Thursday, February 14, 2019

தானம் தவமிரண்டும்

"தியானம், தவம் இவ்விரண்டும் தமிழ்ச்சொற்களா? 'தானம் தவம் இரண்டும் தங்கா'வென வள்ளுவர் குறிப்பிடும் சொற்கள் மேற்கண்ட சொற்களுக்கு இணையானவை தானா?" என்று சொற்களம் முகநூல் குழுவில் கேள்வி யெழுந்தது. இதற்கான என் மறுமொழி நீண்டது. தவிர,

”தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
 வானம் வழங்காது எனின்”

என்ற, நீத்தார்பெருமையின், 19 ஆம் குறளுக்குப் பெரும்பாலான நூல்களிற் கொடுக்கப்படும் உரையிலிருந்து நான் வேறுபடுவேன். முதலில் தானம், தவமென்பவற்றின் சொற்பிறப்பைப் பார்ப்போம்.

பட்டறியும் காட்சிகளைச் சில அடையாளங்களோடு பொருத்தி நாம் மூளையின் நினைவகத்தில் பதிகிறோம். மூளையென்பது, மேல் அடி எனும் பகுதிகள் கொண்டது. மேல்மூளையில் நினைவகமும், அடிமூளையிற் கட்டுமையமும் உள்ளன. மூளைப்பதிவுகளை மீள்கொணர்வதே (முன்>) முன்னல், (உல்>உள்>) உள்ளல், (முன்>உன்>உன்>) உன்னல், (உல்>ஒன்> ஒன்று>) ஒன்றல், (உள்>ஒர்>ஓர்>) ஓர்தல், (கள்>கண்>) கண்ணல், (கல்>கரு> கருது>) கருதல், (செ>செத்து>சித்து>சிந்து>) சிந்தனை, (துல்>துன்>) துன்னல்/துன்றல், (முன்>நுன்>நின்>) நினைதல் போன்ற சொற்களால் உணர்த்தப் படுகிறது. பொதுவாகப் பொருந்தலையும், விதப்பாய் வேறுபொருள்களையும் இவற்றடிப் பிறந்த பன்னூறு சொற்கள் குறிக்கும். இவை எல்லாவற்றையும் சங்கதப்படுத்தியே பொருள்காண்பது நம்மை அடிமைத்தனத்திற்கே இட்டுச் செல்லும். எது முந்தி என்பதில் ஒரு சிலர் குடுமிப்பிடிச் சண்டை போடலாம். அது வேறு கதை.

மோனியர் வில்லியம்சு பார்த்தால், ஆத்மனே பாதப் படி, மந்நெனும் சங்கதத் தாது 8.4 ஆம் வகை சேர்ந்ததென்றும், பாணினியின் தாதுபாடப் படி, xxx, 9; xxv, 670 இன் வகைப்பட்டதென்றுஞ் சொல்லும். இதன் பொருள் to think, believe, imagine, suppose, conjecture என்பதே. இதன் வழி சங்கதச்சொற்கள் பல. மந, மநந, மநஸ், மநு, மநுஷ், மநோ, மந்த்து, மந்த்ர, மந்த்ரி போன்றவையும் பிறவுமாகும். மந்நுக்கும் முந்தையதாய் முல்*>முன்>மன் எனும் வேரைத் (முன்-னல் வினையைத்) தமிழ்ச் சொற்பிறப்பியல் சொல்லும். (”வேறு பல முன்னிய விரகறி பொருந - பொருநராற்றுப்படை 3) கன்னடத்திலும் முந்நு உண்டு. ஞாவகம் கொள்ளுங்கள். தமிழின் மொழியீற்று னகரம், நகரத்தின் போலி. ”வெரிந்” தவிர்த்து சொல் முடிவில் னகரமே ஈற்றாகும். இதுபோல் மு-வும் நு வும் சொல்தொடக்கப் போலிகள்.’ மன்>மன்னு, மனம்/மனசு, மனனம், மன்>மான்>மாந்து, மாந்தன், மந்திரம், மந்திரி என்பவற்றைத் தமிழென்றே கொள்ளலாம். மன்னுந் திரம்(>திறம்) தமிழில் மந்திரமாகும்.

முன்சொன்னதுபோல் துல்>துன்>துன்னல்>துன்றல், பொருந்தலைக் குறிக்கும். துல்>தல்லு-தல்= பொருந்தல், புணர்தல். துல்>தல்>தல்லை>தலை = உடம்போடு பொருந்தியது. ஒரு நீளத்தண்டில் 2 பக்கம் இருப்பதும் தலையே. முகமுள்ள தலை கவனம் பெறும். வாலிருப்பது கவனம் பெறாது. பொருந்தலால், தலைக்கு இடமென்றும் பொருளுண்டு. “வளித்தலைஇய தீயும்- வளியின் பாற்பட்ட தீயும்” என்பது புறம் 2:4; ”மலிர்புனல் தலைத் தலைஇ”- பரி. 6:3; ”நனந்தலை நல்லெயில்”- புறம்.15, அருவா வடதலை என்பது இற்றை வேலூர், சித்தூர், நெல்லூர் மாவட்டங்களைக் குறிக்கும். சீத்தலைச் சாத்தனார், சீத்தலையைச் சேர்ந்தவர். பேட்டைவாய்த் தலை= சிராப்பள்ளிக்கு அருகிய ஊர். ”தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்க”- கம்பன் பாட்டு. துல்>தல்>தல்லம்>தலம், இடத்தைக் குறிக்கும். பல வளங்கள், மக்கள், விலங்குகள் பொருந்தியவிடம், தலம் எனப்படும். இது ஸ்த்லமென வடக்கே திரியும். தலம், தளமுமாகும். தளத்தைத் தளியென்பார். கோயிலெனும் விதப்புப் பொருளும் பெறும்.

தலவாடம்>தளவாடம்= குறிப்பிட்ட வேலைக்குப் பொருந்துங் கருவி (tool). ஒன்றை இன்னொன்றோடு பொருத்துவது/கட்டுவது தளைத்தல். யாப்பில் விதவிதமாய்ச் சீர்கட்டுவது தளை. தல்லு>தழுவு-தல்= பொருந்தல்; ’தமிழ் தழீய சாயகவர்’- சீவக, 2026. தல்>தருகு-தல் என்பது ஓரிடத்தில் பொருந்துவது. தல்>தல்ங்கு>தங்கலைக் (= இருத்தல், வைகல்) குறிக்கும். நாம் ஒன்றில் மேல் தங்குகிறோம். அது நம்மைத் தங்குகிறது. தங்கு>தாங்கு>தாங்கல்; தங்கு> தஞ்சு>தஞ்சம்= அடைக்கலம். பொருந்திய பின் அதற்கும் மேம்படல் தருக்கல் ஆகும். தல்>தருக்கு= மேம்படல், மிகுத்துக் கூறல். தருக்கு>தருக்கம்= சொல்லால்/பொருளால்/பேச்சால் ஒருவர் இன்னொருவரில் மேம்படுவது. தள்>தள்>தள்+ந்+து= தண்டு>தண்டல்= சேர்த்தல், திரட்டல், இணைத்தல்; இதே போல் தாணுதல் = நிலைபெறுதல்;

தானு>தானித்தல் (அல்லது தானு>தாணு>தாணித்தல்)= பதித்தல்; த(ல்)ந்து> தந்து= கயிறு. தல்+ம்+பு= தம்பு>தம்புதல்= கட்டுதல். தம்பு>தம்பம்>ஸ்தம்பம்= (ஏதோவொரு விலங்கை அல்லது பொருளை நகர விடாது) கட்டும் தூண். தல்>தலு>தறு>தறு-தல்= கட்டல் தறு>தறை>தறை-தல்= ஆணியடித்து இறுக்கல். தன்னுதல், தன்றுதல், தான்றுதல் போன்றவையும் பொருந்தல் பொருள் கொண்டவையே. தன்>தனை என்பது எண்ணிக்கை, அளவைப் பொருத்திச் சொல்வது. இது எத்தனை மணங்கு?, எத்தனை படி, எத்தனை சதுர அடி, எத்தனை மாத்திரி (metre), எத்தனை எண்ணிக்கை என விதவிதமாய் விரியும். இத்தனை. அத்தனை என்றுஞ் சொல்கிறோம். இனித் தான்>தானம் என்பது இடங்குறிக்கும் சொல். இது பூதி (physical) இடத்தையும் சிந்தனை இடத்தையும் குறிக்கும்.

[ஆங்கிலத்தில் வரும் think (v.) Old English þencan "imagine, conceive in the mind; consider, meditate, remember; intend, wish, desire" (past tense þohte, past participle geþoht), probably originally "cause to appear to oneself," from Proto-Germanic *thankjan (source also of Old Frisian thinka, Old Saxon thenkian, Old High German denchen, German denken, Old Norse þekkja, Gothic þagkjan) என்பதுங்கூட நம்முர்த் துன்னலோடு தொடர்புடையதாய்த் தெரிகிறது/] .

ஒரு எண்ணைக் குறிக்கும்போது ஒன்றாம் தானம், பத்தாம் தானம், நூறாம் தானம் .....என்று பலவாறாய்ச் சொல்கிறோமே அந்த place இற்கும் இதே சொல் தான். இன்னும் போய் இந்துத்தானம் (hindustan), பாக்கித்தானம் (Pakisthan) என்றெலாம் சொல்வதும் இதே பொருள் தான். (இந்தத் தானத்தோடு ஈகை, கொடை என்று பொருள்தரும் தானத்தை அருள்கூர்ந்து குழப்பிக் கொள்ளாதீர். இரண்டும் வேறுபட்டவை. இரண்டையும் குழப்பிக்கொள்ளும் வேலையய்த் தான் பெரும்பாலான உரையாசிரியர் செய்துள்ளார்.) சிந்திப்பது தொடர்பாய், இதே பொருந்தற் பொருளில் தானமென்ற தமிழ்ச்சொல்லின் இடையே யகரஞ் சேர்த்துத் த்யானம் என்று சங்கத்தில் சொல்வார். (ஊற்றுச்சொல் எதுவெனத் தெரியாது இது சங்கத வழிப் பட்டதென எண்ணிக் கொள்வோம்.) ஒரு குறிப்பிட்ட சிந்தனையிடத்தில் ஆழ்வது என்றே பேச்சுவழக்கில் த்யானம் புரிந்துகொள்ளப் படுகிறது. காட்டாக சிவனை நினைத்து, “நமசிவாய” என்றோ, ”சிவசிவ” என்றோ திரும்பத் திரும்பச் சொல்லி எண்ணிக் கொண்டிருப்பதும் த்யானம் தான்,. அலைபாயும் மனத்தை வெவ்வேறு சிந்தனைகளில் மூழ்கவிடாது குறிப்பிட்ட சிந்தனையில் நிலைநிறுத்துவதும் தானித்தலே. (சங்கதத் தாக்கத்தில் இதைத் த்யானிப்பது என்பார்.)

[அடுத்த வளர்ச்சி சற்று நுணுக்கமானது உடல் என்பது ஐம்பூதங்களால் ஆனது ”இந்த உடலின் இயக்கமே உயிர்” என்பது பொதுவான உலகாய்தப் புரிதல். ”உடல் வேறு, உயிர் வேறு. இரண்டுஞ் சேரும்பொழுதே இயக்கம் நடை பெறுகிறது” என்பது ஆதனியற் (ஆன்மீகப்)_ பார்வை  ஆதன் = உயிர் = ஆன்மா) தமிழர் நெடுநாட்கள் முன்னேயே ஆதனியற் பார்வை கொண்டுவிட்டார்.. உயிரும் மெய்யும் பொருந்தியது தல்>தன் எனப் படும். அதாவது தன்மைப் பொருளைத் தாமரையிலை நீர் போல் படர்க்கைப் பகரப்பெயராய்ச் சொல்லப் படும். யான்/ஞான்/நான் என்பது முதல்நிலைப் பகரப்பெயர். தன்>தான் என்பது யான்.ஞான், நானைப் படர்க்கைப் பார்வையில் சொல்லும் பகரப்பெயர். தன்+உ என்பது தனுவாகித் தன்னுடலைக் குறிக்கும். இன்னும் விரிந்து தன்மை/தனம் என்ற சொற்கள் இயல்பு, குணம் போன்றவற்றைக் குறிக்கும். தன்/தனு என்று உயிர்/உடலைப் பிரித்தபின் தனித்தலுக்குப் பிரித்தல் பொருளும் வந்துவிடும்.]

இனித் தவத்திற்கு வருவோம். துல்>துள்>தள்>தள>தளதளப்பு என்பது ஒளிரலைக் குறிக்கும். துல்>துலகு>துலங்கு>துலக்கு>துயக்கு என்பதும் விளக்கம் தான். இவ்வரிசையில், லகரம் ளகரமாயினும் அதே பொருளே. இனித் தள்>தள>தழ>தழலாகும். இது உள்>அள்>அழல் போன்றதே. தழல் இன்னும் திரிந்து தணலும் ஆகும். அடுத்து தழல்> தழலி>தகலி>தகழி>தகழிச்சி என்பது கருப்பூரத்தைக் குறிக்கும். குழ>குக, மழ>மக என்பது போல் தழதழ என்பது தகதக என்றும் பலுக்கப்படும். துல்கு>துகு>திகு>திகழ் =என்பது திங்களைக் குறிக்கும். திகழ்>திகழி>திகதி என்பது சூரியமானக் கணக்கின் படி ஒளிதரும் நாட்களைக் குறிக்கும். வேறுவகையில் சந்திரமானக் கணக்கில் ஒரு திங்களுக்கு 2 பக்கம், அதை சொக்கொளிப்பக்கம் (Suklapaksha), கருநப்பக்கம் (krishnapaksha) என்று இரண்டாய்ப் பிரிப்பர். ஒவ்வொரு பக்கத்திற்கும் 15 திதிகளாய்ச் சொல்வர். திகழ்>திகழி> திகதி>திதி என்று இச்சொல் வடிவு கொள்ளும்.

துள்>து(ல்)கு>துகு>தகு>தகதக என்பது முன்னால் சொன்னதுபோல் ஒளிர்வதற்கு மட்டுமின்றி எரிவதற்கும், வெப்பத்திற்கும் கூடப் பயன்படும் ஒலிக்குறிப்பாகும். துள்>தெள்>தெறூ>தெறுதல் என்பது சுடுதலையுங் குறிக்கும். (குறள் 1104). தகம்= வெப்பம், தகநன்= நெருப்புக் கடவுள்; எரிவு, நீர்வேட்கை; தகவு கொண்ட கல் கல்(ந்)தகம் ஆகும். கந்தகம் காந்தும் (வெப்பங் கொடுக்கும்.) ஆங்கிலத்தில் இதை sulphur என்பார். தகல்= ஒளி;  தகன்= தீ; தகனம்= எரிக்கை; தகனித்தல்= எரித்தல். தகா= பசி, நீர்வேட்கை. தகி= எரி, வெப்பஞ்செய்தல் தகதக>தக>தகு>தகி என இது இன்னும் விரியும். தகிப்பு= எரிப்பு, சுடுகை. தகு> தகம்>தங்கம்= ஒளியால் விளங்கும் மாழை ”சுடச்சுடப் பொன் ஒளிரும்” என்பார்.

மொழியிடையில் ககரமும் வகரமும் போலிகளாகும். நாகற்பழம் நாவற்பழம் என்று சொல்லப்படுகிறதே? தகு>தகம்>தவமாகும். உடலில் வெப்பத்தை உருவாக்கிக்கொள்ளும் செயலான ’தவம்’ தமிழே. பசியிருக்கும் வயிறு சுடும். அதனுட் சுரக்கும் இரப்பைக்காடி எந்தவுணவையும் செரிக்காததால், வயிற்றுச் சுவரைத் தின்று எரிச்சலைக் கொடுக்கும். எரிச்சல் நீள, உடல் வெம்மை கூடும். மற்ற கெடுதல்கள் ஏற்படும். தவு>தவம்= உடலை எரித்தாற்போன்ற துறவறப் பயிற்சி. வெப்பத்தால் உடல்வருத்தி ஐம்புலனை அடக்கல் தகு> தவு>தவம்= உடலை வருத்திக்கொள்வது. இப்படி வருந்துகையில், மனத்தை ஒருநிலைப் படுத்துவது தானம்>த்யானம். தானமும் தவமும் ஒன்று சேர்ந்து அமைவதே துறவியரின் வழி. “உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” என்பது வள்ளுவம். வடக்கே போகப் போக, வகரம் baகரமாகும். தவம்>தபம் ஆவதும் வடபுல வழக்கமே. தவு> தபு>தபஸ் ஆவதும் வடபுலத்திரிவே. தவு>தவி>தவித்தல்= இல்லாமைக்கு வருந்தல். நீர்வேட்கை உண்டாதல் தவு>தவி>தவிப்பு= வருந்துகை, வேட்கை, தவு>தாவு>தாவம்= நீர் வேட்கை; தகு>தகை> என்பதும் தகு>தாகு>தாகம் என்பதும் நீர்வேட்கை தாம்.

தானம் என்பது சிந்தையில் தங்குவது, தவம் என்பது உடலில் தங்குவது. தானம் என்பது கொடையானால் (இத்தானமும் தமிழே.) அது தங்காது. நகர்ந்து விடும். தங்கும் என்ற வினைபற்றியே முன்சொன்ன 19 ஆ குறளுக்கு நான் வேறுபட்டுப் பொருள் சொல்கிறேன். இதுவரை நான்பார்த்த எந்த உரையாசிரியரும் தானத்தைத் த்யானத்தோடு பொருத்தமாட்டார். அந்தளவிற்கு ’த்யானம்’ வடமொழிச்சொல் என்ற கருத்து இங்கு பலர்க்கும் ஊறிவிட்டது. நீத்தார் பெருமையின் குறள் ஒழுங்காய் விளங்க வேண்டும் எனில், இங்கு தானத்தைக் கொடையென்று சொல்லல் தவறு.

”தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
 வானம் வழங்காது எனின்”

என்ற குறளால், ”இந்த உலகில் மழை பெய்யாதிருந்தால் பின் தானமும் (தியானமும்) தவமும் தங்காது” என்றும், :”மழையில்லையெனில் மாந்தம் அழிந்துவிடாதா? - என்றும் உணர்த்துகிறார் வள்ளுவர்.

மழையிலா உலகில் தானமும், தவமும் செய்யமுடியுமா?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 12, 2019

Robot - படுவி

அடுத்துவரும் செபுதெம்பர் 20-22, 2019இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் 18 ஆவது தமிழிணைய மாநாடு நடக்கப்போவதாகவும், அதன் மையக்கருத்தாக Tamil Robotics and Language processing அமையுமென்றும், “தானியங்கிக்கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு” எனும் தமிழாக்கத்தையும் படிக்கநேர்ந்தது. நான் உத்தமத்தை விட்டுவந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது இந்த அறிவிப்பைப் படித்தபோது, சரியான தமிழாக்கத்தை உணர்த்தாதிருக்க முடிய வில்லை. ஆழ்ந்து ஓர்ந்தால், robot- இற்குத் ”தானியங்கிக் கருவி” சரிவராது. automaton- க்குச் சரியாகலாம். நுட்பியலின்படி, இரண்டும் ஒன்றில்லை. ஒரு முறை முகநூல் சொல்லாய்வுக் குழுவில் நண்பர் முத்துநெடுமாறன் bot- இற்கு இணையான தமிழ்ச்சொல் கேட்டதும், கீழுள்ளதை நானெழுதியதும் நினைவிற்கு வந்தது.

அந்த இடுகையைச் சுட்டலாமெனில், உந்தமம் விட்டு வெளிவந்தது போல் சொல்லாய்வுக் குழுவிலிருந்தும் நான் நகர்ந்துவிட்டேன். நான் அங்கிலாத நிலையில் அவ்விடுகையைத் தேடுவது எப்படியென எனக்குத் தெரிய வில்லை. எனவே என் கணியிலிருந்து எடுத்து மீள இடும் கட்டாயம் ஏற்படுகிறது. இம்முறை என் வலைப்பதிவிலிட்டு முகநூற் பக்கத்தில் சுட்டி தருகிறேன். Tamil Robotics and Language processing என்பதைத் ”தமிழ்ப் படுவியியலும் மொழிச் செயலாக்கமும்” என்பதே சரியாகும். மாநாட்டில் தொடர்புள்ளோர் யாரேனும் இதைப் படித்தால் ஒருங்கிணைப்பாளரிடஞ் சொல்லுங்கள். என் பரிந்துரையை ஏற்பதும் ஏற்காததும் அவர் உகப்பு. தமிழ்க்கணிமை இன்றும் எனக்கு நெருக்கமானது. அதில் நடக்கும் தமிழ்த் தொண்டு சிறக்கட்டும்.! 
------------------------------------- 
இய்யெனும் வினையடியில் கிளர்ந்தசொல் இயல்வதாகும். இயல்தல்= to be possible. ”இயல்வது கரவேல்”- ஆத்தி சூடி. to happen என்றும் இச்சொல் பொருள் கொள்ளும். இயைதல்= பொருந்தல். இவையெலாம் இயற்கையோடு பொருந்துஞ் சொற்கள் இவற்றை robotics இல் பயன்படுத்த முடியுமா, தெரிய வில்லை. செய்தலே மாந்தனுக்கானது. செயல்தல்= இயற்கையைச் சேர்த்தோ, மறுத்தோ மாந்தன் செய்வது. செயலில் பல்வேறு கூட்டுவினைகளுண்டு. செய்யும்வினை செய்வினை. இன்னொருவரை செயப்படுத்தும் வினை செயப் பாட்டு வினை. உயர்திணையில் இது இன்னொருவருக்கும், அஃறிணையில் இன்னொன்றுக்கும் ஆகும். மாந்தர்கள் செய்வினையும் செயப்பாட்டு வினையுஞ் செய்வர். robot செய்வது மாந்தர்பார்வையில் செயப்பாட்டு வினையே. தானே சிந்தித்துச்செய்யும் வினை அறிவு robot இற்குக் கிடையாது. என்ன தான் செயற்கையறிவை கூட்டினும், இற்றைநிலையில் செயப்பாட்டு வினை மட்டுமே அது செய்யமுடியும். ஒருவேளை Bicentennial man இல் Robin Williams ஆல் சித்தரிக்கப்பட்ட Andrew போன்ற robot ஆல் எதிர் காலத்தில் முடியலாம்.

செயப்பாட்டு வினையைப் பிறவினையென்றும் புரிந்துகொள்ளலாம். செய் வினையிலிருந்து செயப்பாட்டுவினை ஆக்க, ”படு” என்ற துணை வினையை நாம் பயன்படுத்துகிறோம். ”செய்” வினை கையாலும், வேளாண்மையாலும் எழுந்தது. செய்க்கு மாறாக உழுவென்ற வினையும் உண்டு. இன்றைக்கு இருக்கும் உழைப்பு (உள்>உழு>உழை>உழைப்பு), தொண்டு (தொள்ளுவது தொண்டு, தோண்டு) தொழில் (தொள்>தொழு>தொழில்) போன்ற சொற்கள் எல்லாம் வேளாண்மையில் எழுந்தன. நிலத்தைக்கீறிப் புரட்டுவதில் உழைப்பும், தொண்டும், தொழிலும் அடங்கியுள்ளன. இவற்றோடு தொடர்புள்ள இன்னொரு சொல் அர்>அரி. நுகர்விற்கு முன் நிலத்தின் விளைவை அரித்துப் போடுதல். இதற்கும் மாந்தவுழைப்பு மிகுதி.. அரிதல் அறுதலுமாகும். அண்மைக்காலம் வரை இச்செயல்கள் எல்லாமே மாந்தராலும், மாந்தருக்கு உதவியான கருவிகளாலும் செய்யப்பட்டன. கடந்த 60, 70 காலங்களிற்றான், ஆணைகளைக் கேட்டுச் செயற்படும் robot களின் திறன் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் robot ஐத் தமிழில் எப்படிச்சொல்வதென்ற கேள்வி எழுகிறது. பலரும் ரோபாட் என்றே எழுதுகிறார். எழுத்தாளர் சுஜாதா இயந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால் இதைக் காட்டிலும் பொருத்தமான சொல்லைத் தமிழில் ஆக்கமுடியும். அதற்குமுன் தமிழரிடம் பார்வை மாற்றம் ஏற்படவேண்டும். திராவிட மொழிக்குடும்பத்திற்கும் இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் ஏதோவொரு தொடர்புண்டென்று சிச்சிறிதாய்க் குரலெழுகிறது. இதை Nostratic studies இன் பகுதியாய்க் கொள்வர். நம்மூரில் பேரா. கு,அரசேந்திரன், பி. இராமநாதன் போன்றோர் இதை அழுத்திச் சொல்கிறார். மேலையுலகில் Stephan Hillyer Levitt போன்றோரும் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கியுள்ளார். இணையத்தில் 15, 20 ஆண்டுகளாய் நானிதைச் சொல்லிவருகிறேன். (அதனாலேயே என்னைப் பலருஞ் சாடிப் புறக்கணிப்பதுமுண்டு. கேலிசெய்ததுமுண்டு. ஆயினும் தோன்றியதைச் சொல்லத்தானே வேண்டும்? சங்கதமெனும் பெருந்தடையே நம்மை இதுபற்றி உணரவிடாது தடுக்கிறது. ”சங்கதமே மேடு, தமிழ் பள்ளம்” என்பதும், தமிழுக்கும் மேலைமொழிகளுக்கும் இடையே தென்படுந் தொடர்பு சங்கத வழிப் பட்டதே என்ற கருதுகோளுஞ் சேர்ந்து ஒருவித வழிபாட்டுத் தனத்தையும் உருவாக்குகின்றன. இத்தடையை மீறினாலொழிய நான் சொல்வது புரியாது.)

ஆங்கிலத்தில் வரும் labour, labourer என்பவை தமிழின் உழைப்பு, உழைப்போர் என்பவற்றோடு தொடர்புடையனவாய்த் தோற்றுகின்றன. அதேபோற் செருமனில் வரும் Arbeit ”அரிபடு” தலோடு தொடர்புடையதாய்த் தோற்றுகிறது. ஆங்கிலத்தில் வரும் robot என்ற சொல் சுலாவிக் (slavic) மொழிகளின் வழி செருமானிய arbeit சொல்லோடு தொடர்புடையது.             .     

robot (n.) 1923, from English translation of 1920 play "R.U.R." ("Rossum's Universal Robots"), by Karel Capek (1890-1938), from Czech robotnik "forced worker," from robota "forced labor, compulsory service, drudgery," from robotiti "to work, drudge," from an Old Czech source akin to Old Church Slavonic rabota "servitude," from rabu "slave," from Old Slavic *orbu-, from PIE *orbh- "pass from one status to another" (see orphan). The Slavic word thus is a cousin to German Arbeit "work" (Old High German arabeit). According to Rawson the word was popularized by Karel Capek's play, "but was coined by his brother Josef (the two often collaborated), who used it initially in a short story."

உழுபடுதல், தொழுபடுதல், அரிபடுதல், செயற்படுதல் என எல்லாமும் செயற்பாட்டுத் தோற்றங்கொண்டவை. மேலேயுள்ள robot இல் ro என்பது ஒரு பக்கமெனில், bot என்பது இன்னொருபக்கம். robot இன் முகன்மை ஒரு பக்கம் பட்டு இன்னொருபக்கம் அரி, உழு, தொழு என்று செய்வதிலுள்ளது. படுதல் வினையே robot ஐ நம்மோடு அழுந்த இணைக்கிறது. எனவே மாந்தப் பார்வையில் உழு, தொழு, அரி போன்றவற்றைப் பொதுமைப்படுத்தி ஆணைப் படுவி என்றழைக்கலாம் இன்னுஞ் சுருக்கமாய்ப் படுவிகள் (bots) என்றே அழைக்கலாம். படுவிகள் உருவாவதற்கு முந்தைய காலகட்ட நிலையில்

நாம் உழுகிறோம். நிலம் உழுபடுகிறது.
நாம் தொள்ளுகிறோம். நிலம் தொழுபடுகிறது.
நாம் அரிகிறோம். கதிர் அரிபடுகிறது.
நாம் செய்கிறோம். கருவி செயற்படுகிறது.

படுவிகள் உருவானபின், அவற்றைப் பயனுறுத்திய நிலையில்

நாம் ஆணையிடுகிறோம் படுவி உழுகிறது நிலம் உழுபடுகிறது
நாம் ஆணையிடுகிறோம் படுவி தொள்ளுகிறது நிலம் தொழுபடுகிறது
நாம் ஆணையிடுகிறோம். படுவி அரிகிறது. கதிர் அரிபடுகிறது
நாம் ஆணையிடுகிறோம் படுவி செய்கிறது கருவி செயற்படுகிறது

படுவி, ஒன்றாக மட்டும் இருக்கத்தேவையில்லை. அவை சேரிய படுவிகளும் (series of bots) ஆகலாம் படுவி1 உயர்செயற்கை அறிவுள்ளதாகவும், படுவி 2 அடுத்த செயற்கை அறிவுள்ளதாகவும் ...........................படுவி n செயற்கையறிவு இல்லாததாகவும் ஆகலாம். ஒவ்வொரு படுவிக்கும் பூதியவுரு (physical shpe) இருக்கத் தேவையில்லை. முதல் படுவி உயர்நிலை நிரலாய்க் (high level programme) கூட இருக்கலாம், அடுத்தது தாழ்நிலை நிரலும் (low level programme), சினைகளுங் (physical parts) கொண்ட பூதியகருவி (physical equipment) யாகலாம்.

bot இற்கும் robot இற்கும் என் பரிந்துரை படுவி.

அன்புடன்,
இராம.கி. 
 .

Monday, February 04, 2019

மேகலையும் கேசியும்

”ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்கள் சில தமிழல்ல என உரைக்கப்படுவது சரியா? சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டல கேசி. என்பவற்றில் மேகலை, கேசி என்ற சொற்கள் சங்கதமாகுமா?” என்றும் சொற்களம் முகநூற்குழுவில் கேட்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் ”அதிகாரம்” தமிழே. மேகலை என்றசொல் எளிதானது. அதுவும் தமிழே. அதையறியச் சில மொழி மரபுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியங்கள் என்பன அகரமுதலிகள் அல்ல. அவை ஒருசில குறிப்புகளை மட்டுமே தரும். இலக்கியச் சொற்களின் எல்லா வடிவங்களையும் சட்டெனக் கண்டுவிட முடியாது. சற்று ஏரணம் உடன்சேர்த்து நுணுகியறிய வேண்டும். அடிப்படையில் மேகலையென்பது வேலைப்பாடுள்ள செல்வரின் ஒட்டி யாணம். உடு>ஒடு+யாணம்= ஒட்டுயாணம்>ஒட்டியாணம். உடு= உடலின் நடுப்பகுதி. (இடையென்பார்.) இடையிற்கட்டும் பொன்னாலான யாணம் ஒட்டியாணம். யாணம் என்பது கயிறு, வளையம். கலையாணம் என்பது வெவ்வேறு கற்கள் பொருத்திய யாணம்.

இக்கற்கள் வயிரம்போல் பல்வேறு பட்டதாகலாம். கற்கள்பாவிய அணிகலன் கலை எனப்படும். கற்களில் ஒன்பான் மணிகள் நிறைந்திருந்தால் அவை மணிகள் மேவிய கலையாணமாகும். மணிமேகலை யாணம் என்பது பெருஞ் செல்வர் அணிகலன், ஒவ்வொரு மொழியாரும் தம் பேச்சுநடையில் நீளச் சொற்களைச் சுருக்கிப்பேசுவது இயல்பு. மணிமேகலையாணம், மணிமேகலை என்றே சுருக்கப்பட்டது. அதுவே இலக்கியங்களில் பழகியது. இடம்பொருள் ஏவல்தெரிந்து, பொருள்தரும்படி யாணத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். தமிழ்ப்பேச்சில் பல கூட்டுச்சொற்களில் முன்சொல்லையோ, பின்சொல்லையோ தொக்கி, எல்லோர்க்கும் பொருள்தெரியின், ஒருசொல் புழங்குவது நமக்கியல்பு. காட்டாக, மின்சாரம், தொழில்நுட்பத்தில் சாரம், தொழிலை விட்டுப் புழங்குகிறோமே? தவறாய் உணர்கிறோமா, என்ன?

[இது தமிழில்மட்டும் நடப்பதல்ல. சங்கத்திலுமுண்டு. பல நூற்றாண்டுகளாய் வெறும் ஆற்று நீரையே பார்த்திருந்த, கடலைக் கொஞ்சமுமறியாத ஆரியர், முதன்முதல் கண்ணுக்கெட்டிய தொலைவு அகண்ட கடலைக் கண்டபோது, ”எக்கச்சக்கமான நீர்= குவிந்த நீர்” என்றே சொல்லியுள்ளார். குமுத்தம், சங்கதத்தில் சமுத்ரமாகும். நம்முடைய சலம் (=நீர்) அங்கு ஜலமென்று பலுக்கப்படும். ஜலசமுத்ரமென்பது கடலுக்குச் சங்கதர் இட்ட பெயராகும். நாளாவட்டத்தில் ஜலந்தவிர்த்துச் சமுத்ரம் என்றாலே பொருள் புரிந்து கொள்ளுமாறு புழக்கம் ஏற்பட்டது.]

அடுத்தது சீவக சிந்தாமணி. சீவகன் வடநாட்டுப்பெயர். சிந்தாமணி, ஓர் இரு பிறப்பி. சிிந்தை தமிழ். சிந்தாமணி தமிழும் பாகதமும் கலந்த சொல். வளையாபதியில் வரும் வளையத்தை இக்காலத்தில் வலயம் (வட்டம், region) என்று சொல்வதுபோற் புரிந்துகொள்ளவேண்டும். அது கையிலிடும் வளையம் அல்ல. வளையாபதி என்பான் யாரோவோர் அரசத்தலைவன். அவன்கதை முற்றிலும் நமக்குத் தெரியாது. சிலகுறிப்புகள் மட்டுமேயுண்டு. அடுத்தது குண்டலகேசி. கேசிக்கு முன், முடியென்ற சொல்லைப் பார்ப்போம். முடியும் முன்சொன்ன ஜலசமுத்ரம் போலத்தான்., முடியைத் தனித்துப்பார்த்தால் ”முடிவுள்ளது, ஏதோ முடிவது” என்றே பொருள் கொள்ளும். மயிர்முடி/முடிமயிர் என்பதன் தொகைப்பெயராய்க் கொள்கையில் பொருள் மேலும் விளங்கும். ஓரவையிற் மயிரென்பது நாகரிகமற்றது எனக் கருதியே இடக்கரடக்கலாய் நாம் முடியென்கிறோம். மயிரின் அடிப்படைப்பொருள் கருமையே. கார், கேசம், நவிர், இருமமெனும் வேறு சொற்களாலும் இதை உணர்த்துவோம்.

காரின் முதலொலிப்பைக் குற்றி, ஹகரமாக்கி hair என ஆங்கிலத்தில் சொல்லப்படும். இந்தையிரோப்பிய, தமிழிய உறவு தெரியாத ஆங்கிலச் சொற்பிறப்பியலார் hair (n.) Old English hær "hair, a hair," from Proto-Germanic *hēran (source also of Old Saxon, Old Norse, Old High German har, Old Frisian her, Dutch and German haar "hair"), perhaps from PIE *ghers- "to stand out, to bristle, rise to a point" என்பார். இருமம்>இரோமம்>ரோமம் என்பதில் முதலிகரந் தொலைத்து அதே கரும்பொருளைச் சங்கதமும் உணர்த்தும். இதிலும் பல ஆய்வாளர் தமிழுறவு அறிய மாட்டார். 75000 ஆண்டுகள்முன் ஆப்பிரிக்கா விட்டு வெளிவந்த கருப்புமாந்தன் கருமயிர் கொண்டிருந்தான். ஆப்பிரிக்காவிலேயே அவன் பேசினானா, அன்றி ஆசியா வருகையில் பேச்சு உருவானதா? தெரியாது. ஆனால் செம்மயிரும் (reddish hair), பொன்மயிரும் (golden hair), வெள்மயிரும் (blond hair) அப்போது தோன்றவில்லை. கருமயிர்க் குறிப்பு தமிழின் ஆதிப் பழந்தன்மையை உணர்த்தும்.

கல்>கால்>காள்>கார் போலவே காள்>காயும் கருமைப்பொருள் குறிக்கும். காய்தலென்பது உலர்தல், எரிதல், கரியாதலை அடுத்தடுத்துக் குறிக்கும். காயம், கருநீல வானங் குறிக்கும். ஆகாயம்= அகல விரிந்த கருநீல வானம். எனவே அது வெளி. விண்ணவனை மாயோன், காயாம்பூ வண்ணன் என்பதும் அதே பொருளில் தான். காயாம்பூ= கருநீல வண்ணப்பூ. காயல்= கரிய உப்பங்கழி. காயாம்பூ காசாம்பூ என்றும் சொல்லப்படும். காசு, கருநீலத்தையும், குற்றத்தையும் குறிக்கும். சிலம்பில் (2:74) கோவலன் ”காசறு விரையே - குற்றமிலா நறுமணமே!” என்கிறான். காசமும், கருமை, வெளியைக் (space) குறிக்கும். காசம்>காசரம்= இருள். பல்வேறு மருத்துப்பொருள்களைக் காய்ச்சி கருக்கவைத்துப் பெறுவது காசாயம். ககரச் சொற்களைக் கெகரமாக்கிப் பலுக்குவது ஒருசில வட்டாரப் பழக்கம். பலம்>பெலம், கட்டு>கெட்டு என்ற வட்டாரத்திரிவு போல் காள்>காய்> காயம்> காசம்>கேசம், காசரம்>கேசரம் என்ற சொற்களும் வளரும். பின் அதுவே பொதுவழக்கில் நிலைத்துப் போகலாம். .

கேசவன்= காயாம்பூவண்ணன். கேசரர்= விண்ணவர், வானவர். கேசர மாருதம்= விசும்பில்பரவிய மென்காற்று. கேசரம், தலைமுடியையும். கேசம்நிறைந்த சிங்கத்தையும் குறித்தது. கேசரியும் சிங்கத்தைக் குறிக்கலாம். கேசதம்/கேசதாரகம்= கரிசலில் விளையும் கரிசலாங்கண்ணி. கேசகாரம்= கருநிறம் அடர்ந்த கரும்பு. கேசரின்/கேசவம் நீலோற்பல விதையையும், சிறுநாகப் பூவையும், நிறைமயிரையும் குறித்தன. கேசாரி= குதிரையின் பிடரி மயிர். கேசரந்தம்= மயிர் களையும் சடங்கு. கேயம்= நஞ்சயம் (arsenic); கேசி= அவுரிச் செடி. கேசி தமிழில்லெனில், மேற்சொன்ன சொற்களும் தமிழில்லாது போகும். குண்டலகேசியில் வரும்கேசி ஒரு வகையில் கருநிறத்தாள். இன்னொரு வகையில் கருமயிர் கொண்டவள். கேசி சங்கதம் போல் தெரியும். ஆனால் அடிப்படை தமிழே. (பாலி., பாகதம், சங்கதம் போன்றவற்றில் இதன் புழக்கம் மிகுதி,
         .
நாளாவட்டத்தில் மயிருக்குக் கரும்பொருளை விட வேறு தகை சொல்வதே முகன்மையானது. (நாம் சந்திக்கும் பலருக்கும் கருப்பு மயிரெனில் அதை விதப்பாக்க முடியுமோ? வேறெதோ சொல்லக் குறுகுறுக்கும் அல்லவா?) காட்டாக, உளை(மயிர்) பிடரிமயிரைக் குறிக்கும். (மயிரைச்சொல்லாது வெறும் உளையென்பதும் ஒரு வகையில் மரபுதான். குதிரையின் பிடரி, பல்வேறு விலங்குகளின் பிடரி, இம்மயிர்களையும் உளை(மயிர்) எனலாம். பிறைக்குறிக்குள் மயிரைப் பலநேரஞ் சொல்லாது விடுவோம். அதேபோல், ஓரி(மயிர்)= பிடரி(மயிர்) (இங்கும் மயிர் தொக்கி நிற்கும்.); கதுப்பென்பது பற்றி இருப்பதென்று பொருள்கொள்ளும். தலையில் பற்றியது மயிர் தானே? பற்றுப் பொருளில் பங்கி, பந்தம் என்பனவுமுண்டு..மார்பில் வளர்ந்த புறமயிர் மாராட்டம்> மராட்டம் ஆகும். பிற்றை>பித்தை= பின்பக்கம் எனும் வழக்கை நோக்கின், பித்தை(மயிர்)= முதுகுமயிர் புரியும். நவிரென்பது கருநிறத்தோடு உச்சிமயிர் என்றும் பொருள்கொள்ளும்.

மயிர் சிலர்க்கு அடர்த்தியாகும். சிலர்க்கு ஓரியாகும் (ஒல்லி>ஓலி>ஓரி; அதாவது அடராதிருக்கும்.) கவர்ச்சியான அடர்மயிரை கொத்துமயிர் என்பார். ஒல்>ஒது>ஒதி>ஓதி= செறிந்தமயிர். குல்>குற்று> குத்து>குச்சு என்பதும் கொத்தைக் குறிக்கும். கொத்தான தருப்பைப்புல்  குச்சைப்புல்>குசைப்புல் ஆகும். குச்சு(மயிர்) மெல்லோசைபெற்று குஞ்சு(மயிர்)> குஞ்சி(மயிர்) ஆகும். இதிலும் கொத்துப்பொருள் உண்டு. குத்து>குந்து> கூந்து>கூந்தல் கொத்துமயிரைக் குறிக்கும். குழு(மயிர்)>குழை(மயிர்)>கூழை(மயிர்) என்பதும் கொத்தைக் குறிப்பதே.

மயிர் வளர வளர, மயிரிழைகள் தளைப்படும். தளை(மயிர்) சரியான பயன்பாடு தான். மயிர் சிக்கிவுஞ் செய்யும். சிக்கற்படுவது, சிகை, சிகையின் விதப்பாய்ச் சிக்கம்>சிங்கம் என்றசொல் எழுந்தது. இதையறியாதோர் சிங்கம் தமிழில்லை. தமிழனுக்குப் புலிதான் தெரியும் என்பார். சங்க இலக்கியம் பார்த்தால் சிங்கம் நன்கு தெரிந்த விலங்கென்றே சொல்லவேண்டியுள்ளது. சிக்கியது சிகழும். சிகழிகை என்பதன் பொருளும் சிக்குமயிர் தான். செழித்துவளர்வது செழி> செடியாகும். மரமாகும் செழித்து வளர்ந்ததெல்லாம் செடிதான். ’செழி” சங்க இலக்கியத்திலுண்டு.. ஆனால் அதிலிருந்து உருவான செடி சங்க இலக்கியத்திற்குப் பின் உருவானது. செழித்தது திரண்டால், சடைக்கும்; சடிலும் சடை, சடிலம் என்ற இரண்டு மயிர்த்திரளைக் குறிக்கும். செழியன் என்ற சங்ககாலப் பெயர் சடையன் ஆகிப் பின் சடில>ஜடிலவர்மனாகும். பாண்டிய வரலாறு அறியாதோர் தடுமாறுவர்.   .

அடுத்த பார்வை மயிரின் அமைப்பு பற்றியது. சிலருக்கு அலையலையாய்த் தோற்ரும். அலம், அலகு போன்றன வளைவைக் குறிக்கும். அலகம்>அளகம் = என்பது அலைத்தோற்றம் கொள்ளு மயிர் (wavy hair) சிலருக்கு கோளம் கோளமாய்ச் சுருண்டு கொள்ளும், காட்டாக ஆப்பிரிக்கருக்கு அப்படி அமையும். கோதம புத்தருக்கும் அப்படித்தான் காட்டுவர். குண்டலம் எனில் அந்தப் பொருள் தான். குண்டல கேசம் = குண்டலமாய்த் தோற்றும் கேசம். குண்டலம்>குந்தலம்>குந்தளம் என்றும் அது திரியும். சிலருக்கு சுருள் சுருளாய் புரித் (spiral) தோற்றங் காட்டும். மிகுந்து சுருளாவதைச் சுரியல் என்பார். சிலருக்கு குழலாய் cylindrical தோற்றங் காட்டும்..சிலருக்குக் குண்டலாமாகாது, சுருளாது, குழலாது தொங்கலாய் நீண்டு தெரியும்.

இந்த மயிர்க்கற்றையை பெண்கள் பின்னிக்கொள்வார். பொதுவாகப் பெண்கள் தம் மயிரை மூன்றாய்ப் பிரித்துச் சடைபின்னுவதைப் பார்த்திருப்போம். அதை ஐம்பாகமாய்ப் பிரித்துப் பின்னுவது ஐம்பால் எனப்படும் .இத்தகைய பின்னல் பெரும்பாலும் தலைவிகள், செல்வந்தருக்குச் சொல்வர். மிகுந்த நேரம் எடுக்கும் பின்னல் அது. பின்னலைப் பின்னகம் என்றுஞ் சொல்வர். கதிர்த் தோகை போல் பின்னிச் சடையாக்குவது குரல், நீளமுடியைச் சுற்றி முடிச்சிட்டுக் கொண்டைபோடுவது இன்னொரு பழக்கம். அதைக் கொப்பிக் கொள்வது கொப்பு. கொண்டைமுடிக்குத் தம்மிலம் என்றும் பெயருண்டு. கொண்டையை முடிச்சுப் போடுவது முச்சி. ஆண்கள் ஒரு சிறுகற்றையைத் தனி நீளத்திற்குத் தெரியும்படி வைப்பது குடுமி, அது சற்று நீண்டுபோனால் குடிலமாகும், கோடாலி முடிச்சிற்கு கோடீரம் என்று பெயர். பெண்கள் தம் முடியைச் சடையாக வேய்ந்துகொள்வது வேய்நி>வேணி. இன்னும் சிரோத்தம், விலோதம் என இரு சொற்கள் உண்டு. அவை சங்கதமா, தமிழ்த்திரிவா என்று எனக்கு இன்னும் தெரியவில்லை

ஆகக் குண்டலகேசி என்பதும் தமிழ்தான். அதேபோல் நீலகேசியும் தமிழ்தான். பிங்கலகேசி என்பது பொன்மயிர் (blonde hair) உடையவளைக் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி. 

Friday, February 01, 2019

Marketing

அண்மையில் வெங்கட்ரங்கன் திருமலை, market ற்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டிருந்தார். அவருடைய இடுகையில் இட்டதுபோக, என் பக்கத்திலும் பதிவு செய்வோம் என்று இடுகிறேன்.

ஆங்கிலத்தில் market (n.) என்பதற்கு early 12c., "a meeting at a fixed time for buying and selling livestock and provisions, an occasion on which goods are publicly exposed for sale and buyers assemble to purchase," from Old North French market "marketplace, trade, commerce" (Old French marchiet, Modern French marché), from Latin mercatus "trading, buying and selling; trade; market" (source of Italian mercato, Spanish mercado, Dutch markt, German Markt), from past participle of mercari "to trade, deal in, buy," from merx (genitive mercis) "wares, merchandise." This  is from an Italic root *merk-, possibly from Etruscan, referring to various aspects of economics” என்றே விளக்கம் சொல்வர்.

விற்பவரும் வாங்குபவரும் சந்திக்குமிடத்தைச் சந்தையென நாட்டுப்புறத்தார் சொல்வார். சந்தையென்பது selling, buying போன்றவற்றைத் தனித்துக் குறிக்க வில்லை. இருவகையாரையும் ஓரிடத்தில் கொணர்வதே marketing ஆகும். இது நடக்குமிடம் சந்தை. ”சந்தைப்படுத்தல்” இப்படிக் கிளர்ந்தது. In modern management jargon, marketing is not selling. It is something to aid selling by the company and buying by the customer  Many are not able to comprehend the minute difference. தமிழ்ச்சொல்லான சந்தை அதை நன்றாகவே உணர்த்தும் இருந்தாலும். சந்தையெனுஞ் சொல்லில் சில போதாமைகளும் உண்டு. ஏனெனில் அதன் வினைவடிவம் என்ன? - என்பது ஆழமான கேள்வி.   .

சந்தைப்படுத்தலில் படுத்தலெனும் துணைவினை போட்டுச்சொல்வது தமிழ்போல் ஒட்டுநிலைமொழிகளில் (agglutinative languages) சற்று விந்தையாய் ஒலிக்கும். நல்ல தமிழ்நடை என்பது, கூடிய மட்டும் துணைவினைச் சொற்களைக் குறையக் கையாளுவதேயாகும். துணைவினை போடுவது ஆங்கிலம் போன்ற கொளுவுநிலை மொழிகளுக்கு (inflexional languages) இயல்பாகலாம். தமிழில் அது முரண்தொடையே. செயப்பாட்டு வினைகளையும் தமிழில் குறைத்தே கையாளுவோம். எனவே சிந்தனை வளர்கையில், வேறுமாதிரிச் சிந்திக்கும் தேவையை நான் உணரத் தலைப்பட்டேன்.

சந்தையில்நடக்கும் ஒரேசெயல் ஒருபாவனையில் நோக்கினால் விற்பனையாயும், இன்னொரு பாவனையில் வாங்கலாயும் ஆகிறது. இவ்வினையை மொத்தமாய் தமிழில் மாற்றலென்றுஞ் சொல்லமுடியும். மாற்றல் என்பது ஏதோ இராம.கி. ஆக்கியதில்லை. அது காலகாலமாய் நம்மிடம் இருந்த சொல் தான். (புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள்மோர் மாறும் நல்மா மேனி - புள்ளிவாய்ப் பானையை தலைச்சுமட்டில் இருத்தி, நாள்முழுதும் மாறும் மாநிறமேனி கொண்டவளைப் பற்றி பெரும்பாணாற்றுப் படை 159-160 ஆம் வரிகள் பேசும். இதே ”மாறும்” தொழிலை, “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” என்று பாரதி பாடுவான்.) இதேசொல் தான் இந்தையிரோப்பியத்தில் திரிந்து கிடக்கிறது என்றுசொன்னால், நம்புவதற்கு ஆளில்லை. ”இராம. கி. சொல்வதை நாம் ஏன் ஏற்கவேண்டும்? வில்லியம் ஜோன்சு, மாக்சு முல்லர், கால்டுவெல் சொன்னது முக்கியம், இந்தையிரோப்பியத்திற்கும் தமிழிய மொழிகளுக்கும் இடையே ஒரு சீனப் பெருஞ்சுவர் கட்டு,. ஒன்று இன்னொன்றை இனங்காட்டக் கூடாது” என்று என்னைக் கேலி செய்வோரும் மிகுதி. இருந்தாலும் உண்மை ஒருநாள் வெளிப்படுமென்று என்கடன் பணிசெய்து கொண்டிருக்கிறேன்.

ஒரு காலத்தில் மாறுகொளலென்பது பண்டமாற்றின் வழி நடந்தது. காட்டாக, ஒருமூடை உப்பிற்கு ஒருபடி நெல்லென்பது ஒரு பண்டமாற்று. எல்லா இடங்களிலும் பண்டங்களைத் தூக்கிச்சுமந்து, பண்டமாற்று செய்யமுடியாது என்பதால் பொன் எனும் இடைப்பண்டம் ஊடே வந்தது, காட்டாகப் 10 மூடை உப்பிற்கு 1 கழஞ்சுப்பொன் (கழஞ்சு = கழற்சிக்காய் அளவு பொன் = 1.77 கிராம் பொன்) என்று சிலர் கொண்டார். இதே பொன்னுக்கு வெவ்வேறு எடையில் அல்லது முகத்தலகில் நெல்லையும் வாங்க முடியும். இப்படி எல்லாப் பண்ட மாற்றுக்கும் பொன் மாழை (metal) என்பது ஓர் இடையூடாகியது. முடிவில் பொன் என்பது நாணயமும் ஆகியது. பின்னால் பொன், வெள்ளி (உருவாய் என்ற சொல்லின் பொருளும் வெள்ளி தான்), செம்பு, மதிப்புக் குறைந்த அட்டிழைகள் (= alloys) என வெவ்வேறு நாணயங்கள் ஏற்பட்டன. ஆனாலும் அடிப்படைவினை மாறுதல் என்பதுதான். ஒரு பண்டத்திற்கு விலையாய் ஏதோவொரு அளவு நாணயத்தை நாம் மாற்றினோம், மாற்றுகிறோம், இனியும் மாற்றுவோம்.

கடுத்தலும் கொடுத்தலும் கூடத் தமிழில் ஏறத்தாழ ஒரே பொருளன. கடுத்தல்  ”மிகுத்தல்” என்று பொருள்படும். . மாறுகடுத்தலை, மாறுகடை என்றுஞ் சொல்லலாம். மாறுகடைத்தல் என்ற சொல்லை நானேதான் ஒருகாலத்தில் பரிந்துரைத்தேன். ”சந்தைப்படுத்தலில்” இடம் என்பது பெரிதாய்க் காட்சியளித்தது. மாறுகடைத்தலில் மாறுதல்/மாற்றுதல் என்பது பெரிதாய்த் தெரியுமென நான் எண்ணினேன். ஆனால் பலருக்கும் பின்னால் வரும் கடைத்தல் வினைதான் கண்ணை உறுத்தியது போலும். கூடவே ”ஆங்கில ஒலிப்பில் சொல் படைக்கிறார்” என்று தூற்றலும் செய்தார். (மாறலைத் தொலைத்துக் கடையை அவர் பிடித்துக்கொண்டது என் பிழையா? குளிப்பாட்டிய தண்ணீரைக் கொட்டுவதாய் நினைத்துக் குழந்தையும் குப்பையில் போட்டது என்று சொல்வாரே, நினைவிற்கு வரவில்லையா?)

அப்புறம் மாறுகடைத்தலுக்கு மாற்றாய் இதை மாறுகூறல் என மாற்றினேன். பின் இதிலும் குறை தென்பட்டதால், இப்போதைக்கு என் சொல்லாக்கம் market = மாறகை என்ற அளவில் உள்ளது. மாறு = exchange அகைதல் = மலர்தல், வளர்தல், அகைத்தல் = மலர்த்தல், வளர்த்தல், செலுத்தல், நடத்தல் = to conduct. (எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து பொரி அகைந்தன்ன பொங்குபல் சிறுமீஇன்  - என்பது அகம்.106, 1-2. இச்சொல் ஒன்றும் புதிதில்லை. பல பயன்பாடுகள் சங்க இலக்கியத்திலுண்டு.) வாங்கல்-விற்பனையை நடத்தத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வது marketing ஆகும். இதன் படியாற்றங்களில் (applications) சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். மாறகையிலிருந்து வேறு எங்கு மாறுவேனென இப்போது கூற இயல வில்லை.          . .

aftermarket = மாறகைக்குப் பிந்தையது
down-market = தாழும் மாறகை
up-market = உயரும் மாறகை
black market = கரும் மாறகை, கருஞ்சந்தை
commerce = மாறுகை
marketable = மாறகைக்கக்கூடிய, மாறகைக்கக்கூடுகிற, மாறகைக்கக்கூடும்
marketing = மாறகைப்பு
marketplace = மாறகை இடம்
mart = மாற்றை
mercantile = மாறக
mercenary = மாறகையாளி
mercer = மாற்றர்
merchant = மாறகன் (= வாணிகன், வணிகன் போல் இதைக் கொள்ளலாம்)
merchantise = மாறகம்
mercury = மாறுகோள், புதன்
stock market = பங்கு மாறகை
supermarket = ஓ மாறகை
hypermarkeu = மீ மாறகை

பரிமாறு = exchange
கைம்மாறு = act done in return
மறுமொழி = reply
மாறுகொள் = procure
மாறுகோள் = procurement

இப்பொழுது மிக எளிதில் மாறகையைப் புதியவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க முடியும். முற்றிலும் செந்தமிழில் முதலில் சொல்லவேண்டாம். சற்று பேச்சுத் தமிழில் தொடங்கிக் கொஞ்சங் கொஞ்சமாய்ச் செந்தமிழுக்கு வாருங்கள்.

முதலில் மாறு என்பது என்ன? என்ற வினாவிற்கு விடை சொல்லுங்கள். நடக்கும் ஒரே செயல், வாங்குபவர் பார்வையில் வாங்கலென்றும், விற்பவர் பார்வையில் விற்பனை என்றும் பெறப்படும் புரிதலைச் சொல்லி மாறல் என்பதன் பொருளை விளக்குங்கள். பின் ஒரு பண்டத்திற்கு இவ்வளவு பணம் என்று மாறிக் கொள்கிறோம் என்பதை விளக்கிப் பின் இந்த மாற்று நடப்பதற்குப் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டுமென்றுஞ் சொல்லுங்கள். அடுத்து அகைதல்/அகைத்தலின் பொருளைச் சொல்லுங்கள். இதிலும் அகைதல் = மலர்தல், வளர்தல் என்ற தன்வினையைச் சொல்லி, அதன்பின் அகைத்தல் = மலர்த்தல், வளர்த்தல், செலுத்தல், நடத்தல் என்ற பிற வினையைச் சொல்லுங்கள். இதன்பின் மாற்றை அகைப்பது = மாற்றை வளர்த்தெடுப்பது என்றும் அதன் பெயர்ச்சொல் மாறகைப்பு என்றும், மாறகைப்பு என்பதை மாறகை என்று சுருங்கச் சொல்லலாமென்றும் சொல்லுங்கள். முடிவில் மேலே கூறியிருக்கும் மற்ற படியாற்றங்களையும் விளக்கிப் பின் குறிப்பிட்ட பண்டங்களுக்கான மாறகைக்குக் போகலாம்.

இத்தனை விளக்கம் சொல்லும்போது, கொஞ்சம் பொறுமை வேண்டும். விற்பனையும் மாறகையும் ஒன்றிற்கொன்று தொடர்புடையன. மாறகை ஏற்பாடுகள் இல்லெனில் விற்பனை சிறக்காது என்றும் கேட்போருக்கு விவரமாய் விளக்கவேண்டும். முயன்றால் யாராலும் முடியும். marketing என்ற ஆங்கிலச் சொல்லை மாறகையோடு பொருத்திச் சொன்னால் இரண்டுமே விளங்கும். அடிப்படை புரியும். marketing என்பது வெறும் jargon ஆய் நின்றுவிடக் கூடாது. நான் ஆங்கிலச் சொல்லைத் தவிர்க்கவேண்டும் என்று எங்குஞ் சொல்லவில்லை. ஆங்கிலச் சொல்லின் பொருளை உள்வாங்க தமிழ்மூலம் முயலுங்கள் என்கிறேன். சிந்தனை விரியட்டும். எல்லாம் தமிழால் முடியும். 

அன்புடன்,
இராம.கி.
(மாறகை தொடர்பாய் ஒரு காலங் குப்பை கொட்டியவன். நான் சொல்வது வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல. முழுக்கப் பட்டறிந்தே சொல்லைப் படைத்தேன்.)