Tuesday, May 28, 2019

நாத்தி - 3

 இந்தியாவிற்குள் மாந்தக் குடியேற்றம் 4 முறை, நடந்திருக்கலாமென ஈனியல் ஆய்வு சொல்லும். முதற்குடியேற்றம் (NRYC - M130) 65000 ஆண்டுகள்முன் மேற்குக்கடற்கரை வழி நடந்ததென்றும்; 2 ஆம் குடியேற்றம் (NRYF - M20) 30000 ஆண்டுகள்முன் ஏற்பட்டதென்றும் (இது எவ்வழியென அறியப்படவில்லை. இதிலிருந்து NRYH என்ற கூட்டமும் உருவானது). 3 ஆங் குடியேற்றம் (R1a1) 9000 ஆண்டுகள்முன் வடமேல் மேற்கு (North West West) நிலவழி ஏற்பட்டது என்றும். 4 ஆங் குடியேற்றம் (இவர் R1a1 இல் இருந்து சற்றே வேறுபட்டவர். இவரே ஆரியர் என்று அறியப்பட்டவர்.) 3500 ஆண்டுகள்முன் வடவட மேற்கு (North North West) நிலவழி என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இற்றை இந்திய மக்கள் தொகையில் 30000 ஆண்டுகள் முன் குடியேறிய (NRYF - M20) மக்களே 50% அளவு ஆவார். இவரே திராவிடர் ஆகலாமென்றும் சொல்வர். ஆனால் இன்று, இற்றைத் திராவிடருள் மற்ற 3 குடியினரும் பெரிதுங் கலந்துவிட்டனரென்றே ஈனியல் சொல்லும்.

திராவிடப் பழம்மொழியான தமிழ் எப்போது எழுந்ததென்று இன்னும் தெரியாது. பென்னம்பெரும் உரையாடல்கள் இன்னும் நடக்கின்றன. ஒரு பக்கம் தமிழின் அகவை குறைப்பதும், இன்னொரு பக்கம் அதை உயர்த்துவதும் நடந்துவருகின்றன. முந்தைத்திராவிடர் ஒருவேளை கடற்கரைவழி வந்திருப்பாரானால், மேற்குக்கடற்கரை நெய்தலே அவருக்கு முதலிற்பழக்கமாகும். (என் முந்தைக் கட்டுரைகளில் இதுபற்றி நெடுகப் பேசியுள்ளேன்.) தென்னிந்தியப் பூகோள அமைப்பால் மேற்குநில நெய்தலுக்கு அப்புறம் மேற்குத்தொடர்ச்சிமலை சார்ந்த குறிஞ்சியே பழங்குடிகளுக்குத் தென்படும், குறிஞ்சி வாழ்வு பெரும்பாலும் வேடுவச்சேகர (Hunter Gatherer) வாழ்வே. முதலில் தாய்வழிக் குமுகத்திலிருந்து பின் தந்தைவழிக் குமுகத்திற்கு இத்திணையார் மாறியிருக்கலாம். (அதாவது மருமக்கள் தாயத்திலிருந்து மக்கள் தாயத்திற்கு மாறியிருக்கலாம்.) தாய்வழிக் குமுகத்தில் குடும்பம், தனிச்சொத்து, அரசு போன்றவை கிடையாது. தந்தை வழிக் குமுகாயம் ஏற்பட்டபின்னரே இவையெழுந்தன.

இந்நிலையில் பழந்தமிழர் குறிஞ்சியிலிருந்து கீழிறங்கி முல்லைக்கு வந்தார். முல்லையில் அரசு ஏற்பட்டதைக் கோனென்ற சொல்லே எளிதிலுணர்த்தி விடும். கிழார், கோன், வேள், வேளிர், அரையன், மன்னனென்ற சொற்கள் எல்லாம் முல்லைத்திணையிலேயே ஏற்பட்டுவிட்டன. வேந்தன் என்பது மருதம் ஏற்பட்டபின் எழுந்திருக்கலாம். மாந்தரிடம் முதலிலேற்பட்ட சொத்து என்பது மாடுகளே. முல்லை வாழ்க்கையில் ஆணாதிக்கம் ஏற்பட்டுவிட்டது. மருவிக்கொண்ட மருமகள் தன் மாமனார் வீட்டிலும்/குழுவோடும் சேர்ந்து வதியும் பழக்கமும் அதன்பின்னே ஏற்பட்டது. நாத்தனார் என்னும் உறவு ஆணாதிக்க முல்லையில் தோன்றவே பெரும்வாய்ப்புண்டு. ஊனோடு, கான்பழங்களும், காய்கறிகளும், புன்செய்ப் பயிர்களுமே முல்லையில் உணவாயின. நெல்பயிரிடல் என்பது முல்லை வாழ்க்கையில் எழவில்லை. தவிர, நெல் நம்மூரிலெழுந்த கூலமும் இல்லை.

தொடக்க காலத்தில் காவிரிச் சமவெளியும் ஒரு காடுதான். அங்கே மருதம் முதலில் ஏற்படவில்லை. ஆனால் அங்கும் மாந்தர் அலைந்துதிரிந்தார். நெல்லும் நீர்ப்பாசனமும் நம்மூரில் நுழைந்தபின்னரே மருதத்திணை ஏற்பட்டது. ஏறத்தாழ 8000-5000 ஆண்டுகள்முன் சீன யாங்ட்சி ஆற்றங்கரையில் இருந்தோ, யுன்னானிலிருந்தோ, தென்கிழக்கு ஆசியாவிலிருந்தோ, இந்தியாவினுள் நெல் நுழைந்திருக்கலாம் என்பதே பழம்புதலியலாரின் (paleobotanists) முடிவு. எல்லாவற்றிற்கும் சிந்துசமவெளியைத் தூக்கிப்பிடிக்கும் போக்கை நான் ஏற்பதில்லை. நெல் இந்தியாவின் வடமேற்கிலிருந்து வரவில்லை. தவிர, சிந்துசமவெளியாருக்கு, தென்கிழக்காசியா எனும் நிலம் இருந்ததே தெரியாது. (நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் பற்றி இத்தொடரில் பேசமுடியாது. வேறுதொடரில் செய்வேன்.)

இப்போதைக்கு நாற்றுநடும் பழக்கம் நெல்பயிரிடலுக்கு அப்புறமே வந்தது என்ற செய்திமட்டும் போதும். அதாவது 8000-5000 ஆண்டுகளுக்கு அப்புறமே அப்பழக்கம் வந்தது. நாத்தனாரெனும் உறவோ அதற்கும் முன்னே ஏற்பட்டு விட்டது. எனவே நாற்றைவைத்து நாத்தனார் என்றசொல் எழ வாய்ப்பில்லை. அடுத்து ”நா+ துணையார்= பிறந்தகத்திலிருந்து, புகுந்தகத்திற்கு வந்த பெண்ணுடன் உறைந்து, ஆறுதலும் தேறுதலும் தரும், கணவனின் தமக்கை அல்லது தங்கை” எனும் விளக்கம் சொல்லைமாற்றி பொருள்சொல்வதாகும். நாத்தூண்நங்கை என்பதை நாத்துணை என்பது “கதா காலாட்சேபம்” செய்வோரின் திரிபுமுறை. அது பொருந்தியதைப் புகல்வது போன்றது.. முற்றிலும் முறையற்றது. நாத்தூண்நங்கை என்பதை நாத்துணையார் என்று தந்திரமாய்த் திருத்துவது பேச்சரங்கத்தில் சரிவரலாம். ஏரணத்திற்குச் சரிவராது. நாத்தூண் நங்கை குறித்த ”புகுந்தவீட்டார், பிறந்தவீட்டைத் தாழ்த்திப்பேசினால், புதுப்பெண் தன் வீட்டுப்பெருமையைத் தூணாகநின்று காப்பவளென்று, பொருள்படும்” என்ற  3 ஆம் விளக்கமும் எடுபடாது. ஏனெனில் தூணென்ற பெயர் அங்கில்லை. நாத்து ஊழ்நங்கையில் வரும் ”ஊழ்நங்கை” இலக்கணப்படி வினைத்தொகை. இருபெயரொட்டுப் பண்புத்தொகை இல்லை. . .

அடுத்து வடமொழி வழி சொல்லும் நாலாம் விளக்கத்திற்கு வருவோம். நநந்த்ரி, நநாந்த்ரி போன்றவை வடசொல் தோற்றங் காட்டலாம். ஆனால், மோனியர் வில்லியம்சு பார்த்தால், இவற்றிற்கு எந்த வேர்ச்சொல்லும் கொடுக்கப்படவில்லை. நநந்த்ரி என்பது எந்தச் சான்றுமின்றி அகர முதலிகளில் மட்டுமே பயில்கிறதென மோனியர் வில்லியம்சு அகரமுதலியே சொல்லும். நநாந்த்ரி என்றசொல் இருக்கு வேதம் 10 ஆம் மண்டலம் 85,46 இல் பயில்வதாய்ச் சொல்லப்படும். (இருக்கு வேதத்தை ஆய்ந்தோர் முதல் மண்டலமும், 10 ஆம் மண்டலத்தில் 84 ஆம் போற்றிக்கு அப்புறம் வரும் பாக்கள் பிற்சேர்க்கை என்பார். மற்ற மண்டலங்கள் பொ.உ.மு.1200 என்பார். .இங்கு சொல்லப்படும் பிற்சேர்க்கை எப்போது நடந்ததென்று தெரியாது. இருக்குவேதம் எழுத்துவடிவில் வந்துசேர்ந்தது பொ.உ.500 களுக்கு அப்புறமே.) 10 ஆம் மண்டலம் 85 - 45, 46 இல் வரும் வரிகள் கீழேயுள்ளன.   

10.085.45a imÀÎ tvam indra mÁËhvaÏ suputrÀÎ subhagÀÎ kÃÉu |
10.085.45c daÌÀsyÀm putrÀn À dhehi patim ekÀdaÌaÎ kÃdhi ||
10.085.46a samrÀjÈÁ ÌvaÌure bhava samrÀjÈÁ ÌvaÌrvÀm bhava |
10.085.46c nanÀndari samrÀjÈÁ bhava samrÀjÈÁ adhi devÃÍu ||

இதன்பொருளாய்

10.085.45a. Bounteous Indra, make this bride blest in her sons and fortunate.
10.085.45c. Vouchsafe to her ten sons, and make her husband the eleventh man.
10.085.46a. Over thy husband's father and thy husband's mother bear full sway.
10.085.46c. Over the sister of thy lord, over his brothers rule supreme.

சொல்வர். கணவன் வீடு வந்துசேர்ந்த மருமகள் நிறையப் பிள்ளைகள் பெறுவதற்கும், கணவனின் கவனிப்பு சிறப்பாய் அமைவதற்குமான இந்திரனின் ஆசிவேண்டியும், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனாரின் நல்ல கவனிப்பு நாடியும் சொல்லப்படும் பா இதுவாகும். ஆழ்ந்து ஓர்ந்தால் இது ஆணாதிக்கம் ஏற்பட்டபிறகு எழுந்த கண்ணி என்பது புலப்படும். நநாந்த்ரி என்ற சொல் சங்கதம், பாகதம், பாலி தொடர்பான இந்திக் மொழிகள் தவிர வேறு இந்தையிரோப்பியன் மொழிகளில் கிடையாது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ஆரியர் இந்தியாவினுள் நுழைந்தபோது வேடுவச் சேகர நிலையிலில்லை. முல்லைவாழ்க்கையில் தம் ஆடு மாடுகளுடன் தாம் அவர் உள்நுழைந்தார். அவருடைய குமுகமும் அந்நிலையில் ஆணாதிக்கக் குமுகம் ஆகிவிட்டது. அவர் நுழைந்தபோது வட தமிழர்/திராவிடர் நகர நாகரிகம் கடந்து மருத நாகரிகம் (கோதுமை, நெல் வழியாக) அடைந்துவிட்டார். மாடமாளிகை கூட கோபுரம் என்பன மருதவாழ்வில் தான் எழும்,

தமிழர்/திராவிடரைப் பார்த்தபின்னரே, நநாந்த்ரி என்ற இச்சொல் ஏற்பட்டிருக்கலாம். ”நாத்தி”க்கு அருகில் முன்சொன்னதுபோல் பல்வேறு திராவிடச்சொற்கள் உள்ளன. தமிழிய மொழிகளிலிருந்தே பாகதமும், பாலியும், சங்கதமும் பெற்றன என்று சொல்வதே முறையாகத் தெரிகிறது. ஆனால், பெயரனைத் தாத்தன் ஆக்குவது என்று முடிவு கட்டிவிட்டவருக்கு நான் சொல்வது ஏற்காது. அவரோடு வாதாடுவது பொருளற்றது. இதுவரை சொன்னக ருத்துக்களால், நாத்தி என்ற சொல் குறைந்தது பொ.உ.மு.1500 க்கு அருகில் தமிழிய மொழிகளில் இருந்திருக்கலாம் என்பதே என் கூற்றாகும்.

அன்புடன்,
இராம.கி.

Monday, May 27, 2019

நாத்தி - 2.

இராம.கி.யின் இரண்டாம் விளக்கம்

நுந்துதல் என்பது முந்துதலின் போலி. முன்வருதல்/முன்தள்ளுதல் என்று பொருள். நுந்துதல்>நந்துதல் என்ற அடுத்தவளர்ச்சியில், வளர்தல், தழைத்தல், பெருக்குதல். விளங்குதல், செருக்குதல், என்றும் பொருள்கள் பெருகும். நாளும் வீட்டில் வளர்ந்த நம் மகன் நந்தன் எனப்படுவான். நாளும் வளர்ந்த நம் மகள் நந்தனி/நந்தனை எனப்படுவாள் (அகரமுதலிகளைத் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சொல்கிறேனென நம்பவேண்டாம்.) நந்தினியை நந்தி என்றாலும் பொருள் வந்துவிடும். பெருத்து, முன்வந்திருக்கும் வயிற்றைக் கொண்ட மாடு நந்தி/நந்து. நந்துகளை மேய்ப்பவன் நந்தன். நந்தனுக்கு இடையனென்றும் பொருளுண்டு. திருநாளைப் போவாரான நந்தனார் கூட ஓர் இடையனாகலாம். திருப்பாவையின் முதல்பாட்டில் ”சீர்மல்கும் ஆய்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்” என்பது ஒரு வரி. நந்தகோவன் இங்கே நந்தகோபனாகிறான். (நந்தர்களின் தலைவன்.) நந்தல்= வளர்க்கப்படுதல் நந்தல்வனம்>நந்தவனம்= மாந்த முயற்சியில் வளர்க்கப்பட்ட வனம் (நந்தவனத்தையும் வடசொல் எனச்சிலர் எண்ணுவார். பாதிக்கு மேலான தமிழ்ச்சொற்களை போகிற போக்கில் வடமொழிக்குத் தானமளிப்போர் நம்மில் அதிகம் எனும்போது, பேசாது இருந்தால் தப்பு.)

இப்போது நந்தனுக்கு/மகனுக்குக் கல்யாணமாகிறதென வையுங்கள். வந்துசேரும் மருமகள் தன்கணவனின் தமக்கை/தங்கையை உளப்பாட்டுப் பன்மையில் ’நம்’ போட்டு நம்நந்தி>நந்நந்தி என்றழைத்தால் தவறா? (ஈழத்தலைவர் பிரபாகரனை அவருக்கு உறவிலாத எத்தனையோ பேர் தம்பி என்றாரே? அது தவறா?) நந்நந்தி>நந்நாந்தி>நந்நாந்த்ரி என்று சங்கதத்தில் ஆவதும், நநந்தா எனப் பாலியில் ஆவதும், நநத் என்று சூரசேனி/ காரிபோலி/ இந்தியில் ஆவதும் நம்மைக் குழப்பிவிடுமா? அவற்றின் வேரை மோனியர் வில்லியம்சு எங்காவது குறித்திருக்கிறதா? இல்லையே? நாந்தி நீண்டு நந்நாந்தி ஆனதா? அல்லது நந்நாந்த்ரி திரிந்து நாத்தி ஆனதா? இதற்குச் சான்று எங்கே? அதெப்படி முதல் நந்நை வெட்டி நம் சொல்லை ஆக்கமுடியும்? அது ஏரணத்திற்குப் பொருந்தி வருமா? தலைகீழாய் ஓர்ந்துபார்த்தால் பொருந்துகிறதே? ஏனிப்படிக் கொஞ்சமும் பெருமிதமின்றி நடந்து கொள்கிறோம்? நம் வீட்டுச்சொல்லை வெளியார்சொல் என்று சொல்வதில் அவ்வளவு நாட்டமா? (வடமொழிக் குழப்பத்தைக் கீழே விளக்குவேன்.)

மேற்சொன்ன 2 விளக்கங்களின் படி பார்த்தால், நாத்தனார் என்ற சொல் தமிழ் தான். இனி இராம.கி.யின் மூன்றாம் விளக்கத்திற்கு வருவோம். இதற்குள் போகுமுன் கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம். ஈ என்பது தன்மையையும், ஊ என்பது முன்மையையும், ஆ என்பது படர்க்கையையும் குறிக்கும் தமிழ்ச் சுட்டடிகளாகும். இச்சுட்டடிகள் நெடிலாய் மட்டுமின்றிக் குறிலாயும் பயன் படுகின்றன தன்மைச் சுட்டடியான ஈ>இ யோடு, அங்காத்தல் ஒலியான அகரஞ்சேர, பேச்சுவழக்கில் அது ஏ>எ எனத்திரியும். தவிர, இகர உயிரோடு யகரமெய் ஏறிப் போலியாய் ஒலிக்கக்கூடிய காரணத்தால், இகர/ஈகார/ எகர/ஏகாரங்களோடு, யகரமெய் முன்னூர்வதும் தமிழர்க்குள்ள பழக்கமே. நாளடைவில் ஆகாரஞ் சேர்ந்த யகரமும், எகர உயிருமே தன்மையை உணர்த்தின. இவற்றின் ஈற்றில் மூக்கொலியேறி யான், என், யாம், எம் போன்ற சொற்கள் எழுந்தன. னகரவீறு ஒருமையையும், மகரவீறு பன்மையையும் குறிக்கும். ய்>ஞ்>ந் எனுந்திரிவும் தமிழிலுண்டு. யான் என்பது ஞான், நானெனத் திரிவது இதுபோல் திரிவாற்றான். மலையாளத்தில் பயிலும் ”ஞான்” தமிழில் வழக்கற்றுப்போனது. ”யாம்” நாமெனவுந் திரியும். ”யாம்” இயல்பான தன்மைப்பன்மையையும், ”நாம்” உளப்பாட்டுப் பன்மையையும் குறிக்கும்..

ஊ>உகார முன்மைச் சுட்டடியில் மூக்கொலிசேர, நூ>நு, நூன்>நுன் எழுந்தன. நூ, நூன், நூம் என்பன நீ, நீன், நீம் எனவும் திரியும். நாளடைவில் நுகர உயிர்மெய் வந்தாலே முன்னிலை உணரப்பட்டது. பல்வேறு உறவுச் சொற்களில் இதைக் காணலாம். நும்பின்>நும்பி>நொம்பி, நுமந்தை>நுவந்தை>நுந்தை>நொந்தை, நுமண்ணன்>நுவண்ணன்>நுண்ணன்>நொண்ணன், நுமையன்>நுமயன்>நுவயன்>நொய்யன் = உம் தமையன், தந்தை, தலைவன், நுமக்கை>நுவக்கை>நுக்கை>நொக்கை (நொக்கா என்றுஞ் சொல்லப்படும்.)  நுமங்கை>நுவங்கை>நுங்கை>நுவ்வை= உன்தங்கை போன்றன எடுத்துக்காட்டுகளாகும். (அக்கை = தன்னில் பெரியவள். அங்கை = தன்னில் சிறியவள்.) நிங்ஙள் மலையாளம்; க,து, கோத = நிம்; தெ. ஈறு, மீறு; து இரு, மிரு; கொலா நிர், நா. நிர்; பர் இம், கட இம்; கோண் இம்மக் நிம்மக், நிமெக்; கூ ஈறு; குவி மீம்பு, குரு நீம்; மால நம் பிரா நும். மேற்சொன்ன சொற்கள் ஞுகரப்போலியிலும் வரலாம். இன்னுஞ் சிலர் இதை ஙுகரமாய்ப் பலுக்குவதுண்டு.

பேச்சுவழக்கில் நொப்பா/ஞொப்பா/ஙொப்பா என்றும், நொம்மா/ஞொம்மா/ஙொம்மா என்றும், நோத்தா/ஞோத்தா/ஙோத்தா என்றும், நொ(/ஞொ/ஙொ)ண்ணன் என்றும், நொ(/ஞொ/ஙொ)க்காள் என்றும் முன்னிலையில் இருப்பாரின் உறவினர் அழைக்கப்படுவது தென்பாண்டியில் மிகுதி. நும்வீடு என்பது நுவ்வீடென்றும், நுன்நாடு என்பது நுன்னாடென்றும் மெய்ம்மயக்கங் கொள்வதும் இவ்வழிப்பட்டதே. தன்மையையும் முன்னிலையையும் சேர்த்து உளப்பாட்டாய்ப் பேசுகையில், எம்மும் நும்மும்  நம்மாய் மாறும். நாமும் (முன்மையும், தன்மையும் சேர்த்த.) உளப்பாட்டுப் பன்மையைக் குறிப்பதே. யாயும் ஞாயும் யாராகியரோ? - என்பதில் வரும் யாய் என்பது என் தாயையும், ஞாய் என்பது உன் தாயையுங் குறிக்கும்.

அடுத்து, ’அகம்’ என்ற சொல் பற்றிப் பார்ப்போம். நம் வீட்டில் பிறந்த மகளுக்கும், மகனின் மனைவியாய் வந்துசேரும் மருமகளுக்கும் (அவள் மருவிய/தழுவிக்கொண்ட மகள்) பொதுவான அகம் என்பது வீட்டைக் குறிக்கும். அகத்தின் வேர்ச்சொல் அள் என்பதே. மாந்த வாழ்வின் தொடக்க காலத்தில் மலையிலோ, மண்ணிலோ பள்ளம் பறித்தே வீடு கட்டினார். தொள்ளல்= துளைபடல். அள்கு>அகு; அகுதல்= தொள்ளுதல்; அகுத்தல்= தோண்டுதல்; அகம்= தோண்டப்பட்ட இடம். எம்மகம், உம்மகம், நம்மகம் என்பன சுட்டடிசேர்ந்த கூட்டுச்சொற்கள்.

அடுத்து, பேச்சுவழக்கில், சொன் முதல், இடைகளில் வரும் மகரமானது வகரமாய் மாறுவது பல சொற்களில் நடந்துள்ளது..பெரும்பாலான வகரச் சொற்களின் வேர் கூட மகரத்திலேயோ, பகரத்திலேயோ தொடங்கும். தவிர யாப்பு விதிகளின் படி, மகரச் சொற்களுக்கு வகரச் சொற்களை மோனை ஆக்கலாம். ம>வ>0 (மகரம் வகரமாகிப் பின் இல்லாது போவது) என்பதும் ப>வ>0 என்பதும் மொழியியல் சொல்வளர்ச்சியில் ஒரு விதப் போக்கு. எனவே தன்மைப் பன்மையில் எம்மகம்>எவ்வகம் என்றும், உம்மகம்>உவ்வகம் என்றும், நம்மகம்>நவ்வகம் என்றுந் திரிவது தமிழ்ப்பழக்கமே. இச்சொற்களின் வளர்ச்சியைக் கீழே பார்ப்போம்.

ஒரே அகத்தைச் சேர்ந்த மருமக்களை ஓரகத்திகள் என்பது போல், நவ்வகஞ் சேர்ந்தவள் நவ்வகத்தி. (மகர ஈற்றுச் சொற்கள் புணர்ச்சியில் அத்துச்சாரியை பெறும்.) நவ்வகத்தி, நம்வீட்டின் மகளாவாள். மருமகள் பார்வையில் இவள் கணவனின் சோதரி. அத்தையின் மகள். நகரத்தார் குல மருமக்கள், கணவன் சோதரியை அத்தைபெண்டிர் (= அத்தை மகள்)> அயித்தைபெண்டிர்> அயித்தியாண்டி என்பார். கொள்ளல் வினை கொழுதலாகும். கொண்டவன் கொளுநன்>கொழுநன். கொழுநவன் என்ற சொல்லே  கொணவன்> கணவன் ஆகிறது. கொழுநன், கணவன் என்ற சொற்கள் ஆணாதிக்கக் குமுகாயச் சொற்களே. மனைவி தன் கணவனை அத்தான் என்பாள். அ(ய்)த்தையை ஒட்டிவந்தது. அ(ய்)த்தையன். பின்ளாளில் அய்த்தான்> அத்தான் ஆயிற்று. இன்று சில வட்டாரங்களில் இது அத்தை மகனையுங் குறிக்கும். கொழுநனின் உடன்பிறந்தான் கொழுந்தன். (அதாவது கொழுநன் ஆகக் கூடியவன்). இதேபோல் ஆண்மகன் தன்மனைவி சோதரியைக் கொழுந்தி என்றழைப்பான். (அதாவது மனைவி ஆகக் கூடியவள்.)

இங்கே நம் என்பது மருமகளும், அவளல்லா வீட்டு உறுப்பினருஞ் சேர்த்த உளப்பாட்டுப் பன்மையைக் (inclusive plural) குறிக்கிறது. முடிவில் நவ்வகத்தி> நவத்தி>நாத்தி என ஆவது பலுக்கல் எளிமை கருதியாகும். நம்மில் ஒரு சிலர் அகத்தை ஆம் என்கிறாரே? அதைநினைந்தால் இதுபுரியும் பகல்>பால், அகல்> ஆல் என நூற்றுக்கணக்கான சொற்களுண்டு..,நான் புரிந்துகொண்ட வரை நாத்தி என்பது தமிழே. vadina என்று தெலுங்கிலும், nadini என்று கன்னடத்திலும், naththuun என்று மலையாளத்திலும், சொல்லப்படும். நாத்தனார், நாத்தூண் நங்கை என்ற சொற்கள் இதிலிருந்து எழ, மேலே முதலிரு விளக்கங்களில் நான்சொன்னதைப் படியுங்கள்.

மேற்சொன்ன இராம.கி.யின் 3 விளக்கங்களிலும் முதலிரு விளக்கங்களைப் பெரிதும் பரிந்துரைப்பேன். மூன்றாம் விளக்கத்தை நுணவ உகப்பில் (minority choice) கொள்ளலாம். இந்த இடுகைத்தொடரில் முதலில் சொன்ன மற்றோரின் 4 விளக்கங்களுக்கான கிடுக்கத்திற்கு (criticism) வருவோம். ”ஒரு குடியிற் பிறந்த பெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபு ஆகும்” என்று சொல்வதே ஆண் ஆதிக்கம் ஏற்பட்டு, இதே போன்று, ஒரு குடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாள் ஆதலின், ’நாற்று அன்னார்’ எனும் பொருண்மையிற் கூறல் ஏன் பொருந்தாதென்று பார்ப்போம். இதையறிய பழந்தமிழர் வாழ்க்கை முறைகளை அறிய வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, May 26, 2019

நாத்தி -1

பர்மாவில் ஒரு தமிழர் குமுகத் திருமணத்தில் நடந்த ”நாத்திவிளக்கு” சடங்கு பற்றி நண்பர் நா.ரா.கி.காளைராசன் மின்தமிழ் மடற்குழுவிலும் தன் முகநூல் பக்கத்திலும் தெரிவித்தார். சில குமுகங்களின் திருமணத்தில் தாலிகட்டும் நிகழ்வில் மணமக்கள் மணமேடையைச் சுற்றுகையில் மணமகனின் தங்கை/தமக்கை முன்சென்ற வண்ணம் ஒரு தாம்பலத்தில் வைத்துக் கொண்டு செல்லும் கைவிளக்கை நாத்தி விளக்கென்பார். நாத்திவிளக்கு ஏற்றுவதற்குத் தரும்பணம் நாத்திப்பணம். இச்சடங்கு தமிழகத்திலும், மலேசியாவிலுங்கூட உண்டென்று பின்னூட்டெழுந்தது. இவ்வுரையாடல் ஊடே, நாத்தி, நாத்தூண் நங்கை (சிலம்பில் 16 ஆம் காதை, 18-21 அடிகள்), நாத்தனார் போன்றவற்றின் சொற்பிறப்பியல் பற்றியும் கேள்வியெழுந்தது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில், இதற்கென 3 விளக்கங்கள் வரும்.

”ஒருகுடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதேபோன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை உடையாள் ஆதலின், ’நாற்று அன்னார்’ எனும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க” என்பது முதல் விளக்கம். “ஒருகால் நாத்துணையார்→ நாத்தனார் என்றுஞ்சொல்லி நா+ துணையார்= பிறந்தகத்திலிருந்து, புகுந்தகத்திற்கு வந்த பெண்ணுடன் உறைந்து, ஆறுதலும் தேறுதலும் தரும், கணவனின் தமக்கை அல்லது தங்கை” என்பது 2 ஆம் விளக்கம். ”சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், நாத்தூண் நங்கை என்றுகுறிப்பதால், புகுந்தவீட்டார், பிறந்தவீட்டைத் தாழ்த்திப்பேசினால், புதுப்பெண் தன் வீட்டுப்பெருமையைத் தூணாகநின்று காப்பவளென்று, பொருள்படுதல் காண்க” என்பது 3 ஆம் விளக்கம்..

இவைபோக 4 ஆம் விளக்கமாய், (தமிழ் உறவுப்பெயர்களைச் சங்கதவழி பெற்றதாய்ச் சொல்வதில் ஆர்வங்கொள்ளும்) ஒரு சிலர் நநந்த்ரி/நநாந்த்ரி எனும் சொல்லின் தற்பவமே நாத்தியென்பார். இதை ஏற்போர் நாத்தூண் நங்கை என்பது ஒருபொருட் பன்மொழி (pleonastic Using an excessive number of words; especially using different words having the same meaning) என்பார். ‘நடுச்செண்டர், ட்ரங்குப்பெட்டி’ போல் இங்கே சங்கதப்பெயரும், தமிழ்ப்பெயரும் ஒருங்கு சேர்ந்ததென்பர். தவிர, கொங்கு வட்டாரத்தில் நங்கை என்பது கணவனின் சோதரியைக் குறிக்குமென்பர். இவர் விளக்கத்தின் படி நாத்தூண் என்பது தனியே ஒரு பெயர்ச்சொல்லாம். இந் 4 விளக்கங்களிலும் வேறுபட்டு, இச்சொற்களின் சொற்பிறப்பியலை மூவேறு விதமாய் இங்கு விளக்க எண்ணுகிறேன்.

இராம.கி. யின் முதல் விளக்கம்:

முதலில் முயங்கலெனும் வினைச்சொல்லைப் பார்ப்போம். இதன் பெயர்ச் சொல் முயக்கம். முயங்கலுக்குப் பொருந்தல் (முலையும் மார்பும் முயங்கணி மயங்க-பரிபா. 6:20), தழுவல் (முயங்கிய கைகலை யூக்க- குறள் 1238), புணர்தல் (வழியிடை போழப்படாஅ முயக்கு- குறள் 1108- பிரிக்க முடியாத தழுவல்/புணர்ச்சி" என்பார் வள்ளுவர். முயக்கம் பெற்றவழி- ஐங்குறு. 93 உரை), செய்தல் (மணவினை முயங்கல் இல்லென்று- சூளா. தூது 100) என 4 பொருள்கள் சொல்லப்படும். முயங்கிக் கொள்ளல் என்பது கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்தலாகும். முள்>முய்>முய>முயங்கு> முயங்கல் என்றே இச்சொல் எழுந்ததாய் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி சொல்லும். தமிழில் ”ங்கு”பயிலும் வினைச்சொற்களை ஒருவகையில் பார்த்தால், “lingering verbs" எனலாம். ஆங்கில present continous போல் இவை தோற்றினாலும் முற்றிலும் அப்படியில்லை. சிலவற்றை ஆழ்ந்து காண்போம்.

"அசங்கல், அடங்கல், அணங்கல், அரங்கல், அலங்கல், இசங்கல், இடங்கல், இணங்கல், இயங்கல், இரங்கல், இலங்கல், இளங்கல், இறங்கல், உடங்கல், உணங்கல், உயங்கல், உலங்கல், உழங்கல், உறங்கல், கசங்கல், கரங்கல், கலங்கல்"- இவற்றில் அங்குச்சாரியை உள்நிற்கும். ”அணுங்கல், அதுங்கல், அமுங்கல், அலுங்கல், அழு/ளுங்கல், அறுங்கல், இடுங்கல், இணுங்கல், இறுங்கல், உருங்கல், உழுங்கல், உளுங்கல், உறுங்கல், ஒடுங்கல், ஒதுங்கல், ஒருங்கல், ஒழுங்கல், கருங்கல்” போன்றவற்றில் உங்குச்சாரியை நிற்கும். இவையிரண்டே தமிழில் பெரிதுண்டு. ஆனால் “இழிங்கல், கலிங்கல்” என இங்குச்சாரியையும் ஓரோவழி குறைந்து நிற்கும். அதுபோது இங்குச்சாரியை இல்லாமலும் இல்லை. பலவிடங்களில் இவை உங்குச்சாரியைச் சொற்களோடு போலி காட்டும்.

இதே வினைச்சொற்களைச் சாரியைகள் இல்லாதும் நம்பேச்சில் பயில்கிறோம். அங்குச்சாரியை இன்றி, ஆனால் ஐகாரஞ் சேர்த்தால், “அசைதல், அடைதல், அணைதல், அரைதல், அலைதல், இசைதல், இடைதல், இணைதல், இயைதல், இரைதல், ..........., இளைதல், இறைதல், உடைதல், உணைதல், ......., உலைதல், உழைதல், உறைதல், கசைதல், கரைதல், கலைதல்” என்பவை கிடைக்கும். [நடுவே 2 இடங்களில் சொல் தெரியாது அல்லது இற்றைப்புழக்கின்றி இடைவெளி காட்டுகிறேன்.) அதேபோல் உங்குச் சாரியை விடுத்தால், உகரத்தோடு “அண்ணுதல், அத்துதல், அம்முதல், அல்லுதல், அழுதல், அறுதல், இட்டுதல், இண்ணுதல், இறுதல், ......., உழுதல், உள்ளுதல், உறுதல், ஒடுதல், ஒதுதல், ஒருதல், ஒழுகுதல், கருதுதல்” என்பவை கிடைக்கும், (இங்கும் இடைவெளி விட்டுள்ளேன்.) அதேபோல இங்குச்சாரியை விடுத்தால் இகரஞ் சேர்த்து “இழிதல், கலிதல்” போன்றவை கிடைக்கும்.

முயங்கலில் அங்குச்சாரியை விட்டால், முயத்தலெனுஞ் சொல் கிட்டும். உகர, அகரப் பலுக்கல் திரிவில் இது மயத்தலாகும். (இதன் முன்சொல் மயங்கல்.) மயல்= ஆசை, காமவிழைவு, மையல்= காம மயக்கம். மனங் கலக்கும் காதல், மையல்தரும் மூலி= காமவுணர்வு தூண்டும் மூலிகை. மையாத்தல்= மயங்கல் (மலர் காணின் மையாத்தி, நெஞ்சே- குறள் 1112). மயத்தலில் விளைந்த பெயர்ச்சொல் மைத்தான்>மைச்சான்>மச்சான். இது வடசொல்லின் கொச்சைவழக்கெனப் பல தமிழாசிரியரே அறியாது சொல்வர். தமிழ் அகரமுதலிகளும் அவற்றை ஒதுக்கும். ஆழ்ந்துபார்த்தால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. சிப்பி என்றெண்ணி முத்தைத் தூக்கி எறிவதாகவே எனக்குத் தோன்றுகிறது), அடுத்து, மைத்துனன் என்பது மைத்தன் போன்றவனைக் குறிக்கும். அடிப்படையில் இவன் மனைவி அல்லது கணவனுடன் பிறந்தவன். மாமன் அல்லது அத்தை மகன், உடன்பிறந்தாள் கணவன் இப்படிப் பல உறவுகளைக் குறிக்கும்.

"மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து" என்று, ஆண்டாள் தான் கனாக் கண்டதைப் பாடுகிறாளே? நினைவுண்டா? மற்ற திராவிட மொழிகளிலும் இச்சொல் உண்டு. ம. மச்சனன், மச்சினன்; க மய்துன, மய்த, மய்தன; தெ.மேன; கோத. மசிண்; துட.மசிண்ப்; குட. மச்சினே; து. மைதினெ, மைதுனெ; கொலா. மச்; நா, மாச்; குரு. மேத ((ஆண்); பட. மைத. இதுபோக, மைத்துனனின் பெண்பாற்சொல்லாய் மைத்துனியின் இணைகளும் மற்ற திராவிட மொழிகளில் உண்டு. இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாது, மைத்துனன்/ மைத்துனி என்பவற்றை வடமொழி என்பது ஆய்விலாதோர் கூற்று. இன்னொன்றுஞ் சொல்லலாம். முயத்துனம்>மைத்துனம்> மைதுனம். இது புணர்ச்சிக்கான சொல். தற்புணர்ச்சி என்றெழுத வெட்கப்பட்டு, மைதுனத்தின் நீட்சியாய், சுய மைதுனம் (masterbation) என்று சில எழுத்தாளர் (வடமொழியென எண்ணி) எழுதுவார். அதுவும் திரிந்து கிடக்கும் தமிழே. (சுய என்ற முன்னொட்டைப் பற்றி இன்னொரு இடத்தில் பார்க்கலாம்.)

முள் எனும் வேரில் இன்னுஞ் சில சொற்களுண்டு. முழவுதல்= நெருங்கிப் பழகல், முளவு>விளவு>விளாவுதல்= கலத்தல்; முள்>விள்> விள்ளல்= கலத்தல், விரும்புதல், விள்>விளரி= வேட்கை  விள்>விளை> விழை= விருப்பம், விளையாடுதல்= விரும்பியாடுதல் இதுபோக வீழ்தல், விரும்பல், விடாய், வெய்யல், வெம்மல் ஆகியவையும் விரும்பலைக் குறிக்கும். (வெம்மல் வேண்டல் என்பது தொல்கா. உரி. 36) வேட்டல், வெஃகுதல், வெண்டுதல், வேண்டுதல், வேணுதல், வேட்டம், போன்றவையும் இதே பொருள் கொண்டவை. முள்>முழு>முழுவல் என்பது விடாது தொடரும் அன்பு. முழுவுதல், முள்குதல், மருவுதல் போன்றவை தழுவலைக் குறிக்கும். முல்>(மள்*)>மரு>மருவு என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சொல். மருமகன், மருமகளென்ற சொற்கள் இதன்வழிப் பிறந்தவை. மருவுகை என்பது இந்தையிரோப்பியன் marriage ஓடு இணை காட்டும். முள்> மள்>மண்ணு> மணம் என்பது கூட marriage இற்கு  இணை காட்டும்.

இனி முகரச் சொற்களிலிருந்து போலியாய் எழக்கூடிய நுகர, நகரச் சொற்களுக்கு வருவோம். முப்பது>நுப்பது, முந்து>நுந்து, முதல்>நுதல், முனி> நுனி, முகர்>நுகர் போல் பலசொற்கள் முகர/நுகரப் போலி காட்டும். உகர> அகரப் போலியும் மிக எளிதில் பேச்சுவழக்கில் ஏற்படும். நயத்தல்= விரும்பல், ”பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று”- குறள் 150. இதை நள்>நய்>நய- என்றும் விளக்குவர். நைப்பு= நயப்பு= விருப்பம் ”நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்”- குறள் 580. நயத்தல்= தலைவனைக்கண்ட தலைவி தன் ஆசை கூறும் புறத்துறை (பு.வெ.11, பெண்பாற். 2). நயந்துசொல்லல்= விரும்பிச் சொல்லல், பாராட்டல்; நயந்தோர்= நண்பர், கணவர். நயப்பித்தல்= விரும்பும் படி செய்தல்; நயப்பு= அன்பு, பற்றாசை, நேசம். நயவர்= முறை யுடையோர், காதலர் (பிங்), நண்பர்; நயவருதல்= விரும்பல்; நயவான்= விரும்பத் தக்கவன்; நயன்= உறவு, நயிச்சியம்= தன்வயப்படுத்தல்.

நயன்/நயவனின் நீட்சிகளே எல்லோர்க்கும் தெரிந்த நாயகன், நாயகத்தி, நாயகி போன்றவையாகும். கதைநாயகன் என்பான் விரும்பப் படுபவன். நயத்தலில் விளையும் ஒரு பெயர்ச்சொல் நயை>நசை. நயத்தல்>நச்சுதல்= விரும்பல்; (”ஒருவரால் நச்சப் படாதவன்”- குறள் 1004 நச்சினார்க்கினியர் புகழ்பெற்ற உரைகாரர். குறளுக்கு உரைசெய்தவர் இன்னொரு நச்சர். மேலே சொன்னது மட்டுமில்லை. நுள்>நெள்*>நெய்>நேய்>நேயம் நெய்போல் ஒட்டுங் குணமாகிய அன்பு. நேயம்>நேசம்= அன்பு, இணக்கம், விருப்பம். நேசன்= நண்பன்; நேசி= காதலி நள்>நள்ம்பு>நம்பு>நம்பி= விரும்பப்படுபவன்; நம்பு= விருப்பம் (”நின்னிசை நம்பி” - புறம் 136. ”நம்பு மேவு நசையாகும்மே” தொல்.சொல்.329.) நள்+த்+அல்= நட்டல், நள்>நண்>நண்பு, நட்பு= காதல்.

அடுத்து, நட்டு>நத்து>நத்தல்= விரும்பல் (”நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை”- தமிழ்நா.74. தெலுங்கு, .மலையாள மொழிகளில் நத்த, நத்து என்ற சொற்களுண்டு.) நத்து= விருப்பம் (நன் நத்தாக - திருப்புகழ் 84). நத்தன்= விரும்பப்படுபவன். நத்தனின் நீட்சியே நாதன் எனுஞ்சொல். (= விரும்பப் படுபவன். கமத்தலின் நீட்சி காமம், கதுவலின் நீட்சி காதல் என்பது போல் பெயர்ச்சொல் ஆகையில் தொடக்க அகரம் நீள்வது தமிழின் பழக்கம் தான்.) நம்மில் பலரும் நாதனை வடமொழிச் சொல்லென எண்ணிக் கொள்கிறோம். ஏராளமான இறைவன் பெயர்கள் நாதன் தான். என்னைக் கேட்டால் கட்டாயம் தமிழின் உட்கிடை நாதனிலுள்ளது என்பேன். அது வடசொல்லெனில், மேற்சொன்ன சொற்களுக்கும் என்ன சொல்வது? அவை தமிழா? வட மொழியா? தமிழ்ச்சொற்களை வடமொழிக்குத் தானமிடும் போக்கு நம்மில் அதிகமாகவே உள்ளது. நாதனுக்கு வடமொழியில் வேரில்லை. நத்தன்> நாத்தன்>நாதனின் தங்கை, நாத்தன்+ஆள்= நாத்தனாள் எனப்படுவாள். நாத்தனாள் பெரியவளாகவோ, அன்றி மரியாதை கொடுக்க வேண்டியவர் ஆகவோ இருந்தால், நாத்தனார் எனப்படுவார்.
,
இனி நங்கை என்ற சொல்லிற்கு வருவோம். பெண்ணின் பருவங்களாய் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று 7 பருவஞ் சொல்வர். மகர/நகரப் போலியில் மங்கை, நங்கையாகலாம். நல்ங்கை நங்கையானால் அது பெண்ணிற் சிறந்தாளைக் குறிக்கும். மகனின் மனைவி, அண்ணன் மனைவியுங்கூட நங்கையென்றே குறிக்கபட்டுவாள். விரும்பத் தகுந்தவள் என்றபொருளில் நள்+ந்+கை= நண்கை>நங்கை என்றும் ஆகலாம். நங்கை என்பது கணவனின் தங்கையை, தமக்கையை மட்டும் குறிக்கும் விதப்புச்சொல் ஆகாது. நாத்தூண்நங்கை என்பதைப் பிரிக்கும் போது நாத்தூண் நங்கை என்றுபிரிப்பது புணர்ச்சித்தவறு. நாத்தூண் எனப் பெயர்ச் சொல் கிடையாது. நாத்து+ஊழ்+நங்கை என்று பிரிப்பதே புணர்ச்சியிற் சரியாகும். ஊழ்தலுக்கு முதிர்தல் என்று பொருள்.

ஒரு வீட்டிற்குப் புதிதாய் வரும் மருமகளை விட, கணவனின் தங்கையோ, அல்லது தமக்கையோ, நெடுநாள் புக்ககத்தில்/விருப்பகத்தில் இருந்தவள். எனவே அவள் இருப்பால் முதிர்ந்தவள். நாட்பட இருந்த நங்கை என்ற பொருளில் நாத்து ஊழ்நங்கை>நாத்தூணங்கை எனபது முற்றிலுஞ் சரி. . 

இதுவரை நாத்தி/நாத்தனார்/நாத்தூண்நங்கை என்ற சொற்களை முதலில் சொன்ன 4 விதங்களில் இருந்து வேறுபட்டு முற்றிலும் புதியதொரு பார்வையில் பார்த்தோம். இனி இரண்டாம், மூன்றாம் விதப் பார்வைகளைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.