Wednesday, October 27, 2021

பர ஆர்த்தனையும், பிறவும்

பலரும் பூசையின் தமிழ்மை குறித்துப் பேசுவார். ஆனால், ”ப்ரார்த்தனை” பற்றி யாரும் பேசுவதில்லை. பரவல் என்பது தமிழில் வாழ்த்தைக் குறிக்கும். ”பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியல் 84 ஆம் நூற்பா. உரிச்சொல் பொருள்கள் சட்டெனப் பலருக்கும் புரியாததால் தான் தொல்காப்பியர் உரிச்சொற்களைப் பட்டியல் இட்டார். “பரவலும் புகழ்ச்சியும்” என்பது தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 27 இல் பாடாண் திணை தொடர்பாய்ச் சொல்லப் படும். ”பரவலும் புகழ்ச்சியும்” அக்காலத் தலைவனுக்கும் கடவுளுக்கும் பொதுவானதே.

இறைவன், கோயில் போன்ற சொற்களும் பொதுவானவையே. பரவல் என்ற சொல் விரித்தல் பொருளுள்ள பர-த்தல் வினையில் எழுந்து விதப்பான பொருளில் விரிந்தது. பல்வேறு பெயர்களால், புகழுரைகளால் விரித்துக் கூறி, போற்றி, “எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு” என வேண்டுவதே பரவலுக்கான பொருள் .அரசனையும் வேண்டலாம், இறைவனையும் வேண்டலாம். பரவுதல் என்பது பரசுதல், பராவுதல் என்றுந் திரியும். நிலவு>நிலா ஆவதைப் போல் பரவு>பரா ஆகும். பரவுதும் = வேண்டுதும், to praise, worship

”பரவல் பழிச்சுதல்” என்பது பரிபா.10, 116. ”செந்நாவலர் பரசும் புகழ்த் திருப் பெருந்துறை” என்பது திருவாசகம் 34.1. ”யாழிற் பரவுமின்” என்பது கல்லாடம். 10. “தற்பராய் நின்று” என்பது புறப்பொருள்.வெண்பா மாலை.10.15 யின் உரை). "நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்" என்பது நாலா. பனு. நாச். திருமொழி 9.6.2 ஆம் வரி. ”பரவு நல்லொழுக்கின் படி பூண்டது” என்பது கம்பராமா.ஆற்றுப்.12. ”கைதொழுது இரந்து வேண்டிப் பரவி மீண்டு” என்பது திருவிளையா.மெய்க்கா.21. ”பரவு அருமணிகள் விளங்கிய” என்பது திருவாதவூர்ப் புராணம் திருப்பெருந்.படலம் 3. ”சண்டேசன் தாள் பிரசமலர் இறைத்து இறைஞ்சிப் பரசுவோமே” என்பது சேதுபுராணம் கடவுள் வாழ்த்து 12

இது போல் இன்னும் பல்வேறு காட்டுகளைக் கொடுக்க முடியும். ஆர்த்தல் = ஒலித்தல். ஆரவாரம் என்பது உங்களுக்குத் தெரியுமே? பர ஆர்த்தல் = பரவார்த்தல்> பரார்த்தல் என்று பேச்சு வழக்கில் திரியும். பரார்த்தலில் உருவான வினையாலணையும் பெயர் தான் பரார்த்தனை. அதை ப்ரார்த்தனை என்று சங்கதம் போல் சிலர் ஒலிக்கத் தொடங்கியதால் நாம் மயங்குகிறோம். பரவுதலென்பது முற்றிலும் தமிழே. எந்தப் பழந்தமிழ் இலக்கியமும் பாராது, இரண்டாம் வழி, மூன்றாம் வழி ஊற்றுகளைப் பார்த்துத் தமிழர் தவறான முடிவுக்கு வருவது வேதனையளிக்கிறது. ’சங்கதம், சங்கதம்’ என்போருக்குப் பலரும் இரையாவது எங்குபோய் நிற்கும்? இருக்கும் வளங்களைப் பறிகொடுத்து நிற்காதீர். நம் வீட்டுக் கூரையையே நெருப்புக்கு இரையாக்கலாமா? இச்சொல்லோடு தொடர்புடைய இந்தையிரோப்பியன் சொல்லுண்டு. 

pray (v.)

early 13c., "ask earnestly, beg," also (c. 1300) "pray to a god or saint," from Old French preier "to pray" (c.900, Modern French prier), from Vulgar Latin *precare (also source of Italian pregare), from Latin precari "ask earnestly, beg, entreat," from *prex (plural preces, genitive precis) "prayer, request, entreaty," from PIE root *prek- "to ask, request, entreat" (source also of Sanskrit prasna-, Avestan frashna- "question;" Old Church Slavonic prositi, Lithuanian prasyti "to ask, beg;" Old High German frahen, German fragen, Old English fricgan "to ask" a question).

இதை விளக்கிச் சொன்னால், ப்ரஸ்னாவின்/ப்ரச்னை தொடர்பானவற்றைச் சொல்லவேண்டும். பிறகு வேறெங்கோ பேச்சு நீளும். எனவே தவிர்க்கிறேன். பரார்த்தனையும், பூசையும் தமிழே. வேறு சட்டை போட்டிருப்பதால் அவை மாறிவிடா. நம் பிள்ளைகளை ஊரார் பிள்ளைகளென்று சொல்லலாமா? 

இன்னொன்றுஞ் சொல்லவேண்டும். அது அருச்சனை பற்றியது. அதற்குமுன் மக்கள் வழக்கில் நடக்கும் ஒரு நடைமுறை பற்றிச் சொல்லவேண்டும். 

பலநாள் பழகியதொரு கூட்டுச்சொல்லில், முற்சொல்லையோ, பிற சொல்லையோ தவிர்த்து, மீந்துள்ள சொல்லையே கூட்டுப் பொருளுக்கு உற்றதாய் ஆக்கிக் கொள்வது பேச்சு வழக்கில் இயல்பு. காட்டாகத் தமிழில் மின்சாரம் என்ற சொல் 70/80 ஆண்டுகளுக்குப் பழகிய பின், சாரத்தை விட்டு இப்போது மின்னென்றே சுருங்கப் பயன்படுத்துகிறோம் அல்லவா? தொழில் நுட்பத்தில் தொழிலை விடுத்து நுட்பம், நுட்பியல் என்று பழகிறோம் அல்லவா? அது போல் ”நீர்க்குவியல்” என்று பொருள் படும் ”ஜல சமுத்ர” எனும் சங்கதக் கூட்டுச்சொல்லில் (இதன் வேரும் தமிழே. இங்கதை விளக்கினால் சொல்வது விலகிப்போகும்.) ’ஜல’வைத் தவிர்த்து ”சமுத்ர” என்றாலே பெருங்கடலைக் குறிப்பதாய்ச் சங்கதத்திற் கொள்வர். இதுவும் நாட்பட்ட புழக்கத்தால் ஏற்படும் மாற்றம். 

பர ஆர்த்தலில் பர-வைத் தொக்கவைத்து ஆர்த்தலென்றாலே இறைவனைப் போற்றலென்ற பொருள்கொள்ளத் தொடங்கியது. ”ஆர்த்தி” என்ற முன்னிலை வினைமுற்றில் ’ஆர்த்யி’ என்று சங்கதத்திலும் ’ஆர்ஜ்ஜி’ என்று பாகதம், பாலி மொழிகளிலும் மாறும். மீண்டும் ’ஆர்ச்சித்தாய்’ என்று தமிழிற் கடன் வாங்குவோம். பாகதமும், தமிழும் சங்ககாலத்தில் ஊடாடிய மொழிகள். ஆர்ச்சித்தல் என்பது metathesis இல் அருச்சித்தலாகும். அருச்சனையை அப்படியே வழக்கில் கொணர்ந்தோம். நம்மூர்ச் சங்கதப் பரப்புரையாளரால் அது அர்ச்சனையானது. இறைத் திருமேனியின் முற்செய்யும் ஒவ்வோர் அருச்சனையிலும் தேங்காயுடைத்து, பழத்தைக் கிள்ளி, நீர் தெளிப்பதும், பூவைத் தெறிப்பதும் மட்டும் நடப்பனவல்ல. ஐயர் தன்வாயால் இறைவனின் பல்வேறு பெயர்களைச் சொல்லிப் போற்றி, “அருச்சனை செய்பவருக்கு எல்லா நலமும் அளிப்பாயாக” என்ற வேண்டலுஞ் செய்கிறார். அருச்சனை என்ற இருபிறப்பிச் சொல் பர ஆர்த்தனையின் இன்னொரு வடிவே. இந்த ஊடாட்டம் புரியாது அருச்சனையைத் தமிழல்ல என்பதும் தவறாகும்.

ஆராதனையும் தமிழே. ஆலாத்தல் என்பது தீச் சுவாலையை இறைத் திருமேனியின் முன் மேலுங் கீழுமாய் வட்டமாய்ச் சுற்றியாட்டிக் காட்டி அவனழகை நமக்குக் குருக்கள் உணர்த்துகிறார். ஆலாதனை சங்கதத்தில் ஆராதனாவாகும். மீளக் கடன் வாங்கி ஆராதனை என்போம். ”ஆல வட்டம், ஆலாத்தி, ஆலாவனை  (>ஆலாபனை)” என்ற பல்வேறு சொற்களையும் இவற்றோடு பொருத்தி உணருங்கள்.  ஆகமம் என்பது தமிழர் வழக்கம். வேதமென்பது வடவர் பழக்கம். சிவநெறியிலும், விண்ணவநெறியிலும் இன்றுள்ள நடைமுறை வேதப் பழக்கங் கலந்த ஆகம வழக்கமே. ஆகம முறையை ஒட்டிக் கோயில்களில் இன்று நடக்கும் எல்லாச் சடங்குகளும் தமிழர் மரபுகளின் (முன்னோர் படையல்களின் ஊடாக நாம் செய்யும் பழக்கங்களின்) தொகுப்பே. இவற்றில் எது வேதம், எது ஆகமம் என்ற தெளிவு நமக்கிருந்தால் போதும். தமிழ் வழக்கங்களை மீட்டுவிடலாம்.    

அன்புடன்,

இராம.கி. 



No comments: