Friday, December 31, 2021

சூரியன்

பரிதிமாற் கலைஞர் காலத்தில் சூரியன் வடசொல் என்று அவர் கருதினார், ளகரம் டகரமாகிப் பின் ரகரமாகலாம் என்ற விதியை அப்போது ஆய்வின் மூலம் பலரும் அறியாதிருந்தார். (நான் இப்போது அறிந்துள்ளேன். அது சொற்பிறப்பிற்கு நான் செய்யும் பங்களிப்பு.) எனவே பரிதி என்று வேறுபெயரை் அவர் கொண்டார். பாவாணர் ஆய்வுகளின் முலமாய்த் தான் இவ்விதியைக் கொஞ்சங் கொஞ்சமாய் உணர்ந்தோம். பாவாணர் தயங்கியவற்றை, ஆய்வு அகலப்பட்டு, ஆழப் பட்டவுடன் அருளியார் இன்னும் சில சொற்கள் தமிழ் என்று கண்டுபிடித்தார், காட்டாக, ஆதி என்பது தமிழ் என நிறுவியவர் அருளியார் தான். அகராதி தமிழில்லை என்று பாவாணர் சொன்னார். எனவே பாவாணர் அகர முதலி என்ற புதுச்சொல்லைப் படைத்தார். அருளியார் அகர முதலியோடு, தாம் நிறுவிய அகராதியையும் சேர்த்துக் கொண்டார். 

ய்>ஞ்>ந் விதியின் முழுவீச்சைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர் அருளியார் தான். இந்த அளவிற்கு அதன் விரிவைப் பாவாணர் கண்டதில்லை. முன்னோர் இட்ட பாதையில் தான் அடுத்து வருவோர் நடக்கிறோம். முன்னோர் சொன்னதை மீறவே கூடாது என்று அதற்குப் பொருள் இல்லை. நியூட்டன் பாதைக்கு மேலும் ஐன்சுடைன் கடந்ததால், நியூட்டனை ஐன்சுடைன் மறுத்ததாய்ப் பொருளில்லை நானும் பாவாணரை, ஏன் அருளியைக் கூட, சில போது மீறியுள்ளேன். சுள்>சுளு>சுடு>சூடு>சூரு என்பது அது போன்ற நீட்சி. சூரியன் என்பது சூர்ய என்று வடமொழியில் பயன்பட்டதாலேயே அது சங்கதமாகி விடாது. அதன் மற்ற சொல் தொகுதி, பயன்பாடு, அதன் அடித்தளம் ஆகியவற்றைப் பார்த்தே அது தமிழா, சங்கதமா, தமிழ் வடிவம் எது என்று ஆய்ந்து முடிவு செய்கிறோம். 

”குதிரைக்குக் குர்ரம்” என்பதால், ”யானைக்கு அர்ரம்” என்று எந்திரத் தனமாய் நான் முடிவு செய்வதில்லை. என் புரிதலில் சூரியன் தமிழே, உங்களுக்கு அது உகந்ததில்லை என்றால் நான் சொல்ல ஏதுமில்லை. உங்கள் உகப்பின் படி, நீங்கள் நகருங்கள். நான் செய்வதெல்லாம் சரியென்று நானென்றும் சொன்னதில்லை. என்னையும் கேள்வி கேட்க யாரோவொரு இளைஞன் எழுந்துவருவான் என்று எனக்குத் தெரியும் தான். என்னை என் எதிர்காலம் 50 ஆண்டுகள் கழித்து முடிவு செய்யட்டும். அதுவரை என் கடன் பணி செய்துகிடப்பதே.


Wednesday, December 22, 2021

SEVEN CANONS of ETYMOLOGY

இணையத்தில் etymonline எனும் ஆங்கிலச் சொற்பிறப்பியல் தளம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, புகழ்பெற்ற சொற்பிறப்பியல் அறிஞரான W.W. Skeat (1879) ஐப் பின்பற்றி   ஏழு  கடைப் பிடிகளை ( CANONS) அத்தளத்தில் சொல்லியிருப்பார். தமிழில் சொற்பிறப்பியல் பாடங்களை நாடும் நமக்கும் அக் கடைப்பிடிகள் உகந்தவை தாம். உங்கள் கவனிப்பிற்காக அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். 

1. Before attempting an etymology, ascertain the earliest form and use of the word; and observe chronology.

ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான சொற்பிறப்பியலைப் பொருத்த முயலுமுன், அச் சொல்லின் முந்தை வடிவத்தையும், பயன்பாட்டையும் உறுதி செய்யுங்கள்; கூடவே சொல்வடிவங்களின் காலவரிசையை அவதானியுங்கள்.  

2. Observe history and geography; borrowings are due to actual contact.

சொல் வரலாற்றையும், பூகோளத்தையும் அவதானியுங்கள்; சொற்கடன்கள் என்பவை  இருவேறு மக்கள் கூட்டத்தின் தொடுப்புகளால் ஏற்படுகின்றன. 

3. Observe phonetic laws, especially those which regulate the mutual relation of consonants in the various Indo-European languages, at the same time comparing the vowel-sounds.

ஒலியனியல் விதிகளை அவதானியுங்கள்; குறிப்பாக இந்தையிரோப்பிய மொழிகளில் வரும் மெய்யெழுத்துகளின் இடையுள்ள உறவுகளைப் பொருத்தும் விதிகளை.அவதானியுங்கள்.  

4. The whole of a word, and not a portion only, ought to be reasonably accounted for; and, in tracing changes of form, any infringement of phonetic laws is to be regarded with suspicion.

ஒரு  சொல்லின் பகுதியை மட்டும் காணாது, முழுமையையும் கணக்கில் எடுங்கள்;  சொல்வடிவ மாற்றங்களைத் தேடுகையில், ஒலியனியல் விதிகளை மீறும்படி அவை அமையுமெனில், ஐயத்தோடு தான் அவற்றைக் கருதமுடியும்.  

5. Mere resemblances of form and apparent connection in sense between languages which have different phonetic laws or no necessary connection are commonly a delusion, and are not to be regarded.

வெவ்வேறு ஒலியனியல் விதிகள் கொண்ட மொழிகளிடையும், எவ்வகைக் கணுக்கமும் இல்லாத மொழிகளிடையும், வெறும் வடிவ ஒப்புமையும், மேலோட்டமான கணுக்கமும் தெரிந்தால், அவை வெறுந்தோற்றம் என ஏற்று, நம் ஆய்விற்குள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

6. When words in two different languages are more nearly alike than the ordinary phonetic laws would allow, there is a strong probability that one language has borrowed the word from the other. Truly cognate words ought not to be too much alike.

வெவ்வேறு மொழிகளின் சொற்கள் சாத்தார ஒலியனியல் விதிகளை மீறி, பெரும்பாலும் ஒரே மாதிரியாய்த் தெரிந்தால். ஒரு மொழியலிலிருந்து இன்னொன்று பெருதகையாய்க் கடன் வாங்கியிருக்கலாம்   உண்மையிலுள்ள உறவுச் சொற்கள் அவ்வளவு அச்செடுத்தாற் போல் நெருக்கம் காட்டா.

7. It is useless to offer an explanation of an English word which will not also explain all the cognate forms.

தொடர்புள்ள சொற்களை விளக்காது, ஒற்றைச் சொல்லிற்கு மட்டும் விளக்கம் சொல்வது பயனற்றது. 


Saturday, December 18, 2021

Conduction

இதை ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ”1540s, "a leading, guidance" (a sense now obsolete), from French conduction "hire, renting," and directly from Latin conductionem (nominative conductio), noun of action from past-participle stem of conducere "to lead or bring together," from assimilated form of com "with, together" (see con-) + ducere "to lead" (from PIE root *deuk- "to lead")” என்பர். 

கடத்தல் என்பது கடத்தும் பொருளுக்கும் கடத்தப் படுவதற்கும் உறவில்லாதது போல், ஈடுபாடு இல்லாதது போல், காட்டுகிறது. இச்சொல்லைக் காட்டிலும் ”நடத்தம்” என்பது இன்னும் சிறப்பான பொருளைக் கொடுக்கும் என்று எண்ணுகிறேன். The passage of electricity along wires, water through pipes. etc. என்பதும் நடத்தமே. அதாவது மின்கம்பிகள் வழியாக மின்சாரம் போவதும், குழாய்கள் வழி நீர் போவதுங் கூட நடத்தம் தான். 

conductive என்பதை "நடத்துவிக்கும்" எனலாம். அதாவது able to act effectvely as a path for electricity, heat etc. - மின்சாரம், வெப்பம் போன்றவற்றை நடத்துவிக்கும் வழியாக (இது) நேர்த்தியுடன் செயற்படுகிறது. 

copper is a very highly conductive metal = செம்பு என்பது மிகச் சிறப்பாக (வெப்பம், மின்சாரம் போன்றவற்றை) நடத்துவிக்கும் மாழை.

இச்சொல்லின் பொருட்பாடாக .கீழ்வரும் ஆறு காட்டுக்களைப் பாருங்கள்.

1.behave (நடந்துகொள். I like the way your children conduct themselves = உங்கள் பிள்ளைகள் தங்களை நடத்திக்கொள்ளும் வழியை நான் விரும்புகிறேன்.).

2. to direct the course of a business, activty etc. (பொதினம், ஆற்றம் போன்றவற்றின் போக்கை நடத்துதல்/நெறிப்படுத்தல்)

3. to lead or guide a person, tour etc (ஓர் ஆளை அல்லது ஒரு சுற்றுலாவை முன்னெடுத்து வழிகாட்டிச் செல்லல்; இதையும் நடத்தலென்று பொதுப்படச் சொல்லலாம்.)

4. to stand before and direct the playing of musicians or a musical work (இசையாளர்களுக்கு முன்னின்று இசையாளர்களை, இசைப்பணியை நடத்திச் செல்லுதல்)

5. to act as the path for electricity heat etc Plastic and rubber won't conduct electricity. (.மின்சாரம், வெப்பம் போன்றவற்றை நடத்திச் செல்லும் பாதையாக ஆகுதல்).

6. to collect payments from the passengers on a public vehicle (ஒரு பொது வேயத்திலுள்ள பயணிகளை நடத்திச் செல்லுதல் she has conducted on London buses for 20 years = அவள் இலண்டன் பேருந்துகளை 20 ஆண்டுகள் நடத்திச் சென்றிருக்கிறாள் அதாவது அவர்களின் பெய்வுகளை.வாங்கியிருக்கிறாள்.

எனவே,  

heat conduction= வெப்பநடத்தம். 

அடுத்தது heat convection. இது நீர்மம் (liquid), வளிமம் (gas) போன்ற விளவங்களில் (fluids) நடப்பதாகும். ஒரு விளவத்துள் வெப்பம் நுழைவதால் விளவ மூலக்கூறுகள் நகர்கின்றன. இன்னொரு விதம் பார்த்தால் விளவ மூலக்கூறுகள் நகர்வதால் வெப்பம் மாற்றப்படுகிறது (heat transfer), ”எது காரணம், எது விளைவு” என்பது பார்வையைப் பொறுத்தது. இரண்டும் ஒரேநேரம் நடப்பவை. வெப்பச் சலனத்தை விட ”வெப்ப நகர்த்தம்” என்பது, இரட்டை ஆற்றத்தை தெளிவாக விளக்கும். 

மூன்றாவது heat radiation இதை வெப்பக் கதிர்வீச்சு என்பதைவிட, வெப்பக் கதிரியக்கம் எனலாம்.


Kinetics

2018 திசம்பரில் முகநூலின் ஓரிடத்தில் kinetics என்பதை வேகவியல் என்று குறித்ததைப் பார்த்தேன். அப்படிச் சொல்லாமல் கிளரியல் எனறே சொல்லலாம். கிளர்தல் = மேலெழுதல், நிலையாது இருத்தல். வேகம் என்பது speed என்றே புரிந்துகொள்ளப்படும். இங்கு சொல்லப்படுவது வேதிகளில் ஒன்று இன்னொன்றோடு சேரும்போது எப்படிக் கிளர்ந்துகொள்ளும் என்பதைக் குறிக்கிறது. சில பொருட்கள் கிளரும். சில கிளர்ந்து எரியும், சில கிளர்ந்து வெடிக்கும். சில கிளராது கிடக்கும். சில வேதிகள் வினையூக்கிகள் (catalysts) இருந்தால் தான் கிளர்ந்து கொள்ளும்.kinetics ஐi இயக்கவியல் என்பதில் நான் தயங்குவேன். இயக்கம் என்பதை பொதுவாக motion என்ற சொல்லிற்கு ஈடாக வைத்துக்கொள்வது நல்லது. அதுபோல் கதி என்ற சொல்லை velocityக்கு ஈடாக 1950 களிலிருந்தே பழகியுள்ளார். அதில் எந்தக் குறையையும் நான் காணவில்லை.

kinetic (adj.) = கிளர்; "relating to muscular motion," 1841, from Greek kinetikos "moving, putting in motion," from kinetos "moved," verbal adjective of kinein "to move" (from PIE root *keie- "to set in motion"); kinetics = கிளரியல்; kinetic energy = கிளர் ஆற்றல்; chemical kinetics = வேதிக்கிளரியல்; reaction kinetics = வினைக் கிளரியல்; kinematics = கிளர்ப்பியல்; kinesiology = கிளர்ச்சியியல்; kinesis = கிளர்ச்சி; kinesthesia = கிளர்ப்படுகை; kinesthetic = கிளர்ப்படு; kinesthetics = கிளர்ப்படுவியல்
Mechanics = மாகனவியல்
Classical mechanics = செவ்வை மாகனவியல்
statics = நிலையியல்
Hydrostatics = நீர்ம நிலையியல்
dynamics = துனைமவியல்
Thermodynamics = தெறுமத்துனைமவியல்
விஸ்வநாதன், திருமலை சாமி and 1 other
Like
Comment

0 Comment

Saturday, December 11, 2021

Dementia and Geriatrics

மூன்றாண்டுகளுக்கு முன், ஆத்திரேலியாவில் உள்ள நண்பர் மரு. கண்ணன் நடராசன், தனிமடலில்,  ”dementia”விற்கான தமிழ்ச்சொல்லைக் கேட்டிருந்தார். அவருக்கு எழுதியதை இப்போது எல்லோருக்கும் பயன்படும்படி, பொது வெளியில் இடுகிறேன். 

 demented என்பதற்கு ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் கீழ்வருமாறு கொடுத்திருப்பார். 1644, from obsolete dement "drive mad" (1545), probably from M.Fr. dementer, from L.L. dementare "out of one's mind," from phrase de mente, from de + mente, abl. of mens mind." Dementia is attested from 1806; earlier form in Eng. was demency (1858), from Fr. demence. Dementia precox is a Mod.L. form recorded from 1899 in Eng., 1891 in Ger., from Fr. demence precoce (1857). 

தமிழில் மத்தம் என்ற சொல், அறிவு மயக்க நிலை அல்லது பித்துப் பிடித்த நிலையைக் குறிக்கும். திருநெல்வேலிப் பக்கம் இதைக் கோட்டித்தனம் என்பார். உன்மத்தம் என்பது இன்னும் ஆழமான பித்த நிலை. பித்தம் எனும் தமிழ்ச்சொல்லைத் தான் வடமொழிச் சாயலில் பைத்தியம் என்றாக்குவார். நாமும் அதில் மயங்கி தமிழ்வேர் தெரியாமல் விழிப்போம். (தன் சொந்த அறியாமையால் தமிழர் தொலைத்த சொற்கள் கணக்கில்.) எனவே dementia = உன்மத்தம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

mind = மதி. (முன்னுதல்>மன்னுதல் என்ற வினையின் வழிப் பிறந்த சொல்லான மனம் என்பது மனஸ் என்று வடமொழியில் வரும். மனமும் மதியும் தொடர்புள்ள சொற்கள். mind, மதி, மனம் ஆகியவற்றின் தொடர்பைச் சொன்னால் தயங்குபவர் ஏராளம். அந்த அளவிற்கு நம் கண்கள் கட்டிப்போடப் பட்டிருக்கின்றன.

அன்புடன்,

இராம.கி. 

இதற்கு மறுமொழியாய், கண்ணன் நடராசன், 

“நன்றி ஐயா. நான் முதியோர் மருத்துவத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். "உன்மத்தம்" நோயில் "மறதி" ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், அறிவு மயக்கத்தில் மறதியும் அடங்குமா?” என்று கேட்டார். கூடவே Mental depression, Generalised anxiety disorder, Panic attack, Delirium, Irritability, Psychosis, Geriatrics/Geriatrician, Short term/recent & remote memory loss ஆகிய சொற்களுக்கு ஒருசொல் தமிழ் மொழிபெயர்ப்புகள் உள்ளனவா? இருந்தால் தெரிவிக்கவும்” என்று கேட்டிருந்தார்.அவருக்கு நான் அனுப்பிய மடல் கீழுள்ளது. 

“அன்பிற்குரிய கண்ணன், 

”முதியோர் மருத்துவம்” நம்மூரில் கொஞ்சம் கொஞ்சமாய்த் தலையெடுக்கும் துறை. நம்மூரில் இதற்கான வல்லுநர் குறைவு தான். இந்தப் பயிற்சியில் நீங்கள் சிறக்க என் வாழ்த்து. அறிவு மயக்கத்தில் மறதியும் அடங்கும் என்றே நான் கேள்விப் பட்டுள்ளேன். மருத்துவரான நீங்கள் தான் அதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்துள்ள சொற்களுக்கு என் பரிந்துரை கீழே.  

Mental depression = மதி ஒடுக்கம். (அழுத்தத்தின் எதிர்மறை ஒடுக்கம். இங்கே depression -க்கு அது பொருந்துமென எண்ணுகிறேன்.) 

Generalised anxiety disorder = கணப்படுத்திய கலங்கு ஒழுகற்று. (general, public, overall என எல்லாவற்றிற்கும் பொதுப்படை என்றே பேச்சுவழக்கில் சொல்லி வருகிறோம். இவற்றில் வேறுபாடு காட்டுவது அறிவியல் தமிழுக்கு மிகவும் தேவை என்றே எண்ணுகிறேன். ஈழத் தமிழர் ”கணக்க>கனக்க” என்பதைப் பெருமளவு என்ற பொருளில் ஆள்கிறார். அதனால் கணப்படுத்தல் என்ற வினை generalized இற்கு இணையாகி வரும். 

anxiety:    c.1525, from L. anxietatem (nom. anxietas), noun of quality from anxius (see anxious). anxious 1623, from L. anxius "solicitous, uneasy, troubled in mind," from ang(u)ere "choke, cause distress" (see anger). The same image is in S.Cr. tjeskoba "anxiety," lit. "tightness, narrowness." மேற்சொன்ன விளக்கத்தின் படி, ”மனக் கலக்கம்” anxietyக்குப் பொருந்தி வருமாயினும், சுருக்கம் கருதி மனம் என்பதைத் தொகையாக வைத்துக் கலக்கம் என்ற சொல்லை மட்டும் இங்கு ஆள்கிறேன். ஒழுகு= order. (சட்டமும் ஒழுங்கும் நினைவிருக்கிறதா? ஒழுங்கு என்பதில் ங் தவிர்த்து order இக்குப் பயன்படுத்துவது நல்லது. ஒழுகு பிறவினைப் பயன்பாட்டில் வரும். ஒழுங்கு தன்வினையாகப் பயன்படும். ஒழுகில் பிறந்த சொல் ஒழுகற்று = disorder. அதாவது ஒழுகு அற்றது, ஒழுகு அல்லாதது. 

Panic attack = பதற்றத் தாக்கம், இதற்கு விளக்கம் தேவையில்லை என எண்ணுகிறேன். இருந்தாலும் ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலி தரும் விளக்கத்தையும் கீழே கொடுக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள். panic: "mass terror," 1603, as an adj. (with fear, terror, etc.), from Fr. panique (15c.), from Gk. panikon, lit. "pertaining to Pan," in sense of "panic, fright" short for panikon deima, from neut. of Panikos "of Pan," the god of woods and fields who was the source of mysterious sounds that caused contagious, groundless fear in herds and crowds, or in people in lonely spots. As a noun, first recorded 1708. Meaning "widespread apprehension about financial matters" is first recorded 1757. The verb is 1827, from the noun. Panicky is first recorded 1869. Panic button in fig. sense is first recorded 1955, the literal sense apparently is from parachuting.

Delirium = மதியிழிவு (மதி இழிந்த நிலை) (கீழுள்ள விளக்கத்தையும் படியுங்கள்.). delirium 1599, from L. delirium "madness," from deliriare "be crazy, rave," lit. "go off the furrow," a plowing metaphor, from phrase de lire (de "off, away" + lira "furrow"). Delirium tremens is Mod.L., "trembling delirium," introduced 1813 by British physician Thomas Sutton, for "that form of delirium which is rendered worse by bleeding, but improved by opium. By Rayer and subsequent writers it has been almost exclusively applied to delirium resulting from the abuse of alcohol" [Sydenham Society Lexicon of Medicine].

Irritability = எரிச்சூட்டுமை (எரிச்சல் வினையிலிருந்து பிறந்த நீட்சிவினை எரிச்சு ஊட்டுதல் = to irritate. 

Psychosis = உளப் பிறழ்ச்சி (விளக்கம் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.) 

Geriatrics/Geriatrician = மூதாற்றியல். மூதாற்றியர். ஆங்கிலச் சொற்பிறப்பு அகர முதலியில் உள்ள விளக்கம் கீழ்வருமாறு: geriatric 1909, formed in Eng. from Gk. geras "old age" (from PIE base *gere- "to grow old;" cf. Skt. jarati "makes frail, causes to age") + iatrikos "of a physician," from iatros, related to iasthai "heal, treat," of uncertain origin. Geriatrics was coined 1909 by Ignatz L. Nascher (1863-1944) in "New York Medical Journediatricsal" on the model of pediatrics. The correct formation would be gerontiatrics.

gera என்பதற்கு இணையாகக் கிழ என்ற சொல் அமையும் எனினும். முது/முதிய/ மூது என்ற சொல்லாட்சி இன்று பெரிதும் பயன்படுவதால் அதையே ஆளலாம். அகற்றுவது ஆற்றுவது என்று தமிழில் சொல்வளர்ச்சியில் திரியும். அகல மரம், ஆலமரம் ஆனதல்லவா? அதுபோல. ”புண் ஆற்றுதல்” வினையை எண்ணிப் பாருங்கள். கவலையை அகற்றுவது, சூடான நீரை ஆற்றுவது என்ற ஆட்சிகள் எல்லாம் இதே பொருளில் தான் வருகின்றன. முதுமையை ஒரு நோய் போலக் கருதி அந்நிலையில் ஏற்படும் சரவல்களை ஆற்றுவது மூதாற்றியல். அதைச் செய்பவர் மூதாற்றியர். அதே போல pediatrics/pediatrician என்பது பைதாற்றியல்/பைதாற்றியர். பைது/பைதல் என்ற தமிழ்ச்சொல் இளையது, சிறுவர் என்று பொருள் கொள்ளும். புதல்வர் என்ற சொல்லும் பைது/பைதல் என்ற சொல்லும் தொடர்பு கொண்டவை. ,  

கடைசியாக, Short term/recent loss = குறும்பருவ/அண்மைக்கால நினை இழப்பு, Remote memory loss = முன்னேர்ந்த நினை இழப்பு

அன்புடன்,

இராம.கி.,






ஆபத்து

 ”ஆபத்தி”ற்கான இணைத் தமிழ்ச்சொல்லைத் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் ஒரு முறை கேட்டிருந்தார். கொடுக்கப்பட்ட வடிவில் பார்த்தால், ஆபத்து என்பது சங்கதச் சொல் தான். (ஆனால் அதற்குள் தமிழ்ச்சொல் வடிவம் புதைந்து கிடக்கிறது. சற்று முயன்றால் அதைக் காணலாம்.) இவற்றை விளக்க முன் வந்தால் பலரும் அதைக் கேட்கத் தயங்கலாம் என்று எண்ணியே, தன்னேர்ச்சி என்று மாற்றுச் சொல்லைப் பரிந்துரைத்த போது, என் விளக்கம் தவிர்த்தேன். ஆபத்தை உரோமனெழுத்தில் aapad என்று எழுதுவார். தமிழொலிப்பில் aabaththu ஆகும். aa-pad எனப் பிரித்தால், உள்ளுறைந்து கிடக்கும் தமிழ்ச்சொல் விளங்கி விடும்.

”என்ன ஆச்சு? உன்னைக் காணமுடியலியே? வகையாய் மாட்டிக்கிட்டியா?” என்று நண்பர் ஒருவரிடம் கேட்கிறோமென வையுங்கள்.. “எக்குத் தப்பான நெலை. ஆப்பட்டுக் கொண்டேன்”, என்று விடை சொல்கிறார். “அகப்பட்ட” நிலையே சற்று திரிந்து, நமக்கு ஆப்பட்டதாய், ஆபத்தாய் தோற்றும். ஆப்பு என்பது அகப்பின் திரிவு தான். ஆப்பில் சிக்க குரங்கின் வால் போன்ற சொலவடையை எண்ணிப் பாருங்கள். அக என்பது ஆ என்று எப்படித் திரிகிறது என்பது அடுத்த கேள்வி. அகல மரத்தை ஆல மரம் என்கிறோமே? அதுபோல், ”அகப்பட்டு” என்பது ஆப்பட்டு என்று பேச்சுவழக்கில் திரியும். தமிழில் அகப்பட்டு என்பது வினையெச்ச வடிவம். அதன் பெயர் வடிவம் அகப்பாடு என்றாகும். (அகப்பாட்டிற்கு அகந்தை, ego என்று வேறு பொருளுமுண்டு.)

அகப்பட்டு/அகப்பாடு என்பதை ஆபத்து என்ற பெயர்ச்சொல்லாய் மாற்றிச் சங்கதம் பயன்கொள்ளும். வடக்கே போகப் போக, பல சொற்களில் டகர ஒலி தகரமாய்த் திரியும். (இலையைக் குறிக்கும் இன்னொரு தமிழ்ச் சொல்லான பட்டம் வடக்கே பத்ரமாகும்) ஆபத்து என்பது சங்கதம் தழுவிய இந்திய மொழிகளில் உண்டு. ஆனால், இந்தியாவிற்கு வெளியிலுள்ள மற்ற இந்தை யிரோப்பியன் மொழிகளில் கிடையாது. அதுவே இச்சொல் தமிழியல் மொழிகளிலில் இருந்து கடன் வாங்கப்பட்டது என்பதை உணர்த்தும்.

ஆபத்து என நாமின்று புழங்கலாமா? - என்று கேட்டால் வேண்டாம் என்பேன். அகப்பாடும் (அகந்தை, ego) வேறு பொருளில் தான் பெரிதும் அறியப்படுகிறது. எனவே தான் ”தன்னேர்ச்சி” நமக்குப் போதும் என்கிறேன்.

விபத்து என்பதில் வரும் வி என்பது வீழ் என்பதன் திரிவு. பத்து என்பது பட்டு என்பதன் திரிவு.


Thursday, December 09, 2021

செவிமடல் பாகங்கள்.

அண்மையில், மின்தமிழ் மடற்குழுவில், ஒரு  செவிமடல் படத்தைக் கொடுத்துப் பாகங்களுக்கான தமிழ்ச் சொற்களைத் திரு. தேமொழி கேட்டார். தோடு, தண்டட்டி, தொங்கட்டான் என வித விதக் காதணிகள் போடும் நம்மூரில், செவிமடல் பாகங்களுக்கான ”இணைத் தமிழ்ச் சொற்களைச்” சான்றோடு சொல்ல நம்மிடம் எழுத்துப் பதிவுகள் இல்லை. இவ்வணிகளைப் போடும் பழக்கமும் அருகி விட்டது. இனியும் இப்படியொரு சொல்லில்லாச் சோகம் வேண்டாம். படத்தில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்க் கலைச் சொற்களைப் பார்ப்போம். 


முதலில் வருவது Helix (n.) இதற்கு விளக்கமாய், ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில், "a spiral thing," 1560s, originally of the volutes of Corinthian capitals, from Latin helix "spiral, a volute in architecture," from Greek helix (genitive helikos), a word used of anything in a spiral shape (an armlet, a curl of hair, the tendril of a vine, a serpent's coil), which is related to eilein "to turn, twist, roll," from PIE *wel-ik-, from root *wel- (3) "to turn, revolve," from PIE root *wel- (3) "to turn, revolve." The classical plural is helices என்று போட்டிருப்பர். 

தமிழில் spiralயைப் புரி என்போம். வலம்புரி/ இடம்புரிச் சங்கு எனும் சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். புரி என்பது கிடைப் பரிமானத்தில் (horizontal dimension) மட்டும் விரியும். helix-ஓ, குத்துப் பரிமானத்திலும் (vertical dimension) விரியும். ”சுழிப்பு” என்ற சொல் முதலில் வட்டத்தைக் குறித்தாலும் வேக நீரோட்டத்தில் உள்நோக்கிய குழிவு ஏற்படுவதை மறக்க வேண்டாம். "சுழலுக்குள் மாட்டினான்" எனும்போது நம்மை அறியாமல் helix ஐச் சுழிகை என்ற சொல்லால் உணர்த்துகிறோம். 

சுல் எனும் வேரிலிருந்து சுழி எழுந்தது போல், சுரி என்ற சொல்லும் எழும். சுரிகுழல் = helical ஆகச் சுருண்டு கிடக்கும் முடிக்கற்றை. ”சுரிமுகம்” இது குத்துத் திசையிலும் சுருண்ட சங்கைக் குறிக்கும். நத்தைக்கூட்டைக் கூடச் சுரிமுகம் என்பார். இன்னொரு விதமாய் திருகாணி (helical screw) எனும் போது, திருகு என்ற சொல்லும் helical motion- யைக் குறிக்கிறது. முறுக்கு என்பதும் கூடத் திருகிக் கொண்ட தன்மையைக் குறிக்கும். முறுகு, திருகு, சுழிகை, சுரிகை என்ற நான்கும் ஒரே பொருளைக் குறித்தாலும், வேற்றுமை காட்டும் முகத்தான் இக்கால அறிவியல் புழக்கமாய்ச் சுரிகையையே  helix-க்கு இணையாகக் கொள்ளலாம்.

அடுத்தது cartilage. இதைக் குருத்தெலும்பு என்பார். குருத்து = இளமை. cartilage (n.) "gristle; firm, elastic animal tissue," early 15c., from Old French cartilage and directly from Latin cartilaginem (nominative cartilago) "cartilage, gristle," which is possibly related to cratis "wickerwork".

மூன்றாவது சொல் snug (adj.) 1590s, "compact, trim" (of a ship), especially "protected from the weather," perhaps from a Scandinavian source such as Old Norse snoggr "short-haired," Old Swedish snygg, Old Danish snøg "neat, tidy," perhaps from PIE *kes- (1) "to scratch" (see xyster). Sense of "in a state of ease or comfort" first recorded 1620s. Meaning "fit closely" is first found 1838. தமிழில் சிக், நச், என்று ஒலிக்குறிப்புச் சொற்களால், பொருந்தப் பிடிக்கும் வினையைக் குறிப்போம். நெக்கு-தல் வினை,  ஒன்று இன்னொன்றில் பொருந்தலையும். நெக்கு விடுதல் என்பது பொருத்துவாய் விடுதலையும் குறிக்கும். ”நெகிழ்ச்சி” என்பதும் கூட இதன் தொடர்ச்சியாகலாம். என்னைக் கேட்டால் நெக்கு என்பது snug இற்கு இணைகாட்டும் என்பேன்.

conch = சங்கு. இதற்குப் பெரிய விளக்கம் சொல்ல வேண்டாம்.

அடுத்தது Tragus = துருகு. (n.) eminence at the opening of the ear,செவி வாசலில் துருகி வரும் எழுச்சி. துரு-த்தல் = முன்வரல். " 1690s, Modern Latin, from Greek tragos in this sense (Rufus of Ephesus), properly "he-goat;" so called for the tuft of hair which grows there, which resembles a goat's beard.

Anti-Tragus = துருகெதிர்.  (பின்னொட்டையே பெரிதும் பயன்படுத்தும் மரபு தமிழில் உண்டு.)

Lobe மடல்; 2nd Lobe 2 ஆம் மடல்; 3rd Lobe 3 ஆம் மடல்

Rook = துருகடி.  துருகு வளையத்தின்  அடிப்பாகமாய் இது அமையும். 

Daith = குருத்தடி. (இன்னும் பொருத்தமான சொல்லைத் தேடவேண்டும்.)

Monday, December 06, 2021

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 4

இனி அகம் 152 இன் 4 ஆவது அடிக்குப் போவோம்.

நுண்கோல் அகவுநர்ப் புரந்த = இசை நடத்துநரைப் புரந்த. 

இற்றைக் காலத்தில் பல இடங்களில் கருவி இசைஞரை வைத்துச் சேர்ந்திசை (symphany orchestra) நிகழ்ச்சிகள் நடக்குமே? பார்த்திருக்கிறீர்களா? இவற்றில், சிறுகோல் கொண்டு மேலுங் கீழும் இசைக்கேற்ப ஆட்டி, கட்டளைகளைக் குறிப்பால் இசைநடத்துநர் உணர்த்துவாரே? அது நினைவிற்கு வருகிறதா? அவ் உணர்த்தல் ஒருவர் அகவுவது போலவே இருக்கும். ஒருவர் இன்னொருவரிடம் வாயாற் பேசினாற் தான் உண்டா? பிரம்பாற் பேசக் கூடாதா? இப்படி அகவும் இசைநடத்துநர் (conductor) அக்காலத்திலும் நம்மூரில் இருந்தார் போலும். பரணருக்கு மிகவும் பிடித்த. இப்பாடலோடு இணைத்துக் காணத்தக்க அகம் 208 ஆம் பாடலிலும் ”நுண்கோல் அகவுநர்” எனும் சொல்லாட்சியைப் பரணர் பயன்படுத்துவார். 

பேரிசைச் சினங்கெழு தானை = பெரும்புகழும் அடுங்கொற்றும் [வெற்றிக்காக, அடுத்துவருங் குணம் கொற்றமெனும் ஆக்குமம் (aggression) ஆகும்.] நிறைந்த படை (இங்கே சினத்தைக் கோவமெனாது, போரில் வெற்றியுறக் கொள்ளுங் குணமெனக் கொள்ளவேண்டும். கொல்லெனும் வேர்வழிப் பிறந்த சொல் கொற்றாகும். அதனினும் எழுந்த சொற்கள் கொற்றம், கொற்றவன், கொற்றவை போன்றனவாகும். கொற்றெனும் சொல்லின் பொருளை மறந்து, ”ஆக்கிரமிக்குங் குணம்” என்று சங்கதங் கலந்தே இக்காலத்தில் ஆக்குமத்தைச் சொல்கிறோம்; கொற்றம், ஆக்குமம் எனும் வீரக் குணத்திற்கான தமிழ்ச் சொற்களை நாம் மறந்துவிட்டோம். கொற்றவையை விழுந்து விழுந்து கும்பிடும் ஊரில் கொற்றெனுஞ் சொல்லே மறக்கடிக்கப் பட்டது பெரும் விந்தை தான். அந்த அளவிற்கு வேதமறுப்புக் கொல்லாமைச் சமயங்களில் நாம் ஆழ்ந்துவிட்டோமோ, என்ன?) 

இரங்கு நீர்ப்பரப்பின் கானலம் பெருந்துறை = ஓசையிடும் நீர்ப்பரப்பாலான காடுநிறைக் கோடிக்கரைத் துறை. பிச்சாவரம், கோடிக்கரை போன்ற சோழர் துறைகளிலும், எர்ணாகுளம், ஆலப்புழை போன்ற சேரர் துறைகளிலும், இடைவிடா மெல்லிய சலசலப்போடு குற்றலைகள் கழிக்கரைகளில் மோதி யிருக்கும். இடையிலா ஓசையிடலே இரங்கலாகும். குற்றலைகளைக் காணாது இரங்கலோசையாலும் ”கழிக்கானலை” உணரலாம். உயரோதம் (High tide), தாழோதம் (Low tide) ஆகிய இரண்டிலும் இரங்கலோசையுண்டு. இரங்கலையில் இருந்து ஆழிப்பேரலை வரை எழுச்சியும், அகற்சியும், வீச்சும், பருவமும், ஓசையும் பலதரப் பட்டன. இதற்கான சொற்கள் சங்க இலக்கியங்களில் விரவியுள்ளன. யாராவது இவற்றைத் தேடி யெடுத்துப் போட்டால் தமிழில் பெருங்கடல் கிறுவு (oceanography) நூலை எழுத முடியும்.

”தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை அன்ன” என்ற வரிகள் சூழியல் (ecology), கடல்விலங்கியலில் (marine biology) பரணரின் கேள்வியறிவைச் சொல்லும். இவ்வரிகளைப் புரிந்து கொள்வதிற்றான் ctamil இல் முரண் பேச்சு எழுந்தது. ”பரணர் ”கப்சா” விடுவதாய்ச் சிலர் நினைத்தார் போலும். (சங்க இலக்கியத்தை மதியாதோர் இன்றும் நிறைய உள்ளார்.) பொறுமையோடு சிச்சிறிதாய் இவ்வரிச் சொற்களை அவிழ்ப்போம். பொதுவாகப் பாடல்களை விளக்கும்போது சொல் சொல்லாக நான் விவரிப்பது இல்லை. ஒரு தொடருக்கு என்று நேர்பொருள் சொல்லவே விழைவேன். இங்கு அவ்வழக்கத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். 

”தனத்திற்குத்” தங்கமெனும் விதுப் பொருளினும் செல்வமெனும் பொதுப் பொருளே இங்கு போதும். பேரரசுச் சோழர் காலத்திலும் தன அதிகாரி என்பார் தங்கத்தை மட்டும் கையாள்பவரல்லர். சோழ அரசின் செல்வங்கள் எல்லாமும் கையாள்பவர் அவர். பொ.உ.மு.135 - பொ.உ.150 வரை மிளகுக் கறி, மணிகள், முத்துக்களைத் தேடி, இவண் வந்த யவனர் [கிரேக்கரும், உரோமானியரும், அவர் தாக்கம் பெற்ற பலர்], சோனகர் [அரபியர். ”சோனகரும்”, ”யவனரும்” ஒருவருக்கொருவர் ஊடாடியே தமிழகம் (Damirica) வந்தார்] சீனர் [இவர் பற்றிய ஆய்வு தமிழகத்திற் குறைவு. அதேபொழுது, அழகன்குளத்திற் சீனரின் பீங்கான் துண்டுகள் கிட்டியுள்ளன] ஆகியோரின் கப்பல்கள் தமிழகத்தில் எங்கெலாம் துறை கொள்ளும்? சங்க காலத்தில் கடல் வாணிகம் எப்படி யிருந்தது? - என்ற கேள்விகளுக்கு நம்மிடை சரியான விளக்கங் கிடையாது. 

இந்த வணிகத்திற்குச் சான்றாய், பட்டினப்பாலையை மட்டும் எத்தனை நாட்களுக்கு நாம் சொல்லிக் கொண்டிருப்பது? பொதுவாக, நம்மூரிற் கடல் ஆய்வு செய்யும் ஆட்களை விரல் விட்டு எண்ணலாம். இப்போதைக்கு நண்பர் ஒரிசா பாலுவை விட்டால் நம்மிடம் ஆளில்லைபோல் தெரிகிறது. நம் தொல்லாய்வுகள் குறைப்படும் புலம் இதுவே. இதற்கு எக்கச் சக்கப் பணமும், நிதி நல்கைகளும் வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை கண்டு கொள்ளுமா? 100 கோடி உருபாயைச் செலவு செய்து தமிழ்த் தாய்க்குச் சிலை நிறுவுதற்கு மாறாய் இதைச் செய்யலாமே?. எந்தக் கட்சியார் நம் சொல்லைக் கேட்பார்? ”சிலை வைப்பது, மண்டபங் கட்டுவது, தமிழ் வாழ்க - என்று பதாகை எழுப்புவது” என்பவற்றை ஏன் அளவோடு செய்யமாட்டேம் என்கிறோம்?. 

அடுத்து கலமெனும் சொல். கல்லப் (=தோண்டப்) பட்டது கலம். ஆங்கிலத்தில் dug-out canoe. தோணியும், தொள்ளையுங் கூடத் ”தோண்டற்” பொருளின. குயவன் தோண்டியதும் தோண்டியே. களிமண்ணைத் தோண்டிப் பொருள்களைக் கொள்வதற்கும், மரந்தோண்டி நீரைக் கடப்பதற்கும் பயன்பட்ட சொல் கலமாகும். பின்னால் உண்கலன், கொள்கலன், அணிகலன், படைக்கலன், அறைகலன், மென்கலன் என்று பொருட்பாடு விரிந்தது. கலமென்பது, வளர்நிலையிற் dug-out canoe வை மட்டும் குறிக்காது, பல்வகைக் கடல் ஓடங்களையும் குறித்தது. மரத்தோணி என்பது 2,3 பேர் போகும் அளவானது. ”தனம்தரு நன்கலம்” என்று சிலர் தோணியைச் சொல்லார். தோணியைப் புரட்டிப் பாசி, ஒட்டுண்ணிகள், சிப்பி உயிரிகள் (barnacles) போன்றவற்றைச் சுரண்டியழித்துப் பேண முடிவதாலும், தோணியைச் சிதையாமற் பலகாலம் காப்பாற்ற முடிவதாலும் இங்கு தோணி பேசப்பட வில்லையென உறுதியாய்க் கூறலாம்.  

அடுத்ததாய், மரத்தோணிகள் மட்டும் நீர் கடக்கப் பயனுறவில்லை. மிதக்கும் புற்கட்டுகளும் இதற்குப் பயனுற்றன. குறிப்பாகக் கோரைப்புற் கட்டுகள். வளைபொருள் சுட்டும் கொடுக்குப் புற்களைக் கொறுக்குப் புற்களென்றும் அழைத்தார். கொடு>கோடு>கோறு>கோறை>கோரை என்றும் இச்சொல் திரியும். (நம்மூரில் பலவிடங்களில் - சென்னை வேளச்சேரிக்கு அப்புறம் பள்ளிக்கரணை போகும் வழியில் சதுப்பு நிலம், சிதம்பரம்-சீர்காழி வழியில் கொள்ளிடந் தாண்டி வரும் தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டை சாலையில் சேரன்மாதேவிக்குச் சற்று முந்தையப் பத்தமடை - எனப் பல பகுதிகளிற் கோரை செழித்து வளர்கிறது. 

கோரைகளிற் கனம், சன்னம், கோலெனப் பல்வேறு விதப்புகளுண்டு.) கோரைப்புற் கட்டுகளைப் புணைத்துச் (>பிணைத்து) செய்தது புணையாகும். ”கொழுங்கோல் வேழத்துப் புணை” என்று அகம் 186-12 இல் இதே பரணர் சொல்வார். கொழுங்கோல் = கொழுத்தகோல். வேழம் = கொறுக்கம்புல் தட்டை. (வெள்ளைநார்த் தட்டை வேழமாகும். இது ஒரு வகையான நாணல். வேழம் என்ற சொல்லைக் கரும்பிற்கும் நாம் பயன்படுத்துவதாற் குழம்புகிறோம்.) ”புணை” என்ற சொல்லின் கீழ் 38 இடங்களுக்கு மேல் சங்க காலக் குறிப்புகள் உண்டு. அவற்றை ஆய்ந்தால் பலன் கிடைக்கும். 

எகிப்து, சிந்து, சுமேரிய, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அஸ்டெக், மாய, இங்க்கா, (ஈசுடர் தீவு போன்ற) பாலினீசியப் பழநாகரிகங்களிற் புழங்கிய reed-ship, read boat ஆகியவை நம்மூரிலும் ”புணை”ப் பெயரில் இருந்தன. (அழகன் குளத்தில் கண்டெடுத்த, ஓட்டுச் சில்லில் இருந்த, கீற்றோவியமும் புணையைக் காட்டியது.) புணைநுட்பியல் மேற்சொன்ன நாடுகளின் தனித்தனியே எழ வாய்ப்பில்லை. எங்கு முதலில் இது எழுந்ததென்று இன்னும் அறியவில்லை. இவற்றைக் கட்டும் நுட்பம் சில நாடுகளில் மட்டும் இன்று எஞ்சியுள்ளது. இவை கொண்டு பெருங்கடல்களையும் மாந்தர் ஒருகாலத்திற் கடந்திருக்கலாம் என ஆய்வாளர் எண்ணுகிறார். இற்றைக் கப்பல் நுட்பியல் புணைநுட்பியலில் இருந்தே வளர்ந்திருக்குமென எண்ணுகிறார். 

Pliny யின் நூலில் (Historia Naturalis, Book VI, XXIII, 82) அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த Eratosthenes தன் நூலிற் கூறியதாகச் சொல்லுவார். “It begins at the Eastern sea, and lies extended over against India east and west. The island in former days, when the voyage to it was made with vessels constructed of papyrus and rigged after the manner of the vessels of the Nile, was thought to be twenty days' sail from the country of Prasi, but the distance came afterwards to be recokened at a seven days' sail, according to the rate of speed of our ships. The sea between the island and India is full of shallows not more than six paces in depth, but in some channels so deep that no anchors can find the bottom.For this reason ships are built with prows at each end to obviate the necessity of their turning about in channels of extreme narrowness.” எராட்டொசுதெனெசு என்ற யவன நூலகர் சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தார்.   

prasii என்பது கிழக்கேயுள்ள மகததேசமாகும். (”திசைகள்” தொடரில் prasii யின் சொற்பிறப்பு சொன்னேன்.) மகதப் பெருந்துறை தாமலித்தி. அங்கிருந்து கொறுக்குப் புற்களாற் கட்டிய புணையில் 20 நாட்கள் பயணித்தால் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் வந்துசேருமென்றும், உரோம மரக்கப்பல் வழி 7 நாட்கள் ஆனதென்றும் மேலேயறிகிறோம். கொடுங்கோல் வேழத்துப் புணை நம்மூரில் இருந்ததை Pliny யின் குறிப்பு கட்டாயம்  உறுதி செய்கிறது. நாம்தான் நம் இலக்கியங்களைக் கவனிப்பதில்லை; மற்றோரும் வடவரைக் கவனிப்பது போல் நம்மை மதிப்பதில்லை. 

நார்வே நாட்டுத் தோர் அயர்தால் (Thor Heyerdahl) புணைப்பயணங்கள் பற்றிப் பேசுவார். (Early man and the ocean, Vintage books, 1980, Ra expeditions, A Signet book from New American Library, 1971) உலகம் வியக்கிறது. அவரைப் பார்த்து நம்மூரில் தேட மறுக்கிறோம். (மாலத்தீவிலும் அவர் ஆய்வுசெய்தார். (The Maldive Mystery, Adler&Adler, 1986) பழந்தீவு பன்னீராயிரம் என பெயர் சொல்லி என்ன பயன்? கூடப்போய் அங்கு ஆய்ந்தோமா?  இந்தோனேசியாவுக்கோ, சிம்பாப்வேக்கோ, பாஃக்ரினுக்கோ புணைகளை ஓட்டிப் பார்த்தோமா? என்ன சோகம் பாருங்கள்? 

அடுத்துத் தோணியையும், புணையையும் கலந்து செய்ததாய் ஓர் ஓட(raft) நுட்பியல் வந்தது. அடித்தண்டோடு (நெஞ்செலும்புகளைப் போன்று) 2 பக்கம் மரச்சட்டங்களைப் பொருத்திக் குவியும் கூட்டுச் சட்டகமும் வந்தது. (hull ற்கும் கூட்டிற்கும் சொற்பொருட் தொடர்புண்டு. நம்மூர் சீரை>சீலையே sail ஆனது. கப்பல் நுட்பியலின் பல சொற்களுக்கும் தமிழுக்குமுள்ள ஆழ்தொடர்பைப் பாவாணர் சொல்வார்: இவற்றை விரித்தால் அது தனிக்கட்டுரையாகும்.) முடிவாக (நெஞ்சாங்கூட்டைத் தசைகள், தோலால் மூடுவதுபோல்) நீர் நுழையாதபடி மரப் பலகைகளை இழைத்துப் பொருத்தி, கயிறு, மர ஆணிகளாற் (அப்புறம் இரும்பாணிகள்) கூட்டை மூடி/கவ்வி/கப்பிச் செய்யும் கப்பல் நுட்பியல் உலகெங்கும் பரவியது (”கப்பல்” சொல் எப்படியெழுந்தது, இப்போது தெரிகிறதா?)

பொ.உ. 1421 இல் சீன மாவேந்தரின் ஆணையால் உலகுசுற்ற முற்பட்ட சீன மாநாய்கன் செங்ஃகோ, தன் கலங்களைச் செய்யும் ஏவலை (order) கோழிக் கோட்டிற்கு அருகிற் கொடுத்து (பின்னால் வாசுகோடக் காமாவும் இங்கு தான் வந்திறங்கினார். சாலியாற்றங்கரை அவ்வளவு சிறப்புப் போலும்.) ஓராண்டு இருந்து கப்பல்களைத் தனக்கு வேண்டியபடி செய்து போனானாம். அவ்வளவு தெளிவான கப்பல் நுட்பம் தமிழரிடம் (அப்பொழுது சேரலர்>கேரளர் என்பார் வட்டாரத் தமிழ் பேசினார்.) இங்கிருந்தது. நுட்பந் தெரிந்தவர் சொல் உலகு எங்கும் பரவாதா? 

(இந்தையிரோப்பிய மொழிகளில் ஒளிந்து கிடக்கும் ”கப்பற்” சொல்லின் மூலம் யாருக்குத் தெரிகிறது, சொல்லுங்கள்? ship (n.) Old English scip "ship,boat," from Proto-Germanic *skipam (cognates: Old Norse, Old Saxon, Old Frisian, Gothic skip, Danish skib, Swedish skepp, Middle Dutch scip, Dutch schip, Old High German skif, German Schiff), "Germanic noun of obscure origin" [Watkins]. Others suggest perhaps originally "tree cut out or hollowed out," and derive it from PIE root *skei- "to cut, split.") 

மரக்கலம் பொதுவாக மரத்தில் கல்லியதென்றும், விதப்பாக மரச் சட்டங்களின் மேற் கப்புகளை வைத்து மூடும் நுட்பியலாற் செய்ததென்றும் பொருள்படும். (கப்பியது கப்பல்). கொண்டுசெல்லும் கொண்மை (carrying capacity) குறைவு ஆனதால், மரத்தோணி நுட்பியல் பெரிதாய் வளரவில்லை. ஆனால், எகிப்திய, சுமேரிய, இங்க்கா சான்றுகளைப் பார்க்கையில் 100 பேர் பயணிப்பதற்கும், பெருஞ்சுமை கொண்டுசெல்லும் அளவிற்கும் புணை நுட்பியல் எளிதாய் வளர்ந்தது புரிகிறது. 

அலைகளில் ஏறி இறங்கையில் எந்தப் புனைக்கும் கட்டாயங் கவனிக்க வேண்டியது, விலாங்குப் பகுதியும் (bow; விலாங்கு மீனைப் பார்த்து இப்பெயர்), திரிங்கைப் பகுதியும் (stern; திரிங்கை>திரிக்கை> திருக்கை மீன் பார்த்து இப்பெயர்) சேர்த்துப் புணையின் பிறைவடிவம் குலையாதிருப்பது தான். ஏதோ வகையிற் புணையின் கட்டுமானஞ் சரிந்தால், விலாங்கோ, திரிங்கையோ முறிந்து புணை முற்றிலுஞ் சிதைந்து போகும்; அல்லது புணையின் (வலது கை) திரிப் பக்கம் (starboard side) நீரில் அமிழ, (இடது கைப்) புகற் பக்கம் (port side) உயர்ந்து நிற்கும் (புணை கட்டிச் சோதித்த தோர் அயர்தாலின் Ra I - இல் இந்த விளைவு நடந்தது; Ra I - இன் திரிங்கையும் முறிந்து, திரிப் பக்கமும் நீருள் அமிழ்ந்தது.) 

மற்றபடி பெருங்கடற் சுறாக்கள், திமிங்கிலங்கள், இறாக்கள், பல்வேறு கடல் உயிரிகள் புணைகளைச் சிதைத்ததாய் இதுவரை எந்தக் குறிப்புமில்லை. தோணி, புணை, மரக்கலம் என்ற மூன்றுமே பாய்களைக் கட்டிக் காற்றின் விசையாலும், நகர்த்துப் பட்டைகள் (conveyer belts) போலியங்கும் கடல் நீர் ஓட்டங்களாலும், துடுப்புகள் வழி மாந்தவுழைப்பாலும் கடற் பயணங்களைச் செய்தன. படகு, பஃறி, பாதை, பாரதி, பாறு, புணை, பகடு, பட்டிகை, படுவை, மிதவை, வங்கம், அம்பி, போதம், மதலை, யானம், நாவாய், திமில் என்பவற்றில் எவ்வெவை தோணி, புணை, மரக்கலம் என்ற வகைப் பாட்டை நான் இன்னுந் தெளியேன். தோணிகள், புணைகளைப் போன்று கட்டமை வழுக் (structural defect) கொண்ட மரக்கலங்களும் அலைகளிற் சிக்கிக் குலைந்து போகலாம். அடுத்த பகுதியில் கலஞ்சிதைவு பற்றிப் பார்ப்போம்.

அன்புடன்,

இராம.கி.


Sunday, December 05, 2021

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 3

 தித்தன் என்பான் உறையூர்ச் சோழன். தித்தன் = நெருப்பானவன், ஒளி பொருந்தியவன், ஒளிதிகழ்வோன். யா என்பது இருளைக் குறிக்கும் (”யா”வழிச் சொற்பிறப்புக்களை ப.அருளியின் பொத்தகத்திற் காண்க.) இற்றல் = போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன் / போக்குகிறவன். யா>ஞா>நா திரிவில் யாயிற்றனை ஞாயிற்றனாகவும், நாயிற்றனாகவும் பலுக்கலாம். இருள் போக்கும் சூரியனை ஞாயிறென்பர். செங்குட்டுவனின் தாய்வழிப் பாட்டனான, உறையூர்ச் சோழனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனென்று சிலம்பு புகலும். 

யாயிற்றன்>ஆயிற்றன்>ஆதிற்றன்>ஆதித்தன்>ஆதித்த என்ற சொல் வடபுல மொழிகளில் சூரியனைக் குறித்தது. ஆதித்தனின் முதற்குறையாய் தித்தன் தமிழில் மீந்து நிற்கும். பரணர் பாடிய சமகால அரசரை ஒருங்கே வைத்துப் பார்த்தாற் தித்தனே, செங்குட்டுவனின் தாய் வழித் தாத்தனான ஞாயிற்றுச் சோழனென முடிவு செய்யலாம். குட்டுவனின் தாய் நற்சோணை. (சோணை = சோணாட்டுக்காரி; பொன் போன்றாள் என்றுஞ் சொல்லலாம். சோணை யெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னியெனும் மற்றொன்று சோழ நாட்டிலும் ஓடின. பொன் நிறத்திற்கும் சோழருக்குமான பெருந்தொடர்பை நாமின்னும் உணர்ந்தோமில்லை. ”சோழர்” பெயரைக் கீழே பார்ப்போம்.) அகம் 6-இன் 3,4ஆம் அடிகளைப் பார்த்தால் ஐயை என்பது ஞாயிற்றுச் சோழனின் மகளுக்கு விதுப் பெயராகவும், நற்சோணை என்பது பொதுப் பெயராகவும் இருக்கலாம்.  

இனி பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகம், 

”வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக் 

குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச் 

சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்” 

என்று செங்குட்டுவனைக் குறிக்கும். ”இதில் வரும் மணக்கிள்ளி யார்? தித்தன் எனும் திகழொளி ஞாயிற்றுச் சோழனுக்கு இது எப்படிப் பொருந்தும்?” என்று பார்ப்போம். மருவல்=தழுவல், சேரல். (”மருவுகை” என்பது இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் - ஆங்கிலத்தில் marriage - போயிருக்கிறது.) மரு மகன் / மகள் என்பார் தழுவிச் சேர்த்துக் கொண்ட மகனும் மகளும் ஆவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒரு குடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவு கொள்ளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன் படி மண்ணுதல் எனும் மஞ்சள் நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங் கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். 

சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/ நற்சோணையின் தந்தை தித்தன் ஆவான். மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். (சம்பந்தம் என்பது ”பந்தத்தோடு” சம் எனும் வடமொழி முன்னொட்டுச் சேர்த்தது. வடசொல் ஆண்டு மீண்டுந் தமிழ்ச் சொல்லை இழந்தோம்.), மணக் கிள்ளி எனும் உறவுப் பெயரைப் பதிகம் பாடினோர் இயற்பெயர் ஆக்கி விட்டார். பதிகத்திற்கு புத்துரை எழுதினோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலுள்ள அடியைப் புரிந்துகொள்ள வேண்டும். நெடுஞ்சேரலாதற்கு இன்னொரு மனைவி வழி பெற்ற இரு மக்களுண்டு. 

இப்பொழுது ”சோழர் ”எனும் இனக்குழுப் பெயரின் சொற்பிறப்பை நினைவு கொள்ளலாம். பண்டு> பாண்டெனும் சாம்பல்/நீறு எப்படிப் பாண்டியர் (பாண்டு> பாண்டியர்) இனக்குழு அடையாளமோ, (பண்டு> பாண்டு எனுஞ் சொல் பழங்குடிப் பொருளுந் தரும்.) சாரலெனும் சந்தனம், எப்படிச் சேரர் (சாரல்>சாரலர்>சேரலர்) இனக்குழு அடையாளமோ, அப்படி மஞ்சள்/ குங்குமம், சோழர் இனக்குழுவின் அடையாளம் ஆகும். (கொல்>கொழு நிறம்= மஞ்சள்/பொன் நிறம். கொழுவின் திரிவான கோழி, குங்கும நிறங் குறிக்கும். மஞ்சளும் குங்குமமும், நீரக அயனிச் செறிவால் (Hydrogen ion concentration) நிறம் மாறும். கொழு>கோழி>கோழியர் என்பது சோழியராகும். உறையூர் கோழியூராகும். (கோழி யானையைத் துரத்தியது என்பது சுவையாரமான கட்டுக்கதை.) 

இற்றைத் தமிழர் மலையாளிகளிடை நிலவும் நீற்று, சந்தன, மஞ்சள்/குங்குமப் பூச்சு என்பவை இனக்குழுப் பழக்கங்களின் மிச்ச சொச்சமே. (இதை இந்துப் பழக்கமென்பது முற்றிலுந் தவறு. வடவர் இவற்றை விரும்பி அணிவதில்லை. தமிழரைப் பார்த்துப் படியெடுத்து அணிந்து கொள்வர். தமிழரோடு ஈனியல் (genetics) உறவுற்ற ஆத்திரேலியப் பழங்குடியாரும் தம் கொண்டாட்டங்களில் முப்பட்டைத் திருநீற்றை உடல் மேற் பூசிக் கொள்கிறாரே? அவரெலாம் சிவ நெறியாளரா, என்ன? திருநீற்று முப்பட்டை சிவநெறிக்கும் முந்தியது என்று புரிகிறதா?)

சென்னி, செம்பியன் என்பன குடிப் பெயர்கள்; கிள்ளி, வளவன் போன்றன இயற்பெயர் முடிபுகள். தித்தனின் மகன் வெளியனாவான். வெள்ளையன், வெள்ளைச்சாமி, வெள்ளையப்பன் என்கிறோமே அக்கருத்தின் முற்பெயர் வெளியனாகும். இதன் பொருளை ”வெள்ளைப் பிள்ளை” என்னாது, வெளிறிய கருப்பெனக் கொள்ளலாம். பட்டஞ் சூடுமுன் ”வெளியன்” என்பது தித்தன் மகனின் இயற்பெயராய் இருந்திருக்கலாம். ஏதோ காரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம் வேறாகி மகன் உறையூரை விட்டு விலகித் தந்தையின் நாட்டுள் வேறெங்கோ இருந்ததைத் தமிழறிஞர் உய்த்திருக்கிறார். 

தந்தையோடு கருத்து மாறுபட்டு நாட்டின் துறைமுகத்தில் ஆண்ட தித்தன் வெளியன் வீர விளையாட்டுக்கள், இசை, நடனக் கூத்துக்களென்றே சிலகாலங் கழித்திருக்கிறான். தத்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில் - வழிகளில் - வேல் வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்றும் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி (போர்வை எனும் ஊரின் அரசன்; இற்றை உறையூருக்கு அருகிலுள்ள பேட்டைவாய்த் தலை, போர்வையெனப் பட்டதாம்.) என்றும் அழைக்கப் பட்டு, தித்தன் வெளியன் உறையூரில் ஆண்டிருக்கிறான். நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் தித்தன் வெளியனே. 

[இங்கொரு இடைவிலகல். மைதுனம் என்பதைப் பலரும் வடசொல்லென்று கருதுகிறார். அது தவறு. முயத்தல்= தழுவுதல். மேற் சொன்ன மருவுதலை ஓர்ந்து பாருங்கள். அதுவும் தழுவுதலே. "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு” என்பது புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தின் 1108 ஆங் குறள். முயத்தன் என்பவன் தழுவிக்கொண்டவன். அந்தனென்ற தமிழ்ச் சொல் அந்தனன்>அந்தணன் என இன்னொரு ஈற்றை எடுத்தது போல் முயத்தன்> முய்த்தனன்> முயத்துனன்> மைத்துனன் என்றாகியது. முயத்தனின் பேச்சு மொழித் திரிவே மச்சானாகும். ஒரு பெண்ணிற்கு அவள் கணவனும், கணவனுடன் பிறந்தாரும் முயத்துனர் ஆவார். ஓராணிற்கு மனைவியின் உடன் பிறந்தாரும் முயத்துனர் ஆவார். முயத்துனி (மைத்துனி), முயத்துனம் (மைதுனம்) போன்றவையும் முயத்தல் வினையிற் பிறந்த சொற்களே. இச் சொற்களைக் கண்டு நாம் வெட்கப்படத் தேவையேயில்லை]

சேரலாதனும் தித்தன் வெளியனும் ஒருவருக்கொருவர் ஏதோ முரணாற் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). இவனுக்குப் பின் இவனுடைய இள அகவை மகனோடு (பெரும்பாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாம் என உய்த்துணர்கிறோம்.) பகை கொண்ட 9 அரசருடன் செங்குட்டுவனே போரிட்டு உறையூரை நிலை நிறுத்த உதவினான். இச்செய்திகள் எல்லாம் சிலம்பின் வஞ்சிக் காண்டத்தில் வருவதை அறிய முடியும். இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்த பிறகாவது, சிலம்புக் காலத்தைச் சங்கம் மருவிய காலமென்று குழம்பாது ஒழியலாம். (ஒரு காலத்தில் இப்படித் தடுமாறிய நான் சிலம்பை ஆழ்ந்து படித்தபின் மாறினேன். சங்ககால ஆய்வுக்குச் ”சிலம்பு” ஒரு திறவுகோலும், சமன்கோல் ஆணியுமாய் இருப்பதை உணர்ந்தேன். இதைப் புதினம் என்போர், தாமுங் குழம்பி மற்றோரையுங் குழப்புகிறார்.)  

”சிலம்பின் காலம்” பொத்தகத்தில் வளநாடு, நாகநாடென 2 பகுதிகளாய் சோழநாடு பிரிந்தது பற்றிச் சொன்னேன். (ஒரு காலத்தில் பாண்டிய நாடும் 5 பகுதிகளாய் ஆளப்பட்டது. பாண்டியருக்குப் பஞ்சவர் என்ற பெயருமுண்டு. சேர நாட்டிலும் பல பகுதிகளுண்டு. செங்குட்டுவனின் சம காலத்தில் 9 பங்காளிகள் இருந்தார்.) சிலம்புக் காலத்தில் நாக நாட்டிற்கு ஒருவனும் வளநாட்டிற்கு ஒருவனுமாய்ச் சோழர் இருந்தார். கண்ணகி நாக நாட்டவள். நாக நாட்டின் கோநகர் புகார்; வள நாட்டின் கோநகர் உறையூர். சிலம்பு, புகாரையும், உறையூரையும் சமமாய்ப் பேசும். நாக நாட்டிற்கும், வள நாட்டிற்கும் பகையென்று சொல்லவியலாது. இருவரும் சோழரே ஆயினும் யார் வேந்தர் என்பதில் முரண்களும், பங்காளிச் சண்டைகளும் இருந்தன. பொதுவாகச் சங்க காலச் சோழருள் ஒற்றுமைக் குறைச்சல் கூடவேயிருந்தது. 

சேர, பாண்டிய நாடுகளில் உட்பகுதிகள் இருந்தும், அவை குடவஞ்சியையும், மதுரையையும் வேந்தர் இடங்களாய் ஏற்றன. (கொற்கையோ, கொங்குக் கருவூரோ தத்தம் தலைநகரோடு முரண்படவில்லை. ஒருமுறை தினமலர் இரா.கிருட்டிணமூர்த்தி ”கொற்கைப் பாண்டியர் மதுரைப் பாண்டியரினும் விட, வேறொரு பட்டவத்தில் கயற்கொடி கொண்டிருக்கலாம்; அசோகர் கல்வெட்டுக்களின் தாம்பபன்னி விவரிப்பு மேற்கு இலங்கையோடு நம் தாமிர வருணிப்பகுதியையும் சேர்த்துக் குறிக்கலாம்” என்று கொற்கையருக்குத் தனியிருப்புக் காட்டுவார்.)

கொங்குவஞ்சி குடவஞ்சிக்கு அடங்கி இருந்ததால் உதியன் உட்குடியும், இரும்பொறை உட்குடியும் ஒருவரையொருவர் மதித்து தம் பொதுவான ஆதன்குடிக்குப் பங்கம் வராது இருந்தார். அதே போல, பங்காளி உறவு முறைகளில் பாண்டியருக்குள் சங்க காலத்தில் தகறாறு இருந்தது போல் தெரியவில்லை. பிற்காலப் பாண்டியரிற்றான் பங்காளிச் சண்டைகள் கூடித் தமிழகம் அடிமைப் பட்டது. பொதுவாக மாமன்/ மச்சான், பங்காளிச் சண்டைகளாலேயே தமிழர் வரலாறு கால காலத்திற்கும் சிதைந்தது. (இன்றும் திராவிடக் கட்சிகளின் பங்காளிச் சண்டைகளால் அதே நிலை.. கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் பங்காளிச் சண்டை போடுவது மிகக் குறைவே. அவருக்கு இன உணர்வு அதிகம்.) 

தித்தனுக்குத் துறைமுகமாய் பூம்புகார் இருந்திருக்கக் கொஞ்சமும் வழி யில்லை. ஏனெனில் தித்தன் வள நாட்டவன்; புகார் நாக நாட்டைச் சேர்ந்தது. அதே பொழுது கடற்கரையின்றி, வள நாடு நிலத்தால் மூடிய நாடா? - என்பதும் ஐயத்திற்குரியது. வள நாட்டிற்குத் துறைமுகங்கள் உண்டெனில், உறையூரில் இருந்து, தஞ்சை வழி கிழக்கு வந்தால், நாகநாட்டின் தென்பால் எல்லையான நாகைக்குத் தெற்கே அவை தொடங்கியிருக்கலாம். பிற்றை வரலாற்றையுஞ் சேர்த்து நோக்கின், குணக் கடலும், (ஆங்கிலேயர் பெயரிட்ட) பால்க் ஒடுக்கமும் (Palk straits) சந்திக்கும் கோடிக்கரையே வளநாட்டின் துறையாக வாய்ப்புண்டு. (மன்னார் வளைகுடா பால்க் ஒடுக்கத்தின் கீழ் உள்ளது.) 

துருத்தி நிற்கும் கோடிக்கரையை promontory என்று பொதுவாயும், கழிமேட்டு முனை (Point calimere) என விதப்பாயும் ஆங்கிலத்திற் சொல்வார். திருவணைக் கரை, தொல்முது கோடி, தலைஞாயிறு என்றும் இவ்வூர் சொல்லப்பட்டது. கோடிக்கரையின் வணிக வாய்ப்புப் பற்றி Ptolemy யின் நூலும், Pliny இன் நூலும், Periplus of the Erythraean Sea யும் பேசுகின்றன. பெரும் படகுகளும், புணைகளும், மரக்கலங்களும் இத்துறையிற் தொடர்ந்து இயங்கியிருக்கின்றன.  

கோடிக்கரைக்குச் சற்றுமேலே மரைமான்கள் உலவும் மரைக்காடு இருந்தது. தேவார காலத்தில் மறைக்காடெனத் தவறாய்ப் பொருள்கொண்டு வேதாரண்யமாய்ச் சங்கதத்தில் மொழிபெயர்ப்பர். தலை ஞாயிற்றிற்கு மேற்கே கோடிக்காடும் பஞ்சனடிக்குளம் என்ற உப்புக் கடல் ஏரியும், அதன் மேற்கே முத்தூர்ப் பேட்டை அலையாற்றிக் காடுகளுமுண்டு. Mangrove = கழிக் கானல்;  கானற் பயன்பாட்டை ஆலங்கானம், கானப்பேர், மாமல்லைக்குத் தெற்கே மரக்கானம் (சிறுபாணாற்றுப் படையின் எயிற் பட்டினம்) போன்றவற்றால் அறியலாம். 

கானலென்ற பெயருக்குக் கழிப் பொருளுமுண்டு. கோடிக்கரையின் கிழக்கிலும், தெற்கிலும் அலை குறைந்த ஆழமிலாக் கடலேயுண்டு. அங்கங்கிருக்கும் ஆழிடங்களில் வங்கங்களையும், கலங்களையும் (பெருங் கப்பல்களையும்) நங்கூரமிட்டு நிறுத்திக் கப்பற் பொருட்களை படகின் வழி இத்துறையில் இறக்க முடியும். இப்போது 50 ஆண்டுகளுக்கு முன் நாக பட்டினத்திற் கூட இப்படியே பெருங்கப்பல்கள் இயங்கின. (சேரர் முசிறியும், சோழர் புகாருங் கூட இப்படித் தான் இருந்தன. இக்காலத் துறைமுகங்களைப் பார்த்து வேறு விதம் நாம் குழம்பிக் கொள்கிறோம். கடலைத் தோண்டி மண்ணை வாரித் துறையருகே ஆழப் படுத்துவது இக்காலத்து முறையாகும்.) 

ஞாழலும், புன்னையும் நிறைந்த, கோடிக்காடும் தலைஞாயிறும் சேர்ந்த, ”கானலம் பெருந்துறை”க்கு (= காடுநிறைந்த பெருங்கடல் துறை) இராமன் வந்ததாய், அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளரின் நெய்தற்பாடல் சொல்லும். இவ்வூர் பற்றிப் பல குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆனால் அவற்றை ஆழ ஆய்ந்தோர் குறைவு. கோடிக்கரைக்கு நேர் தெற்கே சில தீவுகளும் உண்டு. அங்கிருந்து யாழ்ப்பாண மாவட்ட  நாகனார் தீவு (நயினார் தீவு) வரை ஆதிசேது எனும் இயற்கைச்சேது (பாலம்) உள்ளது. அதே போலத் தனுசுக்கோடியில் இருந்து மன்னார் தீவு வரை இன்னொரு இயற்கைச் சேதுண்டு. (இதை இராமர் சேதென்பர். இது மாந்தன் செய்ததாய்ச் சொல்வது வெறுந் தொன்மமே.) கடலடி மட்டத்திலிருந்து பார்த்தால் இராமர் சேதுவினும் ஆதிசேது உயரங்குறைந்தது, கடலுக்குள் இப்போது உள்ளது.). 

இரு சேதுக்களுக்கும் இடைப்பட்ட நிலமே முந்நாளிற் கடல் கொண்ட பாண்டி நிலமாகும். (குமரிக்குத் தெற்கிலும் கடல் நிலங் கொண்டது. மொத்தத்தில் தமிழரிழந்தது இற்றை நிலத்தை ஒட்டிய பெருநிலமே. ஆனால் அதுவொரு கண்டமா? -எனில், இல்லை என்றே இற்றை அறிவியல் சொல்கிறது. எவ்வளவு நிலம் எந்த உகங்களில் அழிந்தது என்பதைப் பெருங்கடல் கிறுவியல் (oceanography) வழி ஆய்வதே சரியான முறையாகும். இப்புலன ஆய்வு முடியாத நிலையில் காத்திருக்கவே நான் விழைவேன்.) இந்நிலத்திற்கும் கிழக்கில் இலங்கையின் மேற்குக் கடல் ஒட்டிய நிலங்களிருந்தன. அவையும் கடற்கோளின் முன் பாண்டி நிலம் தான் (இதை மறந்து, கால காலத்திற்கும் இலங்கை, தீவாயிருந்ததென நாம் எண்ணிக் கொள்கிறோம்.) 

இலங்கையின் மேற்குக் கரை சங்க காலத்திற் பாண்டியரைச் சேர்ந்தது. சிங்களர் எண்ணிக்கையிற் பெருகியது சங்க காலப் பிற்பகுதியில் தான். தவிர, அவரொன்றும் நம்மிருந்து முற்றிலும் வேறானவர் அல்லர்; தமிழ்க் குடியின் பெண் வழியினரே சிங்களர் என்று அவர் வரலாற்றுக் குறிப்புகளே தெரிவிக்கின்றன. கலிங்க விசயன் கூட்டத்திற்கும் தெற்குப் பாண்டியருக்கும் இடைநடந்த மணவுறவுகள் சுவையார வரலாறு; அவற்றை உருப்படியாய் யாரும் ஆயவில்லை. (இலங்கை உரோகண அரசு பாண்டியர் வழியதென்று சிங்கள நூல்களே கூறுகின்றனவாம்.) இற்றைச் சூழ்நிலையின் போகூழும் கொடுமையும் அவற்றை ஆயவும் விடா. தமிழ் மாமனை/ மச்சானை மதியாத சிங்கள மருமகன் சண்டை இன்றுந் தொடர்கிறது.    

கடற்கோளின் பின் (இற்றைப் புதுக்கோட்டை மாவட்டஞ் சேர்ந்த முத்தூர்ப் பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கிப் பகுதியான) மிழலைக் கூற்றத்தையும், அதற்குக் கீழுள்ள  முத்தூர்க் கூற்றத்தையும் பாண்டியர் கைப்பற்றினர். மிழலைக் கூற்றமும், முத்தூர்க் கூற்றமும் அன்றிலிருந்து இன்று வரைச் சோழ, பாண்டிய அடையாளங்களைக் கலவையாய்க் காட்டும். இவற்றின் எச்சமாய் முத்துக்கள் விலை போகிய ”முத்தூர்ப்பேட்டை” எனும் பெயரும் விளங்கும் (நம்மூரில் பேட்டையெனிற் பொதுவாக வணிகர் கூடும் ஊராகும்.). கடற்கோளில் தன்னாட்டுப் பரப்பு குறைந்ததால் சோழனிடம் மிழலைக் கூற்றத்தையும், முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடம் குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் வளைத்துப் பறித்தது கலித்தொகை 104.4 ல் கீழ் வருமாறு சொல்லப்படும். 

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்

மெலிவு இன்றி, மேல்சென்று, மேவார் நாடு இடம்பட

புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இக் கூற்றங்களின் பெயர்களைக் கலித்தொகை உரையாசிரியர் வழியாகவே அறிகிறோம். மணிவாசகர் காலத்தில் பரிவாங்கத் தங்கிய  பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) மிழலைக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரி வாங்கிய போது இது பாண்டியர் கூற்றம் போலும். ஏனெனில் சோணாட்டுக் கூற்றத்தில் பாண்டி முதலமைச்சர் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியது நம்பும் படியாக இல்லை. எனவே மிழலைக் கூற்றமும், முத்தூர்க் கூற்றமும் விடாது பந்தாடப் பட்டது தமிழர் வரலாற்றிற் தொடர் கதை போலும். மிழலைக் கூற்றத்தை விடுத்து நாக நாட்டில் பெருந்துறையை வலிந்து தேடுவோரை என் சொல்வது?  

சங்க காலத்திற்குச் சற்று முன் கடைசிச் கடற்கோள் ஏற்பட்டதால், அச்சங் காரணமாகவும், குறையாழங் காரணமாகவும் 2 சேதுக்களுக்கும் இடையிருந்த கடலுக்குள் பெருங்கப்பல்களில் யாரும் வரமுயலார். பாண்டியர் தொண்டியோ (இது மிகவும் பின்னெழுந்த துறைமுகம் ஆகும். சங்கப் பாட்டுக்களில் பேசப் படுவது சேரரின் தொண்டியே. தொள்ளப் பட்டது தொண்டி.), பெருந்துறையோ, மணல் மேற்குடியோ, மீமிசலோ சங்க காலத்திற் துறைமுகமாக இருந்திருக்க கொஞ்சங் கூட வழியில்லை. அவற்றின் வரலாறுகள் தேவார காலத்திற்குச் சற்றே தான் முற்பட்டன. பெரும்பாலான வங்கங்களும், கப்பல்களும் தெற்கில் இருந்து வரும் பொழுது கொற்கை, காயல் (காயலுக்கும் கழியென்ற பொருளே யுண்டு.), அழகன் குளம் கடந்த பின் இலங்கையைச் சுற்றிக் கோடிக் கரைக்குத் தான் முதலில் வர வேண்டும். 

(The Periplus of the Erythraean Sea என்ற நூற்செய்தியும் இதைச் சொல்கிறது. “Beyond Colchi there follows another district called Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic.” Colchi = கொற்கை. கோடிக்கரை என்பதில் ”கோடி” என்பது Coty>County>Country என்று திரிவடைந்த எழுத்துப் பெயர்ப்பாகவும் ”கரை” மொழிபெயர்ப்பாகவும் இங்கு ஆளப்படுகிறது. Argaru = உறையூர். Argaritic என்பது உறையூர் கூறைப் புடைவையைக் குறிக்கிறது.) கோடிக்கரையின் முகன்மை புரிகிறதா? தெற்கிற் சோழரின் முதல் துறை கோடிக்கரை தான். இங்கிருந்து பெரும் ஏற்றுமதி நடந்திருக்க வேண்டும். 

”கானலம் பெருந்துறை” வழி கழிநிறைந்த கோடிக்கரையின் அடையாளங் கண்ட நாம் இனி அகம் 152 இன் 4 ஆவது அடிக்குப் போவோம்.

அன்புடன்,

இராம.கி.


Saturday, December 04, 2021

calculus = கலனம்

calculus (n.) என்ற சொல்லிற்குக் ஆங்கிய சொற்பிறப்பியலில், mathematical method of treating problems by the use of a system of algebraic notation, 1660s, from Latin calculus "reckoning, account," originally "pebble used as a reckoning counter," diminutive of calx (genitive calcis) "limestone" என்று சொல்வர். In medicine, the word also has been used from 1732 to mean kidney stones, etc., then generally for "concretion occurring accidentally in the animal body," such as dental plaque என்று சொல்வர்.

தொடக்க காலத்தில் கற்குழைகளை வைத்துக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். இப் பழக்கம் நாவலந் தீவிலிருந்து அரேபியா போனது; பின்னால் பிற நாடுகளுக்கும் பரவியது. கல்லுதல், கலத்தல் என்ற வினையில் இருந்து தான் கூட்டல், கணத்தல், கணம், கணக்கு, கணிதம் போன்ற சொற்கள் பிறந்தன. கலம் என்பது கூட்டல், சேர்தல், பொருத்தல் போன்ற கருத்தில் விளையும் பெயர்ச் சொல். தமிழில், மகரத்தில் முடியும் பல பெயர்ச்சொற்கள் னகரத்திலும் முடியலாம். அந்த மாற்றத்தில் பொருள் மாறாது. கலம்>கலன் என்பதின் பெருநிலை கலனம். calculus என்ற உயர்கணிதத்திற்கு உரிய விதப்பான சொல்லாக இது 30. 40 ஆண்டுகளாகத் தமிழிற் புழங்கி வருகிறது.
வகைக் கலனம் என்பது differential calculus யையும், தொகைக் கலனம் என்பது integral calculus யையும் குறிக்கும். கலனத்திற்கு மாறாய் நுண்கணிதம் என்று பலரும் சொல்வர். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. dx, dy என்று பழகியதாலேயே நுண்கணிதம் என்ற நீண்ட சொல் ஆகவேண்டியதில்லை. differential calculus, integral calculus என்ற இரண்டும் ”நுண்கணிதம்” எனும் பயன் பாட்டில் பொருந்தி வராது. என் பரிந்துரை கலனமே. இச்சொல் இல்லாமல் உயர் கணிதத்தைத் தமிழில் எளிதாக, விளக்க இயலாது. நமக்கு மனம் இருந்தால், நற்றமிழில், முழு உயர்கணிதத்தையும் விளக்கிச் சொல்ல முடியும்.

