Wednesday, October 20, 2021

மார்க்சீயரோடு செய்யவேண்டிய உரையாடல்

பூரியர் என்று ஒரு தடவை ஓர் இடுகையிட்டேன் ( https://valavu.blogspot.com/2019/07/bourgeoisie.html. அதில், 

--------------------------

பூரியர் என்பார் கடைசியிற் பார்த்தால் ஆங்கிலத்திற் சொல்லும் bourgeoisie தான். (நம்மூர் இடதுசாரிகள் எவ்வளவு ஆண்டுகள் இதையறியாது அவர்களின் நூல்களிற் பூர்ஷுவாக்கள் என்றே எழுதியிருப்பார், தெரியுமா? தமிழிலக்கியம் படிக்காமல் வறட்டுத் தனமாய் “தத்துவம்” பேசிக் கொண்டிருந்தால் எப்படி? இப்படிப் பேசித் தானே Burten stein- ஐப் பின்பற்றி, கா.சிவத்தம்பியைப் பின்பற்றிச் சங்க காலத்தை segmentary states இன் காலம் என்று நம்மூர் இடது சாரியார் சொன்னார்? தமிழகத்தில் CPM/தமிழ்த்தேச மா.லெ. வுக்கும் வேறுபாடு ஏற்பட்டதில் இதுவும் ஒன்று தானே? தமிழர் வரலாற்றை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டிருந்தால் தமிழகத்தில் பொதுவுடைமையர் இவ்வளவு பின்தங்கியிருக்க மாட்டார். இன்றுங்கூடத் தமிழ்த்தேச வரலாறு புரியாத மா.லெ. ஆட்களும் நிறைய உள்ளார். 

-------------------------

என்று முடித்திருப்பேன். நான் புரிந்துகொண்டவரை தமிழர் வரலாற்றை பெரும்பாலான மார்க்சீயர் தவறாகவே புரிந்துகொண்டு உள்ளார். இதையே அந்த இடுகையில் பேசினேன். இதற்கு மறுமொழியாய், ":மார்க்சீயத்தின் பின்னடைவு என்று எதைத் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்? தமிழிலக்கியம், வரலாறு போன்றவற்றில் குறிப்பான ஆராய்ச்சிகள்... தாங்கள் குறிப்பிடுகிற வகையில் அமையாத ஆராய்ச்சிகள் பற்றிக் குறிப்பிடுகிறீர்களா? " என்று இடதுசாரியர் ஒருவர் எழுப்பினார். அதற்குக் கீழே வரும் மறுமொழியைக் கொடுத்தேன்.

-------------------------

Burtan stein ஐப் பின்பற்றி சங்ககாலத்தில் இருந்த மூவேந்தரை வெறும் இனக் குழுத் தலைவராய் மட்டுமே இருந்ததாய் 100க்கு 95 மார்க்சீயர் ஓர் உருவகஞ் செய்வார். சங்ககால அரசர் வெறுமே கொள்ளையடித்தார், பொருளியல் எல்லாம் அவருக்குத் தெரியாது. ”கி.பி. 500 வரை தமிழர் primitive communism நிலையில் தான் இருந்தார்” என்று ஒரு சாராரும் ”இல்லை, இல்லை, slave society நிலையில் தான் இருந்தார்” என்று இன்னொரு சாராரும் தொடர்பே இல்லாது ஏதோவொரு ஈரோப்பியப் போல்மத்தைச் சங்ககாலக் குமுகாயத்தின் மேல் ஏற்றிப் பொருத்துவார். சங்ககாலக் குமுகாயம் என்பது எத்தகைய குமுகாயம் என்று சரியாக வரையறுக்கப் பட்ட எந்த மார்க்சீய ஆய்வையும் நான் இதுவரை படித்ததில்லை. எல்லாவற்றிலும் எனக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. உரோமிலா தாப்பர், Irfan Habib, DD Kosambi, S.A. Dange, EMS Namboothripad என்ற பல்வேறு வரலாற்றாசிரியரும் எனக்கு ஏமாற்றமே அளித்தார். ஒரு வரலாற்று ஆசிரியர் பேரா. ந, சுப்பிரமணியனிடம் இருந்த தெளிவு கூட இவர் எவரிடமும் எனக்குத் தெரியவில்லை. இதற்கு வேதச் சார்பு கொண்ட நீலகண்ட சாத்திரியாரையே  இவர்கள் வழிகாட்டியாய் எடுத்துப் போகலாம்.      

”சங்ககாலப் பொருளாதாரத்தின் உவரி< உபரி எப்படி வந்தது?” என்பதில் பெரும்பாலான மார்க்சீயருக்குத் தெளிவில்லை. ”நாம் ஏதோ வட இந்திய அரசருக்குத் தொங்கு சதை போலிருந்தோம்” என்றே இவர் தமிழர் வரலாற்றை அணுகுவார். அக்கால வாணிகம் பற்றிய தெளிவும் அவருக்கு ஏற்பட்டதில்லை. ”சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேற்பட்ட  பாட்டுக்கள் ஏன் பாலைத்திணை சார்ந்தன?” என்று அவருக்குத் தெரியாது. தென்கிழக்கு ஆசியாவிற்கும் மேலை நாடுகளோடும் நமக்கிருந்த கடல்வாணிகம் பற்றி இவர் ஆய்ந்ததில்லை. நமக்கு ”கி.மு.600-கி.பி 500 வரையான இந்தியப் பொருளியலில்,  தமிழரின் பங்கு என்ன? முத்து, பவளம், மணிகள், தங்கம் என்ற எல்லா பரிமாற்றச் சரக்கு (exchange goods) உம் தமிழரிடம் தானே இருந்தன? இவர் எப்படி இந்தியாவின் பொருளியலைக் கட்டுப்படுத்தாது இருந்திருப்பார்?. புத்தரும் மகாவீரரும், இன்ன பிற அரசியல் தலைவரும், சமயத் தலைவரும் ஏன் தமிழ் கற்றார்? தக்கிணப் பாதையின் பங்கு என்ன?  நெடுங்காலம் வடபுலத்து அரசரால் தமிழகத்தை வீழ்த்த முடிய வில்லையே? அது ஏன்? ” என்று ஏதொன்றையும் மார்க்சீயர் ஆய்ந்ததில்லை.

 ”வடபுலத்து மொழிகளுக்கும் தமிழுக்கும் ஆன உறவு என்ன? நம்மூரில் மருதம் எப்படி ஏன் எழுந்தது? நிலவுடைமைக் குமுகாயம் எப்போது ஏற்பட்டது” என்பதைப் பற்றியும் மார்க்சியர் சொல்லார். தமிழர் பற்றி அம்பேத்காருக்கு இருந்த அடிப்படைப் புரிதல்கூட மார்க்சீயருக்கு இருந்ததில்லை. India is a multinational country என்பதையும் பெரும்பாலான மார்க்சீயர் புரிந்து கொண்டது இல்லை. Congress, BJP போல் single national entity யே கால காலத்திற்கும் மார்க்சீயர் பேசிக்கொண்டிருப்பார். (ஈழம் பற்றிய தவறான புரிதல் கூட அவருக்கு இப்படி எழுந்தது தான்.) வரலாற்றைப் புரிந்துகொள்வதில் அறியாமை இருந்தால், குமுகாய மாற்றத்திற்குத் தேவையான கருத்துருவாக்கங்கள், ஆய்வுகள் எப்படிச் செய்யமுடியும்?. முதல் கோணல் முற்றுங் கோணல் என்றே முடியும்.  

இக்காலத்தில் மார்க்சீயக் கட்சிகள் முன்னிருந்து செயற்படாதது பற்றி நான் சொல்ல ஏதுமில்லை. அதைத்தான் 50/60 ஆண்டு காலம் பார்த்துக் கொண்டு உள்ளோமே? இக்கட்சிகளின் தாக்கம் தமிழர் குமுகாயத்தில் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து தானே வருகிறது? பெரும் தேசியக் கட்சிகளையும். மாநிலக் கட்சிகளையும் நம்பி, பணம் பெற்றுத் தானே,  பொதுவுடைமைக் கட்சிகள் இன்று வாழ்கின்றன?   

---------------------

என்று விடையிறுத்தேன். அதற்குத் தன் முன்னிகையாய், அந்நண்பர், ”பொதுவாகக் கூறுவதால் எவ்விதப் பயனும் இல்லை. குறிப்பாகத் தங்களது கருத்துகளை முன்வைப்பதே சரி. இந்த இந்தத் தளங்களில் இந்த இந்தத் தவறுகள் உள்ளன என்று சுட்டிக் காட்டுவதே சிறந்தது. இந்தப் பணியில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. ”அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள், இவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்” என்று கூறுவதை விட, தங்களது ''சரியான'' கருத்துகளை முன்வைப்பதே முறையான திறனாய்வாக அமையும். ''மார்க்சீய மனப்பாடப் பண்டிதர்கள், அவர்களது சீடர்களின் அறியாமை '' ஆகியவற்றைத் தாண்டி, தாங்கள்  தங்களது சரியான, முறையான ஆய்வுகளை முன் வைக்கலாமே? அதற்கு எந்தத் தடையும் இல்லையே! அது சரியாக இருந்தால், மக்கள் ஏற்றுக்கொள்வார்களே! இது அனைவரின் பொறுப்பும் தானே. அவ்வாறு செய்யாமல், இதுபோன்று பொத்தாம் பொதுவான கருத்துகளைக் கூறுவதும், ஒருவகையில் மார்க்சீயத்தை 'மார்க்சீயத்தின் பெயரிலேயே'' மறுப்பதாகவே அமையும் “ என்று மறுமொழி தந்தார்.

என் அகவை 40/50 ஆயிருந்தால் உரையாடலை ஆழ்ந்து தொடங்கியிருப்பேன். என் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருபவர்க்கு ”நான் தொடர்ந்து என்ன சொல்கிறேன்?” என்பது தெரிந்திருக்கும். அகவை முற்றிய நிலையில், மீண்டும் ஒருமுறை அதைச் செய்வதில் எனக்குச் சலிப்பு ஏற்படுகிறது. இவர் குழப்பம், “India is a multinational country” என்பதில் தொடங்குகிறது. அப்படியே பேராயக் கட்சி, பாரதிய சனதா  போன்ற நிலைப்பாட்டையே எடுத்து மார்க்சீயரும் பேசுகிறார். உரையாடல் தொடங்குவோர் இதில் தொடங்க வேண்டும். ஆர்வம் உள்ளோர் வேறு தளங்களில் தொடங்குங்கள். அகவை முற்றிய நான் இதில் நெடுநேரம் செலவழிக்க முடியாது.  



No comments: