Thursday, October 28, 2021

பூச்சாண்டி

ஆண்டான் என்பவன் ஆள்பவன். இச்சொல் பெரிய மாந்தரை மட்டுமின்றி இறைவனையுங் குறிக்கும். ஆள்வானுக்கு அடியவன் ஆண்டை அல்லது ஆண்டி என்றறியப்படுவான். தேனிப் பக்கம் சிவனாண்டி (சிவனுக்கு அடியவன்), மாயனாண்டி> மாயாண்டி (மாயனுக்கு அடியவன்), விருமனாண்டி> விருமாண்டி (விருமனுக்கு அடியவன் = பெருமானுக்கு - ப்ரம்மனுக்கு - அடியவன்) என்று பெயரிடுவார். அந்தந்த அடியவர் தத்தம் ஆண்டானுக்குரிய சின்னத்தை உடல் முழுதும் அணிவர். (பிரமனுக்கு உரிய சின்னம் எதுவென்று எனக்குத் தெரியாது.) 

இப் பெருந்தெய்வங்களன்றி பெரியகருப்பு, சின்னக்கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு, முனி எனப் பல்வேறு சிறு சிறு தெய்வங்களையும் நாட்டுப் புறங்களில் தொழுவர். இத்தெய்வங்களின் திருமேனிகள் இன்றும் ஐயனார் கோயில்களில் இருக்கும். இந்த உருவங்கள் கருப்பாகவும், சற்று கோர முகத்துடனும், கையில் அரிவாளுடன் அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இதுபோன்ற ஓர் உருவம் தான் நாளங்காடி பூதமாய் சிலம்பிற் சொல்லப்படும். தவிர புகார் நகரத்துப் பூத சதுக்கத்தில் இருக்கும் பூதம் தவறுசெய்தோருக்குத் தண்டனை அளிப்பதாயும் பெரும் ஓலமிடுவதாயும் சொல்லப்படும். இதுபோன்ற சதுக்க பூதங்கள் [புகார், வஞ்சி போன்ற ஒவ்வொரு ஊரிலும் இருந்திருக்கின்றன.]

சதுக்க பூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப் பட்டது என்று பேரா. ந.சுப்பிரமணியன் தன்னுடைய ”Tamil polity" நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்க பூதம் இருந்தது. சதுக்க பூத விவரிப்பு அப்படியே இற்றைப் பிள்ளையார் விவரிப்புப் போல் இருக்கும். சதுக்க பூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.

சிவனாண்டி, மாயாண்டி, விருமாண்டி போலப் பூதாண்டிகளும் அக்காலத்தில் இருந்திருக்க முடியும். ஆனால் எல்லா ஆண்டிகளும் ஏதோவொரு பூச்சைத் தன் உடம்பு முழுதும் பூசினார். அது சாம்பலாய் இருக்கலாம் கரியாகலாம், மஞ்சளாகலாம். அல்லது கலவையாகலாம். எங்கள் ஊர்ப்பக்கம் மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் வெவ்வேறு கோயிற் சாமியாடிகள் தங்கள் முகம், உடம்பில் பல்வேறு பூச்சுக்களைப் பூசிக் கொண்டு பெருஞ்சூலம், தண்டம், அரிவாள், வேல் போன்றவற்றைக் கையில் வைத்துக்கொண்டு தேருக்கு அருகில் வந்து நிற்பர். தேரை இழுக்கு முன்பு ஊர் மக்கள் சாமியாடிகளைத் தொழுது ஆசிபெற்றுக் கொள்வர். பெரியவர்கள் இதைச் செய்யும் போது சிறியவர்கள் சாமியாடிகளுக்கு அருகிலே வரத் தயங்குவர். அச்சப் படுவர். சாமியாடிகளைக் கண்டாலே எல்லாக் குழந்தைகளுக்கும் அச்சம் தான். பூச்சாண்டிகளை இப்படிப் புரிந்துகொள்ள வேண்டும். தென்பாண்டியில் எல்லாவூர்களிலும் நடப்பது இதுவே. அவர்கள் சிறுதெய்வங்களுக்கான சாமியாடிகள். சாமியாடிகளில் ஒருவரே பெரும்பாலும் ஐயனார் கோயில் பூசாரியாயும் அமைவார். வேலன் என்ற சொல் வேல் கொண்டு ஆடும் சாமியாடியே.

சாலுதல் என்பது இறைவனைச் சாருதல்/சாற்றுதல்; அதாவது பூசைப் பொருட்களைச் சாற்றுதல், சால்+த்+த்+அன் = சாற்றன்>சாத்தன் பெரும்பாலான நாட்டுப்புறப் பூசாரிகள்; சாமியாடிகள் சாத்தன்/சாத்தைய்யா என்றே அழைக்கப் படுவார். பூசாண்டச் சாத்தன் வடக்கே பௌசாண்ட சாத்தான் ஆகி மீண்டும் தமிழுக்குத் திரும்ப வரும்போது பாசாண்ட சாத்தன் ஆகிப் போவான். இப் பெயர் சிலப்பதிகாரத்திலும் உண்டு. சாத்தனின் மெல்லோசைச் சொல் சாந்தன். சாந்திக்காரன் என்று மலையாளத்தில் சொல்வார். சபரிமலை அய்யப்பன் கோயில் மேல்சாந்தி என்பவன் தலைமைப் பூசாரி. சாத்தன் / சாந்தன் என்பவன் பூசாரி தான். அதே போல சாலுகின்ற கூட்டத்துப் பெண்மகள் சாலினி (= பூசாரிச்சி). 

பூச்சாண்டி பற்றி நான் சொல்ல நினைத்தது இது தான். சண்டி எனும் அதர்வண வேத மாந்திரிக யாகத்திற்கும் இச் சொல்லிற்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதாய் நானறியேன். நான் பார்த்தவரை பூ என்ற சொல்லிற்கு பிள்ளை என்ற பொருளை எந்த அகரமுதலியும் கொடுக்கவில்லை.

அன்புடன்,

இராம.கி.   

No comments: