Friday, November 27, 2009

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

இந்த நாளில் தமிழர் எல்லோரும் நினைவு கொள்ளுவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, November 11, 2009

தமிங்கிலம் - எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?

நண்பர் சிங்கைப் பழனி தமிழுலகம் மடற்குழுவில் ஒரு மடல் அனுப்பியிருந்தார். அவருக்கான மறுமொழி இது. இங்கும் அதைப் பதிந்து வைக்கிறேன்.

----------------------

அன்பிற்குரிய பழனி,

ஆனந்த விகடனில் அண்மையில் (11/11/09) அன்று வெளியான

"ஹாய் வாசகர்களே! 64-65ம் பக்கங்களில் "ஜோக் ஆர்மி" ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் AVJ என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து அந்த ஜோக்கைப் பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்டுடன் வந்து விழும் 10 எஸ்எம்எஸ் களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 8.1.109அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்எம்எஸ்கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போ 64-65ம் பக்கங்களில் ஜோக் ஆர்மிக்கு ணிவகுப்போமா? ஜோக்குகளில் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது! எஸ்எம்எஸ் கட்டணங்களுக்கு உட்பட்டது! கடந்த வார ஜோக் பார்க் போட்டி முடிவுகள் 11ம் பக்கத்தில்! ஆல் நியூ விகடனைப் பற்றிய கருத்துக்களை உங்கள் குரலிலேயே பதிவு செய்ய 044-42890004 எதிர்முனையில் பதில் குரலை எதிர்பாராமல் தாங்கள் கூற விரும்புவதை நீங்களாகவே பதிவு செய்து விடுங்கள்!”

என்று தமிங்கிலம் பழகிய ஓர் உள்ளடக்கம் பற்றித் தட்டச்சி அனுப்பி, “இப்படித் தமிழை கொலை செய்கிறார்களே? செம்மொழி மாநாடெல்லாம் கொண்டாடும் காலத்தில் இப்படியா?” என்று அங்கலாய்த்தோடு இல்லாமல், “ஆட்சியில் இருப்பவர்கள் இதனைப் பற்றிச் சிந்தித்து ஆவன செய்யலாம் அல்லவா?” என்றும் கேட்டிருந்தீர்கள்.

நண்பரே! நோயைக் கண்டுகொள்ளாது, நோய்க் குறிகளையே நொந்து கொண்டிருந்தால் எப்படி? இதன் தொடக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சிமொழி, பயிற்று மொழி, கல்விக் கொள்கை நீர்த்துப் போனதில் இருக்கிறது. கொஞ்சம் அந்தக் காலத்திற்குப் போய்த் தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை வரலாற்றைப் பார்த்தால் தான் விளங்கும்.

1963-64 க்கு முன் நாங்கள் எல்லோரும் தமிழ்நாட்டிற் பள்ளியிற் படிக்கும் போது, 100க்குத் 98/99பேர் தமிழிலேயே படித்தோம். அன்று இருந்த மடிக்குழைப் பள்ளிகளின் (matriculation schools) எண்ணிக்கை 13/14 - க்கும் குறைவே. அதோடு அவை சென்னை நகரில் மட்டுமே இருந்தன. தமிழ்நாடெங்கணும் பரவவில்லை. கூடவே ஓரிரு ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகளும், நாலைந்து நடுவண் வாரியப் (central board) பள்ளிகளும் இருந்தன. மிச்சம் இருந்த பள்ளிகள் எல்லாம் தமிழ்வழியே பாடம் கற்பிக்கும் மாநில வாரியப் (state board) பள்ளிகளாகவே இருந்தன.

அன்றைக்கு இருந்த நிலையில் ”பள்ளிப் படிப்பு தமிழ் வழியா?” என்ற கேள்வியே எழவில்லை; ”கல்லூரிகளில் தமிழ் வழி சொல்லிக் கொடுப்பது எப்படி?” என்றுதான் அரசினரும், ஆர்வலரும், மற்றோரும் முனைந்து கொண்டிருந்தார்கள். கல்லூரிகளுக்கான பாடங்களைத் தமிழ்வழி சொல்லித்தரும் பொத்தகங்களும் விரைவாக எழுதப் பட்டு வந்தன. அன்றையப் பேராயக் கட்சி அரசு இந்தக் கொள்கையில் உறுதியாகப் பாடுபட்டு வந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதை ஏற்றே இருந்தது.

இந்தக் கொள்கைக்கு உலைவந்தது இன்றைக்குப் பெருத்துக் கிடக்கும் திராவிடக் கட்சிகளால் தான். ஒருபக்கம் “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று வெற்று முழக்கம் செய்துகொண்டே இன்னொரு பக்கம் தமிழுக்கு உலை வைப்பதற்கு இவர்களே காரணமானார்கள். [இதில் பேராயக் கட்சியைக் குறை சொல்லமுடியாது.] வரலாற்றை ஒழுங்காய்ப் பார்ப்போம்.

1965 இல் நடுவண் அரசில் முட்டாள் தனமான போக்கால், இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தை வன்மையாகத் தடுத்து நிறுத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அடிதடி, துப்பாக்கிச் சூடு, என்று கையாளப் போக, அதன் விளைவால் பல உயிர்களும் போராட்டத்தாற் குலைந்து தொலைந்து போக, மக்களுக்கு பேராயக் கட்சி மேல் ஒருவித வெறுப்பு வந்துற்றது. [அதைக் காட்டிலும் பெரும் தவற்றை இன்றையப் பேராயக் கட்சி ஈழத்து இனப்படுகொலையில் செய்திருக்கிறது ஆனாலும் தமிழக மக்கள் பேராயக் கட்சி மேல் அவ்வளவு வெறுப்பைக் காட்டக் காணோம் என்றால், நிலை எப்படி மாறியிருக்கிறது, எந்த அளவு கண்கட்டப் பட்டிருக்கிறது என்று பாருங்கள். எப்படியோ அது வேறு கதை.]

அதன் விளைவாக, அடுத்து வந்த 1967 தேர்தலில் பேராயம் முற்றிலும் தோற்றுப் போனது. தி.மு.க. அரசு மேலெழுந்தது. தமிழரில் மிகுதியானவருக்கு அப்போது மிகுந்த மகிழ்ச்சி. ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்களும் குதுகலங்களும் விரவிக் கிடந்த காலம் அது. இந்தத் தேனிலவு 3,4 ஆண்டுகளுக்கு நீடித்தது. கொஞ்சங் கொஞ்சமாக அரசு தரும் ஊழல் வாய்ப்புக்களைப் பார்த்த கழகத்தாரின் கொள்கைகள் நீர்த்துப் போகத் தொடங்கின. ”திராவிடமா? வீசை என்ன விலை? ” என்று கேட்கத் தொடங்கினர். பேராயக் கட்சி அரசில் நூறும், ஆயிரமாக இருந்த ஊழல்கள் கழக அரசில் ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரமாகப் பெருகத் தொடங்கின.

பின்னால் அண்ணா மறைந்தார், கலைஞர் முதல்வரானார், கலைஞருக்கும் ம.கோ.இரா.விற்கும் இடையே இருந்த முரண்பாடு/சண்டை பெரிதாக முற்றியது; அ.தி.மு.க. எழுந்தது. அடுத்த தேர்தலில் தி.மு.க. தோற்றது. அ.தி.மு.க. அரசு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பங்காளிச் சண்டை என்பது எல்லாத் தளங்களிலும் பெரிதும் முற்றியது. தமிழகம் சீரழிந்தது இந்தப் பங்காளிச் சண்டை, போட்டிகளால் தான்.

கொள்கைகள் சரமாரியாகத் தூக்கிவாரி வீசப் பட்டன. எப்படிச் சம்பாரிப்பது, யார் சம்பாரிப்பது என்ற கேள்வியே இவர்களுக்கிடையில் பெரிதாகிப் போனது. அங்கொன்றும் இங்கொன்றுமாய், ஆசிரியர் மாற்றங்களால் கல்வித் துறையில் சம்பாரித்துக் கொண்டிருந்தவர்கள், புதியதொரு ஊழலுக்கு அணியமானார்கள். ஏனெனில் ஒரு பெரிய தேவை ஒன்று அன்று பூதகரமாய்த் தோன்றத் தொடங்கியது.

கண்டமேனிக்கு நடந்த ஆசிரியர் மாற்றங்களால், அரசுப் பள்ளிகளில் ஒழுங்கான ஆசிரியர்கள் எங்கும் நிலைக்கவில்லை. எங்குமே ஒரு நிலையாமை நின்று நிலவியது. கல்வித் தரம் சிறிது சிறிதாய்க் குறையத் தொடங்கியது. ”தம் பிள்ளைகளின் கல்வி கெட்டுப் போகிறதே?” என்று தவித்த பெற்றோர்கள், இந்த நிலையாமைச் சரிசெய்ய வழி தெரியாமல், நகரங்களில் இருந்த குறிப்பிட்ட ஒரு சில கிறித்துவப் பள்ளிகளை நாடி ஓடி, அவற்றில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முயன்றார்கள். (குறிப்பாகச் சேசுசபைப் பள்ளிகள், பேர்பெற்ற மறுப்பாளர் (protestant) நெறியைச் சேர்ந்த தென்னிந்தியத் திருச்சபை பள்ளிகள்.) அன்றைக்கு அந்தப் பள்ளிகளுக்கெல்லாம் நல்ல பெயர் இருந்தது.

விழுந்தடித்துக் கொண்டு பிள்ளைகளைச் சேர்த்த காரணத்தால், அந்தப் பள்ளிகளில் இடம் கிடைப்பது பலருக்கும் குதிரைக் கொம்பாய் இருந்தது. இந்தப் பள்ளிகளும் தாம் எவ்வளவு பிள்ளைகளைச் சேர்க்கமுடியும், சொல்லுங்கள்? அன்றைக்கு இருந்த கிறித்து சபை நிர்வாகங்கள் கல்வியின் மூலம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் அல்லர். தொண்டே பெரிதென்று இருந்த காலம் அது.

இந்தப் பொழுதில் தான் பல்வேறு கிறித்துவப் பள்ளிகளில் இருந்த “தமிழல்லாத பாடங்களுக்கு ஆசிரியராய் இருந்தவர்கள்”, தாங்கள் ஓய்வு பெற்ற போது, ”நாம் ஏன் புதுப் பள்ளிகளைத் தொடங்கக் கூடாது? இந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடாது? ” என்று எண்ணத் தொடங்கினார்கள். வெறுமே வாடகைக்கு ஓர் இடத்தை எடுத்துக் கொண்டு, அரசில் தமக்குத் தெரிந்த கல்வியதிகாரிகள் மூலம் அனுமதி பெற்றுக் கொண்டு, இதே கிறித்துவப் பள்ளிகளில் இருந்த 4,5 ஆசிரியர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுப்பதாய்ச் சொல்லி அவர்களை அங்கிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து, ஒரு தோற்றத்தை உருவாக்கி ”பேர்பெற்ற கிறித்துவப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தது போலும் தாங்களும் சொல்லிக் கொடுப்போம்” என்று முழங்கி அன்றைக்கு இருந்த தேவையைத் (demand) தங்கள் பக்கம் மடை மாற்றினார்கள். கூடவே கட்டணங்களையும் உயர்த்தினார்கள். விரைவில் கல்வி ஒரு பொதினமாகிப் (business) ஆகிப் போனது.

பிள்ளைகளின் எதிர்காலம் என்ற கானல் நீரை நாடி ஓடும் நடுத்தர வருக்கம் அந்தக் கட்டணங்களைக் கட்ட அணியமாகியது. ”வேறெங்கோ தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்வோம். நம் பிள்ளைகள் நல்ல படிப்புப் பெறுவது முகன்மை” என்ற உணர்வு தான் அவர்களை உந்தியது. கல்விக்கு ஆகும் செலவு மளமளவென்று உயரத் தொடங்கியது. அதுவரை மாதம் ரூ 10, 15 என்று பள்ளிக் கட்டணம் கட்டிய பெற்றோர் ரூ 100, 150 க்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. [பிற்காலங்களில் இதே செலவு ஆயிரம், பத்தாயிரம் உருவாக்கள் ஆகின. இப்பொழுதும் வெறும் முணுமுணுப்புத்தான். முதுகெலும்பு ஒடிய வேலை செய்து பள்ளிக்கூடம் நடத்துபவர்களுக்கு இவர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.]

தேவையை மீட்கும் முகமாகத் திடீர் என்று அளிப்புகள் (supply) வெள்ளமாய்ப் பெருகி முற்படும் நிலையில் பள்ளிகள் நடத்த அரசிடம் அனுமதி கேட்டு நிற்கும் வரிசையும் சட்டெனப் பெருத்துப் போனது. ”என்னய்யா இது கல்வித் துறையில் இப்படிக் கூட்டம் பெருகி வரிசை நீண்டு நிற்கிறதே?” என்று அரசியல் வாதிகள் வியப்பாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அதிகாரிகள் அவர்களோடு குசுகுசுத்தார்கள்; எள்ளென்றால் எண்ணெய் ஆவது தான் நம் அரசியல்வாதிகளுக்கு இயல்பாயிற்றே? “ஆகா, பணம் தேற்ற இப்படியொரு வழியா? இது காமதேனு அல்லவா?” என்று கூட்டுக் களவாணித்தனம் போட வாய்ப்புண்டாயிற்று.

13/14 என்ற பள்ளிகளின் எண்ணிக்கை நூறாயிற்று; இருநூறாயிற்று; கூடிக் கொண்டே வந்தது. சென்னையிலிருந்து, பெருநகரங்களுக்கும், அப்புறம் சிறு நகரங்களுக்கும், முடிவில் நாட்டுப் புறத்திற்கும் ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகின. அரசுகள் எப்படி மாறினாலும், கல்வித் துறையில் நடந்த கொள்ளை மட்டும் தொடர்ந்து கொண்டே வந்தது. இரண்டு கழகத்தாரும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் தாங்கள் கேட்கும் ஊழற்பணத்தைக் கூட்டிக் கொண்டே போய், இன்று கோடிகளிற் புரண்டு, 4200 மடிக்குழைப் பள்ளிகள் வரை ஆகியிருக்கிறது. இரு கட்சிகளும், மற்ற துணுக்குக் கட்சிகளும் தங்களுக்குள் என்ன சண்டை போட்டாலும், கல்வித் துறைக் கொள்ளையை மட்டும் கண்டுகொள்ளாமல் சமக்காளத்திற்கு அடியிற் போட்டபடியே நடந்து கொள்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் கப்சுப் கறார் தான். இன்று தனியார் பள்ளிகளை, கல்லூரிகளை நடத்துபவரில் பெரும்பாலோர் அரசியல்வாதிகளேயாவர். பொன்முட்டை இடுகின்ற வாத்தின் கழுத்தை இவர்கள் யாராவது நெறிப்பார்களோ?

இன்று மொத்தப் பள்ளிகளில் கிட்டத்த 50% க்கும் மேல் [சரியான விழுக்காடு எனக்குத் தெரியவில்லை. தேடவேண்டும்.] மடிக்குழைப் பள்ளிகள் தாம் இருக்கின்றன. ”எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்” என்பதே தமிழகக் கல்விக் கொள்கையின் தாரக மந்திரமாயிற்று. இதன் விளைவால், தமிழே அறியாத தற்குறிப் பட்டாளமாய் நம் இளையர் கூட்டம் உருவாகியிருக்கிறது. இந்தச் சுழலுக்குள் சிக்காத பெற்றோர் யாருமே இல்லை. இந்த விழுக்காடு இன்னும் 10 ஆண்டுகளில் 80/90% என்று ஆகிவிடும். மொத்தத்தில் தமிழே அறியாத, ஆங்கிலமும் ஒழுங்காய்ப் பேசத் தெரியாத, தமிங்கிலம் மட்டுமே தட்டுத் தடுமாறி அறிந்த, தலைமுறை ஒன்று உருவாகி நிற்கிறது. “தமிழ் சோறு போடுமா?” என்று இன்றைய இளைஞர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். “சோறுபோடும்” என்று சொல்லுவதற்கு நம்மிடம் வக்கில்லை. எதிர்காலம் குலைந்து போனது.

அந்தக் காலக் கல்விக் கொள்கையைத் தூக்கிக் கடாசி எறிந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே நிலை இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் இப்பொழுது உருவாகி வருகிறது. [அங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் கையரிக்காதா, என்ன?]

இந்தக் கல்விக் கொள்கையின் சீரழிவால் தமிழர் மறைந்து வருகிறார்; தமிங்கிலர் உருவாகிறார். அப்புறம் அவர்கள் படிக்கும் இதழ்நடை தமிங்கிலமாகத் தானே இருக்கும்? இதிலென்ன வியப்பு? எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நோவதேன்?

அரசியற் போராட்டத்தால் சாதிக்க வேண்டியதை, கெஞ்சி வேண்டுகோள் விடுத்துச் சாதிக்க முடியாது ஐயா! நாம் எல்லோரும் வாய்மூடிக் கிடப்பது இன்னும் எத்தனை நாளைக்கு?

கயவாளிகளை அரசாள வைத்த பின்னால், “செம்மொழி மாநாடு” என்று சொல்லிக் கொண்டு, தமிழுக்குப் பாடை கட்டத்தான் நம்மால் முடியும். தமிழே இல்லாது போன பின்பு, செம்மொழி என்று கூக்குரலிட்டுப் பாடை கட்டவும், சங்கூதவும், எரியூட்டவும் தானே வேலை மீந்து இருக்கிறது?

இந்த மடலை என் வலைப்பதிவிலும், தமிழ்மன்றம் மடற்குழுவிலும் வைக்கிறேன். அங்கும் படிப்பவர்கள் கருத்தால் ஒன்றுபடட்டும்.

வருத்தத்துடன்,
இராம.கி.