Friday, August 28, 2009

நாரணன்

ஒருமுறை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் ”நாரணன்” என்ற சொல்லின் சொற்பிறப்பு பற்றிக் கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு மறுமொழிக்க இயலாது போனது. வேறொரு நண்பர் கேட்டுக் கொண்ட வேலையில் சில நாட்கள் ஆழ்ந்து போனதாலும், என் “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை முடிக்கும் முயற்சிகளில் இருந்ததாலும், 108 திருப்பதிகளைக் காணும் விழைவின் பகுதியாய் மலைநாட்டு 13 பதிகளைக் காண ஒருவாரம் சேரலம் சென்றதிலும் காலம் கழிந்து போயிற்று. பின்னால் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.
---------------------------

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

என்ற நாச்சியார் திருமொழி. 6.1 ஆம் பாடலைக் கண்டு மயங்காதார் மிகக் குறைவு. அதே பொழுது, ”வாரணம்” என்ற சொல்லை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டவரும் மிகக் குறைவு. ”யானை, பன்றி, தடை, மறைப்பு, கவசம், சட்டை, காப்பு, கேடகம், நீங்குகை, உன்மத்தம், கோழி, உறையூர்” போன்று அகராதியிற் சொல்லியிருக்கும் எந்தப் பொருளும் இங்கு சரிவராது. ”வரி வரியாய்க் கிளர்ந்தெழும் வரிச்சங்கை இங்கு முன்னே கொண்டுவந்து பொருள் சொன்னால் தான் சரிவரும். நம் அகரமுதலிகள் ”சங்கத்தையும்” வாரணத்திற்குப் பொருளாய்ச் சொல்லுகின்றன. ஆனாலும் தென்பாண்டித் தமிழ்மரபு, பழக்கவழக்கம் தெரியாதோர், சங்கென்ற பொருளுக்குச் சட்டென வரவும் மாட்டார்.

பாட்டு, மாப்பிள்ளை அழைப்பு பற்றிச் சொல்கிறது. நாரண நம்பி மெதுவாய் அசைந்து மணமண்டபம் நோக்கி நடந்து வருகிறான். தென்பாண்டி நாட்டில், இந்த அழைப்பில் சங்கு முழங்கி ஊரைக் கூட்டி, சுற்றம் சூழ, எல்லோரும் போய், மாப்பிள்ளையை அம்பலத்தில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து வருவார். இன்றுங்கூடச் சங்கொலியில்லாமல் எங்களூர்ப் பக்கம் மாப்பிள்ளை அழைக்கும் மரபில்லை. மாப்பிள்ளை மணமண்டபத்திற்கு வரும்போது, ஆங்காங்கு சங்கொலி கேட்கவேண்டும். அதைக்கேட்டு, அவர் வரும் பாதையின் முக்கு, முனங்குகளில் ஊர்மக்கள், குறிப்பாகப் பெண் மக்கள், திரண்டுவந்து மாப்பிள்ளை பார்க்கக் கூடுவர். அந்த இடங்களில் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். பெண்மக்கள் பூரண கும்ப ”மரியாதை” [கும்பம் + தேங்காய், பனம்பாளை அல்லது தென்னம் பாளை] செய்வதும், ஆலத்தி எடுப்பதும் [குங்கும நிறத்தில் ஆலத்தி கரைத்து வைத்திருப்பதும் ஒரு கலை.] ஆங்காங்கு இருக்கும் முறை. [இன்றைக்குத் தென்பாண்டியில் தேர்தலுக்கு வரும் தலைவருக்கெல்லாம் பூரண கும்பமும், ஆலத்தியும் சங்கொலியோடு சக்கை போடுகிறது.]

”நம்மூர்ப் பெண்ணுக்கு இவன் ஏற்றவனா?” என்று தெரிய வேண்டாமா? பெண்வீட்டுக்காரரும் ஊராரிடம், “பார்த்துக்குங்கப்பா, எங்க வீட்டு மாப்பிள்ளை இவர்தான், எங்கபெண்ணு நல்ல இடத்துலே தான் வாக்கப் படுறா!” என்று சொல்லாமற் சொல்ல வேண்டாமா? அதற்கு ஒரேவழி இந்தச் சங்கொலி தான். நாகசுரம், மேளம் - அது இதெல்லாம் அப்புறம் வந்தது. முதலில் அறதப் பழங்காலத்திற் சங்கே பயன்பட்டது. [இக்காலத்தில் band - உம், வேட்டும் கூடச் சில இடங்களிற் சேர்ந்து கொள்கிறது.] சங்கொலி மங்கலமானது என்ற நம்பிக்கை தென்பாண்டி நாட்டில் மிகுதியாய் உண்டு. சங்கும் முத்தும் குளித்தெடுத்தவர் சங்கொலியைப் பெரிதாய்க் கருதத் தானே செய்வார்? எத்தனை முறை வெண்சங்கம் நாலாயிரப் பனுவலில் பேசப்படுகிறது? இங்கே ஆயிரம் சங்கொலி சூழ, மாப்பிள்ளை எழில்நடை போட்டு நடந்து வருகிறாராம்.(”நம்ம பொண்ணுக்கு இருக்குற ஆசையைப் பார்த்தீங்களா? ஒரு சங்கொலி இவளுக்குப் பத்தாதாம், ஆயிரஞ் சங்கு சுற்றி வந்தாப்புலெ ஒலிக்க, இவ ஆளு ”ராசா” கணக்கா நடந்து வரோணுமாம்.”) அப்படி வருபவரை வீதி நெடுகிலும் தோரணங் கட்டி, பூரணப் பொற்குடம் வைத்து பெண்மக்கள் எதிர்கொள்வதாய்க் கனாக் காண்கிறாளாம். ஆகத் தென்பாண்டிப் பெண் அவளுக்குத் தெரிந்தமாதிரிக் கனவு காண்கிறாள். வட்டாரப் பண்பாடு இப்பாட்டில் தூக்கிநிற்கிறது. இதை உணராமல், வெறும் எந்திரத்தனமாக, பல உரைகளில் ”ஆயிரம் யானைகள் சூழவந்தன” என்று சொன்னதையே கூறிக்கொண்டு இருக்கிறார். ”மாப்பிள்ளை அழைப்பின் போது எந்த ஊரில், யானையைக் கொண்டு வருகிறார்?” என்று நானும் ஓர்ந்து பார்க்கிறேன். கொஞ்சமும் தெரியவில்லை. அப்புறம் என்ன முறையிலாக் கற்பனை? அதே பொழுது, சங்கொலி இல்லாமல் மாப்பிள்ளை அழைப்பு இன்றும் தென்பாண்டிநாட்டில் இல்லை.

”வாரணம்” என்ற ஒரு சொல்லுக்கே இப்படிப் பல உரைகாரர் தடுமாறும் வேளையில், ”நாரண நம்பி” என்ற கூட்டுச்சொல்லுக்கு என்செய்வது? நாரணன் என்றசொல்லை 3 வகையில் அலசலாம். இதில் எது சரியென்று சொல்ல இதுவரை கிடைத்த தரவுகள் குறைவு தான். [நான் ஆன்மீகத் தரவுகளைச் சொல்லவில்லை. ஆன்மீக விளக்கங்கள் கால காலத்திற்கும் வந்து கொண்டே இருக்கும். அவை நம்பிக்கையின் பால் வருபவை.] இற்றை நிலையில் “இதுவே சொற்பிறப்பு வழி” என்று அழுத்தந் திருத்தமாய்ச் சொல்ல முடியவில்லை. ஆய்வுகள் தொடரவேண்டும். மேற்சொன்ன 3 வகைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. நரனானவன் நாரணன். ஒலியெழுப்பைக் குறிக்கும் நரலெனும் வினை, தமிழ்ச்சொல்லே. நாரயணனெனும் வடசொல் இதில் பிறந்திருக்கலாம். ஆகுதல்/ஆயுதல் வழி ஆயுதல்> ஆயன் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இனி, நார ஆயன் = நாராயன்>நாராயண் என்று ஆகும். வடமொழிக்குப் போன சொற்களை மீண்டும் தமிழ் திருப்பி வாங்கும் போது இன்னொரு விகுதி சேர்ப்பது நடந்துள்ளது. பெருமான்>பெருமன்>ப்ரம்மன்>ப்ராம்மன்> ப்ராம்மண்>ப்ராம்மணன் என்பது போல், நாராயன்> நாராயண்> நாராயணன் ஆகும். இதுபற்றி 9 ஆண்டுகளுக்கு முன் 2000 ஆண்டில் ஆகத்து மாதம் 24 ஆம் தேதி, அகத்தியர் குழுமத்தில் “நாரி” என்ற சொல்லைப் பற்றிக் கீழுள்ளது போல் எழுதினேன்.

----------------------------
From poo@... Thu Aug 24 06:36:13 2000
To: agathiyar@egroups.com
Subject: Re: [agathiyar] Re: was (family portal need your help) Naari

At 04:52 AM 8/24/00 +0000, you wrote:
>வாசன்,
>
>நாரி என்பது இந்திய மொழியைச் சேர்ந்ததுதான் (அது என்ன "இந்திய மொழி" என்று என்னிடம் கேட்காதீர்கள்)

வேர் மட்டும் தமிழ்; விளைவு பாகத மொழிகள் எல்லாவற்றிலுமே இருக்கிறது.

நரலுதல் - ஒலி எழுப்புதல்
நரல்வது - ஒலியெழுப்புவது. (நர நர எனப் பல்லைக் கடித்தான்)
நரலை - ஒலி; ஒலி எழுப்பும் கடல்
நரற்றுதல் - ஒலி எழுப்புதல்
நருமுதல் - பல்லால் கடித்தல்
நாராசம் - கேட்க முடியாத கொடுமையான ஒலி
நரி - ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு
நரலும் குரங்கு அதாவது 'நரன்' - மனிதன்
நரசிங்கன் - மனிதனும் சிங்கமும் சேர்ந்த தோற்றம் உள்ளவன்
நாரணன் - மனிதனாய் தோற்றரவு (அவதாரம்) எடுத்த திருமால் (நரன் ஆனவன் நாரணன்); இதை வடமொழியில் நீட்டி நாராயணன் என்றும் சொல்லுவதுண்டு.
நாரணி - நாரணனின் தங்கை
நாரி/நாரிகை - மனிதனின் பெண்பால் (சொல் அமைப்பு பாகத மொழிகளின் அமைப்பின் படி இருக்கிறது) இப்படிப் பட்ட சொற்கள் எல்லாம் அடிப்படையில் தமிழாய் இருந்து வடமொழிப் படி வழக்கிற்கு வந்தவை.
நாரதன் - இசை எழுப்புவன் (தொன்மங்களில் வரும் நாரதர் மட்டுமல்ல; சங்க இலக்கியங்களில் இசைக்கருவிகளோடு வரும் பாணர்களுக்கான வடமொழிப் பதமும் கூட)
நரம்பு - வில்லில் கட்டிய, ஓசை எழுப்பும், நாண்
நார் - ஒலி எழுப்பும் நாண்; (இதிலிருந்து எல்லாவித இயற்கை, செயற்கையான கயிற்றிழைகளுக்கு எல்லாம் பயன்படத் தொடங்கியது)
நருமதை - ஓவென்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு வேகமாக ஓடும் ஆறு. இதை மட்டுமே பண்டைக் காலத்தில் ஆண்யாறு என்று சொல்வதுண்டு. இதன் வேகமும், நீரின் அளவும் அவ்வளவு பெரியதாம்.

இப்படி 'நர' என்னும் அடியை ஒட்டிய பல சொற்கள் தமிழில் இருக்கின்றன.
எல்லாவற்றையும் வட மொழிக்கண் கொண்டே பார்த்தால் எப்படி?

அன்புடன்,
இராம.கி.
----------------------

மேலே சொன்னது போல், எல்லா இடத்தும் நாரணனை ”நரன் ஆனவன்” என்று சொல்லமுடியாது. ஏனெனில் ஆண்டாளே தன் நாச்சியார் திருமொழி 2.1 இல், “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே” என்றுசொல்லி நாராயணன், நரன் என்ற பெயர்களை அடுத்தடுத்து இட்டு நாராயணனுக்கு இன்னொரு பொருள் தேடுவதை உணர்த்தியிருப்பாள். ஆனாலும் சிலர் ”நரன் ஆனவன் நாரணன்” என்பதை வலிந்து ஏற்படுத்திக் கொண்டு,

“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும் பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடு உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

என்ற பெரிய திருமொழியில் நாராயண மந்திரத்திற்கு, “நாரங்களுக்கு அயனமாய் இருப்பவன், நாரங்களை தனக்கு இருப்பிடமாய்க் கொண்டவன். நாரம் = ஜீவான்மாவின் கூட்டம்” என்று ஆன்மீக விளக்கஞ் சொல்வார். [நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் விளக்கவுரையும் மூன்றாம் தொகுதி 948 ஆம் பாட்டு, பக் 1304. டாக்டர் இரா.வ. கமலக் கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம். பல்வேறு உரைகாரரும் இதுபோலச் சொல்லி யிருக்கிறார்.] ஜீவான்மா என்ற பொருள்நீட்சி எப்படி ஏற்பட்டது? - என்று நமக்கு விளங்க வில்லை. தமிழ், சங்கதம் இரண்டிலும் நரன் என்பது மாந்தனைக் குறிக்கிறதே அன்றி, உய்வு (=ஜீவ) ஆன்மாவைக் குறிப்பதாய் எந்த அகரமுதலியிலும் கண்டதில்லை. குட்டிக்கரணம் போட்டாலும், பொருளைச் சவ்வாய் இழுத்தாலும், நாரம் என்பது உய்வான்மாவைக் குறிக்குமோ? அறியேன். [நரன் ஆன்மா உய்வான்மாவாய் இருக்கலாம். ஆனால் எல்லா உய்வான்மாவும் நரன் ஆன்மாவோ? அன்றி, நரன் தவிர்த்த பிற பிறப்புக்களுக்கு உய்வான்மாவே கிடையாதா? இது ஏரணப்பிழை அல்லவா? விண்ணவப் புரிதலின்படியும் இது தவறல்லவா? இப்படிச் சில ஆன்மீக விளக்கங்கள் நாம் எண்ணுவதையும் மீறும்போது, கைவிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.]

2. இரண்டாம் முறையில் நாளன்>நாரன்>நாரனன்>நாரணன் என்று கருமையைக் கரணியம் காட்டிப் பொருள் சொல்வர். நண்பர் நாக.கணேசன் பல இடங்களிலும் இதுபோல் சொல்லியுள்ளார். [அவர் பெயரையும் நாள் நாரணன் என்பதையும் சேர்த்துக் கூகுளில் இழுத்துப் பார்த்தால், அவர் கூறியது கிட்டும். நல்>நள்>நாள் = இரவு, கருமை என்ற பொருள்களுண்டு. திருமாலின் பல பெயர்கள் கருமைநிறங் குறித்துவருவதால் இதையும் அப்படியே சொல்வார்.]

3. இந்த விளக்கம் நீரை அடிப்படையாக்கிச் சொல்லுவது. இவ்விளக்கமும் கருமைக் கருத்தில் உருவானதே. நீர் பற்றிய பல தமிழ்ச்சொற்களும் கருமையில் எழுந்தவை. யா எனும் கருமைக் கருத்து வேர்பற்றி சொல்லாய்வு அறிஞர் ப. அருளி ஒரு பொத்தகமே போட்டுள்ளார். [யா - விற்குப் பொருந்தற் கருத்தும், வினவற் கருத்தும் உண்டு. அந்த கருத்தெழுச்சிகளை நாம் இங்கு பார்க்காது, கருமைக் கருத்தை மட்டுமே பார்க்கிறோம்.]

அருளியாரின் ஆய்வு பலரும் படிக்கவேண்டியது. யா>ஞா>நா என்ற திரிவைப் பற்றியும் அதிற் பேசியிருப்பார். ”யா”வை நம்மில் சிலர் மூக்கொலி சேர்த்து ஞாகாரம், நாகாரமாய்ப் பலுக்குவர். [அத்திரிவை மொழியியல் அறிஞரின் கவனத்திற்கு முதலிற் கொண்டு வந்ததும் திரு.ப. அருளி தான்.] ஒரே சொற்பொருளில் யா, ஞா, நா என மூவரிசைச் சொற்களும், சிலவற்றில் இரு வரிசைகளும், சிலவற்றில் ஒருவரிசை மட்டும் பொதுவாய்ப் புழக்கத்தில் உள்ள இற்றைத் தமிழோடும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய தமிழிய மொழிகளையும், தமிழ்வட்டார வழக்குகளையும் பார்ப்பது நுணுகிய சொல்லுறவுகளைக் காட்டும். [காட்டு: நல் எனும் சொல்லடி இன்றும் தெலுங்கில் கருமையை உணர்த்தும். எரியும் விளக்கை ”நல்லா வை” என்று சிவகங்கைப் பக்கம் சொன்னால், ”விளக்கை அணை” என்று மங்கலமாய்ச் சொல்வதாகும். அதாவது “விளக்கைக் கருப்பாக்கு” என்று பொருள்.]

யா (=ஆச்சா மரம்), சாலம் (=யா), யானை, யாடு, யானம்>ஏனம், ஏனல், யாமம், நாள், நாம், யாந்தை>ஆந்தை, நாகம், நாவல், யாம்பு>ஆம்பி, யாம் = நீர், நீர், யாலம்>ஆலம் = நீர், யாம்>ஆம் = நீர், யாறு, நானம், யாமன்.யமன், யாயம்>ஆயம் = முகில், மறைவு, கமுக்கம், யாணம்> சாணம் ..... இப்படிப் பல சொற்களை அருளி அப்பொத்தகத்தில் காட்டுவார். அவர் பொத்தகத்தில் இருந்து இதற்கு முன்னும் பல செய்திகளை நான் என் முந்தையக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.]

ஆழநீர் கருப்பாய்த் தோற்றமளிக்கும். கடலில் 4,5 மீட்டர்கள் கீழே போனால், கதிரவன் ஒளிபுகாது இருள் சூழும். ஆழம்கூடிய பேராறு கருமைப் பொருளால் கங்கை யென்றாகும். [கல்ங்கை>கங்கை. இந்திய ஆற்றுப் பெயர் பலவும் தமிழ் மூலம் காட்டும். இதைச் சொன்னால் “ஓ, தமிழ்வெறியன்” என்று பலர் உரைக்கக் கூடும் :-). காலம் கெட்டுக்கிடக்கிறது. தமிழ் எழுந்துவிடக் கூடாது என்பதில் பலரும் கவனமாய் உள்ளார். தமிழர் தாம் விழிக்காது சோம்பல் உற்று உள்ளார். ] மெதுவாய்ப் போகும் ஆற்றில் பாசி, காளான், புதர் ஆகியவை ஆற்றுப்படுகையில் மண்டுவதால், இந்த ஆறு கருந்தோற்றம் காட்டிப் பெயர் கொள்ளும். கருநபெருநை> கண்ணபெருநை> க்ருஷ்ண பெண்ணை>  க்ருஷ்ணா என்ற பெயர் இப்படி எழுந்ததே. [எல்லா ஆற்றுப் பெயரும் கருமை அடித்தளம் கொண்டவையல்ல. கருமைக்கு மேலாக வேறு நிறங்களில் விளைந்தவை வெள்ளாறு - வெள்குவதி - வேகவதி> வேகை> வைகை, (இன்னும் 2 வெள்ளாறுகளும், காஞ்சிக்கு அருகில் இன்னொரு வெள்கவதி> வேகவதியும் உண்டு.), சுள்ளியம் பேராறு - silver river - பெரியாறு, செம்பாறு - copper river - தாம்ப பெருநை, பொன்னாறு - gold river - பொன்னி ஆகியவை யாகும். பல்வண்ண ஆற்றுப்பெயர்கள் தெற்கே மட்டுமின்றி வடக்கிலும் உண்டு. அவற்றை அலசினால் தமிழின வரலாற்று மூலம் கிட்டும்.]

அதேபொழுது, யா>யார்>யாரு>யாறு>ஆறு எனும் பொதுச்சொல் கருமையில் எழுந்ததே. ஒரே தடத்தில் போவதால் தடம், வழி, நெறி என்ற வழிநிலைப் பொருள்கள் யாறு என்ற சொல்லுக்குப் பின்னால் எழுந்தன. ஆனாலும் முதல்நிலைப் பொருள் கருமையே. பின் எப்படி வெள்ளாறு போன்ற வண்ண ஆற்றுப் பெயர்கள் எழுந்தன என்று கேட்டால், கடலை எண்ணெய் போலத்தான் சொல்ல வேண்டியுள்ளது. எப்படி எள்ளில் இருந்து எள்நெய் தோன்றி அதன் விதப்புப் பொருள் மறைந்து எண்ணெய் எனும் பொதுமை ஏற்பட்டதோ, அதேபோல யாற்றின் விதப்பான கருமை அழிந்து ”நீரோட்டம்” எனும் பொதுமை மிஞ்சியது. பின்னால் வெள்ளை, வெள்ளி, செம்பு, பொன் எனும் நிறங்கள் ஆறுகளுக்குப் பெயரடைகளாய் மாறின. ஆனாலும் யார்>ஆர்>ஆறு என்பது நீர்ப்பொதுமையே குறித்தது. இது யார்>ஆர்>ஆல் என மேலும் திரிந்து நீரைக் குறிக்கும். யா>யால்> யாலம்>ஆலம் என்ற வளர்ச்சியும் பெறும்.

வெப்பநாடான நம்மூரில் காலங்கெட்டு திடீரென்று, வானத்தின் தலைகீழ் மாற்றத்தால் ஆலங்கட்டி மழை பொழிவதைப் பார்த்திருக்கிறீரா? அது என்ன ஆலங்கட்டி? வேறு ஒன்றுமில்லை நீர்க்கட்டி/பனிக்கட்டி இதை hailstone என்று ஆங்கிலத்திற் சொல்வார். [க.து. ஆலிகல், ம. ஆலிப்பழம், குட.ஆலிகய், பட ஆனிகல்லு. க. ஆலி, ஆணி, ஆரி, பட. ஆனிகல்லு; கோத. அரகசு; தெ.குரு. மால், குட ஆலி; து ஆலிகல்லு, குவி, ஆஜி, பர் ஏதிர், ஏயிர் - ஆகத் தமிழிய மொழிகளில் எல்லாம் பரவலாய் உள்ள சொல்.] சிறு சிறு கற்களைப்போல வானத்தில் இருந்து நீர்க்கட்டி மழை கொட்டுகிறது. விழுந்த வேகத்தில் தரைச் சூட்டில் ஆல் [ஆலம், ஆலங்கட்டி, ஆலி] உருகிக் கரைந்து போகிறது. [ஆலித் தண் மழை - ஐங்குறுநூறு 437; ஆலஞ்சேர் கழனி தேவா.2.81.7 என்ற காட்டுக்களை இங்கு ஓர்ந்து பாருங்கள்.] ஆகப் ice/பனிக்கட்டியைத் தெரியக் குளிர்நாட்டில் வாழத் தேவையில்லை. வெப்ப நாடாயினும் தெரிந்து வைத்து, இலக்கியத்தில் நாம் பதிந்திருக்கிறோம். ஆல், ஆலம், ஆலி என்ற சொற்கள் குளிர்நீரையும், பனிக்கட்டியையும் குறித்தவையே. ஆலம் பால் என்ற சொல்லும் ஆலங்கட்டி நீரைக் குறிக்கும். ஆலு என்ற சொல் நீர்க்குடத்தைக் குறிக்கும். ஆலிஞ்சரம் என்பது நீர்ச்சாடியைக் குறிக்கும்.

ஆலம் என்பதன் திரிவாய் ஆயம்/அயம் என்பதும் தமிழில் நீரைக் குறிக்கும். [அயம் திகழ் சிலம்பு - ஐங்குறுநூறு 264.2] O.E. is "ice," from P.Gmc. *isa- (cf. O.N. iss, O.Fris. is, Du. ijs, Ger. Eis), with no certain cognates beyond Gmc. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்க நூலில் பயன்பட்ட சொல். இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து இந்த்க் காலம் கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆலிக் குழைவு = ice cream. என்று நாம் சொல்லக் கூடாதா? பனிக் காற்றும் ஆலி மழையும் வெவ்வேறு ஆனவை. ஆலி எனும் சொல் இக்கால அறிவியற் சிந்தனையைத் தமிழில் துல்லியமாய் விளக்கப் பயன்படும் சொல். ஆலி என்ற சொல் மீண்டும் புழக்கத்திற்கு வந்தால் நல்லது. (இது ஏதோ இராம.கி. படைத்ததல்ல. அப்படி எண்ணாதீர்கள்.)

”ஆலம்” என்பதற்கு கடல் பொருளுண்டு. (ம.ஆலம்) மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஆலமென்பார். ஆல் ஆற்றுதல்> ஆலாற்றுதல்> ஆலாத்துதல் = மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஒரு தலைவரின் முன்வைத்து மேலும் கீழுமாய்ச் சுற்றும் தென்பாண்டி வழக்கம் சோழநாட்டிலும் இருந்தது. ஆலிப் பொருள் நீண்டு கள்ளையும் குறிக்கும். ”தேனும் ஆலியும் தீமிசைச் சிந்தியே” என்ற தொடர்- கந்தபு. அசுரயாக. 71 - இல் வரும். புறம் 298 இன் ஆசிரியர் பெயரை ஆவியாரென ஒரு பாடமும், ஆலியாரென இன்னொரு பாடமும் உள்ளதாய் ஔவை சு. துரைசாமியார் சொல்வார்.

எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் எயில் முற்றி
வாய்மடித்து உரறி நீ முந்தென் னானே!

எனும் கரந்தைப்பாட்டு அது. கள்பற்றிப் பேசி அரசனுக்கும் போர்வீரனுக்கும் இடையே இருக்கும் அக்கறையைப் புலவர் இங்கு பேசுவார். ஒருவேளை ஆலியார் என்ற பாடம் கள்ளை வைத்துப் பாடியதால் எழுந்ததோ, என்னவோ?

யாலி>யாளி>ஞாளி>நாளி என்ற வளர்ச்சியிலும் கள் என்ற பொருள் யாழ் அகராதியில் சொல்லப்பெறும். கள் எனும் பொருளில் ”ஞாளி” எனும் சொல்லை பிங்கல நிகண்டு பதிவுசெய்யும். திசைகள் எனும் என் கட்டுரைத் தொடரின் 4 ஆம் பகுதியில் தென்னை பற்றிச் சொல்லியிருப்பேன். பனை நம்மூர் மரம். தென்னை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறக்குமதியான மரம். பனையில் பனங்கள் போலவே, தென்னையிலும் கள்ளிறக்க முடியும். பனங்கள் சற்று கடுக்கும்; தென்னங்கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid பண்ணும் வேலை. தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்கு மரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. ”கள்மரம் எனும் குறிப்பே, தென்னை நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதியான மரம்” என்று உணர்த்திவிடும். தெல்லிற்கு மாற்றாய் நாளியைப் பயன்படுத்தி நாளிகேரம் என்ற சொல்லை மலையாளத்தில் பயிலும். கள்ளேறும் மரம் நாளிகேறம்>நாளிகேரம். இது நம் தேவாரத்திலும் பயின்றிருக்கிறது. “வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை” தேவா. 106.5. நாளிகேளம், நாரிகேளம் என்றெல்லாம் விதம் விதமாய் இச்சொல் பலுக்கப் படும். ஆலியெனுஞ் சொல் எப்படியெல்லாம் திரிந்திருக்கிறது என்று பாருங்கள்.

நாலாயிரப் பனுவலில் ஆலிலை, ஆல், ஆலி என்பதை ”ஏழுலகமும் தன்னுள் அடக்கி ஆலிலைமேற் படுத்த கதையாய்” உரைகாரர் சொல்வார். [ஆலிலைக் கதைபற்றிய காட்டுக்கள் நாலாயிரப்பனுவலில் பரந்தன. அவை சொல்லி மாளாது.] அப்படிக் கருப்புவெளுப்பாய்ப் பலவிடத்தும் சொல்லலாமெனினும்  எல்லாவிடத்தும் முடியாதென்பது என் துணிபு. அதோடு ஆலிலையே நீர்ப் பரப்பைக் குறிக்கும் உருவகமென்ற ஓர்மையும் உண்டு. ஏனெனில் உலகம் அழிந்த பின் ஆல இலை ஏது? அதோடு, பாற்கடல், பால்வழி மண்டலத்தைக் (milky way) குறிக்கும் குறியீடு எனில், ஆலி அப் பால்வழியைக் குறிக்காதோ? ஆகாச கங்கை கூட பால்வழியையே குறிப்பிடுகிறது என்பார். பாற்கடலை ஆலி என்பதும், பாற்கடலில் இறைவன் பள்ளிகொண்ட இடம் ஆலிநகர் என்பதும் இன்னொரு வகை உருவகமாகும்.

அடுத்து, திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் பழஞ்சோழநாட்டின் சிறுபிரிவான ஆலிநாட்டைச் சேர்ந்தது. அது என்ன ஆலி நாடு? வேறொன்றும் இல்லை தண் நீர் சூழ்ந்த புனல் நாடு. காவிரி கடலைச் சேர்வதற்கு 50, 60 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) முன்னே அதில் கிளையாறுகள் தோன்றிவிடும். ”காவிரிச் சமவெளி” என்கிறாரே, அப்புலம் இக்கிளையாறுகளால் தோன்றியது. கிளை யாறுகளில் இருந்து கால்வாய்ட்டி வயலுக்கு நீர் கொண்டு போயிருப்பார். சில இடங்களில் குளங்கள், ஏரிகள், புழைகள் இப்படிப்பல நீர்நிலைகள் மாந்த முயற்சியில் கூடிக்கிடக்குமென்பதால் நீர்நாடாயிற்று. நீர்நாடு = ஆலிநாடு.

ஆலிக்கு கலப்பைப் பொருளுமுண்டு. அதைக்குறிக்கும் பெயர் திருநாங்கூர். (நாங்கின் இன்னொரு திரிவு நாஞ்சு>நாஞ்சில். குமரி மாவட்டத்திலுள்ள பெயர்.) திருமங்கையாரின் சொந்த ஊருக்கருகில் திருநாங்கூர் இருந்ததால், அதைச்சுற்றி அவர் பெரிதும் பாடியுள்ளார். திருவாலி/திருநகரியில் அருள் பாலிப்பவன் திருவாலியம்மான். அங்கவன் கோலம் வீற்றது திருக்கோலம். திருநகரி, திருமங்கையார் பிறந்தவூர். (நாங்கூருக்கருகில் திருவெள்ளக்குளம் திருமங்கையாரின் மனைவி குமுதவல்லி தோன்றிய ஊர்.) திருவாலிநாடர் என்றபெயரும் திருமங்கையார்க்குண்டு. ”அணியாலி, திருவாலி, தென்னாலி, வயலாலி, புனலாலி, எழிலாலி” என்றெலாம் விதம் விதமாய் வண்ணிப்பார். முன்சொன்ன பாற்கடலின் ஆலிநகரும், ஆலிநாட்டு ஆலிநகரும் பிணைந்து கிடக்கும் பாசுரங்கள் பலவுண்டு. காட்டாக ஒன்றைக் கீழே கொடுக்கிறேன்.

நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததது போல்
வேலைத் தலைக்கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
ஆலைப்புகை கமழும் அணியாலியம்மானே! பெரிய திருமொழி 3.5.2

இங்கே முதலிரண்டு வரிகளில் பாற்கடலும், பின்னிரு வரிகளில் திருவாலியும் பேசப்பெறும். “ஆலின் மேலால் அமர்ந்தான்” என்ற தொடருக்குப் பொருளாய், திவ். திருவாய். 9.10.1 க்கான ஆல் = நீர் என்ற பொருளை ஈடு உரை சொல்லும். இன்னும் 2 பாட்டுக்கள் பெருமாள் திருமொழியில் வரும்.

“ஆலியா அழையா அரங்கா என்று
மாலெழுந்தொழிந்தேன் என்றன் மாலுக்கே - பெருமாள் திருமொழி..3.2

அது என்ன ஆலியா? ஆலியன் = கூத்தாடி என உரைகாரர் சொல்வார். ஆனால் எந்த அகரமுதலியிலும் அப் பொருளை நான் காணவில்லை. ஆனால் ஆலி = கடல் உண்டு. இது பாற்கடலோனைக் குறிக்கலாம். திருவாலியம்மானையும் குறிக்கலாம். இன்னொரு பெருமாள் திருமொழியில் ஆலிலையும் பேசப்பெற்று, ஆலிநகர்க்கு அதிபதியே எனப் பிரித்தும் பேசப் பெறும்.

ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளைய வாணத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ - பெரு.8.7.

மேலே இவ்வளவு ஆழமாய் ஆலி, ஆலத்தைப் பார்த்ததற்குக் கரணியம் உண்டு. ஏனெனில் ரகர/லகரப் போலியில் ஆலம் ஆரத்தையும் குறிக்கும். இனி யாரம்>ஞாரம்>நாரம் எனும் திரிவைப் பார்ப்போம்.

யார்>யாரு>யாறு>ஆறு, யார்>ஆர்>ஆரு>ஆறு என்ற விளக்கத்தில் நீரோட்டம் பற்றி முன்னே பார்த்தோம். யார்>யாரம் என்பது கூட இன்னொரு இயலுமை தான். யாரத்தின் யகரம் நீத்த ஒலிப்பு ஆரம் ஆகும். ஆரம் என்பது கண்ணிலிருந்து வீழும் நீர்த்துளி என்ற பொருள் அகர முதலிகளில் உண்டு. அடுத்து சிப்பிகளின் நீர்த்துளியாய்த் தொடங்கிச் சுண்ணாம்பு சேரச் சேர உருவாகும் முத்து, ஆரம் எனப்பெறும். ஆரம் எனும் முத்திற்கு நீர்த்துளித் தொடர்பு இருப்பதாகவே சொற்பிறப்பு அகரமுதலி சொல்லுகிறது. ஆனால் ஞாரத்தை அகரமுதலிகளில் நான் காணவில்லை. நீர்ப்பொருளில் நாரம் உண்டு. “நார நின்றன போல் தோன்றி” என்ற கம்பரா. நட்பு .31 மேற்கோளும் உண்டு. நாரத்தை உள்ளிருத்திக் கொண்டது மேகம். அது நாரதம் எனும் இருபிறப்பிச் சொல்லால் சுட்டப்படுகிறது.(நாரதன் என்கிற பெயரும் இதன் தொடர்பே.) நாரநிதி என்ற சொல் நீர்மலையாகிய கடல் என்ற பொருளை உணர்த்தும். நாரன் = நீரைச் சேர்ந்தவன். நாரணன் = நீரோடு சேர்ந்தவன். நாராயணன் = நீரை இடமாகக் கொண்ட திருமால்.

அடுத்து ஒரு குழூஉக் குறிச்சொல்லாகத் தண்ணீர் விட்டான் கிழங்கிற்கு நாராயணி என்ற பெயர் உண்டு. இதைச் சதாமூலிக் கிழங்கு என்றும் சொல்வார் [Asparagus racemosus என்பது புதலியற் பெயர்.] இது தாறுமாறாகக் கொடிவிட்டுப் படரும் பூண்டுவகையைச் சேர்ந்தது. பித்தநோயைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் விட்டான் கிழங்கு கைகண்ட மருந்தாகும். இக்கிழங்கு நீளமாகவும் வெண்ணிறமாகவும், சதைப்பற்று மிக்கதாயும் இருக்கும். அம்மைநோய் அகல, இக்கிழங்கினைத் தண்ணீரில் ஊறவைத்துத் துகள் ஆக்கிப் பாலிற்கலந்து பருகுவர். நீரிழிவு, எலும்புருக்கி, கவட்டைச் சூடு, மிகுசளி முதலான அனைத்து நோய்களையும் போக்கி இக்கிழங்கு ஆண்மை பெருக்கும் என்று சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறும் - செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி நான்காம் மடலம் முதற் பாகம்] நீர்க்கிழங்கு நாராயணியானது ஒரு முகன்மைக்குறிப்புத் தானே?

சிவனும் மாலும் ஒருவருக்கொருவர் எதிர்மறை என்று எண்ணிப் பார்த்தால் ஒருவர் நெருப்பு, இன்னொருவர் நீர் என்பதும், ஒருவர் சிவப்பு, இன்னொருவர் கருப்பு என்பதும், இது போன்ற பல்வேறு உருவகங்களும் நாரம் = நீர் என்ற பொருளை நாம் ஏற்க வைக்கின்றன. இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் பேரில் நாரன்>நாரணன் (= நீரில் உறைபவன்)தமிழ்ச்சொல் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் முற்றிலும் முடிவு செய்யும் சான்றுக்கு (clinching evidence) நான் காத்திருப்பேன்.


அன்புடன்,
இராம.கி.

Wednesday, August 26, 2009

தமிழ்மணம் பற்றிக் காசி கேட்டதும் என் மறுமொழியும்

தமிழ்மணம் திரட்டி ஐந்தாண்டு நிறைவு செய்வதையொட்டி, கீழே வரும் கேள்விகளைக் காசி எனக்கு அனுப்பி மறுமொழிக்கச் சொல்ல, அதற்கு மறுமொழிகளை நான் அவருக்கு அனுப்பி ஒரு மாதம் இருக்கும். இப்பொழுது, ”உங்கள் பதிவிலேயே போடுங்களேன்” என்ற அவர் யோசனையை ஏற்று என் வலைப்பதிவில் இடுகிறேன். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் என்னைப் பங்கு கொள்ளச் செய்த காசிக்கு நன்றி.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

1.1. இணையத் தமிழ் உள்ளடக்கங்கள் வெவ்வேறு குறியேற்றங்களில் (TAB, TAM, TSCII, ISCII, Srilipi, Bamini, unicode,....) .உள்ளன. ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு மாற்றிப் புரிவதற்குள் “தாவு” தீர்ந்து விடுகிறது. “அடச்சே, இந்தத் தொந்தரவு வேண்டுமா?” என்ற அயர்வில், ஆங்கில உள்ளடக்கங்களுக்கே நம்மில் பலரும் ஓடுகிறோம். வலைத்தளங்களுக்கு வருபவர் அங்கிருப்பதை வெட்டி, ஒட்டிக் கவர்வது போலவும், எனவே சொத்தைக் காப்பாற்றுதல் முகன்மை போலவும், வலைத்தளக்காரர் எண்ணிப் ”பொதுக் குறியேற்றத்திற்கு வரமாட்டேம்” என்று அடம் பிடிக்கிறார்கள். இதன் விளைவாய் இணையத்தில் ஒரு தமிழுக்கு மாறாய், ஓராயிரம் தமிழ்கள் இருக்கின்றன. வளர்ச்சிக்கு உகந்ததில்லை என்று எவ்வளவு மன்றாடினாலும், ”ஒற்றுமையா? வீசை என்ன விலை?” என்று கேட்கும் தமிழ்க் குமுகாயம் இதை மாற்றாதிருக்கிறது. [வெட்டி ஒட்டும் வேலையில் சரியும், தவறும் இருக்கின்றன. அதைத் தடுத்து நிறுத்தவும் நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து, தனித்தனிக் குறியேற்றங்களில் வலைத்தளங்கள் செய்வது தமிழரிடையே கருத்துப் பரிமாற்றத்தையே குலைக்கிறது.]

