Sunday, November 22, 2015

வஞ்சின மாலை

சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சகட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவை அல்ல.) நுழைந்த கண்ணகி; ”தன் கணவன் குற்றமற்றவன்; அரசனின் நெறிமுறை பிழைத்தது; தன் சிலம்பினுள்ளிருப்பது மாணிக்கமே” என நெடுஞ்செழியனுக்குணர்த்தி வழக்காடுகிறாள் தவறுணர்ந்த அரசன், “யானோ அரசன் யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்” என மயங்கிவீழ்கிறான். இணையடிதொழும் கோப்பெருந்தேவியும் உடன் வீழ்கிறாள். கண்ணகியின் கொடுவினையாட்டம் மேலுந்தொடர்கிறது.  
 
[இங்கோர் இடைவிலகல். அடியார்க்குநல்லாருரை ஊர்சூழ்வரி வரையேயுண்டு. அதற்கப்புறம் அரும்பதவுரை மட்டுமேயுண்டு. 2 உரைகாரரும் செயினரென்றே சொல்வர். சிலம்புச்சுவடியில் பெரும்பாலான காதைகளில் யாப்பெதுவென வெளிப்பட இருக்கும். வஞ்சினமாலையில் அப்படியில்லை. ஆய்வின் மூலமே ஒற்றையடிகள் நாற்சீரும், இரட்டையடிகள் முச்சீர் தனிச்சீரும், கடையடி இருசீர், ஓரசைச்சீருமுள்ள நேரிசைக்கலிவெண்பாவை அறிகிறோம். 19 இடங்களில் அடிகள் சிதைந்திருப்பதும், சிலவிடங்களில் யாப்புத்தட்டுவதும் புலப்படும். பிழைகளோடு இளங்கோ யாத்திருக்க முடியாது. ஓலைக்கட்டின் ஆயுள் 150/200 ஆண்டுகல் எனில், உவே.சா.விற்குக் கிடைத்தது 10-14 ஆவது எடுவிப்பு (edition) ஆகலாம். இச்சிதைவுகள் அரும்பதவுரை எடுவிப்பிலே தென்படுவதால், பெரும்பாலும் 4/5 ஆவது படியெடுப்பில் ஓலைகள் செல்லரித்துப்போயிருக்கலாம். மிஞ்சியவற்றைத் தொகுத்து, தொடரறுந்த இடங்களிற் சொற்களைப்பெய்து, புது ஓலைப்படி உருவாகியிருக்கலாம். வஞ்சினமாலையில் இடைச்செருகலுக்கு பெரிதும் வாய்ப்புண்டு..] 
 
அக்காலத்தில் 5-7 அகவை நிறைந்தவளைப் பேதையென்பர்; 8-11 பெதும்பை; 12-13 மங்கை; 14-19 மடந்தை; 20-25 அரிவை; 26-31 தெரிவை; 32-40 பேரிளம்பெண் பொதுவாகப் 12-13 வயதில் தமிழ்ப்பெண்கள் சமைந்துவிடுவர். சங்ககாலத்திற் குழந்தைமணம் இல்லெனினும், மங்கைப்பருவத்தில் திருமணச்சிந்தை தொடங்கியிருக்கிறது. (இன்று அரிவைப்பருவம் வரை காக்கிறோம்.) கண்ணகிக்கு 12 வயதில் திருமணம். கோவலனுக்கு 16.. மனையறம்படுத்த காதை திருமணத்திற்கப்புறம் யாண்டுசில கழிந்ததைச் சொல்லும். உன்னிப்பார்த்தால், 3,4 ஆண்டுகளே இருவரும் சேர்ந்துவாழ்ந்தனர். அடுத்து ஏறத்தாழ ஓராண்டு மட்டே கோவலன் மாதவியோடு வாழ்ந்தான். அதற்குள் மணிமேகலை பிறந்து விடுவாள். கானல்வரி பாடுகையில் கோவலனுக்கு 21, கண்ணகிக்கு 17, மாதவிக்கு 13. தவிர, மடந்தையென்ற சொல் மதுரைக்காண்டத்தில் கண்ணகிக்கு ஆளப்படும். புகாரிலிருந்து மதுரைத்தொலைவு தெரியா அளவிற்கு 17 வயதுச் செல்வமகள் உலகநடை தெரியாதிருந்தாள். 
 
வஞ்சினமாலை தொடக்கத்தில், கோப்பெருந்தேவி மயங்கிக்கிடப்பதாயெண்ணிச் சினமடங்காது, தன்னூரைச்சேர்ந்த, 7 கற்புடைமங்கையர் பற்றிக் கண்ணகி பேசுகிறாள். காலவோட்டத்தில் கற்புச்சிந்தனை நம்மூரில் மாறி, ஆண்பெண் உடலுறவோடு தொடர்புறுத்தியே கற்பு பேசப் படுகிறது. சங்ககாலத்தில், நாட்பட்ட மரபாய், பெரியோர்-பெற்றோர்-கணவனால் ”வாழ்நெறி இது”வென்று கற்பிக்கப்பட்ட கற்பு இருபாலர்க்கும் பொதுவாகும். எது முறையெனத் தனக்குச் சொல்லப்பட்டதினின்றும் மதுரைநடப்பு மாறுபட்டதால் தான் வஞ்சிக்கப்பட்டதாய் கண்ணகி உணருகிறாள்.
 
  கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
  (------------------------------)
  யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
  (------------------------------)
கொடுவினையாட்டிக்கு பல உரையாசிரியரும் முன்வினையென்று செயினப்பொருள்சொல்வது வலிந்ததாகும். கண்ணெதிரே நடப்பது கொடுவினைதானே? கணவன் தவறாகக் குற்றஞ் சாட்டப்பட்டு இறந்தான். தவற்றையுணர்ந்து, பாண்டியனிறந்தான்; அரசியும் வீழ்ந்தாள். இனி மக்களும் அழியப்போகிறார். மனை, கோட்டை, நகரம் எல்லாமே எரியப்போகின்றன. நடந்த கேட்டிற்கு இவ்வளவு தண்டனையா? இது அதிகமில்லையா? அரசன் தவற்றிற்கு மக்களேன் பலியாகவேண்டும்? ஊரென்ன தீவினை செய்தது? இத்தனை நடவடிக்கைகளும் கொடுவினைகள் அல்லவா? இதையாற்றுபவள் கொடுவினையாட்டியின்றி வேறென்ன?. பாட்டின் இவ்விடத்தில் 2-ஆவது, 4-ஆவது அடிகள் செல்லரித்ததால் இன்றுகிட்டவில்லை  யாவுந்தெரியா இயல்பு; கண்ணகியைக் குறிக்கிறது.
   
  முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
  பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண் .......
 
முற்பகலிற் பிறனுக்குக் கேடிழைத்தால் பிற்பகலிற் தனக்கே கேடுசேரும் பெருமையைப் பார்த்தாயா? - என்று கண்ணகி கேட்கிறாள். ”விதியும் தற்செயலும் நிகழ்த்தும் ஊடாட்டம் பற்றிச் சொல்லும்” அற்றுவிகம் (ஆசீவகம்)  ”நல்வினை, தீவினை பற்றிப் பேசும்” செயினம்,. சிவம், விண்ணவம் போன்ற நெறிகளுக்கும் இப்புரிதல் பொதுவானதே. இதை யடுத்து 7 மங்கையர் பற்றிய குறிப்பு வருகிறது. முதலில் வருவது கண்ணகி போன்ற வணிககுலப் பெண்பற்றியதாகும்.. ஒருவேளை அவள் கண்ணகிக்கு உறவினளோ, என்னவோ? - என்ற ஊகம் எனக்கெழுகிறது.
 
1....................- நற்பகலே
  வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக
  முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள் .....
 
இதே கருத்து பட்டினத்துப் பிள்ளையார் புராணத்திலுண்டு. இது புகாரிற்பிறந்து மதுரையில் வாழ்க்கைப்பட்ட பெண்பற்றிய குறிப்பாகும் .அக்காலத்தில் வடகாவிரி (= கொள்ளிடம்) புகாரை ஒட்டிக் கடலையடையும். இன்றோ அதுவிலகிப் புகாரின்வடக்கே பிச்சாவரக்கழியிற் கடலடைகிறது. நிலவியற் பேராசிரியர் சோம.இராமசாமி காவிரியின் தொடரும் தடமாற்றம் பற்றி எழுதியிருக்கிறார். அவர் நூலையும், கட்டுரைகளையும் படிப்பது நல்லது. புகாரிலிருந்து வடகாவிரியொட்டி மயிலாடுதுறை, குடந்தை, திருவையாறு வழியே உறையூருக்கு அக்காலத்தில் வந்துசேரலாம். புறம்பயம் என்றவூர் குடந்தை சுவாமிமலையை ஒட்டியது. இது புறம்பயமா, பறம்புயமா என்பதிலுங் குழப்பமுண்டு.
 
புறம்பயமென்பார் பயம் = நீர் என வடமொழிப்பொருளால் ”வெளிநின்ற பிரளயமெ”ன சமயவிளக்கந்தருவார். பறம்புயம் = வன்னியூர் என்பது இயற்கையறிவியற் கூற்று. பரம்பு> பறம்பு வன்னிமரத்தைக் (prosopis cinearia) குறிக்கும். பாரியின் பரம்பு>பறம்பு மலை வன்னிமரங்கள் நிறைந்தது. பரமக்குடியென இன்றழைக்கப்படும் பரம்பக்குடியும், ஈழவன்னியும் கூட வன்னிமரத் தொடர்புகளைக் காட்டும். திருமுதுகுன்றம், திருவான்மியூர் போன்ற சிவத்தலங்களில் தலமரம் வன்னியே. வறட்சிநிலங்களில் வளரும் மரம் இதுவாகும். இதன் வேர் ஆழமாய்ப் பாயும். இராசசுத்தானிலும் வன்னி போற்றப்படும். வடக்கில் வன்னி மரத்திற்கும் குமுகாயங்களுக்கும் சேர்த்துப் பல கதைகளுமுண்டு. நாட்டார்வழக்கைப் பார்த்தால், இயற்கையறிவியலே உகந்ததாய்த் தெரிகிறது.
 
மடைப்பள்ளியென்பது சமையலறை. மடுத்தல் = உணவு கொள்ளுதல், விழுங்குதல். மடக், மடக் என்று போட்டுக்கொண்டானென்று சொல்கிறோமல்லவா? மடை = உணவு.
 
இக்கதை சோணாட்டுத் தொன்மமாகும். எப்பொழுதெழுந்தது? தெரியாது. சிலம்பிற்கப்புறமும் இக்கதை புழங்கியிருக்கலாம். குறிப்பிட்ட மாற்றங்களோடு 12 ஆம் நூற்றாண்டு பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் புராணத்திலும், 18 ஆம் நூற்றாண்டு பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்திலும் இக்கதை வருகிறது. (ஆனால் பெரியபுராணத்தில் இல்லை.) புராணங்களிற் புகார் ஏதோ ஒரு பட்டினமாகும். அகவைகூடிய புகார்வணிகன் “நெடுநாள் உயிர்வாழோம்” என்றெண்ணி மதுரையில் வணிகஞ் செய்யும் மருகனுக்கு மகளைக் கொடுக்க விழைந்து செய்திவிடுப்பான். மருமகனுக்கோ மாமனறியாது வேறொரு மணம் மதுரையில் நடந்திருக்கும். மருமகன் புகார் சேர்வதற்குள் மாமன் இறந்து விடுவான். ஈமக்கடன் முடித்த உறவினர் பெண்ணிற்குப் புகலிடமில்லையென்று தகப்பன் செல்வத்தை மருமகனே எடுத்துப் பெண்ணைக் கூட்டி மதுரைக்குப் போய் வாழ்வைத் தொடரச் சொல்வர்.
 
மருமகனும் மதுரைக்குப் போகும் வழி திருப்புறம்பயம் கோயிற்சத்திரத்தில் பெண்ணோடு தங்குவான். அன்றிரவு அரவு தீண்டி மதுரை வணிகன் இறப்பான். புகார்ப்பெண் குய்யோ, முறையோ என அலறிப் புறம்பயம் சிவனிடம் நடந்தது கூறி முறையிடுவாள். செவிசாய்த்த இறைவன் பெண்ணிற்கு முன்னெழுந்தருளி, வணிகனை உயிர்ப்பித்து இருவருக்கும் மணம் பண்ணுவித்து மதுரைக்குப் போகச் செய்வார். மதுரையில் உற்றாரும் மற்றோரும் நடந்தது கேட்டு வியந்து வணிகனை இரு மனைவியரோடும் சேர்ந்து இல்லறம் நடத்தச் சொல்வார். உரிய காலத்தில் இரு மனைவியருக்கும் பிள்ளை பிறக்கும். இளையாள் திருமணம் பிடிக்காத மூத்தாள் ”எப்பொழுது அவளை வெட்டிவிடலாம்?” என்று தருணம் பார்த்துக் கரித்துக் கொண்டே யிருப்பாள்.
 
மூத்தாள் பிள்ளைகளோடு இளையாள் பிள்ளை விளையாடுகையில் அதைத்தடுப்பாள். ஞாயம் கேட்டால், ”கணவனுக்கு இளையாள் வாழ்க்கைப்படவே இல்லை. அவள் கூட வந்த கணிகை” என்று சொல்லித் தூற்றுவாள். மணம் கொதித்த இளையாள், புறம்பியத்தில் வணிகனோடு தனக்கு மணம் நடந்தது உண்மை. அங்கிருந்த வன்னிமரம், மடைப் பள்ளி, இலிங்கமான சிவன் ஆகியவை சான்றுகள்” என்பாள். ”அவற்றை மதுரைக்குக் கொணர்ந்து காட்டெ”ன மூத்தவள் சூளுரைக்க, இளையாள் தன் கற்பை நிலைநாட்ட சொக்கன் திருமுன் மன்றாடுவாள். ”நாளை இக்கோயில் மூலையில் சான்றுகள் வந்து சேரும்” என வானொலி எழும்பும். மறுநாள் காலை ஈசான மூலையில் வன்னி மரமும், மடைப்பள்ளியும், இலிங்கமும் நிற்பதைப்பார்த்து ஊரே வியந்து போகும்.
 
இக்கதையை 2 மாற்றங்களோடு நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருவிளையாடற் புராணங்கள் பயிலும். (இப்புராணங்கள் அமைப்பிலும் கதை விவரிப்பிலும் முரண்படும். இராமாயணத்தில் எத்தனையோ வேற்றங்கள் - versions - உண்டல்லவா? அவை போல இவற்றைக் கொள்ளலாம்.) திருவிளையாடற் புராணங்களில் மடைப்பள்ளி கிணறாகவும், மணம் நடத்தி வைத்தது சம்பந்தரென்றும் ஏரணத்தால் முரணாகும். 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் மணம் நடத்தியிருந்தால் அவரையே புகார்ப் பெண் சான்றாக்கி இருக்கலாமே? சொல்லவில்லையே? சம்பந்தர் ஞானப்பால் குடித்தது 3 வயதிலெனில், அவர் வரலாற்றைப் பார்க்கையில், புறம்பியம் போனது 7/8 வயதெனலாம். அவ்வயதில் மங்கைக்கு அவர் மணம் நடத்திவைத்து இருப்பாராவென்பது ஐயமே. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததெனில், சம்பந்தர் வாழ்வு நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் தொகுக்கும் சேக்கிழார் ஏனதைச் சொல்லவில்லை? சிலவாண்டு கழித்து 13/14 வயதில் சம்பந்தர் மதுரை வருகிறாரே? வணிகப் பிள்ளை விளையாட்டில் வழக்கு வந்தது பெரும்பாலும் இதே பருவந் தானே? மேலே சிலம்பு வரிகளில் இலிங்கச் சான்று சொல்லவில்லையே?
 
தவிர, சம்பந்தர் வாழ்க்கையில் அரவு தீண்டிய வணிகனை உயிர்ப்பித்தது நாகையிலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் திருமருகலில் நடந்ததாகும். மருகலுக்கருகே வைப்பூரில் தாமன் எனும் வணிகனுக்கு 7 பெண்கள் இருந்தார் மூத்த பெண்ணை மருமகனுக்கு மணமுடிக்க உறுதியளித்த தாமன் அதைச் செய்யாது முறை தவறி வேறொருவருக்குக் கட்டிக் கொடுப்பான். இப்படி அடுத்தடுத்து 5 பெண்களையும் தட்டிக் கழித்து மருமகனிடம் சொல் பிறழ்வான். குடும்பத்தாரும், ஊராரும் இச்செயலுக்கு வருந்துவர். ”முறை மாப்பிள்ளையைத் தான் கட்டிக்கொள்வதே நடந்ததவற்றிற்கு ஈடென்று” கடைசிப் பெண் முடிவு செய்து, மாப்பிள்ளையோடு உடன்போக்காகி, திருமருகல் கோயிலுக்கருகில் வந்து தங்குவாள். மாமன் மகன் அரவு தீண்டி இறந்துபோவான். அங்கு வந்த ஞானசம்பந்தரிடம் பெண் அழுது புலம்பியதால், அவளுக்காக அவரிறைஞ்சி தேவாரம் இரண்டாம் திருமுறை, 154 ஆம் பதிகத்தைப் பாடுவார்.
 
“சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவளுள் மெலிவே”. .            
 
என்று தொடங்கி அப்பதிகம் நடந்ததைத் தெரிவிக்கும். இறைவனருளால் நஞ்சு நீங்கி வணிகன் உயிர் பெறுவான். சம்பந்தரின் முன்முனைப்பில் திருமணம் திருமருகலிலே நடைபெறும். இந்நிகழ்ச்சியின் போது சம்பந்தருக்கு 12 வயதிருக்கும். பெரியபுராணமும் இச்செய்தியைப் பதியும். (ஆனால் திருவிளையாடற்புராணங்கள் பதியா.) பெரும்பாலும் புறம்பயம், மருகலென்ற இருவூர் நிகழ்ச்சிகளைக் குழம்பிப் புரிந்து கொண்டு திருவிளையாடற் புராணங்கள் சொல்கின்றன என்றே எண்ணவேண்டி இருக்கிறது. சம்பந்தர் வாழ்வில் இருமுறை இந்நிகழ்ச்சி நடைபெறவாய்ப்பில்லை. நடந்தால், சேக்கிழார் பதிந்திருப்பார். சம்பந்தரின் திருப்புறம்பயம் பாட்டிலே கூட இது வெளிப்பட்டிருக்கும். அப்படிப் பதிவாகவில்லை. அடுத்தது மங்கைப்பருவத்தில் ஆற்றுமணலிற் பாவைசெய்து விளையாடிய மங்கை பற்றியது.
 
2.........................- பொன்னிக்
  கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
  உரைசெய்த மாதரொடும் போகாள் - திரைவந்து
  அழியாது சூழ்போக ஆங்குந்தி நின்ற
  (---------------------------------)
  (---------------------------------) 
  வரியார் அகலல்குல் மாதர் ...........
 
பொன்னியாற்றின் கரையில் மணற்பாவை செய்து விளையாடுகையில், ”நீ செய்த பாவையே உன் கணவன் ஆவானெ”னத் தோழியர் விளையாட்டாய்ச் சொல்ல, அதை மெய்யெனக் கற்பித்துக் கொண்ட பெண் ஒருத்தி மாலையிற் பெண்களோடு வீடு திரும்பாமல், ஆற்றின் ஓதத்தில் திரையெழுந்து பாவையழியாது காத்து நின்றாளாம். ”ஏதோ மாயத்தால் பாவைக்கு உயிர்வரும்” என்ற கற்பனை அவளுக்கிருந்தது போலும். கற்பு, கற்பிதம், கற்பனை போன்ற சொற்களின் தொடர்பும், பொருள் வேற்றுமையும் இங்குபுரிகிறதா? ஏதோவொன்றை மனம் கற்பித்துக் கொண்டால் அதையே பிடித்துத் தொங்குவது மங்கையின் பிடிவாதமோ? இவ்வரிகளின் ஊடே பாட்டில் அழிந்து போன ஈரடிகளில் என்ன புதுச்செய்தி இருந்ததோ, தெரியாது. ஓலைச்சிதைவு பல செய்திகளைக் குழப்பி விட்டிருக்கிறது.
 
இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும். அல்குல் என்பதை இக்காலத்திற் பலரும் தவிர்ப்பதோடு அன்றித் தப்பாகவும் புரிந்து கொள்கிறோம். பல அகரமுதலிகளிலும் தப்பான பொருள் கொடுத்திருக்கிறார். உடற்கூறியல் தெரிந்தவர் தவறாய்ச் சொல்ல மாட்டார். சங்க காலத்தில் இதைப் பயில யாரும் தயங்காது, இயல்பாகவே கையாளுவார். மாந்தவுடம்பில் ஒக்கல் (hip) என்றும், இடுப்பு (waist) என்றும் இருவேறு இடங்களுண்டு. இடுப்பிற்கும் வயிற்றுக்கும் கீழே முக்கோணம்போல் ஆனது அல்குலாகும். இதிலிருந்து தான் 2 தொடைகளும் வெளிவந்து நீள்கின்றன. அல்குற் சினை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. இதன் முன்பகுதியும், புட்டமெனும் பின்பகுதியும் மேடானவையே. அடுத்தது ஆற்றை ஒட்டிப் படருங் கதை. அக்காலத்திற் பலருக்குந் தெரிந்த அரச வீட்டுக்கதை. பல அகத்துறைப் பாட்டுக்கள் இதை விளக்கும்.
  .
3...........................-.உரைசான்ற
  மன்னன் கரிகால் வளவன்கள் வஞ்சிக்கோன்
  தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் - பின்சென்று
  கல்நவில் தோளாயோ என்னக் கடல்வந்து
  (---------------------------)-
  முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு - தளைதட்டு
  பொன்னங் கோடிபோலப் போதந்தாள்
 
கரிகால் வளவன் (இவன் முதலாங் கரிகாலனா, இரண்டாமவனா தெரியாது.) மகளான ஆதிமந்தி, சேரன் ஆட்டனத்தியை விரும்பி மணஞ் செய்து, விழா நாளில் கரிகால் வளவன் முன்னே, ஆற்றப் புனலில் விளையாடிய போது, வெள்ளம் வருகிறது. அத்தி நீச்சலறிந்தவனா, இல்லையா? தெரியாது. ஆற்றிலடித்துச் செல்லும் ஆட்டனத்தியை விடாது அழைத்த படி சங்குமுகம் வரைக்கும் ஆதிமந்தி அலைவாள். நெடும்பொழுது கழித்து, ”இனி உயிர் பிழையான்” என நம்பிக்கை தளர்ந்து எல்லாரும் முடிவு செய்கையில், ஆதிமந்தியின் நெஞ்சுறுதி ஆட்டனத்தியை முன்னிறுத்திக் காட்டும். மருதியெனும் இன்னொரு பெண்ணுதவியும் இதனூடே சேரும். கற்புள்ள பெண்ணின் அசையாவுறுதிக்கு ஆதிமந்தியைக் காட்டாக்குவது காலகாலமாய்த் தமிழர் பழக்கம்.இங்கே “முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு” எனும் அடியில் தளைதட்டுகிறது. இதற்குமுன் ஓரடி இருந்திருக்குமோவென ஐயுறுகிறோம்.
 
அடுத்தது ஆற்றின் சங்குமுகமொட்டிய வேறொரு கதை. இன்றைக்கும் மீனவரிடையே குறிப்பாகக் காவிரிக் கடற்கரை தொடங்கி தென்பாண்டி போய், பின் சேரநாட்டிலும் விரிவாகக் கொள்ளப்படும் தொன்மம் பற்றியதாகும். கண்ணகியின் கணவன் ஏற்றுமதி இறக்குமதித் தொழில் புரிந்தவன். உள்நாட்டு வணிகத்திற் பழக்கமில்லாதவன். பரதருக்கும் (விலை பரையும் விற்பனையாளர் பரதர்- merchants.) பரதவருக்கும் (கடலில் பரந்து வலை வீசுகிறவர் பரதவர் - fishermen who spread nets) மிகுந்த நெருக்கமுண்டு.  .
 
4.......................... - மன்னி
  மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
  கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் -
 
கடலில் மீன்பிடிக்கப் போன கலங்கள் திரும்பிவரும் வரை கலத்திற் போனவரின் பெண்மக்கள் கல்லெனச் சமைந்து போவார் என்பர். இந்தத் தொன்மமும் நாட்பட்ட ஒன்றாகும். மலையாளத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய பேர் பெற்ற புதினமும் இராமு காரியட்டின் திரைப்படமுமான ”செம்மீனின்” அடிக்கருத்தே இது தான். அதில் ”பெண்ணாளே பெண்ணாளே கரிமீன் கண்ணாளே கண்ணாளே” என்று தொடங்கும் பாட்டில், 2 ஆம் தாழிசையில் இப்படி வரும்
 
பண்டொரு முக்குவன் முத்தினு போயி
படிஞாறன் காற்றத்து முங்கிப் போயி
அரையத்தி பெண்ணு தபசிருந்நு.
அவனைக் கடலம்மா கொண்டுவந்நு
அரையன் தோணியில் போயாலே,
அவனுக் காவலு நீயானே,
 
இந்தத் தவமிருத்தல் தான் கல்லாய்ச் சமைந்திருத்தலாகும். சிலப்பதிகாரத் தொன்மம் இன்றுவரை வழக்கிலுள்ளது வியப்பல்லவா? 3 ஆம் தாழிசை இதன் எதிர்நிலையைச் சொல்லும்.
 
