Tuesday, January 15, 2019

திருவள்ளுவரும் திருவள்ளூரும்

அண்மையில் தமிழ்மரபு அறக்கட்டளையின் முனைவர்.சுபாஷிணி கீழ்க்கண்ட மடலை மின்தமிழ் மடற்குழுவிற்கு அனுப்பியிருந்தார்.
----------------------------------------------
திருவள்ளுவர் பற்றிய வரலாற்றுக் கதைகளாகச் சில புனைகதைகள் உலவுகின்றன. திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய முற்படும் போது அதற்கு வரலாற்றுச் சான்றுகளை முன் வைத்து ஆய்வுகளை அலச வேண்டிய தேவை உள்ளது. இதனை இந்தப் பதிவில் விளக்குகின்றார் ஆய்வாளர் திரு.கௌதம சன்னா.

திருவள்ளுவர் எங்கு பிறந்தார் என்பதற்கான ஆதாரம், களப்பணியின் மூலம் தாம்சேகரித்த தகவல்களின் வழி திருவள்ளுவர் பிறந்த வாழ்ந்த இடத்தைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துபவர் அயோத்திதாசப் பண்டிதர்.  அதன் அடிப்படையில் திருவள்ளுவரின் காலம், அவரது வாழ்க்கை பின்புலம், அவரது மறைவு உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் அலசுகின்றது இப்பதிவு.

அயோத்திதாசரின் தாத்தாவிடம் இருந்த திருக்குறள் மூலச்சுவடி F.W.எல்லிஸிடம் சென்று பின்னர் அச்சுபதிப்பு கண்டது.  திருவள்ளுவரின் வரலாறு கூறும் திருவள்ளுவமாலை எனும் நூலில்   இடைச்சேர்க்கைகள் இணைக்கப்பட்டதால் பல புராணக்கதைகளாக அவரது வரலாறு திரிக்கப்பட்டது.

திருவள்ளூரில் உள்ள வீரராகவபெருமாள் கோயில், வீரராகுல விகார் எனும் பௌத்த ஆலயம் என்ற தகவல்கள்.. இப்படி பல செய்திகளோடு வருகின்றது இப்பதிவு. யூடியூபில் காண:   

https://youtu.be/OvMov4BqPYk
-----------------------------------
இவ்விழியத்தைக் கண்டநான் சற்று வியந்துபோனேன். இவ்விழியத்தின் மூலந் திரு கௌதம்சன்னா சொல்வது இன்னொரு விதமான வரலாற்று வரைவாகவே (historiography) எனக்குத் தோன்றுகிறது. இது ஒரு வரலாறல்ல. இதைப்பற்றி இருவேறு வகையில் எனக்குக் கிடுக்கங்கள் (criticisms) உண்டு. (திரு.கௌதம் சன்னாவின் கருத்து ஒரு தனிக்குழுவில் மட்டும் பகிர்ந்து கொண்டதல்ல. பொதுவில், யூடியுபில் வைக்கப்பட்டது. எனவே அதற்கான மறுமொழியை நான் பொதுவில்வைப்பது தவறல்ல. எனவே என் வலைப் பதிவில் என் கிடுக்கங்களை இடுகிறேன். அதன் சுட்டியை முகநூலில் தருகிறேன். தவிர வேறுசில மடற்குழுக்களிலும் தர முயல்கிறேன்.)

முதற்கிடுக்கம் திருவள்ளூரென்ற ஊர்ப்பெயர் பற்றியது. திருவள்ளுவருக்கும் இவ்வூர்ப் பெயருக்கும் தொடர்பிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. நான் அறிந்தவரை, இவ்வூர் பற்றி முதலிற் பதிவுசெய்தது இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தைச் (பொ.உ.731-795) சேர்ந்த திருமங்கை ஆழ்வார் தான். (கல்வெட்டுகளை நான் இன்னும் பார்க்கவில்லை. அதுவொரு பெரிய தேடல். இளமையாயிருந்தால் செய்திருப்பேன்.) அவர் பாசுரங்கள் பொ.உ.776 ஐ ஒட்டி எழுந்திருக்கலாமென அறிஞர் சுப்புரெட்டியார் சொல்வார். பெரிய திருமொழியின் இரண்டாம் பத்து இரண்டாம் திருமொழியில் திரு எவ்வுளூர் பற்றிய செய்திகள் வரும். அத்திருமொழி முழுதிலும், ஆழ்வார் அவ்வூரை எவ்வுளென்றே சொல்வார். ஊரென்ற பின்னொட்டுச் ஆழ்வாருக்குப் பின்னரே சேர்ந்தது போலும். உள் என்பது இடத்தைக் குறிக்கலாம்..”எவ்வுள் கிடந்தானே” என்பது இப்பாசுரங்களில் வருங் கூற்று.

அதுவே இப்பெருமாளின் ஆதிப்பெயராகலாம். ”கண்ணன் இருக்குமூர், இராவணனைக் கொன்றவன் கிடக்குமூர், பாண்டவதூதன் கிடக்குமூர், ஏழு எருதுகளை அடக்கியவன் கிடக்குமூர், ஏழுலகும் உண்டவன் கிடக்குமூர், முனிவர்கள் தொழுதேத்தும் நம்பியின் ஊர், எல்லோர்க்கும் அப்பன் கிடக்கும் ஊர், அடியார்க்கினியன் கிடக்குமூர், இந்திரனுக்கும் தலைவன் கிடக்குமூர்” என்றெலாம் போற்றும் ஆழ்வார் வீரராகவப் பெருமாளெனப் பெயர் சொல்ல வில்லை. 5ஆம் பாடலில், “நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலம் தண்கழனி, ஏலநாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே” என்று இவ்வூரை விவரிப்பார். வேறு பாடல்களில் ஊர்விவரிப்பு இராது. அக்காலத்தில் நெய்தல்நிலத்தை ஒட்டிய தண்வயல்கள் பொருந்திய, மணம்வீசும் பசுங்காடு நிறை இடமாய் இது இருந்தது போலும். இவ்வூருக்கு வடக்கே ஈக்காடும், ஈக்காடு கண்டிகையும், கிழக்கே கீழம்பாக்கமும், தெற்கே காக்கலூரும், ஏகாத்தூரும், வெங்காத்தூரும், புட்லூரும், வடமேற்கே புள்ளரம்பாக்கமும் பூண்டியும் உள்ளன. சற்றுமேற்கே பல்லாயிரம் ஆண்டுத் தொன்மைகாட்டும் பட்டறைப் பெரும்புதூர்.உள்ளது இன்னும்மேற்கே சிவநெறித்தலங்களான திருவாலங்காடு, பழையனூர் போன்றவை உள்ளன. திருவள்ளூருக்கே கூடச் சங்கதநூல்களில் வீச்சாரண்யம் என்ற பெயருண்டு. (திரு.சன்னா கூறும் ’வடமதுரையை’ நானெந்த நூலிலும் காணவில்லை.)

ஈக்காடென்பது பொதுவாக ஈச்சங்காட்டைக் குறிக்கும். (சென்னையின் உள்ளே ஈக்காட்டுத் தங்கலென்ற பகுதியுண்டு.) கண்டிகை= பாகம், மேனியை அறுக்கும் அளவிற்கு ஈர்கள் (முள்கள்) நிறைந்த மரம் ஈ(ர்)த்தை>ஈ(ர்)ச்சையாகும். [இல்>ஈல்>ஈர்>ஈர்த்தை. ஈர்க்கக் (=பிளக்கக்) கூடியது ஈர்த்தை.] திரு+ஈ(ர்)ச்சங் காடு, தமிழ்ப்புணர்ச்சியில் திருவீ(ர்)ச்சங்காடு ஆகும். தமிழ்ப்புணர்ச்சி தெரியாச் சங்கதப்பண்டிதர் திருவை வெட்டி, வீர்ச்சங்காடு>வீர்ச்சாரண்யம் என்றதில் வியப்பில்லை. இம்முறையில், ஈர்க்காடு வீரைக்காடாய் அழைக்கப் படலாம். தமிழகரமுதலிகள் ”வீரையை” அடையாளங் காட்டாது ”ஒரு மரம்” என்று பொதுவாய்க் குறிப்பர். புராணக்கதையில் சாலிகோத்ர முனிவரிடம் ”வசிப்பதற்குரிய உள்(இடம்) எது?” என்று பெருமாள் கேட்டதாய்ச் சொல்வதுங் கூட சரியானதாய்த் தெரியவில்லை. ”எவ்வுளின்” முன்னொட்டை வினாவாய்ப் புரிந்து, சங்கதத்தில் ”கிம் கிருஹம்” எனப் பொருந்தாது பெயர்த்துள்ளார். புராணிகர் கூற்று இதுபோல் நம்பமுடியாதபடி சொல்லும். பற்றியாளர் நம்பிக்கையால் கேள்வி கேளார்.

மாறாக முள்/அம்பு குறிக்கும் எய்/எய்வைக் கருதியிருக்கலாம். எய்வு+உள் என்பது பேச்சொலிப்பில் எவ்வுளாகும். ஈச்சமுள் அம்புக்குப் பயன்படும். ஈச்சங்காடு எவ்வுளாகி முள்மரக்காடெனப் பொருள் கொள்ளும். வடக்கே இவ்வூரடுத்த இருவூர்கள் ஈச்சங்காட்டைக் குறிப்பதைக் காண்கையில் ஈச்சங்காடு இவ்வூரையுஞ் சேர்த்தாற்போல் பெரிதாய் இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. திரு. சன்னாவே இங்கிருந்த குறுநில அரசன் பெயரைக் கச்சனென்பார். கச்சிலென்பது காய்ந்துப்பழுத்த பேரீச்சை குறிக்கும். காய்ச்சிய இல்> காய்ச்சில்>கச்சில். மேலும் கச்சிலன்>கச்சன் ஆகலாம். திருவள்ளூருக்குத் தெற்கேயுள்ள கா(ர்)க்கலூர், நிலத்தின் உப்புப்பாங்கை உணர்த்தும் இதுபோற் பகுதிகளில் ஈச்சை எளிதாய் வளரும். நெய்தல் நிலத்தை ஒட்டிய கழனி என்று ஆழ்வார் குறிப்பதும் உப்புப்பாங்கான மண்தன்மை குறிக்கிறது. ஏகாத்தூர், வெங்காத்தூர் போன்றவை வெம்மையான காற்றடிக்கும் போக்கைக் குறிக்கலாம். இப்படிக் காற்றுவீசும் பகுதிகளில் ஈச்சம்வளரச் சரவலில்லை.

புட்லூரின் பொருள் சட்டென விளங்கவில்லை. ஒருவேளை புட்டிலூரானால், பொருள் ஒத்துவரும். அக்காலம் ஈச்சோலையில் அம்புப் புட்டில் செய்வது உண்டு. எவ்வுளுக்கு இன்னொரு பொருளுமுண்டு எழுஞ்செயலை எழுவுதல் என்போம். எழுவுதல், எவ்வுதலென்றும் ஆகும். எவ்வுள்= எழுந்துவந்த இடம் அதாவது மேட்டிடம். இதைச் சரியென எண்ணக் காரணம் வடமேற்கிலுள்ள பூண்டியின் பெயருங் காரணமாகும். பூண்டி= மேடு. பெரிய ஏரிக்குப் பக்கத்தில் உள்ள மேடு இப்பூண்டியாகும். பூண்டி ஏரிக்கும் எவ்வுளுருக்கும் இடையில் உள்ள புள்ளரம்பாக்கம் புள்கள் வந்தடையும் இடம். பூண்டி ஏரிக் குளிர்ச்சி எவ்வூளூரிலும் தெரியும். அதனாற்றான் ஆழ்வார் தண்கழனியென்கிறார். மேடு, ஈச்சங்காடு என்ற 2 பொருள்களுமே எவ்வுளுக்குப் பொருந்தும். காய்ச்சில் என்பது கார்ச்சில்>கார்ச்சுல் ஆகிச் சங்கதத்தில் kharjuurii ஆகும். மத்தியப்பிரதேச ஜான்சிக்குத் தென்கிழக்கில் 175 கி.மீ. இல் புந்தேல்கண்டு சத்தர்பூரிலுள்ள கஜுரஹோ கோயிலும் ஈச்சங்காடு ஒட்டியதே. கார்ச்சூரபுரம் (kharjuurapura) என்பார். ஈச்சங்கள் காய்ச்சும் தொடர்பில் காசாயம் தருவது என்ற பொருளில் kashaayin என்றும், கண்டம் (=முள்) நிறைந்த பொருளில் கண்டகின் (kaNTakin) என்றும் சங்கதத்தில் ஈச்சத்தை அழைப்பார். .

எவ்வுள் கிடந்தானென்று ஆழ்வார் சொன்னதால் ”முள்மரங்களுக்கு நடுவில் வீரைபோல் ஆகியவன் வீர் ஆகவன்(= வீராகவன்) ஆகி மீதிருத்தத்தில் வீர் ராகவன் ஆகியிருக்கலாம். தமிழிலிருந்து சங்கதம் போகையில் பல சொற்கள் மீதிருத்தத்தில் தப்புந் தவறுமாய் ஆகியுள்ளன. (ஏராள இறைவன்/ இறைவிப் பெயர்கள் விசயநகர அரசு காலத்தில் (1400-1700) இப்படி ஆயின. மணிப்பவள நடை பெருகியதும் அக்காலம் தான். கம்பன்காலம் வரை நற்றமிழ்ப் பெயர்களே இங்கிருந்தன.) திருவள்ளூர்ப் பெருமாளின் மூலவர் படிமமும் இராகவனைக் குறிப்பதாய் இல்லை. இராமாயணத் தொடர்பும் அங்கு காட்டப்படுவதில்லை. பொதுவாய் இராமனுக்குக் கிடந்தகோலம் தராது, நின்ற கோலமே குறிப்பர். இனி அடுத்த கிடுக்கிற்கு வருவோம். நீளமாய் இதிற் சொல்ல திரு. கௌதம் சன்னா, தரவுகள் கொடுக்கவில்லை. எனவே என் சிறிய கிடுக்கத்தைத்தான் தரமுடியும். அவருடையது ஏறத்தாழ வெற்றிட வாக்குவாதம் (vaccuous argument). 

இக்கோயிற்பெயரை வீர ராகுல விகாரம் என்பது எனக்குச் சொல் விளையாட்டுப் போலவே தோற்றுகிறது. அக்கோயில் முந்நாளில் விகாரமாய் இருந்ததற்கு திரு.சன்னா எச்சான்றும் அளிக்கவில்லை. ஒருசில சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள் ஒருகாலத்தில் புத்தர் கோயிலாய்/ விகாரங்களாய் இருந்திருக்கலாம் தான். காட்டாக காஞ்சி காமாட்சி கோயில் புத்தமதத் தாராதேவி கோயிலாய் இருந்திருக்கலாம் என மயிலை சீனி வேங்கடசாமி அவர் நூலில் சான்றுகள் கொடுத்திருப்பார். அதேபோல் அழகர் கோயில் பெருமாள் கோயில் ஒரு புத்த ஆராமமாய் இருந்திருக்கலாம் எனத் தொ.பரமசிவன் பல சான்றுகளைக் காட்டியிருந்தார். அவற்றைப்போல் எதையும் திரு சன்னா இங்கு காட்டவில்லை. மேம்போக்காய்ச் சொல்வது முறையல்ல. திருவள்ளூர்க் கோயில் சென்னைப் பகுதியில் முகன்மையான கோயில். அதன் இருப்பை மறுக்கவேண்டுமெனில், அதன் வேறு முன்தோற்றத்தைக் காட்டவேண்டுமெனில் இன்னும் மெனக்கிடவேண்டும். அவர் சொல்லும் ஒன்றும் (5 பஞ்சரத்தினப் பாடல்கள் பதித்த கல்வெட்டும்) கோயிலுக்கு அடுத்துள்ள திருக்குளத்தில் புதைக்கப்பட்டுவிட்டதெனக் கூறுகிறார். அதுபற்றி மேல்விவரங்கள் தெரிந்தால் ஏதேனுஞ் சொல்லலாம்.

கச்சன் என்று குறுநில மன்னனுக்கு திருவள்ளுவர் மகனென்றும் நாயனார் என்பது அவர் இயற்பெயர் என்பதும் குறையுள்ள கருத்துக்கள். கச்சனின் இருப்பிற்குச் சான்றென்ன? கல்வெட்டு ஆதாரம் உண்டா? அவருக்கு இவர் மகன் என்பதற்குச் சான்றென்ன? நாயனார் என்பது மிக அரிதாகவே தமிழில் இயற்பெயராகும். அது தலைமைப் பதவியைக் குறிக்கும் பெயராகும். நாயகம், நாயக்கர், நாயனார் போன்றவை தமிழில் அப்படித்தான் தலைமைப் பொறுப்பைக் கொண்டிருந்தன. எது இயற்பெயர், எது குலப்பெயர், எது பொதுப் பெயர் (அல்லது அலுவப்பெயர்) என்பதில் திரு.சன்னாவிற்கு ஒரு தெளிவு வேண்டும். வள்ளுவர் என்பார் திருமந்திரநாயகம் என்று பிற்காலத்திற் சொல்லப்பட்டார். அரசன் ஆணையாகக் கூறுங் கூற்றுகளை மந்திரிப் பெருதானிகளிடமும், அதிகாரிகளிடமும், மக்களிடமும் தெரிவிக்கும் communicator வள்ளுவர். அது தொழிற்பெயர். பின்னாளில் குலப்பெயர் ஆனது.

வள்ளுவர் குமரிநாட்டவர் என்பதை குறளில் புழங்கும் ஒருசில விதப்பான குமரிநாட்டு சொல்லாட்சிகளை வைத்துச் சிலர் சொல்லுவார். தவிர வள்ளுவர் என்னும் குலத்தார் குமரிநாட்டில் இன்றும் அதிகம். தவிர வள்ளுவரைக் குந்தகுந்தரோடு தொடர்புறுத்தி நடுநாட்டிற்குத் தமிழ்ச்செயினர் கொண்டு வருவர். அவர் சொல்வதிலும் எண்ணிப்பார்க்கவேண்டிய கருத்துகள் உண்டு. இப்படிப் பல்வேறு உரிமை கொண்டாடல் எப்போதுமே உண்டு. இதில் எது உண்மை, எது கற்பனை என்பது இன்னும் தெளிவுறச் சொல்லமுடியவில்லை. வள்ளுவரைப் புத்தநெறியாளராக்கித் திரு சன்னா சொல்வது இன்னொரு வரலாற்று வரைவு. அவ்வளவு தான். (நான் பௌத்தம் என்று சொல்லுவதிலை. ”புத்தம்” என்று தமிழால் சரியாகச் சொல்லக்கூடிய பெயரை வலிந்து சங்கத மொழி ஒலிப்பின் படி, இலக்கணத்தின் படி, பௌத்தம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழை ஆங்கில இலக்கணப்படி, “நான் பார்த்தேன் அவனை” என்று யாரும் பேசுவதில்லை. அரசியல் சார்பிருக்கும் பலரும் பௌத்தம், சைவம், வைணவம் என்று சொல்லிக்கொண்டே இருப்பது கொஞ்சம் எரிச்சல்பட வைக்கிறது. ஏன் இப்படிச் சங்கதத்திற்கு இவரெல்லாம் வணங்கிக்கொண்டேயிருக்கிறார்? ஏன் புத்தம், சிவம், விண்ணவம் என்று தமிழ்முறைப்படி சொல்லக்கூடாது? இற்றைத் தமிங்கிலம் என்பது அற்றை மணிப்பவளத்தின் தத்துப்பிள்ளை. மறவாதீர் ஐயா.)

மேலே நான்சொன்னது எதுவும் அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பைக் குறைத்துச் சொன்னதில்லை. அவருடைய இந்த வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றுமட்டுமே சொல்கிறேன். எப்படிப் பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதோ, எப்படிப் பாவாணரின் எல்லாக் கொள்கைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல் அயோத்திதாசரின் எல்லாக் கொள்கைகளையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது. பலவற்றில் நான் ஒத்துப் போகலாம். சிலவற்றில் மாறுபடலாம். இதுவே ஓர் ஆய்வாளனின் போக்கு.
.   .
அன்புடன்,
இராம. கி.