Tuesday, October 05, 2021

இரு சொலவடைகள்

இங்கே இரு சொலவடைகளின் விளக்கங்களைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன், சில செய்திகளைக் காணலாம்.

ஆலமரம் என்பது ஓர் அகல மரம். அகல் என்ற சொல்லே பலுக்கும்போது அகல்>ஆல் என்றானது. அடுத்தடுத்துக் அதன் கிளைமூட்டுக்களிலிருந்து விழுதுகள் உருவாகி அவை நிலத்தில் விழுந்து அகல மரத்திற்கு ஆதாரமாகி அகல மரம் பெரிதாகிக்கொண்டே போகும். சென்னை அடையாறு ”தியசாபிகல் சொசைட்டி”யில் இருக்கும் ஆலமரம் 200/250 ஆண்டுகள் அகவை கொண்டதென்பார். அதன் அகலம் மிக அதிகம். ஒரு பெரும்புயலில் அதன் அடிமரம் சேதப்பட்டு விழுந்தாலும், அதன் விழுதுகள் வலியுற்று இருந்ததால் இன்றும் மரம் அகன்று நிற்கிறது.

அறுகம்புல்லின் வேர் கட்டாந்தரையான நிலத்திலும் வேரூன்றிவிடும். ஆலைப் போலவே அறுகும் சிறு அளவில் நீண்டுபரந்து விரிந்து வேரூன்றிக் கொள்ளும். கொஞ்சம் வளர்ந்தாலும் (காட்டாக ஒரு சாண்) அடுத்து இன்னொரு முடிப்பிட்டு வேர்விடும். அறுகம்புல் நிலத்தில் மிக எளிதில் ஊன்றிக்கொள்ளும். 

மூங்கிலானது, ஓராண்டிற்கு ஒருமுறை தனக்கு மிக அருகில் இன்னொரு முளை போடும். அண்டியிருப்பதால் இம்முளைக்கு அண்டென்று பெயர். கிட்டத்தட்ட 360 நாளைக்கு ஒருமுறை ஓர் அண்டு முளைப்பதால் 360/365 நாட்காலத்திற்கு ஆண்டென்றே நம் முன்னோர் பெயர் வைத்தார். இப்படித் தாய்மூங்கிலைச் சுற்றி பல அண்டுகள் (சிலபோது 40, 50 அண்டுகள் கூட) அமைவதால் மூங்கில் என்றும் ஒரு தொகுதியாகவே காணப்படும். மூங்கில்தொகுதி என்பது சுற்றத்திற்கு இயற்கைகாட்டும் உவமை. 

முசிதல்= குறைதல், குன்றுதல்; முசியாமல் = குறையாமல். அத்திமரம் எவ்வளவுதான் வெட்டினாலும், முறித்தாலும் நிலத்தில் ஈரமிருந்தால் சட்டெனத் துளிர்விடும். இங்கே ஈரம்தான் முகன்மை. 

அரசு எப்போதும் உயர்ந்து ஓங்கி வளரும் மரம். தலைமைக்கு, அரசனைக் குறிப்பதற்கு, நம்மூரில் அரச மரமே அடையாளம். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் திருமணத்தின் போது மணமக்களின் மணைக்கு முன்னால் ஒரு மரத்தை நட்டு அம்மரத்தைச் சுற்றிலும் அரசிலைகள் வைத்துக் கட்டுவர். அது அரசனின் இருப்பிற்கு, ஆணைக்கு, அடையாளம். இப்பழக்கம் இன்றுமுண்டு. அரசு என்பது தலைமைப் பண்பின் அடையாளம்.

இனிச் சொலவடைகளை விளக்கலாம்.

1. ஆல்போல் (அகலமாய்த்) தழைத்து அறுகுபோல் (உங்கள் குடும்ப வேரை) ஊன்றி, மூங்கில்போல் சுற்றத்தார் அண்டியிருக்க எதுவுங் குறையாமல் வாழ்ந்திருங்கள்.

2. அத்திபோல் (உம் குடும்பம்) துளிர்த்து, ஆல்போல் (உம் குடும்பம்) படர்ந்து, அரசுபோல் (தலைமைப்பண்போடு) ஓங்கி, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போல் சுற்றத்தார் அண்டியிருக்க எதுவுங் குறையாமல் வாழ்ந்திருங்கள்.   

அன்புடன், 

இராம.கி.

.    

No comments: