Wednesday, October 27, 2021

பண்டிதர், பண்டிகை

வேடிக்கை என்னவெனில், பண்டிதரென்ற சொல்வளர்ச்சியிலும் பெரும்பாலான படித்தோர் சங்கதப் பார்வையே கொண்டு வருகிறார். அதன் தமிழ்ப்பின்புலம் கடைசிவரை இவருக்குப் புரிவதில்லை. பட்டதென்பது வாழ்ந்து அறிந்தது. பட்டுவ (passive) வாக்கியம் இன்றைக்குப் பெரிதும் ஆளப் படுகிறது. பட்டறிந்ததை (அநுபவித்ததை) இன்றைக்குப் பட்டறிவென நாம் சொல்வதை, பட்டுவித்தல்> பட்டித்தல் என்றே அன்று புரிந்துகொண்டார். பட்டித்தல் என்ற பிறவினையிலிருந்தே ’படித்தல்’ என்ற தன்வினைச்சொல் பிறந்தது. படித்தலின் மூலம், முன்னோர் பட்டுணர்ந்ததை, முன்னுணர்ந்ததை, முன்னறிந்ததை, பழையதைத் தெரிந்து கொள்கிறோம். அது பல்வேறு துறைகளில் இருக்கலாம். பள்+து என்பது பட்டானால், பள்+ந்+து என்பது ந் என்னும் இறந்தகால இடைநிலையால் பண்டு என்றாகும். பட்டித்தல்> பண்டித்தல்> பண்டிதர் என்ற வளர்ச்சி தமிழில் மிக இயல்பானதே. பண்டு என்பது முடிந்துபோனது, அறிந்தது. பண்டைக்குப் பழமை என்ற பொருள் உண்டு தானே? பண்டித்தல் = (பண்டையதைப் படிக்கச் சொல்லிக் கொடுத்தல். பண்டித்தம்>பண்டிதம்= ஏற்கனவே பெற்ற பட்டறிவால், தம் படிப்பறிவால் புதியவருக்குச் சொல்லிக் கொடுப்பது. பண்டை என்ற சொல்லுக்கு அறிவென்ற பொருளையும் தமிழ் அகரமுதலிகள் கூறும். நான் புரிந்துகொண்டவரை, ”பண்டிதர்” தமிழே.   

படிப்பென்றால் என்னவென்று பாருங்கள். ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று சங்கதச் சிக்கலுக்குள் மாட்ட வேண்டாம். நிரம்பும் காலத்திற்கு இதில் வலியப் போய் மாட்டிக் கொண்டாயிற்று. சென்னை அகரமுதலி சொல்லியது என்றவுடன் கண்ணை மூடி ஏற்பதற்கு மாறாய், சற்று ஐயப்படுங்கள். அதிலுள்ள தப்பு-தவறுகள் ஏராளம். 

அப்புறம் ஒன்று சொல்ல மறந்தேன். பண்டிகை என்ற சொல் தமிழியச் (திராவிடச்)  சொல் தானாம். நானொன்றும் புனைந்து சொல்லவில்லை. (இராம.கி. சொல்லி யார் மதிப்பார்?) ஆனானப் பட்ட மேலையர் பர்ரொ-எமனோ சொல்கிறார். அவருடைய Dravidian Etymological Dictionary 1998 edition Munshiram Manoharlal OPublishers Ovt. Ltd edition 1998. page 262. Entry 3221 இப்படிச் சொல்கிறது. Ta. paNtikai festival. Ma.paNtika id Te' panduga. (பண்டிகையையும் வடசொல்லெனச் சொல்லும் விடாக் கண்டர் கொடாக் கண்டரும் இருக்கிறார்.) 

பண்டிகை = பண்டு + இகை. பண்டு = பழைமை. இகுதல் = இறங்கி வருதல்.. இகுதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சொல்லாட்சிகள் சங்க நூல்களில் உண்டு. தேடினாற் கிடைக்கும். இகுதலில் உண்டான பெயர்ச் சொல் இகை. (இகை யென்று தேடினால் சங்க இலக்கியத்தில் கிடைக்காது. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். சங்க இலக்கியத்தில் ஒரு வினைச் சொல் கிடைத்தால் அதிலிருந்து உருவாகும் பெயர்ச் சொற்கள் எல்லாமுங் கிடைக்காது. பெயர்ச் சொல் கிடைத்தால் அதில் மறைந்திருக்கும் வினைச் சொல் கிடைக்காது  இதுவே உள்ளமை நிலை. இது தமிழில் மட்டுமல்ல. எல்லா மொழிகளுக்கும் அவரவர் இலக்கியங்களில் உள்ளது. சங்க இலக்கியம் என்பது ஓர் அகரமுதலியல்ல. அதேபோல் சங்கத நூல்களும் அகராதிகள் அல்ல. இவையெல்லாம் மொழியின் இயலுமைகளைச் சொல்கின்றன. சரியான படியாற்றத்தை (application) நாம் தான் உய்த்து உணர்ந்துகொள்ள வேண்டும்.) பண்டு இகுந்துவந்த நிகழ்வே பண்டிகையாகும். பொங்கல் விழா, தேர்த் திருவிழா, பூச விழா இன்ன பிற பண்டிகைகள் இப்படித் தான் பொதுமையடைகின்றன. இவற்றின் மூலம் பழசைக் கொண்டாடுகிறோம். மரபைத் தொடர்கிறோம்.

சரி பண்டிகையை ஏனிங்கு சொன்னேன்? பண்டிகை இருந்திருப்பின் அதனோடு தொடர்புடைய (பழையதைச் சொல்லிக் கொடுக்கும்) பண்டித்தலும் பண்டிதமும் இங்கு இருந்திருக்கும் தானே? ஓர்ந்து பாருங்கள். ”ஒரு சொல் தமிழில்லை” என்று சொல்வதெளிது. கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அது opinion தானே? சொல்லாய்வுக்குழு என்பது opinion களைத் தெரிவிக்கும் இடமாய் மாறிவிடக் கூடாது. இருக்கிறது என்று சொல்லத் தான் ஏராளம் ஆதாரம் வேண்டும். அந்த ஆதாரங்கள் உண்டு. ஒரு சிலவற்றை மேலே சொன்னேன்.         


No comments: