Saturday, October 26, 2019

பார்சுவர்

”திருக்குறள் பொதுநூலா?” என்ற இழையில் பார்சுவர் பற்றியும், விதப்பியம் பற்றியும் சில கேள்விகளை திரு தேவராஜ் ஒருமுறை எழுப்பினார். இது அவருக்கு எழுதிய மடல். பொதுப்புலத்தில் இருக்கட்டும் என்று (அவருக்குத் தனியிழையில் மறுமொழித்ததை) இங்கு பதிவாக்குகிறேன். இது நான் முதன்முறை சொன்னதல்ல. ”சிலப்பதிகார ஐயங்கள்” என்ற தொடரில் ஏற்கனவே சொன்னது தான். பலர் அத்தொடரைப் படிக்காது விட்டிருக்கலாம். எனவே இங்கு அவற்றை ஒருங்கு சேர்த்துச் சொல்லுகிறேன். ”உபநிடதங்கள் பொ.உ.மு. 2600 - 2000 இல் எழுந்தன” என்பதைப் பொதுவாக நான் ஏற்கத் தயங்குவேன். சங்கத மேதையான திரு தேவராஜ் போன்றோர் இதைப்பற்றிச் சங்கதப்புலவரோடு தான் உரையாடவேண்டும். நான் கற்றுக்குட்டி. ”அனைத்து உபநிடதங்களும் பொ.உ.மு.800 க்கு முன்னாற் போகா” என்றே https://en.wikipedia.org/wiki/Upanishads தளத்திற் சொல்கிறார். அக் குறிப்புகளையே நானும் எடுத்துக் கொள்கிறேன். (சிலர் அதை ஏற்கவில்லையெனில், அங்கு போய்த்தான் உரையாடி அதை மாற்றவேண்டும்.) 
--------------------------------------
Patrick Olivelle gives the following chronology for the early Upanishads, also called the Principal Upanishads:[49][16]
The Brhadaranyaka and the Chandogya are the two earliest Upanishads. They are edited texts, some of whose sources are much older than others. The two texts are pre-Buddhist; they may be placed in the 7th to 6th centuries BCE, give or take a century or so.[50][17]
The three other early prose Upanisads—Taittiriya, Aitareya, and Kausitaki come next; all are probably pre-Buddhist and can be assigned to the 6th to 5th centuries BCE.
The Kena is the oldest of the verse Upanisads followed by probably the Katha, Isa, Svetasvatara, and Mundaka. All these Upanisads were composed probably in the last few centuries BCE.[51]
The two late prose Upanisads, the Prasna and the Mandukya, cannot be much older than the beginning of the common era.[49][16]
Stephen Phillips places the early Upanishads in the 800 to 300 BCE range. He summarizes the current Indological opinion to be that the Brhadaranyaka, Chandogya, Isha, Taittiriya, Aitareya, Kena, Katha, Mundaka, and Prasna Upanishads are all pre-Buddhist and pre-Jain, while Svetasvatara and Mandukya overlap with the earliest Buddhist and Jain literature.[13]
------------------------------------
இது ஒரு பக்கத்திலிருக்க, இன்னொரு பக்கம், பார்சுவநாதர், மற்கலி கோசாளர், வர்த்தமான மகாவீரர், கோதம புத்தர் ஆகியோரைப் பற்றிப் பார்க்கலாம். என் கவனம் இதில்தான் உள்ளது.

இந்தியா எங்கணும் வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் பழங்குடியினர் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக் குழுத் தெய்வங்கள். அந் நம்பிக்கைகளை மறுத்து “இறைவனென யாருமில்லை” என்று முதலிற் சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். (இது வேத மறுப்புக் கொள்கையாகவும் இருந்தது இன்னொரு பரிமானம்.) இதற்கு உலகாய்தம்/ சாருவாகம்/ பூதவாதம் என்று சிறுசிறு வேறுபாடுகளுடன் பெயர் உண்டு. உலகை ஆய்வது உலகாய்தம். இக்கொள்கையை ஏற்காது ஒரு சில குறிப்பிட்ட இனக்குழுத் தெய்வங்களைப் பெரிதுஞ் சொன்ன வேதக் கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் அது கிழக்கு நோக்கிப் பரவியது.

(போன இடங்களில் இருந்த இனக்குழுத் தெய்வங்களில் சிலவற்றை வேத நெறி ஏற்றது; பலவற்றை இன்று வரை மறுக்கிறது.) வேதக்கொள்கை கிழக்கு இந்தியா பரவிய போது, கணக்கு வழக்கின்றி அளவிலும் எண்ணிக்கையிலும் வேதநெறி சார்ந்த வேள்விகள் பெருகின. அவற்றில் ஆகுதியாகும் பொருட்கள் சில வேளைகளில் விளைபொருட்களாயும், சில வேளைகளில் விலங்குகளாயும் இருந்தன. குறிப்பாக மாடுகள் அளவிற்கு மீறி ஒரு காலத்தில் வேள்விகளிற் பலியாகின. இது முல்லைநிலப் பொருளாதாரத்தையும், அப்பொழுது (கி.மு.900-600) தோன்றிக்கொண்டிருந்த தொடக்கநிலை மருதநிலப் பொருளியலுக்கும் பெரிதும் தாக்கம் விளைவித்தது.

பார்சுவர் பிறப்பு பெரும்பாலும் பொ.உ.மு.877 என்றும் அவருடைய பரி நிருவாணம் (அதாவது இறப்பு) பொ.உ.மு. 777 என்றுஞ் சொல்வர். அவருடைய பிறப்பிடம் காசி நகரம். அவர் தன் வாழ்வில் பெரிதும் புழங்கிய இடங்கள் காசி, கோசலம், மகதம் ஆகியவையாகும். காசி அரச குடும்பத்திற் பிறந்து 30 ஆண்டுகள் இல்லறம் நடத்தி அதற்கப்புறம் பொ.உ.மு.847 இலிருந்து 70 ஆண்டுகள் துறவு மேற்கொண்டு தம் கொள்கைகளைப் பரப்பினார். 22 ஆம் தீர்த்தங்கரரான நேமிநாதரின் வரலாற்றிருப்பை ஏற்பவரும் ஏற்காதவரும் உண்டு. அதேபொழுது அவருக்கும் முந்தையவரை, ஆதிநாதர் முதற் கொண்டு, பெரிதும் நம்பிக்கையின் பாற்பட்டே ஏற்கிறோம். ஆனால் பார்சுவரின் வரலாற்றிருப்பை ஏற்காதவர் கிடையாது.

செயினர் கோயில்களின் எண்ணிக்கையிற் பார்த்தால், பார்சுவநாதரே பெரிதும் நிறைந்து நிற்கிறார். அதேபொழுது முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதரையும் (இவரை விடைநாதர்> விடவநாதர்> விடபநாதர்> இடபநாதர் என்றுஞ் சொல்வர்.) பார்சுவருக்குப் பின்வந்த எல்லா வேதமறுப்பு நெறிகளும் ஏற்றுப் போற்றித் தான் வந்தன. வேதமறுப்பு நெறிகளென்ன, வேதஞ்சார்ந்த, வேதநெறி சாராத இரு வேறு சிவநெறிகளும் ஆதி நாதரைச் சிவனென்று சொல்லி முழுமுதற் கடவுளாய்க் கொள்ளும். ஆழப் புகுந்தால் சிவநெறியின் பல செய்திகள் செயினப் போல்மங் காட்டும். 63 நாயன்மார் என்ற கணக்குக் கூட செயினத்தோடு ஒப்புமை கொண்டது தான். சிந்தனை அகலமாய் இருந்தால் இதையெல்லாஞ் சொல்லலாம். ஆனால் அவற்றை இங்கு சொன்னால் இங்கே பலருக்கும் கோவம் வரும். எனவே தவிர்க்கிறேன்.)

“திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தி லரங்கத் தகன்மொழி லகவயிற்”

என்ற சிலப்பதிகார வரிகள் ஆதிநாதரை வணங்குவதையும் நிக்கந்தர் பள்ளிப் பெரியோரையுங் குறிப்பிடும். (கடவுள் என்ற சொல் வேதமறுப்புச் சமயங்களில் பெரியவர், தலைவர் என்றே பொருள்படும். எல்லாம் வல்ல இறைவனையல்ல. சமயங்களுக்குள் இருக்குஞ் சிக்கலே இது போன்ற வரையறைகளில் தான். அவை புரியாமல் தான் வீண்வாதங்களில் நாம் ஈடுபடுகிறோம்.) நிக்கந்தரென்ற சொல் ”பிறவிக் கட்டை நிறுத்துவோர்” என்றே பொருள்படும். கந்தென்றால் தமிழிற் கட்டென்றே பொருள். பார்சுவரை ஏற்ற எல்லாச் சமணருக்கும் நிக்கந்தர் என்ற பெயருண்டு.

பெருமானங்களும், ஆரணங்களும் பெரிதாயெழுந்த பார்சுவர் காலத்தில் பென்னம் பெரிதாய் வேள்விகள் நடந்ததால், கால்நடைகளைப் பலி கொள்வது பெரிதுங் கூடிப்போயிற்று. பணம் படைத்தவர், அரசர், தலைவர் போன்றோர் கால்நடைகளைக் கவர்ந்தோ, காசு கொடுத்தோ வலிமையோடு எடுத்துச் சென்றார். தாம் வளர்த்த ஆடு மாடுகள் கவரப் பட்டதும், அதனால் பொருளாதார அடிமானம் பாதிப்பு உற்றதையும் மக்கள் கொஞ்சங் கொஞ்சமாய் உணரத் தொடங்கினார். ”வேள்விகளே இவை எல்லா வற்றிற்கும் காரணங்கள்” என்ற குமுறல் தொடங்கிற்று. இந்த வேள்விகளின் பிடியில், பெருமானர்களின் அழுத்தத்தில், அரசர்கள் இருப்பதை மக்கள் குறை சொல்லத் தொடங்கினார். (இன்றைக்கும் ஏதாவதொன்று என்றால் சிறிதாய்ப் பலரும் வேள்வி நடத்த முற்படுகிறார். இன்றைக்கும், cow protection என் பெரிதாய் உணரப்படுகிறது என்று ஓர்ந்து பாருங்கள்.)

பார்சுவரே கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பூதிப் பொருட்களின் மேல் பற்றின்மை ஆகிய “சதுர்யாமக்” கடைப்பிடியை அறமாகச் சொன்னவர். இக் கொள்கையில் முதலில் கருதுவது பிறவுயிர்களைக் கொல்லாமையே. கடைசியிலுள்ள பற்றின்மையில் பிறனில் நயவாமை ஒரு பகுதியாய் எண்ணப்பட்டது. (அன்றைக்கிருந்த ஆணாதிக்கக் குமுகாயத்தில் பெண்கள் ஆணின் போகப் பொருள்களாகவே எண்ணப் பட்டார். பின்னால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ஆணாதிக்க நிலை குமுகாயத்தில் உணரப் பட்டது ”பெண்ணிற்கும் முழுவுரிமையுண்டு” என்பதை இன்று வரை உலகத்தில் பலரும் ஏற்காதிருக்கிறார். இது மாறும் என்று வேண்டுவோம்; நம்புவோம். மகாவீரர் காலத்திற்றான். காமம் மறுத்தல் என்பது பெரும் ஆசாரமாய் (ப்ரம்மச்சர்யம்) துறவோர்க்கு அழுந்தச் சொல்லப்பட்டது. சாவக நோன்பிகளுக்கு அது பிறனில் நயவாமையாக வெளிப்படச் சொல்லப் பட்டது.) வேத நெறிக்கு மாறாய்ப் பார்சுவரின் வேதமறுப்பு நெறி, சட்டென்று மக்களுக்குப் பிடித்துப்போனது வேதமறுப்பு நெறிகள் முல்லை நிலத்தாருக்குத் தேவையான வகையில் கொல்லாமையில் பேசத் தொடங்கின. மதம் பரப்பச் சரியான உத்தி.

பார்சுவருக்குச் சற்று முன்னால் உலகாய்தத்தின் வளர்ச்சியாய் அதே பொழுது பல்வேறு பொருள்களை/ புலன்களை/ அறிவுகளை/ சினைகளை எண்ணிக்கையிட்டுச் சொல்வதாய்ச் சாங்கியம் தொடங்கியது. அக்கால அறிவியல் வளர்ச்சி சாங்கிய மெய்யியலிலேயே தொடங்கியது. சாங்கியச் சிந்தனை காரணமாகவே ”இறப்பிற்குப் பின் என்ன?” என்ற கேள்வி இந்தியா எங்கணும் எழுந்தது. உயிரும் உடலும் வேறு வேறு என்ற சிந்தனை வலுத்தது. உயிரென்பது உடல் இயக்கத்தின் வெளிப்பாடு என்று உலகாய்தம் சொல்லிய போது, சாங்கியம் இயங்கியல் (dialectics) வரிதியில் அதற்கு விளக்கஞ் சொன்னது. பேரா.க.நெடுஞ்செழியனும். வெங்காலூர் குணாவும் சாங்கியத்தை எண்ணியமென்றே அழைப்பர். (நான் சார்ங்கியம்>சாங்கியம் என அதைத் தமிழாக எண்ணுவதால் அப்படியே அழைக்கிறேன். சாங்கியத்தை இங்கே நான் பேசவில்லை. அது நீண்ட புலனம். வேறொரு நாள் பார்ப்போம்.)

இதே நேரத்தில் சாங்கியத்திற்கு இன்னொரு எதிர்வினையாய் வேதநெறியின் அறிவுறுத்தல் மீமாஞ்சை வழிக்கு மாறியது. சாங்கியமும், மீமாஞ்சையும் எல்லாம் வல்ல இறைவனுக்கான தேவையில்லாத படி மெய்யியல் சொல்லத் தொடங்கின. ஆனானப் பட்ட அருத்தசாற்றம் (அர்த்த சாஸ்த்ரம்) ”அந்வீக்ஷிகீ, த்ரயீ, வார்த்தா, தண்டநீதிஸ்சேதி வித்யா” என்று தான் தொடங்கும். அதாவது அந்வீக்ஷிகி, த்ரயி (3 வேதங்கள்), பொருள்நூல் (வார்த்தா), தண்டநீதி (தண்டனை நயன்மை) சேர்ந்தவையே அன்றுள்ள வித்தைகளாகும். முதலில் சொல்லப் படுவது அந்வீக்ஷிகி தான். அதுவென்ன என்பதற்கு அடுத்த நூற்பாவில் விளக்கங் கிடைக்கும். ”ஸாம்க்யம், யோக: லோகாயதம், சேத்யந்வீக்ஷிகீ. தர்மாதர் மௌத்ரய்யாம் அர்த்தாநர்த்தௌ வார்த்தாயாம், நயாபநயௌ தண்ட நீதியாம்” என்று இச்சொலவம் இன்னும் போகும். நான் நிறுத்திக்கொள்கிறேன். மெய்யறிவியல் என்றால் என்ன என்ற விளக்கமும் அடுத்துக் கிடைக்கும். இவையெல்லாம் ஆழ்ந்து படிக்க வேண்டியவை. ஆக அந்வீக்ஷிகி என்பது ”சாங்கியம், யோகம், உலகாய்தம்” சேர்ந்தது.

சாங்கியமும், தொடக்ககால மீமாஞ்சையும் எல்லாம்வல்ல இறைவனை ஏற்றுக்கொண்டவையல்ல. உலகம் இருக்கிறதென்பதை ஏற்கும் சாங்கியம் ”உலகம் தானே தோன்றியது” என்று சொல்லும். யாரோ ஒருவர் படைத்தார் என்பதைத் தொடக்க காலச் சாங்கியம் ஏற்காது. தொடக்க கால மீமாஞ்சையும் ”உலகம் இருக்கிறது. நமக்கு வேண்டுந் தேவைகளைத் தேவதைகள் நிறைவேற்றும்” என்பதோடு நின்று கொள்ளும். ”வேதங்கள் தான்தோன்றிகள்” என்றும் தொடக்க கால வேதநெறி சொல்லும். ”பூருவம், உத்தரம்” என்று மீமாஞ்சை பிரிந்ததெல்லாம் உபநிடதங்களுக்கு அப்புறம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சி. It would be surprising to know that both sankya and mimaamsa were materialistic to start with. Later various versions came in including the ones with a creator.

இந்தப் பின்புலத்தோடு பொ.உமு.847 இலிருந்து 777 வரையுள்ள காலத்தில் மீமாஞ்சைப் புரிதலிலேயே வேதநெறி நின்றிருக்க முடியாது. பார்சுவரின் பரப்புரையை மறுக்கவேண்டுமெனில், அந்நெறி சில மாற்றங்களைக் கொண்டுவரத் தான் வேண்டும். ”இறப்பிற்குப் பின் என்ன?” என்ற கேள்விக்கு மறுமொழி சொல்ல வேண்டும். உடல்/உயிர் வேறுபாடு சொல்ல வேண்டும். உயிருக்கான உலக எதிர்பார்ப்புகள் போக வீடுபேற்றை, ஆன்மாவை, வினையை வினைப்பயனைப் பேச வேண்டிய தேவை வேதநெறிக்கு எழுந்தது. பாவம், புண்ணியம் பேச வேண்டிய தேவையும் அதற்கெழுந்தது. எனவே அவை துணை நிற்றங்கள் ஆயின. உபநிடதங்கள் என்ற சொல்லின் உட்பொருள் அதுதான். உபநிடதங்கள் அடுத்த 150/150 ஆண்டுகளுக்கு கணிசமான போட்டியை வேதமறுப்பு நெறிகளுக்குக் கொடுத்தன. மறுவினை என்று நான் சொன்னது reaction என்பதையே. ஒரு குறிப்பிட்ட நூல் பற்றியல்ல.

பார்சுவரின் பங்களிப்பு இதில் என்ன? மகாவீரருக்கும், கோசாளருக்கும், புத்தருக்கும் பொதுமையானவை யாவை? பார்சுவர் பங்களிப்பிற்கும், இப் பொதுமைக் கருத்துகளுக்கும் ஆன உறவுகள் யாவை? ஏன் குறிப்பிட்ட காலத்தில் உபநிடதங்கள் தொடக்க மீமாஞ்சைக்கு மாறாய்க் கருத்துச் சொல்லத் தொடங்கின? - என்ற புலனத்தில் அரிதாகவே கட்டுரைகள் இன்று எழுகின்றன. இப்பொழுது புத்த மத நூல்களையும் செயின மத நூல்களையும் விட்டால் வேறு ஊற்றுக்கள் நமக்கு இல்லை. (அற்றுவிகம்/ஆசீவிகம் பற்றிக் கூட இந்தப் பர பக்கங்களையும், சங்கப் பாடல்களையும் விட்டால் நமக்கு வேறு வழியில்லை. என்ன செய்வது? தோற்றுப் போன மதத்தை ஆய வேண்டுமெனில் வேறுவழியில்லை.) அதேபொழுது வெற்றி பெற்றவர் சொல்வது பெரும்பாலும் திரிந்தே இருக்கும். உபநிடதங்கள் “அநாதி” என்று சொல்வதையும் நாம் ஏற்பதற்கில்லை. அப்படிச் சொன்னால் அப்புறம் அது நம்பிக்கை என்று சொல்லி உரையாடலில் இருந்து விலக வேண்டியது தான்.

இது ஒரு பக்கம் நடந்த போது யோகம் (பொருந்தி நிற்றல்) என்பது சும்மா இருக்கவில்லை. யோகத்தின் வளர்ச்சியே விதப்பியம். விதத்திக் காட்டுவது, வேறுபடுத்திக் காட்டுவது என்பதே விதப்பியம் எனப்பட்டது. ஐம்பூதச் சிந்தனை விதப்பியத்தில் எழுந்தது. 4 பூதம் என்பது வடபுலப் பார்வை. ஐம்பூதம் என்பது தென்புலப் பார்வை http://monierwilliams.com/ என்ற வலைத் தளத்திற்குப் போய் vaiśeshika (இதில் முதல் s க்குமேல் ஓர் ஆளங்குறியைப் (diacritic) போடுவர். இதை word txt file இல் போட முடியாது. word doc file இல் போடலாம். இந்த ஆளங்குறியைச் சில நூல்களில் கூர்ங்கோணி (acute) ஆகவும், சிலவற்றில் மேற்புள்ளி ஆகவும் போடுவர். உங்கள் வழக்கம் எதோ அதைப் போட்டுக் கொள்ளுங்கள்) என்ற சொல்லைக் கொடுத்து full text search செய்தீர்களானால், 10வது பொருளாய்க் kaṇāda என்ற குறிப்பிற்கு அடியில் வேண்டிய விளக்கங் கிடைக்கும். அச்சுப் பொத்தகத்திற் பார்க்கவேண்டும் எனில் மோனியர் வில்லிம்சு அகரமுதலியில் 1026 ஆம் பக்கத்தில் vaiseshika என ஆளங்குறியோடு போட்டிருக்கும். உங்களால் இச்சொல்லை அடையாளங் காணமுடியாதது எனக்கு வியப்பாகவே உள்ளது.  நான் பக்கம் 1026 - ஓடு பக்கம் 990 இல் உள்ளதையும் சேர்த்துக் கண்ணித்து இங்கு இணைத்துள்ளேன். 

நான் ஏன் இச்சொல்லை விஷேசிசமென்று எழுதினேன்? கொஞ்சங் கொஞ்சமாய்த் தமிழைச் சங்கதமாக்க்கி மணிப்பவள நடை வருவதை நான் என்றும் ஒப்புபவனில்லை. சங்கத இலக்கண முறையை தமிழ் வாக்கியங்களுள் புகுத்துவதை நான் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறேன். சைவம், வைணவம், வைதீகம் என்று சொல்ல முற்படுவதைக் கூட நான் என்றுமே மறுப்பேன். (சொகந் தேடும் ஒரு தவளை சொகுசாக இருந்த மாழைக் கலத்திற்குச் சிறிது சிறிதாகச் சூடு ஏற்றுவாராம். அந்தக் குறுங் கதை என் நினைவில் அகல்வதேயில்லை.) என் மொழியிலக்கணம் எனக்கு. சங்கத இலக்கணம் சங்கதத்திற்கு. நான் மேலேசொன்ன சொற்களைச் சிவம், விண்ணவம், வேதியம், விதப்பியம் (வேறு வழியில்லையென்றால் குறைந்த தாக்கத்தில் விஷேசியம்/விஷேசிசம்) என்று தான் எழுதுவேன்.

இப்பொழுது வேதமறுப்பு சமயங்களுக்கு வருவோம். ”உயிர்/ஆன்மா நிலைத்தது. அது அடுத்தடுத்த பிறவிகளை அடையுமெ”ன்ற சிந்தனை வேதமறுப்பு நெறிகளுக்கு உகந்தது. ஆனால் தொடக்க காலச் சாங்கியத்தில் அது கிடையாது. இப் பிறவிச் சுழற்சியை அற்றுவிகம், செயினம், புத்தம் என எல்லாமே பேசும். இவற்றிற்குள்ளும் போட்டிகள் இருந்தன. பிறவிச் சுழற்சியை துறப்பதே துறக்கம் என்னும் வீடுபேறாயிற்று. வீடுபேறு என்ற கருத்தை தொடக்க மீமாஞ்சை சொல்லவே இல்லை. ”இந்த உலகத்தில் என்ன வேண்டும்?” என்பதே தொடக்க மீமாஞ்சையின் பாடுபொருள்.

வேதமறுப்பின் 3 சமயத் தலைவருமே பார்சுவரை ஏற்றுக்கொண்டனர் என்பது போல் தான் ஆய்வின் மூலம் தெரிகிறது. இவர்களுள் மற்கலி கோசாளரே மூத்தவர். அவர் பிறப்பு பொ.உ.மு. 623; அவர் இறப்பு பொ.உ.மு. 543. மகாவீரர் பிறப்பு பொ.உ.மு. 599; அவர் இறப்பு பொ.உ.மு.527. புத்தர் பிறப்பு பொ.உ.மு.563; அவர் இறப்பு பொ.உ.மு.483 (புத்தர் இறப்பையும், பிறப்பையும் 60 ஆண்டுகள் முன்தள்ளி இலங்கையர் சொல்வர். பெரும்பாலான ஆய்வாளர் அதை ஏற்றதில்லை.) மகாவீரர் இறப்பிற்கும் பார்சுவர் இறப்பிற்கும் 250 ஆண்டு கால இடைவெளி சொல்வர். மகாவீரர் இறப்பிற்கும் கோசாளர் இறப்பிற்கும் இடையே 16 ஆண்டுகள் சொல்வர். கோசாளரும் புத்தரும் 80 ஆண்டுகள் இருந்தார்; மகாவீரர் 72 ஆண்டுகள் இருந்தார்.

புத்த நூல்களும் பல இடங்களிற் பார்சுவரை சுற்றிவளைத்து ஏற்றுக் கொள்ளும். புத்தர் நிருவாணம் அடையுமுன் பார்சுவர் வழியிற் சென்றதாகவே சில குறிப்புக்கள் சொல்லுகின்றன. மற்கலி கோசாளர் 6 ஆண்டுகள் நிக்கந்த வழியில் தான் இருந்தார். கோசாளருக்கும் வர்த்தமானருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகினர். பார்சுவருக்கு அப்புறம் தான் 3 பெரிய பிரிவுகள் ஏற்பட்டன (உண்மையில் ஏராளப் பிரிவுகள் ஏற்பட்டன. அவையெல்லாம் ஒன்றுள் ஒன்றாய்க் கரைந்து இந்த மூன்றில் தங்கின.) எப்படி நிறுவனப்படுத்தப் பட்ட கிறித்துவமதம், ”கத்தோலிக்கம், இரோப்பிய எதிர்ப்பாளர், ஆங்கில எதிர்ப்பாளர், செரிலிக் எதிர்ப்பாளர்” என்று பலவகையாய்ப் பிரிந்ததோ அது போல பார்சுவருக்கு 250 ஆண்டுகள் கழித்து நிக்கந்தர் பள்ளி கொஞ்சங்கொங்சமாய் உடையத்தொடங்கியது.

இதிற் செயினரே பிற்காலக் கத்தோலிக்கர் போல் நாட்பட்ட நிறுவனத்தைத் தூக்கிப்பிடித்தார். அற்றுவிகமும், புத்தமும் எதிர்ப்புச் சமயங்களாயின. பார்சுவரை அவை ஏற்றன. ஆனால் மற்கலி கோசலரும், கோதம புத்தரும் வர்த்தமான மகாவீரரை ஏற்கவில்லை. தாமே 24 ஆம் தீர்த்தங்கரர் என்று உரிமை கொள்ளத் தொடங்கினர். தமக்கேயுரிய நிறுவனங்களை ஏற்படுத்தினர். இப்படி இவர் முரண்பட்டு நிறுவனத்தை விட்டு விலகியதால், நிக்கந்தப் பெயர் கி.மு.500களுக்கு அப்புறம் செயினரை மட்டுமே குறித்தது. ஆயினும் முப் பிரிவினரும் நிக்கந்தர் பள்ளிகளுக்குள் சென்று வந்து கொண்டிருந்தார். அவரிடை முரண் கூராக வில்லை. பகைவர் என்றெண்ணும் அளவிற்கும் அது வளரவில்லை. 3 சமயங்களுமே பகைமுரணை ஏற்பவையல்ல. குறிப்பாக ”ஒரு நிகழ்வைப் பார்க்கும் வகையிற் பல பார்வைகள் உண்டு” எனும் ”அநேகந்த வாதத்தைப்” பின்பற்றிய செயினம் மற்ற இரண்டையும் பகை முரணாய்க் கருதவில்லை. (ஆனால் அவற்றை முரணிய மதங்களென்றே சொல்லும்.) எனவே அற்றுவிகரும், புத்தரும் நிக்கந்தர் பள்ளிகளுக்கு வந்து போவதும், அங்கு தங்குவதும், உரையாடுவதும், தியானம் செய்வதும் நெடுங்காலம் ஏற்றுக்கொள்ளப் பட்டன.

