Sunday, June 30, 2019

கூட்டாட்சி அரசமைப்பில் மொழியுரிமைகள்


கருத்தரங்கம் - இடம் : உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
நாள் : 29.06.2019 - நேரம் : பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

அரங்கில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

வழக்குரைஞர் அவையில் பொறிஞனுக்கு என்னவேலை? ஒருவேளை தமிழும், தருக்கமும் அறிந்ததால், அழைத்தாரோ, என்னவோ? அறியேன்.  ஒவ்வொரு மொழிபேசுநர்க்கும் மொழியுரிமை என்பது இயல்பானதே. ஒரு பன்மொழி மாநிலக் கூட்டரசில் என்மொழியார் கணிசமாய் (8 கோடிப்பேர்) இருக்கும் நிலையில் ”என் வீட்டில் மட்டுமே என் மொழி, வெளியே மாற்று மொழி, பேசு” என என்னைக் கட்டாயப்படுத்தினால், எனக்குள் உரிமையுணர்வு எழத்தானே செய்யும்? மாந்தவியலின் படி நாடும் தேசமும் வேறானவை. India is a multinational country and not a one nation one country entity. When we got independence a major question between us and the British was solved. But the multinational question among the various Indian nations and the direction in which the country had to move after independence had remained unsolved. 72 ஆண்டுகளாய் இதுவே நம் அடிப்படைச் சிக்கல். மொழிவழி மாநிலங்கள் ஏற்படுத்தி இச்சிக்கலை ஓரளவு தீர்க்கமுனைந்தார் தான். ஆனால் அவக்கர நிலைமைக்கு (emergency state) அப்புறம் இந்திய ஒன்றியக் கருத்தீடு (Concept of Indian Union) என்னும் நிலை குலைந்தது. இப்போது இந்தியக் குடியரசு (Republic of India) என்றே எங்கும் எவரும் பேசுகிறார். பெரும் உளவியல் மாற்றம் இங்கு நடந்திருக்கிறது.

மொழியுரிமை என்பது அறிவும், ஏரணமும், வரலாற்றுணர்வும், கணிசமான மக்கள் தொகையும் இருந்தாற்றான் புரிபடும். இதில் மிகத்தேவையானது விழிப்புணர்வு. "நம்மைச் சூழ்ந்த உலகில் என்ன நடக்கிறது? மற்ற நாடுகள் எல்லாம் என்ன செய்கின்றன? நாம் முன்னேறுகிறோமா? பின்னேறுகிறோமா? தேங்குகிறோமா? நம்மிருப்பின் காரணமென்ன?- என்ற விழிப்பு நமக்கு ஏற்படா விடில் மொழியுரிமை புலப்படாது. நம்முடைய போகூழ், நெடுங்காலம் மொழி யுரிமை ஏதென நாம் உணராது இருந்து விட்டோம். குறிப்பாக 1980 களிலிருந்து மிகப் பின்தங்கி விட்டோம். தமிழும் தமிழரும் இப்படி இருப்பதை ஓர் நுட்பியற் (Technology) சிக்கல் மூலம் உங்களுக்கு முதலில் உணர்த்த விழைகிறேன்.

மொழியுரிமைக் கருத்தரங்கில் என்ன பேசவேண்டுமென நண்பர் அருணாசலத்தைக் கேட்டால், மின்னஞ்சலில் ஒருகோப்பை அனுப்பினார். அதைத் திறந்தால் படிக்கமுடியவில்லை. ஒருவேளை பாமினி வார்ப்போ (Bamini) என ஐயுற்று NHM Converter வழி சோதித்தால். அது பாமினியே தான். ஒருங்குறிக்கு (Unicode) மாற்றியபின் 8 குறிப்புகள் கிடைத்தன. பாமினி குறியேற்றச் சிக்கல் என்பது கல்லூரி ஆசிரியருக்கு, குறிப்பாய்த் தமிழ் ஆசிரியருக்கு, மட்டுமென இதுநாள் வரை எண்ணியிருந்தேன். இப்போதுதான் புரிகிறது. உங்களைப் போன்ற வழக்குரைஞருக்கும் அது உண்டு போலும். இச் சிக்கலைப் புரிய கொஞ்சமாவது இதன் வரலாறு தெரிய வேண்டும்.

கணித்திரைகளில் எழுத்துக்கள் தெரிகின்றனவே அவற்றைக் குறியேற்றம் (encoding) என்பார்.  தொடக்க காலத்தில் 1960/70 களில் அமெரிக்க ஆங்கிலத்திற்கு மட்டுமே ASCII 7 மடைக் குறியீடு (128 இடங்கள்) எழுந்து. கணிவழி உலகையே ஆட்டிப்படைத்தது. ”ஆங்கிலத்தை இப்படியே விட்டால் நாம் என்னாவது?. நம் மொழிகளும் குலையுமே?. அமெரிக்கரோடு போட்டியிட்டு நம் மொழிகளுக்கு உரிமை பெறுவோம்” என்ற இரோப்பியர் 1970/80 களில் 256 இடங்கள் கொண்ட, extended ASCII எனும் 8 மடைக் குறியீட்டை உருவாக்கி. தம் மொழிகளுக்கு வேண்டியதைச் செய்துகொண்டார்.

நாமோ, அதுபோல் தமிழில் எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஆயுத்தமாய் எதுவுஞ் செய்யவில்லை. 65-67 மொழிப் போராட்ட உச்சத்தின்பின், பொது வாழ்வில் ”தமிழ்வாழ்க” வென முழக்கமிட்ட கழகங்களே நிலைத்தன. ”தமிழை இனி இவர் பார்த்துக்கொள்வார்” என நாமெல்லாம் மெத்தனமாய்க் காலங்கழித்தோம்.  இவரும் 5 ஆண்டுகள் ஆர்வத்தோடு ஏதேதோ செய்தார். 71-72 க்கு அப்பறம் கழகம் உடைந்தது, ஊழல் பெருகியது. அதன் விளைவாய், தமிழக அரசோ, தமிழறிஞரோ, ஆர்வலரோ, தம்மைச்சுற்றி உலகில் நடப்பது அறியாதிருந்தார். பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கமெனப் பொழுதுகள் கழிந்தன. ஆங்கில ஆதிக்கத்திலிருந்து வெளிவர, உலகோர் முயல்கையில். அதிகாரப் போதையில் கழகத்தார் ஆழ்ந்தார். தமிழுரிமைகள் அம்போவாயின. 2 கழகத்தாரும் ஆட்சியில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், கல்வியில் தமிழ், பொதுவழக்கில் தமிழ் என்று குறிக்கோள்களைத் தூக்கிக் கடாசித் “தமில் வால்க” சொல்லத் தொடங்கினார். இன்றுவரை அது மாற வில்லை. அண்ணன்-தம்பி சண்டை தான் நம்மூரில் பெருவலமாயிற்றே? 5 ஆண்டு அண்ணன், 5 ஆண்டு தம்பி என மாறிமாறி நாட்டாமை ஆனதுதான் மிச்சம். ஊழல் பெருத்து 47 ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் இணையக் கல்விக் கழகம், ஒருசில அரசாணைகள் தவிர, அரசின்வழி பெரிதாய் தமிழ்க் கணிமைக்கு ஏதும் நடக்கவில்லை.

இவ்வோட்டத்தின் நடுவில் வெளியூர்த் தமிழர் ஒரு மூலையில் இயங்கித் தான் இருந்தார். 1980களில் ஈழத்தமிழரால் செய்யப்பட்ட பாமினி வார்ப்பு எழுந்தது. இதுவும் எண்மடைக் குறியீடே. (முதல் 128 இடங்களில் ஆங்கிலக் குறியீடுகள்;  பிந்தைய 128 இல் தமிழ்க் குறியீடுகள்.) இனப் படுகொலையால் உலகெங்கும் சிதறிய ஈழத்தமிழர் தமக்குள் செய்தி பரிமாற்றிக்கொள்ள உருவான வார்ப்பு இதுவாகும். மின்னஞ்சல் பரிமாற்றத் தேவை (demand) ஈழத் தமிழருள் எழுந்து, இதற்கான அளிப்பை (supply) உருவாக்கித் தமிழ்க்கணிமை நோக்கி நகர வைத்தது. ஒருபக்கம் பேரழிவேற்பட்டு, கொடுமை நடந்தபோது, அதிலிருந்து மீள, உறவுகளை ஒட்ட வைக்க, தமிழ்க் கணிமை உருவானது. உலகின் பல்வேறு போர்களால் ஏற்பட்ட அறிவியல்/ நுட்பியல் வளர்ச்சி போலவே, ஈழப்போரின் குழந்தையாய்த் தமிழ்க்கணிமை கிடைத்தது இதைத் தமிழர் யாரும் மறக்கக்கூடாது.

தமிழ்க்கணிமை நுட்பம் தமிழரின் ஒரு சாராரால் மட்டுமே எழவில்லை. ஈழம் தவிர்த்த மற்றநாட்டுத் தமிழரும் வாளாயிருக்கவில்லை. பல்வேறு வார்ப்புகள் எழுந்தன. முடிவில் 1997-99 இல் பெரும்பாலான உலகத் தமிழர் தகுதரக் (TSCII) குறியீட்டிலும், ஈழத் தமிழர் பாமினிக் குறியீட்டிலும் ஒருங்கு இணைந்தார். தமிழகமோ இக்காலத்தில் தடுமாறியே இருந்தது. பின் தமிழகத் தரமாய் TAB/TAM  குறியீடு எழுந்தது. தமிழகத் தாளிகைகளும், பல வெளியீட்டாளரும் 100 வகை எண்மடைக் குறியீடுகள் புழங்கியிருந்தார். இணையமெங்கும் ஒரே குழப்பம். 100 வித எழுத்துருக்களைக் கணிக்குள் இறக்க வேண்டியிருந்தது. இணையத்துள் ஒரு ”தமிழ்” இல்லாது ஓராயிரம் ”தமிழ்”கள் இருந்தன. எதையும் உடனே படிக்க, எழுத, படியெடுக்க, பரிமாற, திருத்த, சேமிக்க முடியாத நிலையிலிருந்தோம்.  நம் ஒற்றுமைக் குறைச்சல் தான் உலகறிந்த விதயமாயிற்றே?

இதற்கிடையில்  1987 க்கு அருகில் CDAC நிறுவனஞ் செய்த ISCII யின்  8 மடைக் குறியீட்டை 16 மடையின் பின்புலமாய் நடுவணரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) அனுப்பியது. இரு பரிமானச் சதுரத்தால் முப்பரிமானக் கனவத்தைச் (cube) செய்யமுடியுமோ? நம்மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எனத் தனியமைப்பு இருந்தது. இரோப்பிய எழுத்துகளிலோ வெறும் உயிரும். மெய்களும் மட்டுமேயுண்டு. இரோப்பாவில் செய்த அடவை (design) இந்திய மொழிகளுக்குப் பயன்படுத்தியதே முதற்கோணலாகும். தப்புந் தவறுமாய்  உயிர்மெய் எழுத்துகளை உடைத்து, கால், கொம்பு, சுழி, கொக்கி என்று சினையுறுப்புகளை அடிப்படையான character-களாக்கி, அதன்மேல் எழுத்துக்களைக் கட்டி அதற்கும்மேல் இந்திய மொழிகளை ஒருங்குறி நுட்பம் கட்டுகிறது. குறைகள் கொண்ட அதன் செயற்பாட்டை எப்படியோ சரிசெய்தார். நம்மூர் மொழியுரிமையை ஒருங்குறியார் மதித்து இருந்தால், உயிர், மெய், உயிர்மெய் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் புத்தம்புது அடவில் அணி முறையில் (matrix) 16 மடைக் குறியீட்டைச் செய்திருக்கலாம். இதற்குத் தான்  மொழியுரிமை விழிப்புணர்வு வேண்டுமென்றேன். 10, 15 ஆண்டு கழித்து ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் நாம் போனபோது, “முன்னரே ஏன் வரவில்லை? தூங்கினீரா?” என்று கேட்டார்.

உண்மையே. 16 மடைக் குறியேற்றத்தினுள் நாம் காலங் கழித்தே விழித்தோம். நம் உயிர்மெய்க் கருத்தீட்டைச் சரியான படி ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு உரைக்கவில்லை. தமிழுக்கு ஒவ்வாத ISCII குறியீட்டைக் கொண்டே 16மடை ஒருங்குறி செய்யப்பட்டது. நாளாவட்டத்தில் வணிக வல்லாண்மை கொண்ட ஒருங்குறிச் சேர்த்தியம் (உலகத் தர நிறுவனமான) ISO வின் அனைத்துநாட்டுப் பங்களிப்புடன் தமிழெழுத்தை நாட்டாமை செய்தது. இப்போது நம் மொழியின் உரிமை இந்திய நடுவணரசிடங் கூட இல்லை. அப்படியுள்ளதாய் நம்மில் பலர் எண்ணிக்கொள்கிறோம். அதுதவறு. எல்லா இந்தியமொழிகளுமே ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் மாட்டிவிழிக்கின்றன. ஒரு புதுவெழுத்தை நுழைக்க வேண்டுமா, பழைய கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டுமா, நீங்களாய் ஏதுஞ் செய்யமுடியாது, அவர் செய்தால். நீங்கள் அடிமை போல் அதை ஏற்றுக் கொள்ளலாம். இந்திய அரசும் அப்படித்தான் இருக்கிறது. ” இது புதுக் கிழக்கிந்தியக் கும்பணியா?” என்று கேட்டால்,  ஏறத்தாழ அப்படித் தான்.

காட்டாக நீங்களெலாம் படிக்காத, தமிழகப் பள்ளிப் பொத்தகங்களிலேயே இல்லாத, ஒரு ஶகரம் 0BB6 எனும் இடத்தில் ஒருங்குறிப் பட்டியலில் குடி இருக்கிறது. ஜ, ஸ, ஷ, ஹ என்று 4 கிரந்த எழுத்துகள் மட்டுமே தமிழோடு ஒட்டியதாய் நீங்கள் எண்ணலாம். உண்மையில் ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ and ஶௌ எனும் 5 ஆவது கிரந்த எழுத்து வரிசையும் இருக்கிறது. அதற்கு ஒப்புதல்கொடுத்து உட்காரவைத்தது ஒருங்குறிச் சேர்த்தியமே. தடியெடுத்தவன் தண்டல்காரனாய், உலகிலுள்ள எவனும் தமிழ் எழுத்தை என்னவெனுஞ் செய்யலாம். ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு வேண்டியது எல்லாம் அச்சின் வழியாய் வெளிவந்த ஒரு கழிவேற்றமே  (printed salvation). தமிழக அரசோ, தமிழ் மக்களோ இந்த எழுத்துக்களை நுழைக்க வில்லை. இணையத்தில் நாளொரு பொழுதும். பொழுதொரு வண்ணமுமாய் இவ்வரிசையில் இப்போது சொற்கள் வளர்கின்றன. இதுபோல் தமிழெழுத்தை எப்படி வேண்டுமாயினும் ஒருங்குறியார் மாற்றலாம், குலைக்கலாம், பெருக்கலாம்.  நாமும் உப்பிற்குச் சப்பாணியாய் ”ஆமாஞ்சாமி” போடலாம்.

ஒருங்குறியேற்றத்தில், இரோப்பிய மொழிகளை ஒப்பிடுகையில் இந்திய மொழிகளைக் கணி கையாளும் நேரமும் மிகுதி, சேமிக்கும் கொள்ளளவு (memory), கையாளும் செலவு எல்லாமும் மிகுதி. காலகாலத்திற்கும்  நாம் 2 ஆம் தரமாய் இருப்போம்.  நம் மொழியுரிமைகளும் 2 ஆம் அளவில் அமையும். ”எசமான், பாத்துச் செய்ங்க” என்று கேட்கலாம். இதற்கு மாறாய் அனைத்து எழுத்துக் குறியேற்றம் (TACE) என்ற ஒன்றைப் பயன்படுத்தினால் கணி கையாளும் நேரம் குறைவு. சேமிப்புக் கொள்ளளவு குறைவு, கையாளும் செலவுங் குறைவு. இத்தகைய TACE ஐ Unicode consortium இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதெல்லாம் கண்டு உணர்ச்சிவயப்பட்டு வெறுமே புலம்புவதில் பயனில்லை, நாம் ஒருங்குறியை ஒதுக்கிவிடவும் முடியாது எவ்வளவு குறைப்படினும், நூற்றுக்கணக்கான உலக எழுத்துகளுக்குப் பரவிய ஒருங்குறியேற்றத்தை வேறுவழியின்றி ஏற்கவேண்டியுள்ளது.  தெரிந்தோ, தெரியாமலோ, அவருக்கு வாக்கப்பட்டாயிற்று. இனி என்ன செய்வது?

இனி TACE தொடர்பான இன்னொரு சிக்கலுக்கு வருகிறேன். நம் அச்சுத் தொழில் காரணமாய் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் (TACE) பயன் படுத்தச் சொல்லித் தமிழக அரசு 2009 இல் ஆணை பிறப்பித்தது. இந்த TACE ஐ ஒருங்குறிச் சேர்த்தியம் ஏற்கவேண்டுமெனில், TACE இல் சில இலக்கம் பக்கங்களுக்காவது நம்மிடம் ஆவணங்கள் இருப்பதாய்க் காட்டி,. அவற்றைக் காப்பாற்றும் தேவையை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு நாம் உணர்த்த வேண்டும். இதற்காகத் தமிழக அரசு TACE ஆவணங்களை உருவாக்க வேண்டும். தமிழக அரசோ வெறும் வாய் வார்த்தையிலேயே நிற்கிறது. 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உருப்படியான செயல்கள் செய்யவேயில்லை. 10 ஆண்டுகள் முன் தமிழர் தூங்காது இருந்திருப்பின், கட்சிச் சண்டையால் உள்ளூரில் தடுமாறாது இருந்திருப்பின், இன்று ஒருங்குறிச் சேர்த்தியமே அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை ஏற்க வைத்திருக்கலாம். நம் கணித் திரைகளில் ஏற்படும் மீள்தருகைச் சிக்கலை (rendering problem) முற்றாய்த் தீர்த்திருக்கலாம்.

சரி, வேறுவழியின்றி ஒருங்குறியை ஏற்குந்தேவை ஏற்பட்டது. அதையாவது  முழுக்கச் செய்தோமாவெனில் இல்லை. கடந்த 10/15  ஆண்டுகளாக எண் மடைக் (8 bit) குறியீட்டுப் பயன்பாடு குறைந்து, நம்மிற் சிலர் 16 மடைக் (16 bit) குறியீட்டுக்கு வந்துவிட்டோம். பல்வேறு தமிழ் ஆவணங்களைக் கணித் திரையில், அச்சியில், தொடர்பாடலில், மொழியியல் அலசலில், எந்திர மொழிபெயர்ப்பில், பேச்சிலிருந்து பனுவலுக்கும் பனுவலிலிருந்து பேச்சுக்கும் மாற்றுமளவிற்கு வளர்ந்துள்ளோம். இதன் பின்னும் பாமினி போன்ற 8 மடைக் குறியேற்றத்தில் நம்மில் பலர் ஆழ்ந்து தேங்குவது எப்படி? இணையமெங்கும் ஒருங்குறி பழகையில் அச்சடிக்கப் பாமினி பயிலுவீரா? ”தமிழாவணங்களில் ஒருங்குறியோ, அல்லது TACE எனப்படும் அனைத்தெழுத்துக் குறியேற்றமோ தான் இனிப் பழகவேண்டுமெ”ன 2009இல் தமிழக அரசே அரசாணை பிறப்பித்த பின்னும் பழகுவீரா? ”மற்ற பிள்ளைகள் ஏழாப்பு, எட்டாப்பு போனாலும் நாங்க ஒண்ணாப்புலே இருப்போம்”னா எப்படி?

நீங்கள் மட்டுமில்லை. அரசின் செயலக அதிகாரிகளும் ஊழியருங் கூட அரசு ஆணையைத் தூக்கியெறிந்து “வானவில்” எனும் தனியார் குறியீட்டைத் தொடர்ந்து பழகுகிறார். வானவில்லிற்கும் அரசினருக்கும் என்ன connection- ஓ தெரியாது. அதேபோல் அரசாதரவு பெற்ற பல்கலைத் தமிழ்த் துறைகளிலும் அரசாணையைத் தூக்கிக் கடாசித் ”உசிதம்” போல் பாமினி பழகுகிறார். தமிழ்த் துறையாரின் ஆய்வரங்க அழைப்புகளில் (இக் கருத்தரங்கையும் சேர்த்து), “பாமினி எழுத்துருவில்” செய்தியனுப்பியும், கட்டுரைகள் அனுப்பச் சொல்லியும் தொடர்ந்து கேட்கிறார். 10 வருசமாகியும் நம்மில் பலரும் திருந்தவேயில்லை. தமிழக அரசாணை செயற்படவேயில்லை. மொழி யுரிமை, மொழிக் கொள்கை என்பன பிறகு நமக்கு எப்படிப் புலப்படும், புரியும்? சொல்லுங்கள்.

இப்படியெல்லாம் நடப்பதைப் பார்க்கையில், அரசின் அமைச்சரோ, இந்திய ஆட்சிப் பணியினரோ, பெரும் அதிகாரிகளோ இல்லாது, அரசுச் செயலகத் தட்டச்சரே அரசின் மொழிக்கொள்கையை நிர்ணயிப்பதாய் நான் சொல்வது உண்டு. அதுபோல் தான் நாடெங்கிலும் உள்ள DTP கூடங்களும், அச்சுக் கூடங்களுமே நம்மூர்த் தமிழ்த்துறைகளின், வழக்குரைஞர்களின், ஆவண வெளிப்பாட்டை வழி நடத்துகின்றன. எத்தனை பேர் இன்னும் நுட்பியல் பூச்சாண்டியில் தடுமாறுகிறார், தெரியுமோ? நீதிமன்றங்கள் சுற்றியுள்ள DTP கூடங்கள் செய்வது அப்படியே இன்னும் தொடர்கிறதா, இல்லையா? நம் நாட்டில் பொள்ளிகைகளை (policies) யார் நிர்ணயிக்கிறாரென இப்போது புரிகிறதா? இந்நுணுக்கத்தை, நுட்பியலைக் கவனியாத தமிழர்க்கு, சிக்கல் எப்போதும் வந்துசேரும். பின் எப்படி மொழியுரிமை பற்றி நாம் பேசமுடியும்?

தமிழ்த்துறைகளிலும், பல குழுக்களிலும், இப்படி நடப்பது சோம்பலா? அறியாமையா? விதண்டா வாதமா? தெரியாது. தமிழ்க்கணிமைப் போக்கறிந்து தான் செயற்படுகிறோமா? அன்றி நுட்பியற் கல்லாமையா? ஓர்ந்து பாருங்கள். நுட்பியல் மறுத்து உரிமைகளைப் பேசமுடியுமா? நடவடிக்கைகள் தடுமாறாதா? செல்பேசியை, கணியை, மின்னியல் மாற்றத்தை ஒதுக்கி நாம் இயங்கமுடியுமா? இங்குளோர் என்மேற் சினங் கொள்ளாதீர். அருள்கூர்ந்து உள்ளமையோடு (realistic) பொருத்திப் பாருங்கள். நுட்பியலுக்கிணங்கத் தமிழார்வலர் நடந்துகொண்டால் மட்டுமே தமிழ்க்கணிமையில், தமிழுரிமைச் சிக்கலில், நாம் புதிதாய் ஏதாவது செய்யமுடியும். வெறுமே அரசை மட்டுங் குறைகூறிப் பயனில்லை.  குறை நம்மிடமும் உள்ளது. ஊரே திரண்டு வடம் பிடித்தால் தான் தேர் நகரும்.

இப்பொழுது கணிவழிப் பரிமாற்றத்திற்கு ஒருங்குறியையும், அச்சாவணப் பயன்பாட்டிற்கு அ.எ.கு/TACE (அனைத்து எழுத்துக் குறியேற்றம்/ Tamil All Character Encoding) பயன்படுத்துவதும் இன்றியமையாத் தேவைகள் இவற்றை மறந்து, தமிழரிற் கணிசமானோர் எண்மடைக் குறியேற்றமே புழங்கிக் கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் தள்ளித்தள்ளியே போகும். முன்னே வராது பின்தங்கியே இருப்போம். (நான் எண்மடைக் குறியேற்றம் பயில்வேன்  நீங்கள் NHM Converter ஐ வைத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்பது ஒருவகைச் சண்டித்தனம்.) நண்பர்களே! அருள்கூர்ந்து மாறுங்கள். ஊர்கூடித் தேர் இழுப்போம்.

இதுவரை நுட்பியற்சிக்கல் பற்றி நிறையவே பேசிவிட்டேன். எனவே அதை விடுத்து, நம்மூரின் மொழியுரிமையற்ற நிலைகளைச் சொல்ல விழைகிறேன்.

முதலில் வருவன அரசாவணங்கள், சட்டங்கள். தமிழக அரசினால் இவை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட படுகின்றன. இவற்றில் ஆங்கில ஆவணத்திற்கே முகன்மையென நான் கேள்விப்பட்டேன். தமிழாவணங்கள் நீதிமன்றங்களில் சட்டமதிப்புக் கொண்டவை அல்லவாம். இது உண்மையா, அல்லவா என்பதை நீங்கள் தாம் சொல்லவேண்டும். கொல்லன் தெருவில் நான் ஊசி விற்கக் கூடாது. இது மெய்யெனில், தமிழுக்கு எங்கே மொழியுரிமை உள்ளது? நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதியுண்டா? இந்திக்கு 4 மாநிலங்களில் இது முடியுமெனில், தமிழுக்கு ஏன் உரிமைதர மறுக்கிறார்? வழக்குமன்றங்களில் தமிழுரிமை ஏன் சிக்கலாகிறது?

சரி, கல்வித்துறைக்கு வருவோம். இவ்விதயம் சற்று நீண்டது. நான் கேள்விப் பட்டவரை, தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமே ஆட்சிமொழி. ஒரே விதிவிலக்காய்ப் பாரதிதாசன் பல்கலையில் பேரா. பொன்னவைக்கோ இருந்தவரை தமிழ் செல்லுபடியானது. அவருக்கு அப்புறம் ”பழைய குருடி கதவை திறடி” ஆனது. ஏனிது முடியவில்லை?. இங்கெலாம் தமிழ்க்கல்வி ஆவணங்கள் முன்னுரிமை கொள்ளாதாம். காட்டாக பாடத்திட்டங்கள், விண்ணப்பங்கள், வேண்டுகோள்கள், கல்வித்துறை அறிவிப்புகள், பல்கலைக் கழக ஆணைகள் என எல்லாவற்றிலும் ஆங்கில வடிவமே செல்லுபடி ஆகுமாம்.  தமிழுக்கு எங்கே உரிமையுள்ளது?

பல்கலைக் கழகங்களிலிருந்து இன்னொன்றைச் சொல்கிறேன். இளம் பொறியியல், இளநுட்பியல், முதுஅறிவியல், முதுகலை, முதுபொறியியல், முதுநுட்பியல், ஆய்வியல் நிறைஞர், ஆய்வியல் முனைவர் ஆகிய பட்டங்களின் புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) என எல்லாமே (தமிழ்த்துறை தவிர) ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் நடைமுறை இன்றுமுண்டு. தமிழில் எதையும் சொல்லத் தெரியாமலேயே தமிழ்நாட்டில் பட்டம் பெறலாம். அப்புறம் எங்கே மொழியுரிமை உள்ளது? மற்ற நாடுகளிலோ குறைந்தது 5 பக்கமாவது அவ்வந்நாட்டு மொழிகளில் நூற்சுருக்கம் இருக்க வேண்டும். இக்கட்டாயம் இல்லெனில் அம்மொழிகளின் இருப்பு எப்படி நிலைக்குமென்றே எல்லா நாடுகளிலும் இப்படிச் செய்கிறார். இப்போது சொல்லுங்கள். தமிழின் மொழியுரிமை  எங்கே போயிற்று? இது மொழியுரிமை மட்டுமல்ல. தமிழ் படித்தவனுக்கு வேலைவாய்ப்பு. எத்தனை பேர் இளங்கலை (தமிழ்) படித்துவிட்டு வேலையில்லாதிருக்கிறார். பல கல்லூரிகளில் தமிழ்த் துறை மூடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமோ?

அடுத்தது கல்விக்கொள்கை. அண்மையில் வெளிவந்த இந்திய நடுவணரசின் புதிய கல்விவரைவுத் திட்டம் மிகக் கொடூரமானது. ஒருகாலத்தில் அரசு அமைப்பு யாப்பின்படி, கல்வி என்பது மாநில ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அப்படியிருந்ததை அவக்கரநிலை காலத்தில் concurrent list இற்கு மாற்றினார். அண்மையில் வெளிவந்த கல்விக்கொள்கையின் வரைவுத்திட்டமோ நடுவணரசே எல்லாவற்றையும் செய்யத் தூண்டுகிறது. இந்தக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தவில்லை. பன்மொழிக் கொள்கையைப் பரிந்துரைக்கிறது. இளஞ்சிறார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சங்கதமென்று பல மொழிகளைப் படிக்கச்சொல்லிக் கட்டாயப் படுத்துகிறது. நமது மொழியுரிமைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடவே இளஞ்சிறாரை 3, 5, 8, 12 ஆம் வகுப்புகளில் வடிகட்டுவேம் என்கிறது. மறு படியும் குலக்கல்வியா என்று அச்சப்பட வைக்கிறது. எங்கு பார்த்தாலும் “ஒரே” என்ற கூக்குரல் இப்போது பெரிதும் ஒலிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் ,ஒரே தேர்தல், ஒரே ration card. இந்தப் பட்டியல் முடிவில்லாது போகின்றது.  இந்திய ஒன்றியம் ஒற்றைக் குடியரசாய் மாறுவதால் ஏற்படுங் குழப்பமிது.

484 பக்கக் கல்விக் கொள்கையையே நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இந்த வரைவுத் திட்ட்த்தைப் படித்து மறுவினை செய்வதற்கு மாறாய், அதன் ஓரத்தை இக்கருத்தரங்கு கிடுக்குவதில் (criticize) அவ்வளவு பயன் விளையாது ஐயா! மொழிக்கொள்கை என்பது கல்விக்கொள்கையில் ”துக்குணூண்டு சங்கதி”. இதை எதிர்க்க வேண்டும் தான். ஆனால் மலைமுழுங்கி மகா தேவனான கல்விக் கொள்கையைக் விவாதப்பொருள் ஆக்காமல் எப்படி? வழக்குரைஞர்களே! பென்னம்பெரிய கல்விக் கொள்கையைப் படியுங்கள். 6 மாதக் கலந்தாய்வு நேரமாவது அதற்குக் கிடைக்கவேண்டும். இப்போராட்டக் குழு அதற்கு முயலவேண்டும்.

இன்னொரு பார்வை. நாங்களெல்லாம் 1960 களில் பள்ளியில் படித்தபோது ஆறாம் வகுப்பில் தான் A,B,C.D படித்தோம். பள்ளியிறுதி வரை தமிழ்வழி படித்தோம். பேராயக்கட்சி ஆட்சியில் இதுவே நடைமுறை. தமிழ் நாடு எங்கணும்  13 பள்ளிகளே ஆங்கிலவழிப் பள்ளிகள். இப்போதோ 7000/8000 ஆங்கிலவழிப் பள்ளிகள். அரசுப்பள்ளிகளுங்கூட இப்போது ஆங்கிலவழி வகுப்பை வைத்துக்கொள்ளலாம். (நண்பர் ஒருவர் சொன்னார். சென்னையில் 100க்கு 95 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்கள் உண்டாம். இன்னும் 5 ஆண்டு காலத்தில் முற்ரிலும் ஆங்கிலவழிக்கு எல்லாப் பள்ளிகளும் மாறி விடும். அதிலிருந்து 10 ஆண்டில் தமிழ்நாடு முழுதும் மாறிவிடும். இதுபற்றி ஒரு அரசியல் கட்சியும் பேசவில்லை. எல்லாரும் வெறும் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கிறார்.)

,அக்காலத்தில் இந்தி விருப்பப் பாடம். 8 ஆவதில் தான் இந்தி படிக்கத் தொடங்குவோம். இந்தியில் தேர்வது கட்டாயமில்லை. படிப்பில் எந்தச் சிக்கலையும் நாங்கள் காணவில்லை. விருப்பப்பட்டோர் கல்லூரி போனோம், பெரிய ஆட்களாயும் ஆனோம். ஆங்கிலம் பின்னால் படித்ததால் எக்குறையும் எங்களுக்கு எழவில்லை. எங்களுக்கு நாட்டுப்பற்று ஒன்றுங் குறையவில்லை. இப்படி ஒரு கல்விமுறை நன்றாய் இருந்ததைச் சீரழித்து, இப்போது ஏன் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் நாம் தாசனாகிறோம் என்பது புரிபடவேயில்லை. ஆழ்ந்து ஓர்ந்தால் இது இந்தியாவை ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு சந்தை என்றாக்கும் முயற்சி இது என்பது நன்றாகவே புலப்படுகிறது, .

1972க்குப் பின் தமிழகத்தில் எப்படி ஆங்கிலவழிப் பள்ளிகள் எப்படி முகன்மையுற்றன? ஆங்கிலத்தை மழலையர் பள்ளிகளில் படிக்கவில்லை யென்றால் எதிர்காலமே போகுமென்று எப்படி எண்ணத் தலைப்பட்டார்? (Mummy, daddy என்பதில் எப்படி எல்லோரும் மகிழ்ந்துபோகிறார்?) ஒரு பெரும் உளவியல் மாற்றமே 50 ஆண்டுகளில் நம் மக்களிடத்தே நடந்துள்ளதே, அது ஏன்?. வெறும் முழக்கங்கள் இடுவதில் இனிமேல் பயனில்லை. பெரும் மூளைச்சலவை இங்கு நடந்து முடிந்திருக்கிறது. அதை எப்படித் தகர்ப்பதென்று பாராமல் மொழியுரிமை பேசினால் எப்படி? அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டத்தை மடிக்குழை (மெட்ரிக்குலேசன்) பாட்த்திட்டத்தோடு ஒன்றாக்கியதால் எதுவும் இங்கு முடிந்துவிடவில்லை. ஆங்கிலப் பித்து இன்னும் முற்றி CBSE பள்ளிகள் பெருகுகின்றன. பணம் படைத்த பகுதியினர் ஆங்கிலவழி படித்தால் நாங்கள் ஏன் ஆங்கிலவழி படிக்க்க்கூடாதெனும் சாதியவாதமும் இங்கெழுகிறது. கட்சித்தலைவர் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படித்தால் நாங்கள் ஏன் இந்தி படிக்கக்கூடாது? – என்று இன்னொரு வாதமும் எழுகிறது. மொத்தத்தில் இந்த உளவியல் மாற்றம் நடந்தற்கு ஊழலே அடிப்படைக் காரணம்.  நம்மைக் கெடுத்தது. குமுகயமெங்கணும் விரவிய ஊழலே காரணம். ஊழலைத் தகர்க்காது இதைச் சரிசெய்ய முடியாது.

ஒருசில ஓய்வுபெற்ற ஆங்கிலவாசிரியர் கல்வித்துறைக்குள் புகுந்து மடிக்குழை (மெட்ரிக்குலேஷன்) பள்ளிகளுக்கு ஒப்புதல் வாங்கினார்  கையூட்டு கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெரிதாயிற்று. இயல்பாக  இருந்த 13 முடிவில் 7000/8000 ஆயிற்று. நம் எதிர்காலத்தையே கல்வித்துறையின் ஊழல் குலைத்தெறிந்திருக்கிறது. மனம் வேதனையாகிறது. 1962/67களில் இருந்த அக்காலப் பேராயக் கட்சி கூட தமிழுக்கு நல்ல சேவை செய்தது போல் இப்போது தோன்றுகிறது. அவர் செய்த பணிகளை இப்போதும் தொடராது உள்ளோம். பின்தங்கியும் போனோம்.  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றுதான் அன்றிருந்தது. உண்மையிலேயே அவர் முயன்றார். கல்லூரியில் தமிழ்ப் பாடமொழியாக, ஏராளமான துறைப்பொத்தகங்கள் அப்போது வெளிவந்தன. 1967க்கு அப்புறம் கல்லூரிகளில் தமிழ்ப் பாடமொழியாகும் என்றார் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம். ஆலயங்களில் தமிழில் அர்ச்சனைப் பழக்கம் தொடங்கியது. வழக்கு மன்றங்களில், அரசின் செயலகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகும் என்றார். ஆனால் பேராயம் 1967க்கு முன் செய்ததை 72 க்கு அப்புறம் கழகங்கள் தொடரவேயில்லை.

கல்வியை அடுத்துப் பொதுவெளிக்கு வருவோம். ஆங்கிலத்தின் முன்னுரிமை தனியார் அலுவங்களிலும், அரசு அலுவங்களிலும் இன்றிருப்பதற்குக் காரணம் என்ன? எங்குமே தமிழ் நடைமுறையில் இல்லை. கடைவீதியில்  தமிழ் இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, அல்லது ஒரு மின்னிக்கருவி (electronic equipment) வாங்குகிறீர்கள். அந்தப் பெட்டியில் கருவியைக் கையாளும் கையேடு தமிழில் இருக்கிறதா? ஏன் தமிழக அரசு அதைக் கட்டாயம் ஆக்க வி்ல்லை எந்தவொரு அரபு நாட்டிலும், தென்கிழக்கு ஆசிய நாட்டிலும் அந்த ஊர்மொழியில் கையேடு இல்லையென்றால் பொருளை விற்க முடியாது. கடைகளில்தரும் பெறுதிச் சீட்டுகள் (receipts) ஏன் தமிழிலில்லை? நிறுவனங்களின் பொதுத்தொடர்பு ஏன் தமிழிலில்லை? இங்கு விற்கப்படும் கணிகள், மடிக்கணிகள், செல்பேசிகள் ஏன் Tamil enabled ஆகவில்லை? ஏன் கடைப்பெயர்கள் தமிழில் எழுதப்படவில்லை? இவற்றையொட்டி மொழி யுரிமை இல்லையா?

கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். அது மாதிரி இருக்கிறது நம் நிலை. ஏற்கனவே இருக்கும் சட்ட்திட்டங்களை வைத்தே பல செயல்களை நாம் செய்யலாம். இனிமேலும் கூட்டம்போட்டு, ”வியாக்கியானம்” செய்வதில் பொருளில்லை.  ”தமிழ் சோறு போடுமா?” என்ற கேள்வி நிலையை மாற்றுங்கள். “சோறு போடும்” என்று மக்களுக்கு உறுதி சொல்லுங்கள். அப்போது தான் ஆங்கில மோகம், இந்தி மோகம் மாறும்.   இந்த மாற்றங்களை அரசாங்கத்திற்கு எதிராக மட்டும் தான் செய்யமுடியும் என்றில்லை. அவருக்கு உணர்த்தியும் இதைச் செய்யலாம்.

நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கான என் மறுமொழிகள்:

1. உலக மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள மொழியுரிமைகளின் படி மும் மொழிக் கொள்கை சரியானதா?

சரியில்லை. பள்ளிக்கல்வி தாய்மொழியில், உலகைத் தொடர்பு கொள்ள ஆங்கிலம். மற்றவை அவரவர் விருப்பம்.

2. கூட்டாட்சி அமைப்பில் வாழும் பல்தேசிய இன மக்களின் மொழி யுரிமைகளை பாதுகாப்பது எப்படி?

இந்தியா பல்தேசிய ஒன்றியம் என்பதை மறவாது இருக்கவேண்டும். அவக்கர நிலைக்கு முந்தைய நம்முடைய பழைய யாப்பநிலைக்குப் போனாலே போதும். அதை முகன நிலைக்குக் கொண்டுவந்தால் போதும்.

3. மாநிலங்களில் செயல்படும் இந்திய நடுவணரசின் அலுவலகங்கள் அந்ததந்த மாநில மக்களின் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட்டாட்சி அரசமைப்புப்படி சரியானதா?

சரியே. நடுவணரசு அலுவங்கள் மட்டுமின்றி தமிழக அரசின் அலுவங்களும் ஆங்கிலவழி தான் பெரிதும் நடகின்றன. தமிழுக்கு முன்னுரிமை இன்னும் இல்லை. நடுவணரசின் குறையை மட்டும் பார்க்காது தமிழக அரசின் குறையையும் பாருங்கள்.

4. உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியானதா?

சரியானதே! மாற்றமாநிலங்களில் நடைமுறைப்பட்ட்தை நாம் ஏன் செய்யக் கூடாது? இதில் நாம் ஏன் தயங்கிநிற்கிறோம்?

5. இந்திய நடுவணரசின் அலுவல் மொழியாக ஒரே மொழியாக இந்தி மொழி மட்டும் என்பது மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி அரசமைப்பு கோட்பாட்டின் சரியானதானா?

சரியில்லை. 22 மாநிலமொழிகளும் ஆட்சிமொழிகளாகவேண்டும்.

6. மூன்று மொழிகள் பயின்று தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற நிபந்தனை மாணவர்களின் கல்வியை பாதிக்குமா?

கட்டாயம் பாதிக்கும். மேலே மறுமொழி சொல்லியிருக்கிறேன்.

7. மும்மொழி பயிற்றுவிப்பு மாநில அரசின் கல்விச்செலவை விரையமாக்குமா?

விரையமாக்கும்.

8. தற்போதைய மொழிக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை மாநில மக்களின் தாய்மொழிகளின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கின்றனவா?

ஆமாம்.

அன்புடன், 
இராம.கி.

Sunday, June 16, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 8

முன்சொன்னதுபோல் யாங்க்சி ஆற்றங்கரையிலோ, யுன்னானிலோ, தென் கிழக்காசியாவிலோ நெல்விளைச்சல் தொடங்கியிருக்கலாம். ஆனால் அது பெரும்பாலும் புன்செய் விளைச்சலாய் இருக்கவே வாய்ப்புண்டு. ஏனெனில் நன்செய் விளைச்சலுக்கு, தேவையான அளவிலும் காலத்திலும் வயலில் நீர்தேங்க வேண்டும்;.பயிர் அழுகவுங் கூடாது. [”வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும். நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயர்வான்” என்று பெருஞ்சோழர் கால ஔவை கூறுவாள்.] இவ் விரண்டையும் சாதிக்கும் நீர்ப்பாசன நுட்பியல் என்பது ஒரு குமுகத்தில் உருவாக நெடுநாட்கள் ஆகும். தவிர, பென்னம்பெரு நுட்பியல்கள் எல்லாம் பெரும்பாலும் இயற்கையைப் படியெடுத்தே உருவாயின. புன்செய் நெல் விளைச்சலைக் கண்ட எந்த நாட்டின் வயல்களுக்கு நீரானது தானே 6 மாதம் உட்புகுந்து, ஊடுறுவி, சிச்சிறிதாய் நீர்மட்டம் உயர்ந்து, சிலகாலம் தேங்கிப்பின் சிச்சிறிதாய் வடிந்தது? அப்படியொருநாடு உலகில் என்றேனும் எங்கேனும் இருந்ததா?- எனில் இருந்தது என்றே மறுமொழி சொல்லமுடியும். அந்நாடு இன்றுமுண்டு. ஆனால் நம்மில் பலரும் அதை மதிக்காதிருக்கிறோம். (நம்மின் படியெடுப்பு) இதற்கு விடைகாண முயல்வோம்.

[இங்கேயோர் இடைவிலகல். மேற்கூறிய நீர்ப்பாசனம் பொ.உ.மு. 2500 ஆண்டுகளில் (அவ்வளவு முந்தையான காலத்தில்) தமிழகத்தில் நடந்ததற்கு இதுவரை சான்றெதுவுங் கிட்டவில்லை. இன்னுஞ் சொன்னால், ஆகப் பழம்நெல் நமக்குப் பொருந்தலிலே கிடைத்தது. அதன்காலம் பொ.உ.மு.490 என்றே முனைவர் கா.இராசனின் ஆய்வு உணர்த்தியது. தவிர, அங்கு கண்டு பிடிக்கப்பட்டது இயல்நெல் அல்ல. பன்முறை பயிரிட்டுச் செழுமைப்பட்ட நெல்மணி. தமிழகத்தில் நெல்விளைவிப்பு பொ.உ.மு.490 க்கு முன் நடந்து இருக்கலாம். ஆனால் அதன் காலமென்ன? தெரியாது. புன்செய்ப் பயிரோடு, நீர்ப் பாசன நுட்பியல் சேர்ந்தபின்னரே நன்செய்விளைப்பு தமிழகத்தில் ஏற்பட்டது. இதன்காலம் பற்றியும் எதிர்காலத்தில் ஆயவேண்டும். வெறும் வாய்ப்பந்தல் பற்றாது. இன்றைக்குக் கிட்டியிருக்கும் தமிழகப் பழம்நெல் வகைகளை ஈனியல்வழி ஆய்ந்து இதற்குத் தீர்வு காணலாம். அப்படி யெல்லாம் ஆயாது, வெறுமே தமிழ் ஆர்வலர் “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு” என்று சொல்வதில் பொருளில்லை.]   

இனித் தென்கிழக்காசியா வருவோம். தென்கிழக்காசியாவில் வெண்கலங் கண்ட தமிழன், அதைக் கொணர்ந்து ஏற்கனவே தான்நடத்திவந்த முல்லை நிலப் பயிர்ச்செயலுக்குப் பயனுறுத்தியிருக்கலாம். ”காடுகொன்று நாடாக்கி குளங்தொட்டு வளம்பெருக்க” (பட்டினப்பாலை 283-4), மரக்கொழுவால் கொற்றுவதைவிட வெண்கலக் கொழுவால் கொற்றுவது எளிது. அகண்ட வயற்பரப்புகளை வெண்கலப் பயன்பாட்டால் அதிகம் உருவாக்கலாம். முல்லை மருதமாய் மாறுவது வெண்கலக் கொழுக்களால் அதிகரிக்கும். விளைச்சலும் கூடும் இனக்குழு உறுப்பினர் கூடக் கூட உணவுத் தேவையும், போர்க் கருவிகள் தேவையும், உணவாக்கங்களும் தமிழரிடை மேலும் அதிகரித்திருக்கும். பொஉமு. 2500 களில் தாய்லாந்துத் தக்கோலத்திற்கும் அப்பால், தகரத்தேவையை நிறைவுசெய்யத் தமிழன் இன்னும் கிழக்கில் நகர்ந்தான். (முன்சொன்னது போல், தகரம் கிட்டியவிடம் தெரியாதபடி மறைத்து தமிழ்வணிகர் தம்முள் கமுக்கமாய் வைத்திருக்கலாம். நடுக்கிழக்கு வணிகர் அப்படித்தான் செய்தார்.)

இந்த வெண்கலத் தேடலோடு மட்டும் தமிழர் நின்றாரா எனில் இல்லை. முத்து, வயிரம், அரத்தினம், பச்சை போன்ற ஒன்பான் மணிகளைத் தேடினார். தங்கம், செம்பு எனப் பலவற்றைத் தேடினார். இத்தேடலில் ஊடாய்த் தக்கோலத்திற்கு அப்புறம் நிலவழி நடந்து, சியாமிய வளைகுடாவையுங் கடந்து (அயுத்தயா, சுகோதை போன்ற) சியாமின் புது நகரப் பகுதிகளுக்கும் தமிழன் போயிருப்பார். இன்னுஞ் சொன்னால் தாம்பரலிங்கத்தின் கிழக்கிலும் கடற்பயணஞ் செய்திருக்கலாம். மறவாதீர்!. வெறும் 600 கி.மீ. கடல்வழி போனாலே கம்போடியா, வியத்நாம் சார்ந்த மீகாங் கழிமுகம் வந்துசேரும். அக்காலத்தில் கம்போடியரும் வியத்நாமியரும் சேர்ந்த பல்வேறு பழங் குடியார் அங்கிருந்தார். இன்றும் இவர் அருகருகே உள்ளார். இரு நாடுகளும் எப்போதும் எலியும் பூனையுமாகவே உள்ளன. இற்றை வியத்நாமின் ஓக்இயோ (Oc Eo. அன்றிது கம்போடியாப் பகுதி.) எனும் மீகாங் துறைக்கு இவ்வழியில் எளிதில் போகலாம்.

மேற்கே எகிப்தின் பெருனீசு போய், இன்னும் மேற்கே 300 கி.மீ. நிலம் வழி ”அசுவான்” போனால், வடக்கே ஏகும் நீலாறு வந்துவிடும். அதில் படகுப் பயணஞ் செய்தால் அலெக்சாந்திரியா போவது எளிது. அங்கிருந்து கிரேக்கம், உரோமம் போவது அப்படியொன்றுங் கடினமல்ல. இதே போற்றான் தாம்ப லிங்கத்தின் கிழக்கில் ஓக்இயோ போனால், அதற்கப்புறம் நிலவழி, ஆற்று வழியில் பயணஞ் செய்து கம்போடிய நாட்டிற்குள் போவது அப்படியொன்றுங் கடினமல்ல. தமிழருக்கும் கம்போடியாவிற்கும் நாட்பட்ட தொடர்பிருந்தது உண்மையே. (ஒருமுறை நீங்கள் அங்கு போய் வந்தால் உங்களுக்கே அது புலப்பட்டுவிடும். (அடுத்த பகுதியில் விவரிக்கிறேன்.) ஆக நம் குணக்கு, குடக்குப் பக்கங்களிலும் கடல், நிலம், ஆறெனப் பயணஞ் செய்வதே நமக்குப் பழக்கமாய் இருந்துள்ளது.

ஆங்கிலப் பெயரான "Mekong" என்பது சயாமியலும், லாவோசிலுமுள்ள Mae Nam Khong என்றபெயரின் சுருக்கமே என்பார். இம்மொழிகளில் நீர்ப்பெருக்கு, நீர்த் தாய் என்ற பொதுப்பொருளில் mae nam அமையும். Khong என்பது இயற்பெயர். எனவே Mae Nam Khong என்பதன் பொருள் "River Khong".என்பதாகும். அதே பொழுது Khong இற்கே ஆற்றுப்பொருள் சீனத்திலிருந்து வந்துசேரும். (Chinese 江 whose Old Chinese pronunciation has been reconstructed as /*kˤroŋ and which long served as the proper name of the Yangtze before becoming a generic word for major rivers.) இந்தியக் கங்கைக்கும் அதே பெயரா?- என்பதும் ஆராயற்பாலது. கம் என்பது தமிழில் நீரைக்குறிக்கும். கெமேர் மொழியில் mé ஐ, அம்மை என்றும், kôngk/kôngkea என்பதை நீருக்கு மாற்றாகவுங் பொருள் கொள்வர். எனவே Mékôngk இன் பொருள் நீர்த்தாய் ('mother of water') என்றாகும். தமிழில் காவிரித்தாய் என்கிறோமே?.அதுபோலத் தான்.

மீகாங் ஆறு கூர்ந்து அறியப்படவேண்டிய ஒன்று. இமயமலையில் தோன்றும் இவ்வாறு, திபெத், யுன்னான், லாவோசு, தாய்லந்து, கம்போடியா வழி தென் வியத்நாம் வந்து, முடிவில் கடலடைகிறது. இவ்வாற்றில் 2 வகையில் நீரோட்டப் பெருக்குண்டு. முதல்வழி இமயப்பனிக்கட்டிகள் உருகிப் பெருக்கு எடுப்பது. இரண்டாவது மே தொடங்கி அகுதோபர் வரை ஏற்படும் பருவ மழையால் பெருகி வருவது. இதுபோகக் கம்போடிய வடமேற்கு மலைத் தொடரில் பெய்யும் மழைநீர், சிற்றாறுகளாகி ”புத்தாற்றுப் பேரேரிக்கு”  (தோன்லே சாப் dtoo-un-lay saap என்று கெமேர் மொழியில் சொல்லப்படும். கம்போடியா வளத்திற்கு ஆதாரமான ஏரி) வந்து சேரும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏரிநிறைந்து மிகுத்துப்பெருகும் நீர் ”புத்தாற்றில்” வழியும். (ஆற்றின் பெயர் புத்தாறு. ஏரியின் பெயர் புத்தாற்றுப் பேரேரி) இப்படி வழியும் புத்தாறு பென்னம்புனம் (Phnompenh) நகருக்கருகில் மீகாங்கோடு கலந்து, பசாக் (Bassac), மீகாங் (Mekong) எனும் கிளையாறுகளாய்ப் பிரிந்தோடும். 2 உள்ளேகும் ஆறுகளும், 2 வெளியேறும் ஆறுகளும் என 4 முகங்கள் கொண்டதால், பென்னம்புனம் நகர் சதுமுகம் எனப்பட்டது. (சதுரம் தமிழ் தான். என் கட்டுரைகளில் தேடுக.)

இதன் புவியியல் அமைப்பு சற்று விதப்பானது. வெளியேறும் ஆறுகளின் கொண்மையை விட உள்ளேகும் மீகாங்கின் கொண்மை மழைக்காலத்தில் மிகுதி. எனவே மழைக்காலத்தில் புத்தாறு திசைமாறி வெளியேகும் ஆறாகும். அதாவது வழமை ஓட்டத்திற்கு எதிர்த்திசையில் அதிகநீர் ஓடி புத்தாற்று ஏரியின் நீர்ப்பிடிப்பு மெல்லமெல்லக் கூடும். நாட்டின்நடுவே சியம்ரீப், பட்டம்பாங், புர்சாட், கம்போங்தாம், கம்போங்சின்னங், கம்பூங்சாம், கம்போங் சுபியூ, பென்னம்புனம் வரை வெள்ளம் அகன்றுபரவும். இன்றுங்கூட இப்பகுதி ஏழைக் கம்போடிய வீடுகள் 12,16,24 மரக்கால்களில் 6 அடி உயரத்திற்கும் மேல் மரத்தால் தரைத்தளமும் நிலத்திலிருந்து அதற்குப்போக ஏணிப் படிக்கட்டும் கொண்டிருக்கும். தமிழக நாட்டுப்புறத்தார் போலவே ஆண்களின் உடல் மேற் பகுதியில் மீக்குறை ஆடைகளே இருக்கும். ஒவ்வோராண்டும் வெள்ளப் பெருக்கில் கால்நடைகளை வீட்டுத் தளத்தில் ஏற்றிவிடுவர். நாடே தண்ணீரில் மிதக்கும். (செல்வர் வீடுகள் மட்டும் நிலம்தொட்டு அதேபொழுது 6 அடி உயர மண்மேட்டில் தரைத்தளம் கொண்டு காட்சியளிக்கும். படியில்லாதும், படகுகட்டத் தோதாய் வீட்டு வாசலில் தூண்கள் இல்லாதுமுள்ள செல்வர் வீடுகள் அங்கு அரிது.

[இதேநிலை சதுப்புநிலத்தில் வீடுகட்டிய புகாரிலும் இருந்ததை ஊகிக்கலாம். (செயமோகன் தன் ”கொற்றவை” நூலில் இதைவிரித்துக் காட்டியிருப்பார்.) ஏனெனில் பொ.உ. 6-7 ஆம் நூற்றாண்டுகளில் புகாரிலிருந்து வெளியேறிப் பாண்டிநாடு போந்த நகரத்தார் தமக்குத் தெரிந்த ஒரேயொரு அடவில் (design) செட்டிநாட்டுப் பக்கம் இன்றும் வீடுகள் கட்டியுள்ளதைக் காணலாம் வீதியில் இருந்து பார்த்தால் கொடிக்கம்பும், வாசல்வளைவும், வீதியொட்டிய வெளிக் கதவும். கதவின் வெளிப்பக்கம் உட்கார 2 மாடங்களும், படகுகட்டத் தோதாய் 2 தூண்களும், படகுகள் அணையத் தோதாய்ப் படித்துறையும் கண்டாலே வீடுகளின் முன்தோற்றம் வேடிக்கையாய்த் தோற்றும். நெய்தல்நிலத்தில் இருக்கவேண்டிய ஓர் அடவு (design) முரண்தொடையாய்ப் பாலைநிலத்தில் உள்ளது. கூர்ந்துநோக்கின் தென்கிழக்கு ஆசியச் செல்வர் வீடுகள் போன்றே பாலைநிலச் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட நகரத்தார் வீடுகள் அமையும். எது மூலம்? எது போல்மம்? - என அறியமுடியாதபடி காலங்கடந்து நிற்கும்.] 
 
இம்முரண்தொடையை விடுத்து மீண்டும் தோன்லே சாப் ஏரிக்குப் போவோம். ஏரியின் கொள்ளளவு மழைக்காலத்தில் பெருமாண்டதாகும். 6 மாதகாலம் இது நடக்கும். கம்போடிய நெல்விளைச்சலுக்கு இதுவே பெருநன்மை கொடுத்தது. புத்தாற்றின் 2 கரையிலும் இயல்பாய் வளர்ந்த நெற்பயிர்கள் நீர்மட்டமுயர அதைவிட உயருங் கட்டாயம் ஏற்பட்டது. உயரமான சம்பாநெல்கள் பெருத்து வளர்ந்தன. (வியத்நாம் நாட்டிற்கே சம்பா என்றுதான் பெயர்.) சம்பாநாட்டில் விளைந்தநெல் சம்பாவானதோ? வியப்பாகிறது. நூற்றுக்கணக்கான சம்பா வகைகளை இன்று தமிழ்நாட்டில் அடையாளங் காட்டுகிறோமே? எல்லாச் சம்பாக்களும் பெரும்பாலும் ஏராளமாய் நீரைக் குடிக்கும் 150 நாள் பயிர்கள். நீர் நிறையநிறைய, அதைக்காட்டிலும் உயரம் வளர முற்படும் நெட்டைப் பயிர்கள். ஆனாலும் நீர்மட்டம் கூட்டிச் சரியான படி நீரை வடிக்கவேண்டும். ஒரு தப்புச்செய்தால் பயிர் அழுகிவிடும். நீர்ப்பாசனம் என்பது அவ்வளவு நுணுகிப் பின்பற்றவேண்டியது.

இத்தகைய நீர்ப்பாசனம் கம்போடியாவில் மிக இயல்பாய் ஏற்பட்டது. உலகிலேயே வேறெங்கும் இதுபோல் அமையுமா என்பது கேள்விக்குறி. மீகாங் ஆற்றுக் கழிமுகத்திலிருந்து படகில் மேற்குநோக்கி சியம்ரீப் வரை சென்ற தமிழ்வணிகர் கட்டாயம் புத்தாற்றின் விதப்பைப் புரிந்துகொண்டு இருப்பார். இயற்கைக் கால்வாய்கள் மூலம் நீர் பிரிந்துசெல்வதையும் கண்டிருப்பார். நெல்வித்துகளைத் தமிழகம் கொணர்ந்தபோது சரியான தருணத்தில் நீர் பாய்ச்சவேண்டிய தேவையையும் கால்வாய் வெட்டையும் மனக்கற்பனையில் செய்துபார்த்திருப்பார். உலகில் மாந்தர் கண்டுபிடித்த ஒவ்வொரு நுட்பியலும் ஏதோவொரு இயல்நிகழ்வை புதுவிடத்தில், புதுக்காலத்தில் புதுப்போக்கில் செய்துபார்த்தது தானே?

அன்புடன்,
இராம.கி.

Saturday, June 15, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 7

தகரத் தேடல், கெடா மாநிலத் தென்தொடர்ச்சியிலும் கூடியது. பெரிலீசு, பினாங்கு, கெடாவென்று போய் மலேசியாவின் பல மாநிலங்களுக்கும், தாய்லந்திற்கும் பல் நூற்றாண்டுகளாய்த் தேடல் விரிந்தது. (பர்மாவில் ஈயச் சுரங்கங்கள் கிடையா.) பல்வேறு இனக்கலப்பும், மொழிக்கலப்பும், பண்பாட்டுக் கலப்பும் இப்பகுதிகளில் ஏற்பட்டன. வெண்கலம் என்பது வெண்கலச்செம்பின் சுருக்கமாகும். பேச்சு வழக்கில் செம்பு தவிர்த்து வெண்கலமானது.. [இற்றைத் தமிழர் பலர்க்கும் இது சுருக்கம் என்பதே தெரிவதில்லை.] வெண்கலத்தின் ”கலம்”, கலெங் (kaleng) எனும் மலாய்ச்சொல் வழிப்பட்டது. (எல்லாம் தமிழ் தமிழ் என்பதன் சரவல் இப்போது புரிகிறதா? வரலாற்றில் நாமும் பலவற்றைக் கடன் வாங்கினோம். கடனும் கொடுத்தோம்.) வெண்நிறங் கொண்டதால் கலம் வெண்கலமானது. நினைவுகொள்க. மலாயில் கலெங்= Tin தமிழில் வெண்”கல”த்தின் பின்பகுதி. (”செம்பு” வெண்கலத்தினுள் தொக்கி நிற்கிறது. மின்சாரத்தை மின் எனும்போது சாரம் தொக்குவது போல் இதுவும் அமையும்.)

செம்பின் சுருக்கம் செய்/செம் ஆகும். தகரம் சேர்க்கச்சேர்க்க சிவப்பில் பொன் நிறங் கூடி முடிவில் வெண்மையாகும். பொன்மைதெரிய அமையுஞ்செய் பொன்செய் ஆனது. (இந்தையிரொப்பிய வழக்கப் படி) இதனுள் ரகரஞ்சேர்த்துப் ப்ரொன்செய்>bronze ஆகவும் பலுக்கலாம். ஆங்கில அகரமுதலிகளில் சொற்பிறப்புத் தெரியவில்லை என்பார். எனக்குப் புரிந்தவரை இதனுள் தமிழ் கரந்துநிற்கிறது..கலஞ் செம்>கல்ஞ்சம்>கஞ்சம் என்பதிலும் மலாய்ச்சொல் உள்ளார்ந்து நிற்கிறது. மாந்தவாழ்வில் வெண்கல அட்டிழை, சட்டென எழ வில்லை. போர்க்கருவி, உணவாக்கம் மட்டுமின்றி, கூலவிளைப்பிற்கும் அது பயனானது. எளிதில் உருகி நீர்மமாகும் வெள்ளீயத்தில் செப்புக் கலன்களையும், கருவிகளையும் முக்கியெடுத்து முலாம் பூசுவதில் தொடங்கிய பழக்கம், உருகுநிலை கூட்டிச் செய்துபார்த்துச் சரிசெய்யும் (trial and error) முறையில் வெவ்வேறு அட்டிழைப் பொதிவுகளுக்கு (compositions) இட்டு வந்தது. முன்னோர் கண்டுபிடித்த புதுக்குகளில் (products) எந்தப் பொதிவு அதிக வலு கொடுத்ததோ, அதுவே நாளாவட்டத்தில் நிலைத்தது. அப்படித்தான் 7 பங்கு செம்பு, ஒரு பங்கு தகரம் என்ற பொதிவு (composition) நமக்குக் கிடைத்தது. 

[வெண்கலத்தின் இடை விலகலாய், ஆதிச்ச நல்லூரின் (2 பங்கு செம்பு, 1 பங்கு துத்தநாகம் கொண்ட) பித்தளையைக் காணலாம். துத்தநாகம் இராசத் தானத்தில் கிடைத்தது. நாகம்= கருப்பு.. துத்தம்= வெளிறிய; துத்தநாகம்= வெளிறிய கருமாழை. பழம்மேலையரிற் பலரும் வெண்கலம், பித்தளை எனும் 2 ஐயுங் குழப்பிக்கொள்வார். இன்றுங்கூட Bronze ஐப்போல் Brass ற்கும் சரியான சொற்பிறப்புத் தெரியாதென ஆங்கிலச் சொற்பிறப்பியல் சொல்லும். இச்சொற்கள் வெளியாரிடமிருந்து வந்ததென்பார். brass (n.) "yellow malleable alloy metal, harder than copper," Old English bræs "brass, bronze," originally any alloy of copper, in England usually with tin (this is now called bronze), later and in modern use an alloy of roughly two parts copper to one part zinc. A mystery word, with no known cognates beyond English. Perhaps akin to French brasser "to brew," because it is an alloy. It is also compared to Old Swedish brasa "fire," but no sure connection can be made. Yet another theory connects it with Latin ferrum "iron," itself of obscure origin.

பித்தளையும் பொன்நிறத்ததே. வெள்ளொளி மயங்கி இருள்கையில் உள்ள நிறத்தை மஞ்சளென்பார். மயங்கல்>மஞ்சல்>மஞ்சள். பொல்/பொலம்= பொன். பொற்ற= பொன்னாலாகிய. பொல்ங்கம்>பொங்கம்> பிங்கம்>பிங்கலம்= பொன்மை கலந்த சிவப்பு. பேச்சுவழக்கில் பிங்கலம், பிங்களமாகும். பொற்று> பொத்து>பித்து என்பதும் மஞ்சள்நிறமே. பித்து>பித்தல்>பித்தள்> பித்தளை. பித்தம்= மஞ்சளான ஈரல்நீர். பித்தம்>பீதம்/பீதகம்= பொன்னிறம், மஞ்சள். பீதகன்= வியாழன். பீதக வேர்= மஞ்சள் வேர், பீதராகம்= பொன்மை; பீதலகம்= பித்தளை பீதாம்பரம்= பொன்னாடை பீதகவாடை= மஞ்சளாடை; பீரம்= மஞ்சள் படரும் பசிய நிறம்; பசலையென்பார். பீரை= மஞ்சள்நிறப் பீர்க்கம் பழம். பீளை= மஞ்சள்நிறக் கண்மலம். பீள்>பீ= மலம். பில்லை= மங்கிய மஞ்சள்நிறம்.

பித்து>பெத்து>பேத்து என்பது இந்தையிரோப்பிய பலுக்கல் முறையில் பேத்து> ப்ரேத்து>ப்ரேஸ்து>பிரேஸ் என்றாகும். (இந்தையிரொப்பியம் போகும் சொற்களில் -tt>-st>-ss என்று திரிவது பல சொற்களில் நடந்துள்ளது.) இதன்படி, பித்தளையும் பிரேஸும் தொடர்பு உள்ளவையாகவே தெரிகிறது. ஏனெனில் தமிழ்ச்சொல்லே சங்கதத்திலும் பயில்கிறது. [pittalaவோடு, கஞ்சமெனும் (kaamsya) சொல்லையும் சங்கதம் குழப்பத்தோடு ஆளும். இதுபோக ritikaa, diipti போன்றவற்றையும் அவர் சொல்வார். அவற்றுள் நான் போகவில்லை.] சங்கதத்திடம் இருந்து பித்தளையைத் தமிழ் கடன் வாங்கியதெனில், மேற் பத்தியில் சொன்ன பலவும் தமிழில்லை என்றாகும். தவிரக் குடஞ் செய்யப் பித்தளை பயனுற்றதால், குடவமும் பின்னாளில் பித்தளையைக் குறித்தது. குடக்கி= பித்தளை; குடவஞ்செம்பு= பித்தளை கொண்டு அணியம் ஆக்கும் ஒருவகை விளிம்பற்ற செம்பு. pure copper free from alloy verdigris. குடவப் பொடி= brasslings; குடவன் பொன்= பித்தளை சேர்ந்த பொன்.]

இனி வெண்கலத்திற்கு மீள வருவோம். சுமேரியாவிற்றான் வெண்கலம் முதலில் (பொ.உ.மு. 3300) செய்யப் பட்டதாம். தேவையான வெள்ளீயமும் செம்பும் துருக்கியில் கிட்டியதாம். நடுவண்கடல் நாடுகளின் வணிகர் நெடுங் காலம் தாம் பெற்ற ஈயம் எங்கிருந்து வந்ததென்பதை கமுக்கமாய் மறைத்து வைத்திருக்கிறார். தகரமே சுமேரிய நாகரிகத்தில் வெண்கலப் பெருக்கம் கூடுவதற்கு வழி வகுத்தது. யூவ்ரட்டீசு, டைகிரீசு ஆறுகளின் பருவகால வெள்ளப் பெருக்கும், அதன் விளைவால் ஆற்றங்கரைகளில் நடந்த நீர்ப் பாசனமும், வெண்கலக் கொழுக்களும், பயிர் உவரி உருவாகக் காரணம் ஆகின. ஊர், பாபிலோன், நினேவா போன்ற நகரங்கள் வாழமுடிந்தது. விளை பொருட்கள்போல வினைக்கலன்களும் செய்யப்பட்டன. நாகரிகம் தழைத்தது.

துருக்கியின் ஈயம் பற்றாத பொழுது, ஈயம்தேடி அக்கால வணிகர் இரோப்பா முழுக்க அலைந்திருக்கிறார். முடிவில் இங்கிலாந்தின் வெல்சுப் பகுதியில் தகரம் கிடைத்திருக்கிறது. அந்தக் கிடைப்பையும் அவர் வெளியே சொல்லாது கமுக்கமாய் இருந்திருக்கிறார். பொ.உ.மு.400-300 களில் தான் கிரேக்கர் இவ் வுண்மையை அறிந்திருக்கிறார். அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த உரோமானியர் ஈயச் சுரங்கங்கள் தம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென்று கருதியே இங்கிலாந்தைப் பிடித்திருக்கிறார். இதே சிக்கல் தென்கிழக்காசிய ஈயத்திற்கும் ஏற்பட்டிருக்கலாம், காழகத்து ஆக்கம் எனப் பட்டினப் பாலையில் சொல்வது ஈயத்தின் மறைகுறிப்பாகலாம் ஈயங்கருதியே சோழரும், பாண்டியரும், பல்லவரும், பெருஞ்சோழரும் தென்கிழக்காசியாவிற்குப் போயிருந்திருக்கலாம். தமிழ் வணிகரும் ஈயக்கிடைப்பு இடங்களை தம் நாட்டினருக்கு வெளிப்படுத்தாது மறைத்திருக்கலாம்.  [இன்றைக்கும் கூட எந்த வணிகரும் தான் யாரிடமிருந்து பொருட்களைக் கொணர்கிறோம் என்று சொல்லமாட்டார். போட்டி வணிகருக்குத் தெரிந்துவிடும் என்று மறைப்பார்.]

பயன்பாட்டு முகத்தில் அக்காலத்தில் ஈயமின்றி வாள்கள் இல்லை, படைக் கலங்கள் இல்லை, பயிர்த்தொழில்கள் இல்லை. தங்கம், வெள்ளி, செம்பிற்கு மட்டுமல்லாது இழிவான ஈயத்திற்கும் பெருமதிப்பு உண்டு. பயிர்க்கலங்கள் இன்றி (அதாவது ஈயமின்றி), பொ.உ.மு.3000-2500 களில் மருதமென்ற திணையே எழுந்திருக்காது. (இதை இன்னும் ஆழமாய்க் கீழே பார்க்கப் போகிறோம்.) கெட்டிப்பட்ட பயிர் நிலத்தைக் கிளறியுழ, வெண்கலத் தண்டு/கொழுக்களைப் பயனுறுத்தியிருக்கலாமென அறிவியலார் சொல்வர். வெறும் மரக்கட்டையாலோ, வலுவிலாச் செம்புக்கோலாலோ, பயிர்த்தொழில் வளர வில்லை. (வெண்கலக் கொழுக்களின்பின், பொஉ.உ.மு 1800 களில் இரும்புக் கொழு வந்தே, பயிர்த்தொழில் மேலுஞ் செழித்தது.) ஆழ்ந்து பார்த்தால், பயிர்த் தொழிலுக்கும், வெண்கலத்திற்கும் கட்டாயந் தொடர்பு இருந்தது புரியும். பெரும்பாலும் பொ.உ.மு. 3300 க்கு அப்புறமே இத்தொடர்பால் வேளாண் நெல்லுக்கு முகன்மை ஏற்பட்டிருக்கலாம்.

இதற்குமுன் இயற்கையில் விளைந்த புன்செய்நெல் விளைச்சலை (dryland paddy cultivation) மாந்தன் பயன்கொண்டான். பெருத்த நெல்விளைச்சலுக்கு வெண்கலக் கொழு மட்டும் பற்றாது. நீர்ப்பாசனம் என்ற இன்னொரு நுட்பியல் உத்தியும் வேண்டும். அதைத் தமிழன் எங்கு கற்றுக்கொண்டான்?- என்பதற்குக் கம்போடியா எனும் இன்னொரு நாட்டிற்கு நாம் போகவேண்டும். இங்கு தகரங் கிடையாது. ஆனால் நீர்ப்பாசன நுட்பியல் கண்டுபிடிக்கத் தேவையான இயற்கைத் தூண்டுதல் ஏராளமாய் இருந்தது. ஒரு ஆறுமாசம் அங்கிருந்து இயற்கையைக் கவனித்தாலே நெல்லும், அதன் பெருவளர்ச்சியும் புரிந்து போகும். அதை அடுத்துப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, June 14, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 6

முன் சொன்னதுபோல், புகாரிலிருந்து சாவகம் புறப்படும் கப்பல்கள் அந்துவன்/நக்கவரம் தீவுகளுக்குப் போய்ப் பின் அங்கிருந்து 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம், அல்லது நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்று சுமத்திராத் தீவின் அக்க முனையை அடையலாம். இதை வலஞ்செய்து மலாக்கா நிரிணை வழியே சுமத்திராவின் மலையூர், சம்பி, பலெம்பாங் போன்ற நகர்களை அடையலாம். இன்னும் கீழேபோனால் சாவகத்திலும் அடையலாம். [மலாக்கா நீரிணை வழியை தமிழர் முதலில் அறிந்ததுபோல் தெரியவில்லை. அது காழகத்தில் சிலகாலம் இருந்தபின் கண்டுபிடித்த வழி.] முதலில் கிரா ஈற்றுமத்தைப் பார்ப்போம். அங்குள்ள ’தக்கோலம்’ எனும் நகரம் அக்காலத்தில் பெரிதும் முகன்மையானது.

[கூகுள் முகப்பைக் கொண்டு நான் சொல்லும் இடங்களை கூர்ந்து கவனித்து அறியுங்கள். நாம் துழாவிக் கொண்டிருப்பது வரலாற்றிற்கு முந்தைய காலம். வரலாறு என்பது எழுத்து எழுந்ததற்குப் பின் உள்ள காலம். வரலாற்றிற்கு முந்தையது என்பது pre history. தொடக்க வரலாறு என்பது proto history. தமிழி எழுத்து என்பது இற்றை நிலையில் பொ.உ.மு.800 இல் தொடங்கியது. (ஆகப் பழமையான பானைச்சில்லு.கொற்கையில் கிடைத்தது.) அதற்கு முன்னிருந்த சான்றுகள் எவையும் இன்னும் கிட்டவில்லை. சிந்து சமவெளி எழுத்துகளைப் போன்ற பானைக் கீற்றுகள் தமிழகத்திலும் கிட்டியுள்ளன அவற்றின் காலம் மீவுயர்ந்து பார்த்தால் பொ;உ.மு. 2600. நாம் இங்கே பொ.உ.மு. 2600க்கும் முந்தைய நிலையைத் தேடுகிறோம். நெல் இதற்கு முன் இங்கிருந்ததா?]. 

பழந்தமிழக மேற்குக் கரையில் இருந்து புறப்படுங் கலங்களுக்கு செங்கடற் கரை பெருனிக்கெ (Bernike) என்பது எவ்வளவு முகன்மையோ, அதேயளவு முகன்மையானது இத் தக்கோலம். பெருனிக்கே பெயரைக் குறித்த கிரேக்க ஆசிரியர் தாலமி, தக்கோலத் துறை பற்றியும் தம் பூகோளநூலில் சொல்லி யிருப்பார். சயாமியமொழியில் தக்கோலத்தைத் தக்குவா பா என்பார். தமிழர் தொடர்ந்து தக்கோல நகரக்குப் போய்வந்து கொண்டிருந்தார். பொ.உ 800/900 அளவிலிருந்த பல்லவர்காலத் தமிழடையாளங்களும், அவனிநாரணனான 3 ஆம் நந்திவருமன் பெயரால் பெருமாள் கோயில்/சிலைகள், குளம், கல்வெட்டுகளும் இங்கு தொல்லாய்வில் கிட்டின. குறைத்துநடந்த இவ்வாய்வுகளைக் காண்கையில், அவ்வூர் வெகுகாலத்திற்கு முன்பேயே ஒருவேளை உருவாகி இருக்கலாமென்று தோன்றுகிறது.

பல்வேறு தமிழ்வணிகக் கூட்டத்தார் இங்கு வந்து போயுள்ளார். தவிர, பொ.உ. 3, 4 ஆம் நூற்றாண்டின், ”பெரும்பத்தன் கல்” [பட்டன்>பத்தன்= தங்கம், வெள்ளி ஆசாரி”] எனும் தமிழி வாசகத்தோடு, (பொன்தேய்த்து) மாற்றுரைக்குங் கல்லும், பல்வேறு மணிகளும் அருகிலுள்ள குவான்லுக் பட்டில் (Khuan Luk Pat) கிட்டின. முதன்முதலாய்த் தமிழர் எப்போது தக்கோலம் போனார்? தெரியாது. தாய்லந்தின் தொடைபோல் கீழிறங்கும் இப்பகுதியை ”கலங்கா வல்வினை இலங்காசோகம்” என இராசேந்திரன் மெய்கீர்த்தி சொல்லும். யாரோ ஒருவர் இலங்காசோகத்தை இலங்கா அசோகமெனப் பிழைபடப் பிரிக்க, அதுவே எல்லாவிடத்தும் பரவி. அசோகரோடு அதையொட்டி விதவிதமாய்க் கதைத்து அடையாளங் காணமுடியாது செய்தார். நமக்குத்தான் வடவருக்குத் தாசர் ஆகும் மனப்பாங்கு அதிகமாயிற்றே? (Interpretation through Sanskrit has diverted many research in S E Asia.) .தமிழ்வழி அறிந்தால் இலங்காசோகத்தின் சொற்பிறப்பு சட்டென விளங்கும்.

இல்தல்>ஈல்தல்>ஈழ்தல் வினை தமிழில் பிரித்தலை உணர்த்தும் முகனை நிலத்திலிருந்து ஈழ்ந்தது ஈழம். இல்தலை இலங்குதலென்றுஞ் சொல்வர். அதற்கும் பிரித்தல் பொருளுண்டு. இலங்கையும் ஈழம் போலவே தமிழ்ச் சொல் தான். [அது சிங்களமில்லை. இந்தையிரோப்பியனில் isle/ஈல், island/ஈலண்ட் என்று பொதுப்படச் சொல்கிறோமே அதுகூட ஈழம் என்ற விதப்புப் பெயரின் பொதுமையாக்கல் ஆகலாம்.] இலங்குதலின் எதிர்ச்சொல் இலங்காதிருத்தல். சுள்>(சொள்)>சொள்கு>சொகு>சோகு>சோகம் என்பது திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351] திகுதிகுவெனத் திரண்டதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச்சொல் பிறந்தது. இலங்காசோகம்= பிரியாத்தொடை. இற்றை வடமலேசியாவின் இப்பழம்பெயர். எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை தொடை நீண்டுகிடக்கிறது. பொ.உ.2 ஆம் நூற்றாண்டில் காழக(கடார) அரசு இலங்காசோகத்தில் தொடங்கியிருக்கலாம் என்பார். இதுவே தென்கிழக்காசியாவின் முதலரசுத் தொடக்கமாம்.

தக்கோலத் துறையிற் கீழிறங்கி நிலம்வழி கிழக்கே 290 கி.மீ பயணித்தால், பசிபிக் பக்கமுள்ள தாம்பரலிங்கம் வரும் [இராசேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் வரும் மா (பெரிய) தாமலிங்கம் இதுவே.]  இதன் முகன்மையும் பெரிதே. இதன் இற்றைச் சயாம்பெயர் நகோன் சி தம்மராட் 8.43 N 99.56 E. ஒருகாலத்தில் இது காழகஅரசைச் சேர்ந்தது. (காழகஅரசு பின்னாளில் சுமத்ராவின் பலெம்பாங்ஙைத் தலைநகராய்க் கொண்ட சிரீவிசயத்தின் சிற்றரசானது.) தாம்பரலிங்கத்தில் சிரீவிசய அரசன் கட்டிய புத்தர் கோயிலும், அதுசேர்ந்த தமிழ்க் கல்வெட்டும் கிட்டியது. இத்துறைமுகம் சிலகாலம் கம்போடியர் கட்டுப்பாட்டில் இருந்தது. தாமலிங்கத்திலிருந்து பசிபிக்கில் நகர்ந்தால், எளிதாய்க் கம்போடியா போகலாம். (மலாக்கா நீரிணைவழி போகவேண்டியதில்லை.) கம்போடியா பற்றிக் கீழே பார்ப்போம்.

கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மா தாம லிங்கமும்

என்று இருவேறு இலங்காசோக நகர்களை இராசேந்திர சோழன் மெய்கீர்த்தி பேசும். தக்கோலத்தின் தெற்கே, இக்கால வுக்கெட்டுச் (Phuket) சுற்றுலாத் தீவும் (இது இன்று பெயர்பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க தக்கோலம் பெயர் பெற வில்லை.). அதன்கிழக்கே கிரா ஈற்றுமக் கிராபிப் (Grabi) பகுதியும் தெரியும். அதன் தெற்கே இலங்காவியை (6.37N 99.78E) அடையலாம். இதன் நேர்கிழக்கில் பசுபிக்கடற் பக்கம், ”பட்டினம்” என்ற ஊருமுண்டு. (மலாயில் பட்டனி. இதன்பொருள் துறைமுகம். அதேபொழுது, வரலாற்றாய்வர் சொற்பிறப்பு அறியாது ”சங்கதம், அது, இது” எனக் குழம்புவதுமுண்டு. தென்கிழக்காசியா எங்கணும் இப்படிநடப்பது மிகச் சாத்தாரம். தமிழ்வழி செல்லவேண்டிய பாதையைச் சங்கதக் கல் தடைப்படுத்தும் தமிழ்வழி பார்க்காவிடின் பல இடங்களில் தடுமாறுவோம். இவ்வாறு சங்கதம் தமிழை நிறையவே படுத்தியுள்ளது. இலங்காசோகமும், மலேசியாவின் பெருலீசு, கெடா, பினாங்கு மாநிலங்கள் சேர்ந்ததே அற்றைக் காழகம். காழகநிலமே தமிழர் முதலிற்போன நிலமுமாகும்.

காழகத்திற்குச் சுங்கைப்பட்டென்றும் பெயருண்டு. (Sungai Batu ஆற்றுப்பட்டு. நம்மூர் செங்கழுநீர்ப்பட்டு, நீர்பெயற்று போல் இதைப் புரிந்து கொள்ளுங்கள்.) பட்டு, தமிழில் குடியிருப்பைக் குறிக்கும். சுங்கை= ஆறு., பெருநை, ஓடை. அந்தக் காலச் சுங்கைப் பட்டினம் இன்று சுங்கைப்பட்டாணி என்று பெயர் திரிந்து தமிழூற்றை மறைத்து நிற்கும். இலங்காவிக்கும் தெற்கில் மலேசிய மேலைக்கடல் துறையாக இற்றைப் பினாங்கு உள்ளது. .சரி, தமிழர் தக்கோலம் போன காரணமென்ன? வெண்கலத்திற்குத் தேவையான தகரம் முதலில் தக்கோலத்தில் கிட்டியிருக்கலாம்.

பர்மா தொடங்கி, தாய்லந்து/ மலேசியத் தீவக்குறை வழி, இந்தோனீசியத் தகரத் தீவுகள் வரை வடக்கு-தெற்கில் 2800 கி.மீ நீளம் 400 கி.மீ அகலம் தென்கிழக்காசியத் தகர வளைபட்டை (Tin Belt) உள்ளதால், தக்கோல வடக்கிலும் தெற்கிலும் தகரச் சுரங்கங்கள் உருவாகின. இற்றையுலகின் 54% தகரத்தேவையை (9.9 நுல்லியன் தொன்கள் million tonnes) இவ்வளைப்பட்டை நிறைவுசெய்கிறது. அவ்வளவாய்க் காடும் மலையுமின்றி, சிறுசிறு குன்றுகளும், எளிதில் கனிமஞ் சேகரிக்கும் நிலப்பாங்கும் கொண்டதால் தகரக் கனிமம் எளிதிலிங்கு வாரப்பட்டது. இதனாலேயே தகரமென இவ்வூர்க்குப் பெயரிட்டாரோ, என்னவோ? பேச்சில் ரகரம் லகரமாவது சிலமொழிகளின் பழக்கம். தகரம்>தக்கலம்>தக்கொலம்>தக்கோலம் என்பது இயல்பான திரிவு. சயாமிய மொழியில் இன்றும் ”தக்குவா” என்ற சொல் தகரத்தைக் குறிக்கும். இற்றைப் பெயரான ”தக்குவா பா” அதன் வழி உருவானதே.

செம்போடு தகரஞ்சேர்த்துக் கடின வெண்கலமாக்கி, கூர்ங்கருவி, படைக்கலன் செய்யப் பயன்படுத்தினார் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் நடந்த வெண்கலக் காலப் (Bronze Age) பயன்பாடே மென்மேலும் தகரச் சுரங்கங்களைக் கண்டுபிடிக்க ஏதுவானது. தகரத்தின் முதற்கிடைப்பு பொ.உ.மு. 3500 இல் துருக்கியிலும், பின் இங்கிலாந்திலும் இருந்தது. எகிப்து, சுமெரியா, பாபிலோனிய, அக்கேடிய நாடுகளில் வெண்கல வாணிகம் செய்தோர், தகரச்சுரங்கங்கள் இருந்த இடங்களின் அடையாளங்களை, குறிப்பாக இங்கிலாந்தின் இருப்பை, மூடி மறைத்தார். ஏறத்தாழ பொ.உ.மு. 310 இல் தான் இம்மறைப்பு கிரேக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் தகரச்சுரங்கங்களைத் தம்பக்கம் கைக்கொள்ளவே உரோமானியர் இங்கிலாந்தை அடிமைகொண்டார்.

[தகரத்தை ஆங்கிலத்தில் [tin Old English tin, from Proto-Germanic *tinom (source also of Middle Dutch and Dutch tin, Old High German zin, German Zinn, Old Norse tin), of unknown origin, not found outside Germanic. Other Indo-European languages often have separate words for "tin" as a raw metal and "tin plate;" such as French étain, fer-blanc. Pliny refers to tin as plumbum album "white lead," and for centuries it was regarded as a form of silver debased by lead; hence its figurative use for "mean, petty, worthless."] என்றும், stannum [stannic (adj.) "containing tin," 1790, from Late Latin stannum "tin" (earlier "alloy of silver and lead"), a scribal alteration of Latin stagnum, probably from a Celtic source (compare Irish stan "tin," Cornish and Breton sten, Welsh ystaen). The Latin word is the source of Italian stagno, French étain, Spanish estaño "tin." The chemical symbol Sn is from Late Latin stannum] என்றும் சொல்வர்.] இதுபோகத் தகரம் சீனத்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் பயன்பட்டதற்குச் சான்றுண்டு. பொ.உ.மு. 2300-2000 அளவில் வடகிழக்குத் தாய்லந்தின் கோரட் சமவெளியில் வெண்கலஞ் செய்ததற்கும், பொ.உ.மு.1600 இல் வியத்நாமில் செய்ததற்கும் சான்றுண்டு. இதனூடேதான் தகரம் தமிழர்க்குத் தெரியவந்திருக்கவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, June 13, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 5

ஈழம் தவிர்த்தால், தமிழகக் கிழக்குக் கரையிலிருந்து வணிகங்கருதி தென்கிழக்காசியாவிற்கே தமிழர் முதலில் சென்றிருக்கமுடியும். இந்திய உள்நாட்டுவணிகம் உணர்த்தும் பாலைப்பாட்டுகள் மட்டுமின்றி கடல் வாணிகம் உணர்த்தும் நெய்தற்பாட்டுகளும் முகன்மையே. தென்கிழக்கு ஆசியப் பார்வையில் வெளிவரும் கடல்வாணிகச் செய்திகளை நம்மிற் பலரும் கூர்ந்து கவனிக்கமாட்டேம் என்கிறோம். மேலைவாணிகம் ஈர்க்கும் அளவிற்குக் கீழைவாணிகம் நம்மிற் சிலருக்கு முகன்மையாய்த் தெரிய வில்லை. சேரர் தொண்டியின் (இற்றைக் கோழிக்கோடு) கப்பல்கட்டுந் திறன் பொ.உ.1421 வரை சிறந்ததால் சீனக்கடலோடி செங்கே தன் கப்பற் கட்டுமானம் முடிந்தபின் கலங்களைத் தொண்டிக்கனுப்பி அவற்றின் உள்ளக நேர்த்தியை (internal efficacy) ஓராண்டு தங்கிச் சீர்செய்து போனானாம். ஆகக் கால காலமாய்த் தமிழரின் கடலோடுந் திறனுக்குக் கொஞ்சமுங் குறைச்சலில்லை. அது சரி, அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழரெப்படி அறிந்தார்? 

அக்கரைச் சீமையின் இருப்பை அறிந்ததில் நண்பர் ஒரிசா பாலு சொல்லும் ஆமை மிதப்புக் கடல்நீரோட்ட வழியை நானேற்கத் தயங்குவேன். அலை பரந்தெழும் நாட்களில் படகு/கப்பல் ஓட்டுவோர் நுட்பக் கருவிகளின்றி வெறும் பார்வையாலேயே, ஆமைகளைத் தொடர்ந்து செல்லமுடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு. [ஆமைகளைப் பின்பற்றாது நார்வேயின் தோர் ஐயர்தால் (Thor Heyardahl) பல்வேறு பழங் கடற்பயணங்களை மீள நிறுவிக் காட்டினாரே?] வெறுமே நீரோட்டம், உடுக்கள், காற்று- இவற்றைக் கொண்டே ஒரு கடலோடி கடலுக்குள் நகர முடியாதா?- என்ற கேள்வி எனக்குண்டு. தவிரச் சிந்து வெளியில் தமிழ்ப் பெயர்கள் உள்ளதாய்க் கூறும் திரு. பாலகிருட்டிணன் இ.ஆ.ப. வைப் பின்பற்றி, உலகெங்கும் 19000 தமிழ்ப் பெயர்கள் உள்ளனவெனப் பாலு கூறுவதையும் நான் ஏற்கத் தயங்குவேன். திரு. பாலுவின் கடலாய்வு இன்னும் ஆழமாய், அறிவியலோடு பொருந்தி வருமெனில், கட்டாயம் நான் கவனிப்பேன்.

(தமிழ்ப் பெயர் என்று நாம் சொல்பவற்றை அவ்வந் நாட்டுமொழிகளில் எப்படியழைத்தார்? எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டன?- என்று பார்க்க வேண்டாமா? நம் பார்வையே சரியென ஒருபக்கச் சார்பாய் எப்படிச் சொல்ல முடியும்? இப்படித்தான் ஒரு நண்பர் தென் அமெரிக்காவின் தித்திகாக்கா ஏரியை எந்த ஆதாரமும் இன்றித் தித்திக்கும் ஏரி என்றார். ஆப்பிரிக்காவின் தங்கனிக்காவை தேங்கனிக்காடு என்றார். இதுபோன்ற கூற்றுக்கள் தமிழிணையத்தில் இப்போது பெருகிவிட்டன. யாருமே கேள்வி கேட்காததால் இதுபோலும் கூற்றுக்கள் அடுத்தடுத்து எழுகின்றன. என்னைக் கேட்டால் இந்தப் போக்கு சரியில்லை மஞ்சள் கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த் தான் தெரியும். அது உண்மையாகிவிடாது. Let us show some sense of balance.) 

இப்போதைக்கு இன்னோர் இயலுமை மட்டுமே எனக்குத் தென்படுகிறது. 7500 ஆண்டுகள் முன் சுந்தாலாந்துக் கண்டம் முற்றிலுமழிந்து தீவுகளும் தீவக்குறையுமாய் எஞ்சியபோது இரட்டை விலாவரிக் கலங்களில் (double outrigger canoe) அக்கரைச்சீமையார் மேற்கே தமிழகத்திற்கு ஏன் வந்திருக்கக் கூடாது? அதாவது பொது உகத்தில் (coomon era), மலகாசித் தீவிற் சென்று குடியேறும் முன்னரே நம்மூருக்கு அவர் வந்திருக்கலாமே? அப்படிக் குடியேறியவரை நம்மூரில் நாகரெனக் குறித்தாரோ? அவர் குடியேறிய இடங்கள்தாம் சம்பாதிப் பட்டினம் (புகார்), நாகப்பட்டினம் போன்றவையோ? நாகர் தீவுகளிலிருந்து வந்தவர் குடியேறிய நிலம் நம்மூரிலும் நாகநாடு ஆனதோ?

பழஞ் சோழநாட்டில் நாகநாடு, வளநாடு என 2 பகுதிகளுண்டு. (சிலப்பதிகார வாழ்த்துப் பாடலைக் கூர்ந்து படியுங்கள். ”நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அது தன்னில்” என்பது பாதல உலகமா? எத்தனை நாள் உரையாசிரியர் கூற்றிற்குச் செவி சாய்ப்பீர்?) நாக நாட்டிற்குப் புகார் தலைநகர், வளநாட்டிற்கு உறையூர் தலைநகர். இருவேறு சோழரும் பங்காளிகள் ஆகவும் இருந்தார். முரண்பட்டும் இருந்தார். அவர் இடையே ஒற்றுமைக் குறைவு. நாகர் எழுதிய பாடல்களெனச் சங்க இலக்கியத்தில் பலவுமுண்டு. அவரை நாகரெனத் தனியே அழைத்ததின் பொருள் என்ன? எல்லோரும் போல் அவரும் தமிழரெனில் அவருக்கேன் தனிப்பெயர்? ஒருவேளை நாகர் தமிழர்க்கு நெருங்கி வந்தவரும் அதேபோது இன்னொருவகை வேறுபட்டவரும் ஆனவரோ? சிந்தனை குறுகுறுக்கிறது. இப்போதைக்கு நமக்கேதுந் தெரியவில்லை. ஆயினும் இயலுமைகளைப் பேசாதிருக்க முடியவில்லை. நாகப்பட்டினம், புகார், காரைக்கால் போன்ற இடங்களில் ஈனியலாய்வு செய்யலாம்.

அக்கரைச் சீமை போகத் தமிழர்க்கு வாகானது 10 பாகையில் அமையும் கிடைநீரோட்டமாகும். இது குட்டியந்துவன் தீவிற்கும், (9.17 N 92.41 E) பேரந்துவன் தீவிற்கும் (11.62 N 92.73 E. அந்தமான். தமிழ்ப்பெயரை அடையாளங் காணாது நாம்நிற்பதால் ஹண்டுமான், ஹனுமானென மாற்றார் ஏதேதோ சொல்கிறார். நாமும் மயங்கி நின்றுவிடுகிறோம்.) இடையே செல்லும் பாதையாகும். நக்கவரம் தீவு (9.16 N 92.76 E), குட்டியந்துவன் தீவிற்கும் தெற்கிலுள்ளது.

அக்காலத் துறைமுகங்களான கடல்மல்லை 12.63 N 80.19 E, புதுக்கை 11.90 N 79.82 E, புகார் 11.15 N 79.84 E; நாகப்பட்டினம் 10.77 N 79.84 E கோடிக்கரை 10.28 N 79.28 E; மருங்கூர்ப் பட்டினம் 9.84 N 79.08 E, அழகன்குளம் 9.36 N 78.97 E ஆகிய வற்றில் புறப்பட்டால் இலங்கையைச் சுற்றவேண்டாம். மாறாகக் கொற்கை 8.63 N 78.86 E, முசிறி 10.15 N 76.20 E, சேரர் தொண்டி (இற்றைக் கோழிக்கோடு) 11.26 N 75.78 E என்று புறப்பட்டால் இலங்கையைச் சுற்றித் திரிகோணமலை 8.59 N 81.28 E வந்து 10 பாகை நீரோட்டத்தைப் பிடிக்கவேண்டும். (கடல் நீரோட்டத்தை உதவியாய்க் கொள்ள, தமிழகக் கிழக்குக் கடற்கரையிலிருந்து புறப்பட்ட கலங்கள் மணிபல்லவம், திரிகோணமலை போய்ச் செல்வது இயல்பே.கொற்கை வழித் தொலைவு கூடினும் திரிகோண மலையில் 9.16 N 92.76 E தங்கி உணவு, நீரைச் சேகரித்துச் செல்லலாம்.)

ஆகப் பழந்தமிழகத்தின் எத்துறையிலிருந்து கிழக்கு நோக்கி கடல்வழி புறப்பட்டாலும், அந்துவன் தீவுகள் / நக்கவரத் தீவுகளின் வழி செல்வதைத் தவிர்க்க முடியாது. அதற்குங் கிழக்கில் செல்ல முயன்றால் 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம். நெல்லும் தகரமும் நாடிப் போகையில் கிரா ஈற்றுமம் நமக்கு முகன்மை யானதே. அதை விரிவாகப் பேச உள்ளேன். அதற்கு மாறாய் நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்றால் சுமத்திராத் தீவின் அக்க முனையை (இதையும் அக்கமுனை>அக்கயமுனை>அக்ஷயமுனை என்று சங்கதப் படுத்தி நம்மைப் பலருங் குழப்புவார்) அடையலாம். இன்றைக்கிதை ”பண்டார் அச்சே” என மலாய்மொழியில் அழைப்பார்.

[அக்கரைச்சீமைச் செய்திகளுக்குமுன் ஓர் இடைவிலகல். தமிழிலக்கியத்தில் முதன்முதல் அக்கரைச்சீமை நம் இலக்கியங்களில் குறிக்கப்படுவது மணிமேகலையிற்றான். மணிபல்லவம் வந்த iமணிமேகலை புத்த பீடிகையால் தன் பழம்பிறப்பு உணர்ந்து, மணிமேகலா தெய்வத்தால் 2 மந்திரம் பெற்று, தீவுதிலகையின் அறிவுறுத்தலால் அஃகயப் பாத்திரம் பெற்று, புகாருக்குத் திரும்பி, அறவண அடிகளிடம் ஆபுத்திரன் திறமும் பாத்திரமரபும் அறிந்து, ஆதிரைவழி பிச்சை பெற்று, உலக அறவியில் பசிப்பிணி ஆற்றி, சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கி, உதயகுமாரன் கொலையுற்றதால், சிறைப்பிடிக்கப் பட்டு, பின்னால் அரசனும் அரசியும் உண்மையை அறிந்து, இவளைச் சிறையிலிருந்து விடுவிக்க, ஆபுத்திரன் நாடான சாவகத்திற்கு ஏகுவாள்.]

இற்றை இந்தொனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியத்நாம் நாடுகளில் சிற்சில வேறுபாடுகளோடு பரவிக்கிடக்கும் ஒரு கதை, மணிமேகலை 14 ஆம் காதையிலும், பெரும்பாணாற்றுப் படையில், ”திரைதரு மரபின் உரவோன் உம்பல்” என்ற 31 ஆம் அடிக்கு அதன் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கொடுக்கும் விளக்கத்திலும் வரும் (இருவேறு தோற்றமுள்ள) ஒரு கதையும் ஒன்றிற்கொன்று உறவுகாட்டும். தென்கிழக்காசியத் தொடர்பு காட்டும் இக்கதையின் முகன்மை, ஆழத்தை, நம்மிற் பலரும் உணர்ந்தோமில்லை. கீழே மணிமேகலை கதையைச் சொல்கிறேன். நச்சினார்க்கினியர் சொல்வதை இத்தொடரின் வேறிடத்தில் பார்ப்போம். (நாகநாடென்று தமிழகத்திற்கு வெளியே மணிமேகலையில் குறிக்கப்படுவது தென்கிழக்காசியா முழுமையும் குறித்திருக்கலாம். இது சோழரின் நாகநாட்டிலும் வேறுபட்டது. முந்தையதை வெளியக நாகநாடென்றும், பிந்தையதைச் சோழ நாகநாடு என்றுங் குறிப்போம்.).

புகார்ச் சோழனாகிய நெடுமுடிக்கிள்ளி கடற்கரை சார்ந்த புன்னைச் சோலையில் ஒரு வெளியக நாகநாட்டு மங்கையைக் கண்டு காதலித்து 1 திங்களளவும் அவளோடு உறைந்தான். ஒருமாதங் கழிந்த பின் அவனிடஞ் சொல்லாது அவள் அகல, எங்கு ஒளிந்தாள் என அரசன் தேட, அரிய ஆற்றல் உடைய சாரணன் ஒருவன் அங்கு வரக் கண்டு, அவனிடம் அரசன் மங்கை பற்றி உசாவு, ”மங்கையைக் கண்டிலேன் ஆயினும் முற்செய்தி அறிவேன். வெளி நாகநாட்டு அரசனாகிய வளைவணனின் தேவி வாசமயிலையின் மகள் அவள். பெயர் பீலிவளை, அவள் பிறந்தபோது ’பரிதி குலச் செல்வன் ஒருவனைக் கூடி இவள் கருவுற்று வருவாள்’ என நிமித்திகர் சொன்னார். நீ கூறியவள் அவளாகலாம். அவள் வயிற்றுத் தோன்றிய நும்மகனே இனி உன்நாடு வருவான். அவள் வாராள். இன்னுமொரு செய்தி. மணிமேகலா தெய்வத்தின் கடுஞ்சொல்லால் உன்நகரைக் கடல் கொள்ளும். இந்திரசாபம் இருத்தலால் அது தப்பாது. இதை உண்மையெனக் கொண்டு இந்நகரைக் கடல் கொள்ளாதபடி, ஆண்டு தொறும் இந்திரவிழாவை மறவாது செய்து வருக” என்று அச்சாரணன் சொன்னானாம்.

மணிமேகலையின் பாட்டி சித்திராபதி சோழ அரசிக்கு இக் கதையைச் சொல்லி, ”அந்நாள் தொடங்கி நகர மக்கள் நடுங்கிப் போனார். இடைவிடாது இந்திர விழாவும் நடந்து வருகிறது. இப்போது மணிமேகலை சிறையுற்ற செய்தியை அறிந்து மணிமேகலா தெய்வம் சினமுற்று வரலாம்” என்றுஞ் சொல்வாள். அறவண அடிகளின் அறிவுரையால் சோழ அரசன் மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவிக்க, அவள் அங்கிருந்து புறப்பட்டு ஆபுத்திரன்நாடு ஏகி அவனைப்பார்த்து அவனுடைய முற்பிறப்பைச் சொல்லி மணிபல்லவத்திற்குக் கூட்டிவருவாள். [இதுவரை சொன்ன பீலிவளை கதையோடு தென்கிழக்கு ஆசியக் கதை சற்று வேறுபடும். பெரும்பானாற்றுப் படையின் உரையாசிரியரான நச்சர் மாற்றுக்கதை சொல்வார். அத்திரிவை கம்போடியா பற்றிப் பேசும் போது பார்ப்போம்.)

நாம் இங்கு பேசவிழைந்தது அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழர் அறிந்தது பற்றியதாகும். மணிமேகலையையும், பெரும்பாணாற்றுப் படைக்கான நச்சர் உரையையும் பார்க்கும் போது, மணிமேகலை காலத்திற்கு (பொ.உ.400 களில்) முன்னேயே, சங்ககாலத்திலேயே (பொ.உ.மு.550-பொ.உ.250), தமிழர்க்குச் சாவக நாட்டின் இருப்புத் தெரிந்திருக்கிறது என்பதாகும் இதற்குமுன் எப்போது இவ்விருப்புத் தெரிந்தது? - என்பதை ஆத்திரேலியப் பழங்குடிகளின் ஈனியல் ஆய்வு வழி அறியலாம். ஏறத்தாழ 11% ஆத்திரேலியப் பழங்குடியினருக்கு தமிழ்க் கலப்பிருப்பதும், இக்கலப்பு பொ.உமு. 2350 இல் ஏற்பட்டிருக்கலாம் என்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டது. எனவே தென்கிழக்கு ஆசியாவைத் தமிழர் ஓரளவாவது அறிந்தது இற்றைக்கு 4350 ஆண்டுகள் முன்னராகும்..அது மிக நீண்ட காலம் தான். தாய்லந்து/ மலேசியாவின் இலங்காசோகம், தக்கோலம், தாம்பலிங்கம் ஆகியவற்றைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, June 12, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 4

சரி செம்பின் ஊற்றையும் அது வரும் வழியையும் பார்த்தோம். வெண்கலஞ் செய்ய ஈயம் வேண்டுமே? ஈயத்தில் காரீயம், வெள்ளீயமென 2 வகை சொல்வார். காரீயம் அதிக அணுவெடையும் (207.2), குறை உருகு வெம்மையுங் (melting temperature 327.5 பாகை செல்சியசு) கொண்டது. வெள்ளீயமோ குறை அணுவெடையும் (118.71) இன்னுங் குறை உருகு வெம்மையும் (231.9 பா.செ.) கொண்டது. வேறிரு மாழைகளின் உருகு வெம்மையை (செம்பு 1085 பா.செ., இரும்பு 1538 பா.செ) இவற்றோடு ஒப்பிட்டால் நான் சொல்வது புரியும். 2 ஈயங்களும் குறைவெம்மையில் எளிதிலுருகி நீர்மமாகிவிடக் கூடிய மாழைகளே. இதுபோல் இயலும் மாழைகள் மிக அரிது. [அறை வெம்மையில் நீர்மமாய் இருப்பது இதள்.(Mercury) மட்டுமே]

நீர்மங்கள் (நீர் போன்றது நீர்மம்) தமக்கென வடிவங்கொள்ளா. ஓர் ஏனத்தில் ஊற்றுகையில், ஏனவுருக் கொள்ளும். இன்னொரு ஏனத்திற்கு மாற்றின் இவை இழியும் (= சாரையாக வடியும்) இதனால், ஆங்கில liquid ஓடு இணை காட்டி நீர்மத்தை இழிதையென்றுஞ் சொல்லலாம். (வழக்கம்போல்  ஆங்கிலச் சொல்லிற்கு நான் இணைகாட்டுவதை பலரும் மறுப்பார். இந்தை யிரோப்பியத்தோடு தமிழை இணைக்கலாமா? ”என்னவொரு அவச்சாரம்?” என்றுஞ் சிலர் எண்ணுவர். மற்றுஞ் சிலரோ வில்லியம் சோன்சு, மாக்சு முல்லர், எல்லிசு, கால்டுவெல் சொன்னவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு அப்புறம் பாவாணர்வழி ஒப்புமைகளைப் புறந்தள்ளி தமிழியம், இந்தையிரோப்பியனிடை கடன்வாங்கல் தவிர்த்து உறவே இல்லென்பார். எனினும் ஆழ்ந்துநோக்கின் 1000, 2000 சொற்களுக்குமேல் உறவுள்ளன, ஆய்வு செய்யத்தான் ஆளில்லை. என்னைத் திட்டுவதிலும், அவதூறு பேசுவதிலும் நேரஞ்செலவழிப்போர் நான் சொல்வதை உள்வாங்கிக் கொஞ்சமேனும் ஆய்வில் ஈடுபட்டால் நல்லது)

பொதுப்பெயராய் மட்டுமின்றி ”இழியம்” என்பது விதப்புப் பொருளுங் காட்டும். குறை வெம்மையில் உருகி இழியும் 2  மாழைகளையும் இழியம்>ஈயம் என்போம். (வட தமிழகத்தில் வாழைப்பழம்> வாயப்பயம் ஆவதில்லையா? இழியம்>ஈயம் என்றாவதும் இதுபோற் பழக்கத்தால் தான். கருப்பீயம் காரீயமாயும், வெளிறிய ஈயம் வெள்ளீயமாயும் ஆனது. காரீயத்தை ஆங்கிலத்தில் இழிதை (Lead) என்பார். சொல்லூற்றுத் தெரியாத வேதிப் பெயராய் plumbum என்பதும் புழங்கும். தொடக்கத்தில் காரீயத்தால் குழாய் செய்ததால் (plumbing), plumbum குழாயைக் குறிக்குமோ என ஐயுறுவார். ”புழல், புழம்பிற்குத்” தமிழில் குழாயென்றே பொருள். தமிழ் அடிப்படை இல்லாது, Lead, plumbum போன்ற சொற்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. (இதைப் போல் சொல்வதால் தான் சிலருக்கு நான் பொல்லாப்பு ஆவேன். அதெப்படி Lead, plumbum- இற்குத் தமிழ்மூலங் காட்டலாம்? பலராலும் இவற்றை நம்ப முடிவதில்லை.) இழியம்>ஈயத்தோடு இன்னொரு சொல்லும் தமிழிலுண்டு. வழிங்கம்> வயிங்கம்>வங்கம். இதுவும் உருகியிழியும் மாழைகளான காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் போன்றவற்றைக் குறிக்கும். இனி வெள்ளீயத்திற்கு வருவோம். இதற்கும் உருகி இழியும் இயல்புண்டு.

வெள்ளீயத்தின் நிறம் என்பது முற்றிலும் வெள்ளையல்ல. வெளிறிய கருமை. தகதகவெனும் ஒளிக்குறிப்பில் தகளம்>தவளம் ஆனது, தகளம்>தகடம்>தகரம் என்பது வேறு வகையில் வெள்ளீயத்திற்கான சொல் வளர்ச்சி. தவிர, வெள்ளீயத்தை மிகவெளிதில் அடித்துத் தட்டித் தகடாக்கலாம். தள்>தட்டு> தட்கு>தக்கு>தகு.. இதனாலும் தகு>தகள்>தகடு>.தகடம்>தகரம் ஆகும். ஆங்கிலத்தில் வரும் stannum, tin போன்றவையும் இவற்றோடு தொடர்பு உடையவை தாம். இன்று நுட்பியல் வளர்ந்துவிட்டது. எல்லா மாழைகளையும் சூடாக்கித் தகடாக்கி விடலாம். தகரக் கனிமம் (cassiterite SnO2 associated with lepidolite bearing pegmatites) சட்டிசுக்கர் தண்டேவாரா மாவட்டத்தில் இன்றுங் கிடைக்கிறது. ஆந்திரக் காக்கிநாடாவிலிருந்து வடக்கே 330 கி.மீ தொலைவில் இச்சுரங்கம் அக்கால அடர்காடுகள், மலைகளுக்கு நடுவில் இருந்தது. யாருக்கேனும் அந்தக் காலத்தில் இதனிருப்புத் தெரிந்ததற்கு இதுவரை சான்றில்லை.

(நம்மூரில் உள்ள தகடூர், தகளம்>தகடம் பயனுற்ற ஊரா? அல்லது கிட்டிய ஊரா? ஒருவேளை பின்னால் இரும்பு கிடைத்துத் தகடாக்கினாரா? தெரியாது) வெண்கலச் சிறப்புற்ற தமிழர்க்கு வெள்ளீயம் எப்படிக் கிடைத்தது? அங்கு தான் தமிழரின் கடற்பயண முகன்மை புரிகிறது. பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தொனீசியா ஆகியவற்றை நம் தமிழர் அக்கரைச்சீமை என்பார். கம்போடியா, சம்பா (வியட்நாம்), பிலிப்பைன்சு கூடத் தமிழர் அறிந்தவையே. மொலுக்காத் தீவுகளின் மணப்பொருள் தேடியும் தமிழர் போனார். பெருத்த ஆமையோட்டுப் பரிசல்களும் கடற்பயண வழியில் தேடப்பட்டன. [https://www.ancient-origins.net/news-history-archaeology/2000-year-old-lost-city-rhapta-may-have-been-found-tanzania-006234] பல்வேறு மணிகள் தேடியும் தமிழர் கடல் தாண்டி நகர்ந்தார்.

கடல் தாண்டுவதில் ஈழஞ் சேர்க்காதது நமக்கு ஏற்கனவே அது தெரிந்தது என்பதாற்றான். ஈல்>ஈழ்>ஈழம் என்பது முகனை நிலத்தில் பிரிந்த நிலம் எனும் ஓர்மையால் ஏற்பட்டது. இற்றைக்கு 18000 ஆண்டு தொடங்கி 2500 ஆண்டு வரை சிச்சிறிதாய் இப்பிரிவு ஏற்பட்டது. பொ.உ.மு. 1000-500 அளவில் கோடிக்கரை, யாழ்ப்பாணம், தலைமன்னார், தனுக்கோடி, ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட கடலடி நிலமும், குமரியின் தெற்கில் 250 கி.மீ. நீள நிலப்பரப்பும் முற்றிலும் அழிந்தன. (நான் குமரிக்கண்டத்தை நம்புவதில்லை. ஆனால் தமிழ்நாட்டோடு ஒட்டிய குமரிநிலம் அழிந்ததை நம்புகிறேன்.) இவ்வழிவிற்கு அப்புறம் சோழரிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் இற்றைப் புதுக்கோட்டை மாவட்டம்), சேரரிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் கேரளத் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டம்) பாண்டியர் பறித்துக்கொண்டார். (இலக்கியத்தில் இது பதிவாகியது.)

65000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நெய்தல் மாந்தர் (costal people) தமிழகம் வந்தபோது ஈழம் தமிழகத்தோடு சேர்ந்திருந்தது. இருப்பினும் அவ்வெச்சங்கள் தமிழகத்தில் கிட்டவில்லை. ஓர் ஈழக் குகையில் 30000-40000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்று கிட்டியது. விழுப்புரம் மாவட்டத்தில் 10000.15000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குழந்தையின் மண்டையோடு கிளர்ப் படிவமாய்க் (glazed fossil) கிடைத்தது. (நம்மில் பலரும் இலக்கம் ஆண்டுகளுக்கு முந்தைய அத்திரம்பாக்க ஓமோ எரக்டசு மாந்தரோடு நெய்தல் மாந்தரைக் குழப்பிக் கொள்கிறோம். அத்திரம்பாக்க ஆய்வு இன்றும் பலரை ஓர்ந்துபார்க்க வைக்கிறது தான். ஆனால், நம்மை எந்தப் பாதைக்கு அது இட்டுச்செல்லும்? தெரியாது.) மணிமேகலையின் படி ஈழத்திற்கு இரத்தினத் தீவெனும் பெயருமுண்டு. ஈழமென்ற சொல் கூட ஈலன்>ஐலண்ட் (island) ஈல் (isle) எனும் இந்தையிரோப்பியச் சொற்களைத் தூண்டியிருக்கலாம். ஆங்கிலச் சொற்பிறப்பியலில் island, isle ஆகியவற்றின் ஊற்றுவாய் தமக்குத் தெரியாது என்பார். ஈழமெனும் குறிப்பிட்ட விதுமைச் சொல் உலகெங்கும் தீவுகளைக் குறிக்கப் பொதுமைப்பட்டிருக்கலாம் என்பது என் முன்னீடு..

மணிபல்லவம் என்றபெயர் பெரும்பாலும் மணிமேகலா தெய்வத்திற்கும் புத்த நெறிக்கும் தொடர்புடையது ஆகலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிய நாகனார் (>நாயினார்>நயினார்) தீவே மணிபல்லவம் என்று சிலர் சொல்வர். ஒரு வேளை முழு ஈழத்தீவிற்கும் இது இன்னொரு பெயரோ எனவும் தோன்றுகிறது. இதையெப்படி நிறுவுவது? இச்சொல் மணி, பல்லவமெனும் இருசொற் புணர்ச்சியால் ஆனது. ’மணிபல்லவத்தைக்’ கவனித்தால்,’ப’ வலி மிகாதிருப்பது புலப்படும். “புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்” என்றநூலில் மலேசிய அறிஞர் செ. சீனிநைனா முகம்மது (இலக்கணந் தவறாது தமிழ் ஆவணம் எழுத விழைவோர் இந்நூலைப் படியுங்கள். அடையாளம் வெளியீடு. 1205/2 கருப்பூர்சாலை, புத்தநத்தம் 621310, தொலைபேசி 04332 273444) ஒரு விதி சொல்வார். நிலைமொழி  இ,ஐ,வு,ய்,ர்,ழ்,ம்- என முடியும் பெயர்ச்சொல் ஆகவும், வருமொழி ககர, சகர, தகர, பகரத்தில் தொடங்கும் பெயர்ச் சொல் ஆகவும் இருந்தால், வலி மிகாதென்பார். இதன் காட்டுகளாய் காய்கறி, பசி பட்டினி, ஈவுசோவு, இலைதழை, கூழ்கஞ்சி, குலங்கோத்திரம் போன்றவற்றை சொல்வார். இக்கூட்டுச் சொற்களின் இருவேறு பகுதிகள் ஒரே பொருளையும் இருவேறு தோற்றங்களையுங் காட்டுவதைக் கவனிக்கலாம்.

கறி =  உணவிற்காகக் கடிப்பது. கறிக்காகும் காயும், கறிக்காகாத காயும் உலகில் உண்டு. அதேபோல் பசி தானாயும் எழலாம். பட்டினி கிடந்தும் எழலாம். பட்டினியாலெழும் பசி விதப்பான சேர்க்கை. சோர்வால் வரும் ஈ(ர்)வு (=பிரிப்பு) ஈவுசோ(ர்)வு என்பது இன்னொரு இரட்டைக் கிளவி. தாழ்ந்து கிடப்பது இலைதழை. உயர் இலையிலிருந்து வேறுபட்டது. இலைதழையும் இரட்டைக் கிளவியே. கூழாகிய கஞ்சி, கூழல்லாக் கஞ்சியினின்று வேறுபட்டது. குலம்= பெருங்குழுப்பெயர். கூட்டம்>கோத்திரம் என்பது தந்தைவழி உறவுகொண்டது இவ்விளக்கப் பார்வையில் மணிபல்லவத்தைப் புரிந்து கொள்ளலாம் மணி என்பது பொதுமைப்பொருள் கொண்டது. பல்லவம், அம்மணிக்கு விதப்புத் தோற்றம் கொடுக்கிறது. முதலில் மணியைப் பார்ப்போம்.

மணிக்கு jewel, bead என 2 பொருள் சொல்வர். சிவநெறி, புத்தநெறியில் அக்க மணிக்குப் பெருஞ்சிறப்புண்டு. "ஓம் நமச்சிவாய", "ஓம் மணிபத்மே ஹூம்" போன்ற மந்திரங்களை 108 முறை விடாது சொல்லும்போது எண்ணிக்கைக்கு ஆக சமய நெறியாளர் அக்கமணி மாலை பயன்படுத்துவர். அக்கமணி, கடவுள் மணி, கண்டம்/கண்டி/கண்டிகை, கள்மணி, முள்மணி, உலங்காரை போன்றன அக்கமணியின் மறுபெயர்கள். சங்கதத்திலிதை உருத்திர அக்கம்>ருத்ராக்கம்> ருத்ராக்ஷம் என்பார். அக்கமணி, ஒரு குறிப்பிட்ட காய்/பழத்தின் உள்ளிருக்கும் செந்நிறக்கொட்டை. ஆனால், பழத்தின் தோலோ கருநீலம் ஆயிருக்கும். (சிவனின் தொண்டை நீலமாவது புரிகிறதா?) அதனால் கருநீலப்பழக் கொட்டை (blueberry beads) என்றும் ஆங்கிலத்தில் பெயருண்டு. கருநீலத்தைக் குறிக்கும் மணிப்பெயர் தமிழில் மட்டுமே உண்டு. தோலைத் தவிர்த்து கொட்டையையே முதலில் அறிந்த வடமேற்கு ஆரியர் அதை ருத்ர அக்ஷம் என்றே சொல்வார்.

இப்பழக் கொட்டைகளில் பல முட்களும், பொதுவாய் 5 முகங்களுமுண்டு. சிலவிதக் கொட்டைகளுக்கு 5 இலுங் குறைந்தும், சிலவற்றிற்கு 5 ற்கு மேல் 21 வரைக்குங் முகங்களுண்டு..கொட்டைகளைக் காயவைத்து அவற்றூடே துளையிட்டு மாலையாக்குவதும் தானஞ் (>த்யானம்) செய்கையில், எண்ணிக்கைக்காக, அக்கமாலையை உதவிக்குக் கொள்வதும் சிவ, புத்த சமய நெறியாரின் வழக்கம். அக்க மணி, தானத்திற்கு (>த்யானத்திற்கு) ஓர் தளவாடம் (tool). விதப்பான இக்கொட்டை தரும் மரத்தை ஆங்கிலத்தில் Elaeocarpus ganitrus roxb என்பர். இது 60-80 அடிவரை கூட வளரும். இமயமலை அடிச்சாரலிலிருந்து கங்கைச்சமவெளியிலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலும், நேபாளம், தென்கிழக்காசியாவிலும், பாப்புவா நியுகினியிலும், ஆத்திரேலியாவிலும், குவாம், ஹவாய், சீனம், தைவான், போன்ற விடங்களிலும் இது வளர்கிறது. இந்தொனீசியா, மலேசியா, ஈழத்திலும் (கண்டி, நுவெரெலியா) கூட இதுவுண்டு. மணிமேகலை காலத்தில் இம்மரம் ஈழத்தில் அதிகமாய் இருந்ததோ, என்னவோ?

உல்>ஒல்>அல் என்பது கூர்மையைக்குறிக்கும் வேர்ச்சொல். அல்லுதல்= கூர்த்தல். குற்றல். முடிதல். காலங்காட்டும் இடைநிலைகள் சேர்த்து 3 தொழிற்பெயர்களை இதன் வழி அடையாளங் காட்டலாம். அல்ந்தல்> அன்றல்*>அந்தல்= முடிதல்; அல்கல்= கூர்தல், குற்றல், குறைதல், இது அல்கல்>அஃகல்>அக்கல் என்றுமாகும். அல்வல் = கூர்வுதல் குற்றல், குறைதல் இது அல்வல்>அவ்வல்>அவல் என்றும் ஆகும். அஃகம்>அக்கம் என்பது மேலே சொன்ன கொட்டைக்கு இன்னொரு பெயர். அவமும் அதே பொருளே. அக்கம் புரிந்தால் பல்லவப் பெயரும் புரிந்து போகும். பல்லவம், மரத்திற்கும், மரம் வளரிடத்திற்கும் ஆன பெயர். மரச்சிறப்பால் நாகனார் தீவிற்கும் ஈழத்திற்குமே மணிபல்லவப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 3

செம்பு 7 பங்கும் வெள்ளீயம் (=தகரம்) 1 பங்கும் கொண்ட வெண்கலத்தில் தான் தமிழர் தென்கிழக்காசியா போன கதையின் சுவையாரம் தொடங்குகிறது {Bronze is an alloy consisting primarily of  copper, commonly with about 12-12.5% tin and often with the addition of other metals [such as aluminium (அலுமினியம்), manganese (காந்தயம்), nickel (நவையம்) or zinc (துத்தநாகம்)] and sometimes non-metals or metalloids [such as arsenic (நஞ்சகம்), phosphorus (ஒளியகம்) or silicon (மண்ணகம்)]}. [1968/69 இல் கோவை நுட்பியற் கல்லூரியின் முத்தமிழ் மன்றம் வெளியிட்ட ”தொழில் நுட்பம்” மலரில், “தனிமங்களின் முறைப்பட்டியல்” என்ற கட்டுரையை வெளியிட்டேன். அதை இற்றைப் படுத்தி என் வலைப்பக்கத்தில் வெளியிட முயல்கிறேன். அதைக் கொண்டு அங்கமில் (inorganic) வேதியல் முழுதையும் நல்ல தமிழில் பெரும்பாலும் சொல்லிவிடலாம். இப்போதைக்குப் பொறுத்து இருங்கள்.] இப்பகுதியில் தொடர்புள்ள மாழைச் செய்திகளைப் பார்ப்போம்.

அதுவென்னவோ, தெரியவில்லை. ”சிந்து நாகரிகம் தமிழரது” என்று சொல்வதிலும் கேட்பதிலும் புல்லரித்துப் போகும் நம்மிற் பலரும் பொ.உ.மு. 2500-1750 ஐச் சேர்ந்த ஆதிச்சநல்லூரைக் கொஞ்சமும் கண்டு கொள்வதில்லை. (2004 இற்கு அப்புறம் தொல்லாய்வு அங்கு நடைபெறவேயில்லை. நம்மூர்ப் போராளிகளுக்கும் வேறு வேலை வந்துவிட்டது. அரசியல் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. ”சிந்து சமவெளி” என்பதிலே நம்மூரார் குளிர்ந்து போகிறார். வேறு வழியின்றிச் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கிட்டுக் கேட்கவேண்டி உள்ளது. வெறும் பேச்சில் முழம்போட்டே நம் பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பரப்புரையும் நடக்கிறது. சிந்து மாந்தர் திராவிட இனமென ஈனியல் சொல்கிறதாம். எனவே தமிழர் வடமேற்கிருந்தே வந்தாராம். இது சொல்லி நம்மை 3000 BC ஈரான் எலாமைட்டிற்குக் கொண்டு செல்வார். கொஞ்சம் பொறுங்கள் ஐயா! ஆதிச்சநல்லூரில் எவ்வளவு பரப்பு அகழாய்ந்தீர்? 0.1% தேறுமா? அதுவே, தமிழரின் பழமை, 3750 ஆண்டுகள் இருக்குமெனக் காட்டுகிறதே?

அப்புறமென்ன 3000 BC ஈரான்? ஆதிச்சநல்லூர்க் காலவரங்கைத் (range of time) துல்லியமாய் நிறுவ, இன்னும் எவ்வளவு தொல்லாய்வு வேண்டும்? செய்தோமோ? [ஆதிச்சநல்லூர் தாழிகள் மூன்று அடுக்கில் உள்ளது என்பார். முன் ஆய்ந்த பிரெஞ்சுக்காரர் மூன்றாம் அடுக்கின் காலத்தை பொ.உ.மு. 2000 என்பார். இப்போது நீதிமன்றத்தில் பொ.உ.மு.905 என இறக்குகிறார். அண்மையில் காலங் கண்ட தாழி மேலா, நடுவா, கீழா? தெரியாது. திரு இராம மூர்த்தியின் அறிக்கைக்குக் காத்து நிற்போம். ”என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது.” என்றுமட்டும் சொல்லத் தோன்றுகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டுமென்பார் வள்ளலார். இப்போதைக்கு வாய்மூடிக் கொள்கிறேன்.) கீழடிக்குக் கொடிபிடிப்போர் ஆதிச்ச நல்லூர்க்கு அறைகூவுக! அதற்குள் தமிழன் வந்தேறி எனவுரைக்கப் பலரும் முயல்கிறார். அத்தனை மகிழ்வா? கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவர் வானமேகி வைகுன்றம் போனாராம். சரி வெண்கலத்திற்கு வருவோம்.

ஆதிச்சநல்லூரிலிருந்து கிழக்கே ஆற்றுவழி 25 கி.மீ ஏகின், கொற்கை வந்து விடும். தொல்லாய்வின்படி இதுவே தமிழகத்தின் பழந்துறைமுகம். (அற்றைக் கடல் இற்றைவிட 8 கி.மீ உள்தள்ளியது. ஈனியல் சொல்வதுபோல் பொ.உ.மு. 2350 இல் தமிழர் கடல்வழியே ஆத்திரேலியா போனது மெய்யெனில், கொற்கை/ ஆதிச்சநல்லூரின் பழமை பொ.உ.மு.1750 இற்கும்முன் சிந்துவெளி அளவிற்குப் போவதும் உறுதியே. என் புரிதலில் 2 நாகரிகங்களும் பெரும்பாலும் சமகாலத்தவை. சிந்துநாகரிகம் போல் இங்கும் வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. ஆதிச்சநல்லூர் வெண்கலத்தில் 23% வரைக்குங் கூடத் தகரஞ் சேர்த்தாராம். (பொதுவாய் வெண்கலத்துள் 14% க்குள் தான் தகரமிருக்கும். கணக்கதிகாரமோ 20% வரைக்குங் கூடச் சொல்லும்) சிக்கலான இச் சேர்க்கையை எப்படிச் செய்தாரென இற்றை மாழையியலார் வியப்பார். தவிரச் செம்பு 8 பங்கும், தகரம் 1 பங்கும் காரீயம் 4 பங்கும் கலந்த, தளவு> தரவு>தரா (heavy leaded bronze) வெண்கலமும் கூட நம் புழக்கத்தில் இருந்ததாம். காரீயமுஞ் செம்புங் கொண்ட இந்த அட்டிழையை இக்காலத்தில் கவண் மாழை (gun metal), செம் பித்தளை (red brass) என்றழைப்பர்.

இனி. வெண்கலஞ் செய்யச் செம்புவேண்டுமே? தாம்பர பொருநை, தாம்பர அம்பலம், தேரிக்காடுகள் போன்றவை செம்பின் தமிழக இயலுமையை உணர்த்தினும், செம்புக் கனிமம் நெல்லையிற் பேரளவு கிட்டியதற்குச் சான்று இல்லை. (இக்கால விழுப்புரம் மாவட்டத்தில் கொஞ்சம் செம்புக் கனிமம் உண்டு.) ஆதிச்சநல்லூரிற் செம்பு சிறிது பிரிக்கப்பட்டதாயும், அதேபொழுது கணிசமான செம்பு, வெண்கலப் பொருள்கள் கிட்டியதாயும் தொல்லாய்வு சொல்லும். கடலுக்கப்பால் ஈழத்திலும் தாம்பரம், மணிகள் (குறிப்பாய் மரகதம்) கிடைத்ததாம். பழந்தமிழகத்திலிருந்து ஈழம் வேறு பட்டதல்ல. முகன நிலத்தில் இருந்து 3000/4000 ஆண்டுகளுக்கு முன் அது தீவாய்ப் பிரியுமுன், நம்மைத் தொட்டுந் தொடாதும் இருந்தது. இல்>ஈல்> ஈழ்>ஈழம். ஈல்>ஈர், இல்>இலு>இரு>இரள்> இரண்டு; இல்> இலு>இலங்கை போன்ற சொற்கள் நிலம்பிரிந்த செய்தியைக் குறிக்கும். இலங்கை என்றசொல் சிங்களமல்ல. அதுவுந் தமிழே. எல்லாவற்றையும் ”டக்”கென இன்னொரு மொழியாய்ச் சொல்லிச் சொல்லி நாமிழந்தது மிக அதிகம்.

இந்தியாவிற் செம்பு அதிகங் கிட்டியது வடக்கே தான். அதே பொழுது அச் செம்பு அங்கிருந்து நமக்குக் கிட்டாதும் இல்லை. வணிகம் எதற்கு இருந்தது? துணைக் கண்ட வணிகத்திற்கு உதவுவதாய் அக்காலத்தில் உத்தர, தக்கணப் பாதைகள் இருந்தன. பொ.உ.மு. 600-200களில், நந்த-மோரியர், இப் பாதைகளைக் காவந்து செய்தார். (விரிவாக என் “சிலம்பின் காலம்” நூலிற் கண்டு கொள்க!) இப் பாதைகள் எப்போது ஏற்பட்டன என்பது இன்னும் ஆயாத ஒன்று. கோதாவரி ஆற்றங் கரையில் நூற்றுவர் கன்னரின் படித்தானத்திலிருந்து (Paithan closer to Aurangabad, Maharashtra) அசந்தா, எல்லோரா வழி வடக்கே நகர்ந்து, தபதி, நருமதை ஆறுகளைக் கடந்து, மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa அல்லது விதிசா Vidisha) வந்து, நேர் வடக்கே திரும்பி, தொழுனை (= யமுனை) ஆற்றங்கரையின் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி/ சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தி சேருவதையே தக்கணப் பாதை என்பர். தெற்கே தகடூரில் தொடங்கி கருநாடக ஐம்பொழில் (Aihole) வழி படித்தானம் போன பாதை தக்கணப் பாதையின் நீட்சியாகும்.

பழங்காலத் தமிழரை இந்திய வடபகுதிகளோடு இணைத்தது தக்கணப் பாதையும் அதன் நீட்சியுமே. நூற்றுவர் கன்னர் நாணயங்கள் தமிழ், பாகதம் எனும் 2 மொழிப் பயன்பாட்டைக் காட்டின. சங்ககாலப் பாலைப் பாக்கள் சொல்லும் வணிகம் இவ்வழி நடந்தது. இந்தியாவின் பழஞ் செப்புச் சுரங்கங்கள் தக்கணப் பாதையோடு தொடர்புற்றன. இராசத்தானம் கேத்ரியில் இருந்து 660 கி.மீ. தள்ளி உஞ்சை வரத் துணைப் பாதையும் இருந்தது. இதே போல் மத்தியப் பிரதேசம் மலஞ்சுகண்டிலிருந்து தக்கணப் பாதையின் விதிசா (மகதத் துணைத் தலைநகரம். அசோகன் பட்டத்திற்கு வருமுன் இங்கே ஆளுநன்.) வர 420 கி.மீ ஆகும். இது போக சார்க்கண்டு சிங்க்பூமிலும் செம்பு கணிசமாய்க் கிட்டியது. பல்வேறு சாத்துகளின் வழி பெரு வண்டிகளில் செம்புக் கனிமத்தைத் தக்கணப் பாதையால் தெற்கே கொணர்வதில் அன்று எந்தச் சரவலுமில்லை. இது போல் பொ.உ.மு. 2600 களில் சிந்து வெளியிலும் இராசத்தானச் செம்பு (ஓமான் செம்பும்) கிடைத்தது. எனவே செம்பு கிடைப்பில் நாம் சிந்து வெளியாரிடம் வேறுபட்டவர் இல்லை.

[சிந்து வெளியார் என்போர் தமிழர் ஆகலாம். அது முற்றிலும் வேறு ஆய்வு ஆகும். அதை வைத்துச் சிந்து வெளியிலிருந்தே தமிழர், தமிழகம் வந்தார் என்பது ஓர் ஊகம் அவ்வளவு தான். அதற்கான ஆதாரம் இதுவரை வெளி வந்ததைப் படித்தால் ஏற்கும் படியில்லை. ஓய்வுற்ற திரு,. பாலகிருட்டினன், இ.ஆ.ப, வின் முயற்சியால், ஐராவதம் மகாதேவனைப் பின்பற்றி, ”பானைப் பாதை” என்ற வாதமும் இப்போது கிளம்பியுள்ளது. பல்வேறு தமிழரும் இதை அப்படியே நம்புகிறார். இதுவே உண்மையென்றும் சொல்லித் தமிழறிஞர் இடையே இப்போது பரப்புரையும் குழப்பலும் நடக்கிறது. நான் புரிந்துகொண்ட வரை புறம் 201 ஆம் பாடலைக் கொண்டு தமிழர் துவாரகையிலிருந்து தெற்கே வந்தார் என்று சொல்ல முற்படுவது குறைப் புரிதலாகும். அது வேளிரின் நகர்ச்சி பற்றிப் பேசுகிற பாடல். வேளிர் மட்டுமே, தமிழரா, என்ன? வேறு யாருமே இல்லையா? வேளிர் தமிழகத்திற்கு வந்து சேரும் போது மற்ற தமிழர் இங்கு இருந்திருக்கலாமே? இல்லையென்று சொல்ல ஆதாரங்கள் உண்டா?)

ஒருகாலத்தில் இருக்கு வேதத்தின் காலத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார். இப்போது பெரும்பாலும் அது பொ.உ.மு. 1500-1200 என்ற முடிவிற்குப் பலரும் வந்தாகி விட்டது. அப்புறம் ஆரியர் இங்கேயிருந்து தான் இரோப்பா போனார் என்றார். ஆரியர் பெரும்பாலும் இந்தியாவினுள் வந்து குடியேறியவர் என்பது இப்போது, அரியானாவின் Rakhigarhi இல் நடந்த தொல்லாய்வின் வழி பொடிப் பொடி ஆகிவிட்டது. சிந்து நாகரிகம் என்பது திராவிட/தமிழிய நாகரிகம் என்று ஆகிவிட்டது. ஆனால் சிந்துவிலிருந்து தான்.தமிழர் தமிழகம் வந்தாரென்பது ஒரு புதுவிதத் திரிப்பு. இதற்குதவும் வகையாய் ஆதிச்ச நல்லூரில் 2004 இல் கிடைத்த எச்சங்களின் காலத்தைப் பொ.உ.மு.905, 791 என்றது வாய்ப்பாகப் போய்விட்டது. என்னைப் பொறுத்தவரை 2004 ஆம் ஆண்டு ஆய்வு குறைப்பட்ட ஆய்வு. இன்னும் ஒருமுடிவிற்கு வந்துசேர முடியாத நிலையிலேயே நாம் உள்ளோம். அண்மையில் இன்னொரு புதுப்பூதங் கிளம்பியுள்ளது. சிந்தவெளி நாகரிகம் பொ.உ.மு, 9000 ஆண்டுகள் முந்தையதாம்! இதையெப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? தொல்லியலில் நடக்கும் அரசியல்/குழப்பம் முடியவே முடியாது போலிருக்கிறது. “எப்படியாவது தமிழரின் பழமையைக் குறை” என்பதே நோக்கம் போலும்.]

அன்புடன்,
இராம.கி.

Sunday, June 09, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 2

இனிப் Paddyக்கு வருவோம். ”Oryzus Sativa வின் விதப்புகளான Indica, Japanica” ஆகிய இரண்டுமே 8000/9000 ஆண்டுகள் முன் இந்தியாவுள் நுழைந்து கலந்ததாய்ப் பழம்புதலியல் (Paleobotany) சொல்லும். கங்கைக் கரையில் 8000 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்டாரோ என்று கூடச் சிலர் ஐயுறுவார். மேற் சொன்ன படி இராக்கிகார்கில் பொ.உ.மு. 2430-2140 இல் கான்நெல்/ பயிர்நெல் சேர்ந்த Oryzus Sativa Indica நெல்லிருந்ததற்குச் சான்றுண்டு. கங்கைக் கரைக் கட்டுரைகளைப் பற்றி அறிய, Ancient India - New Research ed. Upinder Singh, Nayanjot Lahiri Oxford University Press, 2009 என்ற நூலிலுள்ள Human- Plant Interactions in the Middle Gangetic Plains: An Archeobotaical Perspective (From the Mesolithic upto Third Century BC) by Shibani Bose pp 71-123 என்ற கட்டுரையைப் படியுங்கள். ”இது போன்ற ஓர் அருமையான கட்டுரை, காவிரி, வைகை, தண்பொருநைச் சமவெளி பற்றி வெளி வராதா?” என்றும் ஏங்குகிறேன். கண்டேனில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

தமிழ் கூறும் நல்லுலகில் இதுபோல் புதலியல், தொல்லியல், தமிழியல் சேர்த்து ஆய்வுகள் நடப்பது மிகக் குறைவு. காட்டாகச் சொல்கிறேன். ஆயிரம் ஆண்டுப் பழமை கொண்ட வீராணம் ஏரியில் நாலைந்து ஆழ்துளைப் புரை இட்டு மண்கூறு (solil sample) எடுத்தாலே கடந்த 1000 ஆண்டு வெதணம் (climate), மழை நிலவரம், புதலியற் செய்திகள், பயிரிட்ட வகைகள், வெவ்வேறு நெல் வகைகள் எனப் பல உருப்படியான செய்திகளைக் கண்டுபிடிக்கலாம். அவற்றை நம் இலக்கியங்களோடு பொருத்தியுங் காட்டலாம். அப்போது தான் நம் இலக்கியத்தைப் பிறர் நம்புவர். அதையெலாம் செய்வதற்கு நாமோ, நம் அறிஞரோ, அரசுகளோ, கல்வி நிலையங்களோ என்றும் முயன்றதேயில்லை. நம் போகூழால், நம் பின்புலம் பற்றி நாமென்றும் ஆய்ந்ததில்லை. ஆனால் “எட்டுத் தொகை, பத்துப் பாட்டென” இலக்கியக் குறிப்புக்களை மேடை நிறையப் பேசுவோம். மீள மீளச் சொன்னதையே கூறின், சலிப்பு வராதோ? நம்பகத் தன்மை கூடுமோ? பேச்சொரு பக்கம். ஆய்வு இன்னொரு பக்கம் அல்லவா?. இரண்டும் நமக்கு வேண்டுமே? இக்குறையை வெவ்வேறு அரங்குகளில் நான் சொல்வதாலேயே என்னை ஒதுக்கும் தமிழார்வலரும் தமிழறிஞரும் மிகுதி. நான் “தமில் வால்க” ஆளல்லன்.

நெல் எப்போது தமிழகம் போந்தது? எனக்குத் தெரியாது. நமக்குக் கிட்டிய சான்றுகளின் படி பொ.உ.மு. 490 இல் பயிர்நெல் பொருந்தலில் இருந்தது. இதற்கு முன் குறைந்தது பொ.உ.மு. 2250 இல் நெல் தமிழகத்தில் இருந்திருக்கலாம். (ஆனால் ஊகம் போதுமோ?) கரும்பை நம்மூர்க்குக் கொணர்ந்தது அதியமானின் முன்னோரெனச் சங்கவிலக்கியம் சொல்லும். நன்செய்ப் பயிர்களான நெல்லும் கரும்பும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்ததாகவே இற்றைப் புதலியலுஞ் (Botany) சொல்கிறது. நெல் கரும்பிற்கு முன் வந்திருக்கலாம். அது கங்கை வழியா? கடல் வழியா?- என்பதில் இன்னும் தெளிவில்லை. பொதுவாய்க் கங்கைக்கும் காவிரிக்கும் அக் காலகட்டத்தில் உறவிருந்ததா? தெரியாது. ஆனால் தமிழர் கடற்பயணம் 4230 ஆண்டுகள் முன் நடந்ததற்குச் சான்றுண்டு. ஈனியலின் படி ஆத்திரேலியப் பழங்குடிகளில் 11% பேருக்குத் தமிழரோடு தொடர்புண்டாம். (இது போக ஆத்திரேலியப் பழங் குடிகளுக்கும், நம்மூர்ப் பிரான்மலைக் கள்ளருக்கும் 65000 ஆண்டுத் தொடர்பு உண்டு.) 4500 ஆண்டுகள் முன் தமிழர் கடலிற் பயணித்திருக்கலாமென ஆதிச்சநல்லூர் அகழாய்வும் உணர்த்தும்.

(https://www.eurekalert.org/pub_releases/2013-01/m-gf011413.php?fbclid=IwAR2yBnP69hgoxretM2_1WVMkPtcG0OLKSb4RO1H5p9bfyY5UYqTdkyjl5fU.)
(https://www.bbc.com/news/science-environment-21016700?fbclid=IwAR2l6H5VI-uI1VI9EzKrpP3TcBS6fsAwAqpxl020Nma010oCfqZA2Kmqos)

இன்னொரு வகையில் தென்கிழக்காசியரும் தமிழகம் வந்திருக்கலாம். (வியப்பாகிறதோ?) ஏனெனில் 7500 ஆண்டுகள் முன் சுந்தாலாந்தின் மிச்சப் பகுதி கடலுள் அமிழ்ந்து ஒரு தீவக்குறையும், சில தீவுகளும் மட்டுமே எஞ்சின. கடற்கோளில் அவர் கண்டமிழந்தார்; நாமோ ஆதாரமின்றிக் கண்டம் இழந்ததாய்ச் சொல்லிக் கொள்கிறோம். நாம் பாராட்டும் நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், வெளியில் இருந்து வந்தவையே. (பலா பற்றிச் சொல்ல முடிவதில்லை.) இதுகேட்கும் பலர்க்கும் நான் சொல்வது அதிர்ச்சி ஆகலாம். கடற்பயணவழி நம் பொருள்/சொற்கள் தென்கிழக்காசியா போகலாம் எனில், அவர் சரக்கும் நமக்கு வரலாமே? அதே போது, அரிசிப் பொருளும் சொல்லும் தமிழக வழி மேலையர்க்குப் போயிருக்கலாம். பிற்காலத்தில் நம்மிடமிருந்து ”Paddy” எனும் சொல் மலேசியா/இந்தொனீசியா போயிருக்கலாம் நாமும் கடல் வழி அங்கு போய் வந்தோமே? சரி, மெனக்கிட்டு, தமிழர் ஏன் கடற்பயணம் போனார்? தன்னேர்ச்சியாய் (accidental) தென்கிழக்கு ஆசியாவைக் கண்டபின் அதன் பயன் கருதி வணிகம் நடந்ததோ? அன்றி அக்கரைச் சீமை போகும் வழியை அவரிடமிருந்து நாம் கற்றோமோ? இப்போது ஏதுஞ் சொல்ல முடியவில்லை.

ஒருவேளை தென்கிழக்காசியாவிற்குப் போனது மணிகள்/மாழைகளைக் கருதியோ?- என்று கூட எண்ணிப் பார்க்கலாம். ஏனெனில் பண்டமாற்றிற்கு, பொருளியல் வளர்ச்சிக்கு, இவை முகன்மையானவை. வெண்கலத்திற்குப் பெயர் போன தமிழகத்தில் வெள்ளீயக் (தகரக்) கனிமம் கிடையாது என்பது உங்களுக்குத், தெரியுமோ? ஆனால், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. செம்பை, அதன் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஆலையும் வெண்கலஞ் செய்யும் வார்ப்பாலையுங் கூட தண்பொருநைக்கு (தாம்பிரபருணிக்கு) அருகிருந்தன. இது தவிரக் கடந்த 1500 ஆண்டுகளில், தொடர்ந்து chozha bronze இற்குத் தமிழகம் பெயர் பெற்றது. அது எப்படி? வியப்பாக இல்லையா? சோழியன் குடுமி சும்மா ஆடி விடுமா, என்ன? வெண்கலத்திற்குத் தேவையான வெள்ளீயம், என்பது நெடுங்காலமாய் அக்கரைச் சீமையிலிருந்தே நமக்குக் கிட்டியது. அந்தக் கதையையும் கீழே பார்ப்போம்..

அக்கரைச் சீமை என்பது முதலில் மலேயா, தென்தாய்லாந்தைச் சேர்ந்த அக்காலக் காழகத்தைக் குறிக்கும். (பின்னால் பொருள் விரிந்தது.) கரு மண்ணைக் காழென்று சொல்லாய்வறிஞர் கு.அரசேந்திரன் குறிப்பார். பட்டினப் பாலையில் வரும் ”காழகத்து ஆக்கம்” நினைவுக்கு வருகிறதா? (பெரும்பாலும் அது தகரமாகலாம். நாம் தென்கிழக்காசியா போனதும் அதற்காகவே ஆகலாம். விரிவாகவே கீழே பார்ப்போம்) 

காழகம்>கழாகம்> கடாகமெனத் தமிழ்த்திரிவு தொடங்கும். பின் இது Kataha எனச் சங்கதம் போகும். Kadaram, Kidaram, Kidara என்று மேலுந் திரியும். சங்கத் தமிழ் புரியாக் காலத்தில் ஊற்றுத் தெரியாமல் கடாரத்தைக் கடன்வாங்குவார். Chieh-Cha எனச் சீனத்தின் I-Tsing தன் பயண நூலில் இந்நாடு பற்றிப் பதிவார். Kalah என அரபியிலும், Quedah என மேல் நாடுகளிலும் சொல்வர். .

[காழெனில் வேறு செய்திகளும் நினைவு வரும் பொதுவாய்க் கருப்பு நம்மை விடாது தொடரும். குமரிக் கண்டக் கருத்தை ஒதுக்கி மொழிவழி நோக்கின், நம் உறவுகள் புரியும். யா>யாமம்= கருப்பு. யாம்> ஸ்யாம்>அசோம்>அஹோம்= அசாம் குடிகள். அசோம்>அசாம்; யாம>ஸ்யாம்>சாம்>சான்= பர்மாப் பழங் குடிகள். ஸ்யாம்= தாய்லந்து. ஸ்யாம்>சாம்= தாய்லந்தின் பழங்குடிகள்; கம்போடியாவிலும் கருப்பின் தொடர்பு உண்டு. சாம்>சம்>சம்பா= வியத்நாம் குடிகள். வியத்நாமிற்கே ’சம்பா’ என்ற பழம்பெயருண்டு. 

யா> யாவம்> யாவகம்>  ஜாவகம்= இந்தோனீசியாவின் முகனத்தீவு (மற்ற தீவுகளைப் பற்றி வேறு இடத்திற் சொல்வேன்); யாகம்>ஞாகம்>நாகம்> நாகர்= கருப்பர். யாகர்>யக்கர்> யக்‌ஷர்= ஈழப் பழங்குடிகள். இவரை இயக்கர், நாகரென்றும் அழைப்பர். நாகர்>negro, உலகெங்கும் பரவிய இப்பெயரின் சொற்பிறப்பு ஒருகால் நம்மூர் ஆகலாம். (வியப்பாகிறதா?) ”க்க”, “க்ர” ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம். நாகர்/நக்கவர் = கருப்பர். (அம்மணப் பொருள் வேறுவகையில் எழுந்தது.) நக்கவர்>நக்கவரம். இதை நாகதீவம் என்று அரபிகளும் குறிப்பிட்டார். அசாமிற்குப் பக்கம் இருப்பது நாகாலாந்து. பர்மாவில் உள்ள சான் குடிகளோடு நாகாலாந்து மக்கள் தொடர்புற்றவர்.

இனிக் கருமுதல்>கம்முதல்= ஒளிகுன்றல்; கம்மம்>கம்மை= தமிழிலும், கெமேரிலும் கருப்பு. கமர்>கெமர்= கம்போடியர். அந்துவன்>அந்துமன்> அந்தமான் என்பதும் கருப்பே. (அந்துவன் சேரலென முதற் சேரனைச் சொல்கிறோமே? அவனுங் கருப்போ? குட்டி அந்துவன் தீவுப் பழங்குடிகளின் பெயர் ஓங்கு (Onge/aung). இதன்பொருளை அம்மொழியில் இன்னுந் தேடுகிறேன். 

தெற்கு/நடு அந்துவனின் ஜாரவா மக்களுக்கு அவர் மொழியில் ஓங்கென்றே பெயர். (ஜாரவா=- இந்திக்காரர் வைத்த பெயர்) ஜாரவா மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவுச் சொற்களை வேறு தொடரில் சொல்வேன். மேலே போனால் அக்கால அங்கம் (இக்கால வங்கம்) கூட ஓங்கின் திரிவாகலாம். வங்காளிகளுக்கும், ஓங்குகளுக்கும், தமிழருக்கும் ஈனியல் தொடர்புண்டு. ஆப்பிரிக்காவில் தொடங்கிய பழம் மாந்தர் நம்மூர் வந்து, கடற்கரை வழி தென்கிழக்காசியா போய், முடிவில் ஆத்திரேலியா சேர்ந்தாரே, அவருங் கருப்பே. நாமும் கருப்பு. நம்மில் ஊடி வரும் சிவப்பும் வெளுப்பும், பழுப்பும் பின்னால் ஏற்பட்டவை புகாரைத் தலைநகராக்கிய நாகநாடு, சோழநாட்டுப் பகுதி. நாக பட்டினம், நாகர் கோயில், சம்பாபதி (புகார்) இவையெலாம் இத்தொடர்பு காட்டும். வடதமிழகத்தின் ஒரு முகன்மைக் குமுகரை சாம்பவர் என்பார். சாமளம் நம்மை விடாது].

வெண்கலம் மட்டுமின்றிப் பித்தளையும் கூட நம்முடன் தொடர்புள்ளதே. துத்தநாகம், காரீயம், வெள்ளீயம், செம்பு, வெண்கலம், பித்தளை போன்ற மாழைகளும், அட்டிழைகளிலும் [alloy (v.) c. 1400, "mix (a metal) with a baser metal," from Old French aloiier, aliier "assemble, join," from Latin alligare "bind to, tie to," from ad "to" (see ad-) + ligare "to bind, bind one thing to another, tie" (from PIE root *leig- "to tie, bind"). சங்கதம் இதை “மிஸ்ரலோக”மாக்கும்.] தமிழரின் பங்கு கணிசமானது. பழந்தமிழக எஃகு/இரும்பைப் பேசும் தொல்லியலார், அட்டிழைகளையும் பார்க்க வேண்டும். இரும்புக் காலத்தின் முன் தமிழருக்குச் செம்புக்காலம் கிடையாது என்பது, ஆதிச்சநல்லூர் பார்க்கின், அவக்கர முடிவாகும். செம்பு எங்கு கிடைத்தது? நாகம் (Zinc), காரீயம் (Lead), வெள்ளீயம் (Tin) போன்றவை எங்கு கிடைத்தன? இனக்குழு வரலாற்றில் எப்படியவை எழுந்தன? இவற்றை நாடி தமிழன் எங்கு சென்றான்? போனவிடங்களில் கொசுறாகச் சிலவற்றை அள்ளிக் கொணர்ந்தானா? உள்ளூர் வாழ்வை இக்கொசுறுகள் மாற்றினவா? தமிழகத் தென்பகுதியை நாமின்னும் சரியாய் ஆயவில்லையோ?- என்ற கேள்விகளும் எழுகின்றன.

இன்னொன்றையும் எண்ணிப்பாருங்கள். முல்லைநில வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை விளைவித்துத் துய்த்த தென்பாண்டித் தமிழன் எப்படி வெளியூர் நெல்லுக்கு மாறினான்? நீர்ப்பாசனம் இங்கெப்படி முகன்றது? ஒருவேளை நெல்லை வைத்தே மருதம் நம்மில் முகிழ்த்துக் கிளர்ந்ததோ? ”அரிசிச்” சொல் எங்கிருந்து நமக்கு எப்படிக் கிடைத்தது? வ்ரிஹி என்று சங்கதத்தைத் தூக்கிவந்து, ”அரிசிக்குச்” சிலர் அணைகொடுப்பதை நானேற்பதில்லை. பார்லி, கோதுமை சாப்பிட்டவர் அரிசிக்குச் சொல்தந்தாரென்பது சிறிதும் நம்பமுடியாதது. (அரிசியை வேற்றுமொழிச் சொல்லென நான் சொன்னவுடன் என்மேல் சீறிப்பாயுந் தமிழர் நிறையவே இருக்கலாம்.) தமிழர்க்கும் தென்கிழக்காசியருக்குமான தொடர்புகளென்ன? இப்படி அடுத்தடுத்துப் பார்க்கப் போகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, June 08, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 1

”Paddy என்பது நெல்லை குறிக்க ஆங்கிலம் பயன்படுத்தும் சொல். இதன் மூலச்சொல் Pady என்கிற மலாய் மொழி சொல் என அறியாமல் ஆங்கிலம் உளறும். நெல்லை படியால் அளக்கும் செயலால் நெல்லை படி.என்றே அழைத்தனர்  சாப்பாட்டிற்கு அவங்க தான் படியளக்கிறாங்க என்றால் உணவுக்கு அவர்கள் தான் நெல் அளந்து கொடுக்கிறார்கள் என்றே பொருள். ஆகவே தமிழ் அளத்தல் அளவான படி என்பதே ஆங்கிலத்தில் படி. ப்பேடி என்ற உச்சரிப்பில் வழங்கப்படுகிறது” 

என்ற சிற்றிடுகையைத் ”தமிழரின் தொன்மை, பண்பாடு, வரலாறு தொடர்பான பதிவுகள் குறித்த ஆய்வுதள (STARCH)” எனும் முகநூற் குழுவில் ஒரு முறை கண்டு வியந்து போனேன். 

ஒரு வேளை சொற்பிறப்பியல் என்பது இவர் போலும் சிலருக்குக் குடிசைத் தொழிலாய் ஆகிவிட்டதோ?  சான்றின்றி இப்படிக் கற்பனையிற் சொல்ல முடியுமா? இவர் காட்டும் எழுத்துப் பெயர்ப்பு சரியா? Paddy யில் 2 d உண்டே? ஆங்கிலம் உளறுகிறதா? இன்னொரு மொழியை இப்படிச் சொல்லலாமா? “தமிழ் உளறுகிறதெ”ன வேற்றார் சொன்னால் நாம் வாளாய் இருப்போமா? 

தவிரப் ”படி” என்பது எப்படி நெற்பெயராகும்? அளக்கப் படும் பொருளுக்குப் பகரியாய், வேறெதிலும் அளவையலகே பெயராகியது உண்டோ? குறிப்பிட்ட மலாய்ச்சொல் Padyயா Padiயா? எப்படி அப்பெயர் அங்கு வந்தது? Padi, அரிசி/நெல்லைச் சேர்ந்து குறிக்காதா? (மலாயில் nasi=சோறு.) நெல்வேளாண்மை அங்கெப்படி ஏற்பட்டது? படி>பரி>வரி என்ற சொல் எங்கு ஏற்பட்டதென்று இவர் அறிவாரோ?

இந்நண்பர் மட்டுமன்றி, பன்னூறு தமிழரும் ”நெல் நம்மூரில் தோன்றிய கூலம்” என்றே ஆதாரமின்றி எண்ணிக் கொள்கிறார், பேசவுஞ் செய்கிறார். (நெல், அரிசி என்ற சொற்கள் தமிழாகலாம். படி>பரி>வரியும் தமிழாகலாம், அதுவேறு.) நம்மூரிற் புழங்கும் எல்லாவற்றையும் நாமே கண்டுபிடித்தோம் என்பது சரியா? இங்கிருந்து அரிசி மேற்கே போனது சரியாகலாம். ஆனால், மேற்குலகே முழுவுலகு ஆகிவிடுமா? தவிரத் தானாய் நெல் வளர்ந்தது ஒரு காலம் எனில் பயிரிடத் தொடங்கியது வேறு காலம் அன்றோ? 

இயற்கையரிசி 8500-13500 ஆண்டுகள் முன் சீன யாங்க்ட்சி ஆற்றங்கரையில் தோன்றியிருக்கலாமென ஒரு சிலரும், (பர்மா, தாய்லந்து, கம்போடியா, லாவோசு, வியத்நாம், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பைன்சு) சேர்ந்த பழஞ் சுந்தாலாந்துக் கண்டத்தில் எழுந்திருக்கலாம் என வேறுசிலரும் ஆதாரத்தோடு சொல்வார். தவிர, 5000 ஆண்டுகளுக்கு முன் கொரியா, சப்பான், கங்கைச் சமவெளிகளில் நெல் வளர்ந்ததற்கும் ஈனியல் (genetics), தொல்லியல் (archeology) சான்றுகளுண்டு. தவிர, புதுக் கற்காலத்தில் (பொ.உ.மு.9000-8000) அலகாபாத் மாவட்டம் கோல்திவாவில் கான் நெல்லும் (Oryza rufipogon) பயிர் நெல்லும் (Oruyza sativa) விளைந்ததாய்ச் (Indian archeology A. review 1974-75, 80 Indian Archeology A review 1976076, 88 Sharma et al;, Beginnings of Agriculture, Allahabad, Abinash Prakashan, 1980, 184) சொல்வர். இவையெலாம் பயிரியல் (agronomy), பழம் புதலியல் (Paleobotany) ஆதாரங்களோடு வருங் குறிப்புகள். இவற்றையெலாம் "“ப்பூ” என்று நாம் உதறித் தள்ள முடியாது.

அண்மையில் Antiquity இதழிலும் Journal of Archaeological Science இதழிலும் ஆக்சுபோர்டு, பனாரசு இந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில், அரியானாவின் Rakhigargh பகுதியில் 2430-2140 BC அளவில் கான்நெல், பயிர்நெல் சார்ந்த வேளாண்மைக்குச் சான்று பகர்வார். இத்தோடு ஒன்றை மறக்கக்கூடாது. அரிசி, சிந்து சமவெளியில் தோன்றிய பயிரல்ல. அது கங்கைக் கரையிலிருந்து சிந்து சமவெளிக்குப் பெயர்ந்தது என்றே அறிவியல் சொல்லும். 

வடபுலத்தில் நெல் வந்த திசை கிழக்கிருந்தே தொடங்கும். கங்கைக் கரைக்கு அது எப்போது வந்தது? தெரியாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இயற்கையிலோ, மாந்த முயற்சியிலோ நெல் தாவரம் எழுந்து/ வளர்ந்து, பின் வணிகம், மாந்த நகர்ச்சி போன்றவற்றால் வேறிடம் நகர்ந்தது. அவற்றிற் சில வேறிடங்களில் பயிரிடவும் படலாம். நம்மூரில் பயிரிடப் படுவதாலே நம்பெயர் உலகெங்கும் உள்ளதென ஒரு போதுங் கூற முடியாது. இதுவரை நாம் அறிந்த அறிவியற் செய்திகளின் படி நெல் என்பது பெரும்பாலும் சீனத்தின் யாங்ட்சி ஆற்றங் கரை, யுன்னான் மாநிலம், அல்லது தென்கிழக்காசியா பகுதி என ஏதோவொன்றில் தோன்றி நம்மூருக்குப் பரவியிருக்கலாம் என்பதே பழம் புதலியலாரின் கணிப்பு. கீழே விரிவாய்ப் பார்ப்போம்.

”தமிழரே மூத்தார், மலேசியர் இளையரெ”னும் அண்ணன்கார முடிவு அடிப்படையில் சரியானதல்ல. ”சிலவற்றில் அவர் முந்தி சிலவற்றில் நாம் முந்தி.” இன்று நாம் காணும் இரட்டை விலாவரிக் கலத்தின் (double outrigger canoe) கட்டுமானத்தை தென்கிழக்காசியரிடமிருந்தே நாம் கற்றோம். அதன் பின்னரே கலங்களின் கவிழாக் கட்டுமானத் தேவை நமக்குப் புரிந்தது. 

தவிர, இற்றை மடகாசுகர் மொழியான மலகாசி, மலேசிய/இந்தோனீசிய மொழிகளோடு தொடர்புற்றது என்பர். இவ்விரு நாட்டவர்க்கும், மலகாசி இனத்தார்க்கும் ஈனியல் தொடர்புண்டு. (Human settlement of Madagascar occurred between 350 BC and 550 AD by Austronesian peoples, arriving on outrigger canoes from Borneo.) இவையெல்லாம் நெடுங்காலம் கடற்பயணப் பழக்கம் தென்கிழக்கு ஆசியருக்கு இருந்தால் தான் முடியும். ”யாம் மூத்தவர், நீர் இளையர்” எனும் சங்கத நடைமுறையை ஏற்காது சாடுகிறோமே? அதே பாதையிற் நாம் பயணித்து நம்மிலுங் கீழே மலேசியரை இறக்குவது சரியா? அது முன்னுக்குப் பின் முரண் இல்லையா?

மற்றோர் செய்தால் தவறு, நாம் செய்தால் மட்டும் சரியா? தமிழ், தமிழ் என்பதில் கவனம் வேண்டாமா? வெகு எளிதில் நாமும் பொதுக்கையர் (facist) ஆகும் இயலுமை உங்களுக்குப் புரிகிறதோ? இணையமெங்கும் அவ் வியலுமையை நான் நெடுகக் காண்கிறேன். கரணம் தப்பினால் மரணம். நண்பரின் இடுகை போல் சொல்வது முறையற்றது. சற்று கிடுக்கிப் பாருங்கள். புரியும்.

குமுக மிடையங்களில் (social media) ஒருவர் இடுகையை மற்றோர் விழைவதும், முதுகில் தட்டிக்கொடுப்பதும், அவைநாகரிகத்தால் ஒன்றுஞ் சொலாது நகர்வதும், ”எழுதுவது எல்லாஞ் சரி”யென எண்ணுவதும், ஒருவர் எழுத்தை மற்றோர் முன்வரிப்பதும் முகநூலாருக்கு வேண்டின் நலம்பயக்கும். தமிழை வளர்க்குமா? சற்று ஓர்ந்துபாருங்கள். இது போற் போலிச்செய்திகள் பெரிதாய் உலவுங் காலத்தில். நம் அறிவியற் பார்வையைக் கூட்டிக் கொள்ளலாமே?

ஏற்கனவே ”குமரிக்கண்டம், தமிழே முதன்மொழி, உலகில் உள்ளதெலாம் தமிழன் தந்ததே, நுல்லிய (million) ஆண்டுகளுக்கு முன் தமிழன் இருந்தான்”. போன்ற உள்ளீடற்ற கூற்றுக்களை நம்ப, உலகிற் பலரும் அணியமாய் இல்லை. ”ஆப்பிரிக்கா விட்டு ஓமோசேப்பியன் வெளியானதே 70000 ஆண்டுகளென” ஒரு சிலரும். ”1.5/3.5 இலக்கம் ஆண்டென” வேறு சிலரும் தரவுகளொடு வாதாடுகையில், அதனூடே புகுந்து தமிழனின் நுல்லிய கால வாழ்வுக்கு நாம் தரும் தரவுகளென்ன? தொல்லியலா? மாந்தவியலா? ஈனியலா? குமரிக் கண்டம் என்பதற்கும் ஓர் அடிப்படை வேண்டாமா? தவறாய்ப் புரிந்துகொண்ட இலக்கிய ஆதாரம் மட்டுமே போதுமா? வரலாற்றிற்கு முந்தைக் காலத்தில் இலக்கியம் உண்டோ? நாம் முந்தையர் என்று சொல்ல எத்தனை புலங்களில் ஆய்வு செய்தோம்? வெறும் வாய்ப் பந்தல் போடுவதே நம்மைக் கொண்டு செல்லுமா?

சொற்பிறப்பியல் வழி தமிழுயர்த்த நினைப்போர், குமுக மிடையத்தில் அரசியற் பார்வை கொள்ளாது, பாவாணர் புகழை மட்டும் பாடாது, அருள் கூர்ந்து பாவாணர், ப.அருளி, கு.அரசேந்திரன் போன்றோரின் கட்டுரைகளை ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் புலமை கொள்ளுங்கள். ”முந்தையோர் எந்த அளவிற்குச் சலித்துப் பார்த்துக் கவனத்தோடு பொருள் சொன்னார்? சொற்பிறப்பியல் என்பது எப்படி நகர்கிறது? எவ்வொலி எப்படித் திரியும்?, எது முறை, எது முறையற்றது? நாம் சொல்வதன் ஏரணமென்ன?, மக்கள் பயன்பாடென்ன? முற்படுத்தும் கருத்துகளுக்கு இலக்கிய, கல்வெட்டு, பிறமொழி, பிறபுல ஆதாரங்களுண்டா?” எனப் பாருங்கள். தோன்றியபடி 4 எழுத்துகளைத் திருத்திப் போட்டு, அதன்வழி உன்னித்து Folk etymology காட்டுவது, முறையற்றது. (நான்சொல்லும் சொற்பிறப்பியலைக் கூட ஏற்கமறுப்போர் இணையத்திலுண்டு. அதுகண்டு நான் சினமுற முடியுமோ?). இதுபோற் கூற்றை எல்லா மொழியியலாரும் சட்டென ஏற்கார். சொற்பிறப்பியல் என்பது நம்முன் நடக்கும் ”அந்தர சால” மாகை (magic) அல்ல. மீறிச் செய்ய நாம் அடம்பிடித்தால், people would not take us seriously. ”Non-sensical arguments” என்று கூறி நகர்வர்.

இத்தொடரில் நான் நெல்லை மட்டும் பேசவில்லை. மாழை, வணிகம், கடற் பயணம், நகர்ச்சியெனத் தமிழருக்கும், தென்கிழக்காசியருக்கும் பொதுவான பல்வேறு செய்திகளைப் பற்றியும் பேசுகிறேன். ”நெல்லும், தமிழரும் தென் கிழக்காசியாவும்” என்பது சரியாக ஆயப்படாத ஒரு புலம். இதில் மனத்தடையே மிகுதி. நான் சொல்வதிற் சிலவற்றை நீங்கள் ஏற்கலாம், சிலவற்றை ஏற்காதும் போகலாம். ”கிழக்கைப் பார்” என்பது ஒருவகை அரசியல் சூளுரையல்ல. மேலை நாடுகளைக் கண்டு ஏங்கும் பல தமிழருக்கு அது துலைநோக்கைக் கற்றுத் தரும் முயற்சி. ”எல்லாமே தமிழெ”னும் “ஏகாந்தப் பார்வையிலிருந்து” சற்றிறங்கி வருவோம் நண்பர்களே! கிழக்கிலும் மேற்கிலும் கடல்வழி நாம் நகர்ந்துகொண்டே இருந்தோம். நம் பழம் நாகரிகம் அதன் விளைவாலும் ஏற்பட்டதே. ஈதலும் சரியில்லை. கொடுத்தலும் சரி யில்லை. தருதலே மெய்க்கு நெருங்கியிருக்கும் (ஈ,தா, கொடு பற்றித் தொல்காப்பியம் படியுங்கள்.)   

அன்புடன்,
இராம.கி.

Thursday, June 06, 2019

துருவளை

அண்மையில் இழைப்பாய்வு (laminar flow) பற்றியதொரு விழியம் பார்த்தேன். அதை முன்வரித்து, கூடவே, “Laminar flow = இழைப்பாய்வு. விளவ மாகனவியலில் (fluid mechanics) முதலில் தெரிந்து கொள்ளும் பாய்வு இது. இழை இழையாக, எந்தச் சுழிப்பும், துருவளைவும் (turbulence) ஏற்படாது ஆற்றொழுக்குப்போல் ஓடும் பாய்ச்சல். இதைக்காட்டும் அருமையான காட்சிப்படம்/ விழியம்” என்று என் முகநூல் பக்கத்தில் குறித்தேன். அதற்கு முன்னிகையாய், திரு. கருப்புச் சட்டைக்காரன் என்பார், ”துருவளைவு - turbulence என்பதை விளக்கினால் நலம்” என்று சொல்லியிருந்தார். இந்த இடுகையில் என் விளக்கம் வரூகிறது..

இயற்கையில் நீரானது ஓடும் (”ஓடை” இதிலெழுந்தது), துலுங்கும் (= அசையும் துலை என்ற சொல் இதில் பிறந்தது.), துவறும், துள்ளும் (=குதிக்கும்), தளும்பும் (=ததும்பும்), துடிக்கும் (”துடுக்கு, துடும்பல்” போன்ற சொற்கள் இதிலெழுந்தன), துருகும் (”துரிதம், துரப்பு, துரத்தல், தூரம், துருதை” போன்ற சொற்கள் இதில் எழுந்தது) முடுகும் (முடுக்கம்= acceleration), பாயும் (வேக ஓட்டம். "பாய்ச்சல், பாசனம், பாய்மம்" போன்ற சொற்கள் இதிலெழுந்தன), விளவும் (= அகலப் பாய்தல்; "வெள்ளம்” இதிற் பிறந்தது.).

[துடி = வேகம், சுறுசுறுப்பு; துடுக்கு = சுறுசுறுப்பு; துடும்புதல் = ததும்புதல்; துரத்தல் = முடுக்குதல், போக்குதல். வீசுதல்; துரப்பு = முடுக்குதல்; துருதுருக்கும் = ஆத்திரப்படும், அமைதியின்றித் துடிக்கும், துருதுருப்பு = விரைவு, துருதம்/துரிதம் = விரைவு, வேகம், துரீலெனல் = எதிர்பாராது விரைந்து வருதற் குறிப்பு, துருதை = தினவு, துலுக்குதல் = அசைதல், துலுங்குதல் = அசைதல், துலை = மேலுங் கீழும் அசைதல், துவறல் = விரைவு, துள் = குதிப்பு, துள்ளல் = தாவிச் செல்லுதல், துளக்கு = அசைவு, துளும்புதல் = துள்ளுதல், துருவல் = துளைத்தல்]

நீர் மட்டுமின்றி மற்ற நீர்மங்களும் (liquids) வளிமங்களும் (gases) கூட மேலே சொன்ன அத்தனை இயக்கங்களுங் காட்டும். எல்லாப் பொறிஞரும், நீர்மங்கள், வளிமங்களை ஒன்று சேர்த்து விளவங்கள் (fluids) என அழைப்பார். பொதுப் புலனில் ”விளவம்” புழங்குவதில்லை. நீர்மம், வளிமம் என்ற சொற்கள் கூடப் புழங்குவதில்லை தான். [“வெகுசனத் தமிழ்” என்று சொல்லி “அறிவியலை மக்களுக்கு உணர்த்த வேண்டாம், படியா நிலையிலேயே அவரை இருத்தி வைப்போம். அப்போதுதான் நம் அதிகாரம் நாட்பட நிலைக்கும்” என்ற படித்தார் போக்கும் நிலவுகிறது. சொல்துல்லியம் நான் பேசுவதே சிலருக்குப் பிடிப்பதில்லை. ”வெகுதிரள் நடை பயிலுங்களேன்” என்று நண்பர் சொன்னதும் உண்டு. நானோ, என்னைப்பார்த்துச் சிலராவது மாறட்டுமென நினைப்பேன். ] இனிப் புலனத்திற்கு வருவோம்.

விளவங்களைப் படிப்பதில் பல்வேறு நிலைகளுண்டு. கட்டுமானஞ் செய்யும் குடிப்பொறிஞர் (civil engineer) நீரோடு நின்றுகொண்டு, நீரியல் (hydraulics) படிப்பார். விளவ எந்திரங்கள் செய்யும் மாகனப் (mechanical) பொறிஞரும், வான்நாவுப் (aeronautic) பொறிஞரும் விளவங்களை நோக்கி தம் பார்வை விரித்து விளவ மாகனவியல் (fluid mechanics) படிப்பார். விளவங்களிலும் அடர்த்தி (desity), பாகுமை (viscosity) பொறுத்து நியுட்டோனியன் (newtonian), அல் நியூட்டோனியன் (Non-newtonian) என இருவேறு வகைகளுண்டு. இவற்றை யாளும் வேதிப்பொறிஞரோ, வெப்பம் (heat), மொதுகை (mass), உந்தம் (momentum) என 3 என்னுதிகளின் (entities) இடப்பெயர்வைப் (transfer) படிப்பார். இவர் நோக்கில் உந்த இடப்பெயர்வு, விளவ மாகனவியலுக்கு இன்னொரு பெயர். 3 என்னுதிகளும் சேர்ந்த படிப்பிற்கு ”புகற்பெயர்ச்சி நிகழ்வுகள் (transport phenomena)” என்ற ஒயிலான பெயருமுண்டு. மின்னம் (electricity), காந்தகம் (magnetism) சேர்த்து இன்னுங்கூட இப்படிப்புகளை விரிக்கலாம்.

மேற்சொன்ன எல்லாப் பொறிஞரும் பயன்படுத்தும் அடிப்படைக் கலைச்சொல் turbulence ஆகும். இவற்றை நாங்கள் ஆங்கிலத்திலே படித்தோம். இவற்றிற்கு இணையான, (தரமான) கலைச்சொற்கள் தமிழில் இல்லாததால், எதிர் காலத்தில் கொஞ்சமாவது தமிழில் வரவைக்கும் விழைவில் அவ்வப்போது கலைச்சொற்களை நான் உருவாக்கி வந்தேன். துருவளை என்பது அவற்றில் ஒன்று.

ஒரு தூம்பில் (tube) நீரோ நீர்மமோ ஓடுகிறதென வையுங்கள்.[ஒவ்வொரு நீர்மத்திற்கும் அடர்த்தியும், பாகுமையும் உண்டு. நீரின் அடர்த்தி குறைவு, அணுவுலைகளில் குளிர்விப்பியாய்ப் (coolant) பயன்படும் சவடிய (sodium) நீர்மத்திற்கும் அடர்த்தி அதிகம். இதளின் (Mercury) அடர்த்தி இன்னும் அதிகம். நீரின் பாகுமை கம்மி. தேனுக்குப் பாகுமை அதிகம். இப்படிப் பல்வேறு நீர்மங்கள் தம் அடர்த்தி, பாகுமைகளால் வேறுபடும்.) நீரின்/நீர்மத்தின் ஓட்டத்தை அதன் கதியால் (velocity) குறிக்கிறோம். இழையாக ஓடத் (laminar flow) துவங்கும் நீர்மம் அதன் கதி கூடக்கூடச் சுழிக்கும், துளைக்கும், சுவரில் மோதும், சுவரை அதிரவைக்கும். இன்னும் என்னவெல்லாமொ பண்ணும்.

மேலே சொன்ன பாய்ச்சல் மாற்றங்களை நீர்மங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாய்க் குறிக்க பொறியாளர் (பல்வேறு காலப் பட்டறிவில்) ரெய்னால்டு எண் (Reynolds number) என்றவொன்றைச் சொல்வர். இதில் தூம்பின் விட்டம் (d), ஓட்டக் கதி (u), அடர்த்தி (Rho), பாகுமை (Myu) ஆகியவற்றைக் கொண்டு           d*u*(Rho)/(Myu) என்றவொன்றை கணக்கிடுவர். ரெய்னால்டு எண் 2300 க்கு கீழிருக்கும் வரை இழைப்பாய்வு நடைபெறும். அதற்கப்புறம் 2900 வரை ஓர் இடைப்பட்ட ஓட்டம் அமையும், தூம்பின் உட்சுவர் வழுவழுவென்றிருந்தால் 2300/2400 இலும் இழைப்பாய்வு நடைபெறலாம். 2900 ஐக் கடந்துவிட்டால் இழைப்பாய்வு மாறி துருவளைப் பாய்வு (Turbulent flow) நடந்துவிடும்.

மேலே ஒரு தூம்பில் நடக்கும் பாய்ச்சல் பற்றிப் பார்த்தோம். ஒரு வாய்க்காலில் (Channel) நடக்கும் பாய்ச்சலும், ஒரு மணல்/சரளை/குருணைப் படுகையில் (sand/pebble/granular beds) நடக்கும் பாய்ச்சலும் என எல்லாவற்றிற்கும் அந்தந்த ரெய்னால்டு எண்களைச் சொல்லமுடியும். தூம்பின் விட்டத்திற்கு மாறாய் ஓட்டத்தின் குறுக்குவெட்டை (cross section) நிருணயிப்பது போல் ஒரு குணக நீளத்தை (characteristic length) நாம் வரையறுக்க வேண்டும். அதை இங்கே நீட்டி முழக்கிச் சொல்லாது விடுக்கிறேன். ஆர்வம் இருப்போர் துறைநூல்களில் கண்டுகொள்க.

அடிப்படையில் “துருவளை” என்ற கலைச்சொல், வேகம், சுழிப்பு, வளைப்பு, நீருக்குள் ஏற்படும் துளைப்பு, துருவல் போன்ற பல்வேறு தோற்றங்களை முன்வைத்து மற்ற சொற்களையும் பார்த்துப் பரிந்துரைக்கப்பட்டது. இதுவரை எந்தச் சிக்கலையும் அச்சொல் எதிர்கொள்ளவில்லை. இதை ஒட்டி Turbine = துருவணை, Turbulence = துருவளைப்பு, Turn = திருணை என்ற சொற்களும் எழுந்தன.

turbulent (adj.) early 15c., "disorderly, tumultuous, unruly" (of persons), from Middle French turbulent (12c.), from Latin turbulentus "full of commotion, restless, disturbed, boisterous, stormy,"
figuratively "troubled, confused," from turba "turmoil, crowd" (see turbid). In reference to weather, from 1570s. Related: Turbulently.

turbulence or turbulent flow is fluid motion characterized by chaotic changes in pressure and flow velocity. Turbulence is caused by excessive kinetic energy in parts of a fluid flow, which overcomes the damping effect of the fluid's viscosity.

turbulent இன் முன்சொல்லாக turbid என்பது ஆங்கிலத்தில் காட்டப்படும் turbid (adj.) 1620s, from Latin turbidus "muddy, full of confusion," from turbare "to confuse, bewilder," from turba "turmoil, crowd," which is of uncertain origin. இதன் இன்னொரு பயன்பாடாய், turbo-: word-forming element, abstracted c. 1900 from turbine; influenced by Latin turbo "spinning top." E.g. turbocharger (1934), aeronautic turboprop (1945, with second element short for propeller); turbojet (1945). என்பது காட்டப்படும்.

disturb துருவளைத்தல் என்பது கலக்கிவிடுதலே. தமிழில் அப்படித்தான் disturbance, interturb, perturb என்பவற்றைப் புரிந்துகொள்கிறோம். ஒரு களிமண் சேர்ந்த நீர் இருக்கிறது என்று வையுங்கள். அதைக் கலங்கல் என்போம். கலங்கல் நீரை வெகுநேரம் விட்டுவைத்தால், களி கீழே படிந்து நீர் தெளியும். trouble = தொல்லை என்பது நம் துல்>துர்>துரு என்பதோடு தொடர்பு உடையதே.turbidity = கலங்குமை.

அன்புடன்,
இராம.கி.