Wednesday, September 27, 2006

மெய்யுணர்தல்

என்னைத் தூக்கி அந்த நீண்ட தடுக்கில் (stretcher) வைத்து, நகர்த்தி மின்னெழுவைக்குக் (lift) கொண்டு போன போதே முகம் மேல் நோக்கிப் பார்த்தவாறே இருந்தேன்.

"இந்தாய்யா, உன்னையே சரணாகுதின்னு அடைஞ்சு ரொம்ப நாளாச்சு; எல்லாத்தையும் நீ பார்த்துக்குவேன்னு தெரியும். நல்லா முடிச்சுக் கொண்டாந்து சேரு. சேரு என்ன சேப்பே."

அப்புறம் மேலே நாலாவது மாடியில் பண்டுவ அரங்கிற்குள் (operation theatre) கொண்டு போகு முன்னால் ஓரமாய் பத்தியில் (verandah) நகர்தடுக்கை (moving stretcher) சார்த்தி வைத்து ஒரு மார்வின் (morphin) ஊசி போட்டார்கள். அதற்குள் ஏதோ ஒரு அவக்கர கட்டாம் (emergency case); அவக்கு, அவக்கு என்று இன்னொருவரை நகர்த்திக் கொண்டு வந்து என்னைத் தள்ளிவைத்து, அவரை உள்ளே கொண்டு போய் விட்டார்கள். அந்தப் பண்டுவம் (operation) முடிய 2 1/2 - 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அப்புறம் மருத்துவர்கள் (doctors), பண்டுவர்கள் (surgeans), செவிலியர்கள் (nurses) ஆகியோர் சாப்பிட்டு ஓய்வெடுத்து, என்னை உள்ளே கொண்டு போன போது பகல் 1 மணி ஆகியிருக்கிறதாம்.

இதற்கிடையில் சுணக்கம் (delay) கருதி இரண்டாவது மார்வின் ஊசியை எப்போதோ கொடுத்திருக்கிறார்கள். நான் சட்டென்று தூங்கிப் போனேன். எப்போது பண்டுவம் தொடங்கினார்கள், எப்படி மயக்கம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு ஐந்து மணி நேரம் கழித்துப் பண்டுவம் முடிந்திருக்கிறது. அப்புறம் என்னை ஈர்க் கவனிப்பு அறைக்குக் (intensive care unit; ஈர்த்த கவனிப்பு - ஈடுபாடு மிகுந்த கவனிப்பு) கொண்டு போயிருக்கிறார்கள்.

முழிப்பு வந்த கதையை அல்லவா சொல்ல வேண்டும்?

திடீரென்று மூடிக் கிடந்த இமைக்கும் வெளியே மங்கலான வெளிச்சம் இருப்பது திரைக்கு நடுவில் கசிவது போல் தெரிந்தது. இமைகளைத் திறக்க முயல்கிறேன். அழிச்சாட்டியம் பண்ணுகிறது.

"ஊகும்", ஒன்றும் நடக்கவில்லை.

"சரி, வலது கை விரல்களை மூடி வத்திருக்கிறேனே, அவற்றைத் திறக்கலாம்" என்று பார்க்கிறேன். வெளிமனத்தில் இருந்து கட்டளை போய் திறக்கச் சொல்லுவதை ஆழ்மனத்தின் வழி உணருகிறேன்.

"ஊகும்", செயன்மை ஒருங்கிழந்து கிடப்பதை உணர முடிகிறது.

என் மன வலிமை எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்து, அந்த விரல்களை விரியச் செய்வதில் ஒன்று படுத்திப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் ஓர் ஒருங்கின்மை (in-co-ordination).

இப்பொழுது தலையை அசைக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். தலை சிறிது சிறிதாக மேலும் கீழும் அசைகிறது. என்னால் அசைக்க முடிகிறது என்பதே பெரிய நிறைவாயிற்று.

அடுத்துப் பக்கவாட்டில் அசைப்பு; அதிலும் கெலிப்பு.

அடுத்தடுத்து, தலை மேலும், கீழுமாய், இடதும், வலதுமாய் அசைக்கத் தொடங்கினேன். என்னால் செய்யமுடியும் என்று தோன்றியது.

இப்பொழுது மீண்டும் வலது கைவிரல்களின் மேல் எண்ணவோட்டத்தைச் செறியவைத்து விரிக்கப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து விட்டன.

இமைகள் இன்னும் திறந்தன.

இத்தனையையும் நான் செய்வதை அங்கு இருந்து ஒரு செவிலி பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். கொஞ்சம் வாய்விட்டுச் சிரிக்கவும் செய்திருக்கிறார்.

ஓரிரு நுணுத்தங்கள் போய், தொண்டையைக் கணைத்து, "இப்பொழுது எத்தனை மணி?" என்றேன். நுணுக்கமாய் என் விளையாட்டைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த செவிலி "இராத்திரி பத்தே முக்கால்; அது என்னய்யா, அவ்வளவு அசைப்பும் ஆட்டமும்; எல்லோருக்கும் நடப்பது தானே! கொஞ்ச நேரத்தில் தானாய் விழிக்கத்தானே செய்யணும். உங்களுக்காக கீழே யார் வந்திருக்காங்க?"

"என் தம்பி"

யாரோ ஆளை அனுப்பி அவனைக் கூட்டிவந்தார். அவன் அருகே வந்து செய்கையாலே "நலமாய் இருக்கிறீர்களா?" என்றான்.

"எத்தனை மணிக்கு வந்தே?"

"எட்டு மணிக்கே வந்துவிட்டேன். மற்றவர்களெல்லாம் ஒன்பது மணிக்குத் தான் போனார்கள்"

அப்புறம் அவனை அங்கிருந்து நகரச் சொல்லி விட்டார்கள். நான் மீண்டும் அயரத் தொடங்கினேன்.

"இந்த உடம்பு என்ற ஒன்று என்னுடைய மனத்தின் கட்டையும் மீறி நிற்கும்" என்று அறிவது கொஞ்சம் திகைக்க வைக்கும் உணர்வு.

இந்த உடம்பு என்பதை நாம் உணருகின்ற நிலை அரிதிலும் அரிதான ஒரு பட்டறிவு.

என் கைவிரல்களை விரிப்பதற்கு விடாது முயன்றேன் பாருங்கள், அப்பொழுது தான் மெய் உணர்ந்தேன். (மெய் = உடம்பு; அது உண்மையும் கூட). அதைச் சொற்களால் விவரிக்க முடியாது.

இதற்கு முன்னால் என்றைக்கு என் உடம்பை உணர்ந்திருக்கிறேன், என்று எண்ணிப் பார்க்கிறேன்; ஒன்று கூட நினைவிற்கு வரவில்லை.

மெய் இருக்கிறது என்று அறிவது வேறு; உணருவது என்பது வேறு. திருமூலர் தெரியாமல் சொல்லவில்லை.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே

உடம்பினை முன்னம் அழுக்கு என்று இருந்தேன்;
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!"

- திருமந்திரம் 717, 718 ம் பாடல்கள்.

"அய்யா, பெருமாளே, எனக்குப் புரியவச்சே பாரு, இனி உடம்பை ஓம்புவேன்."

அன்புடன்,
இராம.கி.

Monday, September 18, 2006

தமிங்கிலம் என்னும் ஒரு நோய்

கீழே வருவது என் நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடற்குழுவில் "புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை" என்ற மடலுக்கு அளித்த பின்னூட்டு; அவருடைய மடலையும் என் மறுமொழியையும் இங்கே உங்கள் வாசிப்பிற்குக் கொடுக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------------------------------
நண்பர் ராமகி
தமிழகத்தில் தொழில் நுட்ப, அறிவியல் கருத்தரங்கங்களில் எப்படி ஆங்கிலத்தில் தான் உரையாற்றுகிறார்கள், தமிழில் அல்ல,
என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பொதுவாக தமிழ் மொழி பேசுபவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டினாலும் மற்ற இந்திய மொழிபேசுபவர்களிடமும் உள்ள குறைபாடுதான் இது ஒரு மொழியின் குறைபாடா அல்லது மொழிபேசுபவரின் குறைபாடா? தமிழ் மொழி காப்பாளர்கள் இம்மாதிரி போக்குக்கு பதில் அளிப்பார்களா? பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)
கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்

பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன. நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான
விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள்
இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும், பாமரர்களும் கூட) ஏற்று வருகிறார்கள்.

ஏனெனில் ஒரு மொழி எதற்காக உள்ளது என்பதை ஆராயவேண்டும்? அதாவது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும், பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்

பேராசிரியர் குழந்தைசாமி படியகத்திற்கு அருகே சென்று

"உள்ளுரும நுட்பியற் செயலாளருடன்,
உள்ளுருமச் செயலர்,
படியகத்தின் முன்னால்,
தொடக்கச் செற்றம்,
பொது அரங்கு,
நுட்பியச் செற்றம்,
முடிவுத் தொகுப்பு"

என்ற சொற்றொடர்களை பயன்படுத்தி உரையாற்றியிருந்தாரானால், நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?

லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்
--------------------------------------------------------------------------
நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது. எல்லோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள். அதே மாதிரி "ஊசிவழியாகக் குருதிக் குழாய்களில் மூன்று சின்னஞ்சிறிய குழாய்களைப்"
என்று சுற்றி வளைத்து சொல்லாமல் மூணு Sடெண்ட் போட்டாங்க" என்று தான் இயல்பாக சுருக்கத் தமிழில் சொல்லி வருகிறார்கள்.

இந்த பிரச்சனை தமிழ் மற்றும் இதர இந்திய மொழியினரையும் பாதித்துவருகிறது. ஆகவே நாம் நம்மவர்களை மட்டும்
குறை சொல்லி மாரடிக்க, தலையில் குட்டுபோட வேண்டாம். இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே
பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில்
நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்?

இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா?இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்தி வருகிறது. தங்களது கருத்தென்னவோ?

இண்டி ராம்
-------------------------------------------------------------------------------
அன்பிற்குரிய இண்டிராம்,

மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?

இன்றைய அவல நிலையை யாரும் மறுக்கவில்லை. எந்தவொரு திருத்தமும் செய்யாது சும்மா கிடந்தால், தமிழ் என்பது மெல்ல இனிச் சாகும் என்று நான் உணர்ந்தவன் தான். பல்வேறு தமிழர்களும் உணர்கிறார்கள். எப்பாடு பட்டாவது தமிங்கிலத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் முயலுகிறார்கள். அப்படி முனைப்புடன் செயற்படும் சிலருக்கு நான் ஒரு வினையூக்கி; அவ்வளவுதான்.

இன்றைக்கு 100க்கு 50 விழுக்காடு ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் ஒருவர், இது போன்ற முயற்சிகளால் ஒரு சில காலத்தில் 100க்கு 60 அல்லது 70 விழுக்காடு தமிழ் பேசமாட்டாரா என்ற விழைவில் தான் இதையெல்லாம் நல்ல தமிழில் எழுத விழைகிறேன். உங்களுடைய கருத்துக்களுக்குப் போகுமுன்னால், முந்தா நேற்று, நண்பர் ஒருவரின் வலைப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டை இங்கு தருகிறேன். அவர் பெயர் அண்ணா கண்ணன். நல்ல தமிழ் அறிந்த, ஆற்றலுள்ள இதழாசிரியர். தற்போது sify.com வலையிதழின் ஆசிரியர். அவருடைய வலைப்பதிவில் டெரகோட்டா படைவீட்டம்மன் என்று எழுதியிருந்தார். என் பின்னூட்டு:
----------------------------------------------
"என்ன நண்பரே?

நீங்களும் டெர்ரா கோட்டா என்று எழுத வேண்டும்? சுடுமண் மொம்மை, அல்லது சிலை அல்லது திருமேனி என்று எழுதலாமே? "சுடுமண் சிலையாய்ப் படைவீட்டம்மன்" என்று எழுதலாமே? ஒவ்வொரு சொல்லாய் இப்படித் தமிழில் நாம் இழக்க வேண்டுமா? நீங்கள் என்றில்லை, பலரும் சுடுமண் என்று எழுதுவதைத் தவிர்ப்பதைத் தாளிகைத் துறையில் கவனிக்கிறேன்.

1722, from It. terra cotta, lit. "cooked earth," from terra "earth" (see terrain) + cotta "baked," from L. cocta, fem. pp. of coquere (see cook). As a color name for brownish-red,
attested from 1882."

அன்புடன்,
இராம.கி.
----------------------------------------------------
இப்படிச் சுடுமண் பொம்மை என்ற எல்லோரும் அறிந்த சொல்லைக் கூடச் சென்னை போன்ற பெருநகர்களில் பலதரப் பட்ட மக்களும் புழங்காதிருந்தால் எப்படி? என்னைப் போன்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டுவது தப்பா?

தமிழகத்தில் அறிவியல், நுட்பியல் கருத்தரங்குகளில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்கள் என்று தான் சொன்னேன். (நீங்களே பாருங்கள், நுட்பியல் என்று சுருக்கமாய்ச் சொல்லுதற்கு மாறாக தொழில் நுட்பம் என்ற நீண்ட சொல்லை இன்னும் பழமை மாறாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு எப்படித் தமிழ்நடை வளரும்? சொற்சுருக்கமும், துல்லியமும் கூடாமல் எப்படி அறிவியலும் நுட்பியலும் வளரும்? இது ஒரு இயக்கம், அய்யா! மீண்டும், மீண்டும் நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.) அதே பொழுது ஒருசிலர் மிகுந்த முயற்சி எடுத்துத் தங்களால் இயன்ற அளவில் மேலே சொன்னது போல் 70%, 80% தமிழில் உரைகளைக் கொடுத்துத்தான் வருகிறார்கள். அவர்களைப் போன்று மற்றோரும் முன்வர வேண்டும்.

இது போன்ற கலப்புத் தமிழில் உரையாடுவதற்குக் காரணம் பெரும்பாலும் (95%) பேசுவோரின் சோம்பற் தனம் தான். இவர்கள் தங்களின் தமிழ்ச் சொற்குவையைக் கூட்டிக் கொள்வதில்லை. ஆங்கிலத்தில் உள்ளது போல் துல்லியமாய்ப் பேசத் தமிழ்ச் சொற்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களின் உரை, கூர்மைப் பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் இல்லை. ஏன், தமிழ் அகரமுதலிகளை அவ்வப்போது புரட்டி, புதிய சொற்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது கூட இல்லை.

தமிழ் மொழிக் காப்பாளர்கள் என்று யாருமே தனியாக இல்லை. நீங்களும், நானும், நம்மைப் போன்றோரும் தான் தமிழ்மொழியைப் பேண வேண்டியவர்கள்; நாம் நம் பொறுப்புகளில் இருந்து வழுவுகிறோம், அவ்வளவுதான். பெற்றோரை அகவை கூடிய காலத்தில் தூக்கி எறிவது போல, நாம் தமிழ்ப் புழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுகிறோம்.

"பல மொழிகள் பேசுபவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்)கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை தங்களது வெளிப்பாடுகளில் குறைவாகப் பயன்படுத்திவருவதை அவதானிக்கலாம்"

என்று எழுதியிருந்தீர்கள். இவற்றிற்குச் சோம்பல், முட்டாள்தனம், உலகமயமாக்கல் என்னும் சோதியில் கலப்பதற்காக ஒடிச் சேரும் அடிமைத்தனம், நம்முடைய பெருமிதத்தை உணராமை, எனப் பல காரணங்களை என்னால் கூற முடியும். தமிழை இந்தக் காலத்திலும் காப்பாற்றி விடுவோம் என்று தான் குறியேற்றம் போன்ற செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழுக்குச் சாவு மணி அடிக்க வேண்டுமானால், நாளைக்கு முதல்வர் கலைஞர் ஓர் அரசாணை கொண்டு வந்து, "இனிமேல் தமிழை எல்லோரும் உரோமன் எழுத்துக்களில் தான் எழுதவேண்டும்" என்று சொன்னால் போதும், எல்லாமே "ஓ கயா". நாமெல்லோரும் உலகமயமாக்கலில் ஒன்றிவிடுவோம். இது தான் நமக்குத் தேவையா? தமிழர் என்று ஓரினத்தார் இருந்தார்கள் என்று நூறாண்டுகளுக்கு அப்புறம் சொல்லுவார்கள். செல்டிக் என்ற இனத்தார் அழிந்தபடி, ஐரிஷ் என்று இனத்தார் இன்று அழிந்து கொண்டிருப்பது போல; நான் சொல்லிக் கொண்டே போகலாம். அய்யா, இது அடையாளச் சிக்கல்.

"பழைய மொழிகளெல்லாம் வெறும் அடிப்படை உணர்வு, கருத்து, சிந்தனை வெளிப்பாடுகளுக்குத்தான் அம்மொழி பேசுபவர்களால் பயன் படுத்தப்படுகின்றன"

என்று எழுதினீர்கள். அது தவறு. நான் பார்த்தவரை தமிங்கிலம் பழகியவர்கள் நாவில், முயற்சி ஏதும் இல்லை என்றால், அன்றாடப் பேச்சில் கூட ஆங்கிலம் கூடிக் கொண்டு தான் வருகிறது. அந்த வீட்டினர் தோற்றத்தால் தமிழராய் இருந்து சிந்தனையால் ஆங்கிலராயோ, அல்லது கலப்பராகவோ மாறிப் போகின்றனர். அவர்களின் அன்றாடச் சொற்களும் ஆங்கிலமாய் ஆகிப் பண்ணித் தமிழாய் ஆகிவிடுகிறது. இவ்வளவு ஏன், மேலே சொன்ன சுடுமண் போல, தமிழ்க் காய்கறிகளின் பெயர்களைக் கூட மறந்து கோயம்பேட்டில் ஆங்கிலச் சொல்லைக் கூறியே காய்கறி வாங்குகிறவர்கள் உண்டு. நண்பரே ஒரு பெரிய நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எல்லாமே மாய்ந்து போகும்.

"நுணுக்கமான விடயங்களை, தற்கால வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால்
எல்லோரும் சகஜமாக ஆங்கிலத்துக்குத்தான் தாவுகிறார்கள் இந்த நிலமையை பெரும்பாலானோர் (பெரிய படிப்பு படித்தவர்களும்
பாமரர்களும் கூட) எற்று வருகிறார்கள்."