பின்னால் பார்சுவருக்கு அப்புறம் சமயக்கொள்கை வளர்த்ததிற்றான், பிறவிச் சுழற்சியைத் தடுத்து நிறுத்தும் வழிகளைச் சொல்வதிற்றான், இவர் மூவரும் வேறுபட்டு நின்றார். இவரின் கொள்கை வேறுபாட்டை இங்கு  சொன்னால் விரியும். எனவே தவிர்க்கிறேன். பிறவிச் சுழற்சியை அற்றுவிக்கும் கொள்கையாய் அற்றுவிகம் (>அத்துவிகம்>அஜ்ஜுவிகம்> ஆஜுவிகம்) உணரப்பட்டது. பிறவிச் சுழற்சியைச் செயிக்கும் கொள்கையாய் செயினம் உணரப்பட்டது. பிறவிச் சுழற்சி பற்றிப் புத்தி தெளிவிக்கும் நெறியாய் புத்தம் உணரப்பட்டது. ஆசீவிகம், செயினம், புத்தம் என மூன்றுமே தியான நிலையை அழுத்துபவை. சம்மணம் கொட்டியே மாந்தர் தியானிப்பதால் சம்மணம்>சமணம் என்று மூன்றுமே அறியப் பட்டன. பிறவிச் சுழற்சியை நிறுத்த உறுதி எடுத்துக்கொண்டோரே இவரில் துறவிகளாவர். இப்பிறவியைத் துறந்தோர். அடுத்த பிறவி வேண்டாமென்ற சிந்தனையில் தம் வாழ்நாளைக் கழிப்பார். இவரைச் செயினத்தில் முனிவர் என்றும், அற்றுவிகத்தில் அறிவரென்றும் புத்தத்தில் பிக்குகளென்றுஞ் சொல்வர். முனிகளுக்கும், அறிவர்களுக்கும், பிக்குகளுக்கும் சேவை செய்வோர் சால்வகர் என்னும் சாவகராவார். (சாலுதல் = சேருதல், நிறைதல்) எல்லாவித இல்லற நோன்பினரும் சாவக நோன்பிகள் ஆகலாம்.

பின்னால் வேதம், செயினம், புத்தம், சிவம், விண்ணவமென்ற எல்லாஞ் சேர்ந்து அற்றுவிகத்தை கி.பி. 8/9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து அறவே ஒழித்தன. இன்று அற்றுவிகத்திற்கு ஒருசில சங்கப் பாடல்களைத் தவிர  தனிப்பட உருப்படியான நூலுங் கிடைக்கா அளவிற்கு நிலைமை யுள்ளது. அற்றுவிகத்தின் பின் மற்றவை தமக்குள் சண்டைகளைத் தொடர்ந்த போது கி.பி. 600/700 களுக்கருகில் புத்தம் தமிழ் நாட்டில் காணாது போய் இலங்கையில் நிலைகொண்டது. செயினம் 12 ஆம் நூற்றாண்டு வரை தாக்குப்பிடித்து திருவண்ணாமலையைச் சுற்றிலும் தங்கிப்போய் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டது. அற்றுவிகமும், புத்தமும் தமிழகத்தில் இல்லாது போனவுடன் சமணம் என்ற பொதுப்பெயர் செயினரின் விதப்புப் பெயர் ஆகவும் ஆகிப் போனது. மதங்கள் பற்றிய ஒழுங்கான புரிதலுள்ளவர் ”சமணர்” என்ற பொதுச்சொல்லை ஆளாது ”செயினர்” என்ற விதப்புச் சொல்லாலேயே மகாவீரரைப் பின்பற்றுவோரைக் குறிப்பர்.

வேத நெறி சிவத்தோடும், விண்ணவத்தோடும் சமரசம் செய்துகொண்டு வேதநெறிப் பட்ட சிவம் (தேவாரத்தில் இதுதான் சொல்லப்படுகிறது), வேதநெறிப் பட்ட விண்ணவம் (நாலாயிரப்பனுவலில் இதே சொல்லப் படும்) என்ற கலப்பு மதங்களைக் கொண்டுவந்து, புரிசைகளில் நெருப்பிற்கு முகன்மை கொடுக்காது நீருக்கே முகன்மை கொடுத்து 15 ஆம் நூற்றாண்டு வரை இருகூறாய்த் தனித்திருந்தன. அதற்கப்புறம் இவையிரண்டும் தமக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் உறவாடி ஒரு சமதான நிலைக்கு வந்து இன்று சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்று பொது ஆலயங்கள் எழுப்பும் நிலைக்கு வந்திருக்கிறார். இந்து மதம் என்ற கலவைச்சொல் முகலாய காலத்திற்கும் அப்புறம் எழுந்தது. கொஞ்சம் அழுத்திக் கேட்டால் பலரும் “சைவர்”, ”வைணவர்” என்றே தம்மைப் பிரித்துச் சொல்வர். என் செய்வது? காலம் மாறிவிட்டது. என்பதால் இன்று அரசாங்கப் பதிவுகளில் “இந்து மதம்” என்று எழுதிக் கொள்வர். இந்துமதம் ஒரு கலவை மதம்.

அன்புடன்,
இராம.கி.