Sunday, March 29, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 6

குருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம் அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம் பாட்டின் 5-9 அடிகள்

..................................................மதனின்
துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தியென
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனிமட மகளே!

என அருமையான காட்சியொன்றை விவரித்துச் செல்லும். மேலே மதன் (= மயக்கம்) என்பதைப் பார்த்தோம் இல்லையா? முதிர்ந்த பச்சை இலைப் பின்புலத்தில், ”மயக்கும் துய்த்தலை இதழோடு (=பஞ்சு போன்ற தூய வெள்ளை நிறம்) காட்சியளிக்கும் குருக்கத்தியையும், பித்திகைப் பூவையும் (=பிச்சிப்பூ, சிறு செண்பகம்) கலந்து வண்டுகள் சூழும் வட்டிலில் வைத்துக் கொண்டு “பூ வாங்கலையோ, பூவு?” என்று கூவிப் போகிறாளே, அந்த உழத்தி!” என்று தலைவி சொல்கிறாளாம். ”துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தி” - என்ன அருமையான தொடர்!

இன்னொரு செய்தியையும் சங்க இலக்கியம் சொல்கிறது. எந்த ஒரு அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும், தாங்காவாம். பரிபாடல் 15 ஆம் பாட்டில் 41 ஆம் அடியில், “குருகு இலை உதிர குயிலினம் கூவ” என்று வரும். அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிரலாமாம். இனி நான்மணிக் கடிகையின் 38 ஆம் பாட்டு,

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

என்று சொல்லி, ”இடியிடிக்க, மழை பெய்ய, இளஞ்சிவப்புக் குருகு இலை தளிர்க்கவும் செய்யும்” என்று இன்னுமொரு புதலியற் செய்தியைப் புகல்கிறது. இதே செய்தியைக் கார்நாற்பது 27 ஆம் பாடல்,
.
முருகியம் போல் வானம் முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவு எண்ணி
உள்ளாது அகன்றார் என்று ஊடியாம் பாராட்டப்
புள்ளியுள் பாயும் பசப்பு.

என்று சொல்லி “குறிஞ்சிப்பறை போல வானம்முழங்க, இடியிடிக்க, மழை கொட்ட, காட்டில் இளஞ்சிவப்புக் குருகிலை பூத்ததை” அறிவிக்கும். திணைமொழி ஐம்பதின் 30 ஆம் பாடலோ,

அருவி அதிரக் குருகிலை பூப்பத்
தெரியா இனநிறை தீம்பால் பிலிற்ற
வரிவளைத் தோளி வருவார் நமர்கொல்
பெரிய மலந்தது இக் கார்.

என்று சொல்லி, ”அருவி அதிர, இளஞ்சிவப்புக் குருகிலை பூத்துப் போகும்” என்று உரைத்துக் கார்கால மலர்ச்சியை வியக்கும். இதே திணைமொழி ஐம்பதின் 21 ஆம் பாட்டோ,

அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கமழ் கோடல் துடுப்பீனக் காதலர்
வந்தார் திகழ்கநின் தோள்.

என்று சொல்லி, காயாம்பூ மலர்வதையும், ஒளிரும் பெண்களின் முறுவலைப் போல இளஞ்சிவப்புப் குருகிலை பூப்பதையும், குளிர்ந்த, நறுமணம் பொருந்திய வெண் காந்தள் பூப்பதையும் உரைத்து, “உன் காதலர் வந்து விட்டார், இனி உன் தோள்கள் திகழட்டும்” என்று தோழியின் கூற்றைப் பதிவு செய்யும். இதனினுஞ் சிறப்பான பதிவு, தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-379 ஆம் வரிகளில் வரும்.

குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப்

”குட்டையான அடிமரம் கொண்ட கரிய காஞ்சி மரத்தைச் சுற்றி, நெடிய குருக்கத்திக் கொடி முதிர்ந்த பச்சை இலைகளோடு படர்ந்திருக்கிறது, முன்னே சொன்னது போல் பூவின் வெளிப்புறத்தில் வரிவரியாய் பூஞ்சை நிறம் படர்ந்திருக்கும் பூக்கள் உதிர்ந்து, கீழே காஞ்சியின் நிழல் படியும் ஆற்றுமணல் நீர்முகத்தில், கிடக்கின்றன. இந்தக் காட்சி எப்படி இருக்கிறதாம். இடியாப்ப வணிகர் பாகொடு பிடித்த இடியாப்ப வட்டம் பாலில் மிதக்கக் காட்சியளிக்கும் கரிய அகலைப் போன்று இருக்கிறதாம். கூடவே திருவெஃகாவின் கிடந்த திருக்கோலத் திருமாலையும் இங்கு நினைவு கொள்ளுவார்.

இந்த விவரிப்போடு குருக்கத்தி பற்றிய எல்லா இணையதளங்கள், பொத்தகச் செய்திகள் ஆகியவை ஆர்வத்தோடு குறிப்பிடும் காளிதாசனின் சாகுந்தல விவரிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் மாமரத்தின் மேல் சுற்றியிருக்கும் குருக்கத்தி, காதலனின் மேல் தழுவியிருக்கும் காதலி போல் தோற்றமளிக்கிறதாம். குருக்கத்திக் கொடியை மாமரத்திற்கு மணஞ் செய்வதாய் முனிபுங்கவர்கள் உருவகஞ் செய்வார்களாம். துசியந்தனைச் சகுந்தலை சந்தித்த பின்னால், ”என் மகளே. நான் தேடிக் கொண்டிருந்த ஆண்மகனை நீ காதலனாகப் பெற்றாய், குருக்கத்திக் கொடிக்குச் சாய்ந்து கொள்ள, எழிலான மாமரத்தைத் தோளாக ஆக்கி மணஞ்செய்து கொடுப்பேன்” என்று கண்வ முனிவர் சொன்னாராம்.

[குருக்கத்தி என்று சொன்னவுடனே, சகுந்தலையும், காளிதாசனும் பற்றி இடைவிடாது ஒருசிலர் சொல்லுவதை நான் குறையென்றும் சொல்லவில்லை. ஆனால் அதற்கு 200/300 ஆண்டுகளுக்கு முந்திய பெரும்பாணாற்றுப் படையும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரும் திருவெஃகா விவரிப்பும் எத்தனை பேருக்குத் தெரிகிறது, சொல்லுங்கள்? குருக்கத்திக் கொடி, மாமரத்தை மட்டும் சுற்றிக் கொள்ளாது. காஞ்சி மரத்தையும் சுற்றிக் கொள்ளும். ஏன், அருகில் வேறு மரங்கள் இருந்தாலும் அவற்றையும் சுற்றத்தான் செய்யும். ஆனாலும் பாருங்கள் தொன்மம், காளிதாசன், வடமொழி ...நாவலந்தீவில் இப்படிப் பாடுவதே பழக்கமாயிற்று. .என்ன சொல்லுவது? [தமிழருக்கோ, தாழ்வு மனப்பான்மை மிகுந்து கிடக்கிறது. எதையும் பேச மாட்டேம் என்கிறோம்.]

இனிக் குருகின் மற்ற தமிழ்ப்பெயர்களைப் பார்ப்போம். குருகு என்னும் பெயரைப் பெண்ணாக்கிக் குருக்கத்தி என்று சொல்வது சொல்வளர்ச்சியின் அடுத்தநிலை. ”குடந்தைக் கிடந்த கோவே! குருக்கத்திப்பூச் சூட்ட வாராய்” என்று சாரங்கபாணியைப் பெரியாழ்வார் (நாலா. 2.7.7) அழைப்பார். ”குருங்கு, குருந்து, குருந்தை” என்ற சொற்கள் குருகின் திரிவு. [குருந்தம் என்னும் வேறொரு மரம் மாணிக்கவாசகரோடு திருப்பெருந்துறைத் தொடர்பு கொண்டது; அதனை இதனோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.] குருங்கொடி, குருதக் கொடி என்பவை குருகில் கிளைத்த வேறு சொற்கள். ”குரிஞ்சான், சிறு குரிஞ்சான்” ஆகியவை இன்னும் மேலெழும் திரிவுகள். ”குருகுக் கோதை” என்பது குருக்கத்தியைப் பெண்ணாக்கும் இன்னொரு சொல் உத்தி, கோதை மாதவி என்பது இரட்டை வழக்கு. மாதவி பற்றி ஏற்கனெவே சொல்லிவிட்டேன். குருக்கத்திப்பூ தன் அழகால், மணத்தால், நிறத்தால், சுவையால் மயங்க வைப்பது. பூ ஊறிய நீர் நொதித்த பின்னால் மது மயக்கம் ஊட்டியதா என்பதைப் புதல்வேதியல் (Phytochemistry) மூலம் தான் சொல்லமுடியும். ஏதேனும் ஆய்வுகள் இருந்தால் தெரியப் படுத்துங்கள். பழம் அறிவைப் புதுப்பிக்கும் தேவை நெடுகவே உண்டு.

குருக்கத்தி மார்ச்சு மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில இடங்களில் பெப்ருவரியிலேயே வெள்ளெனப் பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப் பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில் பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள். [முல்> மல்> மல்லி> மல்லிகை = வெள்ளை நிறப்பூ. முல்லை என்னும் விதப்புப் பெயரையும், மல்லிகை என்னும் பொதுப்பெயரையும் குழப்பிக் கொண்டு ஒரு சிலர் சொல்லுவது உண்டு. முல்லையும் மல்லிகையும் மாறி மாறிப் பகரியாய் நாட்டு வழக்கில் உண்டு என்றாலும், மல்லிகை என்னும் பொது மலரினத்தில் முல்லை என்பது ஒரு விதப்பான வகை என்பதை மறக்கக் கூடாது. முல்லையின் மொட்டு, முல்லிக் கொண்டு (முனைந்து கொண்டு) இருப்பதால் அது முல்லை ஆயிற்று. அதை ஊசிமல்லிகை என்று நாட்டுப் புறங்களிற் சொல்லுவதும் இதையே உணர்த்தும். முல்லை என்னும் சொல்லில் வெள்ளை என்னும் பொருள் கிடையாது.] வசந்த கால மல்லிகை என்பது குருக்கத்தியைப் போல முதற் பெயரல்ல. இன்னொன்றை ஒப்பிட்டு எழும் இரண்டாம் வழிப் பெயர். வசந்த கால மல்லிகையைச் சுருக்கி வசந்தி, பின் நீட்டி வாசந்தி என்ற பெயர்களும் குருக்கத்தியையே குறிக்கின்றன.

புண்டரம், புண்டரவம் என்பவை வெள்நீற்று நிறத்தை ஒட்டி எழுந்த சொற்கள். புடம்> புண்டம்> புண்டரம்> புண்டரவம் என்று விரியும். புடம்போடுதல் என்பது எரித்து நீறாக்குதலைக் குறிக்கும். வாலாகினி என்பது வால் என்னும் வெள்ளை நிறத்தில் எழுந்த சொல். வெள்நலங் கொடி என்பதன் பொருள் வெள்ளிடை மலை. நான் சொல்ல வேண்டியதில்லை. எருக்கம் பூவும் வெள்ளை நிறந்தான், எருக்கம் பூவிற்கு ஒப்பிட்டெழும் எருக்கத்தி என்ற சொல்லும் குருக்கத்தியைக் குறிக்கும்.

அடுத்த சொல் சோகை நீக்கி. இதைப் பார்த்துத்தான், ”குருக்கத்திப்பூவில் ஏதோ ஒரு போதைப் பொருள் இருக்கக் கூடுமோ?” என்று தோன்றுகிறது. புதல்வேதியல் (Phytochemistry) தான் இதற்கு விடை சொல்லவேண்டும். குருக்கத்திப்பூவில் ஈர்க்கும் வேதிகள் (chemicals) இருப்பதால் தான் காமுகம், காமகாந்தம் என்ற சொற்கள் ஏற்பட்டனவா என்பதும் ஆய்விற்கு உரியது.

அடுத்த வரிசைச் சொற்கள், குருக்கத்தி இணர்களாய் (=கொத்துக்களாய்) இருப்பதை வைத்து எழுந்த சொற்களாகும். கொத்து>கத்து>கத்தி>கத்திகை, அதித்த கத்திகை அதிகத்தியாகும். மூக்கொலி ஏற்பட்டு அதிகாந்தியும் ஆகும். சுருங்கிப் போய் அதிகம் என்றும் அமையும். இனி மிகுந்த மயக்கத்தைக் கொடுப்பதால் அதிமத்தம், அதிகமாலி என்ற சொற்கள் எழும்.

மொட்டாய் இருக்கும் போது முத்துப் போல் அமைவதால் குருக்கத்திக்கு முத்தகம், அதிமுத்தம், அதிமுத்தகம் என்ற சொற்கள் ஏற்பட்டன.

இன்னும் ”அயந்தனைச் சிந்தூரமாக்கி, கரிப்பாக்குக் கொடி, நாகரி, நாகரு, பன்றிமொத்தை” என்ற சொற்களும் சித்த மருத்துவ அகரமுதலிகளில் இருக்கின்றன. பெயர்க் கரணியம் நான் அறிந்தேனில்லை.

குருக்கத்தியின் பெயர்களை இதுவரை விரிவாகப் பார்த்தோம். ”மாதவி என்ற பெயர் குருக்கத்தியையே குறிக்கிறது என்று எப்படி அறுதியிட்டுக் கூறுமுடிகிறது?” எனில் நாம் சிலம்பில் புறஞ்சேரியிறுத்த காதைக்குப் போகவேண்டும்.

மதுரையின் புறத்திருந்த பார்ப்பனச்சேரிக்கு வந்த சேர்ந்தபின், கண்ணகியையும், கவுந்தியையும் முள்வேலி சூழ்ந்த காவலில் இருக்கச் செய்து, ஒரு நீண்ட பாதையில் போய் அங்கிருந்த நீர்நிலையில் கோவலன் காலைக்கடன் கழிக்க முற்படுகிறான். இதே நீர்நிலைக்கு, ”வருந்துயர் நீக்கு” எனச் சொல்லி மாதவி ஓலை கொடுத்து அனுப்பிய கோசிகனும் வந்து சேருகிறான். கோசிகன் கோவலனை ஏற்கனவே பார்த்திருக்க வேண்டும். ஆனால் கோவலன் கோசிகனை அறியான் போலும். மனத் துயரம், புகாரில் இருந்து மதுரைக்கு நடந்த உடலயர்ச்சி, ஊதுலைத் துருத்தி போன்ற பெருமூச்சு, அழுக்கான மெய், உடை என எல்லாம் சேர்ந்து, கோவலனின் தோற்றுருவை மாற்றிய கரணியத்தால், கோசிகனால் கோவலனைச் சட்டென்று அடையாளம் காணமுடியவில்லை. உறுதிசெய்து கொள்ளும் முகத்தான், கோவலன் கேட்குமாறு ஓர் உரையாடலைத் தான் சாய்ந்திருக்கும் குருக்கத்திக் கொடியோடு கோசிகன் எழுப்புகிறான்.

”கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்று இவ்
அருந்திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே
வருந்தினை போலுநீ மாதவி!” என்று ஓர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக்
கோசிக மாமணி கூறக் கேட்டே (48-53)

என்று புறஞ்சேரியிறுத்த காதையில் வரிகள் வரும். ”குருக்கத்திக் கொடியே! கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாதவி போன்று, இந்தக் கொடிய வேனிலில் மலர் களைந்து நீயும் வருந்தினாயோ?” என்று பாசிலைக் குருக்கத்தியின் பந்தரில் சாய்ந்து கோசிக மாமணி கூறக் கேட்டான்.” இங்கே “பாசிலைக் குருகு” என்ற சொல்லாட்சி “பைங்குருக்கத்தி” என்ற சங்க இலக்கியச் சொல்லாட்சியை அப்படியே ஒத்திருப்பதைப் பார்க்கலாம். மாதவி என்ற பரத்தைப் பெயரையும், குருக்கத்தி என்ற கொடிப்பெயரையும் அப்படியே இங்கு பொருத்திச் சொன்ன பிறகும் நண்பர் நா. கணேசன் மாதவிக்கு எப்படி முல்லையைப் பின்புலமாய்ச் சொல்லுகிறார் என்று புரியவில்லை [அதுவும் கிட்டத்தட்ட 8, 9 ஆண்டுகளாக அவர் இந்த ஒப்புமையைப் பல்வேறு குழுமங்களில் சொல்லுகிறார்.]

கோவலன் ~ க்ருஷ்ணன், கண்ணகி<கர்ணகி ~ இலக்குமி என்ற முன்முடிவுடன் வந்து சேரும் நண்பருக்கு, மாதவியை முல்லைக்கு ஒப்பிடுவது ஒருவேளை இயல்பாகத் தெரிகிறது போலும். ஆனால் மாதவி என்ற சொல் முல்லையைக் குறிக்கிறதா? [மோனியர் வில்லியம்சு வடமொழி அகரமுதலி மாதவி என்ற சொல்லால் குருக்கத்தியையே குறிக்கிறது. பெருவாரியான இலக்கியக் குறிப்புக்களும் அப்படியே இருக்கின்றன. முல்லை என்று குறிப்பது யாரோ செய்த தவறான குறிப்பு என்றே நான் எண்ணுகிறேன். ”முல்லை என்பதை மாதவி என்று வடமொழியில் மொழிபெயர்ப்பதுண்டு. உதாரணம்: திருமுருகன்பூண்டி = மாதவிவனம். முல்லைத் தாது மணங்கமழ் முருகன்பூண்டி (சுந்தரர்) முல்லைப் புறவம் முருகன்பூண்டி - அப்பர் தேவாரம்” என்ற கணேசனாரின் கூற்றுக்கு என் மறுப்பு இதோ.

முல்லையையும் முருகன்பூண்டியையும் சுந்தரர், அப்பர் ஆகியோர் இணைத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பது உண்மை தான். [அப்பர் ஆறாம் திருமுறை 700 ஆம் பாடல் பொது - வெவ்வேறு தலங்களைக் கோத்துச் சொல்லும் திருத்தாண்டகம் “முல்லைப் புறவம் முருகன்பூண்டி”; சுந்தரர் ஏழாம் திருமுறை திருமுருகன் பூண்டி பற்றிய 499 ஆம் பாடல் “முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்”.] இது ஒரு பக்கம். அதே பொழுது முல்லை என்பதை மாதவி என்று யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள் -. இது இன்னொரு பக்கம். ஆனால் சுந்தரரும், அப்பரும் முருகன் பூண்டியை மாதவிப் புதலோடு இணைத்திருக்கிறார்களா, என்றால் இல்லை.

நண்பர் நாக. கணேசனுக்குத் தெரிந்த ஒப்பீட்டையே இங்கு பார்ப்போம். தேவாரத்தில் மயிலாடுதுறை இறைவி அஞ்சொலாள் என்று சொல்லப்படுகிறாள். (சில பதிப்புக்களில் அஞ்சலாள் என்றும் இருக்கிறாள்.) - இது ஒரு பக்கம், அஞ்சலாள் என்பதை அபயாம்பிகை என்று யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள் - இது இன்னொரு பக்கம் இதைப் பார்த்த நா.க. ”இரண்டும், இரண்டும் நாலு” என்று நகர்ந்து போனாரா? இல்லையே? ”இன்னின்ன பதிப்புக்களில் அஞ்சொலாள், இன்னின்னவற்றில் அஞ்சலாள். அஞ்சொலாள் என்பது இந்தக் கரணியங்களால் சரி. எனவே இங்கே எழுத்துத் திரிவு நடந்திருக்கிறது. அஞ்சொலாளை அபயாம்பிகை என்று பிணைத்தது தவறு” என்று சொல்லவில்லையா? அது போலத்தான், இங்கும்.

அவிநாசியில் இருந்து 5. கி.மீ. தொலைவுள்ள முருகன் பூண்டியின் தல வரலாற்றில் ஒரு தொன்மச் செய்தி வருகிறது. ”துர்வாசர் என்ற முனிவர் கற்பகவுலகில் இருந்து மாதவிச் செடியை (குருக்கத்தியை) இங்குக் கொண்டு வந்தார். எனவே மாதவி வனம்.” [பக்கம் 793-795, திருமுறைத் தலங்கள் - பு.மா. ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 2001 - அருமையான விவரமான நூல்] எனவே மாதவி வனம் என்ற காரணப் பெயர் குருக்கத்தியை வைத்தே வந்திருக்கிறது. முல்லையை வைத்து அல்ல. குருக்கத்தியும், முல்லையும் ஒரே ஊரில் பூத்துக் கிடந்த காலம் போய், தேவாரக் காலத்தில் குருக்கத்தி அருகி, முல்லை பெருகிப் பூத்திருக்கலாம். அதனால் அப்பரும், சுந்தரரும் முல்லையையே சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள். தேவார காலத்திற்குப் பிற்பட்ட யாரோ ஒரு பெருகபதி (ப்ரஹஸ்பதி) முன்னால் இருந்த குருக்கத்திப் பெருமையை அறியாமல், முல்லைக்கும் மாதவிக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறான். அதை உண்மையென்று எண்ணி நா. கணேசன் போன்றவர்கள் தவறான அடையாளங்களில் மயங்கிப் போகிறார்கள்.

திருக்கருகாவூர் (தஞ்சையில் இருந்து 20 கி.மீ. கும்பகோணம் போகும் வழியில் ஆவூருக்கு அருகில் உள்ள ஊர்) முல்லைவனம் என்றும், கூடவே மாதவிவனம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அதே பொழுது முதலாம் இராசராசனின் கல்வெட்டில் “நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர்” என்று இந்தத் தலம் குறிக்கப் படுவதைப் பார்த்தால் ஆவூர்க் கூற்றத்தில் உள்ள குருகு + ஆவூர் = குருகாவூர்>கருகாவூர் என்றாகியிருக்கும் பட்டுமை (possibility) தெரிகிறது. இந்தத் திரிவு தேவார காலத்திற்கு முன்னேயே ஏற்பட்டிருக்கலாம். இந்தப் பட்டுமை மற்ற சான்றுகளால் உறுதி செய்யப் படவேண்டும்.

இன்னுமொரு கோயில் திருவாரூருக்கு அருகில் உள்ள நன்னிலம் பெருங்கோயில். இங்கே ”வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்” ஆகியவை தலமரங்களாய் இருந்ததாகவும், இப்பொழுது வில்வம் மட்டுமே உள்ளதாகவும் சொல்லப் படுகிறது. ஆனாலும் ஊருக்கு மதுவனம் என்ற பெயர் இருக்கிறது. மதுவுக்கும் குருக்கத்திக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தால், சற்று ஓர்ந்து பார்க்க வைக்கிறது. என்றாலும் முடிவிற்கு வர அதிகத் தரவுகள் வேண்டும். [ஆனாலும் முல்லை இங்கு சற்றும் சொல்லப் படவே இல்லை.]

முடிவாக, மாதவி = குருக்கத்தியின் இணை பல்வேறு கூறுகளில் வெளிப்படுவதால், பிறந்த போது “வெளிறிய சிவப்பு அல்லது பூஞ்சை நிறத்தவளாய்” மாதவிப் பெண்ணாள் இருந்திருக்க வேண்டும், எனவே ”நிறத்தையும் பார்த்துக் குருக்கத்தியை நினைத்து மாதவியென்று பெயரிட்டார்களோ?” என்றும் சொல்லத் தோன்றுகிறது. முல்லைத் திணையில் குருக்கத்திப்பூ விதப்பானது. முல்லைத் திணையில் காதல் வயப்படும் பெண்டிருக்கு குருக்கத்தி நினைவு வராமற் ஓகாது. மயக்கம் தருபவள் என்னும் பொருளும் மாதவி என்னும் பெயருக்கு அணி சேர்க்கிறது. இளஞ்சிவப்புக் குருகிலை, ஒலி ஆரவாரத்தில் சட்டென்று பூப்பது, தளிர்ப்பது, எனப் பல புதலியற் செய்திகளும் இதையே குருக்கத்தியைப் பரத்தைப் பெண்ணுக்கு ஒப்பிட்டு நினைவூட்டுகின்றன.

அன்புடன்,
இராம.கி.

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5


அடுத்தது மாதவி. இவள் புகார்க் காண்ட முக்கோணத்தின் மூன்றாம் முனை, அதோடு காப்பியத்தையே கிடுக்கும் முனை. இவள் பெயர்க் கரணியம் சொல்ல இரண்டு பகுதிகள் ஆகும்.

பழந்தமிழிலக்கியம் ஒர் ஆட்டக்காரியைப் பரத்தை என்று கூறும். [’விறலி’ என்பது சற்று வேறுபட்டது.] இச் சொல்லிற்கு 2 பொருட்பாடுகள் உண்டு. முதற் பொருள், பரத்தில் (மேடை) ஆடும் பெண் பரத்தை (= மேடைக்காரி) என்பதாகும். நாட்டம், நாட்டியம், நாடகம், நட்டம், நட்டணம், நடனம், நடம், நடை, கூத்து, தூக்கு, தாண்டவம், படிதம் எனப் பல்வேறு சொற்களும் தமிழில் வேர் கொண்டவை. மற்றை நாட்டியங்களைப் பார்க்கப் பரத்தையின் நாட்டியம் விதப்பான கூறுகளையும், ஒழுங்குகளையும் கொண்டதால் (இவற்றை சிலம்பின் அரங்கேற்றக் காதை விவரிக்கும்.), பரத்தை நாட்டியம்> பரத்த நாட்டியம் (=மேடை நாட்டியம்)>பரத நாட்டியம் ஆயிற்று என்பார் சொல்லாய்வர் பேரா. ப.அருளி. 

நாட்டியக் கலை, தெற்கிருந்து, வேத நெறிக்கு மாறானவர்களால், வளர்த்தெடுக்கப் பட்டது என்றே பல வல்லுநரும் கருதுகிறார். [சங்க காலத்தை ஒட்டி எழுந்த ஸ்ம்ருதிகளும், சங்கத வியாகரண நூல்களும் நாட்டியத்தையும், அதைக் கற்றவரையும், இழிவு படுத்தியே கூறின. குடிலனின் அர்த்த சாற்றமும் அப்படித்தான் கொள்கிறது. (பரதக் கலைக்களஞ்சியம் - கலைமாமணி எஸ்.என். ஸ்ரீராமதேசிகன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 2001).]

