Sunday, February 24, 2008

தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்

தமிழில் மூன்று விதமான பெயர்களைச் சொல்லுவார்கள். "நான், நீ, அவன், இவள், உது, இவர், அவை" போன்றவை சுட்டுப் பெயர்கள். (அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளில் அமையும்.) "காலம், பந்து, மலர்" போன்றவை, பொருளைக் குறிப்பதால் பொருட் பெயர்கள். இவை தவிர, உடன் உய்யும் மாந்தர்களைக் குறிக்கும் படி, இராமன், இலக்குவன், இனியன், முகிலன் என்றும் பெயரிடுகிறோம்;

மூன்றாவதாய் உள்ளதை, இயற்பெயர் என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். பேச்சு வழக்கில் இந்த இயற்பெயரும் இட்ட பெயர், கூப்பீட்டுப் பெயர் என்று இரண்டாக விரியும். "தமிழ்ச்செல்வன்" என்று பெயரிட்டு, வேறொரு பெயரால் கூப்பிடுவதும் நாட்டில் நடக்கிறது. தவிர ஒரு இயற்பெயரைச் சுருக்கியும் சிலர் அழைப்பதுண்டு, நாராயணன் என்பது நாணா என்று அழைக்கப் படுவதைப் போல. பொதுவாய், தமிழ் மரபில், தன் தந்தையின் பெயரை தன் மகனுக்கும், தாயின் பெயரைத் தன் மகளுக்கும் இடுவதே பழக்கம். இப்படிப் பெயரிடுவதால் தான் "பெயரன்/பெயர்த்தி" என்ற வழக்குகள் நம்மிடையே எழுந்தன. (தாய்வழிப் பாட்டன்/பாட்டியின் பெயர்களை இடுவதும் வழக்கம் தான்.)

பெயர்ச் சொல்லில் உள்ளுறையும் திணை மற்றும் பால் பார்த்தே தமிழ் வாக்கியங்களை முடிப்பதும் அமைகிறது. ஒரு வாக்கியத்தில் பல்வேறு வகைப் பட்ட பெயர்கள் ஒரு கொத்தாய்க் கலந்து வந்தால் அவற்றை விரவி வந்தவை என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். விரவுதல் = to get mized up. விரவுப் பெயர்கள் = வகை கலந்து கிடக்கும் பெயர்கள். "வடுகர், அருவாளர், கருநாடர், சுடுகாடு, பேய், எருமை ஆகிய இவை ஆறும்" என்று சொல்லும் போது திணை விரவிக் கிடக்கும் பெயர்ச்சொற்களைச் சொல்லுகிறோம். அது போல பால் விரவிய பெயர்ச்சொற்களும் ஒரு கொத்தில் அமையலாம். இனி, இன்னொரு விதமான விரவலைப் பார்ப்போமா?

நொபுரு கராசிமா, சூ லிங், விலி பிராண்ட், ழான் கார்ட்டிய, வான் மேர், ங்குரூமா, ஓ சீ மின்

இந்த இயற்பெயர்களை [அவர்களில் ஒரு சிலர் நன்கு பெருவலமானவர்கள் (ப்ரபலமானவர்கள்) என்பதை மறந்துவிட்டுப்] பார்த்தால், முதலில் வருபவர் ஒரு சப்பான்காரர், அடுத்தவர் சீனர், அடுத்தவர் செருமானியர், அதற்கும் அடுத்தவர் பிரஞ்சுக்காரர், அப்புறம் டச்சுக்காரர், அப்புறம் ஆப்பிரிக்கர், முடிவில் வியட்நாமியர் என்று ஓரளவாவது தடுமாறி அடையாளம் காணுவோம், இல்லையா? இனி இன்னொரு வரிசையைப் பார்போம்.

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

இந்த வரிசைப் பெயர்களைப் படித்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இவர்கள் இந்தியர்களாய் இருக்கலாம் என்று தோன்றும். ஆனால் அதற்கு மேல் இந்தத் துணைக் கண்டத்தில் எந்தப் பகுதி என்று சொல்லுவது கடினம். ஒருவேளை, "இந்த வரிசையில் கொடுத்திருப்பவை முதற்பெயர்கள்; மாறாக, குடும்பப் பெயர் வரிசையைக் கூறினால், இந்தியாவின் எந்த மாநிலம்?" என்று ஓரளவு சொல்லக் கூடலாம். (இங்கே சாதிப் பெயர்களை நான் சொல்லவில்லை.) காட்டாக,

அகர்கர், தேசாய், பியாந்த் சிங், பிஸ்வால்

என்ற வரிசையில் மாராட்டியர், குசராத்தி, பஞ்சாபியர், வங்காளி அல்லது ஒரியா என்று ஓரளவாவது சொல்ல முடியும் தான். அதே பொழுது, குடும்பப் பெயர் என்பது இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் அவ்வளவாய் வழக்கம் இல்லை. காட்டாகத் தமிழ்நாடு. இங்கு குடும்பப்பெயர் என்பது ஒரு சில பண்ணைக்காரர்களுக்கு இருந்திருக்கிறதே ஒழிய (காட்டு: மழவராயர், வாண்டையார், வில்லவராயர், மூப்பனார்; இந்தப் பெயர்களெல்லாம் விசயாலனுக்கு அப்புறம் வந்த சோழப்பேரரசு காலத்தில் அரச முறைப் பழக்கத்தில் ஏற்பட்ட பெயர்கள்), 99.9 விழுக்காடு மக்களுக்கு இருந்தது கிடையாது. பெரும்பாலான ஊர்களில், ஒரு பெருங்கூட்டத்தில் தங்களை அடையாளம் சொல்ல ஊர்ப்பெயர், தன்பெயர், தந்தைப்பெயர், தேவைப்பட்டால் தாத்தன் பெயர் சேர்த்துச் சொல்லுவார்கள். இப்படிச் சொல்லுவதற்கு விலாசம் என்று பெயர். "குடும்பப் பெயர் என்றால் வீசை என்ன விலை?" என்று கேட்பதே நம்முடைய வழக்காறு. (வெளிநாட்டில் இருக்கும் தமிழர் அங்கு உள்ள ஆவணங்களில், தங்களுக்குக் குடும்பப்பெயரைச் சுட்ட முடியாமற் சரவற் படுவது வேறொரு பெருங்கதை.)

இந்த இடத்தில், கொஞ்சம் இடைவிலகலாக, இரோப்பாவில் குடும்பப்பெயர் கட்டாயமாக்கப் பட்ட கதையைச் சொல்ல வேண்டும். இரோப்பாவில் பல நாடுகளைப் பிடித்து நெப்போலியன் பிரஞ்சுப் பேரசை உருவாக்குவதற்கு முன்னால், குடிமைச் சட்டம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்றவை ஏற்பட்டதே இல்லை. அதுவரை, நம் சோழப் பேரரசு காலம் போலவே, அரசனின் ஆட்சிக்குத் துணையாய் இருந்த பெரும்பண்ணையார்களுக்கு மட்டுமே குடும்பப் பெயர்கள் இருந்தன. நெப்போலியனின் கணக்கெடுப்பு நடந்த போது, செருமனி, பெல்சியம், நெதர்லந்து, டென்மார்க் போன்ற மேற்கு இரோப்பிய நாடுகளின் குடிமக்கள் குடும்பப்பெயர் சூட்டிக் கொள்ளக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள். புதுவிதமான குடும்பப்பெயர்களும் இந்தக் கணக்கெடுப்பில் அவர்கள் மேல் திணிக்கப் பட்டன. காட்டாக, எனக்குத் தெரிந்த நெதர்லந்துப் பழக்கத்தை உரையாடலாய்ச் சொல்லுகிறேன்.

கணக்கெடுப்பு அதிகாரி: இந்தாப்பா, இங்கே வா, உன் பெயரென்ன?

பீட்டுங்க

எங்கேர்ந்து வர்றே?

மலைப்பக்கமுங்க

இன்னையிலேர்ந்து உன்பேரு. மலையில் வந்த பீட்; உம் பொஞ்சாதி, புள்ளைகள் எல்லாருக்கும் "மலையில் வந்த"ங்குற பின்னொட்டைச் சேர்த்துச் சேர்த்து எழுதோணும், சரியா?

சரிங்க, எசமான்

van den Berg என்ற குடும்பப்பெயர் அப்படித்தான் வந்தது. இதுபோல நகரத்தில் இருந்து வந்தவர் van den Burg என்று ஆனார். ஏரிக்கு அருகில் இருந்து வந்தவர் van Meer ஆனார், ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் இருந்து வந்தவர் van Dam என்று ஆனார். இப்படி இட வழியாக மட்டுமல்லாமல், தொழில் வழியாகவும் குடும்பப்பெயர்களை கணக்கெடுப்பாளர்கள் இட்டார்கள்; ஒரு துன்னகாரர் - தையற்காரர்- Schneider என்று ஆனார்; நான் சொல்லிக் கொண்டே போகலாம். இரோப்பில் நெப்போலியனின் தாக்கம் மிகப் பெரிது. இந்தக் கணக்கெடுப்பால், நம்மூர் குப்பன்/சுப்பனைப் போன்று பீட், மிகேல் என்று முதற்பெயர் மட்டுமே கொண்ட சாத்தர் (=commoner) கூட்டத்திற்கு வலிந்து குடும்பப் பெயர்கள் திணிக்கப் பட்டன. ஒரு பெயர்ப் புரட்சியே அங்கு நடந்தது.

[சாத்தர் என்ற சொல்லையும், சாதாரணன் என்ற சொல்லின் தமிழ்வேரையும் இங்கு அறிந்து கொள்ளுவது நல்லது. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் ஆசீவக வாதச் சருக்கம் 683வது பாடலில், நீலகேசி ஓர் ஆசீவகத் துறவியிடம்

"ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லலன் ஆய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய
நாத்தனை ஆட்டியோர்; நன்மை கண்டாலும் நினக்குரைத்தும்,
ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதும் இலம் பிறவோ?"

என்று சொல்லுவாள்: "தானறிந்ததைப் பிறருக்குச் சொல்லாமல் உன் ஆத்தன்(=தலைவன்) மோனம் கொள்வான் எனில், இதோ இங்கிருக்கும் சாத்தனும் (=சாதாரணனும்) யானும் மிகுந்த புகழுடையவர்கள்; ஏனென்றால், உயிரினங்களுக்கு நன்மை தருபவற்றைக் கூறியும், எம்மால் இயன்ற அளவு உணவு முதலியவற்றை ஈந்தும், இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கம் தருமாறு ஆற்றுகின்றோம் அல்லவா?"

இந்தப் பாடல் மட்டும் கிடைத்திருக்கா விட்டால் சாத்தன் = commoner என்று அறுதியாகச் சொல்ல முடியாது. சார்ந்தது சாத்து (=கூட்டம்); கூட்டத்தைச் சார்ந்தவன் சாத்தன் (நேற்று ஒரு சந்திப்பில், பேரா. இல. மறைமலையும் நான் கொண்ட இந்தப் பொருளைச் சரியென்றே உறுதியளித்தார்.) பண்டன் என்பது பண்டாரன் ஆவது போலச் சாத்தன் என்பது சாத்தாரன் ஆவது தமிழில் உள்ள பழக்கம் தான். பின் சாத்தாரன் வெளிமொழியார் வழக்கில், இன்னும் நீண்டு சாத்தாரனன்>சாதாரணன் ஆகும். எப்படி அய்யன் (=பெரியவன்) பொருள் கொண்ட அந்தன் எனும் சொல் அந்தனன் என்று நீண்டு பின் அந்தணன் என்று திரிந்ததோ, அது போல, இரண்டாவது அன் சேருவது இயல்மொழி அல்லாதவரின் கொச்சைப் பேச்சு ஆகும். இதே வகையில் சாத்தாரன்>சாத்தாரனன்>சாதாரனன்>சாதாரணன் என்று ஆவது தமிழ்-வடமொழி ஊடாட்டில் நடக்கக் கூடியதே. (முடிவில் சாதாரணனின் தமிழ்வேரை மறந்து போய் அதை வடமொழியென்று வழக்கம் போல் சாதிப்போர் மிகப் பலர்.)]

இயற்பெயர் பற்றியல்லவா பேசிக் கொண்டிருந்தோம்?

இரோப்பியர் என்பவர் இன்றைக்கு ஒரே விதமான நாணயம் வைத்திருக்கிறார்கள், மேற்கு இரோப்பாவில் வசிக்கும் எல்லோரும் எங்கும் நுழைமதி (visa) தேவைப்படாமல் மேற்கு இரோப்பா முழுதும் போக முடிகிறது. மேற்கு இரோப்பாவில் நுழையும் நம்மைப் போன்றோர் "செங்கன்" என்ற ஒரே நுழைமதி எடுத்தால் மேற்கு இரோப்பா முழுக்கப் போக முடிகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் சுங்கமும் (customs duty)உல்கும் (excise duty) கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கின்றன. இந்த நாட்டுப் பொருளாதாரங்கள் தங்களுக்குள் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுப் பாராளுமன்றமும் இரோப்பியப் பாராளுமன்றத்தைப் பொருட்படுத்தாமல், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இன்னும் மேற்கொண்டு உறவுகள் அவர்களிடையே இறுகிக் கொண்டு வருகின்றன. "இரோப்பிய ஒன்றிய நாடுகள் (United States of Europe)" என்ற மீநிலை ஒன்றியம் (supra union) அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதே பொழுது, இந்த நாடுகளுக்கான தனிநிலைகளும் அழிந்து விடவில்லை. இன்னமும் செருமன்காரர், பிரெஞ்சுக்கார, டச்சுக் காரர்களின் பெயர்கள் ஏற்கனவே இருந்த படி, அவரவர் மரபில் தான் இருக்கின்றன. இரோப் என்று பொது அடையாளம் பெறுவதற்காகத் அவர்கள் தங்களின் தனி அடையாளத்தைத் துறக்கவில்லை.

இப்பொழுது இந்தியாவுக்கு வாருங்கள். விடுதலை பெற்ற போது இந்த நாடு இந்திய ஒன்றியம் என்ற பெயரைத்தான் எடுத்துக் கொண்டது. பின்னால் இந்திரா காந்தி காலத்தில் தான் இந்தியக் குடியரசு என்ற ஒற்றைமுகப் பெயரில் தன்னை வலிந்து மாற்றிக் கொண்டது. இருந்தாலும், ஒரு இயல்பான போக்கில், இந்த நாடு ஒரு பல்தேசியக் குடியரசாகத் தான் இன்றைக்கும் இருக்கிறது. ஒரு பெருங்கூட்டம் பல்தேசியப் பாங்கை முற்றிலும் ஒழித்து ஒற்றைப் பரிமானத்தைத் தந்து, இந்து-இந்தி-இந்துத்துவா என்று கொண்டுவர முயன்றாலும், இந்தியச் சாத்தர்கள் தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து பொதுச் சோதியில் கரைந்து கொள்ள இன்னும் அணியமாகவில்லை. அப்படி இருக்கும் போது, தமிழரின் முகவரியான தமிழ் அடையாளத்தை ஏன் நாம் துறக்க முற்படுகிறோம்?

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

என்ற பெயர்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு ஏன் சூட்டப்படுகின்றன என்பது சற்றும் விளங்கவில்லை. நல்ல தமிழ்ப் பெயர்களை தம் பிள்ளைகளுக்கு இடாமல், யாரோ ஒரு சோதியன் சொல்லும் தூண்டலுக்கு ஆட்பட்டு, "இந்த எழுத்தில் தொடங்கும் பெயர், இந்த முடிப்பில் இருக்கும் பெயர்" என்று ஈர்ப்பில், தமிழர்கள் வட இந்திய, வடமொழிப் பெயர்களையே பெரிதும் சூட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்களே, அது ஏன்? இது நம் அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் போக்கு அல்லவா? இதற்கு நாம் இணங்கலாமோ? எங்கோ ஒரு கடலில் கரையும் பெருங்காயம் போல் நாம் ஆவதற்கே இது வழிவகுக்கும் அல்லவா? நாலு இந்தியர் கூடும் இடத்தில் தமிழன் என்னும் அடையாளம் தென்பட வேண்டாம் என்னுமாப் போல, வடபுலப் பெயர்களைச் சூட்டுவது ஒரு பெருமிதமான பழக்கம் ஆகுமோ?தமிழர் என்று நம்மைச் சொல்லிக் கொள்ளுவதில் நாம் ஏன் வெட்கம் அடைய வேண்டும்?

இந்தத் தமிழ்ப்பெயர் சூட்டலில், சிலர் சமய நெறிகளால் தயங்கலாம். என்னைக் கேட்டால், இங்கே சமயநெறி குறுக்கிடத் தேவையில்லை. சமயமும், தமிழ்மையும் ஒன்றிற்கொன்று எதிரானவை அல்ல. சிவ, விண்ணவ நெறிகளில் இருப்பவருக்கு எண்ணற்ற தமிழ்ப்பெயர்கள் அவர் தொழும் தெய்வத்தைக் குறிப்பதாகவும், அன்றி பொதுத் தமிழ்ப்பெயர்களுமாய் இருக்கின்றன. கிறித்துவ, இசுலாமிய மற்றும் பிற சமய நெறியாளர்கள் ஒரு சமயப் பெயரையும், ஒரு தமிழ்ப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாமே? தவறென்ன? காட்டாக, Joseph Raj என்பவர், வளன் அரசு என்று வைத்துக் கொள்ளாவிட்டாலும், குறைந்தது, ஜோசப் அரசு என்றாவது பெயரிட்டுக் கொள்ளலாமே? இதே போல இசுலாம் மற்றும் பிற சமய நெறியாளரும் விதப்பான பெயர்களை வைத்துக் கொள்ளலாமே? இதை அவர்கள் சமய நெறி தடுக்குமா, என்ன?

என் வேண்டுகோள்:

தமிழரே!, உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Friday, February 22, 2008

சிலம்பில் வரலாறு - 2

2. சிலம்பின் பதிகம்

பதிகம் என்ற சொல்லிற்குத் தமிழிற் பல பொருண்மைகள் உண்டு என்றாலும், பலரும் இரு பொருண்மைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

ஒன்று: தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்றவற்றில் பத்துப் பத்துப் பாடற்தொகுப்புகளாய் அமையும் தொகுதியைக் குறிப்பது. (பல்து>பத்து>பத்திகம்>பதிகம் என்று இங்கு புரிந்து கொள்ள வேண்டும். சிலபோது பத்திற்கும் மேலே போய், இந்தப் பதிகங்களில் இன்னார் பாடினார் என்று சொல்லுமாப் போல ஒன்றிரண்டு பாடல்கள் நீட்சி காட்டுவதுண்டு.)

இன்னொன்று: சில பழந்தமிழ் இலக்கியங்களில், முன்னுரை போல் வந்து, நூலிற் சொல்லாத சில செய்திகளைச் சொல்லுவதாகும். (பற்றுதல்>பற்றிகம்>பத்திகம்>பதிகம் என்று இந்தச் சொல்வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.)

இரண்டாம் வகைப் பதிகமானது, எல்லா இலக்கியங்களுக்கும் அமையாமல், சிலப்பதிகாரத்தைப் போல் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே அமைந்துள்ளது. இத்தகைய பதிகங்கள் பொதுவாக நூற் படைப்பாளராமல் எழுதப் படாமல், இன்னொருவரால் படைப்புக் காலத்திலேயோ, அல்லது அதற்குப் பின் வேறொரு எடுவிப்பிலேயோ (edition), எழுதப்பட்டுச் சேர்க்கப் பட்டிருக்கலாம். சிலம்பின் பதிகமும் "இது போலத் தானோ?" என்று தோற்றுகிறது; ஆழ்ந்த வாசிப்பில் பார்த்தால், சிலம்புப் பதிகம் இளங்கோவடிகளாலோ, அன்றி அவருடன் இருந்த சாத்தனாராலோ, எழுதப்பட்டதாகக் கொள்ள முடியவில்லை. இத்தகைய முடிவிற்கு நாம் வருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. இளங்கோவடிகள், சாத்தனார் ஆகிய இருவருமே தன்மை நிலையில் அல்லாது, படர்க்கையிலேயே பதிகத்தினுள் குறிக்கப் படுகின்றனர். தவிர, பதிகத்தின் தொடக்க வாசகம் நம்மைப் பெரிதும் வியக்க வைக்கிறது. உலக வாழ்வைத் தவிர்த்துத் துறவியான ஒருவர், "குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்" என்று அரசப் பீடும், பெருமையும், பெயரும் சேர்த்து தன்னைத் தானே அழைத்துக் கொள்வாரா என்ற அய்யமும் எழுகிறது.

2. பதிகத்தில், "கண்ணகி கட்புலம் காண விட்புலம் போன" செய்தி, இளங்கோவடிகளிடத்து குன்றக் குரவர் நேரடியாய்ச் சொல்வதாகவும், "இறும்பூது போலும் அஃது அறிந்து அருள் நீ" எனக் குன்றக் குரவர் இளங்கோவடிகளிடம் வேண்டுவதாகவும் சொல்லப் படுகிறது. இதற்கு மாறாய், வஞ்சிக் காண்டத்திலோ,

"கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தபித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்"

என்ற செய்தி சேர மன்னனிடம் தெரிவிக்கப் படுகிறது. (அந்த இடத்தில் இளங்கோவும் இருந்தார் என்பதும் உண்மைதான்.) ஒரே செய்தி நூலின் இரண்டு இடங்களில், இரண்டு விதங்களில் வெளிப்படுவது நமக்கு வியப்பளிக்கிறது. அதைச் சற்று ஓர்ந்து பார்ப்போம்.

ஓர் அரசனின் திருவோலக்கத்தில் (தர்பாரில்) அரசனைத் தவிர வேறொருவரை முன்னிலைப் படுத்திப் பேசுவது பழங்கால நிலவுடைமைக் குமுகாயத்தில் வழக்கமில்லை. அரசனிடம் குன்றக் குரவர் செய்தி தெரிவித்த போது, அடிகள் அருகிருந்து கேட்டிருக்கலாம்; ஆனால் வஞ்சிக் காண்டத்திற்கு மாறாய், "அடிகளிடம் குன்றக் குரவர் சொன்னார்கள்" என்று அடிகளை முன்னிலைப் படுத்திப் பதிகம் சொல்லுவது முரணாய்க் காட்சியளிக்கிறது.

அதே போல, வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் அரசனின் முன்னிலையில் சாத்தனார் உரைக்கும் நிகழ்வுக்கு மாறாய், "யானறிகுவன் அது பட்டது" என்று இளங்கோவடிகளை நோக்கிச் சாத்தனார் உரைப்பதாகப் பதிகம் சொல்லுகிறது.

பதிகம் சொல்லும் செய்தி விவரிப்பில், அரசனும் இல்லை, அவன் பரிவாரங்களுமில்லை. ஏதோ அடிகளை மட்டுமே குன்றக் குரவர் கண்டு அவருக்கு மட்டுமே கண்ணகி வானம் புகுந்த செய்தியைக் கூறுவதாய் அமைகிறது.

குறிப்பிட்ட கட்டத்தில் அரசனில்லாமல் வஞ்சிக் காண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா? இளங்கோ என்ற துறவியா, வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை நடத்துபவர்? இது ஒரு முரண் அல்லவா? இப்படியான நிகழ்வு முரண்களை, முற்றிலும் விவரம் அறிந்த இளங்கோ அடிகள் தம் பதிகத்தில் எழுதியிருக்க இயலுமோ? (இவை போன்ற சிந்தனைகளால் தான், சிலம்பின் பதிகம் பெரும்பாலும் வேறு யாராலோ எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.)

3. அடுத்து, கண்ணகி மதுரையை எரித்த கதையைச் சொல்லி அதை "வினை விளை காலம்" என்று சாத்தனார் குறிப்புக் காட்ட, "யாது அவர் வினை விளை?" என்று அடிகள் கேட்டதாகவும், அதற்கு மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு முற்பிறப்புச் செய்திகளைச் சொன்னபோது வெள்ளியம்பலத்து நள்ளிருளில் சாத்தனார் தாம் கிடந்த போது கேட்டதாகவும் பதிகத்தின் வழி சொல்லப் படுகிறது. (வினை விளை என்பது ஒரு மெய்யியற் குறிப்பு. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற கருத்து ஒரு சில நெறியினருக்கு ஒத்துவரும்; மற்றவர்க்கு ஒத்து வராது.)

அதே பொழுது, வெள்ளியம்பலத்து நள்ளிருளில் கேட்டதாய்ச் சொல்லும் இந்த விவரிப்பு கட்டுரைக் காதையில் இது போன்று அமையாது, கதை மாந்தர் வழியாகவே நேராக நீட்டி விவரித்துச் சொல்லப் படுகிறது; சாத்தனாரின் விவரிப்பு கட்டுரைக் காதையில் இல்லை.

4. தவிர, கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றிய நேரத்திலும் கட்டுரை சொல்லிய நேரத்திலும் கூடப் பதிகமும், நூலின் உள்ளே வரும் காதைகளும், வேறுபடுகின்றன. (மதுராபதித் தெய்வத்தின் விவரிப்பு இற்றைக்கால அங்கயற் கண்ணியம்மையின் விவரிப்புப் போலவே ஒரு பார்வையில் தோற்றுகிறது. அது நமக்கு வியப்பாகவும் இருக்கிறது. மதுரைக்கும் கயற்கண்ணிக்கும் உள்ள தொடர்பு மிகுந்த நாட்பட்டது போலும்.)

நூலின் உள்ளே, அழற்படு காதையின் முடிவில் தெளிவாகச் சொல்லப் படுவது போல், மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் வந்து தோன்றிக் கட்டுரை உரைக்கும் நேரம், அந்தி விழவு தொடங்கும் நேரம் ("மாலை அயர மனைவிளக்கு உறுத்தும் நேரம்") ஆகும். [கோயில்களில் இன்றைக்கும் அந்திக் கால பூசை தொடங்கும் நேரம் - அதாவது மாலை தொடங்கும் நேரம் 1800 மணியளவு ஆகும்.] கோவலன் இறப்பும், அதைத்தொடர்ந்து பாண்டியன், அவன் பெண்டு ஆகியோர் இறப்பும் முடிந்து, ஊரும், மக்களும் கொந்தளித்து அல்லோகலப்படும் அந்தி நேரத்தில் மதுராபதியின் கட்டுரை கண்ணகிக்குச் சொல்லப் படுகிறது. தவிர அழல் தொடங்கியது மாலை நேரம் தான்; யாமம் அல்ல.

பதிகத்திலோ, மதுராபதித் தெய்வத்தின் கட்டுரை இரவின் நடு யாமத்தில், நள்ளிருளில், சொல்லப்படுகிறது. ஆக, அழற்படு காதைக்கும், பதிகத்திற்கும் இடையே மதுராபதி தோன்றிய காலத்தைக் குறிப்பதில் ஒரு 15 நாழிகை (= 6 மணி நேர) முரண் ஏற்படுகிறது. இப்படி ஒரு காலமுரணை ஒரே ஆசிரியர் செய்வாரா? இருவேறு ஆசிரியராய் இருந்தால் தான், புரிதற் பிழையால் இப்படி ஒரு கால முரண் ஏற்படலாம்.

5. கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்புக் கதையை மதுராபுரித் தெய்வம் விவரித்ததாய்ச் சாத்தனார் சொல்ல, அதைக் கேட்ட அளவிலேயே,

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"

என்று காப்பியத்தின் குறிக்கோளை சட்டென்று அறிவுத் தெளிவோடு இளங்கோவடிகள் சொல்லி, "நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பதிகம் சொல்லுவது நமக்கு ஓர் நாடகத் தனமான கூற்றாகவே தோற்றுகிறது. "அப்படி ஓர் சிந்தனைத் தெளிவு, கதையை முதன் முதலாய்க் கேட்ட அளவிலேயே ஒரு படைப்பாளனுக்குச் சட்டென்று ஏற்பட்டுவிடுமா? கொஞ்சம் அலசி "அந்தக் கதை என்ன குறிக்கோளைக் குறிக்கிறது, எதை எடுத்துச் சொல்லுகிறது, ஊராருக்கு என்ன உணர்த்த வேண்டும் என்றெல்லாம் ஒருவர் நாட்பட ஓர்ந்து பார்க்க மாட்டாரா?" என்ற கேள்விகளும் நமக்குள் எழுகின்றன.

இத்தனைக்கும், குன்றக் குரவோர் வந்து கண்ணகி வானேறிய செய்தியைச் சொல்லும் போது, "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல்" என்ற குறிக்கோளைப் பின்னால் நிலைநிறுத்தும் கல்கோள் (கால்கோள் என்ற வாசிப்பு சரியில்லை என்றே புறப்பொருள் வெண்பாமாலை வழியாக உணருகிறோம். அது கால் கோளல்ல; கல் கோள்; கல்லைக் கொள்ளும் செயல்; இந்த வாசிப்புக் கோளாறை இன்னொரு முறை பார்க்கலாம்.), நீர்ப்படை, நடுகல், வாழ்த்து ஆகிய நிகழ்வுகளே கதையில் நடந்திருக்கவில்லை. தவிர, பதிகத்தின் படிதான், சேரன் செங்குட்டுவனும் மற்றோரும் அந்தக் காட்சியிலேயே இல்லையே? "உரைசால் பத்தினியை அரசனும் உயர்ந்தோரும் எப்படி ஏத்தப் போகிறார்கள்?" என்று தெரியாத நிலையில், வஞ்சிக் காண்டக் காதைகளின் தலைப்புகள் இங்கே பதிகத்தில் எப்படி விவரிக்கப் படுகின்றன? படிக்கும் நமக்கு வியப்பாக இருக்கிறது.

6. "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக" என்றாற்கு அவர்
........................
.......................
.......................

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள"

என்ற வரிகளில் "உரைசால் அடிகள் அருள" என்று வந்த பின், "அவர்" என்னும் சொல் யாரைக் குறிக்கிறது? புரியவில்லை. தவிர, அரசன் இருக்கும் அவையில், இது போன்று சொல்ல வேறு யாரால் முடியும்? "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது" என்று அரசன் கூறினால் அதில் ஓர் அமைதி இருக்கிறது; மற்றவர் அதைக் கூற முடியுமோ? இங்கு யார் அதிகாரத்தில் முன்னிலைப் படுத்தப் படுகிறார்கள்? அரசன் தான் இந்தக் கதையை எழுதச் சொன்னதாய் பதிகத்தின் வழி புரிந்து கொண்டால், அப்படி ஒரு கூற்று, வஞ்சிக் காண்டத்துள் எங்கும் வரவில்லையே?

7. .......................................... மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது,
பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்

என்ற பதிகத்தின் முடிப்பு வரிகள் "பதிகத்தை வேறு யாரோ எழுதியிருக்க வேண்டும்" என்று தெளிவாக உணர்த்துகின்றன. இளங்கோ எழுதியிருந்தால், "அடிகள் அருள, சாத்தன் கேட்டனன்" என்று எழுத மாட்டார். "யான் சொல்ல, சாத்தன் கேட்டனன்" என்பதோடு அமைந்திருப்பார். சாத்தன் எழுதியிருந்தால், "அடிகள் சொல்ல, யான் கேட்டேன்" என்று எழுதியிருப்பார். எனவே, உறுதியாகப் பதிகம் என்பது, இளங்கோவாலும், சாத்தனாராலும் எழுதப் படவில்லை. இது யாரோ ஒரு மூன்றாம் மாந்தர் எழுதியது. அதோடு இல்லாமல், வஞ்சிக் காண்டம் வரை கதையை முற்றிலும் படித்த ஒருவர், அதன் விவரங்களைச் சுருக்கி, காதைத் தலைப்புகளையும் தந்து, "கதைக்களன் எப்படித் தோன்றியது?" என்று விளக்க முற்பட்டு, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை முன்பின்னாக எடுத்துக் காட்டி, அவற்றில் தன் சொந்தக் கருத்தையும் பொருத்தி (காட்டாக வினை விளை பற்றிய மெய்யியல்), முரண்பட்டு நிற்பதும் வெள்ளிடைமலையாய்த் தெரிகிறது.

இந்தச் சிலம்புப் பதிகம் என்பது நூல் எழுதப் பட்டு மிகுந்த நாட்கள் கழித்தே எழுந்திருக்க முடியும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதே பொழுது அரும்பத உரைக்கும் முன்னால் எழுந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

சிலம்பில் வரலாறு - 1

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் ஆகும். "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர்கள் வையாபுரியாரில் இருந்து, இந்தக் கால இடது சாரிகள் வரை உண்டு. மதிப்பிற்குரிய பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் சிலம்பின் காலத்தைப் பெரிதும் பின் தள்ளுகிறார்கள். இதற்கு மாறாக, இலங்கைக் கயவாகுவுக்குச் சமகாலம் என்ற கருதுகோளில் கி.பி. 150 க்கு அருகில் செங்குட்டுவனின் காலத்தை வைக்கும் வழக்காறும் நம்மிடையே உண்டு.)

செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் என்பவர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?" - இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயல்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.)

நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது. [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]

[இந்தத் தொடர் கொஞ்சம் விட்டு விட்டு வரக் கூடும். தொடர்ச்சியாய் வராமைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆய்வு பற்றிய ஒரு சுருக்கத்தை, 3 மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது, தெற்குக் கரோலினா மாநிலத்தின் தலைநகரான சார்லசுடனில் ஒரு நாள் மாலையில் நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்படுகிறேன்.]

1. வடபுலத்து வரலாற்றுக் களன்.

கேள்விகளை அலசுவதற்கு முன்னால், பழங்காலத்து, கிட்டத்தட்ட கி.மு. 200/100 அளவில் வடபுலத்து வரலாற்றுக் களனைப் புரிந்து கொள்ளுவது நல்லது.

சங்க காலம் தொடங்கியது, மோரியருக்கு முன்னால் மகதத்தில் ஆட்சி செய்த நந்தரின் சம காலமாகும். (இனிமேலும் கி.மு.300 ல் இருந்து கி.பி.300 என்று சங்க காலத்தைச் சுருக்க முடியாது. அதை கி.மு. 600/500 க்காவது நீள வைக்கும் சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன.) சங்கப் பாடல்கள் ஒருசிலவற்றால் (மாமூலனார் பாடல் அகம் 251: 5, மாமூலனார் பாடல் அகம் 265: 4-6), தமிழ் மன்னரோடு நந்தர்கள் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் என்று அறிகிறோம்.

இந்த உறவு நந்தர்களுக்குப் பிறகு வந்த வம்ப மோரியரோடு தொடராமல், பகை ஏற்பட்டது. அசோகனின் தந்தையாகிய பிந்து சார மோரியன் தமிழர் எல்லை வரைக்கும் படையெடுத்து வந்திருப்பதும், நேரடி இல்லாத முறையில், சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (மாமூலனர் - அகம் 251: 12, அகம் 281:8; கள்ளில் ஆத்திரையனார் புறம் 175: 6-7, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகம் 69:10). அந்தப் படையெடுப்பு எல்லையிலேயே தடுக்கப் பட்டதால், அந்தத் தடுப்பு வலுவாக இருந்ததால், பின்னால் அசோகன், தெற்கே, அதற்கு மேல் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் அதிகரின் நாடுகளை எல்லையில் இருந்ததாய் அசோகன் குறித்திருக்கிறான். [மகதப் பேரரசு வென்றெடுத்த முந்நாளைய மக்களாட்சி (=சனபதம்), முடியாட்சி நாடுகள் பற்றியும் ஒருசில நுணவக் (minor) குறிப்புகளும் தமிழிலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.]

மோரியரை வம்பர் என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். வம்பர் என்பவர் வம்புடையவர் அல்ல; பழைய பொருளின் படி, அவர் புதியவர்; வம்பர் என்று சொன்னதாலேயே, சங்க காலம் என்பது மோரியருக்கு அருகில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும். "இப்பத் தான் புதுசா வந்தவங்க" என்று நாம் எப்போது சொல்லுவோம்? நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே? அதோடு, நாமும் புதியவரும் குறிப்பிட்ட சம காலத்தில் இருந்தோம் என்பதால் தானே?

இந்த மோரியர் காலத்துச் சான்றுகளை மறுதலித்து, தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளியவர்களே, ரொமிலா தாப்பர் முதற்கொண்டு, இந்திய, மேலை ஆய்வாளர்களில் மிகுதி. நாவலந் தீவின் தெற்குக் கோடியில் இருக்கும் தமிழர்கள் மோரியருக்கும் முந்து பட்டவர்கள் என்பதை ஏற்பதிலும், சொல்லுவதிலும், ஏனோ பல வரலாற்றாளருக்கும் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டுவிடுகிறது. [இல்லாவிட்டால் குறைந்தது கி.மு.500 அளவில் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று அண்மையிற் கிடைத்த பின்னும், "அசோகன் பிரம்மி, அதிலிருந்து வந்த தமிழ் பிரம்மி" என்று சல்லியடித்துக் கொண்டிருப்பார்களா, என்ன?]

இது தவிர, ஆசீவகம் பற்றிய தொடர்பும் சங்க காலத் தொடக்கத்தை நந்தருக்கு அருகில் கொண்டு போகும். புத்த நெறி, செயின நெறிக்குச் சம காலத்தில் தோன்றி, பின் அந்த இரு நெறிகளிலும், (ஏன், நம்மூர் சிவ, விண்ணவ நெறிகளிலும் கூடச்) செரித்துக் கொள்ளப் பட்ட ஆசீவக நெறியின் தோற்றம் கி.மு 600க்கும் பிறகு என்றே இந்திய வரலாற்றில் புலப்படுகிறது. கிட்டத் தட்ட மற்ற நெறிகளுக்குள் ஆசீவகம் செரித்துக் கொள்ளப்பட்ட காலம். கி.பி. 400 ஆகும். ஆசீவக நெறி பற்றிய பரபற்றி(பரபக்தி)யாய் இல்லாமல், நேரடிப் பங்களிப்பான பாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சங்க இலக்கியத்தில், புறநானூற்றில் மட்டுமே, கிடைக்கின்றன. (பெரிதும் பேர்பெற்ற யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் ஓர் ஆசீவகப் பாடலே. சங்க இலக்கியத்தில் கிடக்கும் ஆசீவகப் பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் ஒரு கட்டுரை வரைய வேண்டும்.) ஆசீவக நெறி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கப் பெருத்த வாய்ப்பு உண்டு என்றே ஆசீவகம் - தமிழர் தொடர்பு பற்றி மிக ஆழமாகப் பேசிய பேரா. க.நெடுஞ்செழியனும், வெங்காலூர் குணாவும் தங்கள் நூல்களில் சொல்லுகிறார்கள்.

அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டால், சங்க இலக்கியம் என்பது ஆசீவக நெறியின் உச்ச காலத்திற்கு (நந்தர்-மோரியர் காலம்) சம காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இன்றைக்கோ ஆசீவக நெறி என்று ஒன்று தமிழ்கத்தில் இருந்தது என்றே அறியாமல், அதைச் செயின நெறிக்குள்ளேயே பொருத்திச் சொல்லுவதும், அதன் கருத்துக்களைச் செரித்துக் கொண்ட சிவ, விண்ணவ நெறிகளுக்குள் தேடுவதுமாய், மாறிப் போனது. மெய்யியல் உலகில் நம்முடைய பெருமை நமக்கே தெரியவில்லை. :-) ஊழ் பற்றி இன்றும் நிலவும் இந்திய அடிப்படைக் கருத்து ஆசீவக நெறிக்குச் சொந்தமானதே!)

மூன்றாவதான செய்தி, கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேந்த கலிங்க அரசன் காரவேலன் என்பவன் தன்னுடைய அத்திகும்பாக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதாகும். பதினேழு வரிகளைக் கொண்ட காரவேலன் கல்வெட்டில், 11-13 வது வரிகள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் தமிழ் மூவேந்தர்கள் யாராலும் உடைக்க முடியாத ஒரு கூட்டு முன்னணி வைத்திருந்ததையும், அந்தக் கூட்டணியை அந்துவன் என்ற அரசன் முறியடித்துக் கொண்டு கொங்கு நாட்டைக் கைப்பற்றி, கழுதை கொண்டு மாற்றார் நிலத்தை உழுது அவமதித்ததையும், பின்னால் அந்த நாட்டை ஆவிக் குடியினரிடம் திருப்பிக் கொடுக்காமல், தானே வைத்துக் கொண்டு அங்கு வணிக நகரமாக pithumda (egg city; கருவூர்) என்பதை ஏற்படுத்தியதையும், பேசுகின்றன. அந்த நாட்டைப் பின்னால் காரவேலனும் பிடித்துச் சிறிது காலம் ஆட்சிசெய்ததையும் அந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மாற்றார் யாரும் 1300 ஆண்டுகள் நுழையமுடியாத தமிழர் எல்லைக்குள் தான் நுழைய முடிந்ததை ஒரு பெரிய சாதனையாகக் கலிங்க அரசன் கருதியதாலேயே, அதைப் பதிவு செய்திருக்கிறான். [இந்த அந்துவன் என்பவன் இரும்பொறை என்னும் சேரக் கிளையின் முதல் அரசனான அந்துவன் சேரல் இரும்பொறையாக இருக்க முடியும். இரும்பொறை மரபினர் இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.]

கலிங்க அரசன் குறித்திருந்த 1300 என்ற சொற்தொகுதியைப் பார்த்து "அப்படி ஒரு நீண்ட காலத்திற்கு ஒரு கூட்டணி இருந்திருக்க முடியாது" என்ற தற்சார்பு அவநம்பிக்கையில் அதை 113 என்று திருத்திப் படித்ததாக, காரவேலனின் கல்வெட்டைப் படியெடுத்துப் பின் படித்து விவரித்த காசி இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வடபுலத்து ஆய்வாளர்கள் ஆன கே.பி. ஜெய்ஸ்வாலும், பேரா. ஆர்.டி. பானர்ஜியும் கூறியிருக்கிறார்கள். இவர்களின் திருத்திய தற்சார்பு வாசிப்பிற்குப் பின்னால், 1300 ஆண்டுகள் என்ற கல்வெட்டில் இருந்த முதற் கூற்றை வரலாற்று ஆய்வாளர் மிகப் பலரும் மறந்து போனார்கள்; ஜெய்ஸ்வாலையும் பானர்ஜியையும் அப்படியே கிடுக்கின்றிப் (without criticism) பின்பற்றி கிளிப்பிள்ளை போல 113 ஆண்டுகள் என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். உண்மையில் ஓர்ந்து பார்த்தால், காரவேலனுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மூவேந்தரின் ஆட்சி இருந்திருக்கப் பெருத்த வாய்ப்புண்டு.

இனி மோரியருக்குப் பின் உள்ள நிலையை அவதானிப்போம். அசோகரின் பேரனுக்குப் பின்னால், மகதப்பேரரசு சுருங்கி, சுங்கர்களின் ஆட்சிக்கு வந்து, வேத நெறி மீண்டும் தழைத்து, பிறகு அவர்களின் ஆட்சியும் கவிழ்ந்து, கன்வர்களின் ஆட்சி ஏற்பட்டது. கன்வர் ஆட்சியில் மகதம் என்பது அளவில் மிகச் சுருங்கி பாடலிக்கு அருகில் குறுகிய விரிவு கொண்டதாய் ஆகிப் போனது. இருந்தாலும் அவர்கள் அரசு, இமைய எல்லைக்கு அடியில் இருந்து, இமயத்தைக் காத்துக் கொண்டு தான் இருந்தது. அதே பொழுது, மகத அரசின் மாதண்ட நாயகர்கள் பலர் நடுவண் அரசின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து, தனித் தனியே தம் அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

அப்படி ஒரு மாதண்ட நாயகர் தான் இன்றைய மாராட்டியத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் இருக்கும் paithan (தமிழில் படித்தானம்) என்ற ஊரைத் தலைநகராய்க் கொண்ட சாதவா கன்னர் ஆவர். [சாதவா கன்னர், எல்லோரும் நினைப்பது போல ஆந்திரத்தில் தோன்றியவர் இல்லை. அந்தக் காலத்தில் ஆந்திர நாடு என்பது கிடையாது. அவர் மாராட்டியத்தில் தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாய் தம் அரசை விரித்து இன்றைக்கு 1800/2000 ஆண்டுகள் அளவில் தான் ஆந்திரத்திற்குள் ஊடுருவினர்.] கன்வரின் ஆட்சியைக் கவிழ்த்து மகத அரசையே தங்கள் கைக்குள் சாதவா கன்னர் கொண்டு வந்த நிலை கி.பி. 100 அளவிலேயே ஏற்பட்டது.

அதே காலத்தில், கலிங்கம் என்ற நாடு பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. கலிங்க நாடு கடற்கரையை ஒட்டியது. அதன் மேற்கு எல்லைகள் காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) முல்லையும் பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது. கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கி, கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. இந்த இடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகம் நடந்தது.

இந்தப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்த்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போகும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும். அப்படி அமைந்த பாதைகளில், உத்தர, தக்கணப் பாதைகள் பெரிதும் முகன்மையானவை.

வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, நான்கு ஆறுகளைக் கடந்து (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ்) கங்கைக் கரை கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலி வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேருவதை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.

இதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (prathisthana>paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லை. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசி வழி, கோசாம்பியை அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும்.

எந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த மூன்று பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது.

சாதவா கன்னரைத் தான் சிலம்பு ஆசிரியர் நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடுகிறார். சிலம்பில் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தி கொஞ்சம் விதப்பானது. சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசரும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்ட முன்வந்து நிற்பது சாதவா கன்னர் என்னும் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தியே.

வடமொழியில் சாதவாகன என்று எழுதும் போது நம்மை அறியாமல் சாத வாகன என்று பிரித்தே படிக்கிறோம். ஆனால், தமிழ் வழியே பார்த்தால், சாதவா கன்ன என்று படிப்பதே சரியாக இருக்கும். சதம் என்பது நூறு என்ற எண்ணைக் குறிக்கும் வடமொழிச் சொல் (அதே பொழுது, அந்தச் சொல்லின் வேரைத் தமிழிலேயே இனம் காணமுடியும். சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடு கொண்ட சொற்கள். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா? அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற சொல்லும் பொடி என்ற பொருளில் எழுந்தது தான். அதை வேறு ஒரு இடத்தில் பார்க்கலாம்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக உட்கருத்து தமிழே. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.

கன்னர் என்பது கர்ணி என்று திரிகிறது. இங்கே காது, கன்னக்குழி போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்ன அரசன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் என விதப்பாகச் சொல்லப்படுகிறான். பாகத மொழியில் கிருஷ்ண என்பது கன்ன என்றே வரும். கன்னன் என்பது சோழன், பாண்டியன், சேரன் என்பது போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும்.

சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல் குலம்>சாரலன்>சேரலன் என்று ஆனது போல, சாம்பல் = பாண்டில் பூசிய இனக்குழு பாண்டிய குலம்>பாண்டியன் என்று ஆனது போல, கோழி நிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச்செறிவைப் பொருத்து மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் வேதிப்பொருளின் நிறம்) பூசிய இனக்குழு கோழி>சோழிய குலம்>சோழியன் என்று ஆனது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநன்>கன்னன் என்று ஆகியிருக்க வாய்ப்பு உண்டு.

[சேர, சோழ, பாண்டியர்களின் வெவ்வேறு குலப்பெயர்கள் எப்படி இனக்குழுப் பண்பை உணர்த்துகின்றன என்ற என் கட்டுரை இன்னும் முடியாது இருக்கிறது. பிறிதொரு நாள் பார்க்க வேண்டும். இன்றைக்கும் சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் தாக்கம் தமிழர்/மலையாளிகளிடையே இருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கே இருந்து பிறந்தது என்று உணர முடியும். உறுதியாக சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் என்ற கருத்து சமய நெறி சார்ந்த கருத்து அல்ல. அது இனக்குழு (tribal) சார்ந்த வழக்கம். இன்றைக்கும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பல்வேறு வண்னம் பூசித் தங்களை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்து பார்க்கலாம். ஆத்திரேலியப் பழங்குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவு கொண்டவர் என்ற ஆய்வு முடிபை இங்கு ஒருசேரப் பார்க்கலாம்.]

நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகர் இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் உள்ள படித்தானம்(>பயித்தானம்>பைத்தான்) என்று பார்த்தோம். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான். படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.)

கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்). சோபாரா துறைமுகம் (சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சா(இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach)வும் துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

சேரன் படையெடுப்பை விவரிக்கத் தேவையான களனை விவரித்த கையோடு, (நேரம் கிடைக்கும் போது உத்தர, தக்கணப்பாதைகளை வரைபடம் கொண்டு காட்ட முயல்வேன். இப்பொழுது படிப்போர் பொறுத்துக் கொள்ளுங்கள்.) சிலம்பிற்குள் செல்லுவோம். அதில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட செய்திகளை மட்டும் பார்ப்போம்.

பொதுவாய் சிலம்பில் இன்று நாம் காணும் எல்லாமே இளங்கோ எழுதியதல்ல. சிலம்பில் முன்பின்னாக ஓரிமை இல்லாமல் இருக்கும் பகுதிகளைக் கவனித்துப் பார்த்தால் ஒழிய நமக்கு எது இளங்கோ எழுதியது, எது அவர் எழுதாது என்று புரிபடாது போகலாம்.

முதலில் பதிகத்துக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, February 20, 2008

நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்

இந்த வாரம் (21/2/2008) வெளிவந்த குங்குமம் தாளிகையில் "ஆதலினால்..." என்ற தொடரில் "முகத் திருத்தம்" பற்றிப் பேசவந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தியைச் சொல்லுகிறார். அதை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.
-------------------------
வயதானவர், தயக்கத்துடன் "தம்பி சொன்னது புரியலை" என்றார். "இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று அவன் கோபம் அதிகமானது. வயதானவர், தான் நாற்பது வருஷத்துக்கும் மேலாக இதே தொழிலை மானாமதுரையில் செய்து வந்ததாகச் சொன்னார். அவரது குரலை யாரும் மதிக்கவேயில்லை. மாறாக "ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏன் இந்த வேலைக்கு வருகிறார்கள்?" என்ற கேலியே எழுந்தது.

தனக்குத் தெரிந்த தொழிலை நாற்பது வருடங்களுக்குச் செய்து வந்த ஒரு மனிதன், பிழைக்க வழியின்றி பெருநகரத்துக்கு வந்து, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவமானப்படுத்தப்படும் கொடுமை வேறு எங்காவது நடக்குமா என்று தெரியவில்லை. சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது.

மேலாளர் வயதை மறந்து அவரைத் திட்டிக் கொண்டிருந்தான். தலைகவிழ்ந்து நின்ற அவரது தோற்றம் அத்தனை கண்ணாடிகளிலும் பிரதிபலித்தது. ஆள் உயரக் கண்ணாடிகள் இருந்த போதும் எதையும் அந்த மனிதர் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

அவர் தனது வலியை மறைக்கத் தெரியாமல். "இந்த தலைமசிரை நேத்துவரைக்கும் சீவிச் சிங்காரிச்சிட்டு, வெட்டிப்போட்ட மறுநிமிஷம் குப்பைனு தூக்கி எறியுற மாதிரி நம்ம பொழப்பும் ஆகிப்போச்சுல்ல" என்றார். அலங்கார நிலையத்தின் மேலாளர், "இனிமே குப்பை அள்ளுற வேலை தான் உனக்கு, புரியுதா? போயி அந்த வேலையை ஒழுங்காப் பாரு" என்றான். வயதானவர் கோபத்துடன் விடுவிடுவென அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போனார்.

அந்த மனிதன் அவமதிக்கப்பட்ட வலி ஆறாமலே இருக்கிறது. இவரைப் போல மாநகரில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சொல்லும் ஆட்டோ ஓட்டுநர், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் அவமானப் படுத்தப் படுகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பின் துணி தேய்க்கிறவன், ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் முட்டாளாக்கப் படுகிறான். லண்டனில் கூட இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் தமிழில் உரையாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நேர் எதிரான சூழலே உள்ளது.
------------------------------------

இனி நாம் சற்று அவதானிக்கலாம் வாருங்கள்.

மேலே கூறும் "அவமதிக்கப் பட்ட வலிகள்" இன்று நேற்றா ஏற்பட்டன? ஒரு 25, 30 ஆண்டுகளாய் நடந்து கொண்டு தானே இருக்கின்றன? (நாடு விடுதலை பெற்றவுடனேயே கூட இந்த அவமதிப்புத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.)

"இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று கோபப் பட்ட இளைஞரைப் போன்றோர் இன்று இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைத் தான் தமிங்கிலர் என்று சொல்லுகிறோம். அவர்கள் தான் இன்று பல இடங்களிலும் முகன்மையான ஆட்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொள்ளிகைகளைத் (policies) தலைமேல் எடுத்துக் கொண்டு நடத்தும் அடியாட்களாக, இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். கூர்ந்து நோக்கினால், தமிங்கிலர் தமிழரை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

தமிங்கிலர் உருவான கதை ஒரு தனிக்கதை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது, எழுபதுகளில் பல நாளிதழ்களில், தாளிகைகளில், கதைகளில், தமிழ்த் திரைப்படங்களில், ஒரு ஏக்கம் தொடர்ச்சியாய் வெளிப்பட்டு வந்தது. காட்டாக, தமிழ்த் திரைப்படங்களில், கதைநாயகி என்பவள் ஆங்கிலப் பள்ளி (convent)யிலிருந்து படித்தவளாயும், கதைநாயகன் ஆங்கிலம் தெரியாத, வெகுளியானதொரு பட்டிக்காட்டானாகவும் உருவகிக்கப் பட்டு, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவனைக் கேலி செய்கிற காட்சியையும் காட்டி, அதற்குப் பின்னால், எப்படியோ ஆங்கிலத்தில் தேறி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து, விளையனிடம் (villain) இருந்து கதைநாயகியைக் காப்பாற்றி, அவளையே அடைவதாகக் கதை நகரும். பார்க்கும் பலருக்கும் வாழ்விற் செய்யவேண்டியது என்று சில அடிப்படைக் கருத்துக்கள் ஊசியேற்றுவது போல் உறுத்தப்படும். அதில் ஒன்று "ஆங்கிலம் தெரிந்தால் தான் வாழ்க்கையிற் கடைத்தேறலாம்" என்ற ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கத்தை இன்று நேற்றல்ல; ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளாகவே தமிழ்மக்களிடையே உருவேற்றியிருக்கிறார்கள். இந்த ஏக்கத்தின் விளைவு தமிழரில் மேல்வருக்கத்தார் தமிங்கிலராய் மாறிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த ஏக்கத்தின் வடிகாலாய், சென்னை போன்ற பெருநகரங்களில், ஒன்றிரண்டு ஆங்கிலோ இந்தியர் பள்ளிகளும், மிகமிகக் குறைந்த வகையில் தென்னிந்தியக் கிறித்தவ சபையினர் (Church of South India) பள்ளிகளும், மற்றும் ஏசு குமுகத்தினரின் (Society of Jesus) கத்தோலிக்கப் பள்ளிகளுமாய் ஆங்கிலப் பள்ளிகள் அமைந்திருந்தன. வணிக நோக்கில் நடத்தப்பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அப்போது கிடையா. பொதுவாய் பழைய, புதிய பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மடலாயப் பள்ளிப் (convent school) படிப்புக்கு அனுப்பி வைத்து அந்தக் காலத்தில் ஊருக்குள் பெருமை கொண்டார்கள்.

பின்னால், மேட்டுக்குடியைப் பின்பற்றி அப்படியே ஈயடிச்சான் படி(copy)யெடுக்கும் உயர் நடுத்தர வருக்கமும், அதையடுத்து நடுத்தர வருக்கமும், இன்னும் கீழே உள்ளவரும் எனக் கொஞ்சம் கொஞ்சமாய் கூம்பின் உச்சியிலிருந்து ஆர்வம் கீழாய்ப் பெருகி, பொல்லாத ஏக்கம் கொண்டு, ஆங்கிலப் பள்ளிப் படிப்பிற்கு மாற முற்பட்டனர். கூடிப் போன இந்த ஏக்கத்தை நிறைவு செய்யுமாப் போல மடிக்குழைப் பள்ளிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒருசிலர் வளர்த்தனர். ஒரு கட்டத்தில், இந்தக் கூடுதற் தேவையை ஈடு செய்ய மடலாயப் பள்ளிகளால் முடியவில்லை.

இந்தப் பள்ளிகளில் இருந்து வெளிவந்த ஒரு சிலர், தனியார் பள்ளிகளாய், "மடலாயப் பள்ளிகள் போலவே தாங்களும் நடத்த முடியும்" என்ற முன்மொழிவில், மடிக்குழைப் பள்ளிகளைத் தொடங்கினர். அந்த நிலையில் தான், பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் போது இடையாளராய் இருந்து ஏகப்பட்ட பணம் பண்ண முடியும் என்று யாரோ சில சூழ்க்குமதாரிகள் சொல்லிக் கொடுக்க, அதைத் தாரக மந்திரமாய் எடுத்துக் கொண்டு, இரண்டு கழகத்தாரும் ஒன்றிற்கு ஒன்று போட்டியாய், அடுத்தடுத்து தங்கள் ஆட்சியில் காசுக்கு அனுமதி வழங்கினார்கள். இதன் விளைவாய், "சடசட"வென, "படபட"வெனப் புற்றீசலாய், மடக்கை (exponential) வேகத்தில், பணம் ஒன்றே குறியாய், தேவையை நிறைவு செய்யும் அளிப்பாக மடிக்குழைப் பள்ளிகள் பெருகின. மாநிலத்தின் கல்வித்துறை, கையூட்டு மல்கிய துறையாக, மாற்றம் பெற்றது. தலையில் இருந்து கால்வரை பணம் ஏராளமாய்ப் புரண்டது. மேடையில் முழங்குவது மட்டும் தமிழாகவும், அன்றாட நடைமுறையில் புரந்தருவது ஆங்கிலமாகவும் கல்வி வணிகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் ஆகியோரின் கூட்டுறவில் ஆகிப் போனது. தமிழக அவலத்தின் ஊற்றுக்கண் மடிக்குழைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் தான் இருந்தது.

இந்த வேகம் ஓர் அசுர வேகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அரசு வாரியம் வழிநடத்திய தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 99 விழுக்காடு தமிழகத்தில் இருந்தன. தவிர, அப்போது ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியும் பெரிதும் விடுதலை உணர்வால் உந்தப்பட்டுத் தமிழை முன்னெடுத்துச் செல்லுவதாய்த் தான் செயற்பட்டு வந்தது. அதனால் 67 தொடங்கும் வரை, இன்னுஞ் சொன்னால், எழுபதுகளின் முடிவு வரை கூட நிலை ஒன்றும் பெரிதாய் மாறவில்லை; மாநிலமெங்கும் 80 மடிக்குழைப் பள்ளிகளே இருந்தன. இன்றோ, மாநிலமெங்கும் 2500 மடிக்குழைப் பள்ளிகளுக்கும் மேல் இருக்கின்றன. தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 50 மேனி இருக்குமா என்பது கேள்விக் குறியே! (அதோடு, இன்றைக்கு மடிக்குழைப் பள்ளி நடத்துவோரின் கூட்டமைப்பு பணமும் வலியும் கொண்ட அமைப்பாக, வழக்குமன்றம், சட்டப் பேரவை போன்றவற்றை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களைச் சாய்க்காமல், ஒரு மண்ணும் தமிழகத்தில் செய்யமுடியாது; தமிங்கிலர்களைத் தொடர்ந்து உருவாக்குவதே இவர்களின் பணி.)

தமிழ் மாநிலத்தில் தமிழில் படிப்பது தொலைந்தது மட்டுமல்லாமல், தமிழே படிக்காமல் (அதாவது மொழியாய்க் கூடப் படிக்காமல்) பிரஞ்சு, சங்கதம் என்று வெறும் மதிப்பெண்ணிற்காகப் மட்டுமே படிக்கும் தற்குறிகளாய் மாறிப் போன தமிழ் இளைஞர் 20, 30 இலக்கத்தை நெருங்குவர். தம் வீட்டு வேலைக்காரர், தம் அடுக்குவீட்டுக்கு அருகில் உள்ள துணிதேய்ப்பவர், தம்மைப் பள்ளிக்கு இட்டுச்செல்லும் தானி ஓட்டுநர், எனத் தாழ்நிலை வேலையாளருடன் பேசுவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இவர்கள் தமிங்கிலராய் ஆகாமல் வேறு எப்படி ஆவர்? மேலே முடிதிருத்தகத்தில் கோவப் பட்ட இளைஞரும் இந்தத் தமிங்கிலரில் ஓர் உறுப்பினர் தான்.

பணம் சம்பாரிப்பதற்காக தமிழ்நாட்டுக் கல்விப் பொள்ளிகையைக் காற்றில் பறக்கவிட்ட கழக அரசுகளே தமிங்கிலரை உருவாக்கியதில் பெருங்காரணம் என்பதை வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. (67- ல் கழக அரசு ஏற்படவேண்டும் என்று பெரிதும் பாடுபட்ட என்னைப் போன்றவர்கள் மனம் வெதும்பி இப்பொழுது நிற்க வேண்டியிருக்கிறது. உண்மையான திராவிடக் கொள்கையில் ஒரு பிடிப்பு இருந்திருக்குமானால், இப்படி இவர்கள் சோரம் போவார்களா?)

இன்னொரு சிந்தனையும் எழுகிறது. அந்த முடிதிருத்தகத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் தமிழ்நாடெங்கணும் நடக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை நிறுத்த முயற்சிகள் செய்திருக்கிறோம்? கூடிவரும் ஆங்கிலத் தாக்கத்தை அப்படியே அடிமையாய் ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர, அதனால் விளையும் தமிங்கில நோய் எங்கணும் பரவ நாம் தரும் பங்களிப்பையும் தவிர, நம்மைப் போன்றோர் என்ன செய்திருக்கிறோம்?

வெள்ளைக்காரன் ஆண்டிருந்த காலத்தில் மகிழ் குழும்புகளின் (ஜிம்கானா, காசுமாபாலிடன் போன்றவை) நுழைவாயிலில் "Indians and dogs are not allowed" என்று எழுதிப் போட்டிருந்ததாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த நிலை மீண்டும் இப்பொழுது வருகிறது அல்லவா? "Tamils and dogs are not allowed" என்று அந்த முடிதிருத்துக் கடையில் நேரடியாய் எழுதிப்போடவில்லை தான்; ஆனாலும் நடைமுறையில் அதுதானே இருக்கிறது?

இன்றையத் தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களில், எந்தவொரு அலுவத்திலும் (அது தனியாராய் இருந்தாலும் சரி, அரசினராய் இருந்தாலும் சரி) தமிழில் கேள்வி கேட்டால், நம்மைத் தள்ளித்தான் வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டால் ஏதோ ஒரு மறுமொழி, இணங்கியோ, இணங்காமலோ கிடைக்கிறது. இதே போல சென்னை அடையாற்றில் உள்ள ஒரு மடிக்குழைப் பள்ளியில் ஒருமுறையும், மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்திலும் தமிழில் தங்களுக்குள் உரையாடிக் கொண்ட சிறுவர் தண்டனை பெறத்தான் செய்தனர். அங்கும் "Tamils and dogs are not allowed" என்பது தானே நடைமுறைப் பொள்ளிகையாய் (policy) இருந்திருக்கிறது? அப்புறம் என்ன, வேண்டிப் பெற்ற விடுதலை? "சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்?"என்ற மன்றாட்டு?

நன்றாக நினைவுக்கு வருகிறது நான் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் (1965 - 70) விடுதிகளுக்கு வரும் நாட்டுப்புற மாணவர்களில் பலர், தமிழ் மட்டுமே தெரிந்த தங்கள் பெற்றோரை மற்றோரிடம் அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு ஒதுக்கித் தள்ளிய பழக்கம் இன்றளவும் மாறவில்லையே?

