Thursday, June 28, 2007

free trade / fair trade - 2

இனி முகுந்திற்கு எழுதிய மடல். இது தமிழ் உலகம் மடற்குழுவில் வந்தது என்று எண்ணுகிறேன்.
---------------------------------------
அன்பிற்குரிய முகுந்த்,

[பின் குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ப free software-க்கு சரியான தமிழ் பதம் உருவாக்கித்தருமாறு, தமிழ் சான்றோர்களை, தமிழ் free software நிரலாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். ]

என்று கேட்டிருந்தீர்கள். நேற்று, எழுவுதி-பரியுடைமை-விடுதலை பற்றிய என் முந்தைய மடல்களை முன் வரித்திருந்தேன். அதைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இவை ஒட்டிய மற்ற சொற்கள் எல்லாம் தனித் தனித் துறைகளில் மட்டுமல்லாமல் பொதுப்புலத்தில் வருபவை. இதை மறந்து, நாம் ஒவ்வொருவரும் (நம் துறைகளில் ஆழ்ந்து போவதால்) மிக விதப்பாக (over-specialized) ஆகிவிடுவதால், துறைவிட்டுத் துறை ஆளக் கூடிய சொற்களை ஒதுக்கி நமக்கே நமக்காய் நம் துறைக்குக் கலைச் சொற்களை உருவாக்க முற்பட்டு விடுகிறோம். இதன் விளைவாய் வருதை (ordinary) யான சொற்களையெல்லாம் கூடக் கலைச் சொற்கள் ஆக்கிவிடுகிறோம். இந்த "free" என்பது ஒரு வருதைச் சொல்லே.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழில் வருதையான சொற்களில் கூட நுணுகிய வேறுபாட்டில் இரண்டு சொற்கள் அருகருகே இருக்கும். அந்த வேறுபாட்டை நுணுகி அறிந்து துல்லியமாகச் சொல்லும் கலையை நம்மில் பலரும் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம். நம் வட்டார வழக்குகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மாட்டேம் என்கிறோம். கற்ற சொற்களைப் பயில மாட்டேம் என்கிறோம். அண்மையில் நண்பர் இரா. முருகனின் அரசூர் வம்சம் என்ற தொடர்கதையை திண்ணை வலையிதழில் படித்துவருகிறேன். அதில் நம்பூதிரிப் பெண்ணொருத்தி தமிழ்ப் பார்ப்பனப் பெண்ணிடம் பேசுவதாக அவர் மலையாளங் கலந்த தமிழில் ஓரிடத்தில் எழுதுவார். அதில் திரக்கு என்ற சொல்லை மிகுந்த கூட்டம் என்ற பொருளிலும், தன்னேர்ச்சி என்ற சொல்லைத் தானாக நடந்த 'அசம்பாவிதம்' என்ற பொருளிலும் எழுதியிருப்பார். பாருங்கள் இங்கே மலையாள வட்டார வழக்கு எப்படி இருக்கிறது? நான் ஏதோ ஆழ்ந்து அறிந்ததாக இங்கு தமிழுலகம் வந்து "துரக்கு" என்ற சொல்லை கூட்ட நெரிசல்/ traffic என்ற பொருளிலும், தன்னேர்ச்சி என்பதை accident -ற்கும் பயன்படுத்தினேன். அவர் ஆளுகையைப் படித்தவுடன், வட்டார வழக்கு நம்மைக் காக்கிறது என்று மனத்திற்கு ஒரு மகிழ்வு ஏற்பட்டது. அதே பொழுது இதை முன்னே அறியாது போய்விட்டோ மே என்ற வெட்கமும் ஏற்பட்டது. ஆக, நல்ல விருதையான சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. விவரம் அறியாமல் புதுப்புதுச் சொற்களைத் தெரிந்தவற்றிற்குக் கூட உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கூடவே, இந்தக் கால வாழ்வில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதனோடு கிட்ட நெருங்கி வரும் இன்னொரு கருத்தைச் சொல்லிச் சொற்குழப்பம் ஏற்படுத்தி ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கு போனாலும் chaltha hai என்று ஆகிவிடுவது நம் கவனக் குறைவினால் தானே!

இனித் தளையறு/விடுதலை மென்பொருட்கள் என்பதற்கு வருவோம்.

அடிமைப்பட்டிருந்த நாடு தன் தளையறுத்து விடுதலையானதை நினைவு படுத்தி உருவான இரண்டு முழச் சொற்கள் இவை. நம்முடைய சிந்தனை அளவை நாமே கட்டுப் படுத்திக் கொண்டு உருவாக்குகின்ற சொற்கள் இவை. மானகையியலில் (management science) எப்படியும் ஒன்பது புள்ளிப் புதிரைப் பற்றிப் படித்திருப்பீர்கள். கையை எடுக்காமல் ஒன்பது புள்ளிகளை நாலே நேர்கோட்டில் சேர்க்க வேண்டும் என்பார்கள். நம்மை அறியாமல் அந்த ஒன்பது புள்ளிகளின் வரம்பாக வெளியில் உள்ள எட்டுப் புள்ளிகளைக் கொள்ள நினைப்போம். உண்மையில் அந்த எட்டுப் புள்ளி வரம்பை உடைத்து வெளியே வந்தால் தான் இந்தப் புதிரைச் சுளுவி எடுக்க (சுளுவியெடுத்தல் - to solve) முடியும். அதுபோல ஒரு 50, 60 ஆண்டுகாலச் சிந்தனையில் இருந்து வெளிவந்து நாட்டுவிடுதலை என்பதற்கும் மீறிச் சிந்தித்தால் தான் free என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மாந்த வரலாற்றில் free ஆக இருந்த காலமும், அடிமையாக இருந்த காலமும் ஒரு இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன். எகிப்திய, சுமேரிய நாகரிகங்களில் அடிமை முறை இருந்தது. நம்மூர்ச் சிந்து சமவெளியிலும் இருந்திருக்கக் கூடும். தமிழ்க் குமுகாயத்திலும் இருந்திருக்க வேண்டும். சங்க காலம் என்பது பொற்காலம் அல்ல. அது ஒரு காலகட்டம். என்ன, நம்மால் ஓரளவு அறியப்பட்ட ஒரு கால கட்டம். அவ்வளவு தான்.

பரி(free)யாய் இருத்தல், பரியுடைமை (freedom) பற்றி முன்மடலில் சொல்லிவிட்டதால் அதை மீண்டும் இங்கு சொல்லவில்லை. மறுபடியும் ஆங்கிலச் சொல் ஒப்புமையா என்ற குற்றச் சாட்டு எனக்கு வந்து சேரும். வந்துவிட்டுப் போகிறது.:-) சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வந்துசேரும்? தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தொடர்பு அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற என் எண்ணம் வலுப் பெறுகிறதே ஒழியக் குறையவில்லை. அதன் சரியான பரிமாணத்தை நம் நண்பர்கள் பலர் புரிந்து கொள்ளவில்லை. frei, free, ப்ரிய, prijos போன்றவை ஒப்புமைச் சொற்கள் என்றால் பரி என்ற தமிழ்ச் சொல்லும் ஒப்புமையாகத் தான் இருக்க வேண்டும். இதில் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?

free software - பரிச் சொவ்வறை, பரி மென்கலம்,
open source software - திறவூற்றுச் சொவ்வறை,
licenced software - உரி(ம)ச் சொவ்வறை
shared software - shareware - பகிர் சொவ்வறை, பகிர்வறை

பரி என்ற சொல்லில் இலவயம் என்ற பொருளும் அடங்கும். ஒருவருக்கு இலவயமாகக் கொடுக்கும் போது நம்மைச் சார்ந்தவர் என்ற பரிதல் உள்ளே இருக்கிறது. அவருக்குப் பரிந்துதானே இலவயமாகத் தருகிறீர்கள்? தன்னாளுமை (சுதந்திரம்), விடுதலை, தடையற்ற என்ற பொருள்களும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி,
-----------------------

இனி fair என்பதற்கான இணைச்சொல். பலரும் "நேர்மையான, நேரிய, செவ்விய, கவினிய, தகவுடைய" என்ற சொற்களையே பயிலுகிறார்கள். பாத்தி (compartment) பாத்தியாகப் பார்த்தால், இந்தச் சொற்கள் அந்தப் பயன்பாட்டிற்குச் சரியாகத்தான் தோன்றுகின்றன. ஆனால் அந்தப் பயன்பாட்டின் மூலம் ஒப்பேற்றும் உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. பலகாலமாய், இணைச்சொல் துல்லியம் பற்றி நான் சொல்லி வந்திருக்கிறேன். ஒரு பொருளை உணர்த்த, நெருங்கிவரும் இன்னொரு சொல்லால் சொல்லுவது கவிதைக்குச் சரிப்பட்டுவரும்; அறிவியலுக்குச் சரிப்பட்டு வராது என்பது என் கொள்கை. தமிழைக் கவிதை மொழியாகவே எத்தனை நாள் வைத்திருப்பது?

முதலில் fair என்பதை ஆங்கிலச் சொற்பிறப்பியல் வழி பார்ப்போம்.

O.E. faeger "beautiful, pleasant," from P.Gmc. *fagraz (cf. O.N. fagr, O.H.G. fagar "beautiful," Goth. fagrs "fit"), from PIE *fag-. The meaning in ref. to weather (c.1205) preserves the original sense (opposed to foul). Sense of "light complexioned" (1551) reflects tastes in beauty; sense of "free from bias" (c.1340) evolved from another early meaning, "morally pure, unblemished" (c.1175). The sporting senses (fair ball, fair catch etc.) began in 1856. Fair play is from 1595; fair and square is from 1604. Fair-haired in the fig. sense of "darling, favorite" is from 1909. Fairly in the sense of "somewhat" is from 1805; it earlier meant "totally." Fairway (1584) originally meant "navigational channel of a river;" golfing sense is from 1910. First record of fair-weather friends is from 1736.

இதில் free from bias, morally pure, unblemished, favorite, somewhat, totally என்ற பொருட்பாடுகள் எல்லாம் வழிநிலைப் பொருள்களாய் அமைந்தவை. முதற்பொருள் beautiful என்பதில் இருந்தே கிளைத்திருக்கிறது. beauty / அழகு என்ற கருத்தோ ஒளிநிறைந்த தோற்றத்தில் தான் முதலில் எழுந்தது. ஆழ ஓர்ந்து பார்த்தால் fair என்பதற்கு ஒளிநிறைந்த என்ற பொதிவுப் பொருளே (positive meaning) அடிப்படையாய் இருக்கமுடியும்.

தமிழில் வயத்தல், வியத்தல் என்ற இரண்டு வினைச்சொற்களுமே ஒளிசெய்தல், விளங்குதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். வயங்குதல் என்பதும் கூட ஒளிசெய்தல், விளங்குதல் என்று உணர்த்தும். வய மீன் என்பது உரோகினி நாள்காட்டைச் சுட்டும். ஒளிநிறைந்த மீன் என்ற பொருள்.

ஒரு பெண்ணைப் பார்த்து, "அவள் சிவப்பும் இல்லை, கருப்பும் இல்லை, ஆனால் fair" என்று ஆணாதிக்கக் குமுகாயத்தில், பொதுவாகச் சொல்லும் போது, "முகம் களையாக ஒளிநிறைந்து இருக்கும், நிறம் இங்கே பொருட்டில்லை" என்று தானே வழக்கில் பொருள் இருக்கிறது?

வியத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த வியப்பு என்ற சொல்லும் கூட முகம் மலர்ந்த, ஒளிகூடிய தோற்றத்தையே உணர்த்தும். இனிப் பெருமைப் பொருள் இதனின்று அடுத்துக் கிளைப்பதும் இயற்கை தான், விய, வியல், வியன், வியக்கம் ஆகிய சொற்கள் எல்லாம் பெருமை, சிறப்பு என்ற பொருட்பாடுகளைக் கொண்டு வந்து தரும். கூடவே வியல் என்ற சொல் பொன்னையும் குறிக்கும். வியலன்>வியாழன் என்பதும் பொன்னிற Jupiter யைக் குறிப்பது தான். வியந்துதல் என்பது ஒன்றை விளக்கும் வினையாகி, மேலும் சகரப் போலியில் வியஞ்சுதல் என்றாகி, வியஞ்சகம் என்ற பெயர்ச்சொல்லை "விளங்கும்படி செய்கை" என்று பொருளில் காட்டும். ஒரு பொருளை விளக்கி உணர்த்துவதை வியக்கனம் என்றே தமிழில் சொல்லுவார்கள். வியக்கனம்>வியாக்கணம் ஆகி மேலும் வியாகரணம் என்று வடமொழியில் திரிந்து, விளக்க நூல்களைக் குறிக்கும். நாம் தான் சொற்பிறப்பு தெரியாமல் இதை வடமொழி என்று மயங்கிக் கிடப்போம்.

வியத்தல் என்ற வினையில் எழும் வியவு என்ற சொல் fairness (brightness, beauty) போன்ற பொருட்களைத் தெளிவாகவே குறிக்கும். கீழே பல்வேறு கூட்டுச் சொற்களை வியவு என்ற சொல்லாட்சி வைத்துக் காட்டியிருக்கிறேன். ஆங்கிலத்தில் இப்பொழுது fair என்பதற்கு என்ன பொருளெல்லாம் சொல்லுகிறார்களோ, அதை ஒரே சொல்லால், பெரும்பாலும், கொண்டுவர இயலும். இதில் கட்டற்ற, தளையற்ற என்ற பயன்பாடுகள் அந்த அளவிற்கு வாய்ப்பாக அமையாது.

fair comment = வியவு முன்னிகை
fair competition = வியவுப் போட்டி
fair copy = வியவுப் படி
fair dealing = வியவு அணுகை = வியவணுகை
fair margin = வியவு வரந்தை
fair market value = வியவுச் சந்தை மதிப்பு, வியவு மாறுகடை மதிப்பு
fair play = வியவு ஆட்டம் = வியவாட்டம்
fair price = வியவு விலை
fair rent = வியவு வாடகை
fairs and festivals = வியந்தைகளும் விழவுகளும் (இந்த fair யை காட்சி என்றே தமிழாக்கி வருகிறோம்; என்னைக் கேட்டால் வியந்தை என்றே சொல்லலாம். ஒரு fairக்குப் போனால் அங்கிருக்கும் காட்சிப் பொருட்களைப் பார்த்து வியந்துதானே வருகிறோம்? வியந்தை என்பது ஒரே சொல்லாக சொல்லுதற்கு எளிதாய் அமைந்து விடுமே?)
fair trade = வியவு வணிகம்
fair treatment = வியவு நடத்தை
fair valuation = வியவு மதிப்பீடு
fair wage = வியவுக் கூலி
fair weather = வியவு வானிலை
fairy tale = வியவுக் கதை

ஆக, நீங்கள் கேட்ட சொற்களுக்கு,

fair trade = வியவு வணிகம்
free trade = பரி வணிகம்

என்பதே என் பரிந்துரை.

free trade / fair trade - 1

அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் free trade, fair trade என்பதற்கான இணைச்சொற்களைக் கேட்டிருந்தார். பின்னால், அவருக்கு மறுமொழித்திருந்தேன். இது பொதுவிலும் பயன் படட்டும் என்ற கருத்தில் இங்கு பதிகிறேன்.

trade என்பதற்கு வணிகம் என்றே சொல்லலாம். free என்பதற்குப் பரி என்றே முன்னால் நான் பரிந்துரைத்திருந்தேன். பலரும் "கட்டற்ற (non-joint), தளையற்ற (non-binding)" என்ற சுற்றிவளைத்த சொற்களைப் புழங்கிக் கொண்டு, பரியைப் புழங்க ஏனோ தயங்குகிறார்கள்; அதே பொழுது ஒரு சிலர் இதை ஏற்றுப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். கட்டு, தளை என்ற சொற்களை அடிப்படையாய் வைத்துக் கொண்டு "அது அல்லாத" என்னும் போது, anti-negative என்ற பயனாக்கம் ஏற்படுகிறதல்லவா? அது மொழி வளர்ச்சிக்குப் பயன் தருமோ? (கிட்டத் தட்ட George Orwell இன் 1984 புதினம் நினைவிற்கு வருகிறது. அதில் இது போன்ற சுற்றி வளைத்த சொற்கள் பலவும் வரும். ஒரு செயற்கை மொழியில் இதுபோன்ற சொற்கள் அமையலாம். அங்கு ஏரணம் மட்டுமே முகன்மை; நளினம் முகன்மையானது அல்ல. மொழி என்பது வெறும் ஏரணமா? ஒரு இயல் மொழியில் நேரடியாக free என்பதைத் சொல்ல வேண்டும் அல்லவா? மூக்கை நேரே தொடாமல் சுற்றிவளைத்துத் தொடுவது என்ன பழக்கம்?) முன்னால் அகத்தியத்திலும், அப்புறம் நண்பர் முகுந்தராசுக்கும் எழுதிய இருமடல்களின் படியைக் கீழே கொடுத்துள்ளேன்.

பரி என்று சொல்லுவதன் காரணத்தை இவற்றின் வழி புரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------
அன்புள்ள அகத்தியர்களுக்கு,

மரு.செயபாரதி எழுதியிருந்தார்:

"விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. Liberty, Freedom, Independance ஆகியவற்றிற்கும் இடையே வித்தியாசம் உண்டு.
சிந்தனைக்கு...."

சென்ற மடலில் liberal பற்றிய என் முன்நாள் மடலைத் திருப்பி அனுப்பியிருந்தேன். இனித் தொடர்ச்சி.

எழுவரல் என்பது liberal என்பதற்கு ஆவது போல் எழுவுதி என்பதே liberty என்பதற்குச் சரிவரும். இங்கே எழுவுதி என்பது எழ முடிகிற தன்மை; தாழாத தன்மை; யாராலும் தடுத்து நிறுத்த முடியாத தன்மை. ஆனால் இந்தச் சொல்லிற்கு ஈடாகச் சுதந்திரம், விடுதலை என்று பலரும் மாறி மாறிப் பயன்படுத்துகிறார்கள். துல்லியம் கருதினால் சொல்லாட்சிகளை மாற்றவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

சில ஆங்கில வாக்கியங்களைப் பார்ப்போம்.

I have the liberty to do it.
அதைச் செய்ய எனக்கு எழுவுதி உண்டு.
They lost the liberty and became slaves.
எழுவுதியை இழந்து அடிமைகள் ஆனார்கள்.
Liberty is in-alienable birth right.
எழுவுதி என்பது என்னிடம் இருந்து அயலிக்க முடியாத பிறப்புரிமை.

இனி freedom என்ற சொல்லைப் பார்ப்போம். சொற்பிறப்பியலின் படி,

freedom:

The prehistoric ancestor of free was a term of affection uniting the members of a family in a common bond, and implicitly excluding their servants or slaves - those who were not 'free'. It comes ultimately from Indo -european *prijos, whose signification ' dear, beloved' is revealed in such collateral descendents as Sanskrit priyas ' dear', Russian 'prijatel' 'friend', and indeed English friend. Its Germanic offspring *frijaz, displays the shift from 'affection' to 'liberty,' as shown in German frei, Dutch vrij, Sweedish and Danish fri, and English free. Welsh rhydd 'free' comes from the same Indo-European source.

இந்த விளக்கத்தின் படி "தமிழில் உறவின்முறை என்று தென்மாவட்டங்களில் சொல்லுகிறார்கள் பாருங்கள், அந்த உறவின்முறையில் உள்ளவர்கள் எல்லாம் free; மற்றவர்கள் free இல்லாதவர்கள்". இந்த உறவின் முறையில் உள்ள நம்மவர்கள் எல்லாம் பரிவுள்ளவர்கள்; பரிவுக்கு உரியவர்கள். மற்றவர்கள் பரிவுக்கு உள்ளுறாதாவர்கள். "பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற பாட்டை எண்ணிப் பாருங்கள். பரிதல் என்பது உற்றவருக்கு உரியது. இந்தப் பரிவு நம் உறவுக்கும், வகுப்பினருக்கும், இனத்தவருக்கும், மொழியினருக்கும் நாட்டினருக்கும் மட்டும் அல்ல, மாந்தனாய்ப் பிறந்த எல்லோருக்கும் உரியது என்பது இன்றையச் சிந்தனை. இதில் பரியுடைமை என்பதே freedom. (பரிவுடைமைக்கும் பரியுடைமைக்கும் வேறுபாடு கொண்டால் நன்றாக இருக்கும்.) தமிழ் உடைமை கொண்டாடுவது தமிழுடைமை - tamildom; அரசன் உரிமை கொண்டாடுவது அரசனுடைமை - kingdom. இறைவர் எல்லோர் மேலும் உடைமை கொண்டவர் ஆதலால் அவர் உடையார். தஞ்சைப் பெருவுடையார் என்ற சொல்லை ஓர்ந்து பாருங்கள். அதைப் போலப் பரியுடைமை.

"அவனுக்குப் பரிந்து நீ கேள்வி கேட்க வருகிறாயே?" என்றால் அவன் பரியுடைமையை நானோ, என் பரியுடைமையை அவனோ விட்டுக் கொடுக்க இயலாது என்றுதானே பொருள்? "நான் பரியாமல் வேறு யார் பரிவார்கள்? நான் அவன் உறவுக்காரன்; அவன் ஊர்க்காரன்; அவன் நாட்டுக்காரன்; அவன் மொழிக்காரன்; அவனும் மாந்தன் நானும் மாந்தன்" என்று இந்தப் பரியுடைமை நமக்குள்ளே விரியும். பரிதன்மை தான் freeness. பரிதன்மையை உடைமையாகக் கொண்டால் அது பரியுடைமை. இந்தப் பரியுடைமை என்பது நம்மோடு கூடப் பிறந்தது தான். இதைத் தான் விட்ட வெளித் தன்மை என்றும் விடுதலை என்றும் மொழி பெயர்க்கிறோம். ஒருவகையில் அது சரியென்றாலும், அடிப்படைப் பொருளை, விட்ட வெளித் தன்மை / விடுதலை என்பது, தனித்து நின்று, கொண்டு வரவில்லை என்றே நான் எண்ணுகிறேன். ஒரு குறுகிய அரங்கை (range) மட்டும் பார்த்து இந்தச் சொல் 19ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டுகளில் எழுந்திருக்கிறது. குறுகிய அரங்கு என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் விடுதலை எண்ணும் போது நாம் முன்னர் அடைபட்ட நிலை உள்ளே தொக்கி நிற்கிறது. அடைதலைக்குப் புறந்தலையாக விடுதலை என்று எண்ணும் போது ஏதோ ஒரு குறை, ஒரு எதிர்மறைச் சொல் போலத் தொனிக்கிறது. பரியுடைமை என்பது நேரடியாக பரிந்து வரும் போக்கைச் சுட்டுகிறது.

எழுவுதியும் பரியுடைமையும் ஒன்றா என்றால் கிட்டத்தட்ட ஒன்றுதான்; ஆனால் ஒரு நுணுகிய வேறுபாடு உண்டு. எழுவுதியில் தன்முனைப் போக்கு முகமையானது. பரியுடைமையில் சுற்றியிருப்போரையும் கருதும் போக்கு முகமையானது. அடிமைத்தளையில் இருந்து பரியுடைமை நிலைக்கு வருகிறோம். இதைச் செய்ய எனக்கு எழுவுதி வேண்டும். எழுவுதியை நிலைநாட்டி அதன் மூலம் பரியுடைமையை அடைகிறோம்.

அடுத்து independence:

புடலங்காய் பந்தலில் இருந்து தொங்குகிறது.
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தற்கீழ் மாலை மாற்றினர் மன்.

இப்படிச் சொல்லும் போது, பந்தல் என்பது மேலே இருந்து தொங்குகிறது என்று புரிந்து கொள்ளுகிறோம். பந்தல் என்பது காலில் நிற்கலாம். மேலே மோட்டு வளையில் முட்டுக் கொடுத்தும் தொங்கலாம். பந்துதல் என்பதன் அடிப்படைப் பொருள் கட்டுவதே. அந்தக் கட்டுமானத்திற்குப் பெயர் பந்தல்/பந்தர். பந்தர் என்பது ஒலை, துணி, தகரம் எனக் கட்டும் பொருளுக்குத் தக்க அசையும்; ஆடும்; உயரும்; தாழும். இத்தகைய இயக்கம் மேலும் இல்லாமல், கீழும் இல்லாமல் நடுத்தர நிலையில் இருப்பதால் அது பந்தரித்தல் என்றும் பந்தரம் என்றும் பின்னால் அந்தரம் என்றும் உருத் திரியும். பந்தப் படுவது என்பது கட்டப் படுவதே. ஒன்றைச் சார்ந்து அல்லது அடுத்து, பந்தப் படுவதே depend எனப்படுகிறது. அதாவது பந்தடுத்து அல்லது பந்தப்பட்டு நிற்பது என்பதே இந்த depend என்ற நிலை. பந்தப்பட்ட நிலை என்பது dependent status. பந்தப்படா நிலை = independent status. அதாவது இன்னொன்றைச் சாராநிலை. இதைத் தன்காலிலே நிற்கும் நிலை என்று பொருள் கொண்டு வடமொழி வழியே சுவ தந்திரம் என்று மொழிபெயர்த்தார்கள். தனிப்பட்ட, தனிநிற்றல், தன்னாளுமை என்றே நல்ல தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கலாம். வெறுமே independent என்று சொல்வதில் பொருள் வராது. independent of what என்ற கேள்வி உடனெயெழும். பல இடங்களில் இதற்கான விடை தொக்கி நிற்கலாம். இப்படித் தொக்கி நிற்கும் இடங்களில் விடுதலை என்பது சரியாக அமையக் கூடும்.

சில ஆங்கில வாக்கியங்களைப் பார்க்கலாம்.

India became independent in August 15, 1947.

இங்கே independent of British rule என்பது தொக்கி நிற்கிறது. எனவே இந்தியா 1947 -ல் ஆகசுடு 15 -இல் விடுதலை அடைந்தது என்று சொல்லலாம். அல்லது 1947- ஆகசுடு 15- இல் பந்தம் விடுத்தது என்றும் சொல்லலாம்.

There are 4 independent producers other than the MNC's for this drug in India.
இங்கே விடுதலையும் சரிவராது; சுதந்திரமும் சரி வராது. தனித்த, தனிப்பட்ட, சாராத, பந்திலாத போன்றவைதான் சரி வரும். தனிப்பட்ட/ தனித்த என்பது மிகச் சரியாகப் பொருந்தும். "இந்தியாவில் இந்த மருந்திற்கு பன்னாட்டுக் குழுமங்களைத் தவிர்த்து 4 தனித்த விளைப்பாளிகள் உள்ளனர்."

independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

freedom என்பதற்கும் independence என்பதற்கும் ஒற்றுமைகள் நிறைய இருந்தாலும் நுணுகிய வேறுபாடும் உண்டு.

காட்டாகப் பரியுடைமை என்பது இனி இந்தியாவைப் பொறுத்த வரையில் எதிர்காலத்துக்கும் உண்டு; அதை எந்நாளும் கையாளலாம்; கூடவே அதைக் காப்பாற்ற வேண்டும். தன்னாளுமை என்பது வந்து சேர்ந்து விட்டது. இனி இழக்காத வரையில், அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.

இதுவரை கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன். துல்லியம் கருதி கீழ்க்கண்ட சொற்களைத் தமிழில் புழங்கலாம் என்பது என் பரிந்துரை.

Liberty = எழுவுதி
freedom = பரிவுடைமை
independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

அன்புடன்,
இராம.கி.

Tuesday, June 19, 2007

தாலி - 4

இவ்வளவு நீண்டு, மங்கலம்/மஞ்சள் பற்றி முன் இடுகைகளிற் பேசிய நாம், அடுத்து, ஒளிப்பொருள் கொடுக்கும் வேர்ச்சொற்கள் ஆன "கொல், பொல், இல், எல், அல், ஒல், சுல், முல், வல்" போன்றவற்றையும், அவற்றில் இருந்து கிளைத்த நூற்றுக் கணக்கான சொற்களையும், முன்பு நான் எழுதிய கொன்றை பற்றிய கட்டுரையில் காணலாம்.

அந்த வரிசையில் துல் என்னும் வேரை அங்கு சொல்லாது விட்டிருந்தேன். இப்பொழுது அதைப் பார்ப்போம்.

புல் (>புலம்) என்பது போல துல் (>துலம்) என்பது ஒளியைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல் தான். துலம் என்னும் பெயர்ச்சொல்லில் இருந்து மேற்கொண்டு உருவான துலங்கல் என்னும் வினைச்சொல்லும் ஒளி தெரியும் நிலையைத் தான் உணர்த்துகிறது. கரிதட்டிப் போன ஏனத்தைக் கழுவி விளக்கித் துலக்குவது அதைப் பளிச்சென்று ஒளி நிறைந்ததாய் ஆக்குகிறது அல்லவா? துலக்குதல் என்பது துலங்குதலின் பிறவினை. துலங்குதல் என்ற வினைச்சொல் துளங்குதல் என்றும் திரிந்து ஒளி தரும் செயலைக் குறிக்கும். கேட்டை என்ற நாள்மீனைத் துலங்கொளி (எடுப்பாகத் தெரியும் ஒளி) என்று அகரமுதலிகள் கூறும்.

துளங்கின் திரிவாகத் துளங்கு>தளங்கு>தயங்கு>தயக்கம் என்ற அளவில் விளக்கம் என்னும் பொருளை உணர்த்தும். துள் என்னும் வேரின் நீட்சியாய் துள்>(தள்)>தளவு>தளவம் என்ற சொல் செவ்வரி படர்ந்த செம்முல்லையைக் குறிக்கும். (இப்பொழுதெல்லாம் சென்னையில் முல்லை என்றால் செம்முல்லை தான் கிடைக்கிறது. வெண்முல்லை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.)

துல் என்னும் வேரில் இருந்து துல்குதல்>துகுதல்>தகுதல் என்ற திரிவில், சொலிக்கின்ற தன்மையைச் சுட்டுவார்கள். "தகதக என்று சொலிக்கிறது" என்பது பேச்சு வழக்கு. "தளதள" என்பது கூட, சொலிக்கும் தன்மையைக் குறிக்கும். "அவள் உருவம் தளதள என்று இருந்தது."

தகுதல்>தகுத்தல்>தகித்தல் என்பது சுட்டு எரிக்கும் வினையைக் குறிக்கும். தகித்தல் என்பது இன்னும் சற்றே திரிந்து தவித்தல் என்று ஆகி, ஈரம் உலர்ந்து போய் ஏற்பட்ட தொண்டையில் ஏற்படும் வறட்சியைக் குறிக்கும்.

தகுவின் நீட்சியாய் தகு>தங்கு>தங்கம் என்ற பொருள் ஒளி பொருந்திய மஞ்சள் நிற மாழையைக் (metal) குறிக்கும். தகுவின் நீட்சியாய் தகை என்ற சொல் உருவாகி விளக்கம், அழகு என்ற பொருளைக் கொடுக்கும்.

அழகு என்பது கூட ஒளி, மஞ்சள் ஆகியவற்றின் பின்புலத்தைக் குறிக்கும் ஒரு சொல் தான். [கொன்றை பற்றிய என் முன்னாள் கட்டுரையில் அல்>அலங்கல் என்ற சொல் ஒளி என்ற விளக்கத்தைக் குறிப்பதையும், அலங்கல்>அலங்காரம் போன்ற சொற்கள் ஒளி நிறைந்த சோடிப்பைக் குறிப்பதையும், அல்>அழு>அழல் என்பது நெருப்பைக் குறிப்பதையும், அல்>அழு>அழுகு என்ற வினைச்சொல் அப்புவதைக் குறிப்பதையும், அழுகு>அழகு = மஞ்சள் பூசியது என்ற பொருளையும் விளக்கியிருப்பேன். அழுகு>அழுக்கு என்ற நீட்சி அப்படியே எதிர்ப்பொருளைக் கொண்டு வருவது அப்பிக் கிடக்கும் செயலால் தான்.

பொதுவாக, 'அழகு என்றாலே ஒளி விடுவது போல் bright -ஆக இருக்க வேண்டும் என்று தமிழர் எதிர்பார்க்கிறார்கள்' என்றும், 'beauty என்பதை அப்படித்தான் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளுகிறார்கள்' என்றும், 'அழகிய முகம் என்ற கூட்டுச்சொல்லின் முன்னொட்டான அழகிய என்பது ஒரு வினைச் சொல்லச் சுட்ட வேண்டும்' என்றும், 'அந்த வினைச்சொல் அழகுதல் என்றே அமையும்' என்றும், 'அந்தச் சொல்லுக்கு மஞ்சள் பூசுதல் என்ற பொருளே அமைய முடியும்' என்றும், 'மஞ்சளைப் பூசிக்கொண்டால், அதை அழகாகத் தமிழர் கருதிக் கொள்ளுகிறார்கள்' என்றும் அக்கட்டுரையில் சொல்லியிருப்பேன்.]

இனித் துல்குதல்>துகுதல் என்பதன் நீட்சியாய், (துகு)>(திகு)>திகழ் என்ற சொல் திங்கள், நிலாவைவைக் குறிப்பதையும் ஓர்ந்து பார்க்கலாம். திகு>திங்கு>திங்கள் என்ற சொல் கூட ஒளிநிறைந்த நிலவைக் குறிக்கும் முகமாக எழுந்தது.

தமிழர் வானியல் வழி அறிந்த இன்னொரு செய்தியையும் இங்கு குறிப்பிட வேண்டும். அமைந்த கணக்கின் படி, சந்திரமான மாதங்கள் அமையுவாவில் (அமாவாசையில்) தொடங்குகின்றன. அமையுவாவில் இருந்து பூரணை (பௌர்ணமி) வரை உள்ள காலத்தைச் சொக்கொளிப் பக்கம் (சுக்ல பக்ஷம்) என்றும், பூரணையில் இருந்து திரும்பவும் அமையுவா வரும் வரை உள்ள காலத்தைக் கருவின பக்கம் (க்ருஷ்ண பக்ஷம்) என்றும் நம்மூரில் அழைப்பார்கள். மேலும், ஓர் ஆண்டைச் சூரிய மானத்தில் அறவட்டாக 12 பகுதியாய்ப் பகுத்தது போல நிலவு போகும் வட்டப் பாதையையும் அறவட்டாக 30 பகுதியாகப் பிரிப்பார்கள். இதில் ஒவ்வொரு பகுதியும் 12 பாகை கொண்டது.

இப்படிப் 12 பாகையாய்ப் பிரித்த ஒவ்வொரு பகுதியிலும் நிலவு ஒவ்வொரு தோற்றம் காட்டித் திகழுகிறது, அல்லது ஒளி தருகிறது. இப்படி ஒளி தரும் பகுதிகளுக்குத் தமிழில் திகழிகள் என்று பெயர். திகழி மறுவித் திகதி என்று ஆகி, அது இன்னும் திரிந்து, வடமொழியில் திதி என்று சொல்லப் படும். சந்திர மானக் கணக்கின் படி நிலவின் சுற்று என்பது 30 திகழி/திகழ்தி/திகதி/திதிகள் அடங்கியது. ஒரு சூரிய மான மாதத்திற்கும் கிட்டத்தட்ட 30 நாட்கள் என்னும் போது, பெயர்ப் பிறழ்ச்சியில் திகதி தேதியாகி சூரிய மானத்து நாட்களையும் குறிக்கத் தொடங்கிற்று. ஈழத்தார் இன்னும் திகதி என்ற சொல்லைக் காப்பாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேதி என்றே சொல்லிவருகிறோம். ஈழத்தார் சொல் இல்லையேல், இந்தச் சொற்பிறப்பைக் கண்டறிந்திருக்க முடியாது.

திகழி, திகதி, திதி = ஒளி நிறைந்த சந்திரமான நாள்.
திகழ்தல் = ஒளி தருதல்.

திகழ்தல் என்ற சொல் *துகு என்ற சொல்லடியில் இருந்தே கிளைத்திருக்க முடியும். இனிக் ககர, வகரப் போலியில் துகு என்ற சொல்லடி துவு என்று ஆகிக் கீழே உள்ள சொற்களை உருவாக்கும்.

துவர் = சிவப்பு (துவரம் பருப்பு = சிவப்புக் கலந்த மஞ்சள் பருப்பு)
துவரி = காவி, இலவம் பூ
துவரித்தல் = செந்நிறமூட்டுதல்
துவரை = செம்பயறு
துவரை>தோரை= செங்காய்ப்பனை, அரத்தம்
துவர்>தோர், நெய்த்தோர் = அரத்தம்
துவர்>துகிர் = பவழம்
துவள்>துவண்டை = காவியுடை

துல் என்னும் வேர் ஒளி கூட்டுவதைச் சொல்ல இன்னொரு திரிவையும் உன்னித்துப் பார்க்கலாம்.

துல்>தெல்>தென்>தென்படுதல் = தெரிதல்
துள்>தெள்; தெள்ளுதல் = விளங்குதல்; தெளிவு = விளக்கம்
துலம்>துலவம் = பருத்தி
தெளிதல்>தெரிதல்

தெல்லில் தோன்றிய சொற்கள் ஏராளம். அவை எல்லாவற்றிலும் ஒளி என்னும் கருத்து உள்ளூடி நிற்கும்.

இந்த்ச் சிந்தனையில் எண்ணிப் பார்த்தால், துல்>துகு>தகு>தகல் என்னும் சொல் அகரமுதலிகளின் படி, ஒளி என்ற பொருளை உணர்த்துகிறது. மேலும் தகல்தல் என்று சொல்லுக்கு ஒளிதல் மட்டுமல்லாது எரிதல் என்ற பொருளும், முன்னே சொன்ன தகதக என்ற புடைப்புச் சொல்லால் சுடுதல் என்ற பொருளும் இருக்க வேண்டும். [தகல்தலின் நீட்சியாய் உள்ள தகல்நம்>தகனம் என்ற பெயர்ச்சொல் எரிதலைக் குறிக்கிறது.]

தமிழில் நூல்கள் அழிந்து போனதன் குறைவே இதுதான். ஏரண அறிவோடு பார்த்தால் தோன்றும் பொருட்பாடுகளில், இங்கொரு வினைச்சொல்லும், அங்கொரு பெயர்ச்சொல்லுமாய் இடைவெளி விட்ட சொற்களே தென்படுகின்றன. அதை வைத்தே, தமிழில் "இது கிடையாது, அது கிடையாது" என்று சொல்லப் புகுந்து விடுகிறார்கள் மொழியைப் புரியாத ஒருசிலர். வெள்ளத்திற்கும், நெருப்பிற்கும், சிதலுக்குமாய் நம் நூல்களைப் பறிகொடுத்து, இன்று ஒவ்வொன்றிற்கும் ஆழ்ந்த ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. மொழியாய்வு என்பது மொழி அகழாய்வாகவே ஆகிப் போய்விடுகிறது.

இனிப் பகல்>பால் ஆனது போல, அகல்>ஆல் ஆனது போல, மகன்>மான் (மகள்>மாள்) ஆக முடிவது போலத் தகல்>தால் என்றும் ஆக முடியும். தகல் என்னும் ஒளிப்பொருள் தாலுக்கும் வந்து சேரும். தாலின் பலுக்க வேறுபாடான "டால்" என்னும் ஒலிக்கூறு இன்றைக்கும் இந்தியப் பேச்சில் ஒளி என்ற பொருளைத் தருகிறது அல்லவா? "அந்தச் சங்கிலியைப் பாரேன்! டாலடிக்கிறது" என்னும் போது ஒளி கூடிச் சிறக்கின்ற நிலையைத் தானே குறிக்கிறோம்? (ராரீரோ என்னும் ஒலிக்கூறு தாலேலோ என்று திருந்திய தமிழில் ஆகித் தாலாட்டைக் குறிப்பது போல் டால் என்னும் ஒலிக்கூறு தால் என்னும் நல்ல தமிழ்ச்சொல்லை நமக்கு உணர்த்தலாம்.)

தால் என்ற சொல் தால் என்னும் இயல்பையும் (மஞ்சள் நிறம்), தால் என்னும் இயற்பொருளையும் (மஞ்சள் பொருள், பொன் போன்றவை) குறிக்கலாம். இனி, வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலி. மீண்டும் சொல்லுகிறேன்; இந்தத் தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. ஒளி நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.

தகல்>தால்>தாலி

தகல்>தால் என்று சொல்லுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தாலின் நீட்சியாய் எழுந்த தாழ் என்ற சொல், தாழம்பூ என்ற மஞ்சள் நிறப் பூவை நம்முன் கொண்டு வந்து சான்று கூறுகிறதல்லவா? தகதக, தங்கம், தகை, திகழ்தல், திகழி, திங்கள், துவு வழிச் சொற்கள், தெல் வழிச் சொற்கள், தாழம்பூ ஆகியவற்றை ஒருங்குற எண்ணிப் பார்த்தால் தால் என்னும் சொல் தமிழில் இருந்திருக்க வேண்டும். டால் என்னும் பலுக்கற் பிறழ்ச்சி கூடத் தாலைத் தான் குறிக்கிறது என்றும் சொல்ல முடியும். ஏரணவியலின் துணைப் படி ஆய்ந்து பார்த்தால், தாலி என்பது மஞ்சள் பொருள் கட்டிய கயிறு என்றே பொருள் கொள்ள முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, June 15, 2007

தாலி - 3

சரி, மஞ்சள் என்ற கருத்துப் புரிகிறது, மஞ்சட்பொருள் திருமணத்தில் எப்பொழுது வந்தது?

முன்னே சொன்னது போல், இந்தக் காலத்தில் நாம் காணும் தாலிகட்டுப் பழக்கம் தமிழருள் எப்போது ஏற்பட்டது என்று உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. (கிடைத்திருக்கும் சான்றுகளைப் பார்த்தால், பெரும்பாலும் சங்கம் மருவிய காலத்தில் ஏற்பட்டிருக்க முடியும். அது பற்றிக் கீழே பார்ப்போம்.)

சிலம்பில் வரும் மங்கலவாழ்த்துப் பாடல் என்னும் முதற் காதையே "மங்கல வாழ்த்து" என்ற சொற்றொடரால் "திருமண வாழ்த்தை"த்தான் குறிக்கிறது. குறிப்பாக, மங்கலம் என்ற சொல் இங்கு திருமணத்தையே குறிக்கிறது. சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில்,

"முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது"

என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருகிறது; அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். "முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது" என்று உணர்த்துகிறார்.

[19ம் நூற்றாண்டு வரையிலும் கூட நம்மூரில் திருமணங்கள் இரவில்தான் நடந்தன; பகலில் இல்லை. இராகு காலம், யம கண்டம் இல்லாமல் நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்தது அப்பொழுது இல்லை. இன்றைக்கு இருக்கும் காலநேரத் திருமண நடைமுறை ஒரு 100/120 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதே! தவிரவும் திருமணங்கள் பெரும்பாலும் பூரணையும் (பௌர்ணமி), சகட நாள்காட்டும் (உரோகிணி நட்சத்திரம்) கூடிய இரவில் தான் நடந்தன. (நிலாவெளிச்சத்தில் வெண்குடைகள் எழுவது அலங்காரமாய் தோற்றமளிக்கும்.]

அது என்ன, மங்கல அணி என்ற சொல்லாட்சி? அது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிய மிஞ்சிக் கிடக்கும் இன்றையப் பழக்கம் தெரிந்தால் போதும். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு திருமணத்திலும், "கெட்டிமேளம், கெட்டிமேளம்" என்ற குரல் எழுந்து மேளம் அதிர்ந்து, சில இடங்களில் சங்கு முழங்கி [குறிப்பாகச் சிவகங்கைப் பக்கம் சில ஆண்டுகள் முன்பு வரை சங்கு முழக்கம் திருப்பூட்டும் போது (தாலி கட்டும் போது) இருந்தது], அரசாணைக் காலுக்கு அருகில் எல்லோரும் எழுந்து நிற்க, வந்தவர்கள் தொட்டு வாழ்த்தப் பெற்ற தாலி அகலுள் எழத் தான் செய்கிறது.

எனவே, சிலம்பில் மங்கல அணி என்ற சொல் தாலியைத்தான் மிகத் தெளிவாகக் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. அப்புறம் தாலி என்ற சொல் வரவில்லையே என்று சிலர் கேட்கக் கூடும். "தாலி என்ற சொல்லால் குறித்தால் தானா? அதை வேறு சொல் கொண்டு குறிக்கக் கூடாதா, என்ன?" என்பதே நம் மறுமொழி. தாலிப் பழக்கம் கி.பி. 100/150 அளவில் இருந்திருக்கிறது என்று சிலம்பை வைத்து அறுதியிட்டு உரைக்க முடியும். அச்சில் உய்வு (printed salvation) தேடும் வறட்டுக்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்த உண்மைப் பொருளை நன்றாய் உய்த்துணர்வார்கள். [அதே பொழுது, சிலம்பில் குறிக்கப்படும் மேட்டுக்குடித் திருமணம் தமிழர் வழக்கத்தையும், ஆரியர் வழக்கத்தையும் கலந்து விரவியே குறிக்கிறது என்பதையும் இங்கு அழுத்திச் சொல்ல வேண்டும்.]

அடுத்த மங்கல அணி என்பது மனையறம் படுத்த காதையிலும் பேசப் படுவதைச் சொல்லலாம். நகரத்தார் வழக்கத்தில் திருமணமான மகனையும் மருமகளையும் (பெரும்பாலும்) ஓராண்டு முடிந்தோ, அல்லது ஓரோவழி மூவாண்டு முடிந்தோ, தனிக் குடித்தனம் வைப்பார்கள். இப்படித் தனிக் குடித்தனம் வைத்தலை "வேறு வைத்தல்" என்றும் சொல்லுவார்கள். இளங்கோவடிகளும் கூட "வேறு வைத்தல்" என்ற சொல்லாட்சியையே சிலம்பில் ஆளுகிறார். மகனைப் பெரிய வீட்டில் (பெற்றோர் வீட்டில்) இருந்து வேறு வைத்தலைத் தான் "மனையறம் படுத்தல்" என்று சொல்லுவார்கள்.

மனையறம் படுத்த காதையில் "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே" என்றெல்லாம் கோவலன் சொல்லுவதைப் பலரும் ஏதோ திருமண நாள் இரவு நடந்தாக எண்ணிக் கொள்கிறார்கள். அது தவறு. அந்த உரை வேறு வைக்கும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு நடந்ததாகும். அந்த ஓராண்டில் அவர்களுக்கு ஏற்பட்ட நிறைவின் முடிவில் தான், கோவலன் கண்ணகியைப் பலவாறு பாராட்டுகிறான். அப்படிப் பாராட்டுவதில் கீழே வருவதும் ஒரு பாராட்டாகும்.

நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்

"மணம்வீசும் மலர்சூடிய பெண்ணே! உன்நலம் பாராட்டுபவர்கள், குறையில்லாத மங்கல அணியைத் தவிர வேறு அணி சூடவில்லையே, அது எதனால்?"

