Friday, May 06, 2011

இறைவன்

தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பெயரியலின் 640 ஆம் நூற்பா ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று புகலும். அதே தொல்காப்பியர் 641 ஆம் நூற்பாவில்,

”பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”

என்று சொல்லுக்குத் தொடர்பாய்ப் பொருண்மை, சொன்மைப் பின்புலங்களைக் காட்டுவார். காட்டாக, “வந்தார்கள்” - வருதற் பொருண்மை. ”வந்தது” என்ற இறந்த காலக் குறிப்பும், பலர்பாற் குறிப்பும் சொன்மை வகைக்குள் அடங்கும். கள் என்னும் பன்மை “வந்தவர் மதிப்புள்ளவர்” என்றுணர்த்தும். எந்தச் சொல்லோடும் பொருண்மை, சொன்மை ஆகியவற்றை பொருத்தினாற்றான் சொல்லின் முழுப் பொருளும் விளங்கும். சிலபோது வெளிப்படாது போதலும் உண்டு. “போயும் போயும் இவனைக் காளைன்னு சொன்னாங்களே?” என்னும் போது ”தெரிபு நிலை வேறு, குறிப்பு நிலை வேறு.”

”தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே”

என்றும் 642 ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுவார். தமிழின் பன்னூறாண்டுப் புழக்கத்திற் சொல்லின் பொருண்மை எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. அது சங்க காலத்தில் ஒன்றாகவும், சமயகாலத்தில் இன்னொன்றாகவும் இருந்திருக்கிறது. பேரரசுச் சோழர் காலத்திலும், அண்மையிலும், அது இன்னும் மாறியிருக்கிறது. மாறாதும் இருக்கிறது. மாறிய சொல்லான ”இறைவன்” என்பதை இக்கட்டுரையிற் பார்ப்போம்.

”பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலீர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே”

என்று திருமந்திரம் பாடிய காரணஞ் சொல்வார் திருமூலர் (திருமந்திரம், வரலாறு 63 ஆம் பாடல்). திருமந்திரத்தில் இறைவன், இறையவன் என்ற சொற்கள் ஏராளமாய் ஆட்சிகொள்ளும். ”இறைவனுக்கு” இற்றைக் காலத்தில் கடவுள் (திருமால், சிவன், நான்முகன், அல்லா இன்னும் வெவ்வேறு பெயர்கள்) என்ற பொருளையே கொள்ளுகிறோம். இன்னொரு பொருளான தலைவன் (அரசன், கணவன், மூத்தோன், தமையன், குரு), அகரமுதலிகளில் பதிவாக மட்டுமேயுள்ளது. அன்றாடப் புழக்கிலில்லை. அந்தப் பொருளில் தலைவன் என்பதையே இப்பொழுது ஆளுகிறோம்.

ஆழ்ந்து பார்த்தால் கடவுள் பொருண்மை சங்க கால முடிவிற் தொடங்கி [காண்க: “நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்” - எனும் சிலப்பதிகாரம் ஊர்காண் காதை 7ஆம் வரி - சிவனைக் குறிக்கும் குறிப்பு. நுதல்விழி நாட்டத்துத் தலைவன் எனினும் பொருள் சிவனையே குறிக்கிறது. ], சமய காலத்திற்றான் பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. சங்க காலத்தில் ”தலைவனே” பெரிதும் விரவியது. சங்கம் மருவிய காலத்திலும் தலைவனைக் குறித்தது தொடர்ந்துள்ளது. காலவோட்டத்தில் தலைவன் பொருளாட்சி நீண்டு, கடவுட் பொருண்மை ஏற்பட்டுள்ளது. [கோயில்/கோவில்  பொருண்மையிலும் இதுபோற் குழப்பமுண்டு - அரசன் வீடா, தெய்வ இருப்பிடமா? இதேபோலப் பகவன் (lord) சொல்லும் தலைவனையே முதலிற் குறித்தது. ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றேயுலகு” என்ற குறளில் பகவன் என்பதும் தெய்வம் குறிப்பதாய் ஆய்வாளர் சொல்வதில்லை. அதைச் சற்று கீழே பார்ப்போம்.]

