.in/2006/07/1_31.html
http://valavu.blogspot.in/2006/07/2_31.html
http://valavu.blogspot.in/2006/07/2_31.html
http://valavu.blogspot.in/2006/08/4.html
http://valavu.blogspot.in/2006/08/5.html

இன்னும் தெற்கே மறைக்காடு அடங்கிய முத்துப்பேட்டை வட்டாரம். பொருநை கடல்புகும் இடத்திலுள்ள இற்றைப் புன்னைக்காயல் ஆகிய இடங்களிலும் நெய்தலங்கானலுண்டு. கானல்களின் புதலியற் (botanical) பார்வையைத் தேவார வழி கீழே கூறுவேன். கோடியக்கரையின் கிழக்கு, தெற்கில் அலைகுறைந்த ஆழமிலாக் கடலின் ஒருசில ஆழிடங்களில் வங்கங்களையும், கலங்களையும் நங்கூரமிட்டு நிறுத்திப் படகின்வழி பொருட்களை இறக்க முடியும். 50 ஆண்டுகள்முன் நாகபட்டினத்திற்கூட இப்படித்தான் கப்பல்களியங்கின. (சேரர் முசிறியும், சோழர் புகாருங் கூட இப்படியே. கப்பல்கள் தொலைவில் நிற்க, ஆட்கள் பண்டங்களோடு படகுகளில் இறங்கி வருவர். இக்காலத் துறைமுக நடைமுறைகள் அன்றும் இருந்ததாய் நாம் பெரிதுங் குழம்பிக் கொள்கிறோம். கடலைத் தோண்டி மண்ணை வாரித் துறையை ஆழப் படுத்துவது இக்கால முறை.) ஞாழலும், புன்னையும் நிறைந்த, கோடியக்காடும் தலைஞாயிறும் சேர்ந்த, ”கானலம் பெருந்துறை”க்கு (= காடுநிறைந்த பெருங்கடற்றுறை) இராமன் வந்ததாய்,

”பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்
வெள்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் அல்லம் போல
ஒலி அலிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே”

என அகம் 70 இல் மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன்மள்ளரின் நெய்தற்பாடல் சொல்லும். இதில் தொல்முதுகோடி என்ற பெயரும் கானலம்பெருந்துறை என்ற பெயரும் சேர்ந்துவருவதைக் காணுங்கள் இதைத் தவிர, ”கானலம் பெருந்துறை” என்ற கோடியக்கரை

நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்
இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறை
தனந்தரு நன்கலஞ் சிதையத் தாக்குஞ்
சிறுவெள் ளிறவின் குப்பை யன்ன

என்ற (அகம் 152இன் 4-8) வரிகளினூடே குறிக்கப்படும். இதுபோல் இன்னும் பல குறிப்புகள் சங்க இலக்கியத்திலுண்டு. அவற்றை ஆழவாய்ந்தோர் குறைவு. துறைமுகமென்று சொல்லக்கூடிய கானலம் பெருந்துறையில் உல்கு (உல்= ஆகு, ஆய்; அரசனுக்காகும் பங்கு; ஒரு காலத்தில் இது ஆறிலொருபங்கு. உல்கு= ஆயம். “உறுபொருளும் உல்குபொருளும் - குறள் 756), சுங்கம் [சுல் = சுற்றியாகு, சுல்ங்கு>சுங்கம்; நாட்டினுள் வந்திறங்கும் பண்டத்தின்மேல் அரசு விதிக்கும் ஆயம். உல்கிற்கும்/ சுங்கத்திற்கும் வேறுபாடின்றிப் பயன்படுத்திய காலமுண்டு. பின் இப்புழக்கம் மாறியது. ஓரிரு மாதங்கள் முன்வரை உல்கு= excise duty; சுங்கம்= customs duty; இப்போது சரக்கு சேவை வரி (Goods and Services Tax) என்கிறார்], அரச கருமங்கள் என்று பார்ப்பதற்கு எயில்கள், வாயில்களோடு ஒரு கோட்டை இருக்குமே? Every harbour those days would have a fort to conduct the Government functions.

கோட்டை சுற்றி அகழியும் (கழிகளே அகழியாகலாம்) அதைச்சுற்றி மிளைக் காடும் இருக்குமே? மிளைதல்= செறிதல். இக்காட்டில் மரங்கள் உயரா விடினும், அடர்த்தி (1 சதுரக் கி.மீ.யிலுள்ள மரங்களின் எண்ணிக்கை) கூடி, வெளியாருக்குக் கோட்டை தெரியாது மறைந்திருக்க வேண்டும். மாற்றிச் சொன்னால் காடு கோட்டையை மறைத்தது. முள்மரக்காட்டை ஒழித்து உள்ளே வருவதும் எளிதல்ல. எனவே இது காவற் காடுமாகும். மதுரை மிளைக் காட்டின் வெளியே புறஞ்சேரிகள் (suburban areas. புறஞ்சேரிகள் என்பதற்கு இற்றை மேட்டுக்குடியார் ஒப்புவரோ?) இருந்ததாய்ச் சிலம்பு சொல்லும். மறைக்காடு அற்றைக் கோடியக் கரையின் ஒரு புறஞ் சேரியே. வேதநெறி பழகும் பார்ப்பனச் சேரியாய்க் கூட அது இருந்திருக்கலாம். கழிக்கானல் பற்றிய மேல் விரிவைத் தேவாரங்களின் வழி கீழே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, September 24, 2018

மறைக்காடு - 1

2017 இல், “மறைக்காடா? மரைக்காடா?” என்ற உரையாடல் மின்தமிழில் காரசாரமாய்ப் போனது. அதேபோது தேக்கடி, மூணாறென ஊர்சுற்றியதால், ஓரிரு கருத்துச் சொன்னதோடு நான் ஆழமாய்ப் பங்குபெற வில்லை. உருப்படியான ஆதாரமின்றி, 20/21 ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞரைத் தொட்டுக்காட்டி, வழக்கம்போல் அவர், இவரென்று பெயர் விரவி, தான் பிடித்த முயலுக்கு மூன்று காலென அடம் பிடிப்பவரோடு எப்படி உரையாடமுடியும்?. தவிர, என்னிடமிருந்த ஊற்றுகளையுஞ் சரிபார்க்க வேண்டியிருந்ததால், பொறுமை நன்றென எண்ணிப் பேசாதிருந்தேன். பின்னால் எழுதினேன். இப்போது சேமிக்கிறேன்..

[இங்கோர் இடைவிலகல். இந்த உரையாடலினூடே, ”மறைகாடா? மறைக்காடா?” என்ற துணைக்கேள்வியும் எழுந்தது. மூணாறில் ஊர்சுற்றிய போது மூணாறு - உடுமலைப்பேட்டை வழியில் 43/44 கி.மீ. தொலைவில் மறையூரென்றதோர் இடத்தைப் பார்த்தேன். மலைகளின் நடுவே மறைவது மறையூர். மறைதல், தன்வினைத் தொழிற்பெயர். மறைத்தல், பிறவினைத் தொழிற்பெயர். இரண்டிற்கும் மறையென்ற ஒரே வினையடிதான். தன்வினை யுணர்த்தும் மறையூரில் வினை மிகாது. பிறவினையுணர்த்தும் மறைக்காட்டில் வினை மிகும். நிலைமொழியில் உயிரும், வருமொழியில் மெய்யும் வருமிடங்களிற் புணர்ச்சி பற்றிச் சொல்கையில் (காலஞ்சென்ற) இலக்கண அறிஞர் செ. சீனி நைனா முகம்மது ”புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்” என்ற பொத்தகத்தில் 91 ஆம் பக்கத்தில், ”நிலைமொழியாகும் வினைச் சொற்களில் வினையெச்சமும், ஆ.ஐ ஈற்றுப் பெயரெச்சமும் வலிமிகும்” என்பார். அவர் தந்த எடுத்துக்காட்டு: பண்டை + காலம் = பண்டைக்காலம்.

அப்படித்தான் மறை+காடு= மறைக்காடு என்றமையும். மறைகாடெனில் வேறெதனாலோ மறையுங்காடென்று பொருளாகும். மறைக்காடெனில் வேறெதையோ மறைக்குங்காடு. அவ்வூருக்கு அணைக்கரை என்ற பெயரும் உண்டு. அது அணைக்குங்கரை. அணையுங்கரையல்ல. அதேபோல அணைக்காடு என ஒரு காடு அருகிலுண்டு. அணைக்குங்காடு. அணையுங் காடல்ல. அணைக்கட்டெனும் இன்னொரு சொல்லையும் எண்ணிப் பார்க்கலாம். நீர் அணையாது; பரவும். அதேபொழுது ஒரு செயற்கைக் கட்டுமானத்தால் நீரை அணைக்கமுடியும். பொருள்மாறுபாட்டைக் கூர்ந்து கவனியுங்கள். வினைத்தொகை என்று சொல்லித் இலக்கண விதிகளைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.]

இனி ”மரைக்காடா? மறைக்காடா?” என்ற உரையாடலுக்கு வருவோம்.

ஆழ்ந்துபார்த்தால் முத்துப்பேட்டை வட்டாரக் காட்டிற்கு மரைக்காடே முதற் பெயரென்பதற்கு நானறிந்தவரை நேரடிச்சான்றுகள் இல்லை வேண்டுமெனில் சுற்றிவளைத்து ஊகத்தால் உணரவைக்கலாம். மரையை மானாக மட்டுமே சொல்வதில் நான் உடன்படேன். அதற்குத் தாவரப் பொருளுமுண்டு. (ஆய்வுத் தெளிவின்றி முன்னோர் கூற்றால் உந்தி நானுமதை விலங்காய் மட்டும் ஒருகால் எண்ணியது உண்டு). கூடவே, ”மறை”க்கு மறைப்பு, வேதமென 2 பொருள்களுண்டு. மரை->மறை(மறைப்பு)->மறை(வேதம்) என 2000 ஆண்டுகளில் சொல்லும் பொருளும் மாறியிருக்கலாம். மறைக்காடு என்று மட்டும் பாராது, கோடியக் கரையை குத்துப் புள்ளியாக்கி கிழக்கே அதிராம்பட்டினம், வடக்கே வேட்டைக்காரன் தோப்பு வரை ஆடித்தோற்ற (mirror image) டகரம்போற் கோடிழுத்துக் கிடைக்கும். முக்கோணநிலம் முழுதும் வரலாற்றுநோக்கில் காணவேண்டும். இன்றைக்குக் கோடியக்கரை ஒரு சிற்றூராகலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் போனால், ஓரளவிற்குப் பெரிதான, முகன்மையான சோழர் துறைமுகம் அங்கே காட்சியளிக்கும். இன்னும் 1000 ஆண்டுகள் முன்னாற் சென்றால், இம்முக்கோணப்பகுதி இன்னுங்கூட மாறித்தோற்றும்.

கி.மு 9500 போல் சென்னை வடக்கிலிருந்து நம்மூர்க் குணக்கடற்கரை சில கி.மீ. அகண்டிருந்து, சிச்சிறிதாய் அகலங்கூடி, நாகபட்டினமருகே கடல்மேலும் பின்வாங்கி கோடியக்கரையோடு இலங்கை சேர்த்தடக்கித் தண்பொருநை (தாம்பிரவருணி) ஆற்றுமுகத்தில் அணைந்து குமரியின் கீழே நீட்டி (ஒரு காலத்தில் 250 கி..மீ, பின் சிச்சிறிதாய் இற்றைநிலை) திருவனந்தபுரம் சுற்றிக் கொண்டு இன்னும் பரந்து கூர்ச்சரம்வரை விரிந்த நிலத்தை உருவகித்தால் நான்சொல்வது புரியும். இவ்வதிகநிலம் சங்ககாலத்திற்கு (கி.மு.550) முன்னும், களப்பிரர் காலத்திலும் (கி.பி 385) நடந்த பல கடற்கோள்களால் அழிந்ததை நம்மூர் இலக்கியங்கள் தொன்மமாய்ப் பதிவுசெய்துள்ளன. இற்றைக் கடலாய்வுகளும் இவற்றின் இயலுமையை வெளிக்கொணர்கின்றன.

இந்த அதிகநிலத்தின் பெரும்பகுதி தமிழரைச்சேர்ந்தது. எவ்வளவுநிலம் எந்த உகங்களில் அழிந்ததென்று பெருங்கடற்கிறுவியல் (oceanography) வழி ஆய்வதே சரியான முறையாகும். குமரிக்கண்டம் என்றவொன்று இருந்ததோ, இல்லையோ? எனக்குத் தெரியாது. ஆனாற் குமரிநிலம் அழிந்தது உண்மை. ஒரிசா பாலு போன்றோர் இதைத் தேடியலைந்து களப்பணி செய்கிறார். நாம்தான் தமிழென்றால் எதையும் நம்பாதுள்ளோம். (காட்டாகத் தமிழகம்-கொரியா தொடர்பு சொல்வதை அவத்தக் களஞ்சியமென எழுத்தாளர் செயமோகன் சொல்வதை அண்மையிற் படித்தேன்.) இத்தகை மனப்பான்மை சிலருக்கு ஏற்படுவது அலட்சியத்தாலா? அவநம்பிக்கையாலா? வேறொன்றின் மேல் ஏற்பட்ட பற்றாலா? அடிமைத்தனத்தாலா? - என்று புரிவதில்லை.

