Friday, January 31, 2020

பாசண்டச் சாத்தன் - 22

மெலனின் என்ற நிறப்படிகம் உடலின் மேல்தோல் நீரில் எவ்வளவு கரைகிறது / தேங்குகிறது  என்பதைப் பொறுத்தே  மாந்தநிறம் வேறுபடுகிறது. மெலனின் வெகுவாகத் தோல்நீரில் கரைந்தால்  செம்மை, பூங்கை (pink), ஏன் வெள்ளையாகவும் தோலமையும். மாறாகத் தோல்நீர் குறைந்து மெலனின் படிவமாகத் தேங்கினால் தோல்நிறம் பழுப்பு, அரக்கு, புகர் (brown), ஏன் கருப்பாயும் அமையும்.  யானையிலும் இப்படியே. மெலனின் போன்றது யானையின் தோல்நீரில் கரைந்தால், சாம்பல், பூங்கை நிறத்தில் அது அமையும். இல்லெனில் கருத்துக்  காணும். வெள்ளானை (white/ albino elephant) என்பது அரியவகை யானை ஆனால் தனித்த விதப்புயிரி (species) அல்ல.  வெள்ளானை= வெளிறிய யானை.  ஓவியங்களில்  சிந்து வெள்ளையாய்க் (snow white) நிறங் காட்டினும்,  மெய்யாய், அது சொவ்வும் செம் புகர் நிறமே (soft reddish-brown).அதே யானையை ஈரத்தோடு காண்கையில் பூங்கையாயும் தோற்றும்.

யானைத்தோலில் நீர்ச்சத்து கூடுவது குறித்தே ஈர்+ஆவது+அம் = ஈராவதம் என்ற பெயர் ஏற்பட்டது. இதைச் சங்கதம் கடன்வாங்கி ஐராவதமாக்கும். தமிழ்த்தோற்றம் அறியாத நம்மவர் தடுமாறுவர். பர்மாவின் பேராறான ஐராவதியும் ஈர்>ஞீர்>நீர் என்ற பொருள்வழியே பெயர்பெற்றது. தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைகையில் இந்த யானை வெளிப்பட்டதாயும், பறக்கும் யானை என்றும் கற்பனைக் கதை சொல்வர். உண்மையில் ஈரத்தில் கரையும் நிறப்பொருளால் பெற்ற பெயர் இது. இக்கட்டுரையின்  13 ஆம் பகுதியில் ஸெச்சநாகா எனும் வெளிறிய யானையை  பிம்பிசாரன் வைத்திருந்ததையும், தன் இளையமகனுக்கு யானை  கொடுத்ததையும், மூத்தமகன் அசாதசத்து அதற்கு ஆசைப்பட்டதையும்,  அசாதசத்துவுக்கும் அவன் தாய்வழித் தாத்தனுக்கும் இடையே போர் ஏற்பட்டதையும், மகதம் பேரரசாய் உருவான கதையையும் முன்பார்த்தோம்.  ஆக வெள்ளானை, தொன்மத்தில் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் பெரும்பங்கு கொண்டுள்ளது.


இன்றுங்கூட பர்மா, தாய்லந்து, கம்போடியா போன்றவற்றில் வெள்ளானை வைத்திருப்பது அரச/அதிகாரக் குடும்பங்களின் வெளிப்பாடாகும். (பர்மாவின் இற்றைத் தலைநகரான நேப்பிடௌவில்    (Nay-pyi-daw) நாங்கள் நேரடியாய்ப் பார்த்த யானையின் படத்தை  இங்கு இணைத்துள்ளேன். வெள்ளானை என்பது அந்தக் காலத்தில் நம்மூரில் இருந்ததா என்பது தெரியாது. ஆனால் கட்டாயம் வடக்கே இருந்திருக்கிறது. வெள்ளானையின் இந்த இயலிருப்புச் செய்தி சேக்கிழாருக்குத் தெரியாதா, என்ன? (வடக்கின் கவரிமா வள்ளுவருக்குத் தெரிந்ததே?) பின், வெள்ளானை பறக்குமெனும் தொன்மக் கதையைச் சேக்கிழார் ஏன் சொன்னார்? ஒருவேளை சுவையான கற்பனை என்று சொன்னாரோ? தெரியவில்லை. வெள்ளானைச் சருக்கத்தில் சேரமான் குதிரை பறந்ததும், “வாயு வேகம், மனோவேகம்” போல் ஒரு கற்பனையே. ஓர் இலக்கிய ஆசிரியருக்கு அப்படிச் சொல்ல உரிமையுண்டு தான். பெரும்பாலும் சிவப்பெருமானரிடம் அக்கதையை சேக்கிழார் கேட்டிருக்கலாம். அதைச் சொல்வது தம் கதைநாயகனுக்கு மேலும் புகழ் சேர்க்குமெனப் பெரியபுராணத்தில் சேர்த்தார் போலும். சரி, சேரமான் செய்த திருக்கயிலை ஞான உலாவிற்குள் வருவோம்.

உலா எனும் சிற்றிலக்கியத்தில் இறைவனோ, அரசனோ, தலைவனோ யானை, குதிரை, தேர் போன்றவற்றில் நகரைச் சுற்றிவரும்போது பேதை (5 முதல் 8 வயது), பெதும்பை (9 - 10), மங்கை (11 - 14), மடந்தை (15 - 18), அரிவை (19 - 24), தெரிவை (25 - 29), பேரிளம்பெண் (30 வயதுக்கு மேல்) எனும் வெவ்வேறு பெண்கள் தம் வயதுக்கேற்ப அவனை விரும்பி (கைக்கிளை எனும் ஒருதலைக் காமங் கொள்வதை) விவரிப்பதாய் கலிவெண்பா நடையில் உலா இலக்கியம் நகரும். கயிலாய நகரில் இறைவன் தேரில் செல்லும் இந்த ஆதியுலாவை படித்தால் இது இறைவனைப் போற்றுகின்ற, உலா விதப்பை விவரிக்கின்ற, துதிப்பாடலாகவே தெரிகிறது.  இதை எப்படிச் சமய சாத்திரமாகக் கொண்டார்? எப்படித் திருப்பிடவூரோடு தொடர்புற்றது? - என்பதும் விளங்கவில்லை. ஏனெனில் சுந்தரரும், சேரமான் பெருமாள் ஆகிய இருவருமே பிடவூருக்கு வரவேயில்லை. எனக்குத் தோன்றுகின்ற ஒரே குறிப்பு:

சுந்தர நாயனார் ஒரு சிவப்பெருமானர். பிடவூர் சிவப் பெருமானராலான பிரமதேயம். இங்கு குடியிருந்தோர் சோழப் பேரரரசில் பெரும்பதவிகளை வகித்தார். பிடவூர்க் கல்வெட்டுகளை ஆழமாய்ப் படியுங்கள். அவற்றின் ஆள்பெயர்களை இங்கு எழுதி மாளாது. ஆனால் அந்தப் பட்டியலிலுள்ள பெரும்பாலோர் பெரும்பதவி கொண்டவராயும், சிலர் பிரம்மராயராகவும், சிலர் சாமந்தராகவும் கூடத் தெரிகிறார். எனவே பிடவூர்க் குடியிருப்பு ஒரு சாமான்யப் பிரமதேயம் அல்ல. சோழநாட்டு முதலமைச்சர் சேக்கிழாரையுங் கூடக் கலக்கியடிக்கும் விளவுத்திறன் (influence) கொண்டவர் தங்கிய பிரம தேயம். இப்படியொரு பிரமதேயத்தார் தமக்கென ஓர் ஓவம் (Icon) கைக் கொள்வர். அந்த ஓவமே சுந்தரர்.  பிடவூர் வைப்புத்தலமாயும் அப்பராலும், சுந்தரராலும் குறிப்பிடப்படுகிறது.

உள்ளூரில் முந்நாள் பெருமகனான சாத்தன் ஒரு நூல் செய்ததையும், தமக்குத் தெரிந்த சுந்தரர் கதையில், சுந்தரரோடு சேரமான் பெருமாள் கயிலாயம் போனதையும், அங்கு ஏழிசைப் பதிகமும், திருக்கயிலாய ஞான உலா பாடப்பட்டதையும் சேர்த்து பொதுப்புத்தி பிணைத்திருக்கிறது. பின்னால் சில ஆண்டுகள் கழித்து இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழாருக்குப் பிணைத்துப் பெருகிய  கதை சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அதன் சுவைகருதித் தன் புராணத்தின் முடிவுச் சருக்கமாய் இதை வடிக்கிறார்.

”சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத்திரு உலாப்புறம் அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்*பிடவூர்*தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே”

என்றபாடல் எப்படிப் பார்க்கினும், உண்மைச் செய்தியல்ல. ஆனால் முத்தாய்ப்பான செய்தி. சாத்தனின் பழைய நூல் அரங்கேற்றம் மறந்துபோன நிலையில் இங்கே ஒரு புதுநூலை அவன் வெளிப்படுத்தினான் என்பதன் மூலம் அரங்கேற்றம் என்ற சொல்லைத் தொடர்வதற்கு வாய்ப்பும் ஆயிற்று. சுந்தரர் கதையைத் தங்கள் ஊருக்கு இழுத்தது மாதிரியும் ஆயிற்று. தெற்றிக்கு அரங்கமென்ற விதப்புப் பொருளும் இதன்மூலம் கொடுக்கலாம். பொதுப்புத்தி அதை மறுக்காது ஏற்றுக்கொள்ளும், நாளாவட்டத்தில் சிறு சுவடி வைத்தது போல் ஐயனாருக்கு ஒரு புதுப்படிமமும் வைக்கலாம்.  பழம்படிமம் பிரமனாய் உருக்கொள்ளலாம். தவிர, பிடவூருக்குச் சாத்தனும் கொடுங்களுரூக்கு வாரணனும் உரைகாரர் மாதிரிப்போய் நூல். பதிகத்தை வெளிப்படுத்தியதாய்ச் சொன்னது ஓர் அருமையான இலக்கிய உத்தி.

இத்தொடரில் சாத்தன் யாரெனப் பார்த்தோம். அவன், புத்தனும் மகாவீரரும் அல்லனெனப் பார்த்தோம். பெரும்பாலும் அவன் அறப்பெயர்ச் சாத்தனே எனப் பார்த்தோம். மற்கலிக்கும் ஐயனாருக்கும் தொடர்பு சொல்லிக்  கோசாளர், மற்கலி என்ற பெயர்களின் பின்புலங்களைப் பார்த்தோம்.  மற்கலி துறவியாய் இருந்திருக்கத் தேவையில்லை என்றும் பார்த்தோம். 

பூரணை, பொற்கலை என்ற துணைகளின் பின்புலங்கள்,
பாசம், பாசண்டம், செண்டு ஆகியவற்றின் உள்ளடக்கம்,
ஐயனார்கோயில் உறுப்புகள் (குறிப்பாக யானை, குதிரை, கய-இலக்குமிக்  குறியீடுகள்)

ஆகியவற்றையும் பார்த்தோம்.  மற்கலி ஆதிநாதரின் மகன் என்று உறவு கற்பித்தது, அது ஐயனார், சிவனின் மகன் என்று பொதுபுத்தியில் ஏறியது ஆகியவற்றையும் பார்த்தோம். பிடவூரென்ற ஊரின் பெயர் விளக்கத்தையும்,  பிடவூர்க்கோயில் விவரங்களையும், கல்வெட்டுகளையும் பார்த்தோம். பிடவூர் ஐயனாரைத் திருவேட்பந் தெற்றியுடையார், திருமண் தவஞ்செய்தார் என்றும் அழைத்ததைக்  கல்வெட்டுகளின் வழி அறிந்தோம். பிடவூர் ஐயனார் கோயிலின் படிமங்கள் மாறியிருக்கலாம் என்பதையும், குறிப்பாய் அங்குள்ள பிரமன் படிமம் பெரும்பாலும் பழமையான ஐயனாராகலாம் என்பதையும் கோடு காட்டினேன். பிடவூர், குக்குடமாநகர் (=உறையூர்), சமண்தண்டம் ஆகிய ஊர்ச்செய்திகளையும் அறிந்தோம்.  இத்தொடரின் முடிவிற்கு நாம் இப்போது வந்து விட்டோம். இன்னும் 96 வகைப் பாசண்டம், கதிர் ஒன்பது என்பவற்றோடு தொடர்புடைய அற்றுவிகக் கொள்கைகளை நான் தொடவேயில்லை. அது மிகப்பெரிய வேலை. வேறுதொடரில் பார்ப்போம்.

உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் கேளுங்கள். என்னால் இயன்றதை மறுமொழிப்பேன்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 30, 2020

பாசண்டச் சாத்தன் - 21

சங்ககாலத்தின் பின் களப்பிரர் காலத்தில் புத்தமும், செயினமும் நம்மூரில் அரசப் புரவலைப் பெற்றன. (அச்சுத விக்கந்தன் போன்ற களப்பிர அரசர் இதற்கு எடுத்துக் காட்டு.). (பரதவாய/பரத்வாஜக் கூட்டம் என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக்கொண்ட) பல்லவரின் ஆட்சித் தொடக்கத்தில் புத்தம் குறைந்து செயினம் பெருமதிப்பு பெறத் தொடங்கியது. அதே போது ஆந்திரத்திலும் இலங்கையிலும் புத்தம் பெருகியது. களப்பிரர் காலத்திலும், பல்லவரின் தொடக்கத்திலும், சிவ, விண்ணவ நெறிகள் நம்மூரில் குறைந்தே புரக்கப் பட்டன. வட புலத்தில் தன்னோடு தீவிரமாய்ப் போட்டியிட்ட புத்தமும், செயினமும் தெற்கிலும் புகுந்து இங்குள்ள அரசர்களைத் தம் வயம் ஈர்க்கத் தொடங்கியதால், அற்றுவிக நெறியின் இருப்பு  பெரிதும் சிக்கலுக்கு உள்ளானது. உள்ளூரில் தம்மோடு உடன்பிறந்த சிவ, விண்ணவ நெறிகளோடு ஒன்றாய்க் கலந்துவிடுவதே தமக்கு நல்லதென்ற நிலைக்கு அற்றுவிகர் தள்ளப்பட்டார்.

பெரும்பாலும் களப்பிரர் காலத்தில்,  ஐயனார் கோயில்களுக்குள் இலிங்கங்கள் நுழைந்திருக்கலாம். தவிர, ஐயனாரின் ஓக நிலையும் தக்கண மூர்த்தியோடு ஒன்று சேர்த்துப் பார்க்கப்பட்டது.  ஒரு சில கோயில் கருப்பருக்கு நாமமும் போடத் தொடங்கினார். கருப்பன்/கண்ணன்/இராமன் என்ற  கருத்துத் தொடர்பு கூடியது (அழகர் கோயில் கோபுர வாசலுக்கு அருகில் இன்றுள்ள 18 ஆம் படிக் கருப்பர் திருநிலை இப்படிக் கிளைந்ததே.) அற்றுவிகச் சார்வகர்  சிவ, விண்ணவ நெறிகளுக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் இணையத் தொடங்கினார். அற்றுவிகக் கருத்துகளும் உள்ளூர் நெறிக் கருத்துகளும்  கலந்து இழையத் தொடங்கின. இதன் மூலம், அற்றுவிகம் தன்னை ஓரளவு உருமாற்றிக் காத்துக்கொண்டது. இதன் வெளிப்பாடே மேற்கூறிய அப்பர் தேவாரம்.

அதேபோது எல்லா அற்றுவிகரும் சமதானம் பண்ணிக்கொண்டாரா எனில் இல்லை. சிலர் தனிநிலை நீட்டித்திருந்தார். பின் ஏற்பட்ட அழுத்தத்தால் செயினத்திற்கு மாறி, “அமணர்” எனப்பட்டவரும் உண்டு. (புத்தத்திற்கு  நகர்ந்தவருமுண்டு.)  கி.பி. 13 ஆம் நூற்றாண்டு ”சிவஞான சித்தியார்” செயின, அற்றுவிகரைத் தனியே வைக்காது கலந்தே பேசும். மொத்தத்தில் அற்றுவிகர் எண்ணிக்கை பத்திக் காலத்தில் பெரிதும் குறைந்துபோனது. இன்னுஞ் சொன்னால், குண்டலகேசிக்கு மறுப்பான, களப்பிரர் காலத்தைய, நீலகேசிக்கும் பின் அற்றுவிகரின் தனியிருப்பு  இல்லையெனலாம். அப்படி யெனில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் அற்றுவிகம் ஏறத்தாழக் குலைந்துவிட்டது போலும்.  அற்றுவிகப் பாழிகளாய் முன்னிருந்தவை எல்லாம்,  சம்பந்தர் காலத்தில் பொது அமணர் பாழிகளாய்ப் பார்க்கப் பட்டதை பெரிய புராணத்தின் திருஞான சம்பந்தர் புராணம் 2769 ஆம் பாடலால் அறியலாம்.     

பூழியன் மதுரை யுள்ளார் புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக் கிளரொளித் தூய்மை செய்தே
வாழிஅப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்.

ஒருசில ஆய்வர் “அமணர் சேரும் பாழி”யை, “அற்றுவிகப் பாழி” எனப் பொருள் கொள்வர். இப்புராணத்தை முழுக்கப் படித்தால், அப்படித் தோன்ற வில்லை. [ பாழி= அமணர் தங்கிய குகை; பள்ளி = அருகர் /தீர்த்தங்கரர் படிமங்களுள்ள கோயில்.] 6 ஆம் நூற்றாண்டில் (இராயல சீமையிலிருந்து தமிழகம் நகர்ந்த) பல்லவர் தொண்டைநாட்டில் நிலைபெறுகிறார். சோழ நாட்டின் பெரும்பகுதியும்  கைக் கொள்கிறார். 7 ஆம் நூற்றாண்டு அப்பர், சம்பந்தர் காலத்தில்,  மகேந்திரவர்மனும், பிற்றைப் பல்லவரும் சிவ, விண்ணவ நெறிகளுக்கு மாறுகிறார். “பத்திக் காலத்தில் அற்றுவிகம் பேரளவில் இங்கில்லை” என்பதே என் புரிதல். புதுத் தரவுகள் கிடைத்தால் ஓர்ந்து பார்க்க அணியமாயுள்ளேன். ஆக, அற்றுவிக நிலைப்புக் காலம் கி.மு. 600 - கி.பி  600.  மொத்தம் 1200 ஆண்டுகள் மட்டுமே  தெற்கே அது இருந்தது. வடக்கே இதற்கும் குறைவான காலம் தான் இருந்துள்ளது. இப்புரிதலோடு திருப்பிடவூருக்கும், அதன் ஐயனார் கோயிலுக்கும்  போவோம்.

அங்குள்ள எல்லாக் கோயில்களுக்கு முன்,  ஒரு நடுகல் போலவே சங்க காலத்தில் தொடங்கி, நக்கீரர் (கி.மு. 2 ஆம் நூற்.) பாடும்போது நடுகல்லின் நீட்சியாய் ஐயனார் கோயில் உருவாகியிருக்கலாம்.  நாகரிக வளர்ச்சிக்குத் தக்க, அவ்வப்போது ஐயனார் கோயிலின் மூலப்படிமம்  உருமாறி இருக்கலாம். கூகுள் முகப்பைப் (map)பார்த்தால் இற்றைக் கோயில் ஒரு தெற்றியில் (மேட்டில்) அமைந்து இருப்பது புரியும். அதனாற்றான் தெற்றி யுடையான் கோயிலெனப் பெரும்பாலான கல்வெட்டுகளில் சொல்லப் பட்டுள்ளது. அது எப்படி அரங்கேறிய ஐயனார் கோயிலாய் இற்றைப் பேச்சுவழக்கில் மாறியது? கீழே வருவோம். (அதேபொழுது ஊர்நினைப்பை விடாது, திருமண் தவமுடையான் என்ற பெயரும் தொடர்ந்துள்ளது.)

களப்பிரர் காலத்தில் வேளிராட்சி குலைந்து, பிடவூர்க் கிழான் குடும்பம் இல்லாது போனது. புரவலனின்றி ஊர்மக்கள் பேணிய ஐயனார் கோயில் மண்தளியாய்த் தொடர்ந்தது, (முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் அது கற்றளியானது).  மாற்றங்கள் நடக்க நடக்க, ஊர்க்கதைகளும் மாறும். தொடர்ந்து அமைதியிருந்தால் மட்டுமே எக்கதையும் நிலைக்கும்  ”கதிர் ஒன்பது” என்ற விதப்பான பெயர்கொண்ட மற்கலி நூல் பிடவூர் மக்களுக்கு இம்மாற்றங்களால் மறந்தே போயிருக்கலாம். ஆனாலும் தம் ஊர்ப் பெரு மகன் ஏதொவொரு முகன நூலைச் செய்தான் என்பது பொதுப் புத்தியில் பதிந்திருக்கும். இந்நிலையில் களப்பிரரைத் தோற்கடித்த பல்லவரும் பாண்டியரும் சோழநாட்டைத் தமக்குள் பங்கிட்டார். (களப்பிரரின் பெரு வாரி ஆட்சிநிலம் பழஞ்சோழநாட்டில் இருந்தது. ) காவிரி வடகரை பல்லவருக்கும், தென்கரை பாண்டியருக்குமானது. பல்லவர் வீச்சு அவர் நாட்டின் தென்னெல்லையான பிடவூர் வரை இருந்தது.