சிலம்பில் கடவுட்பொருண்மை கொஞ்சங் கொஞ்சமாய் விரிகிறது. பார்க்க வழக்குரை காதை 36-40

வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;

இன்னொரு சான்று பார்க்க: அழற்படு காதை 86-87 [வேங்கடசாமி நாட்டார் அழற்படு காதையின் பல அடிகள் இடைச்செருகலென ஐயுறுவார்.]

கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்

மொத்தமாய் எல்லாம்வல்ல பரம்பொருட் பொருண்மை கிட்டத்தட்ட கி.மு.75 க்கு அருகில் இறைவன் என்றசொல்லிற்கு வந்தது போலும். [சிலம்பின் காலம் கி.மு.75 க்கு அருகிலென்று என் முந்தைய ஆய்வில் உறுதிசெய்தேன். பார்க்க: ”சிலம்பின் காலம்” தொடர். சிலம்பிற்கு 25 ஆண்டுகள் கழித்து, கி.மு.50 இல் பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் பரிபாடல் தொகுக்கப் பட்டிருக்கலாம். பார்க்க: http://valavu.blogspot.com/2010/06/2.html. கலித்தொகையும் சிலம்பையொட்டியோ, சிலம்பிற்குப் பின்னோ தொகுக்கப் பட்டிருக்கலாம்.]

கி.மு.75 -ற்கு முந்தை சங்கப் பாடல்களில் தலைவன் (lord) பொருளே பெரிதும் பயின்று வந்தது. இப்பொருள் நீட்சி கடவுள், பகவன் என்ற சொற்களிலும் இருக்கிறது. கடவுள் என்றசொல்லும் முதலிற் தலைவனையே குறித்தது. பின்தான் எல்லாம்வல்ல பரம்பொருளைக் குறித்தது. பகவன்(> பகவான்) என்ற சொல் வடபுலங்களில் பெரிதும் ஆளப்பட்ட சொல்; இதுவும் முதலில் சமயத் தலைவனையே குறித்தது. ஆங்கிலத்தில் great lord என்கிறாரே, அதுவும் பகவனும் ஒரேபொருள. புத்தரைப் பகவானென்றே அவரைப் பின்பற்றியோர் அழைப்பர். மகாவீரரையும் இப்படி அழைத்தார். இக்காலத்தில் வடபுலத்தில் ஏராளமான சாமியார்களைப் பகவான் என்றே அழைப்பர். தென்புலத்தில் அப்படி அழைப்பது மிகக்குறைவு. எல்லாம்வல்ல பரம்பொருள் மட்டுமே பகவன் என்று தெற்கே நாம் எண்ணிக் கொள்வோம். இதே போலப்

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”

என்ற குறளில் இறைவன் என்ற சொல் ”எல்லாம் வல்ல பரம்பொருளைக் குறித்ததா?” எனில், ”அல்ல, சமயத் தலைவனைக் (தீர்த்தங்கரரைக்) குறித்தது” என்று சொல்ல வேண்டியுள்ளது. திருக்குறளை ஆய்ந்தறிந்தோர், அதைச் சமண நூல் என்றே சொல்லுவர். (இது ஆசீவிகம், செயினம், புத்தம் என்றவற்றில் ஏதொன்றாகவோ, அல்லது அவற்றின் கலவையாகவோ இருக்கலாம். அந்த உரையாடலுக்குள் நான் போகவில்லை. ஆசீவிகம் என்று சொல்லப் புகுவதை பல செயினரும் மறுப்பர். அதே நேரம் ஆசீவிகம் என ஆய்வதில் புதுப்பார்வைகள் தோன்றுவதையும் மறுக்க முடியவில்லை.) சமணமென ஏற்கத்தயங்குவோர் குறளைச் சிவநெறி நூல், எம்மதமுஞ் சாராப் பொதுநூல், தமிழர்நூல் என்றெலாஞ் சொல்லுவர். [திருக்குறளின் கருத்தைத் தம்வயப்படுத்தி ஒவ்வொருவருஞ் சொந்தங் கொண்டாடுவதே அதன் சிறப்புப் போலும்.]

ஆசீவிகம், செயினம், புத்தம் என்னும் இம்மூன்று நெறிகளும் ”எல்லாம் வல்ல பரம்பொருள் உண்டு” என்பதை நம்பாத அல்லது அக்கேள்வி பற்றிக் கவலா மதங்கள். அதேபொழுது ”ஆன்மாக்களுக்குத் தனியே இருப்புண்டு” என்று நம்புபவை. (ஆன்மாவை முற்றிலும் மறுத்தது உலகாய்தமும், அதன் வழிவந்த சாருவாகமும், தொடக்ககாலச் சாங்கியமுமே. பிற்றைச் சாங்கியம் ஆன்மாவை ஏற்றது.) ”ஊழ், வினைப்பயன், தவம் என்பதைப் பொறுத்து ஒவ்வோர் ஆன்மாவும் இவ்வுலகில் வெவ்வேறு உடம்போடு மீண்டும் மீண்டும் பிறந்து உழல்கிறது. பிறப்பும், அது தொடர்ந்த மாந்த வாழ்வும் துன்பமானதே. (இன்னாதம்ம இவ்வுலகம். இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே! - ஆழ்ந்த ஆசீவிகப் பாடல். புறநானூற்றிற் பல பாடல்கள் ஆசீவிகத் தோற்றம் காட்டும். அதை இன்னொரு நாள் சொல்வேன். ) மீண்டும் பிறவாமை என்பதே வீடுபேறு” என்று அடிப்படைக் கருத்தை இம்மூன்று நெறிகளும் மிக்குயர்ந்த உண்மையாய் உரைக்கும். நாளாவட்டத்தில் ”மீண்டும் பிறவாத வீடுபேறு” என்ற கருத்தியல், எல்லாம் வல்ல பரம்பொருளை நம்பும் மதங்களுக்கும் உகந்த கருத்தாய் ஆகிவிட்டது.

எல்லாம்வல்ல பரம்பொருளின் மேல் நம்பிக்கை கொண்ட மதங்களைப் பல்வேறு ஏரணக் கேள்விகள் (logical questions) போட்டுக் கிடுக்கி (criticise), மேலே சொன்ன சமண நெறிகள் தாக்க, அதன் விளைவால் நம்பா மதங்களின் மெய்யறிவியற் தெரியனங்கள் (>தெரிசனங்கள்), கொள்கைகளைத் தமக்குத் தகுந்தாற்போல் நம்பும்மதங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்மயம் ஆக்கிக் கொண்டன. இன்றைக்கு இந்தியச் சூழ்நிலையில் நம்பும் மதங்களில் நாம் பார்க்கும் மெய்யியற் கோட்பாடுகள் பலவும் எதிர்ப் பக்கத்தில் எழுந்து இன்னொரு பக்கம் செரிக்கப் பட்டவையே. தொடக்கத்தில் இருந்தவையல்ல. வேதாந்த உச்சமாய்ச் சொல்லப்படும் உபநிடதங்களின் பார்வை கூட இந்த ஊடாட்டங்களில் உருவான எதிர்வினைப் பார்வை தான்.