என்று கேட்கிறான். வேறொன்றும் இல்லை; பல்லாண்டு மங்கலமாய் வாழ்ந்து பலபேறும் பெற்ற வாழ்வரசி தான் தனித்து வாழப் போகிறவளை வாழ்த்த வேண்டும் என்பது மரபு. இங்கும் மங்கல அணி என்பது தாலியையே குறிக்கிறது. இந்தக் காலத்தில் சுமங்கலி என்ற இருபிறப்பிச் சொல்லால் இது போன்ற வாழ்வரசிப் பெண்ணைக் குறிப்பார்கள். சிவ மங்கலி என்னும் நல்ல தமிழ்க்கூட்டுச் சொல் தான் திரிந்து சுமங்கலி என்றாகி வடமொழியாய்ப் பொய்த்தோற்றம் காட்டுகிறது. இன்றும் இறைவியின் முன்னிலையில் பெற்ற குங்குமத்தைத் தாலியின் மேல் இட்டுக் கொள்ளும் பழக்கம் தமிழ்ப் பெண்களுக்கு உண்டு. குங்குமம் பொற் தாலியில் ஒட்டாது; ஆனால் மஞ்சள் பொருளில் நன்றாய் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது அது சிவமங்கலியாய் ஆவது வியப்பு ஒன்றும் இல்லை.

இன்னும் பார்த்தால், மங்கலம் என்ற சொல் சிலம்பு 5:146, 151 வரிகளிலும் பயில்கிறது. இனி நடுகற் காதையில் வேண்மாளைக் குறிக்கும் போது வரும் வரிகளைப் (சிலம்பு 28:51) பார்க்கலாம்.

தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணம் காணிய வருவழி

வதுவை வேண்மாள் என்பது வதுவுற்ற அரசி வேண்மாளைக் குறிக்கிறது. வதுவை = wedding; இங்கே வதுவுற்ற என்பது wedded என்ற வினைச்சொல்லைக் குறிக்கிறது. மங்கல மடந்தை என்ற பெயர்ச்சொல் கண்ணகியைத் தான் குறிக்கிறது. "நிலவு எழுந்த பொழுதில் பொன்மாளிகையில் உள்ள புனைமணி அரங்கின் ஊடே மங்கல மடந்தையைக் காண வரும் வழியில்" என்ற பொருளை இங்கு கொள்ள வேண்டும்.

ஆகக் கணவன் இறந்த பின்னும் கூடக் கண்ணகி மங்கல மடந்தை என்றே சிலம்பிற் சொல்லப் பெறுகிறாள். இன்றைக்கும் கேரளத்தில் கண்ணகி கோயில் மங்கலதேவி கோயில் என்றே சொல்லப் பெறுகிறது. "கணவன் இருப்பதால் தான் மங்கலச் சிறப்பு" என்ற முட்டாட்தன மூதிகங்களைக் குறிக்காமல், இங்கு தனித்த முறையில் மங்கல மடந்தை என்று கண்ணகி சொல்லப் பெறுவது முற்போக்காளர்கள் சிந்தனையில் தைக்க வேண்டும். மங்கல வாழ்வு என்பது ஒரு முழுமை பெற்ற வாழ்வு, அவ்வளவு தான். பொதுவாய் வேறு வைத்துத் தனிக் குடித்தனம் நடத்தும் எந்த ஒரு பெண்ணுக்கும் குமுகத்தில் தனி ஆளுமை கிடைத்து விடுகிறது. அப்படி ஆளுமை கிடைத்த எவளும் மங்கல மடந்தை, வாழ்வரசி என்றே அழைக்கப் படுவாள். (இன்றைக்கு முட்டாள் தனமாகக் கணவனை இழந்தோரை வாழ்வரசி அல்லாதவள் என்று கூறினாலும்) பழைய புரிதலில் கண்ணகியும் மங்கல மடந்தையே. (இந்தச் சொல்லாட்சி சிலம்பு 28:51, 30:53, 50:88 ஆகியவற்றிலும் பயிலும்.) நிறைவு வாழ்க்கையை கண்ணகி நடத்தியதை மனையறம் படுத்த காதையின் முடிப்பு வரிகளில்,

"வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
மறப்பருங் கேண்மையொடு அறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்
காண் தகு சிறப்பில் கண்ணகி தனக்கென்"

என்று சொல்லி யாண்டு சில கழிந்ததை உணர்த்துகிறார். இன்னொரு சொல்லாட்சியாய் நீர்ப்படை காதையில் (27:163) மாடலன், மங்கல மறையோன் என்று சொல்லப் பெறுவான்.

எங்கோ வேந்தே வாழ்கென்று ஏத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்

இன்றைக்கும் பெருமானரில் இரண்டு வகையை இனம் காட்டுவார்கள். ஒருவர் மந்திரங்களிலும், வேள்விகளிலும் தேர்ந்தவர், இன்னொருவர் தந்திரங்களில் (கோயில் பற்றிய புரிசைகளில்) தேர்ந்தவர். முதல்வகை ஆள் தான் இன்றைக்கும் திருமணங்களின் ஊடே வருகின்ற பார்ப்பனர் ஆவார். இரண்டாம் வகையைச் சேர்ந்த தந்திரி, ஓரோவழி முதல் வகையாருக்கு உதவி செய்யும் தோதாய் வரக்கூடும். இருந்தாலும் முதல் வகையாரையே, பெருமானர் சடங்குகள் நடத்த நாடுவர். மாடலன் முதல் வகை மறையவன்; அவன் மங்கல மறையோன் = மங்கல காரியங்களை நடத்தி வைக்கின்ற பார்ப்பனன் என்றே சொல்லப் படுகிறான். அதாவது "கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்து வைக்கும் வாத்திமார்".

மங்கல அணி என்ற தமிழ்க் கூட்டுச்சொல் மங்கலம்>மங்கல்யம்>மாங்கல்யம் என்று சுருங்கிப் போய் இருபிறப்பியாய் மாறியது ஒன்றும் வியப்பான செயல் அல்ல.

{காட்டாக, "ஜல சமுத்ரம்" என்ற இருபிறப்பிச் சொல் இன்று "சமுத்ரம்" என்று சுருங்கச் சொல்லப் பட்டு பொருள் புரிந்து கொள்ளப் படுகிறது. சமுத்ரம் என்ற இருபிறப்பிச் சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் என்ற பொருளைத் தரும். குமிதல் என்பது தன் வினை. குமித்தல் என்பது பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருவழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவர்களுடைய சமுகமாக உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.

இனி, ஜலம் என்னும் சொல்லும் தமிழ் மூலம் காட்டுவது தான். சலசல என்று ஓசை எழுப்பும் நீர் சலம்>ஜலம் என்ற பெயரைக் கொள்ளும். (இது போன்ற ஓசைவழிச் சொற்கள் பல மொழிக் குடும்பங்களிலும் காணக் கிடைக்கும். ஒரு குடும்பம் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.) ஜலம் என்னும் சொல்லும் சமுத்ரம் என்னும் சொல்லும் சேர்ந்து வடமொழியில் ஜலசமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லை உருவாக்கும். நாளாவட்டத்தில் புழக்கத்தின் காரணமாய் ஜல என்பது தொகுக்கப்பட்டு சமுத்ரம் என்பதே தனித்துக் கடலைக் குறித்தது. ஜல சமுத்ரம் போல ஜன சமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக் கவனியுங்கள். [சமுத்ரத்தில் உள்ள தீவு சமுத்ரத் தீவு>சுமத்ரத் தீவு>சுமத்ராத் தீவு.]}

அன்புடன்,
இராம.கி.

தாலி - 2

இனி மகாவின் முதற் கூற்றுக்கு வருவோம்.

1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.

வேர்ச்சொல்லை இனங் காண்பது ஒருவேளை பேரா.தொ.பரமசிவனுக்கு வாய்க்காது போயிருக்கலாம். ஆனால் ஆய்வு என்பது அவரோடு நின்றுவிடுவது இல்லை. அவருக்கு அப்புறமும் நடக்கும். தாலி என்ற பழக்கம் தமிழரிடம் ஆழ்ந்து காணப்படுகையில், அதன் வேர் தமிழரிடம் இல்லாது, வேற்று மொழியினரிடம் இருக்குமோ? கொஞ்சம் ஆழப் போனால், தாலியின் வேரை தமிழிலேயே அடையாளம் காண முடியும். அதற்குத் தேவையானது, நம் மரபுகளைப் புரிந்து கொள்ளுவதே!

தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் "மஞ்சள், கயிறு, கட்டுதல்" ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

அப்படி என்ன, திருமணத்தில் மஞ்சளுக்கு முகன்மை வந்தது, என்பது புரிய வேண்டும்? அவ்வளவுதான்.

மஞ்சளுக்கும் திருமணத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு தமிழர் மரபில் என்றென்றும் உண்டு. மல் என்னும் வேரில் கிளைத்த மல்குதல் என்ற சொல்லிற்கு பொலிதல் (to become fertile), அதிகப் படுதல் (to grow, to increase) என்ற பொருளுண்டு. மல்>மலர்>மலர்தல் என்ற வளர்ச்சியில் பொலிவு, பூ விரிதல் என்ற பொருட்பாடுகள் வந்து சேரும். அதுமட்டுமில்லை, "பொன், உலோகத்தைக் குறிக்கும் மாழை, மாடை" என்ற சொற்களும் கூடப் பொலிவுப் பொருளில் கிளைத்தவை தான். கத்தூரி மஞ்சளைக் குறிக்கும் சொல்லான மாளம் கூட இந்த வழி வந்தது தான்.

மல்>மால்>மாழை = பொன், உலோகம்
மல்>மள்>மளி>மளிகாரம் = வெண்காரம்
மள்>மண் = புழுதி, சுண்ணச் சாந்து, தரை
மள்>மாள்>மாளம் = கத்தூரி மஞ்சள்
மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்
மாடு>மாடை = பொன், அரை வராகன், உலோகம்

மல்கின் விரிவாய் எழுந்த மலிகுதல் என்ற சொல்லும் பெருகுதற் (to grow) பொருளைக் குறிக்கும். மல்கு>மலுகு>மலிகு= பெருகுதல்

அடுத்து மங்கல் என்ற சொல் எழுந்ததும் இதே வழியில் தான். இருள் மிகுந்த பின்புலத்தில் ஒளிபாய்ந்து பெருகும் போது அது மங்கலாய்க் காட்சியளிக்கும்.

