Sunday, October 22, 2023

Variation of Etymological approach In Tamilic vis-a-vis Indo-european

இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலில் உள்ள அடிப்படைச் சிக்கலைக் காண்போம். இங்கு ஆங்கிலச் சொல் ஒன்றை வைத்து இச்சிக்கலைச் சொல்கிறேன். மற்ற மொழிச் சொற்களை வைத்தும் சொல்லலாம். ஒன்று என்பதை உணர்த்தும் one என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்ப்போம். ஒன்று என்பது பருப்பொருளைக் குறிக்கும் சொல்  அல்ல. அது எண்ணிக்கையை உணர்த்தும் கருத்துமுதல் சொல். நல்லது கெட்டது போன்ற சொற்களும் பருப்பொருள் சொற்கள் அல்ல. அவையும் கருத்துமுதல் சொற்களே. 

பலமுறை நான் எடுத்துரைக்கும் ஓர் அடிப்படைக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி அவர்கள் வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" என்னும் அருமையான பொத்தகம். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.] 

”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி அவர் நூலிற் சொல்லுவார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.) 

நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்து எடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிடடிருக்கிறான்; பின்னால், மற்ற வித்துக்களில் இருந்தும் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய் என்பது, எண்ணெய் எனும் பொதுமைச்சொல்லாய்த் திரிந்து, எள் அல்லாதவற்றில் இருந்து கிடைத்த எண்ணெய்களையும் குறித்திருக்கிறது. 

இங்கு ”ஒன்று” என்ற எண்ணிக்கைச் சொல்லும் கருத்துமுதல் சொல் தான். முதலில் வேடுவச் சேகர நிலையில் இது ஒரு பருப்பொருளை உணர்த்தியிருக்க வேண்டும். பின்னால்,  நாளாவட்டத்தில் எல்லாப் பருப்பொருள்களுக்கும் ஒரு பெயரடையாய் அமையக் கூடிய எண்ணுமையாக அது மாறும்.  பாவாணர் வழிப்பட்ட சொல்லாய்வு என்பது இப்படித் தான் நகரும். பருப்பொருள், கருத்துப்பொருள், எழுத்துத் திரிவுகள், மற்ற மொழிச்சொற்கள் இதனோடு எப்படி ஒன்றுகின்றனவோ அப்படியே நகர்ந்து சொற்பிறப்பியல் அமையும்.. ஆனால் இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலோ, பருப்பொருள் தொடக்கத்தைக் கண்டு கொள்ளாது. கீழே  வருவது etymonline என்ற ஆங்கில வலைத்தளத்தில் வரும் கூற்றைப் பாருஙகள்.

one (adj., pron., n.)

"being but a single unit or individual; being a single person, thing, etc. of the class mentioned;" as a pronoun, "a single person or thing, an individual, somebody;" as a noun, "the first or lowest of the cardinal numerals; single in kind, the same; the first whole number, consisting of a single unit; unity; the symbol representing one or unity;" c. 1200, from Old English an (adjective, pronoun, noun) "one," from Proto-Germanic *ainaz (source also of Old Norse einn, Danish een, Old Frisian an, Dutch een, German ein, Gothic ains), from PIE root *oi-no- "one, unique.

மேலே உள்ளதில்  ஒன்றிற்கு இணையான வெவ்வேறு இந்தையிரொப்பிய மொழிகளில் இருக்கும்  சொற்களைக் கூறி, கிரேக்கம்,இலத்தீன்,சங்கதம் என்ற மொழிகளில் உள்ள ஏதோ ஒன்றை அடிப்படைச் சொல்லாய்க் கொண்டு அதிலிருந்து எழுததுக்களை jugglery செய்து, மாற்றிப் போட்டு, நிறைய மொழிச் சொற்களை ஒரு வரிசை முறையில் வரும்படி திரிவு விதிகளைக் கொண்டுவந்து இதுதான் தாது  என்று சொல்லிவிடுவார். (தாதிற்கும் வேரிற்கும் கூட வேறுபாடு உண்டு. ஆனால் மேலையர் அதைக் கண்டுகொள்ள மாட்டார்.) ”ஒன்று” தொடர்பான ஒவ்வொரு மொழிச் சொல்லிற்கும் எண்ணிக்கைப் பொருளுக்கு முன்னால் வேறொரு பொருள் இருந்திருக்க வேண்டுமே என்று கேட்டால் அதற்கு ம் விடை அங்கிருந்து வராது. திரிவு விதிகளின் வழியே one என்பதற்கு முயன்று PIE root *oi-no- "one என்று சொல்லிவிடுவார்.  

என் முதல் கேள்வி: oi-on- என்பது ஒன்றைக் குறிக்கும் என்றால், ”அது கருத்துமுதல் சொல்லாயிற்றே, அதன் அடியிலுளள பருப்பொருள் யாது? அதற்கான.சொல் என்ன? அந்தப் பருப்பொருளின் மூலம் எண்ணிக்கை எனும் கருத்துமுதல் பொருள் எப்படிக் கிளைத்தது? ஒன்று என்ற எண்ணிக்கைப் பொருள் எந்தக் காலததில் எழுந்திருக்க முடியும்?  ஒன்றைக் குறிக்கும் இந்தையிரோப்பியச் சொற்களில் எல்லாம் இந்தப் பருப்பொருள் உள்ளதா? எவ்வெவற்றில் பருப்பொருள் இல்லாது கருத்துப் பொருள் மட்டுமே உள்ளது? இப்படிப் பல கேள்விகள் சொற்பிறப்பியலில் எழும். இந்தக் கேள்விகளை இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலில் யாரும் கேட்டதாய் நான் கண்டதே இல்லை. 

தமிழில் என் பார்வையை https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html என்ற இடுகையிற் காணலாம்.  

Wednesday, October 11, 2023

Gastroesophageal reflux (acid reflux)

 அண்மையில் https://www.msn.com/en-in/health/medical/acidity-treatment-8-symptoms-of-excess-stomach-acid-and-tips-to-cure-it/ar-AA193SKo?ocid=MSNHP_W069&pc=W069&cvid=7ad7c6676b164708aabf259475a635f1&ei=22.என்றதோர் இடுகையைக் கண்டேன். கண்ட இடங்களில் கண்ட கண்ட உணவுகளை முறைதுறை இன்றி நாம் உட்கொள்வதால், செரிமானக் கோளாறுகள் உண்டாகின்றன. இக்கோளாறுகளில் ஒன்றான Gastroesophageal reflux (acid reflux) என்பது ஒரு பெருஞ்சிக்கல். இக் கோளாற்றை ஆங்கிலம் தெரியாதோருக்கும் தெரியப்படுத்த, தமிழில் சரியான கலைச்சொல் வேண்டும். ”இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்” என்றும் ”அமிலப் பின்னோட்ட நோய் (acid reflux)” என்றும் தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பது சரியெனத் தோன்றாததால் வேறு ஒரு சொல்லாக்கத்தை இங்கு விவரிக்க முயல்கிறேன். முதலில் gastro என்ற பெயரடையைப் பார்ப்போம். 

ஏற்கனவே ”வளவு” வலைப்பதிவில் 2022 மார்ச்சு 10 இல் ”வெளிக்கிடல்” எனும் இடுகையில் குட்டக் குடலியலுக்கான (Gastro-enterology) கலைச்சொல்லைக் குறித்திருந்தேன். குழிவுப் பொருள் வழி எழுந்த, குட்ட (gastro-) எனும் பெயரடையின் விளக்கத்தை ஆங்கிலச் சொற்ப்பிறப்பியல் அகரமுதலி  gastro-: also gastero-, before vowels gastr-, scientific word-forming element meaning "stomach," from Greek gastro-, combining form of gaster (genitive gastros) "belly, paunch; womb" (see gastric). Also used in compounds in ancient Greek, as gastrobarys "heavy with child." என்று விளக்கும். 

இவ்விளக்கத்திற்கு ஏற்ப, Gastrointestinal (adj) என்பதைத் தமிழில் “குட்டக் குடலிய” எனலாம். இரைப்பை/இரையகத்தை விட ”குட்டு/குட்டம்” என்பது அறிவியல் கட்டுரைகளுக்குச் சரிவரும். பொருட் குழப்பம் தராது. பேச்சுவழக்கில்  இரைப்பை (= இரை கிடக்கும் பை) எனும் கூட்டுச்சொல்லால் stomach ஐக் குறிக்கலாம். (சிலர் இதை வயிறு என்ற நடைமுறைச் சொல்லால் குறிப்பார். உண்மையில் வயிறு தனிச்சினையல்ல. அது இரைப்பையும் பல சினைகளும் சேர்ந்த  ஒரு கட்டகத்தைக் குறிக்கும். வயிறு, இரைப்பை, இரையகம் என்பவற்றைத் தவிர்த்து, குழிவுப் பொருளில் குட்டத்தைப் பயிலலாம்.அதே பொழுது, கலைச்சொல் விளக்கத்திற்கு இரைப்பை/ இரையகம் என்ற சொற்களைப் பயிலலாம். 

இனித் தொண்டையிலிருந்து, அண்டு (anus) வரை உடலில் அமையும் உணவுக் கணலில் [உள்வது> உண்பது. உள்வு> உணவு; அது போல், கணுவது/ கணுக்குவது கணல்.)  கணல் என்பது உணவுச் செரிமானக் கட்டகங்களின் முழுத் தொகுதியைக் குறிக்கும். கணல் (canal. n.) early 15c., in anatomy, "tubular passage in the body through which fluids or solids pass;" mid-15c., "a pipe for liquid;" from French canal, chanel "water channel, tube, pipe, gutter" (12c.), from Latin canalis "water pipe, groove, channel," noun use of adjective from canna "reed". தொண்டையையும்  அண்டையையும்  பல்வேறு கட்டகங்களால், உணவுக்கணல் கணுக்கிறது.] 

உணவுக் கணலில் முதலிலுள்ள குழலை esophageal என்பார். இதற்கு Oesophageal என்ற எழுத்துக்கூட்டும் ஆங்கிலத்திலுண்டு. late 14c., from Greek oisophagos "gullet, passage for food," literally "what carries and eats," from oisein, future infinitive of pherein "to carry" (from PIE root *bher- (1) "to carry") + -phagos, from phagein "to eat" (from PIE root *bhag- "to share out, apportion; to get a share"). அடிப்படையில் நாம் சாப்பிடும் உணவை இரைப்பை நோக்கி எக்கித் தள்ளும் குழல் இதுவாகும்.Oesophage ஐ ஏகுங்குழல் எனலாம். இன்னுஞ் சுருக்கி ஏங்குழல் என்றும், கூட்டுச் சொற்களில் ஏகுதல் என்ற செலுத்தத்தைச் சொல்லாது,  வெறும் குழல் என்றாலும் தவறில்லை.

இனி reflux என்பதைப் பார்ப்போம். வேதித் திணைக்களங்களில் தென்படும் துள்ளெடுப்புத் தூணத்தில் (distillation tower), மேலெழுந்துவரும் ஆவியை நன்றாய்க் குளிரவைத்து ஒரு பகுதியை மேற்றலைப் புதுக்கு (overhead product) என எடுத்துக் கொண்டு, இன்னொரு பகுதியை மட்டும் எதிர்க்கு அளிக்காய்த் (reflux) திருப்பி அனுப்புவார். அதுபோல் இங்கும் ஆகிறது.  எதிர்க்களி> எதுக்களி = reflux. 

வாய்ந்திக்கு முன்னதான “எதுக்களி” என்பது சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் இருக்கும் பேச்சு வழக்குச் சொல்லாகும். இரைப்பைக்குள் சென்ற உணவையும், அமிலம்/காடி செலுத்தங்களால் உருவான செரிமானச் சாறுகளையும் சேர்த்து எதுக்களிக்க வைத்து வாய்ந்தியாய் ஆக்கும் இக் கோளாற்றைக் 

குட்டக் குழல் எதுக்களி ( gastroesophageal reflux disease) - கு கு எ - GERD எனலாம்.