பின்னால், வடபுலத்து எழுந்த சமயப்பூசலால், வேதநெறியர் தெற்கே நகர்ந்து, (இப்படித் தெற்கு நகர்ந்தது மூன்று முறையாவது நடந்திருக்க வேண்டும் என்பார் வரலாற்று ஆசிரியர் ந.சுப்பிரமணியம். (The Brahmin in the Tamil Country, Ennes Publications, 1989) இங்கிருந்த அரசர், வணிகரைச் சார்ந்து, வேத நெறி பரப்பியபோது, தென்னக நடைமுறைகளுக்கு ஏற்பத் தம் கொள்கைகளில் சில மாற்றங்கள் கொண்டுவர நேர்ந்தது. அவற்றில் ஒன்று பரத்தையர் பற்றிய கருத்து. அரசர், வணிகருக்குப் பாங்கராய், அரச/பரத அதிகாரத்திற்கு நயன்மை (நீதி) சொல்பவராய், பார்ப்பனர் ஆன பின்னால், அரசர்/வணிகர் - பரத்தையர்/கிழத்தியர் ஆகியோர் இடையாட்டத்திலும், இங்கிருந்த புலவர்/பாணரைப் போல, இடைப்பாங்கராய் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. ”தலைமாந்தரிடையே ஊடலும், பிரிவும் நடந்து, வருத்தம் தொடர்ந்த நிலையில், அரசர்/வணிகர், பரத்தையர்/கிழத்தியர் என இரு சாராரும் ஒரு காலத்தில் பார்ப்பனரையே யோசனைக்காக நாடியிருக்கிறார். [இன்றுங் கூட சோதியம், கோயிலிற் பரிகாரம் என்று பலரும் பார்ப்பனரை நாடுகிறாரே, அதைப் போல.]

சிலம்பில் தலைமாந்தரிடையே நடந்த அத்தனை ஆட்டங்களிலும், பார்ப்பனரே பாங்கராய் வருவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். இவ் வழமையைப் பார்த்தால், வேத நெறித் தாக்கம் அரசர் - பரதரிடம் அதிகம் இருந்திருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

”நடுகற்களுக்கும், இறையுருக்களுக்கும் முன்னிகழும் வேலன் [இன்று வேளார் எனப்படும் குயவர்] வெறியாட்டம்-படையலைக் காட்டிலும், விரிவாய், அலங்காரமாய், புகைமருட்டிற் செய்யப்படும் பார்ப்பன வேள்விகளும், இனம் புரியாத மொழியில் சொல்லப்படும் மந்திரங்களும் தமக்கு மேலும் நல்லதைச் செய்மோ?” என உயர்சாதியர் நம்பத் தொடங்கிய காலத்தில், ஏற்கனவே தமிழ்க் குமுகாயத்தின் பூசாரிகளாய் இருந்த தமிழ் மறையோர்- அறிவரின் தாக்கம் கொஞ்சங் கொஞ்சமாய் குறையத் தொடங்கியது. இப் போட்டியில், தமை நிலைத்துக் கொள்ளும் முகமாய், தம்மோடு முரண்பட்டுக் கிடந்த தமிழகக் கலை, பண்பாடு / பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, வேதநெறியாளர் நெகிழ்ந்து கொடுக்க முனைந்தார். ஏற்கனவே பரத்தைக் கூத்தோடு முரண் பட்டு, ஸ்ம்ருதிகள், வியாகரணங்கள் செய்த இகழ்வை ஒதுக்கி வைத்து, சமனிலைக்கு நகர்ந்து வந்து ”பரத முனிவர் வடக்கிருந்து வந்தார், அவரே நாட்டியத்திற்கு முதலில் சாற்றம் எழுதினார்” என்று புதுக்கதை எழுப்பியது இப்படி நிகழ்ந்ததே. பரத்தை நாட்டியக் கலை வடமொழித் தோற்றம் கொண்டதும், நாளடைவில் அக்காலப் பரத்தையருக்கு வடமொழி அறிவு தேவைப்பட்டதும், பார்ப்பனரே இடையாட்டங்களில் இருந்ததும், இயல்பாய் ஏற்பட்டவையாகும்.

”பரத்தை”யின் இரண்டாம் பொருள்: முறையான வரைவை (திருமணத்தை) மீறிப் பரகுவதால், பரவுவதால் (=பழகுவதால்), பரத்தை [”வரைவின் மகளிர்” என்ற புதுச் சொல்லை வள்ளுவர் உருவாக்குவார்] என்ற சொல் இங்கே எழுந்தது. சிலம்பில் வரும் மாதவி பொதுப் பரத்தையல்ல. இற்பரத்தை (concubine). [இந்தக் காலத்தில் வேடிக்கையாய்ச் சொல்லப்படும் சின்ன வீடு.] சிலம்பை ஆழ்ந்து படிக்காத பலரும் மாதவி ஓர் இற்பரத்தை என்று உணர்வதில்லை. ”அவள் விலைமகள்” என்று சொல்லியே நிலைப்பாடு கொள்வார். ஆனால், காப்பியம் முழுவதும் ”தான் கோவலனின் காதற் கிழத்தி, ”இற்கிழத்தி இன்னொரு பக்கம் இருக்கிறாள்” என்ற முழு உணர்வோடு மாதவி செயற்படுவாள். [கண்ணகியும் கூடப் பொருபொருத்த மரியாதையோடு, மாதவியை நடத்தியிருக்க வேண்டும் என்றே காப்பியத்தின் வாயிலாய்ச் சுற்றி வளைத்து உணருகிறோம். இருவரும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டும், உறுத்திக் கொண்டும் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை, காதற் கிழத்திக்கு மகள் பிறந்ததும், தனக்கு மகவில்லாமற் போனதும், கண்ணகியைச் சற்று அதிகமாகவே உறுத்தியிருக்கலாம். கணவனைக் கேட்க முடியாது போனதற்கு அதுவுங் கூடக் காரணமாகலாம்.]

இனி மாதவியின் பெயர்க் கரணியத்திற்கு வருவோம்.”வானுலக அரம்பையர் செய்கையோடு பொருந்திய பிறப்பு” எனச்சொல்லி ”பெருந்தோள் மடந்தை; பூ அவிழும் சுருட்டை மயிர், மாதவியின் பெயர்” என்ற விவரிப்போடு, ”ஆட்டக்காரி” யாய் அரங்கேற்ற காதையில் இவள் அறிமுகப் படுத்தப் படுகிறாள். ”ஆடல், பாடல், அழகு” என மூன்றிலும் குறைபடாமல், ஐந்து அகவையிற் தண்டியம் பிடித்து, பன்னிரண்டாம் ஆண்டில், சூழ்கழல் மன்னர்க்குக் காட்டல் வேண்டி, மாதவி நாட்டிய அரங்கேறுகிறாள். “தலைக்கோல் எய்தி, தலையரங்கு (=வேந்தனின் அரங்கு) ஏறி, விதிமுறைக் கொள்கையால், ஆயிரத்தெண் கழஞ்சும் பெறுகிறாள். பின் அதை மாலை யாக்கி, நகர நம்பியர் திரியும் மறுகில், பகர்வனர் (பகர்ச்சி = price) போலும் பான்மையில், கூனி கை கொடுத்து, நிறுத்துகிறாள். இதற்கு அப்புறம்,

“மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கோவலன் தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்தென்

என்று முடிகிறது காதை. ஆடல், பாடல், அழகு எனத் தொடங்கிய பொதுவிவரிப்பு பின்னால் காப்பியத்துள் விதப்பாய்ப் பெருகுகிறது. முதலில் வருவது மேல்வரும் கண் விவரிப்பே.
“பெரிய, மலர்போன்ற, நெடுங்கண்ணை உடையவள்” என்று சொல்லும் போது,
”கண்ணகிக்குச் சொன்ன அதே உவமையா?” என்று நமக்குத் தோன்றுகிறது. “மாமலர் நெடுங்கண் மாதவி” என்னும் விவரிப்பு 3.170, 6.174, 8.16, 8.118 ஆகிய இடங்களிலும் வரும்.

”மாநெடுங் கண்” என்பது கண்ணகிக்கும், மாதவிக்கும் ஒன்றேபோல் இருந்த சிறப்புப் போலும். ஓர் ஆடவன் ஒருத்தியிடம் இருந்து இன்னொருத்திக்குத் தாவும் போது, பெண் இருவருக்கும் இடையான ஒப்புமைதானே, முதலில் அவனைப் பார்க்க வைக்கும், இல்லையா? மற்ற அழகுக் கூறுகள் அதற்குப் பின்னால் ஈர்த்ததால், கோவலன் மாதவியோடு பல காலம் தங்கிவிடுகிறான். முடிவில் முழுதாக மாதவியிடம் மயங்கி அயர்கிறான். அந்த மயக்கம், மாதவி என்னும் பெயரிலேயே, தொடங்குகிறது. எப்படி என்று பார்ப்போம்.

முல் என்னும் வேர் ”கூடல், குவிதல், கலத்தல், கலங்கல், காணல், பொருத்தல், மூடல், பற்றல், ஒன்றல், உறழ்தல், திரளல்” ஆகிய துறைகளைச் சார்ந்து சொற்களை உருவாக்குவதைப் பாவாணர் தம் “முதற்றாய் மொழி” யில் விளக்குவார். கலத்தற் துறையிலிருந்து கலங்கற் துறை பிறக்கும். கலக்கத்திற்கு ஏதுவாகப் பல பொருள்கள் உண்டு. கலத்தல், கலங்கலாகும். கலங்கலைக் குழம்பு என்றும் நாம் சொல்லுகிறோம் அல்லவா? கலங்கலின் அடுத்த நிலை மயக்கம்.

முல்> முள்> முய> முயங்கு> மயங்கு> மயக்கம் என்ற வளர்ச்சி இங்கு நினைக்கற் பாலது. முயங்கலில் இருந்து மயங்கல் வருவது நுணுகிய வளர்ச்சி. மயக்கம் பல்வேறாகும். ஒரு வேற்றுமையுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல் வேற்றுமை மயக்கமாகும். ஒரு திணைப்பொருள் மற்றொரு திணை நிலத்திற் கலத்தல் திணை மயக்கமாகும். மெய்ம்மயக்கம், காதல் மயக்கம், குடி மயக்கம் என வெவ்வேறு மயக்கங்களை நாம் அறிவோம் இல்லையா? இனி,

முல்>மல்>மல>மல-த்தல் = மயங்குதல். [”கண் மலந்து கிடக்கிறதே? அடிபட்டதோ?”]
மல> மலங்கு>மலக்கு> மலக்கம் = மயக்கம் [”என்ன ஆயிற்று, இப்படி மலங்கிக் கிடக்கிறாள்?”]
மலங்கு>மதங்கு>மதக்கம் = மயக்கம் [”நல்ல குடி போலிருக்கிறது, மதக்கம் தலைக்கு ஏறிருச்சு”. மதக்குதல் = மயக்குதல்]
மல> மலை> மலை-த்தல் = மயங்குதல் [”என்ன மலைச்சு நிக்குறீங்க, உறுதியோடு இருந்தா, செய்ஞ்சுடலாம்”]
மல>மலம்>மதம் = மயக்கம் [”யானைக்கு மதம் பிடித்திருக்கிறது”.]

மல்>மால் = மயக்கம், காதல், பித்து [பெரிய திருமொழி 2.7.7 -இன் இரண்டாம் வரி: ”மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்யவல்ல என் மைந்தா!” மால் செய்தல் = மயக்கம் செய்தல்.]
மால்>மாலம் = மயக்கும் வித்தை, பொய்நடிப்பு (”அவளைப் பார்த்தியா? கள்ளி.... எல்லாம் நடிப்பு, மாய்மாலம்”)
மால்>மாலை = இரவும் பகலும் கலக்கும் அந்தி வேளை; ஒளி மயங்கும் நேரம். [பிற்பகல் 6-இல் இருந்து 10 மணிவரை. நம்மில் பலரும் பிற்பகல் 4 மணிப் பொழுதை, மாலை என்று சொல்லித் திரிகிறோம். பழந்தமிழர் புரிதலின் படி அது தவறு. பிற்பகல் இரண்டில் இருந்து ஆறு மணி வரை உள்ள பகற்பொழுதுக்கு ”எற்பாடு” என்று பெயர் (எல் - சூரியன்.- படும் நேரம் எற்பாடு). அந்தச் சிறுபொழுதின் பெயரையே தொலைத்துவிட்டு, இந்தக் காலத்தில் பிறசொற்களைக் கடன்வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் சொல்ல முற்படுபவரை, மொழிவெறியர் என்ற குற்றமும் சாட்டுகிறோம்.]

மதம்>மத்தம் = பித்து, மயக்கம்; உன்மத்தம் என்பது கடும் பித்து; உன்மத்தம்>ஊமத்தை
மத்து>மத்தன்>மதன் = மயக்கம் [நற்றிணை 97.5]

மல= மத>மது = கள், தேன் [பலரும் ’மது’வை வடசொல் என்றே எண்ணிக் கொள்கிறார்கள். உண்மையில் அது நல்ல தமிழ். ’மது’ வடசொல்லெனில், மேலே சொன்ன ’மல்’ வேர்ச்சொற்கள் பலவும் தமிழென்று சொல்லவியலாது. மொழியியலில், பொதுவாய் இணைச்சொற்களின் கூட்டம், வேர், வளர்ச்சி, சொல்லாட்சிக் காலம், ஆகியவை பார்த்தே ”ஒரு சொல் இயற்சொல்லா, அன்றிப் பிற சொல்லா?” என்று ஆய்கிறோம். தமிழ்ச் சொல்லைத் தனியே பார்த்து வடசொல்மூலங் காட்ட விழைவோர், அவக்கரம் (=அவசரம்) காட்டாது, சற்று பொறுத்து, சீரான நடைமுறையைக் கொண்டால் அவர்களுக்கு உண்மை புரியும். அதற்கு மேல் சொல்ல என்னிடம் ஏதும் இல்லை.]
மது>மத்து>மட்டு = கள், தேன்
மத>மதி = மயக்கந் தரும் நிலவு [மேலைச் சிந்தனையிலும் luna வை lunacy யோடு தொடர்பு படுத்துவதைப் பார்த்தால், மதியின் பொருள் புரிபடும். பூரணை நிலவு, மனவெழுச்சிக்குத் தூண்டுதலாய் இருப்பதாய்த்தான் அறிவியல் கூறுகிறது.]
மதி>மாதம் = நிலவை வைத்து கணிக்கப் படும் காலச் சுழற்சி. [குறிலிற் தொடங்கும் சொல், நெடிலாய் நீண்டு, இன்னொரு சொல் புதுக்குவது தமிழுக்கும் உண்டு, வடமொழிக்கும் உண்டு.]
மது>மதுர்>மதுரி மதுரித்தல் = இனித்தல்; கள்ளில் இருந்து களித்தல் ஏற்படுவது போல், இங்கு மதுரில் இருந்து மதுரித்தல் ஏற்படுகிறது.
மதுர்>மதுரம்>மாதுரம் [அதி மதுரம் என்பது சித்த மருத்துவத்தில் உள்ள இனிப்பான, நறுமணப் பூண்டு வகை.]
மாதுர்>மாதர் = காதல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம், உரியியல், 322, “மாதர் வண்டொடு கரும்பிசைத்தது என்றக்கால் காதல் வண்டு என்பதாம்” என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டு தருவார்; காதலும் களிப்பு, மயக்கம் தானே? மதுவில் இருந்து பிறந்த ”மாதர்” எனும் சொல் அப்படித்தான் காதலைக் குறிக்கிறது.]

மது>மதுகம் = இலுப்பை ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பது பழமொழி. கரும்பு விளையா இடத்தில், இலுப்பைப்பூவை இனிப்பாய்ச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. இந்தக் காலம் போல, வெல்லம், சர்க்கரை, கற்கண்டு பெறமுடியாக் காலத்தில், இலுப்பை மரங்கள் பாலை நிலத்தில் பெரிதும் இருக்கும். இலுப்பைப் பூ இனிப்பிற்குப் பகரியாய் அமைவது இப்படியே. இன்றையச் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் இலுப்பை மரங்கள் மிகுதி. இப்பொழுது குறைந்துவிட்டன. காரைக்குடி இருவாய் நிலையத்திற்கு (Railway) மிக அருகில் இலுப்பைக்குடி என்ற ஊர் உண்டு. (நகரத்தாரின் ஒன்பது குலக்கோயில்களில் இதுவும் ஒன்று.) சில சிவத்தலங்களின் தலமரமாய் இலுப்பை இன்றும் உண்டு. (வைத்தீசுவரன் கோயிலுக்கு அருகில் ”பழமண்ணிப் படிக்கரை” என்னும் ”இலுப்பைப் பட்டு”, கொங்குநாட்டில் ”கொடிமாடச் செங்குன்றூர்” எனும் ”திருச்செங்கோடு”, ஆகிய தலங்களில் இலுப்பையே தலமரம் ஆகும்.) மதுசத் துருமம், மதுத் துருமம், மதுத் தூரு என்ற கலவைச் சொற்களும் இலுப்பை மரத்தையே குறிக்கும். மதுகம்> மதுவம்> மாதவம் = இலுப்பை [மதக்கும் (=இனிக்கும்,களிக்கும்) பூவைத் தரும் மரம் மாதவம்.] மதுக என்னும் பெயர் இலுப்பைக்குச் சங்கதத்திலும் உண்டு. மாதுகம், மாதூகம், மாவகம் என்ற திரிவுகளும் உண்டு. மதுக என்ற பெயரைக் கேட்கும் பலரும் உடனே ”சங்கதம் முதல், தமிழ் பின்” என்றே சொல்ல முற்படுகிறார்கள். கொஞ்சம் ஆய்ந்து பார்த்தால், உண்மை புலப்படும். Madhuca Indica என்பது இதன் புதலியற் பெயர்.

காய்ந்த இலுப்பைப் பூவை நீரில் ஊறவும், பின் நொதிக்கவும் வைத்துக் கிடைக்கும் மதுவை இன்றும் நடு இந்தியாவில் பழங்குடியினர் குடிக்கிறார்கள். மதுவிற்குரிய எல்லாக் குணமும், நொதித்த இலுப்பைப்பூ நீருக்கு உண்டு. வெறியத்தின் (alcohol) செறிவு வேண்டுமானால் மாறியிருக்கலாம். இலுப்பைப்பூவை, கரடி, முள்ளம்பன்றி, மான் ஆகியவை விரும்பிச் சாப்பிடுமாம். கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ, அதன் இரப்பையில் நொதித்து, கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள வைக்குமாம். மதுகம், மாதவம் என்ற பெயர்கள் இலுப்பைக்கு ஏற்பட்டது நொதித்த இலுப்பைச் சாறு மயக்கம் தரும் கரணியம் பற்றியேயாகும்.]

ஆக, மயக்கம் கொடுக்கும் பூவைத் தருவது மாதவம்; காம மயக்கம் தருபவள் மாதவி. பரத்தையர் குலத்தில் காமப் பெயர் வைப்பது முற்றிலும் பொருத்தமே. அதுவும் மாதவியை வைத்துப் பெரும்பொருள் சேர்க்க நினைத்த சித்திராபதி, தன்மகளுக்கு மாதவி எனப் பெயர்வைத்தது முற்றிலும் இயல்பானதே.

சரி, மாதவி என்ற பெயரின் சொற்பொருள் புரிகிறது; ஆனால் அது குறிக்கும் பருப்பொருள் தான் என்ன? இலுப்பைப் பூவா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். இங்கே குருக்கத்தி என்னும் வேறொரு பூ பருப்பொருளாகிறது. குருக்கத்தியை வாயிற் போட்டு குதப்பினாலும், இலுப்பையைப் போல் இன்சுவை கிடைக்கத்தான் செய்யுமாம். ”குருக்கத்திப்பூ ஊறிய நீரையும் நொதிக்க வைத்து மதுவாக்கலாமா?” என்றால் எனக்குத் தெரியாது. நாட்டுப்புறத்துப் பட்டறிவுகளைத் தொகுத்தோர், அல்லது சித்த மருத்துவக்காரர், என யாரோ தான் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விக்கு விடை கிடப்பது மாதவியின் பெயர்க்காரண ஆய்விற்கு மேலும் அணி சேர்க்கும்.

இன்றையப் புதலியல் (botany) குருக்கத்தியை Hiptage benghalensis (Linn.) என்று சொல்லும்; இதற்குப் பகரியாய், Hiptage madablota Gaertn. Kurz, Gaertnera racemosa Roxb என்றும் கூடப் பெயர் சொல்லுகிறார்கள். குருக்கத்தியில் செடி, கொடி என இருவகையுண்டு. “தமிழ்நாட்டுத் தாவரங்கள்” என்ற நூலில் திரு. ச.சண்முகசுந்தரம் [படிக்க வேண்டிய நூல். மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இதை மாதவிக் குருக்கத்தி என்று சொல்லும். நமக்கு முகன்மையான குருக்கத்திப் பூக்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு விவரிப்பார்.

”குருக்கத்திப் பூக்கள் மார்ச்சு தொடங்கி செப்டம்பர் வரையிலும் கொனைகளில் [=இலை, தழை, பூங்கொத்து ஆகியவை முடிவுறும் நுனிப் பகுதி] அல்லது கட்கத்தில் [=தண்டிற்கும் அதனின்று தோன்றும் கிளை மற்றும் இலைக்கும் இடையே உள்ள சந்து மூலை] கொத்துக்களாய்ப் பூக்கும். இந்தப் பூக்களின் குறுக்களவு 0.5 முதல் 0.75 அங். வரை இருக்கும். பூவின் 5 இதழ்களில் 4 வெண்மையாகவும், ஒன்று மட்டும் வேறு (சிவப்பு மற்றும் மஞ்சள்) நிறத்துடனும், நறுமணத்துடன் இருக்கும். ”குருக்கத்தி எல்லா மலைக்காடுகளிலும் சிறப்பாக ஓடைகளின் அருகில், (சமவெளித் தோட்டங்களில் வளர்ப்பாக) 4500 அடி வரையில் காணப்படும்”

மருத்துவர் தாமோதரனாரின் “செந்தமிழ்ச் சித்தர்களின் மருத்துவ அகராதி” ”குருக்கத்திப் பூவை உட்கொண்டால் சிர ரோகம், தாகம், சிலேட்டுமம், பல்விஷம், பித்தம், விரணம் ஆகியவை போகும்” என்று சொல்கிறது. கூடவே குருக்கத்திப்பூ கைப்பும், மதுரமும் சேர்ந்து இருக்கும் என்று அதன் சுவை பற்றி அறிகிறோம். பூவின் வளர்ச்சியைப் பொறுத்து, மதுரச் சுவை கூடும், குறையும் போலும். பூங்கொடிப் பதிப்பகத்தின் “மூலிகைக் களஞ்சியம்” என்னும் நூலில் மருத்துவர் திருமலை நடராசன், பூவின் சுவை சிறிது கைப்பும், சிறிது இனிப்பும் கொண்டதாகவே சொன்னாலும், இந்தப் பூவை இனிப்பெனவே வகைப்படுத்துவார். குருக்கத்திப் பூவை உட்கொண்டால், ”குளிர்ச்சியுண்டாக்கும், இளைப்பாற்றும்” என்றும் சொல்லப் படுகிறது. மேலே மருத்துவர் தாமோதரனார் சொன்ன நோய்கள்,
”குருக்கத்திப்பூவை குடிநீரில் இட்டு ஊறவைத்துக் குடித்துவரக் குணமாகும்” என்றும் அறிகிறோம்.

இந்திய மொழிகளிலேயே அதிகமான குருக்கத்திப் பெயர்கள் தமிழிற் தான் உண்டு. ”குருவும் கெழுவும் நிறனா கும்மே” என்பது தொல்காப்பியம் உரியியல் 786 ஆம் நூற்பா. அகரமுதலிகளிற் குருவிற்கு வெள்ளையும், சிவப்பும் விதப்பான பொருளாய்ச் சொல்லப் படும். வெளியே பூஞ்சையும் (pink), சிவப்பும் வரிக்கோலம் போட, உட்பக்கம் முற்றிலும் வெள்ளையிற் துலங்கி, ஓரிதழில் மட்டும் மஞ்சட் தெறிப்புக் காட்டும் இந்தப் பூவின் அழகும், நறுமணமும் யாரையும் கவரும். [உடனுள்ள படத்தைப் பாருங்கள்] அந்த கவின் நிறமே ”குருகு” என்னும் பெயரைப் பூவிற்குக் கொடுத்தது போலும். [வெள்நாரையைக் குருகு என்பதையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். செங்கால் நாரை மனம் கவரும் இல்லையா?]

பூக்களைப் பற்றி மேலே பார்த்த நாம் இலைகளின் சிறப்பையும் தெரிந்து கொண்டால், பின்னால் இலக்கியச் சான்றுகளை அடையாளம் காணமுடியும். குருக்கத்தி இலைகள் 4 முதல் 7 அங். வரை பெரிதாக, மண்டிலமாக (மண்டிலம் என்பது இலைவடிவம் பற்றிய கலைச்சொல். கோள்களின் பாதையை ஒத்த இருமுனை கொண்ட நீள்வட்டம்.) முரப்பாக (முரப்பு என்பது தொடுவதற்குத் தோலின் பதத்தில் கடிதாக என்று பொருள்.), மேனி வறியதாக, மேற்புறம் பளபளப்பாக, தண்டில் இருந்து கணுவாய்களின் [கணுவாய் = ஒன்று, அல்லது அதற்கு மேற்பட்ட இலைகள் இணையப்பெற்ற கொப்பின் பகுதி] இருபக்கம் இரட்டையாய் முளைவிட்டுத் தோன்றும். இந்த விவரிப்பையும் ச.சண்முகசுந்தரத்தின் நூலிற் காணலாம். [கிட்டத்தட்ட அ.தி.மு.க. வின் இரட்டையிலைச் சின்னம் போல இதை எண்ணிக் கொள்ளலாம்.] குருக்கத்தியின் இளங்குருத்து இலைகள் இளஞ் சிவப்பு நிறத்திற் தொடங்கி முதிர்ச்சியடையும் போது கொஞ்சங் கொஞ்சமாய் பச்சைக்கு மாறும். எனவே குருக்கத்தி இலைகள் தளிர்ப்பதும் பூத்தல் என்றே பழந்தமிழ் இலக்கியங்களிற் சொல்லப் படுகிறது.

அன்புடன்,
இராம.கி

Monday, March 23, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 4

அடுத்து, கோவலன் என்னும் பெயரைப் பார்ப்பதாகச் சொன்னேன். காப்பியம் எங்கணும் கோவலன் என்ற பெயரே, ஒரே ஒரு இடத்தைத் தவிர, பயிலப் படுகிறது; அந்தப் புறனடை அடைக்கலக் காதையில் 93-94 ஆம் வரிகளில் மாடலன் சொல்வதாக வருகிறது.

திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவ (93-94)

இங்கே ”மாமணிக் கொழுந்து” என்பது கண்ணகியைக் குறிக்கிறது. “விருத்த கோபால” என்பதற்கு ”அறிவால் முதிர்ந்தவனே” என்று உரையாசிரியர்கள் பொருள் தருகிறார்கள். ”அறிவு என்பது இந்த வரிகளின் ஊடே எப்படி வந்தது?” என்று புரியவில்லை. ”அறிவு” என்ற கருத்தைத் தவிர்த்துப் பார்த்தால், அதோடு ”விருத்த கோபால” என்பது இளங்கோவின் சொல்லாட்சியெனில், ”கோவலன் கிழவன், கண்ணகி இளையோள்” என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், கண்ணகியைக் காட்டிலும் 4 அகவை மூத்தவனை ”விருத்த கோபால” என்று இளங்கோ சொல்லுவானோ? மாட்டான், எனவே விருத்த கோபாலனை ஆழ்ந்து ஆயவேண்டியிருக்கிறது. “அறிவு” என்னும் தொடர்பையும் பார்ப்போம்.

”மணிமேகலைக்குப் பெயரிட்ட போது, கோவலன் கொடுத்த கொடை, தானங் கேட்ட பார்ப்பனனை யானை இடற முயன்ற போது, கோவலன் காப்பாற்றியது, ’இனி நீயே பிழைத்துக் கொள், என்னை நாடி நிற்காதே’ என்று ஒரு பார்ப்பனன் தன் மனைவிக்குக் கொடுத்த வடமொழி வாசக ஓலையைக் கோவலன் வாங்கிக் கொண்டு பார்ப்பனிக்குப் பணங் கொடுத்துக் காப்பாற்றியது” என்று மூன்று கொடை நிகழ்ச்சிகளைக் கூறிய மாடலன், அதைத் தொடர்ந்து மேலும் கொடைநலம் பாராட்டாது, “அறிவு முதிர்ந்த கோபால” என்று சொல்லுவது ”இடம், பொருள், ஏவற்” பொருத்தம் இல்லாது தோற்றுகிறது. [அறிவுத் திறன் நாட்டிய கதைகளைச் சொல்லி ”அறிவில் முதிர்ந்தவனே!” என்று சொன்னால் அதிற் பொருளிருக்கிறது. ஆனால் அப்படியில்லை.]

அதிலும் பார்ப்பனியைக் காப்பாற்றும் நிகழ்ச்சிக்கு முன்னால், அவள் கணவன் தவிக்க விட்டு ஓலை கொடுத்த கதை, ”பஞ்ச தந்திரத்தில்” வருகிற, கற்றோர் பலரும் அறிந்திருக்கக் கூடிய, அன்றையப் பொதுக் கதை. அதைக் பிய்த்துக் கொண்டு வந்து, இங்கு ஒட்டி, பார்ப்பனியைக் கோவலன் காப்பாற்றுவதாகச் சொல்லுவது இளங்கோவின் நம்பகத் தன்மையை பெரிதும் குலைக்கிறது. ”வேறொரு பொதுக் கதையைக் கொண்டு வந்து அதை முடிப்பித்தவன் தன் கதைத் தலைவன்” என்று பொருந்தச் சொல்லுவது இளங்கோவின் எழுத்து நேர்மைக்குப் பொருந்துமா? இளங்கோ எழுத்துத் திருட்டாளியா? இல்லையே?

[கதையைச் சொல்லுவது தவறில்லை. ”அந்தக் கதையைத் தன் தலை மாந்தனே முடித்தான்” என்று இளங்கோ சொல்லியிருந்தால் அது பெரும் இழுக்கு.] இந்த வரிகள் ”இளங்கோவின் வரிகள் தானா?” என்று நம்மை வியக்கவும், மருளவும் வைக்கின்றன. ஒருவேளை கம்பராமாயணத்தில் சடையப்ப வள்ளலைச் சிறப்பிக்கும் முகமாக இராமனின் முடிசூட்டு விழவில் ”வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி” என்று கம்பன் பாராட்டியது போல், பொதுக்கதையைக் கோவலனோடு ஒட்டிவைத்துக் கோவலனின் கொடையை இளங்கோப் பாராட்டினானோ, என்னவோ? அல்லது இப்படி ஒரு கதையைக் கோவலனோடு ஒட்டியது இளங்கோ அல்லாத பின்னொருவர் இடைச்செருகலா? [அழற்படுகாதையில் இது போன்ற பிற்காலச் சாதிக் குமுகாய வழக்குகளைப் புகுத்திய அளவிறந்த இடைச்செருகல்களை வேங்கடசாமி நாட்டார் தன் உரையில் குறிப்பிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.] மொத்தத்தில் ”விருத்த கோபால” என்ற விளி இளங்கோவோடு பொருத்தமில்லாத படி தொங்கி நிற்கிறது.

கோவலன் முன்னால் செய்த கொடைச் செய்திகளைக் கூறும் இடத்தில், ”கொடைமடத்தில் சிறந்த கோவலனே!” என்று கூறுவதில் பொருளிருக்கிறது. அதை விடுத்து, “அறிவு முதிர்ச்சி” என்ற பொருளில் ”விருத்த கோபால” என்று சொல்வது, ஏதோ இடறல் என்றே தோற்றுகிறது. ஒருவேளை, ஏட்டுப் படி எடுக்கையில், ஏற்பட்ட முறை தெரியா இடைச்செருகலாய்க் கூட அது இருக்கலாம். அன்றேல், ஓரோவழிப் பார்ப்பனர் வழக்காயும் இருக்கலாம். பொது வழக்கில், கோபாலன் என்பது இளங்கோவின் பயன்பாட்டாய் இருந்தால், காப்பியத்தில் வேறு எங்கணுமே அதைப் பயன்படுத்தாதது நமக்கு வியப்பையே அளிக்கிறது. இத்தனைக்கும் யாப்பு தவறாமல் ”கோவல” என்றே அங்கு இளங்கோ பயின்றிருக்க இயலும் நிலையில், ஏன் ”கோபால” என்று பயன்படுத்தினான்? அதன் தேவை என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. [கோபால என்பதை சிலம்பு அல்லாத மற்ற ”கோவலன் - கண்ணகிக் கதைகள்” பயன் படுத்தியிருப்பதைப் பின்னால் பார்ப்போம்.]

{இங்கு ஓர் இடைவிலகல். ஓரெழுத்து, ஈரெழுத்தை மாற்றி, எத்தனை சிவன் கோயில்களின் இறைவன், இறைவி பெயரை சங்கதமாக்கி ”அம்புலிமாமா கதை” பின்னியிருக்கிறார்கள்? திரு. நா. கணேசனுக்குத் தெரியாததா, என்ன? மயிலாடுதுறை அஞ்சொலாளை, ஓரெழுத்து மாற்றம் கொடுத்து, அஞ்சலாள் என்று ஆக்கிப் பின் ”அபயாம்பிகை” என்று மொழிபெயர்த்ததை அவரும் தமிழ் கூறு நல்லுலகிற்கு விரிவாக எடுத்துரைத்திருக்கிறாரே? நானும் சிலவற்றை இங்கு சொல்ல விழைகிறேன்.

தில்லையில் இருக்கும் நடவரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், பழைய திரு மூலத்தானத்திற்கு அருகில் இருந்த சிறிய அம்பலம். அதை அந்நாளிற் சிற்றம்பலம் என்றே சொன்னார்கள். பின்னால் காலப்போக்கில், பேரரசுச் சோழர் ஆதரவில் அது பேரம்பலம் ஆயிற்று, பொன்னம்பலமும் ஆயிற்று. [தீட்சிதர்கள் இப்பொழுது சொந்தம் கொண்டாடுவதைத் தூக்கியெறியுங்கள். தில்லைக்”கோயில்” பேரரசுச் சோழரின் பெரும்பணி.] சிற்றம்பலம்> சித்தம்பரம்> சிதம்பரம் என்று ஆக்கிப் பின் சித் + அம்பரம் என்று பிரித்து ”ஞான ஆகாசம்” என்று பொருள் சொல்லி, அங்கே ஆகாச பூதம் இருப்பதை நுழைத்து, எப்படியெல்லாம் இன்று புது விளக்கம் சொல்லப் படுகிறது? ஊற்றுகை (origin) என்னவோ சிற்றம்பலம் தான், எவ்வளவு முயன்றாலும் சிதம்பரம் இல்லை.

கோடிக்கரைக்கு அருகில் மரை மான்கள் உலவிய மரைக்காட்டை ஓரெழுத்துத் திரிவில் மறைக்காடாக்கி, வேதாரண்யம் என்று மொழிபெயர்த்து, என்னவொரு கதை?

நாவல் மரக்காட்டுக்குள் இருந்த நாதரை நாவல்கா நாதர் என்று சொல்லுவது இயல்பான முறை. அதைச் சரியாகத் தான் ”ஜம்புகேஸ்வர” என்று வடமொழியில் மொழிபெயர்த்தார்கள். பின்னால் பேச்சுவழக்கில் மடைத்தேற்ற (metathesis) முறையில் திருநாவல்கா> திருவாநல்கா> திருவானக்கா> திருவானைக்கா என்றாகிப் பின் ”ஆனை வந்தது, நீரூற்றி வழிபட்டது, இறைவன் மகிழ்ந்து போனார்” - என்றெல்லாம் விளக்கம் சொல்லுவது இன்னும் ஒரு கதை.

ஐம்பூதங்களின் வடிவில் இலிங்கத்தைப் பார்க்கும் தொன்மத்தில் கால் (>காற்று) என்பதற்கான தலம் திருக் காலத்தி. இதையும் ஓரெழுத்துத் திரிவில் திருக் காளத்தி ஆக்கி அதை ஸ்ரீ + காளம் + அஸ்தி என்று பிரித்து, ”சிலந்தி, பாம்பு, யானை முதலிய மூன்றும் வழிபட்ட இடம்” என்று பொருந்தச் சொன்னது இன்னொரு கதை.

வேல மரங்கள் மிகுத்துக் கிடந்த காடு திரு வேற்காடு. அதில் இருந்த நாதர் வேற்காட்டு நாதர். (ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால், விருது பட்டி விருது நகர் ஆனது போல்) [லகர/தகரப் போலியில்] வேலக்காட்டை வேதபுரியாக்கி, வேதம், வேலமரங்களாய் வந்து வழிபடும் ஈசர் என்று பொருள் சொல்லி - இப்படியும் ஒரு கதை.

ஆகக் கதை, கதையெனப் பல தலங்களிலும் இறைவன், இறைவி, இடங்களின் பெயர்கள் திரிந்து கொண்டே போகின்றன. எல்லாம் அடிப்படைச் சொல்லின் ஓரிரு எழுத்துக்களை மாற்றி அமைத்துக் கொண்டு அமைந்தவை. இது போன்ற காட்டுக்களைக் காட்டிக் கொண்டே போகலாம். அப்படித்தான் இருக்கிறது இந்தக் கோபாலன்>கோவலன் என்னும் பொருத்தமும், அதுவும் ஒரேயொரு எடுகுறிப்பை (reference) நம்பி.}

இனிக் கோவலன் என்ற சொல்லை மாட்டோடு தொடர்புறுத்தும் பொருளுக்கு வருவோம். தமிழில் ஆயர் என்பவர் இடையர், கோவலர், அண்டர் என்று மூன்று விதமாய் பிரிக்கப் படுவர். இதில் கோவலர் என்பது மாட்டைக் குறித்துக் கீழே உள்ளது போலவே தமிழில் அமையும்.

கோ>கோவு (பசு மாடு)>கோவல் (மாட்டு மந்தை) + அர்

இங்கே முகன்மையானது மந்தை என்னும் பன்மைப் பொருள். ”மாட்டு மந்தை வைத்திருக்கிறவன், மாட்டு மந்தைக்குச் சொந்தக் காரன்” என்ற ஒரு பொருளை ”கோவலன்” என்ற தமிழ்ச் சொல் காட்டும். கோவலர் என்பது கோவலனின் பன்மை. இந்தப் பொருளில் ஆனால் பன்மையில் மட்டுமே, தன் காப்பியம் எங்கணும் இளங்கோ பயன்படுத்துகிறான். [அதே பொழுது கோவலன் என்ற சொல்லிற்கு இது மட்டுமே பொருளல்ல.] கோபால என்னும் வடமொழிச் சொல் சற்று நுண்ணிய அளவில் வேறுபடும். மாட்டைப் “பரிபாலிக்கிறவன்” கோபாலன். இங்கே மந்தை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்; வெறும் ஒற்றை மாடு கூட இருக்கலாம். ஆனாலும் ”கோவலன், கோபாலன்” என்ற இரண்டையும் ஒன்றிற்கொன்று சமனாகப் ”பத்திக்” காலத்தில் இருந்து பலரும் பாவித்து இருக்கிறார்கள். [சங்க காலத்தில் நானறிந்த வரை கோவலன் என்ற சொல்லே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. கோபால என்ற சொல் புழக்கத்தில் இல்லை. ஏதேனும் புறனடை இருந்தால் தெரிவியுங்கள். “விருத்த கோபால” என்பது இளங்கோவின் சொல்லாட்சியானால், தமிழிலக்கியத்தில் அதுவே முதல் சொல்லாட்சியாய் இருக்க வாய்ப்புண்டு.] கோவலன் = மாட்டு மந்தைக்குச் சொந்தக் காரன் என்ற பொதுப்பொருளை ஆயர்பாடிக் கண்ணனுக்கு ஏற்றியது, பொதுப்பெயரை தனியாளுக்கு விதப்பாய்ச் சொல்லும்
பழக்கத்தால் என்றும், கோவலன் என்ற சொல் கண்ணனுக்குப் பகரியாய் வந்தது பொருள் நீட்சியில் என்றும் உணர்க.

[கண்ணன் என்பது க்ருஷ்ணன் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து எழுந்தது என்று ஒரு கருத்து மின்தமிழ் மடற்குழுமத்தில் எழுந்தது. ஆடிப் போனேன். இப்படியாகத்தான் சொற்பிறப்புக்கள் பார்க்கப் படுமானால், நான் இந்தக் கட்டுரைத் தொடர் எழுதுவதில் பொருளில்லை. ”எல்லாமே சங்கதத்தில் இருந்து கடன்பெற்றது; தமிழில் ஒன்றுமே இல்லை” என்று ஏற்றுக் கொண்டு நான் போய் விடலாம். ”கருப்பன்” என்னும் சொல் தமிழா, இல்லையா? ”கருவேல மரம்” தமிழா, இல்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம் கல் என்னும் வேரில் இருந்து கருமைப் பொருளில் ஆயிரக் கணக்கில் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. (கல் எனும் வேரிற் பிறந்த சொற்களைப் பற்றி நான்கு பெரும் பொத்தகங்களே போட்டிருக்கிறார் பேரா. கு.அரசேந்திரன்.) அவற்றை எல்லாம் அப்புறம் வடமொழி என்று சொல்லவேண்டும். (கல் என்னும் வேரில் இருந்து கல்>கரு>கருநன்>கண்ணன் என்று பெயர் எழுந்ததாகத்தான் தமிழ்ச் சொற்பிறப்பு சொல்லுகிறது. உருநம்>உண்ணம் என்பது போல. உண்ணம் = உருமம் என்னும் வெய்யில் வேளை, மத்திய உண்ணம் = மத்தியாண்ணம் என்ற கலப்புச்சொல்லில் உண்ணம் என்ற தமிழும் இருக்கிறது.) கருத்தவன் தன் நிறத்தைச் சொல்லிக் கொள்ளத் தன்மொழியில் சொல்லில்லாமல் இருந்தான் என்றால், பிறகு என்ன சொல்லி தன்னை அழைத்துக் கொண்டான்? 65000 ஆண்டு இங்கே தெற்கு முனையில் குப்பை கொட்டியிருக்கிறானே? ”க்ருஷ்ண” என்று சொல்லை கி.மு.1200-1500ல் தெரிந்து கொள்ளும் வரை இவன் ஊமையாய் இருந்தானா? - என்றெல்லாம் மாந்தவியல், மொழியியல் சார்ந்து கேள்வி எழுகிறது.

பொதுவாய் உரையாடுவதில் ஓர் அடிப்படைச் சமதளம் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். “நீ தடுக்கில் பாய்ந்தால் நான் கோலத்தில் பாய்வேன்” என்பது உரையாடலுக்கு அழகல்ல. தமிழைச் செம்மொழி என்று சொல்லிவிட்டு, பின்னால் எல்லா வேரும் வடமொழியில் இருந்து பெற்றது என்றால் அப்புறம் செம்மொழி என்பதற்குப் பொருளில்லை. நான் நிற்கும் இருக்கையை நீங்கள் பிடுங்குகிறீர்கள் என்று பொருள். அந்த நிலையில் நான் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. "நீ வாங்கியதெல்லாம் கடன்” என்று சொல்லிவிட்டு, “போனால் போகிறது, வேண்டுமானால் என்கீழ் அடிமையாய் இருந்து கொள்” என்பது போல் இருக்கிறது. ”கண்ணன்<க்ருஷ்ண என்பது போன்ற கூற்றுக்களை இனித் தவிர்க்கலாம். காட்டு விலங்காண்டி நிலையில், குறிஞ்சி, முல்லையில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அறிவும், அதற்கான சொற்களும் தமிழில் 3800 ஆண்டுகளுக்கு முன் ஆதிச்ச நல்லூர் பழந்தமிழனுக்கு இருந்திருக்க வேண்டும் என்று ஒப்புவது நம்மை முன்கொண்டு செல்ல உதவும். We have to acknowledge some basic intelligence to our old Thamizan.]

”கோவலன் என்பது பொதுவாய்ச் செல்வந்தனைக் குறிக்கும். ஏனென்றால் மாடு என்றால் செல்வம்” என்ற கருத்து மிகவும் தட்டையாய் இருக்கிறது. செல்வன் என்ற சொல் இருக்கிற போது கோவலன் = செல்வன் என்று மாசாத்துவன் பெயரிடுவது சற்று சாத்தாரமாய்த் தெரிகிறது (சாத்தாரன்>சாத்தாரனம்>சாத்தாரணம்>சாதாரணம். இந்த விளக்கம் நீலகேசியில் இருக்கிறது. ஏதோ ஒரு இடுகையில் சொன்னேன். சட்டென ஏதென்று நினைவிற்கு வரவில்லை. சுருக்கமாய் சாத்தாரம் என்றே சொல்லலாம்.இந்தக் காலத்தில் “குப்பன், சுப்பன்” என்று அடையாளந் தெரியாத ஒரு பொதுத் தமிழனைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லுவது போல, அந்தக் காலத்தில் தமிழ்ப் பொது மாந்தன் “சாத்தன், சாத்தாரன்” என்று பெயரிட்டு அழைக்கப் பட்டிருப்பது நீலகேசியின் மூலம் தெரிகிறது.)

இனிக் கோவலனின் பொருளுக்கு வருவோம். விண்ணவன் ஆன கண்ணனின் மேல் கொண்ட ஈடுபாடு காரணமாய்க் கோவலன் என்று தன் மகனுக்கு மாசாத்துவான் பெயரிட்டான் என்றால், அதுவும் நகரத்தார் பழக்கம் அறியாதவர் கூற்று என்றே சொல்லுவேன். ஒரு 100, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வரை, சிவநெறிப் பெயர் அல்லாத, அல்லது ஊர்க் காவற் தெய்வங்கள் அல்லாத, பெயரைப் பிள்ளைகளுக்கு இடமாட்டார்கள். அதோடு அவர்களின் சமயக் குருவின் (சிவ நெறியாளர்) சொல்லை மீறி நகரத்தார் அன்று இருந்ததில்லை. பாண்டியநாட்டிற்கு (நின்றசீர் நெடுமாறன், சுந்தர பாண்டியன் காலம், பேரரசுச் சோழன் விசயாலயனுக்குச் சற்று முன்னால்) வந்த காலத்தில் இருந்தே சிவநெறியில் தான் இருந்தார்கள். பத்தி இயக்கத் தொடக்கத்தில் பல்லவர்/ பாண்டியர் காலத்தின் தொடக்கத்தில் நகரத்தார் சிவநெறிக்கு மாறியிருக்கலாம். அதற்குமுன் சோழநாட்டில் இருந்தபோது நகரத்தார் சமணம், ஆசீவகம், புத்தம் என்று பலநெறிகளில் இருந்திருக்கிறார்கள். பத்தி இயக்கம் தமிழகம் எங்கணும் மக்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது. [அதை இன்றளவும் நன்கு ஆய்ந்து அறிந்தோம் இல்லை. தொடவும் மறுக்கிறோம், தயங்குகிறோம். வென்றவர்கள் வரலாறு எழுதி வைத்ததால் உண்மை தெரியப்படாமலே போகிறது.] பத்தி இயக்கம் நகரத்தார்களையும் புரட்டியது. சிவநெறிக்கு மாறிய நகரத்தார்கள் ஒரு காலத்தும் விண்ணவ நெறியைத் தங்கள் சமயமாக 100, 150 ஆண்டுகளுக்கு முன்வரை பின்பற்றினார்கள் என்பதற்கு இதுவரை எந்தச் சான்றுகளும் இல்லை. இப்பொழுது கோவலன் / கோபாலன் என்ற பெயர்க்குழப்பத்தை வைத்து ஒரு முயற்சி நடக்கிறது. [இன்றுங் கூட சமண, ஆசீவகப் பழக்கங்களும், பெயர்களும், மரபுகளும் விட்டகுறை, தொட்டகுறையாய்ப் பலசான்றுகளோடு நகரத்தாரிடையே இருக்கின்றன. விண்ணவ சமயத்தை நகரத்தார் போற்றத் தொடங்கியது கடந்த 100, 150 ஆண்டுகளில் தான். அதுவும் சிவநெறியை ஒருபக்கம் வைத்துக் கொண்டே தான் நடந்து வருகிறது.]

இனி கோவலன் என்ற பெயருக்கும், கூடவே மாசாத்துவான், மாநாய்கன் என்ற பெயர்களுக்கும் காரணங்களைக் காண்போம்.

மாசாத்துவான் என்பது இயற்பெயர் அல்ல. அது ஒரு பட்டப் பெயர். மாநாய்கன் என்பதும் இயற்பெயர் அல்ல, பட்டப் பெயர். இயற்பெயரைச் சொல்லாமல், பட்டப் பெயர் வைத்து ஊருக்குள் அழைப்பது இன்றைக்கும் நகரத்தார் இடையே இருக்கும் பழக்கம். ”சேந்தனைய்யா வீடு, மாத்தளையார் வீடு, கொரட்டியார் வீடு” என்றெல்லாம் செட்டிநாட்டுப் பக்கத்தில் கூறிக்கொள்ளும் பழக்கம் உண்டு. மாசாத்துவான் என்பதற்கு ”பெரிய வணிகன்” என்றே பொருள்.

சால்தல் = இதற்குச் சேர்த்தல், பொருத்துதல் என்றே பொருள்; அதாவது பண்டமாற்றுச் செய்தல். இதன் பொருள் நீண்டு ”விலை சொல்லுதல், விற்றல்” என்று தொடர்ச்சியாய் அமையும். (இந்தையிரோப்பியத்தில் sale என்று சொல்லுகிறோமே, அது இதற்கு இணையானது.) சால்தலைச் செய்வது சாத்து. அது ஓராளையும் குறிக்கும், ஒரு கூட்டத்தையும் குறிக்கும். சாத்து என்பது ”சேர்த்து” என்னும் பலுக்கல் வழியாக வடபுலத்தில் சேத் ஆகும். சேத், செட்டி என்ற சொற்கள் தொடர்பு கொண்டவை தான். இவர்கள் வணிகர்கள். சாத்தன் என்பவன் சாலும் தொழிலைச் செய்பவன், வணிகன். மாசாத்தன் = பெரும் வணிகன். ”அதோ! அங்கே புகார் பட்டினப்பாக்கத்தில் தெரிகிறதே! அது யார் வீடு தெரியுமா? மாசாத்தன் வீடு”. அப்படித்தான் சிலம்பு சொல்லுகிறது. கடைசி வரை அவன் இயற்பெயர் என்னவென்று இளங்கோ நமக்குத் தெரிவிக்கவே இல்லை.

அடுத்தது மாநாய்கன். நாவுதல் = நீரைத் தள்ளுதல். அது துடுப்பாலும் இருக்கலாம், கையாலும் இருக்கலாம். நாவிப் போகும் கலம் நாவாய். கடலோடுவது பற்றிய தமிழ்ச் சொற்களை நான் இங்கு அடுக்கினால் அது விரியும். அதற்கு இது இடமல்ல. நாவிகன்>நாய்கன் = கடலோடி, மாநாய்கன் = பெரும் கடலோடி, பெரும் நாவாய்களுக்குச் சொந்தக்காரன். மாநாய்கனின் இயற்பெயரும் சிலம்பில் கிடையாது.

மாநாய்கன், மாசாத்தன் இருவருமே வணிகர்கள் (traders) என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். கிடையாது. ஒருவன் வணிகன். இன்னொருவன் வணிகம் செய்யக் கப்பல் கொடுத்துப் பொதினம் செய்கிறவன். இருவரும் பொதினர்கள் (business men). ஒருவன் சமணத்தில் இல்லறத்தான் [இறுதிக் காலத்தில் புத்தத்திற்கு மாறினான்]; இன்னொருவன் ஆசீவகத்தில் இல்லறத்தான். இந்தப் பொதினர்களைத் தான் பரதர் என்று சிலம்பும் சங்க இலக்கியமும் அழைக்கின்றன. [பரதர் வேறு, பரதவர் என்னும் fishermen வேறு.] [உரைசால் சிறப்பிற் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் - மனையறம் படுத்த காதையின் தொடக்க வரிகள். ”அரசருக்கு முடியெடுத்துக் கொடுக்கும் உரிமை பெற்றவர்கள்” என்பது இன்றைக்கும் நகரத்தாரிடம் இருக்கும் ஒரு தொன்மம்.]

சரி, மாசாத்துவான் என்ன வணிகம் செய்தான்? உப்பு, கூலம், மணி, மாணிக்கம், முத்து, .... இப்படி பல்வேறாய்க் கிடைக்கும் கற்கள் இது போன்று எது வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இவர்கள் உள்நாட்டு வணிகராயும் இருந்தார்கள், ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகர்களாயும் இருந்தார்கள். ஓரோவழி சிலம்பைப் படித்தால், கோவலன் ஏற்றுமதி இறக்குமதியில் தான் இருந்திருப்பதாய்த் தோற்றுகிறது. அவன் தந்தை உள்நாட்டு வாணிகனாய் இருந்திருக்க வேண்டும்,. ஏனென்றால் கவுந்தியடிகள் ”மதுரைக்கு உள்ளே போனால், இவன் தந்தையைத் தெரியாத வணிகன் யாரும் இருக்க மாட்டார்” என்று மாதரிக்குச் சொல்கிறாள். கண்ணகியே கூடத் தன் மாமனாரைத் தான் நெடுஞ்செழியன்முன் சொல்லித் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள். மாசாத்துவான் தமிழக உள்நாட்டு வணிகருக்கும், வேந்தருக்கும் கூட நன்றாய்த் தெரிந்தவனாய் இருந்திருக்கவேண்டும். அதே பொழுது, கோவலன் இவர்களோடு தொடர்பில்லாத இறக்குமதியாளர், ஏற்றுமதியாளரோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்திருக்க வேண்டும். அவனை மதுரையின் உள்ளூர் வணிகரோ, அரச அலுவரோ அறியாமல் இருந்திருக்கலாம். கோவலன் புகாரின் இறக்குமதி, ஏற்றுமதியாளரின் முன்னம் மீண்டும் விழிக்க வெட்கப் பட்டு, மதுரைக்கு (உள்நாட்டு வணிகம் செய்ய) விழைந்து வருகிறான். அப்படி வந்து சிலம்பு, மாணிக்கம் என்று தந்தையின் வணிகத்துள் போக முயல்கிறான்.

அப்படியானால், கோவலன் என்ற சொல்லின் பொருள் தான் என்ன என்று கேட்டால், கோவல் என்ற வினைச்சொல்லோடு அன் என்பதைச் சேர்த்தே நான் பொருள் சொல்லுவேன். மற்ற ஒப்பீட்டுச் சொற்களைப் பார்ப்போம்.

பாவல் + அன் = பாவலன் (பா-வல், பா-தல் = பாப் புனைதல்)
காவல் + அன் = காவலன் (கா-வல், கா-த்தல் = காப்பாற்றுதல்;)
ஏவல் + அன் = ஏவலன் (ஏ-வல், ஏ-தல் = கட்டளையிடுதல்)
நாவல் + அன் = நாவலன் (நா-வல், நாவு-தல் = நவிலுதல்)
இரவல் + அன் = இரவலன் (இர-வல், இர-த்தல் = இரவுதல்)

அதே போல கோ-வல் என்பது to govern, to administer என்று பொருள் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் சிலம்பில் கோவல் என்னும் தொழிலுக்குப் பெயர்ச்சொல்லாய்க் கோத்தொழில் என்ற சொல்லாட்சி மூன்று இடங்களில் வந்திருக்கிறது. கோத்தொழிலாளர் என்பவர் bureaucrats. கோ-த்தல் = இணைத்தல், சேர்த்தல், ஒழுங்கு படுத்தல், to compose, compile, arrange, reduce to order, to systematise. கோ-த்தல் என்பது கோ-வல் என்றும் மேலே உள்ளது போல் தமிழில் அமையலாம்.

மேலே சொன்ன மூன்று இடங்களைப் பார்ப்போம். முதலில் காடுகாண் காதை

கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியல்நிலம் போல 60-61

அரசின் அலுவலரோடு அரசன் முரண்பட்டு அரசாண்மை இழந்த நாட்டைப் போல (You see, even a king cannot go against bureaucrats, it can spoil the govenance of a country.)

இரண்டாவது கட்டுரை காதை

வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பிக்
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என
இடுசிறைக் கோட்டத்து இட்டனர் ஆக (100-103)

வார்த்திகனைக் அரசன் ஏவல் செய்வது பற்றி, இளைய அரசதிகாரிகள் (கோத்தொழில் இளையவர், junior bureaucrats) ”அரசநீதி இல்லாது புதையலைக் கவர்ந்த பார்ப்பான் இவன்” என்று கூறி கள்வரை இடும் சிறைக்கோட்டத்தில் இட்டனர் ஆக.

மூன்றாம் சொல்லாட்சிதான் இங்கு நமக்கு மிக முகன்மையானது. கட்டுரை காதையில் 152-154 ஆம் அடிகளில்

”முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வான்
பரதன் என்னும் பெயரெனக் கோவலன்”

என்று சொல்லுவதை ஆழ்ந்து படித்தால் ஒரு நகைமுரண் சட்டென்று புலப்படும். முற்பிறப்பில் கோவலனின் தொழில் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வது = governance, bureaucracy, administration. இப்பிறப்பில் அவன் தொழில் பரத்தல் (to say a price or to sell for a price) செய்வது. பரத்தல் என்றவுடன் இந்தக் காலத்தில் பொருள் தெரியாமற் தடுமாறலாம். ஆனால் மலையாளம் தெரிந்தால் குழப்பம் வராது. பரயுதல் என்று இன்றும் மலையாளத்தில் சொல்கிறார்களே! “இது விலை எந்தா, பரயு” ஒன்றை பரத்தியே, அல்லது பரத்தியதைக் கேட்டே நாம் விற்கவும், வாங்கவும் செய்கிறோம். This is nothing but business.

ஆக இப்பிறப்புத் தொழிற்பெயர் முற்பிறப்பில் இயற்பெயராயிற்று. முற்பிறப்புத் தொழிற்பெயர் இப்பிறப்பில் இயற்பெயராயிற்று. It is as simple as that. இளங்கோ இங்கே ஒரு பெயர் விளையாட்டைச் செய்கிறான். அவன் சார்ந்த ”ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”கொள்கையை நிலைநாட்டுவதில் பெயர்விளையாட்டும் நடக்கிறது. மேலே கொடுத்துள்ள மூன்று வரிகளில் இளங்கோவே கோவலனின் பெயர்முடிச்சை அவிழ்த்து விடுகிறான். அதனால் தான் நகைமுரண் என்று மேலே சொன்னேன். [முற்பிறப்பு என்பது செயினத்திலும், ஆசீவகத்திலும் ஏற்கப் படக் கூடியதே. செயினம், ஆசீவகம், புத்தம், ஆகியவற்றின் கொள்கை ஊடாட்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் சிலப்பதிகாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.]

கோவலனின் நிறம் பற்றிச் சொல்லுவதாய்க் கூறியிருந்தேன். அது மங்கல வாழ்த்துப் பாடலில் அறிமுகப் படுத்தும் போதே சொல்லப் படுகிறது.

மண் தேய்த்த புகழினான் மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பாள் மன்னோ? (36-39)

இசை பாடும் பெண்கள் தங்கள் ஆயத்தில் பாராட்டும் செவ்வேளாய் கோவலன் நிறத்தை உணர்த்துகிறார்கள்.

ஆகச் சிவந்தவன் மாநிறத்தவளைக் கட்டிக் கொள்கிறான். இதில் உள்ள ”நிறப் பலக்குமம் (colour complexity)” பின்னால் மாதவியைப் பார்க்கும் போது வெளிப்படுகிறது.

இனி மாதவிக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி..

US Group to file court action against US vote on IMF loan

இப்படி ஏதாச்சும் நடந்தாத்தான் நல்லது. சிங்களனுக்குப் பணம் கிடைக்காமப் போனாத்தான் அவன் போரை நிறுத்த வாய்ப்புண்டு.

நம்மூர்லே தான் அறிவிக்காத தணிக்கையும், மிரட்டலோடு கூடிய மோனமுமா ஆயிருச்சே? தேர்தலில் ஒரு பயலும் ஈழம் பத்திப் பேசமுடியாம ஆக்கிட்டானுவளே?

அப்பா, தமிழ்நாட்டுத் தமிழர்களா!

ஈழம்னு நேரே பேசாட்டிலும், மறந்துராதீங்கப்பா? “பேராயம் (congress) இந்தத் தேர்தலில் பூண்டோட அழியணும், அது உங்களாலே முடியும்.

அன்புடன்,
இராம.கி.

US Group to file court action against US vote on IMF loan
[TamilNet, Sunday, 22 March 2009, 14:07 GMT]
Bruce Fein, counsel for Tamils Against Genocide (TAG), a US-based activist group, said Sunday that TAG is preparing to file a complaint in the United States District Court for the District of Columbia seeking a preliminary and permanent injunction, and a declaratory judgment to prohibit the United States Treasury Secretary from voting to support the request by the Government of Sri Lanka (GOSL) for $1.9 billion in economic assistance from the International Monetary Fund. TAG’s complaint alleges that a United States vote in favor of the assistance would violate a federal statute, 22 USC 262d, intended to prevent United States financial complicity in harrowing human rights abuses by IMF member governments, Fein said.



US Secretary of Treasury, Timothy Geithner

IMF icon

Attorney Bruce Fein

Professor Francis Boyle, professor of international law at the University of Illinois College of Law.
If the Court agrees with TAG’s claim, an injunction or a declaratory judgment would persuade other IMF members who follow the lead of the United States to vote against the assistance, which would kill the GOSL’s application.

Professor Francis Boyle, professor at University of Illinois College of Law earlier commenting on the IMF loan said: “Concerning the proposed loan to Sri Lanka by the International Monetary Fund, United States domestic law makes it quite clear that the Obama Administration is obligated to oppose the loan. And given the weighted voting system for the IMF Board of Directors, a United States vote against the loan would be tantamount to a veto,” and added, “for the Obama Administration to violate the Statute [22 USC 262d] and vote in favor of the proposed IMF loan to support the GOSL's "policy goals" would render the United States government "complicit" with Sri Lanka's genocide.

The U.S. law, 22 USC 262d, declares in relevant part:
The United States government, in connection with its voice and vote in...the International Monetary Fund shall advance the cause of human rights, including by seeking to channel assistance towards countries other than those whose governments engage in---

(1) a pattern of gross violations of internationally recognized human rights, such as torture or cruel, inhumane, or degrading treatment or punishment, or prolonged detention without charges, or other flagrant denial to life, liberty, and the security of person...."
According to Fein, TAG plans to submit to the court, among other things, the following information as evidence of “pattern of gross violations of Human Rights” by Sri Lanka:
Statements by international agencies including UNHCR, RSF, Amnesty and HRW alleging that Sri Lanka has committed war crimes.
Video recording of Sri Lanka’s Defense Secretary Gotabaya Rajapakse speaking on the killing of Lasantha Wickremetunge, justifying shelling of civilian hospitals, and the arbitrary abduction and incarceration of journalist Vidyadaran
Model indictment charging genocide war crimes, and torture against Defense Secretary and Sri lanka's Army Commander Sarath Fonseka submitted to the Department of Justice.
Statements by the British Foreign Secretary David Miliband concluding that the GOSL is willing to perpetrate genocide in its conflict with the LTTE.
When asked if IMF may point to the global economic crisis as a cover for the loan, Fein said, "The statute creates no exceptions for responding to a global economic crisis. It states categorically that the policy of the US is not to assist financially through the IMF countries implicated in a pattern of gross human rights abuses period, with no question marks, semi-colons, or commas. Our toughest legal hurdle is that the statute seems to give the Secretary discretion in determining whether the human rights violation threshold has been satisfied, but even discretionary authority can be overturned for an abuse of discretion. And TAG is not asking for an injunction preventing the IMF from funding the GOSL, only to prevent the US casting its 17% minority vote in favor."

Fein further added that a case against the loan would further add to the credibility of TAG's model indictment submitted to the Justice Department which charges Sri Lanka of genocide against Tamils. "If anything, this lawsuit would reinforce our genocide effort by again highlighting the grisly behavior of the Rajapaksa regime and educating the public and government officials about the matter. It will not prejudice the Attorney General or Treasury Secretary against us. Indeed, they might ask TAG that if we believed the GOSL is involved in ongoing genocide, why aren’t we seeking to block IMF or World Bank funding for human rights abuses," Fein said.

Fein added: "We have an overwhelming factual case for believing that the GOSL is guilty of horrifying human rights abuses that satisfy the statutory standard of section 262d. The more difficult question is whether the statute can be enforced in a court of law, which is the usual course, or whether it entrusts the decision exclusively to the Secretary of Treasury. The answer is not self-evident because the statute does not say the Secretary’s decision is not subject to judicial review or that it does not create a private cause of action. Clearly, the intended beneficiaries of the statute are the would-be victims of the human rights violations, and TAG is a stand-in because they cannot sue themselves given their plight in Sri Lanka."

நன்றி www.tamilnet.com

Saturday, March 21, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3

இப்பொழுது கண்ணகியின் பெயர்க் கரணியம் பார்ப்போம். அவள் கண் பெரியது, கருமையானது, மலர் விரிவது போலக் காட்சியளிப்பது. இதைக் காப்பியம் எங்கணும் திரும்பத் திரும்ப வெவ்வேறு மாந்தர் வழியேயும், தானாகவும் இளங்கோ சொல்லுகிறார். பிறந்தபோதே, குழவியின் உருண்ட, பெருங் கண்கள் மாநாய்கனையும், அவன் கிழத்தியையும், மயக்கிற்றோ என்னவோ, கண்ணகி என்று பெயரிட்டிருக்கிறார்கள். [இன்றுங் கூடக் கண்ணாத்தாள், கண்ணம்மை என்ற பெயர்கள் நகரத்தாரிடையே பெரிதும் புழக்கமானவை. நாட்டரசன்கோட்டைக் கண்ணாத்தாள் கோயில், கண்ணகியை நினைவூட்டுவதாகவே அவர்களிடையே ஓர் ஐதீகம் உண்டு.]

கண்ணகி என்ற சொல்லை மூன்று வகையில் பிரிக்கலாம்.

1. கண் + அகி = கண்ணகி. அகுதல் = உள்ளாதால். (அகம் என்ற பெயர்ச்சொல் அகுதல் வினையில் இருந்து எழுந்ததே. உள்ளுதலில் இருந்து உள்ளம் போல இங்கு கொள்ள வேண்டும்.) விதப்பான கண்ணைப் பொதுமைச் சொல்லால் குறிப்பிடும் வழக்கம் தமிழில் உண்டு. ”காளைன்னா அவந்தாய்யா காளை! கண்ணுன்னா அவள் கண்ணு மாதிரி வருமா?”
2. இரண்டாம் முறையில் கண் + நகி என்று பிரிக்கலாம். நண்பர் வேந்தன் அரசு மின் தமிழ் மடற்குழுமத்தில் இதைக் காட்டியிருந்தார். நகுதல் என்பது மலர்தலாகும். சிரித்தலையும் குறிக்கும். இங்கே கண் மலர்ந்தவள் என்று பொருள் கொள்ளும். இளங்கோ பல இடத்தும் மலர்க் கண்ணி என்று சொல்லுவார்.
3. மூன்றாம் முறையில் ”கண்ணை” என்ற எழுத்துவழக்குச் சொல் (நக்கண்ணை என்ற சங்கப்புலவர் பெயர் நினைவுக்கு வருகிறதா?) பேச்சுவழக்கில் கண்ணகி என்று முதலில் ஆகிப் பின் எழுத்து வழக்கிலும் ஏற்கப் பட்டிருக்கலாம். [புவ்வுதலில் கிளர்ந்த சொல் புவ்வு>பூ என்று செந்தமிழில் ஆயிற்று. ஆனால் தென்பாண்டி நாட்டுப் பேச்சுவழக்கில் இன்றுங் கூடப் பூவு என்றே பலுக்குவர். இப்பொழுதோ, உரைநடையில், மாந்தர் உரையாட்டுக்களைச் சுட்டும் வட்டாரத் தமிழாய் ”பூவு” அப்படியே எழுதப்படுகிறது. இப்படி உகரம் கூடச் சேர்வதை euphonic vowels என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது பலுக்க எளிமையாக்கும் உயிர்கள். இதனூடே உடம்படு மெய்களும் சேர்வது உண்டு (இங்கே வகரம் சேர்வது போல). அண்ணா, அண்ணாவி ஆவது இதுபோலத்தான். பூதம்>பூதகி ஆவதும் இதே முறைதான். பூதம், வட சொல் அல்ல. bhuutha என்று தவறாகப் பலுக்காத வரை அது தமிழ் தான்.]

மேலே கூறிய மூன்றிலும் ”கண்ணகி”யின் அடிப்படைக் கருத்து கண் என்பதே. ”கண்ணால் பெயர் பெற்றவள் கண்ணகி”. இதன் சான்றுகளைச் சிலம்பில் இருந்தே பார்க்கலாம்.

இன்னொரு செய்தி. கண்ணகி என்ற பெயர் சிலம்பிற்கு முன்னேயும், புறநானூற்றின் பின்புலத்திலேயே, பயிலுகிறது. புறம் 142-147 வரை உள்ள பாட்டுக்களில் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பரத்தையின் பால் புறத்தொழுக்கம் கொண்ட பேகனை அவன் மனைவி கண்ணகியோடு சேர்ந்து வாழும்படித் தெருட்டியிருப்பார்கள். கண்ணகி என்ற பெயரை பெருங்குன்றூர் கிழார் “அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை” என்று பெயர்ப்பொருளால் உணர்த்தியிருப்பார். ஆகக் கண்ணகி என்ற பெயர் குறைந்தது 2100 ஆண்டுகளுக்கு முந்திய பழமை வாய்ந்தது; கர்ணகி என்று வடபுலப் பலுக்கலுக்கும் முந்தியது.

சிலம்பிலும் கண்ணகியின் பெயர்ப்பொருள் பலவிடத்தும் வெளிப்படும். மனையறம் படுத்த காதை - 11 ஆம் அடியில் ”கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்” என்று இளங்கோவடிகள் பேசுவார். ”பெருத்த மலர் போன்ற கண்”. ”பெருத்த கண்” என்ற பெயரின் வடமொழியாக்கம் நகரத்தாரிடையே இன்றும் புழங்கும் பெயரான விசாலாட்சி யாகும். [காசிக்குப் போய் விசாலாட்சியை வணங்குகிறோம் இல்லையா? சாலாட்சி, சாலா என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும்.] மேலே கயல் மலர்க் கண்ணி என்று கொண்டால் அது மீனாட்சியைக் குறிக்கும். [மீனாட்சியும் நகரத்தாரிடையே பெரிதும் புழங்கும் பெயர் தான்.] கயமலர்க் கண்ணி, கயல்நெடுங் கண்ணி, கருந்தடங் கண்ணி, கருங்கயற் கண்ணி, நெடுங்கயற் கண்ணி, தடம்பெருங் கண்ணி போன்ற பெயர்களும், அதன் மடக்குகளும் (permutations), பிணைப்புகளும் (combinations) விசாலாட்சிக்கும், மீனாட்சிக்கும் பல்வேறு விதமாய்ப் பொருந்தும் பெயர்கள் தான். இவற்றைச் சமயப் பெயர்கள் என்று கொள்ளாமல், கண்ணை விதப்பதாகவே கொண்டால், ”கண்ணகி”யின் பொருட்பாடு விளங்கும். அதே மனையறம் படுத்த காதையில் கண்ணகியின் நலம் பாராட்டும் கோவலன்,

அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது (49-52)

என்கிறான்: ”செவ்வேள் தன் நெடுவேலை இரண்டாக்கி, உன் செவ்வரி படர்ந்த மழைக்கண்ணாய் ஆக்கினனோ?” ஆகக் கண்ணகியின் கண்தான் எல்லோரையும் ஈர்த்தது, கோவலனையும் சேர்த்து. இது போன்று, கண்ணைப் பாராட்டிக் கொற்றவையின் உறுப்பாக்குவது தமிழின் நெடிய திணைமரபு. [கொற்றவைத் தோற்றம் அல்லவா கண்ணகி கொள்ளப் போகிறாள்?]

அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில்,

திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரிய
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப
பவள வாள் நுதல் திலகம் இழப்ப
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப 52-56

என்ற வரிகளிலும் கண்ணகியின் கண் ”செங்கயல் நெடுங்கண்” என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. [இங்கே ”திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரிய” என்பது ஒளிர்கிற நிலவைப் போன்ற கண்ணகியின் முகம் வியர்வதைக் குறிக்கிறது; ”திங்கள் வாள்முகம்” என்றவுடன் நம்மையறியாமல் பலரும் பூரணை நிலவையே நினைக்கிறோம். மாறாகத் திங்களின் இடைப்பட்ட மதியை எண்ணுவது நல்லது. அதாவது சற்றே கருத்த, புள்ளி புள்ளியாய் வியர்வை படர்ந்துள்ள ஒளிமுகம். அடுத்து, மாநிறத்தாரின் நெற்றி, அடர்பவள நிறத்தைக் காட்டுவது இயற்கை. மறந்து விடாதீர்கள், மாநிறம் என்பது முற்றிலும் கருப்பல்ல. அது ஒரு கலவை நிறம். தமிழரில் 100க்குத் 90/95 பேர் மாநிறம் தான். மீந்திருக்கும் 5/10 வெள்ளை/சிவப்பால் தான் தமிழ்க் குமுகாயத்துள் பல உளவியற் கூத்துக்கள் நடைபெறுகின்றன.]

நாடுகாண் காதையில் ”கயல்நெடுங்கண்ணி (76)” என்று வரும். காடுகாண் காதையில் ”கருந்தடங் கண்ணி (166)” என்று வரும். வேட்டுவ வரியில் 16 ஆம் பாட்டில், வேட்டுவப் பெண்ணிற்கும் கூடக் “கயமலர் உண்கண்ணாய்” என்ற விவரிப்பு வரும். அடைக்கலக் காதையில் கவுந்தி கண்ணகி பற்றி மாதரிக்குச் சொல்லியது ”கருந்தடங் கண்ணி (128)” என அமையும். கொலைக்களக் காதையில் மாதரி இல்லம் நீங்கி கோவலன் மதுரைக்குள் போகும் போது, கண்ணகியை விட்டுச் செல்வதை ஆசிரியர் ”கருங்கயல் நெடுங்கண் காதலி” (94) என்று சொல்லுவார். துன்ப மாலையில் ”என் கணவன் கள்வனோ?” என்று சூரியனிடம் கேட்கையில், வானில் எழுந்த குரல்:

கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மதராய்
ஒள்ளெரி யுண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் (52-53)

என்று விடையிறுக்கும். ஊர்சூழ்வரியில், இறந்து கிடந்த கோவலன் அருகிற் கண்ணகி அழுது, ஆர்ப்பரித்த பின்னால் நடப்பதை ஆசிரியர்,

என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையார்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் (72-75)

என்றே சொல்லுவார். வாழ்த்துக் காதையில் செவிலித்தாய் கூற்றும்,

மடம்படு சாயலாள் மாதவி தன்னைக்
கடம்படான் காதற் கணவன் கைப்பற்றிக்
குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த
தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்
தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர் - 3

என அமையும்.

ஆகக் கண்ணால் விதந்தவள் கண்ணகி ஆனாள். இதைச் சிலம்பதிகாரம் நெடுகிலும் காணலாம். அந்தக் கண்தான் அவளைப் பலரும் ஈர்க்கக் கரணியமாய் இருந்திருக்கிறது.

சிலம்பு தவிர்த்த பல்வேறு கண்ணகி-கோவலன் கதைகள், கூத்துக்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாடகங்கள் ஆகியவற்றை இந்தத் தொடரின் முடிவிற் பார்க்கலாம். வால்மீகி இராமாயணத்திற்கு மாறாக எத்தனை இராமயணக் கதைகள் விதம் விதமாய் எழுந்திருக்கின்றன? சீதையை இராவணன் மகளாகச் சொல்லும் இராமாயணம் கூட இருந்திருக்கிறது. அது போலக் கண்ணகியைப் பாண்டியன் மகளாய் உருவகிக்கும் கதைகளும் உண்டு. [சிலம்பிலே கூட வாழ்த்துக் காதையில், "தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில் நல்விருந்து ஆயினன்; நான் அவன்தன் மகள்” என்று ஒரு வாசகம் வரும். அவற்றையெல்லாம் இங்கு பேசமுற்பட்டால் கட்டுரை பெரிதும் நீளும். [வேண்டுமானால் இன்னொரு முறை பார்க்கலாம்.]

திரு.நா.கணேசனின் மடலில் உள்ள வேறு புள்ளங்களுக்கு (points) என் மறுமொழிப்பை இத்தொடரின் முடிவில் தருகிறேன். அதற்கு முன், கோவலனின் பெயர்க்காரணம் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, March 20, 2009

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 2

இனி இராம.கி..யின் மறுப்பு.

