Friday, October 15, 2021

கேசரி

தமிழில் இச்சொல் ஆண்சிங்கத்தைக் குறிக்கும். வரலாற்றில் இது பல்லவரையும் குறித்தது. விசயாலய சோழன் தஞ்சையில் அரசாட்சி அமைத்தபோது அவனுடைய முக்கியமான வெற்றி பல்லவரை அழித்ததே. பல்லவருக்கு அடையாளம் சிங்கம் (அது சிகையின் காரணத்தால் எழுந்த பெயர்). சிங்கத்தின் இன்னொரு பெயர் கேசரம்  கேசரத்தை (பல்லவரை) அழித்ததால் இடைக்காலச்சோழர் இராசகேசரி, பரகேசரி என்று இரு பட்டங்களை மாறி மாறித் தமக்கு வைத்துக்கொண்டார். (கேசரி = சிங்கத்தை அழித்தவன்.).  அதே பொருளில் இடைக்காலப் பாண்டியரும் பல்லவரைத் தம் படையால்  தோற்கடித்ததால் அரிகேசரி, அரிமர்த்தனன் என்று பட்டப் பெயர் சூட்டிக்கொண்டார்.

பரகேசரி என்பது கேசரிக்கு (=பல்லவனுக்கு) மேம்பட்டவன், மேலானவன் என்று பொருள் கொள்ளும். பரம் என்பது உயர்ச்சிப் பொருள் காட்டும் பரங்குன்று = மேலான குன்று. பரன் = மேலானவன், இறைவன். இராசகேசரி = கேசரிக்கும்  (பல்லவனுக்கும்) அரசனாகியவன். இதே போல் பல்லவனைத் தோற்கடித்த பாண்டியனான நின்றசீர் நெடுமாறன், அரி கேசரி என்ற பட்டத்தைச் சூடிக்கொள்வான். கேசரியை (பல்லவனை) அரிந்தவன் (வீழ்த்தியவன்)  என்று அதற்குப் பொருள். எங்கெல்லாம் வரலாற்றுச் செய்திகளில் கேசரி என்பது வருகிறதோ, அங்கெலாம் பெரும்பாலும் அது பல்லவனைக் குறிக்கும் குழூஉக்குறிப் பெயராகலாம். பரகேசரி, இராசகேசரி என்பது அடுத்தடுத்த பேரரசுச் சோழர் கொண்ட பட்டப்பெயர். இராசராசன் இராசகேசரி. அவன் மகன் இராசேந்திரன் பரகேசரி.  

இதே போன்ற ஒரு பழக்கம் பாண்டியரிடமும் இருந்தது தந்தை செழியன் ஆனால், மகன் மாறனவான். இடைக்காலப் பாண்டியனான சேந்தன் செழியனின் மகன் பராங்குச மாறவர்மன் கி.பி.640 இல் பட்டம் ஏறியபோது அரிகேசரி என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான். அரிகேசரி பராங்குசன் தான் பின்னால் கூன் பாண்டியன், நின்றசீர் நெடுமாறன் என்றெலாம் அறியப் பட்டான். இங்கும் அரிகேசரி என்பது பல்லவரை வென்றவன் என்றே பொருள் படும். கடுங்கோன் வழிவந்த சேந்தன் செழியனுக்கு அப்புறம் சங்கதம் நம்மூரில் பெரிதுங் கூடிப்போனது. பல்லவரின் பழக்கத்தைச் சோழரும் பாண்டியரும் கூடப் பின்பற்றத் தொடங்கினார். தமிழின் பெருமை சிறிது சிறிதாய்க் குலையத் தொடங்கியது. செழியன்>செடியவர்மன்>சடையவர்மன் என்று ஆனான். மாறன் மாறவர்மனான். தமிழ்மரபு தொலைத்துச் சங்கத மரபை நம் அரசர் பின்பற்றத் தொடங்கினார்.  

அரிமர்த்தனன் என்ற சொல்லும் அரிகேசரி போன்ற பொருளைக் கொள்ளும். 12 ஆம் நூற்றாண்டில் வந்த திருவாலவாய்ப் புராணம் மாணிக்கவாசகர் கதை சொல்லும் போது  ”தானைவேல் வாகைமாறன்” என்று தான் மாணிக்கவாசகர் காலத்துப் பாண்டியனின் பழம்பெயரைச் சொல்லும்.  திருவாலவாய்ப் புராணத்தின் வழி புரிந்துகொண்டால் இந்த அரசன் களப்பிரருக்குச் சற்று முந்தியவனாவான். முற்காலப் பாண்டியரின்  கடைநிலைகளின் வரும் அரசன். இவன் காலத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட 18 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் புராணம் இந்த அரசன் பெயரை அரிமர்த்தன பாண்டியன் என்று தவறாகச் சொல்லும். 

திருவாலாவாய்ப் புராணம் படியாது  திருவிளையாடற் புராணத்தைப் பிடித்துக் கொண்டு தடுமாறிய பல ஆய்வாளர் இதனாலேயே மாணிக்கவாசகர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்று சொல்லி இரண்டாம் வரகுணன் (கி.பி. 862-885) காலத்திற்குக் கொண்டு வருவார். (திருவிளையாடற் புராணம் என்ற நூல் தமிழக வரலாற்றில் இழைத்த குளறுபடிகள் ஏராளம், ஏராளம்.) அதெல்லாம் இந்த ”அரிமர்த்தனன்” என்ற பெயரால் ஏற்பட்ட குழப்பம். ”அரிமர்த்தனன்” என்பதற்குப் ”பல்லவரை மரிக்கச் செய்தவன்” என்று பொருள்படும்.

இராசராசனின் பாட்டனான அரிஞ்செய சோழன் என்பவன் முதலாம் பராந்தக சோழனின் (கி.பி.907-950) இரண்டாம் மகன், முதலாம் பராந்தகனின் முதல் மகன் கண்டராதித்தனின் (949/950-956) மகன் சிறுவனாய் இருந்தமையால், கண்டராதித்தனுக்குப் பின் அவன் தம்பியாகிய அரிஞ்செயனே பட்டத்திற்கு (கி.பி. 956-957) வருவான். இவனும் ஓராண்டில் இராட்டிடகூடரோடு ஏற்பட்ட போர் காரணமாய் இறந்துபோவான். இவனுக்குப் பின் இவன் மகன் சுந்தர சோழன்,  இரண்டாம் பராந்தகன் எனும் பெயரைக் கொண்டு பட்டமேறுவான். இவன் தான் பேரரசன் இராசராசனின் தந்தை. இப்பொழுது அரிஞ்செயனுக்கு வருவோம். ”அரியைச் செயித்தவன்” அரிஞ்செயன்.  பேச்சுவழக்கில் இது அரிஞ்சயனாயிற்று..  

பல்லவரை அழித்தது இடைக்காலப் பாண்டியருக்கும் சோழருக்கும் முகன்மையான செய்தி என அப்பெயரை இயற்பெயராகவும் பட்டப் பெயர்களாயுங் கொண்டார்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

ந.குணபாலன் said...

பரம், பரமன், பரம்பொருள்
பரன், பரை, பரம்பரை என்ற சொற்களெல்லாம் மேன்மையானவையாக இருக்க,
பரதேசம், பரதேசியார் என்பவை நடுநிலையாய் இருக்க,
பரதேசி என்ற சொல் மட்டும் வசைச் சொல்லானது வியப்பாக இருக்கின்றது.

இராம.கி said...

அதில் 2,3 பொருள்கள் உள்ளன. பரதேசம் என்பது புறதேசத்தின் பேச்சுத் திரிவு. அது புறதேசியார்>பரதேசியார். புற என்பதற்கு வெளி என்பது இங்கு வரும் பொருள். புறதேசியில் வரும் புறவிற்கு இன்னொரு பொருளும் உண்டு. தமக்கென தேசமே (இருப்பிடமே) இல்லாது அலைந்து கொண்டிருப்பவர் என்றும் பொருளுண்டு. பல்வேறு பொருள்கள் இப்படி இருப்பதால் தான், நம் மொழிக்கு வேறோர் அழகும் அமைகிறது. இப்படி அமைவது பல மொழிகளில் உள்ளது தான்.

ந.குணபாலன் said...

🙏🏾நன்றி ஐயா!