மலிகு>மலிங்கு>மயிங்கு>மய்ங்கு>மங்கு>மங்கல் என்ற சொல் மங்கல் ஒளியைக் குறிக்கும்.

மங்கலின் திரிவே தமிழர் மரபில் மஞ்சள் நிறமாகும். மங்கல்>மங்கள்>மஞ்சள் = நிறம், மஞ்சள் பொருள் ஙகர, ஞகரப் போலி தமிழில் மிகுதியானது. மங்கலின் இன்னொரு வளர்ச்சி அம் என்னும் பெருமை விகுதி பெற்று மங்கலம் என்றாகும். மங்கல்>மங்கலம் = சிறப்பான நிகழ்வு, பொலிவு. மங்கலமான மணப்பருவம் எய்திய பெண்ணைக் குறிக்கும் சொல்லான மங்கையும் கூட மங்கு என்ற சொல்லில் இருந்து தோன்றியது தான். மங்கு>மங்கை = மங்கல(மாகிய மண)ப்பருவம் அடைந்த பெண்.

நாம் செவ்வாய் என்பது, வடவர் கணிப்பில் மஞ்சள் தோற்றமே காட்டும். (மஞ்சட் பொருள் காடித் தன்மையில் (acidic nature) மஞ்சள் நிறம் காட்டுவதும், களரித் தன்மையில் (alkaline nature) சிவப்பு நிறம் காட்டுவது இயற்கை அறிவு. காடி சேர்த்த மஞ்சள் பொற்சுண்ணம் என்று சொல்லப் படும்; பெருமாள் கோயில்களில் தாயார் முன்னிலையில் பொற்சுண்ணம் கொடுப்பார்கள்; களரி சேர்த்த மஞ்சள் குங்குமம் என்று சொல்லப் படும். அதை ஆண்டாள் முன்னிலையில் கொடுப்பார்கள்.) மங்கலம்>மங்கல வாரம் = வட மொழியில் செவ்வாய்க் கோள் (மங்கல் என்பது இங்கே சிவப்பு என்ற பொருளில் வந்திருக்கிறது.)

மங்கலத்தின் இன்னொரு நீட்சி மங்கலம்>மங்கல்யம்>மங்கலியம் = பொன்; மங்கலியம்>மாங்கலியம் = பொன்னால் ஆன தாலி, மஞ்சள் நிறைந்த தாலி

மஞ்சள் என்னும் சொல் கீழ்க்கண்டவாறு இன்னும் திரியும்.

மஞ்சள்>மஞ்சுளம் = அழகு
மஞ்சு>மஞ்சுதல் = மஞ்சள் நீரால் முழுக்காட்டுதல்
மஞ்சுதல்>மஞ்சனம் = நீராட்டு. (பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் என்றே சொல்லுவார்கள்; சிவன் கோயிலில் இது அப்பு இழிக்கம்> அப்பிஷேகம் > அபிஷேகம் என்று வடமொழிப் படுத்தி ஆளப்படும். தமிழர் வழக்கில், அகவைக்கு வந்த பெண்ணுக்குச் செய்யும் நீராட்டும் மஞ்சள் நீராட்டு என்றே சொல்லப்படும். தென்பாண்டி நாட்டில் இந்தச் சடங்கு இன்றைக்கும் பெரிதாய்க் கொண்டாடப் படுவதே.)
மஞ்சுதல்>மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீராட்டுதல், அலங்கரித்தல்
மண்ணுநீர் = மஞ்சன நீர்
மண்>மணிகம் = நீர்க்குடம்
மணம் = கல்யாணம்

என்ற சொற்கள் எல்லாமே மஞ்சளை உணர்த்தும். இந்தக் காலத்தில் மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டுவது தான் கல்யாணம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், சங்க காலத்தில், அப்படி இல்லை; தாலியைப் பற்றிய பேச்சு அங்கு இல்லை. (பேச்சு இல்லை என்றவுடன், பழக்கம் இல்லையென்று கூறிவிட முடியாது. நம்மால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால் சங்கம் மருவிய காலத்தில் சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் இருந்திருக்கிறது. அதைப் பற்றிக் கீழே காண்போம். இப்பொழுது சங்க கால விவரிப்பை அகநானூற்றின் வழியாய்ப் பார்ப்போம்.)

அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக! என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை

இதன் விளக்கம் என்ன?

"தலை உச்சியில் குடத்தை வைத்துக் கொண்டுள்ள பெண்கள்,
புது மண்பாண்டம் (உருண்டையான அதற்கு மண்டை என்றே பெயர்.) வைத்திருக்கும் பெண்கள்,
ஆரவாரமாய்ச் சடங்கு செய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள்,
என இவர்கள் எல்லாம் ஒவ்வொரு பொருளையும் எடுத்துத் தர,
பிள்ளை பெற்றெடுத்த நான்கு வாழ்வரசிகள் (பசலை போட்டிருக்கும் அவர்கள் நகைகள் அணிந்திருக்கிறார்கள்)

"அம்மாடி, பெண்ணே, சொல் திறம்பாமல் (சொன்ன சொல் மாறி விடாதே), எல்லார்க்கும் உதவி செய்து, கொண்டவன் விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்பவளாய் இரு"

என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. அவ்வளவு தான்!

மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற்றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. பொதுவாக பூ, நெல் சொரிவதோடு, முளைப்பாலிகை என்ற இன்னொன்றையும் கலந்து கொள்ளுவார்கள். [திருமணத்திற்கு முதல்நாள், நெல்லோடு பல கூலங்களையும், சில பயறுகளையும் கலந்து ஈரத்தோட முளைக்க விட்டு, அதைப் பாலோடு கலந்து வைப்பதற்கு முளைப் பாலிகை என்று சொல்லுவார்கள்.] இந்த முளைப்பாலிகையையும், பாலில் பூவிதழ்களைப் பிய்த்துப் போட்டு வைப்பதையும் தான் மணமக்கள் மேலே சொரிவதற்குப் பயன்படுத்துவார்கள்.

முல்>முல்ங்குதல்>முங்குதல் = ௾றங்குதல்; நீருக்குள் முங்கி எழுதல்
முல்ங்குதல்>முல்ஞ்சுதல்>மல்ஞ்சுதல்>மஞ்சுதல்>மஞ்ஞுதல்>மண்ணுதல் = நீர் இறங்குதல்
மஞ்சனம்>மஞ்ஞனம்>மண்ணனம் = நீர் இறைக்கும் செயல்
முல்>முழு>முழுகுதல்>முழுக்குதல் = நீருக்குள் இறக்குதல்
மண்ணுதல்>மண்ணம்>மணம் = நீருள் இறங்கும் செயல்.

அந்தக் கால தமிழர் மணம் என்பது கூடியிருப்போர் வாழ்த்துக் கூற நடக்கும் மங்கல நீராட்டே ஒழிய வேறு எதுவும் அல்ல. அகநானூற்றில் சொல்வது போல திருமணத்தில் மஞ்சள்நீர் ஆடும் சடங்கு இன்றைக்கும் நாட்டுப் புறங்களில் பல இடத்தும் (குறிப்பாக சிவகங்கைப் பக்கம்) முகன்மையாகத் தான் இருக்கிறது. முன்னே சொன்னது போல், மணம் என்ற சொல்லுக்கே மஞ்சள்நீர் ஆடுதல் என்றுதான் அதே போல 60-ஆம் ஆண்டு மணி விழாக்களிலும் மஞ்சள் நீராடுவதே (கும்பஞ் சொரிவதே) பெருஞ்சடங்காகத் தமிழ்நாடு எங்கணும் கொள்ளப் படுகிறது. (வடக்கில் இருந்து தெற்கே வந்து தமிழரோடு கலந்து போன பார்ப்பனர் கூட மஞ்சள் நீராட்டுச் சடங்கைத் தங்கள் திருமணங்கள், மணிவிழா போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளுவார்கள்.) ஆக அகநானூற்றுப் பழக்கம் குறைந்தது 2300 ஆண்டுகள் இந்தக் குமுகாயத்தில் தொடர்ந்து வருகிறது. இதே பழக்கம் கோபுரக் கலசங்களை நீராட்டுவதிலும் இருந்திருக்கிறது.

இது போன்ற மஞ்சள் நீராட்டு வழக்கை தொல்காப்பியம் புறத்திணையியலில் உழிஞைத் துறை பற்றிப் பேசும் இடத்தில் இயல்பு, இலக்கணம், துறைகள் ஆகியவை பற்றிப் பேசிய பின்பு, நொச்சி பற்றிப் பேசும் இடத்தில் தொல் 1014: 10 வது வரி பேசும். மாற்றுநாட்டுக் கோட்டையைப் பிடித்தபின் அந்தக் கோட்டைக் கோபுரத்தின் கும்ப உச்சியில் குடமுழுக்கு செய்வதைக் குறிக்கும் முகமாக "குடுமி கொண்ட மண்ணுமங்கலம்" என்ற சொல்லாட்சி அந்த வரியில் வரும். ஆக, மஞ்சள் நீராட்டு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 2700 ஆண்டுகளாய் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது.

"திருக்குட நீராட்டு என்பது சமயப் பழக்கமல்ல; அது இனக்குழுப் பழக்கமே" என்பதற்குத் தொல்காப்பியமே முற்றுமுழுதான சான்று. இதே போன்ற திருக்குட நீராட்டு கோபுரத்திற்கு நிகழுமானால், பின் ஆண்பெண் இருவருக்கும் அவருடைய வாழ்க்கையின் குடும்பத் தொடக்கத்திலும், பெண்ணானால் அவள் அகவைக்கு வந்த பின்னும், பின்னால் ஆணுக்கு 60 அகவை முடிந்த போதும், குடநீராட்டு நடப்பது நெடுநாள் மரபாய் இருந்திருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். வெற்றி ஏற்பட்டால், நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால், ஏதொன்றையும் கொண்டாட வேண்டும் என்றால், தமிழருக்கு மஞ்சளும், மஞ்சள் நீரும் வாழ்வில் ஊடுவந்து விடுகின்றன என்றே சொல்லலாம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, June 14, 2007

தாலி - 1

அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' என்ற பொத்தகத்தை மேற்கோள் காட்டி, பதிவர் மகா, கீழ்க் கண்ட செய்திகளைக் கூறியிருந்தார்.
--------------------------
1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.
2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
4. 'கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
5. 'பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை' - பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
6. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
7. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
8. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
9. இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
10. பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
--------------------------------
இவை போக மேலும், "தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப் படுவதாக சரடு விடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த பதிவு" என்றும் பதிவர் மகா குறித்திருந்தார்.

அவர் பதிவைப் படித்த போது, இதற்கு ஒரு மறுமொழி தரவேண்டும்; ஆனால் பொறுமையுடன் தரவுகளைச் சேகரித்துத் தரவேண்டும் என்று விழைந்தேன். திரு. மகா தந்திருப்பது போன்றவொரு முன்னிகை (comment), வீட்டிற் கிடக்கும் ஓலைச்சுவடிகளை, அவற்றின் உள்ளடக்கம் அறியாமல், குப்பை என்று கருதிக் கொண்டு, அள்ளி வீசியெறியும் (sweeping) பாமரத்தனத்தைச் சேர்ந்தது. கால காலமாய், பதினெட்டாம் பெருக்கின் போது காவிரியில் (அது போல மற்ற ஆறுகளில்) சுவடிகளை வீசியெறிந்தும், பொங்கலுக்கு முதல்நாள் நெருப்பிற்கு இரையாக்கியும், குப்பையில் மக்கிப் போயும், செல்லரித்துப் போகும் விதமாய்க் கரையானுக்கு உண்ணக் கொடுத்தும், தமிழர் தொலைத்த சுவடிகளும், அதிலிருந்த செய்திகளும் ஏராளம், ஏராளம். இப்பொழுது எஞ்சியுள்ள செய்திகள் நம்முடைய பண்பாட்டு மிச்சங்களிலும், மொழியிலும் தான் புதைந்து கிடக்கின்றன. இவற்றையும் அழித்து விட்டால், நாம் பண்ட்டு (bantu) மக்களைப் போல ஆகிவிடுவோம். தாலி பற்றிய மகாவின் கூற்று அந்த நிலைக்கே நம்மை இட்டுச் செல்லும். அப்படிச் செல்லும் போது, இவர் போன்ற "முற்போக்குச்" சிந்தனையாளர்கள் மிகவும் மகிழ்ந்து போகக் கூடும்!

மகாவைப் போன்ற இற்றைக்காலத் தமிழர்கள், தவறான புரிதலில் இருப்பதோடு, அதை நயந்து கொண்டு, தாலி என்ற சொல்லின் பொருளறியவும் முயலாது, கண்மூடித் தனமாய் பேசிக் கொண்டு இருப்பது பெரிய சோகம். இவர்களைப் பார்த்து கேட்கக் கூடியது ஒன்றுதான்.

"தமிழன் என்று பெருமிதத்தை இழந்தபின் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பெருமிதம் தொலைத்த அமெரிக்கக் கருப்பர்களின் நிலை உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? "தமிழராகிய எங்களிடம் எதுவும் கிடையாது, நாங்கள் வெறும் மண்ணாங்கட்டி" என்று நிலை நாட்டுவதில் நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் பாராட்டும் சீனக்காரன் கூட அவன் மரபைத் தொலைக்காமல் முற்போக்கை நாடுகிறானே என்று என்றாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?"

இப்படி, தமிழரின் வரலாற்றைச் சரியாய் உணராது, அதில் மேலோட்டமாய்த் தெரியும் மூதிகங்களை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு, (அவற்றை விட்டொழிக்காமல்,) நம்முடைய மரபுகளையே தூக்கிக் கடாசி, அந்த இடத்தில் வெளிநாட்டிலிருந்து கீழிறக்கிய ஒட்டுண்ணி முற்போக்குச் சிந்தனை (அல்லது) இடதுசாரிச் சிந்தனையைப் பரிந்துரைப்பதே வழக்காய்க் கொண்ட இவர்கள் தாலியை மறுத்துரைப்பதன் மூலம் தங்களின் அறிவுய்தித்(intellectual)தனத்தை நிலைநாட்டிக் கொள்கிறார்களா? [தமிழில் பெரும்பாலும் வலது சாரிச் சிந்தனையை மட்டுமே கிடுக்கிக் (criticize) கொண்டு இருக்கிறோம். வறட்டுத் தனமான இடதுசாரிச் சிந்தனையும் கிடுக்கப் படவேண்டியதே!]

(தாலி கட்டுவது அடிமைத் தனம் என்று சொல்லுகின்ற இவர்களுக்கு, அதே பொழுது, வெள்ளைக்கார முறையில் மோதிரம் மாற்றுவது மட்டும் முற்போக்காய்த் தெரிவது தான் வேடிக்கை; திருமண முறிவு வரை தாலியைப் போல, மோதிரத்தைக் கழட்டாமல் தான் அங்கு பெரும்பாலும் இருக்கிறார்கள். "தாலிக்குள் முடங்கிக் கிடக்கும் மூதிகங்களை விட்டொழித்துப் பார்த்தால் மோதிரத்திற்கும் தாலிக்கும் வேறுபாடு ஒன்றும் பெரிதாய்க் கிடையாது" என்று கூட அறியாது முற்போக்காளர்கள் இருப்பார்களோ? :-) "வெள்ளைக்காரன் மரபு ஒசத்தி, நம்முடையது மட்டும் தாழ்த்தி" என்ற முடிவிற்கு இவர்கள் வருவதே ஓர் அடிமைத்தனம் அல்லவா?)

[உடனே "தமிழரிடம் இருக்கும் குறைகளை நான் மூடி மறைக்கிறேன்" என்று வெவ்வி வரத் துடிக்கும் இடது சாரியாளருக்கு, ஒரு சொல்: "நானும் உங்களைப்போல் ஆற்றைக் கடந்து தான், இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். கீழை நாட்டுப் போராட்டங்களை விவரமாய் ஒரு காலத்தில் அறிந்தவன் என்ற முறையிலும் சொல்லுகிறேன். உங்கள் பண்பாட்டுப் புரட்சியின் போக்கு நம்மைச் சரியான வழிக்குக் கொண்டு போகுமா என்பதை ஆழ்ந்து ஓர்ந்து பாருங்கள்."]

இவர்களுக்கும் விளக்கும் முகமாகத் தான் இந்தத் தொடரைப் பதிகிறேன்.

"தாலி என்ற அணிகலனைப் பெண்ணுக்கு அணிவிப்பது சரியா? இதற்குள் கிழாரியம் (feudalism), ஆணாதிக்கம் (male chauvanism) ஆகியவற்றின் கூறுபாடுகள் இல்லையா? இதைத் தவிர்க்காமல், ஆண்-பெண் இருவரும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்யவே முடியாதா?" என்று உரையாடலுக்குள் நான் போகவில்லை. (போக முடியாது என்றில்லை; போக முடியும், ஆனால் அந்த உரையாடலைச் செய்யப் பலரும் முன்வருவார்கள்; அதை நான் இருந்து செய்யவேண்டியது இல்லை. அப்படிச் செய்தாலும் "அந்தப் பழக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்" என்ற விழைவில் நான் மாறுபடுபவனும் அல்லேன்.)

இங்கு என்னுடைய குறிக்கோள் தாலிப் பழக்கத்தைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக, மொழியியல், வரலாற்றுச் சான்றுகளைத் தந்து, தாலி என்பது இனக்குழு (tribal) சார்ந்த பழக்கமாய்த் தமிழரிடம் எழுந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தி, மகா கூறிய செய்திகளில் இருக்கும் சில புரிதற் பிழைகளைச் சுட்டுவது மட்டுமே என் குறிக்கோள் ஆகும்.

உண்மையில், தமிழரிடம் இனக்குழு சார்ந்த பழக்கங்கள் இன்றும் எத்தனையோ மிஞ்சிக் கிடக்கின்றன; (காட்டாக, திருநீறு இட்டுக் கொள்ளுவது, மஞ்சள்/குங்குமம் வைத்துக் கொள்ளுவது, சந்தனம் பூசிக் கொள்ளுவது ஆகியவை எல்லாம் சமயம் சார்ந்தது என்று பலரும் எண்ணிக் கொள்கிறார்கள்; ஆனால் ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், அவையெல்லாமே சேர, சோழ, பாண்டிய, போன்ற இனக்குழுச் சிந்தனைகள் வழியே, இன்றைய சிவ/விண்ணவ நெறிகளுக்குள் புகுந்த வழக்கங்கள் என்பது புலப்படும். அதைச் சொல்லப் போனால் இந்தத் தொடர் பெரிதும் நீண்டுவிடும். இன்னொரு நாள் அதைச் சொல்லப் புகுவேன்.) "அவற்றில் தாலியும் ஒன்று" என்று நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தொடர் மெதுவாக வரும். படிப்பவர்கள் பொறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். (வேறொன்றும் இல்லை; சொந்த வேலைகள் அழுத்துகின்றன. இணையத்தில் நீண்ட நேரம் இருக்க முடிவதில்லை.)

அன்புடன்,
இராம.கி.