Sunday, October 31, 2021

சுவாசம்

முல்குதல் என்பது முன்வருதலைக் குறிக்கும். ”முல்கியது முல்கிறது முல்கும்” என்பது முக்கால இடைநிலைகள் வடிவம். முல்குதலின் லகரத்தைத் தொகுத்து முகுதல் என்றுஞ் சொல்லலாம். முகுதலில் பிறந்த பெயர்ச்சொல் வடிவங்களே முகம்/முகல்/முகர் என்பவையாகும். தலையில் முன்வந்திருக்கும் உறுப்பு முகம். முல்குதலின் பிறவினைச் சொல் முல்க்குதல்> முற்குதல்> முக்குதல். முன்வரச் செய்தல். முக்குதலில் பிறந்த இன்னொரு பெயர்ச் சொல் மூக்கு. முகத்திலும் முன்வந்தது மூக்கு எனப்படும். முகத்திலிருந்து இன்னும் நீட்டியதை முகஞ்சுதல் என்றுஞ் சொல்லலாம். முகஞ்சு>முகஞ்சி> மூஞ்சி என்பது முகமும் மூக்குஞ் சேர்ந்த உறுப்புப் பெயர். இப்படி விதப்பாயிருக்கும் உயிரியை மூஞ்சூறு என்கிறோம். .

மூக்கு இரு வேறு செயல்களைச் செய்யும். ஒன்று மணம் உணர்வது. (முகர் என்னும் பெயர்ச் சொல்லிலிருந்து முகர்தலெனும் தொழிற்பெயர் எழும்) இன்னொன்று மூச்சை குறிப்பிட்ட நேரம் உள்ளிழுத்து பின் குறிப்பிட்ட நேரம் வெளிவிடுவது. இச்செயலை. மூஞ்சுதல்?மூசுதல் என்ற தொழிற்பெயரால் சொல்வோம். மூசுதலிலிருந்து மூச்சு எனும் பெயரெழும். விடுதலை மூச்சோடு சேர்த்து மூச்சு விடுதல் என்றும் உருவாக்குவோம். மூச்சு விடுதலை உள்ளிழுத்தல்/உள்ளீர்த்தல், வெளிவிடுதல் என்ற இரு வினைகளாய்ப் பிரிக்க இயலும். உள்ளீர்த்தல் என்பதை உள்தல்> உய்தல்> உய்ஈர்தல்> உயிர்தல் என்றுஞ் சொல்லப் படும். உய்தல்/உயிர்தல் என்பதன் வழி உள்ளிழுத்து நுரையீரல் நிறைந்து பின் காற்று வெளி வருவதைச் சொல்ல முடிகிறது. (இதுவே வாழ்விற்கு முதலடையாளம் என்று ஆதிமாந்தர் அறிந்தார்.) 

உள்விட்ட காற்று உடலுள் பயனுற்றது போக மிச்சம் வெளி வந்தே ஆகவேண்டும் என்பதால் உள்ளிழுப்பதே முகன்மையானது. உயிர்தலில் பிறந்த பெயர்ச் சொல் உயிர். பேச்சுவழக்கில் இது உசிரென்றுஞ் சொல்லப்படும். உயிர் உள்ளே போய் வெளி வருதலை உய்வு>உசிவு என்றுஞ் சொல்வர். “அவன் உசு உசு என மூச்சு விடுகிறான்” என்கிறோமே? உசிவாய்/உசுவாய் இருத்தல் உசிவாயம்> உசுவாயம்> உசுவாசம்= உயிருள்ள நிலை. இது வட மொழியில் கடன் பெறப்படும்போது உகரம் தொலைத்து சுவாசம் எனப்படும். அகலச் சுவாசம் என்பது சீராகக் குறைந்த கதியில் (ஒரு மணித்துளிக்கு எத்தனை மூச்சு விடுவதென்பது ஒரு கணக்கு. இக்கணக்கில் குறைந்த எண்ணிக்கையில் மூச்சுவிட்டால் அது அகல் சுவாசம்> ஆல் சுவாசம்>ஆ சுவாசம் ஆகும். ஆ சுவாசத்தின் பொருள் இளைப்பாறல். அதாவது குறை எண்ணிக்கையில் மூச்சு விடல். சுவாசம், ஆ சுவாசம் போன்றன இருபிறப்பிகள். உள்ளிருப்பது தமிழ். ஆனால் சங்கத மொழி விதிகளும் ஊடே வருகின்றன. உய்தல்/உயிர்தல் போன்றவையும், அகலுய்தல்.அகலுயிர்தல் போன்றவையும் இவற்றிற்கு ஈடான நல்ல தமிழ்ச்சொற்கள் 

இதை முடிப்பதற்கு முன் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். காற்றை உள்ளிழுத்து வெளிவிடுதலைத் தன்வினையாய் மட்டும் பார்க்காது மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதியை (அதன் வழி ஆன்மாவை) ஓர் உறுப்பாயும், உடலை இன்னொரு உறுப்பாயும் கருதி, முதற்பகுதியைத் தானென்றும், தன்னுடலைப் பிறன் என்றுங் கருதி, பிறவினையாயும் சில சொற்கள் எழுகின்றன. உய்வு= வாழ்வு. உய்வித்தல் = வாழ்வித்தல் உய்வித்தல்>உசீவித்தல்>சீவித்தல் (உகரந் தொலைத்த வடிவம்). சங்கதத்தில் சீவிதம்>ஜீவித என்றாகும். ஜீவித என்பதற்கு வாழ்வு என்ற பொருளை மட்டுங் கொடுப்பர். ஷுவாஸ் என்பதற்கும் ஜீவித என்பதற்குமான உறவு மோனியர் வில்லியம்சு அகரமுதலியில் சொல்லப்பட மாட்டாது. அதுவே, இச்சொற்கள் இரண்டுங் கடன் வாங்கப் பட்டவை என்பதை உணர்த்தும். இரண்டிற்கும் சொல்லப்படும் தாதுக்கள் வேறுபட்டும் பொருந்தாமலும் இருக்கும்.

அன்புடன்,

இராம.கி.


No comments: