Saturday, July 30, 2011

இலக்கியம் - இலக்கணம் - 4

”இலக்கு என்ற சொல் எழுத்து, குறியையும், இலக்குதல் என்பது எழுதல், குறித்தலையும் சுட்டும். இலக்கின் இன்னொரு நீட்சியாய் இலகை என்ற சொல் எழுந்து இலேகை>இரேகை என்று வடபுலத்திற் திரிந்து வடமேற்குச் சந்தத்திற் புழங்கும். லகரம் துணைக்கண்டத்தின் கிழக்குப் பக்கம் பெரிதும் பலுக்கப் பட்டதென்றால் மேற்குப் பாகதங்களில் அது ரகரமாகும். தெற்கே இரேகையை மீண்டும் கடன்வாங்கி பொதுவான வரைதலையும் சிறப்பாக கையிற் தெரியும் கோடுகளையும் குறிப்பார்கள்.”

”இரேகையின் இன்னொரு வளர்ச்சியாய் ஒருசில முத்திரைகள் இரேகை என்று சொல்லப் பெறும். இதே போல இலக்ஷணை என்ற சொல் அரச முத்திரைகளைக் குறிக்கும். நல்ல தமிழில் இவற்றை இலகை, இலக்கணை என்றே சொல்லிப் போகலாம். இவைதாம் ஆங்கிலத்தில் logo என்ற சொல்லிற்கு இணையான சொற்கள்.”

”இலக்குதல் என்ற வினை இலக்கிய கோட்டிற்கு நீண்டது போல இலக்கு என்ற சொல் கருவிக்கும் நீண்டது. எழுத்தாணி என்பதை நிகண்டுகளில் ஓலைதீட்டும் படை, கண்டம், ஊசி, இலேகை, எழுதுகோல், தூலிகை (துகிலிகை) என்பார்கள். கண்டம், ஊசி என்பன கூர்மைப் பொருளைக் குறிக்கின்றன. இல் என்ற வேரும் குறி என்ற கூர்மைப் பொருளைக் குறிக்கிறது. பின்னால் இல்>இலக்கு என்ற சொல் எழுது புலத்தில் இருந்து பொதுப்புலத்திற்கு விரியும்.”

”இன்றைக்குத் தென்பாண்டி நாட்டில் சாத்தாரப் பேச்சுவழக்கில் இலக்கு என்ற சொல் பொதுவான குறிப் பொருளைக் குறிக்கிறது. ’இன்னாரை இந்த இலக்கில் வைத்துப் பார்த்தேன்’, ’டேய், மாங்காயைக் கீழே விழுத்தாட்ட வேண்டுமானால் சரியான இலக்குப் பார்த்துக் கல்லெறி’ என்பவை தென்பாண்டிப் பேச்சுவழக்கு.”

ஐந்தாம் நூற்றாண்டுத் திருமந்திரம்

“புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்,
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே”

- திருமந்திரம் ஆதார வாதேயம் இயல் 1172 ஆம் பாடல்

என்று சொல்லும்.

வெறிக்குறுங் கதுப்பின் வெள்ளெயிற்று எயிற்றியர்
செம்மணி கழற்றித் தேன் இலக்கு எறிதர

என்பது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லாடம் 100 ஆவது பாட்டு முதலிரண்டு வரிகள்.(தேன்கூடாகிய இலக்குப் பற்றிச் சொல்லும் வரிகள்.)

“எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற” என்பது தேவாரம் (1,4,10) இலக்கின் நீட்சியாய் இலக்கம் என்ற சொல் குறளில் எழுந்து பெரிய இலக்கைக் குறிக்கும்.

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையறாக் கொள்ளாதாம் மேல்

திருக்குறள் இடுக்கண் அழியாமை 627

”இலக்கம் என்ற சொல் குறிப்பொருளின் இன்னொரு வளர்ச்சியைக் குறிக்கும். இன்றைக்குச் சொல்லப்படும் digit என்பதற்கு இணையாக பத்தாம் இலக்கம், நூறாம் இலக்கம், ஆயிரமாவது இலக்கம் என்ற சொற்கள் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் எங்களுக்குச் சொல்லித் தரப் பட்டன. அதாவது எண்குறியீடு என்ற பொருளில் இது ஆளப்பட்டது. [first digit, 2nd digit, 3rd digit என்று சொல்லிக் கொடுக்கப் படவில்லை.]”

”இலக்குமி என்ற பெயர் மணிமேகலையில் முற்பிறவிப் பெயராய் வரும்.”

”இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனலே”

- நன்னூல் பதவியல் நூற்பா 141

”என்பது நன்னூல். இதன் உருவாக்கம் பேரரசன் இராசராசன் காலத்ததாய் இருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு. இலக்கியம் இலக்கணம் என்ற இரு சொல்லையும் ஒரே அடியில் இணையாகக் கொடுத்தது இதுதான் முதல் எடுகோடு என்று நினைக்கிறேன்.”

”இலக்கின் இன்னொரு தொடர்ச்சி தான் இலக்கணம் என்ற சொல்லாகும். அண்ணுதல்> அணத்தல் என்பது பொருந்துதல். அண்ணம்> அணம் என்பது பொருந்தும் நிலை. ’முலை மூன்றணந்த சிறுநுதல்’ என்பது கல்லாடம் (13:12) இங்கு குறிகளின் அணத்தை விவரிக்கும் நிலை. அணங்கம் என்ற சொல்லே கூட இலக்கணத்திற்குப் பகரியாய் அகரமுதலிகளிற் சொல்லப் பட்டிருக்கிறது. அதே போல அணங்கியம் என்ற சொல் இலக்கியத்திற்குப் பகரியாய்ச் சொல்லப்படுகிறது.”

”இலக்கணத்தின் பொருள் இயல்பு, குறி (அடையாளம்), அழகு, ஒழுங்கு என்ற பல்வேறு பொருட்பாடுகளாகும்.”

”ஒருவர் பிறக்கும் போது சாதகத்தில் 12 கட்டங்களில் சந்திரன் இருந்த இடத்தைத் தொடக்க அடையாளமாக்கி இலக்கணம் சொல்லுவார்கள். இது வடமொழிப் பலுக்கில் lagnam என்றாகும் இதை ஒருவரும் lakshanam என்று சொல்ல மாட்டார்கள். எப்பேர்ப் பட்டவர் ஒலிப்பிலும் அப்படி நான் கேட்டதில்லை. lakshanam என்ற வடசொல்லோ, தமிழ்ப் பேச்சுவழக்கில் இயல்பு, அழகு, ஒழுங்கு என்ற பொருள்களைக் குறிக்கவே பயன்படும்.

இராமணின் தம்பி இலக்ஷ்மணன் இப்படிப் பொருள் வரும்படி அழைக்கப்படுவான். (எல்லா இலக்ஷணங்களும் பொருந்தியவன். தமிழில் இலக்குவன் என்று சொல்லுவோம்.”

”நல்ல தமிழிற் சொல்லும் போது lagnam, lakshanam என்ற இரண்டுமே இலக்கணம் தான். முதற் பயன்பாட்டில் இலக்கு - இடம் என்ற பொருளிலும், இரண்டாவது பயன்பாட்டில் இயல்பு, அழகு, ஒழுங்கு என்ற பொருளிலும் ஆளப்படும். வடபுல முறையில் இருவேறு ஒலிப்புக்கள் சொல்லப்பெறுவது நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கிறது. பொதுவாக ஒருசொல்லை வடமொழிக்குட் கடன்பெற்றாற் தான் இப்படி இருவேறு வழக்குகள் நிலைபெறும். தமிழ் வடமொழியில் இருந்து பெற்றதா? வடமொழி தமிழில் இருந்து பெற்றதா?”

”இலக்கணம் என்ற சொல் நன்னூல் 267 ஆம் நூற்பாவில்

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன் றாகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக் குறி
எனுமுத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்

என்று பயிலும். இலக்கணத்தின் இன்னொரு உருவமாற்றாய் நன்னூல் விருத்தியில் இலக்கணை என்ற சொல் புழங்கும்.”

இலக்கணம் என்ற சொல் நாலடியாரில்

”முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலுமென்
தீம்பாவை செய்த குறி”
- நாலடியார் 399 ஆம் பாட்டு

என்று வரும். அதே போல ஆசாரக் கோவையில்,

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்
- ஆசாரக் கோவை 2 ஆம் பாட்டு

என்று இடம்பெறும். மிகவும் முகன்மையான குறிப்பு சிலம்பு கொலைக்களக் காதையில் பாண்டியனின் வீரர்கள் கோவலனைக் குறிக்கும் வகையில் அமைவது. முன்னால் இலக்குவனைச் சொன்னது போல், எல்லா இலக்கணங்களும் பொருந்தியவன் கோவலன். இவன் சிலம்பைத் திருடியிருக்க மாட்டான் என்று அவர்கள் கொல்லனிடம் சொல்லுகிறார்கள்.”

”சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படும் மகனலன் என்று கூறும்”

- சிலப்பதிகாரம் கொலைக்களக் காதை 16, 159-163

”ஆண்மகனுக்கு உரிய இலக்கணங்களோடு இருக்கிறவன் கோவலன். என்னுடைய வரலாற்று ஆய்வில் சிலம்பு என்பது கி.மு. 75 ஐத் சேர்ந்தது என்று நிறுவியிருக்கிறேன். சிலம்பின் காலம் - 1 என்ற தொடர்

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html

தொடங்கி சிலம்பின் காலம் - 12 என்ற முடிப்பு

http://valavu.blogspot.com/2010/05/12.html

என்பதில் முடியும். ஆக இலக்கணம் என்ற சொல் அதற்கு உரிய பொருளில் கி.மு.75 இல் இருந்திருக்கிறது. இதற்கும் முன்னே இலக்கணம் என்ற சொல் கி.மு.7 ஆம் நூற்றாண்டு தொல்காப்பியத்திலேயே இரண்டு இடத்தில் வருகிறது."

”ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொல் கிளவி
இலக்கண மருங்கில் சொல்லாறு அல்ல.”

- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் நூற்பா 510

”செய்யுள் மருங்கின் மெய்பெறர் நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவ உள எனினும் வந்தவற் றியலான்
திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.”

- தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் நூற்பா 1499.

"தொல்காப்பியத்தைச் சான்றாகக் கூறுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வையாபுரிப் பிள்ளையை ஆதாரமாய்க் காட்டித் ”தொல்காப்பியம் கி.மு.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததில்லை, கி.பி.5 ஆம் நூற்றாண்டு” என்று சொல்லி அதை மறுக்க ஒரு சிலர் முயல்வர். [அவர் மறுப்பு, இவர் மறுப்பு என்று பல்வேறு மறுப்புச் சொல்வதெல்லாம் வெறும் தோற்றம் தான். அனுமார் வால் போற் தோன்றும் இந்தக் கூற்றுத் தொடர்பைப் பிடித்தால் முடிவில் வையாபுரிப் பிள்ளையிடம் தான் கொண்டு சேர்க்கும்.] இப்படி முயல்பவர் எவரும் வையாபுரியாரின் அறுதிக் கூற்றை (assertion) மீள்வாசிப்பு செய்ய மாட்டார்கள். வையாபுரியாரியாரின் தன்முனைப்புக் கூற்றே இவர்களுக்கு நிறுவிப்பு ஆகிவிடும்."

"வையாபுரியாரின் கூற்றை மிகத் தெளிவாக புலவர் இளங்குமரன் தன்னுடைய தொல்காப்பியப் பதிப்பில் (தமிழ்மண் வெளியீடு) ஆதாரம் காட்டி மறுத்திருப்பார். நான் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. எப்பொழுதெல்லாம் சங்க இலக்கியத்திற்கு முன்னே போக நாம் விழைகிறோமோ, அப்பொழுது வையாபுரிப் பிள்ளையைக் கொண்டுவந்து தொல்காப்பியரின் காலத்தைக் கேள்வியெழுப்புவது, சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. (நியூட்டனை மறுத்து ஐன்சுடீனுக்குள் போக பூதியலுக்கு 150/180 ஆண்டு காலம் ஆகிவிட்டது இங்கும் 150/180 ஆண்டுகள் ஆகவேண்டுமோ, என்னவோ? வையாபுரியாரின் தாக்கம் அவ்வளவு இருக்கிறது.)"

"அதே போல 'தொல்காப்பியருக்கு முற்பட்டு பதஞ்சலி இதைக் குறிப்பிட்டார், காத்தியாயனர் அதைக் குறிப்பிட்டார்' என்ற வாக்குவாதங்களும்,உரையாடலும், நிறுவிப்பும் வேறு இடத்திற் செய்யப்பட வேண்டியவை. எனவே இங்கு நான் அதைத் தவிர்க்கிறேன். தொல்காப்பியத்தின் பெரும்பகுதி கி.மு.7 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்றே நான் கொள்கிறேன். அதில் அங்குமிங்கும் இடைச்செருகல்கள் இருக்கின்றன. ஆனால் இவ்விரண்டு நூற்பாக்களும் இடைச்செருகல் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை. அதே போல 'தொல்காப்பியத்தை ஒருவர் எழுதினாரா? அது பலர் எழுதிய தொகுதியா?' என்ற கேள்விக்குள்ளும் நான் போகவில்லை."

"'இலக்கணம் - இலக்கியம் என்றவை இரட்டைச் சொற்கள்' என்றால், இலக்கியமும் பழங்காலத்தில் இருக்க வேண்டும் என்றே நான் கொள்ளுகிறேன்.இரட்டைப் புலவரில் ஒருவரை விடுத்து இன்னொருவரைப் பார்த்து இருவருடைய இருப்பை மறுக்க முடியுமோ?"

"அப்ப இலக்கியம், இலக்கணம் என்ற இரண்டு சொற்களுக்கும் குறைந்தது 2000 ஆண்டு கால வரலாறு இருந்திருக்க வேண்டும் என்று சொல்றே!”

“ஆமாம் அண்ணாச்சி, இருந்திருக்க முடியும் என்று சொல்கிறேன். அதுதான் சொன்னேனுங்களே! சிலவற்றை ஏரணம் மூலம் ஓர்ந்து பார்த்துத் தான் சொல்ல முடியும். அவற்றின் இருப்பை நேரடியாகக் காட்டுவது கடினமான செயல். இலக்கணம் உறுதியாக் இருந்திருக்கிறது. இலக்கியமும் இருந்திருக்க முடியும்.”

“சரி தம்பி, எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன். இன்னொரு சமயம் வேறெ தலைப்புலே உரையாடலைத் தொடரலாம்.”

அன்புடன்,
இராம.கி.

இலக்கியம் - இலக்கணம் - 3

"இன்னுஞ் சொன்னால் ஒருவேளை ஏற்கவே இயலாது போகலாம். இலுத்ததைத்தான் (>இழுத்தது) வெள்ளைக்காரன் இழுத்தர்>எழுத்தர் (letter) என்று சொல்லுவான். 'அதன் சொற்பிறப்பு எங்கேயிருந்து வந்தது என்று தெரியவில்லை' என்று அவர்கள் அகரமுதலியிற் சொல்லுவார்கள்."

mid-12c., 'graphic symbol, written character,' from O.Fr. lettre, from L. littera (also litera) "letter of the alphabet," of uncertain origin, perhaps from Gk. diphthera "tablet," with change of d- to l- as in lachrymose. In this sense it replaced O.E. bocstæf, lit. "book staff" (cf. Ger. Buchstabe "letter, character," from O.H.G. buohstab, from P.Gmc. *bok-staba-m). The pl. litteræ in Latin meant "epistle, written documents, literature," a sense first attested early 13c. in M.E., replacing O.E. ærendgewrit, lit. "errand-writing." School letter in sports, first awarded by U. of Chicago football coach Amos Alonzo Stagg.

"இதோடு நிறுத்த மாட்டார்கள். 'literature' என்று அவர்கள் ஊரிற் சொல்லுகிறார்களே, அதுவும் 'letter' என்பதில் இருந்து எழுந்தது என்று சொல்லுவார்கள்.

late 14c., from L. lit(t)eratura "learning, writing, grammar," originally "writing formed with letters," from lit(t)era "letter." Originally "book learning" (it replaced O.E. boccræft), the meaning "literary production or work" is first attested 1779 in Johnson's "Lives of the English Poets" (he didn't include this definition in his dictionary, however); that of "body of writings from a period or people" is first recorded 1812.

"நாமோ இலுக்குதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், இலுத்தல்>இழுத்தல்>எழுத்து என்ற விரிவிற்கும், இலக்கியம் என்ற சொல்லிற்கும் உள்ள உறவை ஐயப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்." .

இல்லுதல்>இலுங்குதல்>இலுக்குதல்>இலக்குதல்
இலுக்கு>இலக்கு = எழுத்து, குறி
இலக்குகளால் இயன்றது இலக்கு + இயம் = இலக்கியம்

"தம்பி நீ சொல்வது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஆனால் இலக்கியம் என்ற சொல் சங்க இலக்கியத்திலே இல்லையாமே?"

எழுத்து என்ற சொல் இருக்கு அண்ணாச்சி. அந்தப் பெயர்ச்சொல் எங்கிருந்தோ குதித்து வரவில்லை. அது இலுத்தலில் இருந்து ஏற்பட்ட வளர்ச்சி. வேறெப்படியும் எழுத்தென்ற சொல் எழ முடியாது. இலுத்தலில் இருந்து இன்னொரு வளர்ச்சி ஈல்தல். ஈலின் திரிவு ஈர்த்தல் என்றாகும். அந்த ஈர்த்தலும் எழுதுதல் என்ற பொருள் கொடுக்கும். கலித்தொகையில் ஒரே பாட்டில் இருவேறு சொற்களில் எழுதற் செய்தி வரும்.

நெய்தல் நெறிக்கவும் வல்லன்: நெடுமென்தோள்
பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன்’ இளமுலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்;தன் கையில்
சிலைவல்லன் போலும் செறிவினான்; நல்ல
பலவல்லன் தோளாள் பவன்

- (கலித் 143.31-35).”

”இங்கே ஈர்த்தல், எழுதல் என்ற இரண்டு சொல்லும் ஒரே பொருளைக் குறிப்பன. அதோடு இல்>ஈல் உறவையும் குறிப்பன. இல்லில் இருந்து எழுத்தும் இலக்கியம் ஓரெட்டுத் தான்.”
.
"அண்ணாச்சி, பொதுவாய்ச் சொல்கிறேன். சங்க இலக்கியம் என்பது நமக்குக் கிடைத்த தொகுதி. இதைக் கொண்டுதரப் பலர் உழைத்திருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவருக்குக் கிடைக்காமற் போனது ஏராளம். கிடைத்தும் தவறவிட்டது எக்கச் சக்கம். சங்க இலக்கியம் என்பதை ஏதோ அகரமுதலி மாதிரி நாமெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது. நம்முடைய ஆகூழ் அவ்வளவு தான். இருப்பதை வைத்து இல்லாததை ஊகிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் இல்லாது பிற்காலத்திற் புழங்கிய சொற்கள் உருவான காலம் எதுவென்று யாருக்குத் தெரியும்?"

"தம்பி, கடினமான கேள்வியைக் கேட்கிறாய். printed book salvation பார்க்கிறவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்களிடம் உன் ஏரணம் பலிக்காது. ஏதொன்றையும் அச்சிற் பார்த்தாற் தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்."

"அப்படியானால் பலவற்றையும் நிறுவுவது கடினம் அண்ணாச்சி. இப்பொழுது, ஒரு வினைச்சொல் சங்க இலக்கியத்திலிருக்கும். அதோடு பொருந்திய பெயர்ச்சொல் இருக்கவே இருக்காது. இயலுமையைப் பார்க்கக் கூடாது என்றால் எப்படி? அதே போலப் பெயர்ச்சொலிருக்கும். வினைச்சொல் நேரே கண்ணுக்குத் தெரியாது. எப்படி வந்தது என்று ஓர்ந்து பார்க்க வேண்டாமா? வினைச்சொல் இல்லாமல் பெயர்ச்சொல் எப்படியெழும்? ”மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்பது எப்படி? அப்பொழுது தொல்காப்பியம் தவறா? இலக்கித்தல் என்ற சொல் எழுதற் பொருளில் கி.பி.8 ஆம் நூற்றாண்டுச் சிந்தாமணியில் வந்திருக்கிறது. அதன் பெயர்ச்சொல் இலக்கியம் என்றில்லாது வேறு என்னவாய் இருக்க முடியும்.?"

"இவ்வுருவு நெஞ்செனும் கிழியின் மேலிருந்து இலக்கித்து” - சீவக 180

"எனக்குத் தெரிந்து சிந்தாமணி தான் இலக்கித்தல் என்ற வினையை முதலிற் குறிக்கும் எடுகோட்டு (reference) நூல். அதற்கு அப்புறம் 9 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில் இலக்கியம் என்ற சொல் வந்திருக்கிறது. அதிலும் ம் என்கிற எழுத்துப் பிழை ஏற்பட்டு உதாரணம் என்ற பொருளில் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த எழுத்துப் பிழை இயலுமையைக் கூடப் பலரும் ஏற்க மாட்டேம் என்கிறார்கள். சற்று விளக்கிச் சொல்கிறேன்."

"திவாகரம் 1834 ஆம் சூத்திரத்தில் இருந்து பாருங்கள். ஓர் ஒழுங்குமுறை தென்படும்."

"1834. நூல் என்பதன் பெயர் இங்கு கொடுக்கப்படுகிறது: திவாகரத்தில் இந்நூற்பா தான் மொத்த நூல் பற்றிப் பேசுவது. நூல் என்பது இலக்கியமாகவும் இருக்கலாம்; இலக்கணமாகவும் இருக்கலாம். அதிகாரம் என்ற முதற்சொல் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயரில் ஆளப்பட்டிருக்கிறது. ஆரிடம், பனுவல், ஆகமம், பிடகம், தந்திரம் ஆகிய சொற்கள் நூல் பற்றிய வேறு பெயர்களாய்க் குறிப்பிடப் படுகின்றன. இவைகள் எல்லாம் பொதுவான நூல்கள். விதப்பான “இலக்கியம்” என்று சொல்லமுடியாது. அதேபொழுது இலக்கியம் என்பதும் நூல் தான். ஆகமம் என்ற சொல் பாட வேறுபாட்டில் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது."

"1835. பாயிரத்தின் பெயர்: நூலின் முதற்பகுதி. நன்னூல், தொல்காப்பியம் போன்றவற்றில் வரும் முதற்பகுதி. இப்பொழுது நூலுக்குள் வந்துவிட்டோம். அடுத்திருக்கும் நூற்பாக்களில் வரப்போகும் பெயர்கள் நூலுக்குள் உள்ள பகுதிகளின் பெயர்கள். நூலைப் பற்றிய பெயர்கள் அல்ல."

"1836 மூதுரையின் பெயர்; இது பெரும்பாலும் பழைய உரை (commentary) என்றே பொருள் கொள்ள முடியும்."

"1837. பாடத்தின் பெயர்: பாடம் என்பது தான் ஆசிரியர் எழுதிய சரியான உண்மையான உள்ளீடு (proper actual content written by the author)."

"1838 நூற்பா - அகவலின் பெயர்: இது இலக்கணத்தில் வரும் விதப்பான சொல் நூற்பா - சூத்திரம். சூத்திரங்களால் ஆனது பாடம். பாடம், பாயிரம் போன்றவை சேர்ந்தது நூல். நூற்பா என்பது அகவல் யாப்பில் வரும்."

"1839 ஓத்தின் பெயர். இது நன்னூற் பாயிரத்தில் விளக்கப் படும். ஒரு குறிப்பிட்ட வரிசை (அல்லது தலைப்பு) பற்றிய நூற்பாக்களின் தொகுப்பு."

"1840 படலம் என்னும் பெயர். இதுவும் நன்னூற் பாயிரத்தில் வரும். வெவ்வேறு தலைப்புக்களின் அடியில் உள்ள நூற்பாக்களின் தொகுப்பு."

"1841 வேற்றிசைப்பா என்னும் பெயர். அகவலில் இருந்து மாறி விருத்த நடையில் இருக்கும் பாக்கள். இது சருக்க முடிவிலும் இலம்பக முடிவிலும் வரும் என்று கி.பி.8 ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டு நிலையை/வழக்கத்தைக் கூறுகிறது."

"1842 உரைப்பொருளின் பெயர்: விரித்துக் கூறும் உரைப்பொருள் பற்றியது."

"1843 பொழிப்பு என்னும் பெயர்; நூலுக்குள் வரும் நூற்பாக்களுக்கான பொழிப்பு."

"1844. பதிகம் என்னும் பெயர்: சிலப்பதிகாரத்தில் வருவது போன்ற பதிகம். கிட்டத்தட்ட உள்ளீட்டுச் சுருக்கம் (content summary)."

"இனி 1845 இல் இலக்கியத்தின் பெயர் வாராது. அது உண்மையில் இலக்கிய உதாரணம். அங்கே ம் என்பது ஏடெடுத்து எழுதுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய, இயலுகிற, மீச்சிறிய பிழை."

"இலக்கியம் உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய

என்று படிப்பதற்கு மாறாக,

இலக்கிய உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய

என்று படித்துப் பாருங்கள். முழுப்பொருளும் விளங்கும். இலக்கிய உதாரணம் என்பது இலக்கியத்துள் ஒன்றை எடுத்துக் காட்டலாகும். இந்தக் காலத்தில் உதாரணம் என்று யாரும் எழுதுவதில்லை. எடுத்துக் காட்டு என்பதும் கூடக் காட்டு என்று சுருங்கிவிட்டது. ஞாபகம் என்பதும் எடுத்துக் காட்டைப் போல் அமைவது தான். ஒன்றைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஞாபகம் வர, அதையும் எடுத்துக் காட்டைச் சொல்வது போல விளக்கத்தை வலுப்படுத்தும் நடையாய் அமையும். பிசி என்பது ஒருவகைப் புதிர், சோடிப்பு, விடுகதை. இதுவும் எடுத்துக்காட்டுப் போலத்தான் ஒன்றை விளக்கும் போது அமையும். (இந்தச் சொல் தென்பாண்டி நாட்டில் அகவை முதியோரிடம் அறியவேண்டிய சொல்.)"

"இந்த எடுத்துக் காட்டல், ஞாபகம், பிசி என்ற மூன்று பொருளும் ஒன்று போல் அமைந்திருக்க, இலக்கிய உதாரணம் என்பது முதற்சொல்லாக நூற்பாவில் “ம்” என்பது இல்லாது போயிருந்தாற்றான் சரியாக வரும். இலக்கியம் என்ற சொல் இங்கு குறிப்பிட்ட நூற்பாவில் பயன்பட்டிருக்கிறது. அந்த வகையில் இது குறிப்பிடத் தக்க பதிவு ஆனால் அது நூல் என்ற பொருளில் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. உதாரணம் என்ற பொருளில் அல்ல. அந்த 1845 ஆம் நூற்பாவை ஒழுங்காகப் புரிந்து கொண்டால் இலக்கியம் என்ற சொல் திவாகரத்தில் எடுத்தாளப் பட்டிருப்பது புரியும்."

"தம்பி, நிறையப் பேர் நீ தொட்டுக் காட்டும் எழுத்துப் பிழையை ஏற்க மாட்டார்கள்."

"அண்ணாச்சி! கிடுகுப் (critical) பொருக்கில் ஒரு நூலைப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் contextual reading என்பார்கள். எழுத்துப் பிழை இங்கு இருந்திருக்கலாம் என்று நான் உணர்த்துகிறேன். ஏற்பதும் ஏற்காததும் வாசிப்போர் உகப்பு. நான் சுவடியைப் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் எல்லோரும் வானுலகஞ் சேர்ந்துவிட்டார்கள். இருப்பவர்கள்தான் ஊகிக்க வேண்டும். 'வேண்டுமென்ற இடத்தில் பிழையிருப்பதாகக் கொள்வேன். வேண்டாமென்றால் மறுப்பேன்' என்றால் நான் சொல்ல என்ன இருக்கிறது?"

"சரி விடு. இலக்கியப் படிப்பில் இதுவோர் இக்கு"

"இலக்கியம் என்ற சொல்லிற்கு இன்னோர் இக்கு எடுத்துக்காட்டுகிறேன் அண்ணாச்சி."

"திருவாசகம் 51 பகுதிகள் கொண்டது தில்லை நடவரசன் திருமுன்னில் இறைவனே செப்பேட்டில் எழுதிப் படியில் வைத்ததாய் ஒரு தொன்மமுண்டு. அந்தச் செப்பேடு எங்கு போனதோ, யாருக்கும் தெரியாது. இப்பொழுது நாம் படிக்கும் திருவாசகம் செப்பேட்டில் இருந்து பெறப்பட்டதாய்த் தெரிய வில்லை. காலகாலமாய்ச் சுவடியிலெழுதி 100, 150 ஆண்டுக்கொருமுறை ஏடு பெயர்த்துத் தான் திருவாசகம் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே அதிலும் சில்லேடுகள் செல்லரித்துப் போய், சில பதிகங்கள் குறைப்பாடலோடு வந்து சேர்ந்தன. அதாவது சில குறைப்பாடல்களில் எழுத்துப் பிழைகள் இருந்தோ, எழுத்துக்கள் இல்லாதிருந்து அவ்விடத்தில் எழுத்துக்கள் பெய்தோ, வந்து சேர்ந்திருக்கின்றன. திருமந்திரத்தில் செம்பதிப்பு வந்தது போல சுவடிகள் ஒப்பிட்டு செம்பதிப்பு வெளியிட்ட திருவாசகத்தை நான் பார்த்ததில்லை."

"திருவாசகத்தில் 48 ஆவது பகுதி ’பண்டாய நான்மறை’ என்னும் பதிகம் அதுவொரு குறைப்பத்து. ஏழு பாடல்கள் தாம் உண்டு. ஏழாம் பாடல் மிகவும் பேர் பெற்றது ஏனென்றால் அதில் மணிவாசகர் ’மணிவார்த்தை’ என்ற சொல்லால் தன் பெயரை வெளிப்படுத்திக் கொண்டதாய்ப் பலரும் ஊகிக்கிறார்கள். முதலிற் பாடலைப் பார்ப்போம்"

பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து

- திருவாசகம் பண்டாய நான்மறை 48.7

”இந்தப் பாட்டிற்குப் பொழிப்பு என்ன தெரியுமா? ’பேசும் பொருளுக்கு இலக்கிதமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்.’ என்ன சொல்லுகிறார் மாணிக்க வாசகர்? அதுவென்ன இலக்கிதம்? நானும் துருவித் துருவிப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. இந்தவொரு பாட்டைத் தவிர இலக்கிதம் என்ற சொல் தமிழில் எந்த நூலிலும் எங்கும் வரவில்லை. அதனாலேயே அகரமுதலிகளில் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டு அந்த அகரமுதலியில் எடுத்துக் காட்டாய்க் குறிக்கப் பெற்றிருக்கிறது. எந்தப் பொருளும் சொல்லப்படவில்லை. நான் மயங்காது இருக்க முடியவில்லை"

"நான் இளமையில் பொறியியல் முதலாண்டிற் படிக்கும் போது, எங்களுக்குக் குடிமைப் பொறியியல் (civil engineering) சொல்லிக் கொடுக்கும் போது சாலை போடுவதற்கான சல்லிக்கல் (road metal) பற்றிச் சொல்லித் தரவேண்டும். எங்கள் ஆசிரியருக்கு ஆங்கிலம் சற்று வாராது. இப்படித் தொடங்குவார். “Road metal is ......" கொஞ்ச நேரம் இடைவெளி கொடுத்து நிறுத்துவார். திடீரென்று "road metal" என்று முடித்து எங்களைபெல்லாம் பார்த்துப் புன்முறுவல் செய்வார். அவர் road metal என்பதை எங்களுக்கு விளக்கிவிட்டாராம். அந்த நிலை தான் இங்கு அகரமுதலியில் இலக்கிதம் என்ற சொல்லைப் பார்த்தால் எனக்கு ஏற்படுகிறது. ”இலக்கிதம் என்பது இலக்கிதம். Road metal is road metal." இப்படி விளக்கம் சொல்வதற்கு ஆங்கிலத்தில் அதாகுவியல் (tautology) என்று பெயர். அதை அதாலே விளக்குவது."

"மாறாக இலக்கிதம் என்பதை எழுத்துப் பிழை என்று கொள்ளுவோமே? தகரத்தை யகரமாய்க் கொண்டால் என்னவாகிறது?"

பேசும் பொருளுக்கு இலக்கியமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து

"இப்படிப் பாட்டிருந்தால் பொருள் என்னவாகும்? ”பேசும் பொருளுக்கு இலக்கியமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்” என்ற பொருள் மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது. பேச்சுக்கு மீறிய மணி வார்த்தைகள், பேசும் பொருளுக்கு இலக்கியமாய், குறிக்கோளாய் அமைகின்றதாம். சிவநெறிக்கு திருவாசகம் இலக்கியமாய் அமைகிறது. பிறப்பறுத்தல் என்றால் வீடுபேறு. அவருடைய சமய வாழ்வின் உச்ச கட்டம். அந்த இடத்தைச் சொல்லும் போது குறிக்கோளைச் சொல்லுகிறார். இலக்கியம் என்கிறார். இலக்கியம் என்ற சொல்லின் முழுப்பொருளும் எழுத்து, குறி (அடையாளம்) ,இயல்பு, ஒழுங்கு எல்லாம் வந்து சேருகிறதே?."

"இப்படிச் சரியான பொருள் கிடைக்கும் போது இலக்கிதத்தை எடுத்துக் கொள்வேனா? இலக்கியத்தை எடுத்துக் கொள்வேனா? தகரமா? யகரமா? - என்று கேட்டால் ”எனக்குத் தெரியாது. யகரமாய் இருந்தால் புது வரையறை தேவையில்லை. இருக்கும் வரையறையை வைத்தே பொருள் சொல்லிவிடலாம்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. சரி இதை மணிவாசகர் காலம் எதுவென்று சொல்லலாம்?"

"மாணிக்கவாசகர் வரலாற்றைக் குழப்பிக் கொள்பவர் பலர். அவர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்று சொல்லிப் பின்னுக்குத் தள்ளுபவரும் உண்டு. இல்லை அவர் தேவார மூவருக்கும், கல்லாடருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் முந்தியவர் என்று சொல்லி அதை நிறுவ முயன்ற மறைமலை அடிகளாரும் உண்டு. அளவுக்கு மீறிய சிவநெறித் தாக்கம் கொண்டு மறைமலை அடிகளார் சொல்லுகிறார் என்று அவருடைய மாணிக்க வாசகர் கால ஆய்வைக் குறை சொல்லி ஒதுக்குபவர் பலரும் இதுவரை முடிவான எதிர்ச்சான்று கொடுத்ததாய் எனக்குத் தென்படவில்லை.”

”தமிழாய்வில் மாணிக்க வாசகர் காலம் என்பது இன்னும் முடிவுறாத ஆய்வு. என்னுடைய சாய்வு மறைமலை அடிகளார் பக்கம் தான். மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். [அது தமிழ் உலகம் மடற்குழுவிலோ, அகத்தியர் மடற்குழுவிலோ வந்தது. எனக்கு நினைவில்லை. இன்னொரு முறை அதைத் தேடி என் வலைப்பதிவிற் கொண்டு சேர்ப்பேன்.] மாணிக்க வாசகரின் காலம் மூன்றாம் நூற்றாண்டாய் இருக்கலாம். அது களப்பிரர் காலம் என்றே நான் கொள்ளுகிறேன்."

"அப்படிக் கொண்டால், இலக்கியம் என்ற சொல் மூன்றாம் நூற்றாண்டு ஆளப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்."

அன்புடன்,
இராம.கி

இலக்கியம் - இலக்கணம் - 2

”என்ன தம்பி! இல்லுகிற சொற்கள் கூடுகின்றனவே? முடிவில் இலக்கிய இலக்கணம் வந்து விடுவாயா? இலக்கிய இலக்கணத்தை மறுக்க வேண்டுமென்றால் நீ காட்டுகிற சொற்கள் அத்தனையும் சேர்ந்து ஒரு மரபையே மறுக்க வேண்டுமாக்கும். அது கொஞ்சம் கடினம் தான்.”

”ஆமாம் அண்ணாச்சி, துளைத்தலிற் தொடங்கி பொருள் வளர்ச்சி ஏற்பட்டு ஒவ்வொரு சொல்லாக எழுந்த வரலாறு இருக்கிறதே அது மரம் போல. சும்மா இலக்கிய இலக்கணத்தை மட்டும் வெட்டிச் சாய்த்துவிட்டுப் போய்விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். கிடையாது ஒவ்வொரு இலையும், தளிரும், கொப்பும், கம்பும், கிளையும், சினையும், மரமும், வேரும் என்று உய்யும் ஒருங்கிய முழுமை (organic whole), ஆணிவேர் வரைக்கும் இருக்கிறது. மறுப்பதென்றால் இத்தனை சொற்களையும் மறுக்க வேண்டும். பொறுத்துப் பாருங்கள் அண்ணாச்சி!”

”சரி! பொறுமையாகப் போவோம். இகுதல் பற்றிச் சொன்னாய்”

”இகுதல் = மேலிருந்து கீழ் வருதல், இகுதலின் நீட்சியாய் ஈதல் எழும். இல்லாதவருக்குக் கொடுக்கக் கை இறங்குகிறது. ஈதலின் தொழிற்பெயர் ஈகை. வாயில் இகுந்துவரும் வாய்நீர் நாட்டுப் புறங்களில் ஈத்தா/ஈத்தை எனப்படும். பிள்ளை பெறுவதும் இகுதற் செயலே. கருப்பை வாயிலிருந்து பிள்ளை இறங்குகிறதல்லவா? ஒவ்வொரு பிள்ளையிறக்கமும் (=பிறப்பும்), நாட்டுப்புறங்களில் ஈத்து எனப்படுகிறது. "அவள் இவனை ஈன்றாள். இது எத்தனையாவது ஈத்து?". பிறப்பென்பது பிள்ளையின் பார்வையில், ஈத்தென்பது தாயின் பார்வையில், சொல்லப்படுவது. ஈனியல் என்ற சொல்லால் இன்றைக்கு genetics - யைக் குறிக்கிறோமே? ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்லப்பெறும் நிலத்திணை yield - களும் தமிழில் ஈத்தெனப்படுவதை அகரமுதலிகள் வாயிலாய் அறிந்து கொள்ளலாம்.”

”தம்பி, நீ சொல்லச் சொல்ல எனக்கு வியப்பு கூடிக் கொண்டே போகிறது.”

”இகுந்தது (=தாழ்ந்தது) ஈந்தது என்றும் வடிவங்கொள்ளும். இனி, இறக்கமான இடத்தைக் குறிக்க, ஈந்து>ஈந்தம் என்ற பெயரைத் தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், இக்கால அகரமுதலிகளில் அது பதியப் படவில்லை. இருந்த இடத்தைக் குறிக்கும் ”இருத்தம்” தமிழ் அகரமுதலிகளில் உள்ள போது, ஈத்தம் பதியப்படாதது நமக்கு வியப்பாகவே இருக்கிறது.”

”தம்பி, கிழக்கு என்ற சொல் பள்ளமான இடத்தைச் சுட்டுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.”

”உண்மை. மனையடி சாற்றத்தில் மனை நிலத்தின் அமைப்பு விளக்குகையில், இருப்பதிலேயே உயரமாய் தென்மேற்கு மூலையும், அதற்கு அடுத்த உயரத்தில் வடமேற்கு, தென்கிழக்கு மூலைகளும், இருப்பதிலேயே பள்ளமாய் வடகிழக்கு ஈசான மூலையும் சொல்லப் பெறும். ஈத்து என்ற சொல், கிழக்கைக் குறித்தால் தான், ஈத்தானம்>ஈதானம்>ஈசானம் என்ற சொல் ஆகப் பள்ளமான வடகிழக்கைக் குறிக்க முடியும். [இது பற்றி மேலும் ஆய வேண்டும்; என்னால் உறுதியாக இப்பொழுது சொல்ல இயலவில்லை.] [தமிழ் அகரமுதலிகளில் இல்லாது, அதே பொழுது இருப்பவற்றில் இருந்து தருக்கம் வழியாக உன்னிக்கக்கூடிய சொற்கள் பலவும் உண்டு. ஈந்தம்/ஈத்தம் அப்படிப்பட்டது.]”

”தம்பி, நம்மூர் வடமொழி அன்பர்கள் இதையெலாம் ஏற்க மாட்டார்கள். ஈசானத்துட் புகுந்து அவர் அடிமடியை நீ குலைக்கிறாய்.”

”அவர்கள் பார்வை ஏற்கும்படியில்லை. அதனால் மறுக்கிறேன். மனையடி சாற்றமே தென்னிந்தியப் புவிக்கிறுவத்தை (geography) அடியாய்க் கொண்டது என்று நெடுநாள் ஐயமுண்டு. சரி, சொல்லவந்ததைச் சொல்லுகிறேன். ஈந்தம், ஈத்தம் ஆகியவை தமிழிற் பதியப் படாதிருக்க, வடபுலப் பலுக்கில் உருவான ஈந்தம்>ஐந்தம்> ஐந்த்ரம்> ஐந்திரம் என்பது மட்டும் தமிழ் அகரமுதலிகளில் பதிவாகி இருக்கிறது. எப்படிச் சிவம், சைவம் என வடபுலத் திரிவுற்றதோ, அதைப்போல, ஈந்தம், ஐந்தமெனத் திரிந்து வழக்கம்போல் ரகரம் நுழைந்து ஐந்திரத் தோற்றம் காட்டுகிறது. [மேலை மொழிகளில் east என்னும் சொல்லும் ஈத்து எனும் சொல்லுக்கு இணையாவது கண்டு என்னால் வியக்காது இருக்க முடியவில்லை. பொதுவாய் "த்து" என்னும் மெய்ம்மொழி மயக்கம் மேலைமொழிகளில் "st" என்றே உருப்பெறுகிறது. இதற்குக் கணக்கற்ற எடுத்துக்காட்டுகளுண்டு.]”

”என்ன தம்பி! இப்படியே இல்லி இழித்துக் கொண்டு போகிறாயே?”

”அது மட்டுமில்லை அண்ணாச்சி. பள்ளம் தொடர்புடைய வேறுசில பயன்பாடுகளும் உண்டு. காட்டாக, இலந்தது இலந்தி; அது இலஞ்சியாகிக் குளம் என்ற பொருளைக் குறிக்கும். இலஞ்சி மன்றம் என்று சிலம்பிலும், மணிமேகலையிலும் வருகிறது அல்லவா? இலந்தது இன்னும் வேறு வகையில் திரிந்து இலவந்தி>இலவந்திகை என்றாகி வெந்நீர் நிறைத்துக் குளிப்பதற்காகச் செயற்கையாய்ச் செய்யப் பட்ட குளத்தையும் குறிக்கும். "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்" என்று ஒரு பாண்டிய மன்னனை புறநானூறு பேசும்”

”இதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று நினைக்கிறேன்.”

”பள்ளம் பற்றி வேறு விதம் பார்ப்போமா? எழுதுபொருளில் துளைத்த பின், எழுத்தாணியை தரதர என்று ’இழுக்கிறோமே’, அதுவும் இல்லிற் தொடங்கியது தான். இல்லுதல்>இல்லுத்தல்>இழுத்தல். இழுத்ததின் மூலம் கிடை மட்டத்தில் பள்ளம் பறித்துக் கொண்டே போகிறோம். அது கோடாக மாறுகிறது. இலுக்கிக் கோடு போவது நம் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் பரவியிருக்கிறது. இழுத்தது எழுத்தாணியோடு மட்டும் நிற்கவில்லை. அதன் பொருள் விதப்புப் பயன்பாட்டிலிருந்து பொதுமைப் பயன்பாட்டிற்கு மேலும் விரியும்.”

”இல்லிலிருந்து இலுக்கா? சரிதான் எனக்குக் குலுக்கிருச்சு.”

”இலுக்குதலின் எதுகையாய் கிலுக்குதல்>கிலுக்கி என்ற சொல் எழும். இது, குத்திக் கிழிக்கும் கருவிக்கு சிவகங்கை மாவட்டச் சொல். ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த வெற்றித் திருநாளில் (விசய தசமியில்) கிலுக்கி/கிளுக்கி தூக்கிக் கொண்டு ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் வாழை மரத்திற் குத்தப் போகும். அண்ணாச்சி! மொழிச் சொற்களை நாட்டுப்புறப் பண்பாடோடு புரிந்து கொள்ள வேண்டும்.”

”உனக்கு இதே வேலை தம்பி, சுற்றிவளைச்சு சிவகங்கை மாவட்டத்தைக் கொணர்ந்து உங்கூரைச் சொல்லலைன்னா உனக்கு இருப்புக் கொள்ளாது”

”அப்படி இல்லையண்ணாச்சி! ஒன்பான் இராக்கள் தமிழருக்கு வேண்டப்பட்ட திருவிழா. அதில் இப்படியொரு பகுதியும் இருக்கென்று சொன்னேன். ஊர்ப்பாசம் இருக்கக் கூடாதா? ஒரேயடியாய்த் தூக்கி வைத்தாத்தான் அண்ணாச்சி தப்பு!"

"இலுக்குதல்/ இலுவுதல் எல்லாம் இப்படி எழுந்த வினைகள் தான். இலுவிக் கொண்டே போனது வடக்கே (இ)லிபி என்று ஆயிற்று. மகதத்திலே -அதாங்க பீகார், வங்காளத்துலே வகரம் பகரமாயிரும். அசோகர் காலத்துலே எழுத்து பரவியது தெற்கே தமிழகமும் வடக்கே மகதமும் தான். இந்திக்காரன் இன்றைக்கும் லிக் என்றுதான் இலுக்குவதைச் சொல்கிறான். துளையிற் தொடங்கிய இந்த வேர், சொற்பிறப்பு, இந்திய மொழிகளிற் தமிழிற் தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் எழுத்து அசோகன் பெருமியில் இருந்து தான் முதலில் வந்ததாம். நான் என்ன சொல்ல?"

"அதான் சொல்லிட்டியே? அப்புறம் என்ன?"

"இந்திய எழுத்தின் தொடக்கம் கல்வெட்டு. அதன் தொடக்கம் நம்மூரிற்தான். 'அசோகர் கல்லை வெட்டினார்; மற்றோர் அதைப்பார்த்துப் பின்னால் எழுதினார்' என்று கீறல் விழுந்தாற் போற் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மகதத்தைப் பெரிதாய்ப் பேசுகிறவர்கள், அதே காலத் தமிழ்நாட்டைப் பெரிதாய்ச் சொல்வது இல்லை. அவன் பெரிய ஆள் தான். அதற்காக நாங்கள் ஒன்றும் சின்ன ஆள் இல்லை. வரலாற்றை வடக்கிருந்தே பார்த்துப் பழகிவிட்டோம், அண்ணாச்சி. ஒருமுறைதான் தெற்கிருந்து தொடங்கிப் பாருங்களேன். புதிய பார்வை கிடைக்கும்.

"புதிய பார்வையெல்லாம் யாருக்கு வேண்டும் தம்பி? 'அசோகர் சத்திரம் கட்டினார், சாவடி கட்டினார். சாலையின் இருமருங்கும் மரங்கள் நட்டார்' - என்று எழுதினால் வரலாற்றுத் தேர்வில் 2 மதிப்பெண்கள். இப்படிப் படித்தே வரலாற்றைத் தொலைத்தெறிந்தோம். இதைப் போய் நீ மாற்றி எழுதுங்கன்னு சொல்றே. தொலைச்சுருவாங்க தம்பி. தெற்கேயிருந்து தொடங்குவதாவது? தலைகீழாய்க் குட்டிக் கரணம் அடிச்சாலும் அது நடக்காது."

"அண்ணாச்சி! இப்படியே எத்தனை நாளைக்கு அடங்கிப் போறது? இத்தனைக்கும் இந்தியாவிலேயே ஆகப் பழம் பானைக் கீற்றுகள் தெற்கே கொடுமணலிலும், கொற்கையிலும் தான் அகழாய்விற் கிடைத்திருக்கின்றன. சிந்து சமவெளியை விட்டுப் பார்த்தால் ஆகப் பழைய எழுத்து எங்கே கிடைத்திருக்கிறது? வடக்கிலா? தெற்கிலா? தெற்கிற் கிடைத்தது அசோகர் கல்வெட்டிற்கும் முந்திய காலம் என்று இற்றை ஆய்வு மிகத் தெளிவாகச் சொல்லுகிறது.. அதே போல இலங்கை அநுராதபுரத்திலும் ஆகப் பழைய கல்வெட்டு பாகதத்திற் கிடைத்திருக்கிறது. எல்லாமே அசோகருக்கு முந்தியது அண்ணாச்சி. அப்புறம் என்ன அசோகன் பெருமி (பிராமி)? மண்ணாங்கட்டி. வரலாற்றை இனிமேலாவது மாற்றி எழுதுங்கள். செயினர் தமிழருக்கு எழுத்துக் கற்றுத் தரவில்லை. செயினர் இங்கிருந்து கற்றுப் போனார். இதையும் ஆய்வு மூலம் அறுதியிட்டுச் சொல்ல முடியும்."

"தம்பி, நீ என்ன கத்தினாலும் ஏற்கனவே நிலைச்சுப் போன நாட்டாமைக் காரர்கள் இதை ஏற்க மாட்டார்கள்."

"இன்றைக்கு ஏற்கவில்லையென்றால் எதிர்காலத்தில் ஏற்பார்கள் அண்ணாச்சி. ”உண்மையே வெல்லும்” என்று இந்திய அரசு வாசகம் சொல்லுகிறது. தமிழி / பெருமி எழுத்து தெற்கே பிறந்து வடக்கே போனது. இன்றும் ஒருசிலர் இதை மறுத்துக் கொண்டேயிருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு ஐராவதத்தோடு கல்வெட்டுப் படிப்பெல்லாம் முடிந்தது. ”அதுக்கு அப்புறம் ஒன்றுமே நடக்கவில்லை. ஐராவதம் சொன்னது தான் அவர்களுக்கு வேத வாக்கு”. ஆனால் திருச்சிப் பாலத்துக்கும் கீழே காவிரிநீர் புதிதாய் ஓடிக் கொண்டேயிருக்கிறது. கல்வெட்டியல், தொல்லியல் என்பது தொடர்ச்சியான படிப்பு. அகழாய்வாளார்கள் இல்லிக் கொண்டேயிருப்பார்கள். புதிய பழஞ் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. மீளாய்வு தொடர்கிறது."

"அப்ப, இழுத்தது எழுத்துன்னு சொல்றே!"

"உறுதியாச் சொல்கிறேன் அண்ணாச்சி. கல், களிமண், மரம், தோல், ஓலை எல்லாத்திலும் இழுத்தது எழுத்து. கீறியது கீற்று. (inscription என்று ஆங்கிலத்திற் சொல்கிறார்களே, அந்த scribe, graph என்பதும் கிறுவுவது தான். கீற்றுத் தான்.) வரைந்தது வரி."

அன்புடன்,
இராம.கி.

இலக்கியம் - இலக்கணம் - 1

இப்பொழுதெல்லாம் ”செம்மொழி தமிழ்” என்று யாராவது சொன்னால் ”போதும் சவடால்”என்று சொல்லத் தோன்றுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் ”இலக்கியம் இலக்கணம்” என்று தானாய்ச் சொல்லத் தெரியாத ஒரு மொழிக்குச் செம்மொழிப் பட்டம் என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒட்டுமுடியால் ஒப்பனை செய்வதற்குக் குறைமுடியோடு இருந்து போகலாமே?. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”- என்று சலித்துக் கொண்டார் மொழியார்வலர்.

”அமைதி, அமைதி அண்ணாச்சி, அவ்வளவு சலிச்சுக்காதீங்க. சிலர் சொல்வது போல இலக்கியம் என்ற சொல்லை 1100 ஆண்டுகளுக்கு முன் நேரே பார்க்க முடியாது தான். இலக்கித்தல் என்ற வினையையும் 1200 ஆண்டுகளுக்கு முன்தான் பார்க்கலாம். திருவாசகக் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்னாது மறைமலை அடிகள் தருக்கத்தை ஏற்று 3 ஆம் நூற்றாண்டு என்றால், இன்னும் முன்னால் 1700 ஆண்டுகளிற் பார்க்கலாம்.

ஆனால் இலக்கணம் என்பதைக் குறைந்தது 2300/2700 ஆண்டுகளுக்கு முன் பார்க்க முடியும். இலக்கு, இலக்கம் போன்றவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன் பார்க்கலாம். பொறுமையிருந்தால், இணைச் சொற்கள் இருப்பிலிருந்து தருக்கத்தின் மூலம் இலக்கிய - இலக்கண இயலுமையைக் கண்டு கொள்ளலாம். பொதுவாய்த் தமிழ்ச் சொற்களுக்கு 2000 ஆண்டுப் பதிவு இருக்கிறதா? - என்று கேட்டு, அதன்பின்தான் எவற்றையும் ஏற்கலாமெனிற் பல சொற்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.”

சலித்துக் கொண்டவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”ஏதோ ஆழ்ந்து சொல்ல வருகிறாய் போலத் தெரிகிறது.”

”கொண்டைக்குள் கிடக்கும் ஈரைப் பற்றிப் பேசினீர்களே? கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப்பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியாயிற்று. இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் என்று பல்வேறு பொருள்களுண்டு. இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக்குடம் பார்த்திருக்கீங்களா? ஓட்டைக்குடம், கடை மாணாக்கன், நன்னூல்”- விளக்கத்தாருக்கு வேறு வேலையில்லை, இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்.

”இல்லப்பட்டது இல். மலைகளிற் குகைகள் இருக்கின்றனவே, இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவை தாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவையெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றால் குகை என்ற பொருளும் உண்டு. குகையைப் பார்த்துத் தான் வீடு, மனை என்ற கட்டுமானங்கள் எழுந்தன.”

’ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்’
- நாலடியார் 198.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை’
- திருக்குறள் 41.

”இல்லென்றால் இடம் என்று பொருளும் உண்டு. இருத்தல் என்ற வினையும் இல்லில் இருந்தே இல்>இர்>இரு என்று தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’என்றுஞ் சொல்லுவர். இருந்தல் = குந்தல்; உள்ளுதலிருந்து உட்கார்தல் போல இல்லுதலிலிருந்து இருத்தல் எழுந்தது.”

ம.இல்; க. இல், இல்லு; தெ.இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.

”நிறுத்து. நிறுத்து. இப்பொழுது என்னாச்சு உனக்கு? தமிழில் மட்டுமின்றி பல திராவிட மொழிகளிலும் ”இல்” இருக்கிறதாக்கும். இன்னும் பல சொற்கள் இல்லின் வளர்ச்சியாய் திராவிட மொழிகளில் உள்ளனவாக்கும். எமனோ, பர்ரோ போன்ற வெள்ளைக்காரர்களே சொல்லி விட்டார்களாக்கும்? அப்பொழுது காது கொடுத்துக் கேட்க வேண்டுமோ?”

”ஆமாங்க, அப்படித்தானே தமிழ் செம்மொழியாகியது! ஆர்ட் சொல்லாமல் இந்திய அரசு தலையாட்டலைங்களே! தமிழன் சொல்லி யார் கேட்டார்? பரிதி மாற் கலைஞர், மறைமலையடிகள், இலக்குவனார், பாவாணர் என்று நூறுபேர் சொல்லியிருந்தாலும் வெறியர் என்று விலக்கியிருப்பார்களே? கால காலமாய் அப்படித்தானே நடக்கிறது? வெள்ளைக்காரர் சொன்னதால் தானே இந்தியர் கேட்டுக் கொண்டிருந்தார்? இது நம்மூர் வழக்கம் தானே?”

”இங்க பாரு. உங்கூர் அரசியலுக்குள் நான் வரவில்லை. இல், ஈல் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே! அதை மட்டும் தொடரு. எதுவரை செல்கிறது? - என்று கேட்டுவிட்டுப் போகிறேன்.”

”இனி எடுத்துக் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் மற்ற திராவிட மொழி இணைச்சொற்கள் வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கொடுக்க வேண்டும் என்றால் அதைத் தேடுவதிலேயே என் பொழுது போய்விடும்.”

”என்ன தம்பி, இப்படிச் சொல்லிட்டே? 10 வகைத் திராவிட இணைச்சொற்கள், 4,5 வடமொழி எடுத்துக் காட்டுகள், 2,3 ஆங்கில மேற்கோள்கள் இல்லையென்றால் எந்த மொழிவிளக்கமும் ஏற்க முடியாது தம்பி. அதுதான் இன்றைய வழமை. தமிழென்றால் எப்பொழுதும் குடைய வேண்டும். இல்லை என்றாற் துளிர்த்து விட மாட்டீர்கள்” - குறும்புப் பார்வையால் குறுகுறுத்தார் மொழியார்வலர்.

”அண்ணாச்சி! வேற்றுமொழி எடுத்துக்காட்டெல்லாம் கொடுத்து எங்களாலும் செய்ய முடியும். அதையெல்லாம் செய்யாமல், நாங்கள் விளக்க முன் வரவில்லை. ’தமிழ் என்று சொன்னாலே தரமில்லை’ என்று சொல்லி இளக்காரம் பண்ணியது போதும், மொத்த உரையாடலையும் கவனியுங்க. அப்புறமாய் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்”- விளக்கத்தார் சற்று உணர்ச்சிவசப்பட்டவர். முணுக்கென்று கோவம் வந்துவிடும்.

”தம்பி! கோவம் கண்ணை மறைச்சிடும். அவுங்க கிடக்காங்க. தமிழ்ச் சான்றுகளை நீ சொல்லு. நான் கேட்கிறேன்.”

”இல் என்றால் இடம் என்றேனா? இருத்தல் வினையும் அதிற் கிளைத்தது என்றேனா?. ஈ என்றால் அம்பு என்ற பொருளுண்டு. இல்>இள்>ஈள்>ஈட்டு என்றால் செலுத்து, குத்து என்று பொருள். ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்>ஈர்>ஈ = பிரித்தல், பிளத்தல்”

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
- திருக்குறள் 334

”இல்>ஈல்>ஈலி. ஈலி என்றால் கைவாள் (sword), சுரிகை (dagger) என்ற பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல் என்ற பொருளுண்டு. பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால் ஈர்க்கு என்ற சொல்லும் எழும். அதே போல ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தெனும் பெயர்பெறும்.. பேச்சுவழக்கில் ஈச்ச மரமாகும். ஈர்-இரு-இரள்-இரண்டு என்ற சொற்களும் கூட இந்த இல்-ஈலிற் பிறந்தவை தான். ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தல் தான். அப்படி வகுத்துவரும் எண்ணை ஈல்வு>ஈர்வு>ஈவு என்று சொல்கிறோமே?”

”இந்த இல், ஈல் சொற்களுக்குள் இவ்வளவு குத்தல், பிரிவு வேலை இருக்கா? துளைப் பொருள் நீண்டு, தமிழில் இவ்வளவு சொற்களா?”

”இன்னும் ஏகப்பட்ட சொற்கள் இருக்கு அண்ணாச்சி! இப்பொழுது ஒரு ஆறு, போகும் வழியில் இரண்டாய்ப் பிரிந்து மீண்டும் கூடுகிறது நடுத் தீவிற்கு அரங்கம் என்று பெயர். *அருத்தது>அறுத்தது அரங்கம். அரங்கம் போலவே இன்னொரு சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார்கள். (ஈழம் என்பது ஈலில் எழுந்தது.) சிறுபாணாற்றுப் படையில் ஓய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன் ஊராய் மாவிலங்கை என்ற ஊர் சொல்லப்பெறும். அது தென்பெண்ணையாற்றில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஆற்றுத் தீவு.”

”தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கில் இருக்கும் இலங்கைத் தீவும் இப்படிப் பிரிந்தது தானோ?”

”ஆமாம். இதிலென்ன ஐயம்? ஒருகாலத்திற் கடல் மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற ஆகிய இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள். யாரோ புரியாமற் சிங்களமென்று தவறாகச் சொல்ல, அதைப் பிடித்துச் சிலர் தொங்குகிறார்கள். அந்நாட்டின் பெயரே தமிழ்ப் பெயர் அண்ணாச்சி. நமக்கங்கு இடமில்லை என்று சிங்களன் சொல்கிறான். நாமோ ஒற்றுமையின்றிக் கோட்டை விடுகிறோம். இல்>ஈல் நமக்கு அவ்வளவு முகனைச் செய்தி.”

”அப்படி என்னப்பா முகனைச் செய்தி?”

”அண்ணாச்சி, பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதற்குத் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் அதனோடு சேர்ந்தவை தான். இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட கடற்பகுதியும், குமரிக்குத் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் கடலுக்கு இழந்தது ஏராளம் அண்ணாச்சி. குமரிப் பெருநிலம் என்று நாம் சொன்னாற் கேலி செய்பவர்களும், மறுக்கிறவர்களும் கேலி செய்து மறுக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கென்ன வந்தது? ஏமாளியாய் நாம் இருக்கும் வரை ஏமாற்றுக்காரன் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான்.”

”ஆமாம் தம்பி. ஏமாறலில் இரண்டு பக்கமுண்டு, தெரியுமோ?”

”இன்னொரு செய்தியைப் பாருங்கள். ஆங்கிலத்தில் isle என்ற சொல் உண்டு தானே? அதை வெள்ளைக்காரன் எப்படி எழுதிப் பலுக்குகிறான். ஈல்>ஈழ் என்று தானே? ”சொல்லின் தோற்றம் தெரியாது” என்று அவர்கள் அகரமுதலியிற் போட்டிருப்பார்கள். island என்பதற்குத் ”நீர் மேலிருக்கும் நிலம்” என்று சுற்றி வளைப்பார்கள். ஈழம் என்ற சொல்லைப் பார்த்தாற் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது என்று சொல்வதில் ஓர் அறிவியல் உண்மையிருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், உலகத் தீவுகளைக் குறிப்பதற்கு மேலை நாடுகளிற் பொதுமைப் பெயராய் ஆகியிருக்கிறது. அப்படியெனில் முதலிற் தமிழன் கடலோடியது எப்பொழுது? நாமோ ஈல்>ஈழம் தமிழில்லை என்று சொல்லித் திரிகிறோம். தமிழனைப் போன்ற அடிமுட்டாள் கிடையாது அண்ணாச்சி.”

”இப்பொழுது சொன்னாய் பாரு, அது உண்மை. ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழனைப் போல அடிமுட்டாள் கிடையவே கிடையாது. இல்லையா?”

”அண்ணாச்சி, இல்லை என்று சொன்னவுடன் இன்னொன்று ஞாவகத்திற்கு வருகிறது. இல்-தல் என்று சொன்னால் துளைத்தல் என்று சொன்னேன் அல்லவா? துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காதல்லவா? அதனால் இன்மைப் பொருளும் இல்லிலிருந்து, துளைப்பொருளிலிருந்து, எழும்பியது. இன்மைப் பொருளில் இருந்து ”இலம்பாடு” போன்ற வறுமைச்சொற்கள் எழுந்தன. இலகு போன்ற நொய்மைச் சொற்களும், இலவு போன்ற மென்மைச் சொற்களும் இல்லில் எழுந்தவை தான். நூறாயிரத்தைக் குறிக்கும் இலக்கம் என்ற சொல் நொய்மைப் பொருளில் எழுந்த சொல். வேர் தமிழில் இருந்து பின் வடக்கே போய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வந்த சொல். அதை விவரிக்கத் தொடங்கினாற் பெருகும் என்பதாற் தவிர்க்கிறேன். நூறு, ஆயிரம், இலக்கம், நெய்தல், குவளை, கோடி, ஆம்பல், தாமரை, வெள்ளம் போன்ற எண்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.”

”சரி எண்களை விட்டிடுவோம். ஆனால் இல்லையென்று சொல்கிறோமே, அதுவும் இல்லிலிருந்து தானா?”

”ஆமாம். இன்னொன்றையும் பாருங்கள். இல்லிக் கொண்டே போனால் என்னாவாகும்? ஒரு மட்டத்திருந்து இறங்குவோம் தானே? இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் என்றால் இறங்குதல். இந்தச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவு என்னும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்தது தான். இழிகுதல்>இயிகுதல்>ஈகுதல்>இகுதல் என்ற வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல்லும் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் என்னும் பிறவினை தாழ்த்தற் பொருள்கொள்ளும். இகழ்தல் வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.”

அன்புடன்,
இராம.கி

Monday, July 18, 2011

வாகை மாற்றங்கள் (phase changes) - 5

இருபுனைக் கட்டகங்களின் வாகைப் படத்தை (phase diagram) விவரிப்பதாய்ச் சொல்லியிருந்தேன். இப்போதையத் தொடக்க நிலையில் முழு விவரிப்பும் தந்தால், ஒருவேளை படத்தின் பலக்குமை (complexity)நம்மிற் சிலரைப் பயமுறுத்தக் கூடும். எனவே கொஞ்சங் கொஞ்சமாய் இதை அவிழ்க்கும் வகையில், நீர்ம - ஆவி வாகைகள் மட்டுமிருக்கும் பகுதியை முதலில் விவரிக்கிறேன். கூடவே விழும வளி (ideal gas), விழுமக் கரைசல் (ideal solution) ஆகியவற்றையும் ஓரளவு பார்ப்போம்.

எளிதில் ஆவியாகும் ஈதைல் வெறியம் (A) போன்றதொரு நீர்மத்தை ஒரு கிளராடிக் குடுவையில் (glass flask)எடுத்துக் கொள்வோம். இந்தக் குடுவைக்குள் நீர்மம் இறங்க ஓர் உள்ளீட்டு வாவியும் (inlet valve), ஆவி வெளியேற ஒரு வெளியேற்று வாவியும் (outlet valve), நீர்மம் கீழிறங்க ஓர் இழி வாவியும் (drain valve), குடுவையின் அழுத்தம் (pressure) வெம்மை (temperature) போன்றவற்றை அளக்க வாய்ப்பளிக்கும் இரு துளைகளும் இருக்கட்டும். இத்துளைகளின் வழியே அழுத்தக் கோலும் (pressure gauge), வெம்மை மானியும் (thermometer) செருகியதாய்க் கொள்ளலாம். வேண்டும் வகையிற் குடுவையைச் சூடேற்ற ஒரு சூடேற்றுக் கட்டகம் (heating system) பொருத்தியிருப்பதாய்க் கொள்ளுங்கள்.

குடுவை, கிளராடியிற் செய்ததால், ”உள்ளிருக்கும் கொள்ளீடு (contents) எம் மட்டு (level)?” என்று நம்மால் அளக்க முடியும். இந்தக் காலக் கிளராடிக் குடுவைகள் ஊதுமக் கோளத்திற்கும் (atmosphere) மேல் 2, 3 மடங்கு அழுத்தம் தாங்கும் வலுக் கொண்டவையாதலால், செய்யும் சோதனைகளைத் தாங்கும் ஏமத் திறன் (safety capability) இவற்றிற்கு உண்டு.

ஊதும அழுத்தத்தில் A யின் கொதிநிலை (boiling point) 78.4 பாகை செல்சியசு என்பதால், இவ்வெம்மைக்கருகில் A யைச் சூடேற்றினால் A ஆவி குடுவையிலிருந்து வெளியேறத் தொடங்கும். கூடவே, குடுவையில் இருந்த காற்றும் வெளியேறும். பெருங்கவனத்தோடு செய்தால் ஆவி கலந்த காற்றை குடுவையிலிருந்து வெளியேற்றி A ஆவி மட்டும் அதன் பின் வெளியேறும்படி செய்ய முடியும். அப்போது குடுவைக் கொள்ளீட்டின் வெம்மை 78.4 ஐத் தொட்டு அதற்கு மேற் போகாது ஆவி மட்டும் வெளியேறும்.

இப்பொழுது, வெளியேற்றும் வாவியை மூடினால் குடுவையுள் அழுத்தம் வெளியைக் காட்டிலும் அதிகரிக்கும். குடுவை வெம்மையும் 78.4 பாகைக்கு மேற் செல்லும். குடுவையின் வெம்மை 85 பாகைக்குப் போகிறதென்று வையுங்கள். சூடேற்றும் கட்டக வழி வெம்மையைக் கட்டுறுத்தி (சூட்டைக் கூட்டியோ, குறைத்தோ) குடுவையின் வெம்மை 85 க்கு மேற் போகாதவாறு தொடர்ந்து செய்யலாம். இந்நிலையில் குடுவையின் உள்ளே A யின் இருப்பை அளக்கலாம். இது எடையால் அளந்து மூலகமாய் மாற்றுவதாகவோ, அன்றி குடுவையுள் தெரியும் மட்டத்தின் வழி வெள்ளத்தைக் கணக்கிட்டு மூலகமாய் மாற்றுவதாகவோ அமையும்.

குடுவையின் கொள்ளீடு எவ்வளவு என்று அறிந்த பின், நீர் (W) போன்ற இரண்டாம் பொதியை (ஊதும அழுத்தத்தில் இதன் கொதிநிலை 100 பாகைச் செல்சியசு) உள்ளீட்டு வாவி மூலம் குடுவைக்குள் இறக்கலாம். இரண்டாம் நீர்மத்தின் கொள்ளீட்டு அளவையும் A யை அளந்தது போல் ”எவ்வளவு?” என்றறிந்தால் நம்முடைய அலசலைத் தொடங்கலாம்.

இப்பொழுது குடுவையின் உள்ளே காற்றுக் கிடையாது. குடுவை 85 பாகையில் இருக்கிறது. A பொதியின் மூலக அளவு mA என்றும் W பொதியின் மூலக அளவு mW என்றும் இருப்பதானால் மொத்த மூலக அளவு [mA + mW] என்றாகும். கொடுத்துள்ள கரைசலில் (solution), ஊட்டு மூலகப் பகுவம் (feed mole fraction)

zA = mA/ (mA + mW) என்றாகும்.
zW = mW/ (mA + mW) = 1- zA என்றமையும்.

A, W என்ற பொருள்கள் இரு வாகைகளுக்குள் எங்கும் எப்படியும் விரவி இருக்கலாம். பொதுவாகச் சூடேற்றும் வேகத்தைப் பொறுத்து நீர்ம அளவும், ஆவியளவும் இருக்கும். சூடேறச் சூடேற நீர்மம் குறைந்து எல்லாம் ஆவியாக மாறியிருக்கும். எந்தக் கணத்திலும் நீர்ம மட்டத்தைக் கொண்டு குடுவைக்குள் நீர்மம் எவ்வளவு என்று தீர்மானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட கணத்தில் நீர்மக் கரைசல் L மூலகம் இருப்பதாகவும், ஆவிக் கரைசல் G மூலகம் இருப்பதாகவும் கொள்ளுவோம். எல்லாக் கணங்களிலும், mA+mW = L+G என்ற சமன்பாடு இருந்து கொண்டேயிருக்கும்.

தவிர, ஆவியில் இருக்கும் A மூலகப் பகுவமும், நீர்மத்தில் இருக்கும் A மூலகப் பகுவமும் ஒன்றுபோல இருக்காது. வெவ்வேறாக இருக்கும். [அவை குடுவைக்குள் உள்ளிட்ட கரைசலின் மூலகப் பகுவத்திலும் இருக்காது.] ஊதும அழுத்தத்தில் A யின் கொதிநிலை 100 பாகை என்றும், W யின் கொதிநிலை 78.4 பாகை என்றுஞ் சொல்லியிருந்தேன். இப்பொழுது 78.4 பாகையைத் தாண்டியவுடன் எது முதலில் ஆவியாகும்? A என்று எளிதில் விடை சொல்ல முடியும். 85 பாகையில் ஆவி வாகையுள் A அதிகமாகவும் W குறைந்தும் இருக்கும். இப்பொழுது A யின் துலைப்பை (balance; துலை என்ற சொல் கருவியையும் துலைப்பு என்ற சொல் கருவி செய்யும் வேலையையும் குறிக்கும்) மட்டும் பார்ப்போம்.

குடுவையுள் இட்ட A யின் மூலக அளவு = mA = (mA+mW)*zA = (L+G)*zA
ஆவி வாகையுள் இருக்கும் A யின் மூலக அளவு = G*yA
நீர்ம வாகையுள் இருக்கும் A யின் மூலக அளவு = L*xA
A யின் துலைப்பைப் பார்த்தால்,
L*xA + G*yA = (L+G)*zA என்றாகும்.
zA = [L/(L+G)]*xA + [G/(L+G)]*yA

இந்தத் துலைப்பை, வாகை வினையின் இயக்கக் கோடு (operating line of the phase reaction) என்று அழைப்போம். கீழே உள்ள முதற்படத்தைக் கவனியுங்கள்.இந்தப் படத்திற் கொடுத்திருக்கும் ஊட்டு மூலகத்தில் (feed moles) குறிப்பிட்ட மூலகப் பகுவம் நீர்ம வாகையில் இருக்கிறதென்றால் அதற்குப் பொருந்தும் மூலகப் பகுவம் ஆவி வாகையில் ஏற்பட்டே தீரும். அதை நம் உகப்பிற்குத் தக்கத் தேரவே முடியாது. அது கட்டகத்தில் ஏற்படும் விளைவு. இப்படி அமையும் இரு வாகைச் செறிவுகளையும் ஒக்கலிப்பு வாகைச் செறிவுகள் (equilibrium phase concentrations)என்று சொல்லுவார்கள். இவை ஒன்றிற்கொன்று ஒக்கலித்தவை. ஒரு வாகைச்செறிவு கூடினால், இன்னொன்றும் அதற்குத் தக்க மாறும்.

நீர்ம, ஆவி வாகைகளில் ஒவ்வொரு சிட்டிகை (sample) பொறுக்கியெடுத்து வேதியலாய்வு மூலமோ, பூதியலாய்வின் மூலமோ இந்த ஒக்கலிப்புச் செறிவுகளை ஆயமுடியும். ஒவ்வோர் ஊட்டுச் செறிவிற்கும் தக்கக் குறிப்பிட்ட நீர்ம, ஆவிச் செறிவுகள் அமையும். குடுவையுள் வெவ்வேறு mA, mW மூலகங்கள் எடுத்து zA என்னும் ஊட்டுச் செறிவை சுழியிலிருந்து ஒன்றுவரை வேறுபடுத்திப் பல்வேறு ஒக்கலிப்பு வாகைச் செறிவுப் புள்ளிகளைத் (xA யும் அதனோடு பொருந்தும் yA யும்) தொடர்ச்சியாகப் பெற முடியும்.

அவற்றைக் கொண்டு, கீழேயுள்ள இரண்டாம் படத்தில் உள்ளது போல் ஒரு திணிவுச் சுருவை (condensation curve) யாகவும், ஓர் ஆவிப்புச் சுருவை (vaporization curve)யாகவும் வரைந்து காட்ட முடியும். திணிவுச் சுருவையை துளி நிலைச் சுருவை (dew point curve) என்றும், ஆவிப்புச் சுருவையைக் கொதிநிலைச் சுருவை (boiling point curve) என்றும் சொல்வதுண்டு.இங்கே குறிப்பிட்டுள்ள படத்தில், நீர்ம வாகை ஒரு விழுமக் கரைசலாகவும் (ideal solution), ஆவி வாகை ஒரு விழும வளியாகவும் (ideal gas) இருப்பது போற் காட்டப் பட்டிருக்கின்றன. இயலான சுருவைகள் (natural curves) விதம் விதமாய் பலக்குமை (complexity) காட்டி வேறு தோற்றம் கொள்ளலாம். அந்தப் பலக்குமைச் சுருவைகளை அடுத்தடுத்த பகுதிகளிற் காணலாம்.

பொதுவாக ஆவியென்றாலே அது கிடுகுப் புள்ளிக்குக் (critical point) கீழிருப்பது தான் என்றாலும், பலநேரம் நுணுகு வேறுபாட்டை மறந்து வளி(gas)யென்றே சொல்வது உண்டு. பொதுவாக நிலைத்த (constant) வெம்மையில் எந்த வளியின் அழுத்தமும் அதன் திணிவுக்கு (density) நேர் வகுதத்தில் இருப்பதில்லை. பெரும்பாலான வளிகள் இயல்பு மிகுந்த வெம்மையில் (very high temperature), அல்லது மீக்குறைந்த அழுத்தத்தில் (extreme low pressure) கீழுள்ளது போல் நேர்வகுத உறவைக் காட்டுவதுண்டு.

P = R*T*(rho)

இங்கே P என்பது அழுத்தம், R = வளிம நிலையெண் - gas constant, T = கெல்வின் அளவுகோலில் அளக்கப்படும் வெம்மை, rho = வளிமத் திணிவு. எந்தவொரு இயல் வளியும் (natural gas) இந்தப் போக்கை நாம் காணும் அழுத்த, வெம்மை அரங்குகளில் (ranges) முழுதும் காட்டுவதில்லை. அதிக வெம்மை, குறைந்த அழுத்தம் ஆகிய விளிம்புகளில் (boundaries) மட்டுமே இப்போக்கு இயல்பாய்க் காணப்படுகிறது. எனவே விழுமிய (=உயர்ந்த, சிறந்த, பின்பற்றத் தக்க) போக்கான இதை ஒரு போல்மம் (model) போலாக்கி விழும வளி என்று பூதியலார் சொல்லுவார்கள். இயல் வளிகள் அத்தனையும் இவ்விழுமிய போல்மத்திலிருந்து சற்று விலகி விழுமாப் போக்கைக் (non-ideal behaviour) காண்பிக்கின்றன

பொதுவாக, ஒற்றைப் புனைக் கட்டகங்களில் (single component sytems) குறிப்பிட்ட வெம்மையில் மொத்த அழுத்தம் என்பது நீர்மத்தின் ஆவியழுத்தமாகவே இருக்கும். காட்டாகத் தனித்த வெறியமாய் அமையும் போது, P = PA என்றமையும். இதே போல W என்ற நீர்மமும் தனித்து இருக்கும் போது, P = PW என்று காட்டும். இனி வெறியமும் நீரும் கலவையாகும் போது,

A யின் பகுதி அழுத்தம் (partial pressure of A) = xA*PA என்றும்,
W யின் பகுதி அழுத்தம் (partial pressure of W) = (1-xA)*PW என்றும்

அமையும். மேலே காட்டிய பகுதி அழுத்தங்களின் நேர்வகுத வரையறை ரௌல்ட் விதி (Rault's law)யாற் தீர்மானிக்கப் படுகிறது. கூடவே மொத்த அழுத்தம் P = xA*PA + (1-xA)*PW என்று அமைகிறது. இப்படி நேர்வகுதத்தில் அமையும் கரைசலைத்தான் விழுமக் கரைசல் என்று அழைப்பார்கள். இந்தக் கோடும் விழும ஆவிப்புக் கோடு (ideal vaporization line)என்று அழைக்கப் படும். இது மூன்றாவது படத்திற் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளது.உண்மையில் வெறியமும் நீரும் கலந்த கலவை ஒரு விழுமக் கரைசல் அல்ல. விழுமக் கரைசலுக்குக் காட்டு வேண்டுமானால் பென்சீன் - தாலுவீன் (Benzene - Toluene) கரைசலைச் சொல்லலாம். 10 பாகை செல்சியசில் அதன் ஆவிப்புக் கோடு விழுமமாகவே இருப்பதைக் கீழே நாலாவது படத்தில் அறியலாம். [இருவேறு நீர்மங்கள் பூதியற் குணங்களில் (physical attributes) ஒன்று போலவே இருந்து, வேதியியற் தாக்கமும் (chemical impact) ஆகக் குறைவாக இருந்து இன்னொரு வகைப் பொதி இருப்பதை உணராத படி உறழ்ச்சி கொண்டிருந்தால் அதை விழுமக் கரைசல் என்று சொல்லுவார்கள்.]நீர்ம வாகை விழுமக் கரைசலாய் இருந்து, ஆவி வாகை விழும வளியாக இருக்கும் போது, ஒக்கலிப்புச் சமன்பாடு,

yA = xA*PA/P என்றும்,

ஆவி மூலகப் பகுவத்தின் வழி, மொத்த அழுத்தம், 1/P = yA/PA + (1-yA)/PW என்றும் அமையும். மொத்த அழுத்தச் சமன்பாடு ஒரு செவ்வக மீவளைவுச் சுருவையை (rectangular hyperbolic curve) உணர்த்தும். விழுமத் திணிவுச் சுருவை (ideal condensation curve) இப்படித்தான் தோற்றம் காட்டுகிறது.

மேலேயுள்ள இரண்டாம் படத்தில் P என்பதை குத்துக்கோட்டு (vertical) அளவுகோலாகவும், x/y/z போன்ற மூலகப் பகுவங்களை கிடைக்கோட்டு (horizontal) அளவுகோலாகவும் கொண்டு விழுமத் திணிவுச் சுருவையும் , விழும ஆவிப்புச் சுருவையும் காட்டப் பட்டிருக்கின்றன. இரண்டும் A,W என்ற பொருள்களின் இருவேறு ஆவியழுத்த எல்லைப் புள்ளிகளிற் சந்தித்துக் கொள்கின்றன. மொத்தத்தில் இரு சுருவைகளும் சேர்ந்து ஓர் இலை போலத் தோற்றம் காட்டுவதைக் காணலாம். இரு சுருவைகளையும் குறுக்கே வெட்டுவது போல் ஓர் இயக்கக் கோடும் காட்டப் பட்டிருக்கிறது. இயக்கக் கோட்டைக் குறுக்கு வெட்டும் இன்னொரு குத்துக் கோடும் காட்டப் பட்டிருக்கிறது. இந்தக் குத்துக் கோடு ஒரு குறிப்பிட்ட ஊட்டுச் செறிவோடு ஒரு கலவையை மேலிருந்து கீழே கொண்டுவரும்போது முதலில் முழுக்க நீர்மமாய் இருந்து பின் நீர்ம, ஆவி வாகைகளாய்ப் பிரிந்து வெவ்வேறு ஒக்கலிப்புச் செறிவுகளைக் காட்டி முடிவில் முழுக்க ஆவியான செலுத்தத்தைக் (process) காட்டுகிறது.

இரண்டாம் படத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். .

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 13, 2011

வாகை மாற்றங்கள் (phase changes) - 4

இருபுனைக் கட்டகங்களை (two component systems) விரிவாகப் பார்ப்பதற்கு முன், செறிவு (concentration) என்பது எப்படி அளக்கப் படுகிறது. வாகைவிதி (phase rule) இருபுனைக் கட்டகங்களை எப்படிக் கட்டுப் படுத்துகிறது என்று இந்தப் பகுதியிற் பார்ப்போம்.

பொதிகளைப் பொருட்களாய் (substance) அறிவது அறிவியலில் ஒரு முறை. இம்முறையில் ஆயும் பொருட்களைப் பகுத்துக் கொண்டே போனால் சிறியது, குறுகியது, நுணுகியது, நொசிந்தது என்று முடிவின்றிப் போய்க்கொண்டிருக்கும். ஒரு கரிமப் பொருளைப் பகுத்துக்கொண்டு போனால் கடைசி வரை கரிமமே இருப்பதாய் இம்முறை கொள்ளும். இது தொடக்க காலக் கணுத்த அறிவியலில் (continuum science) பயன்படுத்திய முறை. இந்த முறை தான் கணுத்த மாகனவியல் (continuum mechanics), விளவ மாகனவியல் (fluid mechanics), தெறுமத் துனைவியல் (thermodynamics) போன்ற துறைகளில் பொதுவாய்க் கையாளப் படுகிறது.

இன்னொரு முறை 1900 க்கு அப்புறம் வந்தது, இதிற் பொதிகளை குறிப்பிட்ட அளவு பகுத்த பின்னால் கணுத்தம் (continuity) என்பது போய்விடும். அதற்கும் கீழே அணுக்கூட்டங்கள், மூலக்கூறுச் சட்டக்கூடுகள் (molecular lattices) என்று அமைத்து அணுக்களாய், மூலக்கூறுகளாய் பொருளை அறிய முற்படுவார்கள். அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் நுணுகிய அளவில் வெற்றிடம் இருக்கிறது என்றும் கொள்ளுவார்கள். அணுக்கள், மூலக்கூறுகளுக்கு நடுவில் அணுயீர்ப்பு விசைகள் (atomic attractive forces), அணு விலக்கு விசைகள் (atomic repulsion forces) என்று முற்றிலும் புதிய புலத்திற்குள் பூதியல் நுழைந்துவிடும். இந்தப் பூதியலை மூலக்கூற்றுப் பூதியல் (molecular physics), அணுப் பூதியல் (atomic physics)என்று அழைப்பார்கள்.

ஒளி (light), மின்னி (electron), முன்னி (proton), நொதுமி (neutron) போன்றவற்றை அலையுருவாய் (wave form) அறிவதும் துகட்கற்றையாய் (quantum)அறிவதும் எப்படிப் பூதியலில் வெவ்வேறு வழிகளோ, அதே போல பொதிகளைப் பொருட்களாய் (substances) அறிவதும், மூலக்கூறுகளாய் (molecules)அறிவதும் வெவ்வேறு வழி முறைகள். ஒன்று இன்னொன்றைக் காட்டிலும் உயர்த்தி மற்றது தாழ்த்தி, என்று சொல்ல முடியாது. இரண்டிற்குமே வெவ்வேறு பயன்பாடுகள் உண்டு.

மூலக்கூற்று முறைக்கும் பொதிகளைப் பொருட்களாய்ப் பார்க்கும் கணுத்த முறைக்கும் தொடர்பு வேண்டுமெனில் ”வெம்மை”யையே காட்டாய்ச் சொல்ல முடியும். கணுத்தமுறையில் வெம்மை என்பது சூட்டுப் (hotness) பெருணையோடு (primitive) தொடர்புடையது. கடைசிவரைக்கும் இந்தத் தொடர்பை மறுக்கவே மாட்டோம். ஆனால் அணுப் பூதியலில், குறிப்பாக புள்ளி மாகனவியலில் (statistical mechanics) வெம்மை என்பது மூலக்கூறுகளின் சலனாற்றலைப் (kinetic energy) வெளிப்படுத்தும் ஒரு கூறு. மூலக்கூறுகளின் சலனாற்றல் கூடக் கூட அவற்றின் வெம்மை கூடுவதாய் அந்தப் பார்வையிற் கூறுவார்கள். இருவகைப் பார்வைக்கும் அறிவியலில் இடம் உண்டு. ஒன்றை இன்னொன்றாய்ச் சிந்தை பெயர்ப்பதும் உண்டு. இரு பார்வையும் ஒன்றையொன்று ஊடுறுவதும் உண்டு. அப்படியோர் ஊடாட்டத்தை இனிப் பார்ப்போம்.

எடை, வெள்ளம் போன்ற வியற் குணங்களைப் பேசிய நாம் இன்னொரு வியற் குணத்தை விட்டுவிட்டோம். அது எண்ணுதலைப் பொறுத்தது. ஒரு பொருளின் இருப்பு எவ்வளவு?” என்று கேட்டால் சட்டென்று கணுத்த முறையில் எடையைச் சொல்லலாம், வெள்ளத்தைச் சொல்லலாம். கூடவே அணு முறையைக் கொணர்ந்து ”எத்தனை மூலக்கூறுகள் அப்பொருளில் உள்ளன?” என்றுஞ் சொல்லலாம். பொதுவாய், பொருட்களை விவரிக்கும் போது 6.02214179 * 10^23 மூலக்கூறுகளை ஒருக்கிய தொகுதியாய் பொருளின் எடை, வெள்ளம் போன்றவற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும். 6.02214179*10^23 மூலக்கூறுகளின் தொகுதியை மூலகம் (mole) என்று சொல்லுவார்கள்.

1 மூலகம் கரியணுக்கள் என்றால் அதில் 6.02214179*10^23 கரியணுக்கள் இருக்கின்றன என்று பொருள். இதன் எடை 12 கிராம். இருக்கும். இதே போல 6.02214179*10^23 கரியிரு அஃகுதை (carbon-di-oxide) மூலக்கூறுகள் சேர்ந்தால் அதை 1 மூலகம் கரியிரு அஃகுதை என்று சொல்லுவார்கள். அதன் எடை 44. கிராம் இருக்கும். இதே போல 1 மூலகம் நீர் (18.015 கிராம்), 1 மூலகம் வெறியம் - alcohol(46.07 கிராம்), என்று வெவ்வேறு பொதிகளின் தொகுதியை அடையாளம் காட்ட முடியும். இப்படி மதிப்பிடும் மூலகத்தின் எடையை மூலக்கூற்று எடை (molecular weight) என்று சொல்லுவார்கள். கரிமவணுவின் அணுவெடை (atomic weight)12 கிராம்/மூலம் ஆகும்.

எடை, வெள்ளம் ஆகியவற்றைக் காட்டிலும் பொருளளவைக் குறிக்க வேதியியலில் மூலகத்தையே அதிகமாகப் பயன்படுத்துவார்கள். காட்டாகக் கீழேயுள்ள சமன்பாடு,

2 H2 + O2 → 2 H2O

இரு மூலகம் ஈரகத்தோடு (Hydrogen) ஒரு மூலகம் அஃககம் (oxygen) வினைந்து இரு மூலகம் நீரை உருவாக்கியதைக் கூறும். சமன்பாட்டின் இரு பக்கத்திலும் உள்ள வினைப்புகளும் (reactants) விளைப்புகளும் (products) மூலகத்தாலேயே அளக்கப் படுகின்றன. கொடுக்கப்பட்ட பொருளில் எத்தனை அணுக்கள், அயனிகள் (ions) இருக்கின்றன என்று மூலக அளவு சொல்லுகிறது.

ஒரு கரைசலின் செறிவு (concentration) அதன் மூலகையாற் (molarity) சொல்லப் படுகிறது. [ஒரு லிட்டர் கரைசலில் எத்தனை கரைபொருள் மூலகம் அடங்கியிருக்கிறது? - என்பது மூலகையாகும்]

மூலகையைப் போல் அமையும் இன்னொரு செறிவு மூலதை (molality) என்று சொல்லப் படுகிறது. [ஒரு லிட்டர் கரைப்பியில் - solvent (நினைவு வைத்துக் கொள்ளூங்கள், இங்கு வருவது கரைசல் - solution - அல்ல, கரைப்பி - solvent) எத்தனை மூலகம் கரைபொருள் - solute - அடங்கியிருக்கிறது? - என்பது மூலதையாகும்]

இன்னுமோர் வகையாய், மூலகச் செறிவு, மூலகப் பகுவத்தாலும் (mole fraction) சொல்லப் படுவதுண்டு. [எத்தனை மூலகம் கரைபொருள், எத்தனை மூலகம் கரைப்பி என்று கணக்கிட்டு இரண்டையும் கூட்டினால் எத்தனை மூலகம் கரைசல் என்பது வெளிப்படும். மூலகத்தில் அளவிட்ட கரைபொருளை மூலகத்தில் அளவிட்ட கரைசலால் வகுத்தால் மூலகப் பகுவம் கிடைக்கும்.]

மூலகப் பகுவம் என்பது புழக்கத்திற்கு எளிதான அலகாகும். எந்தக் கரைசலையும் (solution), கலவையையும் (mixture), கூட்டுப் பொருளையும் (compound) அதில் எத்தனை புனைகள் இருந்தாலும் மூலகப் பகுவத்தாற் செறிவைக் குறிக்க முடியும்.

இப்பொழுது வெறியமும், நீரும் கலந்த கலவை இருக்கிறதென்று வையுங்கள். இந்தக் கலவைக்கு எடை, வெள்ளம், மூலகம் என்று வியற்குணங்களிற் செறிவை வரையறுக்க முடியும். இது போக அழுத்தம், வெம்மை, வெள்ளம் போன்ற வரையறுப்புகளும் சேர்ந்து கொள்ளும். இந்த வரையறுப்புகளை வேறிகள் (variables) என்று சொல்லுவோம்.

ஒரு கரைசலை வரையறுக்க குறைந்த அளவு எத்தனை வேறிகள் தேவை என்பது ஒரே பொழுதில் எத்தனை வாகைகள் அருகருகில் அடுத்தாற்போல் இருக்கின்றன என்பதைப் பொறுத்தது. முந்திய பதிவில் வாகை விதியைப் பற்றிப் பேசினோமே, நினைவிருக்கிறதா? அந்த வாகை விதியின் படி ஒரு கரைசலில் 2 புனைகள் இருந்தால், ஒற்றை வாகையில் 3 வேறிகளை பந்தப் படா வகையில் நாம் உகந்தெடுக்க முடியும். அவற்றில் பெரும்பாலும்
அழுத்தம், வெம்மை ஆகியவற்றோடு செறிவு என்ற ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.

இதே இருபுனைக் கட்டகத்தில் இரண்டு வாகைகள் ஒரே பொழுது இருந்தால், 2 வேறிகளைத்தான் பந்தப்படா வகையிற் தேர்ந்தெடுக்க முடியும்.

மூன்று வாகைகள் இருந்தால் இன்னும் ஆழ்ந்த கட்டுப்பாடு வந்து விடும். ஒரு வேறியைத் தான் பந்தப்படா வகையில் உகந்தெடுக்க முடியும்.

முடிவில் 4 வாகைகள் சேந்திருந்தால், எந்த வேறியையும் நாம் தேர்ந்தெடுக்க முடியாது ஒரு வேறாப் புள்ளி (invariant point) தானாகவே வந்து சேரும்.

ஆக இருபுனைக் கட்டகத்தின் வாகைப் படத்தின் (phase diagram) எந்தப் புள்ளியிலும் மாகமாய்ப் (maximum) பார்த்தால் 4 வாகைகள் வரை இருக்க முடியும். அவற்றின் இயலுமைகளை இனிப் பார்ப்போம்.

1. ஓர் ஆவி, இரு நீர்மம், ஒரு திண்மம் - இதுவோர் இயலுமை.
2. ஓர் ஆவி, ஒரு நீர்மம், இரு திண்மங்கள் - இது இன்னோர் இயலுமை,

3. ஓர் ஆவி, மூன்று திண்மம் - இது மூன்றாவது இயலுமை;

4. ஒரு நீர்மம், மூன்று திண்மம் - இது நாலாவது இயலுமை

5. இரண்டு நீர்மம், இரண்டு திண்மம் - இது ஐந்தாவது இயலுமை.

6. மூன்று நீர்மம், ஒரு திண்மம் - இது ஆறாவது இயலுமை

இத்தனை பலக்குமைகளையும் காட்டி இருபுனைக் கட்டகங்கள் அமையலாம். 4 வாகை கொண்ட வேறாப் புள்ளிகளுக்கு அருகில் ஒரு பரிமானச் சுருவைகள் (one dimensional curves), இரு பரிமானப் பரப்புகள் (two dimensional surfaces) என்று பல்வேறு இயலுமைகள் வியக்கத் தக்க வகையில் விரியும். அவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, July 03, 2011

வாகை மாற்றங்கள் (phase changes) - 3

வாகை மாற்றங்கள் (phase changes) - 1

வாகை மாற்றங்கள் (phase changes) - 2


மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பதிவுகளில் உள்ளார்ந்த குணங்களையும் (intensive properties), வியல்ந்த குணங்களையும் (extensive properties) வேறுபடுத்திக் கண்டோம். ஒரு குறிப்பிட்ட பொதியின் எடை 1 கிலோ, அதன் வெள்ளம் 1.2 லிட்டராய் இருப்பதாகக் கொள்ளுங்கள். அதே பொதியை இரண்டு கிலோ எடையெடுத்தால், வெள்ளம் 2*1.2 = 2.4 லிட்டராய்த் தானே இருக்கும்? ஒரே வகைப் பொதியின் பல்வேறு மடங்கு எடைகளுக்கு, அந்தந்த மடங்கு வெள்ளங்கள் அமைவதன் பொருள் என்ன? வியற் குணங்கள் நேர் மேனியில் (direct ratio) உறவு கொண்டுள்ளன என்றுதானே பொருள்?

இந் நேர்மேனியின் விளைவாய், ஒரு குறிப்பிட்ட வியற் குணத்தை அடிப்படையாய்க் கொண்டு, மற்ற வியற்குணங்களின் வகுதங்களைக் (ratios) கணக்குப் போட்டால், நமக்கு வெவ்வேறு உள்ளார் குண(க)ங்கள் (factors) வந்து சேருகின்றன. காட்டாக, ஒரு குறிப்பிட்ட எடையை அடியாய்க் கொண்டு, வெள்ளத்தை அவ்வெடையால் வகுத்தால் விதப்பு வெள்ளம் (specific volume)என்பது கிடைக்கும். பூதியலில் (physics) விதப்பு வெள்ளம் என்பது ஓர் உள்ளார் குணம் (intensive property) என்பார்கள். விதப்பு வெள்ளத்தின் மறுதலை (opposite)யான திணிவும் (இதை அடர்த்தி என்றும் சொல்வதுண்டு.) ஓர் உள்ளார் குணமே.

பொதுவாய் எந்தப் பொதியின் அழுத்தம் (pressure), வெம்மை (temperature), விதப்பு வெள்ளம் (specific volume) (அல்லது திணிவு) ஆகிய மூன்றிற்கிடையில் ஓர் இடைவிடா உறவு இருக்கும். [ஆவி வாகையில் இது எளிதாய் வெளிப்படும்.] இவ்வுறவு இடைவிட்ட (discontinuous) இடங்களில், வாகை மாற்றங்கள் நடைபெறும். இன்னும் சற்று விவரமாய்ப் பார்ப்போம்.

பொதுவாய் நீர்மம், ஆவி இரண்டிற்கிடையில் மட்டும் வாகை மாற்றம் நடைபெறுவதில்லை. பனிக்கட்டிக்கும் நீராவிக்கும் இடையே கூட வாகை மாற்றம் நடைபெறும். காட்டாகப் ஒரு பனிக்கட்டி 10 பாகை வாரன்ஃகீட்டில் இருக்கிறதென்று வையுங்கள். இதை 32 பாகைக்கும் கீழே மெதுவாய்ச் சூடேற்றினால், மீச்சிறிதளவு பனிக்கட்டி நேரடியாக நீர்மம் ஆகாமலே ஆவியாகி எழும். இப்படிப் பனிக்கட்டி என்னுந் திண்மத்தில் (solid) இருந்து நேரடி ஆவி எழுவதை ஆவெழுமம் என்று சொல்லுவார்கள். [இதைத் தான் sublimation என்று ஆங்கிலத்திற் சொல்லுகிறோம். இப்படி ஆவியாகும் திண்மத்தோடு இன்னொரு பொதி சேர்ந்த கலவைக் கட்டியைப் தூய்மைப் படுத்துவதற்கு sublimation மூலம் திண்மத்தைத் தனியே பிரித்து ஆவியாக்கி ஆவியை வேறு இடத்திற் குளிர வைத்து கலவைக் கட்டியைப் பத(ங்க)ப்படுத்துவார்கள். (இது சித்த மருத்துவத்தில் ஓரோ வழி நடப்பதுண்டு.) எங்களுக்கெல்லாம் பள்ளியிற் பதங்கமாதல் என்ற சொல்லால் இம்மாற்றத்தைச் சொல்லி வந்தார்கள்.].

குறிப்பிட்ட கலவைப் பொதி (mixed body) பதங்கப் படுவதால் அதையொட்டிப் பதங்கமாதல் என்ற அருஞ்சொல் முன்னே ஆளப்பட்டு வந்தது. உண்மையில் இந்தச் சொல் குறிப்பிட்ட இரண்டாம் பொதிக்கே சரியாய் இருக்கும். ஆவியாகும் பொதிக்குச் சரிவராது. உண்மையில் என்ன நடக்கிறது? அந்தக் கலவைப் பொதி பதங்கமாகிறது ஆவியாகும் திண்மம் பதங்கமாவதில்லை. அது ஓரிடத்தில் ஆவியாகி இன்னோரிடத்தில் மீண்டும் குளிர்ந்து திண்மம் ஆகிவிடுகிறது. இப்படித் திண்மத்தில் இருந்து ஆவியெழுவதை திண்மாவெழுமம் என்று சொல்லுவதே சரியாகவிருக்கும்.

இதுவரை நீர்மம், ஆவி இரண்டிற்குமிடையே வாகை மாற்றம், திண்மம், ஆவி இரண்டிற்குமிடையே வாகை மாற்றம் என்று இரண்டு மாற்றங்களைப் பார்த்தோம். இவை போகத் திண்மம், நீர்மம் ஆகிய இரண்டிற்குமிடையே நடைபெறும் வாகை மாற்றமும் உண்டு. அதை உருகுதல் (fusion) என்று சொல்வோம். பனிக்கட்டி நீராக மாறும் உருகு புள்ளி (fusion point) செல்சியசு பாகையில் 0 பாகை என்று சொல்லப் பெறும். உருகு புள்ளிகளின் தொகுதியாய் உருகுச் சுருவை (fusion curve) அமையும்.

உருகுச் சுருவை என்பது பொதிவான சரிவு (positive slope) கொண்டிருப்பதே பெரும்பாலான பொதிகளின் தோற்றம். காட்டாக, கரியிரு அஃகுதையின் (carbob-di-oxide) உருகுச் சுருவை பொதிவான சரிவே காட்டும். அதாவது அழுத்தம் கூடக் கூட உருகு புள்ளியும் கூடும். ஒரு சில விந்தையான பொதிகள் (நீர் ஒரு விந்தையான பொதி) நொகையான சரிவு (negative slope) காட்டும். அதாவது அழுத்தம் கூடினால் உருகு புள்ளி குறையும். இரண்டிற்கும் பொதுவாய், உருகுச் சுருவை முற்றிலும் நேரான குத்துக் கோடாய் (vertical line) அமைவதும் உண்டு. அதாவது எவ்வளவு தான் அழுத்தத்தைக் கூட்டினாலும் உருகு புள்ளி மாறுவதேயில்லை.

பொதுவாய் எந்த ஒற்றைக் கட்டகத்திற்கும் - singulary system - (ஒற்றைப் பொதிக்கும்) குறைந்தது மூன்று வாகை மாற்றங்கள் உண்டு. அவை:

திண்மம் - நீர்மம் இவற்றிடையே உருகுதல்,
திண்மம் - ஆவி இவற்றிடையே திண்மாவெழுதல்
நீர்மம் - ஆவி இவற்றிடையே ஆவியாதல்

இவையெல்லாவற்றிலும் மாற்றம் நடக்கும் ஒரே நேரத்தில் இரண்டு வாகைகள் சேர்ந்திருக்கின்றன. அப்படிச் சேர்ந்திருக்கும் பொழுது அழுத்தத்திற்கும் வெம்மைக்கும், இடையே ஓர் உறவு ஏற்படும். காட்டாக 92.1 செல்சியசில் 0.76 பார் அழுத்தம் இருந்தால் நீர்மம், ஆவி என்று இரண்டு வாகைகள் குடுவையில் இருக்கும். அதற்குமேல் அழுத்தம் கூடினால் ஆவியெல்லாம் நீர்மம் ஆகிவிடும். இதே போல் வெம்மை குறைந்தால் ஆவியெல்லாம் நீர்மம் ஆகிவிடும். இந்த வெம்மைக்கு இந்த அழுத்தம் என்று இருந்தாற்றான் இரு வாகைகள் இருக்க முடியும்.

அதாவது இரு வாகைகள் இருக்க வேண்டுமானால் பந்தப் படாத வகையில் (independent manner) நம்மால் அழுத்தம், வெம்மை, விதப்பு வெள்ளம் ஆகிய மூன்றில் ஒன்றை மட்டுமே உகந்து எடுக்க முடியும். மற்ற இரண்டும் முன்னே சொன்ன உறவால் தீர்மானிக்கப் பட்டு விடுகின்றன. ஓர் குறிப்பட்ட அழுத்தத்தை (0.76 பார்) தேர்ந்தெடுத்து விட்டால் இரண்டு வாகைகள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் வெம்மையையும், விதப்பு வெள்ளத்தையும் தேர்ந்தெடுக்க முடியாது கட்டகமே அதைத் தீர்மானித்துக் கொள்ளும்.

இதே போல ஒற்றை வாகை (வெறும் ஆவி என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இருக்கும் பொழுதுகளில் பந்தப் படாத வகையில் நம்மால் இரண்டு வேறிகளை (variables) மட்டுமே உகந்து எடுக்க முடியும். மூன்றாவது வேறி கட்டகத்தாலேயே தீர்மானிக்கப் பட்டுவிடும். காட்டாக அழுத்தத்தையும், வெம்மையும் நம் விருப்பம் போல் தேர்ந்தெடுத்தால் விதப்பு வெள்ளம் என்பது அதன் விளைவாற் தீர்மானிக்கப்பட்டு விடும்.

இப்பொழுது ஒரு பொதி, மூன்று வாகைகள் சேர்ந்து இருக்க முடியுமா? - என்று கேட்டால், முடியும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் எதையும் பந்தப் படா வகையில் நாம் உகந்து எடுக்க முடியாது. அப்படி மூன்று வாகைகள் சேர்ந்து அமையும் புள்ளியை மூவாகைப் புள்ளி (triple point) என்று சொல்லுவார்கள். மூவாகைப் புள்ளி என்பது வேறிக் கொள்ள முடியாத புள்ளி (invariant point) என்றும் சொல்லப் பெறும்.கீழே ஒரு கிடையச்சை (horizontal axis) வெம்மையாகவும், ஒரு குத்தச்சை (vertical axis) அழுத்தமாகவும் கொண்டு சென்ற மூன்று பதிவுகளிற் பார்த்தவற்றை வரைபடமாகக் (graph) காட்டியிருக்கிறேன். இதை இருபரிமான வாகைப் படம் (phase diagram) என்று சொல்வதுண்டு. இதில் திண்மாவெழுமம், ஆவியாதல், உருகுதல் என்ற மூன்றும் சுருவைகளாகக் காட்சியளிக்கின்றன. திண்மாவெழுதற் சுருவை 0 வெம்மை, 0 அழுத்தத்திற் தொடங்கி மூவாகைப் புள்ளி வரை இருக்கிறது. அந்த இடத்தில் உருகற் சுருவை (முற்றிலும்) குத்துக் கோடாய் எழுந்து நிற்கிறது. ஆவியழுத்தச் சுருவை என்பது மூவாகைப் புள்ளியிற் தொடங்கி கிடுகுப் புள்ளி (critical point) என்பது வரை வருகிறது.

கிடுகுப் புள்ளியில் நீர்மத்தின் விதப்பு வெள்ளமும், ஆவியின் விதப்பு வெள்ளமும் ஒன்றாகி ஆவிக்கும் நீர்மத்திற்கும் மாறுபாடு சொல்ல முடியாத வகையில் இரண்டும் ஒன்றாகி விளவம் (fluid) ஆகிவிடுகின்றன. இப்படி உருவாகும் விளவத்தை ஆவியென்றுஞ் சொல்லமாட்டார்கள், நீர்மம் என்றுஞ் சொல்ல மாட்டார்கள்; வளிமம் (gas) என்று அறிவியலார் சொல்லுவார்கள். பொதுவாக கிடுகுப் புள்ளிக்கு மேல் உள்ள வளிம நிலையை கிடுகு மேலுச்ச வாகை (super-critical phase) என்றுஞ் சொல்வதுண்டு. நீரில் கிடுகுப் புள்ளி 647.096 கெல்வின், 220.64 பார், 356 கிலோ/மீ^3 ஆக அமையும்.

இன்னும் கொஞ்சம் ஆழப் போவோருக்கு உதவியாக அழுத்தம், வெம்மை, விதப்பு வெள்ளம் ஆகியவற்றால் ஆன முப்பரிமான வரைபடத்தையும் இணைத்திருக்கிறேன். இந்த முப்பரிமான வரைபடமும் வாகைப் படம் என்று சொல்லப்பெறும்.இதுவரை ஒற்றைக் கூம்புனையால் (single component) ஆன கட்டகத்தை மட்டுமே பார்த்தோம். இனி இரட்டைக் கூம்புனைகளால் (two components) அமைந்த கட்டகங்கள், மூன்று கூம்புனைகளால் (three components) அமைந்த கட்டகங்கள், அதற்கு மேலும் அமைந்த கட்டகங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் போகிறோம். பல்வேறு கூம்புனைகளால் அமைந்த கட்டகங்களை இணைக்கும் ஓர் விதியைப் படிவுற்ற வேதியலிற் (applied chemisatry) சொல்லுவார்கள். அதற்கு வாகை விதி (phase rule) என்று பெயர்.

எந்தவொரு கட்டகத்திலும், எத்தனை கூம்புனைகள் இருக்கின்றனவோ அதோடு இரண்டைக் கூட்டி ஒரே சமயத்தில் இருக்கும் வாகைகளைக் கழித்தால் எத்தனை வேறிகளை நம் உகப்பிற்குத் தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கலாம் என்பதைக் கணித்துக் கூறும் விதி இதுவாகும். இப்படித் தேர்ந்தெடுக்கும் வேறிகளை பந்தப்படா பரியைகள் (intependent freedoms) என்று சொல்வதுண்டு

பந்தப்படாப் பரியைகள் = கூம்புனைகள் + 2 - வாகைகள்

F = C + 2 - P

ஒரு புனை, ஒரு வாகையிருந்தால் 2 பரியைகள் நாம் உகந்தெடுக்க முடியும். மூன்றாவது வேறி தானாகவே மதிப்புக் கொண்டு வந்து சேரும். நாம் ஒன்றும் கட்டுப் படுத்த முடியாது.

ஒரு புனை, 2 வாகையிருந்தால், 1 பரியையை நாம் உகந்தெடுக்க முடியும். மற்ற இரண்டு வேறிகளும் தானாக மதிப்புக் கொண்டு வந்து சேரும். நாம் அவற்றைக் கட்டுப் படுத்த முடியாது.

ஒரு புனை, 3 வாகையிருந்தால், 1 பரியையும் நாம் உகந்தெடுக்க முடியாது. ஒரே புள்ளியாய் மூன்று வேறிகளும் தானாக மதிப்புக் கொண்டு வந்து சேரும். எவற்றையும் நாம் கட்டுப் படுத்த முடியாது.
.
இனி அடுத்த பதிவில் 2 புனைகள் சேரும் கட்டகத்தைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.