Monday, December 09, 2019

கம்மம்>காமம்>க்ராமம்

”கிராமம் என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல் என்ன?” என்று நண்பர் கௌதம சன்னா அண்மையில் கேட்டார். வேறு வேலையில் ஆழ்ந்ததால் உடன் மறுமொழிக்க முடியவில்லை. ”கூடிய விரைவில் வருவேன்” என்றேன். இப்போது நேரங் கிடைத்தது. விளக்க முற்படுகிறேன்.

’க்ராம’வெனும் சங்கதச் சொல்லின் தமிழ் வடிவம் 'கிராமம்’ ஆகும். ’க்ராம’விற்கும் முந்தையது காம எனும் பாகதச் சொல்லாகும். வெவ்வேறு வட்டாரங்களில் பாகத மொழி வெவ்வேறு மாதிரிப் பலுக்கப்பட்டது. பாணினி கால வடமேற்கு வட்டாரமொழிக்குப் பாஷா (தமிழின் ’பேச்சும்’, ’பாஷாவும்’ ஒருபொருட் சொற்கள்) என்று பெயர். இதில்  பல சொற்களைப் பலுக்கையில், முதல் உயிர் மெய்யின் ஊடே ரகர ஒலிப்பு வந்துசேரும். எனவே மற்ற நிலங்களில் ”காம” என்பது இங்கு, ”க்ராம” ஆகும்.   பிற்காலத்து எழுந்த கலப்புப் பேச்சான சங்கதத்திற்கு பாஷாவே அடிப்படை. பொ.உ.. 300 க்கு அப்புறம், சங்கதமே வடபுல ஆட்சியரால் ஆதரிக்கப் பட்டதால், க்ராம என்ற சொல் இந்தியாவின் பலவிடங்களில் பரவியது. இனி க்ராமத்திற்கு முந்தைய காமத்திற்கு வருவோம். (தமிழில் வேறொரு காமமும் உண்டு. அதை இங்கு எண்ணிக் குழம்பக் கூடாது)

பொ.உ.மு.1000-600 களில் இந்தியாவின்  பெருத்துப் புழங்கியவை தமிழும் பாகதமுமே. (அப்போது சங்கதம் பிறக்கவில்லை. வேதமொழி இருந்தது.) அக்கால இந்தியர் தொகை 1, 2 கோடியிலும், தமிழர் தொகை 20-35 இலக்கங்களிலும் இருக்கலாம். பொ.உ.மு.1000-100 இல்  விண்டு>விண்டிய> விந்திய மலை வரை பரவிய பாகதம் வட இந்தியாவின் பரவலான பேச்சு.  தெற்கிருந்து விண்டுமலை வரை, அக்காலங்களில், தெற்கில் தமிழ் இருந்ததோ? - என்ற ஐயமுண்டு. ஒரு வேளை தொல்காப்பியர் கால வட வேங்கடம், விண்டுமலையோ? - என்றும் எண்ணியதுண்டு. தமிழக- மகத ஊடாட்டத்தில் நாம் பல பாகதச் சொற்களையும் (காட்டு: பகவன்) அவர் பல தமிழ்ச்சொற்களையும் (காட்டு: கம்மம் = ஊர்.) புழங்கினார். கம்மம்>காம என அவரால் பலுக்கப் பட்டது. இன்றும் பாகத வழிச் சிங்களத்தில் ’காம’வுக்கு அதே பொருள்தான். (காட்டு: கதிர்காம).   இன்றும் வடபுல மொழிகளில் gaon என ஊர்ப்பெயர் சொல்வார். (தில்லிக்கு அருகில் gurgaon ஐ இந்துத்துவர் gurugram என்று மாற்றினார்.)

’க்ராம’ என்ற சங்கதச் சொல்லிற்கு inhabited place, village, hamlet என்று பொருள் கொடுப்பர். இருக்கு, அதர்வணம்,  வாஜசனேயி சம்ஹிதா போன்றவற்றில் பயின்றதாய் மோனியர் வில்லிம்சு சொல்லும். ’க்ராம’விற்கு வேர் ஏதென இந்த அகரமுதலி சொல்லாது. ஓரிடம் நிலைக்காது, அலைந்திருந்த நாடோடிகள், ’க்ராம’ என்ற சொல்லைக் கண்டார் என்பது நம்புதற்கு ஐயமான ஒன்று.  “இயற்கை நிலை சரியில்லை” எனில் ஆடுமாடுகளைக் கூட்டி, வண்டிகளைப் பூட்டி இன்னோர் இடத்திற்கே முல்லையார் பெயர்வார். இவருக்கு நிலைத்த ஊர் என்பது தொடக்கத்தில் கிடையாது. நெடுநாள் ஓரிடத்தில் தங்கி, தம் விலங்குகளுக்கும், தமக்குமாய்ப் பயிர்செய்யத் தொடங்குவோரே, ’க்ராம’ எனுங் கருத்தீட்டிற்கு வரமுடியும். ஓர்ந்து பார்த்தால், இச்சொல் மருதநிலத்தில் எழவே வாய்ப்பதிகம்.

இயற்கையில் உயிருள்ள நிலத்திணைகள், விலங்குகள் பலவும் வளர்கின்றன. (இது ஒரு பரிமானத்திலோ, இரு பரிமானத்திலோ, முப் பரிமானத்திலோ, அன்றேல் எண்ணிக்கையிலோ நடக்கலாம். மொத்தத்தில் இது முன்னதைவிட இப்போதையது மிகுதல், பெருகுதல் என்று பொருள்படும். ) அவ்வளர்ப்பில் நீர், குறிப்பிடத்தக்க மண்சத்து, காற்று, போன்ற வளங்கள் இருந்தால் தான் உயிரிகளின் அலங்கல் வளர்ச்சி (organic growth) அமையும். பல்வேறு  வளங்களை இவற்றிற்கு அருகில் கொண்டுவந்து இட்டு அவற்றின் வளர்ச்சிக்கு நாம் துணைபோவதையே வளர்த்தல் என்கிறோம். வளர்தல் தன்வினை. வளர்த்தல் பிறவினை. வளர்=தலுக்கு இன்னொரு தமிழ்ச்சொல் குரு-தல். வளர்த்தலுக்கு இணையானது குருத்தல்.

குல்>குரு என்று இச்சொல் வரும்.  பேச்சுவழக்கில் குருத்தல் கருத்தலென்றும் திரியும். உயிர்க்கரு என்பதும் அதே பொருள் தான். அது மையமாவதால் கருவிற்கு மையம் என்று பொருள் உண்டு. குழவி கருவிலிருந்து வளர்கிறது. வேறுவகையில் உயிருக்கு உதவும் கருத்தல் தொழிலில் நம் உடம்புறுப்புகள் பலவும் வேலை செய்தாலும்  ஓர் உறுப்பு மட்டும் மிக அதிகமாய் வேலை செய்யும். அதைக் கரம் என்றார்.  கருத்தது கரம். கருத்தலில் விளைந்த பெயர்ச்சொல் கருமம்.  வளரும் பொருள் கொள்ளும்>கள்ளும் (கூடும், பெருகும்) கள்.கய்>கை என்பதும் கரத்தைக் குறிக்கும். கை, செய் என்பது இயல்பான பேச்சுத்திரிவு, கையால் செய்கிறோம். கருத்தலும் செய்தலும் ஒரே பொருட் சொற்கள்.   குல்>குரு>கரு>கருத்தல் = செய்தல்

யாரெல்லாம் கையால் கருமஞ் செய்கிறாரோ, அவரெல்லாம் கருமர். கருமம் மெய்ம்மயங்கி கம்மமாகும்.  (பாலியில் தருமம்>தம்மம் ஆகும். தமிழில்  இருமம் இம்மம் ஆகி இம்மையைக் குறிக்கும். எருமை கன்னடத்தில் எம்மெ ஆகும். உருநம் = உச்சிவேளை என்பது உண்ணமாகும். உண்ணத்தைச் சங்கதம் உஷ்ணமாக்கும். உருநத்தை நெல்லையார் உருமம் என்றுஞ் சொல்வார். பருமுவது பம்மும்; பின் பொம்மும். மருமம் மம்மாகும். இன்னும் பல சொற்களை இங்கு எடுத்துக் காட்டலாம்.)

கருமகாரர்>கம்ம காரர் = வினைஞர், கைத் தொழிலாளர்; கம்மத்தம் = வேளாண்பண்ணை; கம்மம் = பயிர்த்தொழில்; கம்மம் = கருமியர் தொழில் (இரும்புக்கொல்லர், தச்சர் போன்ற பல்வேறு craftsmen); கம்மம் = தொழில்; கம்மவாள்>கம்மவார் = தெலுங்கு மொழி பேசும் உழவருள் ஒரு பிரிவினர்; கம்மாக்காரர் = மீனவர்; கம்மாளன் = பொன்வேலை செய்பவன்; கம்மாளத்தி; கம்மி = தொழிலாளி; கம்மியநூல் = சிற்பநூல்; கம்மியம் = கைத்தொழில், கம்மாளத்தொழில்; கம்மியன் = தொழிலாளி;  கம்மாளன்= நெய்பவன்; கருமம் ஆளா மட்டி = கம்மம் ஆளா மட்டி> கம்மாளாமட்டி> கம்மணாம்ட்டி>கம்மணாட்டி= வேலைசெய்யத் தெரியாதவன்; கமக்காரன் = உழவன் (கம்மம் தொகுத்துக் கமம் ஆனது); கமங்கட்டுதல் = உரிமை நிலத்தில் வேளாண்மை செய்தல்; கமத்தொழில் = பயிர்த்தொழில்; கமம் = நிறைவு; கமம் = வேளாண்மை. நன்செய்

இத்தனை பேரும் இருக்குமிடம் கம்மம் = ஊர், சிற்றூர். கம்மம் பாகதத்தில் காம ஆகும். இதுவே பாஷா>சங்கதத்தில் க்ராம ஆகும். எப்படிச் சுற்றினாலும், இந்தியாவின் பல நாட்பட்ட சொற்களை அடையாளங் காணத் தமிழுக்கு வாராது போக முடியாது ஐயா. இதை நான் சொல்வதால் தான் ”தமிழ் வெறியன்” என்பார். க்ராமத்தின் உருப்படியான விளக்கத்தை வேறு மொழி வழியே யாரையேனும் சொல்லச் சொல்லுங்கள், பார்ப்போம்!


Sunday, December 01, 2019

சதுரங்கம் - 5

சதுரங்கம் போலவே எட்டுப்பதி ஆட்டத்திலும் எதிரி காய்களை வெட்டுவது உண்டு. ஒவ்வொரு வெட்டுக்கும் புள்ளிகளுண்டு. காலாளை வெட்ட 1 புள்ளி, தேரை வெட்ட 2, இவுளியை வெட்ட 3, யானையை வெட்ட 4, தலைவனை வெட்ட 5. இந்த ஆட்டத்தின் நடுவில் எந்த வாய்ப்பிலும் எதிரித்தலைவனை வெட்டலாம். தலைவனைக் கட்டும் முற்றுகை (check)முயற்சி இவ்வாட்டத்தில் இல்லை.  எதிரியின் எல்லாக் காய்களையும் வெட்ட, 19 புள்ளிகள் கிடைக்கும். தன் காய்கள் பலியாகாது, 3 எதிரிப்படைகளை வீழ்த்தின் உச்சப் பெறுதியாய் 54 புள்ளிகள் கிட்டும். பொதுவாய் இது அரிது. எந்நேரத்திலும் ஆட்டத்தை நிறுத்திவிடலாம். யாருக்குப் புள்ளிகள் அதிகமோ அவர் வெற்றிபெற்றவர் ஆவார். அல்லது 3 பேர் முற்றிலும் தோற்று ஒருவர் மட்டும் எஞ்சும் நிலை ஏற்படலாம்.

மேலே யானை, இவுளி, தேரெனத் தனித்தனியே சொன்னாலும் அவற்றில் ஆட்களிருப்பதாகத் தான் பொருள். (யானையில் 6 பேர், தேரில் 6 பேர், குதிரை செலுத்த ஒருவர். தனிப்பட்ட குதிரை போல், தேர்/ யானையைச்  சுற்றியும் குதிரையுள்ளதாய்ப் பொருள். பாரதக் குறிப்பின்படி 1 யானைக்கு 3 சுற்றுக் குதிரைகளும், யானை செலுத்த 6 பணியாட்களும்,  3 சுற்றுக் குதிரைகளுக்கு 3 ஆட்களும், 3 குதிரைகளைச் சுற்றி 15 காலாட்களும் இருந்தார். இதுபோல் ஒரு தேருக்கு 4 செலுத்தக் குதிரைகளும், 3 சுற்றுக் குதிரைகளும் தேர்செலுத்த 6 பணியாட்களும், சுற்றுக் குதிரைகளின் மேல் 3 ஆட்களும். 3 குதிரைகளைச் சுற்றி 15 காலாட்களுமிருந்தார். இத்தனை ஆட்களுக்கும் பகரியாய் எட்டுப் பதி ஆட்டத்தில் 1 காலாள் மட்டுமே அந்தந்தக் காய்களின் முன் வைக்கப் பட்டு ஆட்டம் நகர்கிறது

ஒவ்வொரு வெட்டின் மறை பொருளும், உண்மைப் போரில் நடைபெறுவது போலவே வெளிப்படும். யானையிலிருந்து போரிடுவது  பெரும்பாலும் வேல்வீசிப் பொருதலே. தேரிலிருந்து பொருதுபவர் ம் வில்லால் அம்பெறிந்தே போர்செய்கிறார். தலைவனும் தேர்போன்ற வையத்தில் (வாகனத்தில்) இருந்தே வேலும், அம்பும் எய்கிறார். தேவைப்பட்டால் வாட்சண்டையும் இடுகிறார். காலாள்/வயவர் என்பார் வேல்சண்டை மட்டுமே செய்கிறார். மேலே நான் கூறிய மணிமேகலை, கல்லாட வரிகளையும் நினைவு கொள்ளுங்கள். இதுவே எட்டுப்பதி ஆட்டத்தின் பின்னுள்ள போர்ச் சிந்தனை.

எட்டுப்பதி ஆட்டத்திலிருந்தே சதுரங்க ஆட்டம் பெரும்பாலும் எழுந்தது போலும். மிகச்சில மாற்றங்கள் செய்தாலே சதுரங்க ஆட்டம் வந்துவிடும். முதலில் 4 பேர் ஆட்டமானது 2 பேர் ஆட்டமாகிறது. ஒருவருக்கு 2 பட்டிகள் என்றாகி ஒரு தலைவன் அரசனாகி இன்னொருவன் அமைச்சன்/சேனாபதி ஆகிறான். அரசனின் நகர்ச்சி காலாளைப் போல் ஒரு கட்டமே தரப்படுகிறது. பகடை தவிர்க்கப் பட்டு, எக்காயை வேண்டினும் ஆட்டக்காரர் நகர்த்தலாம் என விதி மாறுகிறது.  ஆட்டமுடிவு  ”மாற்றரசன் மேல் முற்றுகை” என மாறுகிறது  ஆகப் போர்களுக்கு நடுவில் பொழுதுபோக்காயும் ஆயிற்று; போர் அறிவைக் கூர்தீட்டுவதாயும் ஆயிற்று, இப்படித்தான் சதுரங்கம் வளர்ந்தது. 

சதுரங்க ஆட்டத்திற்குத் தமிழில் வேறு தனிப்பெயர் உண்டா என்று தெரிய வில்லை, ஆனைக்குப்பு எனும் சொல் இவ்வாட்டத்தைக் குறித்தது என அகர முதலிகளில் உள்ளது தான். அதற்கு அணைவாய் எல்லோரும் ஒன்றுபோல,  ”ஆனைக்குப்பாடுவாரைப் போலே” என்ற திருவாய்மொழி ஈடு, 10, 3,  9 ஆம் விளக்கத்தை இனங் காட்டியிருப்பார். இதில் ஒரு வேடிக்கை தெரியுமோ? இப் பாசுரக் குறிப்பே தவறு.  ”ஆனைக்குப்பே சதுரங்கம்” என்ற சொன்ன ஒருவர் கூட ஈட்டு மூலத்தைப் பார்க்கவே இல்லை. திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7 ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டிற்கான விளக்கம் இது. அதைப் போய் 3 ஆம் பதிகம் என்று தவறாய் எல்லோரும் எழுதியுள்ளார்,  இருந்தாலும் 2 காரணங்களால் ஆனைக்குப்பு = சதுரங்கம் என்பதை இன்னும் ஏற்கத் தயங்குவேன்.

1. ”ஆறாயிரப்படி” ஈட்டு விளக்கத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அம்மூலங் காணவில்லை.  நம்பிள்ளையின் ”இருபத்தி நாலாயிரப் படி” விளக்கத்தை மட்டுமே பார்த்தேன். திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7 ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டின் விளக்கமாய்,, நாலாயிரப்பனுவலில் இல்லாத  சொல்லாட்சியாய், ஆறாயிரப் படியார் இதைச் சொல்லியுள்ளார். ”யானைக்  குப்பு ஆடுவாரை” என்று பிரிக்காது, ”யானைக்குப் பாடுவாரைப் போல” என  ஆறாயிரப்படி மூலத்தில் இருந்தால் என்செய்வது? தவிர,

 2. சதுரங்க ஆட்டத்தில் யானை மட்டுமின்றி, குதிரை, தேர், அமைச்சன்/சேனாபதி, காலாள் என்று பல காய்களும் குப்ப வைக்கப் படுகின்றன. அப்புறம் யானைக்கு மட்டும் என்ன சிறப்பு?  ஒருவேளை யானைக்குப்பு என்பது சதுரங்கப் பலகையில் ஆடும் வேறு ஆட்டமானால் என் செய்வது?

இப்போதைக்கு ஆனைக்குப்பை நான் ஏற்க முடியவில்லை.  அதேபோல் 'check', used in chess என்பதற்கு அரசு என்பதையும் நான் ஏற்கவில்லை. முற்றுகை என்பது இன்னும் தெளிவான சொல். சதுரங்க ஆட்டச் சூழ்க்குமம் ஒரு காலத்தில் சிலருக்கு மட்டுமே கமுக்கமாய்க் கற்றுக்கொடுக்கப் பட்டது. படைத்தலைவருக்கு மேல் இருந்தோர் மட்டும் தான் இந்த ஆட்டத்தை ஆடினார் போலும். எனவே தான், ஆட்டத்தை விவரிக்கும் இலக்கிய வரிகள் நமக்குக் கிடைப்பது  குதிரைக் கொம்பாக உள்ளது. இவ்வாட்டம் 19, 20 ஆ நூற்றாண்டுகளில் தான் பொதுமக்களிடை பரவியது . இந்நிலையில் ஆட்ட வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கும் பழங் கையேடுகளைத் தேடுவது போகாவூருக்கு வழி தேடுவதாகும். 

சதுரங்கம் பற்றிய என் கருத்துக்களை நான் சொல்லிவிட்டேன்.

அன்புடன்,
இராம.கி.