Sunday, October 31, 2021

சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்களா?

என்னைக் கேட்டால், அப்படி இருக்கத் தேவையில்லை என்பேன். பல தமிழாசிரியர் அப்படிச் சொல்வதாலேயே அது உண்மை ஆகிவிடாது. கல்கியின் ”பொன்னியின் செல்வனும்”, விக்கிரமனின் பல்வேறு புதினங்களும், பாலகுமாரனின் ”உடையாரும்” இது போல் தொடர்ச்சிக் காப்பியங்களா, என்ன? கிடையாது. ஒரே பின்புலத்தில் தத்தம் புனைவுகளை 20 ஆம் நூற்றாண்டின் வெவ்வேறு காலங்களில் கல்கி, விக்கிரமன், பாலகுமாரன் ஆகியோர் செய்தனர். அவர் மூவரும் சம கால ஆசிரியரும் அல்லர். அடுத்தடுத்து வந்த அம் மூவரும் பொ.உ.900-1100 ஆண்டு சோழப்பேரசைத் தத்தம் புனைவு வடிவில் எடுத்துக் காட்டினார். அவ்வளவு தான். இதே போன்ற பார்வையில் சிலம்பையும் மேகலையையும் பாருங்கள்.   

மேகலைச் செய்திகளைச் சிலம்போடு ஒட்டி ஒன்றின்பின் ஒன்றாய் நடந்தது போல் சிலர் கொள்வது எனக்குச் சரியென்று தோன்றவில்லை. (ஆழ்ந்து பார்த்தால், 2 காப்பியங்களுக்கும் கதைத் தொடர்ச்சி இல்லை. இயற்கைத் தொடர்பின்றி உழைத்துச் செய்த கணுக்கங்களே (laboured connections) எனக்குத் தெரிகின்றன. சிலம்பின் முதலிரு காண்டக் களன் ஏறத் தாழ 15 ஆண்டுகளுள் முடிந்துவிடும். அதற்கப்புறம் வஞ்சிக்காண்டத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கண்ணகியின் கோயில் எழும்பிவிடும். இப் 18 ஆண்டு ஓட்டத்தில் சிலம்பில், உண்மை நிகழ்வுகள் நிறையவும், உட்கட்டமைப்பு சரியானதாகவும், புனைவு மிகக் குறையவும் உள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. (புனைவின்றி எக்காப்பியமும் இல்லை.) 

சிலம்பின் அடிப்படை நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம். சிலம்பு முழுதையும் புனைவென்பது தமிழர் வரலாற்றைக் குலைக்கும் முயற்சியே. (என்னைக் கேட்டால், நம் வரலாற்றை  முறையாய் எழுத உதவுவது சிலம்பு நூல் என்பேன். அதில் தப்பு விட்டால், தமிழர் வரலாறே தாறுமாறாகும்.) சிலம்பைச் சங்கநூல் என்றே நான் சொல்வேன். என் கணிப்பில் சிலம்பின் காலம் பொ.உ.மு.75.  இதற்கான ஏரணமும், வாதங்களும், பட்டகைகளும் (facts) ”சிலம்பின் காலம்” நூலில் அடங்கியுள்ளது. என் நூலை அருள்கூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.  

சிலம்பிற்கு 460/470 ஆண்டுகள் கழித்து, ஏறத்தாழ பொ.உ. 385/395 களில் பெரும்பாலும் களப்பிரர் காலத்தில் எழுந்திருக்கக் கூடிய மேகலையில் புனைவுகள் மிகுதியாகவும் கதை உள்ளீடு குறைந்தும், பண்பு, நீதி வெளிப் படுத்தும் செயற்கைகள் கூடியும் தென்படும். செயின ”நீலகேசி” போல், புத்த ”மணிமேகலை” தம் சமய வெற்றியைக் குறிக்கவெழுந்தது. தமிழ்நாட்டில் புத்தம் உயர்நிலை அடைந்தது பொ.உ.300-500 களில் தான். மேகலைக் காப்பியம் காஞ்சியில் முடிவதும் கூட புத்தமத உயர்ச்சிக் கூறலுக்கே. கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற மகவு இருந்ததைச் சிலம்பு சொல்வதால், அதைக் கருத்தில் கொண்டு, இன்னொரு புனைகதை எழுப்பி, 460/470 ஆண்டுகளுக்குப் பின் ”மணிமேகலை” எழுந்திருக்கிறது. 

சிலம்பின் தொடர்ச்சி போல் இதைச் சொன்னால், புத்தமதக் கருத்துகளுக்கு மக்களிடை ஏற்பிருக்கும் என்று சில நிகழ்ச்சிகளை அங்குமிங்கும்  இணைத்து முடிவில் நீலகேசி போலவே ”சமயப் பட்டிமண்டபம்” கொண்டுவந்து இக் காப்பியம் முடிக்கப்பட்டுள்ளது என்பதே இப்போதைய எனது சிந்தனை. இப்போதெலாம் மறைந்த காஞ்சி சந்திரசேகரர் பற்றிப் புதுப் புதுக் கதைகள் சொல்லி அவரைத் தெய்வ நிலைக்குச் சிலர் ஏற்றிப் போகிறாரே, அதுபோன்ற மனப்பான்மை மணிமேகலைக் காப்பியக் காலத்தில், இக் காப்பியத்தின் வழி ஏற்றப்பட்டு இருக்கலாம். ஒரு புத்தமதப் பரப்புரை நூலை ”முழுதும் உண்மை சார்ந்தது” என்று சொல்லிவிட முடியாது. இலங்கையின் மகாவம்சம் என்பது முழுதும் உண்மையா, என்ன? அதிற் சில உண்மைகள் இருக்கும். கூடவே புனைவுகளும் உண்டு. 

மணிமேகலையை ஆழ்ந்து அலசாது, ஒருசிலர் அதைவைத்துச் சிலம்பின் காலத்தைக் கீழிழுத்துக் கொண்டுள்ளார் என்றே நான் சொல்வேன். அவரவர்க்கு ஏதோவொரு நிகழ்ப்பு என்று நகர வேண்டியது தான்.,  மேகலையில் வரும் நிகழ்ச்சிகள், குறிப்பாக கடலால் ஏற்பட்ட புகார் அழிப்பு, மேகலையின் காலத்தைப் பெரிதும் பின்னால் கொண்டு செல்கிறது. இந்தொனேசியா சுமத்திராவில் பொ.உ.385 க்கு அருகில் (2004 இல் நாம் பார்த்த அளவோ, அல்லது அதற்கும் மேலோ) ஒரு பெரிய ஆழிப்பேரலை ஏற்பட்டது பற்றிச் சீனக் குறிப்புகளிலும், இற்றை அறிவியல் ஆய்வாலும் வெளிப்பட்டுள்ளது. ”மணிமேகலையின் காலம்” பற்றிய நூலெழுதும் முயற்சியிலுள்ள நான் ஒரு சமயம் இக்குறிப்புகளைத் தேடித் தேடிச் சேர்த்தேன். அவற்றை ஒரு சேர வெளிப்படுத்தி என் ஏரணத்தைப் பின்னால் காட்ட முயல்வேன்.

புகாரில் இன்றுமுள்ள பல்லவனீச்சுரம் பற்றிப் பேசுவோர் அக் கோயிலுக்குப் பின்னால் இன்றுமுள்ள சம்பாதி கோயில் இடிபாடுகளையும், பல்லவனீச்சுரம் கோயிலுக்கு முன் (இற்றை நகரத்தார் சத்திரத்திற்கு அடுத்துள்ள) அகழ்ந்து எடுக்கப்பட்ட புத்தபீடிகைக் கோயில் பற்றியும் பேசவேண்டும். பொதுவாகப் பிடாரி கோயிலும் (இங்கே ஊர்த் தெய்வமான சம்பாதி கோயில்; அந்த ஊரின் மற்றொரு பெயர் சம்பாதிப் பட்டினம் தானே?) வேதமறுப்புப் பள்ளிகளும், விகாரங்களும், ஆராமங்களும் சங்ககால மரபின் படி ஊருக்கு வெளியில் தான் இருந்தன. எனவே இற்றைப் பல்லவனீச்சுரம் இருக்குமிடம் பழம் புகாருக்குச் சற்று வெளியில் என்று சொல்லலாம். 

கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகளைப் பார்க்க வந்த போது ஊரின் அகலமான ஒரு காதத்தை கடந்து வருவர். பொதுவாகப் பழ நகரங்களின் விகிதமுறையாய், ஒரு காதம் அகலம் இருந்தால் 2 காதம் நீளமிருப்பது வழக்கம். (எப்படி 1:2:4 அ்ளவில் செங்கல் செய்தாரோ, அதுபோல) 1:2 என்ற முறையில் ஊரளவு இருந்திருக்கலாம். தென்புல முறைப்படி 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ என்பர். வடபுல முறைப்படி, 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ  சிலம்பில் தென்புல முறையே பயன் பட்டுள்ளது. அப்படியாயின், பல்லவன் ஈச்சுரத்திலிருந்து குறைந்தது 7 கி.மி. தள்ளியே, கிழக்கே அந்தக் காலத் கடற்கரை, துறைமுகம் ஆகியவை இருந்திருக்க முடியும்.

அதாவது இற்றைக் கடற்கரைக்கும் 4 கி.மீ. தள்ளியே பழங் கடற்கரை இருந்திருக்கும். இற்றை NIO, HANCOCK ஆகியோரின் கடலாய்வின் வழி 4,5 கி.மீ தள்ளியே பல கட்டிடச் சுவர்களைக் கடலுக்குள் பார்த்துள்ளார். எனவே புகார் அழிந்தது உண்மை. அது எப்போது அழிந்தது என்பதிற்றான் குழப்பம். இப்போதையப் புரிதலின் படி அது பொ.உ.4 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றே எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் கடற்கோள் நடந்ததாய் இதுவரை எந்த அறிவியல் ஆய்வும் சொல்லவில்லை. ஆனால் ஆழிப்பேரலை ஏற்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார். 

பூம்புகாரின் பரப்பளவு கிட்டத்தட்ட 90 சதுர கி.மீ இருந்திருக்கலாம். அந்த ஊரை நிலைத்த, அசையாத, நிலங் கொண்டதாய்க் கருத முடியாது. சி்லம்பின் விவரணம் படிக்கும் போது அது இற்றைக் கொச்சி, எரணாகுளம் போல் [ஊடுவரும் உப்பங்கழிகள், சேற்றுப் பகுதிகள், மரப் பாலங்கள், சேற்றுக்குள் மரக்கால்கள் ஊன்றிச் செய்யப்பட்ட பெட்டிக்கடைகள் என்று தமிழர் அறியாத, (ஆனால் மலையாளிகள் நன்றாய் அறிந்த) ஆற்றுமுகம்] புகாரில் இருந்திருக்கலாம். கவனிக்க: ”லாம்” என்கிறேன். ஒருமுறை எழுத்தாளர் செயமோகனின் கொற்றவையையும் படியுங்கள். அவருடைய பூம்புகார் கற்பனை விவரிப்பு நமக்கு வேறு தோற்றத்தைத் தரும். உறையூர், மதுரை போன்று புகாரை எளிதில்  விவரிக்க முடியாது. இற்றைக் கொடுங்கோளூர் (பழைய வஞ்சி) போல் அதைப் பாருங்கள்.  .

மணிமேகலைக் காப்பியம் பற்றி இன்னொன்றையுஞ் சொல்லவேண்டும். சிலம்பில் ”மதுராபதிக் கோயிலின் வெளிச் சுற்றாலையிலிருக்கும் ஒரு மண்டபத்தில் சாத்தனார் தங்கியிருந்த போது கண்ணகி வந்து மதுராபதியோடு (மதுராபதி விவரிப்பு இற்றை அங்கயற்கண்ணியின் விவரிப்பைப் போலவே இருக்கும். படிக்கும் போது நாம் வியக்காது இருக்க முடியவில்லை) பேசிக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும் கேட்டதாகவும் இளங்கோவிடமும், செங்குட்டுவனிடமும் கூறுகிறார்”. புத்த மதஞ் சார்த்த ஒரு புலவர், இது போன்று வெளிக் கோபுரங் கடந்து சுற்றாலைக்கு (பிரகாரத்திற்கு) வந்து ஒரு மண்டபத்தில் படுத்துக்கிடப்பாரா? அந்த ஊரில் பெரும் புத்தப்பள்ளிகளும் ஆராமங்களும் இருக்குமே? ஏன் அங்கு இவர் போகவில்லை? 

ஓர்ந்து பார்த்தால் முரணாகவில்லையா? எனக்கென்னமோ சிலம்பில் வரும் சாத்தனார் புத்த நெறி சார்ந்தவராய்த் தோன்றவில்லை. 

அதே போல் இளங்கோ ஒரு செயினர், ஒரு துறவி, செங்குட்டுவனின் தம்பி என்பதையும் நான் ஏற்பவனில்லை. அதற்கான விளக்கத்தை என் நூலில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். அவர் சிலம்பின் ஆசிரியர். அவ்வளவு தான். ஒருவேளை செங்குட்டுவனுக்கு வேண்டப் பட்டவராயும் இருக்கலாம். அது பற்றிய கதை நமக்கு வேண்டாம்.) சிலம்புச் சாத்தனாரும், மேகலையை எழுதியதாய்ச் சொல்லப்படும் புத்தநெறிச் சாத்தனாரும் வெவ்வேறு ஆட்கள் என்றே நான் முடிவுசெய்வேன். அளவிற்கு மீறி பல்வேறு உரையாசிரியர் ஊகங்களுக்கு ஆட்பட்டு விட்டோம். உரையாசிரியரை ஒதுக்க வேண்டாம் ஆனால் மூலங்களை வைத்து ஓர்ந்துபாருங்கள்.

No comments: