Thursday, September 27, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 3

"அரக்கர் என்பவர் கருமைகூடிய சிவந்த நிறத்துத் தனி இனத்தார் (tribe); நாவலந்தீவில் இருந்த பல இனத்தவர் போல இவரும் ஒருவர்" என்ற செய்தியோடு, இன்னுஞ் சில பழம் பாடல்களை அடுத்துப் பார்க்கலாம்.

பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பது "ஆசிரிய மாலை" என்னும் தொகுப்பு நூலின் வழி தெரிகிறது. ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்ட நூல் ஆசிரியமாலையாகும். எத்தனையோ தமிழ் இலக்கியங்களை நம்முடைய கவனமின்மை காரணமாயும், பல்வேறு மூடத் தனங்களாலும், இழந்தது போல், இந்த ஆசிரிய மாலையும் நமக்கு முழுமையாகக் கிடைக்காதபடி ஆயிருக்கிறது. நல்ல வேளையாக, ஆசிரிய மாலையில் இருந்து ஒரு சில பாட்டுக்களையாவது புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்திருக்கிறார்கள். இது தவிர, தொல்காப்பியத்திற்கான நச்சினார்க்கினியர் உரையிலும் ஓரிரு பழைய இராமாயணப் பாட்டுக்கள் கிடைக்கின்றன. புறத்திரட்டு என்பது திரு. வையாபுரிப் பிள்ளையின் எடுவிப்பில் (editing), சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டிருக்கிறது. (அண்மையில் கூட இதன் மறுஅச்சு வெளி வந்திருக்கிறது.). இதே போல "மறைந்து போன தமிழ்நூல்கள்" என்ற தலைப்பில் மயிலை. சீனி. வேங்கடசாமியாரால் வெளிவந்த பொத்தகத்திலும் இந்தப் பழைய இராமாயணப் பாடல்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

[இந்தப் பாடல்களை இணையத்தில் எங்களைப் போன்ற பலருக்கும் அறிமுகம் செய்து விளக்கியவர் நண்பர் அட்லாண்டா பெரியண்ணன் சந்திர சேகரன் ஆவார். Remnants of Tamil Works lost over the years - I, pazaya rAmAyaNam (in Tamil Script, TSCII format) என்று தேடினால் அவர் வலையில் இட்டது கிடைக்கும். (அவரைப் போன்றவர்கள் இன்று தமிழ் இணையத்தில் இல்லாதது ஓர் இழப்பே!) இந்தப் பாடல்கள் வால்மீகி இராமாயணத்தில் இல்லாத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது பற்றி பெர்க்லி பல்கலைத் தமிழ்-வடமொழிப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு (George Hart) "The Poems of Ancient Tamil: their milieu and their Sanskrit counterparts", (1975) என்னும் நூலில் சொல்லுவதாக பெ.சந்திரசேகரன் சொல்லுவார்.]

பழைய இராமாயணம் என்று மேலே சொன்னாலும், கிடைத்தது என்னவோ, ஐந்து பாடல்கள் தாம். இந்தப் பழைய இராமாயணம் என்பது கம்பராமாயணத்திற்கும் முந்தியதாய் இருந்திருக்க வேண்டும்; ஆனால் எந்தக் காலம் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. அதன் நடையையும் (தேவாரம், நாலாயிரப் பனுவல்களுக்கும் முந்திய காலங்களில் தான் அகவல் நடை பெரிதும் விரும்பப் பெற்றது. பிற்காலங்களில் விருத்தப் பாக்கள் கூடிவிட்டன), சொல்லாட்சிகளையும் பார்த்தால், பெரும்பாலும் சங்க காலத்தின் கடைசியில் உருவாகி இருக்க வாய்ப்புண்டு என்றே ஊகிக்கிறோம். ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணப் பாக்கள் எல்லாமே போர்க்களம் பற்றியதாய் இருக்கின்றன. மற்ற பாட்டுக்கள் எல்லாம் சுவடி அழிந்ததில் தொலைந்தன போலும்.

முதற்பாட்டு:

மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன்
மாஅ இரலை வேட்டம் போகித்
தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
சுற்றமும் சேணிடை அதுவே முற்றியது
நஞ்சுகறைப் படுத்த புன்மிடற்(று) இறைவன்
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
வன்தோள் ஆண்தகை ஊரே அன்றே
சொல்முறை மறந்தனம் வாழி
வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே
மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
நீலக் குவளை நிறனும் பாழ்பட
இலங்கை அகழி மூன்றும் அரக்கியர்
கருங்கான் நெடுமழைக் கண்ணும் விளிம்(பு)அழிந்து
பெருநீர் உகுத்தன மாதோ வதுவக்
குரங்குதொழில் ஆண்ட இராமன்
அலங்குதட(று) ஒள்வாள் அகன்ற ஞான்றே.

இராமனின் தனிமை இலங்கையின் அழிவில் முடிந்ததை இந்தப் பா சொல்லுகிறது. இனிக் கீழே ஒவ்வொரு பாவுக்கும், நானறிந்த வகையில் உரை சொல்லி என் புரிதலையும் கொடுத்துள்ளேன். இந்த உரைகளுக்கும், புரிதலுக்கும் நானே பொறுப்பு. ஒருவேளை கம்பனை இன்னும் ஆழ்ந்து படித்தால், சிற்சில இடங்களில் மாறுபட இயலும். நண்பர்கள் முயன்று உரிய பொருளைப் பலருக்கும் உணர்த்தினால் நல்லது.

--------------------------
அகவையில் மூத்த தந்தையின் ஏவலால், ஊரைத் துறந்து, காட்டுவாழ்க்கையில் கலந்துபோன இராமன், பெரிய கலைமான் வேட்டையில் ஈடுபட்டுத் தன் தலைவியைப் பிரிந்த தனிமையாகி, தன்னுடைய சுற்றத்தையும் விட்டுத் விலகுமாறு முடிந்ததால், நஞ்சுகறைப் பட்ட கழுத்துடைய இறைவன், உலகாளும் அம்மையொடு சேர்ந்திருந்த தலைநாளில், பனிமலை இமயத்தை அசைத்தெடுத்த பெரும் வன்தோள் ஆண்தகையின் (அதாவது இராவணனின்) ஊர் முற்றுகையுற்றது.

கொலைக்குரங்குகளின் தொழிலை ஆண்ட இராமனின் ஒளி மின்னும் வாள் அதன் உறையை விட்டு அகன்ற பொழுது, நீண்டமழையில் கருங்காடு எல்லையில்லாமல் நீர் உகுப்பது போல, அரக்கிப் பெண்களின் சிவந்தவரிப் புறத் தோற்றமும், குவளை மலர் போன்ற நிறமும் பாழ்பட, இலங்கையின் மூன்று அகழிகளும், பாழ்பட்டன. சொல்முறை மறந்தோமோ! வாழி ! அவன் வில்லும் அந்த நாளில் அங்கு தான் இருந்தது.
------------------------

மேலே சொன்ன விவரிப்புச் செய்தியில் முகன்மையானது, இராவணனின் கோட்டை மூன்று பக்கம் அகழி கொண்டது என்று சொல்லுவதாகும். இதன் மூலம், கோட்டையின் இன்னொரு பக்கம் கடலாக இருந்திருக்கக் கூடும் என்று உணருகிறோம். இந்த விவரிப்பு கம்பனின் இராம காதைக்கு முற்றிலும் மாறுபட்டது. (இராமாயணத்தில் பல்வேறு வேற்றங்கள் -versions - உண்டு என்பது தமிழிலும் இதன்வழி உண்மையாகிறது. ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணத்திற்கும், கம்பராமாயணத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன.) கம்பனில் இராவணனின் கோட்டைக்கு நாலு பக்கம் அகழியும் வாயில்களும் சொல்லப் படும். மேலே "வன்தோள் ஆண்டகை" என்று இராவணன் சிறப்பாகவே சொல்லப் படுகிறான். அரக்கிப் பெண்களின் நிறம் குவளை மலர் போன்று சொல்லப் படுகிறது. செங்கீற்றுப் பாய்ந்த கருநிறம் குவளை நிறமாகும். ("அவன் பெருமானர் மகன் (son of a brahmin); அவனைப் போய் இவர்கள் ஆதரிக்கிறார்களே?" என்ற இந்துத்துவக்காரர்களின் சதுரப் பேச்சு - smart talk - இங்கு எடுபட முடியாது. அரக்கர் தனி இனம் என்று தான், அரக்கியரின் நிறம் குறிப்பது வழியாக, இங்கு அறிகிறோம்.)

இனி இரண்டாம் பாட்டிற்கு வருவோம்.

இருசுடர் இயங்காப் பெருமூ(து) இலங்கை
நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை
எண்(கு) இடை மிடைந்த பைங்கண் சேனையிற்
பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை
எச்சார் மருங்கினும் எயிற்புறத்(து) இறுத்தலின்
கடல்சூழ் அரணம் போன்றது
உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.

-----------------------------------
கதிரும் நிலவும் உலவாத, பெரும் முது இலங்கையை பெருந்தோள் இராமன் வெற்றி கொண்ட போது, கரடிகள் இடைநிறைந்த, சினத்தால் பசித்த சேனை, மதிற்புறத்து எந்தப் பக்கம் நெருங்கினாலும், பச்சை போர்த்திய பல்வகை மருத நிலப்புறம் இருந்ததால், உடல் சினந்த வேந்தன் முற்றுகையிட்ட ஊர் கடல் சூழ்ந்த அரணம் போன்று ஆனது.
-----------------------------------

பாடலின் வழி நாம் கூர்ந்து கவனிக்கும் செய்திகளுக்கு வருவோம். முற்றுகையின் போது இராமனின் உடல் சினந்து காணப்படுகிறது. அவன் இயல்பான ஒரு மாந்தனாகவே, கம்பனில் சொல்லுவது போல் கடவுள் அல்ல, இந்தச் சொல்லாட்சியில் அறியப் படுகிறான். போர் வெற்றி கொண்ட நாள் அமையுவா நாளாக (கதிரும் நிலவும் உலவாத அமாவாசை நாளாக) அறியப் பெறுகிறது. (கம்பராமாயணத்தில் இந்தச் செய்தியை நான் இன்னும் ஒத்துப் பார்க்கவில்லை)

கோட்டையின் மூன்று பக்கத்திலும் சுற்றி இருந்தது மருத நிலப்புறம். கம்பன் சொல்லுவது போல மலையும் காடும் சூழ்ந்த அணுக்கம் நான்கு திசையிலுமாய் விவரிக்கப் படவில்லை. திரிகூடமலை இங்கு உணர்த்தப் படவில்லை. (கம்பன் விவரிக்கும் யுத்த காண்டத்தில் மரா மரங்களும், கடம்ப மரங்களும் கணக்கற்று குரக்கினத்தால் பிடுங்கப் படுகின்றன; கல்லும், பாறைகளும் பெயர்க்கப் படுகின்றன.) கம்பன் விவரிக்கும் இடமும், இந்த இடமும் வேறுபடுகின்றன. மருத நிலப்புறம் என்பது "பலபுறத் தண்ணடை" என்ற சொல்லாட்சியால் இங்கு உணர்த்தப் படுகிறது. இந்தக் குறிப்பு கம்பனுக்கு முற்றிலும் வேறுபடுகிறது. கம்பன் சொல்லும் இடம் வேறு எதோ விவரிப்பைக் குறிக்கிறது. கம்பன் கூறும் இடம் இன்றைய இலங்கையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கம்பனை ஆழ்ந்து படிப்போர் உணர முடியும். (இன்றைய இலங்கையின் புவியியல் தெரிந்தவர்கள் அதை ஆய்வு செய்யவேண்டும். இலங்கையின் புவியியல் குறிப்புபற்றி நான் தெரிந்தவற்றைப் பின்னால் சொல்லுகிறேன்.)

மூன்றாவது பாட்டு இராவணனின் வள்ளன்மையையும், மள்ளரின் வீரத்தினால் நொச்சித் தடந்தகையை (strategy) அவன் வகுத்ததையும் பாடுகிறது.

மேலது வானத்து மூவா நகரும்,
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்த இலங்கையில்
வாடா நொச்சி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.

---------------------------------
மேலே வானத்தில் அழியா நிற்கும் அமராவதி நகரிலும், கீழே நாகருடைய நாட்டிலும் பெருகிக் கிடப்பவற்றையும், எட்டுத் திசை காப்பாளர்களின் தேசக் கோட்டையையும், சூறையாடுவதாய்ச் சூளுரைத்து, அவற்றைக் கவர்ந்து, முன்பு பெற்ற பல்வேறு விழுநிதியெல்லாம், அந்த வழியில், நெற்றிக்கண் முதல்வனின் மேல் உள்ள பற்றிமையால் (பக்தியால்) கயிலைக் குன்றை ஏந்திய தடக்கைகள் இப்பொழுது தொழிற்படும்படி, தோலா வலிமையோடு, தன் நிழலுக்குக் கீழே வாழ்ந்த வல்லமை பொருந்திய மள்ளருக்கு அள்ளிக் கொடுத்து ஏற்படுத்திய இலங்கையின் மருதப் புறத்து மதிலைக் காக்கும் படி நொச்சி ஏற்பாட்டை வகுத்தான், மாலையொடு வெண்கொற்றக் குடையிந் கீழ் வீற்றிருக்கும் அரக்கர் அரசன்.
---------------------------------

மேலே வானம், கீழே பாதலம் (இதற்குப் புவியின் அடியில் என்ற பொருளை மட்டும் கொள்ள வேண்டியதில்லை. இவர் இருக்கும் புவிமட்டத்திற்குக் கீழே உள்ள இடம் கூடப் பாதலம் தான். பாதலம் என்பது கிட்டத்தட்ட இன்றையப் பொருண்மையான பள்ளத்தாக்கையே குறிக்கிறது. காட்டாக மலை மேட்டிலிருந்து பார்த்தால் கீழே உள்ள இடத்தைப் பாதலம் என்று தான் பேச்சுவழக்கில் சொல்லுவார்கள்.), சுற்றிலும் எட்டுத் திசையிலும் இருக்கும் நாடுகளில் இராவணனின் அதிகாரம் நிலவியதாக இங்கு புலவர் சொல்லுகிறார்.

இந்தப் பத்துத் தலையிலும் (தலை என்பதற்குத் தமிழில் திசை என்றும் பொருள் உண்டு.) இவன் ஆட்சி எடுபட வேண்டுமானால், இராவணன் பத்துத் தலையான் என்று சொல்லுவது இயல்பே. பின்னால் பத்துத் தலையான் என்று உடல் அமைவோடு குழம்பினரோ, என்னவோ?

இவன் பத்துத் தலையிலும் சூறையாடியது கூட வியப்பில்லை. "ஆ, அரக்கன், அதனால் சூறையாடினான்" என்று அச்சடித்துப் பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை. சூறையாடும் செயலை நாவலந்தீவில் பல அரசரும், தலைவர்களும் வெவ்வேறு கால நிலைகளில் செய்திருக்கிறார்கள். வேண்டுமானால் புறநானூற்றுப் பாட்டுக்கள் சிலவற்றைப் படித்துப் பார்க்கலாம். ("ஆகா, தமிழனைச் சொல்லிவிட்டான்" என்று தேவைக்கு மீறி உணர்ச்சி வயப் படாமல், இயல்பான முறையில் மேலே உள்ள பாவின் வரிகளைப் புரிந்து கொள்ளுவது நல்லது. எந்தக் காலத்திலும் தடியெடுத்தவன் எல்லாம் தண்டற்காரன் தான். இந்தத் தடியெடுப்பை இராவணனும் செய்வான், இராமனும் கூடச் செய்வான்; செய்திருக்கிறான்.)

இராவணன் கயிலையை அசைத்ததும், அவன் சிவநெறியாளன் என்பதும் இந்தப் பாடலில் பெரிதும் பேசப் படுகிறது. தமிழரின் இலக்கியத்தில் இராவணன் ஒரு சிவ வழிபாட்டாளன் என்பது மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த எண்ணம் நெடுநாட்கள் தமிழரிடையே இருந்திருக்கலாம். (கலித்தொகை 38 இலும், இராவணன் இமயமலைக்கு அடியில் சிவனின் அழுத்தலால் சிக்கிய கதை சொல்லப் படும்.

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - கலி 38:1-5

---------------------------
அந்தணன் என்ற சொல்லைப் பார்த்துப் "பெருமானராய்ச் சிவனைச் சொல்லிவிட்டார் இந்தப் புலவர்" என்று படையெடுத்துக் கொண்டு யாரும் வரவேண்டாம். அந்தன்> அந்தனன்> அந்தணன் என்ற சொல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் பார்ப்பனரைக் குறிக்கவில்லை. அப்படிக் குறிப்பதாகப் பலரும் பரப்புரை செய்கிறார்கள்; அது தவறு. பெருமானர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்களின் பொருண்மைகள் பல்வேறு நிகழ்ப்புக்களுடன் (agenda) விதம் விதமாக நம் முன்னால் திரிக்கப் படுகின்றன. பொதுவாக, அத்தன் = தலைவன், ஐயன், பெரியவன் என்ற பொருளையே அந்தணன் என்ற சொல் குறிக்கிறது. தமிழறிஞர் இளங்குமரன் "அந்தணன்" என்ற சொற்பிறப்பை அழகாக எடுத்துரைப்பார். என்னுடைய முந்தையக் கட்டுரைகளில் அவரை எடுத்துரைத்து வழி மொழிந்திருக்கிறேன்.)
-------------------------------

கலித்தொகைப் பாடலை விடுத்து, ஆசிரிய மாலையில் வரும் மூன்றாவது பழைய இராமாயணப் பாடலுக்கு மீண்டும், வருவோம்.

தன்னால் வாழும் படையினருக்கும், மக்களுக்கும் பல நிதியங்களை இராவணன் அள்ளிக் கொடுத்திருக்கிறான்; அவர்களோடு பெரிதும் ஒன்றியிருக்கிறான். அவர்களால் தான் அவன் தலைநகரே கட்டப் பட்டிருக்கிறது. (அவனுக்காக உயிர்கொடுக்கவும் தயங்காதவர்களாய் அவர்கள் இருந்திருக்க வேண்டும். அவன் கொடுங்கோலனாய் இருந்திருந்தால் இது முடியாது.)

மள்ளர் என்பது மேலே வீரரைக் குறிக்கும் கடைந்தெடுத்த தமிழ்ச்சொல். அது மட்டுமல்லாது, கோட்டை மதிலைக் காக்க இராவணன் நொச்சித் தடந்தகையை (strategy) வகுத்தான் என்று சொல்லும் போது தொல்காப்பிய வழித் தமிழ்ப் போர்முறை இங்கு குறிக்கப் படுகிறது. கம்பரும் கூட யுத்த காண்டத்தின் அணிவகுப்புப் படலத்தில், இராவணன் முன்னே நிகும்பன் தம் பகைவரை இகழ்ந்து கூறுவதாக ஒரு பாடலை வைப்பார்:

எழுபது வெள்ளத் துற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழவநீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

என்று வரும். "குரக்கினம் எழுபது வெள்ளம் சேனை வைத்து இருந்தால் என்ன? உன்னிடம் ஆயிரம் வெள்ளம் சேனை இருக்கிறது. அவருடைய உழிஞைத் தடந்தகையை (strategy) முறியடிக்க நொச்சித் தடந்தகையை (strategy) தன் உச்சியில் உன் ஊர் கொண்டுள்ளது" என்று சொல்லும் இந்தக் கம்பர் பாடல் ஆசிரிய மாலையின் தாக்கம் கொண்டதாகவே இருக்கிறது. இந்தப் போர் தமிழ்முறைப்படியே தான் இரு புலவராலும் புரிந்து கொள்ளப் படுகிறது. [மிண்டும் சொல்லுகிறேன். "போர்முறை" தமிழ்முறைப் படியே சொல்லப் படுகிறது. "இராவணன் தமிழனா, தமிழன் இல்லையா?" என்று தொங்கியவண்ணம் தாவ நினைக்கின்றவர்கள், மேலே கொடுத்திருக்கும் பட்டகைகளை - facts - குழப்பிக் கொள்ளக் கூடாது.]

அடுத்து நான்காம் பாட்டிற்குப் போவோம்.

இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க
முடுகியல் பெருவிசை உரவுக்கடும் கொட்பின்
எண்திசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும்
ஒருதனி அனுமன் கைஅகன்று பரப்பிய
வன்மரம் துணிபட வேறுபல நோன்படை
வழங்கி அகம்பன்தோள் படையாக ஓச்சி
ஆங்க,
அனுமன் அங்கையின் அழுத்தலில் தனாது
வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம்கரிந்(து)
உயிர்போகு செந்நெறி பெறாமையின்
பொருகளத்து நின்றன நெடும்சேண் பொழுதே.

-----------------------------
பெரும்விசையோடு, முடுகி எறிந்த வலிந்த கடுஞ் சுழற்சியில், எட்டுத் திசை மருங்கிலும் எண்ணமுடியாத படி தோன்றினாலும், தனி ஒருவனான அனுமன் தன் கையை அகற்றி வீசிய வலியமரம் உடைந்து போக, பல்வேறு நோன்புகளால் பெற்ற படைகளை வீசியும் அழியாததால், பெருமான் (பிரமன்) கொடுத்த வேற்படையை வீசிப் போதியதாக்க, அனுமன் உள்ளங்கையின் அழுத்தலால் தன்னுடைய வலிந்த தலையோடு உடல் புகுந்து தைக்க, முகம் கரிந்து, உயிர் போகும் விதி பெறாமையால், இருபக்கத்துச் சேனையும் மிகுந்து மருண்டு நோக்கிய படி, நெடிதுயர்ந்த பொழுதுக்கும், போர்க்களத்து நின்றன.
-----------------------------

இங்கே இராவணன் முன்னால் பிரமனிடம் பெற்ற படையை வீசி இலக்குவனை அயரச் செய்தது கூறப் படுகிறது. (பெருமான் என்ற வடபுலத்துத் தெய்வக் குறிப்பு இங்கே பதிவு செய்யப் படுகிறது.) இந்தப் படையை வீசும் போது, குறுக்கே அனுமன் தடுத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. (அந்தச் செய்தி கம்பனில் கிடையாது.) ஆனால் யார் மேல் எறிந்தான் என்று இந்தப் பாடலை மட்டும் வைத்துச் சொல்ல முடியவில்லை. நல்ல வேளையாக, கம்பனின் இராம காதை உதவிக்கு வருகிறது. இராவணன் எறிந்த அகம்பன் (=நான்முகன்) வேல் இலக்குவனை மயங்க வைத்ததாக இரு பாட்டுக்கள் கம்பனில் (யுத்த காண்டம், முதற் போர்புரி படலத்தில்) இருக்கின்றன.

வில்லினால் இவன் வெலப்படான் எனச் சினம் வீங்க
கொல்லும் நாள் இன்று இது எனச் சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பருவலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்த ஓர் வேல் எடுத்து எறிந்தான்

எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின் பொங்கி
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை
அறிந்த மைந்தனும் அமர்நெடுங் களத்திடை அயர்ந்தான்.

இந்த இருபாட்டுக்களின் உதவியோடு மேலே ஆசிரிய மாலையின் பாட்டைப் பார்த்தால் பொருள் சட்டென்று விளங்குகிறது. "வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம் கரிந்(து)" என்ற இலக்குவனின் நிலை கம்பனில் சொல்லப் படவில்லை. அங்கு இலக்குவன் ஆதிசேடனின் அவதாரம் என்பதால் இலக்குவன் பட்ட வலியும், முகம் கரிதலும் சொல்லப் படாமல் "அவன் அயர்ந்தான்" என்று மேலோட்டமாய்ப் பூசியது போல் சொல்லப் படும். இரண்டு சேனையும் இந்தச் சண்டையைக் கவனித்து மருண்டு போய் நிற்கின்றன.

இனி ஐந்தாம் பாட்டிற்கு வருவோம்.

கடலும் மலையும் நேர்படக் கிடந்த
மண்ண வளாக நுண்வெயில் தகளினும்
நொய்தால் அம்ம தானே இஃ(து)எவன்
குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ
வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன்
அடிபொறை ஆற்றின் அல்லது
முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே.

இடுகையை வேகமாய் முடிக்க வேண்டிய நிலையில் இந்தப் பாடலின் உரையை கம்பனோடு ஒப்பிட்டு "எந்த நிகழ்வை இது குறிக்கிறது?" என்று ஆய்ந்து எழுத முடியாது இருப்பதால், பாட்டை மட்டுமே தருகிறேன். இலக்குவன் பெயரை நேரே குறித்த தமிழ்ப் பழம்பாடல் இது ஒன்றாகத் தான் இருக்கும்.

"அரக்கர் என்பவர் வெறுக்கப் படத்தக்கவர்" என்ற சுமையேற்றிய பார்வை இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிதும் பரப்பப் பட்டிருக்கிறது. மேலே உள்ள 5 பாக்களைப் படித்தால், அந்தப் பார்வை ஒருபக்கப் பார்வை என்பதைக் குறிப்பால் அறியமுடியும். ஒருபக்கம் குரக்கினமும், இராமனும், அவனைச் சார்ந்தவர்களும்; இன்னொரு பக்கம் அரக்கர் என்ற அளவிலேயே நொதுமலாய்ச் (neutral) செய்திகள் சொல்லப் படுகின்றன.

இனி அடுத்த இடுகையில் அரக்கர் பற்றிக் கொஞ்சமும், சேது பற்றி நிறையவும் பேசுவோம். (அகம் 70 பற்றிய செய்தி அங்குதான் வருகிறது)

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 23, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 2

புறம் 378 கீழ்வருமாறு போகிறது.

தென்பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத்து அன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த வல்ல மிகப் பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழி தந்தோனே! அதுகண்
இலம்பாடு இழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ் சேர் மதரணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
இருங்கிளை தலைமை எய்தி
அரும்படர் எவ்வ முழந்த தன் தலையே

இந்தப் பாடலின் காலத்தில், சோழரின் அரசு தெற்கே கடற்கரையை ஒட்டிப் பரவவொட்டாமல், தடுத்ததில் பரதவரின் பங்கும், வேங்கடத்திற்கும் வடக்கே பரவவொட்டாமல் தடுத்ததில் வடுகரின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. (முன்னே சொன்னது போல் இளஞ்சேட்சென்னி - கரிகாலன் II ஆகியோர் தான் பெருஞ்சோழர் அரசை உருவாக்கியவர்கள். அதனால் தான் கரிகாலனுக்கு அவ்வளவு பெயர் தமிழர் வரலாற்றில் ஏற்பட்டது. பரதவரை வென்றி கொண்டதெல்லாம், சோழ அரசின் தொடக்க காலங்களில் நடந்திருக்க வேண்டும். ஒரு பேரரசின் தொடக்கம், நிலைப்பு, முடிவு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், இந்தப் பாட்டைச் சங்கம் முடிகின்ற காலத்துக்கு அருகில் கி.பி. 150-க்குத் தள்ளுவது கொஞ்சமும் சரி வராது. மீண்டும், மீண்டும், கி.மு. 200ல் இருந்து கி.பி. 200 என்ற 400 ஆண்டு காலத்தையே சுற்றிக் கொண்டு சங்க காலத்தைக் கொள்ளுவது, முன்னே சொன்ன செங்குட்டுவன் - கயவாகு என்னும் சம காலப் பொருத்தத்தால் அமையும் செக்குமாட்டுச் சுற்று. அதைவிட்டு வெளியே வந்தால் தான், சங்க காலம் என்பது ஆய்வாளருக்குச் சரியாகப் புலப்படும்.

குறிப்பாக, அண்மைக்கால அகழ்வு ஆய்வுகளும், தமிழிக் கல்வெட்டு ஆய்வுகளும், சங்க காலத்தை கி.மு.400-கி.பி.200 என்ற 600 கால அகண்ட இடைவெளிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. இன்னும் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரும் முழுதாக ஆயப்படவில்லை. இது வரை இங்கு நடந்த 5% ஆய்வுகளே தமிழக வரலாற்றை அசைத்து, 200 ஆண்டிற்கு அகலப் படுத்தியிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் பலரும் இன்னும் கி.அ. நீலகண்ட சாத்திரியாரிடமும், ஐராவதம் மகாதேவனிடமும் இருந்து கொண்டிருந்தால் எப்படி? ஆற்றில் பெரும்நீர் சாத்திரியாருக்கும் அப்புறம், திரு. மகாதேவனின் தமிழிக் கல்வெட்டு ஆய்வுக் காலத்திற்கு அப்புறம், ஓடிவிட்டது. அண்மைக்கால 10, 15 ஆண்டு ஆய்வுகளைக் கூர்ந்து கவனிக்குமாறு சொல்லுகிறேன். முனைவர் கா.ராஜனின் "தொல்லியல் நோக்கில் சங்க காலம்" - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 ஆம் ஆண்டு வெளியீட்டை படித்துப் பார்த்தால் நான் சொல்லுவது புரிபடும்.)

புறம் 378 ஆம் பாடலின் முதற் பன்னிரு வரிகளில் இளஞ்சேட் சென்னியைப் புகழும் புலவர் (அவற்றை நான் இங்கு விளக்கவில்லை), அதற்கு அடுத்த வரிகளில், அரசன் தனக்கு முன்பு தந்த நகைகளைத் தன் சுற்றத்தார் அணிந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறிய காட்சியை விவரித்துச் சிரிக்கிறார். "இப்பொழுது இவன் கொடுக்கப் போகும் செல்வம் என்ன பாடுபடும்?" என்பதே அவர் உள்ளத்தே எழும் குறுகுறுப்பு.

"வறுமையைச் சட்டென்று இழந்த தன் சுற்றத்தார் விரலிற் செறிந்து கொள்ளுவதைச் (அதாவது மோதிரத்தை) செவியிற் தோடாய்ப் போட்டுக் கொண்டும், செவியிற் போடும் தோட்டை, மோதிரம் ஆக்கியும், அரையில் போடும் இடுப்புச் சங்கிலியைக் கழுத்திற் போட்டும், கழுத்துச் சங்கிலியை அரையில் போட்டுக் கொண்டும், தடுமாறியது எப்படி இருந்ததாம்?"

மிகுந்த கோவத்தில் (கருந்தெறல் என்றால் அது ஒரு பொருள்) இருக்கும் இராமனின் மனைவி சீதையை வலிமிகுந்த அரக்கன் கவர்ந்து கொண்டு போன போது, நிலத்தின்மேல் நகைகளைத் தூக்கி விட்டெறிந்தாளே (இங்கே கொஞ்சம் ஊன்றி ஓர்ந்தால், வான்வழி சீதையைக் கொண்டுபோன செய்தியும் கூட இந்தப் பாட்டில் மறைந்து நிற்பது புலப்படும்), அந்த ஒளிமிகுந்த நகைகளை அள்ளி, இப்படித் தாறுமாறாக அணிந்து கொண்ட, வான் கலத்திற்குக் (aircraft) கீழே இருந்த குரங்குகளின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தது போல இருந்ததாம்.

இந்தக் குரங்குகளை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும்? வெறும் சிறு குரங்குகள் என்றா? அல்லது மாந்தக் குரங்குகள் என்றா? இந்தப் பாட்டில் அதற்குக் குறிப்பில்லை. (செம்முகப் பெருங்கிளை என்பது உறுதியாகச் சிறு குரங்குகளைக் காட்டவில்லை. மாந்தக் குரங்குகளா, காட்டு மனிதர்களா என்பது அவரவர் விழைவு :-)) ஆனால் வலித்தகை அரக்கன் என்பது குறிப்பிடப் படுகிறது. இந்த அரக்கனுக்குப் பொருள் காணும் போது ஒருமையை வைத்துப் பார்ப்பது சரியாக அமையாது. அரக்கர் என்னும் பன்மைச் சொல்லாட்சியை வைத்துப் பார்க்க வேண்டும். "இந்த அரக்கன் சீதையைக் கவர்ந்து போனான்" என்பது கதைப்படி சரியான கூற்றுத் தான். இதற்கு மறுதலைக் கூற்றாய் "பெண்ணைக் கவர்பவன் எல்லாம் அரக்கன்" என்று சொல்ல முடியுமோ? அப்புறம் என்ன இராட்சதன், இராக்கதன்? ஓர் அரக்கன் கவர்ந்தது விதப்பான செயல். அதே பொழுது அரக்கன் என்பது பொதுமைப் பெயர்.

எப்படி வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்பவை பொதுமைப் பெயரோ, அதைப் போல அரக்கர் என்பதும் பொதுமைப் பெயரே! பொதுவாகப் பொதுமைப் பெயர்கள் எல்லாம் விதப்பான பொருளில் எழுந்து நாளாவட்டத்தில் பொதுமைப் பட்டுப் பின் மற்ற விதப்பான பொருண்மைகளையும் குறிக்குமாப் போலப் பேச்சில் பயன்படுவது பல மொழிகளிலும் நடப்பது தான்.

அமெரிக்காவில் கருப்பர் அல்லாதவருக்கு, கருப்பர் மேல் இருக்கும் ஓர் சுமையேற்றிய பார்வையை இங்கு குறிப்பிட விழைகிறேன். 1980ல் ஒருமுறை மாண்ட்ரியாலில் இருந்து என் குடும்பத்துடன் அமெரிக்காவின் கிழக்குக் கரை நகரங்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே வாசிங்டன் நகருக்கும் போக முற்பட்டேன். மாண்ட்ரியாலில் என்னோடு இருந்த பல தமிழரும்/இந்தியரும், கனேடிய வெள்ளைக்காரர்களும், என்னைக் கலவரப்படுத்தி "வாசிங்டன் என்பது கருப்பர்நகரம். நீ கவனமாக இருக்க வேண்டும்; பொது இடங்ளிலும், பேருந்து, தொடரி (train) போன்றவற்றிலும் உன் உடமை, குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்" என்றெல்லாம் அவரவரின் பொதுப் புத்திக்கு ஏற்பச் சொல்லி கருப்பர் மேல் ஒரு பூதகரத் தன்மையை எனக்கு ஊட்டினார்கள். நானும் கலவரப்பட்டுத் தான் வாசிங்டன் போனேன். ஆனால் அங்கு நடந்ததே வேறு கதை. (அதை இங்கு சொன்னால் தடம் மாறிவிடும்). பின்னால் என் முட்டாள் தனம் கண்டு நானே வெட்கப் பட்டுப் போனேன். "கேப்பையில் நெய்வடிகிறது" என்று சொன்னால், கேட்பவனுக்கு எங்கே புத்தி போயிற்று? - என்று நினைத்து அமைந்துகொண்டேன். வெகு எளிதில் ஆதிக்கப் பார்வை என்பதைப் பொதுப்புத்தி மூலம் புதியவருக்கும் பரவி விடும் உலகம் இது.

பொதுவாக ஆதிக்கக்காரர்கள் தங்களுடைய குமுகப் பார்வையை தாங்கள் கையாளும் மொழிக்குள்ளும் சுமையேற்றி வைப்பார்கள். விவரம் தெரியாத மற்றவரும் தற்சிந்தனை இல்லாமல் அந்த ஆதிக்கப் பார்வையை தம்மை அறியாமலே கைக்கொள்ளுவார்கள். "கருப்பரா? கவனம்" என்ற தொடர் எவ்வளவு சுமையேற்றிய பார்வையோ, அதே போல "கிராதகன்" என்ற சுமையேற்றிய பார்வையும் வேத நெறியின் காலத்தில் இருந்தே நாவலந்தீவில் பரப்பப் பட்டிருக்கிறது. (எப்படி மேல்சாதி இளைஞரிடம் ஆதிக்கச் சிந்தனையாளர் கீழ்சாதியார் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒருசார்ப்பட இயக்கி வைப்போர்களோ அதே போல, இன்னொரு மதத்தாரை "கொம்பு முளைத்தவர், பயங்கரவாதிகள்" என்று பொதுப்புத்தியில் சுமையேற்றி வைக்கும் அடிப்படை மதவாதிகள் போல) "கிராதகன்" என்ற சொல்லும் இந்தியர்களின் அடிமனத்தில் சுமையேற்றப் பட்டிருக்கிறது.

கிராதர் என்பவர் கருத்தவர்களே - கருப்பானவர்களே! இவர்களைத்தான் இன்றைய மாந்தவியல் Mon-khmer என்றும். முண்டா மொழி பேசுகிறவர்கள் என்றும் கூறும். இவர்களே இன்றைக்கும் வடபுலத்தின் ஆதிக் குடிகள். கருத்தர் என்ற நிறவழிச் சொல்லை நாளாவட்டத்தில் சுமையேற்றி வடமொழியின் வழியாக இந்திய மொழிகள் பலவற்றிலும் "கிராதகன்" என்ற கொடுமைப் பொருள் கொண்ட சொல்லை உருவாக்கவில்லையா? கிராதகன் கொடுமையானவன் என்ற இரண்டாம் வழிப் பொருளை வைத்துக் கொண்டு முதற்பொருளை விட்டொழிப்பது சிந்தனைத் தாக்கம் தானே? முதற்பொருள் கருப்பு என்பதே. "அவன் கருப்பா, அப்பொழுது கிராதகன் என்பது சரிதான்" என்று எத்தனை மக்கள் மனத்தில் அனிச்சைச் செயலாய் சொற்கள் ஆளப்படுகின்றன? இத்தனைக்கும் இன்று புனிதம் என்று சொல்லப்படும் கங்கை எனும் கருப்பு ஆற்றிற்குக் கூட முதலில் கிராத் என்ற பெயர்தான், இருக்கு வேதம் முடிந்த காலத்தில், இருந்திருக்கிறது.

இருக்கு வேதத்தின் நாயகர்களான திவோதசும், அவன் மகனான சுதாசும் கி.மு.1200 களில் ஆரிய சப்தசிந்துவில் இருந்த சம்பரனென்னும் கிராத அரசனுடன் போர் புரிந்து அவர்களை மலைக்கு ஓடச் செய்து தங்கள் ஆட்சியை நிலைத்துக் கொள்ளுவார்கள். இருக்கு வேதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இதைப் பற்றித் தான் பேசுகிறது. "வேதத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது" என்ற கற்பனை வாதங்களைத் தூக்கி எறிந்து இருக்கைக் கூர்ந்து படித்தால், "அது வெற்றி பெற்றவர் எழுதிய இலக்கியம், தாங்கள் வெற்றிபெறுவதற்காகத் தங்கள் தெய்வங்களிடம் வேண்டிக் கொண்ட முல்லைநிலப் பாடல்களின் தொகுப்பு" என்பது புரியும். (வேதம் அநாதியானது; அது 4000, 5000 ஆண்டுகளுக்கு முந்தியது என்ற கருத்தை நான் ஏற்பவன் அல்லன். எனக்குக் காதுகுத்தி மிகுந்த ஆண்டுகள் ஆயிற்று. பல ஆய்வாளர்களும் கி.மு.1200 யைத்தான் இருக்கு வேதத்தின் தொடக்க காலமாகவும் கி.மு.1000 ஐ அதன் இறுதிக் காலமாகவும் சொல்லுகிறார்கள்.)

வரலாற்றிற்குச் சற்று முற்பட்ட காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மக்கள் பெரும்பாலும் நிறம் பற்றியும், ஓரளவு இடம் பற்றியுமே, அறியப் பட்டார்கள். இனக்குழுக்கள் காலத்தில் அது இயற்கையே. மேலே கொடுத்த பட்டியலில் வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்ற எல்லாச் சொற்களுமே நிறத்தை ஒட்டி ஏற்பட்ட பழைய சொற்கள் தான்.

ஒவ்வொரு சொல்லாக எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

முதலில் வரும் சொல் பார்ப்பனர். கீற்று வலைத்தளத்தில் வரும் செய்திமடல் சூலை 2006ல் "பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?" என்ற கட்டுரையை இரா.மதிவாணன் எழுதியிருப்பார். அதில் பால்-பார்ப்பு-பார்ப்பார் என்று வெண்மைநிறம் கருதியே பார்ப்பனர் என்ற சொல் எழுந்தது என்று அழுத்தமாக நிறுவியிருப்பார். (இன்றையப் பார்ப்பனர் பலரும் நிறம் மாறிக் கிடப்பது வரலாறு 3200 ஆண்டுகள் நகர்ந்துவிட்டதை உணர்த்துகிறது.) பேரா. இராகுல சங்கிருத்தியாயனும், "ரிக்வேத கால ஆரியர்கள்" என்ற தன் பொத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் (வர்ணமும், வர்க்கமும்) இருக்கு வேதத்தின் பல செய்யுட்தொகுப்புகளை எடுத்துரைத்து ஆரியரின் வண்ணம் பால்நிறம் என்றே நிறுவுவார். (ஆரியர் என்று ஒருவரும் இல்லை; ஆரியர் அல்லாதவர் என்று ஒருவரும் இல்லை என்று பூ சுற்றப் பார்க்கும் வாதத்தைப் புறம் தள்ளுவோம்.) ஆரியரின் முடி வண்ணம் இரோப்பியர் பலரைப் போலத் தீ நிறம் - பொன் நிறம் தான்; blonde.

தேவர் என்ற சொல் தீயென்னும் சொல்லில் இருந்து கிளைத்தது என்று பாவாணர் தன் நூல்களில் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார். தேவர் என்பவர் பொன் நிறத்தவர்; பொன் முடியாளர்.

(வெள்ளைக்காரர் என்ற சொல்லுக்கு நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை. அதே போலக் கருத்தர், கருப்பர் என்பதற்கும் நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை.)

நாகர் என்பவரும் கருப்பரே. யா என்னும் கருமைக் கருத்தில் இருந்து ந்யா>ஞா>நா என்ற வளர்ச்சியில் நாகர் என்ற சொல் பிறக்கும். (தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகப் ஆய்வறிஞர் ப.அருளியாரின் "யா" என்ற கருவூலம் படித்து ஓர்ந்து பார்க்க வேண்டிய பொத்தகம்.) நாகரின் சுருக்கம் தான் நக்கர் என்பது ஆகும். நக்கவாரம் என்னும் nicobar -இல் வசிக்கும் மக்களை நக்க சாரணர் என்றே மணிமேகலை குறிக்கும். நக்கர் என்ற சொல் தெரிந்தோ தெரியாமலோ இந்தையிரோப்பிய மொழிகள் எங்கும் பரவி இன்று உலகெங்கும் nigger, negro என்று பரவிக் கிடக்கிறது. (இதையெல்லாம் சொன்னால், இது என்ன அபத்தம், மம்போ-ஜம்போ என்று சொல்லுவதற்கும் கேலிசெய்வதற்கும் பெயரில்லாத சிலர் முன்னிகை தர முன்வருவார்கள். இவர்களின் வறட்டுத் தனத்திற்கு எல்லை இல்லை. நாவல் பற்றிச் சொல்ல வேண்டியது நிறையக் கிடக்கிறது. அதற்கும் இன்னொரு நாள் வரவேண்டும்.)

இயக்கர் என்ற ஈழத்தீவின் பழங்குடிகளும் (இவர்களின் தலைவனாகக் குபேரனை வடமொழித் தொன்மங்கள் உருவகஞ் செய்யும்) கருப்பரே. யா என்னும் வேரின் வழி யக்கர் இயக்கராவர்.

யாவகர் (கருப்பர்) இருந்த தீவு யாவகம்>ஸ்யாகவகம்>சாவகம் = java என்னும் இந்தோனேசியத் தீவு. வாரணர் என்பரும் கருப்பரே. வாரணத் தீவு = borneo தீவு.

(இன்னும் சொன்னால் சேரர், சோழர், பாண்டியர் என்பவை கூட நிறத் தொடர்பில் பண்பாடு ஒட்டிய பெயர்கள் தான். அவற்றின் விளக்கத்தை இங்கு சொல்லாமற் தவிர்க்கிறேன்.)

ஆகக் கருப்பர் தென் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மிகுந்தே இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் கி.மு. 60000 ல் தொடங்கிய கருப்பர் சோமாலியா, தெற்கு அரேபியா, ஈராக், ஈரான், கூர்ச்சரம், மாராட்டியம், கொண்கானம், சேரலம், பாண்டியம் (அங்கிருந்து ஒரு ஈற்றாக ஈழம்), சோழம், கலிங்கம், அங்கம் எனக் கடற்கரை வழியே போய், பின் தென்கிழக்கு ஆசியா வழியாக முடிவில் ஆத்திரேலியா வரை இன்னொரு ஈற்றாக அங்குள்ள பழங்குடிகளாக கி.மு.40000த்தில் முடிந்ததாக அண்மைக்கால Y chromosome மாந்த ஆய்வு ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. நம்முடைய பிரான்மலைக் கள்ளரை ஆய்வு செய்திருக்காவிட்டால் இந்த மாந்தப் பரம்பல் தெரியாமலே போயிருக்கும். இந்த ஆதிக் கருப்பரை M130 வகையினர் - கடற்கரை மக்கள் - coastal people - என ஈனியல் (genetics) குறிக்கும்.

கருப்பரும் வெளுப்பரும் இந்தத் துணைக்கண்டம் வந்தது போக இன்னும் சில இடைப்பட்ட நிறத்தவரும் இங்கு வந்து சேர்ந்த மற்றவர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் M20 எனப்படும் இந்தியர்கள் (இவர்கள் இங்கு வந்து சேர்ந்து 35000 ஆண்டுகள் ஆகிவிட்டன; திராவிடர் எனப்படுவோர் இவர்தான். என்னதான் இந்துத்துவக் காரர்கள் "திராவிடம் என்பது மொழி பற்றிய கருத்தீடு; அதை இனங்கள் பற்றிய முடிவிற்குள் நுழைக்கக் கூடாது" என்று முறுக்கிக் கொண்டாலும் அறிவியல் அப்படித்தான் போகிறது), 9000 ஆண்டுகளுக்கு முன்வந்த ஒரு குழுவினர், 3500 ஆண்டுகளுக்கும் முன்னால் வந்த இன்னொரு குழுவினர் ஆகியோராகும்.

"Language of Harappans", "The Civilized Demons: The Harappans in Rgveda" என்ற இரு பொத்தகங்களின் வழியாக அசுரர்/அரக்கர் என்போரை ஆரியருக்கு முன்வந்த கூட்டத்தார் என்று மாலதி J ஷெண்கேயும், "Deciphering the Indus Script" என்ற தன் பொத்தகம், மற்ற கட்டுரைகள் மூலமாய் திரு. அசுகோ பர்போலாவும் இரட்டை நிலைக் குடியேற்றத்தை உணர்த்தியிருப்பார்கள். ஈனியல் குறித்துக் காட்டும் 9000, 3500 ஆண்டுகள் இந்த இரட்டை நிலைக் குடியேற்றத்திற்கு அடையாளம் காட்டுகின்றன.

அரக்கர் (அசுரர்) என்பவருக்கும், தேவர் என்பவருக்கும் இடையே இருந்த போராட்டம், துருக்கியில் ஹிட்டைட் தொடங்கி பாபிலோனியாவில் அசூர் நாகரிகம் வழி (இன்றைய சிரியா அசூர்களின் நினைவில் எழுந்த பெயர்தான். பாபிலோனிய அரசன் அசுர் பனிபால் - இப்படி அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்), இரானில் செண்ட் அவத்தா வரை பல தெற்றுக்கள் தென்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திலும் அடையாளம் தென்படுகிறது. அசுரர்-தேவர் போராட்டம் பற்றிய பல தொன்மங்கள் ஒன்றுக்குள் ஒன்றாய் இந்த நீண்ட நிலப்பகுதியில் உருவெடுத்திருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டமும் ஒரு பகுதியே!

அரக்கர் என்பவர் அரக்கு நிறத்தவர். - கருஞ்சிவப்பு. தமிழ்ப் பொருண்மை தான் சரியான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. இன்றைக்குக் கருப்பருக்கும் வெள்ளைக்காரருக்கும் இடையில் coloured என்று சொல்லுகிறார்களே, அந்த கலப்பினத்தவர் போல இருப்பது அரக்கு நிறம். அமெரிக்காவில் coloured என்பவரை வெள்ளை நிறத்தாருடன் யார் சேர்த்துப் பேசுகிறார்கள்? அவரும் கருப்பு நிறத்தாரின் தாயாதியாகத்தானே எண்ணப் படுகிறார்?

வருணம் பற்றி இவ்வளவு எழுதியதற்கு நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் வருணம் நிலைக்க வேண்டும் என்று சொல்பவன் அல்லன். நம்மை அறியாமலேயே வருணச் சொற்கள் சுமையேற்றிய நிலையில் நம்மால் பயன்படுத்தப் படுகின்றன என்பதை இங்கு உணர்த்த வேண்டியிருந்தது. அரக்கன் என்ற சொல்லை ஏரணத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.

நடைமுறையில் "அரக்கன் கருப்பனோடு சேர்த்தே எண்ணப் படுவான்". இருக்கு அப்படித்தான் சொல்லுகிறது. அடுத்த செய்திக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, September 22, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1

அண்மையில் "இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில் திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம் 378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி அந்தப் பதிவிலும், அதன் பின்னூடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. "அப்படி ஒரு கவனிப்பு அந்தச் சொல்லுக்கு ஏன் வந்தது?" என்று முதலில் எனக்குப் புரிபடவில்லை. "வௌவியவன் தமிழன் அல்லன், அரக்கனே! தமிழரையும், அரக்கரையும், (அதே போல தமிழரையும், குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது" என்ற கருத்தும் அந்த இடுகையில் உணர்த்தப் பெற்றது. இந்த உணர்விப்பினுள், "அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?" என்ற கேள்வியும் கூடத் தொக்கி நிற்கிறது. (பொதுவாய் இராட்சசன், இராக்கதன் என்ற சுமையேற்றிக் கிடக்கும் வட சொற்திரிவுகளைக் காட்டிலும் அரக்கன் என்ற எளிய தமிழ்ச் சொல்லின் பொருண்மையை நேரடியாய்ப் பார்ப்பது நம்மைச் சரியான புரிதற் பாதையில் கொண்டு செல்லும். எங்கும் வடமொழிக் கண்ணாடியை வைத்துக் கொண்டே, வழி தேடுவது நம்மில் பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. இதில் திராவிடச் சிந்தனையாரும் விதிவிலக்கல்ல போலும். வேதநெறி, மனுநீதிகளின் இடைவிடாத் தாக்கத்தால், ஒருசார்க் கோடலாய்த் தமிழர், தம் சிந்தனை இழப்பது வருத்தமாய் இருக்கிறது.)

"அரக்கர் என்பவர் யார்?" என்ற கேள்விக்கு நாம் போகுமுன்னால், குறிப்பிட்ட புறம் 378 பாடலின் காலத்தைப் புரிந்து கொள்ளுவது நலம் பயக்கும். இந்தப் பாடல் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை முன்னிறுத்தி, ஊன்பொதி பசுங்குடையார் பாடியது (பாடாண் திணை, இயன்மொழித் துறை).

[ஊன்பொதி பசுங்குடையார் என்பது புலவரின் இயற்பெயரல்ல; காரணப் பெயர். தென்பாண்டி நாட்டில் இன்றும் கூடப் பெரும் விழாக்களில் (காட்டாக கோயில்களில் ஆடி மாதம் நடைபெறும் படையல்களில்) பெரும் பானைகளையோ, மாழைக் (metallic) கலசங்களையோ, தேடிக் கொண்டு இருக்காமல், பச்சைப் பனையோலையில் பின்னிய கூடைகளையே, விழாச்சோறு முகந்து கொள்ளவும், ஊன் போன்றவற்றைப் பொதிந்து கொள்ளவும், பயனுறுத்துவார்கள். பசுங்குடை என்ற சொல்லாட்சி பசுங்கூடையை உணர்த்தும் திரிவாகும். பூக்குடல் என்பது பூக்கூடையை உணர்த்துமல்லவா? அதைப் போல குடை என்ற சொல் இங்கு கூடையை உணர்த்தியது. ஊன்பொதி பசுங்குடை என்ற அழகான சொல்லாட்சியைத் தன்னுடைய வேறொரு பாவில் இந்தப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அந்தச் சொல்லாட்சி உடைய பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. தொகுப்பாளரின் உரையை வைத்தே புலவரின் பெயர்க்காரணத்தை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.] இதே அரசனை இதே புலவர் புறம் 10 (பாடாண் திணை, இயன்மொழி, பூவைநிலைத் துறை), புறம் 203 (பாடாண் திணை, பரிசில் துறை), புறம் 370 (வாகைத் திணை, மறக்கள வழித் துறை) ஆகிய பாடல்களிலும் பாடியிருக்கிறார். இது தவிர இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகம் 375 இலும் இளம்பெருஞ்சென்னி என்ற குறிப்பு இருக்கிறது.

இளஞ் சேட்சென்னியும், இளம் பெருஞ்சென்னியும் ஒரே ஆளாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தமிழிய மொழிகளின் சொல்வளத்தைக் கவனித்துப் பார்த்தால் புரிபடும். சேடு, சேட்டு என்பவை உயர்வு, பெரியநிலை, தொலைவு போன்றவற்றைப் பழந்தமிழிற் குறிக்கும். சேண்மை என்ற சொல்லும் கூட இன்றைக்குத் தொலைவைக் குறிப்பது தான். மலையாளத்தில் பெரியவனைக் குறிக்கச் சேட்டன் என்றும், பெரியவளை சேட்டத்தி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா? சேள் என்பது தான் இதன் வேர். மூவேந்தர்களில் பெருஞ்சேரல், நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, நெடுஞ்செழியன், பெருங்கிள்ளி, பெருவளத்தான், மாவளத்தான், பெருஞ்சோழன் என்று சொல்லப்படும் பெயர்கள் பெருஞ்சென்னி - சேட்சென்னி என்ற பெயரையும் இயலுமை ஆக்குகின்றன. இளஞ்சேட்சென்னி என்பவன் இன்னொரு சேட்சென்னியின் இளவலாய் இருந்திருக்கலாம்.

இந்தச் சோழன் இளஞ்சேட்சென்னியை, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், புறநானூற்றுத் தொகுப்பாளர் குறிப்பிடுவார். பாழி என்ற பெயரில், தமிழ்கூறும் நல்லுலகில், சங்க காலத்தில், பல ஊர்கள் இருந்திருக்கின்றன. பொதுவாய்ப் பாழி என்பது இயற்கைக் குகையைக் குறிக்கும். (ஆசீவகத் துறவிகளின் வாழ்விடங்கள் பாழி என்றே நம் இலக்கியங்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி என்பது பொதுவாய்ச் செயினர், போதியர் ஆகியோரின் இருப்பிடங்களைக் குறிக்கும்.) செருப்பாழி என்பதில் வரும் செரு என்பது திரு என்ற பொருள் கொண்ட ஒரு முன்னொட்டு. (சேரே திரட்சி என்பது தொல்காப்பிய உரியியல்; செருப்பாழி என்பது பெரிய, திரண்ட குகை என்ற பொருள் கொள்ளும்.) செரு என்ற முன்னொட்டு திரு என்ற பொருளைக் குறித்ததற்குச் சான்றாக, திருத்தணிகையையைச் செருத்தணி என்று சொல்லும் வழக்கம் அகரமுதலிகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. வடுகரைப் பெருஞ்சென்னி வெற்றி கொண்ட செய்தி புறம் 378 இலும், அகம் 375 இலும் வருவதால், வேங்கடத்தை ஒட்டி இந்தச் செருப்பாழி இருந்திருக்கலாம். (சரியான இடத்தைக் குறிக்க முடியவில்லை.)

சென்னி என்பது ஓர் இனக்குழுப் பெயர். (சென்னியர் என்ற சொல்லும் செம்பியர் என்ற சொல்லும் ஒரே வேரில் உருவானவை தாம்.) சோழர்கள் தொடக்க காலத்தில் பல்வேறு பகுதிகளில் (அழுந்தூர், ஆமூர், கழார், குடந்தை, பருவூர், பெருந்துறை, போர், வல்லம் ஆகிய ஊர்கள்) தனித் தனி இனக்குழுக்களாய் கி.மு. 500/400க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வோர் இனக்குழுவும் இன்னொன்றை வென்றி கொண்டு, இணைந்து, பின்னர் பெரும் இனக்குழுக்களாகி, சென்னி, கிள்ளி என்று இரு பெரிய இனக்குழுக்கள் மட்டுமே கடைசியில் அமைந்து, முடிவில் பெருஞ்சோழராய் உருவாகி இருக்கிறார்கள்.

கி.மு. 500/400க்கு அண்மையில் அழுந்தூரில் தொடங்கிய சென்னி வகைச் சோழர் கொஞ்சம் கொஞ்சமாய் பெருஞ்சோழராகி, நெய்தலங்கானலுக்கு வந்து (நெய்தலங்கானல் என்பது காவிரிப்பூம் பட்டினத்திற்கு மிக அருகில் உள்ள ஊர்), முடிவில் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டதும், கிள்ளி வகைச் சோழர்கள் இதே போலச் வேறு சிறிய ஊர்களில் தொடங்கி, முடிவில் உறையூரைத் தலைநகராக்கி ஆண்டதுமாய் இருக்கும் தொடக்க காலச் சோழர் வரலாற்றை சங்க இலக்கியங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே பொழுது சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக்குழுவின் தலைவர்களாய் வேந்தர்கள் கி.மு.7 ஆம் நூற்றாண்டு அளவில் இருந்ததைத் தொல்காப்பியம் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.ஆகச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்ற இரண்டு தரவுகளையும் பார்க்கும் போது, கி.மு.700ல் இருந்து கி.மு.500 வரை ஒரு 200 ஆண்டு காலத் வரலாறு இன்னமும் தெளிவு படாமல் இருக்கிறது.

சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக் குழுக்களின் தோற்றம், வரலாறு, மரபுகள், தொன்மங்கள் பற்றி இந்த இடுகையில் நான் விவரிக்கவில்லை. அதற்கு இன்னொரு இடுகைதான் செய்ய வேண்டும்.

சங்க கால வரலாறு என்பது சரியாக எழுதப் படாமல், கால முரண்பாடுகளோடேயே தான் இன்றும் இருக்கிறது. குறிப்பாக செங்குட்டுவன், கயவாகு என்ற தவறான சமகாலப் பொருத்தலால், கி.பி.171-193 என்று செக்கில் சிக்கிக் கொண்டு, முன்னேற முடியாமல், தமிழக வரலாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் கிடைக்கும் தமிழிக் கல்வெட்டுக்களையும், அகழாய்வுச் செய்திகளையும், சங்க கால அரசர்களின் நாணயங்களையும், சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்க்கும் போது, "செங்குட்டுவன் - முதலாம் கயவாகு ஆகியோர் சம காலத்தவர்" என்ற முன்னீட்டை முற்றிலும் ஒதுக்கினால் தான் தமிழர் வரலாறு சரியாகும் போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்குப் பின்னாலும், புகார்க் காண்டத்திற்கு முன்னாலும் வரும் உரைபெறு கட்டுரைக்கும், சிலம்பின் கடைசியில் வரும் வரந்தரு காதைக்கும் இடையே தெரியும் பெருத்த உள் முரண்பாடுகள் நம்மைப் பெரிதும் ஓர்ந்து பார்க்க வைக்கின்றன. பெரும்பாலும் வரந்தரு காதை என்பது காப்பியத்தோடு ஒன்றுபடாமல், பின்னோர் செய்து ஒட்டியதோ என்று எண்ண வைக்கிறது. அதே போல உரைபெறு கட்டுரையும் ஆசிரியர் இளங்கோவடிகளால் சேர்க்கப் படாமல், பின்னவர்களால் இணைக்கப் பட்டிருக்கக் கூடும். [சிலம்பு பற்றி இங்கு பேசினால் அது வேறு புலனத்திற்குக் கொண்டு போகும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.]

இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எழுந்த அண்மைக்கால இரு வரலாற்று முயற்சிகள் ஆவணப்படுத்தப் பட்டு இருக்கின்றன. [அவற்றில் முதல் ஆவணம் பேரா. பே.க. வேலாயுதம் (பெரியார் ஈவெ.ரா. கல்லூரி, திருச்சி) ப.சீனிவாசன் (திருச்சி நாணயவியல் கழகம்) ஆகியோர் இணைந்து திருச்சி நாணயவியல் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் 23/2/1997 வெளியிடப்பட்ட "சங்க கால மன்னர் வரிசை" என்னும் சிறு கையேடு ஆகும். இரண்டாவது, "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 1" மற்றும் "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 2" என்ற இரு பொத்தகங்களாய், டாக்டர் பத்மஜா ரமேஷ், வி.பி. புருஷோத்தமன் ஆகியோரால் எழுதப்பட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிஐ.டி. வளாகம், தரமணி, சென்னை மூலம் 2000 த்தாம் ஆண்டில் வெளியிடப் பட்டது.]

மேலே சொன்ன ஆய்வாளர்களில், திருவளர். பத்மஜா ரமேஷ், திரு. புருஷோத்தமன் ஆகியோர் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும், உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியும் ஒருவரே என்ற கருத்துக் கொள்கிறார்கள். உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியை முதற் கரிகாலனின் மகனாகவும், இரண்டாம் கரிகாலனின் தந்தையாகவும் பொருநராற்றுப் படை ஆதாரத்தின் மூலம் இவர்கள் அடையாளப் படுத்துவார்கள். அவர்கள் கூற்றின் படி, உருவப்பல் தேர் இளஞ்சேட் சென்னியின் காலத்தில், கிள்ளி வகைச் சோழர்களின் ஆட்சி ஓர் அண்ணுமுடிவிற்குக் (near end) கொண்டு வரப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின் பேரன், இரண்டாம் கரிகாலனின் மகன் ஆன நலங்கிள்ளி - இளஞ்சேட்சென்னி என்ற இரட்டைப் பெயரெடுத்து, கிள்ளிவகை அரசரின் கடைசி அரசனான நெடுங்கிள்ளியைத் தொலைத்தெறிவதோடு, கிள்ளிகளின் குல ஆட்சி உறையூரில் முற்றிலும் முடிந்து போகிறது. தலைநகரும் அதற்கு அப்புறம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து உறையூருக்கே மாறுகிறது.

முன்னே சொன்ன இரண்டு ஆவணங்களையும் படித்தால் ஒன்றிற்கொன்று முரணாகச் சில காலநிலைகளும், உடன்பாட்டில் சில காலநிலைகளும் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த ஆவணங்களை ஆழ்ந்து படித்து அதில் இருக்கின்ற ஒன்றாமைகளை (inconsistencies) உணர்ந்ததால், மூல இலக்கியங்களையும், கல்வெட்டு விவரங்களையும், மீண்டும் படித்து, சங்க கால நிலையை நான் தற்போது ஆய்ந்து கொண்டு இருக்கிறேன். சங்க இலக்கியப் பாடல் எழுதியோரையும், பாடப்பட்டவரையும் பொருத்தி இந்தக் காலத்தியப் பிணைய அலசல் (network analysis) முறை மூலம் என் ஆய்வு நடத்தப் படுகிறது. ஆய்வு முடியச் சற்று காலம் ஆகலாம்.

இப்போதைக்கு நான் முந்தைய ஆய்வாளர்களின் முடிவுகளையே இங்கு கொடுக்கிறேன். ஊன்பொதி பசுங்குடையாரின் பாடற்காலத்தை, மேலே சொன்ன முதல் ஆவணத்தின் மூலம் கிட்டத் தட்ட கி.மு.325 - 250 என்றும், இரண்டாம் ஆவணத்தின் மூலம் கி.மு.250-225 என்றும் முடிவு செய்யலாம். ஆக இராமகாதை பற்றிய செய்திகள் கி.மு.250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப் பட்டதாகச் சொல்ல வேண்டும்.

சங்க இலக்கியத்து இராம காதைச் செய்திகளுக்கு புறம் 378 தவிர, அகம் 70, கலி - 38 என இன்னும் இரு சான்றுகளும் உண்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பழமொழி நானூற்றிலும் ஒரு குறிப்பு உள்ளது. "இராமகாதை வரலாற்றுச் செய்தியா, அன்றி தொன்மச் செய்தியா?" என்பது அவ்வளவு முகன்மையானது அல்ல. இங்கே காதுற்ற செய்தி காதையாயிற்று. அவ்வளவு தான். அதைத் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தத் தடை இருக்க முடியுமோ? அதே பொழுது, அப்படிப் பயனுறுத்தியதாலே "அது வரலாறா, தொன்மமா?" என்ற கேள்விக்கு மறுமொழித்ததாய்க் கொள்ளவும் கூடாது.

இனிப் பாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.