Monday, October 31, 2005

தீபாவளி மேகக் கூட்டம்

இந்த மடலை 2002 தீபாவளியின் போது அகத்தியருக்கும், தமிழ் உலகிற்கும் அனுப்பியிருந்தேன். அந்த ஆண்டில் சவுதியில் தங்கியிருந்தேன். திடீரென்று தீபாவளிக் காலை சென்னை வரும்படி அமைந்தது.
--------------------------------
4-11-2002

திடீரென்று அலுவப் வேலையாற் பணிக்கப் பெற்று, மறுபடி சென்னை. இன்று காலை வந்தேன். நாலே நாட்களில் சவுதி செல்ல வேண்டும்.

வான்பறனை கீழிறங்கும் போது, அதன் செலுத்தியார் சென்னை அருகாமை வந்தவுடன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, இருக்கைகளை நேராக்கிக் கொள்ள நம்மைப் பணிக்கிறார். பறனை கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. கண்ணாடிச் சாளரத்திற்கு வெளியே பனி கலந்த மேக மூட்டம். எத்தனை பேர் இதற்குப் பொறுப்பு? நகரம் எங்கிலும்? வழமையான சென்னை. அதன் வேடிக்கைக் கூத்துகள்.

அருகே இருந்த ஃபிரஞ்சுப் பெண்மணி, இந்த மேக மூட்டத்திற்குக் காரணம் கேட்கிறார். நான் "நாலைந்து நாட்களாக நல்ல மழை; சில இடங்களில் நகரத்துள் வெள்ளம்; வடியச் சில நாட்கள் ஆகலாம்; தவிரத் தீபாவளிநாள்; முன்னாளின் இரவிலும், இன்று அதிகாலையிலும் வெடிகள், மத்தாப்புக்கள் என்று பலதும் கொளுத்தப் பட்டிருக்கும்; அதனால் எழுகிற புகை இந்தப் பனியோடு கலந்து கலையாத மேக மூட்டத்தைக் கிளப்பிவிட்டிருக்கும்", என்று விளக்கம் சொன்னேன்.

"என்னது வெடியா? நேற்று வந்திருக்கலாமே? வாண வேடிக்கை அழகைப் பார்த்திருக்கலாமே?" என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு தன் தோழியரோடு பிரஞ்சில் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்.

"தீபாவளி எதற்குக் கொண்டாடுகிறார்கள்?" என்ற அவரது கேள்விக்கு, ஓரளவு சுருக்கமாக கூடவே விரைவாக மறுமொழி சொல்லி முடிக்கிறேன்.

பறனை ஓடுகளத்தைத் தொட்டுவிட்டது. உள்ளே ஈரப்பதம் மாறிக் கொண்டிருப்பதை உணருகிறேன்.

வான் பாலத்தை அணைந்தாயிற்று.

நான், வான்பறனைப் பணிப்பெண்ணுக்கு முகமன் சொல்லி தீபாவளி வாழ்த்தும் சொல்லி வெளியேறுகிறேன். அந்த பகுரைனி அரபுப் பணிப்பெண் வியந்து கொள்ளுகிறாள். முகம் நிறையப் புன்சிரிப்பு.

வெளியே வந்து வண்டியில் ஏறி வீட்டிற்குப் புறப்படும் போதும் மேக மூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே மேகமூட்டம் தான். மழை இருந்தாலும் இல்லாவிட்டாலும். நகரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையெங்கும் ஈரம்; அதன் மணம்; மணத்துள் ஒரு பாந்தமான உணர்வு. இதுதான் சென்னை. உள்ளிழுத்துக் கொள்ளுகிறேன். நெஞ்சுகள் நிறையட்டும்.

இந்த மண் தாகத்தால் ஏங்கியதே? தாகம் அடங்கியதோ? வழி நெடுகிலும் அஞ்சடிகளில் நாலைந்து நாட்களில் முளைத்த புல்வெளிப் பச்சை. ஆங்காங்கே சாலைகளில் ஈயென்று வாய்பிழந்த பள்ளங்கள்; மதகு இல்லாச் சிறுசிறு நீர்த்தேக்கம். எங்கள் நகரம் மாறவே மாறாதோ?

நான் வாழும் பகுதிக்கு அண்மையில் வந்தாயிற்று. "நிறுத்துக்கள். அங்கு ஏதோ ஒரு சிறுவன் வெடி வைக்கிறான்" என்று உந்து ஓட்டுநருக்குச் சொல்லுகிறேன். ஆயிரம் இழைச் சீனச் சரவெடி (இப்பொழுதெல்லாம் சீனவெடி என்ற சொல்லே இளையருக்குத் தெரிவதில்லை. எல்லாம் தௌசண்ட் வாலா தான். எங்கோ மரபுத் தொடர்புகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. வணிக வேகம் சிந்தனையை மறைக்கிறது.) வெடி காதை அடைக்கிறது. புகை கண்ணை மறைக்கிறது.

நின்று காத்து வண்டி தொடருகிறது.

வீட்டுக்கு வந்தாயிற்று; எண்ணெய்க் குளியல் செய்தே ஆகவேண்டும் என்று துணையாள் அடம் பிடிக்கிறாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ ? குளியல் ஆயிற்று. புத்தாடைகள் வீட்டில் குத்து விளக்கிற்கு எதிரே. இதையெல்லாம் சொல்லவேண்டுமோ? மஞ்சள் தடவி, பக்கத்தில் மாதிரிக்குக் கற்கண்டு வடையை ஏனம் நிறைய வைத்துப் படைத்து, பல்லாண்டு சொல்லித் தண்டனிட்டு வணங்கி புத்தாடைகளை எடுத்துக் கொள்ளுகிறோம்.

கற்கண்டு வடையை எத்தனை நாளுக்கு அப்புறம் பார்க்கிறேன்? நாக்கில் நீர் ஊறுகிறது. "அதெல்லாம் முடியாது, கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான்" என்கிறாள் மனைவி. அவளை ஆற்றுப் படுத்தி என் வழிக்கு மாற்றுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரிலும், தொலைக் காட்சியிலும்
நடைபெறுகின்றன.

ஆயிற்று; கோயிலுக்குப் போக வேண்டியதுதான். எங்கள் வீட்டின் முன்னும் ஒரு சீனச் சர வெடி (போன ஆண்டு ஆயிரங் கண்ணிச் சர வெடி வாங்கிய என் மனையாள் இந்த ஆண்டு நூறு கண்ணிச் சரவெடி தான் வாங்கியிருக்கிறாள்.)

இதோ, கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே உறவினர், நண்பர்கள் பார்த்துத் திரும்பவேண்டும்.

எப்படியோ எதிர்பாராமல் சென்னைக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தீபாவளி. எப்பொழுதும் உள்ள சடங்கு அதே கதியில் தொடர்கிறது. நரகாசுரன் எதற்காகத் தீபாவளியைக் கொண்டாடச் சொன்னான்? புரியவில்லை.

"அடச்சே! எதற்காக என்று தெரிந்து என்னாகப் போகிறது? :-) எல்லாமே ஒரு பூடகமான நம்பிக்கை தானே? கலகலப்பு இருந்தால் தானே வாழ்க்கை?" நான் என்னையே ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறேன்.

"இந்தா, வந்துட்டேன். தீப்பெட்டியைக் கொண்டு வரேன்" என்கிறாள் என் மனைவி.

உடைந்த செங்கற் சில்லின் மேல் சீனச் சரவெடி.....

மறுபடியும் சத்தம்...... மறுபடியும் புகை..... மேக மூட்டம் விளைவதில் எங்கள் பங்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, October 27, 2005

மழையும் நகரும்

ஆறே கிடந்தன்ன அகல்நெடுந் தெருக்கள்
"அன்ன"வை தொலைத்து முழுகவே செய்வோம்;
"அகலை"யும் குறுக்கி ஒடுங்கியே நிற்போம்;
ஆங்கங்கு வண்டிகள் நிறுத்தியே வைப்போம்;
தாறு மாறெனெத் துரவுகள் செய்வோம்;
தத்துப் பித்தென்று முட்டியே வைப்போம்;
தண்ணீர் கழுநீர் கலந்துற விடுவோம்;
தடுமன் சளியொடு மருத்துவர் பார்ப்போம்;
வேறு பாடின்றி இயற்கையைச் சலிப்போம்;
வெய்யிலில் வெந்ததைச் சடுதியில் மறப்போம்;
வீழுமா மழையெனப் பரந்ததை ஒதுக்கி,
விளையுமோ நீர்வளம் என்றெனக் கணிப்போம்;
தேறுதல் ஆறுதல் சேவைகள் நாடித்
தெருவெலாம் நீளுமெம் ஏழையர் வரிப்போம்;
தெரிந்தவர் புரிந்தவர் கொடைகளைத் தேடி
அரசினை, அரசிலாத் தொண்டரைச் சேருவோம்;

வழமை போலவே குழம்பிடும் நகரம்;
வாய்திறச் சாக்கடைக் குழிகளைத் தவிர்த்து
வளைந்து வளைந்து செல்லிடம் புகல்வோம்;
வட்டுகள் பரிசல் சிற்றிடம் பகர்வோம்;
தழும்பத் தழும்பச் சாலையிற் குளங்கள்
தண்டென நடுவில் மேடுறும் வரிகள்;
தாரையாய் வண்டிகள் புகையொடு நகர்வோம்;
தடமோ ஒற்றைதான்; தள்ளிடத் தொண்டர்;
இளையவர் முதியவர் ஆடவர் பெண்டிர்
எழினியைத் தூக்கிக் கால்நனை கொள்ளுவோம்;
எங்கணும் பெயல்நீர் செம்புலம் உணர்வோம்;
எடுக்கும் அடியினிப் பள்ளமா? மேடா?
இழைவது இடையே கொசுவும், உயிரியும்
இயன்றால் இனிப்பல ஊர்வன மிடையும்;
என்னரும் நகரில் மழையென வந்தால்
எத்தனை கரிசனம், உயிர்களுக் கிடையில்?

பத்துநாள் மழைக்கே இத்தனை பாடு;
பையவே புயல்வரும் எனவறி விக்கை;
பகலெலாம் அமைதி; பாசாங்குத் தோற்றம்;
பழக்கமாய் ஆந்திரம் போகுமோ? தெரியோம்;
மொத்தமும் வழித்து முகத்தையும் மறைத்து
மூடிய மேகம் அதன்பொருள் அறிமோ?
மூண்டது தூறல்; முயங்குறு காற்று
மூளுமோ? சூழுமோ? முடங்கியே போமோ?
அத்தனை அறிந்தவர் யாருளர் நாட்டில்?
அலமறும் வான்நிலை ஆய்வரா சொல்லுவார்?
ஆண்டு தோறும் கதையிது ஆகியும்
அசைக்க முடியா பெருநம் பிக்கை!
இத்தனை சரவல் எமக்கிழைத் திருந்தும்
எண்ணுவ தெல்லாம் ஏரிகள் உயரம்!
"என்னாச் சுங்க! புழலேரி இன்று?"
"ஏறிய தைந்தடி! இந்தாண்டு ஓடிரும்"

- முன்னொரு நாள் எழுதிய பா

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 25, 2005

மின்தாளிகைகள் - மடற்குழுக்கள் - வலைவாசல்கள்

இணையம் பற்றிய புரிதல் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஏற்பட்ட புதிதில், மின் தாளிகைகள் (e-zines) என்பவை இங்கே தொடங்கப் பெற்றன. அச்சு இதழ்களைப் போன்றே சில போல்மங்களை (models) உருவாக்கி, அவற்றுள் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, கருத்து, பின்னூட்டு ஆகியவற்றைக் கொண்டு வந்து, மின்னுருவில் எங்கோ ஒரு நினைவகத்தில் (memory) குடியிருத்தி வைப்பதே மின்னிதழ்களின் நடைமுறையாய் இருந்தது. அச்சிதழ்கள் இவற்றிற்கு முன்மாதிரியாய் இருந்த காரணத்தால், அந்தக் கட்டமைப்பிற்குள் தம்மை அறியாமல் ஈடுபட்டு, பல நேரம், மின்னுலகின் இயலுமைகள் (possibilities) மற்றும் அதன் விளிம்புகள் (limits) முதலியவை மின்னிதழ்களில் தொடப் படவே இல்லை. படிப்போரும், பழக்கத்தின் காரணமாய், எந்தப் புதிய எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த நினைவகங்களோடு இணையவழி கணுக்கம் (connection)ஏற்படுத்திக் கொண்டு மின்னிதழ்களைப் படித்தோம். நாம் பின்னூட்டுக் கொடுக்கும் போதும் கூட அவை ஒரே நினைவகத்திற்குப் போயின. மின்னிதழ்கள் என்பவை இந்த வகையில் முதற்படி.

மின்னிதழ்களின் உள்ளடக்க நிர்வாகம் (content monagement) என்பது கிட்டத் தட்ட அச்சிதழ்களைப் போலவே இருந்தது. (நான் இங்கே பண வருமானம் பற்றிச் சொல்லவில்லை. வாசகர்கள்/எழுதுபவர்கள் ஆகிய இருவருக்கிடையே இருந்த நடப்பு முறையைச் சொல்லுகிறேன்.) இந்த மின்னிதழ்களை நிர்வகிப்போர் என ஒருவரோ சிலரோ இருந்து பல்வேறு ஒருங்கிணைப்பு வேலைகளைப் பார்த்தார்கள். ஆங்கிலத்தில் சொல்லுவது போல் மின்னிதழுக்கும் ஓர் எடுவையர் (editor) தேவைப்பட்டார். (தமிழில் நெடுங்காலம் இந்த editor என்ற சொல்லை "தாளிகை ஆசிரியர்" என்று சொன்னார்கள். ஆசிரியர் என்ற சொல்லாட்சியின் மூலம் அவர் ஏதோ நமக்கு ஆசான் போலத் தோற்றம் அளிப்பதைத் தவிர்த்திருக்கலாம். அவர் ஆசான் அல்ல. உண்மையில் editor என்பவர் நாம் அனுப்பும் ஆக்கங்களை தாளிகையின் கொள்கை முறைக்கு இணங்கத் திருத்தங்கள் செய்து அதைக் கொஞ்சம் எடுப்பாக முன் வந்து இருப்பது போல் ஆக்கி, அங்குமிங்கும் அலங்காரம் செய்து வெளியிடுவார்; இப்படி எடுப்பாக்கும் செயலைத் தமிழில் எடுவித்தல் என்று சொல்லலாம். எடுத்தல் என்பது தன்வினை; எடுவித்தல் என்பது பிறவினை. ஒன்றை உயர வரும்படி, தெரியும் படி செய்வது எடுவித்தல் என்று ஆகும். தென்பாண்டி நாட்டில் சிவகங்கை வட்டாரத்தில் எடுப்பு என்ற பெயர்ச்சொல் இந்தப் பொருளில் பெரிதும் வழக்கில் உள்ளது. "என்ன மானி, எப்படி? எடுப்பாய் இருக்கிறேனா?" எடுவிக்கும் செயலைச் செய்பவர் எடுவையர். editor என்பதின் நேர் இணையாய் எடுவையர் என்பதைப் பயனாக்கலாம். editor பற்றிய சொற்பிறப்பியலை முன்னாளில் மடற்குழுக்களில் எழுதினேன்.)

ஒவ்வொரு எடுவையரும் தனக்கென ஓர் எடுவைக் குழு (editorial team) வைத்திருக்கக் கூடும். எடுவை நிலைக்கென ஒரு கொள்கையும், நிலைப்பாடும், கடைப்பிடியும் (editorial policy, standpoint and practice)உண்டு. இந்திந்த ஆக்கங்கள் இந்த இதழில் வரலாம்; இன்னின்னவை இதில் வரக்கூடாது என்று வைத்திருப்பார்கள். பூதியல் (physics) தாளிகையில் அரசியல் வராது; குமுகாயத் தாளிகையில் (social science magazine) அணு வேதியல் (atomic chemistry) பற்றி வராது. அதே போல பேசும்படம் என்ற திரைப்படத் தாளிகையில் வருவது கல்கியில் வராது. ஏன், தினத்தந்தியில் வருவது தினமணியில் வராது. இப்படி ஒவ்வொரு தாளிகைக்கும் இருக்கும் எடுவைக் கொள்கையை விவரித்துக் கூறலாம். ஆனால் படிக்கின்ற உங்களுக்கு அதன் விதப்புத் தன்மை (specific character) பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்படி ஓர் எடுவைக் கொள்கையை வைத்திருப்பது ஒவ்வொரு தாளிகைக்கும் உள்ள இயல்பு. அது ஒன்றும் வல்லாண்மை (dictatorship) அல்ல. வல்லாண்மை என்பது ஒருவிதமான நிகழ்ப்பை (agenda) மனத்தில் வைத்துக் கொண்டு செய்யும் முற்றாளுமை (totalitarianism). பழைய சோவியத் ஒன்றியத்தில் (Soviet Union) பிராவ்தா என்ற தாளிகை காட்டியது வல்லாண்மைப் போக்கு. இங்கே நீக்குப் போக்கு என்பதற்கு இடம் கிடையாது. பொதுவாக, எடுவைக் கொள்கை என்பது வேறு; மிடைய வல்லாண்மை (media dictatorship) என்பது வேறு; நாம் இவை இரண்டையும் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு குழம்பிக் கொள்ளக் கூடாது. எடுவைக் கொள்கைக்கு மீறிய ஆக்கங்கள் வெளியீட்டிற்கு வராமல் விலக்கப் படுகின்றன என்பதாலேயே ஒரு தாளிகை வல்லாண்மைப் போக்கு உள்ளது என்ற பொருள் கொள்ள முடியாது.

பின்னாளில் மடற்குழுக்கள் (e-mail lists) வந்தன. கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, கருத்து போன்றவை இங்கே மடல் வடிவத்தின் மூலமாக வந்தன. இந்த மின் மடல்களை வாசகர்கள் இரண்டு முறையில் படிக்க முடிந்தது. ஒரு முறையில் எங்கோ இருக்கும் நினைவகத்தைக் கணுக்கிப் (by connecting) படித்தோம்; இன்னொரு முறையில் எல்லா மடல்களையும் நம் கணி/நினைவகத்திற்குள் கீழிறக்கிப் (download) படித்தோம். இங்கும் ஒரு நிர்வாகி அல்லது ஒரு குழு இருந்தார்கள். இவர்களுக்கு மட்டுறுத்தர்கள் (moderators) என்று பெயர். (நானும் பலமுறை சொல்லிவிட்டேன். மட்டுறுத்தர் என்றாலே போதும்; அதை மட்டுறுத்துநர் என்று நீட்டிச் சொல்ல வேண்டியதில்லை.) மடல்களின் பரிமாற்றத்தில் நடைபெறும் உரையாட்டில் அவ்வப்போது இது தான் விளிம்பு (அல்லது மட்டு); இது மட்டும் பேசலாம்; இதற்கு மேல் ஒருவரை ஒருவர் குத்துவதாய் உரையாடிக் கொள்ளக் கூடாது என்று இந்த நிருவாகிகள் உரையாட்டின் எல்லையை, மட்டை உறுத்தினார்கள். இங்கும் ஒரு மடற்குழுக் கொள்கை இருந்தது. இந்தந்தது பற்றி இந்த மடற்குழுவில் பேசலாம்; இவை இங்கு பேசக் கூடாதவை என்று வைத்திருந்தார்கள்; மட்டு மீறியதாய் தனிமாந்த வசை பாடும் நேரத்தில் ஒரு சில உறுப்பினர்களை விலக்கியும் கூட வைத்தார்கள்.

எல்லை மீறிய, மட்டுறுத்தமே இல்லாத ஒரு குழு, தாய்க்குழு, இருந்தது. நானும் கூட அதில் உறுப்பினனாய் இருந்திருக்கிறேன். அந்தக் குழு குலைந்த வகை இன்றைக்கும் மனத்திற்கு வருத்தம் தருகிறது. அதற்கப்புறம் எழுந்த பல தமிழ் மடற்குழுக்களும் மட்டுறுத்தலின் இன்றியமையாமையைக் கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினார்கள். பொதுவாக எல்லையற்ற சனநாயகம் என்பதும், பொறுப்புக்கள் உணராத விட்ட விடுதலையும், முடிவில் வெறிச்சோடும் சலிப்பையே கொண்டு வருகின்றன. வெறுமே இரண்டு மூன்று முன்னிலையாளர்கள் மட்டும் உரையாடிக் கொண்டும், மற்றவர்கள் அமைதியாய்ப் படித்துக் கொண்டும் இருப்பதாய் அது முடிந்துவிடும். விதிகளே இல்லாத கால்பந்தாட்டம் இருக்க முடியுமோ? கூடியமட்டும் குறைந்த விதிகள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு ஆட்டத்திற்கும் சில விதிகள் வேண்டும் அல்லவா?

பின்னால் வலைப்பதிவுகள் வந்தன. இங்கே கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு போன்றவையோடு கூடவே பல்மிடையப் பங்களிப்புக்களும் (multi-media contributions) எழுந்தன. ஆனால் இவையெல்லாம் ஒரே நினைவகத்தில், அல்லது ஒரு நாலைந்து நினைவகங்களில், அதே பொழுது தனித்தனி முகவரிகளில்/தளங்களில் இருந்தன. இந்தத் தனித் தனித் தளங்களில் இருப்பவற்றைப் பார்த்து எங்கு எவை இருக்கின்றன என்று திரட்டித் தரும்வகையில் திரட்டிகளும் (aggregators), அந்த திரட்டிகள் தரும் சுருக்கத்தைப் படிக்கும் வகையில் வலைவாசல்களும் (webportals) எழுந்தன. இந்த வலைவாசல்களில் நாம் போகும் போது அங்கு திரட்டி வைத்திருப்பதை ஒரு அச்சிதழின் முன்பக்கப் பட்டியலுக்கு இணையாகச் சொல்லலாம். அச்சிதழில் ஒரு ஆக்கம் இத்தனாம் பக்கத்தில் இருக்கும் என்று அந்தப் பட்டியல் சொல்லும். இங்கு அந்த ஆக்கம் எந்த வலைதளத்தில் இருக்கும் என்று சொல்லுவதோடு, அந்தத் தளத்திற்கே நம்மை இட்டியும் செல்லுகிறது.

சரி, வலைவாசல்களுக்கு என்று தனி எடுவைக் கொள்கை அல்லது நிருவாகக் கொள்கை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதை வல்லாண்மை என்று பார்ப்பது கொஞ்சம் எகிறிய பார்வை (extreme view). எப்படி அச்சிதழ்களுக்கு என ஓர் எடுவைக் கொள்கை இருக்கிறதோ, அதே போல வலைவசலுக்கும் எடுவைக் கொள்கை இருக்கும் என்ற அடிப்படையை நாம் மறக்கக் கூடாது. Chemical abstracts என்று வேதி அப்பூதிகள் உண்டு. இதில் பூதியல் அப்பூதிகளைச் (physical abstracts) சேர்க்க மாட்டார்கள்; அதே போல ஒரு துறைக் குறிப்புகளில் இன்னொரு துறை இருக்காது. வலைவாசல்கள் என்பவை எல்லார்க்கும் எல்லாமாய்க் காட்சியளிக்கும் அகரமுதலி (dictionary), கலைக்களஞ்சியம் (lexicons) போன்றவை அல்ல. இவற்றில் தான் ஏதொன்றையும் ஒதுக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால் இங்கும் கூட பல்வேறு காரணங்களுக்காய் ஒதுக்கல்கள் ஏற்படுவது உண்டு.

மதம் பற்றிய வாக்குவாதங்கள் திரட்டப் படவேண்டியதல்ல என்பது ஒரு திரட்டி நிருவாகிகளின் நிலைப்பாடாக இருக்கலாம். இந்த நிலைப்பாட்டை அந்த வலைவாசலின் எந்தக் கால நிலையிலும் அவர்கள் எடுக்கலாம். இதைத் திடீரென்றும் செயற்படுத்தலாம். அதே போல இன்னபிற முடிவுகளை அவர்கள் நிருவாகம் கருதி எடுக்கலாம். அதை ஏற்பதும் எற்காததும் நம் உகப்பு. அந்த முடிவுகளை ஏற்றால் அந்தத் திரட்டியைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்; இல்லையென்றால் இன்னொரு திரட்டியை நாடிப் போகிறோம். நான் பூதி வேதியல் (physical chemistry) பற்றிய செய்தி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் வேதி அப்பூதி (Chemical abstracts)யையும், வேதிப் பூதியல் (Chemical physics) பற்றிய செய்தி அறிய வேண்டுமென்றால் பூதி அப்பூதி(Physical abstracts)யையும் தேடிப் போகிறேன். இதே முறை தமிழில் இருக்கும் திரட்டிகளுக்கும் பொருந்துவது தான்.

தமிழில் பல்வேறு திரட்டிகள் எழவேண்டும். அதற்கு நுட்பியலாளர்கள் முயல வேண்டும். தமிழ்மணம் என்பது இந்த முயற்சிகளின் தொடக்கம். அவ்வளவுதான். வலைப்பதிவுகளின் சிக்கல் தமிழ்மணத்தின் சிக்கல் அல்ல. தமிழில் வலைப்பதிவு என்பது எழுநூற்றுச் சொச்சம். இவற்றின் ஆளுமை தமிழ்மணத்தால் கட்டுப் படவே இல்லை. அதே பொழுது, தமிழ்மணத்தின் ஆளுமை என்பது வேறு. அதுவும் இந்த எழுநூற்றுச் சொச்சம் பதிவுகளின் ஆளுமையால் கட்டுப் படாது. தமிழ் வலைப்பதிவுகளும் தமிழ்மணம் என்ற வலைவாசலும் ஒன்றிற்கொன்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படிப்போருக்கு மொத்த உருவம் காட்டுகின்றன. இன்னின்ன விதிகளுக்குள் இருந்தால் உங்களிடம் இருந்து சுருக்கம் எடுத்து உங்கள் தளங்களுக்குத் தொடுப்புக் கொடுப்போம் என்று தமிழ்மணம் சொல்லுகிறது. அதற்கு இணைந்தே வலைப் பதிவர்களாகிய நாம் ஒப்புதல் தெரிவித்து இந்தத் திரட்டும் செயலுக்கு உட்படுகிறோம். இதில் நம்முடையது திரட்டப் படவில்லையென்றால் நாம் நிருவாகிகளைக் கேட்டுக் கொள்ளலாம்; அல்லது நம் பதிவை மாற்றிக் கொண்டு அவர்களுடைய விதிமுறைக்கு உட்பட்டு வரலாம்; இல்லையெனில் வேறு திரட்டிக்குப் போகலாம். இதில் வல்லாண்மை எங்கே வந்தது?

கால் பந்தாட்டம் ஆட வந்த இடத்தில், கைப்பந்தாட்டம் ஆடுவேன் என்று அடம் பிடித்து ஆடுகளம் அமைத்துக் கொடுத்தவரை வல்லாளர் என்று சொல்லுவது எப்படிச் சரி என்று புரியவில்லை.

நமக்கும் பொறுப்பு இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.