பண்டொரு முக்குவன் முத்தினு போயி
படிஞாறன் காற்றத்து முங்கிப் போயி
அரையத்தி பெண்ணு பிழச்சிப் போயி.
அவனைக் கடலம்மா கொண்டு போயி
கணவன் தோணியில் போயாலே,
கரையில் காவலு நீவேணும்,
 
அடுத்த கதை மதுரையில் நடந்தது போல் புகாரில் நடந்த சக்கிழத்திகள் கதையாகும்.

5......................   இணையாய
  மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
  வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள்
 
புகார் வணிகன் ஒருவனுக்கு இரு மனைவிகள். (ஒருவனுக்கு இருவர் என்பது கண்ணகியைப் பெரிதும் பாதித்திருக்கலாம்.) இருவருக்கும் ஓரிரு வயது வேறுபாட்டிற் குழவிகளுண்டு. வீட்டுக் கிணற்றுச்சுவரில் உட்கார்ந்த மாற்றாள் குழந்தை தவறிவிழுந்துவிட அதைக்கண்ட ஒரு கிழத்தி “வேண்டுமென்றே திட்டமிட்டுத் தள்ளிவிட்டதாய் மாற்றாளும், பங்காளி, உறவினரும், ஊராரும் சொல்வரோ?” என்று பயந்து தன்பிள்ளையையும் கிணற்றுள் வீழ்த்தித் தானும் பாய்ந்து பிள்ளைகளைக் காப்பாற்றியது இங்கு சொல்லப் படுகிறது. தன் பிள்ளையை அவள் ஏன் வீழ்த்தினாள்? - என்பது வாதத்திற்குரியது. ஆனால் கற்பு நெறியில் அவள் தவற வில்லை. மாற்றாள் பிள்ளையைத் தன்பிள்ளை போலவே பார்த்துக் கொண்டதாய் ஊர் மெச்சும். கணவனுங் கொள்வான் அன்றோ?. வீழ்த்தேற்று என்னும் அடியில் எதுகைச் சிக்கலுள்ளது. பாட்டின் இவ்வடியிலும் செல்லரிப்பு நடந்திருக்கலாம். அடுத்த கதை நம்மில் ஒரு பகுதியினரிடம் இன்றைக்கும் பழக்கத்திலுள்ள கருத்துத் தான்.

6...................... - வேற்றொருவன்
  நீள்நோக்கங் கண்டு நிறைமதி வான்முகத்தைத்
  தானோர் குரக்குமுகம் ஆகென்று - போன
  கொழுநன் வரவே குரக்குமுகம் நீத்த
  பழுமணி யல்குற்பூம் பாவை ............
 
வருமானந்தேடிக் கொழுநன் வெளிதேசம் போக, கணவனல்லான் நீள்நோக்கில் தன்னைப் பார்த்தது கண்டு துணுக்குற்று, தன்னைப் பேணும்படி தன்முகத்தை குரக்கு முகமாக்கித் திருத்தி யெழுதி மூடி, கொழுநன் வந்தபின் குரக்கு முகம் நீத்த பெண் பற்றிய கதை இதுவாகும். இற்றை முசுலீம் பெண்கள் ”முகத்திரை” போடும் சூழ்க்குமம் இக்கதையின் இன்னொரு வெளிப்பாடாகும். இது சரியா, தவறா என்பதை விட, இச்சிந்தனை அரபு தேசத்தில் மட்டுமின்றி, 2000 ஆண்டுகள் முன் நம்மூரிலும் இருந்தது என்பதே சரியாக இருக்கும். இதுவும் கற்பின் வெளிப்பாடு தான். கடைசிக் கதை இரு தோழியரிடையே நடந்ததைச் சொல்வது.

7.............................- விழுமிய.
  பெண்ணறிவு என்பது பேதைமைத்தே யென்றுரைத்த
  நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே - எண்ணிலேன்
  வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்,
  ஒண்டொடி நீயோர் மகன்பெறிற் - கொண்ட
  கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
  கெழுமி அவளுரைப்பக் கேட்ட - விழுமத்தால்
  சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்
  தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் - முந்தையோர்
  கோடிக் கலிங்க முடுத்துக் குழல்கட்டி
  நீடித் தலையை வணங்கித் - (---------
  --------------------------) தலைசுமந்த
  ஆடகப் பூம்பாவை அவள்போல்வார் ..........
 
பொதுவாக 5-7 வயதில் தொடங்கும் பேதைமை விட்ட குறை, மிச்ச குறை போல மங்கைப் பருவம் வரைகூடத் தொடரலாம். இக்கதை அதைப் பற்றியாகும். மேலோர் கருத்தை நோக்காது வண்டல்மண் விளையாட்டில் பங்கெடுக்கும் தோழியர் இருவர், “எனக்கு மகள் பிறந்து உனக்கு மகன் பிறந்தால், கொள்வினை கொடுப்பினை செய்துகொள்வோம்” என விளையாட்டாய்ச் சொல்ல, மகனைப் பெற்றவள் அதை உண்மையென நம்பி, தன்பிள்ளை பெரியவனாகையில் தோழியிடம் பெண்கேட்க, பெண்ணின் பெற்றோர் அது பற்றித் தங்களுக்குள் கவலையோடு உரையாடிக் கொள்ள, பேச்சைக் கேட்ட இளம்பெண் தாய்சொல்லைக் காப்பாற்றுவாளாய் கோடியுடுத்திக் குழல் முடித்துத் தலைவணங்கி தாயின் தோழிமகனையே தன் கணவனாய்க் கொண்டு தலை சுமக்கும் உறுதி பூணுகிறாள். பேதைமையானாலும், சொன்ன சொல் காப்பாற்றப் படுகிறது.
 
இப்படி 7 பேர் கற்பின் வெவ்வேறு பரிமானங்களை வெளிப்படுத்துவர். ஒன்றிற்கூட உடலுறவு பற்றிய பார்வை கிடையாது பாருங்கள். கற்பென்பது தமிழர் புரிதலின் படி ஒரு வகையில் நல்லொழுக்கம் மட்டுமே. 7 மாதர் கருத்து தமிழர் வாழ்வில் ஐயனார் கோயில் வழிபாட்டில் இன்றுமுண்டு. ஐயனார் கோயில் அற்றுவிகஞ் சார்ந்தது என்பார் பேரா. க.நெடுஞ்செழியன். அவர் கூற்று பெரிதும் ஆய வேண்டிய ஒன்று. அதில் பலவுண்மைகள் பொருந்தியுள்ளன. (7 மாதரை பிராமி, மகேசுவரி, கௌமாரி, விண்ணவி, வராகி, மாகேந்திரி, மாகாளி என்று கொண்டு புராணக்கதை சொல்வது வேறுவகை முயற்சி.)
 
  ....................... - நீடிய
  மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
  (--------------------------)
 
இத்தகைய மங்கையர் பிறந்த பதியில் நானும் பிறந்தேன். இவர்களில் எவருக்கும் நான் குறைந்தவளில்லை என்று கண்ணகி பெருமிதங் கொள்கிறாள். இங்கும் பாட்டில் ஓரடி குறைகிறது. இந்த 7 பேர் செய்தி பட்டினத்துப் பிள்ளையார் புராணத்தின் பூம்புகார்ச் சருக்கத்திலும் வருகிறது.
 
கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான்
திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள்
வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள்
புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே
 
வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள்
பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையைநுன் கேள்வனெனும்
கன்னியர்க ளொடும்போகாள் திரைகரையா வகைகாத்தாள்
பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே
 
கூவலிற்போய் மாறறாள் குழவிவிழத் தன்குழவி
ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று
மேவினாள் குரக்குமுகம் வீடுடையாள் வரவிடுத்தாள்
பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே
 
முற்றாத முலையிருவர் முத்துவண்டல் அயர்விடத்துப்
பெற்றற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம்
சொற்றார்கள் பிறந்தபெண் நாயகனைத் தலைசுமந்தாள்
பொற்றாலி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே
 
பெருமிதங்கொண்ட கண்ணகி அடுத்துச் சூளுரைக்கத் தொடங்குகிறாள்.

  பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
  (---------------------)- 
  ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
  பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா .........

அப்பதியில் பட்ட யானும் ஓர் பத்தினியென்றால் “இனி ஒருப்படமாட்டேன்; மதுரையை ஒழிப்பேன். என் பட்டிமையை நீ காண்பாய்” என்று கோப்பெருந்தேவி நோக்கிச் சூளுரைக்கிறாள். அரசி இறந்ததை கண்ணகி முதலில் உணரவில்லை. பின் உணர்ந்திருக்க வேண்டும். சூளுரைப்பின் பின்னால், அரண்மனையை விட்டுத் தெருவுக்கு வந்திருக்க வேண்டுமென ஊகிக்கிறோம். வெளியே மக்கள் கூட்டம் குமிந்திருக்க வேண்டும். .
 ......................................................................- விட்டகலா
  நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
  (----------------------------------------------------------)
  வானக் கடவுளரு மாதவருங் கேட்டீமின்
  (----------------------------------------------------------------)

கூடிய கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறாள். திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்மாடக் கூடல். தேவாரத்தில் வரும் சில நள்ளாற்றுப் பதிகங்கள் மதுரைப் பகுதியைக் குறிக்கின்றன. காரைக்காலுக்கு அருகிலுள்ள நள்ளாற்றையல்ல. நடுவூர் = downtown. வானக்கடவுளர் = தேவர். அற்றுவிகம், செயினம், புத்தம் போன்ற வேதமறுப்பு நெறியினருக்கும் தேவ கணம் ஏற்புடையது தான். இங்கும் பாட்டில் ஈரடிகள் தொலைந்து போயிருக்கின்றன.. 
 
  யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
  கோநகர் சீறினேன் குற்றமிலேன் - யானென்(று)
  இடமுலை கையால் திருகி மதுரை
  (-------------------------------------------------)
  வலமுறை மும்முறை வாரா - வலமந்து
  (-------------------------------------------------------) 
  மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
  விட்டாள் எறிந்தாள் விளங்கிளையாள் - ...............

பேச்சு மக்களுக்கு அறிவிப்பதாய்த்தொடர்கிறது. “என்காதலனுக்குத் தவறிழைத்த கோநகர் மேல் சீறினேன். ஆனாலும் குற்றமிலேன்.” என்று சொல்கிறாள். தன் இடமுலையை வலக்கையால் திருகியெடுத்து அதைக் கையிலேந்தி 3 முறை மதுரைக்கோட்டையை வலம்வந்து மட்டார் மறுகில் (இது என்ன மறுகென்று தெரியவில்லை.) அரத்தம் சிந்தும் மணி முலையை சுழற்றி விட்டெறிகிறாள். நேரம் மாலை ஏழு, ஏழரையாகலாம். வேனிற் காலத்தில் சற்று நேரங் கழித்தே முற்று முழுதாக இருள் சேரும். (இங்கேயும் பாட்டில் ஈரடிகளைக் காணோம். எனவே நம் விளக்கம் குறைப் படுகிறது. ஒரு பெண்ணால் வலக்கை கொண்டு இடமுலையைத் திருகியெடுக்க முடியுமா? - என்பது உடலியலின்படி பெருங்கேள்வி. எப்படி இது நடந்ததென யாருக்கும் விளங்கவில்லை. நமக்குக் கிடைத்த அடிகள் சரியான பொரூள் தருவதில்லை. ஏதோவொரு கற்பனையில் நாம் சொல்கிறோம்.) அடுத்து வரும் பாட்டில் 6 அடிகள் செல்லரித்துள்ளன. காட்சி நாடகத் தனமாய் இருந்தாலும் எதெல்லாம் இடைச்செருகல் என்று சொல்ல முடியாதுள்ளோம். பொருள் சொல்கையில் குத்து மதிப்பாகவே சொல்லவேண்டி இருக்கிறது.    
 
  ......................................................................- வட்டித்த
  நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
  (---------------------------------------------------)- 
  பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் - கோலத்து
  (----------------------------------------------------)
  மாலை பெரியங்கி வானவன் தாந்தோன்றி
  (-----------------------------------------------------)- 
  மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
  (-----------------------------------------------------)- 
  பாயெரி யிந்தப் பதியூட்டப் பண்டேயோர்
  (-------------------------------------------------------) 
  ஏவ லுடையேனா கியார்பிழைப்பா ரீங்கென்னப்
  (-----------------------------------------------------)-

வானத்தில் நீலநிறம் கூடிப்போனது. ஆயினும் செக்கர் வானக்கீற்றுகள் அங்கங்கே இடைகாட்டுகின்றன. அந்நேரத்தில் வெள்ளைப் பல்கொண்ட பால்நிறத்து பார்ப்பனன் போல் (பார்ப்பனன் = வெள்ளை நிறத்தவன்.) அக்கினியான் தோன்றி, “பத்தினியே! பிழை நடக்கும் நாளொன்று வரும். அப்போது இந்நகரை எரியூட்ட வேண்டும் என முன்னே எனக்கோர் கட்டளையுண்டு. இதில் யார் பிழைக்கவேண்டும் எனச் சொல்” என்கிறான். இனிக் கடைக்காட்சி. இங்கும் பாட்டில் ஓரடியைக் காணோம். எதெது இடைச்செருகல் எனச் சொல்ல முடியவில்லை. பார்ப்பாரையும், பசுவையும் விட்டுவிடு என்பது சங்ககாலத்தில் நடந்திருக்குமா? தெரியவில்லை..
 
  பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
  (------------------------------------------------------------)-
  மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
  தீத்திறத்தோர் பக்கமே சேர்கென்று - காய்த்திய
  பொற்றொடி யேவப் புகையழல் மண்டிற்றே
  நற்றேரான் கூடல் நகர்.

பசு என்பது காப்பற்றவேண்டிய விலங்கென சங்க இலக்கியஞ் சொல்லவில்லை. கி.பி. 400 களுக்கப்புறம் புராணங்கள் எழுந்தபோது அச் சிந்தனை வந்தது. ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் பெரும்பாலும் இங்கு இடைச்செருகல் உண்டு. எப்படி இத்த்னை பேரை விட்டு மற்றவரை மட்டும் நெருப்பு சூழமுடியும் என்பதும் பகுத்தறிவிற்குப் புறம்பாகவே தெரிகிறது. நன்றாகத் தேராதவனின் கூடல்நகரில் எரிசூழ்ந்து புகைமண்டிற்று.

அன்புடன்,
இராம.கி.