வேண்டியவரை நாட்டெல்லையில் குடியேற்றி, ஏதோவொரு முறையில் நிலங்களை அவர்க்கு மாற்றிக்கொடுப்பது ஆட்சியாளரின் பொதுவியல்பு. பிடவூர், வெள்ளறை, சிராப்பள்ளி போன்றவற்றில் பெருமானர் குடியிருப்பு இப்படி ஒரு முறையில்  உருவானது தான், ஏனெனில் அவர் அரசிற்கு ஆதரவாய் இருப்பாரென்று பல்லவர் எதிர்பார்த்தார். சிவபெருமானக்கென உருவான பிடவூர்ப் பிரம தாயம், விசயாலய சோழனுக்கு (கி.பி. 848-871) முன், எதோவொரு பல்லவன் ஆணையால் உருவாகியுள்ளது.  எந்தப் பல்லவன் இதுசெய்தான் என்றறிய சான்றெதுவும் கிட்டவில்லை.  ஆனாலும் இங்கு உள்ள முதற் சிவன்கோயிலான கயிலாயநாதர் கோயில் பெரும்பாலும் இராசிம்மன் ஆணையால் கட்டப்பட்டது உறுதி.  இப்பிரமதேயம் சுந்தரர் காலத்திற்குச் (கி.பி.670-710) சற்று பின்னால் எழுந்து இருக்கலாம்.  கி,பி, 710 இலிருந்து கி.பி. 850 வரை 140 ஆண்டுகள் இடைவெளி காட்டும். இதில் 100 ஆண்டுகளாவது பல்லவர் நிர்மாணித்த பிரமதேயம் இருந்திருக்குமென்றே அனுமானிக்கிறோம்.

பல்லவர்க்குப் பின், சோழப்பேரரசில் இப்பிரமதாயம் நெடுங்காலம் தொடர்ந்தது. பிரமதேயத்தால் வந்திறங்கிய சிவப்பெருமானர் தமக்கு முன்னிருந்த ஐயனார் வழிபாட்டை ஏற்றுள்ளார்.  இவ்வூரில் தமக்கு முன் பிறந்த வேளிர்மகனே ஐயனார் என்பதையும், பிடவூர் நாடு சோழநாட்டில் முகன்மைக் குறுநிலம் என்பதையும், உறையூரோடு (பெருஞ்சோழரின் இறுதிவரை தஞ்சாவூர், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய வற்றோடு சங்ககாலப் புகாரும், உறையூரும் அரசாங்க நகர்களாய் தொடர்ந்து இயங்கின. கல்வாரி, மண்வாரியடித்து  உறையூர் அழிந்ததைப் 12 ஆம் நூற். தக்க யாகப் பரணியின் உரை பேசும்) பிடவூர் பிணைக்கப் பட்டதையும் சிவப்பெருமானர் நன்றாயறிவார்.  சாத்தன் இயற்றிய ”கதிர் ஒன்பது” என்ற நூற்பெயர் தெரியாவிடினும்  ஐயனாருக்கும் ஒரு பழஞ்சமய நூலுக்கும் தொடர்புண்டென அவர் அறிவார். ஆனால் அற்றுவிகச் சமயத்தை எல்லாப் பெருமானரும் அறிந்திருக்க மாட்டார். செயினத்தோடு அவர் குழப்பிக் கொள்ளத் தான் செய்வர்.

பெரியபுராணத்தின் வெள்ளானைச் சருக்கம் சிவப்பெருமானருக்குள் இருந்த தொன்மத்தைக் குறிக்கிறதென்றே சொல்லலாம்.  அதிலிருக்கும் ஒருசில குறிப்புகள் அப்படி எண்ண வைக்கின்றன. கொடுங்களூரிலிருந்து கயிலாயம் புறப்பட்ட சுந்தரும் சேரமானும் முறையே ஏழிசைப் பதிகமும் திருகயிலாய ஞானவுலா இயற்றியதும் திருமுறையைத் தொகுக்கும்போது வெளிப்பட்டிருக்கும். சுந்தரர் பதிகத்தை திருவஞ்சைக்களத்தில் வாரணன் வெளியிட்டதாகவும், சேரமான் நூலைத் திருப்பிடவூரில் சாத்தன் வெளியிட்டதாகவும் சொல்வது ஏதோவொன்றை அறியாது பொதுப்புத்தியில் குழம்பிப் பொருந்தப் புகல்வது போல் தோன்றுகிறது. முதலில் திருவஞ்சைக் களம் போவோம்.


வருணன் வழியாக ஏழிசைப் பதிகம் கொடுங்களூரில் வெளிப்பட்டிருந்தால், ஏழிசைப் பதிகமும், திருவஞ்சைக்களப் பதிகமும் ஏதோவொரு திரிந்த வடிவில் மலையாளத்தில் இருந்திருக்க வேண்டுமே? ஏன் அங்கு இல்லை? தமிழ்வடிவம் மட்டுமே நமக்குக் கிடைக்கிறதே? அங்குள்ளவரின் பொதுப் புத்தியில் இன்று வரை ஏன் அது தங்கவில்லை?. இவை தமிழ்நாட்டில் மட்டுமே புரக்கப் பட்டது போல் தெரிவதன் காரணம் என்ன? தவிர வெள்ளானையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? (கவரிமா அறியாது கவரிமான் என்றே நம்மூர்ப் பொதுப்புத்தியில் நெடுநாள் இருந்ததுபோல் வெள்ளாணையும் இருந்ததை அடுத்துப் பார்ப்போம்.) எல்லாப் படங்களிலும்.”வெள்ளை நிற யானை” என்றே காட்டப்படுகிறதே? அது ஏன்? கருப்பு யானையைக் காட்டிலும் வெள்ளாணை உயர்த்தியா? நமக்குள் ஏன் கருப்பு/ வெள்ளைத் தாழ்வு மனப்பான்மை இழைந்தோடுகிறது? இந்திரன் யானை = ஐராவதி என்ற வெள்ளானை; சூரசம்மாரத்திற்கு முன் முருகனின் வாகனம் = பிணிமுகம் எனும் வெள்ளானை;  சாத்தனின் யானை = வெள்ளானை. சுந்தரர் கயிலாயம் போனதும் வெள்ளானை. அப்படி வெள்ளானை என்பது உண்மையிலேயுண்டா?  அன்றி அது கற்பனையா?

அன்புடன்,
இராம.கி.

Wednesday, January 29, 2020

பாசண்டச் சாத்தன் - 20

முன்சொன்னது போல், பிடவூரின் முதற்செய்தி, (கி.மு.2 ஆம் நூற்றாண்டு) நக்கீரரால் பிடவூர்ப் பெருஞ்சாத்தனைப் பாடிய புறம் 595 ஆல் கிடைத்தது. பாட்டினுள் “நெடுங்கை வேள்மான்” என்றதால் பிடவூர்க் கிழான் ஒரு வேளிர்குலத்தான் என்பதும்,  ”அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும” என்றதால்  பெருஞ்சாத்தனின் முன்னோன் அறச்சாத்தன் (இக்காலத் ”தரும சாஸ்தா”) என்பதும், அவனுக்கெனக் கிளைக்கூட்டம் இருந்ததும் விளங்கும். இத்தொடரில் தரும சாத்தன், பெரும்பாலும் மற்கலி கோசாளன் ஆகலாம் என முன்பகுதிகளில் கோடுகாட்டினேன். ”சாத்துகளைக் காக்கும் தலைவன்” என்ற பொருளில் சாத்தன் பெயரும், ”குறுநில மன்னன், காவற்படைத் தலைவன், சமயத் தோற்றுநன் ”- என்ற முறையில் ”ஐயன்” பெயரும் மற்கலிக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தெற்கிருந்து படித்தானம் போய் அங்கு தொடங்கும் தக்கணப் பாதையின் முடிவு சாவத்தியானதால், (காடாறு மாசம், நாடாறு மாசம் என்ற படி) பாதிநாள் தமிழகம், பாதிநாள் வடபுலம் (குறிப்பாய் மகதம்) என மற்கலி தங்கியிருந்துள்ளார். ஆழ்ந்து ஓர்ந்து பர்த்தால் அடிப்படையில் அவர் துறவியல்லர்; இல்லற வாழ்வைத் துறந்தவரும் அல்லர்; ஒரு சமயத்தை உருவாக்கிய அறிவர். சமய நெறி போதிப்போர் பெரும்பாலும் துறவியாய் இருந்தபோது, பொற்கலையோடு மற்கலி கொண்ட இல்லறத் தொடர்பு வடபுலத்தில் இழிவாகப் பார்க்கப் பட்டிருக்கலாம். இல்லற வாழ்வேற்கும் தமிழகத்தில் இது தவறாய்க் கொள்ளப்பட்டவில்லை. (இல்லறத்தின் பின் துறவேற்பது, குறிப்பாக விண்ணவ ஆசான்களில், இங்கு அதிகம்.)

மற்கலி, தான் மட்டுமின்றி, பூரணர், (பக்குடுக்கை) நன்கணியார் போன்ற அறுவரோடும் சேர்ந்து அற்றுவிகக் கொள்கையை இறுதி செய்திருக்கிறார். அவருக்கு முன்னும் பல அறிவர் அற்றுவிகச் சிந்தனையில் இருந்தது போல் தெரிகிறது.  குறிப்பாகச் சாங்கியத் தாக்கம் (இதை வேறு தொடரில் பார்ப்போம்) அற்றுவிகத்தின் மேல் தொடர்ந்திருக்கிறது. தனக்கு முன்வந்த பார்சுவர், ஆதிநாதர் ஆகியோரை மற்கலி ஏற்றுள்ளார். நீலகேசியின் படி அற்றுவிகத்தின் ஒரு முகன இடமாய் உறையூர் இருந்துள்ளது.  (வடக்கே சாவத்தி போல் தெற்கே இது. இதனருகில் தான் நாம் பார்த்த பிடவூர் உள்ளது. உறையூருக்கும் பிடவூருக்கும் நடுவிலுள்ள திருவரங்கத்தில் சமணர் (அற்றுவிகர், செயினர், புத்தர்) தங்கிய இடமும் இருந்துள்ளது.)

தொக்குடன் ஆயவென் தொல்வினை தீர்கவென
முக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக்
குக்குட மாநகர் நின்று கொடிமினின்
தக்கதின் தான்போய்ச் சமதண்டம் புக்காள்

என்று நீலகேசி 666 ஆம் பாட்டு புகலும். குக்குடம்= கோழி. குக்குடமாநகர்= கோழியூர்= உறையூர். பெரும்பாலும் சமண்தண்டமே பிழையால் சமதண்டம் ஆனது போலும். (கிடைத்த 2 சுவடிகளில் சமதண்டமே உளது. இதைப்பதிப்பித்த சக்கரவர்த்தி நாயனார், ”2 சுவடிகள் மட்டுமிருந்ததால் எழுத்து, சீர், தொடர்ப் பிழைகளைச் சரிபார்க்க முடியவில்லை” என்பார்.)  தண்டடித்தல், பேச்சு வழக்கில் தற்காலிகமாய் ஓரிடந்  தங்குவதைக் குறிக்கும். தண்டைத் தரையிலடித்து துணிகளைக் கயிற்றால் கட்டிக் கூடாரமெழுப்புவது 2500 ஆண்டு வழக்கம். temporary encampment. சமண் தண்டம் = அற்றுவிகம், செயினம், புத்தம் மதத்தினருக்கான temporary encampment. இதிற்றான் பூரணனிருந்ததாய் நீலகேசி விவரிக்கும். அவர் பூதிகமாய் (physical) இருந்தாரா என்பது கேள்விக்குறி. ஏனெனில் மணிமேகலை, பூரணனை வஞ்சியில் காட்டும். 2 நூல்களிலும், நீலகேசி, மணிமேகலை பூரணனோடு உரையாடியதாய்ச் சொல்வது நூல் உத்தியெனப் புரிந்துகொள்கிறோம்.

“காரணம் வேண்டா கடவுள் குழாம்தன்னில்
பேருணர்வு எய்திப் பெரிதும் பெரியவன்
பூரணன் என்பான் பொருவறக் கற்றவன்
ஆரணங்கு அன்னாட்கு அறிய உரைக்கும்

என்ற 668 ஆம் பாடலால் உறையூர் பக்கம் (பெரும்பாலும் திருவரங்கச்) சமண்தண்டத்தில் பூரணனிருந்ததாய் அடையாளங் காட்டும் இதே சமண்தண்டத்திற்குத் தான் கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் சிலப்பதிகாரத்தில் கூட்டிவருவாள். 

”கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தில் அரங்கத்து அகன்பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித்
தென்றிசை மருங்கில் செல்வவு விருப்புற்று
வைகறை யாமத்து வாரணங் கழிந்து”

என்று காடுகாண்காதை 5-11 ஆம் வரிகள் காட்டுவதும்  இதே சமண் தண்டம் தான்.  மணிமேகலையின் படி (bible மாதிரி) ஆசீவிகருக்கு ஒரு தனி நூல் இருந்ததாய் அடையாளஞ் சொல்லும். , நீலகேசியோ அந்நூலின் பெயர் ”கதிர் ஒன்பது” என்று சொல்லும். இதை இயற்றியது மற்கலி என்றே மணிமேகலையும் நீலகேசியும் சொல்லும்.  அற்றுவிக நெறி தென்புலத்தில் மட்டுமின்றி வடபுலத்திலும் கணிசமான சார்வகர்களைக் கொண்டிருந்தது. அதேபோது வடபுலத்தில் புத்த, செயின நெறிகளோடு அது போட்டி போடவேண்டியிருந்தது. தெற்கே அதன் தொடக்க காலத்தில் சிவநெறி, விண்ணவநெறியோடு போட்டி போடவேண்டிய தேவையில்லாது போனது..

சமண நெறிகளின் ஆதிநாதருக்கும் சிவனுக்கும் ஏராளம் ஒப்புமைகளுண்டு. அவ்வகையில் மற்கலியை ஆதிநாதரின் கொள்கைப் புதல்வன் என்றே மற்கலியைப் பின்பற்றியோர் எண்ணி வந்தார். (மகாவீரரும், புத்தருங்கூட ஆதிநாதர், பார்சுவரை தம் முன்னோராயேற்பார்.) இதுபோல் கற்பித்த உறவின் வழி, பெருவாரியான ஐயனார் கோயில்கள் சிவநெறிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. திருநீறு கொடுப்பது ஐயனார் கோயில்களின் வழக்கில் வந்தது. ஐயனார் திருநிலைகளுக்கு முன்னால் சிறு இலிங்கங்களும் எழுந்தன. சமண அறிவரை இலிங்கியர் என்றுகூட நீலகேசி அழைக்கும். முருகன், விநாயகன் படிமங்களும் உள்வந்தன.  சாத்தனைச் சிவன்மகனாய் எண்ணும் வழக்கம் சிவநெறியார்க்குமுண்டு. அப்பர் தம் தேவாரத்தில் சாத்தனாரைச் சிவன்பிள்ளை என்றே கூறுவார்.

பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே '

அன்புடன்,
இராம.கி.

Sunday, January 26, 2020

பாசண்டச் சாத்தன் - 19

சேரன் தான்போகும் வழியில் சம்பந்தரின் சீகாழியையும் , இன்னும் பல கோயில்களையுங் கண்டு, முடிவில் காவிரித் தென்கரை அடைந்து ஆரூர் செல்கிறான். திருநாகைக் காரோணம் சென்ற ஆருரரும் திருவாரூருக்குத் திரும்பிவந்து சேரமானை எதிர்கொள்கிறார். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நட்பு பாராட்டிக் கொள்கிறார். இந்நட்பு இருவரின் வாழ்நாள் முழுதும் நீள்கிறது. இதனாலேயே சுந்தரருக்குச் சேரமான் தோழரென்ற பெயருண்டு.  ஐயனார் கோயில் முதற் சுற்றாலையில், ஜடாவர்மன் வீரபாண்டியன் காலத்தைய (கி.பி. 1277) 19 ஆம் கல்வெட்டில் (ARE 589/1908) ஒப்புகை கொடுத்ததாய், ”மேலைசூருடையான் சேரமான்தோழன்” என்றபெயர் வருமெனக் கட்டுரை 16 ஆம் பகுதியில் குறித்ததை நினைவுகொள்க. ”சேரமான் தோழன்” என  மேலைசூருடையானுக்கும் வாய்த்ததெனில், சேரமான் கதை பிடவூர் நாட்டில் பெருவலமானதைப் புரிந்துகொள்ளலாம். 

இருவரும் ஆரூர்க்கோயிலில் இறைவனைத் துதித்தபோது, ”திருவாரூர் மும்மணிக்கோவையை” சேரமான் பாடுகிறான். இந்நூலும் 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருவரும் பரவையார் மாளிகைக்கு வருகிறார். பரவையாரைத் திருவமுது படைக்கும்படி சுந்தரர் சொல்ல, அவர் கணவருக்கு ஓரிடத்திலும், சேரமானுக்கு மற்றோரிடத்திலும் இலை பரப்புகிறார். இதுகண்டு அதிர்ந்துபோன சுந்தரர் ”தன்னோடு சேரமான் ஓரிடத்தில் சேர்ந்தே உண்ணவேண்டும்” என அழுத்திக்கேட்கச் சேரமானும் இசைகிறார். (7 ஆம் நூற்றாண்டிலேயே சாதிக்கொடுமை தமிழ்க் குமுகாயத்தில் உள்வந்த நிகழ்வு இங்கே வெளிப்படுகிறது.)  சுந்தரர் தந்த திருநீற்றை ஏற்று, பின் அவர்காலில் விழுந்து சேரமான் வணங்குகிறான்.

வீதிவிடங்கப் பெருமானைப் பலநாட்கள் சேவித்த இருவரும் மதுரைக்கும், மற்றவூர்களுக்கும் போகவிழைகிறார். போம்வழியில் கீழ்வேளூர், நாகைக் காரோணம், மறைக்காடு, அகத்தியான்பள்ளி எனும் கோடிக்கரை, திருப் புத்தூர் போன்ற கோயில்களில் சேவித்து மதுரையடைகிறார். ஏற்கனவே அங்கிருந்த கோச்சடையன் இரணதீரனும், அவன்  மருமகனான சோழனும் (நின்றசீர் நெடுமாறன் தேவி மங்கையர்க்கரசியின் சோதரன் பெயரன். பெரியபுராணப் படி இரணதீரனின் மகளை மணந்தவன். விசயாலயச் சோழனுக்கு (கி.பி. 848-871) 138 ஆண்டுகள் முந்தையன். பொதுவாய்ச் சங்க காலத்தின் பின்னால், பெருஞ்சோழருக்கு முன்னால், வரும் இடைக்காலச் சோழர் செய்திகளைத் தமிழ் வரலாற்றில் தேடவேண்டியுள்ளது. பெரும்பாலும் கிடைப்பதில்லை.) சுந்தரர், சேரமான் ஆகிய இருவரையும் பாண்டியன் வரவேற்கிறான். சுந்தரரும் மூவேந்தரும் சொக்கன் - கயற் கண்ணியைத் தொழுகிறார். சொக்கன் அளித்த திருமுகத்தை அக்கணம் எண்ணிச் சேரன் துதிக்கிறான்.

பின் சுந்தரரும் சேரமானும் பூவனம், ஆப்பனூர், வேடகம், பரங்குன்றம்,  குற்றாலம், நெல்வேலி, இராமேச்சுரம் (அங்கிருந்த வாக்கில் கேதீச்சுரம்), சுழியல், கானப்பேர், புனல்வாயில், பாம்பணி பாதானீச்சுரம் ஆகிய கோயில்களில் வணங்கி திருவாரூர் திரும்புகிறார். சிலநாட்களின் பின் சேரமானோடு சுந்தரர் மேற்கே நகர்கிறார். வழியில் கண்டியூர், ஐயாறு போய்,  கொங்குநாடு போய், முடிவில் கொடுங்கோளூர் அடைகிறார். பின் திருவஞ்சைக் களத்தில் தொழுது, சேரன் மாளிகையை அடைகிறார். சிலகாலம் சேரரொடு தங்கியிருந்த சுந்தரர், திருவாரூரை எண்ணிப் புறப்படுகிறார். சேரமான் பல்வேறு செல்வங்களைச் சுந்தரர்க்குப் பரிசாகக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். திரும்பும் வழியில் திருமுருகன் பூண்டியில் சுந்தரர் வழிபட்டு, திருவாரூருக்குத் திரும்புகிறார். இத்தோடு கழறிற்றறிவார் புராணம் முடிகிறது. அடுத்து வெள்ளானைச் சருக்கத்திற்கு வருவோம்.