ஒரு காலத்தில் அய்யா என்று மரியாதையுடன் அழைக்கப் பட்ட தமிழாசிரியர் இன்றைக்கு தாளிகை, திரைப்படம், தொலைக் காட்சி எல்லாவற்றிலும் கேலிக்கு ஆளாகும் மாந்தராகத்தானே காட்டப் படுகிறார்? தமிழாசிரியர் கேலிக்குரிய மாந்தனானால், அப்புறம் தமிழும் கேலிப்பொருளாய் மாணவரிடையே ஆகிவிடாதோ?

விடுதலைக்கு முன்னால் வெள்ளைக்காரத் துரைக்கு எழுத்தராய் (clerk) தமிழர் வேலை செய்தது போல, தேயிலையைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் விளைவிக்காமல், வாழ்க்கைத் தேவையான பலவற்றையும் இறக்குமதி செய்துகொண்டு, அதற்கு ஏந்தாக ஏராளமான எழுத்தர்கள், அரசதிகாரிகள், இலடண்டனுக்கான முகவர்கள் எனப் பழகிய குடியேற்ற காலத்து இலங்கைத் தீவுப் பொருளாதாரம் போல, எங்கோ இருக்கிற புத்தாக்கத்திற்கு, இங்கிருந்து சேவை செய்யும் பொதினச் செலுத்த வெளியூற்று (business process outsourcing) புற்றீசல் போலத் தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் "எந்தத் தொழில் துறை அறிவும் தேவையில்லை, வெறுமே ஆங்கில பேசத் தெரிந்தால் போதும், நீங்கள் கூலி எழுத்தராய் ஆகிச் சம்பாரிக்கலாம்" என்று ஆசைகாட்டி, நுனிநாக்கு ஆங்கிலம் பேச வைக்கும் அளவுக்கு உள்ளூர் மனவியலை மாற்றியதை என்ன சொல்லுவது?

ஆங்கிலத் தாக்கத்துக்குக் கொடிபிடிக்கும் தமிங்கிலகம் என்ற நாட்டிற்குக் கீழ் தமிழகம் என்ற நிலம் குடியேற்ற நாடாகத் தானே இருக்கிறது? வெள்ளைக்காரன் காலத்தில் நாடு அடிமைப் பட்டிருந்ததற்கு என்னென்ன அடையாளங்கள் இருந்தனவோ, அவை அத்தனையும் மீண்டும் வந்தாயிற்று அல்லவா? என்ன, இந்த முறை தமிழரை ஆள்பவர், தமிழரே போலும் இருக்கிறார். அதன் காரணமாகவே, அவர் ஆட்சி இன்னும் முற்றாளுமையோடு இருக்கிறது. "மக்களே போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர். தமிங்கிலருக்கும் தமிழருக்கும் வேறுபாடு தெரியாத வகையில் பல இடத்தும் நாம் தடுமாறுகிறோம்.

"தமிழில் தலைப்பு வையுங்கள்; கேளிக்கை வரி விலக்குத் தருகிறோம்" என்ற அளவுக்கு ஓர் அரசு போகுமானால், இங்கே ஆங்கில, தமிங்கிலத் தாக்கங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?

"தமிழில் பேசு; தங்கக் காசு தருகிறோம்" என்று ஒரு தொலைக்காட்சியினர் சொல்லும் அளவுக்குத் தமிங்கிலம் இங்கு இயல்பாகிப் போனதே? அந்தத் தொலைக்காட்சி தவிர மற்றெல்லாத் தொலைக்காட்சி, பருவெண் மட்டுழைத்த (frequency modulated) வானொலி நிலையங்கள் என எல்லாவற்றிலும் தமிங்கிலம் தடையின்றிப் புழங்குகிறதே?

இதற்கிடையில் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் வகையில் 12/06/2006ல் கொண்டுவரப்பட்ட தமிழகச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட (petition) ஆகஸ்டு 23ம் தேதி உயர்நய மன்றம் கூறிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நயமன்றம் தள்ளிவைத்தது.

முதல்வர் பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார். முன்னே 20 ஆண்டுகள் இரு கழக ஆட்சியில் கல்வியில் நடந்த அவலங்களை அவர் எண்ணிப் பார்ப்பாரோ?

தமிங்கிலம் என்று சொன்னவுடன், தேனிசைச் செல்லப்பா பாடிய இன்னொரு பாடலின் தொடுப்பு நினைவிற்கு வருகிறது.

வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? - நல்
இணக்கம் தரு தமிழில் இருகை கூப்பிநின்று (வணக்கம்)

- தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வரிகள்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 19, 2008

அளவுச் சொற்கள் - 4

ஏற்கனவே மூன்று பகுதிகளோடு இந்தத் தொடர் அப்படியே நின்று போயிற்று. அவை வருமாறு:

அளவுச் சொற்கள் - 1
அளவுச் சொற்கள் - 2
அளவுச் சொற்கள் - 3

இனித் தொடர்ச்சி. இந்தப் பகுதியில் முதலில் ஒருசேர நான்கு சொற்களைப் பார்க்கப் போகிறோம். அவை minimum, minor, minority, minute ஆகியவை ஆகும். இந்தச் சொற்களில் வரும் min என்ற பகுதியும் நுண் என்பதோடு தொடர்பு கொண்டது. நுண் என்பதும் முன்னால் சொன்னது போல் நுல் என்னும் வேரில் இருந்து கிளைத்த அடிச்சொல்லாகும்.

முதலில் முப்பத்தி ஆறாவது அளவுச் சொல்லான minute என்பதைப் போர்ப்போம். தமிழில் நுணுக்கு என்பது ஒரு பெரிய பகுதியின், ஆகக் குறுகிய பகுதியைக் குறிக்கும் சொல். மிகச் சிறியது என்று அதற்குப் பொருள். நுணுக்கின் போலியான முணுக்கு என்ற சொல்லை நாம் இன்றும் கூடப் பயன்படுத்துகிறோம். (அவன் முணுக்கென்று போனான்.) நுணுக்கு என்பது நுணுத்து என்றும் வேறு ஒரு ஈற்றிலும் முடியலாம். நுணுத்தல் என்பது குறுகுதல் என்ற பொருள் கொள்ளும். ஆங்கிலத்திலும் minute என்ற சொல் குறுகிய பகுதியையே குறிக்கும். அது காலத்தின் பகுதியை மட்டுமல்லாது பொருள், இடம் என எல்லாவற்றின் சிறுமையையும் குறிக்கும். நாம் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கும் மணித்துளி போன்றவை கால அளவை மட்டுமே குறிக்கும் சொற்கள். தவிர, மணித்துளி என்ற சொல் நீர்வீழ்ச்சி போல ஒரு செயற்கையான அலங்காரச் சொல். அதைக்காட்டிலும் நுணுத்து அல்லது நுணுத்தம் என்ற சொல் சிறப்பாக இருக்கும். வடமொழி வழியே பெறப்பட்ட நிமிடத்திலும் கூடத் தமிழ்வேர் உள்நின்று அடையாளம் காட்டும். தமிழில் ஏற்படும் முகர/னகர/ணகரப் போலியையும், தமிழில் வரும் டகர/தகர ஈற்றுக்கள் வடமொழியில் ஷகர ஒலியாய் மாறுவதையும் ஓர்ந்து பார்த்தால் நுணுத்தத்தில் இருந்து நுணுஷம்>முநுஷம்>நுமுஷம்>நிமுஷம்>நிமிஷம் என்ற திரிவு புலப்படும். (இதே போன்ற திரிவுக்கு இன்னொரு காட்டு: வருடு>வருடை = ஆடு; வருடு+அம் = வருடம்>வருஷம் = மேய இராசியில் தொடங்கும் ஆண்டு; ஆடு>ஆட்டை, ஆடு>ஆண்டு என்ற சொற்கள் அமைந்த முறையையும் இங்கு கவனிக்கலாம்.) நுணுத்தம் என்ற சொல்லைப் புழங்கினால், உள்ளே ஆழத்தில் இருக்கும் நுணுத்தல் என்னும் வினைச்சொல்லும் நமக்கு விளங்கும். பொதுவாய் வினைச்சொல் தெரிபடத் துலங்கும் பெயர்ச்சொற்கள் சிந்தனையைத் தூண்டுபவை. [நுணுத்தத்தின் சிறு பகுதியான second என்பதை செகுத்தம் என்று சொல்லலாம். கூடவே அதன் இன்னொரு பெயரான நொடியையும் புழங்கலாம். செகுத்தம் பற்றி முன்னால் செகை (sex) என்ற கட்டுரையில் விவரித்துள்ளேன்.]

இனி முப்பத்தி ஏழாவது சொல் minimum. நுணுகிக் குறுகிப் போன நிலையைக் குறிக்கும் சொல். நுணுகுதல் என்ற வினையை நுணுதல் என்றும் சொல்லலாம். இதே கருத்தில், நுணுகிய தன்மையை minimum = நுணுமம் என்று சொல்லுவதின் மூலம் கொண்டு வரலாம். அதன் மூலம் மிகக் குறைந்ததென்ற பொருளையும் கொண்டு வரலாம். maximum = மீகுமம் என்பதற்கு எதிர்ச்சொல்லாயும் நுணுமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளப் பொருத்தமாய் இருக்கும்.

இதற்கும் அடுத்தது முப்பத்தெட்டாவது சொல் minor என்னும் சொல்லாகும். அகவையில் குறைந்தவர்; பங்களிப்பில் குரைந்தவர் என்ற பொருளில் minor = நுணுவர் என்றே சொல்லலாம். சிறுவர் என்பது போல நுணுவர் என்பது பொருளாழம் காட்டும். major = மேவு, மேவிய, மேவர் என்பதற்கு இணையாக minor = நுணுவிய, நுணுவர் என்ற சொற்கள் அமையும். மேவிய பங்கு, நுணுவிய பங்கு என்ற சொற்கள் major share, minor share என்பதைத் தெளிவாகக் குறிக்கும். பங்கிற்கு இணையாகக் கூறு என்பதையும் ஆளமுடியும்.

முப்பத்தொன்பதாவது சொல் minority. நுணுதல் என்னும் வினையில் இருந்து நுணதி என்ற சொல்லை உருவாக்க முடியும். majority = மேவுதி என்பதற்கு எதிராக நுணதி என்ற சொல் அமையமுடியும். "எங்குமே மேவுதியார் பேச்சு நுணதியார் பேச்சைக் காட்டிலும் எடுபடும்", "அவர் நுணதியாகித் தோற்றுப் போனார்" என்று வாக்கியங்களை எண்ணிப் பார்க்கலாம்.

மேலே சொன்ன நான்கு சொற்களுக்கு அப்பால் நாம் பார்க்கும் நாற்பதாவது அளவுச் சொல் mode. எந்த ஓர் உயர்ச்சிக்கு முன்னாலும் பின்னாலும் ஒரு தாழ்ச்சி உண்டு. அது மலையானாலும், அலையானாலும் அமைவது தான். மலை, அலை போன்றவற்றின் உச்சி mode என்று சொல்லப்படும். தமிழில் அதை முகடு என்று குறிக்கிறோம். முக>மோ என்ற பலுக்கத் திரிவை ஓர்ந்து பார்த்தால், முகடு = mode என்பதன் சொல்லிணை சட்டென்று விளங்கும். வீட்டு கூரையில் மேலே இருக்கும் உச்சியை, மோட்டு வளை என்றே நாட்டுப் புறத்தில் கூறகிறார்கள்.அந்த மோடும் இந்த முகட்டின் திரிவுதான். (இது போன்ற ஒப்புமைகளைப் பார்க்கும் போது, தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளும் ஏதோ ஒரு தொடர்பு அறதப் பழங்காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்றே நான் கருதுகிறேன். இது வரை செய்த சொல்லாய்வுகள் அதை நாளும் உறுதி செய்து வருகின்றன.)

இனி அடுத்து more, most, much என்னும் மூன்று சொற் தொகுதியைப் பார்ப்போம்.

நாற்பத்தொன்றாவது அளவுச் சொல் more. மேலும் மேலும் ஓர் எண்ணுதி (quantity) சேருகின்ற கருத்தை "மேல்" என்றே சொல்லலாம். அது அப்படியே more என்பதற்குப் பொருந்தும். மேலும் மேலும் = more and more.

நாற்பத்திரண்டாவது சொல் most. more என்பதன் உயருறவு நிலை (superlative). மேலும் மேலும் ஏறும் இந்த நிலையை மேலேற்று என்றே சொல்லலாம்.

நாற்பத்தி மூன்றாவது சொல் much. நீரை ஒரு கலத்தில் ஊற்றிக் கொண்டே வரும் பொழுது அது விளிம்பில் இருந்து கொட்டுகிறது பாருங்கள் அதை மகுதல்>மகுருதல் என்று எங்கள் பக்கத்தில் சொல்லுவார்கள். இந்த மகுவும் மிகுவும் தொடர்புள்ள சொற்கள் தான். இருந்தாலும் மிகுதல் = to exceed என்ற பொருளைச் சட்டென்று குறிப்பதால், மகுதல் என்றும் அதன் முன் திரிபான மொகுதலையும் உரிய வினையாகக் கையாளலாம். multiply என்பதைக் குறிக்கும் மல்குதல் என்ற சொல்லும் மகுதல் என்று பேச்சுவழக்கில் ஆவதால், மொகு என்பதே much ற்கான என் பரிந்துரை. much என்பதற்கும் more என்பதற்கும் நுணுகிய வேறுபாட்டை ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Much water has flown through the river = மொகுந்த நீர் ஆற்றின் வழியே பெருகியிருக்கிறது / விளவியிருக்கிறது.

இதற்கு அடுத்து மல் என்னும் வேரில் கிளைக்கும் மூன்று சொல் தொகுதியைப் பார்க்கலாம்.

நாற்பத்தி நான்காவது சொல் multi இதை மிகச் சுருக்கமாய் மல், மல்கு>மகு என்றே சொல்லலாம். மல்கிப் பெருகுதல் என்ற வழக்குத் தமிழில் கால காலமாய் உண்டு.

நாற்பத்தி ஐந்தாவது சொல் multiply. இந்தக் காலப் பேச்சுவழக்கில் பெருக்குதல் என்றே சொல்லிவருகிறோம். இருந்தாலும் இலக்கிய வழக்கில் மல்குதல் என்ற வினை இருந்திருக்கிறது. மல்குதல் என்று சொல்வதைத் திரித்துப் பேச்சுவழக்கில் மலிதல் என்று சொன்னாலும் பெருகுதல் என்ற பொருளைத் தரும். மல்குதல்/மலிதல் என்பவை தன்வினையில் வரும் சொற்கள். அதே சொல்லை மலித்தல் என்று சொன்னால் அது பிறவினையாகிவிடும். Please multiply two by five = இரண்டை ஐந்தால் பெருக்குக/மலிக்குக. பெருக்குதல் என்பது "கணக்கதிகாரம்" போன்ற தமிழ் நூலில் பேச்சு வழக்குச் சொல்லாகத் திரிந்த முறையில் பருக்குதல்>பழுக்குதல் என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது. இது போக மல்தல் என்னும் வினை, மால்தல் என்று நீண்டு, பின் புணர்ச்சியில் மாறல் என்று ஆகி, பெருக்கல் வினையைக் குறிக்கிறது. மாறல் என்ற இந்தச் சொல்லும் "கணக்கதிகாரம், கணித நூல்" போன்றவற்றில் multiplication என்பதற்கு இணையாகப் பெரிதும் ஆளப் பட்டிருக்கிறது. இந்த நூல்களில், ஓர் இழுனை அளவைக் (linear measure) கொடுத்து, அவற்றால் ஏற்படும் சதுரங்களின் பரப்பு அளவை (area measure) கண்டு பிடிக்கும் வேலைக்கு "பெருங்குழி மாற்று, சிறுகுழி மாற்று" என்ற சொற்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்றைக்கு மாற்றுதல்/மாறல் என்ற சொற்கள் வேறு பொருள் கொள்ளப் படும் என்பதால், முந்தைய வடிவமான மலித்தல் என்பதையே நான் பெருக்குதலோடு சேர்ந்து இங்கு பரிந்துரைக்கிறேன். பெருக்குதல், மலித்தல் என்பவை போக இன்னொரு சொல்லும் அகரமுதலிகளில் இருக்கிறது. அது குணித்தல்/குணத்தல் என்று சொல்லப்படும். பெருக்கல் என்பது ஒரு விரிந்த கூட்டல் (extended addition) என்ற முறையில் குணித்தல் என்பது கணித்தல் என்பதோடு தொடர்புள்ளது; கணித்தல் கூட்டலோடு முதலிலும், நாளடைவில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்னும் நான்கு செயற்பாடுகளையும் குறிக்கத் தொடங்கியது. இன்றைக்கு கணித்தல் என்ற சொல்லின் பொருட்பாடு இன்னும் விரிந்திருக்கிறது. ஆகப் பெருக்கல், மலித்தல், குணித்தல் என மூன்று சொற்கள் தமிழில் பெருக்கற் கருத்தைச் சொல்ல வாகாக உள்ளன. அந்த வகையில் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும் குறிக்கப்படும் குணகாரம், குணனம் = பெருக்கல், குணித்தல் = பெருக்குதல், குணகம் = பெருக்கும் எண், குண்ணியம், குணனீயம் = பெருக்கப்படும் எண், குணிதம் = பெருக்கிவந்த தொகை என்ற சொற்களையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நாற்பத்தி ஆறாவது சொல் multitude; இது மல்குதல்/மலிதல் என்ற வினையில் இருந்து உருவானதொரு பெயர்ச்சொல். மல்கிக் கிடப்பதால் இதை மல்கணம் என்றே அழைக்கலாம்.

நாற்பத்தி ஏழாவது சொல் number = எண்; இப்பொழுது விளக்கத் தேவையில்லை. பின்னொரு நாள் இதன் சொற்பிறப்பை விளக்க முயலுவேன். (அது ஒரு நீண்ட ஆய்வு. எல்லோரும் எள்ளோடு தொடர்புடையது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; அப்படிச் சட்டென்று சொல்லிவிடமுடியாது. எண்ணின் சொற்பிறப்பு நம்மைத் தமிழ்க் கணிதவியலின் ஆழத்திற்குக் கொண்டு போகும். கணிதவியலிலும் நமக்கு ஒரு கொடிவழி இருக்கிறது. அதை விரிவாய் ஆய்வதற்குத் தான் ஆட்களைக் காணோம்.)

நாற்பத்தி எட்டாவது சொல் nano = நூணு. அண்மையில் டாடா நிறுவனத்தினர் மிகக் குறைந்த விலையில் ஒரு சீருந்தை வடிவமைத்து அதற்கு nano என்று பெயரிட்டு அழைத்தார்கள். தவிர 10^-9 என்ற எண்ணை nano என்று கணிதத்தில் அழைப்பார்கள். நுண் என்னும் அடிச்சொல்லின் நீட்சியாய் நூணு என்றே நாம் அழைக்கலாம்.

நாற்பத்தி ஒன்பதாவது சொல் narrow. இதையும் நுல் என்னும் வேரில் இருந்து நுறு என்று சொல்லின் வழியாக நுறுவு என்ற சொல்லால் குறிக்க முடியும். narrow path = நுறுவிய பாதை; அதாவது ஆகக் குறுகிய பாதை.

இனி, ஐம்பதாவது அளவுச் சொல்லான nice என்பதைப் பார்ப்போம். "போட்டு நொய்ச்சு எடுத்துட்டாண்டா" என்றும், "அரிசியை நொய்யாகத் திரித்துக் கொள்" என்ற பேச்சிலும் வரும் நொய் என்பது nice மற்றும் powdery என்பதையே குறிக்கும். ஒரு குறுணை (grainy) இல்லாமல் வழவழப்பாக இருப்பது நொய். நொய்யும் வினை நொய்தல். யகர/சகரப் போலியில் நொய்வு என்பது நொசிவு என்றும் பேச்சுவழக்கில் வரும். கரடு முரடாக இல்லாமல் இருக்கும் பொருளையும், மாந்தரையும் nice என்ற கருத்தால் குறிக்கிறோம். தமிழில் அதற்கு இணையான சொல் நொசிவு என்பதே.

அடுத்துவரும் ஐம்பத்து ஒன்றாவது சொல்லான plenty = பலவாறு, ஐம்பத்து இரண்டாவது சொல்லான short = குறு, ஐம்பத்து மூன்றாவது சொல்லான size = அளவு, ஐம்பத்து நான்காவது சொல்லான small = சிறு, ஐம்பத்து ஐந்தாவது சொல்லான spread = பரத்திய, ஐம்பத்து ஆறாவது சொல்லான thin = சன்ன ஆகியவற்றிற்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை

ஐம்பத்து ஏழாவது சொல்லான volume என்பதைக் கன அளவு என்றே சொல்லிவந்திருக்கிறோம். உண்மையில் கன என்பது எடை தொடர்பான சொல்; கனமாக இருக்கிறது என்பது எடையாய் இருக்கிறது என்றே பொருள்படும். முப்பரிமான அகற்சிச் சொல்லான volume என்பதைக் குறிக்க வெளியை நிரப்பும் வினைச்சொல்லை நாட வேண்டும். வெள்ளுதல் என்பது வள்ளுதலில் இருந்து பிறந்த சொல். வள்ளுதலும் பெருத்தலே. வள்ளுதலில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் வளம் (=பெருமை, செழுமை, மிகுதி, prosperity) எப்படிப் பலம் பெலம் என்று பேச்சுவழக்கில் சொல்லப் படுகிறதோ அது போல, கட்டினான் என்பது கெட்டினான் என்று ஆவது போல, அகரவொலி எகரவொலியாகப் பலுக்கப் படுவது தமிழில் பல இடத்தும் நடக்கிறது. பெருத்தல் என்னும் பொருள் கொண்ட வள்ளுதல் வெள்ளுதல் என்றாவது இயற்கையே. ஆனால் வியப்பு என்னவென்றால், பெயர்ச்சொல் மட்டுமே இன்றையத் தமிழில் இருக்கிறது. வினைச்சொல்லைக் காணோம். பொதுவாய் பெருக்கு என்பது flow வைக் குறிப்பதால், ஒரு வேற்றுமை கட்டுவதற்காக, அளவில் பெருகுவதை வெள்ளம் என்று சொல்லலாம். அதே பொழுது வெள்ளம் என்ற சொல் flow என்னும் கருத்தீட்டை ஒரு சில போதுகளில் குறிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது. அறிவியற் சிந்தனை பெருக வேண்டுமானால், volume என்பதற்கும் flow என்பதற்கும் தமிழில் சரியான சொல்வேறுபாடு காட்டத்தான் வேண்டும். அதே பொழுது அதை எடையோடு தொடர்புறுத்தக் கூடாது.

என் பரிந்துரை `volume = வெள்ளம்; flow = பெருக்கு என்பதே.

ஐம்பத்து எட்டாவது சொல்லான weighty என்பதை எடையான, நிறையான என்ற சொற்களால் சொல்லலாம்.

இந்தப் பகுதியில் உரைத்த அளவுச் சொற்களும், மற்ற சொற்களும் வருமாறு:

minute = நுணுத்து, நுணுத்தம்
minimum = நுணுமம்
minor = நுணுவிய, நுணுவர்
minority = நுணதி
mode = முகடு, மோடு
more = மேல்
most = மேலேற்று
much = மொகு
multi = மல்
multiply = மல்குதல், மலித்தல், பெருக்குதல், குணித்தல்/குணத்தல்
multiplication = மலிக்கல், பெருக்கல், குணகாரம், குணனம்
multiplying number = குணகம்
multiplicant = குண்ணியம், குணனியம்
product after multiplication = குணிதம்
multitude = மல்கணம்
number = எண்
nano = நூணு
narrow = நுறுவு
nice = நொசிவு
plenty = பலவாறு
short = குறு
share = கூறு, பங்கு
size = அளவை
small = சிறு
superlative = உயருறவு
spread = பரத்திய
thin = சன்ன
volume = வெள்ளம்
weighty = எடையான
density = திணிவு, அடர்த்தி
second = செகுத்தம், நொடி

இனி அடுத்த வரிசைகளுக்குப் போவோமா?

அன்புடன்,
இராம.கி.

Monday, February 18, 2008

மீட்டும் ஒரு நாள்காட்டு

இரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு கிழமை (= வாரம்) முழுதும் நாள்காட்டச் சொல்லி தமிழ்மணத்தில் கேட்டுக் கொண்டார்கள். (அப்படி நாள்காட்டியது 11/4/2005 பங்குனித் திங்கள் பரணி நாள் திங்கட்கிழமை.) இப்பொழுது, மீண்டும் நாள் காட்டுவது 18/2/2008 மாசித் திங்கள் 6 ஆம் திகதி கும்ப ஞாயிறு புனர்பூச நாள் திங்கட்கிழமை. இன்னும் மூன்று நாட்களில் மாசி மகம். தமிழ்நாடெங்கணும் சிவம், விண்ணவம் ஆகிய சமய நெறிகளோடு சேர்ந்து அந்த நாளில் ஒரே நீராடல் தான். (ஆனாலும் இந்த நீராடல்களுக்குக் காரணம் சமய நெறிகள் தானா என்ற கேள்வி எனக்குள் நெடுநாளாய் எழுந்தது உண்டு. இன்னும் விடை கண்டேன் இல்லை.)

இப்பொழுது நாள்காட்டிற்கு வருவோம். காலங்கள் என்னும் தொடரில் திங்கள் என்னும் சொல், நிலவை ஒட்டிவந்த மாதப் பெயர் என்று சொல்லியிருந்தேன். ஓர் அமையுவாவில் இருந்து (அமாவாசையில் இருந்து) இன்னோர் அமையுவா வரைக்குமான காலத் தொடர்ச்சியைத் திங்கள் என்று தமிழர் வானியலில் சொல்லுவார்கள். (தமிழர் வானியலை ஏதோ வடமொழியில் இருந்து கடன் வாங்கியதாகவே இந்தியரில் பலரும் மேலையரில் ஒரு சிலரும் பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறான பார்வை. நாவலந்தீவினுள் அறிவு உறவாடல் என்பது வடக்கிலும் தெற்கிலுமாய்ச் சேர்ந்துதான் இருந்தது. தமிழர் பங்களிப்பைக் குறைப்பதில் ஒருசிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களோ?) வெறுமே நிலவு புவியைச் சுற்றி வரும் காலத் தொடர்ச்சியைப் பார்த்தால், 27.3216615 நாட்கள் எடுக்கும். இந்தத் தொடர்ச்சியை ஒரு சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (அதாவது, சந்திரன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை மட்டும் அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி இந்தத் திங்கள் ஆகும்.)

அதற்கு மாறாக, ஒவ்வோர் அமையுவாவிலும் (அல்லது பூரணையுவாவிலும்) சூரியன், புவி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாப் போலப் பார்த்தால், 29.5305888 நாட்கள் பிடிக்கும். இப்படிச் சூரியன், புவி, நிலா மூன்றும் ஒன்றுபோல் சேர்ந்திருக்கும் காலத் தொடர்ச்சியைச் சூரியச் சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (சூரியன், சந்திரன், புவி என் மூன்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி.) இப்படி அமையும் 12 சூரியச் சந்திரமானத் திங்கள்கள் சேர்ந்தால் 29.5305888*12 = 354.367056 நாட்கள் கொண்ட ஓர் ஆண்டு கிடைக்கும். ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தச் சூரிய சந்தமான ஆண்டே புழக்கத்தில் இருக்கிறது. இசுலாமிய ஆண்டும் ஒரு சூரியச் சந்திரமான ஆண்டே! அதே பொழுது, இசுலாமிய ஆண்டுபோல இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் சூரிய ஆண்டிற்கு இணங்கச் சில மாற்றங்களைச் செய்து கொண்டு சூரியச் சந்திரமான ஆண்டுத் தொடக்கத்தை (அதாவது உகாதியை) பெரிதும் நகரவிடாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். இசுலாமிய ஆண்டின் தொடக்கமோ ஒவ்வோர் ஆண்டும் 11 நாள் முன் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்; ஏனென்றால் அவர்கள் நிலவின் இயக்கத்திற்கு அவ்வளவு முகன்மை கொடுப்பவர்கள்.

சந்திர மாதங்களையும், சூரியச் சந்திரமான மாதங்களையும் தான், சித்திரை, வைகாசி, ......... மாசி, பங்குனி என்று நாம் அழைக்கிறோம். இந்தப் பெயர்கள் எல்லாம் 27 நாள்காட்டுக்களில் 12 நாள்காட்டுக்களை மட்டுமே குறிப்பவை. பொதுவாய், பூரணையன்று எந்த நாள்காட்டு நிலவோடு பொருந்தி வருகிறதோ அதே பெயரையே அந்தத் திங்களுக்கும் முன்னோர் பொருத்திச் சொன்னார்கள். காட்டாகச் சித்திரை நாள்காட்டு, பூரணை நிலவோடு சேர்ந்து வரும் மாதம் சித்திரை மாதம். அதே வகையில், மக நாள்காட்டு பூரணையோடு பொருந்திவரும் மாதம் மாசியாகும். சித்திரை, வைகாசி என்ற பெயர்களில் ஒரு சில திங்கட் பெயர்கள் திரிவு கொண்டு சங்கதத் தோற்றங்களை வெளியே காட்டினாலும், அவை ஒவ்வொன்றின் உள்ளேயும் தமிழ்க் கூறுகள் அடங்கியிருக்கின்றன; அவை முற்றிலும் சங்கதப் பெயர்கள் அல்ல.

மாசி என்ற ஒலிப்பும், மகம் என்ற ஒலிப்பும் என்ன பொருள் கட்டுகின்றன, எப்படி அவை இணை கொண்டன, தமிழ் வேர் எங்குள்ளது என்பதை உன்னித்து பார்த்தால், அறியலாம். மக நாள்காட்டு என்பது ஒரு தனி நாள்காட்டு அல்ல. அதுவும் ஒரு நாள்காட்டுக் கூட்டம் தான்; ஐந்த நாள்காட்டு அடங்கிய கூட்டம். அந்தக் கூட்டம் இரவில் பார்க்கும் போது ஒரு கலப்பையின் வளைந்த நுகத்தடி போன்று காட்சியளிக்கும். காளையின் கழுத்தில் கட்டப்படும் மரமும் கூட நுகத்தடி என்றே தமிழில் அழைக்கப் படும். [தற்பொழுது மரு. செயபாரதி அகத்தியர் மடற்குழுவில் மகவோட்டம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். அதை விளக்கும் முகமாக மடங்கல் இராசியைப் (சிம்ம இராசியைப்) படம் போட்டுக் காண்பித்திருக்கிறார். அதற்கான சுட்டி கீழே.

http://www.geocities.com/jaybee4127/magam_simmaraasi.html

இந்த இராசிக்குள் ஐந்து நாள்காட்டுக்கள் கொண்ட மக நாள்காட்டுக் கூட்டமும் காணப் படும். அந்தக் கூட்டத்தை மட்டும் பார்த்தால், அது ஒரு வளைந்த நுகத்தடி போல் இருப்பது புலப்படும்; அதே பொழுது. முழு இராசியையும் பார்த்தால் சிகைமா - சிங்கம் - என்ற உருவம் புலப்படும். சிகைமா - சிங்கம் என்ற சொற்பிறப்பை காலங்கள் என்ற என் தொடரில் கூறியிருக்கிறேன்.] வளைந்த நுகம் என்பதால் கொடுநுகம் என்று இந்தக் கூட்டம் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. நகரமும் மகரமும் தமிழில் போலியானவை. நுடம் முடம் ஆகும்; முப்பது நுப்பது ஆகும். அந்த வகையில் நுகம் முகம் என்று ஆகும். அடுத்து உகரத்தை அகரமாயும், அகரத்தை உகரமாயும்/ஒகரமாயும் சிலபோது பேச்சில் பலுக்குவது தமிழில் பலரும் செய்வது தான் (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) நுகம்>முகம்>மகம் என்ற திரிவில் நாள்காட்டின் பெயர் அமைந்தாலும் உருவம் நுகத்தடி என்பதை மறந்து விடாது பார்த்தால் பெயரின் உள்ளே இருக்கும் தமிழ்மூலம் புலப்படும்.