திரு.நா.க. எடுத்துக் கூறும் ”கர்ணக” என்ற சொல்லிலிருந்தே தொடங்கலாம். மோனியர் வில்லியம்சு அகரமுதலி அதற்கு pericarp of a lotus என்று பொருள் தந்து, இந்தச் சொல்லாட்சி மகா பாரதத்திலும், பாகவத புராணத்திலும் இருப்பதைக் கூறும். [வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றில் இந்தச் சொல்லாட்சி கிடையாது போலும்.] பாகவத புராணம் என்பது தெற்கே இருந்து எழுதப் பட்டதாகவே பலரும் சொல்கிறார்கள். அதன் காலம் கி.பி. 650 - 1000 க்குள் இருக்கக் கூடும். சில அறிஞர்கள் பாகவதத்தின் ஆசிரியர், நாதமுனி காலத்தவர் என்றும், தென்னாட்டின் ”பத்தி” இயக்கச் சாரத்தைச் சங்கதத்தில் பதியவே, பாகவதம் எழுந்தது என்றும், அதன் நடை வேத நடை போற் தொனித்தாலும், மற்ற சான்றுகளை வைத்துப் பார்க்கையில், அது வேத காலத்தில் எழ வாய்ப்பே இல்லை என்றும் சொல்லுகிறார்கள். (Daniel Sheridan, The Advaitic Theism of the Bhagavata Purana, South Asia Books, 1986)

தென்னாட்டில் எழுந்த சங்கத நூலில் தென்னிந்தியச் சொல்லாட்சிகள் பலவும் ஊடுறுவப் பெரிதும் வாய்ப்புண்டு. அடுத்து, பாரதக் கதை கி.மு. 800 களில் இருந்தே துணைக் கண்டம் எங்கணும் சிறிது சிறிதாகப் பரவி யிருந்தாலும், மகா பாரதத்தின் முதற் பதிப்பு பெரும்பாலும் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்றும், இன்றைக்கும் இருக்கும் வடிவில் இறுதிப் பதிப்பு வந்தது கி.பி. 4 ஆம் நூற்றாண்டு என்றும் தான் அறிந்தவர் சொல்லுகிறார்கள். அதாவது 800 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாய் மகாபாரத்துள் இடைச்செருகல்கள் இருந்திருக்கின்றன. [விக்கிபீடியா அப்படித்தான் சொல்லுகிறது.]

”கர்ணக என்ற சொல் சங்கதத்துள் எப்போது வந்தது?” என்று கேட்டால், கி.மு.800-ல் இருந்து கி.பி.400-க்குள் எப்பொழுது வேண்டுமானாலும் வந்திருக்கலாம் என்றே சொல்ல முடியும். அதே பொழுது, ”அச்சொல்லைக் கேட்டவுடனேயே, வடமொழி என்று எப்படிச் சிலர் உறுதியாய்க் காட்டுகிறார்கள்?” என்று எனக்குப் புரியவில்லை. தமிழென்று வந்தால் ஆயிரம் சான்றுகளைக் கேட்கிறோமே? (அப்படிக் கேட்பதில் கொஞ்சங் கூடத் தவறில்லை.) அதே அளவிற்கு வடமொழிச் சான்றுகளைத் துழாவுகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை. ஏன் ஆய்வாளர்கள் சங்கதச் சான்றுகளின் முன்னால் அமைதியாக இருக்கிறோம்? அதற்கு உரியவர்களைக் கேள்வி கேட்கலாமே? வேண்டுமானாற் சொல்லுகிறேன், உங்கள் காதைக் கொடுங்கள், ”மோனியர் வில்லியம்சில் தாமரைப் பொகுட்டைக் குறிக்கும் கர்ணகா என்ற சொல்லிற்கு வேரை அடையாளம் காட்டவே இல்லை.”]

கருணிகை என்ற சொல்லைத் தமிழ் அகரமுதலிகள் ”பூவினிற் கொட்டை, தாமரைப் பொகுட்டு, காயின் நெற்று” என்ற பொருள்களில் பதிவு செய்திருக்கின்றன. பூவினிற் கொட்டை, காயின் நெற்று ஆகியவை சங்கதத்தில் இல்லாப் பொருட்பாடுகள். [சூரிய காந்திப் பூவின் நடுவில் இருப்பதும் கூடக் கருணிகை தான்.] இவற்றை ஓர்ந்து பார்த்தால், சொல்லின் வேர் தெற்கே இருப்பதற்கே வாய்ப்பு உண்டு என்று புரியும். குல்>குரு>கரு என்ற சொற்பிறப்பில் கருத்தல் என்ற வினை வித்துதற் பொருளைச் சுட்டும். கருத்தலின் பெயராய்க் கருணம்> கரணம் என்பது அமையும். கருத்தல் = செய்யுதல் என்ற பொருளில் கரணியம், கருமியம் என்ற தமிழ்ச்சொற்கள் “காரண - காரியங்களைக்” குறிக்கும். நெற்றும் கூட ஒரு விதையே. கொட்டை என்பது விதைகளைக் கொண்டது. தாமரை மலரின் இதழ்கள் காய்த்து விழுந்த பின்னும், தாமரைப் பொகுட்டு தன் புதலில் (=தாவரம்) நிலைத்து நிற்கும். பின்னால், முதிர்ச்சியடைந்த பொகுட்டில் குழிவுகள் ஏற்பட்டு, உள்ளிருக்கும் முற்றிய, கரும் பழுப்பு (black brown) நிறம் பெற்ற விதைகள், குழிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரிந்து, பொகுட்டுத் தண்டோடு வளைந்து கீழ்நோக்கித் தொங்கும் போது, நீருக்குள் விழுந்து மண்ணில் நான்றிக் கொள்ளும். கருணிகை என்பது விதையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கொட்டை. அது தாமரையிலும் உண்டு. கை என்பது குறுமைப் பின்னொட்டு (Diminutive suffix) [காட்டு: குடி> குடிகை> குடிசை]

இதே போலக் கன்னுதல்>கன்னித்தல் என்ற வினை, கருத்தலைக் குறிக்கும். கன்னித்தல் என்பது பழுத்தலைக் குறிப்பது இதன் தொடர்ச்சி தான். கனி என்ற சொல் இதன் வழி பிறக்கும். கன்னித்தலைச் சங்கதம் ஜனித்தல் என்று உள்வாங்கிக் கொள்ளும். கன்னுதல்>கன்னித்தலில், உள்ள ககரத்தைப் போக்கி, ஈனுதல், ஈனித்தல் என்பவை எழுந்து, பிள்ளை பெறுதலைக் குறிக்கும். கன்னிகை என்ற சொல் பிள்ளை ஈனக் கூடிய பெண்ணை மட்டும் அல்லாமல், விதை தரும் தாமரை மொட்டையும் குறிக்கும் என்றே தமிழ் அகரமுதலிகள் பதிவு செய்கின்றன. இங்கும் கை என்பது குறுமையைக் குறிக்கும் ஈறு.

மொத்தத்தில் கருணிகை, கன்னிகை ஆகிய இரண்டுமே அகரமுதலிகளில் பதிவுற்ற நல்ல தமிழ்ச் சொற்கள். இவை இரண்டிற்கும் சங்கதத்தில் வேர் தேடிக் கொண்டிருந்தால் கிடைக்காது.

சரி, நிகண்டுகளையும் பார்ப்போமா? தாமரைக் கொட்டையின் பெயராகச் சூடாமணி நிகண்டு ”பொகுட்டு, கன்னிகை” என்பவற்றைத் தரும். கண்ணிகை/கண்ணகி என்ற சொல் அங்கு இல்லை. திவாகரம் 833 ஆவது நூற்பா, ”பொகுட்டே, பூவினுள் கொட்டை ஆகும்” என்று குறிக்கும். பொகுட்டு, தாமரைக்கு மட்டும் விதப்பானது அல்ல, இந்த நூற்பாவின் பாட வேறுபாடாய், ”பொகுட்டே கன்னிகை, பூவினுட் கொட்டை” என்றும் சொல்லப் பட்டிருக்கும். இது போக, திவாகரத்தின் 835 ஆம் நூற்பா,

முகை, நனை, கலிகை, முகிழ், சினை, கோரகம்,
நகை, கன்னிகை, போகில், அரும்பு, மொட்டே

என்றும் சொல்லும். ஆகக் கன்னிகை என்பது பொதுவாய் மொட்டைக் குறிக்கும் என்றே அறியப் படுகிறது; தாமரைக்கென விதந்து சொல்லப் பட்டது அல்ல.

சரி, ஒரு பேச்சுக்குக் கர்ணி என்பதைச் சங்கதச் சொல் என்றே கொள்ளுவோமே!. இப்பொழுது, கர்ண என்பதைத் தமிழில் எப்படி எழுதுவீர்கள், கன்னன் என்றா, கண்ணன் என்றா? சத கர்ணி என்பதை ”நூற்றுவர் கன்னராய்” ஆக்கிய இளங்கோ, அதே முறையில் ”கர்ணகி” என்ற சொல் சங்கத மூலம் என்றால் ”கன்னகி” என்று தமிழிற் சொல்லாமல், ”கண்ணகி” என்று எழுதுவாரோ? உருப்படியான, இலக்கணம் தெரிந்த, இருமொழி இடையாட்டம் புரிந்த, ஓர் இலக்கியவாதி என்று கூடவா இளங்கோவடிகளை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்? கர்ண என்பது மூலமானால், ஓரிடத்தில் கன்னர் என்றும், இன்னோரிடத்தில் கண்ணகி என்றும் சொல்வது எப்படி? ஏதோ ஒன்று, உதைக்கிறது அல்லவா? எனவே, கர்ணக - சங்கதச்சொல் என்னும் முதற் கருதுகோள் தவறு தானே?

கண்ணகிக்கு மூலமாய்க் கர்ணகியைச் சொல்லி, பின் தாமரை மொட்டைக் கொண்டுவந்து, அது இலக்குமியைக் குறிக்கும் ஸ்ரீ என்று சுற்றி வளைத்துத் தொடுத்து, விண்ணவக் குறியீட்டை ஏன் இங்கு சுட்ட வேண்டும்? உலகையே கண்ணன் மூலம் பார்க்க விழையலாம் தான். இருந்தாலும், அதற்கு ஒரு வரைமுறை இல்லையா? நம் உகப்பை இளங்கோவின் மேல் ஏற்றினால் எப்படி?

இலக்குமி என்பவள் செல்வத்திற்கான குறியீட்டைக் குறிப்பவள். அந்தக் குறியீடு விண்ணவத்திலும் உண்டு. செயினம், ஆசீவகம் ஆகிய மற்ற நெறிகளிலும் உண்டு. [ஆசீவகனான மாநாய்கனுக்கு இலக்குமி ஒன்றும் வேண்டாத தெய்வம் இல்லை. ஆசீவகம், செயினம் ஆகியவற்றின்படி, இலக்குமியும் ஓர் இயக்கி தானே? செயினனான மாசாத்துவனுக்கும் (முடிவில் புத்த நெறியாளனாகிப் போனான்) இலக்குமியின் பெயர் ஒன்றும் ஏற்க முடியாதது இல்லை. கோவலனின் சமயத்தை நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அவன் காதற் கிழத்தியும், மகளுமோ புத்தசமயம் புகுகிறார்கள். ஆழ்ந்து பார்த்தால், அந்தக் குடும்பம் சமயப் பொதுமை கொண்டதாகவே தென்படுகிறது. இப்படி இருந்தும் அந்தக் குடும்பத்திற்கு விண்ணவச் சார்பை ஏன் கொணர வேண்டும்? “நாவல்” எழுதுபவராய் இருந்தால் இளங்கோவடிகள் எல்லோரையும் ஒரே சமயத்தவராய்க் காட்டிப் புகழ் பாடியிருக்கலாமே?] இன்றைக்கும் கூட விண்ணவனை வணங்காத, அதே பொழுது சிவ வழிபாட்டில் பெரிதும் ஆழ்ந்திருக்கிற, நகரத்தார் வீடுகளில் பாடுவார் முத்தப்பரின்

காடுவெட்டிப் போட்டு கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு.

என்ற செல்வ நிலைப்புப் பாட்டு, இலக்குமியை வேண்டியே சொல்லித் தரப்படும். அது தெரியாத அகவை மூத்தோர் செட்டிநாட்டில் இருக்க மாட்டார்கள். இலக்குமி, அலர்மேல் மங்கை (அலமேலு என்று சுருக்கிச் சொல்லுவார்கள்) என்ற பெயர்கள், வழிவழியாய் வந்து, நகரத்தாரிடம் இன்றும் பரவலாகப் புழங்குபவை. இவை விண்ணவத்தால் தூண்டப்பட்டவை அல்ல. எனவே

போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதேத்தம் வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர் மன்னுங் கண்ணகி என்பாள் மன்னோ?
- மங்கல வாழ்த்துப் பாடல் (26-29)

என்று சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் வருவது வியப்பே இல்லை. ”போதில் ஆர் திரு” என்பது ”அலர்மேல் மங்கை” தான். இங்கே ஒப்புமையை ஒப்புமையாய்ப் பார்க்காமல், கண்ணகியை அலர்மேல் மங்கையின் அவதாரம் என்பது ஓர் உயர்வு நவிற்சியாய், உங்கள் பொருளை இளங்கோவின் மேல் ஏற்றிச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணியாய்த் தோன்றவில்லையா?

இந்த மங்கல வாழ்த்துப்பாடல் அடிகளில், வந்திருந்த மாதர்கள் சொல்கிறார்களாம்: “இவள் அலர்மேல் மங்கையின் வடிவம் போல இருக்கிறாள், அருந்ததியின் திறம் கொண்டவளாய் இருக்கிறாள்”. இத்தோடு மங்கல வாழ்த்தில் நிறுத்தவில்லை. ”சாலியொருமீன் தகையாளை (51)”, ”அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை (63)” என்றும் இளங்கோ சொல்லுகிறார். மொத்தம் மூன்று தடவை அருந்ததிக்கு இணையாக இளங்கோவடிகள் கண்ணகியை வைக்கிறார். உடனே அவளை அருந்ததியின் அவதாரம் என்று சொல்லிவிடலாமா? கண்ணகி இலக்குமியின் அவதாரம் என்பது உண்மையானால், எந்தப் புலவராவது, (அல்லது எந்த ஆழ்வாராவது) வேறொரு ஒப்புமையை ஊடே செய்வார்களோ? அது விண்ணவ மரபாகுமோ? அப்படி இருக்கிறது என்றால் என்ன பொருள்? கண்ணகி அவதாரமில்லை; அவள் வெறும் மாந்தப் பெண். அவளை மற்றோரோடு ஒப்பிடுவது மக்களிடையே இருக்கும் ஒரு பொதுப் பழக்கம், அவ்வளவு தான். அதற்கு மேல் வரிப் பிளந்து பொருள் கொள்வதிற் பயனில்லை.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். இலக்குமி ஒளியின் வடிவம்; பொன்னிறத்தவள். அதனாற்தான் பெருமாள் கோயிலில் தாயாரின் திருமுன் பொற்சுண்ணம் தருகிறார்கள். தாயார் திரு முன் பொற்சுண்ணமும், ஆண்டாள் திரு முன் குங்குமமும் கொடுப்பதைத் தலைகீழாய்ச் செய்யும் முட்டாள்ப் பட்டர்கள் இன்று மிகுந்து போனது வேறு கதை. அது இங்கு வேண்டாம்.) பொதுவாய் மஞ்சள் என்பது தமிழரிடையே மங்கலத்தின் அடையாளம். எந்த நிறத்தாளும் மஞ்சள் பூசிக் கொண்டால், இலக்குமியின் களை, அழகு, ஆகியவை வந்து விடுவதாக தமிழர்கள் நம்புகிறார்கள்.”மஞ்சள் பூசி, இலக்குமி மாதிரி இருக்கிறாள்” - எத்தனை முறை பெண்கள் வாய்களில் கேட்டிருப்போம்? ஆனால் கண்ணகி மஞ்சள் நிறத்தவளா என்றால் இல்லை. மனையறம் படுத்த காதையில் கண்ணகியின் நிறம் தெளிவாகச் சொல்லப் படுகிறது.

மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை நின்
சாயற்கு இடைந்து தண்காண் அடையவும் (53-54)

மேலே உள்ள சாயல் எனும் சொல் நிறத்தைக் குறிக்கிறதா என்று புரிய இரண்டு அடிகளையும் சேர்த்துப் படித்து ஓர்ந்து பாருங்கள். சாயலின் மற்ற பொருட்பாடுகள் இங்கு வர வாய்ப்பே இல்லை. கண்ணகியின் சாயலைப் பார்த்து ”மாயிரும் பீலி மணிநிற மயில்” ஒன்று, இடங்கிக் கொண்டு காட்டிற்குப் போனதாம். அப்படியென்றால் என்ன பொருள்? கண்ணகி கருப்புத் தான். ஆனால் அழகு கொழித்து ஈர்க்கும் கருப்பு. (கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு......என்ற திரைப் பாட்டு நினைவுக்கு வருகிறதா?) அதைப் பார்த்து மணிநிற மயிலே வெட்கப் பட்டு காட்டிற்கு ஓடிவிட்டதாம். இது போகக் காடுகாண் காதையில் ”புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்” என்ற 199 ஆம் அடியில் அவள் காட்டுமயிலின் சாயல் கொண்டவள் என்றே சொல்லப் படுகிறாள். ஆண்மயில் தான் நீல நிறங் காட்டும். பெண்மயில் கருப்புத்தான் ஐயா? [ஆனால் முழுக் கருப்பு அல்ல.]

எங்கள் ஊர்ப்பக்கம் இப்படி ஈர்க்கும் கருப்பை மாநிறம் என்பார்கள். மாநிறம் என்பது அட்டக் கருப்பில்லை. ஆனால், வைத்த கண் வாங்காமல், ஒரு கணம் பார்க்க வைக்கும் கருப்பு. சற்று மஞ்சள் ஊடோடும் கருப்பு. மாங்கொழுந்து பார்த்திருப்பீர்களே? கருப்பு, புகர், குரால், சிவப்பு, மஞ்சள் எல்லாம் கொஞ்சமாய்க் கலந்த நிறம். அது தான் மாநிறம் என்று சுருக்கமாய்ச் சொல்லப் படுகிறது. கண்ணகி நிறம் அதுவாய் இருக்கவே வாய்ப்புண்டு. [இலக்குமி அவதாரங்களில் பொன்னிறம் இல்லாமல் ஏதும் உண்டோ? அவளுக்கு மாங்கொழுந்து நிறம் சுட்டுவார்களோ? [எட்டு இலக்குமி வடிவுகளிலும் கூட 4 பொன்னிறம், 1 தளிர் நிறம், ஒன்று மஞ்சள், ஒன்று வெள்ளை, ஒன்று செந்தாமரை என்றே காட்டுவர்.]

சிலம்பின் புகார்க் காண்டத்தில் மூன்று தலைமாந்தரிடையும் நிறம் பற்றிய தமிழரின் உளச் சிக்கல் உள்ளூர நிலவுகிறது. கண்ணகி மாநிறம், கோவலன் செவ்வை, மாதவி வெளிறிய சிவப்பு. அதற்குரிய சான்றுகளைக் கீழே தருகிறேன்.

அன்புடன்,
இராம.கி

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 1

அண்மையில் அமெரிக்கா ஊசுடனில் இருக்கும் நண்பர் நா.கணேசன் ”கண்ணகி, கோவலன், மாதவி” பெயர்களுக்குச் சங்கதப் பின்புலம் காட்டி, ”இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப் படைத்திருக்கிறார்" என்று ”மின்தமிழ்” குழுமத்தில் எழுதியிருந்தார். "அட, இப்படியும் சிலம்பைப் பார்க்க இயலுமா?" என்று நான் வியந்து போனேன். பிற்காலத்தவர் (குறிப்பாக மு.இராகவையங்கார்) கருத்தை, முதலாசிரியர் மேல் ஏற்றிக் கூறி, சிலம்பிற்கு விண்ணவச் சாய்வை திரு. நா.க. ஏன் கொணர்கிறார் என்பதும், ”மைய நீரோட்டமில்லாததை நடுமைப் படுத்துவது ஏன்?” என்றும் எனக்குப் புரியவில்லை. நான் புரிந்த அளவில் நா,க, கூறும் பெயர்க் காரணங்கள் ஏற்க முடியாதவை.

சிலம்பு, ஒரு தமிழர் காப்பியம், அத்தகைய காப்பியம் சங்கதத்தில் இல்லை. அதன் நலம் பாராட்ட, சங்கதம் என்னும் ஊடாடி நமக்குத் தேவையும் இல்லை. [நம்மூரில் சங்கதப் பெயர்கள் மிகுந்தது களப்பாளர் காலத்திலும், அதற்குப் பின்னாலும் தான்.] சிலம்பில் ஆசிரியர் கூற்றாகச் சில சமயக் கருத்துக்கள் (குறிப்பாக செயினம், ஆசீவகம்) இருக்கின்றன என்றாலும், விண்ணவத்தையும் சேர்த்து மற்ற சமயங்களின் செய்திகள் சிலம்பின் கதையோட்டத்தில் தன்னேர்ச்சியாய்த்தான் சொல்லப் படுகின்றன. விண்ணவப் பின்புலம் என்பது சிலம்பிற்குக் கிடையவே கிடையாது, அது சொல்ல வந்த மையக் கருத்து ”செயினமா, ஆசீவகமா?” என்பதில் தான் வேறுபாடே ஒழிய, அதன் தலைமாந்தருக்கு விண்ணவச் சாயல் கொண்டு வருவது முற்றிலும் கற்பிதம் என்றே நான் எண்ணுகிறேன். வள்ளுவரைப் பல சமயத்தாரும் தங்களவர் என்று சொல்ல முயன்று, குறளில் விளக்கம் காண்பதுபோல், இங்கு நண்பர் நாக. கணேசன் விண்ணவச் சாயலுக்கு முயலுகிறார் என்றே தோன்றுகிறது. இனி என் மறுப்பு இங்கே [ஆறு பகுதிகளாய் அனுப்புகிறேன்.] மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் உரையாடலாம்.

முதலில் முழுமை கருதி திரு. நாக.கணேசனின் மடலை அப்படியே இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.
___________________________________________

கர்ணகம் என்றால் தாமரைப் பொகுடு, பெண்பாலில் கர்ணகீ என்றாகும். இலக்குமிக்கு ஒருபெயர் என்பதை ஆனந்த குமாரசாமி நூல்களில் அறிந்தேன். மஹாபாரதம், பாகவதம்
காவியங்களில் கர்ணகம் என்ற சொல் உள்ளது. மோனியர்-வில்லியம்ஸின் வடமொழி அகராதியிலும் இச்சொல் இருக்கிறது. பாலக - பாலகீ, தேவக - தேவகீ என்பதுபோல் கர்ணகீ (= ஸ்ரீ)

வடசொல். தமிழில் கண்ணகி என்று மருவும். காப்பியக் கண்ணகி பெயரை அலர்மேல்மங்கையுடன் தொடர்புபடுத்தியவர் முதன்முதலாக மு. ராகவையங்கார் ஸ்வாமி. அவரது ஆராய்ச்சித் தொகுதியில் பார்க்கலாம். கர்ணகீ > கண்ணகி - எவ்வாறு? 10 ஆண்டுகளுக்கு முன் சில உதாரணங்கள் கொடுத்தேன்:

http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R4239
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R14635

அப்போது, இந்திய/மொழியியலார் ஆஸ்கோ பார்ப்போலா குறிப்பிட்டார்:

http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R4492

”The Prakritic consonant assimilation may be due to a substratum influence of Dravidian originally spoken in North India: when people speaking a language with few or very simple consonant clusters speak another language with complicated consonant clusters such as Sanskrit, this is what tends to happen. I think the Tamil assimilation provides a parallel showing that this is indeed a likely hypothesis.”

மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகி தெய்வம் ஆனாள் என்கிறது சிலம்பு. அம்மலைத் தொடர்களில் வாழும் மமைவாசிகள் (உ-ம்: முதுவர்) பலரும் கண்ணகியைக் கர்ணகி என்றுதான் வழிபடுகின்றனர். மூத்தாந்தரை கர்ணகி அம்மன் கோவில்: பாலைக்காட்டில் கர்ணகி கோவில் பிரசித்தமானது.

http://en.wikipedia.org/wiki/Valliya_Aarattu_-_Karnaki_Amman_Temple
http://palakkad.nic.in/tourism.htm

தெருக்கூத்து நாடகங்களில் ’கோபாலஞ்செட்டியாரும், கர்ணகை அம்மாளும் மதுரைக்குச் சென்ற கதை’ என்று காலங்காலமாக நடிக்கப்படுகின்றன. பார்க்க: வன்னியகுலம் வீரபத்திர நாயகர் (செட்டிபட்டி), கோவிலன் வட்டப்பாரையில் வதைபட்ட கோவிலன் - கர்ணகி நாடகம். சென்னை,107 பக்கம்,1912. மேலும், (அ) தாயம்மாள் அறவாணனின் களப்பணித் தொகுப்பு:

http://www.viruba.com/final.aspx?id=VB0000817

கண்ணகி மண்ணில், இன்றைய பூம்புகாரில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களும், கதைகளும், கர்ணகி கதைப்பாடல்களும் கள ஆய்வில் நேர்முகமாகத் திரட்டியவை. 2003, 248 பக்கம்.

(ஆ) தி. நடராசன், கோவலன் கர்ணகை கதை, 1979, மதுரை.

சமண சமயத்தைச் சேர்ந்த இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப் படைத்திருக்கிறார் எனலாம். சமணர்களின் இராமாயணம் சற்றே மாறுபடும், அதுபோல சிலம்பு கிருஷ்ண சம்பந்தமான பெயர்களை வைத்து எழுதப்பட்ட ஒரு ’நாவல்’. கண்ணகி சமணசமயஞ் சார்ந்த செட்டிகுலப் பெண்திலகம் என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குறிப்பிடுவார். எஸ். வையாபுரிப்பிள்ளை சிலம்பைச் சமணக் காப்பியம் என்பார்கள்:

http://groups.google.com/group/minTamil/msg/7172ac747da6267e

கோவலன் (> கோபாலன்), மாதவி (குருக்கத்தி - வசந்தமல்லி என்னும் கொடி. முல்லைவகையுள் ஒன்று. தமிழில் முல்லைக்கு மாற்றாகப் பயன்படும் மலர், முல்லைநில கோபியருள் ஒருத்தி), மாதவி - மாதவனின் காதற் பரத்தை. முல்லை என்பதை மாதவி என்று வடமொழியில் மொழிபெயர்ப்பதுண்டு. உதாரணம்: திருமுருகன்பூண்டி = மாதவிவனம். முல்லைத் தாது

மணங்கமழ் முருகன்பூண்டி (சுந்தரர்) முல்லைப் புறவம் முருகன்பூண்டி - அப்பர் தேவாரம்.