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 2

மேலே நான்தந்த பின்புலத்தோடு, கீழே அகப்பாட்டைப் படியுங்கள். பாட்டின் 24 வரிகளை வழக்கம் போல ஐந்தைந்தாய்ப் பிரிக்காது, கருத்தறிதலுக்குத் தக்கப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். எந்த ஆசிரியர் எழுதினாலும், அது மதிப்பிற்கு உரிய உரொமிலா தாப்பரேயாயினும், அருள்கூர்ந்து அதை வரலாறாய்க் (history) கொள்ளாது, வெறும் வரலாற்றுவரைவாகவே (historiography) கொள்க. ஒவ்வொரு வரலாற்றுவரைவிலும் விதப்புப்பார்வைகளும் படிமங்களும் (forms) கட்டாயமுண்டு. இங்கு தந்துள்ளது நான் அடவிய (design) படிமம்; என் வரலாற்று வரைவு. அவ்வளவுதான் வேறுபாடு.

நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து

குன்றுழை நண்ணிய சீறூ ராங்கண்

செலீஇய பெயர்வோள் வணர்சுரி யைம்பால் 


நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்

சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்

இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறை

தனந்தரு நன்கலஞ் சிதையத் தாக்குஞ்

சிறுவெள் ளிறவின் குப்பை யன்ன 


உறுபகை தரூஉம் மொய்ம்முசு பிண்டன்

முனைமுர ணுடையக் கடந்த வென்வே 


லிசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்ப்

பாரத்துத் தலைவ னார நன்ன

னேழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்

களிமயிற் கலாவத் தன்ன தோளே


வல்வில் லிளையர் பெருமகன், நள்ளி

சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிந்த

கடவுட் காந்த ளுள்ளும், பலவுடன்

இறும்பூது கஞலிய யாய்மலர் நாறி


வல்லினும் வல்லா ராயினுஞ் சென்றோர்க்குச்

சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும்

மாஅல் யானை ஆஅய் கானத்துத்

தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்

வேயமைக் கண்ணிடை புரைஇச்


சேய வாயினும், நடுங்குதுயர் தருமே.

                        - அகம் 152

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாட்டினுள்வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, பாட்டின் யாப்பையும் சிலவிடங்களில் நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு, வணர்சுரி ஐம்பால், தோள் ஆகிய இருவேறு சினை விவரிப்புக்களும் புரிவதற்காகக் கடைசி வரியை 2 முறை அடுக்கிப் பொருத்திக் கீழே கொடுத்திருக்கிறேன்.

குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்

நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து

செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால் -


நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசைச்

சினம் கெழு தானைத் தித்தன் வெளியன்

இரங்கு நீர்ப் பரப்பின் கானல் அம் பெருந்துறை

தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும்

சிறுவெள் இறவின் குப்பை அன்ன 


உறு பகை தரூஉம் மொய்ம் முசு பிண்டன்

முனை முரண் உடையக் கடந்த வென்வேல்


சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. 


இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்ப்

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்

ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்

களி மயிற் கலாவத்து அன்ன, தோளே-


வல் வில் இளையர் பெருமகன், நள்ளி

சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த

கடவுட் காந்தள் உள்ளும், பலவுடன்

இறும் பூது கஞலிய ஆய் மலர் நாறி


வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்

சால் அவிழ் நெடுங்குழி நிறைய வீசும்

மாஅல் யானை ஆஅய் கானத்துத்

தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்

வேய் அமைக் கண் இடை புரைஇச்


சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.

இனிச் சில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். (வேண்டும் என்றே சில பொருண்மைகளை நீட்டி முழக்கியிருக்கிறேன்.) 

”யாருமறியாது பொதுவிடத்தில் தலைமகளைச் சந்திப்பது மற்றோர்க்குத் தெரிந்து விடுமோ?” என நடுங்குந் தலைமகன், காதலியைப் பார்த்துத் திரும்புகையிற் தன்னெஞ்சோடு பேசும் பாடல் இதுவென்று சொல்லலாம்.. படபடப்பது படராகும். அவள் வரும்போது ஒரு பக்கம் படர் தீர்கிறது இன்னொன்றில் நடுங்குதுயர் தருகிறது. தலைவியின் சேரநாட்டு ஊர் ஏதென்று பாட்டில் தெரியவில்லை. ஒரு வேளை வயநாட்டிற்கு அருகில் அது இருக்கலாம். பொதுவாகச் சேர நாட்டிற் சிலவிடங்களிற் குன்றிலிருந்து கடற்கரைக்குச் சட்டென இறங்கும் பாதைகளுண்டு. உரிப்பொருள்களை வைத்தே இப்பாடலைக் குறிஞ்சித் திணையிற் சேர்க்கிறோம்.  

களவொழுக்கத்தில் தலைவனும் தலைவியும் ஆரத்தழுவி மெய்ம்மறந்து இருக்கிறார். (சந்திப்பிற் கலவி நடந்ததா? இல்லையா? - என்பது தெரியாது.) தலைவன் தன் கைகளையும், மார்பையும் இணைத்துத் தலைவியைத் தழுவும் போது, ஊடுவந்த தலைவியின் வணர்சுரி ஐம்பாலும் தோளும் தலைவனுக்குத் காதலை மேலுந் தூண்டியுள்ளன. வணர்சுரி ஐம்பாலை உவமையாலும், உருவகத்தாலும் தலைவியின் தோளை இரு வகையாலும் தலைவன் விதந்து சொல்கிறான். ஐம்பாலையும், தோளையும் இப்படி நூதனமாய் உவமித்தும் உருவகித்தும் நானெங்கும் பார்த்ததில்லை. இது பா விதப்பு இல்லெனில் வேறெது பாவிதப்பு? - என்றுந் தோன்றுகிறது. (கவித்துவம் - poetical sense - என்கிறாரே, அதற்கு நான் பழகும் தமிழ்ச்சொல் பாவிதப்பாகும். விதத்தல் = சிறப்பித்தல். விதத்தலின் பெயர்ச்சொல் விதப்பு. ”கவித்துவம்” என்ற வட சொல் பழகுவதால் பாவும் போய், விதத்தலும் போய், மொத்தத்தில் தமிழ்ச் சொல்லையே தொலைத்தோம். பிற சொற்களைத் தொடர்ந்து தமிழ் வழக்குகளிற் பழகப்பழக, அதுவே இயல்பாகி நம் சொற்கள் நமக்கு மறந்து போகும். இற்றைத்தமிழர் தமிழ்தொலைத்து தமிங்கிலராவது இப்படித்தான். ) 

குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் = குன்றின் பக்கம்  நெருங்கி அமைந்த சிற்றூரின் கண்ணே 

நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து செலீஇய பெயர்வோள் = நெஞ்சு நடுங்கும் அருந்துன்பம் தீர வந்துசென்று பெயர்பவள் 

வணர்சுரி ஐம்பால் = வளைந்த சுரிகளாற் பின்னிய ஐம்பாற்சடை. பாட்டின் 2 குவிப்புள்ளிகளில் இதுவுமொன்று. சடைக்கு (plaited hair) மாறாய்க் குழலென்றே உருளைப் பொருளில் அன்று சொல்வார். பூங்குழலி = பூச்செருகிய சடைக்காரி. ஐம்பாலாய் (பால்=பகுதி=புரி) முடிபிரித்துத் திருகி (torque) முடைவது போல் பின்னுவது சுரித்தலாகும். மடிதலையும் சுரிதலென்பர். சேலைக்கட்டில் இடுப்பிற் செருக 4,5 மடிப்புகள் வைப்பாரே, அதுவும் சுரித்தல் தான். கலிப்பா, பரிபாட்டிலும் சுரிதகம் வரும். வணர்சுரி என்பது வளைத்துச் சுரிந்தது. மீள மீளச் சுரித்துப் பின்னிய முடி 10,15 சுரிகள் (cycles) கொண்டு, அலையாகும் (wavy).  தமிழக / கேரளப் பெண்களின் முடி அலைத் தோற்றங் காட்டுவது சுரித்தற் பழக்கத்தாலென்க. (மின்னியற் - electrical engineering - கட்டுரைகளிற் சுரியைச் சுற்றென்பார். சுரி என்ற சொல் இன்னும் பொருந்துமோ?- என எண்ணுகிறேன்.) வணர்சுரி என்பது இங்கே வினைத்தொகை. ஒவ்வொரு சுரியும் ஏறியிறங்கிப் பின்னேறி... கணிதத்தில் sine wave என்பாரே, அதுபோல் தோற்றும் (sine-ஐயே சாய் எனுந் தமிழ்மூலங் கொண்டு வெங்காலூர்க் குணா விளக்குவார். தெளிவான அச்சிந்தனையை ஒரு முக்கோணவியற் (trigonometry) கட்டுரையில் விரித்துப் பேச வேண்டும். இங்கு விளக்கத் தொடங்கின் பெரிதும் விலகித் தெரியும் என்பதால் தவிர்க்கிறேன்.)

இக்கால மகளிரின் தலைமுடிப் பட்டவம் (fashion) சடைமுடியாத மயிரோடோ, அன்றி இழுவை வளையத்தாற் (rubber band) குஞ்சமாய்ப் பிணைத்தோ அமைகிறது. மேற்கத்தியத் தாக்கங்கூடிய இற்றை மகளிர்க்கு, இப்போது, பின்னுவதில் விருப்பமும், நேரமுமில்லை. 20 ஆண்டுகள் முன், முப்பாற்சடை பின்னிக்கொள்வது இயல்பானது. ஆனால் ஐம்பாற்சடையோ ஒப்பனையகம் மூலமாகவன்றி அரிது. ஓவியர் மணியம் 1950 களில் வரைந்து காட்டிய குந்தவை, நந்தினிக் கொண்டைகளை முடிந்தவர் ஒருவரோ, இருவரோ இன்றிருந்தால் வியப்பு. ஐம்பாற்சடைக்குப் பரணர் ஓர் உவமையும், இன்னோர் உருவகமுஞ் சொல்வார். பாவில்வருந் தலைவன் நெய்தல்நிலத்தை நெருங்கிப் பழகியவனாதல் வேண்டும். அதற்குமுன், சோழநாட்டைப் பற்றிய சுற்றி வளைத்த வரலாற்றுப்பாடந் தேவை. 

அன்புடன்,

இராம.கி.


Friday, December 03, 2021

வணர்சுரி ஐம்பாலும், தோளும் - 1

ctamil மடற்குழுவில் ”உயிர்”பற்றிய பெருந்தருக்கம் ஒன்று மிகுந்த சூட்டோடு சில திங்கள்களுக்கு முன் எழுந்தது. அக்குழுவை அமைதியடையவைத்து ஆற்றுப்படுத்த அகம் 152 இன் உரையாட்டைப் பின்னால் சிலர் தொடங்கினர். பாட்டின் வரிகளுக்குப் பொருள்காண்பதிலும் பலரிடையே வேறுபாடு ஏற்பட்டது. பாட்டின் உருப்படியான விளக்கத்தை நானெங்குங் கண்டதும் இல்லை. அந்த மடற்குழுவில் வந்த பின்னூட்டுகளைப் பார்த்தால், 1935-1950 களில் வந்த விளக்கங்களையே கிளிப்பிள்ளை போல் பலரும் ஒப்பிப்பது புரிந்தது. கண்ணெதிரே நடந்த இத் தடுமாற்றங் கண்டு, ”புதுப்பார்வையில் ஏன் விளக்கக் கூடாது?” என்ற உந்தலில் ஆங்கிலத்தில் அங்கெழுதாது, தமிழில் இங்கெழுதுகிறேன். 

மரபு விளக்கங்களை உடும்பெனப் பிடித்தவர் இம் மாற்றுக் கருத்தை ஏற்பது அரிது. தவிர, விளக்கம் தமிழிலா, ஆங்கிலத்திலா என்பது நம் உகப்பு அல்லவா? தமிழறிந்த மேலைப் படிப்பாளிகள் இங்கு வந்து படிப்பதால், இருவரின் இடை நடக்கும் ஊடாட்டம் 2 திசையிலும் நடக்கலாமே? உருப்படியான தமிழாய்வுகள் சிச்சிறிதாய் ஆங்கிலந் தாவுவதும், உணர்ச்சிக் குமுறல்களும், சாரமற்ற ஒப்பீடுகளும் மட்டுமே தமிழில் தேங்குவதும் கண்டு இப்போதெல்லாம் நான் கவல்கிறேன். ஒரு பக்கம் புதுக் குடியேற்ற (neo-colonial) மனப்பான்மை தொடராது விருந்தினர் நம் மொழியைப் படிக்க நாமெல்லாம் விழைகையில், இன்னொரு பக்கம், நம்மூர் ஆய்வுத் தாள்களும் ஆழமாய் நிலையுற வேண்டும். 

வெவ்வேறு சங்கப்பா உரைகளைக் கேள்வியின்றிப் பயிலரங்குகளிற் தமிழ் ஆசிரியர் பரப்புவதும், அவற்றை மேலைத் தமிழறிஞர் மாற்றமின்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதும், நம்மவர் அப்பெயர்ப்புகளைப் பிடித்துத் தொங்கி, “இன்னாரே சொல்லிவிட்டார்; இனி முறையீடுண்டோ?” என வாய் பிளப்பதும், செம்மொழி விருதுகளை/ பீடங்களை அள்ளிவாரிக் கொடுப்பதுமே தமிழ்வளர்ச்சி என நினைத்துக் கொள்கிறோம். உடனே, விருதளிப்பதையே இராம.கி கிடுக்குகிறானென (criticize) எண்ணிவிடாதீர். அப்படியில்லை. விருந்தோம்பலும், விருந்தினர் புலமையை மதிப்பதும் நல்லதே. ஆனால் என் கேள்வி வேறு. ஒவ்வொரு ”துபாசி”க்கும் பின் இருந்த/இருக்கும் தமிழாசிரியரை நாம் நினைக்கிறோமா? அவருக்கு விருது கொடுத்தோமா? 

வீரமாமுனிக்குத் தமிழ் சொன்னவரை, கால்டுவெலுக்குத் தமிழ் சொல்லியவரை, போப்பிற்குத் தமிழ் கற்பித்தவரை, எல்லிசுக்குத் தமிழ் ஓதியவரை, சீகன்பாலுக்குத் தமிழ் படிப்பித்தவரை, இப்படி விரலிட்டு எண்ணத் தகுந்தவரை வரலாற்றில் மதித்தோமா? எத்தனை பேர் பெயர் தெரியாது போய் இருப்பர்? சரி, அவர் வேண்டாம். பெயர் தெரிந்த தி.வே.கோபாலய்யருக்கு தொல்காப்பிய விருது தந்தோமா? அவர் வேலை பார்த்த EFEO - French school of Asian studies அவருக்கு விருது கொடுக்குமாறு பிரெஞ்சு அரசிடம் என்றாவது பரிந்துரைத்ததா? (நடிகர் திலகம் சிவாசி கணேசனுக்குப் பிரஞ்சு அரசு செவாலியர் விருது கொடுத்தது. அது போன்று இலக்கியத்திற் தமிழர்க்குக் கொடுத்ததாய் அறிந்தேனில்லை.) இந்த எதிர்பார்ப்புகள் கனவுகளாக, சோகமாகவே நின்று தவிக்கின்றன. தமிழ் வளர்ச்சி ஒரு சண்டிக் குதிரை யென்பது சரி. முன்னாற் போனால் முட்டும். பின்னால் வந்தால் உதைக்கும். 

சரி, அகம் 152 ற்கு வாருங்கள்..  [நீளத் தொடருக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே ”உண்ணாநோன்பும் வடக்கிருத்தலும்” தொடரை இன்னும் முடிக்காது இருக்கிறேன். சிந்தனை அலைவதால் கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறேன். ”யோவ், எந்தத்தொடரை இதுவரை ஒழுங்கா முடிச்சீரு? ஆரவாரமாத் தொடங்கி அம்போன்னு விடுறது ஒன் பொழைப்பாச்சே?” – என்ற சாடலும் எனக்குக் கேட்கிறது.] சங்கப்பாக்கள் என்பவை பாணர்/புலவரின் நூலறிவால் மட்டுமின்றி, அற்றைப் பட்டறிவைக் கொண்டும் எழுந்தன. 

ஒரு பக்கம் வேடுவச் சேகர (hunter-gatherer) வாழ்வும், இன்னொரு பக்கம் தொடக்கக் கிழாரிய (feudalism) வாழ்வும் அடங்கிய சங்க காலக் குமுகாயம் மூவேந்தராட்சியின் பின் (”நில்லு, நில்லு. அதென்ன மூவேந்தர்? கதை விடுறியே? அவர் வெறும் இனக்குழுத் தலைவர்” என Burton Stein-ஐப் பின்பற்றி மதிப்பிடுவாரும் உண்டு; பேரா. கைலாசபதி, சிவத்தம்பி போன்ற இடதுசாரிப் பெருந்தலைகள், இம் மேலைக் கூற்றுக்களைப் போற்றியதும் உண்டு), களப்பிரர், பல்லவர், பேரரசுப் பாண்டியர், பேரரசுச் சோழர், மீட்சிப்பாண்டியர், வடக்கிருந்து வந்த படையெடுப்புகள், விசயநகரப் பேரரசர், நவாபுக்கள், கிழக்கிந்தியக் குழுமங்கள் என அடுத்தடுத்து மாறியது; குமுகாயக் கட்டமைப்பும் வேடுவச் சேகரம், அடிமைக் குமுகாயம், கிழாரியம், முதலாளியம் என்று புரண்டது. சமவுடைமை (socialism), பொதுவுடைமைக் (communism) கருத்துக்களுங் கடந்த நூறாண்டுகளில்; விரவிப் பல்வேறு மீட்டுருவாக்கங்கள் நடந்தன. 

சங்கத ஆதிக்கம் உறைந்த (இதைச் சொல்வதற்கே சிலரெனைத் திட்டுவார்) காலங்களில் (கி.பி.1200-1700), சங்க இலக்கியப் பட்டறிவிலா உரையாசிரியர்  ”இலக்கியம், இலக்கணம், நடைப் பனுவல்” என்று சங்கமூலம் பார்த்துத் தம்கால வரலாற்று வரைவையும் கருத்தாடல்களையும் தம்மையறியாது தம்முரையிற் கலக்கவே செய்தார். அக்கலப்பு, சங்க மூலங்களில் இருந்து நம்மை விலக்கியது. மஞ்சளாடி போட்டுப் பார்த்தால் உலகம் மஞ்சளாகத் தெரியும். சங்கதவழி, தமிழ் மூலங்களை புரிந்துகொண்ட உரைகளைக் கையாண்டால், ”சங்கதம் மேடு, தமிழ் பள்ளம்” என்ற முடிவிலிருந்து வெளி வரவே முடியாது. We will be conditioned by that thinking ad infinitum. (இன்றேல் நச்சினார்க்கினியாரின் திரண துமாக்கினிக் கதைகள் நம்மூரில் நிலைக்குமா?) பெரும்பாலான மேலை இந்தியவியலாளருக்கு இந் நிலைப் பாடே இக்கட்டாகும். சங்கதந் துறந்து இந்தியாவைப் பார்க்க அவரில் யாரும் அணியமாய் இல்லை. அந்த அளவிற்குக் கண்கட்டு இங்கே நடந்துள்ளது.

இதற்கு மாறாய், பழம் பட்டறிவில்லா நாம், உரைகளை மட்டும் பாராது, ஒத்திசைவு (consistency), கணுக்கம் (connection), படியெடுப்புப் பிழை (copying error) ஆகியவை பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுச் சூழியல் (ecology), புதலியல் (botany), விலங்கியல் (zoology), புவியியல் (geology), பூதியல் (physics), வேதியல் (chemistry), மெய்யியல் (philosophy), மாந்தவியல் (anthropology), குமுகவியல் (sociology) ஆகிய அறிவியற் புலனங்களால் “உப்பிட்டு உரசிப்” புதுப்பார்வை கொண்டாற் பழமைக்கும் புதுமைக்கும் இடையாட்டமாய் மூல விவரிப்பின் பண்பாட்டு நடைமுறைகளைப் (cultural practices) புரிந்து கொள்ளலாம். அகம் 152 உம் கூடப் பல்வேறு புலன அறிவுகள் தேவைப் படும் ஒருவகைப் பாட்டுத் தான். வேரிற் பழுத்த பலாச் சுளையைப் பறித்துப் பகுந்து சுவைத்தோருக்கு அதன் அருமை புரியும். 

பாட்டின் திணை குறிஞ்சி. இரவுக் குறிப்பால் வந்த தலைமகன் தலைவியிடங் களவோடு ஒழுகித் திரும்பும் வழியில் தன் நெஞ்சிற்குத் சொல்வதாய் அதன் துறையமையும். பாடலைப் பாடியவர் பரணர். அக்காலச் சுவடிகளில் ரகரத்திற்கும் ஆகாரக் காலுக்கும் இடையே வேறுபாடு தெரியாது. பாணரைப் பரணரென்றும் படிக்கலாம். பின் எப்படிப் பரணரென எல்லா உரையாசிரியரும் அழுந்தச் சொல்கிறார்? - புரியவில்லை. பாணரென்பது இயற் பெயராயும் தோற்ற வில்லை. இவர் ஒருவரா, பலரா? - தெரியாது. உரை யாசிரியர் பலரும் ஒருவரென்று கொள்கிறார். வன்பரணரென இன்னொருவரையும் சொல்வர். அகமும், புறமும் பாடிய சங்கப்புலவரில் 235 பாக்கள் பாடிய கபிலருக்குப் பின் பரணரே அதிகமாய் 85 பாக்கள் பாடி யுள்ளார், இவருக்கடுத்து 79 பாக்கள் பாடிய மருதன் இளநாகனார் வருவார். 

பரணர்/பாணர் என்பார் நம்மூர் வழக்கில் வெறுங் குப்பன், சுப்பன் போலல்லர். அரசியற் புலங்களிற் புகுந்து அதகளம் ஆடிய பெரும்புலவர். (கபில, பரணரைப் புரிந்துகொள்ளாது சங்ககால அரசியல் புரியாது.) பெரும்பாலும் சேரரையும், அவரோடு மணவுறவுற்ற உறையூர்ச் சோழரையும், இவ்விரு குலஞ்சார்ந்த குறு நில மன்னரையும் (ஓரோவழி புகார்ச் சோழரையும்) பற்றிப் பாட்டெழுதினார். குறுநில மன்னரைப் பெரிதுஞ் சார்ந்து, மூவேந்தரோடு சம உறவு வைத்த பாண்டி நாட்டுக் கபிலர் போல் இவரில்லை. பல்வேறு காரணங்களால் இவர் காலம் பொ.உ.மு.135-85 எனக் கொள்கிறேன். (ஏனென்று சொல்ல நீண்ட விளக்கம் தேவை, அவற்றை இங்கு விவரிக்கவில்லை.) சிலம்பின் காலம் பொ.உ..மு.75 என்று என் கட்டுரைத்தொடர்/ பொத்தகத்தில் நிறுவியதை ஒட்டியே பரணர் காலம் பற்றிய முடிவிற்கு வந்தேன். என்னாய்வு நிறைகையில், இக்கால இடைவெளிகள் சற்று முன்பின் ஆகலாம். இக்கட்டுரை படிப்போர் ”சிலம்பின் காலம்” என்ற என்னூலையும் படியுங்கள். 

சிலம்பின் காலத்தைக் கி.பி. 2 - 9 ஆம் நூற்றாண்டாய்க் கொள்ளின், தமிழக வரலாறும், அதன் களன்களும், பாக்களின் விதப்புக்களும் புரியாது. Wrong historical setting leads to faulty contextualization of the subject and more inconsistencies with archeological facts. இனியுஞ் இலங்கைக் கயவாகுவைப் பிடித்துத் தொங்கி 250 ஆண்டுகள் கீழிழுத்துச் சிலம்பின் காலத்தைப் பொருத்துவதிற் பொருளில்லை. சமகாலத்துப் புலவரும் வேந்தரும், மன்னரும், தலைவரும் யாரார்? 2000 ஆண்டுகளுக்கு முன் எவ்வகையில் நாம் வடபுலத் தொடர்பு கொண்டோம்? எத்தனை கரிகாலன்கள், நெடுஞ்செழியன்கள், சேரலாதன்கள் இருந்தார்? சேர, சோழ, பாண்டியரின் இயற்பெயர், குடிப்பெயர், பொதுப்பெயர், பட்டப்பெயர் ஆகியவற்றை ஒழுங்காய் விளங்கிக் கொண்டோமா? ”புலிமான்கோம்பை, பொருந்தல், கொடுமணத்திற்கு” அப்புறம் தொல்லியலால் வெளிப்பட்ட பண்பாட்டெச்சங்களைச் சங்க இலக்கியக் குறிப்புகளோடு பொருத்திப் பார்த்தோமா? - ஆகிய கேள்விகளுக்கு விடைதேடிச் சங்க காலத்தை மீள ஆய்வது கட்டாயந் தேவை.   

என் சிந்தனைப்படி, மகத தேசத்துச் சேணியப் பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனவர், சாதவாகன்னர் வரை இணையாய்ப் பார்க்க வேண்டியதே சங்க காலமாகும். மூவேந்தரின் தொடக்கம் எப்பொழுதென்று சொல்லமுடியவில்லை. ஆனால், அவர் உச்சம் வந்தபொழுது, அவருக்குப் பகைப்புறமாகிய மகதந் தவிர்த்துச் சங்ககால வரலாற்றைப் பார்ப்பது சரியான புரிதலைத் தராது. மூவேந்தர் ஆட்சியை முழுதும் முற்றியவர், சாதவா கன்னரின் தக்கண அரசு சிதைந்தபின் அவர் தலைநகர் படித்தானத்தில் (Paithan near Aurangabad) உருவான கள அப்ரரே (kal Abra) ஆகும். ஆனால் கள அப்ரர் காலத்தை ”இருண்டகால” எனச்சொல்லி சரிவர நாம் புரிந்துகொள்ளவில்லை. (சங்ககால ஆராய்ச்சிக்கு இக்கட்டுரை களனில்லை. ஆயினும் காலக்குறிப்பை நான் தவிர்க்கமுடியாது.)

[”நந்தருக்கும் துளுநாட்டு நன்னருக்கும் உறவுண்டோ?” என வெங்காலூர்க் குணா ஐயப்படுவார். கி.மு.600 தொடங்கி 700/800 ஆண்டுகள் மகததேசம் ஆண்டவரில் தமிழரோடு இணங்கியவர் நந்தர் மட்டுமே. ’சூத்திரரான’ நந்தரையும் நன்னரையும் பொருத்தி எழுதினால் அதுவே இங்கு தனிக்கட்டுரை யாகிவிடும். பல்லவருக்கும் ஈரானியப் பஃலவருக்கும் இடையே விதந்து சொல்லி உறவு நோக்கும் வடபுல விழையர், நன்னர்- நந்தர் உறவு சொன்னால் மட்டும் ஏற்கத் தயங்குவார். என்ன இருந்தாலும் வெள்ளையென்பது மேன்மை, கருப்பு தாழ்ச்சியல்லவா?:-))) ஒரு முறை வாசிங்க்டன் போசுட்டில் வெளிவந்த ஒரு புள்ளிவிவரக் கட்டுரையை நண்பர் வேந்தனரசு மடற்குழுவிற்கு அனுப்பி வைத்தார். ”இந்தியரைப் போல் இனவேறுபாடு பார்ப்போர் உலகிலேயே வேறெங்கும் இல்லையாம்.”], 

அன்புடன்,

இராம.கி.