இனி மக நாள்காட்டுப் பொருந்திய மாதம் மகயி. எப்படித் துகள் பொருந்திய கூட்டம் துகயி>துகசி>தூசி என்று ஆகிறதோ, அதே போல மகம் நிறைந்தது மகயி>மகசி>மாசி என்று ஆகும். யகரம் சகரமாவதும் தமிழ்த் திரிவு தான். உயிர்>உசிர் என்று திரிவை எண்ணிப் பாருங்கள். இனி, மக என்னும் ஒலி மா என்று நீண்டொலிப்பதற்கும் காட்டுக் கூறமுடியும். மகன்>மான் (அதியமான்), மகள்>மாள் (வேள் மகள்>வேண்மாள்) என்று ஆவதைப் போல, மகசி மாசியாகும்.

சூரியச் சந்திரமான மாதத்திற்கு மாறாக, மூன்றாவது முறையில் நிலாவை முற்றிலும் ஒதுக்கிட்டு, புவி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டுக் காலத்துக்குள் எத்தனை முறை தன்னுருட்டு (self rotation) செய்கிறது என்று பார்த்தால், 365.256364 தன்னுருட்டுக்கள் (அதாவது 365.256364 நாட்கள்) என்று புலப்படும். இந்தக் கணக்கைச் சூரிய மானம் என்று சொல்லுவார்கள். (சூரியன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத்தொடர்ச்சி ஒரு சூரிய ஆண்டு.) இதில் ஒவ்வோர் ஆண்டையும் அறவட்டாக (arbitrary) 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு சூரிய மாதம் அல்லது ஞாயிறு என்பது 365.256364 / 12 = 30.43803 நாட்கள் கொண்ட காலத் தொடர்ச்சியாகும். (மாதம் என்ற சொல் முதலில் மதியை ஒட்டி எழுந்திருந்தாலும் இன்று பொதுமைப் பொருளையையே குறிக்கும் சொல்லாக இதைப் பழகியிருக்கிறோம். அதே பொழுது திங்கள், ஞாயிறு என்ற சொற்கள் விதப்பான பொருளையே காட்டுகின்றன.)

சூரியச் சந்திர மானக் கணக்கில் மாதம் என்னும் காலத் தொடச்சி பெருமிதி (primitive)யானது; ஆண்டு என்பது அடுத்து வருவது; மாதத்தில் இருந்து பெறப்படுவது. அதே பொழுது, சூரிய மானக் கணக்கில் புவி சூரியனைச் சுற்றிவரும் சூரிய ஆண்டு என்பதே பெருமிதியானது; மாதம் என்பது பின்வருவது; ஆண்டில் இருந்து பெறப்படுவது. இந்த அடிப்படையைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

ஞாயிற்று மாதங்கள் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துளை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று சொல்லப் படும். இவை அத்தனையும் நல்ல தமிழ்ப்பெயர்கள். [ஒருசிலர் புரியாமல் கும்பம், மீனம் போன்றவை வடமொழி என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் சிலர் வடமொழித் திரிவையும், மொழிபெயர்ப்பகளையும் பெருமிதியாக எண்ணிக் கொண்டு தமிழ்ச்சொற்களை வழிப்பட்டதாகச் சொல்லுவது உண்டு. வடசொற் தோற்றமுள்ள சொற்களின் பிறப்பை ஆய்ந்துபார்க்கும் போதுதான், தமிழ் வேர் சரியாகப் புலப்படுகிறது.] தற்போது காலங்கள் என்ற என் தொடரில் இந்தப் பெயர்கள், மற்றும் நாள்காட்டுகளின் சொற்பிறப்புகளை என்னால் முயன்றவரை தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறேன். முதல் ஆறு மாதங்களின் பெயர்களை இதுவரை விளக்கியிருக்கிறேன். மீதம் ஆறுமாதங்களின் பெயரை இனி வரும் பகுதிகளில் விளக்க வேண்டும். (மேலே, மேழத்தில் இருந்து மாத வரிசையை எழுதியதால், மேழத்தில் தான் தமிழ் ஆண்டு தொடங்க வேண்டுமா, அன்றிச் சுறவத்தில் இருந்து தொடங்கலாமா என்ற கேள்விக்குள் இப்பொழுது நான் போகவில்லை; அதற்கான மறுமொழியைக் காலங்கள் தொடரில் உறுதியாகச் சொல்லுவேன். கூடவே, இந்த மறுமொழி, தினமணி நாளிதழில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. எஸ். ராமச்சந்திரன் அண்மையில் வெளியிட்டிருந்த "சித்திரையில் தான் புத்தாண்டு" என்ற நீண்ட கட்டுரைக்கும் முன்னிகையாக இருக்கும்.)

தமிழ்நாடு, மலையாளம் போன்றவற்றில் சூரியமானக் கணக்கே பின்பற்றப் படுகிறது. ஒரு காலத்தில் திங்கள் மாதமும், ஞாயிற்று மாதமும் அருகருகே சேர்த்துத் தான் சொல்லப் படும். பல சோழர் காலக் கல்வெட்டுக்களில் அப்படி சேர்த்துச் சொல்வது பதிவு செய்யப் பட்டிருக்கிறது. பின்னால், இந்தப் பழக்கம் பழைய சேரலத்தில் (இன்றையக் கேரளத்தில்) மட்டுமே இன்று நிலைத்து, இன்றையத் தமிழகத்தில் மறைந்து போனது; (அது என்னவோ தெரியவில்லை, பழைய தமிழ் வழக்கங்கள் பலவும் இன்று கேரளத்தில் மட்டுமே மீந்துள்ளன. தமிழகத்தில் அவை மாறிப் போய்க் கிடக்கின்றன. காட்டாக தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படி, ஆவணியில் ஆண்டைத் தொடங்கும் வழக்கம் தென்கேரளத்தில் இன்றும் உள்ளது.) கூடவே சூரிய மாதங்களைத் திங்கள் பெயரை வைத்தே போலியாய் அழைக்கும் குழப்பமும் இன்றையத் தமிழகத்தில் ஏற்பட்டது. அதன்படி மேழ ஞாயிற்றைச் சித்திரை என்றும், விடை - வைகாசி, ஆடவை - ஆனி, கடகம் - ஆடி, மடங்கல் - ஆவணி, கன்னி - புரட்டாசி, துலை - ஐப்பசி, நளி - கார்த்திகை, சிலை - மார்கழி, சுறவம் - தை, கும்பம் - மாசி, மீனம் - பங்குனி என்றும் போலியாய் அழைக்கப் பட்டன.

ஒரு வேடிக்கையைப் பாருங்கள். முதலில் வெறும் சந்திர மான மாதத்திற்கு அழைத்த பெயர்கள், கொஞ்சம் நீண்டு சூரியச் சந்திர மான மாதங்களைக் குறித்து பிறகு இன்னும் நீண்டு முற்றிலும் சூரிய மான மாதங்களைக் கூடக் குறிக்கத் தொடங்கின. குழப்பம் வராதா? இல்லையா? வானியலில் துல்லியமாய்க் குறிக்க வேண்டுமானால் (நாள்காட்டி என்பதில் துல்லியம் காட்டாமல் எப்படி?) சூரிய மானப் பெயர்களை போலிப்பெயர் சொல்லாது மேழம் ...... மீனம் என்றே குறிப்பதே நல்லது. இன்னமும் சேரலத்தார் அப்படித்தான் குறிக்கிறார்கள். (தனித்தமிழ் இயக்கத்தார் மட்டும் பாவாணர், பெருஞ்சித்திரனாரின் முயற்சியால் சூரிய மானப் பெயர்களையே இப்பொழுது பயிலுகிறார்கள்.)

மக நாள்காட்டை வைத்துப் பல பழமொழிகளை நாட்டுப்புறத்தில் சொல்லுவார்கள். அரசியலில் கழக அம்மாவுக்கும் கூட ஒரு மக நாள்காட்டுப் பழமொழி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் இங்கு விவரிக்கப் புகவில்லை.

மக நாள் இந்த ஆண்டு பெப்ருவரி 21, மாசி 9- ல் நடைபெறும். மாசி மகம் என்னும் இந்தப் பண்டிகை சிவ, விண்ணவ நெறிகளில் தீர்த்தவாரியோடு - அதாவது கடலாடல், ஆறு, குளம் போன்றவற்றில் நீராடல் - சேர்த்துச் சொல்லப்படும். தீத்தம்/தீர்த்தம் என்ற வடமொழிச் சொல் துளித்தம் என்னும் தென்சொல்லோடு தொடர்பு கொண்டது. (எப்படிச் சிந்து என்ற சொல் சிந்துகின்ற நீரைக் குறிக்கிறதோ, அது போலத் துளிக்கின்ற நீர் துளித்தம்.) சமய நெறிகளில் மாசி மகத்திற்கு இருக்கும் தொடர்பையும் நான் இங்கு எடுத்துரைக்க முற்படவில்லை. [மார்கழி நீராடல், தைந் நீராடல், தீர்த்த வாரி என குளிர்காலத்தில் அடுத்தடுத்த மாதங்களில் அதிகாலை நீராடலை அழுந்திச் சொல்லும் சூழ்க்குமம் தான் என்ன? இது சமய நெறிகளின் வழிகாட்டலா? அல்லது பண்பாட்டு வழக்கின் தாக்கமா? ஓர் ஆய்வுக் கேள்வி நம்மை அழைக்கிறது.]

அடுத்து, வேறொரு புலனத்துக்கு நகரலாங்களா?

அன்புடன்,
இராம.கி.

மீள்தொடங்கல்

தமிழகத்தில் தெரியும் அரசியல் தடுமாற்றம், ஈழம் பற்றிப் பேசுவதில் விரவிக் கிடக்கும் அச்சப் போக்கு, "என்னை ஒட்டாது இருந்தால் போதும்" என்னும் தாமரையிலைத் தண்ணீர்மை, தமிழகம் - ஈழம் பற்றிய வரலாற்றுத் தெளிவில்லாமை - இது போன்ற கருத்துகள் குறித்துத் துண்டும் துணுக்குமாய் நான் கேட்ட ஒரு உரையாடலும், இதன் முடிவில் தமிழர்போக்கு பற்றியிருந்த சில முன்னிகை(comment)களும் என் மனத்தை உறுத்திக் கொண்டு இருப்பவை.

முதலில் உரையாடலைப் படிப்போம். [உரையாடல் அதே சொற்களில் கீழே இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அமையுமாறும், அதே பொழுது படிக்கச் சுவை கருதியும், கொஞ்சம் எடுவித்துக் (edit) காட்டியிருக்கிறேன்.]
----------------------------------------------
இங்கே பாருங்க தம்பி, பாலைலே வானம் பார்க்குறது ..... மழைக்காகவும் இருக்கலாம், நாள்காட்டு, கோளுன்னு ராத்திரி வெளிச்சத்துக்காகவும் இருக்கலாம். நல்ல வேளையா, மழைக்கு வானம் பார்க்குற சோகம் இந்த வருசம் இல்லை; கொட்டோ கொட்டுன்னு கொட்டி, குளம், கம்மாய்ன்னு வெள்ளமாக் கிடக்கு. இருந்தாலும் வெல வாசிதான் கன்னாப் பின்னான்னு ஏறிக் கிடக்கு.

ஆமாண்ணே! பொன்னி வெல கிலோ இருவத்தஞ்சு சொல்றான். ஒரு நாளைக்கு நூறு ரூவா இருந்தாலும் ஒரு குடும்பம் ஒழுங்காச் சாப்பிட முடியாது போலெ. பக்கத்துலே ஏதாச்சும் வாங்கிவருவோம்னு பார்த்தா, பேருந்துக் காசு 4 ரூவா, 5 ரூவா இருக்கு. ஓர் இளநீ 8 ரூவா, 10 ரூவா விக்குது. நன்னாரி "சர்பத்" கூட, அஞ்சு ரூபாய்க்குக் குறையமாட்டேங்குறான். எங்கேயும் குடிக்கிறதுக்கு நல்ல தண்ணியை காணோம். தவிச்ச வாய்க்குத் தண்ணீர், மோர் குடுக்க, இப்ப யார் பந்தல் வைக்குறா, சொல்லுங்க? கடைசிலே எல்லாப் பயலுகளும் ஆளுக்கு ஒரு புட்டில் (bottle) தண்ணியைக் கையிலே தூக்கிட்டே அலையுறாய்ங்க..... "கலி காலத்துலே, காசுக்கு தண்ணி விப்பாக"ன்னு கேள்விப் பட்டிருக்கேன்; இப்ப அது உண்மையாப் போச்சு.

என்ன தம்பி, நாமளாவது அன்னாட வாழ்க்கையிலே அல்லாடறதைப் பத்திப் பேசிட்டிருக்கோம். தெற்கிலும் தெற்கே (புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.) உசிருக்குல்லே அல்லாடுறாக. அதப் பேச மாட்டேங்குறீயேப்பா?

பேசப் படாதுன்னு இல்லைண்ணே! நம்மளை யாரு பேச விடறாக? வேரோடே அவுகளை அழிச்சுப்புடத்தான் ஒரு கூட்டமே கருவங் கட்டிக்குனு அலையுதே! நம்மூர்க்காரவுகளும் இதுக்கு தொணையாயில்லெ போறாக! கத்தி, கபடா, தளவாடம்னு எல்லாம் இங்கேர்ந்து தான் போகுதுன்னு பரவலாச் சொல்லிக்கிடறாக.

என்னப்பா நாயம்? நம்ம பங்காளிகளைக் கொல்ல நாமளே துணை போகலாமா? கேக்க ஒரு நாதியில்லையா?

ஆமாண்ணே! தெக்கத்திகாரவுகளைப் பத்தி வெளிப்படையா யாருண்ணே நம்மூர்லே பேச முடியுது, சொல்லுங்க? ஒரு நாளிதழ், ஒரு தாளிகை, ஒரு தொலைக்காட்சி இப்படி ஏதாவது ஒண்ணு வெளிப்படையா நம்மூர்லே ஆதரிச்சுப் பேச முடியுதா? உடனே "தேசத் துரோகம்"னு சொல்லி அமத்தியர்றாய்ங்க. (எந்த அரபு நாட்டுலேயாவது பாலத்தீனியனைப் பத்திப் பேசமுடியாமல் இருக்க முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க. வடக்கு அயர்லாந்து பத்தி தெற்கு ஐரிசுக்கார பேசாம இருந்திருக்காகளா? போசுனியா பத்தி யுகோசுலாவுக்கார? ஏன் நம்ம மட்டும் இப்படிப் பேசமுடியாம இருக்கு?) தெற்கத்தியாட்கள் பேரைச் சொன்னாலே, அவுக நாட்டுப் பேரை எடுத்தாலே, ஒரு மாதிரியா இங்கே பார்க்குறாய்ங்களே? அது ஏன்? ஒரு விலங்கு பேரைச் சொன்னாலே "உள்ளே போடுறா"ன்னு பயமுறுத்துற அளவுக்கு, நம்முரைக் கெடுத்து வச்சிருக்காய்ங்களே, அது ஏன்?. இதுலே பேராயம், பாரதிய சனதா, அய்யா கழகம், அம்மா கழகம், மத்த கழகங்கள்னு பேருகள் தான் வேறேயெ தவிர, எல்லாரும் ஒரே குட்டையிலே ஊறுன மட்டைகளாட்டம் தான் நடந்துக்குறாய்ங்க. தமிழ், தமிழன்னு சொல்றதெல்லாம் ஒரு பாவலாத் தான். மனசுலே இருக்குறதை வெளியிலே சொல்ல முடியாம, மருகிக்கினே பயந்து சாகுறாய்ங்க. அவனவன் சம்பாதிச்சதைக் காப்பாத்திக்கோணுமில்லெ. இவுனுக போடுற கட்டியத்துலே (condition), அண்ணன், தம்பி, தவறிப் போனா, ஒப்பாரி வச்சு பாடப்புடாதாமே? "என்னடா இது, வாழ்றது நம்முர்லே தானா?"ன்னு சந்தேகம் நமக்கு அப்பப்ப வந்துருது; மொத்தத்துலே, நாடு போற போக்குச் சரியில்லெண்ணே.

ஆமா தம்பி, உடுத்துன துணியோடு எல்லாத்தையும் இழந்து ஓடியாரவுகளையும் "ஊடுருவல்"ன்னு சொல்லிடுறாய்ங்க. என்னய்யா இது, பொழைப்புக்கா ஓடியார்றாக, உசிரு நாளைக்கு நிலையில்லெ, "வானத்துலேர்ந்து குண்டு போட்டுக்குணே இருக்கான்"னு பதறியடிச்சு ஓடியார்றாக - அப்படின்னாலும் அவுகளை ஆதரிக்குறவுகளுக்கு இங்கே தடா, பொடா தான். சரி, ஓடியாறத்தான் வழி விடலை. கொல்லுறதுக்கு வழிபண்ணாம இருக்கலாமில்லியா? அதுவுமில்லியே? "இந்தாடா, மாப்புளே, இதையும் வச்சுக்க, எங்க பங்காளிகளை நீயே வெட்டிச் சாய்ச்சுரு, அப்பத்தான் ஒழுங்கா இருப்பாய்ங்க"ன்னு அரிவாள், கத்தியை எதிரிக்கு அணுக்கம் பண்ணிக் குடுத்தா எப்படி?

அண்ணே சரியாச் சொல்றீக! நம்மூர்லேர்ந்து சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்குறது கொஞ்சம் கூடச் சரியில்லேண்ணே. உடம்பிறந்தானுக்கு நாமளே உலை வெக்கலாமா?

நல்லாக் கேட்டுக்க தம்பி, சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்கறதை மட்டும் பார்த்தா நமக்கு நிலைமை புரியாது; இன்னும் ஆழப் போனாத்தான், சிக்கல்லே இருக்குற சூழ்க்குமம் புரியும். சிங்களத்துக்கும் இங்கேயும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கு போலிருக்கு. அங்கே தமிழரசு ஒண்ணு ஏற்படப்படாதுண்ணு தடுக்குறதுலே, நம்ம நடுவணரசு உறுதியாவே இருக்கு. நம்மளைப் போன்ற தமிழ்க்காரவுக மனசு நடுவணரசுக்கு மாறியிருக்குன்னு கூட அது உணர்ந்ததாத் தெரியலை.

அதெப்படிண்ணே! தமிழராகிய நாமளும் சேர்ந்தது தானே நம்ம நடுவணரசு? நம்ம உணர்வை உதறித் தள்ளிருமா?

பாக்குறதுக்கு நடுவணரசில் நாம சேர்ந்து இருக்குறோம்குறது ஒரு தோற்றம் தம்பி, உண்மையிலே நம்ம ஆட்கள் அங்கே எதுவும் மாறிச் சொல்லலை; நடுவணரசு கேட்கவும் இல்லை. இவய்ங்க ஒரு பக்கம் சில அமைச்சுகள்லெ பரிபாலனம் பண்ண, இன்னொரு பக்கம் நடுவணரசு எடுக்குற முடிவுகள் நம்ம எண்ணத்துக்கு மாறித்தான் இருக்கு. அதோட மட்டுமில்லை; இன்னொரு பக்கமும் பாரு, படகு எடுத்துக்கினு நம்மூர்க்கரவுக கடலுக்கு மீன்பிடிக்கப் போனா, "அங்கே புடி, இங்கே புடி"ன்னுனு சிங்களத்தான் தென் கடல்லேயும், கீழக் கடல்லேயும் குண்டு போடுறான். இந்தக் குண்டுமாரிலே மாட்டிக்கிணு கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஆளுகளும் செத்துப் போறாக. போனவாரம் கூட இப்படித்தான் ஓராளு போயிட்டாரு; என்னாச்சு, ஏதாச்சுன்னு கேக்கக் கூட தமிழக அரசலே யாரையும் காணோம். செய்தித்தாள்லேயும் எங்கேயோ ஒருமூலையிலே பத்தி போடுறான். கடைசிலே, "இந்தாங்கப்பா, ஒரு லெச்ச ரூவா வச்சுக்குங்க, இனிமே அந்தப்பக்கம் படகுலெ மீன்புடிக்கப் போகாதீக"ன்னு போதனை மட்டும் கொடுத்தர்றாக. "என்னய்யா இது, தெரிஞ்ச தொழில் மீன்புடிக்குறது மட்டும் தானே! அங்கே போகாதேன்னா, எப்படி? நம்மூருக்கும் அந்தக் கடல் உரிமைதானே? மீன்புடிக்காம, நாங்க உயிர்வாழ்றது எப்படி? ஆக, ஒண்ணும் நமக்குப் புரிய மாட்டேங்குது. எந்த நாட்டுலே நாம இருக்கோம்? நாம தமிழ் தான் பேசுறமா, இல்ல, சிங்களம் பேசுறமா?"

சரியாச் சொன்னீக அண்ணே! வணிகம் அது இதுன்னு சொல்லி நம்மூர்க் கப்பல் நம்முர்த் துறைகள்லே அணையலாம்னு, கடலுக்குள்ளே நம்ம அரசே வாய்க்கால் வெட்டப் போனா, "அய்யோ, எங்க சாமி போட்ட பாலத்தை வெட்டுறாய்ங்களேன்னு" முட்டாப் பயக சிலர் நம்மூர்லேயே ஒப்பாரி வைக்குறாய்ங்களே? அதையும் கவனிங்க.

அதே ஏன் கேக்குறே, தம்பி, வெவரங் கெட்ட பயலுகளுக்குச் சேதுன்னா பொருள்னு கூட வெளங்கலெ! வடக்கத்திக்காரன் இராமர் அது இதுன்னு சொன்னான்னா, இவய்ங்களும் ஆமாஞ்சாமியா? நம்மூர் இயற்கை நமக்குல்லே புரிபடோ ணும். "சேதுன்னா தமிழ்லே பாலமில்லைப்பா; கரை; சேற்றாலே சேர்த்தது சேது. கம்மாய்க்கரை மாதிரி கிழக்குக் கடலுக்குச் சேது ஒரு கரை; சேதுக்கரைக்குத் தெக்கெ இருக்குறது தென்கடல்"னு சொல்லியும் விளங்கலே. அந்தக் கரை வழியா பத்தாயிரம் வருசத்துக்கும் முன்னாடி, விலங்கு, மனுசனெல்லாம் ஊர்ந்து, நடந்து போய் தெற்கே இருக்குற தீவை ரொப்பியிருக்காய்ங்கப்பா, ஒரு காலத்துலே அது பழந்தமிழ் நாடுய்யா. அதுலே ஒரு பகுதி ஏழ்பனை நாடு, இன்னைய யாழ்ப்பாணம். எப்படிப் பார்த்தாலும் அந்தத் தீவு நம்ம ஊருக்கு நெருக்கமய்யா. இன்னைக்கி எப்படியோ அது மாறிப் போயிருச்சு. சிங்களனும் தமிழனும் சேர்ந்திருக்குறாப்புலே ஆயிப் போச்சு. பின்னாடிச் சண்டையும் ஆயிப்போச்சு. இதெயெல்லாம் விளங்கிக்காம, இராமர்தான் பாலங் கட்டுனார்னா, தீவுக்குள்ளே அவருக்கு முன்னாடி விலங்குகளும், மக்களும் எப்படிப் போனாங்க, பாலம் கட்டியா? - ன்னு ஒரு பய கேக்க மாட்டேங்குறான். இல்லெ, யானை, பூனையெல்லாம் பத்தாயிரம், இருபதாயிரம் வருசத்துக்கு முன்னாடி, உப்புத் தண்ணியிலே நீச்சலடிச்சுப் போய்ச் சேர்ந்துதா?

சேதுங்குறது ஒரு இயற்கை மேடுய்யா; நீரோட போக்குக்குத் தக்க மாதிரி அதன் மட்டம் கூடும், குறையும். கால மாற்றத்துலே ஏற்கனவே இருந்த கரையையும் (=சேதுவையும்) மீறி கொஞ்சங் கொஞ்சமா கடல் மட்டம் இப்ப உயர்ந்து போச்சு; இயற்கையான மேடும் (=சேதுவும்) கூட இப்பக் கடலுக்குள்ளே முழுகிப் போச்சு. "சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" னு அந்தக் கடல்மேட்டுக்கு மேலே இன்னும் கரையை உயர்த்தி வீதி போடுங்கப்பான்னு பாரதி பாடினானே? இந்தப் பயலுகளுக்கு அதாவது புரியுதா? "ஆகா, பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி"ன்னு மேடையிலே பேசுனா மட்டும் போதுமா? அடப் புரியாத பயலுகளா, இராமயணக் கதைக்கும் இந்தச் சேதுவுக்கும் தொடர்பில்லைன்னு தலைலே அடிச்சிக்கினு சொன்னாலும் கேக்குறாப்புலே தெரியலையே. வேணுமின்னாச் சாமியை நல்லாக் கும்பிடுங்கப்பா! அதுக்காக, இல்லாத கதையெல்லாம் சாமி மேலே இட்டுக் கட்டாதீக.

ஆமாண்ணே! இந்த அடிப்படையைப் புரிஞ்சுக்காம, உச்ச நய மன்றம் (supreme court) வரைக்கும் வழக்குப் போடுறாய்ங்க! முட்டாப் பயலுகன்னு இவய்ங்களைச் சொல்லாம, வேறே யாரைச் சொல்லுறது போங்க? தேர்தலுக்காகப் பயந்துக்குணு பேராயக் கட்சிக்காரங்களும் உண்மையை இழுத்து மூடிருவாய்ங்க போலேருக்கே; மருத்துவரய்யா வேறெ, கூட இப்பச் சேர்ந்துக் கிட்டாரு.

ஆமா தம்பி, யாரோ சொன்னாய்ங்க! அவரவருக்கு அவரவர் அரசியல்னு. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இதுதான் சாக்குன்னு சிங்களக்காரன் தன்னூர்லேர்ந்து 30 இடங்களைப் பட்டியல் போட்டு "இதெல்லாம் இராமாயணத்தோட தொடர்புள்ள இடங்கள்"னு குழம்புன குட்டையில மீன்புடிக்கிறான். இங்கெ சில கேணப்பயல்களும் அதெ எடுத்துக்கிட்டு கேக்காய்ங்க: "பார்த்தீகளா, நாங்க சொன்னது சரியாப் போச்சு, இராமர், சீதையோட பாதங்கள் இங்கெல்லாம் பட்டிருக்கு; அப்பேர்க்கொத்த பாலத்தை வெட்டலாமா?" கூறு கெட்ட நம்ம பயல்களும் இதெக் கேட்டுக்கிட்டு இருக்காய்ங்க. அட மடப்பயலுகளா! சிங்களனுக்குத் தேவை - வாய்க்கால் அமையக் கூடாது; அப்படி அமைஞ்சா, கொழும்புத் துறைமுகம் சுத்தமாப் படுத்துரும்; அவன் பொருளாதாரம் பெரிசா அடிபட்டுரும்; தூத்துக்குடித் துறைமுகம் இதுக்கு மாறா ஓங்கி எழுந்திரும்; அதனாலெ, அதெ நிறுத்தணும்னு சொல்லி "போடுறா அனுமாரு"ன்னு குட்டிக் கரணமே அடிக்குறான். அவன் சூழ்ச்சி இவய்ங்களுக்குப் புரியலை. பொருளாதாரம் பேசுறாய்ங்க பொருளாதாரம், ரொம்ப வக்கணையா.....

ஆமாண்ணே, போற போக்கைப் பார்த்தால், மொத்தத்துலே சேதுக் கால்வாய்த் திட்டம் இனிமேப் பிசிபிசுத்துரும் போலேருக்கு. ஒருபய கண்டுக்க மாட்டான்னு நினைக்கேன்.

ஆமா தம்பி, தமிழன் தான் ஏமாளியாச்சே. "ஊரு ரெண்டானாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"னு சொல்லுவாக. இந்தக் கழகங்கள் தான் இங்கே ரெண்டாகிக் கிடக்கே, அய்யா சொன்னா, அம்மாவுக்கு ஆகலை; அம்மா சொன்னா அய்யாவுக்கு ஆகலை. அப்புறம் என்ன? எல்லாக் கூத்தாடிகளும் தனக்கு என்ன தேறும்னு கும்பல் போட்டு கூடி வர்றானுக. இவுக சண்டை என்னைக்கி நிக்குதோ, அன்னைக்குத் தான் நமக்கு விடியல்னு ஆகிப் போச்சு. அதுக்குப் பொறவுதான் ஊருலகமும் நம்ம மதிக்கும். பொதுவா, தமிழ், தமிழன்னாலே இந்தியாவுலே, உலகத்துலே, ஏகப்பட்ட பேருக்கு இளக்காரமாய்த்தான் இருக்கு. அதுக்கு முதற் காரணம் நமக்குப் பெருமிதமில்லே; நம்ம வரலாறு நமக்கே தெரியலை; எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுறோம். கட்சி அரசியல்லே வெட்டுக் குத்துன்னு ரொம்பவே சண்டையடிச்சுக்குறோம். இத்தனை நாள் பெரியாருக்கு அப்புறமும் எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியதுன்னு தெரிஞ்சுக்கிறதில்லெ. பாழாப் போன திரையுலகுலே தெரியுற நிழழை எல்லாம் நிலைன்னு நினச்சு, ஆகா, ஓகோன்னு குதிக்குறோம். நம்மில் பலருக்கும் ஊறிப்போன சாதியுணர்வும் தடுக்குது. தமிழன்குற உணர்வாக்கம் இன்னும் சரியா அமையலெ. இந்தியன்குற அடையாளத்துக்கும், தமிழ்ன்குற அடையாளத்துக்கும் உள்ள உறவைப் புரிஞ்சுக்கலே; ஒண்ணைப் பேசுனா, இன்னொண்ணு அதுக்கு எதிருன்னு ஊரெல்லாம் பரப்புரை நடக்குது. மொத்தத்துலே தமிழன்குற முகவரியை மறந்துருங்கிறாக.
-------------------------

இந்த உரையாடலின் கடைசியில் வரும் முன்னிகைகள் என்னுள்ளும் ஆழ்ந்து இருப்பவையே. தமிழரின் தற்போதைய நிலைக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளே காரணம் என்று நான் எண்ணுகிறேன். அதோடு, வெளிமுரணைக் காட்டிலும் உள்முரண் ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டியது என்று இயங்கியலில் (dialectics) சொல்லுவார்கள். தமிழரின் இன்றைய அவலம் பற்றிய சிந்தனைகள் எழும்போதெல்லாம், தமிழ் - தமிழர் என்ற பெருமிதத்தைக் கூட்டும் வகையில் எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது என் பதிவில் எழுதிக் கொண்டுதான் வருகிறேன். எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியது என்றும் எனக்குத் தெரிந்த வகையில் தெளிவுறுத்தி வருகிறேன். கூடவே நம் வரலாறு பற்றியும் சொல்லி வருகிறேன். இருந்தாலும் இப்படிச் சொல்லுவதைத் தடுத்த நிறுத்தும் முயற்சி, ஒரு சிலரால் தொடர்ந்து வலைப்பதிவுலகில் செய்யப் பட்டே வருகிறது.

நடுவில் கொஞ்ச காலம் ஒரு மாதிரி சலிப்பு வந்ததிலும், ஊர்சுற்றியதிலும், என் பதிவு தொய்ந்து போனது. அப்படித் தொய்ந்தது சரியில்லை என்ற எழுச்சியாலும், "செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்ற எண்ணத்தாலும், கிளர்ந்து, மீண்டும் ஒருமித்து எழுத வேண்டும் என்று முனைந்த போது, தமிழ்மண நிர்வாகத்திடமிருந்து நாள் காட்டச் சொல்லி ஓர் அழைப்பு வந்தது. அதையே ஒரு தூண்டுகோலாய் எடுத்துக் கொண்டு மீண்டும் இப்பொழுது எழுதத் தொடங்குகிறேன்.

சென்ற காரிக்கிழமை (= சனிக்கிழமை) மாலை நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கொஞ்ச நேரம் கேட்டேன். பிடித்திருந்தது. அவரைப் போன்ற பாடகர்கள் பெருகவேண்டும். அந்தப் பாடல்வரிகளாவது நமக்கு உறைக்கட்டும்.

உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்?
................

- தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?)

அன்புடன்,
இராம.கி.