Monday, July 31, 2006

தில்லை - 2


தில்லை மரம் இந்தக் காலப் பப்பாளியைப் போல் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியானது. ஆண் பூ தனி, பெண் பூ தனி. பூக்கள் என்பவை தமிழரை எப்பொழுதுமே கட்டிப் போடுபவை. குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே நூற்றுக்கும் மேல் ஒரு பட்டியல் உண்டு. (நடிகர் சிவகுமார் அடுத்தடுத்து அந்தப் பூக்களின் பெயரை அப்படியே ஒப்பித்துப் பல மேடைகளில் பெயர் வாங்குவார்.) அந்தப் பட்டியலில் தில்லைப் பூவும் உண்டு. ஆண் தில்லை மரத்தில் இலையுதிர்த்த வடுக்களின் அருகில் 2.5-7.0 நுறு மாத்திரி (centi meter; நூறு என்பதின் குறுக்கம் நுறு. தென்மொழி ஆசிரியர் இறைக்குருவன் இதை அறிமுகப் படுத்தினார்.) அளவுக்கு பூங்கதிர்கள் உருவாகும். பூக்கள் நறுமணம் உள்ளவை; மஞ்சள் சாயை (shade) உடைய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் இன்னும் சிறியவை. 1.0 -2.5 செ.மீ. அளவுடையவை. இரண்டு பூக்களுமே திசம்பர் - சனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனையடுத்து ஆகசுடு - அக்டோபர் மாதங்களிலும் சிறிதளவு பூக்கும்.

அந்த மரத்தின் இரண்டு செய்திகள் தமிழரை ஈர்த்தவை. ஒன்று அச்சம் தரும் மரம் என்ற செய்தி; இன்னொன்று மனத்தைக் கவரும் குழல் போன்ற பூந்தளிர் பற்றிய செய்தி; குறிப்பாக ஆண்பூந்தளிர். ஆண்மயிலின் தோகை போலத் தில்லையின் ஆண் பூந்தளிர்கள் நம்மை ஈர்க்கும். சற்றுத் தொலைவில் இருந்தும் நம்மைக் கவர்ந்து, அகவை கூடிய முனிவரின் நரைத்த சடை போல இந்தப் பூங்கதிர்கள் தோற்றமளிக்குமாம். "தில்லைத் தளிருக்கு முனிவர்சடை உவமையா, முனிவர்களின் திரண்டு கிடந்த சடைக்குழல்களுக்குத் தில்லைப் பூந்தளிர் உவமையா?" என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. புறநானுறு 252ல் மாரிப் பித்தியார் என்ற பாடினி பாடுகிறார். இந்தப் பாடலை 251ம் பாடலோடு சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்டு, பிள்ளைகளோடும், சுற்றத்தாரோடும் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த ஒருவன் திடீரென்று வீடுபேறு பற்றிய கருத்தில் ஆட்பட்டுத் தவம் மேற்கொண்டு, காட்டில் உறைகிறான். அவன் துறவு நிலை பற்றி வியக்கின்ற புலவர், இந்தப் பாடலில் தில்லையை உள்ளே கொண்டு வருகிறார்.:

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்ளிலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

"கறங்கு வெள் அருவி" என்பது சங்க இலக்கியத்தில் ஒரு குழூஉக் குறி. குற்றாலம் போனவர்களுக்குச் சட்டெனப் புரியும். "ஒரே சத்தம் (= கறங்கு) போட்டு அருவி கீழே இறங்குகிறதாம்; அவ்வளவு சத்தம் போடணும்னா, நீர்வரத்து ரொம்பக் கூட என்று புரிஞ்சுக்கொணும்; வேகமும் கூடவே இருக்கும். அந்த நிலையிலே, அருவியிலே நுரை கொழிஞ்சி தள்ளும்; வெள் அருவியாய்த் தெரியும். அந்த அருவியிலே ஏறினதாலே (=ஆடுனதால் = அருவியில் குளித்ததால்) கொஞ்சம் கொஞ்சமாய் முடி நிறம் மாறிப் போச்சாம்; வேறெ ஒண்ணும் இல்லை, கொஞ்சம் ஒளி விழுந்த மாதிரி ’டால்’ அடிக்குது; அய்யாவுக்கு நரை விழுந்திருச்சு. நரை விழுந்த முடி, தில்லைத் தளிர் மாதிரி புலபுலன்னு சடைசடையாய்த் திரண்டு காட்சியளிக்குதாம்."

இதுவரைக்கும் சரி, இனி மூன்றாவது வரியில் தான் இந்தக் கவிதைக்கே ஆன முரண் இருக்கிறது; தில்லையின் தளிர் போல விளங்கும் சடை கொண்ட இந்த முனிவர் என்ன இலை பறிக்கிறார் தெரியுமோ? "அள்ளிலைத் தாளி." மூலிகை அறிவு இருந்தால் தான் இங்கு பொருள் விளங்கும். அல் என்றால் "நெருங்கிய" என்று அருத்தம். "நெருங்கிய இலை கொண்ட தாளி" என்னும் செடியில் இருந்து முனிவர் இலை பறிக்கிறார்; சிரிப்பு வருகிறது மாரிப் பித்தியாருக்கு.

ஏனென்றால் "தாளிச பத்திரி" என்று இன்று சொல்லப் படும் (Flacourtia Calaphracia) அள்ளிலைத் தாளி பொதுவாகப் பசியைத் தூண்டுவதற்கும், கழிச்சல், சுரம், நாட்பட்ட இருமல் போன்றவற்றைப் போக்குவதற்குமாக உள்ள மூலிகை; கருப்பிணிப் பெண்கள் நல்ல மகப் பேறு (சுகப் பிரவசம்) ஏற்படுவதற்காக உட்கொள்ளும் மூலிகையும் இதுவாகும்.

வேறு ஒன்றுமில்லை; "நரை விழுந்து தில்லைப் பூந்தளிர் போலச் சடைகொண்ட முனிவர், கருப்பிணி உட்கொளும் மூலிகையிலையைப் போய்ப் பறித்துக் கொண்டிருக்கிறாரே?" என்று புலவர் கேலி பாடுகிறார். (முனிவர் பசியில்லை என்று பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஊறால் பறித்திருக்கலாம்; நமக்குக் காரணம் தெரியாது. பாடினியாரும் காரணம் சொல்லவில்லை. உரையாசிரியரும் முரணைப் போட்டு உடைக்கவில்லை; பொதுவாக, முரண் என்பது இப்படித்தான். ஒன்று கிடக்க இன்னொன்றாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது.

அடுத்த இரண்டு வரிகளில் பாடினியின் கேலி இன்னும் கூடுகிறது. "துறவு கொள்ளுவதற்கு முன்னால், வீட்டுக்கார அம்மா பேச்சை அப்படியே கேட்டு, வேண்டப் பட்டதைத் தேடிக் கொண்டுவந்த ஆள்தானே இவருன்னு" ஒரு போடு போடுகிறார்..

கவிதை ஒருபக்கம் இருக்கட்டும். நமக்கு முகன்மையான செய்தி தில்லைப் பூந்தளிரை முனிவர்களின் புரிசடைக்கு இணையாக ஒப்பிட்டது. தில்லை என்ற மரத்தின் பெயரே அந்தத் தளிர் என்ற சொல்லோடு தொடர்பு கொண்டது. துல்லுதல் என்பது தோன்றுதல்; தோன்றுவது கொஞ்சம் மஞ்சளாய்த்தான் தெரியும். துலங்குதல் என்ற சொல் கூட துல் என்னும் வேரில் தோன்றியது தான். மஞ்சளாய் ஒளி நிறைந்ததாய், தெரிவதைத் துலங்குதல் என்று சொல்கிறோம். ஏனத்தின் கழிம்புகளையும், கறைகளையும் போக்கி விளக்குவதைத் துலக்குதல் என்று சொல்லுகிறோம். துல்லுவது துள்ளுவது என்றும் ஆகும். துள்ளுவது பின் துளிர்க்கும்; அது சற்றே திரிந்து தளிர்க்கும். துல்லுவது தில்லையானதும் இதே போல் தான்.

அந்தப் பூந்தளிர் ஒன்றே தில்லை மரத்தைப் பார்த்தவுடன் சட்டென்று காண்பவர் மனத்தில் தைக்கும் காட்சி. "தளிர்க்குழல் - முனிவர் சடை" என்ற இரட்டைப் பிணை, நெய்தல் நிலத் தமிழனை அப்படியே ஈர்த்திருக்க வேண்டும். கலித்தொகை 133 ல் முதலைந்து வரிகள் இன்னொரு காட்சியைக் காட்டுகின்றன. (நெய்தற் கலி; ஆசிரியர் நல்லந்துவனார்; அந்துவன் = அப்பன்; இந்தக் காலத்தில் அப்பன் என்று எத்தனை பெயர்கள் முடிகின்றன; அது போல அந்துவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்தன் = தலைவன், பெரியவன், பெருமான். மலையாளத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரை அச்சன் என்று சொல்லுகிறார்களே, குமரியில் ஆசான் என்று சொல்லுகிறார்களே, அது போலப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தனர் = பெருமானர். அந்தனர்>அந்தணர் என்று ஆகும். ஆக அந்தனர் என்ற சொல் பிறந்தது இப்படித்தான். தொடக்கத்தில் அது ஒரு குலத்தை, சாதியைச் சுட்டும் சொல் அல்ல. பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட இந்தச் சொல் பற்றி நிறையச் சொல்லலாம். எனினும் விடுக்கிறேன்.)

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்
பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

நெய்தலில் காற்று அடித்துக் கொண்டே இருப்பதால் அங்கும் இங்குமாய் மணல் மேடுகள் மாற்றி மாற்றி ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அந்த மணல் மேடுகளை எக்கர் என்று சொல்வார். இம்மணல் மேடுகளுக்கு அருகில் கடலோதக்கழி இருக்கிறது. கழியின் கரையில் இருக்கும் முள்ளியின் மலர் கருப்பு. மா நிறம் என்பது கரிய நிறம் தான். (அதே பொழுது மிகக் கருப்பு என்று பொருள்கொள்ளக் கூடாது.) மாமலர் முண்டகம் என்பது அம் முள்ளியைத் தான் குறிக்கிறது. கூடவே அருகில் தில்லை மரங்கள் இருக்கின்றன; முனிவன் சடை போலப் பூந்தளிர்கள் தொங்குகின்றன; கொஞ்சம் தள்ளினாற் போலக் கல்லால மரமும் (Ficus tomentosa) இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாட்டில் அது நேரடியாகக் கூறப் படவில்லை. பொதுவாக, நெய்தற் கழியில், வறண்ட உதிர்புக் காடுகளில், பெரும்பாலும் பாறை விரிசல்களுக்கு நடுவில்) இருப்பது இயற்கையே.

கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லைமரமும் செறிந்து வளர்ந்திருக்கும் அக் கடற்கரைச்சோலையில், மணல் மேட்டில், தோற்றம் எப்படித் தெரிகிறதாம்? சீர்மிகு சிறப்பினோன் உடகார்ந்திருப்பது போல் தெரிகிறதாம். "யார் அந்தச் சீர்மிகு சிறப்பினோன்?" பொதுவாகப் பார்த்தால் தென்னாட்டு முனிவன்; விதப்பாகப் பார்த்தால் "தக்கண முகத்தோன்". என்ன இது புதுச்சொல் என்று மருள வேண்டாம். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்கிறோம் அல்லவா? தக்கணத்தில் தோன்றியவன் தக்கண முகத்தோன். (தக்கு = தாழ்வு. இமைய மலையைப் பார்த்தால் நாவலந்தீவின் தென்பகுதி தாழ்ந்து கிடக்கிறது. தாழ்ந்து கிடக்கும் பகுதி, தக்கிக் கிடக்கும் பகுதி, தக்கணம் எனப்படுகிறது; மேலே கிடக்கும் மலையைப் பார்த்தால் கீழே கிடக்கும் பகுதி கிழக்குப் பகுதி ஆனது போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தக்கணம் என்ற சொல் தமிழ் தான். அந்தச் சொல்லைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம். முகத்தோன் = தோன்றியவன்; முகத்தோனை மூத்தோனாகிப் (மூத்தோர் என்பவர் நமக்கு முன்னால் தோன்றியவர் என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா?) பின் வேறு ஈற்றால் மூத்தி என்று சொல்லி, பின்னால் வடமொழிப் பலுக்கிற்காக, ரகரத்தை நுழைத்து மூர்த்தி ஆக்குவர். தக்கண மூர்த்தி இன்னும் திரிந்து தக்ஷிணா மூர்த்தி ஆவார். நாம் அதன் தொடக்கமே தெரியாமல் மருள்வோம். தென்னாடுடைய சிவனுக்கு வடபுலத்துப் பெயரா இருக்கும்?) இந்தத் தக்கண மூத்தியின் மயிர்க்குழல்கள் நரை தட்டிப் போய் தில்லைப் பூந்தளிர் போலக் காட்சியளிக்கின்றன. முண்டக மலர் அவன் கண்டம் (கழுத்து) போலக் காட்சியளித்திருக்கலாம். மறுபடியும் தொண்டைக்குள் நஞ்சு என்ற உருவகத்தை இங்கு பொருத்திப் பாருங்கள்.

இவன் முனிவன் என்றால், இம்முனிவனுக்கு அருகில் ஒரு குண்டிகை (கலசம் அல்லது செப்புக் கலம்) இருக்க வேண்டுமே? எங்கும் நாம் தேட வேண்டாம். கழியில் உள்ள வளைந்து கிடக்கும் தாழையின் பழம், குடம் எனத் தொங்குகிறது. தாழையின் வளைசலைக் குறிக்க, கொக்கின் கழுத்தையும் நெய்தற் கலி பாடிய நல்லந்துவனார் உவமை சேர்க்கிறார். இந்த வரிகள் முழுக்க ஒரே உவமை மயம். ஆனாலும் காட்சி தெளிவாகப் புலப்படுகிறது. சொல்லுக்குள் சிவனை, தக்கண முகத்தனை, முழுதாகக் கொண்டுவந்து விடுகிறார் இந்தப் பாடலாசிரியர். "இப்பேர்ப்பட்ட துறைவனே! நான் சொல்லுவதைக் கேள்" என்று மேற்கொண்டு போகிறார்.

"தக்கண முகத்தோனை முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் தில்லையோடு தொடர்வுறுத்திப் பதிவு செய்த இடம்" நானறிந்த வரை இது தான். இந்த நெய்தற் கலிதான். அதுவரை அவன் "ஆல் அமர் செல்வன், நுதல்விழியோன், கொன்றை விரும்பி" இப்படித்தான் பலவாறாக சங்க இலக்கியங்களில் வழுத்தியிருக்கிறார்கள். ஏன் இந்த வெவ்வேறு தோற்றங்கள் என்ற கேள்வி நமக்குள் இனி அடுத்ததாக எழும்.

அன்புடன்,
இராம.கி.

தில்லை - 1

பிச்சாவரம் போயிருக்கிறீர்களோ? குறைந்தது அரை நாளாவது பார்க்க வேண்டிய இடம்; குறிப்பாக அங்கே உள்ள கழிக்கானல் (`=mangrove). அது அசையாத நீர்ச் சேர்க்கையால் ஆன வெறும் உப்பங்கழி அல்ல. அதற்கும் மேலானது. ஓயாத அசைவு இருக்கும் "ஓதக் கழி" (tidal backwaters) என்றுதான் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஓதம் என்ற சொல்லைக் கண்டு மருள வேண்டாம். உயர்ந்து வருவது ஓதம். உயர் ஓதம் (high tide) இருக்கும் போது, கழியில் (backwaters) நீர் பெருகும். தாழ் ஓதத்தில் (low tide) நீர் வடிந்து போகும். இந்தக் காலத்தில், கழிக் கானலை, அலையாத்திக் காடுகள் என்று சொல்லுகிறார்கள். (கேட்பதற்குக் கொஞ்சம் செயற்கையாய், அருவியை நீர்வீழ்ச்சி என்று சொல்லிப் பழகுவதைப் போல, எனக்குத் தோன்றுகிறது. பழைய பெயரை மீட்டுக் கொண்டுவரலாம். தலையாலங் கானம் (கானம் = காடு), ஆலங் கானம், கானப்பேர் போல இதைக் கழிக் கானம் என்றும் சொல்லலாம். மாமல்லைக்கும் தெற்கே மரக்காணம் என்று சொல்லப்பட்டு வரும் மரக் கானமும் ஒருகாலத்தில் கழியாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்னென்ன மரங்கள் அங்கிருந்தன என்று தான் சொல்லத் தெரியவில்லை; ஆய்ந்து பார்க்க வேண்டும். சங்க காலத்து எயிற் பட்டினம் தான் (சிறுபாணாற்றுப் படை) மரக் கானம் ஆயிற்று என்று சொல்லுவார்கள். பார்த்தீங்களா, வரலாற்றைச் சொல்லத் தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மீண்டும் சொல்லப் புகுந்த மையக் கருத்திற்கு வருவோம்.)

பொதுவாகக் கானலில் நிறைந்து கிடக்கும் புன்னை மரம் பற்றிப் பலருக்கும் தெரியும்; [ஓடங்கள், நாவாய்கள், கப்பல்கள் எனப் பலவும் நாவலந்தீவிலும், சுமேரிய நாகரிகத்திலும் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்த இந்தப் புன்னை ஒரு முகன்மையான மரம் தான். ஆனால் அதை இன்னொரு முறை பார்க்கலாம்.] இப்பொழுது, தில்லை பற்றி முதலிற் பார்க்கலாம் :-) அப்படியே தில்லை நடராசனைப் பற்றியும் பார்க்கலாம்.

யாரோ அங்கே புன்சிரிக்கிறிங்க! என்னடா இது, திரும்பவும் சிக்கலுக்குள்ளே வர்றானேனு பார்க்கிறீங்களோ? சித்தம் சிவனுக்குள்ளே! புரிதல் கோளாறை அப்படியே விட்டுட்டுப் போறதை, நெஞ்சு ஒத்துக்கிடலை.

தில்லை ஆடலரசனின் முன்பு தமிழ் படிப்பதில், ஒரு சில கருத்துக்கள் அண்மையில் எழுந்தன; வலைப்பதிவு உலகம் கொஞ்சம் சூடாகிப் பின் ஆறி அடங்கிய நேரத்தில், மீண்டும் தில்லை பற்றியும், அதன் தொடர்பான மற்ற செய்திகள் பற்றியும், இங்கு பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் திணைகள் சார்ந்த புவியியல், மரங்கள், மரபுகள், வரலாறு, தொன்மம் இப்படிப் பலவற்றையும் தெரிந்து கொள்ளாமலே நம்மில் மிகப் பலரும் காலத்தைக் கழிக்கிறோம். அப்படிக் கழிப்பதோடு மட்டுமல்லாமல், வெறுமே கருத்துமுதல் வாதமாய் ஒருசிலர் எடுத்துரைக்கவும் செய்கிறார்கள்; மாற்றாருக்கு கோவம் எதனால் எழுகிறது என்று புரிந்து கொள்ளவும் முற்படாமல், வெறும் அறிவுய்தித் (intelligentia)தனத்தோடு நிகழ்வுகளை நோக்கி, நேர்த்தியான வழக்குரைஞர்கள் போல, அதே பொழுது அரைகுறை உண்மைகளை அப்படியே திரித்து, மிகப் பலருக்கும் சொக்குப்பொடியும் போடவைத்து ...... , பலரும் வல்வழக்குகள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வல்வழக்கு அறிஞர்களின் அடிப்பொடிகளோ, தமிழ் என்று சொன்னாலே ஏதோ வெறியன் என்று பட்டம் கட்டத் துடித்து எழுகிறார்கள்! சரி, கொஞ்சம் அமைதியாய் இருப்போம் என்று காத்திருந்தேன். முடிந்த முடிவுக்காரர்கள், கருத்துமுதல் வாதிகளோடு எத்தனை முறை வாதாடினாலும் ஒன்றும் மாறப் போவது இல்லை; ஆனால் நொதுமலாக (neutral) இருக்கும் நிறையப் பேர்களுக்காகவாவது, உண்மைகளையும், ஒழுங்கான புரிதல்களையும், பொதுவாகத் தெரிந்ததையும் சொல்லிப் பரிமாறிக் கொள்ளுவோமே என்ற எண்ணம் தான் இந்தப் பதிவு.

தில்லை மரத்திற்கு Excoecaria agallocha L. என்று புதலியலில் ஒரு பெயர் உண்டு. "அகிலைத் தில்லை" என்று அந்த மரத்திற்கு தமிழ்ப் புதலியற் பெயர் கொடுத்திருக்கிறார்கள். (அகில் மரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், அந்த அகில் என்ற சொல்லும் உள்ளே வருகிறது. அகில்கட்டை நமக்கு பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து காலங் காலமாய் வந்து கொண்டிருந்தது.) கடற்கரையோரப் பகுதிகளில், சதுப்பு நிலப்பகுதிகளின் ஓரத்தில் தில்லை மரம் வளர்கிறது. நெய்தலும் மருதமும் கலந்த பகுதிகளில்தான் இது காணப்படும். [ஒரு காலத்தில் இங்கே சென்னைக்கு அருகில் உள்ள அடையாற்றுக் கானலிலும், இன்னும் மற்ற ஆற்றுக் கழிமுகங்களிலும் இது போன்ற நெய்தல் திணையும், அதில் தில்லை மரங்களும் இருந்திருக்க வேண்டும். காலம் பெரும்பாலானவற்றை அழித்துவிட்டிருக்கிறது.] இந்தக் கழிமுகங்களில் தான் பொதுவாகப் பட்டினங்கள் எழுந்தன. பட்டினங்களில் தான் வணிகமும் எழுந்தது; உல்கும் (excise duty), சுங்கமும் (customs duty), வரியும் (tax) திளைத்தன. அரசு இயந்திரம் பட்டினம் எங்கும் ஆல் போலப் பரவிக் கிடந்தது.

பணம் என்று போகத் தொடங்கிவிட்டால், அப்புறம் வேள்வி, ஓமம், யாகம் போன்றவற்றை நம்பித் தேடிப் போகும் கூட்டம் தவிர்க்க இயலாத வகையில் அந்தக் காலத்தில் ஏற்பட்டு விடும். [இந்தக் காலத்திலும் யாரோ ஒரு சாமியார் சொன்னார் என்று ஒப்பி, தனக்குப் பிடித்த கோயிலில் ஏதேனும் ஒரு திருப்பணி செய்தால், தான் செய்பவற்றிற்கு ஒரு மாற்று ஏற்பட்டு விடும் என்று நம்பிச் செல்வம் படைத்தவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.] அதன் விளைவாக, இயல்பாகவே, வேத நெறி பயிலும் கூட்டத்தினர் (வேதநெறியாளரை வைதீகர் என்று சொல்லுவார்கள்.) பட்டினம் இருக்கும் இடங்களை நோக்கி வடபுலத்தில் இருந்து விரும்பி வந்தார்கள். வேதநெறி சிறந்தது, மகதத்தின் அருகில் இன்றையக் காசியை இருப்பிடமாகக் கொண்ட கோசலத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் தான். நான் சொல்லும் காலம் கி.மு. 600க்கு அண்மையில். வேதநெறியாளர் வடபுலத்தில் இருந்து தெற்கே குறைந்தது மூன்று அலைகளில் வந்தார்கள்; ஆர்வம் உள்ளவர்கள் கோயில்களில் கொட்டிக் கிடக்கும் கல்வெட்டுக்களைப் படிக்கலாம். இல்லாவிட்டால், பேராசிரியர் ந. சுப்பிரமணியனின் அருமையான பொத்தகத்தைப் படிக்கலாம். வரலாறு என்பது நாம் நினைத்தபடி இடைப்பரட்டுவது(interpret) அல்ல. செய்திகளை நம் விழைவு போல அங்கே திரிக்க முடியாது. வடபுலத்தில் இருந்து தக்கணம் புகுந்த நகர்ச்சிகள் (movements) தெளிவாக ஆவணம் செய்யப் பட்டிருக்கின்றன.

கொஞ்சம் அவக்கரப் படாமல், தில்லை மரத்தை மற்றும் காடுகளைப் பார்ப்போம்.

தில்லை மரம் கொஞ்சம் அலாதியானது. ஒருபக்கம் அது அச்சம் தரும் மரம்; இன்னொரு பக்கம் நம்மைப் பெரிதும் ஈர்க்கும் தன்மையது. இந்தச் சிறு மரத்தின் எந்தப் பகுதியை ஒடித்தாலும் அலரி (= அரளி) மாதிரிப் பால் தெறிக்கும். அந்தப் பால் நம் உடம்பில் பட்டால் அரிக்கும்; எரியும்; சிவந்து போகும்; கண்ணில் பட்டாலோ, கண்ணெரிச்சலோடு, கொஞ்சம் கொஞ்சமாய் தற்காலமாகவோ, சிலபொழுது முற்றிலுமோ, கண்பார்வை போகவும் செய்யலாம். இதனாலேயே இந்த மரத்தை blinding tree என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். (மேலையருக்கு இந்த அச்சமே முகன்மையாய்ப் பட்டது. அப்படியே இந்தப் பெயர் இடப்பட்டது. நமக்கோ வேறொரு ஈர்க்கும் தன்மை முகன்மையாய்த் தெரிந்தது. அதுவே அந்த மரத்தின் பேருக்குக் காரணம் ஆனது.) இந்தச் சிறு மரம் 6 மாத்திரி (மீட்டர்) உயரம் வளரக்கூடியது நல்ல சூழ்நிலை (அதாவது நீர் ஒழுங்காக ஏறி, வடியும் சூழல்) இருந்தால் 10 மாத்திரி கூட வளருமாம். பொதுவாகத் தில்லை மரம், பசுமை குன்றாத மரம். மரத்தை வெட்டிப் போட்டால், துண்டுகள் நீரில் மிதக்கும். ஒரு கொம்பில் ஏற்படும் இலைகளின் வளர்ச்சி பார்ப்பதற்கு ஒரே ஒழுங்கில் காட்சியளிக்காது மாற்றொழுங்கில் (alternative ஒன்று மாற்றி ஒன்றாய்) காட்சியளிக்கும். இலைகள் நீண்ட கோழிமுட்டை வடிவில் முனையுடன் இருக்கும். இளம் இலைகள் பூஞ்சை (pink) நிறத்திலும், முற்றிய இலைகள் ஆழ்சிவப்பு (deep red) நிறத்திலும் இருக்கும். தில்லம் என்ற சொல் தில்லை மரத்தின் விதையைக் குறிக்கும். இறைவன் தொண்டைக்குள் நஞ்சு என்ற கருத்தீடு பிறந்தது தில்லை மரத்தின் தூண்டுதலால் இருந்திருக்கலாம் என்றே ஓர்மை ஏற்படுகிறது..

இன்றைக்குப் பிச்சாவரத்திற்கு அருகில் கடல் இருந்தாலும், ஒரு காலத்தில் கடலும், கழியும், இன்றைக்குச் சற்று தள்ளி இருக்கும் பெரும்பற்றப் புலியூர் (=சிதம்பரம்) வரை நெருங்கித் தான் இருந்தது என்று புவியியலார் சொல்லுகிறார்கள். [சிதம்பரத்தில் வெள்ளம் வந்தால் ஊரெல்லாம் தத்தளிப்பதும் அதன் தாழ்புவி (low level of ground) நிலையை நமக்கு உணர்த்தும்.] அந்த ஊர் முழுதும் ஒரு காலத்தில் தில்லை வனமாகத் தான் இருந்தது. சோழ நாட்டில் நாலு புலியூர்கள் இருந்தன என்பார்கள். அதில் இது ஒன்று (காவிரிக்கும் வடபால் உள்ளது). இன்னொன்று பெரும்புலியூர் (இன்றைக்குப் பெரம்பலூர் என்றால் தான் பலருக்கும் விளங்கும்.) மீதம் இரண்டும் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். பெரும்பற்றம் என்ற முன்னொட்டை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெரிய பாதம் தான் பெரும் பற்றம் என்று குறிக்கப் பட்டது. பற்றம்>பத்தம்>பாதம் என்று விரியும் சொல்லைப் பார்த்தால், பற்றிக் கொள்ளுவதும் பதிவதும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை என்று புரியும்.

பெரிய பாதம் கொண்டவரை வ்யாக்ர பாதர் என்று இருபிறப்பிச் சொல்லால் வடமொழியாளர் மொழி பெயர்ப்பார்கள். (வியல்ந்து கிடப்பது என்பது அகண்டு கிடப்பது. வியல்ந்த கோள் வியாழன். வியல் என்ற முன்னொட்டு "பெரும்" என்ற பொருளையும் குறிக்கும். வியக்கிறான் என்றால் வாயை அகலத் திறந்து பெரிதாக விரிக்கிறான் என்று தான் தமிழில் பொருள். வியத்தல்/வியக்குதல் என்பது பொதுவாக வாய்அகலும் செயலைக் குறிக்கும். வழக்கம் போல வடமொழிப் பலுக்கில் ரகரம் நுழைந்து, வியக்கம் வியக்ரம் ஆகும். வியக்க பாதர், வியக்ர பாதர் ஆன கதை அது தான். யாரோ ஒரு முனிவர் சற்றே பெரிய பாதம் கொண்டவர். அந்த முனிவர் தில்லை வனத்தில் இருந்திருக்கிறார். அவருக்கும் ஆடலரசனுக்கும் இடையே ஒரு தொன்மம் இருந்திருக்கிறது. அவர் பெயரால் இது பெரும்பற்றப் புலியூர் அழைக்கப் படுகிறது. இன்னொரு முனிவரையும் இந்த ஊரோடு தொடர்புறுத்துவார்கள். அவர் பெயர் பதஞ்சலி. அவரை நாட்டியத்தோடு தொடர்பு படுத்தும் தொன்மமும் உண்டு. இங்குமே பாதம்>பதம் என்ற சொல் உள்ளே இருப்பதைப் பார்க்கலாம். நம்மூர் ஆட்களை, ஊர்களை, செயல்களைப் புரிந்து கொள்ளத் தமிழ் தான் பயன்படுமே ஒழிய வடமொழி அல்ல. இருந்தாலும் ஒருசிலர் இந்தப் பழக்கத்தை விடாமலே, வடமொழியின் உள்ளே தேடு தேடென்று விதம் விதமாய்த் தேடிக் கோண்டிருப்பார்கள். :-)

பெரும்பற்றப் புலியூர் இன்றைக்குச் சிதம்பரம் என்று அழைக்கப் படுகிறது. அது உண்மையில் சிற்றம்பலம். அந்தப் பெயரைக் கூப்பிடக் கூப்பிட ஒரு சிலரின் பலுக்கத் திரிவால், அது சித்தம்பரம் ஆயிற்று. பின்னால் சிதம்பரம் என்று திரிந்தது. இதை அறிந்து கொள்ளாமல், சித்தம் + பரம் = சிதம்பரம் என்றெல்லாம் சொல்லப் புகுவதைப் பார்க்கும் போது, பொருந்தக் கூறுவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும். (அந்த அம்பலம் சின்ன அம்பலம்; ஆனால் குறிப்பிடத் தக்க அம்பலம்; அதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.) சிலருக்குச் சித்தம்பரம் என்று கூறுவது மனத்திற்கு நிறைவாய், உகப்பாய் இருக்கலாம். ஆனால், வரலாறு அப்படி இல்லை என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். பொதுவாகத் தமிழ் ஊர்களில் பெரும்பாலானவை அப்படிக் கருத்து முதல்வாதத்தில் பெயரிடப் படுவன அல்ல. இயற்கை, குமுகம், மாந்தர் பெயர் என இப்படித்தான் ஊர்ப்பெயர்கள் 100க்கு தொன்னூற்று தொன்பது விழுக்காடு எழுகின்றன.

அன்புடன்,
இராம.கி.

Friday, July 28, 2006

அளவுச் சொற்கள் - 3

minimum பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்தப் பதிவில் வேறு பத்துச் சொற்களைத் தருகிறேன். இன்னும் பட்டியலில் பல சொற்கள் இருக்கின்றன.

இருபத்தாறாவது அளவுச் சொல்லான meagre என்பதைப் பார்ப்போம். குறைந்து இருப்பதை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள். தமிழில் "அவன் நொய்ந்து போய்க் கிடக்கிறான்" என்னும் போது "குறைப்பட்டுக் கிடக்கிறான்" என்றே பொருள் கொள்ளுகிறோம். நொய்தலின் பெயர்ச்சொல் நோய். நொடித்துப் போதல், நொகுத்துப் போதல் என எல்லாமே குறைப்பட்டுப் போவது தான். குறைப்படுதல் என்பது தகுதியிலும் (quality) நடக்கலாம்; எண்ணுதியிலும் (quantity) நடக்கலாம். நொகை எண்கள் என்று negative எண்களைச் சொல்லுகிறோம். அதே போல எண்ணில் குறைப்பட்டுக் கொஞ்சமாய் இருத்தலை சற்றே திரித்து நூகை என்று சொல்லலாம். நூகிக் கிடத்தல் என்பதும் நொய்ந்து கிடப்பதே. meagre = நூகை. "இவ்வளவு நூகையாக பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?"

இருபத்து ஏழாவது சொல் mean என்பது. இதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நாப்பண் என்றே கூறும். நடுவண் என்பதைப் போன்று உள்ள சொல் நாப்பண். நடுவிற்கும் நடுவானது நாப்பண். ஒரு முறை நண்பர் மதுரபாரதி இதை மடற்குழுவில் பழைய காட்டுக்களை எடுத்துக் காட்டி அருமையாக விளக்கியிருந்தார். நாப்பண் என்பதை நாவண் என்றும் சொல்லலாம். mean = நாவண். "இன்றைய ஒரு நாட்பொழுதின் நாவண் வெம்மை (temperature) என்ன?" என்ற கேள்வி கேட்கக் கூடியது தான்.

இருபத்தி எட்டாவது சொல் median. ஏற்கனவே கூறிய படி, நடுவம் என்ற சொல்லே இதைக் குறிக்கும். இதே பொருளில் பெயரடையாக (adjective) வரும் பொழுது medial என்பதை நடுவல் என்று குறிக்கலாம்.

இருபத்தி ஒன்பதாவது சொல் medium. பலரும் இதை ஊடகம் என்றே மொழிபெயர்க்கிறார்கள். சில காலம் முன்புவரை நானும் அப்படிப் புழங்கி இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பெரும்பாலான இடங்களில் மிடையம் என்ற சொல்லையே நான் இப்பொழுது புழங்குகிறேன். ஏனென்றால் ஊடுதல் (to go in between or to osmose) என்ற வினை, ஒன்றின் ஊடே செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இது வேதிப் பொறியியல் (chemical engineering), மற்றும் பூதி வேதியலில் (physical chemistry) osmosis என்ற செலுத்தத்திற்குச் (process) சரியாகப் பொருந்தி வரும். நுணுகிய துளைகள் இருக்கும் ஒரு படலத்தின் (film) வழியே சில மூலக்கூறுகள் (molecules) ஊடுவது உண்டு. அந்தச் செயல் ஊடுகை (osmosis) என்று இந்த இயல்களில் சொல்லப் படும். அந்த ஊடுகைக்குத் துணை போவது ஊடகம் (osmotic membrane) என்னும் மெம்புனை(membrane)யாகும். அந்த ஊடுகைக்கு எதிராக, அதாவது கரைபொருளுக்கு (solute) மாறாகக் கரைமத்தையே (solvent) ஊட வைக்கும் செலுத்தத்தை எதிர் ஊடுகை (reverse osmosis) என்று சொல்லுவார்கள். medium என்பதற்கு ஈடாக, மிடையம் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் மிடைத்தல் என்பது மேற்பட்டுத் தெரிதல். மிடையும் மேடும் ஒருபொருட்சொற்கள் தான். மேட்டில் இருந்து எழுந்தது மேடை என்னும் சொல். ஒரு குமுகாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை மேற்படுத்திக் காட்டுவது, மிடைத்துக் காட்டுவது மிடையம். இங்கே இவர்கள் வெறுமே விளக்குப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள். "பொதுவாக மிடையக்காரர்கள் நிகழ்வுகளின் ஊடே சென்று செலுத்தம் செய்வது உகந்தது அல்ல" என்றே பலரும் சொல்லுகிறார்கள். தவிர அகநானூற்றின் ஒரு பகுதிக்குப் பெயரான மணிமிடைப் பவளம் என்ற சொல்லையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். மணிகளுக்கு இடையே கிடக்கும் பவளம் என்று அதற்குப் பொருள். மிடையம் என்பது குமுகயாத்தின் இடையே கிடக்கும் ஒரு நிறுவனம் தான். இப்படி இதைப் பற்றி நான் எழுதிக் கொண்டே போகலாம். எனக்கென்னவோ மிடையம் என்ற சொல் media-விற்குச் சரியான பொருள் தருவதாகவே படுகிறது. ஆனால், எந்தச் சொல் நிலைக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல நான் யார்? என்னால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

முப்பதாவது சொல் mega; முன்பே சொன்னது போல் மீ என்னும் ஓரெழுத்து ஒருமொழி மிகுந்த நிலையை, மிகப் பெரிதான நிலையைக் குறிக்கும் சொல்; அதன் இன்னொரு சொல்லாட்சியே இந்த மீகிய என்ற பயன்பாடு.

முப்பத்தொன்று micro; தமிழிற் பல இடங்களில் மகரமும், நகரமும் போலி என்று அறிவோம். இந்தப் போலிப் பயனக்கத்தால், முதல் என்பது நுதலாகும்; முப்பது நுப்பதாகும்; முடங்குவது நுடங்குவதாகும். இதே வகையில் எண்ணிப் பார்த்தால் நூகிய என்ற சொல் மூகிய என்று மாறி மிக நுண்ணிய பொருளைக் குறிப்பது புரியும். இப்பொழுது தமிழில் திரிந்த சொல்லைப் பயனாக்காமல், நூகிய என்பதையே ஆளலாம்.

முப்பத்திரண்டாவது சொல் middle; இதற்கான இணைச்சொல் நடு; நான் கூடுதல் விளக்கம் தர வேண்டியதில்லை.

முப்பத்தி மூன்றாவது சொல் mild; மெல்லியது mild ஆகும். இந்தச் சொல், தகுதி (quality) நோக்கியே முதலில் எழுந்தது; நாளாவட்டத்தில் எண்ணுதிக்கும் (quantity) பயன்படுத்துகிறார்கள். வாயில் போட்டு மெல்லுகிறோமே அந்தச் செயலால் தான், ஆதி மாந்தருக்கு, கடினமான பொருள் மெல்லியதானது. பின்னால் அரைத்தல் என்ற சொல்லும் மெல்லுதலுக்குப் பகரி(substitute)யாய் எழுந்தது. அப்படி மெல்லுகிற காரணத்தால் ஒரு சுவையும் அவருக்குப் புலப்படுகிறது. கூடவே ஒரு மணமும் எழுகிறது. ஆங்கிலத்திலும் மேலை மொழிகளிலும் மணத்தைக் குறிக்கும் சொல்லான smell என்பது கூட இந்த மெல்லும் செயலால் எழுந்த சொல் தான். இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், தமிழிய மொழிகளுக்கும் உள்ள உறவில் இந்தச் சொல்லையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முப்பத்தி நான்கு milli; முன்னால் சொன்ன முறையில் இது நுல்லி என்று தமிழில் வரும். நுல்லில் பிறந்த சொற்கள் பலவுண்டு. நுல் என்பது நுணுகு, நூகு எனப் பல சொற்களுக்கும் வேராக அமையும். மகர நகரப் போலி பற்றி முன்னால் சொல்லியிருக்கிறேன். million என்னும் எண் தொகுதியை நுல்லியம் என்றே தமிழில் சொல்லலாம். இந்தக் காலத்தில் கோடி இலக்கம் என்று சொல்லுவதற்கு மாறாக நுல்லியம் என்று உலக வழக்கில் பழகுவதே முறை என்று சொல்லுவோரும் உண்டு. நுல்லியத்தின் மடங்குகளைக் குறிக்க, இரு நுல்லியம் (billion), முந் நுல்லியம் (trillion). நால் நுல்லியம் (quadrillion), ஐ நுல்லியம் (quintillion), அறு நுல்லியம் (sechstiliion), எழு நுல்லியம் (septillion), எண் நுல்லியம் (octillion), தொள் நுல்லியம் (nanillion) என்றே பழகலாம். பன்மடங்கு நுல்லியத்தை (zillion) பல் நுல்லியம் என்றே சொல்லலாம்.

முப்பத்தி ஐந்து mine. இதன் இணைச்சொல் நுணங்கு என்று ஆகும். நோண்டு என்றும் இன்னொரு வளர்ச்சி உண்டு. நுல்லுவது என்பது இன்னொரு வகையில் துளைப்பது என்ற பொருளைக் கொடுக்கும். துல்>துள்>துளை; துல்>துள்>தோள்>தோண்டு என்று ஆவது போல் நுல்>நுள்>நோள்>நோண்டு என்று ஆகும். நோண்டிவரும் சுரங்கம் mine என்படுகிறது. சுரங்கம் என்பது கூட சுரிக்கின்ற (தோண்டுகின்ற) செயலால் பிறந்த சொல் தான். நுணங்கின் பெரியது நுணங்கம். ஆங்கிலத்தில் mine என்ற சொல் ஒப்புமை அடிப்படையில் அளவுச் சொல்லாக ஆகிறது. A minefull of wealth. ஒரு நுணங்கம் அளவுக்குச் செல்வம் அவனிடம் கொட்டிக் கிடந்தது.

இந்தப் பதிவில் சொல்லிய அளவுச் சொற்களின் தொகுதி கீழ்வருமாறு:

meagre = நூகை
mean = நாவண்
median = நடுவம், medial = நடுவல்
medium = மிடையம்
mega = மீ, மீகிய
micro = நூகிய
middle = நடு
mild = மெல்லிய
milli = நுல்லி
mine = நுணங்கு, நோண்டு,

பதிவில் கூறிய மற்ற சொற்கள் வருமாறு:

negative = நொகை
temperature = வெம்மை
adjective = பெயரடை
to osmose = ஊடுதல்
chemical engineering = வேதிப் பொறியியல்
physical chemistry = பூதி வேதியல்
process = செலுத்தம்
film = படலம்
membrane = மெம்புனை
molecules = மூலக்கூறுகள்
mine = நுணங்கம் (=சுரங்கம்)
osmosis = ஊடுகை
osmotic membrane = ஊடகம்
solute = கரைபொருள், கரையம்
solvent = கரைமம்
substitute = பகரி
reverse osmosis = எதிர் ஊடுகை
million = நுல்லியம்
billion = இரு நுல்லியம்
trillion) = முந் நுல்லியம்
quadrillion = நால் நுல்லியம்
quintillion = ஐ நுல்லியம்
sechstiliion = அறு நுல்லியம்
septillion = எழு நுல்லியம்
octillion = எண் நுல்லியம்
nanillion = தொள் நுல்லியம்
zillion = பல் நுல்லியம்

அன்புடன்,
இராம.கி.

Friday, July 14, 2006

அளவுச் சொற்கள் - 2

முன்னால் இட்ட பதிவில் பதினேழு அளவுச் சொற்கள் வரை பார்த்திருந்தோம். (கூடவே மற்ற தொடர்புள்ள சொற்களையும் பார்த்தோம்.)இனி macro என்னும் பதினெட்டாவது அளவுச் சொல்லிற்குப் போவோம். இந்தச் சொல், பின்னூட்டின் வழியாக நண்பர் ஒருவர் முன்னர் கேட்ட சொல். இது பல இடங்களில் முன்னொட்டாகவும் புழங்குகிறது. macroscopic என்ற சொல்லாட்சி நினைவிற்கு வருகிறதா? macro என்பதற்கு இணையாக மாக, மாகிய ஆகியவற்றைச் சொல்லலாம். முன்னரே சொன்னது போல் மாத்தல் என்ற வினை, தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.

மதித்தல் என்ற வினைகூட இந்த மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் என்ற பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மகுதல் > மாதல் >மாகுதல் சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணியதாய் (திண்மம் = solid) இருந்து விட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும், புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக எங்கள் சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். மக ஈசன் மகேசன் (= பெரிய ஈசன்) என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதை இன்னும் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சிலர் சொல்லுவார்கள். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார்கள் அல்லவா? மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் சற்று பெரியவர்கள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர்கள் (ஆனாலும் அவர் மாந்தர் தான்) மாக்கள்.

மாகுதல் என்ற வினை அடிப்படையில் மாதல் போன்ற பொருள் கொண்ட வினைதான். மொழி நீட்சியில் அதைப் புழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய என்னும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் என்ற வினை வாகாய் அமையும்.

macro meter = மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர (standard) அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். அந்த முன்னொட்டுக்களை எல்லாம் இந்தப் பதிவுத் தொடரில் பார்ப்போம். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைந்து மாக்ர என்று ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம்.

இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. ஏனென்றால் உணர்ச்சி வயப்பட்டு பலரும் தடம் மாறிப் போகிறார்கள். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர்கள் முன்னே போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்திற்குள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இந்த ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம். பொதுவாய், இயற் சொற்களின் பலுக்க விதப்பில் ரகர, யகர, வகர ஒலிகள் நுழையும் சொற்திரிவு முறைகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை நாம் இனங் காண முடியும். (பலரும் என் மேல் கோவம் கொள்ளுவதே இந்த இணைப்பை இனங் காட்டுவதால் தான். இந்த இனங் காட்டுதலில் சங்கதத்தின் பெருவுதி - priority - குறைந்து போவது சிலருக்குப் பிடிப்பதில்லை.)

பத்தொன்பதாவது, magnitude என்பது. தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவமானம் என்பது முற்றிலும் தமிழே; வடமொழியல்ல. அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) தன்னைப் பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் அளவுகோல் வந்து விடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத் தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20ல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளும் உண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்லுவோம்.

இருபதாவது சொல் magnify என்பதாகும். இங்கே வெறும் அளவு மட்டும் இல்லாமல், பெரியாதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப் படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.

இருபத்தொன்றாவது சொல் major; இது பெரும்பாலும் பெயரடையாக வருகின்ற சொல். மேவுதல் என்ற வினை உயர்ந்து கிடத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பெயரடையில் மேவு, மேவிய என்றும், தனிப்பெயராக வரும்போது மேவர் என்றும் சொல்லலாம். இதைப் போலியாய்த் திரித்து மேயர் என்றும் சொல்லலாம்; அதோடு அதை major என்பதின் ஆங்கிலத் திரிவான mayor என்பதற்குப் பொருத்தமாய் வைத்துக் கொள்ளலாம். Army major யை "அரண மேவர்" என்று சொல்லலாம். அரணம் தான் வடமொழி வழக்கில் இராணுவம் என்று திரிந்திருக்கிறது. நாட்டு அரணைக் காப்பாற்றும் பெரும்படை அரணம் என்று சொல்லப்படும். அரத்தம், இரத்தம் ஆனது போல் அரங்கனை, ரெங்கனென்று சொல்லுவதைப் போல், பல ஒலிப்பு மாற்றங்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இருபத்திரண்டாவது சொல் majority; மேவுதலில் இருந்து இதை மேவுதி என்று சொல்லலாம். மேதகை, மேன்மை என்னும் போது உயர்ச்சி என்ற பொருளே வந்து இங்கே எண்ணளவில் கூடி இருக்கும் தன்மை புலப்படாமல் போகலாம்.

இருபத்தி மூன்றாவது many; இதைப் பல என்றே வழக்குத் தமிழில் பயில்கிறோம். கூடவே நனி என்ற பழைய சொல்லைப் புழக்கத்தில் கொண்டுவந்து, சொல்லின் இணை தன்மையை ஆழ்ந்து உணரலாம். தவிர, நனி என்பதைப் பயிலாமல் போனால் பின்னால் பலருக்கும் அது புரியாமல் போகலாம்.

இருபத்தி நாலாவது சொல் mass; இது மிகவும் சரவற் படுத்துகிற சொல். தமிழில் இன்னும் நிறை என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். நிறை என்பது நிறுத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்ட பெயர்ச் சொல்லானால் அது எடையைத்தான் குறிக்கும். (எடுத்தது எடை; நிறுத்தது நிறை. இரண்டுமே weight என்பதைக் குறிக்கும் சொற்கள்.) இன்னொரு விதத்தில் நிறைந்தது என்ற வினையில் வருகின்ற நிறை என்னும் பெயர்ச்சொல் filling என்ற பொருட்பாட்டைத் தான் குறிக்கும். இதில் பெறப்படும் கருத்து volume என்னும் முப்பரிமானம்.

volume என்பதைக் கீழே அடுத்த பகுதியில் பார்ப்போம். volume என்பதற்கும், mass என்பதற்கும், weight என்பதற்கும் வேறுபாடு காட்டிய பின் தான் அறிவியற் சிந்தனை பெரிதும் வளர்ந்தது. தமிழில் இன்னும் சரியாக இதை உணர்த்திக் காட்டாது இருக்கிறோம். இந்தப் பொருள் கனமாக இருந்தது என்னும் போது அது weight ஆக இருந்தது என்று தான் பொருள். அதே பொழுது இதற்கு முரணாக, ஒரு பொருளின் கன அளவு என்றால் அதன் volume யைக் குறிப்பிடுகிறோம். இந்தக் குழப்ப முரண் நெடுநாளாய் நம்மிடம் இருக்கிறது. தவிர, mass என்பதை எப்படிக் குறிப்பது என்றும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறோம்.

உலகம் என்பது பொருட்களால் ஆனது; இந்தப் பொருட்கள் வெளி(space)யில் இருக்கின்றன. விரிந்து கிடக்கும் வெளியில் ஒரு பொருள் அடைந்து கிடக்கும் இடம் அதன் volume. வெளி என்பது கிட்டத்தட்ட ஒரு கலன் போன்றது. அந்தக் கலனின் அளவைக் குறிக்கும் சொல் volume ஆகும். ஆனால் mass என்பது கலனுள் நிறைந்திருக்கும் பொருள். ஒரு கலனுக்குள் வெவ்வேறு பொருட்களை அடைக்கலாம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு mass யைக் காட்டலாம். mass என்பதன் தன்மையைப் (massyness) பொருண்மை என்று தமிழில் குறிப்பார்கள். பொருள் இருக்கும் தன்மை பொருண்மை. இது உண்மையில் density என்பதோடு தொடர்பு உள்ளது. ஆனால் பொருண்மையும் அடர்த்தி என்பதும் வெவ்வேறு என்றும் ஒரு சிலர் தெளிவில்லாமல் சொல்லுவார்கள். (density என்பதையே பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.)

உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய் நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் அங்கே துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது massyness ஐக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass என்னும் வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?

"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை (அல்லது மதுகை) என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் (அல்லது மதுகையாய்) என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன்.

இருபத்தைந்தாவது சொல் maximum; மிகுந்து கிடப்பதின் நெடில்வழக்கு மீது கிடத்தல். மீ என்னும் ஓரெழுத்தொரு மொழியைப் பயன்படுத்தி மீகுமம் என்ற சொல்லைப் பயிலலாம்.

இந்தப் பகுதியில் பரிந்துரைத்த அளவுச் சொற்கள் வருமாறு:

macro = மாக, மாகிய
magnitude = மாகனம், (மானம் என்பது தனித்து வரும் போது சரிவராது; ஆனால் கூட்டுச் சொற்களில் சரிவரும்.)
magnify = மாகப் படுத்து
major = மேவு, மேவிய, மேவர்
majority = மேவுதி
many = பல, நனி
mass = மொதுகை, மதுகை
maximum = மீகுமம்

இவை போகப் பயின்ற மற்ற சொற்கள் வருமாறு:

solid = திண்மம்
macro meter = மாக மாத்திரி, மாகிய மாத்திரி
standard = செந்தரம்
priority = பெருவுதி
army = அரணம் (=இராணுவம்)
mayor = மேயர்
massyness = பொருண்மை
space = வெளி
weight = நிறை, எடை
filling = நிறைத்தல்

maximum என்பதற்கு எதிரான minimum என்ற சொல்லை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

அளவுச் சொற்கள் - 1

என்னுடைய வலைப்பதிவில் முன்பு ஒரு நண்பர் கொடுத்த பின்னூட்டில் "micro, macro, mega போன்றவற்றை தமிழில் எப்படி விதப்பாகச் (specific) சொல்லுவது?" என்று கேட்டிருந்தார்.
-----------------------------------------------------------
அவர் கேட்டிருந்த சொற்கள் எல்லாம் அளவுக் கருத்து பற்றிய முன்னொட்டுச் சொற்கள். அளவுச் சொற்களைக் கையாளும் போது நம்முடைய பேச்சில் தகுதி (quality), எண்ணுதி (quantity) என்ற இரண்டிலுமாய்த் துல்லியம் காண வேண்டும். ஆங்கிலத்தில் அளவு பற்றிய பல்வேறு முன்னொட்டுச் சொற்களை அடுக்கி, இடத்திற்குத் தகுந்தவாறு, பயன்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளும் நாம், தமிழ் என்று வரும் போது மட்டும், பொதுமையான சில அளவுச் சொற்களைத் தெரிந்து கொண்டு, விதப்பானவற்றை அறிய மாட்டேம் என்கிறோம். அளவு பற்றிய எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே வைத்து ஏதோ ஒரு வகையில் ஒப்பேற்றி விடுகிறோம். பொதுவாக நம்முடைய மொழியைக் கையாளுவதில் நமக்கு ஓர் அலட்சியம் இருக்கிறது, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொல் தொகுதியை கூட்டிக் கொள்ளாதே இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். (இதை மிகுத்துச் சொன்னால் பலருக்கும் என்மேல் கோவம் வரக்கூடும்.) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு தருகிறேன். ஒருபொழுது திண்ணை வலையிதழில் ஒரு நேர்காணல் உரையாடலில் பங்காளர் ஒருவரின் (மிகப் பெயர் பெற்ற, அண்மையில் மறைந்த ஓர் எழுத்தாளர்) வாசகம் படித்தேன்.

"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."

இதைப் படித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்நாளைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஏன் இந்த அளவு தமிங்கிலம் பயில்கிறார்கள்? இதில் என்ன தமிழில் சொல்ல முடியாத பெரிய கலைச்சொல் பொதிந்து கிடக்கிறது?

"நான் என்ன நினைக்கிறேன்னா, எது செந்தமிழ், எது சாதாரணத் தமிழ்னு தெளிவா அடையாளம் காணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் செந்தமிழ்க்காரர்கள்ன்னு தான் சொல்ல முடியும்"

என்று கூட ஒரு தமிழறிந்த கூட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தமிங்கிலம் இவர்களுக்குப் பழகிப் போகும் என்றால், அப்புறம் இன்றையத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசி இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பேசாமல் குமரியில் மூன்று தடவை சுற்றிவந்து இந்தத் தமிழ் என்னும் மொழியைத் தூக்கி எறிந்துவிடலாமே? அதைவிடுத்து ஏன் இப்படிச் சல்லியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

பொதுவாக இந்தப் பழக்கம் ஒரு நோய் போலவே நம்மில் மிகுதியானவரைப் பீடித்திருக்கிறது. தமிங்கிலம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து என்றைக்கு அதற்கு முடிவு கட்டுவோம்?
---------------------------------------------------------------
நண்பர் கேட்ட சொற்களோடு இன்னும் சில தொடர்புள்ளவற்றைச் சேர்த்து இங்கே கொடுத்திருக்கிறேன். பதிவை ஐந்து பகுதிகளாக்கி அனுப்புகிறேன்.

அளவு என்ற பெயர்ச்சொல் அள்ளுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்தது. அள்ளுதல் என்பது முதலில் நெருங்குதலைக் குறித்துப் பின் சேர்த்தல் அல்லது கூட்டுதல் என்ற பொருளைக் குறிக்கும். அள்ளுதலில் இருந்து அள்+து>அட்டு>அட்டுதலும், அட்டு>அடு>அடுதலும் ஆகிய வினைகள் பிறக்கும். அட்டுதல் என்பது சேர்த்தல் என்ற பிறவினையையும், அடுதல் என்பது சேர்தல் என்ற தன்வினையையும் குறிக்கும். அடுதல் என்ற தன்வினையில் இருந்து அடுவித்தல் என்ற இன்னொரு பிறவினையும் பிறக்கும். அட்டுதலும் அடுவித்தலும் ஒரே பொருள் கொண்டவை தான். கூட்டுதல், சேர்த்தல் என்றே இவை பொருள்படும். அடுவித்தல் என்ற சொல், பலுக்கச் சோம்பலில் அதுவித்தல்>அதியித்தல்>அதித்தல் என்றும் திரியும். to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல். please add 2 and 3; 2 யையும் 3 யையும் கூட்டு. addition = கூட்டல், அடுவம், அதியம்; additive = கூடுதலான, அதிவான

கூட்டுதல் என்ற பொருளில் உள்ள தொகுதியில் நான் எடுத்துக் கொள்ளும் முதற் சொல் ample; இதற்கு இணையாய் அமலை என்று தமிழில் சொல்லலாம். "அவனும், நானும், எல்லோரும்" என்று ஓர் உம்மைச் சேர்த்துச் சொல்லுகிறோம் இல்லையா? அந்த உம் என்னும் இடைச்சொல் கூட்டப் பொருளைச் சுட்டிக் காட்டும். உம்முதல் என்பது சேருதலே. உம்முதல்>அம்முதல் என்று திரியும். அம்முதல்>அம்புதல்>அப்புதல் என்பதும் ஒன்றின் மேல் ஒன்றை சேர்த்துக் கொண்டு வருவதைக் காட்டும். அம்முதலில் இருந்து பிறந்த சொல் அமலை. இது செறிவுப் பொருளைக் காட்டும். இது தவிர மிகுதி என்ற பொருளையும் திவாகரம் காட்டும். மெல்லின இணை, மெல்-வல் இணையாகத் திரிந்து, பிறகு வல்லின இணையாக மாறுவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம் தான். அம்மா என்று இயலொலி அம்பா என்று ஆகி பின் அதன் பொருள் நீண்டு இன்னொரு பெற்றோரைக் குறிக்கும் வகையில் அப்பா என்று திரியும். அதே போல "வந்நு" என்னும் வினைச்சொல் "வந்து" என்று திரியும். பண்ணுதல் என்னும் வினையில் இருந்து பண்டம் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இவையெல்லாம் இந்த மெல்லிணை>மெல்வல்>வல்லிணைத் திரிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். அமலைக்கும் ample க்கும் உள்ள இணை இப்பொழுது புரிகிறதா?

அடுத்த சொல் average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் என்பதைச் சொல்லலாம். ஒரு படியில் அரிசியை முகந்து அளக்கிறோம். படியின் முகவாயில் அரிசி குவியலாய்க் கிடக்கிறது. அதை கையால் சரி செய்து தட்டையாக்கிப் போடுவதை நிரவுதல் என்று சொல்லுகிறோம். கொள்கலனில் ஏற்ற இறக்கமாய் கிடக்கும் கூலப் பொருளை ஒரே மட்டமாய் ஆக்குவதும் நிரவல் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் average என்கிறார்கள். average = நிரவை, நிரவல்

மூன்றாவது சொல் big = பெரிய; இதற்கு விளக்கம் தேவையில்லை

நான்காவது சொல் brief; இதற்கு இணையாய்த் தமிழில் பொருவிய என்பதைச் சொல்லலாம். "சொல்லுவதைப் பொருவினாற்போல் சொல்" என்றால் "whatever you say, say it briefly" என்று பொருள். இங்கே சுருக்கம் என்று சொன்னால் அது short or summary என்ற பொருள் கொள்ளும். வெள்ளரிக்காய் வாங்கும் போது சந்தையில் பிஞ்சாய்ப் பார்த்து வாங்கிவரச் சொல்லி வீட்டில் சொல்கிறார்கள் இல்லையா? இது போன்ற பிஞ்சுகளை பொருக்கை என்று தென்பாண்டி நாட்டில் சொல்வார்கள். பிஞ்சும் பொருக்கும் என்பது அங்கு மரபுத் தொடர். பொருவுதல் என்பது இப்படிப் பிஞ்சாய் ஆகுதல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் brief என்ற சொல் இப்படிச் சின்னதைக் குறிக்க எழுந்தது. brief = பொருவிய

ஐந்தாவது சொல் broad; இதற்கு இணையாய் பரத்திய, பரவிய, அகண்ட என்பதைச் சொல்லலாம். குறுகிய என்பதற்கு எதிரானது பரவுதல், பரத்துதல். பரந்த காவிரி, அகண்ட காவிரி என்னும் போது அதன் பரந்தமை (broadness) பற்றியே சொல்லுகிறோம். அதாவது வெறும் நீளப் பரிமானத்தைக் காட்டிலும் இரண்டாவது பரிமானமான அகற்சி இங்கே பேசப்படுகிறது.

ஆறாவது சொல் bulky; இதற்கு இணையாய் பருக்கான என்பதைச் சொல்லலாம். உப்பென்று பருத்துக் கிடப்பது bulky. பருக்கிக் கிடப்பதற்கு வலிமை பெற்றது என்ற பொருள் கிடையாது. அண்டவெளியில் முப்பரிமானம் பரவிப் பருத்துக் கிடக்கிறது. மேலே சொன்ன பரவிய என்பதற்கும் பருக்கிய என்பதற்கும் உள்ள பரிமான வேறுபாடு நாம் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே புலப்படும். பரவிய என்பது இரு பரிமானச் சொல். பருக்கிய என்பது முப் பரிமானச் சொல்.

ஏழாவது சொல் capacity; இதற்கு இணையாய் கொண்மை என்பதைச் சொல்லலாம். "இந்த ஏனம் அல்லது கலம் எவ்வளவு கொள்ளும்?" என்று கேட்கிறோம் இல்லையா? கொள்ளுமை என்பது, கொண்மை என்று மெல்லின ஓசை இடைவரத் திரியும். கலத்திற்கு உள்ள இந்தத் தன்மையை இன்று எல்லாக் கட்டகங்களிலும் (systems) சேர்த்துச் சொல்லுகிறார்கள். ஏனத்தின் கொண்மை (capacity of a vessel), இறைப்பியின் கொண்மை (capacity of a pump), மின் நகர்த்தியின் கொண்மை (capacity of an electric motor), மாந்தனின் வலிதாங்கும் கொண்மை (a man's capacity to withstand pain) இப்படி இது விதவிதமாய் விரியும்.

எட்டாவது சொல் central; இதற்கு இணையாய் நடுவண் என்பதைச் சொல்லலாம்; பெயர்ச்சொல்லாய் வரும் போது நடுவம் என்றும் பெயரடை அல்லது முன்னொட்டாக வரும் போது, நடுவண் என்றும் வரும். central government = நடுவண் அரசு. மத்திய என்று பலரும் புழங்கும் சொல், உண்மையில் நட்ட என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழிப் பலுக்கில் கூறும் ஒரு திரிவு தான். மூலம் தெரியாமல், பலரும் இதன் தோற்றம் வடமொழி என்று தடுமாறுவது உண்டு. தமிழில் நகரமும் மகரமும் போலிகள்; முப்பது என்பதை நுப்பது என்றும் முடங்கும் என்பதை நுடங்கும் என்றும் பலுக்குவதை உணர்ந்தால் இது புலப்படும். அடுத்து, டகர ஒலி, தகர ஒலியாகப் பலுக்கப் படுவது வடக்கே போகப் போக நடக்கும். முடிவில் சொல்லின் உள்ளே யகரம் நுழைவதும் வடமொழிக்கு உள்ள பழக்கம் தான். ஆக நட்ட>நத்த>மத்த>மத்ய>மத்திய என்ற வழிமுறையில் சொற்திரிவு அமையும். மத்திய என்பதன் மேலோட்ட வடமொழித் தோற்றத்தில் அதன் தமிழ் மூலம் உணர முடியாமல் தடுமாறுகிறோம்.

ஒன்பதாவது சொல் dimension; இதற்கு இணையாய்ப் பரிமானம் என்பதைச் சொல்லலாம்; எந்த ஒரு பொருளும், தான் இருக்கும் வெளியில் விரிந்து நிற்கிறது. விரிந்து நிற்பது வியல்ந்து நிற்பது என்றும் சொல்லப் பெறும். பரிப்பு என்பதும் வியல்ந்து நிற்பதே. பரிதல் என்பது வளைந்து நிற்பதையும் குறிக்கும். "செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்" என்ற புறநானூற்று வரிகளை இங்கு எண்ணிப் பார்க்கலாம். இதில் பரிப்பு என்பது வளைந்த வட்டத்தைக் குறிக்கிறது. மானம் என்பது மதித்தல், அளவிடுதல் என்பதன் பெயர்ச்சொல். மா என்பது அதன் வேர்ச்சொல். மாத்தல் என்பதில் இருந்து பிறந்தது மானம். இயற்கையில் நாம் கண்ணால் காணும் வெளி, பரிமானம் தழுவியது. அதாவது அதைப் பரித்து (வளைத்து) நாம் அளக்கிறோம். இயற்கையில் கிடக்கும் பொருள்களை இடுவிப்பாக (idealistic) உருவகஞ் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற பரிமானங்களாய் கணக்கின் ஒருபகுதியான வடிவியல் (geometry) குறிக்கும். கோடு என்பது ஒற்றைப் பரிமானம்; பரப்பு என்பது இரட்டைப் பரிமானம்; நாம் காணும் முப்பரிமானப் பொருள்களைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் கூடிய பரிமானங்களை, இந்தக் கால வகைப்பு இடவியலும் (differential topology), வகைப்பு வடிவியலும் (differential geometry) கையாளுகின்றன. ஐன்சுடீனின் உறவாட்டுக் கொள்கையில் (theory of relativity) இடம், காலம் என்று இணைந்த வகையில் நாற் பரிமானம் பேசப்படும்; இன்னும் மேலே போய் நனி பரிமானப் பல்மடி (many dimensional manifold) பற்றியும் இன்றையக் கணிதவியலில் பேசுவார்கள்.

பத்தாவது சொல் enormous; இதற்கு இணையாய் எண்ணிறந்த என்பதைச் சொல்லலாம். எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிச் சலித்த நிலைக்கு, எண்ணிறந்த என்று சொல்லுவார்கள். இதற்கும் மேல் அளக்கவே முடியாத ஒரு நிலை infinitity ஆகும். இது தமிழில் வரம்பிலி என்று சொல்லப்படும். இந்த வரம்பிலியை எண்ணிலி, ஈறிலி, கந்திலி என்றெல்லாம் சொல்லுவது உண்டு. கந்து என்பது பற்றுக் கோடு; அதுவும் ஓர் ஈற்றைத் தான் குறிக்கும். அந்தக் கந்தே இல்லாத நிலை கந்திலி.

பதினோறாவது சொல் expanse; இதற்கு இணையாக விரிந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய என்பதற்கும் விரிந்த என்பதற்கும் பரிமானம் தவிர மிகுந்த வேறுபாடு கிடையாது; விரிவு என்பது எல்லாப் பரிமானங்களிலும் நடக்கக் கூடியது. ஆனால் பரவிய என்பதைப் பெரிதும் இரு பரிமானத்திற்கு மட்டுமே பயனாக்குவது நல்லது.

பன்னிரண்டாவது சொல் extent; இதற்கு இணையாகப் பரந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய, விரிந்த என்ற சொற்களில் இருந்து சற்றே நுணுகிய வேறுபாடு கொண்டது. பொதுவாகப் பரந்த என்ற சொல் இருபரிமானத்திற்கு இயல்பாகவும், ஓரோவழி ஒற்றைப் பரிமானத்திற்கும் சொல்லலாம். முப்பரிமானம் சார்ந்த நிகழ்வுகளுக்கும், பொருள்களுக்கும், மிகக் குறைந்த அளவிலேயே இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். அது என்னவோ தெரியவில்லை, பரவிய, விரிந்த, பரந்த என்ற மூன்று சொற்களும் தமிழில் ஒன்றுக்கு மாறாக இன்னொன்று என்று மயங்கியே பலராலும் புழங்கப் படுகின்றன. இனி வருங்காலப் புழக்கத்தில் எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. என்னைக் கேட்டால் இதற்கு இது என்று ஒரு சமன்பாட்டை இனிமேலாவது கொண்டுவரலாம்.

பதிமூன்றாவது சொல் flow; இதற்கு இணையாகப் பெருக்குதல், பெருவுதல் என்ற சொற்களைச் சொல்லலாம். விளவுதல் என்ற சொல்லும் ஓரோவழி சொல்லப்படுவது உண்டு. (பாய்தல், ஓடுதல் என்பவை நேரடிப் பொருள் தரும் சொற்கள் அல்ல. அவை துல்லியம் அல்லாத, கிட்டத்தட்டச் சரிபண்ணும் சொற்கள். நானும் இப்படிச் சரிபண்ணிக் கொண்டு இருந்திருக்கிறேன்.) பெருவுதல்/பெருகுதல் என்பது தன்விணை; பெருக்குதல் என்பது பிறவினை. ஆடிப் பெருக்கு என்றால் ஆடி மாதம் ஏற்படும் flow. ஆறுகளையே கூடப் பெருநை>பெருணை>பெண்ணை என்று தான் தமிழிய மொழிகள் கூறிவந்தன. வடக்கே பெருகியுது வடபெருநை>வடபெருணை>வடபெண்ணை. அதற்கடுத்து சற்று தெற்கே கருநிறத்தில் பெருகியது கருந பெருநை>கருந பெருணை>கன்ன பெண்ணை; கருந பெண்ணையை வடமொழிப் படுத்தி கிருஷ்ண பெண்ணை என்று ஆக்கிப் பின் பெண்ணையைத் தவிர்த்து கிருஷ்ணா என்பார்கள். இன்னும் தெற்கே தென்பெருநை>தென்பெருணை>தென்பெண்ணை என்ற ஆறு உண்டு. ஆகத் தெற்கே தாம்பர பெருநை>தாமிர பெருணி>தாம்பிரவருணி என்ற ஆற்றைத் தெரியாதார் கிடையாது; இந்திய ஆறுகளின் பெயர்கள் பலவற்றையும் ஆழ்ந்து பார்த்து, அவற்றின் உள்ளார்ந்த தமிழ்மூலத்தை அறியும் போது நமக்குப் பெரிதும் வியப்பு ஏற்படுகிறது. இந்தியப் பழமையில் தமிழரின் பங்களிப்பு பெரிதும் இருக்கிறது. அதை ஒருமுறை மடற்குழுக்களில் செய்தேன். இன்னும் ஒருமுறை வேறொரு வாய்ப்பில் திரும்ப அலச வேண்டும். நீரோட்டம் என்பது பெருக்கைக் குறிக்கக் கொஞ்சம் சுற்றி வளைத்த சொல்.

பதிநான்காவது சொல் huge; இதற்கு இணையாக ஊகை என்பதைச் சொல்லலாம். உகர ஒலியின் குறில், நெடிற் பலுக்கில் ஏகப்பட்ட உயர்ச்சிச் சொற்கள் எழுந்துள்ளன. உகரம் ஒகரமாகியும், ஓங்கி உள்ள பொருட்களை நமக்கு உணர்த்தும். ஊகி நிற்பது என்னும் போது கண்முன்னே உயர்ந்து பெருகி நிற்கும் உருவம் புலப்படும். ஊங்கு என்றாலும் மிகுதி என்ற பொருள் தமிழில் உண்டு; அதே போல ஓகம் என்ற சொல்லும் பெருகி நிற்பதைக் குறிக்கும்.

பதினைந்தாவது சொல் immense; இதற்கு இணையாக மொந்தை என்பதைச் சொல்லலாம். மொத்தம் என்னும் போது கூட்டப் பொருள்தானே வருகிறது? மொந்துதல் என்பது தன்வினை. மொத்துதல் என்பது பிறவினை.

பதினாறாவது சொல் large; இதற்கு இணையாய் அகலை என்பதைச் சொல்லலாம். அகலம் என்ற சொல்லில் ஈற்றை மாற்றி வருவது அகலை. அகல்ந்தது என்பது வினைச்சொல்.

பதினேழாவது little; இதற்கு இணையான சின்ன என்ற சொல்லைப் பற்றி நான் மிகுதியாகச் சொல்லவேண்டியது இல்லை.

இதுவரை சொன்ன 17 அளவுச் சொற்களைத் தொகுத்துச் சொன்னால்,

ample = அமலை
average = நிரவை, நிரவல்
big = பெரிய
brief = பொருவிய
broad = பரத்திய, பரவிய, அகண்ட
bulky = பருக்கான
capacity = கொண்மை
central = நடுவண்
dimension = பரிமானம்
enormous = எண்ணிறந்த
expanse = விரிந்த
extent = பரந்த
flow = பெருக்குதல், பெருவுதல், விளவுதல்
huge = ஊகை
immense = மொந்தை, மொத்தை
large = அகலை
little = சின்ன

அதோடு கட்டுரையில் வந்த மற்ற சொற்களையும் பட்டியலிட்டால், கீழுள்ளது கிடைக்கும்.

quality = தகுதி
quantity = எண்ணுதி
to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல்.
addition = கூட்டல், அடுவம், அதியம்
additive = கூடுதலான, அதிவான
broadness = பரந்தமை
system = கட்டகம்
pump = இறைப்பி
electric motor = மின் நகர்த்தி, மின்னோடி
idealistic = இடுவிப்பு
geometry = வடிவியல்
differential topology = வகைப்பு இடவியல்
differential geometry = வகைப்பு வடிவியல்
theory of relativity = உறவாட்டுக் கொள்கை
manifold = பல்மடி
infinitity = வரம்பிலி, எண்ணிலி, ஈறிலி, கந்திலி

இனி மகரத்தில் தொடங்கும் அளவுச் சொற்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, July 10, 2006

மனசில் தேரோடுமா?

(உரைவீச்சு)

(சென்ற ஆண்டு தேரோட்டத்தின் போது எழுதியது; திண்ணை வலையிதழிலும் வெளிவந்தது. இந்த ஆண்டாவது நிலைமை மாறும் என்று நினைத்தேன்; ஊகும்.... வரலாறு, பிடித்து வைத்த செக்கைப் போல், மாறாது போல், இருக்கிறது. - இராம.கி., 10 சூலை 2006.)

(சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான். ஆனாலும் சில தலைமுறைகளுக்கு முன்னால் வரை எல்லா மக்களும் தான் அங்கே தேர்வடம் பிடித்தார்கள். இன்றைக்குத் தேர்வடம் பிடிப்பதில் ஒரு சாரார் வரட்டுக் குரவம் (கௌரவம்) காட்டுகிறார்கள். நம் குமுகப் பிறழ்ச்சி பலநேரம் நம்மைக் கொதிப்படைய வைக்கிறது. எத்தனையோ பெருமை கொண்ட சிவகங்கைச் சீமையின் மிஞ்சிப் போன அவலங்களுள் இதுவும் ஒன்று.)


"என்னங்கடா,
'இன்னார் மகன்'னு
படங் காட்டுறீயளா?"

"அஞ்சு மணிக்கு நாலுவீதி
சுத்திவரும்னு சொல்லிப்புட்டு,
ரெண்டு மணிக்கே அவுக்கவுக்காய்
ஏறிவந்து வடம் புடிப்பா?

கூடி வந்த எங்க சனம்,
கோயில் தள்ளி நிறுத்திவச்சி,
விறுவிறுன்னு 4 வீதி
சுத்திவர இழுத்துவிட்டு,

தேருநிலை கொள்ளுமுனே,
உப்புக்கொரு சப்பாணியா,
ஓட்டிவந்த இருபத்தாறை
ஒண்ணுகூடித் தொடச்சொல்லி...."

"ஏண்டா டேய்,
320 பேரு வடம்பிடிக்கிற இடத்துலே,
இருபத்தாறுக்கு மேல்
எங்காளுன்னாக் கொள்ளாதோ?

நாலுவடத்தில் ஒண்ணுதந்து
நாகரிகம் பார்த்துவச்சா,
கோணப்பயக, உங்களுக்குக்
கொறஞ்சிபோயி விளஞ்சிருமோ?"

தொட்டவடம் படம்புடிச்சு
பட்டம்விடப் போறீயளோ?"

"இதுக்கு
ரெண்டாயிரம் காவல்,
ஒரு ஆணையன்,
ரெண்டு மூணு வட்டாட்சி,
ஒரு மாவட்டாட்சி,
ஏகப்பட்ட ஊடகம்!"

"போங்கடா, போக்கத்த பயகளா?
போயிஅந்த உயர்மன்றில்
ஓங்கி அறிக்கை வைய்யுங்க!
அரசினோட அதிகாரம்
அமைதிகாத்த கதைவிடுங்க!"

"அப்புறம்

தமிழினத்துத் தலைவரென,
புரட்சிக்குத் தலைவியென,
தமிழ்க்குடியைத் தாங்கியென,
புரட்சியெழும் புயலெனவே

நாலைஞ்சு பேரிங்கே
நாடெல்லாம் அலையுறாக

அவுகள்லாம் இனிமேலே
சிவகங்கைச் சீமைக்குள்ளே
அடுத்தவாட்டி வரவேண்டாம்;
கட்டளையாச் சொல்லிடுங்க.

வாக்குக்கேட்டு இனிஒருத்தன்
வக்கணையா உள்ளவந்தா,
சேர்த்துவச்சு நாங்களெலாம்.....,
செருப்புப் பிஞ்சுரும், ஆமா!"

"டேய், என்னங்கடா பேசிட்டு நிக்கிறீங்க!
தேரோடுற பாதையிலே,
தெளியாத காலத்துலே,
கல்லும், முள்ளும் கிடந்ததனால்,
பள்ளு, பறை நம்ம ஆட்கள்
கையெல்லாம் வேணுமின்னு,
கூப்பிடாய்ங்க! தேரிழுத்தோம்!

இப்பத்தான், எல்லாமும்
பொருளாதாரம்; தலைகீழாச்சே!
அவனவன் சோலி அவனவனுக்கு;
எங்கே பார்த்தாலும் வரட்டுக் குரவம்டா!

அதோட,
நாலுவீதியுந்தான் தார்போட்டு
இழைச்சுட்டாய்ங்களே,
அப்புறம் என்ன?

அவய்ங்க மட்டுமே தொட்டாக் கூடத்
தேர் என்ன, வண்டி கணக்கா ஓடாது?
முக்கா மணியென்னடா?
முக்குறதுள்ளே முடிச்சிருவாய்ங்க?"

"அய்யா, சாமிகளா, போறவழியிலே
சொர்ணமூத்தீசரையும் பெரியநாயகியையும்
நாங்க சாரிச்சதாச் சொல்லுங்க!
நாங்களெலாம் வடந்தொட்டா,

அருள்மிகுந்த அவுகளுக்கு
ஆகிடவே ஆகாதாம்,
கொள்ளாம கூடாம,
கோச்சுக்கவும் செய்வாகளாம்,
மழையினிமே வாராமப்
மந்திரமும் பண்ணுவாகளாம்."

"இப்படியே போனா,
அவுகளும் எங்களுக்கு வேணாம்,
அவுகளை நாங்களும் விலக்கி வச்சுர்றோம்"

"டேய், சாமிகுத்தம்டா,
விலக்கு, கிலக்குன்னு பேசாதே!"

"அடச்சே போங்கடா!
தேரோடுதா(ந்), தேர்?

முதல்லே
அவனவன் மனசுலே
தேரோடுமான்னு பாருங்கடா?"

Sunday, July 09, 2006

ஒப்பந்த மானுறுத்தலாய்க் காட்சிதரும் கல்வி வாணிகம் - 3

எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது என்று தெரியவில்லை; 70களில் இருந்தே தமிழ்த் திரைப்படங்களில் நாயகனோ, நாயகியோ "கான்வெண்ட்" படித்தவராகவும், அவனை/அவளை முதலில் காட்டும் போது நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவது போலவும் காட்டுவார்கள்; இதைப் பார்த்த நாட்டுப்புற மக்கள் முற்றிலும் மயங்கிப் போய், ஒரு இருபது ஆண்டுகளில் ஆங்கிலப் பள்ளிகளின் பக்கம் முற்றிலும் சாய்ந்தது ஒன்றும் வியப்பு இல்லை; நம்மூரில் திரைப்படத் தாக்கம் அறிந்தது தானே? தமிழைத் தூக்கி எறிவது திரைப்படங்களிலேயே வெகு நாட்களாய் நடந்தது. கண்ணெதிரில் பார்த்துக் கொண்டு பலரும், அரசியற் கட்சியினர் முதற்கொண்டு, பேசாமற் தான் இருந்தார்கள். [இதில் பேராயமும் (congress), கழகத்தாரும் (D.K, DMK, ADMK.....), பொதுவுடைமையரும் (CPI, CPM) என எவருமே விலக்கில்லை.] பிள்ளையின் எதிர்காலமே "மம்மி, டாடி" என்று தங்களை அழைப்பதிலும், தஃசு புஃசு என்று ஆங்கில வாசகங்களை அள்ளி விடுவதிலும் தான் இருக்கிறது என்று முடிவு கட்டிய பிறகு, அது திரைப்படத்தின் மூலம் அழுந்தச் சொல்லப்பட்ட பிறகு, எந்தக் குதிரையிலும் பந்தயம் கட்ட நம் மக்கள் அணியமாகி விடுகிறார்கள். அதன் பின்னால், தனியார் பள்ளிகள் புற்றீசலாய்ப் பெருகாமல் வேறு என்ன செய்யும்? ஆங்கிலத்தில் சொல்லுவது போல் "we get what we deserve". நாம் இன்னொருவரை ஈயடிச்சான் படியெடுக்க முனைந்த பிறகு, நம் வரலாற்றையே மறுதலிக்க முன் வந்த பிறகு, கல்வி வணிகர்கள் என்பவர்கள் சோதியக்காரர்கள், குருக்கள்மார், சாமியார்கள் போல நாம் 'கடைத்தேற வழிகாட்டும்' பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். ஏழை, பணக்காரன் என எல்லோருமே இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகள் சேர்ந்தால் எதிர்காலம் சோதிமயம் என்ற கனவுகள் விரியக் காண்கிறார்கள். (கனவுகள் பின்னால் கலைந்து போவதை யாரும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.)

இந்தத் தனியார் கல்வி எப்படித்தான் இருக்கிறது? கனவுகள் விரியக் காத்திருக்கும் பெற்றோர்கள் மதிப்பெண்களின் கவர்ச்சியில் எதை வேண்டுமானாலும் மறக்க முற்படுகிறார்கள். இந்த ஆண்டு இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில், பன்னிரண்டாம் வகுப்பில் நூற்றுக்கு நூறுபேர் தேர்ச்சி என்றவுடன் "நாம் நல்ல இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம்" என்று எண்ணி விடுகிறார்கள். "பிள்ளையின் மற்ற தேவைகள் என்ன? ஏந்துகள் (facilities) என்ன? வாய்ப்புகள் (opportunities) என்ன? நம் பிள்ளை முழு வளர்ச்சியுள்ள பிள்ளையாய் வெளிவருவானா? அவள் அறிவு மேம்படுமா? இல்லை வெறும் மனப்பாடத் தேர்ச்சி மட்டுமே கிட்டுமா?" என்ற கேள்விகள் எல்லாம் பெற்றோர் மனத்தில் ஏற்படுவதில்லை. அப்படிச் சில கேள்விகளைக் கொண்டுவரும் பெற்றோர்களும், மற்றவர்களால் பித்தர்களாகவே அறியப் படுகிறார்கள்.

நம்முடைய எதிர்ப்பார்ப்பு குறுகத் தொடங்கியவுடன், பள்ளி/கல்லூரியின் பொறுப்பாளர்கள் அந்தக் குறுகு எதிர்பார்ப்பைப் பிடித்துக் கொண்டு விடுகிறார்கள். "உங்களுக்கு உங்கள் பிள்ளை 95 க்கு மேல் மதிப்பெண் எடுக்க வேண்டும் தானே? கவலைப்படாதீர்கள், எங்கள் ஆசிரியர்கள் உங்கள் பிள்ளைகளை பயிற்சி கொடுத்து வளைத்து நிமிர்த்திவிடுவார்கள்; பள்ளிக்குள்ளேயே ஏழெட்டுத் தேர்வுகள் எடுத்து பிள்ளைகளை வடிகட்டிவிடுவோம்" என்று சகட்டு மேனிக்கு வாக்குறுதிகள் கொடுப்பார்கள். தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் சனநாயகம், நாகரிகமாய்ப் பிள்ளைகளை நடத்துதல் என்பதை எல்லாம் பேசிக்கொள்வதோடும், அதைப் பற்றிப் படிப்பதோடும் சரி; ஆசிரியர் "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்" என்ற கொள்கை வைத்திருந்தால் அதை எதிர்க்கும் பெற்றோரை தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம். எத்தகைய அடக்கு முறைக்கும் நம் மக்கள் முணுமுணுக்கக் கூட மாட்டார்கள்; "படிக்கப் போன இடத்தில் வேறு என்னடா உனக்கு வேலை?" என்று தங்கள் பிள்ளைகளைக் கோவிக்கக் கூடச் செய்வார்கள், அடிப்படையில் இன்னும் குருகுல மனப்பான்மை என்பது தமிழ்நாட்டுப் பெற்றோரை விட்டுப் போகவே இல்லை.

கிட்டத்தட்ட இன்றையக் கல்வி என்பது ஒப்பந்த மானுறுத்தல் (contract manufacturing) போலத்தான் என்று ஏன் சொல்லுகிறேன்?

"இந்திந்த வாய்ப்புக்கள் இருக்கின்றன, இன்னின்ன ஏந்துகள் இருக்கின்றன. எங்களால் உங்கள் மாணவனை இப்படி எல்லாம் மேம்படுத்த முடியும்" என்று இந்தப் பள்ளிகூடக்காரர்கள் ஒப்பந்த மானுறுத்தலுக்கான செலவை அதிகமாகச் சொல்லிப் பெற்றோரிடம் வாங்கக் கூடிய பணத்தை முன்னுரைத்துக் கேட்பார்கள்; பெற்றோரும் அதற்கு ஒப்புக் கொண்டு அவர்கள் பிள்ளைகளை உள்ளே அனுப்புகிறார்கள்; ஆனால் வரவாக வந்து சேர்ந்த பணத்தை வைத்துக் கொண்டு, ஏற்கனவே பெற்றோரிடம் முன்னுரைத்த செலவைச் (quoted expenditure) செய்யாமல், குறைந்த செலவே செய்து, இந்த பள்ளிப் பொறுப்பாளர்கள் இடையில் பொலுவெடுக்கப் பார்ப்பார்கள். இந்தப் போக்கு ஒப்பந்த மானுறுத்தல்காரர் செய்வதுதானே? "இத்தனை பெரிய விளையாட்டு வெளி, அகலமான கட்டடங்கள், வகுப்புகளின் நீள-அகலம், மாணவர் - ஆசிரியர் வகுப்பு வீதங்கள், உழையக ஏந்துகள் (laboratory facilities), நூலகம் என்றெல்லாம் சொல்லுகிறார்களே, இவையெல்லாம் முடிவில் இருக்கின்றனவா? அல்லது வெறும் மொம்மலாட்டமா?" என்று பெற்றோர்கள் எங்கே கவனிக்கிறார்கள்? கல்வியாண்டு தொடங்கினால், அடுத்தடுத்து வகுப்புத் தேர்வுகள், வடிகட்டல்கள், மனப்பாடம், வாந்தியெடுப்பு, காலாண்டு, அரையாண்டு, முடிவுத் தேர்வு எனக் கல்வியாண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்களை மட்டுமே பார்ப்பவர்களாய் ஆகிப் போகிறார்கள்; இது போக விதப்பு வகுப்புகள் (special classes), கூட்டுப் பயிற்சி வகுப்புக்கள் (coaching classes), இன்னும் ஏதேதோ, என்று பிள்ளைகளை வறுத்தெடுப்பதில் குறியாகிப் போனதை இந்த ஒப்பந்த மானுறுத்தல்காரர்கள் தங்களுக்கு வாய்ப்பாய் ஆக்கிக் கொள்ளுகிறார்கள்; எங்கெல்லாம் பணம் காய்க்குமோ, அங்கெல்லாம் பழுக்க வைத்துவிடுகிறார்கள்.

இந்தக் காலத்தில் பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது பணம், பணம் என்று ஒரே பாடாய்ப் போகிறது. எல்லா வருக்கத்தாரும், தங்களின் வரவு நிலைக்கும் மேலேயே பணம் கொட்ட வேண்டியிருக்கிறது. முன்னால் சொன்னது போல், ஒவ்வொருவரையும் பார்த்து இன்னொருவர் ஈயடிச்சான் படியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பணக்காரனைப் பார்த்து நடுத்தர வருக்கம்; அவனைப் பார்த்து தொழிலாளி வருக்கம்; அவனைப்பார்த்துச் சிலும்பைப் பாட்டாளி (lumpen proletariet) வருக்கம். இப்படி ஒரு குமுகாயத்தையே பைத்தியக்காரர்கள் ஆக்கிக் கொண்டு கல்வி வணிகர்கள் திரிகிறார்கள்; யாரும் ஒன்றும் சொல்லக் காணோம். ஆங்கிலக் கல்வி என்னும் கானல் நீரை நோக்கித் தமிழ்க் குமுகாயமே தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. முடிவில் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல், அறிவியலும் தெரியாமல், கணக்கும் போட வராமல், எதையெடுத்தாலும் ஒப்புவிக்கத் தெரிந்த பிள்ளைகளை, கிட்டத் தட்ட சொந்த புத்தியில்லாத சோணங்கி "இயந்திரன்"களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் ஒப்பந்த மானுறுத்தல்காரரிடம் தரம் என்பதை எப்படிக் கொண்டுவருவது?

அன்புடன்,
இராம.கி.

Friday, July 07, 2006

ஒப்பந்த மானுறுத்தலாய்க் காட்சிதரும் கல்வி வாணிகம் - 2

கல்வி என்பது இன்றைய நடைமுறையில் வணிகத்தின் சில கூறுகளையும், மானுறுத்தலின் சில கூறுகளையும் கொண்டு ஒரு கலவையாய் பொதினத்தின் இழிந்த நிலையாய்க் காட்சியளிக்கிறது. இங்கே மாணவன் என்பவன் பள்ளியில் முதலில் நுழையும் போது இயல்பொருளாகவும், பின் பல்வேறு செலுத்தங்களால் (குறிப்பாக கல்விச் செலுத்தத்தால்) பண்பட்டு புதுக்கம் அடைந்து ஒரு விளைபொருள் போலவே வெளிவருகிறான். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், அவனுக்கு நடப்பது எல்லாம் அவன் பட்டகை (fact) சேகரிக்கும் அறிவில் நடக்கும் புதுக்கம் மட்டுமே. சுருங்கச் சொன்னால் அவன் அறிவு ஓரளவு மேம்படுகிறது. எனவே இது அறிவூட்டும் தொழில்; நம்முடைய பழைய உணரலில் தெரிந்த கல்வி அல்ல. [அறிவு என்பது இன்றைய அளவில் புதிரிகளைச் சுளுவி எடுக்கும் (to solve problems) வகையில் பல்வேறு நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுப்பதாய் இல்லை; மாறாக வெறும் விதயங்கள் மற்றும் பட்டகைகளை கொண்டு வந்து போட்டு மூட்டையாகக் கட்டித் திணிக்க வைக்கும் வேலையாகவே இருக்கிறது. ஏரணம் (logic), ஏதொன்றையும் படித்த அளவிலேயே ஒப்புக் கொள்ளாமல் அதன்மேல் கேள்வி கேட்கும் தன்மை, விடை கிடைக்கும் வரை தேடுகின்ற ஆர்வம், சொந்த உழைப்பு இவற்றையெல்லாம் சொல்லித் தருவதாக இந்த அறிவூட்டும் தொழில் இல்லை.]

இந்த அறிவூட்டும் தொழிலில், அல்லது அறிவு மேம்படுத்தும் தொழிலில், இன்னும் தெளிவாகச் சொன்னால் அறிவூட்டும் பொதினத்தில், நாம் இயற்கையாய் எதிர்பார்க்கும் தரம் கடைப்பிடிக்கப் படுகிறதா என்பது பெரும்கேள்வி. சரி, வணிகம் என்று சொல்லுகிறோமே, அது எங்கு நடக்கிறது? அதை அறிய மானுறுத்தத் தொழிலில் இப்பொழுது எங்கணும் பரவிவரும் ஒரு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைச் சவர்ப்புக் கட்டி (soap) விளைவிப்பவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள். இவர்களில் மிகப் பெரிய பொதினக்காரர்கள் தங்கள் வயம் மானுறுத்தலைப் பெரும்பாலும் வைத்துக் கொள்ளுவதில்லை. மாறக, வேறொரு மானுறுத்தருடன் இவர்கள் ஆண்டு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுவார்கள்; காட்டாக ஒரு வலிய பொதின நிறுவனம் ஏதோ ஒரு சவர்ப்புக் கட்டியை 1000 டன்கள் விளைவிக்க எண்ணுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோமே! ஒவ்வொன்றும் 50 கிராம் கட்டியாகப் புதுக்கம் நடைபெறவேண்டும்; அப்பொழுது ஒரு டன்னிற்கு 20000 கட்டிகள் வீதம் 20 நுல்லியன் (million) கட்டிகளை விளைவித்துத் தரும் படி தமிழ்நாட்டில் ஒரு மானுறுத்தரிடம் (அந்த மானுறுத்தர் சந்தையில் வலிய பொதினத்திற்குப் போட்டியாளராய்க் கூட இருக்கலாம்.) ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுவார்கள். சவர்ப்புக் கட்டிக்குத் தேவையான பெரிய இயற்பொருட்களை வலிய பொதினக்காரர்களே வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். மற்ற பொருட்களையும் ஊடுழைகளையும் தானே வாங்கிக் கொண்டு, அல்லது விளைத்துக் கொண்டு, வலிய பொதினத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, கட்டியைச் செய்து தருவது ஒப்பந்தக் காரரின் வேலை.

ஒப்பந்தக்காரர் தரும் கட்டியின் கொளுதகையைக் (cost) கூட வலிய பொதினமே நிர்ணயித்து விடும். "இந்தக் கொளுதகையையை ஒப்பந்தத்தில் எழுதிக் கொள்ளுவோம். அதற்கு மீறி ஒரு சல்லிக் காசானாலும் அது உங்கள் பக்கம்; நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோ ம். குறைந்தால் அது உங்கள் பொலுவு (profit); சவர்ப்புக் கட்டியில் இன்னின்ன பொருள்கள் இன்னின்ன செறிவில் இருக்க வேண்டும்; இந்தந்தக் குணங்கள் கட்டிக்கு இருக்க வேண்டும்" என்று புதுக்கங்களின் தரக் கட்டுப்பாட்டையும் (quality control) வலிய பொதினக் கும்பணி ஒப்பந்தந்தில் எழுதிக் கொடுத்து விடும். ஏதேனும் குழறுபடிகள் ஏற்படுமானால் அதற்கு மாற்று வழிகள், தண்டனைக் கட்டணங்கள் என எல்லாமே ஒப்பந்தத்தில் புள்ளிவைத்து எழுதிக் கொண்டுவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தக்காரர் மேல் வலிய பொதினம் போடும் சுருக்குகள் கூடிக் கொண்டே போகும். இத்தனைக்கும் வளைந்து கொடுத்து, ஒப்பந்த மானுறுத்தர் (contract manufacturer) வேலை செய்ய வேண்டும். ஏனென்றால் ஒப்பந்தம் என்பது இருவரையும் ஆழப் பிணைப்பது. இதற்கு ஒத்து வராத ஒப்பந்தக் காரர் தன்னுடைய பொதினத்தை இழந்து விடுவார். மாறுகடையில் (market) அவரில்லை என்றால் இன்னொருவர் என்று போட்டியோ போட்டி. எனவே ஒப்பந்தம் போட்டபின்னால், இது போன்ற ஒப்பந்த மானுறுத்தலில் மீறவே முடியாத ஓர் இணைப்பு.

ஆனால் அறிவூட்டும் தொழிலில் நடப்பது என்ன?

ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன்னால், நாம் அனுப்பும் இயல்பொருள் போன்ற மாணவன் பள்ளியின் உள்ளே போய் புதுக்கமுற்று வெளியே வரச் செய்வதாய் நம்மிடம் சொல்லி, மாணவன் ஆட்கொள்ளும் இடத்தை, அதற்கான பள்ளியின் கொண்மையை(capacity)க் கூவிக் கூவி பள்ளிப் பொறுப்பாளர்கள் விற்கிறார்கள். "உங்கள் பிள்ளை இங்கு வந்து படித்தால், இந்த இடத்திற்கு இவ்வளவு செலவு ஆகும், உங்கள் பிள்ளையின் அறிவு மேம்பட்டு இப்படி வெளியே வரும்; அவன் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்குவான்; எப்படியும் மேல்நிலைப் பள்ளியின் இறுதியில் உயர்ந்த மதிப்பெண்களில் தேர்ந்து பொறியாளர்/மருத்துவர் என ஏதோ ஒன்றாக ஆகிவிடுவான்" என்று வண்ண வண்ணமாய்க் கனவுகளைத் தீட்டி நம் முன்னே காண்பிக்கிறார்கள்; நாமும் அதற்கு ஆட்படுகிறோம். ஆனால் பள்ளியோடு ஒப்பந்தம் போடுகிறோமா என்றால் இல்லை. ஏனென்றால் மக்கள் என்பவர் வலிய பொதினமாய் இருப்பதில்லை. சிதறிச் சிதறி, துண்டு துண்டாய்க் கிடக்கிறார்கள். ஒப்பந்த மானுறுத்தர் என்ன வேண்டுமானாலும் செய்ய முடிகிறது. அவர்கள் வானை வில்லாய் வளைக்கிறார்கள்; மணலைக் கயிறாய்த் திரிக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

ஒப்பந்த மானுறுத்தலாய்க் காட்சிதரும் கல்வி வாணிகம் - 1

(Education trade viewed as contract manufacturing)

தமிழ்நாட்டில், "அரசு, தனியார், அரசுதவி பெற்ற தனியார்" என மூன்று விதமான கல்வி நிறுவனங்கள் உண்டு. தனியார் நிறுவனங்கள் என்பவை ஒரு காலத்தில், வரலாற்று வரிதியில், பெரும் பணக்காரர்களால், தொண்டு செய்யும் உள்ளங்களால், வள்ளண்மை காரணத்தால் உருவானவை; அரசுதவி பெற்ற தனியார் நிறுவனங்கள் என்பவை ஒரு கல்வி நிறுவனம் நடத்தும் அளவிற்குப் பணம் இல்லாத நடுத்தர வருக்கத்தினரால், தொண்டு செய்யும் முயற்சியில் எழுந்தவை. (இந்தக் கட்டுரையின் கருப்பொருள் தனியார் நிறுவனங்களே என்பதால் அரசு நிறுவனங்கள் பற்றிப் பேசுவதை வேண்டுமென்றே தவிர்க்கிறேன்.)

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த இரண்டு வகையான தனியார் நிறுவனங்களிலும் கொஞ்சமாவது பொதுநல நோக்கு இருந்தது/இருக்கிறது; பொதுவாக இந்த நிறுவனங்களை நிர்வகிப்போர் வேறெங்கோ சம்பாரித்த பணத்தை, இங்கு கல்விக்கெனச் செலவழித்துக் கொண்டு இருந்தனர். இத்தகைய நிறுவனங்களில் வரவும் செலவும், நிருவகிப்போரின் உயர்ந்த நடவடிக்கைகளால், கிட்டத்தட்டச் சரியாகப் பொருந்தி இருந்தன. ஓராண்டில் ஒருவேளை செலவு நடை கூடிவிட்டால், மீண்டும் அடுத்த ஆண்டு நன்கொடை, தன்னார்வலர்கள் என்று முன்வந்து நிற்பதால், பள்ளி/கல்லூரியின் நிதிநிலை சரியாகும். பொது மக்களும், பெற்றோரும் நிதிநிலையைப் புரிந்து கொண்டு தங்களால் இயன்றதை நன்கொடையாய்க் கொடுத்து உதவுவார்கள்; இந்த இயல்பான போக்கால் இந்த நிறுவனங்களில் எந்த ஒரு கட்டடமும், துறையும் புதிதாய் எழும்போது புதிது, புதிதாய் தாளாளர்கள் தோன்றுவார்கள்; கட்டிடங்களில் நன்கொடை கொடுத்தோர் பெயர்கள் பொறிக்கப் படும். மொத்தத்தில் ஆற்றொழுக்கான வெளிப்பாடு, மறைப்பில்லாத தன்மை இந்த நிறுவனங்களில் அன்று இருந்தது. (Correspondent என்ற சொல்லைத் தமிழில் தாளாளர் என்று மொழிபெயர்த்ததே தாளாண்மை கருதித்தான். இப்பொழுது தாளாளர் என்ற சொல்லுக்கே பொருள் இல்லாமல் போய்விட்டது. Cor-respondent என்பவரை இப்பொழுதெல்லாம் பள்ளி/கல்லூரிப் பொறுப்பாளர் என்று சொல்லுவதே சரி).

அந்தக் காலம் மாறி, இப்பொழுதெல்லாம் ஒரு பதினைந்து, இருபது ஆண்டுகளாய் தமிழகத்தில் பள்ளி/கல்லூரிப் பொறுப்பாளர்களின் பாங்கு பெரிதும் மாறிப் போனது. வேறெங்கோ சம்பாரித்த பணத்தைக் கல்வியில் செலவிட்டதற்கு மாறாய், கல்வி அளிக்கும் நிறுவனத்திலேயே சம்பாரிக்கின்ற வழக்கம் எங்கும் ஏற்பட்டுப் பரவிப் போனது. இன்னார் என்று கணக்கில்லை; யார் வேண்டுமானாலும், கண்டு கொள்ள வேண்டியவர்களைக் கண்டு கொண்டால், தமிழ்நாட்டில் இது போன்ற பள்ளிகளை/கல்லூரிகளைத் தொடங்கி விடலாம் என்று ஆகிவிட்டது. கொஞ்சம் கூடக் கூசாமல் ஒரு பழைய அரசியல்வாதியின் மனைவி "கல்லூரி வைத்துச் சம்பாரிக்கலாம் என்ற கருத்தில் 70% விழுக்காடு வட்டிக்கு ஒரு ஏமாற்றுக்காரனிடம் 3 கோடி உருவா கடன் வாங்க முயன்று, தன்னிடம் இருந்த பணத்தை இழந்திருப்பதாக" ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் சொன்னதைக் கேட்ட போது பலரும் அதிர்ந்து போனார்கள். அந்த அம்மா ஏமாந்தது ஒருபக்கம்; ஆனால் அப்படிப் பணம் புரட்டிக் கல்லூரி தொடங்கி பணம் ஈட்டி இந்த வட்டியையும், முதலையும் கட்ட முடியும் என்று நினைப்பது இன்னொரு பக்கம். மொத்தத்தில் இந்தக் குமுகாயம் எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்று பாருங்கள்!

அடிப்படையில் சொந்தப் பணமே கூடப் போடாமல், வெறுமே அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் / அரசியல் தலைவர்களிடம் தங்களுக்குள்ள பழக்கத்தை வைத்து, அல்லது கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து, நிறுவனம் நடத்த உரிமம் பெற்று, "ஊரான் வீட்டு நெய்யே! என் பெண்டாட்டி கையே!" என்றபடி முற்றிலும் வெளியார் பணத்தை வைத்து, அதையே முதலாக்கி, பள்ளி/கல்லூரி என்ற நிறுவனத்தை உருவாக்கி, "கல்வி வாங்கலையோ, கல்வி" என்று கூவி அழைத்து வணிகம் செய்வதே நாடெங்கும் பெரிதாய் நிற்கிறது; மறைநிலைச் செலவு கணக்குகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நடைமுறை, "நானா உன் பிள்ளையை இங்கு வரச்சொன்னேன்?" என்பது போன்றதோர் அலட்சிய மனப்பான்மை, "இந்த ஆண்டு எவ்வளவு பணம் தேறும்?" என்ற கேள்விகள் ஆகியவை நிறைந்ததாய் இந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகிப் போகின. எந்தப் பள்ளியில் "சேருங்கள்" என்ற கூக்குரல் (ஒலியெழுந்தோ, எழுகாமலோ) அதிகமாய் இருக்கிறதோ, அங்கு மக்கள் ஓடுகிறார்கள். மொத்தத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில், வரவு என்பது செலவிற்கு மேல் ஆகிவரும் முறையில் வைத்துக் கொள்ளும் காலம் இது. "கல்வி என்பதில் காசு பார்க்க வேண்டும், பொலுவு (profit) அடைய வேண்டும்" என்று முயலுகின்ற காலம் இது. இந்தப் பொறுப்பாளர்கள் ஒரு தொழில் முனைவோரைப் போலத் தோற்றம் அளித்துக் கொண்டு அதே பொழுது இரவோடு இரவாய் ஓடிப்போகும் இயக்காளிகளாய் (fly-by night operators) நடந்து கொண்டு எல்லாவற்றிலும் ஒரு கலவையாய்க் காட்சியளிக்கிறார்கள்.

நாம் அறிந்து பணம் சம்பாரிக்க நாட்டில் இரண்டு வகை உண்டு; ஒன்று வாங்கி விற்கும் வாய்பகரம் (>வியாபாரம் = trade) என்ற வணிகம். இன்னொன்று மானுறுத்தல் (manufacture) செய்து பொருள்களைப் புதுக்கி நடத்தும் தொழில். இயற்பொருட்களை (raw materials) வாங்கி, ஆற்றலைச் செலவழித்து, சில ஊடுழைகளை (utilities)யும் நுகர வைத்து, பூதிக, வேதியற் செலுத்தங்களுக்கு (physical and chemical process) இந்தப் பொருட்களை உட்படுத்தி, கிட்டத்தட்ட வேளாண் விளைப்புப் போலவே புதுக்கம் (production) ஆக்குகின்ற மானுறுத்தற் தொழிலை வணிகம் என்று நாம் யாரும் சொல்லுவதில்லை. (வணிகம், மானுறுத்தல் இரண்டையும் சேர்த்துச் சொல்லும் போது பொதினம் - business - என்றே சொல்லுகிறோம். பொலுவு - profit - நாடிப் பொதிவதெல்லாம் பொதினம் தான்; இருந்தாலும், அதன் பொருள் இன்னும் ஆழமானது.)

அன்புடன்,
இராம.கி.