கண்ணகி < கர்ணகீ, தாமரைப்பொகுடு - இலக்குமி (ஸ்ரீ) வாழிடம். பத்மேஸ்திதாம், பத்மவர்ணாம், பத்மானனே, பத்ம ஊரு, பத்மாக்ஷி, பத்ம ஸம்பவே, பத்மப்ரியே, பத்மினீ, பத்ம ஹஸ்தே, பத்மாலயே, பத்மதலாயதாக்ஷீ, பத்மபத்ராயதாக்ஷீ, பத்மாசனஸ்த விபுல கடீதடீ, கமலாசனஸ்தாம்.....கனகதாராவில் ”ஸரஸிஜநிலயே, ஸரோஜஹஸ்தே......” கம்பனில் “செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை”.

தமிழ்த்தாயின் முன்னோடி கண்ணகியே.இளங்கோவின் ஊர் கரூர் (வஞ்சி) ஆகலாம், சேரர்கள் கொல்லி காவலர்கள். சங்ககால வஞ்சி = கரூர் தான். கண்ணகி சோழநாட்டில் பிறந்து, பாண்டி நாட்டில் நீதி கேட்டு, சேர நாட்டில் தெய்வம் ஆனாள் என்று தேசிய உணர்வை ஊட்டப் பாடியிருக்கிறார். ஆனால் அதில் பல பழைய நாட்டுப் புறக் கதைகளை
இணைத்து இந்தக் காவியம் (தமிழின் முதற் காவியம்) செய்து தந்துள்ளார் என்று நினைக்கிறேன். “ஆணாதிக்க, தந்தை வழிச் சமுதாய அமைப்பு விழுமியமான “கற்பு” என்பது சுமத்தப்பட்ட படிமமாக அல்லாமல் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பும் சாமானியக் குடிமகளின் படிமமாகக் கண்ணகி உருவகிக்கப்பட்டிருப்பது தமிழ் மரபுகளின் சிறப்புக்களில் ஒன்றாகும்.” (S. V. Rajadurai)

http://nmuralitharan.blogspot.com/2006/09/blog-post_12.html

சிலம்பின் கதைமாந்தரின் பெயர்களில் கிருஷ்ணாவதாரப் பின்புலம் பற்றி சிலம்பின் நான்கு உதாரணங்களும், அதன் இரட்டைக் காப்பியமான மணிமேகலையில் ஒன்றும் காட்டுவாம்.

(1) கண்ணகி இலக்குமியின் வடிவமானவள்:
-----------------------------------
புகார்க் காண்டம், மங்கல வாழ்த்து
கண்ணகியின் குலமும் நலமும்

நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;

அவளும்-தான்,

*போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்*,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு கண்ணகி வடிவை யொக்குமென்றது அற்புதமான இடம். இளங்கோ கண்ணகியை திருமாமகளின் வடிவம் என்பது இந்து சமயத்தில் அவதாரம் என்று சொல்வர்.

(2) பாற்கடல் கடைந்த போது பிறந்த இலக்குமி (கண்ணகி)
--------------------------------------------
சந்திரனின் உடன்பிறப்பு என்பது.
--------------------------
மனையறம் படுத்த காதை
கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல்

”தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என”

இளம்பிறை சிவபெருமான் அணிந்ததே. ஆனால் உன் உடன்பிறப்பு ஆனமையால் மகாதேவன் உன் திரு நுதல் ஆக்கினான். பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின் இவளைத் *திருமகளாக மதித்து* இங்ஙனம் கோவலன் கூறினான் என்பது சிலம்பின் உரை. கன்னட நாடு (Mme. Frere, Old Deccan days) கண்ணகி சந்திரா என்ற பெயரில் வழிபடப்படுகிறாள்.

மாதவியை முல்லை என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். இலங்கையில் (R. Gombrich) கண்ணகிக்குப் பெயரும் சந்திரா. பூரணை என்பதும் சந்திரனால் கண்ணகியைக் குறித்த சொல்.

பௌர்ணமியன்று கண்ணகிவிழா நடக்கிறது. கம்பம் - தேக்கடி மங்கலாதேவி கோட்டம் சோழர் கல்வெட்டில் ஸ்ரீபூரணகிரி என்று அழைக்கப்படுகிறது.

தேவர்களால் தொழப்படுகின்ற இளம்பிறை, சிவன் தனது சடையில் எடுத்துச் சூடியதால் சிறப்புற்றது; ஆயினும், திருமகளோடு பாற்கடலிலிருந்து தோன்றியதால் திருமகளின் மறுவடிவமாகிய கண்ணகியின் உடன்பிறப்பாகின்ற உயர்வும் அடைந்தது எனச் சிலப்பதிகாரம் (2:38-40) குறிப்பிடுகின்றது.

(3) கண்ணபிரானும், கோவலன் முன்சென்ம வரலாறுகளும்.
---------------------------------------------
சிலப்பதிகாரத்தில் சக்திவாய்ந்த மதுராபதி (கொற்றவை வடிவினள்) கண்ணகிக்குப் பின்புறமாகத் தோன்றி கோவலன் கொலையுண்ட காரணத்தை முன்சென்மச் செயலாகப் பேசுகிறது. இதில் கோவலன் - கண்ணபிரான் தொடர்புகள் விளக்கமாய்ச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

மதுரையைக் கண்ணகி தீயழல் மடுத்த அழற்படுகாதையின் பின் நிகழும் கட்டுரைகாதையில் அர்த்தநாரீசுவரராகத் தோன்றும் மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் வர அஞ்சி அவள் பின்புறத்தே தோன்றி “நங்கையே! தோழியே!” என்று அழைத்தது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். தீயின் வெம்மையைப் பொறாமல் மதுராபதித் தெய்வம் தோன்றியது கண்ணகி இருக்குமிடத்தில். ஆனால் உடனே அவள் முன்தோன்றவில்லை.

அந்த மதுராபதித் தெய்வத்தின் கோலம் என்ன? சடையில் பிறைநிலா சூடிய சிவன் ஒரு பாகம்; குவளைமலர் போலும் கருங்கண்களும் தூயஒளிவீசும் முகமும் உடைய பார்வதி ஒருபாகம். இடப்புறம் பார்வதியாக நீலநிறம் இருப்பினும் வலப்பாகம் பொன்னிறம் போன்ற சிவன் மேனி. இடக்கையில் பொற்றாமரையை ஏந்தினாலும் வலக்கையில் அழகிய சுடர்விடும் வளைந்த வாள். வலக்காலில் வீரக் கழலைக் கட்டியிருந்தாலும் இடக்காலில் சிலம்பொலிக்கிறது. [கட்டுரை காதை: 1-10]

“சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி;
...
இடமருங்கு இருண்ட நீலம் ஆயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியள்;
இடக்கைப் பொலம்பூந் தாமரை ஏந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்;
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள்”

அத்தகைய கடவுளர்க்கெல்லாம் கடவுள் ஆகிய அர்த்தநாரீசுவரக் கோலம் கொண்ட மதுராபதி கொற்கையும் குமரியும் குற்றாலம் என்னும் பொதியில் மலையும் ஆளும் பாண்டியர் குலத்தெய்வமும் ஆவாள். ஆயினும் கண்ணகியின் முன்னால் உடனே தோன்றவில்லை. மதுராபதித் தெய்வத்திற்குக் கண்ணகியின் சீற்றத்தைக் கண்டு அச்சம் கலந்த மரியாதை. எனவே பின்புறம் இருந்து பேசுவது தகுதிக்கு ஒவ்வாதது ஆனாலும் கண்ணகியின் மேல் உள்ள மதிப்பினால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது மதுராபதி. ஆதலால் ஒருமுலை இழந்தவளும் இலக்குமிகரம் விளங்கும் பெரிய பத்தினியும் துன்பத்தால் சுழலும் அழகிய முகமும் தேர்ந்த அணிகலன்களும் உடைய நங்கையாகிய கண்ணகியின் முன்னால் நில்லாமல் அவள் பின்னிலையில் தோன்றியது மதுராபதி. [கட்டுரை காதை: 14-16]

“ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றி”

அதற்கு உரையெழுதிய ந.மு.வெங்கடசாமி நாட்டார் அவர்கள் “கற்புடைத் தெய்வம் ஆகலானும் வெகுளியோடு இருந்தனள் ஆகலானும், அவள் முன்னர்த் தோன்றாது பின்னர்த்
தோன்றினாள்” என்று கூறுகிறார். தோன்றிய அந்த மதுராபதி கண்ணகியை “நங்கையே கேள் என் கவலையை!” என்று அழைக்கிறது. அதைக் கேட்டுக் கண்ணகி தன் திருமுகத்தைப் பின்புறம் திருப்பி “யார் நீ என்பின் வருகிறாய்? என்னுடைய பெரிய துன்பத்தை நீ அறிவாயா?” என்று கேட்கிறாள்.

கோவலன் முன்சென்மத்தில் பணியாளாக இருந்தது வசு, குமரன் என்னும் இரு பங்காளி மன்னர்களிடையேயாம்.

”வடி வேல் தடக் கை வசுவும், குமரனும்,
[...]
அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய வேந்தர்” (கட்டுரை காதை, 139, 142-144).
வசுவின் குமரன் வாசுதேவ கிருஷ்ணன் ஆயிற்றே!
வசு, குமரன் என்னும் அரசர்ளின் அடியான்
கோவலன் என்றது கிருஷ்ண பரமாத்மாவைப்
பூடகமாய்ச் சுட்டியதென்க. கண்ணனையே
விஷ்ணுவாக வழிபடல் தேவாரத்தில் கூடக்
காணலாம். (1) கோவலன், நான்முகன்
நோக்க ஒணாத குழகன் (தேவா. 3.101.9)
(2) கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக்
குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
(தேவா. 6.3.10).

”முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்-
வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரன் அக் கோவலன்”
(கட்டுரை காதை, 152-154).

’குடவல இடவல கோவல காவல’ - பரிபாடல்.

மதுராபதித் தெய்வம் கோவலனின் முந்தைய பிறப்பில் அவனுக்குப் பெயர் பரதன் என்கிறது. தசாவதாரங்களில் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்திற்கு முன்னால்தானே. பரதன் ராமனின் தம்பி. பலராமன்-சங்கர்ஷணனின் தம்பி கிருஷ்ணன்-கோவலன். வசு என்னும் மன்னற்குக் கோத்தொழில் செய்யும் பரதன் ஒருவனை ஒற்றன் எனக் கருதிக் கொலைகுற்றம் சாட்டி அழித்ததால், அத் தீவினை காரணமாக, அந்தப் பரதன் பின்னாளில் பூம்புகாரின் கோவலன் ஆகப் பிறந்தான் என்னும்போது, பழைய இதிஹாசப் பெயர்களை இணைக்கிறார் அல்லவா?

சேர மன்னன் குலசேகர ஆழ்வாரும் கண்ணன் ஆகிய கோவலன் குணங்களைப் பாடுகிறார். மூன்று உதாரணங் காட்டுவாம்.

(அ) கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக்
கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால்
மருவி மனம் வைத்து, மற்றொருத்திக்கு
உரைத்து, ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னைப்
புணர்தி; அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே
வளர்கின்றதால் உன்தன் மாயை தானே

(ஆ) ஆய்மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதியோடே
நீமிகு போகத்தை நன்கு உகந்தாய்

(இ) என்னை வருக எனக் குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
மற்று என்னைக் கண்டு உறழா நெகிழ்ந்தாய்.

இதுபோலவே கோவலன் பண்பை சிலம்பு (5:200-201) பேசுகிறது:

“குரல் வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல”.

(4) திருமா உண்ணி - கண்ணகி என்னும் பத்தினித் தெய்வம்
---------------------------------------------
திருமா மகள் = இலக்குமி.
திருமாமகள் கேள்வா! - நம்மாழ்வார்
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்
பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல - சிந்தாமணி
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் - மணவாளமாமுனி

இதுபோலவே, திருமாமகள் எனும் பதத்தில் உள்ள ’மகள்’ என்னும் சொல்லின் பகரியாக (substitute) திருமா பத்தினி, திருமாமணி என்பார் இளங்கோ.

”ஒருமுலை குறைத்த திருமா பத்தினி” - சிலம்பின் கட்டுரை காதை.

”இவளோ,
கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒருமா மணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமா மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப” (வேட்டுவவரி).

’திருமா உண்ணி’ நற்றிணை 216-ல் கண்ணகி வருகிறாள். உண்ணி < நுண்ணிய (Cf. உண்ணி கிருஷ்ணன்) என்பது மலைநாட்டு வழக்கு. இன்னலெ < நென்னல் என்பது இன்றைய மலையாளம்.

(5) மணிமேகலை கண்ணகியை வழிபடல்:
---------------------------------------------
கோயில் கொண்ட கண்ணகி சிலையை மாதவியின் மகளான மணிமேகலை வந்து வணங்கி நின்றாள் என்றும், கண்ணகி மணிமேகலைக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்றும் சாத்தனார் எழுதிய மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. அதிலும் சிலம்பில் இருப்பதுபோல, மதுராபதித் தெய்வம் கோவலனின் முன்னோன் பெயர் பரதன் என்றுள்ளது. பத்தினி கண்ணகியைத் தாய் என வணங்கும் மணிமேகலையின் முற்பிறப்பில் பெயர் என்ன தெரியுமா? ”இலக்குமி!” என்று குறிக்கிறாள் சுதமதி. கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் தம் காப்பியத்தில் கண்ணகி என்னும் சமணச்சி மகள் மணிமேகலையைத் (முற்பிறப்பில் மேகலை பெயர் இலக்குமி) புத்த பிக்‌ஷுணியாகப் படைத்தார்.

முடிபுரை:
----------
சிலப்பதிகாரம் இயற்றிய சேரகுலதிலகர் இளங்கோ அடிகள் கண்ணகியை இலக்குமியின் வடிவமாகப் பிறந்தவள் என்றும், அவள் கணவனுக்குக் கண்ணபிரான் பெயராகிய கோவலன்
என்று சூட்டித் தன் ஒப்பற்ற முத்தமிழ்க் காப்பியத்தைச் செய்து தமிழர்க்கு வழங்கியுள்ளார். தமிழகத்தில் கர்ணகி/கண்ணகி 1000 வருடம் முன்னர் திருமாமகளாகவே பார்க்கப்பட்டதால்
அவளுக்குத் தனிக்கோயில்கள் ஏற்படவில்லை போலும். கிராமப்புறக் கோயில்களாக இலக்குமி கோயில்கள் இல்லாமையால், இளங்கோ அடிகள் மறைந்த பல நூற்றாண்டுகள் கழிந்தபின் கண்ணகி பத்தினித் தெய்வத்தின் சில எச்சங்கள் மாரியம்மைக்கும், பகவதி கோவில்களிலும் ஏறியுள்ளன. ஆனால், இளங்கோ அடிகளின் ஆதி காப்பியத்தில் ஏனைத் தெய்வங்களைவிட கண்ணகிக்கும் இலக்குமிக்குமான ஒப்பீடுகளே மிகுதியாக உள்ளன.

நா. கணேசன்
மார்ச் 9, 2009
________________________________________

அன்புடன்,
இராம.கி.

Sunday, March 15, 2009

திசைகள் - 5

அடுத்து, மேற்குத் திசையைப் பார்ப்போம். .

மேக்கு, பச்சிமம், குடக்கு, இவை மேற்கே
வாருணம், பிரத்தியக்கும், அதுவே.

என்று பிங்கலம் கூறும் சொற்களை அகரவரிசைப் படுத்தினால் ”குடக்கு, பச்சிமம், பிரத்தியக்கு, மேற்கு (மேக்கு இதன் பேச்சுவழக்குச் சொல்லே), வாருணம்” என்றமையும். இவற்றில் 2 சொற்கள் நல்ல தமிழ் (குடக்கு, மேற்கு), 2 சொற்கள் தமிழ்த் திரிவு (பச்சிமம், வாருணம்), ஒன்று முற்றிலும் வடமொழித் தோற்றம் காட்டும் இருபிறப்பிச் சொல் (ப்ரத்யக்கு).

முன்சொன்னது போல், "குடக்கும், குணக்கும்" என்ற வழக்கு சங்க இலக்கியங்களில் பெரிதும் இருந்திருக்கிறது. காட்டாக,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

என்ற காரிகிழார் பாட்டு வரிகளில் (புறம்.6) நான்கு திசைகளும் வருகின்றன. [குணக்கோடு வரும் ”தொடுகடல்” என்னும் சொல்லாட்சி கிழக்கே கரையைப் பொருதி கடல் ஏறிவந்து நிலம் கொண்ட குறிப்பை உணர்த்துகிறது. இதே போல, குடக்கின் நிலத்தில் ஏறிவராத, நாட்பட்டு நிலைத்த, முதிர்ந்த கடலைத் “தொன்றுமுதிர் பௌவம்” குறிக்கிறது.]

குடக்கைப் போலவே, குடக் காற்று (= மேற்குக் காற்று, பெரும்பாண் 240), குடக் கோ (= மேற்கு அரசன், சிலம்பு 24:61, புறம் 62, 63, 210, 211, 368, பதிற். 60-ன் பதிகம். மணிமே. 28:103), குடக்கோச் சேரல் (=மேற்குச் சேர அரசன், சிலம்பு பதிகம் 2), குடகக் கொங்கர் (=மேற்கில் இருக்கும் கொங்கர், சிலம்பு 30:159), குட கடல் (=மேற்குக் கடல், அகம் 378:15, புறம் 2:10, 17:2), குடகர் (=மேற்கில் உள்ளவர், சிலம்பு 26:121), குட நாடு (= மேற்கு நாடு, அகம் 115:5, அகம் 91:17, பதிற்.6, பதிகம் 5, புறம் 177:12), குட புலம் (= மேற்கு நிலம், அகம் 340:17, புறம் 373:26, சிறுபாண். 47), குட புலவியனார் (மேற்கு நிலத்தார், ஒரு புலவரின் பெயர், புறம் 18, 19), குட மலை (கார் நாற்பது 33:2, நற்.105:8, 239:1, பட்டினப். 188, சிலம்பு 10:106, சிலம்பு 11:53, S.I.I.II 68), குட மலையாட்டி (= மேற்கு மலையின் தெய்வம், இங்கு கண்ணகி, சிலம்பு 12:47), குடமுனி (= மேற்கின் முனிவர், அகத்தியர்), குடவர் (=மேற்கு மக்கள், பதிற்.55:9, பட்டினப். 276, புறம் 17:40, சிலம்பு 24:134), குடவர் கோ (=மேற்கு மக்களின் அரசன், சிலம்பு 24:134, புறம் 17:40, சிலம்பு 27:64), குடவர் கோமான் (= மேற்கு மக்களின் தலைவன், சிலம்பு 27:227), குடகம் (= மேற்கு, கம்பரா. ஒற்றுக்.20) போன்ற சொற்களும் குட எனும் சொல்லடியிற் பிறந்தவையாகும்.

மேற்சொன்ன குடக்காற்று, மேற்கிருந்து அடிப்பது. இதுவே வேனிற்காலத்திற் கோடைக் காற்றாகும். ”குட”த்தில் இருந்து ”கோடை”ச் சொல்லாட்சி பிறக்கும். இதேபோல, குணக்கில் பிறக்கும் காற்றைக் கொண்டல் (= ஈரமான கீழைக் காற்று) என்று குறிப்பர். வடக்கிருந்து வரும் குளிர்காற்று வாடை; தெற்கிருந்து வரும் வேகமிலா ஈரக் காற்று தென்றல் ஆகும்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வடக்குச் சுற்றுச்சுவரின் வெளிப் புறத்தில், ”திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்” என்று தொடங்கும் இராசராசன் மெய்கீர்த்தியில் (South Indian Inscriptions Vol II (Parts III) No.63) ”குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்” என்ற வரியில் வரும் ”குடமலை நாடு” இற்றைக் கூர்க்கைக் குறிக்கிறது. [குடமலை நாட்டைச் சோழரும், பாண்டியரும் பலமுறை பிடித்தார். யாரோ ஒரு சோழன் (அவன் கரிகாலன் என்பாரும் உண்டு.) குடமலை நாட்டைப் பிடித்து, புகைகின்ற கல்லை (>ஹுகையின கல்>ஹோகனே கல்; தமிழ்ப்பெயரை கன்னடர் ஒலிக்கும் போது பகரம் ஹகரமாகும்.) உடைத்துச் செதுக்கிக் காவிரிக்கு வழி விட்டு, சோழ நாட்டை வளப்படுத்தினானாம். புகையின கல் நீர்வீழ்ச்சி செயற்கை போலவே தோற்றும் காட்சியைக் கூர்ந்து கவனித்தால், இத்தொன்மம் உண்மையாக வாய்ப்புண்டு. யாரோ ஒரு சோழன் காவிரியைத் திருப்பி, நீர்வரத்தைக் கூட்டி நாட்டை வளப்படுத்தியுள்ளான். இன்றோ காவிரியைத் தொலைத்துத் தடுமாறுகிறோம். காலத்தின் கோலம்?.....]

குடக்கு>குடகு என்ற சொல் அப்படியே மலையாளத்திலும், கன்னடம், துளுவில் கொடகு என்றும், தெலுங்கில் கொடுகு என்றும், குடகு மொழியில் கொடவி என்றும் சொல்லப் பெறும்.

குடக்கு, “கும்” எனும் வேரில் பிறந்தது. [குணக்கு எனும் கிழக்குச் சொல்லோ, குழிவைக் குறிக்கும் குல்/ குள் எனும் வேரிற் பிறந்தது.] கும்முதல் வினை திரட்சியைக் குறிப்பது. ’குமரி’ கூடத் திரள், பருவத்திற்கு வந்த, பெண்ணைக் குறிக்கும். இந்தியத் துணைக்கண்டத் தெற்கில் ஓரியாக (narrow) இல்லாமல், திரண்டு பருத்த முனை என்பதாலேயே குமரிமுனை என்றசொல் ஏற்பட்டது. இனி, ம்>வ் போலியில் கும்முதல் குவ்வுதலாகும். குவ்வியது குவியல் ஆகும். கும்மல், குவியல் எல்லாமே திரண்டு, கூம்பை உணர்த்தும். கும்மலிலிருந்து கூம்புதல் உருவாவதையும் எண்ணிப்பார்க்கலாம். மலைகள் எல்லாம் கூம்பித் தானே கிடக்கின்றன?

கும் எனும் வேரைப் போலவே குல் எனும் வேரும் குன்று, குறிஞ்சி கூர், கூர்மை போன்றவற்றை உருவாக்கும். இனிக் குவ்வுவது குவளவும் செய்யும். அப்புறம் குவள்தல் குவடலாகும், முடிவில் குவடென்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். குவடு = மலையுச்சி. குவட்டின் நீட்சியாகி, கோடு மலையுச்சியைக் குறிக்கும். (கோடு என்பதைப் ”பெரும் மலையுச்சி” என எண்ணுவது சரியல்ல. அது பெரியதா சிறியதா என்பது, நம் உகப்பைப் பொருத்தது. "குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற சிலம்பு வரியைப் (சிலம்பு. 11:20) படித்துப் பலரும் உயர்வு நவிற்சியில் புரிந்து கொள்கிறார். திருவதங்கோடு (=திரு விதங்கோடு), விளவங்கோடு என்பவை சிறிய மேட்டின் உச்சியையே குறிக்கின்றன. குமரிக் கோடும் சிறியதாய் அதே பொழுது, பழந்தமிழகத்தின் முகன்மையாய் இருக்கலாம். கோட்டின் குறிலாய் அமையும் ”கொடு”வில் இருந்தும் மலைச்சொற்கள் பிறக்கும். காட்டாகக் கொடுமுடி என்பது உயர்ந்த மலைக் குவடு. ”கொடுமணம்” என்பது கரூருக்கு அருகில் இருந்த மேடான இடம். [அண்மையில் கொடுமணத்தில் நடந்த அகழாய்வுகளின் மூலம் சங்க காலம் பற்றிய தெளிவு கிடைத்தது. சங்ககாலத்தின் தொடக்கம் கி.மு. 5ஆம் நூற்றாண்டாகக் கூட இருந்திருக்கலாம் என்கிறார். கொடுமணம் அகழாய்வின் பரிமானத்தைச் சரியாக, விரிவாகப் புரிந்து கொள்ளும் தமிழறிஞர் இன்று குறைவாகவே உள்ளார். எல்லோரும் ”பட்டிமன்றம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பேச்சரங்கம்” என்று ஓடினால்  எப்படி? இவற்றைக் கொஞ்சகாலம் நிறுத்தி தமிழாய்வுகளை மேற்கொண்டால்  என்ன?] கோடு/கொடு வளர்ச்சியின் இயல்பாகவே குடவு/குடகு. என்ற சொற்களும் பிறந்திருக்கின்றன. கூம்பல் பொருளில் குடகு எழுந்ததற்குச் சான்றாக, பட்டினப்பாலையின் 276 ஆம் அடியில்,

”வடவர் வாடக் குடவர் கூம்ப”

என்ற வாசகம் வரும். கூம்பிக் கிடப்பவை மலை, குன்று, மேடு தானே?

குடக்கு என்ற சொல்விளக்கத்தை முடிக்குமுன், திசைச்சொல்லை விளக்கும் விதமாய் (13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) நன்னூல் 273 ஆம் நூற்பாவிற்கு எழுந்த காண்டிகையுரையில் (14 ம் நூற்றாண்டு), செந்தமிழ் சேர்ந்த கொடுந்தமிழ் நாடாய்,

தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட்டு எண்"

என்று ஒரு வெண்பா சொல்லும் பகுதிகளைப் பார்ப்போம். [இக்காலத்தில் சோழ அரசு முற்றிலும் குலைந்து, பாண்டிய அரசே நிலைத்தது.] எனவே, வெண்பாவின் படி,

தென்பாண்டி = குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள். [புதுக்கோட்டை சிலபோது இதில் சேரும்; சிலபோது சேராமல். புனல் நாட்டில் சேர்ந்து கொள்ளும்.]
குட்டம் = குட்ட நாடு (இன்றையக் கேரளத்துள் உள்ளது. 14 ஆம் நூற்றாண்டிலும், இது செந்தமிழ் சேர் ஏதமில் நாடு என்றே கொள்ளப் பட்டது கவனிக்கத் தக்கது.)
குடம் = குட நாடு (இன்றையக் கேரளத்துள் உள்ளது. இதைப் பற்றித்தான் மேலே பேசினோம்.)
கற்கா = குன்றும், சோலைகளும் நிறைந்த நாடு, கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி, மேட்டுப் பாளையத்திற்குப் பக்கம், அப்படியே பொள்ளாச்சி வரை இதன் விரிவைச் சொல்ல முடியும். கரூர், நாமக்கல், கிருட்டின கிரி, தருமபுரி மாவட்டங்களும் இதைச் சேர்ந்தவை தாம்.

வேள் நாடு = வேணாடு (இன்றையக் கேரளத்துள் இருக்கிறது; இரண்டு வேணாடுகள் கேரளத்தில் உண்டு; ஒன்று ஆலப்புழையில் இருந்து திருவனந்தபுரம் போகும் பாதையை ஒட்டியது. இன்னொன்று நீலகிரியை ஒட்டிய கேரள வனப்பகுதி வயநாடு என்று இப்பொழுது சொல்லப்படும்.)
பூழி நாடு = பூழி <பூழை = மலைக் கணவாய்) நாடு. பாலைக்காட்டுக் கணவாய்க்கு (பாலைக்காடு, பூழைக் காடாய் இருந்திருக்கலாம்.) வடமேற்கே அமைந்த நாடு. மலபார் என்று 1950களுக்கு முன் அழைக்கப் பட்ட வட கேரளம். மங்களுருக்குச் சற்று தெற்கே இந்த நாடு முடியும். [பூழியர் என்று பாண்டியரை அழைத்தது சாம்பற் பொருளில், இனக்குழுவைக் - tribe - குறிக்கும் பெயராகும். அதை இந்தச் சேர நாட்டுப் பகுதியோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. சேர, சோழ, பாண்டியரின் இனக்குழுப் பெயர்க் காரணங்கள், அவர்கள் அடையாளங்கள் பற்றி வேறு ஒரு முறை எழுதுவேன்.]
பன்றி நாடு = கோடைக்கானலில் இருந்து பழனி வரும் வழியில் இருக்கும் பகுதி. பழனிக்கும் பின்னே உள்ள மலைப் பகுதி முழுதும் இதைச் சாரும்.
அருவா நாடு = இன்றைய வட, தென் ஆற்காடு மாவட்டங்கள் (அருவா நாடு என்பதே ஆற்காடு ஆயிற்று.)

அருவா வடதலை நாடு = இன்றைய ஆந்திரத்தில் உள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்கள், திருப்பதியையும் இதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். (அருவம் ஆடு என்ற சொல்லே அரவமாடு என்று தெலுங்கில் தமிழரைக் குறித்தது. எல்லை மக்களை வைத்து முழு நாட்டினரையும் குறிப்பது மாந்தருக்கு உள்ள இயல்பு. பொதுவாகக் கேரளத்தார் தமிழரைப் பாண்டி என்று அழைப்பது போல ஆந்திரர் தமிழரை அரவமாடு என்று அழைப்பார்.)
சீத நாடு = இன்றைய நீலகிரி, முதுமலை, பந்திப்பூர், மைசூர் வரை. [தென்கன்னடத்தின் பல பகுதிகள் இந்த வெண்பா எழுந்த காலத்தில் தமிழ் பேசும் இடங்களாய்த்தான் இருந்தன.]
மலையமான் நாடு = திருக்கோவலூரை நடுவாந்திரமாகக் கொண்ட இன்றைய திருவண்ணாமலையும், அதை ஒட்டிய வேலூர் மாவட்டமும். இன்றையக் கர்நாடகக் கோலார் மாவட்டமும் மலையமான் நாட்டையே சார்ந்திருந்தது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களையும் இதனோடு சேர்க்கலாம்.
புனல் நாடு = இன்றைய திருவாரூர், நாகை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள்.

மேலே குட்டநாடு, குடநாடு, வேள் நாடு, பூழி நாடு ஆகியவற்றை ”செந்தமிழ்சேர் ஏதமில் நாடுகளில்” இருப்பதாகவே 14 ஆம் நூற்றாண்டுக் காண்டிகையுரை குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால், மலையாளம் என்ற மொழி 14 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறமே உருவாகியிருக்க வாய்ப்புண்டு.

இனி மேற்கு எனும் சொல்லைப் பார்ப்போம். இக்காலத்தில் "குணக்கு, குடக்கு" என்ற சொற்கள் பயனிலாது போக, கிழக்கு, மேற்கு என்ற சொற்களையே நாம் பெரிதும் பயிலுகிறோம். இற்றைத் தமிழ்நாட்டுப் பார்வையில், மேற்கே தொடர்ச்சி மலைகள் மேடாகவும், கிழக்கே நிலம் சரிந்து ஏற்படும் சமவெளி பள்ளமாகவும் தோற்றுவதால், மேல் / கீழ் என்னும் புவிக்கிறுவம் (geography) நமக்குச் சரியாகத் தோன்றுகிறது. (ஆனால் மலையாளத்தாருக்கு அப்படித் தோன்றுமோ? ......)

”மேற்கு” என்ற சொல்லின் ஆட்சியைச் சரியாகப் புரிந்து கொள்ள, பழம் மாந்தரின் பரவல் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. பழம் மாந்தன் ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருந்தே 70000 ஆண்டுகளுக்கு முன் நகர்ந்து, சோமாலியக் கடற்கரையில் வழியே சவுதி அரேபியத் தீவக்குறைக்குள் நுழைந்து (70000 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கடல் இல்லாததால், சவுதி அரேபியத் தீவக்குறையும் சோமாலியக் கடற்கரையும் நிலத்தால் இணைந்திருந்தன), அங்கிருந்தும் நகர்ந்து, துபாய்க்கு மேல் நீண்டுகிடக்கும் முனையில் இருந்து ஈரானின் பந்தர் அப்பாசு (Bandar Abbas) வரை வரிசையாய் அமையும் தீவுகளின் வழியாக ஏற்பட்ட நிலத்தொடர்பால் ஈரானுக்குள் நுழைந்து (70000 ஆண்டுகளுக்கு முன்னால், அரேபியக் குடாக் கடலும் இருந்ததில்லை), பின் அங்கிருந்து கடற்கரையை ஒட்டியே இந்தியத் துணைக் கண்டத்துள் நுழைந்து, பின் மேற்குக் கடற்கரை வழியாக தெற்கே குமரி நில நீட்சிக்கு வந்து, அங்கிருந்து கிழக்குக் கடற்கரையில் படர்ந்து முடிவில் தென்கிழக்கு ஆசியா, சுண்டா நிலம் (இது பற்றிக் கீழே பார்ப்போம்) வழியாக ஆசுத்திரேலியா வரை பழங்குடி மக்கள் போனதாக அண்மை அறிவியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியிருக்கின்றன. ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழருக்கும் இடையே ஈனியல் (genetics) தொடர்பு இருந்ததையும் அண்மை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. [இவை போக, பல்வேறு ஆசுத்திரேலியப் பழங்குடிச் சொற்களும் தமிழ்ச் சொற்களோடு இணை காட்டுகின்றன.]

இச்செய்தியோடு, சென்னை பூண்டிக்கு அருகே அத்திரப்பாக்கத்தில் கிடைத்த இந்தியாவின் ஆகப் பழங்கற்காலச் (oldest paleolithic) சின்னங்களைப் பொருத்திப் பார்த்தால், பழம்மாந்தன் தமிழகக் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நெடுங்காலம் வாழ்ந்திருக்க வாய்ப்புக்கள் மிகவுண்டு என்று புரிந்து கொள்கிறோம். [இக்கருதுகோள், தமிழ்நாட்டுப் புவிக்கிறுவத்தை (geography) அடையாளம் காட்டும் மேற்கு/கிழக்கு என்ற சொற்களின் மூலம் வலுப் பெறுகிறது.] அதே போல, அண்மையில் 2003-2005 இல் ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டில் நடந்த ஆய்வுகளின் வழியாக இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து தொடர்ச்சியாய் 1200 ஆண்டுகள் ஆதிச்சநல்லூருக்கு அருகில் பெருங்கற்கால (megalithic) மாந்தர்கள் வாழ்ந்திருப்பதும் தெரிய வருகிறது. (இங்கு மூன்றடுக்கு அளவில் தாழிகள் புதைந்து கிடக்கின்றன. மேலிருந்து கீழாக மூன்றாவது அடுக்கில் உள்ள தாழிகளில் கிடைக்கும் பொருள்களின் அகவையை மதிப்பீடு செய்தால் இவை கி.மு.4000 அளவிற்குப் பழமை வாய்ந்தவை என்று தெரிகிறது.) அப்படிப் பார்த்தால், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தோர் சிந்துவெளி மக்களின் சமகாலத்தவராகவோ, அல்லது அதற்கும் முற்பட்டவராகவோ கூடத் தோன்றுகிறார். பெருங்கற்காலம் என்ற சொல்லப்படும் இந்நாகரிகத்தின் கடைக்காலத்தில் இரும்புப் பயனும் தென்படுவதால், ”இரும்பு மாழை கி.மு. 1800 அளவிலேயே கூட இங்கு புழங்கியிருக்கலாம், இந்தியத் துணைக் கண்டத்தில் இரும்பின் பயன்பாடு முதன்முதலில் ஆதிச்சநல்லூரிலேயே எழுந்திருக்கலாம்” என்று இப்பொழுது தொல்லியலார் ஊகிக்கிறார். இதனால்,பழந்தமிழ் நாகரிகம் கிழக்குக் கடற்கரையில் தோன்றிப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் மேற்குக் கடற்கரைக்கும், தக்கணத்திற்கும் பரவியிருக்க வேண்டும் என்பதும், தமிழ் மொழி தென்கிழக்கே தோன்றிப் பின் துணைக்கண்டம் எங்கணும் பரவியிருக்கலாம் என்பதையும் இந்த ஆய்வுகளால் ஊகிக்கலாம். [சிந்துவெளி பற்றியே பேசிக்கொண்டிருக்கும் இந்திய வரலாற்றாளர் நடுவிலும், அறிவுய்திகள் (intelligentia) நடுவிலும், இன்னும்விரிவாக ஆதிச்சநல்லூர் செய்திகள் போய்ச் சேரவில்லை. அண்மையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், பெரியார் ஈ.வெ.இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையும் சேர்ந்து 2009 மார்ச்சு.4-6 தேதிகளில் நடத்திய “தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்: ஆதிச்சநல்லூர்ச் சிறப்பும், எதிர்காலத் திட்டங்களும்” என்ற தலைப்பில் நடந்திய தேசியக் கருத்தரங்கம் இக்குறையை ஓரளவு சரிசெய்தது.]

----------------------------------
இனி மேற்கு என்ற சொல், மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் தாண்டி, மேற்குக் கடற்கரைக்குத் தமிழன் போனபிறகும் எப்படிப் புழங்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் அலசிப் பார்க்கலாம். இந்த அலசலுக்கு உதவியாகத் தச்சுப் பாளங்களைப் (tectonic plates) பற்றியும், பழம் பனிக்காலம், பெருங்கடல்களின் எழுச்சி, தமிழகத்திற் கிழக்குக் கடற்சீற்றம், கொஞ்சங் கொஞ்சமாய் இராமநாதபுரத்திற்கு வடக்கே மசூலிப்பட்டினம் வரை கிழக்குக்கரை நகரங்கள் பல்லாண்டுகளில் கடலுள் அழிந்தது (புகார், நீர்ப்பெயற்று, கடல்மல்லை), இராமநாதபுரத்திற்குத் தெற்கிலும், குமரியைச் சுற்றிவந்து கேரளக் கடற்கரையிலும், கடல் பின்வாங்கி மண்மேடிட்டு, பழையவை மறைய, புதிய துறைமுகங்கள் ஏற்பட்டது, (காட்டாக, கொற்கை -> காயல் -> தூத்துக்குடி, அதே போல முசிறி -> வெவ்வேறு இடங்கள் -> கொச்சி) ஆகிய புவியியல் நடப்புகளை இன்றைய அறிவியற் பார்வையிற் புரிந்து கொள்ள வேண்டும். மேலோட்டமாய்ப் பார்த்து, ”இந்த இடைவிலகல் தேவையா?” என்று சிலர் எண்ணக் கூடும். ஆனால் ”மேற்கைப்” புரிந்து கொள்ள இது தேவை என்றே நான் எண்ணுகிறேன்.

நாம் இருக்கும் புவிக்கோளம் ஒரு செவ்வைக் கோளம் (perfect sphere) அல்ல. அது ஒரு தட்டைக் கோளம். புவிக்கோள உருட்டச்சின் (axis of rotation) மேல் முனையிலும், கீழ்முனையிலும் சற்றே தட்டி அவைத்தது (flattened) போற் காட்சியளிக்கிறது. வேறு போன்மையிற் சொன்னால், புவிக்கோளம் கிச்சிலிப் பழம் (orange) போலக் காட்சியளிக்கிறது. இன்னொரு விதமாயும்  உருவகஞ் செய்யலாம். ஒரு நீள்வட்டத்தை (ellipse) எடுத்து, அதன் நுணவ அச்சிலேயே (minor axis) சுழல வைத்தால் கிடைக்கக் கூடிய கோளம் போல் நம் புவி தோற்றுகிறது. [இச்சுழற்சியை வலைத்தல் (revolving) என்று வடிவியல் (geometry) சொல்லும்.] அப்படி ஒரு வலைத்தலில் கிடைக்கும் திண்மம் (solid of revolution) போலத் தோற்றுகிறது நம் புவிக்கோளம். [இதன் அச்சு விட்டம் (polar diameter), நடுவ விட்டத்தைக் (equatorial diameter) காட்டிலும் குறைவாய் இருக்கும்.]

மேலே உள்ள வரிகளில் ”திண்மம்” என்று சொல்வதை “உரைகுறிகளுக்கு (quotation marks)” இடைப்பட்டதாய்ப் புரிந்து கொள்ளுவது நல்லது. ஏனென்றால், புவிக்கோளம் முற்று முழுதாய்த் திண்ணிக் கிடக்கும் திண்மமாய் இல்லை. ஊழியூழிக் காலங்களுக்கு முன், புவிக்கான மொதுகை (mass) சூரியனிலிருந்து பிரிந்துவந்த போது, பெருத்த பிசுக்குக் (highly viscous) குழம்பாகவே இருந்தது. பின், கொஞ்சங் கொஞ்சமாய் குழம்பு குளிர, தன்னை உருட்டிக்கொண்டு (self-rotation), சூரியனையும் வலைத்து வந்ததால் (to revolve around) கோளமாயிற்று, கூடவே, இரும்பால் ஆன திண்மக் கரு (solid core), கோளத்தின் கூர்ந்தம் (centre) சுற்றிச் செறிந்துகொள்ள, அதன்மேல் பல்வேறு மாழை அஃகுதைகளால் (metal oxides) ஆன விதப்பான, அதி வெம்மைக் குழம்பு சுழன்று நிற்க, அதற்கும் மேல் உறைந்து போன ஓடாய், புவியின் வெளிப் பாளமும் (outer sheath) ஏற்பட்டது. புவியின் பல்வேறு கோள் நடத்தைகளுக்கு “இரும்புத் திண்மக் கரு, அதைச் சுற்றி வெம்மும் அஃகுதைக் குழம்பு, அதற்கும் மேல் ஏற்பட்டுள்ள வெளிப்பாள ஓடு” என மூன்றுமே காரணம் ஆகின்றன.

குழம்பை மூடியிருக்கும் பாளமும் ஒரே ஓடாக அமையாமல், உடைந்த பாளங்கள் ஒன்றையொன்று ஒட்டிப் பொருந்தி, கூரை தைத்தது போல் அமைந்திருக்கிறது. (இப்படிப் பொருந்துவதையே தைத்தல்/ கட்டுதல் என்று புவியியலார் சொல்கிறார். மரங்களைத் தைக்கிறவர் தச்சர் என்கிறோம் அல்லவா?) காய்ந்த சருகுகள் ஒன்றோடு ஒன்று பொருந்தி மண்தரையை மூடுவது போலவும், தாமரை இலைகள் நெருங்கிப் பொருந்திக் குளநீரை மூடி மறைப்பது போலவும் இதை உருவகப் படுத்தலாம். அதனால் தான் தச்சுப் பாளங்கள் என அறிவியலார் சொல்கிறார். இத் தச்சுப் பாளங்களை இன்னோர் உருவகத்தின் வழியேயும் உணரலாம். ஒரு முட்டையின் ஓட்டை உடைத்தால் ஏற்படும் ஒட்டுச் சில்லுகள், எப்படி வெள்ளைக்கருவின் மேல் நகர்ந்து ஒரு சில்லு இன்னொன்றின் அடியில் போகுமோ, அதுபோல, இந்தப் புவிப்பாள விளிம்புகள் ஒன்றின்மேல் ஒன்று ஏறியும், ஒன்று மற்றொன்றின் அடியிற் சிக்கியும், அப்படி மேலிழைத்த (overlap) இடங்களில் அழுந்திப் போன பாளம் மீண்டும் சூடேறிக் குழம்போடு குழம்பாகிப் போவதுமாய் ஒரு புவிச் சமையல் நம் கோளத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது, [தச்சுப் பாளங்கள் (tectonic plates) என்ற கருத்து இப்பொழுது புரிகிறதா?]

புவிக் குழம்பின் மேலே திரைந்து கிடக்கும் பாளங்கள் நம் புவி ஏற்பட்டதில் இருந்து இடைவிடாது நகர்ந்து கொண்டேயுள்ளன. இன்றிருக்கும் பாளங்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்து குழம்பின்மேல் அதே இடத்தில் மிதந்திருக்கும் என்று சொல்ல முடியாது; மேலும் அவற்றின் வடிவமும், அமைப்பும் என்றுமே ஒன்று போல இருப்பதாகவும் சொல்ல முடியாது. முற்றிலும் குழம்பாய் இருந்த புவி, குளிர்ந்தபோது ஏற்பட்ட பாளத் துண்டுகளின் திட்கமும் (thickness) கூட ஒரே அளவாய் இருப்பதில்லை. அஃகுதைக் குழம்பின் மேல்மட்டத்தில் இருந்து கணக்குப் போட்டால், திட்கம் கூடிய இடங்கள் மலைகளாகவும், திட்கம் குறைந்த இடங்கள் பெரும் கடற்பள்ளங்களாயும் இருக்கின்றன.

சூரியனில் இருந்து பிரிந்த புவி குளிர்ந்த போது, இரும்புக் கரு, அஃகுதைக் குழம்பு, பாள மூடி ஆகியவை மட்டும் ஏற்படவில்லை. புவி சுற்றி நீராவியும், பல்வேறு வளிகளும் (gases) சுழன்றுவந்தன. கொஞ்சம் கொஞ்சமாய், அடாத காற்று, பெரும் மழை, இடி, மின்னல் எனப் புவியின் சூழமைவு (environment) தொடர்ந்து மாறிய நிலையில், குளிர்ச்சி கூடி, புவியைச் சுற்றிய நீராவி, வாகை மாற்றத்தால் (phase change) நீராகிப் பெரும் பாளப்பள்ளங்களை நிறைத்தது. அப்படிநிறைத்த நீர்த்தொகுதியை நாம் கடல்கள் என்கிறோம்.

மொத்தத்தில் புவிப்பாளங்களின் மேல் கடலும், நிலமும், மலைகளும், மரஞ், செடிகொடிகளும், விலங்குகளும், நாமுமென வாழ்கிறோம். இவ்வாழ்வும், பாளமும் வெம்மையான அஃகுதைக் குழம்பில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இனி, மேற்குத் திசையைப் புரிந்துகொள்ளத் தோதாய், மேற்குறிப்பிட்ட பாளத் துண்டுகளில் 3 ஐ மட்டும் பார்ப்போம். முதலில் பார்க்கப் போவது இந்தியப் பாளம் (Indian plate). இந்தியத் துணைக்கண்டம் எனப்படும் நிலம் வடகிழக்கில் இமைய மலைத்தொடருக்கும், வடமேற்கில் இந்துகுசு மலைத்தொடருக்கும் கீழாய் அமைந்துள்ளது. இந்தியத் துணைக்கண்டமும், இந்து மாக்கடலும் (வங்காள விரிகுடாவையும் சேர்த்தது; ஆசுத்திரேலியாக் கண்டத்தின் மேற்குக் கரை வரை உள்ள கடற் பகுதியும் இதன் பகுதிதான்.) உள்ள பாளம் இந்தியப் பாளம் எனப்படுகிறது.

அடுத்தது சுண்டாப் பாளம் எனப்படும் துண்டாகும். இன்றைக்குக் காணப் படும் இந்தொனேசியத் தீவுகள், மலேயாத் தீவக்குறை, சிங்கப்பூர்த் தீவு, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன் தீவுகள், கிழக்குத் திமோர், பாப்புவா நியூகினியா தீவு போன்றவற்றைச் சுற்றி அருகிருக்கும் கடல் ஒரு 40000 / 50000 ஆண்டுகளுக்கு முன்னால், நீர் வற்றிப் போய் ஒன்றோடு ஒன்று நிலத் தொடர்பு கொண்டு ஒரு பெருங்கண்டமாய் இருந்தது. அதைச் சுண்டா நிலம் என்று புவியியலார் சொல்வார். பனியூழி மாறிக் கொஞ்சம் கொஞ்சமாய் வெப்பம் கூடி வந்தபோது புவித் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் கிட்டத்தட்ட 100, 120 மீட்டர்கள் உயர்ந்த போது, இந்த சுண்டாக் கண்டத்தில் சிறிது சிறிதாய் நீர்மட்டம் உயர்ந்து, இன்றையத் தென் கிழக்கு ஆசியத் தீவுகளும், தீவக் குறைகளும் ஏற்பட்டன. இப்படிக் கடல்மட்டம் உயர்ந்துபோய் கடைசியாய் இற்றை நிலைக்கு வந்து நிற்கிறது. கிட்டத்தட்ட 8000 ஆண்டுகளுக்கு முன்வரை இந்த கடலுயர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்றே அறிவியலார் சொல்கிறார். [மாந்தரின் பழம் வரலாற்றில் இக் கடல் மட்ட உயர்வும், கடலுக்குள் சில நிலங்கள் மறைந்து போனதும் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.]

[இதே கடல்மட்ட உயர்வு தான் நம் பழந் தமிழரையும் பாதித்தது. நம் தமிழ் நிலத்தின் தெற்கேயும், தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே (குறிப்பாக இப்பக்கம் கோடிக்கரை, அப்பக்கம் யாழ்ப்பாணத்தை ஒட்டிய தீவுகள் ஆகிய இரண்டையும் கணுக்கும் - to connect - ஆதிசேதுவுக்குத் தென்மேற்கிலும், அதேபோல இப்பக்கம் இராமேசுரம், அப்பக்கம் தலைமன்னார் ஆகிய இரண்டையும் கணுக்கும் சேதுவுக்கு வடகிழக்கிலுமாய் இருந்த நிலம் இக் கடல் மட்ட உயர்வில் அழிந்து போனது. [இந்நிலம் அழிந்து போனதால் தான் பாண்டியன் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றம் என்ற இடத்தைப் (இது கிட்டத்தட்ட இக்காலப் புதுக்கோட்டை மாவட்டத்தைக் குறிக்கும்) பறித்துக் கொண்டான்.] இப்பெருநிலம் போக, ஆதிசேதுவுக்கு வடக்கே இந்தியக் கிழக்குக் கடற்கரையை ஒட்டி மசூலிப்பட்டினம் வரை இருந்த கிழக்குக் கரையை ஒட்டிய கடல் நிலமும், சேதுவுக்குத் தெற்கே தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் கடற்கரையை ஒட்டியும், சுற்றி வளைத்துக்கொண்டு கேரளக் கடற்கரை கொல்லம் வரை இருந்த கடல் நிலமும் இக் கடல்மட்ட உயர்வில் அழிந்து போயின. (அழிந்த பகுதிகளுக்குப் பகரியாகக் குமரியின் மேற்கில் சேரனிடம் குண்டூர்க் கூற்றத்தைப் பாண்டியன் கைப்பற்றினான்.) இப்படி அழிந்து போன இடங்களில் குமரி முனைக்குத் தெற்காய் ஒரு பெருந் தீவு கூட இருந்துள்ளது. இப்படி அழிந்த நிலங்களைத் தான் பழம் பாண்டியப் பகுதிகள் என்கிறோம்.]

[அழிந்து போன சுண்டாக் கண்டத்தின் அகற்சியைப் பார்க்கும் போது இங்கே அழிந்து போன தமிழ்நிலத்தைக் கண்டம் என்பது இயலாது. இருந்தாலும் தனித்தமிழ் அன்பர் பலரும் உணர்ச்சிவயப் பட்டவராய்க் ”குமரிக்கண்டம்” என்றே சொல்லி வருகிறார். இன்றைய அறிவியற் புரிதலில் நம் கடலை ஒட்டி ”நிலம் அழிந்தது உண்மை; ஆனால் அது கண்டம் இல்லை; அது குமரி நில நீட்சி” என்றே அறுதியாய்ச் சொல்லமுடியும். அன்பர் அருள் கூர்ந்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். நம் சிலம்பும், கலித்தொகையும் கூட நிலம் அழிந்ததைத்தான் சொல்லுகின்றன. கண்டம் என்று அவை சொல்லவேயில்லை. கண்டம் என்ற புரிதல் பிற்காலத்தில் 19-20ஆம் நூற்றாண்டுகளில் கடலாய்வுகள் செய்யப்படாத நிலையில் ஏற்பட்ட கருத்துப் பிழையாகும். இன்றைக்குப் புவியியல், கடலியல் ஆகிய அறிவியல்களை ஆழப்படித்த யாரும் குமரிக்கண்டம் என்று சொல்ல மாட்டார். குமரிநில நீட்சியின் அழிவு பற்றி பின்னொருநாள் விவரமாய் எழுதுவேன். இப்பொழுது கட்டுரையின் உட்பொருளுக்கு மீண்டு வருவோம்.]

இந்தியப் பாளம், சுண்டாப் பாளம் போக, பர்மா நாடு இருக்கும் மூன்றாவது பாளத்தை பர்மாத் துணைப் பாளம் என்று புவியியலார் சொல்வார். இந்தியப் பாளம், சுண்டாப் பாளம், பர்மாத் துணைப்பாளம் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்தியப் பாளமும், சுண்டாப் பாளமும் முட்டுவது சமுத்திரத் தீவின் (இதைத்தான் சுமத்ராத் தீவு என்று இக் காலத்தில் சொல்கிறோம்.) மேற்குக் கடற்கரையிலும், இந்தியப் பாளமும் பர்மாத் துணைப்பாளமும் மோதுவது அந்தமான் நக்கவரத் தீவுகளிலும் நடக்கின்றன. இம் 3 பாளங்களும் முட்டும் முச்சந்தியாய் சமுத்திரத்தீவின் வடமுனையில் அஃகய முனை (அட்சய முனை) உள்ளது. இது தவிர, இந்தியப் பாள விளிம்பு கொஞ்சம் கொஞ்சமாய் பர்மாத் துணைப்பாளம், சுண்டாப் பாளம் ஆகியவற்றின் விளிம்புகளுக்கு அடியில் போய்க் கொண்டுள்ளது. இதன் விளைவாய் ஏற்படும் பாளச் சாய்வால், (இது ஒரு துலை சாய்வதை - tilting of a balance - ஒக்கும். துலைச் சாய்வை வாரடை என்ற சொல்லால் நம் அகரமுதலிகள் பதிவுசெய்யும். இங்கே ஏற்பட்டிருப்பது ஒரு பாள வாரடை.) இராமநாதபுரத்திற்கு மேலுள்ள தமிழகக் கிழக்குக் கடற்கரைத் துறை முகங்கள் கடலுக்குள் மூழ்கி மறைவதும், அதே பொழுது கொற்கை, காயல், முசிறி போன்ற துறைமுகங்கள் மேடிட்டு மறைவதும் நடந்துள்ளன. ”பரசு ராமன் கடலை நோக்கி அம்பு போட்டு, சேரல நிலத்தைக் கடலிலிருந்து வெளிக் கொணர்ந்தார்” என்ற நம்பூதிகள் தொன்மமும், இப்புவியியல் உண்மையை ஒட்டியதாகவே தென்படுகிறது. கிட்டத்தட்ட இராமநாதபுரம் அழகன் குளத்தில் இருந்து கன்னடத்து மங்களூர் வரை ஒரு நேர்கோடு போட்டு அக்கோட்டிற்கு வடகிழக்கில் உள்ள நிலப்பகுதி கீழ்நோக்கிச் சாயவும், அக்கோட்டிற்குத் தென்மேற்கில் உள்ள நிலம் கடலிலிருந்து வெளிவருவதாகவும் இவ் வாரடை நடந்துள்ளது. மறுவழக்கிற் சொன்னால், அக்கோட்டிற்கு இடதுபக்கம் உள்ள துறைமுகங்கள் மண்மேடிட்டும். கோட்டிற்கு வலதுபக்கம் உள்ள கிழக்குத் துறைமுகங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்க் கடலுள் மூழ்கியும் போயிருக்கின்றன.

மொத்தத்தில், பழந்தமிழர் குமுகாயத்தைப் புரிந்து கொள்ள, நாம் இரண்டு புவியியற் செய்திகளை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒன்று 8000 ஆண்டுகளுக்கும் முன் ஏற்பட்ட கடல் உயர்வு அல்லது கடல்கோள். [கடல் கோள் உண்மைதான். அதைச் சிலர் மறுத்துக்கொண்டு இருப்பது அறியாமை என்பதாய் விட்டுவிடுவோம்.] இரண்டாவது, இந்தியப்பாளம் இன்றுங் கூடக் கிழக்குக் கடற்கரையில் மூழ்குவதும், மேற்குக் கடற்கரையில் நிலம் மேடிட்டு வெளிப்படுவதும் ஆகும்.

மூன்றாவது புவியியல் நிகழ்வு பற்றியும் இங்கு சொல்லவேண்டும். ஏற்கனவே சொன்னது போல் பாள விளிம்புகள் ஒன்றின்கீழ் ஒன்று போகும் போது, மீள அஃகுதைக் குழம்பில் சிக்கி உருகுவதைச் சொல்லியிருந்தேன் அல்லவா? இவ்வுருகல் நடக்கும்போது, புவியதிர்ச்சிகளும், பெருவெடிப்புகளும் அவ்வப்போது ஏற்படுவது இயற்கை. இவ்வெடிப்புக்கள், வரலாற்றுக் காலத்திலும், வரலாற்றிற்கு முந்திய காலத்திலும், பலமுறை அந்தமான் நக்கவரத்திலும், இந்தொனேசியா சமுத்திரத் தீவின் மேற்குக் கரையிலும், நடந்துள்ளன. [தமிழரின் மனையடி சாற்றத்தில் தென்கிழக்கு மூலை அழனி (=அக்னி) மூலை என்று சொல்வது கூட இந்தியத் துணைக்கண்டத்திற்குத் தென்கிழக்கில் பெருவெடிப்புகள் ஏற்படும் சமுத்திரத்தீவின் இருப்பையே குறிக்கிறது.] அந்த வெடிப்புகளின் போது, நெருப்புக் குழம்பும், புகையும், நச்சுவளியும், கணக்கற்ற திண்மத் துகள்களும் (solid particles) புவியின் அடியில் இருந்து குறுகிய நேரத்தில், காற்று மண்டலத்திற்குப் பீச்சப் பட்டு அகண்ட நிலப்பரப்பின் மேல் சூழமைவு மாசு (environmental pollution) ஏற்படுகிறது. பெருவெடிப்பின் செறிவைப் (strength, concentration) பொறுத்து இம் மாசுச் சூழல் பல நாட்கள், பல மாதங்கள், ஏன் ஓராண்டுக்கும் மேலாகக் கூட இருந்துள்ளது. இதன்பலனாய் பெரும் நிலப்பரப்பு எங்கும் துகள் மயமாய் சூரிய ஒளியையே காற்றுமண்டலத்தின் உள்ளே வரவிடாது தடுத்து, வானம் கருத்து, புவியின் வெம்மையே ஓரிரு பாகைகள் குறைந்த நிகழ்வுகளும் முன்பு நடந்துள்ளன; இனிமேலும் எதிர்காலத்தில் நடக்கலாம். இதையெலாம் இன்றையச் சூழல் அறிவியலார் (environmental scientists) கண்டுபிடித்து வருகிறார். மொத்தத்தில் இச் சூழமைவு மாசு, புவியின் வெதணத்தையே (climate) அடியோடு மாற்றிய நிகழ்வுகளும் உண்டு. அதனால் ஏற்பட்ட தமிழக வரலாற்று மாற்றங்களை நாம் இன்னும் ஆய்ந்து அறிந்தோமில்லை.

அடுத்து இந்தப் பெருவெடிப்புக்கள் கடலுக்கு அடியில் நடந்தால், ஆழிப் பேரலைகள் (tsunami) ஏற்பட்டு நிலத்தை அழிப்பதும் கூட நடந்திருக்கிறது. நாம் எல்லோரும் 2004 திசம்பரில் நடந்த ஆழிப்பேரலையை அறிவோம் அல்லவா? அதற்கு முன்னால் 1833 ஆகசுட்டிலும் இது போன்ற ஆழிப்பேரலை நம் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது என்று வரலாற்றில் பதிந்திருக்கிறார். 2004 ஆழிப்பேரலையில், கடல், மணலை வாரிக் கொண்ட போது வெளிப்பட்ட தடயங்களைத் தோண்டிப்பார்த்த இந்தியத் தொல்லியலார், மாமல்லபுரம் புலிக்குகைக்கு அருகில் சங்ககால முருகன் கோயிலையும், அதன் மேலிருந்த பல்லவர் காலக் கோயிலையும் கண்டுபிடித்திருக்கிறார். அவ் இடிபாடுகளும் ஆழிப்பேரலைகளால் அழிந்து போயிருக்கலாம் என்றே இப்பொழுது தொல்லியலார் சொல்கிறார். இதுபோன்ற ஆழிப்பேரலைகள் பலமுறை தமிழநாட்டைத் தாக்கியிருக்கலாம் போலும். [நம் பார்வைகள் மாற வேண்டும். ஆய்வுகள் கூட வேண்டும். அவற்றைச் செய்வதற்கு அரசும் முன்வரவேண்டும்.] இதுதவிர, 1964ல் நடந்த பெரும்புயலால், கடலெழுச்சி ஏற்பட்டு தனுட்கோடி அழிந்ததும், பழங்காலக் கடல் எழுச்சி இயலுமைகளை உணர்த்துகின்றது. [1964 தனுட்கோடி அழிவைத் தமிழ்நாட்டிற் பலரும் மறந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.] இப்பொழுது கூடக் குமரியில் கடல் அடிக்கடி பின்வாங்குவதும், மீண்டு வருவதுமாய் நடக்கிறது.

எனவே மேற்கே நிலம் உயர்வதும், கிழக்கே நிலம் கடலுள் போவதும் தமிழ் நிலத்தில் தொடர்ச்சியாய் நடக்கும் புவியியற் போக்குகளே! அதோடு, மேலும், கீழும் என்ற சொற்கள் மேற்கையும் கிழக்கையும் குறித்தது பட்டறிவால் அறிந்த நுண்ணறிவுத் தொகுப்பு என்று புரிகிறதா?

-------------------------------------

ஆனால் இன்றைய மலையாளத்தில், மேற்கை மேற்கென்று பயிலாமல், சூரியன் மறையும் திசை என்ற பொருளில் “படிஞாயிறு” என்றே பெரிதும் பயில்கிறார்களே, அது எப்படி? இதன் புரிதலும் புவிக்கிறுவத்தில் (geography) தான் இருக்கிறது. கேரளப் பார்வையில் தொடர்ச்சி மலைகள் மாநிலத்தின் கிழக்கெல்லையில் அல்லவா இருக்கின்றன? விளக்கமாகச் சொன்னால், மேல்/கீழ் என்னும் இணையை மேற்கு/கிழக்கிற்கு இணையாகக் கொள்வது இன்றையத் தமிழர் பார்வையில் சரியாக இருந்தாலும், சேரலத்தார் பார்வையில் அது சரியில்லை. அதே பொழுது, சேரலரும் பழந்தமிழரில் ஒரு பகுதியினர் என்றால், மேற்கு எனும் சொல்லை அறிவியல் வரிதியாய் எப்படிப் புரிந்து கொள்ளுவது?

[”படிஞாயிறு” என்ற திசைப்பெயரின் மரபைப் “பச்சிமம்” என்னும் அடுத்த சொல்லின் விளக்கத்தில் பார்ப்போம்.]

குடநாடு என்பது இன்றைக்கும் கேரள மாநிலத்தின் ஒருபகுதியாய், மேற்குப் பகுதியைக் குறிக்கிறது. [குடநாடு என்ற சொல்லாட்சி அதன் முதற்பொருளை இன்றையக் கேரளத்தில் உணர்த்தவில்லை தான். இன்றையக் குடநாடு மேட்டில் இல்லாமல் பள்ளத்தில் அல்லவா இருக்கிறது?] அதே போல, குடக்கோ என்ற சொல்லும் சங்க இலக்கியத்தில் மேற்கே இருந்த சேர அரசனைக் குறிக்கிறது. [பாண்டியரைப் போலவே, சேர அரசினரின் பல்வேறு கிளைகள் (குறைந்தது இரண்டு கிளைகளாவது) சமகாலங்களில் வெவ்வேறு இடங்களில் ஆட்சி செய்துள்ளார். காட்டாக உதியன்வழி மரபினரும், இரும் பொறைவழி மரபினரும் சமகாலத்துப் பங்காளியரே. இருவரின் தலை நகர்களும் வஞ்சி எனப் பட்டுள்ளன. அதிகமான் கொடி வழியாரும் கூடச் சேரர் மரபைச் சேர்ந்தவரே. இது போக மாந்தரம் என்ற ஊரில் இருந்தும் இரும்பொறையினர் ஆண்டிருக்கிறார். நம்முடைய போகூழ் (misfortune), சேரர் வரலாற்றை விரிவாக ஆய்ந்தவர் இன்றுங் கூடக் கிடையாது.]

இரண்டு வஞ்சிகளில் ஒன்று காவிரியின் துணையாறான ஆன்பொருநை ஆற்றின் (ஆன்பொருநை >ஆம்ப்ருநை>ஆம்ப்ருதை>ஆம்ப்ராவதி> அமராவதி ஆற்றின்) கரையிலுள்ள இன்றையத் தமிழகக் கரூர். மற்றொன்று கடலுக்கு அருகில் கேரளப் பெரியாற்றுக் கரையிலிருந்த ஊர். பெரியாற்றுக் கரையூர், மற்றும் அதற்கு வெகு அருகில் அமைந்த துறைமுக நகரான முசிறி ஆகியவற்றின் சரியான அடையாளம் இன்னும் காணப்படாது இருக்கிறது. காவிரி புகும் பட்டினத்தில் (=காவிரிப் பூம் பட்டினம்; அது ஏதோ பூக்கள் நிறைந்த பட்டினம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. பூக்கள், தோட்டம் இருந்திருக்கும். ஆனால் அது முகன்மையில்லை. காவிரி கடலிற் புகும் பட்டினம்; இது முகன்மை.) இருந்த துறைமுகம் கடல்முகத்தில் அல்லாமல் (கடல்முகத்தைச் சங்குமுகம் என்று சொல்வார். செட்டிநாட்டுத் தாலாட்டில் காவிரிப் பூம்பட்டினச் சங்குமுகம் பற்றிய குறிப்பு வரும்.) ஆற்றுமுகத்திலே இருந்தது போலவே, மேற்கு வஞ்சிக்குச் சற்று அருகிலே ஆற்றுமுகத்தில் தான் முசிறித் துறைமுகம் இருந்ததாக யவனக் குறிப்புகள் சொல்கின்றன.

அதாவது கடலிலிருந்து ஆற்றுள்நுழைந்தால் முதலில்வருவது சற்று தொலைவிலுள்ள முசிறி; அதிலிருந்து இன்னும் கிழக்கே ஆற்றுவழி வந்தால், அதிகத் தொலைவில் உள்ள ஊர் வஞ்சியாகும். சேரர் வஞ்சியை இக்காலக் கொடுங்கோளூர் (திருச்சூருக்கு 35 கி.மீ. தெற்கே வந்தால் இருக்கும் ஊர். இதைக் கிராங்கனூர் என்று வெள்ளைக்காரர் சொன்னார்.) என்றும் மகோதயபுரம் (எனும் திருவஞ்சைக் குளம்) என்றும் சொல்லுவாருண்டு. ஆனால் உறுதி பட யாராலும் சொல்லமுடியவில்லை. உண்மையிலேயே பழைய மேற்கு வஞ்சியின் சரியான இருப்பிடம் ஏதென்று யாருக்கும் தெரியாமல் உள்ளது. கேரளத்தில் நடந்திருக்கும் தொல்லாய்வுகள் மிகவும் குறைவு. [அடியில் நீர் எப்பொழுதும் ஊறிக்கொண்டிருக்கும் பெரியாற்றுக் கரையில் ஆய்வு நடத்துவது பெருஞ் சரவல் தான்.]

[இந்த அடையாளம் காணுவதற்கு ஏந்தாக, ஓர் உரோமானியக் குறிப்பு "சேர நாட்டின் இன்னொரு துறைமுகமான தொண்டியில் (Tyndis; பாண்டிய நாட்டிலும் ஒரு தொண்டி உண்டு.) இருந்து 480 ஸ்டேடியா கடற்கரையை ஒட்டி வந்தபின், ஆற்றில் 20 ஸ்டேடியா பயணம் செய்து முசிறியை அடைய வேண்டும்" என்றும் சொல்லும். ஒரு கிரேக்க ஸ்டேடியா என்பது 607.5 அடி, அதாவது 0.1851572 கி.மீ, ஆகும். எனவே கடல் புகும் இடத்தில் இருந்து பெரியாற்றுக்குள் 3.703 கி.மீ பயணம் செய்தால், முசிறியை அடையலாமாம். வஞ்சி இதற்கும் கிழக்கில் ஆற்றின் கரையில் இருந்திருக்க வேண்டும். இந்தத் தொலைவுகளை அப்படியே நாம் இந்தக் காலத்திற் கணக்கிட்டுப் பின்பற்ற முடியாது; ஏனென்றால் முன்னே சொன்னது போல், மேற்குக் கடற்கரையில் கடல் பின் நகர்ந்து பழைய துறைமுகங்கள் மண் மேடிட்டிருக்கின்றன. தவிரப் பெரியாற்றின் போக்கும் வரலாற்றிற் பலமுறை மாறியிருக்கிறது.(மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொச்சியிலிருந்து கிழக்கு வந்தால் 40 கி.மீ. தொலைவில் பெரியாற்றின்மேல் இன்றிருக்கும் திருக்கருவூர் (=திருக்கரியூர்) என்ற ஊரே பழைய வஞ்சி என்பாரும் உண்டு. இது கொடுங்களூருக்கு மாறான முன்னீடு (proposal)என்று கொள்ள வேண்டும்.)]

பெரியாற்றின் பழைய பெயராக "சுள்ளியம் பேர்யாறு" எனும் பெயர் அகம் 149ல் எருக்காட்டூர் தாயங் கண்ணனாரால் பதிவு செய்யப் பட்டிருக்கும். அந்த ஆற்றிற்கு இன்னொரு பெயராக கேரளத்தில் ஆல்வாய்க்கு (அகல்வாய்> ஆல்வாய்; பெரியாறு அகண்டு கிடக்கும் இடத்தில் உள்ள வாய் அகல்வாய். கேரளத்திலும் பல ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பைப் பழந்தமிழ் விளக்கத்தால் தான் காண முடிகிறது. அதே போல இன்றைய மலையாள அறிவும், ஓரளவு கன்னட அறிவும் தமிழாய்விற்கு மிகவும் முகன்மையானது.) அருகில் இந்த ஆறு “சூர்ணி ஆறு” என்றும் சொல்லப் படுவதுண்டு. சூர்ணி என்னும் பெயர் குடிலரின் அர்த்த சாஸ்திரத்தில்,

தாம்ரபர்ணிகம், பாண்ட்ய கவாடம், பாஷிக்யம்
காலேயம், சௌர்ணேயம், ப்ராஹேந்த்ரம், கார்தமிகம்
ஸ்ரோதஸீயம், ஹரதீயம், ஹைமவதம் ச மௌத்திகம்

- அர்த்த சாஸ்திரம், 2-11.1

என்று முத்துக்களைக் குறிப்பிடும் வரிகளில் உறுதிப்படும். முத்துக்களில் ஒருவகை சௌர்ணேயம் என்பதாகும். இது, சூர்ணி ஆறு கடல் சேரும் இடத்தில் பிறந்த முத்தைக் குறிக்கிறது. சூர்ணியும் சுள்ளியம் பேராறும் சொற்பிறப்பியலின் படி ஒன்றையே குறிக்கின்றன. சுண்ணாம்புத் தன்மையும் களரிச் செறிவும் (alkaline concentration) கொண்ட ஆற்றின் கழி முகத்தில் (backwaters) முத்துப் பிறப்பது வியப்பொன்றும் இல்லை. சுள்ளியம் பேராறு என்பது சுண்ணாம்புத் தன்மை கொண்ட ஓர் ஆற்றைக் குறிக்கிறது. கிட்டத்தட்ட 225 கி.மீ. ஓடிவரும் பெரியாறு அக்காலத்தில் தன் கழிமுகத்திற் களர் செறிவை அடைந்திருந்தது போலும். [களர்மை (alkalinity) பெற்ற ஆறு இயல்பாக, வெள் நுரை பொங்கி ஓடிவந்திருக்க வேண்டும். எனவே சுள்ளியம் பேரியாறு என்ற பெயர் அதற்கு ஏற்பட்டதில் வியப்பில்லை.} சுள்+நம் = சுண்ணம்>சூர்ணம்>சூர்ணி என்று தமிழ்,வட மொழித் திரிவில் ஆனது வியப்பில்லை. ஆகத் தமிழனின் வரலாறு, அர்த்த சாத்திரத்தில் உறுதி செய்யப் படுகிறது. [அர்த்த சாத்திரச் செய்திகளைச் சங்க இலக்கியச் செய்திகளோடு பொருத்தி யாரேனும் ஆய்வு செய்யக் கூடாதோ?]

அண்மையில் தான், கே.பி.ஷாஜன், வி.செல்வக்குமார் ஆகிய தொல்லியலார்களால், முசிறிப்பட்டணம் என்ற கடல் நகரம் கொடுங்கோளூர் அல்ல என்றும், கடலில் இருந்து சற்று உள்தள்ளி இருக்கும் "பட்டணம்" என்ற நகரமே அது என்றும் அடையாளம் காணப் பட்டிருக்கிறது. இன்னும் மற்ற அரசுத் தொல்லியலார் அதை உறுதி செய்யவில்லை.

முடிவாகக் குடக்கு, மேற்கு என்ற சொற்களைக் கேரளத்தார் தம்முடைய தமிழ்ப்பழமையின் எச்சமாகவே பயன்படுத்துகிறார்கள் என்றே கொள்ள வேண்டும். அவை, இன்றையக் கேரளப் புவிக்கிறுவத்திற்கு ஒத்து வராது என்பதை உணர வேண்டும்.

குடக்கு, மேற்கு என்ற தமிழ்ச் சொற்களைப் பார்த்த நாம் பச்சிமம் என்ற தமிழ்த்திரிவைப் பார்ப்போம். முன்சொன்னது போல், பெரும்பாலும் சேரல நாட்டார் கிழக்கில் இருந்து கணவாய்கள் வழியாகவும், (பாலைக்காட்டுக் காணவாய், செங்கோட்டைக்கு அருகில் உள்ள கணவாய்) தெற்கில் இருந்து குமரிமாவட்டத்தின் தொடர்ச்சியாகவுமே சேரல நிலத்தை நிறைத்திருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியரில், தென்னவரையே பழமையானவர் என்று சொல்லும் தமிழ் மரபும் இதை உறுதி செய்கிறது. சேர இனக்குழு பாண்டிய இனக்குழுவில் இருந்து கிளைத்திருக்கலாம். அப்படிச் சேரல நிலத்துள் போனவருக்கு மேற்கு என்ற சொல்லின் முரண்பாடு உறுத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும். இம்முரணைச் சரிசெய்யும் விதமாய் “படிஞாயிறு” என்றசொல் எழுந்திருக்கலாம். படுதல் = விழுதல்; இது செயப் பாட்டு வினையில் பட்டுதலாகும். எத்தனை வினைச்சொற்களைப் ”பட்டுதல்” துணைவினையால் செயப்பாட்டு வினைகளாய் ஆக்கிக் கொள்கிறோம்?

மேற்கில் சூரியன் படுகிறது / விழுகிறது. ஞாயிறு படிகின்ற திசை படிஞாயிறு. இதேபோலச் சூரியன் பட்டித்த திசை பட்டிமம் என்றாயிற்று. பட்டிமம்>பத்திமம்>பச்சிமம் என்றாவது மிக எளிதான பேச்சுத் தமிழ்த் திரிவு. டகரம் தகரமாவதும், தகரம் சகரமாவதும் பேச்சுத் தமிழில் பல இடங்களில் நடந்துள்ளன.

அடுத்தது வாருணம். ஆழம் பாராதிருந்தால், இது தடுமாற வைக்கும். இதை வரணத் திசை என்றே முந்திய நிகண்டான திவாகரம் குறிப்பிடுகிறது. தென்பாண்டி நாட்டுப்புறத்தில் வரணமேபெருவழக்காகும். வாருணம் அல்ல. [கடலைக் குறிக்கும் வாரணம் வேறு வகைப்பட்டது. அதைக் கொண்டுவந்து குழப்பக்கூடாது.] ரகரத்தை ருகரமாக மாற்றி ஒருசிலர் வாருணம் என்று பலுக்குவது வடமொழிப் பாதிப்பு ஆகும். சூரியன் மேற்கில் மறையும் போது ஏற்படும் ஒளி முறிவில் (refraction) வெள்ளொளி சிதறி, மஞ்சள், பொன், செந்நிறம் எனப் பல்வேறு நிறப் பூச்சுக்களை வானிற் தெறித்துக் கோலங் காட்டுவதால் மேற்குத் திசை வரணத் திசை ஆனது. வரணம், வள் எனும் வேரடியில் பிறந்த சொல். [வள்>வர்>வரி]; வரித்தல் = கோலம் போடுவது, வரைவது என்ற பொருள்கொள்ளும்.  வண்ணமும் வரணமும் ஒருபொருட் சொற்கள்; ஆயின் பிறப்பில் வெவ்வேறாகப் பிறந்தவை. அணம் என்னும் ஈற்றைத் துணையாகக் கொண்டு வர்+அணம் = வரணம் பிறந்ததாகவே பாவாணர் கூறுவார். அதே பொழுது வருணம் / வரணம் / வர்ணக் குழப்பம் நெடுநாள் தமிழிலக்கியத்தில் உண்டு.

முடிவில் ப்ரத்யுக்கை. இதுவும் சூரியன் மேற்கில் படுக்கும் செயலை உணர்த்திப் பின் வடமொழி உருவம் பெற்று நம்மை மருட்டுகிறது. படுக்கை> படுத்கை>பதுத்கை>ப்ரத்யுக்கை (ரகரமும், யகரமும் வடமொழிப் பலுக்கில் நுழைவது பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன்.)

அடுத்த பகுதியில் வடக்குத் திசை குறிக்கும் சொற்களைக் காணலாம்.

அன்புடன்,
இராம.கி.