கோடிக்கரைக்கு நேர்தெற்கே இன்று சில தீவுகளுண்டு. அங்கிருந்து யாழ்ப்பாண மாவட்ட நாகனார் (நயினார்) தீவுவரை ஆதிசேதெனும் இயற்கைச் சேது (பாலம்) நீர்மட்டத்திற்குச் சற்றுக் கீழேயுண்டு. தனுசுக்கோடியிலிருந்து மன்னார்தீவு வரை நீர்மட்டத்தின்கீழ் இன்னொரு இயற்கைச் சேதுண்டு. (இதை இராமர் சேதென்பர். மாந்தன் செய்ததாய் இதைச்சொல்வது வெறுந் தொன்மமே.) கடலடி மட்டத்திற் பார்த்தால் ஆதிசேது இராமர் சேதுவினும் உயரங் குறைந்தது. 2 சேதுக்களுக்கும் இடையுள்ளது கடல்கொண்ட பாண்டி நிலம். இதற்குங் கிழக்கில் இலங்கை மேற்குக்கடல் வரை உள்ளதும் கடற் கோளின் முன் பாண்டிநிலமே (இப் பழந்தமிழகத்தை மறந்து, கால காலத்திற்கும் இலங்கை ஒரு தீவென எண்ணுகிறோம்.) கி.மு.350 களில் இலங்கையிற் குடியேறிய சிங்களர் எண்ணிக்கை சங்ககாலப் பிற்பகுதியிற் பெருகியது. தவிர, அவர் நம்மில் வேறானவரல்லர்; தமிழ்க்குடியின் பெண் வழியினர் சிங்களரென வரலாறு தெரிவிக்கும். கலிங்கவிசயன் கூட்டத்திற்கும் பாண்டியருக்கும் இடையே மணவுறவுகள் மிகுதி. அவற்றை உருப்படியாய் யாரும் ஆய்ந்ததில்லை. இன்று சூழும் போகூழும் கொடுமையும் அவற்றை ஆயவிடா. தமிழ் மாமனை/மச்சானை மதியாத சிங்கள மருமகனின் சண்டை இன்றுந் தொடர்கிறது.

மறைக்காட்டின் இருப்பிடமான சோழநாட்டிற்கு வருவோம். ’சிலம்பின் காலம்’ நூலில் வளநாடு, நாகநாடென 2 பகுதிகளாய் சோழநாடு பிரிந்தது பற்றிச் சொன்னேன். (பாண்டியநாடும் ஒருகாலத்தில் 5 பகுதிகளானது. பாண்டியருக்குப் பஞ்சவரென்ற பெயருமுண்டு. சேரநாட்டிலும் பல பகுதிகள் உண்டு. செங்குட்டுவன் சமகாலத்தில் 9 பங்காளிகள் இருந்தார்.) காவிரிக்கு வடகரை, நாகநாடு. காவிரிக்குத் தென்கரை, வளநாடு. 2 நாடுகளையும் பிரித்தது/இணைத்தது காவிரியே. (இன்றுஞ் சிவ தலங்களைச் சொல்கையில் வடகரை/தென்கரைப் பிரிவு சொல்வார்.) சிலம்புக் காலத்தில் நாகநாட்டிற்கு ஒருவனும் வளநாட்டிற்கு இன்னொருவனுமாய் 2 சோழரிருந்தார். கண்ணகி நாகநாட்டாள். (சிலம்பின் மங்கலவாழ்த்துப் பாடலில் வரும்.) நாகநாட்டின் கோநகர் புகார்; வளநாட்டின் கோநகர் உறையூர். சேரருக்கும் பாண்டியருக்கும் ஒரு தலைநகர் பேசுஞ் சிலம்பு சோழரின் தலைநகராய்ப் புகாரையும், உறையூரையும் சமமாகவே பேசும். இருவர் சோழரெனினும் வேந்தர் யார் என்பதில் முரண்களும், குடுமிப்பிடிப் பங்காளிச் சண்டைகளும் இருந்தன. (பங்காளி, தாயுறவுச் சண்டைகளே தமிழரைக் கெடுத்தன.) பாண்டியரோடும், சேரரோடும் ஒப்பிட்டால், சங்ககாலச் சோழருள் ஒற்றுமைக் குறைச்சல் அதிகம்.

சங்ககாலத்திற்குச் சற்றுமுன் ஏற்பட்ட கடற்கோளில் தன்னாட்டுப் பரப்புக் குறைந்ததால் சோழனிடம் முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் குண்டூர்க் கூற்றத்தையும் (குன்றூர்>குண்டூர்; இற்றைக் குமரி, திருவனந்தபுரம் சுற்றியது.) பாண்டியன் வளைத்துப் பறித்துக்கொண்டது கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு இன்றி, மேல்சென்று, மேவார் நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இக்கூற்றங்களின் பெயர்களைக் கலித்தொகை உரையாசிரியர் வழி அறிகிறோம். இற்றைப் தஞ்சை/புதுக்கோட்டை மாவட்டஞ்சேர்ந்த முத்தூர்ப் பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கிப் பகுதியே முத்தூர்க் கூற்றமாகும். இதிலிருந்து மிழலைக் கூற்றம் பிரிந்தது. இவை இரண்டும் அன்றிலிருந்து இன்றுவரைச் சோழ, பாண்டிய அடையாளங்களைக் கலவையாய்க் காட்டும். இதன் ஓர் எச்சமாய் முத்துக்கள் விலைபோகிய ”முத்தூர்ப்பேட்டை” விளங்கும் (நம்மூரில் பேட்டையெனில் வணிகர் கூடும் ஊராகும்). மணிவாசகர் காலத்தில் பரிவாங்கப் போகும் திருப்பெருந் துறையும் (ஆவுடையார் கோயிலும்) முத்தூர்க்கூற்றம், மிழலைக் கூற்றம் ஆகிய பகுதிகளில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ளது. பரி வாங்குகையில் இது பாண்டியர் கூற்றம் போலும். ஏனெனில் சோணாட்டுக் கூற்றத்தில் பாண்டிய முதலமைச்சர் 1 மாதத்திற்கும் மேல் தங்கியது நம்பும்படியில்லை. விடாது பழைய முத்தூர்க் கூற்றத்தை இருபெரும் வேந்தரும் பந்தாடியது தமிழர் வரலாற்றில் ஒரு தொடர் கதை. (வளநாட்டு முத்தூர்க் கூற்றத்தை விடுத்து மணிவாசகரின் பெருந்துறையை நாகநாட்டிற் தேடுவோரை என்சொல்வது?)

சங்க காலத்தின் முன் கடற்கோள் ஏற்பட்டதால், அச்சம், குறையாழம் காரணமாய் சேதுக்களின் இடைக்கடலுக்குள் பெருங்கப்பல்களில் யாரும் வரார். பாண்டியர் தொண்டியோ மிகப் பின்னெழுந்த துறை. சங்கநூல்களிற் வருவது சேரர் தொண்டியே. தொள்ளப்பட்டது தொண்டி. இக்காலத் திருப்பெருந்துறையோ, மணல்மேற்குடியோ, மீமிசலோ சங்ககாலத்திற் பெருந்துறையாக இருந்திருக்க வழியே இல்லை. அவற்றின் வரலாறுகள் தேவார காலத்திற்குச் சற்றே முற்பட்டன. பெரும்பாலான வங்கங்கள் (கப்பல்கள்) தெற்கிலிருந்தும், தென்கிழக்கிலிருந்தும் வருகையில் கொற்கை, காயல் (=கழி.),  கடந்தபின் இலங்கையைச் சுற்றிக் கோடியக்கரைக்குத்தான் முதலில் வரமுடியும்..

The Periplus of the Erythraean Sea இன் செய்தியும் இதைச்சொல்லும். “Beyond Colchi there follows another district called Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic.” Colchi=கொற்கை. கோடிக்கரை என்று புரிந்துகொண்டு ”கோடி” Coty>County>Country என்று திரிவடைந்த எழுத்துப்பெயர்ப்பாகவும் ”கரை” மொழிபெயர்ப்பாகவும் இங்கு ஆளப் படுகிறது. உண்மையில் கோடியக்கரைக்குக் கடலாற் கோடிய (வளைந்த) கரையென்று பொருள். Argaru = உறையூர். Argaritic = உறையூர் கூறைப் புடைவை. கோடியக் கரையின் முகன்மை புரிகிறதா? தெற்கிருந்து போனால் சோழரின் முதல்துறை கோடியக் கரையே. இங்கிருந்து உரோமுக்கும் கிரேக்கத்திற்கும் பெரும் ஏற்றுமதி நடந்தது போலும். இதற்குக் கானலம் பெருந்துறை என்ற அழகுப் பெயரும் உண்டு. அதையுந் தெரிந்துகொள்ள வரலாற்றுக் காலத்திற்குச் செல்வோம், வாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 23, 2018

various abilities

 Scalability = அலகுமை (அலகு = scale என்ற சொல்லை இன்றும் கணிதத்திற் பயன்படுத்துவர்.)
Suitability = சேருமை (சேருந்தன்மை. சட்டை, துணிகள் எடுக்கும்போது, ”இது உனக்குச் சேருமா? பொருந்துமா?” என்றே பார்க்கிறோம்.)
Susceptibility = கவ்வுறுமை (கவ்வுறுதல்= ஒருவரின் கவ்விற்கு இன்னொருவர் ஆட்படுதல்)
Reliability = நள்ளுமை (நள்ளும் தன்மை. நம்பக்கூடியது. நம்புவரோடேயே நட்பாய் இருப்போம்.)
Availability = கிடைமை
Testability = சோதிமை (எல்லாவற்றிற்கும் ஆய்வைப் பயன்படுத்தமுடியாது. பிறகு ஏகப்பட்ட முன்னொட்டுக்களைச் சேர்க்கவேண்டியிருக்கும். சோதித்தல், தமிழ்தான்.)
Maintainability = பேணுமை (பேணுதல், பராமரித்தலுக்கான நல்ல தமிழ்ச்சொல்.)
Portability = புகலுமை (புகல்= port; வான்புகல்= airport, கடற்புகல்= seaport, புகற்கடவு/கடவுச்சீட்டு = passport.)
Inter-operability = இடையியக்குமை; (operate= இயக்கு)
Compatibility = படியுமை (”படியுமா?” என்று கேட்கிறோமே? அது பொருந்துவதைக் குறிக்கிறது. அப்படி, இப்படி, எப்படி என்ற சொற்களையும் ஓர்ந்துபாருங்கள்.).
Re-usability = மறுபயன்மை
Composability = பொதிமை (பொதி என்ற வினைச்சொல் pose தொடர்பான எல்லாச் சொற்களுக்கும் பொருந்தும்.)
Trust-ability = தொள்ளுமை (தொள்>தோள்; தொள்ளுதல்= நம்பக் கூடியது).
Trace-ability = தேடுமை (தேடுவதற்கான தன்மை)
Exchange ability பரிமாற்றுமை
Secured = சேமுறுத்தியது
Integrated = தொகுத்தது. (தொகைக் கலனம் = integrated calculus; வகைக் கலனம் = differential calculus.) 
Confidential = பகரக் கூடியது (யாரொருவர் நம்பகமானவரோ, அவரோடு மட்டுமே எதையும் பகருவோம், பகிருவோம். பகர்தல் = சொல்லுதல்.)
Safe = சேமமானது
Causal = கருவிப்பது (கருதல்= உருவாதல் எனும் தன்வினை. கருவித்தல்= உருவாக்கல் எனும் பிறவினை. கருதல்/கருவித்தல் என்னும் வினைவழி எழுந்த பெயர்ச்சொற்கள் கரணம், கரம்/கருமம். இவையிரண்டும் சங்கதத்தில் காரணம் கார்யமெனத் திரியும். மீண்டும் கடன்வாங்கிப் பயனுறுத்துகிறோம். கரணம் என்றசொல் கரணியம் என்ற இன்னொரு இணைச்சொல்லையும் தமிழில் உருவாக்கும்.

கூடியமட்டும் ஒவ்வோர் ஆங்கிலச்சொல்லுக்கும் பின்னுள்ள வினைச்சொல்லை முனைந்துதேடுங்கள். பின் பெயர்ச்சொல் ஆக்குங்கள். இதன்மூலம் சங்கதத்தடையை மீறலாம். நல்ல தமிழ்ச்சொற்களைக் காணலாம். சொற்சுருக்கம் மிக முகன்மையானது. நம்சொல் ஆங்கிலச் சொல்லிற்கு விளக்கவுரை ஆகிக்கூடாது. அதேபோல ஒவ்வொரு துறைக்குமெனத் தனிச்சொல்தேடி பாத்தி கட்டிக்கொண்டிருக்கக் கூடாது. ஓர்ந்துபார்த்தால் பல சொற்கள் துறை தாண்டிய பொதுச்சொற்களே. எல்லாத்துறைகளிலும் அவை பயன்படலாம்.

அன்புடன்,
இராம.கி.

Liberty, Freedom, Independence

மீண்டும் இன்னொரு “ஒன்றுபோற் தோன்றும் 3 சொற்கள்”

ஒருமுறை (காலஞ்சென்ற) மருத்துவர் செயபாரதி தமிழிணையம் மடற் குழுவில் “விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும், ஏன் Liberty, Freedom, Independance - இற்கும் இடையே கூட, வித்தியாசமுண்டு. சிந்தனைக்கு.." என்றெழுதினார். அது மிகவுண்மை. அதுபோற் கேள்வி முகநூலில் எழுந்தது. இதுபோற் கேட்கவேண்டியது தான். ஆனால் கூகுளில் தூழாவிப் மடற்குழுச் சிந்தனைகளைத் தேட நேரஞ் செலவழியாது, இளம்நண்பர் சட்டெனக் கேள்வி தொடுக்கிறார். இதனால் முன்பேசியவற்றை மீளப் பேசவேண்டியுள்ளது. எம்போலும் முதியோருக்கு இது சற்று அலுப்பைத் தரும். ஒரு கட்டுரை எழுத வேண்டுமாயிலும், பழம் எடுகோள்களைத் (references) தேடிப் பாராது, “இன்று புதிதாய்ப் பிறந்தோமெனப்” புதிய தலைமுறை இயங்கினால், தமிழ்க்  குமுகம் தழைக்குமோ? அடுத்த நூறாண்டுகளில் தொடக்க நிலையிலேயே நாம் இருந்துவிடமாட்டோமோ? இதுசரியா? (அகரமுதலிகளைப் புரட்டிப்பாராது சொற்களைப் பற்றி அடிப்படைக் கேள்விகள் முகநூலில் எழுவதுங்கூட வியப்பைத் தருகிறது.)

இப்போது liberal, liberty என்பவற்றை முதலிற் பார்ப்போம். இதற்கான விளக்கம் தமிழிணையம் மடற்குழுவின் அதன் ஒருங்கிணைப்பாளர் சிட்னி பாலாப் பிள்ளை கேட்டுக்கொண்டதற்காக எழுதப்பட்ட  ”Masked facists and hard liberals” தொடரின் இரண்டாம் பகுதியில் (http://valavu.blogspot.in/2005/05/masked-facists-and-hard-liberals-2.html) இருக்கிறது. liberal, liberty போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. நான் பெரிதும் எடுத்துக்காட்டும் "Dictionary of word origins" - இல்

"Latin word for 'free' was liber. It came from the same prehistoric source as Greek eleutheros 'free', which may have denoted 'people, nation' (in which case the underlying etymological meaning of the word would be 'being a member of the (free) people' as opposed to 'being a slave'). From liber was derived liberalis 'of freedom', which passed into English via Old French liberal. Its earliest English meanings were 'generous' and ' appropriate to the cultural pursuits of a 'free' man' (as in 'the liberal arts'). The connotations of 'tolerance' and 'lack of prejudice' did not emerge until th 18th century, and the word's use as a designation of a particulara political party in Britain dates from the early 19th century. Also fom Latin liber came English libertine and liberty"

என்று குறித்திருக்கிறார். இச்சொல்லுக்குத் தமிழாக்கம் காணுமுன், தமிழ்ச் சொற்கடலுள் கொஞ்சம் அடியாழம் போய் அங்கிருந்து மேல்வர வேண்டும். நாம் தொடங்கும் அடியாழம் பலசொற்களுக்கு வித்தான ஊகாரச்சுட்டு இது முன்மை, தோற்றம், வெளிவிடல், உயர்ச்சியெனும் பொருள்களைக் காட்டப் பயன்படுகிறது. இங்கே முன்னிலை, தோற்றப் பொருள்களைத் தவிர்த்து, வெளிவிடலையும், உயர்ச்சியையுங் காட்ட விழைகிறேன். கீழேவரும் சொற்களில், நுணுகியவகையில் ஒரு கருத்தில் இன்னொன்று கிளர்ந்து தொடர்ச்சியாகப் பொருள் நீட்சியாவதைப் பார்க்கலாம். இந்த இயல்பு மலர்ச்சி தான், மொழியின் வளர்ச்சி. இதைப் புரிந்துகொண்டால், தமிழ் ஒரு இயல் மொழி; நாட்பட்ட மொழி என்பது புரிந்துவிடும். (வழக்கம்போல், மொழிஞாயிறு பாவாணருக்கு நாம் கடம்படுகிறோம்.)

ஊ>உ>உய்>உய்த்தல்= முன்தள்ளல், செலுத்தல்; உய்>உயிர்; உயிர்த்தல்= மூச்சுவிடுதல்; மூச்சே உயிர்ப்பு எனப்பட்டது. ஊ>ஊது= காற்றைச் சேர்த்து வெளியிடு. ஊது>உது>உதை= காலால் முன்செலுத்து. உது>உந்து= முன்தள்ளூ. உய்>உய்தல்= முன்செல்லல், செல்லல். உய்>உய்ம்பு>உயும்பு> உயம்பு=முன்செலுத்து; மேற்செலுத்து. உயம்பு>அம்பு=முன்செலுத்திய கூரான கம்பு. உய்>ஒய்; ஒய்தல்= செலுத்தல். உய்>எய்; எய்தல்= அம்பைச் செலுத்தல். (வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு பரவளைவாய் (parabola) உயரப்போய் பின் தாழவந்து தாக்குவதை ஓர்ந்து பார்த்தால் விளங்கும். இப் பரவளைப் போக்கே உயரச் செலுத்தலையும், முன்செலுத்தலையும் அடுத்தடுத்த பொருள் நீட்சியாகக் கொள்ள வகைசெய்கிறது. பறவை, அம்பு போன்றவை இப்படிப் பரவளைவாகப் போவதைக் கண்ணுற்ற ஆதிமனிதனுக்கு உயரச் செல்லலும், முன்னே செல்லலும் ஒன்று மற்றொன்றின் வளர்ச்சியாகவே தென்படும். அம்பு மட்டுமின்றி, இற்றைக் கால ஏவுகணைகள் கூட இப்படிப் பரவளைவாய் எய்யப்படுகின்றன.)

உய்>உயங்கு>ஊங்கு= உயர்வு, மிகுதி. உய்>உயர்>உயரம். உயர்>ஊர்; ஊர்தல்= ஏறல், ஏறிச்செல்லல். ஊர்>ஊர்தி. ஊர்>ஊர்த்தம்>ஊர்த்வம் (வடமொழி); முயலகன் மேலேறித் தாண்டவம் ஆடியதால் ஊர்த்துவ தாண்டவம் ("இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!" எனும் தாண்டவம்.) உய்>ஒய்>ஒய்யல்= உயர்ச்சி. ஒய்யல்>ஒய்யாரம்= உயர்நிலை ("ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈரும்பேனும்" என்ற சொலவடை.). ஒய்> ஒயில்= ஒய்யாரம், உயரக்குதித்தாடும் கும்மி; ஒயில் ஆட்டம்= குதித்தாடும் ஆட்டம் (மயிலாட்டம் ஒருமாதிரி, ஒயிலாட்டம் இன்னொரு மாதிரி.). ஓய்> ஓய்ங்கு>ஓங்கு= உயரம் (ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி....). ஓங்கு> ஓக்கு>ஓக்கம்= உயரம், பெருமை. ஓய்>ஓய்ச்சு>ஓச்சு=உயர்த்து (கடிதோச்சி மெல்ல எறிக, குறள் 572). ஓய்>ஓப்பு; ஓப்புதல் உயர்த்தல். ஓப்பு>ஓம்பு; ஓம்பல்= உடல் உயருமாறு வளர்த்தல்; பேணல், காத்தல். உய்>உய்கு>உக்கு>உக்கம் = தலை, கட்டித்தூக்கும் கயிறு

உயும்பு>உயும்புதல்= மேலெழும்ப வைத்தல். உயும்பு= jump (yu என்றிதன் மாற்றொலியோடு jumpஐப் பலுக்கிப்பாருங்கள்; விளங்கும்). உயும்பு>உசும்பு; உசும்புதல்= உறங்கினவன் மெல்ல உடம்பசைத்து எழுதல். உசும்பு>உசுப்பு= உறக்கத்திலிருந்து எழுப்பு (பிறவினை). உய்>உய்கு>உகு>உகல்; உகல்தல்= அலையெழல். உகல்>உகள்>உகளுதல்= குதித்தல்= உயர எழும்பல். உகு> உகை; உகைத்தல்=எழுதல், எழுப்பல்; உயரக்குதித்தல். குதி>கொதி; கொதித்தல்=உயர எழும்புதல் (பால் கொதி வந்திருச்சா?) குது>கொது> கொந்து>கொந்து அளித்தல்=கடல் கிளர்ந்தெழுதல் குது>குது களித்தல் = உயர எழும்பி மகிழ்ந்து இருந்தல் (குதுகலித்தலென்று எழுதுவதுமுண்டு. யாரோ வொரு நண்பர் குதுகலம் தமிழில்லை என்றார். அது தவறு.). புளித்துப் பொங்குதலும், உவர்த்துப் பொங்குதலும் உயர எழுவதுதான்.

உகு>உகின்>எகின்=புளி. உய்>உய்வு>உவு>உவர்>உவரி=உவர் நீர்க்கடல், திருச்செந்தூருக்கு அருகிலுள்ள ஊர். உவு>உவண்=உப்பு. உவணம் =உயரப் பறக்கும் பருந்து. உவணை=தேவருலகம் உவச்சன்> ஓச்சன்>ஓசன்= தெய்வத்தை ஏத்துபவன். உய்>உய்வு>உய்பு>உய்ப்பு>உப்பு; உப்புதல்= எழுதல், பருத்தல், வீங்குதல். உப்பு>உம்பு>உம்பர்= மேல், மேலிடம், தேவர் (up, upper என்ற சொற்களும் அதே பொருளைத் தருகின்றன). உய்>உய்து>உய்த்து> உத்து>உத்தம்>உத்தரம்= உயர்ந்த இடம். உத்தரியம்= மேலாக அணிந்து கொள்ளும் துணி (வடமொழிச்சொல்).உகு>உகத்தல்= உயர்தல் "உகப்பே உயர்வு" (தொல். உரியியல், 8). உத்தம்>உச்சம்= உயர்ச்சி. உத்து>உச்சு>உச்சி= உச்சமான இடம்

உய்>எய்>ஏ>ஏவு; ஏவுதல்= செலுத்தல், தூண்டல்; ஏவு>ஏவல்>ஏவலன். ஏவு= அம்பு; ஏவுகணை. எய்>எயின்>எயினன்= அம்பெய்யும் வேடர்குடி; குறிஞ்சிநில மக்கள். எய்>எயில்= மறவர் இருந்து எய்யும் மதில். உ>உன்; உன்னல்= உயர எழுதல். உன்னு>உன்னதம்= உயர்ந்தது (இதை வடமொழியெனப் பலரும் தவறாய் எண்ணுகிறார்.) உன்னு>உன்னிப்பு= உயரம். ஏ>எ>எஃகுதல்=ஏறுதல். ஏ>ஏகு>ஏகல்= மேலேசெல்லல். எக்கல்= வெளித்தள்ளல். எக்கர்= கடல் வெளித் தள்ளிய மணல்மேடு. எகிரல்= எழுதல், குதித்தல். எய்>எய்ல்>எல்= வெளிவரல்; இடைவிடாது நாள்தோறும் தோன்றி மறையும் கதிரவன்; (helios) ஒளி. எல்> எள்>எள்+து>எட்டு= உயர்ந்து அல்லது நீண்டுதொடு. எட்டு>எட்டம்= உயரம், தூரம் (சிவகங்கை வழக்கு). எட்டன்/ஏட்டன்>சேட்டன்= தமக்கு உயர்ந்தோன்; அண்ணன் (மலையாளம்). சேட்டன்>சேத்தி>சேச்சி=அக்காள் (மலையாளம்). எட்டர்= அரசனுக்கு நாழிகைக் கணக்குரைக்கும் ஏத்தாளர். எட்டி= உயர்ந்தவன், சிறந்தவன், பண்டைத் தமிழரசர் வணிகர் தலைவனுக்கு வழங்கிய பட்டம். எட்டி>செட்டி= வணிகன். எட்டு>செட்டு= வணிகனின் தன்மை. எட்டி>ஏட்டி> சேட்டி>சிரேஷ்டி (வடமொழியில் வணிகன் பெயர்). ஏட்டு>சேட்டு = வடநாட்டு வணிகன்

எட்டு>எடு= தூக்கு, நிறுத்து. எடுப்பு= உயர்வு. எடு>எடை= நிறை. எள்+னு= எண்ணு= மென்மேலும் கருது; கணக்கிடு. எண்= மென்மேலும் செல்லும் தொகை. எய்>எய்ம்பு>எம்பு; எம்புதல்= எழுதல், குதித்தல். எய்>எய்வு>எவ்வு; எவ்வுதல்= எழுதல், குதித்தல். எய்>எழு; எழுதல்= உயர்தல், கிளர்தல். எழு> எழுவு; எழுவுதல்= எழச்செய்தல். எழு>எழுச்சி=எழுந்த செயல்; எழுநிலை, எழு என்பது கட்டப்பட்ட நிலையிலிருந்து விடுபடும் நிலை குறிப்பதே. எழுந்து நிற்கும் தோற்றம் பொலிவாக உள்ளது. அது எழிலென்றே கூறப்படும். உயரத்திலிருக்கும் மேகம் எழிலி. உயரத் திரைச்சீலை= எழினி. எழல்= எழும்பல். எழுமை= உயர்ச்சி. எழுவன் உயர்ந்தவனாகிறான், எளியன் தாழ்ந்தவனாகிறான். உயர்ந்த நிலை, மிகுதியான நிலையும் ஆனபடியால் அதற்குத் தாராளப் பொருளும் வந்துவிடுகிறது.

போதல், என்றசொல் போதரல், போதருதல் என்றாவதுபோல், எழுதல் எழுதரலாகும். இப்படித் துணைவினை கொண்டு முடிப்பதும் ஒரு வழக்குத் தான். இளி எனில் இகழ்ச்சி. இளிவரல், இளிவரவும் இகழ்ச்சியே. வரலும் துணைவினையாகலாம். இப்படிப் புதிதாய் அமைவதே எழுவரல். எழுவல்> எழுவரல்= liberal. "இந்த வருசம் ரொம்ப மோசங்க; தேர்வு ரொம்பக் கடினம், எழுவரலா மதிப்பெண் (liberal-ஆ mark) போட்டாத்தானுண்டு". "என்ன படிக்கிறீங்க?" "எழுவரற் கலைங்க; வரலாறு" "தமிழகத்தில் குறிப்பிட்ட சில கட்சிகள் எழுவரற் பார்வை (liberal view) கொண்டவை; எல்லாவற்றையும் பொதுக்கையர் (fascists) என்றுவிட முடியாது. இன்னுஞ்சில கட்சிகள் எழுவரற் பார்வைக்கும் மேலே புரட்சிப்பார்வை (revilutionary view) கொண்டவை. குறிப்பாய்த் தாழ்ந்தமக்கள் (dalit people; தலித் எனும் மராட்டிவழக்கைப் பலுக்காது, தமிழ்வழக்கையே சொல்லலாம்) கட்சியெனில், புரட்சி, மறுக்காமல் இருக்கும். எழுவரல் எனும்போது "ஏற்றுக்கொள்ளூம் தன்மை" (tolerance), "பிரித்துப்பாராத் தன்மை (lack of prejudice) போன்றவையும் புலப்படும். "liberal" -இக்கு முலமான "எழுதல்", நம்மிடம் ஏற்கனவே இருப்பினும், ”எழுவரல்” எனும் வளர்ந்தகருத்து நமக்கு வெளியிலிருந்து வந்ததே. 

எழுவரல், liberal உக்கு ஆவது போல் எழுவுதி, liberty க்குச் சரிவரும். எழுவுதி = எழமுடியுந் தன்மை; தாழாத்தன்மை; யாராலும் தடுத்து நிறுத்த முடியாத் தன்மை. ஆனால் இச்சொல்லிற்கு ஈடாகச் சுதந்திரம், விடுதலை என்று பலரும் மாறிப் பயன்படுத்துகிறார். துல்லியங் கருதின், சொல்லாட்சிகளை மாற்ற வேண்டுமென்றே நான் சொல்லுவேன். சில ஆங்கில வாக்கியங்களைப் பார்ப்போம்.

I have the liberty to do it. அதைச் செய்ய எனக்கு எழுவுதி உண்டு.
They lost the liberty and became slaves. எழுவுதியை இழந்து அடிமைகள் ஆனார்கள்.
Liberty is in-alienable birth right. எழுவுதி என்பது என்னிடம் இருந்து அயலிக்க முடியாத பிறப்புரிமை.

இனி freedom என்ற சொல்லைப் பார்ப்போம். (http://valavu.blogspot.in/2005/05/liberty-freedom-independance.html) சொற்பிறப்பியலின் படி, The prehistoric ancestor of free was a term of affection uniting the members of a family in a common bond, and implicitly excluding their servants or slaves - those who were not 'free'. It comes ultimately from Indo -european *prijos, whose signification ' dear, beloved' is revealed in such collateral descendents as Sanskrit priyas ' dear', Russian 'prijatel' 'friend', and indeed English friend. Its Germanic offspring *frijaz, displays the shift from 'affection' to 'liberty,' as shown in German frei, Dutch vrij, Sweedish and Danish fri, and English free. Welsh rhydd 'free' comes from the same Indo-European source. என்று சொல்வர்.

இவ்விளக்கத்தின் படி "தமிழில் உறவின்முறை என்று தென்மாவட்டங்களில் சொல்லுகிறாரே, அந்த உறவின் முறையில் உள்ளவர் எல்லாம் free; மற்றவர் free இல்லாதவர் என்று பொருள்படும்.. இவ் உறவின் முறையிலுள்ள நம்மவர் எல்லாம் பரிவுள்ளவர்; பரிவுக்குரியவர். மற்றவரோ பரிவுக்கு உள்ளுறாதாவர். "பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து" என்பதை எண்ணுங்கள். பரிதலென்பது உற்றவருக்கு உரியது. இப்பரிவு நம்முறவுக்கும், வகுப்பினருக்கும், இனத்தவருக்கும், மொழியினருக்கும் நாட்டினருக்கும் மட்டுமல்ல, மாந்தனாய்ப் பிறந்த எல்லோர்க்கும் உரியதென்பது இற்றைச் சிந்தனை. இதில் பரியுடைமை என்பதே freedom. (பரிவுடைமைக்கும் பரியுடைமைக்கும் வேறுபாடு கொண்டால் நன்று.) தமிழ் உடைமை கொண்டாடுவது தமிழுடைமை - tamildom; அரசன் உரிமைகொண்டாடுவது அரசனுடைமை - kingdom. இறைவன் எல்லோர் மேலும் உடைமை கொண்டவர் ஆதலால் அவர் உடையார். தஞ்சைப் பெருவுடையாரென்ற சொல்லை ஓர்ந்து பாருங்கள். அதைப்போலப் பரியுடைமை.

"அவனுக்குப் பரிந்து கேள்விகேட்க வருகிறாயே?" எனில் அவன் பரியுடைமையை நானோ, என் பரியுடைமையை அவனோ, விட்டுக்கொடுக்க இயலாது என்றே பொருளாகும். "நான் பரியாமல் வேறு யார் பரிவார்? நான் அவன் உறவுக்காரன்; அவன் ஊர்க்காரன்; அவன் நாட்டுக்காரன்; அவன் மொழிக்காரன்; அவனும் நானும் மாந்தர்கள்" என்று பரியுடைமை நமக்குள் விரியும். பரி(தன்)மையை freeness எனலாம். பரிமையை உடைமையாகக் கொண்டால் அது பரியுடைமை. இப் பரியுடைமை என்பது நம்மோடு கூடப் பிறந்தது தான். இதைத்தான் விட்டவெளித் தன்மை என்றும் விடுதலை என்றும் மொழிபெயர்க்கிறோம். ஒருவகையில் அது சரியெனினும், அடிப்படைப் பொருளை, விட்டவெளித் தன்மை / விடுதலை என்பது, தனித்து நின்று, கொண்டுவரவில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

ஒரு குறுகிய அரங்கை (range) மட்டும் பார்த்து இச்சொல் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்தது. குறுகிய அரங்கென்று ஏன் சொல்கிறேனெனில் விடுதலை எண்ணும்போது நாம் முன் அடைபட்ட நிலை உள்ளே தொக்கி நிற்கிறது. அடைதலைக்குப் புறந்தலையாக விடுதலை எனும்போது ஏதோ ஒரு குறை, எதிர்மறைச் சொல்போற் தொனிக்கிறது. பரியுடைமை என்பது நேரடியாக பரிந்துவரும் போக்கைச்சுட்டும். எழுவுதியும் பரியுடைமையும் ஒன்றாவெனில் ஏறத்தாழ ஒன்று. ஆனால் நுணுகிய வேறுபாடுண்டு. எழுவுதியில் தன்முனைப்போக்கு முகமையாகும். பரியுடைமையில் சுற்றியுள்ளோரைக் கருதும்போக்கு முகமையாகும். அடிமைத்தளையிலிருந்து பரியுடைமைக்கு வருகிறோம். இதைச் செய்ய எனக்கு எழுவுதி வேண்டும். எழுவுதியை நிலைநாட்டி அதன்மூலம் பரியுடைமை அடைகிறோம்.

அடுத்து independence: ”புடலங்காய் பந்தலில் தொங்குகிறது”, ”நீலவிதானத்து நித்திலப்பூம் பந்தற்கீழ் மாலை மாற்றினர்”, எனும்போது, பந்தல் மேலிருந்து தொங்குவதை புரிந்துகொள்கிறோம். பந்தல், காலில் நிற்கலாம்; மோட்டு வளையில் முட்டுக்கொடுத்தும் தொங்கலாம். பந்துதலின் அடிப்படை கட்டுவதே. கட்டுமானப் பெயர் பந்தல்/பந்தர். ஒலை, துணி, தகரமெனக் கட்டும் பொருளுக்குத் தக்க பந்தல் அசையும்; ஆடும்; உயரும்; தாழும். இத்தகைய இயக்கம் மேலுமின்றிக் கீழுமின்றி நடுத்தரமாய் உள்ளதால் பந்தரித்தல் என்றும் பந்தரமென்றும் பின் அந்தரமென்றும் உருத் திரியும். பந்தப்படுவது, கட்டப்படுவதே. ஒன்றைச்சார்ந்து அல்லது அடுத்து, பந்தப்படுவது depend ஆகும். அதாவது பந்தப்பட்டு நிற்பதே depend. பந்தப்பட்ட நிலை dependent status. பந்தப்படாநிலை = independent status. இன்னொன்றைச் சாராநிலை. இதைத் தன்காலில் நிற்கும் நிலையென்று கொண்டு வடமொழியில் சுவதந்திரம் என்றார். தனிப்பட்ட, தனிநிற்றல், தன்னாளுமை என்றும் நற்றமிழில் மொழி பெயர்க்கலாம். வெறுமே independent என்பதில் பொருள்வராது. independent of what என்றகேள்வி உடனெழும். பலவிடங்களில் இதன்விடை தொக்கி நிற்கலாம். தொக்கிநிற்கும் இடங்களில் விடுதலை, சரியாகும்.

சிலர் independant ஐத் தன்னுரிமை எனச்சொல்ல விழைவர். தன்னுரிமை= self-right; liberty அல்ல. எத்தனையோ liberals, self-right groups- இல் உறுப்பினராவார். liberalism is different from self-right. பெரியார் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் திராவிடர் கழகமாய் மாற்றினார். அது ஒரு தன்னுரிமைக்கழகமே. அதை liberal ஆகக்கொள்வது அவ்வளவு சரியாகாது. self-righteous attitude- ஐயும் liberal attitude- ஐயும் எப்படிப் பிரித்துச்சொல்வது? தன்னுரிமை, எழுவுதி என என் வழியில் முடியும். A self-righteous individual need not be a liberal. தன்னுரிமையாளன் எழுவுதியாளனாய் இருக்க வேண்டியதில்லை. தன்னாண்மை, ஆணாதிக்க உணர்வைக் காட்டுமென்பதால் அதுபோன்ற சொல்லாக்கம் தவிர்ப்பது நல்லது. management - இற்குப் பலரும் பயன்படுத்தும் ’மேலாண்மையை’ இதே காரணத்தால் தவிர்ப்பேன். அதோடு, to manage -இற்கு இணையாய், சுருங்கி, ’மேலாளல்’ வருவதில்லை. அதன்பொருள் to rule over என்றாகும். அதற்கு மாறாய் மானகைத்தல்= மான் (மாந்தரின் வேர்)+ அகைத்தல் (செலுத்தல்)= மாந்தரைச் செலுத்தல்= to manage என்றே பரிந்துரைக்கிறேன். இனி independent -ஐப் பயனுறுத்திச் சில வாக்கியங்களைப் பார்க்கலாம்.

India became independent in August 15, 1947. இங்கே independent of British rule எனத் தொக்கிநிற்கிறது. ”இந்தியா 1947 -ல் ஆகசுடு 15 -இல் விடுதலை அடைந்தது” எனலாம் அல்லது 1947, ஆகசுடு 15- இல் பந்தம் விடுத்ததென்றுஞ் சொல்லலாம். There are 4 independent producers other than the MNC's for this drug in India. இங்கே விடுதலையும், வடமொழிச் சுதந்திரமும் சரிவரா. தனித்த, தனிப்பட்ட, சாராத, பந்திலாத போன்றவையே சரிவரும். ”தனிப்பட்ட/ தனித்த” மிகச் சரியாகப் பொருந்தும். "இந்தியாவில் இம்மருந்திற்கு பன்னாட்டுக் குழுமங்களைத் தவிர்த்து 4 தனித்த விளைப்பாளிகள் உள்ளனர்." independence= பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை. freedom- இற்கும் independence- இற்கும் ஒற்றுமைகள் நிறையவிருந்தாலும் நுணுகிய வேறுபாடுமுண்டு. காட்டாகப் பரியுடைமை, இந்தியாவைப் பொறுத்தவரையில் எதிர்காலத்துக்கும் உண்டு; எந்நாளும் கையாளலாம்; ஆனால் காப்பாற்றவேண்டும். தன்னாளுமை, வந்துசேர்ந்துவிட்டது. இழக்காதவரை, அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். மூன்று சொற்களுக்கும் இதுவரை கூறிய விளக்கங்கள் போதுமென எண்ணுகிறேன். துல்லியங்கருதி கீழ்க்கண்டவாறு தமிழில் புழங்கலாம்.

Liberty = எழுவுதி
freedom = பரியுடைமை
independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

அன்புடன்,
இராம.கி.