இச் சருக்கத்தில், மீண்டும் சேரமானைக் காணச் சுந்தரர் விழைகிறார். போகும்வழியில் திருப்புக்கொளியூர் (அவிநாசி) சென்று அங்கு முதலை விழுங்கிய 5 வயது அந்தணச் சிறுவனை 2 ஆண்டுகள் கழித்து மீளக் கொணர்ந்து விட்டுப்போன பூணூலணி மங்கலத்தை நடத்துகிறார். பின் மேற்குப் பதிகளைத் துதித்துவண்ணம், கொடும்பாளூர் சேர்கிறார். சேர மானோடு மலைநாட்டுப் பதிகளுக்குச் செல்கிறார். ”இவ்வுலக வாழ்க்கை துறந்து கயிலாயம் போகச்” சுந்தர் விழைய, அதே தருணத்தில் முந்தைச் சிவகணமான ஆலாலசுந்தரர் கயிலாயம் திரும்பும் காலம் நெருங்கியதால், சுந்தரரைக் கூட்டிவர, வெள்ளானையைப் பரிவாரங்களோடு இறைவன் அனுப்புகிறார். அவை கொடுங்கோளூர் வந்து சேரன் மாளிகையை அடைகின்றன.  இறைவன் ஆணையேற்று வெள்ளானையில் சுந்தரர் ஏறிக் கயிலாயம் கிளம்புகிறார். கிளம்புமுன் சேரமானை எண்ணுகிறார்.

தம்பிரான் தோழரின் செயலறிந்த சேரன் தம் பந்தியில் (=லாயம்) நின்ற குதிரையில் ஏறித் திருவஞ்சைக்களம் சாரும் போது சுந்தரரின் வெள்ளானை வானம்வழி போவதைக் காண்கிறான். குதிரைக் காதில் அஞ்செழுத்தோதக் குதிரை பறக்கிறது. சுந்தரர்கூடவே சேரமானும் கயிலாயம் போகிறான். சேரனின் வீரர்சிலர் தம் உடலை வீழ்த்தி சேரனோடு சேர முற்படுகிறார். கயிலையின் தெற்குவாயிலை அடைகிறார்.  சுந்தரரை அனுமதிக்கும் திருவணுக்கர் சேரனை வாயிலில் நிறுத்திவிடுகிறார். உள்ளே சுந்தரர் அம்பலவாணரைத் தொழுது வணங்குகிறார். “நம்பி ஆரூரா! உலகுய்ய வந்தனையோ?” என்று இறைவன் கேட்கிறார். தம் பிழை பொறுத்து அருளியமைக்கு ஆரூரர் நன்றிசொல்லி, தெற்குப்புறவாயிலில் சேரன் நிற்பதைச் சொல்கிறார். சேரனை அழைத்துவர நந்தியார் பணிக்கப் படுகிறார்.  உள்வந்த சேரனிடம், “நாம் அழைக்காமல் நீ இங்குவந்த காரணம் யாது?” என இறைவன் கேட்கிறார். “அடியேன் நம்பியாரூரார் திருவடிகளைத் தொட்ர்ந்து வந்தேன். தங்களின் அருள் என்னை உந்தி இங்கு கொணர்ந்தது” என மறுமொழித்த சேரன் மேலும் ஒரு விண்ணப்பம் விடுக்கிறான்.

”அன்பினால்  தங்கள் மேல் பாடியத் திருவுலா பாட்டைத் தாங்கள் கேட்க வேண்டும்” என்கிறான். ”கூறுக” என்று இறைவன் சொல்ல, “திருக்கயிலாய ஞான உலா” என்றநூல் எழுகிறது. சேரமான் நூலேற்று, அவர் இருவரையும்  சிவகணங்களுக்குத் தலைமையேற்றுத் தங்க இறைவன் அருள்செய்கிறார். ஏற்கனவே  பரவையார் (கமலினியார்), சங்கிலியார் (அனிந்திதையார்) ஆகியோர்  பார்வதி அம்மையாரின் தொண்டில் ஈடுபடுகிறார். வரும்வழியில் சுந்தரர் பாடிய ஏழிசைப் பதிகத்தைப் பரவச்செய்யும் படி வாரணன் (கடல் தெய்வம்) பணிக்கப் படுகிறான். அவன் திருவஞ்சைக்களத்தில் அதைச் செய்கிறான். சேரமான் நூலோ, பெரியபுராணத்தின் படி, வேறு வகையில் உலகோர்க்கு அறிமுகஞ் செய்யப்படுகிறது. அதைப் (4280) பார்ப்போம்.             

”சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத்திரு உலாப்புறம் அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்*பிடவூர்*தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே”

                                                                         
ஆக, சுந்தரரின் ஏழிசைப் பதிகம் திருவஞ்சைக்களத்தில் வாரணன் மூலம் உணர்விக்கப் பட்டது. சேரமானின் திருக்கயிலை ஞான உலா சாத்தன் மூலம் பிடவூரில் வெளிப்படப் பகரபட்டது. 2 ஆவதை எப்படி, ”அரங்கேறியது?” என்று பிற்காலத்தார் சொன்னார்? - புரியவில்லை. இக்கதைப்படி சாத்தன் ஒரு messenger தானே? பின் எப்படி அரங்கேறிய ஐயனாரென்று சொல்லமுடியும்? ஐயனார் தானே நூல் எழுதி அதை உலகோர்க்கு வெளிபடுத்தினால் தானே அரங்கேற்றம் எனமுடியும்? சரி.  சுந்தரர்-சேரமான் கதையைப் பிடவூருடன் ஏன் பொருத்தினார்? காரணமென்ன? இத்தனைக்கும் சுந்தரோ, சேரமானோ பிடவூருக்கு வந்ததேயில்லை. சுந்தரரால் வைப்புத்தலமாய் மட்டுமே பிடவூர் குறிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பார்வையில் அலசுவதற்கு நிறையவுள்ளது. அடுத்த இடுகையில் காண்போம். 

அன்புடன்,
இராம.கி.

பாசண்டச் சாத்தன் - 18

பெரிய புராணம் என்பது கி.பி.1135 இல் 2 ஆம் குலோத்துங்கன் காலத்தில் பரவியிருந்த 63 நாயன்மார் பற்றிய வாய்மொழிக் கதைகளைச் சொல்வது ஆகும். இதுபோல் பொதுமக்களின் செவிவழிக் கதைகளைச் சொல்லும் இலக்கியங்களில் பொதுப்புத்தியின் மிகைக் கற்பனையும், ஆசிரியரின் புனைதிறமும் சேர்ந்துகொள்வது இயல்புதான். கொஞ்சம் உண்மை கொஞ்சம் புனைவு. (பல நேரம் சிவநெறியாளர் இவ்வடிப்படையை மறந்து விடுகிறார். பெரியபுராணம் என்பது revealed truth போல எண்ணும் போக்கு  சிலரிடமுள்ளது. அப்படியிருக்கத் தேவையில்லை.) பெரிய புராணக்  கதைத் தலைவரான சுந்தரரின் வாழ்வை (கி.பி 694-712) விவரிக்கும் போது இடை யிடையே மற்ற நாயன்மார் கதைகளும் வந்து சேரும். அதிலொன்று சற்று பெரிதான கழறிற்றறிவார் நாயனார் புராணம் எனப்படும் 43 ஆம் புராணம் ஆகும்.  சுந்தரர் கதை நடந்த காலத்திற்கும்  பெரிய புராணம் என்ற இலக்கியம் எழுந்த காலத்திற்கும் இடையே ஏறத்தாழ 423 ஆண்டுகள் ஆகின. இதனூடே பல்லவர் ஆட்சி மங்கி பெருஞ்சோழர் ஆட்சி ஊடுவந்து பின் பிற்காலத் தெலுங்குச் சோழர் ஆட்சியும் வந்துவிட்ட காலம். எனவே கற்பனை சற்று அதிகமாய் இருக்கும். இனி கழறிற்றறிவார் கதைக்கு வருவோம்.

நின்றசீர் நெடுமாறனெனும் மாறவர்மன் அரிகேசரியின் சமகாலத்தில் (கி.பி.640-670), சேரநாட்டில் ஆண்டுவந்த ”செங்கோல் பொறையன்” திடீர் எனத் துறவுகொள்ள விழைய, அவன் அமைச்சரும்  சான்றோரும் (ஏற்கனவே சிவப்பணியில் இருந்த) இளவரசன் மாக்கோதையை அரசப்பொறுப்பு ஏற்கும் படி அறிவுறுத்த, இறைவன் வழிகாட்டலின் பின், அவன் அதற்கொப்பி, முடி சூடி, சேரமான் பெருமாள் ஆகிறான். முடிசூட்டு நாளில் இறைவனை வணங்கி மாக்கோதை திரும்புகையில், தோளில் உவர்மண் மூட்டை சுமந்து வரும் வண்ணாரைப் பார்க்கிறான். மழையில் உவர்மண் கரைந்து வண்ணார் மேனி வெளுத்துச் சிவனடியார்போல் காட்சியளிக்க,  மாக் கோதை  வண்ணாரை வணங்கித் ”தான் அடிச்சேரன்” என நெகிழ்ந்து நிற்க, “தான் அடிப்பணியாள்” என வண்ணார் சொல்ல, “நீறு பூசிய அடியாராகவே நீர் இல்லாவிடினும் அப்படி எண்ணும்படி எனக்கு நினைவூட்டினீர், என் நிலை உணர்வேன், வருந்தாது செல்க” என வேந்தன் மறுமொழித்து மாளிகையுள் புகுவான்.

சிவப்பணியையும் அரசுப்பணியையும் சேர்ந்துசெய்த சேரமான் பெருமாள், பாண்டியன் நெடுமாறனுக்கு அடுத்துவந்த கோச்சடையன் இரணதீரன் காலத்தைச் (கி.பி.670-710) சேர்ந்தவனாவான். அரசனின் இடைவிடா இறைப் பணியை  மெச்சிய தில்லைக்கூத்தன், ஒவ்வொருநாளும் பூசை-அர்ச்சனையை அரசன் முடிக்கும் நேரத்தில் தன் காற்சிலம்பொலி அரசனுக்குக் கேட்கும்படி அருள் செய்தான். இதனைப் ”பரிபுரக் கம்பலே இருசெவி யுண்ணும் குடக்கோச் சேரன்” என்று கல்லாடம் சிறப்பித்துக் கூறும். தம்மிடம் வந்த அடியாருக்கும் வறியவருக்கும் வேண்டிய உதவிகளை அரசன் தொடர்ந்து செய்து வந்தான்.  தன் ஆட்சியில் வதியும் உயிர்கள் தமக்குள்ளே பேசுவன (கழறிற்று) எல்லாவற்றையும் அறியும் திறனை இறைவன் அருளால் சேரன் பெற்றிருந்த காரணத்தால், சேரமான் பெருமாளுக்கு ”கழறிற்று அறிவார் நாயனார்” எனும் பெயருமுண்டாயிற்று.       

இந்நிலையில், இசைப்பாக்களால் தமைத் துதித்துவந்த பாணபத்திரருக்கு பெருஞ்செல்வம் அளிக்க விரும்பிய ஆலவாய்ச் சொக்கன், பாணபத்திரர் கனவில் எழுந்தருளி, “நம்மைப் பரவும் சேரமான் பெருமாளிடம் நான் ஈயும் ஓலையைக் கொண்டுசேர்த்தால் அவன் உனை இனிதே புரவுவான்” என உரைத்து மறுநாள் காலை “மதிமலி புரிசை...” எனத்தொடங்கும் ஓலை  தந்து அருள்கிறார்.

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆலவாயின்
மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்

பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
ஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க

பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்ல்
மாண்பொருள் கொடுத்து வர விடுப்பதுவே.

இப்பாடல் 11 ஆம் திருமுறையில் திருமுகப் பாசுரம் என்ற தலைப்பின் கீழ் உள்ளது. ஓலையைத் தலைமேல் தாங்கிய பாணர் சேரநாட்டிற்கு ஏகித் தன்வருகையைச் சேரனுக்கு அறிவிக்கிறார். அதைக் கேட்டு நெகிழ்ந்த சேரன், திருமுகத்தை வாங்கிப் பாணபத்திரர்க்குப் பெருஞ்செல்வத்தையும் தன் ஆட்சியையுமே ஈய முன்வருகிறான். பாணர் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, சேரனே ஆட்சியையும், அங்கங்களையும் வைக்கப் பணித்து மதுரை திரும்புவார்.  பாணபத்திரர் பற்றிய இன்னுஞ்சில செய்திகள் சிற்சில வேறுபாடுகளுடன் பெரும்பற்றப் புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் பாடிய திருவிளையாடற் புராணங்களில் புனைந்து கூறப்படும். ஏமநாதனோடு இசைப்போட்டி நடந்தது, மழையில் யாழ்நனைந்து கட்டழியாதபடி காக்க, இறைவன் பொற்பலகை தந்தது, பாடினியின் இசைப்போட்டியில் உதவியதென எழும் கதைகளைச் சேர்த்துப் பார்க்கையில், பாணபத்திரர் உண்மையிலேயே இருந்தாரா என்பதும் கேள்விக்குறியே. திருவிளையாடற் புராணங்களில் வரும் பாணபத்திரர் எக்காலம் என்பதும் நமக்கு விளங்கவில்லை.சரி, சேரமான் பெருமாள் கதையைத் தொடர்வோம். காலகாலமாய்ப் பூசைமுடிவில் கேட்கும் சிலம்பொலி ஒருமுறை கேளாது போகையில், “தான் என்னபிழை செய்தோம்?” என்றழுது, தன் வாளை மார்பிலே பாய்ச்ச முற்படுகையில், இறைவன் சிலம்பொலியை அதிகமாக்கிக் காட்டுவார். “ஒலியருளச் சுணக்கம் ஏன்?” எனச் சேரன் வினவியபோது, “ தில்லை அம்பலத்தில் ஆரூரன் பதிகங் கேட்டதில் சுணக்கம் ஏற்பட்டதாய் உருவற்ற இறைவன் குரல் கேட்கும். ”தன்னைவிட பெரியவரான ஆரூரரைப் பார்க்க வேண்டும், பெரும்பற்றப் புலியூரில் பொன்னம்பலம் காண வேண்டும்” என்ற விழைவில் சேரமான் பயணந்தொடங்குகிறான். போகும் வழியில் அடியார்க்குப் பணிவிடைகளும் உதவிகளும் நடக்கின்றன. முடிவில் காவிரி கடந்து பெரும்பற்றப் புலியூர் வந்து,  பொன்னம்பலக் கூத்தனின் திருநடங் கண்டு களித்து, பொன்வண்ணத்து அந்தாதியைப் பாடுகிறான். இந்நூல் 11 ஆம் திருமுறையில் இருக்கிறது. அந்தாதி கேட்ட கூத்தன் வழக்கமான சிலம்பொலியைச் சேரன் கேட்கும்படி எழுப்புகிறார். அங்கே சிலநாட்கள் திருக்களிற்றுப் படியின் கீழ் தங்கி கூத்தனை வணங்கிய சேரன் பின் திருவாரூருக்குப் புறப்பட்டான்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, January 25, 2020

பாசண்டச் சாத்தன் - 17

ஏற்கனவே கொடுத்த 21 க்கும் மேலாக,  8 புதிய கல்வெட்டுகளைத் தொல்லியல் துறை திருப்பிடவூர் நூல் காட்டும். அதில் 2 கல்வெட்டுகள் மட்டும் இக்கட்டுரையோடு தொடர்புடையவை. ஐயனார் கோயில் அர்த்த மண்டப வெளிப்புறச் சுவரிலுள்ள கி.பி.11-12 நூற். கல்வெட்டில் ”தெற்றி ஆராதநன்” என்ற பெயர் வரும். தெற்றியை (- மேட்டை, திண்ணையை) ஆராதிக்கிறவன் என அதற்குப் பொருள் சொல்லலாம். அதேபோது ஐயன் இருந்த தெற்றியை அரங்கமென்பது சரியா? - என்ற ஐயமும் நமக்கெழுகிறது. இன்னொரு சிதைந்த கல்வெட்டு (கி.பி1726) பிரமன் கருவறைத் தென்பக்கச் சுவரிலுள்ளது, இதில் பண்டாரத் தாண்டவ ராயன் என்ற பெயர் பயிலும். இக்கல்வெட்டிருப்பையும், கருவறை அமைப்பையும் பார்த்தால், பிரமன் கருவறை, பெரும்பாலும் கி.பி. 1726க்கு முன் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டு இருக்கலாமென ஊகிக்கிறோம். அதற்குமுன் பிரமன்கருவறை இருந்ததற்குச் சான்றில்லை.

சரி, மற்ற செய்திகளுக்கு வருவோம். முன்சொன்னது போல் எந்த மரபார்ந்த ஐயனார் கோயிலிலும் சிவராத்திரியே முகன்மைப் பண்டிகை. ஆனால், திருப்பிடவூர் கோயிலில் இப்போது அது கொண்டாடப்படுகிறதா என்றே தெரியவில்லை. அதேபோது சிவன்கோயிலில் கொண்டாடப்படுவதாய்க் கோயில் வலைத்தளம் சொல்கிறது. இதுபோக, ஆடிபூரம், ஆடிச்சுவாதி, திருக் கயிலாய ஞானவுலா அரங்கேற்ற நிகழ்வு,  சுந்தரர், சேரமான்பெருமாள் குருபூசை ஆகியவை அங்கு மிக விரிவாக நடக்கின்றன. தவிர, பங்குனி உத்தரம், திருக்கார்த்திகைக்கும் ஊர் விழாக்கோலம் பூணுகிறது. மொத்தத்தில் ஊர் பெருந்தெய்வக் கோயில் நடைமுறைக்கு மாறிவிட்டது.

தவிரவும், திருப்பிடவூர் ஐயனார் மூலவர் ”கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில்” உருத்திராக்கம் துலங்க, வலக்கையில் செண்டும், இடக்கையில் சிறு சுவடியும் கொண்டு சிவப் பழமாய்க் காட்சியளிக்கிறார். பிற்காலச் சிவநெறிக்குள் அவரைச் சேர்த்த பிறகு இத்தோற்றம் எழுந்தது போலும்.   மண்ணால் செய்யப்பட்ட ஐயனார் கோயிலைக் கற்றளியாய் மாற்றியவன் பெரும்பாலும் இராசேந்திரன் I என்பர். ஏற்கனவே  பல்லவர் காலம் தொடங்கி (3000 பேரை உறுப்பினராய்க் கொண்ட)  சிவப்பெருமானரின் பிரமதாயம் இம்மாற்றத்தை ஏற்று கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்வயப்படுத்தியது. The temple could have slowly moved into brahminized practices.

இராசேந்திரன் காலத்தில், சிவப்பெருமானரின் அனந்தீசர் கோயிலும் பெரிதாகிக் குலோத்துங்கன் காலத்தில் அநபாய ஈச்சுரமாகி  விசயநகரக் காலத்தில் பிரமபுரீச்சுரமானது. அதேகாலத்தில் பிரமதேயத்தின் முழுக் கட்டுப்பாட்டினுள் ஐயனார் கோயில், வந்துசேர்ந்ததும் புலப்படுகிறது. இன்னொரு வெளிப்பாடாய், குலோத்துங்கனாட்சியின் பின் நாயக்கராட்சி ஓங்கி, பிரமதேயமே குலையத் தொடங்கியது. நிலங்களை விற்ற பெருமானர் ஊரிலிருந்து நகர்களை நோக்கி நகர்ந்து விட்டார். இனிச் சாத்தனார் பற்றிய உரையாடலுக்குச் சற்று இடைவெளி விட்டு, சிவநெறியார் புகுத்திய சேர மான் பெருமாள் - சுந்தரர்- ஐயனார் செய்திக்கு வருவோம். இதைச் சுருங்கச் சொல்லிப் புறந்தள்ள முடியாது. ஏனெனில் 100 க்கு 98 பேர் இதை நம்புகிறார். சாத்தன் பற்றி நாம்சொன்ன பல கூற்றுகளையும் ஏற்க மறுக்கிறார். அந்த அளவிற்குப் பொதுப்புத்தியில் பல்வேறு செய்திகள் ஏறத்தாழ 900 ஆண்டுகளாய்ப் பரவியுள்ளன. ப்லருக்கும் அற்றுவிகம், செயினம், புத்தம் போன்ற நெறிகள் இங்கிருந்தன என்பதே மறந்துபோயிற்று. 

எனவே சேரமான் பெருமாள் - சுந்தரர்- ஐயனார் செய்தியை நீளவே பார்க்க வேண்டியுள்ளது. இதைச் சுந்தரரில் இருந்தே தொடங்குவோம். சிவப் பெருமானருக்குச் சுந்தர நாயனார் பெரும் அடையாளமாவார். சுந்தரர் காலம் கி.பி. 694-712 எனலாம்  (அப்பர் கி.பி. 580-661; சம்பந்தர் கி. பி.. 640-656) சுந்தரரோடு தொடர்புற்ற திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் ஆகியவை சிவப்பெருமானர் நிறைந்த ஊர்கள். தில்லை மூவாயிரர் (தீக்கிதர்) போலவே பிடவூர் சிவப் பெருமான மூவாயிரவரும் சோழநாட்டில் முகன்மையுற்றவர் போலும்.  பிடவூர், ஓர் ஊராய் மட்டுமன்றி. நெல்விளையும் நாடாயும் இருந்துள்ளது. பிற்காலத்தில் சிவன்கோயில் பெருவலமாகத் தொடங்கியது முன்கொடுத்த கல்வெட்டு வாசகங்களைப் படித்தாலே விளங்கும்.   தேவார மூவர் திருப்பிடவூர்ச் சிவன் கோயிலுக்கு நேரே வரவில்லை. ஆனால்  அப்பர், “தெய்வப் புனற்கெடில (6-7-6) என்ற பாடலாலும், “ஆரூர் மூலத்தானம்” (6-70-2) என்ற பாடலாலும் சுந்தரர்,

அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே.

என்ற பாடலாலும் (7-96-6),  “நன்குன்றப் பொழில்வளர் மகிழ் திருப்*பிடவூர்* என்ற (9.78 திருவிடைக்கழி) திருஇசைப்பாவாலும் திருப்பிடவூர் வைப்புத் தலமாகப் பேசப்படுவது தெரிகிறது. சுந்தரரின் வாழ்வு பற்றிய கதைகளின் ஊடே அவருக்கும் கழறிற்று அறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமாள் நாயனாருக்கும் ஏற்பட்ட நட்பு சொல்லப்படும். திருத்தொண்டத் தொகை ஆறாம் பாடலில் ”கார்கொண்ட கொடைகழறிற்று அறிவார்க்கும் அடியேன்” என்று கழறிற்று அறிவாரின் கொடை பேசப்படும். சேரமான் பெருமாள் நாயனாரின் வாழ்வில் நடந்த இரு நிகழ்வுகளை விவரித்து, திருத்தொண்டர் திருவந்தாதியில் 45 ஆம் பாட்டில்,,

மன்னர் பிரானெதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான் தமர்போல வருதலும் தான்வணங்க
என்னர் பிரான் அடிவண்ணான் எனஅடிச் சேரன் என்னும்
தென்னர்பிரான் கழறிற்று அறிவான் எனும் சேரலனே

என்று மழையால் உவர்மண் உடலின்மேல் விரவிச் சிவனடியார்போல் காட்சியளித்த வண்ணாரை, “அடியேன், அடிச்சேரன்” என்று சேரமான் வணங்கிய செய்தியும், 46 ஆம் பாட்டில்,


சேரற்குத் தென்னாவலர் பெருமாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட
சூரற்கு எனதுள்ளம் நன்றுசெய்தாய் இன்று தொண்டுபட்டே

என்று சுந்தரர் கயிலாயம் எழுவதற்குத் தோதாய்ச் சிவனளித்த விரைவு யானையோடு, தன் பந்தி இவுளியை ஒருசேர விரைய வைத்த சேரரின் திறம் சொல்லப்படும். இதையே இன்னும் பெரிதாய் விவரித்து பெரியபுராணத்தில்  கழறிற்றறிவார் புராண 3748 - 3922 ஆ, பாடல்களின் வழியும், வெள்ளானைச் சருக்க 4232- 4281 ஆம் பாடல்களின் வழியும், பல்வேறு நிகழ்ச்சிகள் விவரிக்கப் படும். அவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, January 24, 2020

பாசண்டச் சாத்தன் - 16

2 ஆம் இராசராசன் காலத்தில் (கி.பி.1153) 11 ஆம் கல்வெட்டில் (ARE 597/1908; முதற் சுற்றாலைத் தென்சுவரில் உள்ளது) ”திருப்பிடவூர் திருமண்டபம் உடையாருக்கும், பிள்ளையார் திரு வேப்பந் தெற்றி உடையாருக்கும்” என 2 திருமேனிகள் சொல்லப் படும். ”ஐயனாருக்கு இருவேறு படிமங்கள் பிடவூரில் இருந்தன” என்பதே இக்கல்வெட்டினால் தெரிய வருகிறது. தெற்றி யுடையார் என்றும், கூத்தாடும் தேவனென்றும் சொல்லப்படும் 2 ஆம் திருமேனி ”ஐயனார் கருவறையில் இருந்தது” என முன்பார்த்த கல்வெட்டுகள் தெரிவித்தன. முதல் திருமேனியின் இருப்பிடம் இப்போது எங்குள்ளது என்பது தெரியவில்லை. ”ஒருவேளை அரங்கேற்ற மண்டபத்தில் இருந்ததோ?” என்றும் தோன்றுகிறது. இப்போது அங்கே விநாயகர் சிலையே உண்டு.

”திருமண்டபம் உடையார்” என்ற பெயரில் புரிதற் குழப்பமுண்டு. ஏனெனில் பிந்தைக் கல்வெட்டுகளில் ”திருமண் தவஞ்செய்த நாயனார்” என்றும் “திருமண் தவம் உடைய நாயனார்” என்றும் வருகின்றன. எந்தப் பெயர் சரி? தெரியவில்லை  ஆழ்ந்துகாணின், தவம், சங்கத ஒலிப்பில் தபமாகலாம். “திருமண்தபம் உடையார்” என்பது எழுத்துப்பிழையில் ”திருமண்டபம் உடையார்” ஆகலாம். பொதுவாகக் ”கோயில் மண்டப இருப்பு ”, ஒரு சிலைப் பெயருக்குக் காரணமாகுமென இதுவரை காணாதால் (எல்லா முகன மேனிகளுக்கும் மண்டபம் உண்டே?), ”திருமண் தவமுடையார்” என்பதே எனக்குச் சரியாகப் படுகிறது. தவிர, ”அறப்பெயர்ச் சாத்தன் பிடவூரில் பிறந்தான் ” என்ற கூற்றிற்கும் அது வலு சேர்க்கிறது.

“திருமண் தவமுடைய நாயனார்” எனும் திருமேனி முன் எங்கிருந்தது? - என்பதும் தெரியாது. ஒருவேளை முதலில் அரங்கேற்ற மண்டபத்திலிருந்து, பின் விசயநகர காலத்தில் ஐயனார் கருவறைக்கு நகர்ந்ததா?- என்பதும் தெரியாது.  சிலைகள் தொடர்பாக, விடைதெரியாது, நம்மிடம் மொத்தம் 3 கேள்விகள் உள்ளன. 1. இற்றைப் பிரமன் சிலை எங்கிருந்து இங்கு வந்தது? 2. அரங்கேற்ற மண்டபத்தில் இப்போதுள்ள விநாயகருக்கு முந்தைச் சிலை எது? 3.  ஐயனார் கருவறையில் இப்போதுள்ள ”தேவியர் இணைந்த ஐயனார் சிலை” எக்காலம் பதிக்கப் பெற்றது? இன்னும் கொஞ்சம் ஆழம்போய் மேலே தேடுவோம்.

முதற் சுற்றாலைத் தென்சுவரில் இருக்கும் 12 ஆம் கல்வெட்டில் (ARE 596/1908) மேற்கூறிய ”திருமண்டபம் உடையார்,  பிள்ளையார் திருவேப்பந் தெற்றி யுடையார்” என்ற 2  ஐயனார் பெயர்களின் இருவேறு பண்டாரங்கள் (treasuries) குறிக்கப்படுகின்றன. இதனால் ஐயனாருக்கு  இருவேறு திருமேனிகள் இருந்தமை உறுதி. 13 ஆம் கல்வெட்டில் ஐயனார் பெயர் ஏதும் அறியமுடிய வில்லை. 14 ஆம் கல்வெட்டில்  பிள்ளையார் திருவேப்பந் தெற்றியுடையார் மட்டும் குறிக்கப்படுகிறார். 15 ஆம் கல்வெட்டில் ”திருமண்டப உடையான்” என்றபெயர் “அறிவேன்” என ஒப்புக் கொடுத்த ஒரு பெருமானருக்கு இருந்தது சற்று வியக்க வைக்கிறது. ஆக, அக்காலத்தில் ஐயனார் பெயரை சிவப் பெருமானரும் வயப்படுத்தியுள்ளார். இக்காலத்திலோ, ஐயன் வழிபாட்டில் பெரும்பாலான பெருமானர் சேர்ந்துகொள்வதேயில்லை. காலம் எப்படி மாறிவிட்டது? (நினைவு கொள்க! அற்றுவிகத் தொடக்கத்தில் பெருமானரும் பங்குபெற்றார்.)

[சபரிமலை ஐயப்பன் மட்டும் விலக்கு. பெருமானர் அவனைச் சேர்ந்து கொள்வார். பிடவூரும் அப்படி ஒரு விலக்குப் போலும். இன்று குயவர் பூசாரியாய் இங்கிருப்பதில்லை. பெருமானப் பூசகரேயுண்டு, ஒருவேளை பிடவூர் ஒருகாலத்தில் பிரமதேயம் ஆனதால்,  இம்மாற்றம் நிகழ்ந்தது போலும். தவிர, எல்லா ஐயனார் கோயில்களில் நாம் கட்டாயம் காணும் குதிரை, யானைப் பொம்மைகளும் பிடவூரில் இல்லை. ஐயனாருக்கு முன் நடுத்தர அளவில் ஒரு யானைச்சிலையும், அதன்மேல் ஒரு மண்டபமும் உள்ளன. முழுக்கோயிலும் எல்லாச் சிவன்கோயிலில் காணும் பெருமான நடைமுறைகளுக்கு (brahminized practices) மாறிப்போயுள்ளது, பொற்கலை என்பது கூடப் ”புஷ்கலாம்பிகை” என்று மாறிக் குறிக்கப்படுகிறது.

ஐயனார் கோயிலின், முன்மண்டபக் கிழக்குச்சுவர் சாளர வடப்பக்கலில், அமைந்த 16 ஆம் கல்வெட்டில்   (ARE 586/1908 3ஆம்  இராசராசன் கி..பி.1240), திருப்பிடவூர் உடையார் திருமண் தவஞ்செய்த நாயனாரென்றும், பிள்ளையார் திருவேப்பந் தெற்றியுடைய நாயனாரென்றும் தெளிவாக 2 திருமேனிகள் இருந்தமை சொல்லப்பெறும். இக்கல்வெட்டில் உள்ளூர் விநாயகப் பிள்ளையாரும் குறிக்கப்படுவார்.  முன்மண்டபத் தென்சுவரில் வாயில் இடப்பக்கலிலுள்ள 17 ஆம் கல்வெட்டில் (ARE 592/1908; 3ஆம் இராச ராசன் கி.பி.1248 ) திருப்பிடவூர் உடையார் கோயிலுக்கும், ”அநபாய ஈஸ்வரம் முடைய நாயனார்” கோயிலுக்குமான தானம் சொல்லப்படும். ஆக அனந்தீசர் கோயிலென 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெயர்,  அநபாயச் சோழன் குலோத்துங்கன் காலத்தில் அநபாய ஈச்சுரமாய் மாறிவிட்டது. இதுவே பிற்காலத்தில் பிரமபுரீச்சூரமாய் மாறியதோவென ஊகிக்கிறோம். அநபாய ஈச்சுரப் பெயர் 18 ஆம் கல்வெட்டிலும் உண்டு. 18 என்று தவறாய் எண் குறித்த போசள வீர இராமனாதன் கல்வெட்டில் (ARE 590/1908 கி.பி.1262.) பிள்ளையார் திருவேப்பந் தெற்றியுடையார் மட்டும் பேசப்படுகிறார்.

அடுத்து, ஐயனார் கோயில் முதற் சுற்றாலையிலுள்ள, ஜடாவர்மன் வீர பாண்டியன் காலத்தில் (கி.பி. 1277) எழுந்த 19 ஆம் கல்வெட்டில் (ARE 589/1908) உடையார் திருமண் தவமுடைய நாயனாரும், பிள்ளையார் ஸுப்ரமண்ய பிள்ளையாரும், திருவேப்பந்தெற்றி உடைய பிள்ளையாரும் பேசப்படுகிறார். கொஞ்சங் கொஞ்சமாய்  ஐயனார் என்பார், சிவனின் பிள்ளையாய் ஆக்கப்பட்டு விட்டார்.  இக்கல்வெட்டின் தானத்திற்கு ஒப்புக் கொடுத்தவர் பெயரில் ஒருவராய் “சாத்தனூர் உடையான் குருகுலராயன்” என்று வருகிறது. பிடவூருக்கு சாத்தனூர் என்ற பெயரும் இருந்தது போலும். சாத்தன் பெயர் ஐயனாருக்கிருந்ததும் கல்வெட்டில் வெளிப்படுகிறது. தவிரப் பிடவூர்நாடு பிடந்தைநாடென்றும் சொல்லப்படுகிறது. இன்னொரூ ஒப்புகையான் மேலை சூருடையான் சேரமான்தோழன் எனப்படுகிறான். ”சேரமான் தோழன்” என்பது சுந்தரநாயனாரின் பெயர். அவர்பெயர் இம் மேலைசூருடை யானுக்கும் வைக்கப்பட்டுள்ளது. ”சாத்தனுடையான் பிச்சாண்டான், சாத்தன் உடையான் சம்பந்தப் பெருமாள், சாத்தனூருடையான் தேவப் பெருமாள் ” என் இன்னும் 3 பெயர்கள் ஒப்புக்கொடுத்தவராய்ச் சொல்லப் பெறும்.

அடுத்து முன்மண்டபம் வடச்சுவரில் , ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய (கி.பி.1308) 20 ஆம் கல்வெட்டில் (ARE 594/1908), திருமண் தவமுடைய நாயனாரும், அநபாய ஈஸ்வரம் உடைய நாயனாரும், பிள்ளையார் திரு வேப்பம் தெற்றியுடையாரும் பேசப்படுவார். இக்கல்வெட்டை எழுப்பித்தவன் திருப்பிடவூர் கவுஸியன் மஹாதேவப் பட்டனென்ற பெருமானனாவான்.  எனவே ஐயனார் வழிபாடு அன்றை வரைக்கும் பெருமானரிடத்தும் கூடப் பரவியிருந்துள்ளது. இன்றுதான் பெருமானரிடம் ஐயனார் வழிபாடு பெரிதும் அறுந்துபோனது. பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்ற பரப்புரையில் பெருமானர் முற்றிலுங் கரைந்து பெருந்தெய்வ வழிபாடு மட்டுமே தாம் செய்யவேண்டுமென விலகிக்கொண்டார் போலும். இனிப் பிரமதேயம் அழிந்த விசயநகரக் காலத்திற்கு வருவோம். 

ஐயனார் கோயில் முதற் சுற்றாலையில் கெம்பமாயண நாயக்கர் காலத்தில் (கி.பி.16-17 ஆம் நூற்றாண்டில்) எழுந்த 21 ஆம் கல்வெட்டில் (ARE 599/1908), சிவ ராத்திரி நாள் புண்ணிய காலத்தில் இந்த நாயக்கர் கொடுத்த தானம் பேசப் படுகிறது. இதைப் படிக்கும் போது, பிடவூர்ப் பிரமதேயம் என்ற கட்டுமானம் விசயநகர நாயக்கர் காலத்தில் முடிவிற்கு வந்துவிட்டது என்று புரிகிறது. சோழர் காலத்தில் குலோத்துங்கனுக்கு அப்புறம் தொடங்கிய தெலுங்குப் பெருமானர் நுழைவு தமிழ்ப்பெருமானரின் இருப்பைக் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைத்தது. விசயநகரக் காலத்தில் இந்த மாற்றம் இன்னும் விரிந்தது. தமிழ்ப் பெருமானருக்கும் தெலுங்குப் பெருமானருக்கும் இடையே ஒரு நுணுகிய முரண் இன்றுமுண்டு. பிரமதேயங்கள் சிச் சிறிதாய் நலிவு உற்றன. பாளையப்பட்டுகள் என்ற புதுக்கட்டுமானங்கள் விரிவடையத் தொடங்கின. பிடவூரைச் சுற்றியும் இத் தாக்கம் தெரிகிறது.

அதேபொழுது ஐயனாரின் நாளாய்ச் சொல்லப்படும் மாசிமாதச் சிவ ராத்திரிப் பண்டிகை, இந்தக் குமுக மாற்றத்தின் இடையிலும் தொடர்ந்து வந்துள்ளது, இன்றும் தமிழ்நாடு எங்கணும் ஐயனார் கோயில்களில் சிவ ராத்திரி என்பது முகன்மையானது. ஐயனின் அருள்வேண்டிப் பூக்குழி ஏறுதல்,  சிறாருக்குத் தொட்டில் கட்டுதல், படையலிடுதல், சிவராத்திரி முழுக்க விழித்து இருத்தல், ஐயனாருக்கும், கருப்பருக்கும் விதவிதமாய் அலங்காரம் செய்து அழகுபார்த்தல் எனக் கூட்டம் அந்நாளைக் கொண்டாடிப் பெருக்கெடுக்கும்.  வரும் மாசி 9 ஆம் நாள் (பிப்ரவரி 21) இந்த ஆண்டு சிவராத்திரி வருகிறது அது அற்றுவிகம் ”தன் தோற்றுநன் கலியனின் பிறந்தநாளாய்ச்” சொல்லும். பிறந்த பிள்ளைகளுக்குத் தொட்டில் கட்டி ஐயனார் கோயிலை மூன்று முறை சுற்றிவருவதும், பிள்ளையின் முதல் மொட்டையை ஐயன் கோயில் வளாகத்தில் செய்வதும் இன்றும் தென் பாண்டிப் பழக்கம். பிடவூரில் நடக்கிறதா என்று அறியேன். எங்கள் சிவ கங்கை மாவட்டத்தில் அது பெருவழக்கு. எங்கள் குடும்பத்திலும் உண்டு.

அன்புடன்,
இராம.கி. 

 பி.கு. முன்கூறிய சில கல்வெட்டுக்களை கல்வெட்டு ஆய்வாளர் கோவை துரை சுந்தரம், http://mymintamil.blogspot.com/2018/07/blog-post_33.html என்ற ஆவணத்திலும் கொடுத்துள்ளார்.  அவர் தொடர்புக்கு doraisundaram18@gmail.com. அவருடைய  அலைபேசி :  9444939156.


Wednesday, January 22, 2020

பாசண்டச் சாத்தன் - 15

ஐயனார் வரலாற்றை (குறிப்பாகப் பிடவூரில் பிறந்ததை, அவர்நூல் இங்கு அரங்கேறியதை) ஆய்ந்தறியக் கல்வெட்டுகளுள் போகவேண்டும். திருப் பிடவூரில் சங்ககாலத்திற்கும் முந்தைய, இரும்புக்காலஞ் சேர்ந்த, கருப்பு- சிவப்பு மட்பாண்டச் சில்லுகள்  கிடைத்துள்ளன. ஆனால் இதுவரை யாரும் அங்கு தொல்லாய்வு நடத்தியதில்லை. எதிர்காலத்தில் ஒருவேளை நடந்தால், சங்க காலத்திற்கும் (கி.மு.600-கி.பி.250) முந்தைச் செய்திகளை நாமறிய முடியும். சங்ககாலப் புறநானூற்றுப் பாவை (இது பெரும்பாலும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு) சில இடுகைகளுக்கு முன்னால் கண்டோம். அதிற்றான் அறப்பெயர் சாத்தன் என்ற பெயர் நமக்குத் தெரிந்தது. அவன் புத்தனும் இல்லை, மகாவீரனும் இல்லை. பெரும்பாலும் தமிழ் வேளிர்மகன்.

பல்லவர் கல்வெட்டுகள் முன்சொன்னது போல் இந்தவூர்க் கோயில்களில் இல்லை. ஆனால் கட்டுமானங்கள் உள்ளன. இனிச் சோழர், போசளர், பாண்டியர், விசயநகரக் கல்வெட்டுகளுக்குள் அலசுவோம்.  இவ்வலசலுக்குத் துணையாக, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை 2017-18 இல் வெளியிட்ட, “திருப்பிடவூர்-திரணி” என்ற நூலைப் பாருங்கள். அதில் பல்வேறு பிடவூர்க் கல்வெட்டு வாசகங்கள் தரப்பட்டுள்ளன.   எழுத்துப்பிழைகளும், சொற் பிழைகளும், தொடர்ப்பிழைகளும் மலிந்தாலும், அருஞ்செய்திகளைக்  கொடுப்பதால், அதை வாங்கிக் கையில் வைத்துக்கொள்வது நல்லதே. (அடுத்த பதிப்பில் துறையினர் பிழைகளைக் களைய வேண்டுகிறேன்.)  இக்கட்டுரையில் முழுக் கல்வெட்டு வாசகங்களை நான் குறிக்கவில்லை. தேவையான தொடர்களை மட்டுமே காட்டுகிறேன். முழுதும் வேண்டுவோர் குறிப்பிட்ட தொல்லியல் துறை நூலைப் படியுங்கள்.  1,2,3,..... எனவரும் கல்வெட்டு எண்க்ள் இந்நூலில் உள்ளன.


பிடவூரின் முதற்கல்வெட்டு (ARE 587/1908) ஐயனார் சிலையின் பீடப் பலகையாய், இராசேந்திரன் I இன் 6 ஆம் ஆட்சியாண்டைச் (கி.பி1018) சேர்ந்ததாய், காட்சியளிக்கிறது. சோழ மெய்கீர்த்தி பாதியும், உத்தமசோழ மிலாடுடையார் என்பார் கோயிலுக்கு வழங்கிய கொடையும் இதில் குறிப்பிடப்படும். கல்வெட்டின் மீதே சிலைகளைப் பதித்து கல்வெட்டு மறைக்கப் பட்டதால் முழுதும் படிக்க முடியவில்லை. இருப்பினும் 2 கேள்விகள் எழுகின்றன. உண்மையிலே இங்கு இப்போதுள்ள ஐயனார் சிலை, பழஞ்சிலையா? அதற்கெனத் தனிப் பீடம் இல்லாதா போகும்? அவக்கரமாய் இராசேந்திரசோழன் கல்வெட்டைக் கீழேவீழ்த்திப் பீடமாக்குகிறாரெனில், அது அரச நிருவாகம் செய்ததுபோல் தெரியவில்லையே? இராசேந்திரன் பிறங்கடை அரசு தம் மதிப்பிற்குரிய  முன்னோன் கல்வெட்டை இப்படிக் கையாளுமா? பொருள் வயதி (வசதி) இல்லா உள்ளூர்ச் சபையார் செய்தது போல் தெரிகிறதே? தவிர இங்குள்ள எந்தக் கல்வெட்டிலும் பூரணை, பொற்கலைத் திருமேனிகள் சேர்ந்திருந்ததைக் குறிப்பிடவே இல்லையே? ஒருவேளை சிலை மாற்றம் ஏதும் இங்கு நடந்ததா? - தெரியவில்லை.  பிரமன் சிலை ஞாவகம் வருகிறது.

அடுத்து ஐயனார் கோயில் வடகீழ் மண்டபத்தின் 2 தூண்களிலுள்ள இராசாதி ராசன் கல்வெட்டிற்குப் (ARE 602/1908) போவோம் . இவன் காலம்  கி.பி. 1012 - 1044. பொதுவாகத் தமிழக அரசரின் ஆட்சிக்காலக் கணக்கு இளவரசுப்பட்டம் கட்டியதில் தொடங்கி, இறப்புவரை நீளும். இக்கல்வெட்டில் ஐயனாரைக் குறிப்பிடும்போது, “(திருப்பிட)வூர்ப் பிள்ளையார் திருவேப்பந் தெற்றி உடையார்க்கு” என்றுவரும். 'பிள்ளை' என்பது இளந்தோற்றத்தாரைக் குறிக்கும். பிள்ளையார் என்பது விநாயகன், முருகன், (ஹரிஹரன் எனப் பட்ட) ஐயன் என அனைவர்க்கும் உரிய அழைப்புச்சொல். திருவேட்பம்> திருவேப்பமாகும். ஒரு போருக்குமுன், கருமம் செய்யுமுன், அரசர், வணிகர், பொதுமக்கள் போன்றோர், ஐயனாரை வணங்கித் தாம் வேட்டதை (வேண்டியதை) நடத்தித்தரச் சொல்வார். இன்றும் நாட்டுப்புறங்களில், ஐயனாரைக் குலதெய்வமாக்கும் பொதுமக்களிடம், அப்பழக்கமுண்டு. வேட்பம்= வேண்டுதல்.

தெற்றி = திண்ணை (’இலங்குவளை மகளிர் தெற்றியாடும்”- புறம் 53), தெண்டு, திண்டு, திட்டு, திட்டி, திட்டை, மாடம், மேடு (புற்றுந் தெற்றியும் சாடும். தென்னக. கல்வெட்டுத் தொகுதி எண் 111, 410), அரங்கம் போன்ற வற்றைக் குறிக்கும் சொல். தெற்றியிலக்கை= ஊர்ப் பொதுவில் ஒரு பகுதியை மேட்டிடமாகச் செய்து பயன்படுத்துவோர் செலுத்தும் வரி. சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருநாங்கூர்த் திருத்தெற்றி யம்பலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. செங்கண்மால் இங்கே கிடந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ”சீராரு/ சேழுயர்ந்த/சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்தென் செங்கண் மாலே”, என்று விதவிதமாய்த் திருமங்கையாழ்வார் தம் பாசுரங்களில் பேசுவதால் மேலேயுள்ள தெற்றியின் பொருள் மிகச் சரி.

எனவே திருவேப்பந் தெற்றியுடையாரே இன்று அரங்கேறிய ஐயனாராய்ச் சொல்லப்படுகிறாரென விளங்கிக் கொள்கிறோம்.  (வியப்பு எது தெரியுமோ? அரங்கம் என்ற சொல்லே எந்தக் கல்வெட்டிலும் இங்கு வரவில்லை.) கல் வெட்டை எழுப்பித்தவனாய் ”உத்தங்க(த்)துங்க வளநாட்டுக் குன்றக் கூற்றத்து, பெரும்பழுவூர்ப் பிடாகை மே(ய்)ச்சன் குளத்திருக்கும், தபஸி தெற்றியாதித்தனான ஒத்தகளொத்த பிச்சன்” என்று சொல்லப்படும். ஆக ஒரு தவசி (அற்றுவிகனோ? தெரியாது.) எழுப்பிய தானம் பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. தெற்றியாதித்தன் என்ற பெயர் ஐயனார் கோயிலிருந்த இடத்தைக் குறிக்கிறறது. ”தக்கோர் ஏற்ற பித்தன்” எனும் பொருளில் ”ஒத்துகள் ஒத்த பிச்சன்” என்ற விளிப்புப் பெயர் எழுந்திருக்கலாம். . 

அடுத்த கல்வெட்டு (ARE 50/1908) கோபுர நுழைவாயில் இடப்புற நிலைக் கல்லிலுள்ள  இராசேந்திரன் I இன் 31 ஆம் ஆட்சியாண்டு சேர்ந்தது. இதை எழுப்பியவனும் தெற்றியாதித்தனே. நாலாங் கல்வெட்டை (ARE 49/1908) எழுப்பித்தவன் மதுராந்தக இளங்கோ வேளான். ஐந்தாங் கல்வெட்டு (ARE 605/1908) முன்சொன்னதுபோல் பிரமபுரீசர் குளக்கரையின் வடபுறம் உள்ள ஏழுமுனியீசர் திருநிலைவாயிலின் நிலைக்கல்லில் பொறித்துள்ளது. இது விக்கிரம சோழன் காலத்து (கி.பி. 1118-1135) 12 ஆம் ஆட்சியாண்டில் எழுந்தது. இக்க்ல்வெட்டில் தெற்றி(க்) கூத்தன் என்ற பெயர் ஐயனாரின் பெயர்கொண்ட வேளான் ஒருவனைக் குறிக்கிறது.

கூத்தனென்றவுடன் நம்மிற்பலரும் தில்லை நடவரசனையே (=நடராஜாவையே) எண்ணுமாறு கட்டிப் (conditioned) பட்டுள்ளோம். எப்போதுமே அப்படி இருக்கத் தேவையில்லை. தெற்றியில் கூத்தாடும் பழக்கம் ஐயனாருக்குமுண்டு என்பது இக்கல்வெட்டால் விளங்குகிரது. ”ஆடல், பாடல் என்பவை அற்றுவிகத் தோற்றுநரான மற்கலிக்கும் உகந்தது” என்பதை புத்த, செயின ஆவணங்கள் வழியும் அறிகிறோம். ஆடல், பாடல் செய்ததை அந்நெறிகள் அற்றுவிகத்தின் குறையாயும் சொல்லின. இங்கே தமிழ்ச்சான்று மறுபக்கத்தைக் காட்டுகிறது. தெற்றிக் கூத்தனுக்கு இன்னொரு பெயராய் ”அம்பலங் கோயில் கொண்டான்” என்றும் வரும். ”தெற்றியம்பலத்தைக் கோயில்கொண்டான்” என்று ஐயனார் இங்கு சொல்லப் பெறுகிறார். இதே கல்வெட்டில் சிவன் கோயில் இறைவனின் பெயர் ”திருவனந்தீசர்” என்றும் சொல்லப்படும்.

ஆறாங் கல்வெட்டு (ARE 48/1908) 2 ஆம் குலோத்துங்கன் காலத்தது (கி.பி 1137). இது ஐயனார் கோயில் மண்டபத்துத் தென்சுவரில், வாயிலின் வலப் பக்கத்தில், இருக்கிறது. இதில் ஐயனார் பெயர் ”திருப்பிடவூர் உடைய பிள்ளையார்” எனவரும். கல்வெட்டு எழுப்பியவர் ஒரு நானாதேசிப் பெருந் தட்டான். 7 ஆம் கல்வெட்டில் ஐயனார் பற்றிய புதுச்செய்திகள் இல்லை, 2  வரிகளுக்கு மேற்பட்ட வாசகம் அதில் சிதைந்துள்ளது. 8 ஆம் கல்வெட்டில் (ARE 602/1908) மடப்பள்ளி மண்டப உட்புறத் தூண் விட்டத்தில் உள்ளது) சிறுபுலியூர் வேளானின் பெயராய்க் ”கூத்தாடும் தேவன்” என்பது வரும். தெற்றிக்கூத்தனின் இன்னொரு விவரிப்பு போலும். மகாமண்டபத் தென் சுவரில், வாயிலின் வலப்பக்கமுள்ள 9 ஆம் கல்வெட்டில் (ARE 509/1908) ”பிள்ளையார் திருவேப்பந் தெற்றி உடையார்” என்பதே ஐயனாரின் பெயராய் வரும்.  பத்தாம் கல்வெட்டின் வாசகம் தொல்லியல் துறை நூலில் இல்லை.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 21, 2020

பாசண்டச் சாத்தன் - 14

இதுவரை ஐயனார் கோயிலின் பல்வேறு உறுப்புகளைப் பார்த்தோம். இனிப் பிடவூர் ஐயனார் கோயில் கல்வெட்டுகளுக்குள் போகவேண்டும். அதற்கு முன்,  பிரமபுரீசர் கோயிலையும் அதிலுள்ள பிரமன் படிமம் பற்றியும் பார்க்கும் தேவையுள்ளது. ஏனெனில் அங்குள்ள பெருமாண்ட பிரமன் சிலைக்குள் விடை தெரியா சூழ்க்குமம் ஏதோ இருப்பதுபோல் தோற்றுகிறது.  திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லூர் வட்டம் சமய புரத்திலிருந்து 15 கி.மீ. இலும், சிறுகனூருக்கு 4 கி.மீ. வட மேற்கிலும் திருப்பட்டூர் என்ற திருப்பிடவூர் உள்ளது. ஊரின் வடகிழக்கில் மிகப் பிற்காலத்தைய, சிற்பத் தோரணை பார்க்கின் விசயநகரக் காலம்போல் தோற்றும், பிரமபுரீசர் கோயிலே ஓங்கி நிற்கும்; முகனமாய்க் காட்சி யளிக்கும்

அருகே தென்கிழக்கில் சிறுகனூர்ப் பாதையில்  அரங்கேற்ற ஐயனார் கோயிலும், வடமேற்கில் பிடாரி கோயிலும், அருகே காசி விசவநாதர் கோயிலும், மேற்கில் வரதராசப் பெருமாள் கோயிலும் உள்ளன.  பிரமபுரீசர் சுற்றாலைக்குள் (ப்ரகாரத்தில்) காலத்தால் முற்பட்ட கயிலாசநாதர் கோயிலும் உண்டு. பதஞ்சலி, வியாக்ரபாதர், காசியபர் ஆகிய முனிவரின் முத்தித் தலமென முனைந்து மருட்டும் சுற்றுலாக் கையேடுகள் ”இது சாத்தன் பிறந்த ஊர்” என்று பெருமிதத்தோடு ஒருபோதுஞ் சொல்லா.  ”பிரமனை வழிபடின், உமக்கு மங்கலவாழ்வு தருவான்; உங்கள் தலையெழுத்தையே அவன் மாற்றிவிடுவான் ” என்ற பரப்புரையில் மக்கள்கூட்டம் பெருக்கு எடுத்து நிறையும் பிரமபுரீசர் கோயிலை முதலிற் பார்ப்போம்.

தன்னை மதியாப் பிரமன் தலையைச் சிவன் கொய்து தண்டித்தபின், பிரமன் சிவனிடமே கழிபேற்று வழிகேட்க, திருப்பட்டூரில் கிட்டுமெனப் பணிக்கப் பெற்றபின், உரிய காலத்தில் பிரமபுரீசர் பிரமனுக்கு அருள்செய்தாரெனத் தலப்பழனம் சொல்லும். இத்தொன்மத்தால், பிரமபுரீசரோடு, பிரமனும் இங்கு  முகனமுறுவான். கருவறை சுற்றும் கோட்டத்தில் ( = கன்னத்தில் இடுக. கோட்டமென்று தமிழில் சொல்லிவிட்டேன். ”சாமி கோச்சுக்கப் போறார்”. கோஷ்டமென்று சங்கதத்தில் சொன்னால்தான் அவருக்கே புரியுமாம்) தக்கண மூர்த்தி, தனித் திருநிலை (=சந்நிதி)ப் பிரமன்,  விண்ணவன் ஆகியோரைக் கும்பிட்டு, பின் மூலவரைத் தெரிசிக்க வேண்டுமென்பார். பங்குனி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் சூரியக் கதிர்கள் பிரம்மபுரீசர் மீது படும்படி இங்கு கருவறை அமைப்பு உள்ளது. ”குருக்”கோளின் தேவதை பிரமன் என்பதால், வியாழக்கிழமை இக்கோயிலில் விதப்பானது.


இங்குள்ள 6 1/4 அடி உயர, பெருமாண்ட பிரமன் சிலை நம்மை வியக்க வைக்கும். ஏனெனில் எந்தச் சிவன்கோயிலிலும் அவ்வளவு உயரச்சிலை காண்பதரிது. அதேபோது ஆழ்ந்து காணின், கருங்கல்லாலான பிரமன் நெஞ்சின் கீழ்ப்பகுதி அப்படியே ஒரு புத்தன், செயினன், சாத்தன் உருவை ஒக்கும். (முழுச் சம்மணமிட்ட ஐயனார் உரு அரிதாகச் சிலவூர்களில் மட்டுமே உண்டு. பெரும்பாலான ஐயனார் கோயிலிற் சாத்தன் திருமேனி இட/வலக் காலை மடித்து பாதிச்சம்மணம் இட்டபடியும், இன்னொரு வல/இடக் காலைப் பீடத்திலிருந்து தொங்கவிட்ட படியுமிருக்கும் . இடம்/வலம் என்பது ஊருக்கு ஊர் வேறுபடலாம். )  தவிர, பிரமனுக்கு நாலு தலை காட்டும் அமைப்பும், தலைமுடிச் சடைமகுடமும், கருங்கல்லோடு இழைத்த சுதையுரு போலவே காட்சியளிக்கும்.  பிரமனை வழிபடுவோர் யாரும் இதுவரை அவன் உருவை நெருங்கிப் போய்ப் பார்த்ததேயில்லை.  சற்று தள்ளியே நிற்கும்படி அங்கு நடைமுறையுள்ளது. உண்மை அங்குள்ள குருக்களுக்கு மட்டுமே தெரியும். 

சுதைவேலையை மூடுமாப் போல் , ஒவ்வொரு வியாழக்கிழமை பூசையிலும் பிரமனுக்கு மஞ்சள் காப்பிட்டு ஒருவாரம் அது தொடர்ந்திருக்கும். பிரமனுக்கு புளியோதரை படைத்து, வந்தோருக்கு மஞ்சள் பெருஞ்சோறும் (ப்ரசாதமும்) தருவார். பிரமன் வழிபட்ட பழமலை நாதர், கந்தபுரீசர், பாதாள ஈசர், மண்டூக நாதர், தாயுமானவர்,  ஏகாம்பரேசர், அருணாசலேசர், கயிலாச நாதர், சம்பு கேசர், காளத்தீசர், எழுமுனியீசர், தூய மாமணி ஈசர்  போல் 12 இலிங்கங் களுக்கும், பிரமபுரீசருக்கு எதிரிலுள்ள நந்திக்கும், கோயிலின் மற்ற பரி வாரங்களுக்கும்  மஞ்சள் வட்டுடைகளையே (வஸ்திரங்களையே) அணிவிப்பார். கோயில் முழுதும் மஞ்சள்நிறம் தெறித்து நிற்கும்.

[வட்டுடை பற்றிய இடைவிலகலுக்குள் போகவேண்டியுள்ளது. வள்ளெனும் வேரில் சாய்வு, வளைவுச் சொற்கள் பிறக்கும். வள்+து= வட்டு= சுற்று.  உடலைச் சுற்றிக் கட்டும் துணியை வட்டு என்பது தஞ்சை வழக்கு,  வட்டம்= சுற்றாடை; “வாலிழை வட்டமும்”- பெருங்கதை. உஞ்சைக் காண்டம் 42, 208.   வட்டுடை= முழந்தாளவு சுற்றிக்கட்டும் உடை.. “அந்நுண் மருங்குல் இகந்த வட்டுடை ”- மணிமே. 3, 122.  அரைக்காற் சட்டையையும் கூட வட்டுடை என்பார். வட்டின் நீட்சியான வாட்டு என்பது வளைவு, சாய்வு. gradient ஐக் குறிக்கும். (”நீர்வாட்டுச் சரியாய் உள்ளதால் நீரிங்கே தேங்காது, ஓடிவிடும் ”) உடலைச் சுற்றி வாட்டிக் (=வளைத்துக்) கொள்ளும் துணி வாட்டியாகும்  அகரச் சொற்கள் பேச்சுவழக்கில் எகரமாவது உண்டு. கட்டு>கெட்டு, பலம்> பெலம், பருத்தல்>பெருத்தல். இது நெல்லை வழக்கு. இதுபோல் வாட்டியும் பேச்சுவழக்கில் வேட்டியாகலாம். சுற்றிக் கட்டுவது வேட்டி. (வெட்டப்பட்டது வேட்டி என்பது சரியல்ல. நானும் அறியாது ஒருகாலம் சொன்னதுண்டு.)

இன்னொரு வகையில் வட்டம், பாகதத்தில் ”வட்ட”வாகிச் சங்கதத்தில் வத்த> வஸ்த>வஸ்த்ர ஆகும்.  vest என ஆங்கிலத்தில் சொல்கிறாரே அதுவும் இதன் தொடர்புடையதே. ஆங்கிலத்தில் அகரம் எகரமாகியதைப் பாருங்கள். “என் ஜன்னலுக்கு வெளியே” என்றுவரும் குமுதத்தொடரில்  எழுத்தாளர் மாலன் , வஸ்திரம்> வேட்டி எனத் தலைகீழாய்ச் சொல்வார்.  ”வேட்டி தமிழில்லை. கடன் வாங்கியது” எனும் ஓட்டல்கள் நாம் ஏமாறும் வரை இப்படி எழத் தான் செய்யும். காரணம்,  நம்மில் பெரும்பாலோர் நம் சமயங்களின் தமிழ்மையை மறுத்துக் கோயில்களை விட்டேநகர்ந்து, ”திராவிடமென” ஒதுங்க முற்படு வதால், அதன் வெற்றிடத்தில் ”இந்துத்துவச் சங்கதச் சாயல்” ஓடிவந்து உட்காரவே செய்யும். நண்பர்களே! நம் சிவ, விண்ணவ நெறிகளின் தமிழ் ஆழத்தை அருள்கூர்ந்து உணர்க. நம் கோயில்களைச் சங்கதத்திற்குத் தாரை வார்க்காதீர்.  அற்றுவிகம் பற்றி நானிங்கு எழுதுவதும் இதன் தொடர்பாகவே.

பிரமபுரீசர்  வளாகத்திலுள்ளேயே இருக்கும் கயிலாசநாதர் கோயில் பிரமபுரீசர் கோயிலுக்கும் முந்தையது போல் தெரிகிறது. ஏனெனில் அது 2 ஆம் நரசிம்மவர்மன் (கழற்சிங்க நாயனார்; கி.பி 695 - 722) உருவாக்கிய காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயில் போல் தோற்றங் காட்டுகிறது,  மகேந்திரவர்மனால் எழுப்பப்பட்ட திருச்சி லலிதாங்குரன் குடவரையையும், தந்திவர்மன் காலம் (கி.பி. 795-846) எழுந்த. திருவெள்ளறைக் கோயிலையும், வெள்ளறையிலுள்ள முற்றுப்பெறாத பல்லவர் குடவரையையும். திருச்சி புள்ளம்பாடி வட்டம் ஆலம்பாக்கத்தில் தந்தி வர்மன் நினைவாய் உருவாக்கப் பட்ட சதுர்வேதி மங்கலத்தையும் ஓர்ந்து பார்க்கையில்,  பெரும்பாலும் திருப் பிடவூர் தேவதானப்  பிரமதேயம் என்பது 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்மனுக்குச் சற்றுமுன் எழுந்திருக்கலாமென்று தோன்றுகிறது. இச் சதுர் வேதி மங்கலத்தில் 3001 பேர் உறுப்பினரென இங்குள்ள கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. 

திருப்பிடவூர் என்ற ஊர் போக, குறுக்கை (இப்போது பெரிய குறுக்கை) திங்களூர், பெருங்கோனூர் எனும் பிடாகை (பெருங்கனூர்; பிடாகை = ஒரு பெரியவூரின் நீட்சி/suburb), பெருமக் குறிச்சி/பிரமக் குறிச்சி, மூவாயிர நல்லூர், பெருமா நத்தம், சிறுகோனூர் (சிறுகனூர்), மழவரையக் குறிச்சி யான நரசிங்க நல்லூர், குமரன் குடி, சனநாத நல்லூர், (கல்பாளையம்), பாதங் குளத்து ஏந்தல், சனமங்கலம் (சனமங்கலம்), தெற்றி குறிச்சியான அநபாய தேவ அரசநல்லூர், பாலையூர் (எதுமலைப் பாலையூர்), ஆகாரவல்லி (ஆவார வல்லி), மாங்குடி (ரெட்டிமாங்குடி) போன்ற பல ஊர்கள் அடங்கிய பிடவூர் நாடு என்ற தொகுதியும் கல்வெட்டுகளில் பேசப்படுகிறது. (பிடவூர் நாட்டைச் சேராப் பலவூர்களும் இவற்றில் வருகின்றன.) பிடவூர்நாட்டு ஊர்களில் பலவும் கி.பி. 700க்கு அப்புறமான பெருமானர் தொடர்பைக் காட்டுகின்றன. 

அதேபொழுது இவ்வூர்க் கோயில்களில் எதிலும் பல்லவர் கல்வெட்டுகளைக் காணவில்லை.  ஆனால், அப்பர் தேவாரமும் [”தெய்வப் புனற்கெடில  வீரட்டமும் செழுந்தண் பிடவூரும் சென்று” என்ற (6-7-6) ஆம் பாடல் வரி; ”ஆரூர் மூலத்தானம்  ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும்” என்ற (6-70-2) ஆம் வரிகள்] , சுந்தரர் தேவாரமும் [“அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேரருளாளன் பிடவூரன் தம்மானே தண்டமிழ் நூற் புலவாணர்க்கு ஓர் அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே” என்ற (7-96-6) ஆம் பாடல்] தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாய்ப் பிடவூரைக் காட்டும். தேவாரத்தால் இறைவன் பெயர் பிடவூரன் என்று தெரிகிறது. எனவே பிடவூர்ச் சிவன் கோயில் தோற்றத்தை மகேந்திர வர்மன் I காலத்திற்கு (கி.பி. 600–630) அருகிலும் கொண்டுபோகலாம்.

ஒருவேளை கயிலாசநாதர் கோயிற்கருகில் பிடவூரன் கோயில் சிறு மண் தளியாய் இருந்து, பின் சோழர் காலத் தொடக்கத்தில் திருவனந்தீசன் கோயிலாகி, அடுத்துக் குலோத்துங்க சோழன் காலத்தில் அநபாய ஈசன் கோயிலாகி, விசயநகரக் காலத்தில் பிரமபுரீசர் கோயிலாய் மாறியது போலும். பிரமபுரீசர் கோயிலுக்குள் எந்தப் பழங்கல்வெட்டும் இதுவரை  காணவில்லை. பிரமபுரிசர் கோயில் குளத்தருகேயுள்ள எழுமுனி ஈசர் (சப்தரிஷீயீசர்) திருநிலை வாயில் நிலைக்கல்லிலுள்ள விக்கிரமசோழன் கல்வெட்டில், , “இவ்வூர் திருவனந்தீஸ்வரமுடைய மகா தேவர்க்கு” என வருவதால், ஈசன் பெயர் தெரிகிறது. அனந்தீசன்= எல்லையற்ற ஈசன். பிரம்மம் எல்லையற்றது என்பதால், பிற்காலத்தில் பிரமபுரீசரென்று பெயர் மாற்றினார் போலும். எல்லா இடங்களில் தேடினாலும் பெரிய பிரமன் சிலை விசயநகர காலத்திற்கு முன்னால் இக்கோயிலுள் இருந்ததற்கு  எந்தச் சான்றுமில்லை.  இனி ஐயனார் கோயில் கல்வெட்டுகளுக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Monday, January 20, 2020

பாசண்டச் சாத்தன் - 13

இனி, ஐயனார்கோயில் தொடர்பான வேறு செய்தியைக் காண்போம். இரு வேறு யானைகள் துதிக்கைகளால் நீரைச் சிலிர்க்க, தாமரை மேல் இலக்குமி அமர்ந்த கய - இலக்குமிக் குறியிடு, ஐயனார் கருவறையின் திருநிலைக்கு மேல் செதுக்கப்பட்டிருக்கும். இதில்லாத ஐயனார் கோயிலே இல்லை. அதே போது இது செயின, புத்த, சிவ, விண்ணவக் கோயில்களின் வெவ்வேறு கருவறைத் திருநிலைகளிலும் இருக்கும். கய - இலக்குமி (Gaja Lakshmi) வடிவம் எல்லா நெறியாருக்கும் ஏற்றதாய் எப்படியோ ஆகியுள்ளது. இதன் நாட்டாரியல் (folklore) தோற்றம் கி.மு. 600 களில் பிம்பிசாரன் காலத்தில் மகதத்தில் எழுந்தது, சற்று விரிவாய்க் காண்போம். இங்கும் ஒரு குழுப் பழக்கம் சமயப்பழக்கமாய் மாறிய கதை வெளிப்படும்.. 

இலக்குமி தாமரையில் நிற்பது போன்றோ, அல்லது இருப்பது போன்றோ "கய- இலக்குமி வடிவம்" அமையும். [பலரும் வீடுகளில் வைக்க விழையும் இரவிவர்மா ஓவியம் காண்க.. இதில் ஒரு யானையே தோற்றும்.]  இருவேறு வெள்ளானைகள் (= வெளிறிய யானைகள்) ஓர் அட்டிகையைத் துதிக்கையால் காட்டுவது போலும், அல்லது துதிக்கைவழி நீர் சிலிர்க்குவது/ சிதற்றுவது போலும் காண்பிக்கும் படங்களுண்டு. (இலக்குமி, சிதற்றானை என) 2 வேறு கருத்துகளைப் பிணைத்து, கய- இலக்குமி இலக்கணையை உருவாக்குவார். செல்வம் கொழிக்க அருள்செய்யும் இயக்கியை ”திரு, இலக்குமி” என 2 வழியில் அழைப்பர். சாத்துகளில் பயணஞ் செய்யும் வணிகரால் இவள் பெரிதும் போற்றப்படுவாள்.

காடுவெட்டிப் போட்டு கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே!
என்றைக்கும் நீங்கா திரு.

என்பார் பாடுவார் முத்தப்பர். இந்திய வடமேற்கில் நுழைந்த ஆரிய மரபில் இலக்குமிக் குறிப்பில்லை.  கி.மு. 600 க்குச் சற்று முந்தைய இருக்குவேதப் பிற்சேர்க்கையான ”ஸ்ரீசூக்தத்தில்” இவள் முதலில் குறிக்கப்படுவாள். விக்கிப்பீடியாவில்,  ”First of all, it should be noted that the Sri Sukta is a Khila Sukta of the Rig Veda, meaning that it's a hymn found in the Bashkala Shakha or recession of the Rig Veda Samhita, but it's not found in the Shakala Shakha of the Rig Veda Samhita. The Śrī Sūkta forms part of the khilanis or appendices to the Ṛkveda. These were late additions to the Ṛkveda, found only in the Bāṣkala śākhā, and the hymn exists in several strata that differ both in content and period of composition” என்று தெளிவாய்க் குறிப்பர்.

முல்லைநில நாடோடிகள், செல்வம் செழித்த, நகர நாகரிகம் கொண்ட, ஆரியரல்லாக் குடியாரிடமிருந்து இத்தெய்வத்தை உள்வாங்கியதாய் ஆய்வுகள் சொல்லும். சிந்து நாகரிகத்தை முதல் நகர நாகரிகம் என்போர், கி.மு.800-600 களில்  கோசலம், வச்சம், லிச்சாவி, மகதம் போன்றவற்றில் உருவான நாகரிகத்தை, 2 ஆம்நிலை என்பார். இதோடு சேர்ந்ததே, தமிழர் நாகரிகம் எனக் கீழடி ஆய்வால் அறிகிறோம். கீழடி நாகரிகத் தொடக்கம் எக்காலம்?  இன்னும் தெரியாது. இப்போதைக்கு கி.மு.600. ஏறத்தாழ கி.மு.100- கி.பி 100 களில்  கய - இலக்குமி ஓவம் (Icon) 2 ஆம் நிலை நகர நாகரிகத்தில் உருவாகியது. இதை பார்ஹட் (Barhut), சாஞ்சி (Sanchi) விகாரைகளில் காண்கிறோம். செயின, அற்றுவிக, சிவ, விண்ணவக் கோயில்களிலும் இக் குறியீடு உண்டு. இலக்கிய, மரபு வெளிப்பாடு சார்ந்த அடவில் (design), மரம், சுதை, தந்தம், களிமண், கற்சிற்பமெனப் படிப்படியாக இவ்வுரு வளர்ந்தது. குவேரன், இந்திரன், முருகன், வாரணன் ஆகியோரோடு  இணைத்துப் பேசி முடிவில் சீதேவியாக, தாயாராகப் பெருமாளோடு வரும் தோற்றம் எப்படி எழுந்ததென்று சொல்லமுடியவில்லை. 

இலக்குமியோடு நீர்சிலிர்க்கும் யானையைச் சேர்த்ததின்பின் ஒரு கதையும், போருமுள்ளன.  நான் செயின மரபுக் கதையைச் சொல்கிறேன். ஒரு சில மாற்றங்களுடன், இது புத்த மரபிலும் உண்டு. காட்டில் அலைந்து திரிந்த ஒரு வெளிறிய மதநீர் யானையை  பிம்பிசாரன் பிடிக்கிறான். எந்தப் பயிற்சியும் இன்றி நீர்நிலைக்கு அருகில்நின்று, துதிக்கையால் நீர் உறிஞ்சி சிதற்றிய வண்ணம் இவ்வியானை இருந்ததைக் கண்டு வியந்து, ஸெச்சநாகா (சிலிர்ச்ச>ஸில்ச்ச> ஸெல்ச்ச> ஸெச்ச என்ற பாகதச் சொல்லிற்குச் சிலிற்றிய>சிலிர்த்திய> சிலிர்ச்சிய என்ற பொருள் வரும் ; நாகம்= யானை) என்று பெயரிட்டு, அரசன் அந்தப்புரம் சேர்ப்பான். அங்குள்ள நீர்நிலையில், அரசகுலப் பெண்கள் குளிக்கையில், அவர்மேலும் நீருறிஞ்சி யானை பீச்சியது ஊரெலாம் பேச்சாகும். செல்வக்குறியீடாய்ச் சேர்ந்துகொண்ட நீர் பீச்சிய அந்த யானையின் மதிப்பு பாதி மகதமாம். 

இளையமகன் விகாலகுமாரனுக்கு பிம்பிசாரன் கடைசிக் காலத்தில் இவ்வியானையைக் கொடுத்தானாம்.  விகாலனுக்கு முத்த, ஹல்ல குமாரனுக்குப்  பெரும் மணிமாலை கொடுத்தானாம். இருவருக்கும் மூத்த, அதேபோது தந்தையோடு முரணிய, அஜாதசத்துவிற்கு இப்பரிசளிப்புகளில் பொறாமை கூடியதாம். தந்தை தன்மேல் கொண்ட பாசமறியா அஜாதசத்து, தந்தையைக் கொன்றே அரசனாவான். கடைசிக் காலத்தில்  அஜாதசத்து புத்தநெறி சார்வான். அஜாதசத்து, ஹல்லகுமாரன், விகால குமாரன் ஆகியோரின் தாய் லிச்சாவி நாட்டு இளவரசி. அவள் தந்தை சேடகன், செயினத் தீர்த்தங்கரர் மகாவீரரின் தாய்மாமன்; அதாவது, மகாவீரர் தாய்மாமனின் (மகள்வழிப்) பெயரன் அஜாதசத்து.
       
அஜாதசத்து ஆட்சியேற்ற சிலகாலங்களில், ஒரு மாலைப்போதில் அவனரசி பதுமாவதி ( Padmavati)அரண்மனை மாடத்திலிருந்து வெளியே வேடிக்கை பார்க்கையில், ஹல்ல குமாரனும் விகால குமாரனும் தத்தம் மனைவியரோடு ஸெச்சநாகாவில் உட்கார்ந்து போனதையும் , ஒரு கொழுந்தி பெரும் மணி மாலை அணிந்ததையுங் கண்டு அரசி வியந்துபோனாள்  தோட்டத்தில் நின்ற பணிப்பெண் ஒருத்தி, “உள்ளபடியே இவ்வரசில் மகிழ்ச்சியில், வளத்தில், திளைப்பது அரசனல்ல, ஹல்லகுமாரனும், விகால குமரனுமே” என்று புறம் பேசுவதையும் கேட்கிறாள். ”இப்பரிசுகள் இரண்டையும்  நான் அடையா விடின் அரசியாய்த் தானிருந்து என்ன பயன்? “ என்ற எண்ணம் பதுமாவதிக்கு எழுகிறது.

அன்றிரவு  அசாதசத்துவிடம் அரற்றி, அவற்றைத் தான் அடைய வேண்டும் என அடம் பிடிக்கிறாள். மறுநாள் தன் தம்பியரிடம் வெள்யானை, மணி மாலையைத் தந்துவிடும் படி அஜாதசத்து கேட்கிறான். தமக்குத் தந்தை கொடுத்ததை தாமேன் விட்டுக்கொடுக்க வேண்டுமெனத் தம்பிகள் கேட்கிறார். அந்நாள் வழக்கப்படி மும்முறை வேண்டுகோள் சென்று,  மும் முறையும் மறுக்கப் படுகிறது  கோவமுற்ற அஜாசத்து, தன் தம்பிகளைச் சிறையிலிட ஆணையிடுகிறான். தம்பிகள், அங்கிருந்து தப்பித் தாய்வழிப் பாட்டனின் விசாலிக் குடியரசிற்குத் (Vaishali republic- Vajjis/Lichchavis) தாவுகிறார். அஜாதசத்து தன் பாட்டனுக்கு மும்முறை சொல்லிவிட, மும்முறை அங்கும் வேண்டுகோள் மறுக்கப்படுகிறது

அஜாதசத்துவின் சினம் முற்றுகிறது.  மாற்றாந்தாய் வழித் தம்பிகள் 10 பேரை (காளி குமாரரை) உடன் அழைத்து, அவர் படையை தன் படையோடு இணைத்து வேசாலிக் குடியரைசைத் தாக்க முற்படுகிறான். பாட்டன் சேடகனோ தனக்குத் துணையாய்  9 மல்லாட்சியர், 9 லிச்சாவிகள், காசி-கோசலம் சார்ந்த 18 அரசர் ஆகியோரைச் சேர்த்துப் பெயரனோடு பொருதுகிறான். சேடகன் மகாவீரரைப் பின்பற்றியதால், ஒருநாளைக்கு ஓரம்பு மட்டுமே விடுவானென்றும், அதேபொழுது அவன்குறி தப்பாதென்றும் கதைபோகிறது.  10 நாட்களில் 10 காளிகுமாரரும் ஒன்றன்பின் ஒன்றாய் இறந்து போகிறார். இறந்தவரின் மனைவியர் செயினத் துறவு கொள்கிறார்.

அஜாதசத்து தோல்வியை நெருங்கும்போது, அவன் இந்திரர்களைப் (Sakrendra and Charmendra) பரவி, 3 நாட்கள் தவம் செய்கிறான்.  சேடகனின் அம்பில் அடிபடாது தப்பிக்க அவர் உதவுகிறார்.  போர்  கடுமையாகிறது. பெருங்கற்களைச் செலுத்தி (உமிழ்ந்து) எதிரிகளைத் தாக்கும் "Mahasilakantaka" (sila= கல்; . kantaka = செலுத்து கருவி) எனும் ”கல் உமிழ் கவண்” கருவி இந்திரரால் உருவாக்கப் படுகிறது. அதன்மூலம் இலக்கம் பேருக்குமேல் போரில் அழிகிறார்.  அடுத்து, தானே இயங்கிச் சுற்றிச்சுழலும் (உலக்கைகள் போன்ற) ஈட்டிகள் பொருத்திய பெருந்தேரை இந்திரர் அளிக்கிறார். போர்க் களத்தில் நகர்ந்துசெல்லும் பெருந்தேர் (Ratha-Musala; Musala = முசலம், உலக்கை) இன்னும் இலக்கம் பேரைக் கீழே வீழ்த்தி மிதித்துக் கொல்கிறது. இந்த 2 கருவிகளால் போரின் போக்கு முற்றிலும் மாறுகிறது. சேடகன் தோற்று, கோட்டைக்குள் நுழைந்து நொச்சிப் போருக்கு மாறுகிறான்.

கோட்டை வலிமையால், உழிஞைப்போர் நீள்கிறது.  ”குலவாலகனெனும் செயினத் துறவி, தன் துறவை முறித்து ஒரு விறலியை மணந்தால், வேசாலி வீழும்” எனும்  சாமியாடி குறி கேட்டு, மகதிகா எனும் தாசி குலவாலகனைத் தேடிப் போகிறாள்.  தன் வசியத்தால், அவள் துறவியை வளைக்க, மனம் மாறி அவன் சோதியன் போல் உருமாறிக் கோட்டைக்குள் நுழைந்து, நகரம் மூனிசுவரர் கோயிலால் காப்பற்றப் படுவதை அறிகிறான். அக் கோயிலால் தான் நகரம் உழிஞைப் போரில் சிக்கியதெனப் பரப்புரை எழுகிறது. மக்கள் கோயிலை நாசம் பண்ணுகிறார். ஏற்கனவே செய்த ஏற்பாட்டின் படி,  குலவாலகனின் செய்ஞையை (signal) வைத்து, அஜாதசத்து  கோட்டையினுள் வெற்றிகரமாய் நுழைகிறான். வேசாலி முடிவில் சாய்கிறது.

அஜாதசத்துவின் வீரர் செய்துவைத்த இரும்புத் தடிகள் குவிந்துகிடந்த தீக் குழிக்குள் ஸெச்சநாகா தன்னேர்ச்சியாய் விழுந்து இறக்கிறது. ஹல்ல, விகால குமாரர் துறவியாகிறார். சேடகன்  சல்லேகனையில் உயிர் விடுகிறான். வேசாலியை மட்டுமின்றி காசி-கோசலத்தையும் அஜாதசத்து வெல்கிறான்.  இப்போர்கள் எல்லாம் கி.மு. 484-468 இல் நடந்ததாய் ஆய்வாளர் சொல்வர். மகதப் பேரரசு என்பது ஒரு நீருறிஞ்சி சிதற்றும் வெள்யானையின் மேல் பதுமாவதி பட்ட ஆசையால் உருவானது. மக்கள் மனத்தில் தீராத இடம் பெற்றுவிட்டது.

பதுமாவதி என்பது இலக்குமியின் இன்னொரு பெயர் தானே? அலர்மேல் மங்கை என்று நல்ல தமிழில் சொல்வர். கூடவே நீருறிஞ்சிச் சிதற்றும் சேச்சநாகாவும் நினைவில் தங்கிப்போனது. பெரும்பாலான கோயில்களின் திருநிலைகளில் இன்றும் காட்சியளிக்கிறது. இதற்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை. இது வடக்கிருந்த இனக்குழுப் பழக்கம். அவ்வளவு தான்.”எம் இறைவனை  நம்பு, செல்வமும் அருளும், உன்னை வந்து அடையும்” என்று சொல்லாமல் சொல்லும் ஓவமே கய- இலக்குமி. 

அன்புடன்,
இராம.கி.

Sunday, January 19, 2020

பாசண்டச் சாத்தன் - 12

இனிப் பூரணை, பொற்கலை எனும் 2 மனைவியரைப் பார்ப்போம். இருவரும் இந்திரன் மக்களென முன்சொன்னது, பெரும்பாலும் பழன (புராண) வழிப் பட்ட  புனைவுத்தியாகவே தெரிகிறது. ஏனெனில் பெரும்பாலான பழனங்கள் சான்றிலாக் கற்பனையே பேசும். மற்கலி கோசாளர் ஒரு துறவியா என்பதும் ஆய்விற்குரியதே. கி.மு.800-600 களின் முனிவர் போல் அவர் தெரிகிறார். பழங்கால வேதமுனிகளுக்கு குருபத்தினிகள்/ மனைவிகள் இருந்தது போல் வேதமறுப்பு அறிவருக்கும் இருந்திருக்கலாம், வேதமறுப்பார் எல்லோருமே துறவிகள் என்பது ஒருபால் கோடுதல் ஆகும். மகாவீரர், புத்தரிடமிருந்து கோசாளரை வேறுபடுத்திக் காட்டுவது ”ஹாலாஹலா” என்ற பெண்ணோடு அவர் தொடர்புற்று வாழ்ந்ததே. அக்குயவர் பெண்ணை தாசியென்று கூடப் புத்த, செயின ஆவணங்கள் பழித்துரைக்கும்.

இந்நிலை ஏசு கிறித்துவிற்கும் எழுந்தது. கடைநாள் வரை ”மேரி மக்தலேனா” அவர் வரலாற்றில், ஏனென்று தெரியாதபடி வருவாள். அவளுக்கும் ஏசுவுக்கும் என்ன உறவு? - என்பதும் தெரியாது. பிற்றைக் கத்தோலிக்கமும், ஏசுவின் சீடரும், அவளைத் தாசியென்பர். ஆங்காங்கு அவளைக் கதையில் தொட்டு, அதே போது ஒதுக்கி, விவிலியப் புத்தாகமம் (New Testament) செல்லும். ( கி.பி 500 க்கு முந்தைய, கத்தோலிக்கம் வலிமை பெறுவதற்கு முந்தைய) பல்வேறு ஆவணங்களை ஆய்ந்து, ”மரபார்ந்த யூதத்தை மாற்ற விழைந்த  யூதகுரு (Rabbi) போல் ஏசு இல்லற வாழ்வு நடத்தினார்” என்று சில ஆய்வர் சொல்வர். மேரி மக்தலேனாவை சீடப்பெண், மனைவியென்றுஞ் சொல்வர். (கிறித்துவ உலகில் 100 க்கு 98 பேர் இதை ஏற்றதில்லை.) இயேசுவைக் குறுக்கில் (cross) அறைந்தபின் உரோமர், மரபுசார் யூதகுருமார் கையில் சிக்காது மேரி மக்தலேனாவும், ஏசுவின் குழந்தைகளும் தப்பி பிரான்சுக்கு ஓடியதாக ஒரு நுணவ (minority) மரபுண்டு.

மற்கலி வாழ்விலும் இதுபோற் கதையுண்டு. ”ஒழுக்கங் குறைந்து, தாசி ஹாலாஹலா வீட்டில் மற்கலி தங்கினார்” எனப் புத்த, செயின ஆவணங்கள் சொல்லும். ”புது நெறி போதித்தவர் ஒழுக்கக் குறைவோடு இருக்க வாய்ப்பு இல்லை” என்ற ஏரணத்தையும், அவரைநாடிப் பல்லாயிரவர் திரண்டாரென அதே ஆவணங்கள் கூறுவதையும் பார்த்தால், ஒரு வேளை ஹாலாஹலா மற்கலியின் மனைவியோ? - எனுஞ் சிந்தனை எழுகிறது. ஏனெனில் புத்தரோடும், மகாவீரரோடும் ஒப்பிடப்படும் ஒருவர் துறவு பூணாததே அவரின் பின்பற்றிகளுக்கும், எதிரிகளுக்கும் சங்கடம் விளைத்திருக்கும். (நம் காலத்தில் நடந்த பெரியார்- மணியம்மை திருமணமும் இதுபோல் ஒரு சிக்கலைப் பலருக்கும் உருவாக்கியது. அத் திருமணத்தால் பெரியாரைப் பழித்தோர் ஏராளம். அதில் பின்பற்றிகள், எதிரிகள் என இருவருமுண்டு.)

சரி, அது என்ன விந்தைப்பெயர் ஹாலாஹலா? - எனுங்கேள்வி அடுத்தெழும். நிலவின் வாகு நிலையைக் (phases of moon) கலை, திகழி>திதி என்று தமிழில்  சொல்வார். 30 திகழியில் முதற்கலை, அமையுவா (=அமாவாசை) என்றும், 15 ஆம் கலை பூரணை (=பௌர்ணமி) என்றும் சொல்லப்படும்.  முழுவொளி பெற்ற பூரணை நிலவு நாள், பொல்+ கலை= பொற்கலை ஆகும். இதைப் பால் நிலவென்றுஞ் சொல்வர். கன்னடப் பலுக்கில் ”பால்” ஹாலு ஆகும். (தக்கணப் பாதையின் தெற்குநீட்சி  கருநாடகவழி தான்.) தமிழியப் பலுக்கலில் ஈர் உயிருக்கு இடைப்பட்ட ககரம் இயல்பாய் மெலியும். எனவே இரு திரிவையும் சேர்த்துப்பார்த்தால் பொற்கலை= பால்கலை> ஹாலுகலா> ஹாலுஹலா> ஹாலாஹலா என்று வடக்கே சொல் போகையில் நடக்கக் கூடியதே. நான் புரிந்துகொண்ட வரை பொற்கலையும் பால்கலையும் ஹாலாஹலாவும் ஒன்றே.

பூரணை எனும் இன்னொரு தேவி பற்றி அறியப் பூரணகாயவர் பற்றி அறிய வேண்டும். மற்கலிக்கு மூத்தவரான பூரணர் மற்கலியின் அறிவர்பணியில் இரட்டை போலவே இயங்கினார். (புத்த நூலான சம்யுக்த நிகாய வழி இதை விளங்கிக் கொள்கிறோம்.) மற்கலியின் நியதி வாதமும், பூரணரின் இயல்பு வாதமும், பக்குடுக்கைக் கணியாரின் அணுவியமும் ஒன்று சேர்ந்தே அற்றுவிக நெறி எழுந்தது. மற்கலியின் பணிக்கால நடுவில் பூரணர் இறந்து போனார். ஆனால் அற்றுவிக முழுமைக்குக் காட்டு யாரெனக் கேட்டால், எல்லோரும் பூரணரையே அடையாளங் காட்டுவர். இது செயின ஆவணங்களின், புத்த ஆவணங்களின் வழி பெறப்படும் செய்தி. 

கி.பி. 450 இல் எழுந்த மணிமேகலையிலும், நீலகேசி (கி.பி.900) , ஹரி பத்ராவின் ”சத்தர்சன சமுச்சயம்” என்ற புத்தநூலின் உரையான குண ரத்னாவின் ”தர்க்க ரகசிய தீபிகா” நூலிலும் ( கி.பி1400 ) பூரணரின் நுண் மாண் நுழைபுலம் (பூரண அறிவு = எல்லாம் அறிந்த நிலை) விதந்து பேசப் படும். ஒருவேளை 96 வகை வேதமறுப்பு நூல்களை அவர் கரைத்துக் குடித்திருந்தார் போலும். அதனால் தான் இந்த இலக்கியங்களில் வரும் ஆசீவிக வாதங்களுக்கு அவரே முன்னவராகிறார். பூரணர், பழந்தமிழில் இயற்பெயராகத் தெரியவில்லை. காரணப் பெயராகவும் பட்டப்பெயராகவும் (title) தெரிகிறது,  குணமும் குணியும் (குணமுள்ளவர் குணி) பிரிக்க முடியாதன என ஆசீவகம் சொன்னதாய் ”மேகலை” சொல்லும். காயவர்> காசபர் (kAssapa) குடிப்பெயராகலாம்.  பூரணர் இருப்பிடமாய் குக்குடமாநகர் (குக்குடம் = கோழி. உறையூர் = கோழியூர்>சோழியூர்) சொல்லப்படும். முன்சொன்ன பிடவூருக்கு அருகில் இப்பெருநகர் உள்ளது.

குணம்/ குணி என்ற எடுகோளில் ”குணம் எவ்வகையிலும் ஆளுமைப் படுத்தப்படலாம்.” பிற்கால ஆசீவிகரிடம் பூரண ஆணாளுமை மறைந்து பெண்ணாளுமையாய் அது உருவகிக்கப் பட்டது போலும். பூரணை என்ற தேவி, கோசாளருக்கு அணிமையாய், பூரணத் தன்மையோடு உருவகிக்கப் பட்ட வடிவம். விண்ணவத்தில் பெருமாளை உருவகிக்கும் போது ஒரு பார்வையில் இலக்குமன், இராமன், சீதை எனவும்,  இன்னொரு பார்வையில்  (இலக்குமி என்ற) சீதேவி,  இராமன், பூதேவி எனவும் அமையும். (தென்னக விண்ணவத்தின் மறுபளிப்பான) வட பாகவத சமயத்தில் இராம, இலக்குவ சீதை பாவமே பலருக்கும் முன்வரும் வடிவு. சத்தியபாமா, கண்ணன், உருக்குமினி படிமம் அவரில் குறைந்திருக்கும். இதற்கு மாறாய்த் தெற்கே சீதேவி, பூதேவி, பெருமாள் சேர்ந்த படிமம் அதிகமாயும், இலக்குமன், சீதை, இராமன் சேர்ந்த படிமம் குறைவாயும் விரும்பப்படும்.

பொதுவாகத் தெற்கே, எப் படிமத்திற்கும் 2 தேவியர் என்ற கருத்தீடு ஊடுவருவது அதிகம்.. பிள்ளையாருக்குக் கூடச் சித்தி, புத்தி அடையாளங் காண்பர். எனவே பூரணரைப் பூரணையாகப் படிமங் கொள்ளும் கருத்தீடு தென்னகத் தாக்கம் கொண்டது. பூரணை, புட்கலை பற்றிக் கந்த புராணத்தில், கச்சியப்பர்,

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

என்பார். சில ஐயனார் கோயில்களில் 2 தேவியரின்றி ஐயனார் திருநிலை தனியாக உண்டு. சிலவற்றில் அகவை முதிர்ந்த தோற்றமும், சிலவற்றில் புனிற்றிளமைத் தோற்றமும் காட்டப்படும். பின்னால் 13/14 ஆம் நூற்றாண்டில் ஆசீவிக நெறி இடந்தெரியாமல் அழிந்தபின், புனிற்றிளம் தோற்றங் காட்டும் பந்தள நாட்டின் ஐயப்பன் கதை ஏற்றப்பட்டது போலும். அது எப்படி, ஏன் நடந்தது? - என்ற ஆய்வை நான் செய்ததில்லை. யாராவது செய்தால் சிறக்கும். கட்டாயம் அது பின்னால் வந்த கதை.

அன்புடன்,
இராம.கி.

Saturday, January 18, 2020

பாசண்டச் சாத்தன் - 11

அடுத்தது. கோசாளரின் தோற்றம். புத்தத்துறவியர் தலைமுடி மழித்தது போலவும், செயினத்துறவியர் தலைமுடி பறித்தது போலவும், எந்த ஆசீவிக அறிவரும் இருந்ததாகத் தெரியவில்லை. தலைமுடி, சடைத்தபடி, இவர் இருந்தார் போலும். ஐயனார் திருமேனிகளும் அப்படித் தோற்றவில்லை.  ஒருவேளை சில அறிவர் நக்கனம்/ அம்மணம் கைப்பிடித்திருக்கலாம். அதேபோது இந்தோனேசியாவிலும், வடக்கே சாஞ்சியிலுமுள்ள சிற்பங்களில் ஆசீவிகர் கோவணத்தொடு ஆண்டிபோற் காட்டப்படுவார். ஆனால், செயின, புத்த ஆவணங்கள் மற்கலி அம்மணமாய் இருந்தாரென்றே சொல்கின்றன. நம்மூர் ஐயனார் சிலைகளிலோ, ஒன்றுகூட அம்மணத் தோற்றங் காட்ட வில்லை.. இருவேறு தோற்றங்களில் எதுசரி? அம்மணம் உண்டா? இல்லையா? அன்றி 2 தோற்றங்களும் வெவ்வேறு காலங்களில் இருந்தனவா?  தெரியாது.  முருகனுக்குப் பழனியில் ஆண்டித் தோற்றம். மற்ற இடங்களில் வீரத் தோற்றம் காண்பதில்லையா?   
 
கோசாளரின் விதப்பைப் பார்த்த நாம், மற்கலி எனும் முதற்பெயரை 3 வகையில் புரிந்துகொள்ளலாம். முதல்பொருள் அது இயற்பெயரெனக் கொண்டமைவது.  கலித்தல், போரிடுவதைக் குறிக்கும். கலியன்= போர் இடுவோன். மற்கலி= மற்போரிடுவோன். கலியனென்ற இயற்பெயர் பிற்காலத்தில் ”மல்” அடைமொழி பெறலாம். வீரஞ்செறிந்த குடும்பத்தில்  பிறந்தவனுக்குக் ”கலியன்” பெயரிடுவது வியப்பில்லை. [அகரமுதலிகளில் கலியனுக்கு படைவீரன் (திவா.), திருமங்கையாழ்வார் (திவ். பெரியதி. 5, 2, 10.), இரட்டைப்பிள்ளைகளுள் ஆண் (W.),கலிபுருஷன் (எ. கா.) தணந்த வெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16), சனி (W.), பசித்தவன் (எ. கா.) கலியர் சோற்றின் மேலே மனம் என்னுமாபோலே (ஈடு. 4, 3, 7). தரித்திரன் (எ. கா.) மூதேவி மூடிய கலியனை (திருப்பு.) என்று பொருள்சொல்வர். திருங்கையாழ்வார்க்கு கலியன் என்ற இயற்பெயர் இருந்தது இவ்விடத்தில் ஆழ்ந்து நினைவுகூரக் கூடிய செய்தி.]

2 ஆம் வகையில் சாவத்தியில் மற்கலி தொடர்ந்து வேதத்தை மறுத்த காரணத்தால் மறுக்காளி என்ற வழக்குப்பெயர் பெற்றிருக்கலாம். வடவர் பேச்சுவழக்கில் மறுக்காளி> மறுக்காலி> மற்கலி> மக்கலி என்று திரியலாம். மீண்டும் அப்பெயரைத் தமிழில் கடன்வாங்கையில் (கி.மு. 600 களில் இருந்தவரை கி.பி. 370-450 ஐச் சேர்ந்த மணிமேகலைக் காப்பியம், தமிழ்த் தோற்றம் அறியாது) மற்கலி என அழைத்திருக்கலாம். ஆனாலும் ஐயனார் எனும் முந்தைத் தலைமைப் பெயரே நம்மூர் வழிபாட்டில் நிலைத்தது. போலும். ஊருக்குள் பெரியவரின் இயற்பெயரை இன்றுஞ் சொல்லார். ஐயன், ஐயா என்றே சொல்வார்.

3 ஆம் வகையில் குறுந்தொகை 156 இல் பார்ப்பனச் சிறுவன் துறவியான பிறகு, செம்முருக்குத் தண்டத்தைக் கையில் பிடித்திருப்பது பற்றிச் சொல்லும்.
   
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே!

இப்படி (செம்) முருக்குக் கழியைக் கையில் பிடித்திருப்பது அக்காலத் துறவிகள் எல்லோர்க்கும் பழக்கம். இது பார்ப்பனருக்கு மட்டுமில்லை. இன்ன நெறி, இன்ன பகுதியினர் என்னாது காடு, மலை, சுரமென்று தொடர்ந்து அலைந்து திரிந்த பரிவிராயர் (>பரிவ்ராஜக) கூடக் கையில் முருக்கங்கழி பிடித் திருந்தார். அதை மூங்கில்கழி என்று விவரந்தெரியாத வடபுல ஆய்வர் சொல்வார். (செம்முருக்கைத் தெரியாத சில தமிழரும் முருங்கை யுடன் குழம்புவர். முருக்கம் = பலாசு/புரசு. (Indian Coral Tree; Erythrina variegata) இம்மரம் முருகனுக்கு விழைவாயும் சொல்லப்படும். சென்னைப் புரசை வாக்கம் கங்காதீசர் கோயில் தலமரம் இந்தச் செம்முருக்கே. சென்னைப் புரசை வாக்கத்தின் பெயர்கூட இம்மரத்தால் தான் ஏற்பட்டது. அக் கோயிலுக்குப் போனால்  பூக்கும் காலத்தில் செக்கச்செவேலென மரத்தைக் காணலாம்.)

சங்கதத்தில் ’மஸ்கரினுக்கு’ மூங்கில்/பிரப்பம் பொருளிருந்ததாய்ச் சொல்லும் ஏ. எல். பாஷத்திற்கு [History and Doctrines of the Ajivikas- A vanished Indian Religion] தமிழ் மூலம் தெரிந்திருந்தால், முருக்(குக்) கழியைச் சொல்லி யிருப்பார். கையில் பிடித்த முருக்குக் கழியில் 3 கிளை பிரிந்தது (>திரி தண்டி) ஒரு வகையாகவும், ஒரு கிளை கொண்டது (ஏக தண்டி) இன்னொரு வகையாயும் துறவியரில் சொல்லப்படும். ஏ.எல்.பாஷம் அற்றுவிகரை, ’ஏக தண்டி’என்பார். முருக்(குக்)கழி வடபுலத்தில் மற்கலியாகி நமக்குத் திரும்பியபோது, நாமும் நம் சொல்லை விட்டு வடவர் பலுக்கைப் பிடித்துக் கொண்டோம் போலும்.

இவ்விடுகையில் மற்கலியை 3 வகைகளில் புரிந்துகொண்டோம். எது சரி என்று அறுதியாகச் சொல்ல நம்மிடம் தரவுகளில்லை. எனவே 3 இயலுமைகளைச் சொன்னேன். மற்கலி கோசாளன் சாத்துகளின் காவலனாய் வடக்கே சாவத்தி நகர்வரை, பலமுறை  போய்வந்துள்ளான். எத்தனைமுறை பயணங்கள் நடந்தன என்பது நமக்குத் தெரியாது, செயின, புத்த ஆவணங்களின் வழி பார்த்தால், மற்கலி கதை ஒரு தொடர்ச்சியின்றி பிய்த்துப் பிய்த்துத் தெரிவது கூட வடக்கிலும் தெற்கிலும் அவன் சாத்துக்களோடு அலைந்து திரிந்தது காரணமாகலாம். பெரும்பாலும் அவன் துறவியில்லை என்றே ஆழமான ஆய்வில் தோன்றுகிறது. அதேபொழுது,  முனிவனாக, பரிவிராயன்>பரிவ்ராஜன் (பரிந்து விரவுகிறவன் பரிவிராயன். பரிதல் = அலைந்து திரிதல்.) ஆக, மெய்யியலாளனாக, சமயத்தலைவனாக  இருந்திருக்கலாம்.

போன இடத்தில் பெரும்பாலும் குயவரோடு தங்கி அறிவுய்தி (intelligentia) உலகில் இயங்கியுள்ளான். வேதநெறிக்கு எதிரியக்கத்தில் இவனும் பங்காற்றியுள்ளான். செயின, புத்த சங்கங்கள் போல் இவனும் ஒரு சங்கம் எழுப்பியிருக்கலாம். மகாவீரரோடு சிலகாலம் (6 ஆண்டு) இணைந்தும் சில காலம் முரணியும் (16 ஆண்டுகள்) இருந்துள்ளான். புத்தனோடு பழகா விடினும், புத்தன் இவன்கூட்டத்தை எதிரியாகக் கருதினான். செயின, புத்த ஆவணங்களின் படி, பூரணன், நன்கணி ஆகியாரோடு சேர்ந்து ஒரு சமய நெறி உருவாக்கி இலக்கக்கணக்கில் கூட்டந் திரட்டியுள்ளான் ”அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் ஆனோம்” என நக்கீரர் மட்டும் சொல்லவில்லை.

மற்கலி கோசாளர் போல்  அவருடைய இரட்டையரான பூரண காயவரைத் தமிழரென்று சொல்லவும் நம்மிடம் சரியான தரவுகளில்லை. (பூரணர் காஷ்யப கோத்திரப் பெருமானர் என்ற சங்கத முன்னீட்டிற்கும் இதுவரை சான்றில்லை. தமிழ்ச்சான்றும் தேடிக்கொண்டுள்ளேன்.) அற்றுவிகத்தின் 3 ஆம் தோற்றுநரான பக்கடுக்கை (நன்)கணியார்  பெயரைப் பக்குடுக்கை + நன்கணியார் என்று பிரித்துணரலாம்..  பக்குடுக்கை = பக்கு+உடுக்கை = கிழிந்துபோன உடுப்பு. கணியார் = சோதியர். சிலம்பிற்கூட வேந்தரவையில்  பெருங்கணியரின் இருப்பு சொல்லப் படும். ”பக்குடுக்கைக் கணியார்” என்ற  பெயரைப் ”பக்குடுக்க அக்ஷயனார்” என மொழிபெயர்த்து பின் வடபுல வழக்கில் பக்குடக்காக்ஷயனார் என்று புணர்த்தியது புரிகிறது.

அன்புடன்,
இராம.கி.

Friday, January 17, 2020

பாசண்டச் சாத்தன் - 10

பாசண்டச் சாத்தருக்கான, தொல்லியல் ஆய்வைத் தொடர்வோம். 96 வகைச் சமய சாத்திரங்களை அறிந்த ”பாசண்டச் சாத்தன்” என்பது ஒருவேளை மற்கலி கோசாளரைக் குறித்ததோ எனச் சிந்திக்கக் காரணமுண்டு. முதலில் வருவது கோசாளரெனும் அவர் பெயர். வடபுல மொழிகள் வழி, இதைக் கோசாலர் என்று கொண்டு, ”மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்” என்பதும், கோசாலி புத்தா/புத்ரா என்றாக்கி மற்கலியின் தந்தைவழி காரணங் காண்பதும் ”மங்க்கலி” என்றாக்கி, பாணர்வழி சொல்வதும் தமிழ்ப் பின்புலம் தெரியாமல் சொல்வதும், இழித்துச் சொல்வதுமாகும். மகாவீரருக்கும், புத்தருக்கும் மேற்குடித் தோற்றங்காட்டி, மற்கலியைக் கீழிறக்கும் மனப்பான்மையில் எழுந்த முயற்சிகளை செயின, புத்த ஆவணங்கள் வழி தெரிந்து கொள்ளலாம். அற்றுவிகத் தமிழ்த் தோற்றம் தெரியாமல் அதன் திரிவான “ஆசீவிகத்திற்கு” வடபால் மொழிகளின் வழியே இழிபொருள் சொன்னது போல் இதுவும் அமையும்.


தமிழ் அடிப்படையில் கோசாளர், குடிப்பெயரன்று. தொழிற்பெயர். களிமண் கலயங்கள், பொம்மைகள் செய்யும் குயவரைக் குசவர்>கொசவர்> கொசவாளர்> கோசாளர் என்பது தமிழ்ப் பேச்சில் இயல்பு. குயவு என்றசொல், குயப்பு>குசப்பு>கொசப்பு எனவும் திரியும். சென்னை மணலிக்கருகில் ”கொசப்பூர்” என்ற ஊருண்டு. ஒருகாலத்தில் அதுவொரு  சதுர்வேதி மங்கலம். (சென்னை அண்ணாநகர் அருகுள்ள திருமங்கலமும்  சதுர்வேதி மங்கலமே.) வடசென்னைப் பக்கச் சதுர்வேதி மங்கலங்களை விற்ற பெருமானர் பிற்காலம் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி எனத் தென்சென்னை நகர்ந்து விட்டார். பழவூர்கள் வெவ்வேறு குழுவினரால் நிறைந்துவிட்டன.)


குயவரைக் குலாலர், கும்பகாரர், மட்பகைஞர், வேட்கோ என்றும் அழைப்பர். குயவரை நினைவுறுத்தும் ”கோசாளர்” குறிப்பால், மற்கலி குயவர் குடியைச் சேர்ந்தவர் என்ற பொருளில்லை. வடக்கே குயவர் பெயரைப் பெற்றார். அவ்வளவுதான். 16 ஆண்டுகள் குயவரோடு அவர் சாவத்தியில் தங்கியதாகவே புத்த, செயினக் குறிப்புகள் சொல்கின்றன. சாத்துக் காவலனாய் ஒரு வேளிர் மகனாய் அவர் சொந்த நாட்டில் அறியப்பட்டாலும், போன இடத்தில் குயவர் மனையில் தங்கிக் கோசாளர் ஆனார். குயவர் தொடர்பு இன்றைக்கும் நீள்கிறது. இன்றும் ஐயனார் கோயில்களில் குயவரே பெரும்பாலும் பூசாரி. சாத்தனுக்கு நேர்ந்துவிட்ட யானை, குதிரைப் பொம்மைகளையும் குயவரே செய்கிறார். இன்னொரு கருத்தும் இங்கு நினைவிற்கு வருகிறது.  மேலே கருங்குளம் பறைநாச்சியம்மன் கோயிலில் உள்ள குதிரைப் பொம்மை வரிசையைக் காணுங்கள்.

அக்காலத்தில்  மருதநிலப் பழந்தமிழர் தம் இறப்பின்பின் பெருந்தாழிகளிலே அடக்கம் செய்யப்பட்டார். அவரின் ஈமத்தாழிகளைச் செய்ததும் குயவரே. இன்றுங்கூட சில சாமியாரும், ஒருசில பெரியவரும் அமர்ந்த நிலையிலேயே அடக்கம் செய்யப் படுகிறார். தவிர, மற்கலி கோசாளர் தம் நெறிச் சாவகர் அனைவரையும், அவரவர் பிறப்பையும், இறப்பையும் கொண்டாடச் சொன்னார் .  இன்றும் தமிழகத்தில், குறிப்பாக வட தமிழகத்தில், பூமாலை, பிய்த்துப் போடல், அலங்காரம், பறையிசை ஆட்டம், பாட்டமெனக் கோலாகலமாய் இறப்பு கொண்டாடப் படும். ஒரு காலத்தில் நகரங்களில் இடுகாட்டில் தாழிகளே நிறைந்திருந்தன. இதுவரை நடந்த ஆதிச்ச நல்லூர் ஆய்வு பெரும்பாலும் தாழிகளைப் பற்றியதே.

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?  5
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்     10
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

என்ற புறநானூறு 228 ஆம் பாட்டு. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஐயூர் முடவனார் பாடியது. கிள்ளிவளவனை இடுவதற்குப் பெரிய கலம் செய்யுமாறு குயவனை வேண்டி, அதன்வழி வளவனைப் போற்ருகிறது. (பாட்டின் பொருளைத் தேடி அறிந்துகொள்க!) இந்தக் கிள்ளிவளவனே செங்குட்டுவனின் மாமன் மகன். இவனுடைய 9 பங்காளிகளுடன் போரிட்டுத் தான், இவனை உறையூர் அரசுகட்டிலில் செங்குட்டுவன் ஏற்றுவான். அடுத்த பாட்டு: புறம் 32  இது சோழன் நலங்கிள்ளியைக்  கோவூர் கிழார் பாடியது. நலங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு, நெடுங்காலம் கழித்து வந்தவன்.

கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்,
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்           5
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே.        10

பாட்டின் உட்டே வேட்கோ= வேள்+கோ என்பது குயவரைக் குறிக்கும். (பாட்டின் பொருளைத் தேடி அறிக.) பல சங்கப்பாடல்களில்  குயவரைக் குறிக்கும் குறிப்புகளுள்ளன. இன்னும் தேடின், பல பாக்கள் கிடைக்கும். அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், பொருந்தல், கொடுமணம், கீழடி போன்ற இடங்களில் தொல்லியல் வழி இன்று காணப்பெறும்  கருப்பு/சிகப்புப் பானைகள், தாழிகள் போன்றவை அற்றைக் குயவரின் சிறப்பைக் கூறுகின்றன.  அற்றைக் குமுகாயத்தில் குயவர் சிறப்பான பங்கு வகித்திருக்க வேண்டும்.  அவர் ஐயனாருக்கே சேவை செய்யபவராய் குமுகத்தில் பணிபுரிந்திருக்கிறார். இன்று பெருங்கோயில்களில் பார்ப்பாருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு, ஐயனார் கோயில் வேளகாரருக்கும்  இருந்தது/இருக்கிறது.

வேளார் என்பது தமிழ்முறைப்படி, பூ, சந்தனம், மஞ்சள், திருநீறு, நீர் முதலிய ஆகுதிகளைக் கொண்டு ஐயன் திருமேனியில் தெறித்து, படையலை நிவந்து (நிவதம் தமிழ் தான். நிவத்தல் = உயர்த்தல். வேளார் உயர்த்திக் காட்டியே ஐயனை அருச்சிப்பார். உயர்த்தியே தீவங் காட்டுவார். இதே பழக்கம் சிவ, விண்ணவ நெறிக் கோயில்களிலும் ஆகம வழி உண்டு, ஆகமத்திற்கு நீரே முகன்மை. இதுவே தமிழ்முறை) ஐயனை ”வேண்டும்” பணி செய்வதாகும். (வேள்+ந்+து + அல் = வேண்டல்).  தெய்வங்களுக்கு நீர் முறை தவிர்த்து, வெவ்வேறு ஆகுதிகளை நெருப்பில் இட்டுச் சமர்ப்பிப்பது வேதநெறி வழக்கம். வேள்வி என்பதும் “எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு” எனும் வேண்டல் தான். வேளும் குயவரும் வேளும் பார்ப்பாரும் ஒரே செயல்தான் செய்கிறார். குயவர் தமிழ்முறையோடு நின்றுகொள்வார். சிவநெறியில் தமிழ்முறையோடு  செய்ய சிவாச்சாரியரும். வேதமுறை பயில “ஸ்மார்த்தப்” பெருமானரும் இருப்பார். எந்த ஸ்மார்த்தரும் இறைப் படிமத்தைத் தொட்டுவிடமுடியாது. அந்த உரிமை சிவாச்சாரியாருக்கு மட்டுமே உண்டு. அதேபோல் ஐயனாரைத் தீண்டும் உரிமை வேளாருக்கு மட்டுமேயுண்டு. 

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 16, 2020

பாசண்டச் சாத்தன் - 9

இப்போது புறம் 395 இன் பொருளுக்கு வருவோம். இப்பொருள் விளங்கச் சில குறிப்புகளையும் பார்ப்போம். சுரம் = மதுரையிலிருந்து உறையூர் வரும் காட்டுவழி.  சிலம்பதிகாரம் காடுகாண் காதையில் இது உறையூரிலிருந்து மதுரைபோகும் வழியாய் விவரிக்கப் படும். தடாரி= பறை. ஓலையரிப்பால் பாட்டின் நடுவே ஒரு சொல் காணாது போயுள்ளது. அரில்பறை = இன்னொரு வகைப் பறை. அரியல்= சப்பானியச் சாக்கே போல் சோற்றுக் கஞ்சியில் நொதித்துவந்த கள். இதைத் தோப்பிக் கள் என்றும் சொல்வார். பாட்டின் பொருளை அடுத்துக் கூறுகிறேன்.
---------------------         
முன்நாள் நண்பகலில் சுரத்தில் உழந்துவருந்தி, ஞாயிறு நனிசென்ற இருள்செறி மாலையில்,  அவன் மனைமுன்றில் தோன்றி, தீங்குரல் . ............கின் அரிக்குரல் தடாரியொடு, என் உறவு இசைத்தலில்,  ”மென்புல வயலை உழுவோர், வன்புலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு, குறுமுயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நெடிய வாளைமீன் அவியல் சேர்த்த, பழஞ்சோற்றை உண்டு,  மலர்ந்த முல்லைப் பூவைச் சூடி,  அரிற்பறையால் புள்களை ஓட்டி, அவிய வைத்த சோற்றிலாக்கிய அரியலை ஆர்ந்திருந்தார். ஒருபக்கம் மனைக்கோழி ஈர அழைப்புத் தர, இன்னொருபக்கம் காட்டுக் கோழிக் கவருங் குரலெழுப்ப, மூன்றாம் பக்கில் நீர்க்கோழிக் குரலெடுத்துக் கூப்பிட்டது. மூங்கில் மென்தோளும், மயில் மென்சாயலும் கொண்ட  மகளிர் கிளி கடியும்போது, புள்கள் அகல்சேற்றில் இருந்தன.  பெரும! நல்ல பல விளைபுல வரிசைகள் சூழ்ந்த, சீர்சால் விழுச்சிறப்புக் கொண்ட, (சிறுகண் யானைகளைப் பெறுவதில் அரிய தித்தனின்) நற்புகழ் கெடா உறந்தையின் கிழக்கில்,  நெடுங்கை வேள்மானின் அருங்காவல் பொருந்தியுள்ள பிடவூர் அறப்பெயர்ச் சாத்தனின் சுற்றத்தாராய் நாங்கள் ஆனோம்” என நானுரைக்க,

ஆங்கு நின்ற எனைக்ண்டு, சிறிதும் நில்லானாய், பெரிதுங் கூறானாய், அருங்கலன்கள் வருவித்து அருளி, வேண்டிய வியப்பொடு உரைத்தன்றி நல்கி,  பொன்போல் மடந்தையான தன் மனையாளைக் காட்டி, “இவனை என்போல் போற்று” என்றான்; அதற்கொண்டு, அவனை மறவேன்; பிறரை உள்ளவும் மாட்டேன். ”அகல்ஞாலம் பெரிதாய் வெம்பினும், எரிமீன்கள் வானில் மிகத் தோன்றினும், குள மீனோடு தாள்மீன் புகையினும், பெருவயல் விளையும் நெற்கதிரை உகிரால் நிமிர்த்தி, பசுங்கண் கருணைக் கிழங்குக் கறியைச் சூட்டொடு மாந்துக!, விளைவு ஒன்றோ? வெள்ளமெனக் கொள்க! இருப்பதும் இல்லாததும் அறியாது ஆங்கு அமைந்ததால், அவன் தாளாண்மை வாழட்டும்” என்றான்.
---------------------
”நாங்கள் அறப்பெயர்ச் சாத்தனின் கூட்டத்தார்” என்று பாடலூடே நக்கீரர் பொட்டென்று அடித்துச்சொன்ன மாத்திரம்,  பிடவூர்ப் பெருஞ்சாத்தனின் இயல்பான வள்ளன்மை பெருகிக் கொப்பளிக்கிறது . தன் மனவியைக் கூப்பிட்டு, “இவனை என்னைப்போல் எண்ணி, விருந்தோம்பு” என்கிறான். ஒரு புலவனுக்குத் தரும் அளவற்ற கனிவு அவனிடம் வெளிப்படுகிறது. அவன் சொல் கேட்டு நக்கீரரும் நெகிழ்ந்து போகிறார். பிடவூர்க் கிழான் குடும்பத்தாருக்கு அறப்பெயர்ச் சாத்தனெனும் முன்னோன் பெயரும் புகழும் முகன (main) அடையாளம் போலும். ஒரு பக்கம் அம்முன்னோர் வேளிர்குல வீரர், இன்னொரு பக்கம் ”தரும சாத்தன்” என்ற பெயரால், ஒரு மெய்யியல் பள்ளியை உருவாக்கி தமிழுலகெங்கும் நற்பெயர் படைத்திருப்பாரோ?- என ஐயுறுகிறோம்.  நக்கீரரின் வேறிரு புறப் பாட்டுகளில் 189 ஆம் பாட்டும் அறம் பற்றியே பேசுகிறது.

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

”தெளிந்த கடல்வளாகத்தில் பிறவேந்தர்க்குப் பொதுவாகாதபடி, ஒற்றை வேந்தனாய்த் தானே வெண்குடை நிழற்றியவருக்கும் (இவரை ஆழி வேந்தன் = சக்கரவர்த்தி என்பார்.) நடுநாள் யாமத்திலும்  பகலிலும் துஞ்சாது புலியைக் கவனித்துப்பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழியே. உடுப்பது இரு துணியே. மற்ற எல்லாமுங் கூட ஒத்துப்போகும். ஆகச் செல்வத்துப் பயன் ஈதலே. எல்லாவற்றையும்  தாமொருவரே துய்ப்பமெனில் பலவும் தப்பும்” என்று இப்பாட்டின் பொருள் போகும். பாட்டின் மெய்யியலை ஆழ்ந்து ஓர்ந்தால், அற்றுவிகஞ் சார்ந்த வினைமறுப்புக் கொள்கை, இயல்புவாதம், பொதுமைநிலை போன்ற சிந்தனைகள் பாட்டினுள் இழைவதை உணரலாம்.

2 பாக்களையும் பார்த்தால், ஒருவேளை நக்கீரர் அற்றுவிகச் சாவகரோ என்று தோற்றுகிறது. அதேநேரம், நன்மாறனைப் பாடிய புறம் 56 இல் சிவன், வாலியோன், மணிவண்ணன், முருகன் எனும் பெருந்தெய்வங்களைப் போற்றிப் பரவுவார். இதுபோலும் கலப்புப்போக்கு பெருவாரித் தமிழரிடம் இன்றுமுண்டு. ஒருபக்கம் வேதநெறி சார்ந்த சிவ, விண்ணவக் கோயில்களில் வழிபடுவதும், இன்னொரு பக்கம் வேதமறுப்பு ஐயனார் கோயிலுக்கும் போவதும், நியதி/விதிச் சிந்தனையை இன்றும் உடும்புப்பிடியாய்க் கொள்வதும், எல்லாவற்றையும் இயல்புவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதும், தற்செயல் நடப்புகளை இயற்கையெனப் புரிந்துகொள்வதும் இற்றைத்தமிழரிடம் விரவியிருக்கும்.

ஆழ்ந்துகாணின் சங்ககாலத்தின் பின்,  மேலே சொன்ன (நியதி/விதி, இயல்புவாதம், தற்செயல் நடப்பு எனும்) அற்றுவிகச் சிந்தனைகளை, நாம் இப்போது கடைப்பிடிக்கும்  சிவ, விண்ணவ நெறிகள், தம்வயப் படுத்திக்கொண்டன. இவற்றின் ஊற்று இன்று பலருக்கும் தெரியாது போகலாம். ஆம், இன்று ’ஐயனார்’ சிவநெறிக்குள்ளும், ’கருப்பர்’ விண்ணவ நெறிக்குள்ளும் ஆழ்ந்துபோய்த் தெரிகிறார். அற்றுவிக நெறியார் பெரும்பாலும் மற்ற 2 சமய நெறிகளுள்ளும், குறைவானவர் செயினத்துள்ளும் கரைந்தே போனார். நாம் தாம் தொல்லியல் ஆய்வுநடத்தி முன் நடந்ததைத் தேடிக்கொண்டிருக்கிறோம். பாசண்டச் சாத்தனுக்கான இந்த ஆய்வுத்தேடலும், “எங்கே அற்றுவிகம் மீண்டெழுந்து விடுமோ?” எனச் சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.


[அற்றுவிகம் பற்றிச் சிலவற்றையே நான் இத்தொடரில் எழுதப் போகிறேன். நான் சொல்லாத பல செய்திகள் History and Doctrines of the Ajivikas - A vanished Indian Religion  என்ற நூலில் உண்டு,  இணையத்தில் பரியாக -( free) இறக்கிக் கொள்ளும் வகையில் pdf உம் கிடைக்கிறது. ]

https://archive.org/stream/HistoryAndDoctrinesOfAjivikasALBasham/History%20and%20Doctrines%20of%20Ajivikas%20AL%20Basham_djvu.txt.

அன்புடன்
இராம.கி.