என்று நீங்கள் எழுதிய நடைமுறை உண்மையை ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் சும்மா கிடப்பதே சுகம் என்ற சோம்பற் தனத்தால் அல்லவா, இது நடக்கிறது? தமிழ் நாட்டில் நடக்கின்ற ஒரு கருத்தரங்கில் மேடையில் தமிழே இல்லையே என்று ஒரு பெரியவர் ஆதங்கப் பட்டது தப்பா? தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுங்கள் என்று கூடச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அரசுச் செயலருக்குக் கவனக் குறைவா?

"மொழி என்பது தன்னுள் தோன்றும் உணர்வுகளையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும் பிறர்க்கு "தெளிவாகத்" தெரிவிப்பதற்காகத்தான்" என்று எழுதியிருந்தீர்கள். உண்மைதான். ஆனால் "தெளிவாகத்" தெரிவிப்பதற்குத் தமிழில் மூங்கையாய் (ஊமையாய்) இருந்தால் எப்படி? யாரோ ஒரு வெளிநாட்டுக் காரன் போல வெளி மொழிச் சொற்களை அளவிற்கு மேல் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தமிழ் மறந்தல்லவா போகும்?

"பேராசிரியர்" என்ற சொல் பலருக்கும் தெரிந்த தெளிவுச்சொல் தான் அய்யா!

"படியகம்" என்று நான் சொன்னது podium என்பதற்கு இணையாக நம்முடைய படியின் நீட்சியே (படி>படியகம்) பயன்பட முடியும் என்று சொன்னேன். நம்மில் பலரும் எதையெடுத்தாலும் மேடை, அரங்கு என்று மட்டுமே சொல்லிக் கொண்டு மொண்ணையாக உரையாடிக் கொண்டு இருக்கிறோம். மேடை என்பது stage; அதில் பேசுபவருக்காகப் போட்டிருப்பது படியகம். எண்ணிப் பாருங்கள் இரண்டிற்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்தி, இல்லை என்றால் மேடை, பேசுமேடை என்று சுற்றி வளைத்து சொல்லி, இல்லையென்றால் ஸ்டேஜ், போடியம் என்றே சொல்லி நாம் நம் சிந்தனை வளத்தைக் குறைத்துக் கொள்ளுவது தான் வளர்ச்சியா? அப்படி என்ன முன்னேற்ற ஓட்டத்தில் முடங்கி விட்டோம்? இன்றைக்கு ஒருவர் படியகம் என்றால், நாளைக்கு நாலுபேர் அதைப் புழங்கினால், இது கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைந்து ஊரெங்கும் பரவாதா? பின்னூட்டு என்ற சொல் தமிழ் இணையம், தமிழ் உலகம், அகத்தியர் போன்ற குழுக்களில் தான் முதலில் தொடங்கியது. அங்கு தான் அதை முதலில் உரைத்தேன். இன்றைக்கு உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகம் அந்தச் சொல்லைப் பழகிக் கொள்ள வில்லையா? "1960"களின் முடிவில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரியின் (CIT) தமிழ்மன்ற மலரான "தொழில் நுட்பம்" என்ற இதழில் "இயல்பியல்" என்ற சொல்லை நானும், இன்னும் சிலருமாய் முதலில் உரைத்தோம்; இன்றைக்கு அது தவறாகப் பலுக்கப் பட்டு, இயற்பியல் என்று ஆகிப் போனாலும், மனம் பெருமிதப் பட்டுப் போகிறது. ஏனென்றால் தமிழ்ச்சொல் பரவி விட்டது. ஆக, நாம் நினைத்தால் முடியும், அய்யா.

"உள்ளுருமம், உள்ளுரும நுட்பியல்" பற்றி முன்னே தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதிய நினைவு. தகவல் தொழில்நுட்பம் என்ற சொல், ஆழமான கருத்துக்களைச் சொல்லும் விதமாய், முன்னொட்டாய் வரும் வகையில், அமையவில்லை என்பது என் கணிப்பு. வேண்டுமானால், இன்னொரு முறை விளக்கம் பின்னால் தருகிறேன். ஆனால் தகவல் தொழில்நுட்பம் என்ற சொல் நம்மைக் கடைசி வரை சவலைப் பிள்ளையாகவே வைத்திருக்கும் என்பதில் ஆழ்ந்த உறுதி கொண்டிருக்கிறேன். அந்தச் சொல் மாற வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது.

செற்றம் என்ற சொல்லைப் பற்றி நீங்கள் குறித்ததைப் பார்த்தவுடன் சிறு நகை கொண்டேன். கொஞ்ச நேரம் இந்தச் சொல்லில் செலவழிப்போம். சில்லுதல் என்றால் உடைத்தல். சில் என்பது உடைந்த துண்டு. சில்லுதலின் வழியாகத்தான் சிலர், சிறு, சின்னம் எனப் பலப்பல சொற்கள் தோன்றின. சில்லுதலின் தொடர்ச்சி தான் சிலைத்தல் - சிலை. சில் என்பதில் உகரம் முடிவில் சேராமல் இருந்தால் சில்+தல்>சிற்றல் = சிறிதாக்குதல் என்ற பொருள் கொள்ளும். சிற்றல் சிற்றுதலாகி சிறுதலும் ஆகும். இது போன்ற சொற்கள் ஏற்படுவது மொழியின் வளத்தைக் குறிக்கிறது. சில்லுதல் சில்குதல் என்றும் பலுக்கப் படும் - சின்னஞ் சின்னமாய் ஆகிப் போதல். பின்னால் சில்குதல்>செகுதல் என்றும் திரியும். செகுதல் என்றால் பிரிதல், சின்னாப் பின்னமாய் ஆகுதல். வள்ளுவர் கூட "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்றார். செகுத்தல் = பிரித்தல், to sect (மேலையிரோப்பியத் தொடர்பை அறியுங்கள்.) section = செகுத்தம் = பிரிவு. இதே கருத்துத் தொடர்ச்சியில் தான் செற்றம் = session என்ற சொல் எழுந்தது. எண்ணிப் பாருங்கள், எதற்கு எடுத்தாலும், பிரிவு, வகுப்பு என்ற இரண்டு சொற்களை வைத்துக் கொண்டு மொண்ணையாகத் தமிழில் உரையாடுகிறோம் இல்லையா? second session of the third division of the 14th plenum என்பதைத் தமிழில் சொல்ல சொற்கள் வேண்டாமா? "14வது அரங்கத்தின் மூன்றாவது பிரிவின் இரண்டாம் செற்றத்தில்" என்று சொன்னால் நம் மொழிநடை கூர்மையான நடை என்று சொல்ல முடியும்; அப்படி ஒரு நடையை நாம் தமிழில் கொண்டு வரவேண்டும். ஆங்கிலம் இவ்வளவு வளர்ந்ததிற்குக் காரணம் சொற்களைக் கடன் கொண்டது அல்ல. (பலரும் புரியாமல் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். கடன் வாங்கி வைத்தாலே நமக்கு வளம் வந்துவிடுமா? எதற்கு எதைப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில்லாமல் போனால் எப்படி?) சிந்தனையைக் கூர்மைப் படுத்தி நுணுக்கத்திலும் நுணுக்கம் பார்த்ததால் தான் ஆங்கிலம் என்ற மொழி வளர்ந்தது. அது தான் மொழிநடையை வளர்க்கும். நடுவில் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களைத் தாராளமாய்ப் போட்டு எழுதுங்கள்; தவறில்லை; அதுவெல்லாம் நாளாவட்டத்தில் சரியாகிவிடும்; ஆனால் கூடிய மட்டும் நல்ல தமிழில் எழுதுங்கள் என்று தான் சொல்லுகிறேன்.

"நண்பர் ராமகியைத் தவிர மற்றவர்களெல்லாம் அரங்கத்திலிருந்து ஓடியிருந்திருப்பார்கள் அல்லவா?"

என்ற உங்கள் வாக்கைப் படித்துச் சிரித்தேன். நடந்திருக்கக் கூடும். ஆனால் இது போன்ற செய்திகளை நாளா வட்டத்தில் சிரிப்பும், சிந்தனையுமாய், ஆட்களைக் கையாளும் விதத்தில், ஒரேயடியாகத் தமிழைக் கையாளாமல், சிறிது சிறிதாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொன்னால், இத்தனை தமிழ்ச் சொற்களும் பொதுப் புழக்கத்திற்கு வரும்.

"லெட் டS பி டுரூத்புல் அண்ட் ரியலிSடிக்"

என்ற உங்களின் கூற்றிற்கு என் மறுமொழி: நோயாளியின் ஊறுகளைப் புரிந்து, உண்மையை உணர்ந்து அவருக்கு நல்வழி சொல்லிக் கொடுக்கும் மருத்துவர் எனவே என்னைக் கருதிக் கொள்ளுகிறேன். நான் படித்ததை என் உற்றாருக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் எப்படி? நான் ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா? நோயாளியை அருகில் போட்டுக் கொண்டு, "இறைவனே காப்பாற்று" என்று புலம்பும் பெந்தெகொஸ்தக் காரர்களைப் போல் என்னால் இருக்க முடியாது. (பெந்தெகொஸ்தக் காரர்களே, சண்டைக்கு வந்து விடாதீர்கள். உங்கள் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளுகிறேன். அது உங்கள் நம்பிக்கையின் பாற்பட்டது.)

--------------------------------------------------------------------------
"நண்பர் திருவரசு குறிப்பிட்ட குறுக்குவழி அறுவை சிகிச்சை என்கிற சொல்லாடல் தற்காலத் தமிழகத்தினரின் வாயிலிருந்தும்
பேனாவிலிருந்தும் இயல்பாக வராது எலோரும் "பைபாS சர்fரி" என்றே சொல்லி எல்லோருக்கும் தெளிவாகத்
தமிங்கிலத்தில் தெரிவித்துவருகிறார்கள்"
--------------------------------------------------------------------------
என்று எழுதியிருந்தீர்கள். நாம் என்றைக்குத்தான் மாறுவது? சாலைகளில் போடும் குறுக்கு வழி தெரிகிறது. குருதிக் குழாய்களிலும் குறுக்கு வழி ஏற்படுத்த முடியும் என்ற சிந்தனைப் பொறியைத் தூண்டக் கூடாதா? "குறுக்குவழிப் பண்டுவம் (bypass surgery) செய்து கொண்டேன்" என்று முதலில் சொல்லுவது ஒரு சிலருக்குச் செயற்கையாய்த் தெரியலாம். ஆனால் பத்துப் பேர் விளங்கிக் கொண்டால் அப்புறம், அது மற்றோருக்கும் இயல்பாய் வந்துவிடும்.

அதே மாதிரி stent பற்றியும் ஒரு குறுகிய சொல்லை உருவாக்க முடியும். நண்பர் திருவரசு இருக்கின்ற சொற்களை வைத்து விளக்கம் தருவது போல் எழுதினார்; தவறில்லை.

அன்பிற்குரிய இண்டிராம், நீங்கள் முடிவாகக் கூறிய வாக்கியத்தை நீங்களே படித்துப் பாருங்கள்:
--------------------------------------------------------
"இந்த இயலாமை பேராசிரியர் திரு.குழந்தைசாமியையே பாதித்திருக்கிறாது என்றால் மெட்ரிகுலேசன் பள்ளிகளில்
படித்துவரும் வருங்கால தமிழ்ச் சந்ததியினரிடமிருந்து வருங்காலத்தில் நாம் தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்? எதிர்பார்க்கக்கூடும்? இன்னும் குறைவானப் பயன்பாடுதான் இல்லையா? இந்த மொழித் தேய்மானத்தை, அழிவு நோக்கி ஓடும் நிலைமையை தடுக்கமுடியுமா? இக்கேள்வி பல மொழியினரின் அடிமனதில் இருந்து உறுத்திவருகிறது
தங்களது கருத்தென்னவோ?"
-----------------------------------------

நண்பரே! புண் பெரிதும் புரையோடிப் போயிருக்கிறதல்லவா? அந்தப் புண்ணைச் சொரிந்து கொண்டு ஆதங்கப் படுவோமா? அல்லது புண்ணைத் தீர்க்க வழி பார்ப்போமா? முடிவில் ஒன்று சொல்லி அமைகிறேன். தெறுமத் துனவியல் (thermodymamics) இரண்டாம் விதி சொல்லுகிறது.

"எந்த முயற்சியும் எடுக்காத வரை, தனித்துக் கிடக்கும் கட்டகம் (sytem) சீரழிந்து தான் போய்க் கொண்டிருக்கும்"

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 17, 2006

பெரியார் நினைவாக!

நலங்கூர் நாவினர்

முரசு கடிப்பு உண்ட அரசரும் அல்லர்;
உரை செல் ஆட்சியின் அவரின் ஓங்கியர்.
கோன் முறை திறம்பிக் குடி நிலை திரி முன்
ஆன்று உரை கொளுவும் அமைச்சும் அல்லர்;
நவை தீர் அவையின் நலங் கூர் நாவினர்.
நுரைப் பஞ்சின் நரை தாங்கி
அரி ஏற்றின் அணல் அடர்ந்து
நெறி ஆற்றின் நெஞ்சு படரப்
பாடியும், சேரியும், பட்டினப் பாக்கமும்
ஊரும், குடியும், ஓதை நகரமும்,
வெய்யினும், மழையினும், விதிர்க்கும் பனியினும்,
பொய்யினும், புரையினும், பூட்கை தளராது,
காலையும், மாலையும், கடும்பகல் யாமமும்,
வைகலும், நாடி மெய் கலந்து, புனைவின்றிக்
கொல் வரியின் சொல் பாய்ச்சித்
தொல் குடிமைக் கட்டு அழித்த
ஆரியத்தின் அடி துமித்துப்
பட்டமும், பதவியும், பரவலும், நாடாது,
பழமை கடிந்து, பாழ்மை புலம் காட்டி,
மருளும், இருளும், மறுமையும் போக்கி,
நிகழ் நிலம் ஒன்றே நிறைத்து எனக் காட்டிக்
குலக் கோடு அரிந்து, சமயக் கால் அறத் துணித்துக்
கலக்கு உறு கொள்கைக் கடவுள் மறுத்தே
யாரும், யாவும், யாண்டும் துய்ம் எனப்
புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்
அரியர் ஆகல் இவன் அவரே
பெரியார் என்னும் பெயரி யோரே!

- நூறாசிரியம் 24,
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பொழிப்பு:

குறுந் தடியால் அடிக்கப் பெற்ற முரசை உடைய அரசருள் ஒருவரும் அல்லர்; உரையைக் கட்டளையாகக் கொண்டு செலுத்தப் பெறும் ஆட்சி வன்மையுடைய அவ்வரசரினும் ஓங்கிய ஆற்றல் உடையவர். அரசு முறை மாறு படலால் குடி மக்களும் தம் நிலையின் நின்று கெடல் அறு முன், அவ்வரசர்க்கு அறிவால் அமைந்து அறவுரை கூறி, அதனை மேற் கொண்டு ஒழுகச் செய்ய வல்ல அமைச்சரும் அல்லர்; குற்றம் அற்ற அவ்வமைச்சர் அவையைச் சார்ந்தாரினும், குடிகளின் நலத்தை மிகுதியும் எண்ணி, உரைக்கின்ற நாவினை உடையவர். நீரின் நுரை போலும் மென்மையும், பஞ்சின் இழை போலும் வெண்மையும் கொண்ட நரையைத் தாங்கி, ஆண் அரிமாவின் பிடரியைப் போலும் முகத்துத் தாடியும் மீசையும் அடர்ந்து, மக்களை நெறிப் படுத்தும் வழி முறைகளையே நினைத்து நிற்கும் நெஞ்சின் மீது படர்ந்து தொங்குமாறு, பாடிகள், சேரிகள், பட்டிகள், பாக்கங்கள், ஊர்கள், குடிகள், ஆரவாரம் மிகுந்த நகரங்கள் தோறும், வெயிலிலும், மழையிலும், நடுக்கம் செய்கின்ற பனியிலும், பிறர் தூற்றும் பொய்யுரைகளுக்கும், குற்றஞ் சார்ந்த இழிவுரைகளுக்கும் இடையிலும் தாம் கொண்ட கொள்கைப் பாட்டின் உறுதி தளராமல், காலை என்றும், மாலை என்றும், வெப்பம் மிகுந்த நண்பகல் என்றும், குளிர் மிகுந்த நள்ளிரவு என்றும் பாராது, ஒவ்வொரு நாளும் தாமே நாடிப் போய்த் தம் கொள்கையை வலியுறுத்த உண்மையான செய்திகளையே துணைக் கொண்டு, சொற் புனைவும் கருத்துப் புனைவும் இல்லாது, கொல்லப் பாயும் வரிப் புலியின் வீறு சான்ற சொற்களைக் கேட்போரின் செவி வழி மன வயலில் பாய்ச்சியும், தமிழ்க் குடியின் வன்மையைக் குலைத்து அழித்த ஆரியத்தாரின் கேடுகளை அடியோடு வெட்டிச் சாய்த்தும், பட்டப் பெயர்களையும், பதவி நலன்களையும், பாராட்டுரைகளையும் மனத்தால் விரும்பாமலும், மக்கள் தம் அறியாமையால் கைக்கொண்டு ஒழுகும் பழக்க வழக்கங்களைக் கடிந்து விலக்கியும், அவர் தம்மை வளர்ச்சி இன்றி வெறுமைப் படுத்தும் இழி நிலைகளைச் சுட்டிக் காட்டியும், மக்களின் மயக்கம் உற்ற போக்கையும், அறியாமை இருளையும், பிறவி நம்பிக்கையையும் நீக்குமாறு அறிவுறுத்தியும், கண்கூடான வாழ்வு நலம் ஒன்றே யாவருக்கும் நிறைவானது எனச் சுட்டிக் கூறியும், மக்கள் நலம் எய்த முட்டுக் கட்டைகளாக நிற்கும் குலப் பாகு பாடுகளை வெட்டி வீழ்த்தியும், சமயங்களின் அடி நிலை வேர்களை அறுத்தும், தெளிவற்றுக் குழப்பமான கொள்கை சார்ந்த போலிக் கடவுள் தன்மைகளை மறுத்து உரைத்தும், எல்லா மக்களும் எல்லா நலன்களையும் எவ்விடத்தும் துய்த்தல் செய்யுங்கள் என்னும் புதுமை உரைகளையும் பொழிவித்து, அதன் வழி பொதுமை அறத்தை மக்கள் மனத்தில் தழையச் செய்தும் வருகின்ற அரிய செயல்களுக்கு உரியவர் ஆகலின், அவரே பெரியார் என்னும் பெயர்க்கு உரியவர் ஆவர்.

விரிப்பு

இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது.

கோவை, ஈரோட்டைச் சேர்ந்த வேங்கட இராமசாமி என்னும் இயற்பெயர் கொண்டவர், தம் செயற்கரிய செயல்களால் பெரியார் எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப் பெறும் தன்மையை உறுதிப் படுத்தி, வாழ்த்திப் பாடியதாகும் இப்பாட்டு.

இது பாடாண் திணையும் வாழ்த்தியல் என்ற துறையுமாம்.

Saturday, September 16, 2006

புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை

இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு வியாழக் கிழமை காலை, கைபேசியில் கிணுகிணு என்ற ஒலி.

அந்தப் பக்கம் சிங்கை மணியம்; "அய்யா, எப்படியிருக்கிங்க, எப்பச் சிங்கையிலேர்ந்து வந்தீங்க?"

அவர் நேரடியாக விதயத்திற்கு வந்துவிட்டார்:"வரும் செப்டம்பர் 2 ல், 16 மடைக் குறியேற்றம் பற்றி ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் நடக்க இருக்கிறது, நீங்கள் உறுதியாய்ப் பங்காற்ற வேண்டும்".

அவருடைய அழைப்பிற்கு மறுப்புச் சொல்ல இயலாது. சரி என்று சொன்னேன். அடுத்த நாள் நாக. இளங்கோவனிடம் இருந்தும் ஒரு மின்னஞ்சல்: "நீங்கள் வருவீர்கள் தானே?". அதற்குச் சில நுணுத்தங்களில், பேரா. பொன்னவைக்கோவிடம் இருந்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மின்னஞ்சலும், அதனோடு இணைத்த பேரா. வ.செ.குழந்தைசாமியின் அழைப்பும் கிடைத்தன.

"சரி, இந்த நாள் எங்கும் போகமுடியாது; முழுதும் மாட்டிக் கொண்டேன்" என்று நினைத்தேன். "கருத்தரங்க நிகழ்வுகள் எல்லாம் எவ்வளவு பொறும்?" என்று ஒருபக்கம் இருந்தாலும், "போய்த்தான் பார்ப்போமே! கூடவே, கருத்தரங்க வழிநடத்துநர்கள் நேரம் கொடுத்தால் ஏதேனும் அடிப்படையைச் சொல்லலாம்" என்ற எண்ணத்தில், முதல்நாள் இரவு கூட நேரம் விழித்து, "மொழியியற் பார்வையில் தமிழிற்கான 16 மடைக் குறியேற்றம்" என்ற powerpoint பரத்தீட்டை (presentation) உருவாக்கினேன். (பின்னால் "விழலுக்கு இறைத்த நீர்" ஆக அது ஆனது வேறு கதை!)

அழைப்பிதழை ஒழுங்காகப் படிக்காமல், பார்க் செராட்டன் போய், பின்னால் தவறறிந்து, மடிக்கணியைத் துழாவி, தாஜ் கோரமண்டல் என்றறிந்து போய்ச் சேரும் போது, நேரம் 9.42.

ஊகூம்; தொடங்கியிருக்கவில்லை. நேரம் 10.30க்கு அப்புறம் தான் அமைச்சரும் (தயாநிதி மாறன்), மற்றவர்களும் வந்தார்கள். காலை 8 மணிக்கே அங்கு வந்திருந்த அமைச்சர், திடீரென்று ஏதோ வேலையில் உள்ளுரும நுட்பியற் செயலாளருடன் (Secretary for information technology) வெளியே சென்றதாகப் பின்னால் அறிந்தேன்.

மேடையில், மதிப்பிற்குரியவர்கள் அமர்ந்தவுடன், உள்ளுருமச் செயலர் படியகத்தின் (podium) முன்னால் வந்து,

"Would somebody switch on தமிழ்த்தாய் வாழ்த்து please?" என்று சொன்னார்.

மூன்றாம் வரிசையில் இருந்த இளங்கோவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோ ம். "நல்ல தொடக்கம் இல்லே? ....படித்த தமிழர்கள் கூடும் போது இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஆகிறது. அது ஒரு சடங்கு, நடந்து போகட்டும்". ;-)

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அப்புறம், 95 விழுக்காடு ஆங்கிலத்திலும், 5 விழுக்காடு தமிழிலுமாய் கூட்டம் நடந்து, தொடக்கச் செற்றம் (inaugural session), பொது அரங்கு (Public forum), நுட்பியச் செற்றம் (Technical session), முடிவுத் தொகுப்பு (final consolidation) என இனிது முடிந்தது. மேடையில் எங்குமே தமிழில்லையே என்று யாரோ ஒரு பெரியவர் சொல்லப் போக, பேரா. வ.செ.கு. மிகுந்த சினம் கொண்டார்; "நாங்களும் தமிழின் மேல் பற்றுக் கொண்டவர்கள் தான்; நீங்கள் ஆகவேண்டியதை இங்கு பேசுங்கள்".

காலையில் பொது அரங்கில் தமிழில் கருத்துச் சொன்ன நான், "ஊரோடு ஒத்து வாழ்" என்ற மூதுரையால், நண்பகல் நுட்பியச் செற்றத்தில் ஆங்கிலத்தில் மாறிக் கொண்டேன். (இந்த அம்மணாண்டி/ கோவணாண்டி கதை எனக்கு அப்பப்ப ஞாபகம் வந்து தொலைக்கும். என்ன செய்யுறது?)

என்ன ஆச்சு?
கூட்டம் முடிந்தது.

பிற்பகல் முழுதும் ஒருவரோடு ஒருவர் தனித்த கலந்துரையாடல்கள் (வேறென்ன? அரட்டை). ஒரு நாலுபேர் மட்டும் ஏற்கனவே அடித்து வைத்திருந்த கருத்தரங்கத் தீர்மானங்களின் ஆங்கில வாசகங்களைத் திருத்திக் கொண்டிருந்தார்கள். மாலையில் சிறுபிள்ளைத் தனமான கையெடுப்புக் கணக்குத் தொடர்ந்தது. எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டு விழுக்காட்டுக்களாக மாற்றிக் கொண்டார்கள். மொத்தத்தில் "போடு, தாயம்" என்ற கணக்கில், பரமபத விளையாட்டில், பெரும்பாம்பு கடித்து பதினறுமக் குறியேற்றம், எழுபத்திரண்டாம் கட்டத்தில் இருந்து, இரண்டாம் கட்டத்திற்கு வந்தாயிற்று. இரண்டு பக்கத்தாருக்கும் ஒரேயடியாக, மகிழ்ச்சி. "எனக்கு ஒரு கண்ணு போச்சின்னா, அவனுக்கு இன்னொரு கண்ணு கிடந்து துடிச்சிக்கட்டுமே".

ஆக, முடிந்து போன நிகழ்ப்புகளை -agendas- மனத்தில் வைத்துக் கொண்டு, அரங்கை ஏற்பாடு செய்தவர்கள், உப்புக்குச் சப்பாணி ஆட்டம் ஆடினார்கள். என்ன சொல்ல முடியும்? நான் பதினறும மடைக் குறியேற்றமான All Character encoding ற்குப் பெருத்த ஆதரவாளனாய் இருந்தும், கருத்தரங்கு நடந்த முறை, எனக்கு 'காமா சோமா' என்று தான் இருந்தது. It left a lot to be desired. வழக்கம் போல, stated positions by everyone concerned. The anti are always anti; and the pros are always pro. There was no acceptance, even about the basic inadequacy of the existing Unicode for Tamil. இப்படி இரண்டு பக்கமும் தங்கள் கருத்துக்களில் இருந்து இம்மி அளவும் நகராமல், எப்படி முன்னேற்றம் வரும்? சரி, இந்த விவரங்களை எல்லாம் விரிவாக எழுதலாம், கூடவே நம் பரத்தீட்டத்தை தமிழ் உலகம் கோப்புப் பகுதியிலாவது சேர்த்து வைப்போம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது.
---------------------------------------------------
இரண்டு ஆண்டுகளாகவே அவ்வப்பொழுது குறிப்புக் காட்டியிருந்தாலும், நெஞ்சும், அரத்த ஓட்டமும் மிரட்டி, உடம்பு சழக்குப் பண்ணிக் கொண்டிருந்தது.

4 ம் தேதி காலையில் மருத்துவர் சிவகடாட்சத்தைப் பார்க்கப் போய், உடம்பு நிலையைச் சொன்னால், அவர் இரண்டே நுணுத்தத்தில், "உனக்கு ரொம்ப மிதப்பைய்யா? எல்லாவற்றையும் உனக்குள்ளே வைத்துக்கொண்டு, சுற்றியிருப்பவர்களிடம் ஏதும் சொல்லாமல் ... "என்று கோவித்துக் கொண்டார். "உடனடியாக, மூன்று சோதனை செய். X கதிர் படம் எடு; எதிரொலிக் குருதயப் படம் (echo cardiac gram) எடு; தோல்பட்டை நடவையில் நடந்து 'எப்படி உனக்கு இளைக்கிறது?' என்று மின் குருதயப் படத்தைப் பார்" என்றார். எல்லாம் நடந்தது. அன்று மாலையே சொல்லிவிட்டார்: "தம்பி, மூணு குழாயிலே 99% அடைப்பு. நீ இருக்கிறதே அவன் செயலாலேப்பா? நாளைக்கே நெஞ்சாங்குலைப் படத்தையும் (angiogram) எடு" என்றார்.

தலையாட்டினேன். மறு நாள் பிற்பகலில் மூன்று பெரிய குருதயக் குழாய்களில் (குருதயம் என்ற சொல்விளக்கத்தை முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறேன். கூறியது கூறல் இங்கே வேண்டாம் என்று தவிர்க்கிறேன்.) ஆறு அடைப்பு என்று அறிந்தேன். ஆறில் ஐந்திற்குக் குறுக்கு வழி (bye-pass) ஏற்படுத்தித் தான் அரத்த ஓட்டத்தைக் கூட்ட முடியும் என்றார்கள். பண்டுவர் (surgeon) நரேஷ்குமாரும் (பண்டுவர் என்பது நெல்லை வழக்கு; அறுவை மருத்துவர் என்பது நீர்வீழ்ச்சி மாதிரியான வழக்கு.) அதை உறுதி செய்தார்.

தடுமாறிக் கொண்டிருந்த என்னை மனைவியும், மற்றவர்களும், தொலைதூரத்தில் இருந்த மகன்களுமாய்க் கட்டாயப் படுத்தி சென்ற வியாழக் கிழமையே பண்டுவம் செய்து கொள்ள வைத்தார்கள்.

ICU எல்லாம் முடிந்து, மருத்துவ மனை அறைக்கு வந்த பின்னால், பண்டுவர் நரேஷ் குமாருக்கு நன்றி சொன்னேன்.

"நான் என்ன செய்துட்டேங்க? அஞ்சிடத்திலே plumbing job செய்ஞ்சேன்.(புழம்பு வேலை; தமிழில் புழம்பு என்றால் pipe தான்; பார்த்தீங்களா, மறுபடி நம்ம தமிழின் ஆழம் நமக்கே விளங்கலை.) அவ்வளவு தானே? இப்பவாவது செய்ஞ்சுக் கோணும்னு நீங்க ஒத்துக்குனிங்களே" என்றார்.

"உங்களுக்குத் தெரியுமா? வேதிப் பொறிஞர்களை விளையாட்டாகக் கேலிபண்ணிச் சொல்லும் போது புழம்பர்கள் என்றுதான் சொல்லுவார்கள். ஆக, நம்ம ரெண்டு பேருக்குமே புழம்பு வேலை தான்" - இது நான்.

எப்படியோ புழம்பரின் மேல் ஒரு புழம்பு வேலை நடந்து, நேற்று மாலை வீட்டுக்கு வந்தாயிற்று. இன்றைக்கு இணையத்தில் "உள்ளேன் ஐயா!"

முழு ஆற்றலுக்கு வர ஓரிரு மாதங்கள் ஆகலாம். நேரம் கிடைக்கும் போது சந்திப்போம்.

அன்புடன்,
இராம.கி.