காட்டாக, வினைப்பயனை (karma) ஏற்காது, வினைமறுத்து (அகிரியா வாதம் பேசி) ஊழ் (pre-ordination), சூழ்நிலை (environment), இயல்பு (inherent quality), அணுவியம் (atomic nature of the bodies) என்பவற்றையே ஆழ்ந்துரைக்கும் ஆசீவிகம் மொத்தம் 84 இலக்கத்திற்கு வெவ்வேறு வகையான உயிரிகள் (பிறப்புக்கள்) இம்மன்பதையில் உண்டென்னும். ஊழைக்காட்டிலும் வினைப் பயனை அழுத்திப்பேசும் செயினம் (தற்செயல், அணுவியம் போன்றவற்றை செயினம் முழுதும் மறுப்பதில்லை.) 84 இலக்கம் பிறப்புக்களை மேலோடச் சொன்னாலும், ஓரான்மா புகுந்துசெல்லும் பிறப்புக்களின் எண்ணிக்கையை, வினைப்பயனை, ”கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, அவாவின்மை” ஆகிய 4 யாமங்களாலும், இடைவிடா அணு வதையாலும் (அண்ணுதல் = நெருங்குதல்; அணு = நெருங்கிய; வதை = வதம்>வ்ரதம்) குறைக்கமுடியும் என்னும். வினைப்பயன் ஏற்கும் புத்தநெறியோ 84 இலக்கம் பிறப்புகளுக்கு அவ்வளவு முகன்மைதராது. நம்பா மதங்களின் இம்முடிபைச் (84 இலக்கம் பிறப்புகளை) சிவநெறியை அழுத்திச்சொல்ல வந்த திருமூலர் கூட ஏற்றுக் கொள்கிறார். திருமந்திரம், சருவ சிருட்டி, 218 ஆம் பாடல் படித்தாற் புரியும்.

நம்பா மதங்களின் 84 இலக்கம் பிறப்புக்கள் பற்றிய செய்தி நம்பும் சிவநெறிக்குள் (திருமந்திரத்துள்) எப்படி வந்தது? புரியவில்லை. [இந்திய மெய்யியலில் ”84 இலக்கம் பிறப்புக்களுக்கு ஏன் இப்படி முகன்மை? ” என்பது வியப்பாகவே உள்ளது. இப்படித்தாம் சாங்கியக் கொள்கைகள் நம்பா மதத்திலெழுந்து, முடிவில் நம்பும் மதங்களூடே உலவத்தொடங்கின. இந்திய மெய்யியற் கோட்பாடுகள் பலவற்றிற்கும் இப்படி இருபுறத் தன்மையுண்டு. ஆழ்ந்து ஆய்ந்தோரே அவற்றின் தொடக்கத்தை அறிய முடியும்.]

”கடவுள் வாழ்த்து” என்ற சொற்கட்டுக் கூடச் சங்க காலத்திற் கிடையாது. சங்க நூல்களில் வரும் கடவுள் வாழ்த்துகள் அவற்றின் தொகுப்புக் காலத்திலோ, அதற்குப் பின்னோ, பின்னொட்டாய்ச் சேர்த்தவை என்றே ஆய்ந்தோர் சொல்கிறார்.

சரி, இறைவன் சொல்லிற்குத் திரும்பவருவோம். இறை என்ற சொல்லின் நீட்சியே இறைவனாகும். கடவுள்(திருமால், சிவன், நான்முகன்), தலைவன் (அரசன், கணவன், மூத்தோன், உயர்ந்தோர், தமையன், கணவன், குரு) என்ற பொருட்பாடுகள் ”இறைவனுக்கு” இருப்பதுபோல் இறை என்ற சொல்லிற்கும் உண்டு. பரம்பொருள், தலைவன் தவிர, ”உயரம், தலை, தலைமை, நடுவு நிலைமை, கடமை, முன்மை” என்ற தலைமைப் பண்பையொட்டிய 2 ஆம் வழிப் பொருள்கள் ”இறைக்கும்” சொல்லப்படுகின்றன. ”இறை என்ற சொல் தலைவனுக்கெப்படி ஏற்பட்டது?” என்றுதெரிந்தால், ”2 ஆம் வழிப் பொருள்கள் எப்படியேற்பட்டன?” என்பது விளங்கிப்போகும்.

அகரமுதலியில் மேலேயுள்ள பொருட்களை ஒதுக்கிப் பார்த்தால், இறைக்கு இன்னுஞ் சில பொருட்களைச் சொல்வர். அவற்றில் முகன்மையானவை: ”வீட்டின் கூரையிறப்பு, சாதல், தங்கல், இருக்கை” ஆகியன. இவையெலாம் ”இழிதல், சரிதல், இறங்குதல்” வினைகளை உணர்த்தும் பெயர்ச்சொற்கள்.

”உடலுறுப்பின் மூட்டுவாய், கை” என்பன இறுதல் (=முடிதல்) வினையோடு தொடர்புடையன. [சிலம்பு கானல் வரி 29 ஆம் பாடலில் இப் பொருளில் ”இறை” பயிலும்.] விரலிறையளவு என்பது ஒவ்வொரு விரலின் இறுதிக் கணு அளவைக் குறிக்கும். இறுதிக்கணு சிறுத்ததால் சிறுமைப் பொருளும் இறைக்கு உண்டு.

இறுதலின் பிறவினையான இறுத்தலில் இருந்து ”விடை” என்ற பொருள் பிறக்கும்.

அரசன் தன் படையினர்வழி இறுக்கை(force)க் காட்டி அதிகாரஞ் செலுத்தி மக்களிடம் பெறுவது இறை எனப்படும். சுங்கம் (customs tax), உல்கு (excise duty) போன்ற அரசிறைகளின் அடிப்படை வினைச்சொல் இறுக்குதலே. இறுக்கிப் பெறுவது இறை. இறுக்கைக் காட்டி மக்கள் உடன்பாட்டைப் பெறா எவ்வரசும் வரலாற்றிற் கிடையாது.

”இறையின் ஒருபொருளாய் மாமரம் அகரமுதலிகளிற் குறிப்பிடப்படுவது ஏன்?” என எனக்குப் புரியவில்லை. எனவே தவிர்க்கிறேன்.

முடிவில் ஏதோடும் ஒட்டாது தனித்து நிற்கும் ஒரு பொருள் இறகு (feather) என்பதாகும். [இறகும் (feather) சிறகும் (wing) ஒன்றிற்கொன்று தொடர்புடைய ஆனால் புழக்கத்தில் சற்று வேறுபட்டவை.]

அரசன் எனவொருவன் உருவாகுமுன், குடித்தலைவன், குழுத்தலைவன், இனத்தலைவன் என யாரோவொருவன் இருந்ததை மாந்தவியல் புகலும். அவனன்றி எந்தக் கூட்டமும் இயங்காது. குடிமக்கள் கூட்டத்தை வழி நடத்துவோன் இத்தலைவனே. கூட்டத்தின் இடையே இத்தலைவனை அடையாளம் காட்டவேண்டுமே? அதற்கு வழியென்ன? இவரெலாம் தம் தலையிற் கட்டிக் கொண்ட பாகைகளில் (இலை, தழை, தோல் இப்படி ஏதோவொன்றாற் தலையிற் கட்டப்பட்டவை இப்பாகைகள்.) பறவை இறகுகளைச் சூடிக் கொள்வது பழக்கமாய் இருந்தது. ஒரு கூட்டத்தைத் தொலைவிலிருந்து பார்க்கையில் இறகு செருகியவன்(ர்) தலைவன்(ர்) என எல்லோரும் பழக்கத்தில் அறிந்துகொள்வர். இது ஏதோ அமெரிக்கத் திரைப் படங்களில் செவ்விந்தியர் இறகு சூடிக்கொள்ளும் காட்சி மட்டுமல்ல. கணக்கற்ற பழங்குடிகள் இதுபோல் பழக்கங்களை வைத்திருந்தார்.

இன்றைக்கும் செட்டிநாட்டுப் பக்கம் மாப்பிள்ளை அழைப்பில் பார்த்தால் மாப்பிள்ளையின் தலைப்பாகையில் இறகு குத்திக் கொண்டுள்ளது தெரியும். தலைப்பாகையிற் சூடும் நெற்றிச்சூடிகையின் வடிவமும் ஒரு பறவையிறகு போலவே அமையும். மதுரை மீனாட்சி - சொக்கர் கல்யாணத்தில் சொக்க நாதருக்கு அணிவிக்கும் பாகையைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? நாட்டுப்புறங்களில் நடக்கும் கூத்தில் கதைநாயகன் சூடிக்கொள்ளும் தலைப்பாகையையும் பாருங்கள். ஏன் அரசமகுடத்தின் மேலே செருகும் இறகை இங்கு நினையுங்கள். இறகிலாத் தலைவன் எங்காவது உண்டா?முத்து மாலைகளையும், மணி மாலைகளையும் அணிந்து கொண்டு இடுப்பில் ஒரு சிறுதுணியைக் குறுக்கே கட்டிய சுந்தர பாண்டியனை மார்க்கோ போலோ தன் பயணக் கதையில் [The travels of Marco Polo by Aldo Ricci, Rupa& Co; 2002, pp 292- 326] விவரிப்பான். பாண்டியன் தன் மகுடத்தில் இறகு அணியாது இருந்தானோ? தெரியவில்லை. பணங்கொண்டவனையும் மன்னனையும் எப்படி வேறுபடுத்திக் காட்டுவது?

[இறகு குத்திக்கொள்ளா கூட்டத் தலைவர்கள் கொம்பு விலங்குகளின் மண்டையோட்டை தலையிற் கவிழ்த்து மாட்டிக் கொண்டிருந்தார். சிந்து சமவெளி முத்திரையொன்றில் கொம்பு கவிழ்த்த தலைவன் ஒருவன் தாமரை ஆசனம் போட்டு உட்கார்ந்திருப்பான். “இவன் என்ன கொம்பனோ?” என்று தமிழிற் சொலவடையுண்டே, நினைவிற்கு வருகிறதா? கொம்பன் என்றாற் தலைவன் என்றபொருளும் இயற்கையாய் எழுந்தது.]

இறகு அல்லது இறையைத் தன் தலைமுடியியிற் செருகிய தலைவன் இறைவன் எனப்பட்டான். தலைவனின் (lord) நீட்சியாய் எல்லாம் வல்ல பரம்பொருளும் இறைவன் (Great Lord) என்று அழைக்கப் பட்டான்.

இனி ”இறகு என்ற சொல் முதலா? சிறகு என்ற சொல் முதலா?” என்று கேட்டால், "முட்டை முதலா? கோழி முதலா?" என்று திருப்பிக் கேட்க வேண்டியுள்ளது. பின்னால் வரும் எளிதான விளக்கங்களைக் கருதிச் சிறகு என்பதையே முதலாக நாம் கருதுகிறோம். [சிறகு என்பது சிறை என்றும், இறகு என்பது இறை என்றும் செந்தமிழ் வழக்கிற் சுருக்கப்படும்.] சிறகு என்ற சகர முதற் சொல் திராவிட மொழிகளின் இலக்கிய மொழியான தமிழிலும், அதன் நெருங்கிய கிளைமொழியான மலையாளத்திலும் மட்டுமே இருக்கின்றன. மற்றமொழிகளில் இறகும் அதன் திரிவுகளுமே இருக்கின்றன. ம. சிறகு; க. எறகெ, எக்கி, எறங்கெ, றக்கெ, றெக்கெ; தெ.எறக, ரெக்க; து. எதிங்கெ, றெங்கெ; பட. றக்கெ; குட. றெக்கெ, தெறகெ; கோத. ரெக்; துட. தெர்க்ய்; கோண்.ரெக; நா. றெப்ப, ரெக்க; கொலா. றெப்பா; பர். ரெக்க.

இறகுக் கை - இறகால் ஆன கை - இறக்கை ஆனது. [இங்கே இக்கால விதப்புப் பயன்பாட்டைச் சொல்லவேண்டும். சிறகு என்ற சொல் wing இற்கும், இறகு என்ற சொல் feather என்ற உறுப்பிற்கும் இக்காலத்திற் பயன்படுத்துகிறோம்.] இறகின் தொகுதி, குறிப்பாக வாலிறகின் தொகுதி நெல்லின் கதிர்த் தொகுதிபோல் இருந்ததால் குரல் (feather, plumage, கொத்து, திரள்) எனப்பட்டது; குரல் சற்றுநீண்டு கூரலும் (கொத்து) ஆகும். குட்டைத் தொகுதி கூழையும் ஆனது (மயிற் தோகை, வால்), சதம் (அதம் = தொகுதி), சதனம் (அதித்தல், மிகுதியாதல், அதனம் = தொகுதி) என எல்லாமே தொகுதிப்பொருள் காட்டும்.

சிறகு, சிறை, என்ற சொற்களில் சகரம் முன்னெழுந்து இலக்கியத்தில் இறகையும் குறித்தன. தூவி என்ற சொல் (மறுவில் தூவி சிறுகருங் காக்கை ஐங்குறு 139; தூவல், சொக்கின் தூவலும் தேவா. 216, 4, தூர்வு>தூவு = வேரைப் போன்றது) இறகைக் குறிப்பது. தோகை (தொகுதி) என்பதை மயிலை வைத்து நாமறிவோம்.

பக்கம், பத்ரம் என்ற சொற்கள் பறத்தல் வினையையொட்டி எழுந்தவை. பறத்தல் வினையின் சொற்பிறப்பை இங்கு அறிந்தால் பக்கம், பத்ரம் என்ற சொற்கள் விளங்கிப் போகும். பறத்தலின் சுருக்கமாய் இறகிற்குப் பறை என்ற சொல்லும் உண்டு. [பறக்கை “துணைபறை நிவக்கும் புள்ளின மான” மலைபடு.55. இறகு “பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி” நெடுநல் 15 பல்பறைத் தொழுதி - குறுந் 175],

பிஞ்சம் என்ற சொல் பாலியிலும் வடமொழியிலும் பயிலும். தமிழோடும் தொடர்புண்டு. (மயிற் தோகை; க. பிஞ்சிய, பிஞ்சு, பின்செ, பெஞ்செ, பெஞ்செய, skt pin~ccha, புள்>பிள்>பீள் = இளங்கதிர், (பிள்)>பிள்ஞ்சு,பிஞ்சு],

வாசம் என்ற சொல்லும் இறகைக் குறிக்கும்.

சிறகு/இறகு என்ற சொல்லின் பிறப்பை அறிவதற்கு முன் பறத்தல் வினை பற்றி அறிய வேண்டும்.

பறத்தல்வினையை விலங்காண்டி அறிந்தது பறவைகளைப் பார்த்தேயாகும். அவ்வினை மாந்தச்செயலால் அறிவதில்லை. பறவைகளைப் பார்த்தும், அப்படிப் பார்க்கையில் உடனறியும் ஒலிக்குறிப்பாலும் எழுந்த சொல் அது. [மொழிவளர்ச்சியில் ஒலிக்குறிப்புகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். ] எந்தப் பொருளும் இடைவிடாது விரைவாய்த் துடிக்கும் போதோ, திரும்பத் திரும்ப விடாது செய்யப்படும் போதோ, டகரம், ரகரம், றகரம், ககரம் வைத்து இரட்டைக் கிளவியாக நாம் சொல்லிக் காட்டும் ஒலிக்குறிப்புகளை இங்கு எண்ணிப் பாருங்கள்.

“படபட” என்று துடித்தது; ”பரபர” என்று விரைந்தான்; ”பறபற” என்று இறைந்தது; ”பக்பக்” என்று அடித்துக் கொண்டது. எல்லாமே விரைவைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொற்கள். பற-த்தல் வினை இந்த ஒலிக்குறிப்பிற் தோன்றிய சொல் தான். படபடத்தலில் எழுந்த சொல் பட்டம். வானத்தில் நாம் அனுப்பிக் கயிறு கொண்டு கட்டுப் படுத்துகிறோமே, அவ்விளையாட்டுப் பொருள். வடமொழியில் அது பத்தம்>பத்ரமாகிப் பறவையையும் குறிக்கும். பக்கு>பக்கம் என்ற சொல் தமிழில் சிறகைக் குறிக்கும்; பின் பக்கு>பக்கி என்றாகிப் பாலி மொழியில் பறவையைக் குறிக்கும். [நமக்குப் பறவை பெரிதும் பயன்படும் சொல்லென்றால் பக்கி பாலிமொழியிற் பெரிதும் பயன்படுஞ் சொல்.] பக்கி என்ற சொல் பக்ஷி ஆகி வடமொழியில் பறவையைக் குறிக்கும். தமிழில் அதை மீண்டும் கடன் வாங்கி பட்சி என்போம். எல்லாம் ஒலிக்குறிப்பால் எழுந்தவை. பக்கு (= சிறகு) என்ற சொல் அதிரொலி பெற்றுத் திரிந்து பகவான் என்ற பாலி மொழிச் சொல்லை உருவாக்கும். அதைத் தமிழிற் கடன்வாங்கி பகவன் என்போம்.

சிலுக்கும் ஒலியும் பறபறத்தலை, படபடக்கும் அசைவைக் குறிப்பது தான். சிலுகு>சிறகு என்றாகி பறக்கும்/அசைக்கும் உறுப்பைக் குறிக்கும். எந்தச் சிறகும் விரித்துச்சுருக்கி, அசைக்கவேண்டும். இம்மூன்றையும் செய்கையில் எழும் சிலுக்கு ஒலியை வைத்தே உறுப்பிற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். ”சறேர்” என விரைந்தான் என்ற விரைவுக் குறிப்பு சிறகுக்கு நெருக்கமானது. மேலை மொழிகளிலும் flug என்னும் ஒலிக்குறிப்பே fly க்குக் காரணமாய் இருந்துள்ளது.

fly (v.1)
"to soar through air," O.E. fleogan "to fly" (class II strong verb; past tense fleag, pp. flogen), from W.Gmc. *fleuganan (cf. O.S., O.H.G. fliogan, O.N. flügja, O.Fris. fliaga, M.Du. vlieghen, Du. vliegen, Ger. fliegen), from PIE *pleu- "flowing, floating" (see pluvial). Notion of "flapping as a wing does" led to noun sense of "tent flap" (1810), which yielded (1844) "covering for buttons that close up a garment." The noun sense of "a flight, flying" is from mid-15c. Baseball fly ball attested by 1866. Slang phrase fly off the handle "lose one's cool" dates from 1825. To do something on the fly is 1856, apparently from baseball.

wing (n.)
late 12c., wenge, from O.N. vængr "wing of a bird, aisle, etc." (cf. Dan., Swed. vinge "wing"), of unknown origin, perhaps from a P.Gmc. *we-ingjaz and ult. from PIE base *we- "blow" (cf. O.E. wawan "to blow;" see wind (n.)). Replaced O.E. feðra (pl.) "wings" (see feather). The meaning "either of two divisions of a political party, army, etc." is first recorded c.1400; theatrical sense is from 1790. Verbal phrase wing it (1885) is from theatrical slang sense of an actor learning his lines in the wings before going onstage, or else not learning them at all and being fed by a prompter in the wings. The verb to wing "shoot a bird in the wing" is from 1802. The slang sense of to earn (one's) wings is 1940s, from the wing-shaped badges awarded to air cadets on graduation. To be under (someone's) wing "protected by (someone)" is recorded from early 13c. Phrase on a wing and a prayer is title of a 1943 song about landing a damaged aircraft.

தமிழுக்கும் பாலிக்கும் இடையான ஊடாட்டம் கூர்ந்து கவனிக்க வேண்டியது.

அன்புடன்,
இராம.கி.