அதிகமாய்த் தமிழில் புழங்கவேண்டுமானால், எல்லோரும் ஒரே குறியேற்றத்திற்கு வரவேண்டும். இன்றைக்குப் பரவலான ஒருங்குறியில் இது அமையுமானால் எனக்கு
ஒப்புதலே. (அதே பொழுது, ஒருங்குறியை நான் குறை சொல்வது ஏனென்று வலையில் குறியேற்றம் பற்றி உரையாடுகிறவர்களுக்குத் தெரியும். நான் பெரிதும் விழைகின்ற, தேர்ந்த கணி வல்லுநர்களால் அரசாணைக்குப் பரிந்துரைக்கப் பட்ட, 16 மடை TANE/TACE குறியேற்றம் இற்றைத் தமிழக அரசின் மேலிடத்திற்கு நெருங்கியவர்களிடம் தூங்கிக் கொண்டிருக்கிறது. அன்றாட அரசியலே குறியாகிப் போன நிலையில், ”TANE/TACE புழக்கத்திற்கு வருமா?” என்று நான் அறியேன்.) அதற்கிடையில், குறியேற்றங்கள் மூலம் தமிழில் தனிப்பாத்தி கட்டும் வலை அவலங்களைப் பல்வேறு களங்களில் எடுத்துச் சொல்லி, நாம் ஓர் இயக்கமாய் மாறி, ஒருங்குறி நோக்கி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

1.2. தமிழில் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், வெட்டியரசியல், மொக்கை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, [யாரும் சண்டைக்கு வராதீர்கள்; அது நம்மில் கூட இருக்கிறது என்றே சொல்கிறேன்.] மற்ற துறைசார்ந்த உள்ளடக்கங்களைப் பெருக்க வேண்டும். ”கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம், வெட்டியரசியல், மொக்கை” க்கு மட்டுமே தமிழ், மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் என்ற நிலை தொடர்ந்தால், தமிழ்ப் பயன்பாடு எதிர்காலத்தில் அருகிப் போகும். தமிழை எல்லாத் துறைகளிலும் கணிவழி பயன்படுத்த என்று நாம் முன்வருவோம்? பாட்டன், முப்பாட்டன்..... இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழைக் காப்பாற்றி நடந்த தொடரோட்டத்தில் நம்மிடம் கொடுத்த பொறுப்புக்களை நாம் ஏன் தட்டிக் கழிக்கிறோம்?

1.3. ஒருபக்கம் தமிழ் உள்ளடக்கங்களைக் கூட்டச் சொல்கிறோம். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில், 4000 சொச்சம் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) ”தமிழைச் சொல்லிக் கொடுக்க மாட்டேம்” என்று வல்வழக்குச் செய்து தமிழ்க்கல்விக்கே கண்ணிவெடி
வைக்கின்றன. தமிழக அரசும் இதற்குத் துணைபோகிறது. பெரும் சூழ்ச்சிகளால் இளையரைத்
தமிழாளுமையில் இருந்து பிரித்துத் தமிழ்ப் பயன்பாடு குறைக்கப் படுகிறது. இதுபற்றிய புரிந்துணர்வைக் கூட இணையத்தில் எழுதமாட்டேம் என்கிறோம். சூடறியாத் தவளை, வெதுப்பு நீரில் சொகம் காண்பதாய், நாம் இருக்கிறோம். வெறும் அச்சிதழ்கள், தொலைக்காட்சி ஓடைகள் போலவே செயற்பட்டு, பின்னூட்டு மாயையிற் சிக்கி, தமிங்கில நடையே இணையத்திற் பயன்படுத்தினால் அப்புறம் தமிழ் உள்ளடக்கம் இருக்குமா? தமிங்கிலம் தான் இருக்கும். கட்டுப்பாட்டோடு இயக்கமாய்ச் செயற்பட்டு நாம் மாறினால், நம்மைச் சுற்றியுள்ளோரும் மாறுவர். அச்சிதழ்கள், தொலைக்காட்சி ஓடைகளும் மாறும். அரசியல்வாதிகளும் மாறுவர். வலைப்பதிவர் தமிங்கிலத்தைக் குறைத்துக் கொண்டால் என்ன?

1.4. தமிழ் உள்ளடக்கத்திற்கு முன்னோடி தமிழை உள்ளிடச் சொல்லிக் கொடுப்பதே. 8 கோடித் தமிழரில், சிறாரை ஒதுக்கி மற்றோர் குறைந்தது 4 கோடி தேறுவர். இவர்களில் கணி, இணைய வசதியுள்ளவர் 50 இலக்கமாவது இருப்பர். [சொந்தமாய் வசதி வேண்டாம். ஓர் உலாவி நடுவம் (browsing centre) போக வாய்ப்பிருந்தால் போதும்.] ஆனாலும், தமிழ் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், ஊடாடுவோர், மின்வணிகத்திற்கு முனைவோர், மின் - அரசாளுமை பயன்படுத்துவோர், என்று பார்த்தால் 50000 தேறுவரா என்பது கேள்விக் குறியே!. குறைந்த செலவில் (அன்றி எந்தக் காசும் செலவழிக்காமலே) கணிக்குள் தமிழை உள்ளிடச் சொல்லிக் கொடுக்க இன்று ஆட்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு மண்டபம் அருகே நடத்திய வலைப்பதிவர் பட்டறை இன்னும் நினைவில் நிற்கிறது. கொஞ்சநாள் அங்கும் இங்கும் தொடர் முயற்சிகள் மற்ற ஊர்களில் நடந்தன. பின் முற்றிலும் நின்றுவிட்டது. இப்பொழுது புதுவைத் தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் மட்டும் சில ஊர்களில், நடத்துகிறார். பாராட்ட வேண்டும்; இதெல்லாம் பற்றுமோ?. மீண்டும் இயக்கமாய் மாறி, “தமிழ் உள்ளிடுவதைச்” சொல்லிக் கொடுக்கும் பட்டறைகள் நடத்த மாட்டோமோ? தமிழ் வலைத்தளங்கள் குறைந்தது ஓரிலக்கம் ஆக வேண்டாமோ? எல்லோரும் அவரவர் வேலைகளுக்குள் ஆட்பட்டுப் போய்விட்டோம். ஆர்வலர் இன்றி தமிழ் உள்ளடக்கங்கள் எழாது. எப்பொழுது நாம் திரளுவோம்?

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்)இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

2.1. உள்ளுரும நுட்பத்தின் (information technology) முழுப் பயனையும் தமிழ்க் குமுகாயம் துய்க்கவில்லை. இன்னும் கணி, இணையங்களின் பயன்பாடு மேற்தட்டு, நடுத்தட்டுக்காரருக்கு மட்டுமே கிடைக்கிறது. மடிக்கணி விலையோ யானை விலையாய் இருக்கிறது. பரிச் சொவ்வறைகள் (free softwares) எளிதாய்க் கிடைக்க வேண்டும். கணியைத் தமிழால் அணுக முடியும் என்பது பலருக்கு விளங்க வேண்டும். இன்னும் “மூட மந்திரமாய்க்” கணி காட்டிப் பணம் பறிக்கும் வேலை தொடர்கிறது. குறைந்த காசில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது இருக்கிறது. மின்னஞ்சல் கூடியிருந்தால், “courier" கொள்ளை கூடுமோ? இந்திய அஞ்சல் துறை படுத்து நெடுநாட்கள் ஆகிவிட்டன.

2.2. இப்பொழுது கைபேசிகள் பெருகியும், ”அவற்றின் வழி தமிழ்க் குறுஞ்செய்திகள் அனுப்ப ஏலாது” என்றே பலரும் அறிவுறுத்தப் படுகிறார்கள். கைபேசிச் சேவைக் குழுமங்களும் (cellphone service companies), இதைச் செயற்படுத்த முட்டாள்தனமாய் மறுக்கிறார்கள். தமிழ்ப் பயன்பாட்டை வலியூட்ட சில செயல்களை அவர்கள் செய்யவேண்டும். காசு செலவழிக்க வேண்டும். இருப்பதை வைத்தே மீன்பிடித்து, கீழ்த்தட்டு மக்களிடையே தேவை ஏற்படுத்தி அரைகுறை ஆங்கிலத்தைக் கற்க வைத்தால் பின்னால் ஆங்கிலவழி அதிகாரம் நீடிக்கும் என்றே நடைமுறைகள் இருக்கின்றன. எல்லாம் மடிக்குழைத் (matriculation) தந்திரம் தான். அகில இந்திய மாறுகடை (all India market) என்ற கானல் நீரைக் காட்டி, மாநில மொழிகளில் நடத்த வேண்டிய சேவைகளை எங்குமே ஒழிக்கிறார்கள். தமிழில் மின்னரட்டை செய்பவர்களும் குறைச்சலே. மின்னஞ்சல் செய்யத் தெரியாதவர்கள் மின்னரட்டை எப்படிச் செய்வார்கள்?

2.3. அனைத்திந்திய மாறுகடையைக் கட்டி, இன்றைய ஆளும் வருக்கத்தின் இரும்புப் பிடியை இறுக்குதற்காய், குமுகாயம் எங்கணும் ஒய்யாரமாய் ஆங்கிலம் பேசுபவர் தொகையைக் கூட்டும் வண்ணமே பல செயல்கள் நடக்கின்றன. நாமோ, பெரும் ஏமாளிகளாய் இருக்கிறோம். ”தமிழினத்தை ஒழிக்கத் தமிழை ஒழிக்க வேண்டும்; தமிழைப் பயனற்றது என்று ஆக்க வேண்டும்” என்ற குறிக்கோளே நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. எந்த அரசு அலுவம், தனியார் அலுவத்திற்குப் போனாலும், தமிழிற் பேசினால் சீந்துவார் இல்லை, ஆங்கிலத்தில் ஏதேனும் பரட்டினால் “yes sir yes sir three bags full" என்ற குழைவு உடனே கிடைக்கிறது. அப்புறம் தமிழிளையர் எதிர்காலத்தில் தமிழ் உள்ளடக்கங்களுக்கு வருவார்களோ?

2.4. மின்வணிகம்: பக்கத்தில் தெருமூலையில் இருக்கும் அண்ணாச்சி கடையில் இன்று கணியும், அச்சியும் (printer) இருக்கின்றன. ஆனால் ”என்ன வாங்கினோம்?” என்பதற்கான பெறுதிச் சீட்டு (receipt) ஆங்கிலத்திலேயே தருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் கணக்கீட்டுச் சொவ்வறையும் (accounting software) ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. இதன் விளைவாய் ஆங்கிலம் தெரிந்த பெண்/பையன் கல்லாவில் வேலைசெய்கிறாள்/ன். நாலாவது ஐந்தாவது படித்த பெண்/பையன் பண்டங்களை எடுத்து வைக்கிறாள்/ன். மீண்டும் ஒரு சாதிப் பாகுபாடு கணித் துணையோடு வேறு உருவத்தில் அமைகிறது. ஆங்கிலம் படித்தவன் பத்தாயிரக் கணக்கிலும், தமிழ் படித்தவன் ஆயிரக்கணக்கிலும் கூலி பெறுகிறான். ”வாங்கிய பொருளும், பெறுதியில் அச்சடித்திருப்பதும் விலை, எண்ணுதியில் (numerical) ஒன்றுதானா? ஏமாற்று நடந்திருக்கிறதா?” என்று ஆங்கிலம் தெரியாதோர் கவைத்துப் பார்க்க (check - சரிபார்க்க) முடியாது. ஒரு பெரிய ஏப்பம் தான். தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக் கடைகளில் தமிழில் பெறுதி கொடுக்கும் வழக்கம் ஒழிந்தே போனது. நம் கண்ணெதிரே தமிழ் வாணிகம் அழிகிறது. முன்பு மொத்த வாணிகத்தில் (wholesale) தமிழ் இல்லை; இப்போது சில்லறை (retail) வாணிகத்திலும் தமிழ் அழிகிறது. வெறும் வாயளவில் உசாவத் தமிங்கிலம் பயில்கிறார்கள்.

2.5. இது போலவே இருள்வாய் (railway) நிலையங்களில் தரும் பயணச்சீட்டு முற்றிலும் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் இருக்கிறது. தமிழைக் காணோம். எந்த இணையக் கடை தமிழில் இருக்கிறது (ஒன்றிரண்டு தவிர) சொல்லுங்கள்? இவற்றிலும் உள்ளீட்டுச் சிக்கல் ஈயென்று இளித்து நிற்கிறது.

2.6. கட்டணம் செலுத்தல்: அன்றைக்கு ஒருநாள் சென்னை மாநகரக் குடிநீர் வாரியம்
(metrowater), தமிழக மின்சார வாரியம் (TNEB) போன்றவற்றில் நுகர்வுக்குத் தக்கப் பணம் கட்டி வருகிறேன். பெறுதிச் சீட்டுகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. உண்மையில் தமிழ்க் குடிமக்களை சுற்றியிருக்கும் அரசு/ தனியார் நிர்வாகத்தினர் “தமிழைத் தொலை, தமிழைத் தொலை” என்று அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? பெரிய தனியார் நிறுவனமான குத்தகைப் பேருந்து உரிமையாளர் “KPN travels" ஆங்கிலத்தில் தான் பயணச் சீட்டுக் கொடுக்கின்றனர். சில அரசுப் பேருந்துக் குழுமங்களும் அவர்களின் நடத்துநர் கைகளில் உள்ள நகர் அச்சிகளின் (mobile printers) மூலம் ஆங்கிலத்தில் தான் பயணச்சீட்டு அச்சடித்துக் கொடுக்கிறார்கள். இதனால் நம் பேரிளம்பெண்கள் கூட ABCD ....என்று எழுத்துக் கூட்டிப் படிக்கத் தள்ளப்படுகிறார்கள். பின் ஏன் தங்கள் பேரப்பிள்ளைகளை இங்கிலிப்பீசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க கிழவிகள் முயல மாட்டார்கள்? நம்மைச் சுற்றிலும் ”ஆங்கிலம் படி, ஆங்கிலம் படி” என்று சூழல் வலியுறுத்தும் போது, அப்புறம் தமிழாவது ஒன்றாவது? நண்பரே! மனம் சலித்துப் போகிறது. ஒரு பெரும் பேயிடத்தில் தமிழினம் மாட்டிக் கிடக்கிறது. மாட்டியதை உணரக்கூட நமக்கு வக்கு இல்லை.

2.7. அரசாணைகள் தமிழில் வருகின்றன. ஆனால் அவை உப்புக்குச் சப்பாணிகளே. ஆங்கில
G.O தான் இடைப்பரட்டில் (interpretation) முன்னுரிமை பெறுகிறது. தமிழக அரசுச் செயலகத்திற்குள் போய்ப் பாருங்கள், உப்புக்குச் சப்பாணி வேலை எவ்வளவு நடக்கிறதென்று தெரியும். [வேதிப் பொறியியல் நிர்வாகம் செய்த காலத்தில் தமிழக அரசுச் செயலகத்துள் 7,8 ஆண்டுகளாவது மேலிருந்து கீழ்வரை புகுந்து வெளியே வந்திருக்கிறேன். ”தமிழ் முதல்” என்று ஆட்சியாளர் சொல்லுவதெல்லாம் படம் காட்டுதலே.] அரசு அங்கங்களிடம் தமிழில் சேவை பெற்றால், நடுவே இருக்கும் இடைத்தரகர்கள் (brokers) எல்லாம் ஒழிந்து போவார்கள். எனவே ஒருநாளும் தமிழ்ச்சேவை தமிழகத்திற் பெருகாது. அரசை ஒட்டி எத்தனை முகவர் (agents), இடைத்தரகர் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்கள்?

(ஞாய விலைக் கடைகளில் பண்டங்கள் வாங்குதற்கான குடும்ப அட்டை பெறுவதில் கூட ஏராளமாய் இடைத்தரகர், முகவர் இருக்கிறார்கள். எல்லாம் ஆங்கிலப் படிவம் தான். அந்த அலுவங்களுக்கு முன்னால் மரத்தடியில், காசைக் கொடுத்து ஆங்கிலப் படிவம் நிரப்பிக் கொள்ளும் மக்கள் எத்தனை பேர்? அரசின் சலுகைகளைப் பெற்றுத் தருவது ஓர் ”ஒருங்கிணைந்த வியாபாரம்”) நண்பரே! இங்கெல்லாம் கணிவழி தமிழ் நுழைந்தால் அப்புறம் அத்தனை பேரும் “காலி”. ”தமிழை உள்ளே விடாதே” என்பது தான் அரசு ஒட்டுண்ணிகளின் தாரக மந்திரம். கட்சி அரசியலும் இடைத்தரகர், ஒட்டுண்ணிகளிடம் தான் உள்ளது. அரசியல் மேடைகளில் ”தமிழ், தமிழ்” என்று நாயாய்க் கத்துவார்கள். அரசின் செயற்பாட்டுக்குள் ”தமிழை ஒதுக்கினால் தான்” இவர் எல்லோரும் பிழைக்க முடியும். இதில் இரண்டு பெருங்கட்சிகளும் ஒன்று போலத் தான். இந்தச் சூழ்க்குமம் அறியாத சாத்தாரக் குடிமகனுக்குப் புகலிடமே கிடையாது. அப்புறம் எங்கே தமிழில் உள்ளுரும நுட்பப் ”புரச்சி”? ஒட்டுண்ணிகள் இருக்கும் வரை தமிழைக் கணி வழி நுழைய விடவே மாட்டார்கள். அப்படி நுழைய அடிமுதல் நுனிவரை மாற்றம் வேண்டும். நம் அரசு நிர்வாகம் பெரிதும் புரையோடிப் போய் இருக்கிறது. எனவே இது நடக்காது.

2.8. இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்) பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். குறியேற்றச் சிக்கல் பெரும்பாலான செய்தி, இலக்கிய இதழ்களுக்கு உண்டு. வலை இதழ்களில் ஒருசிலவே ஒருங்குறியில் இருக்கின்றன. குறும்பதிவு தமிழில் இப்பொழுது செய்யமுடியும். ஆனால் அவ்வளவு பரவலாய்ப் பலருக்கும் தெரியவில்லை. வெப் 2.0 மிடையங்கள் பற்றி எனக்கும் தெரியாது. .

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

3.1. இவ்வளவு தொலைவு கணிமைக்குள் தமிழ் நுழைந்ததே தன்னார்வலர்களால் தான். ஈழத்தில் நடக்கும் இன அழிப்பால், 1983-2009 வரை 26 ஆண்டுகளில் ஈழத் தமிழர் குடும்பங்கள் உலகெங்கும் பிரிந்தன. தமிழ் மின்னஞ்சலும், மடலாடற் குழுமங்களும், வலைத்தளங்களும் இவர்களுக்குத் தேவைப்பட்டன. எனவே வளர்ந்தன. தமிழகத் தமிழர்களும், மற்றையோரும் சேர்ந்து கொண்டார்கள். குறியேற்றம், தரப்பாடு, சொவ்வறைகள் என ஒவ்வொன்றாய்ச் செய்யப்பட்டன. மொத்தத்தில் மாறுகடைகளே புதுக்குகளை உருவாக்குகின்றன. (markets create the products.) உண்மை சிலபொழுது சுடும். மற்ற தமிழர் அளவிற்கு ஆங்கிலம் அன்று அறியாத கரணியத்தால், தமிழே பெரிதும் தெரிந்த அடித்தட்டு ஈழத் தமிழ்க் கூட்டம் உலகிற் சிதறுண்டு போனதால் இந்தத் தேவை ஏற்பட்டது. [அவர்களிலும் ஆங்கிலத்தைக் காட்டி மேற்தட்டார் பம்மாத்து செய்தது முற்காலம்.] அந்தத் தேவைகளை நிறைவு செய்யும் முகமாய் தமிழ்க் கணிமைப் புதுக்குகள் ஏற்பட்டன. தமிழகத் தமிழரை ஆங்கில மாயையில் சிக்க வைப்பது 1970 களிலேயே தொடங்கி விட்டது. [அந்தச் சோகக் கதை நீளமானது.] ஆங்கிலத்தின் மூலம் எல்லாம் கட்டுப்படுத்த விழையும் அதிகார வருக்கம் இதுவரைத் தமிழ்க் கணிமைக்கு தமிழகத்தில் என்ன செய்தது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழ்க் கணிமையில் எங்குமே தமிழக அரசு நிர்வாகம் தலைமை நிலை எடுத்து முன்நடத்திப் போகவில்லை. தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதும், ஓடும் மாட்டைத் தடுத்து நிறுத்துவதும் தான் நடந்திருக்கிறது. “இதில் எனக்கு என்ன வருமானம்?” என்ற பார்க்கத் தொடங்கியபின், அப்புறம் தமிழ்க் கணிமையாவது ஒன்றாவது?

3.2. விக்கிப்பீடியா என்பது நல்ல பங்களிப்பே. ஆனால் அதைத் தற்பொழுது இரண்டு குழுவினர் வேறு விதமாய்ப் பார்க்கிறார்கள். முதற்குழுவினர் காலங் காலமாய் தமிழ்க் குமுகாயத்தில் அதிகாரம் ஓச்சியவர்கள். இப்பொழுது நல்ல தமிழில் அங்கு கட்டுரைகள் சேருவதைப் பார்த்து [”விக்கி நிருவாகத்தினர் தனித்தமிழ்த் தாலிபான்கள்; கிரந்த எழுந்தை அனுமதிக்க மறுக்கிறார்கள், அதைத் திருத்துகிறார்கள், இதைத் திருத்துகிறார்கள்” என்று] இல்லாததும், பொல்லாததுமாய் இவர்கள் புறங்கூறுவது ஒருபக்கம். இன்னொரு குழுவினர் கட்சியரசியல் பார்த்து, ”அவர்கள் அதைச் செய்கிறார்கள், இதைச் செய்கிறார்கள்” என்று கோவங் கொண்டு, ”யாரோடு வழக்குச் செய்கிறோம்” என்று புரிதல் இல்லாமல், வெறுமே உணர்ச்சிவயப் பட்டு விக்கிப் பீடியாவில் இருந்து விலகி நிற்கிறார்கள். ஒற்றுமைப் படாத இரண்டு போக்குமே தவறானவை. விக்கிப்பீடியா நிருவாகமும் சற்று நீக்குப் போக்கோடு,
எல்லோரையும் அணைத்து, முன் நகரவேண்டும். விக்கிப்பீடியாவின் பங்களிப்பைக் கூட்ட வேண்டும். அதற்கு மன மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

3.3. என் பார்வையில் விக்கிப்பீடியாவிற்கு உறுப்பினராய்ச் சேர்பவர் கூடவேண்டும். குறைந்தது ஆற்றுவமாய்ப் பங்களிக்க 500 பேராவது சேரவேண்டும். இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் ஓரிலக்கம் தலைப்புக்களில் கட்டுரைகள் அங்கு எழ வேண்டும். அதே போலத் தமிழ் விக்சனரியிலும் பங்களிப்பு கூட வேண்டும். பல்வேறு தமிழ் அகரமுதலிகளும் எந்தக் கட்டணமும் இல்லாமல் இணையத்தில் உசாத்துணையாய் அமையவேண்டும். இதற்குத் தமிழகப் பல்கலைக் கழகங்களும் உதவ வேண்டும். இணையத்தில் உள்ளோருக்கும், தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கும் நடுவில் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. அது மறைய வேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்ன வகையிலான தமிழ்ப் பயன்பாட்டு browsing விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

வாயால் கேட்கிறீர்கள்! சொல்லுதற்குக் காசா, பணமா? எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். குப்பைத் தொட்டிக்குத் தான் முடிவிற் போகக் கூடும். இருந்தாலும் சொல்லுகிறேன். :-)

4.1. ”ஏம்ப்பா, அந்த TANE/TACE முன்னீடு எங்கேப்பா? அதை எடுத்தாங்க” என்று கேட்டு வாங்கி, “முதல்வர் ஐயா, இந்த அரசாணையை உடனே போடணும் ஐயா” என்று வலியுறுத்துவேன்.

4.2. சொவ்வறைக் குழுமங்களையும் (Microsoft, Apple, Oracle, Adobe etc....) இணையவெளிக் குழுமங்களையும் (Google, Yahoo, Microsoft....etc.) கூப்பிட்டு, TANE/TACE குறியேற்றத்திற்கு ஆதரவு தரச்சொல்லிக் கேட்டுக் கொள்வேன். அப்படித் தரும் குழுமத்துக்குத் தான் அரசாங்கச் சொவ்வறை ஒழுகுகள் (orders) கிடைக்கும் என்றும் சொல்லுவேன். அதே போல திறவூற்றுச் சொவ்வறை (open source software) எழுதுபவர்களையும் TANE/TACE க்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.

4.3. தமிழ்நாட்டில் விற்கும் அத்தனை கணிகளும் “Tamil enabled Computer" - என்றால் தான் விற்க முடியும் என்று கட்டளை பிறப்பிக்கச் சொல்லுவேன். இதே போலத் தமிழ்நாட்டில் விற்கும், பயன்பாட்டில் இருக்கும் எந்தச் சொவ்வறையும் ”Tamil enabled" என்றால்தான் விற்க முடியும், செயற்பட முடியும் என்று ஆக்குவேன்.

4.4 தமிழக அரசு அங்கங்களும், தமிழகத்தில் இருக்கும் நடுவண் அரசு அங்கங்களும், குடிமக்களோடு ஊடாடும் செயற்பாடுகளும், படிவங்களும் 90 நாட்களுக்குள் “Tamil enabled" ஆக வேண்டும் என்று கட்டளையிடுவேன். நடுவண் அரசு அங்கங்கள் அதை மறுத்தால் உரிய வழக்குத் தொடருவேன்.

4.5 தமிழகத்தின் எல்லா இணைய உலாவி மையங்களில் உள்ள கணிகள் “Tamil enabled" ஆக வழி செய்ய வேண்டும் இல்லையேல் அவர்களின் உரிமம் பறிக்கப் படும் என்று ஆணையிடுவேன்.

4.6 தமிழகப் பல்கலைக் கழகங்களை தொடர்பு கொள்ளும் மாணவர்களும், ஆசிரியர்களும், கல்லூரிகளும் தமிழில் தொடர்பு கொண்டால் தான் மறுமொழி அளிக்க முடியும் என்று
அரசின் மூலம் பரிந்துரைப்பேன். அதே போல பட்ட மேற்படிப்பு ஏடுகளில் (thesis, project works etc.....) என்ன துறையாய் இருந்தாலும் குறைந்தது ஐந்து பக்கத்திற்குத் தமிழ்ச் சுருக்கம் இருந்தால் தான் உயர்பட்டங்கள் கிடைக்கும் என்று ஆணையிடச் சொல்லுவேன். இதே போல, எந்தப் பட்டமேற்படிப்பாளனும் , தான் செய்த புறத்திட்டு (project), அல்லது ஆய்வை (thesis) அரைமணி நேரம் தமிழ்படித்தோர் அவையில் சொல்லத் தெரியவேண்டும் என்று வலியுறுத்துவேன். தமிழில் உள்ளடக்கம் வேண்டுமானால் இவை நடக்க வேண்டும்.

4.7 தமிழ்மொழி படிக்காமல் எந்த உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடிக்க முடியாது என்று தமிழக அரசுக் கல்வித்துறை மூலம் சட்டங் கொண்டு வர ஒத்துழைப்பேன்.

4.8 தமிழ்நாட்டில் பள்ளியிறுதித் தேர்வுகளை இணையம் மூலமாய் ஒரே நேரத்தில் நடத்த கல்வித் துறைக்கு வேண்டிய உதவிகள் செய்வேன். எழுதி முடித்த பத்தே நாட்களுக்குள் முடிவுகள் தெரியும் படியும் வகை செய்வேன்.

4.9 தமிழறியாமல் தமிழ்நாட்டில் இயங்கமுடியாது என்ற நிலையைக் கொண்டுவர இணைய வழியும், தமிழ்க்கணிமை வழியும், பாடுபடுவேன்.

இப்பொழுது நனவுலகத்திற்கு வருவோமா? இதில் 10 விழுக்காடு நடந்தாலே மிகவும் பெரிது. ஏனென்றால் இன்றைய அதிகார வர்க்கமும், அரசியலாளர்களும், முன்னாற் சொன்ன ஒட்டுண்ணிகளும், அகில இந்திய மாறுகடையை வேண்டி நிற்கும் பெருமுதலாளிகளும், இதைச் செய்ய விடவே மாட்டார்கள். அவர்களின் இருப்பையே ஆட்டிவிடும் அல்லவா? 800
பவுண்டு கொரில்லாவைத் தங்களுக்குப் பக்கத்தில் யாராவது வைத்துக் கொள்வார்களோ?

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?


5.1. புதிதாய் வரும் பலரும் ஆர்வமாய் இருக்கிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் மொக்கைகளுக்குள்ளேயே 100க்கு 90 பேர் போய்ச் சேருகிறார்கள். சிற்பம் செய்யக்கூடிய உளியை வைத்து அம்மியும் ஆட்டுக்கல்லும் பொளிந்தால் எப்படி? ”மகிழுங்கள், கொண்டாடுங்கள், சத்தம் போடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை.”. ஆனால், நீங்கள் எழுதுவது 6 மாதங்கள் கழித்து யார் படித்தாலும் பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என்று எண்ணி எழுதுங்கள். கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் எழுதக் கூடாது என்று ஒருநாளும் நான் சொல்ல மாட்டேன். மற்றவற்றையும் எழுதுங்கள் என்றே சொல்லுகிறேன். நாளாவட்டத்தில் கவிதை, கதை, துணுக்கு, திரைப்படம், அரசியல் என்பது மொத்தப் பங்களிப்பில் மூன்றில் ஒருபங்கு இருந்தால் நல்லது. நாம் எதில் குறைந்திருக்கிறோமோ, அதை ஈடு செய்வோமே?

5.2. முகமூடி உரையாடல், தனிமாந்தத் தூற்றல்கள், சிண்டு முடிச்சு வேலைகள் - இவை
யாருக்கும் நல்லதில்லை. வலைப்பதிவை அரசியலாக்காதீர்கள். இதைச் சரி செய்யவே நேரமும் பொழுதும் போய்விடும். இதன் விளைவாய் ஒரு புது மிடையம் (medium) பயனில்லாது போய்விடும். பழைய அச்சிதழ், தொலைக்காட்சி ஓடைகளுக்கு உல்லாசமாய்ப் போய்விடும். மீண்டும் செக்குமாடு வேலை தான். இது தேவையா? நமக்குள் ஒரு தற்கட்டுப்பாடு வேண்டும்.

5.3. கொஞ்சம் தமிழ் - தமிழ், தமிழ் - ஆங்கிலம் அகரமுதலிகளை வாங்கி வைத்துக் கொண்டு உங்கள் சொற்குவையைக் கூட்டிக் கொள்ளுங்கள். வெறுமே 3000, 4000
தமிழ்ச்சொற்களை வைத்துக் கொண்டு, ஆங்காங்கு ஆங்கிலம் விரவி வலைப்பதிவில் தமிங்கிலம் பயிலாதீர்கள். உங்கள் சிந்தனை தடைப்பட்டுப் போகும். ஒருமுறை எழுதியதைத் திருப்பிப் படியுங்கள். கூடிய மட்டும் வாக்கியப் பிழைகள், சொற்பிழைகள், எழுத்துப் பிழைகள், ஒற்றுப்பிழைகளைக் குறையுங்கள். அலுவத்தில் ஓர் ஆங்கில மடல் எழுத எவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்ளுகிறீர்கள்? முடிந்தால் Wren and Martin வைத்தோ, இன்னொருவரை வைத்தோ, பிழைதிருத்தி ஒய்யார ஆங்கிலநடை தேடுகிறீர்கள் அல்லவா, அதில் 80 விழுக்காடு தமிழுக்குக் காட்டக் கூடாதா? “எனக்குத் தெரியாத தமிழா?” என்ற பெருமிதத்தில் எத்தனை கணக்கற்ற மொழிப் பிழைகளைச்செய்கிறோம்? இதைத்தானே நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம்? அவர்கள் இன்னும் கூடிய பிழைகளைச் செய்வார்கள். கொஞ்சங் கொஞ்சமாய் மூன்று நான்கு தலைமுறைகளில் தமிழ்நடை முற்றிலும் குலைந்து, எல்லாம் ஆங்கிலத்தில் வந்துசேரும். ஆங்கிலமும் சரியாய்த் தெரியாமல், தமிழையும் தொலைத்துப் தமிழ் இளையர் தடுமாறுவதை கண்முன்னே காண மிக வருத்தமாய் இருக்கிறது.’

5.4. ஏதொன்றையும் ஆவணப் படுத்துங்கள். தமிழ் விக்கிப்பீடியாவிற்குள் நுழையுங்கள். அங்கு உங்கள் பங்களிப்பைக் கூட்டுங்கள். 500, 1000 பேர் சேர்ந்தால் தான் கிடுகு மதுகை (critical mass) வந்து சேரும். அதனால், மடக்க வேகத்தில் (exponential speed) கட்டுரைகள் பெருகும். மின்னுலகில் தமிழ் உள்ளடக்கம் கூடும். இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் இன்றுள்ளதைப் போல் 100 மடங்கு கூடவேண்டும். அது உங்கள் கையில் உள்ளது. ஓரிலக்கம் வலைப்பதிவர்களாவது ஏற்படவேண்டும். அந்தப் பணியும் உங்கள் கையிற் தான் இருக்கிறது.

5.5. பின்னூட்டுக்களில் இடுகைக்குப் பொருந்தியதைக் கேளுங்கள். அரட்டைகளே அதிற் தொடர்ந்தால் அப்புறம் வெறும் வெள்ளோசைகளாய் (white noice) ஆகிப் போகும். எந்த அலைபரப்பிலும் வெள்ளோசை/உள்ளடக்க விகிதம் மிகக் குறைந்து இருக்கவேண்டும் என்பது மின்னணுவியலில் உள்ள அறிவுறுத்தல்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

6.1. தமிழ்மணத்தின் திரட்டிச் சேவையில்லையென்றால் இவ்வளவு வலைப்பதிவுகளையும், நண்பர்களையும் நான் அறிந்திருக்க மாட்டேன். இது ஒரு புது மிடையம். இன்னும் உருக்கொள்ள வேண்டும். என்னைப் போன்றோர் இன்னும் எழுத்திலேயே இருக்கிறோம்.
படங்கள், காணொளி போன்றவற்றை ஊடுறுத்திக் காட்டும் நுட்பம் என்னைப் போன்றோர் கைவரப் பெறவில்லை. புதியவர்கள் இந்த நுட்பத்தைக் கைவரப் பெற்றவர்கள் ஆகுக.

6.2. மற்ற மொழிகள் பற்றிய செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு, தமிழை மட்டுமே ஒருமுகமாய்ப் பார்க்கும் காலம் வந்திருக்கிறது. எதிர்காலத்தில் வலைப்பதிவுகள் 10 மடங்கு, 100 மடங்கு பெருகி 10000 வலைப்பதிவுகள் ஆகும் போது ஆற்றுவங்கள் கூடிப் போகும். அதைக் கையாள வலைத்திரட்டிகளின் கொண்மைத்திறம் (capacity) கூட வேண்டும். கிட்டத்தட்ட google போன்ற ஒரு தேடுபொறி இந்தத் திரட்டிக்குள் இருக்க வேண்டும். திரட்டியின் கட்டுமானம் ஒரு தேடுபொறியாய் மாறவும் செய்யலாம்.

6.3. இராம.கி. என்று கொடுத்தால், வலைப்பதிவுகளில் என்னைப் பற்றி எங்கு பேசியிருந்தாலும் அதைத் தேடியெடுத்துக் கொடுக்கும் நிலைக்கு திரட்டிகள் மாறவேண்டும்.

6.4. இனிமேலும் ஆர்வலர்களை மட்டுமே வைத்து திரட்டி நிர்வாகம் செய்யமுடியுமா என்று தெரியவில்லை. எனவே முழு நேர அலுவலாய், ஆட்களை வேலைக்கு வைக்கும் நிலைக்குத் தமிழ்மணம் வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். அப்பொழுது இத்தனை செயற்பாடுகளுக்கும் பண வருமானம் வேண்டும். செலவு நடைகளைப் பார்க்க வேண்டும். அதை நோக்கி நிருவாகத்தார் சிந்திக்க வேண்டும். எப்படிச் செய்வது என்பது பெருங்கேள்வி. google, yahoo போன்றவை எப்படிச் செய்கின்றன என்று ஆய்ந்து சிலவற்றைச் செய்துபார்க்கும் காலம் வந்துவிட்டது என்றே நான் எண்ணுகிறேன்.

6.5. திரட்டிகளும், வலைப்பதிவு மனைவழங்கிகளும் (blog hosters) இணைந்து செயலாற்றும் காலம் வந்திருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் தமிழ்மணத்தின் தனியாளுமையை விட்டுக் கொடுக்காதீர்கள். அப்புறம் எல்லாம் கரைந்து போகும்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 03, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 9

இதுவரை கடந்த 8 பகுதிகளில் நாம் பல்வேறு கட்டுக்களை(cases) உராய்ந்து பார்த்து, அறிந்து கொண்ட, உள்ளார்ந்த ஒத்திசைவோடு (internal consistency) கூடிய பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.

குறுந்தொலை வாய்ப்பாடு (இது வடபுலம், தென்புலம் இரண்டிற்கும் பொதுவானது):

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (= தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (= தண்டம்) = 1 கயிறு

நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):

500 பெருங்கோல் (= தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):

500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ

மேலே உள்ள வாய்ப்பாட்டில் கூப்பீட்டிற்கான தென்புல, வடபுல வேறுபாட்டை இந்தத் தொடர்கட்டுரையில் வரும் கட்டுகளைக் கணக்கிட்ட பிறகே (குறிப்பாக குமரி - வாரணாசித் தொலைவு, மணிபல்லவப் பயணக் கணக்கில் ஏற்பட்ட சிக்கல்), நானும் புரிந்து கொண்டேன். [இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கல் சிலம்பு வஞ்சிக்காண்டம் காட்சிக் காதையில் வரும் “ஒருநூற்று நாற்பதி யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று” என்ற 15-16 ஆம் வரிகள். இது தென்வடலாய் மேற்குத் மலைத் தொடர்ச்சியின் நீளத்தைக் குறிக்கிறதோ என்ற ஐயமும் உண்டு. அதை ஆய்ந்து பார்க்க வேண்டும்.]

அதே பொழுது, அடியார்க்கு நல்லார் உரையிற் சொல்லும் குமரி - பஃறுளி தொலைவைக் கணக்கிடுவதில், வடபுலக் காதமும் கூட இயற்தொலைவைக் காட்டவில்லை. அந்தக் கட்டில், இயற்தொலைவு அமைய வேண்டுமானால், 1 கூப்பீடு = 500 சிறுகோல் என்று கூடக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது கூட இன்றைய நிலையில் ஓர் ஊகம் தான். இப்படிக் கூடுகை (context) பார்த்துப் பொருள்கொள்ளும் கருதுகோளைச் சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன். அதாவது,

முதற்சங்க காலம்: [கி.மு.1000க்கும் முந்தியது]

1 கூப்பீடு = 500 சிறு கோல்.

இடைச்சங்க காலமும் அதற்குப் பின்னும் [கி.மு.1000-300. வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக் காலம்]

1 கூப்பீடு = 500 கோல் (இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கில் புகுந்து நிலைபெற்றிருக்கலாம்)

கடைச்சங்க காலம் [கி.மு.500-கி.பி.200]

1 கூப்பீடு = 500 பெருங்கோல் (கி.பி.200 வரையிலும் பயன்பாட்டில் இருந்து, பின் கொஞ்சங் கொஞ்சமாய் மாறிப் பல்லவர் ஆட்சியில் 1 கூப்பீடு = 500 கோல் என்ற வடபுல வாய்ப்பாட்டிற்கு தமிழகமும் ஓரோவழி மாறியிருக்கலாம். அதே பொழுது, 1 கூப்பீடு = 500 பெருங்கோல் என்பது முற்றிலும் வழக்கிழந்ததாய்த் தெரியவில்லை. இருவேறுபட்ட நடைமுறைகள் தமிழகத்தில் அருகருகே இருந்திருக்கலாம்.)

மேலே சொன்ன கருதுகோளை இன்னும் பல சான்றுகள் கொண்டு உறுதி செய்யவேண்டும். இப்படிச் சொல்ல இன்னொரு கரணியமும் உண்டு. மேலைக்கணக்கில், கூப்பீட்டிற்கு இணையான mile - ஐ அடுத்து, அதனினும் பெரிய நீட்டளவைகளைச் சொல்வதில்லை. ஆங்கிலக் கணக்கில்

1 Digit = 3/4 inch
2 Digits = 1 Thumb
12 Digits = 6 Thumb = 1 Span = 9 inches
2 Spans = 1 Cubit = 1 1/2 foot
2 Cubit = 1 Yard = 3 foot
220 Yards = 1 Furlong
1760 Yards = 8 Furlongs = 1 Mile = 5280 அடி

என்றே அமையும். இந்த அளவைகள் அப்படியே வியக்கத் தக்க அளவில் நம் பழந்தமிழ் நீட்டளவைகளுக்கு இணைகோடாய்க் [நினைவிருக்கட்டும், அவை இணை கோடுகள்; மதிப்பில் ஒன்றானவை அல்ல.] காட்சியளிக்கின்றன.

மேலையரின் digit-உம் நம் விரற்கிடையும் அடிப்படையில் ஒரே பொருளும், தொலைவில் சற்று வேறுபட்டும் காட்சியளிக்கின்றன. நம் விரற்கிடை 11/16 அங்குலம், அவர்களுடைய digit 12/16 அங்குலம். இந்த வேறுபாடு மற்ற அளவைகளையும் அந்தந்தப்படி மாற்றுகிறது. [பின்னால் Digit, Thumb போன்ற அளவைகள் ஆங்கில வாய்ப்பாட்டிற் புழங்காது தவிர்க்கப் பட்டு, inch என்பதே பெரிதும் புழங்கியிருக்கிறது. முடிவில் digit, thumb போன்றவை மறைந்தே போயின.]

நம்முடைய சாண், அவர்களுடைய span க்கு இணையானது, [இதிலும் சாண் என்னும் அளவு மாறி அடி - foot என்னும் சொல் நிலைத்து பின்னல் 12 inch - க்குச் சமமாய் மேலையர் கணக்கில் ஆனது.]

நம்முடைய முழம், அவர்களுடைய cubitக்கு இணையானது, [இந்த அளவை மேலையர் புழக்கத்தில் மறைந்தே போய், அடிக்கு அப்புறம் yard - என்பதே புழக்கத்தில் நிலைத்திருக்கிறது.]

நம்முடைய சிறுகோல், அவர்களுடைய yard -யைப் போல் இருக்கிறது, [yard "measure of length," O.E. gerd (Mercian), gierd (W.Saxon) "rod, stick, measure of length," from W.Gmc. *gazdijo, from P.Gmc. *gazdaz "stick, rod" (cf. O.S. gerda, O.Fris. ierde, Du. gard "rod;" O.H.G. garta, Ger. gerte "switch, twig," O.N. gaddr "spike, sting, nail"), from PIE *gherdh- "staff, pole" (cf. L. hasta "shaft, staff"). In O.E. it was originally a land measure of roughly 5 meters (a length later called rod, pole or perch). Modern measure of "three feet" is attested from 1377 (earlier rough equivalent was the ell of 45 inches, and the verge). In M.E., the word also was a euphemism for "penis" (cf. "Love's Labour's Lost," V.ii.676). Slang meaning "one hundred dollars" first attested 1926, Amer.Eng. Yardstick is 1816. The nautical yard-arm (1553) retains the original sense of "stick." In 19c. British naval custom, it was permissible to begin drinking when the sun was over the yard-arm.] கோல் என்னும் சொல்லோடு தொடர்புடைய கோடு என்ற சொல்லும் தமிழில் கிளை, கொம்பு, கம்புகளைக் குறிக்கும். இங்கே உள்ள மேலைச் சொற்களுக்கும் நம்முடைய கோட்டிற்கும் உள்ள பொருளிணை வியக்க வைக்கிறது.

நம்முடைய கூப்பீடு, தென்புல வாய்ப்பாட்டின் படி, அவர்களுடைய mile -க்கு ஒப்பானது. வடபுல வாய்ப்பாட்டின் படி கிட்டத்தட்ட 1/2 மைலுக்கு ஒப்பானது. [mile என்னும் ஆங்கிலச் சொல்லின் சொற்பிறப்பை இங்கு ஓர்ந்து பார்க்கலாம். O.E. mil, from W.Gmc. *milja, from L. mila "thousands," pl. of mille "a thousand" (neuter plural was mistaken in Gmc. as fem. sing.). Ancient Roman mile was 1,000 double paces (one step with each foot), for about 4,860 feet, but there were many local variants and a modern statute mile is about 400 feet longer. In Germany, Holland, and Scandinavia in the Middle Ages, the L. word was applied arbitrarily to the ancient Gmc. rasta, a measure of from 3.25 to 6 English miles. Mile-a-minute (adj.) is attested from 1957; milestone is from 1746.]

மேலே உள்ள விரற்கிடை, சாண், முழம், சிறுகோல், கூப்பீடு என்ற ஐந்தும் digit, span, cubit, yard, mile என்ற ஐந்தோடு, ஒன்றிற்கொன்று கருத்தளவில் இணையானவை. அதே பொழுது விரற்கிடை, digit என்பவை 1/16 அளவு வேறுபட்டதால், மற்றவையும் அதற்கிணங்க மதிப்பளவில் மாறிப் போயின.

நம்மிடம் இல்லாது மேலையரிடம் இருந்த ஓரளவை furlong என்பதாகும். இதற்கு இணையாய்ச் சால் என்று சொல்ல இயலும். அப்படிக் கொண்டால் 250 சிறுகோல் = 1 சால், 8 சால் = 1 கூப்பீடு என்றாகும். [சால் = வயலில் உழும் போது கலப்பை பறிக்கும் நேர்கோடு. சாலையின் வேர்ச்சொல்லும் சால் தான். ஆங்கிலத்தில் furlong என்பதற்கும் இதே பொருள்தான்: O.E. furlang "measure of distance" (roughly 220 yards), originally the length of a furrow in the common field of 10 acres, from furh "furrow + lang "long." But the "acre" of the common field being variously measured, the furlong was fixed 9c. on the stadium, one-eighth of a Roman mile.]

2000 சிறுகோல் = 1000 கோல் = 500 பெருங்கோல் = 8 சால் = 1 கூப்பீடு என்னும் தென்புல ஒப்புமையில், 1000 கோல் = 1 கூப்பீடு என்பதும் கூட mile என்ற இணைச்சொல்லிற்குள் இருக்கும் ஆயிரங் கோல் என்ற பழம்பொருளை உணர்த்தும். [2000 முழம் = 1000 சிறுகோல் = 500 கோல் = 1 கூப்பீடு என்ற வடபுல ஒப்புமையில் 1000 சிறுகோல் = 1 கூப்பீடு என்பது கிட்டத்தட்ட 1/2 மைலைக் குறிக்கும்.]

ஆங்கில அளவைகள் கிரேக்க, உரோம அளவைகளைப் பின் தொடர்ந்து ஏற்பட்டவை. கிரேக்க, உரோமர்கள் எகிப்தியரையோ, அல்லது சுமேரிய, பாபிலோனியர்களையோ பின்பற்றி இருக்கலாம். இது ஆய்வு செய்ய வேண்டிய புலனம். ஆனால், இத்தகைய இணைகள் இருப்பதைப் பார்த்தால், கூப்பீடு, காதம், யோசனை போன்றவற்றில் ஏற்பட்ட தொலைவு வேறுபாடு மிகவும் பின்னால் எழுந்ததோ என்று எண்ண வேண்டியிருக்கிறது,

நம்முடைய அளவைகளுக்கும் ஆங்கில அளவைகளுக்கும் உள்ள சில ஒக்குமைகளைத் தென்புல வாய்ப்பாட்டின் படி கீழே கொடுத்துள்ளேன். [இதே போல, வடபுல வாய்ப்பாட்டிற்கும் ஒக்குமைகளைப் பட்டியலிடலாம்.

60 தண்டம் = 7.5 கயிறு = 660 அடி = 1 பர்லாங்
480 தண்டம் = 60 கயிறு = 5280 அடி = 1 மைல்
4/11 சிறுகோல் = 1 அடிநம்முடைய சா
12/11 சிறுகோல் = 1. 09090909 சிறுகோல் = 1 கசம்
1 கூப்பீடு = 1 மைல் 1/3 பர்லாங் = 1.0416667 மைல்,
1 சிறுகோல் = 0.916666666667 கசம்,

அன்புடன்,
இராம.கி.

Saturday, August 01, 2009

திறையும் (tribute) தொடர்புச் சொற்களும்

அண்மையில் கா.சேது தமிழ் விக்சனரி குழுவில் attribute என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கேட்டிருந்தார். இதை மட்டும் பார்க்காமல், தொடர்புள்ள tribute, tributary, contribute, distribute, retribute போன்ற மற்ற சொற்களையும் பார்த்துச் சொல்லுவது பொருத்தமாய் இருக்கும்.

முதலில் tribute-யைப் பார்ப்போம்.

கடற்கரையில், முழங்கால் அளவு நீரில் காலை நனைத்து நிற்கும் போது, திரும்பத் திரும்ப காலில் வந்து மோதும் சிற்றலைகள் எவ்வளவு இன்பம் தருகின்றன? திரும்பத் திரும்ப அவை வருவதால், சிற்றலைகளுக்குத் திரை என்று பெயர். அந்த வினைக்குத் திரைத்தல் என்று பெயர். திரும்ப வருவதை மலையாளத்தில் ”திரிச்சு வரு” என்று சொல்லுவார்கள். இப்படித் திரைத்து வரும் பொருள் திரைப் பொருள் ஆகும்.

யாரோ ஒரு அரசன் இருக்கிறான், அவன் தன் தோள், வாள் வலிமையால் மக்களின் சேமத்தை உறுதி செய்கிறான். அவனுக்கு நன்றியாகவோ, அன்றி அவனுக்கு பயந்தோ ஒவ்வொரு குறிப்பிட்ட பருவத்திலும் அரிய தாரங்களை (தருவது தாரம் = பண்டம்) மக்கள் கொடுக்கிறார்கள். அதே போல ஒரு பேரரசன் சிற்றரசனை வெல்லுகிறான். ஆண்டிற்கு ஒருமுறை சிற்றரசன் பேரரசனுக்குக் கப்பம் கட்டுகிறான். திரும்பத் திரும்ப ஒவ்வொரு பருவத்திலும் (இங்கு பருவம் என்பது ஆண்டாய் இருக்கலாம்.) திரைத்து வந்து பொருள்களைப் பொதியாக்கிக் கொண்டுவந்து தருகிறான். அந்தப் பொதி, பேரரசனின் பெரும்பொதியோடு (=கஜானாவோடு) சேர்ந்து கொள்கிறது. இது ஒரு திரை பொதி. [கருப்பு கறுப்பாகியும் பொருள் மாறாதது போல], திரை பொதியில் பொதி புரிந்து கொள்ளப் பட்டு, மறைந்து நின்று, பொருள் வேறுபாட்டை அழுத்தியுரைக்க, ரகரம் றகரமாகித் திறை என்றும் சொல்லப் பெறும். It happens again and again in a periodic manner like waves.] திறை கட்டத் தவறிய மன்னன் மேல் பேரரசன் மீண்டும் படையெடுப்பான், தண்டனை வழங்குவான். திறை கூடும். பொதுமக்கள் வரி கட்டுவது கூட ஒருவகையில் பார்த்தால் திறை தான். திறைப்பொதி / திறை என்ற சொல் tribute -ற்கு இணையாய் ஏற்பட்டது இப்படித்தான்.

tribute:

c.1340, "tax paid to a ruler or master for security or protection," from L. tributum "tribute," lit. "a thing contributed or paid," noun use of tributus, neuter pp. of tribuere "to pay, assign, grant," also "allot among the tribes or to a tribe," from tribus (see tribe). Sense of "offering, gift, token" is first recorded 1585.

வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, செங்குட்டுவனின் செவ்வியை யாங்கணும் பெறாததால், ”திறை” சுமந்து வந்து நிற்கும் பகைவரைப் போல, அரசன் மலைவளம் காண வந்த இடத்தில், அளந்து கடையறியா அருங்கலம் சுமந்து வந்தனராம் சேரநாட்டுக் குன்றக் குரவர். இந்தக் காட்சியை சிலம்பின் வஞ்சிக் காண்டம் காட்சிக் காதையில் இளங்கோ விவரிப்பார். இங்கே சிலம்பிற் பயிலும் ”திறை” என்ற சொல்லாட்சி கப்பம் என்பதையே குறிக்கும். முன்னே சொன்னது போல், திறை, பொதி பொதியாய் இருக்கும். திறைப்பொதி - tribute என்ற சொல் விளங்குகிறதா? [தமிழுக்கும் மேலை மொழிகளுக்கும் தொடர்பில்லை என்போர் இதையெல்லாம் தேடிப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?] திறைப்பொதியைத் திறையென்றாலும் தமிழில் விளங்கும். அது ஒரு வரி போலவே கருதிக் கொள்ள முடியும். மக்களும், பகைவரும் பாதுகாப்பு வேண்டித் திறை கட்டுகிறார்கள். திறைத்தல் = to pay, assign, grant, allot, offer etc.

அடுத்த சொல்: tributary

இது பெயரடை (adjective) ஆகவும் பயன்படுகிறது. திருச்சிக்குச் சற்று முன்னால் பிரியும் கொள்ளிடம் ஒரு கிளையாறு, அதே போல நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல கிளையாறுகள் பிரிகின்றன. கிளைதல் என்பது ஒன்றில் இருந்து இன்னொன்று பிரிதல் ஆகும். ஓர் ஆற்றின் போக்கில் பிரிதல் மட்டுமே வழக்கம் என்பதில்லை. இரண்டு ஆறுகள் கூடி, ஒரே ஆறாக மாறுவதும் இயற்கையில் உண்டு. காட்டாக, கரூருக்கு அருகில் நொய்யலும் ஆன்பொருநையும் (அமராவதி) காவிரியிற் சேருகின்றன, (கூடுகின்றன, பொதிகின்றன, நிறைகின்றன). இப்படிச் சேரும் ஆற்றையும் tributary என்று ஆங்கிலத்திற் சொல்லுகிறார்கள். ஆண்டிற்கு ஒருமுறையோ, அல்லது ஒவ்வொரு பருவத்திலுமோ பெருகிவரும் நீரை பெரும் ஆற்றில் கொண்டு சேர்க்கிறதல்லவா? (பொதிகிறதல்லவா?) இப்படித் திறைந்து பொதியும் ஆற்றை ”திறைப்பொதி யாறு (tributary)” என்று நீட்டி முழக்கி ஆங்கிலமும் மேலை மொழிகளும் சொல்லும். தமிழிற் சுருக்கமாய்த் துணையாறு என்று சொல்லிப் பொருளைப் புரிந்து கொள்ளுகிறோம்.

tributary (adj)

1382, "paying tribute," from L. tributarius "liable to tax or tribute," from tributum (see tribute). The noun sense of "one who pays tribute" is recorded from 1432. Meaning "stream that flows into a larger body" is from 1822, from the adj., which is recorded from 1611 in this sense.I

திறைதல், பொதிதல் என்ற இருவினைகளும் சேர்ந்து எப்பொழுதும் கூட்டுவினையாகவே தமிழிற் தொடர்ந்து புழங்குவதில்லை. ஓரோவழி, ”திறைதல் ஒவ்வொரு பருவத்திலும் நடப்பது தானே?” என்று உள்ளார்ந்து புரிவதால், அதைத் தொகுத்து (தொகையாக்கி) வெறுமே பொதிதலை (=சேர்தல், நிறைதல்) மட்டும் அழுத்திக் கூறுவதோ, இதே போலப் பொதிதலைப் புரிந்து, அதைத் தொக்கி, திறைதலை மட்டும் முன்சொல்லுவதோ நம்மிடம் உண்டு. இடம், பொருள், ஏவல் பார்த்துப் புரிந்து கொள்ளுவோம்.

அதற்கு எடுத்துக் காட்டுத்தான் attribute என்னும் சொல். இந்த இடத்தில், இன்ன சூழலில், இப்படிக் குணங்கள், நிறைகளை இந்தப் பொருள் காட்டும் என்று உணர்த்தும் சொல் attribute ஆகும். அதாவது இந்தப் பொருளோடு இந்த நிறைகளைப் பொருத்துகிறோம்/பொதிகிறோம். திரும்பத் திரும்ப, இந்தச் சூழலில், இந்த நிறைகளைத்தான் (பொதிவுகளைத் தான்) இந்தப் பொருள் காட்டும் என்பதால் ”நிறை” என்ற சொல்லே attribute - ற்கு இணையாய்ச் சுருக்கமாய்ச் சொல்லப்படும். அட்டுதல்>அடுதல்>அதிதல் என்பது தமிழில் ஒட்டுதல், சேர்த்தல், கூட்டுதல் என்ற பொருளைக் காட்டும். to add என்று ஆங்கிலத்தில் கூறுவதும் அட்டுதல் என்னும் தமிழ் வினைக்கு இணையானது. இற்றைத் தமிழில் இது புழங்காவிட்டாலும், தெலுங்கில் இன்றும் புழங்குகிறது. நாம் கூட்டுதல் என்றே சொல்லிப் பழகுகிறோம். அட்டுப்பொதி (attribute) என்பது தான் ஆங்கில முறைப்படி அமையும் சொல். இருந்தாலும் நிறைகள் என்று சொல்லி அண்மைக்காலத் தமிழில் பயன்படுத்தியதால் அதே இருந்து போகலாம். குணம் = property. நிறை = attribute

attribute:

1398, from L. attributus, pp. of attribuere "assign to," from ad- "to" + tribuere "assign, give, bestow." The noun (c.1400) is from L. திரைத்தல் tributum "anything attributed," neut. of attributus.

அடுத்த சொல் contribute. ஒரு கூட்டத்தின் பொதுவான பணி இருக்கிறது. அதற்கு ஆகும் செலவை கூட்டத்தினரே கூடி ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்தப் பொதுப்பணி தங்களுக்குத் தரும் நலனை முன்னிட்டு, எல்லோரும் கூடிக் ”கூட்டம்” என்னும் குழுமத்திற்கு (it is a conceptual entity, different from the individuals) திறையைப் பொதிவது கூட்டுத் திறைப்பொதி ஆகும். இங்கு பொதிதல் என்பது அளித்தல் தான். பங்களித்தல் என்பது எப்படி to participate என்பதைக் குறிக்கிறதோ, அதே போல கூட்டுத் திறைதல்/ கூட்டுப் பொதிதல் to contribute என்பதைக் குறிக்கிறது. பலரும் பூசி மெழுகினாற் போல பங்களிப்பு என்ற சொல்லையே contribution க்கு இணையாய்ப் புழங்குவார்கள். என்னைக் கேட்டால் அதைத் தவிர்த்துக் கூட்டுப் பொதி என்றே சொல்லலாம்.

contribute

1387, from L. contributionem, from contribuere, from com- "together" + tribuere "to allot, pay" (see tribute). Used in Eng. in fig. sense of "crushed in spirit by a sense of sin."

அடுத்த சொல் distribute.

இது ஒரு குழுமத்திற் கூடிச் சேர்ந்த திறைப்பொதியை எப்படி மீண்டும் பிரித்து வெவ்வேறு செலவினங்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்பதைக் குறிக்கும் சொல். தமிழ்மொழி ஒட்டுநிலை மொழியானதால், கூட்டுச் சொற்களை அமைக்குமுன், எது முன்னொட்டு எது முழுவினை என்பதில் ஆழ்ந்த கவனம் கொள்ள வேண்டும். பலரும் இதைப் பார்க்காமல், ஆங்கிலத்தை அப்படியே ஈயடிச்சான் படி எடுப்பது போல், இயந்திரத் தனமாக முன்னொட்டுக்களைச் சேர்ப்பார்கள்.

[காட்டாக, post modernism என்பதை இப்படித்தான் இயந்திரத்தனமாகப் ”பின் நவீனத்துவம்” என்று மொழிபெயர்த்து, இற்றை எழுத்துலக வாதிகள் ஆலம் விழுதாய் அதை எண்ணிப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ”post modernism பின் நவீனத்துவம் என்றால் முன் நவீனத்துவம் என்ற ஒன்று உண்டா? அதன் ஆங்கிலச்சொல் என்ன? முன்னும், பின்னும் front, back யைக் குறிக்கிறதா?” என்ற கேள்விகள் நம்முன் எழுவது இயற்கை. modern என்பது நிலையானது அல்ல. நேற்றைக்கு முந்தாநேற்று modern. இன்றைக்கு நேற்று modern.
முந்தா நேற்றோ இன்றைக்குப் பழமையாகும்.

எனவே modern என்பதை முன்வருதல் என்ற கருத்தை வைத்தே தமிழிற் சொல்ல முடியும். நிகழ்வுகள், கருத்துக்கள், சிந்தனைகள், பார்வைகள் என்பவை முகிழ்த்துக் கொண்டே இருக்கின்றன. முகிழ்த்தல் என்பது முன்வருவது தான். முன்வரும் கரணியத்தால் முகம் என்ற சொல் ஏற்பட்டது. முகுத்தல் என்பதும் அதே பொருள் தான். மகர நகரப்போலியில் முகிழ்>முகழ், நுகழ் என்றும் திரியும். பின் நுகழ்தல்>நிகழ்தல் என்று ஆகும். நிகழும் காலம் modern age தானே? இதே போல முகம்> நுகம் என்று திரிந்து வண்டி, கலப்பை போன்றவற்றின் முன்னால் இருப்பதை உணர்த்தும். மேலும் உள்ள திரிவில் நுகம்>நுவம்>நவம் என்பதும் முன்வந்த நிலையைக் குறிக்கும். முகிழ் என்பதில் இருந்து முன்வந்த மேடு முகடு என்றும் சொல்லப்படும். முகட்டிற்கும் modern என்பதற்கும் உள்ள உறவு ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டியது. முகிழ்வு, நிகழ்வு, முகடு, நவம் என எல்லாமே முன்வந்ததைக் குறிப்பன. நவம் என்ற சொல்லை வடமொழி ஈறு கொண்டு நவீனம் என்று ஆக்கி, modern என்பதைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். வடமொழி ஈற்றைத் தவிர்ப்போர், ”முகிழ்வுக்கு அப்புறம், நிகழ்வுக்கு அப்புறம், முகட்டிற்கு அப்புறம், நவத்திற்கு அப்புறம்” என்ற கருத்தைப் பயன்படுத்தி, post modernism க்கு இணையாய்,. முகிழ்ப்புறவியம், நிகழ்ப்புறவியம், முகட்டுப்புறவியம், நவப்புறவியம் என்பவற்றில் ஏதேனும் ஒன்றை உகந்தாற்போல் சொல்லலாம். முகிழ், நிகழ், முகடு, நவம் போன்றவை முன்னொட்டாய் இருப்பதும் புறத்தல் என்பது முழுவினையாய் இருப்பதும் இங்கு முகன்மையானது. புறவியம் என்பது அப்பால் உள்ள நிலையைக் குறிக்கும். நவ காலத்திற்கும் புறத்தில் இருப்பது நவப் புறவியம். நவப்புறம் என்பது நவத்திற்கும் புறமான காலத்தைக் குறிக்கிறது. அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்ற பழைய தமிழ்ச் சொற்களையும் இதையொட்டி எண்ணிப் பார்க்கலாம். ]

ஒட்டுநிலை மொழியான தமிழில் இரண்டு வினைச்சொற்கள் அடுத்தடுத்து வந்தால் முன்னால் விளையும் வினை முன்னொட்டாய்த் திரிந்தும், பின்னால் விலையும் வினை முழுவினையாயும் அமைவதே சரியாய் இருக்கும். அதன் படி இங்கு பொதிதல் (சேர்தல்) என்பது முன்னொட்டாய் மாறும். பிரிதல் என்பது முழுவினையாய் நிற்கும். பொதிப் பிரிதல் = to distribute என்று பொருள் கொள்ளும். திறை என்ற முன்னொட்டை இங்கு தொகுப்பதால் எந்தக் குறையும் ஏற்படாது..

1382, from L. distributionem, from distribuere "deal out in portions," from dis- "individually" + tribuere "assign, allot."

அடுத்த சொல் retribute என்பதாகும். மீளவும் திறை செலுத்துவதைக் குறிக்கும். மீட்பொதிதல் = to retribute

retribute:

1382, "repayment," from L. retributionem (nom. retributio) "recompense, repayment," from retributus, pp. of retribuere "hand back, repay," from re- "back" + tribuere "to assign, allot" (see tribute). Sense of "evil given for evil done" is from day of retribution (1526) in Christian theology, the time of divine reward or punishment/

அன்புடன்,
இராம.கி.